Sunday, 3 August 2025

சுகுமாரன் – காலம் அறியும் ஒரு பெயர்

 


கோவை கொடீசியா அமைப்பினர் நடத்தும் ஒன்பதாவது புத்தகத் திருவிழா. கோவையின் பெருமிதங்களில் ஒன்று. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் புத்தகத் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றாலும் புத்தகத் திருவிழா என்றால் கோவைப் புத்தகத் திருவிழாதான் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. கோவைப் புத்தகத் திருவிழாவைப் போல நடத்தவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது. ஆசையை ஏற்படுத்துவது.

கோவை புத்தகத் திருவிழா இன்னொரு வகையிலும் சிறப்பானது. பிற இடங்களில் நடக்கும் புத்தகக் கண்காட்சிகள் தனியார் அமைப்புகளோ அல்லது மாவட்ட நிர்வாகமோ ஏற்பாடு செய்கிற திருவிழாக்கள். கோவைப் புத்தகத் திருவிழா, தொழில் கூட்டமைப்பினர் நடத்துகிற ஒன்று. கொடீசியா இந்த வளாகத்தில் ஆண்டு முழுக்க பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுகின்றன என்றாலும் தொழில் வளர்ச்சியுடன் சேர்ந்து வாசிப்பும் வாசிப்பு அனுபவமும் பெருக வேண்டும் என்ற நோக்கில் ஏற்பாடு செய்யப்படும் இந்தப் புத்தகத் திருவிழா சமுக நோக்கினையும் உள்ளடக்கியது.

கோவைப் புத்தகத் திருவிழாவின் மூன்றாவது சிறப்பு கொடீசியா வழங்கும் விருதுகள். சென்னைப் புத்தகத் திருவிழாவைத் தவிர வேறு புத்தகத் திருவிழாக்களில் இல்லாத சிறப்பம்சம் இது. தமிழ் இலக்கியத்துக்கு தொண்டு புரியும் ஒரு எழுத்தாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதையும், இளம் எழுத்தாளர்களுக்கான இரண்டு விருதுகளையும் இந்த ஆண்டு முதல் மொழிபெயர்ப்பாளர்களுக்கான விருதையும் கொடீசியா வழங்குகிறது.

கொடீசியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது இந்த ஆண்டு சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு வெளியானபோது உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. முதலில் நான் சரியான தகவல்தானா என்று உறுதிப்படுத்திக்கொண்டேன். தகுதியானவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது என்பது நம்ப முடியாத ஒன்றாக ஆகிவிட்ட நிலை. கொடீசியா அமைப்பினருக்கும் விருதுக் குழுவினருக்கும் நன்றிகள், பாராட்டுக்கள். சுகுமாரனுக்கு இன்று வழங்கப்படும் விருது கொடீசியா விருதுகளின் மீதான மரியாதையை மேலும் உயரப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

0



சுகுமாரன் எனும் கவிஞர்

1985ஆம் ஆண்டு சுகுமாரனின் முதல் கவிதைத் தொகுப்பு ‘கோடைகாலக் குறிப்புகள்’ வெளியானது. என் கல்லூரி படிப்பின் இரண்டாம் ஆண்டு. தமிழ் புனைவுலகை புதுக்கவிதை தீவிரமாக ஆக்கிரமித்திருந்த காலம். நிறைய கவிஞர்கள். புதிய தொகுப்புகள்.  இவற்றுக்கு நடுவில் ஒரு புதிய குரலைக் கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருந்த சமயம்.

எனது கதவைத் தட்டிக் கேட்காதே எதுவும்

மரணத்தால் விறைத்திருக்கிறது என் வீடு

நான் உனக்குத் தரும் சொற்களில்

மிருகங்களில் கோரைப்பற்கள் முறைத்திருக்கலாம்.

உன்னுடன் பகிர்ந்துகொள்ளும் சிகரெட்டில்

விஷத்தின் துகள்கள் இருக்கலாம்

உன்னுடைய தட்டில் பரிமாறும் உணவில்

சகோதரர்களின் மாமிசம் கலந்திருக்கலாம்

உனக்குத் தயாரிக்கும் தேநீரில்

கண்ணீரின் உப்பு கரைந்திருக்கலாம்

 

இப்படியொரு கவிதை அந்தத் தொகுப்பில் இருந்தது. இந்த வரிகள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து விடுபடி முடியாமல் நண்பர்களிடம் அரற்றியபடியே இருந்தது இப்போது நினைவில் இருக்கிறது.

