துருக்கிய நாவலாசிரியர் அய்ஃபர் டுன்ஷின் நாவல் ‘ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை’ தமிழில் சுகுமாரன், ஷாலினி பிரியதர்ஷினி ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
அய்ஃபர் டுன்ஷ் தமிழுக்குப் புதியவரல்ல.
அவரது நெடுங்கதை அல்லது குறுநாவல் ‘அஸீஸ் பே சம்பவம்’ சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில்
வெளியாகியுள்ளது. தவிர, காலச்சுவடு இதழில் அவரது சிறுகதையொன்றும் இடம்பெற்றது.
துருக்கியைச் சேர்ந்த நாவல்களும் நமக்குப்
புதிதல்ல. அண்மைக் காலத்தில் அந்த நாட்டைச் சேர்ந்த நாவல்கள் தமிழ் மொழியாக்கத்தில்
தொடர்ந்து நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. ஓரான் பாமுக்கின் நாவல்களை ஜி.குப்புசாமி
மொழிபெயர்த்து வருகிறார். ‘என் பெயர் சிவப்பு’, ‘பனி’, ‘இஸ்தான்புல்’, ‘வெண்ணிறக் கோட்டை’
ஆகிய நாவல்கள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன. ‘கருப்புப் புத்தகம்’ நாவலை அகிலன் எத்திராஜ்
மொழியாக்கம் செய்துள்ளார்.
துருக்கியின் முந்தைய தலைமுறை எழுத்தாளரான
அகமத் தன்பினாரின் முக்கியமான நாவல் ‘நிச்சலனம்’ தி.அ.ஸ்ரீநிவாசனின் அபாரமான மொழிபெயர்ப்பில்
வெளிவந்தது. அவரது இன்னொரு நாவலான ‘நேர நெறிமுறை நிலைய’த்தை அகிலன் எத்திராஜ் மொழிபெயர்த்திருந்தார்.
துருக்கி நெடிய வரலாற்றையும் தொன்மையான
கலாச்சாரத்தையும் கொண்டது. பாரம்பரியமிக்க இந்த நாட்டின் பூகோள அமைப்பும் சுவாரஸ்யமானது.
சற்று சிக்கலானதும்கூட. துருக்கியின் இசை மரபு வளமானது. தமிழ்க் கவிதையைப் போலவே துருக்கியின்
கவிதையும் நாட்டார் கதைப் பாடல், பொம்மலாட்டம், மரபுக் கவிதை, புதுக் கவிதை, நவீனக்
கவிதை என பல்வேறு வகைமைகளையும் போக்குகளையும் கடந்து வந்த ஒன்று. நஸீம் ஹிக்மத்தின்
அரசியல் கவிதைகள் உலகளவில் புகழ்ப் பெற்றவை.
துருக்கிய சினிமாவை உலக அரங்கில் முக்கியத்துவம்
பெறச் செய்த இயக்குநர் நூரி பில்கே சிலான். அவரது ‘த்ரீ மங்கீஸ்’, ‘ஒன்ஸ் அபான் அ டைம்
இன் அனடோலியா’, ‘விண்டர் ஸ்லீப்’ ஆகிய படங்கள் உலகளவில் கவனிக்கப்பட்டவை.
துருக்கிய தேநீரும் உணவு வகைகளும் ‘ராக்கி’
எனும் மதுவகையும் அந்நாட்டின் பெருமைகளாக விளங்குகின்றன.
1964ஆம் ஆண்டு பிறந்தவர் அய்ஃபர் டுன்ஸ்.
துருக்கியின் கருங்கடல் பகுதியைச் சேர்ந்தவர் அவருடைய அம்மா. அப்பா பல்கேரியாவிலிருந்து
புலம்பெயர்ந்து வந்தவர். எனவே, குழந்தைப் பருவம் முதலே இரு வேறு கலாச்சாரங்களின் கலவையான
அனுபவங்கள் வாய்த்தன. பல்வேறு கலாச்சார அம்சங்களின் வண்ணங்களையும், சர்ச்சைகளையும்,
குரல்களையும் கொண்டிருந்த புராதனமான ஒடாமன் பேரரசைப் போன்றே அமைந்திருந்தது அவருடைய
குடும்பம். இஸ்தான்புல் பல்கலைக் கழகத்தில் அரசியலில் பட்டம் பெற்ற அய்ஃபர் டுன்ஸ்
பத்திரிகையாளராகவும் துருக்கியின் முன்னணி பதிப்பகம் ஒன்றின் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
எழுத்தையே வாழ்க்கையாகக் கொண்ட அவருக்கு நாவல்கள் சிறுகதைகளை எழுதுவது மட்டுமே அல்ல
குறிக்கோள். புனைவின் வழியாக சமூகப் போக்குகளையும் கால மாற்றங்களையும் எளியோரின் வலிகளையும்
மனிதர்களின் பாசாங்குகளையும் அம்பலப்படுத்தவே விரும்புகிறார். ‘வாழ்க்கை எப்போதுமே
கலையைத் தோற்கடித்தபடி இருக்கிறது’ என்பது அவரது நம்பிக்கை. ஆனால், அவ்வாறான வாழ்க்கையை
மீறிச் செல்லும் எழுத்துகளை எழுதவே தொடர்ந்து அவர் முயல்கிறார்.
