Wednesday, 15 January 2025

அசோகமித்திரனின் கால எந்திரம் - பூங்கொத்து

 

 


கோவையில் ஜி.ஆர்.பிரகாஷை ஒரு வாசகராகத்தான் சந்தித்தேன். உற்சாகமான இளைஞர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பவித்ரா பதிப்பகத்தை தொடங்கி ஆச்சரியம் தந்தார். சிறிது காலத்துக்குள்ளாகவே சிறுவாணி வாசகர் மையம் என்றொரு அறிவிப்பும் வந்தது. அதன் நோக்கும் செயலும் வாசகர் வட்டம் போன்றது. நாஞ்சில்நாடனின் நவம் நூலில் தொடங்கி ஐந்து புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள்.  அந்த வரிசையில் மூன்றாவது நூலாக வெளியிடப்பட்டது அசோகமித்திரனின் பூங்கொத்து எனும் கட்டுரைத் தொகுப்பு.

 

சின்னச் சின்னக் கட்டுரைகளில் இரண்டு வசதிகள். முதலாவது எழுத்தாளனுக்கு. எழுதுவது சுலபம். நினைத்தவாக்கில் எழுதிச் சென்று சட்டென்று முடித்துவிடலாம். இரண்டாவது வாசகனுக்கு. நீண்ட நெடிய கட்டுரைகளை அவற்றின் வாதப் பிரதிவாதங்களின் சரடுகளை உட்சரடுகளை வாசக இடைவெளிகளை கணக்கில்கொண்டு தலைத்தாங்காச் சுமையுடன் தன் கூர்ந்த வாசக குணாம்சத்துக்கு பங்கம் வராத பதற்றத்துடன் வாசிக்கவேண்டாம். நூலைப் புரட்டி வாய்க்கின்ற பக்கத்திலிருந்து சரசரவென்று படித்துக் கொள்ளலாம்.

 

அசோகமித்திரன் சிறிய எழுத்தாளர். சிறியதே அழகு என்று நம்பியவர். அளவில் பெரிய ஆக்கங்களைக் கண்டு மிரண்டவர். 200 பக்கத்துக்குள்ள சொல்ல முடியலேன்னா அதை எதுக்கு எழுதணும்? என்று பேனாவை மூடி வைத்துவிடுபவர். அளவுக்கு மீறி எதையும் அவர் செய்தவரல்ல. யாவற்றிலும் சுருக்கம். கச்சிதம். வள்ளுவப் பெருந்தகையின் உரைநடை வாரிசு. கட்டுரை, நாவல், சிறுகதை என்று வடிவம் எதுவானாலும் தேவைக்கு அதிகமாய் ஒரு வாக்கியமோ சொல்லோ இருக்காது.

 

அவரது கட்டுரைகளிலிருந்து அவரே தேர்ந்தெடுத்தக் கட்டுரைகளை பூங்கொத்து என்று அவர் விரும்பிய தலைப்பிலேயே கோவை சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டுள்ளது. 2004ம் ஆண்டு தொடங்கி 2016ம் ஆண்டின் இறுதிவரைக்குமாய் எழுதப்பட்ட 40 கட்டுரைகள். வெவ்வேறு இதழ்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளியானவை என்றாலும் ஒருசேரப் படிக்கும்போது ஒட்டுமொத்த வாழ்விலும் அவர் அக்கறை காட்டிய அம்சங்களே இத்தொகுப்பில் வெகு இயல்பாக இடம் பெற்றுள்ளன. உடல் முடங்கிக் கொள்ளும் வேளையில் மனம் தன்னிச்சையாக தாவித் தாவி காலங்களினூடே தேடி அலைகிறது. இதைத்தான் என்றில்லாமல் சும்மாவே புரண்டு தவிக்கிறது. சின்னச் சின்ன சந்தோஷங்கள் துக்கங்கள் ஏமாற்றங்கள் பொறாமைகள் கயமைகள் கள்ளத்தனங்கள் வியப்புகள் விநோதங்கள் காயங்கள் என்று எல்லாவற்றையும் ரகசியமாய் தொட்டுத் தடவி தனக்குள்ளாக ரசித்துக் கொள்கிறது. அசோகமித்திரன் இதைத் தொகுக்கும் வேளையில் தனது காலத்தினூடாக உற்சாகமாய் பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும்.

 

சாகிப் பீபி குலாம், யுலிஸிஸ், இருபெண்கள் போன்ற நாவல்கள், வி.எஸ்.நைபால், தாகூர் போன்ற நாவலாசிரியர்கள், கேதாரியின் தாயார் போன்ற சிறுகதைகள், நாமக்கல் கவிஞரின் சுயசரிதை, ஸ்லம்டாக் மில்லியனர், மின்னல் கொடி போன்ற திரைப்படங்கள், டி கே பட்டம்மாள், மணக்கால் ரங்கராஜன், டி எம் எஸ் போன்ற இசை மேதைகள்,  சத்தியமூர்த்தி, வாசன், கொத்தமங்கலம் சுப்பு போன்ற ஆளுமைகள் வைஜெயந்திமாலா, தேவ் ஆனந்த் போன்ற திரை நட்சத்திரங்கள்,  லைஃப் புகைப்படப் பத்திரிக்கை, வாசகர் வட்டம் என்று சுவையான கலவையாக சரித்திரத்தின் ஊடாகவும் நினைவுகளின் குறுக்காகவுமாய் அமைந்துள்ளன இக்கட்டுரைகள்.