ஊன்றுகோலில் இருக்கிறது குருடனின் கண், விரல்களில் அவிழ்ந்தது தாளம் போன்ற அபாரமான வரிகள் புதிய கவிதைகளையும் ஒரு புதிய கவிஞனையும் அடையாளம் காட்டியது.

பெரும்பாலான தமிழ்க் கவிஞர்களின் முதல் தொகுப்பு அவர்களது கைக்காசு செலவில்தான் வெளியாகும். தமிழ்க் கவிதையின் மாற்ற முடியாத சம்பிரதாயங்களில் ஒன்று. சுகுமாரனின் தொகுப்பும் அப்படித்தான் வெளியானது. அம்மாவின் தோடுகளை அடகுவைத்துக் கிடைத்த பணம், சொந்த சேமிப்பில் இருந்த சொற்ப தொகை, சிறிய அளவில் கடன் எல்லாவற்றையும் சேர்த்து இரண்டாயிரம் ரூபாய் செலவில் தொகுப்பு அச்சிடப்பட்டு சென்னையிலிருந்து பார்சலில் கோவை வந்து சேர்கிறது. கவிஞர் பரபரப்புடன் பார்சல் அலுவலகத்துக்கு செல்கிறார். கிடங்கில் கட்டுக்கட்டாக பெட்டி பெட்டியாக பார்சல்கள். இரும்பு உதிர் பாகங்களுக்கும் பம்பு செட்டுகளும் கிரைன்டர்களுக்கும் நடுவே ஒரு மூலையில் கவிஞரின் பெட்டியும் கிடக்கிறது. கட்டு பிரிந்து புத்தம் புதுத் தொகுப்பின் பிரதிகள் சிதறிக் கிடக்கின்றன. அங்கிருந்த சிப்பந்தியிடம் புகார் சொல்கிறார். ‘இதெல்லாம் பெரிய விஷயமா சார். பார்சல் சரியா கட்டலைன்னா ஒடஞ்சுதான் போகும். புக் எதுவும் டேமேஜ் ஆகலையில்ல…’ என்று சொல்லிவிட்டு புத்தகங்களை சேகரிக்க அந்தப் பெண்ணும் உதவுகிறாள். ஒரு பிரதியை எடுத்துப் புரட்டுகிறார். கவிஞர் புத்தகக் கட்டை ஒழுங்குபடுத்தி எடுத்து ரசீதை கொடுப்பதற்குள்ளாக இரண்டொரு கவிதைகளைப் படித்துவிடுகிறார் அந்த பெண். ரசீதைப் பெற்றுக்கொண்டு சொல்கிறார் “வாழ்க்கை என்ன அவ்வளவு சோகமாவா இருக்கு சார். இவ்ளோ கொடுமையா எழுதி வெச்சிருக்கீங்க?”

அந்தத் தொகுப்பைக் குறித்து இதைவிட சுருக்கமாகவும் கச்சிதமாகவும் ஒரு விமர்சனம் இருக்க முடியாது. பார்சல் அலுவலகத்திலிருந்த அந்த பெண்தான் சுகுமாரனின் முதல் வாசகி. அவர் தொகுப்புக்குக் கிட்டிய முதல் விமர்சனம் அதுவே.

அந்த காலகட்டத்துக்குப் பொருத்தமான கவிதைகளைக் கொண்டிருந்த தொகுப்பு அது. வேலையின்மை இளைஞர்களை வதைத்த காலம். வாழ்வின் மீதான அவநம்பிக்கை, அன்றாடத்தின் நிச்சயமின்மையை துயரமும் வன்முறையும் கலந்த மொழியில் வெளிப்படுத்திய கவிதைகள் அவை.

வாழ்வின் மீது அவநம்பிக்கைக் கொண்டிருந்த அந்த சுகுமாரனைக் காட்டிலும் அவரை எனக்கு இன்னும் நெருக்கமாக்கியவை அவரது இரண்டாவது தொகுப்பான ‘பயணியின் சங்கீதங்கள்’ தொகுப்பில் இருந்த கவிதைகளே. 1991ஆம் ஆண்டு வெளிவந்தது.