’அஸீஸ் பே சம்பவம்’ போலவோ அல்லது அவரது
இன்னொரு நாவலான ‘பச்சை தேவதையின் கதை’ போன்றோ எளிமையானதல்ல ‘ஒரு மனநல விடுதியின் மிகவும்
நம்பத் தகாத வரலாற்று அறிக்கை.’ களம், மொழி, சித்தரிப்பு என அனைத்திலும் முற்றிலும்
மாறுபட்டது.
துருக்கியின் வடக்குப் பகுதியில், கருங்கடல்
கரையில் உள்ள சிறிய நகரத்தில் அமைந்த மனநல விடுதிதான் இதன் களம். கடற்கரையில் அமைந்திருந்தபோதும்
இந்த விடுதியின் ஜன்னல்கள் எவையுமே கடலை நோக்கி அமைந்தவை அல்ல. இந்த மனநல விடுதியில்
சிகிச்சை பெறுவோர், மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலிகள், உடன் தங்கியிருக்கும் மனிதர்கள்
ஆகியோரே இந்த நாவலின் கதாபாத்திரங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை. ஒவ்வொன்றும்
வெவ்வேறு கதை. ஆனால், ஒன்றுக்கொன்று பின்னிப் பின்னித் தொடர்ந்து கதைகள் வளர்ந்தவண்ணமே
உள்ளன. இந்தக் கதைகள் சொல்லப்படும்போதே அவை துருக்கியின் பல்வேறு நகரங்களிலும் கிராமங்களிலும்
பயணம் செய்கின்றன. சிற்றூர்களில் உள்ள பெட்டிக்கடைக்காரர்களிலிருந்து அரசாங்கப் பணியாளர்கள்,
அதிகாரிகள், கலைஞர்கள் என்று பல்வேறு மனிதர்களின் கதைகளைச் சொல்கிறன்றன. கூடவே இதன்
சம்பவங்கள் வெவ்வேறு காலங்களிலும் நிகழ்கின்றன. அவற்றுள் சில துருக்கியின் வரலாற்று
நிகழ்வுகள், சமூக அரசியல் சம்பவங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டவை. ஒவ்வொரு சம்பவத்துக்குப் பிறகும் மறுபடி மனநல விடுதிக்கு
வந்து சேர்கிறது. அந்த வகையில், இந்த நாவலின் களமும் பயணமும் அய்ஃபர் டுன்ஷ் கண்ட துருக்கியின்
மனித மனங்களினூடான பயணம் என்று கருதலாம். பல்வேறு பகுதிகளின் வழியே வெவ்வேறு காலத்தில்
நடக்கும் இந்த சம்பவங்களுக்கேற்ப இதன் சித்தரிப்பிலும் மொழியிலும் தகுந்த மாற்றங்களைக்
காணமுடிகிறது. நகரங்களிலும் கிராமங்களிலும் காதில் விழும் குரல்களைக் கேட்டபடி, அன்றாடங்களை
கவனித்தபடி நடந்தே சுற்றிப் பார்க்கும் பழக்கம் கொண்டவர் அய்ஃபர் டுன்ஸ் என்பதால் சொற்களின்
வழியே கதாபாத்திரங்களின் அறியாத பக்கங்களை எழுதிக் காட்ட முடிந்திருக்கிறது.
இந்தக் கதைகளை வாசித்து முடிக்கும்போது
யார் மனநலம் குன்றியவர்கள், யாருக்கு சிகிச்சை தேவை, தேவையில்லை என்ற குழப்பம் எழுகிறது.
சரியான மனநலம் என்பது எது என்ற கேள்வியும். இவ்வுலகில் எல்லோருமே ஏதோவொரு விதத்தில்,
அளவில் மனப்பிறழ்வு கொண்டவர்கள்தான் என்ற எண்ணமும் உறுதிப்படுகிறது.