 

இத்தொகுப்பின் சாராம்சமாக முன்னெழும் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.

 

ஒன்று க.நா.சு, ஜெயகாந்தன் என்கிற இரண்டு ஆளுமைகளின் மீது அசோகமித்திரன் கொண்டிருந்த வியப்பும் மரியாதையும். சந்தர்ப்பம் கிட்டும்போதெல்லாம் அவர்களைப் பற்றி வியந்து பேசுகிறார்.

கூடவே தி.ஜானகிராமனின் மீதான சிறு கசப்பும் வெளிப்படுகிறது. வாசகர் வட்டம் வெளியிட்ட அம்மா வந்தாள் நாவலுக்கான எதிர்வினைகளாய் அசோகமித்திரன் குறிப்பிடும் செய்திகள் வியப்பைத் தருகின்றன. 

 

இரண்டாவது புகழ்பெற்ற இரண்டு புகைப்படங்களுக்கு அவர் சொந்தக்காரர் என்பது. இன்று இந்தப் புகைப்படங்கள் எங்குள்ளன என்பது தெரியவில்லை. ஆளுமைகளுக்கும் அவர்கள் அடுத்த தலைமுறைக்கு சொல்வதில் நமக்குள்ள அக்கறையின்மைக்கு இன்னுமொரு சான்று.

 

கடைசியாக வீடுமாறும் தருணத்தில் இருந்தவற்றையெல்லாம் ஜானகிராமன் என்கிற பழைய பேப்பர்காரரிடம் எடைக்குப் போட்டதை 2016ல் எழுதியிருக்கிறார். அவற்றில் என்னென்ன மாணிக்கங்கள் காணாது போயினவோ தெரியாது. அந்த பழைய பேப்பர்கடைக்காரரிடம் இப்போது என்ன எஞ்சியிருக்கும்?

 

காலத்தினூடாக பெரும் பயணத்தை சாத்தியப்படுத்தியிருக்கும் இச்சிறு தொகுப்பு அபூர்வமான தருணங்களை அதிசயக்கத்தக்க மனிதர்களை போகிறபோக்கில் அடையாளங்காட்டிவிட்டு நகர்கிறது. அசோகமித்திரன் இசை சினிமா புகைப்படம் என்று பிறதுறைகளின் மேல் அசோகமித்திரன் கொண்டிருந்த அக்கறையை ஆர்வத்தை அறிந்துகொள்ள முடிகிறது. மணக்கால் ரங்கராஜனைப் பற்றிச் சொல்கிறது. அடுத்த வரியிலேயே மணிரத்னத்தைப் பற்றி விமர்சிக்கவும் முடிகிறது.

சுருங்கச் சொல்லினும் அசோகமித்திரனின் தனித்த அடையாளமான காரம் குறையாத எள்ளலுக்கும் விமர்சனத்துக்கும் குறைவேயில்லை. உதடு பிரித்து சிறிதும் புன்னகைக்காமல் அவர் எழுதும் கிண்டல்கள் தனிரகம்.

             ‘தமிழர்களின் எதார்த்தம் ரேஷன் கார்டு தொலைந்து போய்விடுவதில்             துவங்கி அடங்கி விடுகிறது.’

             ‘நடப்பதைவிடச் சற்று அதிகமான வேகம்தான் அந்த வண்டி போகும்.’

             ‘சிலகாலம் (பேருந்துகளில்) ஏறுமிடத்தில் வழித்தடப் பலகை இருந்தது.             மிகவும் சவுகரியமாக இருந்தது. அதனாலேயே அது எடுக்கப்பட்டது          என்று நினைக்கிறேன்.’

 இவற்றினூடே சில அற்புதமான வாக்கியங்களும் அமைந்துள்ளன. அசோகமித்திரனின் முத்திரை வாக்கியங்கள் என்று யாரும் தொகுக்கும்போது இவை உபயோகமாகும்.

             ‘வாழ்வே ஆறுதல் கொள்வதில்தான் இருக்கிறது. பொய்தான். ஆனால் அதுதான் மெய்.’

             ‘வரலாறு ஒரு சமயத்தில் ஒரு வீரனுக்குத்தான் வணக்கம் செய்கிறது.’

 0

 அசோகமித்திரனின் கட்டுரைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அரிய பல தகவல்களைக் கொண்டவை. சமூகத்தின் எண்ணங்களை போக்குகளை ஏற்றத் தாழ்வுகளை உள்ளபடியே விவாதிப்பவை. அவசரகதியில் நாம் காணாமல்போகும் உணராமல்விடும் பல்வேறு தருணங்களை சம்பவங்களை அவரது எழுத்து நமக்குச் சுட்டிக்காட்டுபவை. அவரது கட்டுரைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் அடிக்கோடிட்டு நிறுவுகிறவிதமாய் செறிவாய் கச்சிதமாய் வெளியாகியுள்ளது பூங்கொத்து.

 0

No comments:

Post a Comment

அசோகமித்திரனின் கால எந்திரம் - பூங்கொத்து

    கோவையில் ஜி . ஆர் . பிரகாஷை ஒரு வாசகராகத்தான் சந்தித்தேன் . உற்சாகமான இளைஞர் . இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பவித்ரா பதிப்பகத்தை தொடங்க...