உன் பெயர், முதல் பெண்ணுக்கு சில வரிகள், முடிச்சு என மூன்று காதல் கவிதைகள் அத்தொகுப்பில் உள்ளன.

தமிழில் இதுவரையும் வெளிவந்த ‘காதல்’ கவிதைகளில் ஆகச் சிறந்தவற்றின் சிறு பட்டியலில் நிச்சயமாக இடம்பெறத் தகுந்தவை.

உன் பெயர்

இன்று என் உற்சாகங்களை மூடும் வலை

என் இதயத்தைத் துளைக்கும் அன்பின் விஷம் தடவிய வாள்

நீயே என் ஆனந்தம், அலைச்சலின் ஆசுவாசம், குதூகலம்

நீயே என் துக்கம், பதற்றம், பிரிவின் வலி

காலம் அறியும்,

உன் பெயர் வெறும் பெயரல்ல எனக்கு

நீயே அறிபவள்,

நான் வழியில் எதிர்ப்பட்ட வெறும் பெயரோ உனக்கு?

உன் பெயர்

இந்த இரவில் காலி அறையில் மாட்டிய கடிகாரம்

 

இந்த இரண்டு தொகுப்புகளைத் தொடர்ந்து ‘சிலைகளின் காலம்’, ‘வாழ்நிலம்’, ‘பூமியை வாசிக்கும் சிறுமி’, ‘நீருக்குக் கதவுகள் இல்லை’, ‘செவ்வாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை அல்ல’ ஆகிய தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஒரு மொத்தத் தொகுப்பும்கூட.

ஒரு கவிதை வாசகனாக சுகுமாரனின் கவிதைகளின் சிறப்பம்சங்கள் என்று இவற்றைக் கூறலாம். செறிவும் கச்சிதமும் கொண்ட மொழி,  துல்லியமான சொற் தேர்வு, நேர்த்தியான கவிதையின் அமைப்பு,  முந்தைய ஒன்றிலிருந்து அடுத்ததை வேறுபடுத்தி முன்னகர்ந்து செல்லும் முனைப்பு, மரபை நுணுகிக் கற்றிருந்தபோதும் அதன் தாக்கத்தை உள்ளீடுகளில் மட்டும் தக்கவைத்திருப்பது, கவிதையின் மர்மத்தை, ரகசியத்தை, வசீகரத்தை கண்டடைவதில் காட்டும் தீவிரம்.

தொடர்ந்து இப்பண்புகளை தன் கவிதைகளுக்குள்ளாக மறுபரிசீலனைக்கு உட்படுத்தி அவற்றை புதுப்பித்தே கொண்டிருப்பதனால்தான் இன்றும் அவரது கவிதைகளில் தனது தனித்தன்மையை தக்க வைத்திருக்க முடிகிறது.

தமிழ் கவிதை மரபில் சுகுமாரன் ஒரு சாதனையாளர். முதல் கவிதையை எழுதிய காலந்தொட்டு இன்று வரை கவிதையின் தீவிரமாக இயங்கி வருவது எளிதானதல்ல. கவிதையில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து அடுத்தடுத்து வரும் தலைமுறையினரோடு போட்டியிட்ட தன்னையும் புதுப்பித்துக்கொண்டு எழுதுவது என்பது பெரும் சவால். அதை மிக வெற்றிகரமாக சாதித்து வருபவர் சுகுமாரன்.

2

சுகுமாரன் எனும் மொழிபெயர்ப்பாளர்

ஒரு கவிஞன், எழுத்தாளனின் ஆயுதம், கருவி என்பது மொழி. அந்த மொழியை கூர் மழுங்காது வைத்துக்கொள்வது அவனது பெரும் பொறுப்பு. வளமான சொற்கிடங்கு, சமகாலத்தன்மை, புதிய சொற்சேர்க்கைகள் என்று தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டிய அவசியம் உள்ளது.

சுகுமாரன் தன் மொழியின் மீது எப்போதும் கவனம் வைத்திருப்பவர். அவரது மொழி கூர் இழக்காமல் இருப்பதற்கான காரணம் என நான் உத்தேசிப்பது 1) மரபுப் பயிற்சி 2) தீவிரமான தொடர்ந்த வாசிப்பு 3) மொழிபெயர்ப்பு.  