நோய்மைகள் பொதுவாகவே துயரமானவை – பல்வலியோ,
தலைவலியோ. அவற்றுக்கான சிகிச்சைகள் தெளிவானவை. இதைச் செய்தால் இது தீரும் என்ற திட்டவட்டமான
தீர்வுகளைக் கொண்டவை. ஆனால், மனநோய் அவ்வாறானதல்ல. அதைத் துல்லியமாகக் கண்டறிவதும்
அதற்கு சிகிச்சையளிப்பதும் எளிதானதல்ல. ‘நோயாளி’ தன்னை மிகச் சரியானவராக இயல்பானவராகவே
கருதுவார். தன்னைச் சுற்றியுள்ள உலகமே சரியில்லாதது என்று யோசிப்பார். சுமுகமான இயல்பான
உலகுக்கும் அவருக்குமான இடைவெளி புரிந்துகொள்ள முடியாதது. உத்தேசமாகப் புரிந்துகொண்டு
ஊகத்தில் சிகிச்சை தரலாம். எனவே, நோய்களில் ஆகத் துயரமானது மனநோய். நோயாளியின் உறவினர்களுக்கு,
உடனிருப்போர்க்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்துவது. அவ்வாறான ஒரு சிக்கலான நிலையைப்
பற்றிய முழு நாவல் என்று பார்க்கும்போது சிறிய தயக்கம் எழும். இதை வாசிப்பதை சற்று
தள்ளிவைக்கலாம் என்று தோன்றும். ஆனால், உண்மையில் இந்த நாவல் அத்தகைய துயரத்தின் சாயல்கள்
சிறிதுமின்றி மனப் பிறழ்வு நிலையின் கொண்டாட்டமான தருணங்களையே அதிகமும் சித்தரிக்க
முயன்றுள்ளது. நரம்புக் கோளாறு, OCD, மனச் சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
உலகத்தையும் நடவடிக்கைகளையும் நகைச்சுவை தொனிக்க சித்தரித்துள்ளன. அந்த மனநோய் விடுதியை
ஒரு திருவிழாவினைப் போல சித்தரித்திருப்பதால் இந்த நாவலை ‘கார்னிவலெஸ்க்’ நாவல் என்று
விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மனநல விடுதியை மையமாகக் கொண்ட நாவலென்றபோதும்
இதுவொரு அரசியல் நாவலும்கூட. இதில் காட்டப்பட்டுள்ள மனநல விடுதி என்பது ஒட்டுமொத்த
துருக்கிதான் என்ற அரசியல் பார்வைக்கும் இடம் உள்ளது.
இந்த நாவலை வாசிக்கும்போது, மனப் பிறழ்வை
களமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட புனைவுகள் சில நினைவுக்கு வந்தன. கோபி கிருஷ்ணனின்
‘டேபிள் டென்னிஸ்’, ‘உணர்வுகள் உறங்குவதில்லை’ எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’, நகுலனின்
‘நினைவுப் பாதை’ ஆகியவற்றை குறிப்பிடலாம்.
கதைக்களம், கதாபாத்திரங்கள், மொழி என
யாவுமே சவாலானதாய் அமைந்துள்ள இந்த நாவலை தமிழில் வெகு இயல்பாக வாசிக்கும்படியாக நேர்த்தியாக
மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ‘அஸீஸ் பே சம்பவம்’ நாவலை அழகுற மொழியாக்கம் செய்த
சுகுமாரன், அந்த நாவலுக்கு நேர்மாறான ஒரு போக்கைக் கொண்ட, சிக்கலான இந்த நாவலிலும்
தன் அர்ப்பணிப்பையும் மொழித்திறனையும் முழுமையாக செலுத்தியிருப்பதன் பலனை வாசகர்கள்
உணர முடிகிறது. இவ்வாறான ஒரு புனைவை மொழிபெயர்க்கத் தேர்வு செய்வதே சிரமம். ஆனால்,
தன் உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் மொழிபெயர்த்து முடித்திருக்கும் சுகுமாரனின்
மனோதிடத்தை பாராட்டவேண்டும். தகுந்த நேரத்தில் அவரது பணியின் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டு
செவ்வனே பங்களித்திருக்கிறார் ஷாலினி பிரியதர்ஷினி.
அளவில் பெரிய நாவலென்றாலும் கதை அமைப்பு,
விதவிதமான விநோதமான கதாபாத்திரங்கள், மொழியாக்கத்தின் நேர்த்தி ஆகியவற்றின் காரணமாக
ஊன்றி வாசிக்க முடியும், இந்த வரலாற்று அறிக்கையை. மனப்பிறழ்வுக்கு உள்ளானவர்களின்
உலகத்தைப் புரிந்து கொள்வது சிரமம். புறத்தில் சிக்கலானதாகவும் தொல்லைகளை விளைவிப்பதாகவும்
இருந்தபோதும் அவர்கள் ஒவ்வொருவரின் அந்தரங்க உலகம் நேரடியாகவும் தூயதாகவும் இருக்கும்
என்றுதான் இந்த நாவலை வாசித்து முடிக்கும்போது எண்ணத் தோன்றியது.
( காலச்சுவடு பதிப்பகம், ஜூலை 2025,
512 பக்கங்கள், விலை ரூ.650/- )
No comments:
Post a Comment