உலகெங்கிலும் சிறந்த கவிஞர்களும் புனைகதையாசிரியர்களும் மொழியாக்கத்தில் தீவிரமாக பங்களித்திருக்கிறார்கள்.  தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் எல்லோருமே மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

சுகுமாரன் கவிஞராக அறியப்பட்ட காலத்திலேயே மொழிபெயர்ப்பாளராகவும் கவனிக்கப்பட்டவர். முதல் தொகுப்பு வெளியான அதே 1985ஆம் ஆண்டிலேயே மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் எழுதிய ‘மார்க்சிய அழகியல் – ஒரு முன்னுரை’ நூலை தமிழில் மொழிபெயர்த்தார். தொடர்ந்து மலையாளத்திலிருந்து சக்கரியாவின் ‘இதுதான் என் பெயர்’ நாவல், பெண்வழிகள் கவிதைகள், மயிலம்மா – போரட்டமே வாழ்க்கை, உண்ணி ஆர் இன் ‘காளி நாடகம்’, பஷீரின் ‘மதிலுகள்’, ‘லீலை’ சிறுகதைகள் ஆகியவற்றை மொழிபெயர்த்துள்ளார்.

ஆங்கிலம் வழியாக, பாப்லோ நெரூதாவின் கவிதைகள், அஸிஸ் பே சம்பவம், பட்டு, தனிமையின் நூறு ஆண்டுகள் ஆகிய நாவல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.

ஈரோடு இலக்கியச் சுற்றம் நடத்திய ஒரு நிகழ்ச்சியில், மொழிபெயர்ப்பு குறித்து அவர் ஆற்றிய உரையும் அதன் எழுத்து வடிவமும் மிக முக்கியமான ஒன்று.

3

சுகுமாரன் எனும் கட்டுரையாளர்

கவிதையும் மொழியாக்கமும் அவர் விரும்பிச் செய்பவை. ஆனால், ஒரு ஊடகவியலாளராக, பத்திரிகையாளராக அவர் கட்டுரைகளை எழுத நேர்ந்தது. உயிர்மை இதழில் தொடர் எழுதலானார். 2004ஆம் ஆண்டு வெளியான அவரது முதல் கட்டுரை ‘ஜி.நாகராஜனும் வி.மாலாவும்’ இன்னும் என் நினைவில் உள்ளது.

புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை ஒருவரை பேட்டியெடுத்த அனுபவத்தை மிக பிரமாதமாக எழுதியிருந்தார். ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட உச்ச நட்சத்திரம். தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் அவரது கொடி பறந்தது. திரைத் துறையிலிருந்து விலகி அரசியலில் சில காலம் இருந்தார். எல்லோரும் அவரை மறந்திருந்த காலம். பிரமாண்டமான மாளிகையில் புறக்கணிக்கப்பட்ட தேவதையாக வாழ்ந்திருந்தவரை சந்திக்கச் செல்கிறார். சுருக்கங்கள் விழுந்த முகம். வாடியத் தோற்றம். புறக்கணிப்பின் கசப்பும் முதுமையை ஏற்கத் தயங்கும் கோபமும் அவரிடம்.

கட்டுரையுடன் வெளியிடுவதற்காக தேர்ந்தெடுத்து வைத்திருந்த ஒரு படத்தை தருகிறார். அழகின் உச்சத்திலிருந்த போது எடுத்த படம். அதைக் கண்டதும் அவரது கண்களிலும் முகத்திலும் பழைய நாட்கள் மகிழ்ச்சியுடன் திரளுகின்றன. கொஞ்சம் நாணமும்கூட. படத்தை கையில் வாங்கிக் கொண்டு அறைக்குள் செல்கிறார்.

வெகு நேரம் வரை காத்திருந்தும் அவர் வெளியே வரவில்லை. தயக்கத்துடன் அறைக்குள் எட்டிப் பார்க்கிறார். நடிகையின் இடது கையில் அந்த கருப்பு வெள்ளைப் புகைப்படம். வலது கையில் தோளிலிருந்து விலக்கிய சேலை. நிலைக் கண்ணாடியில் தன்னுடைய பழைய நேற்றையும் இன்றையும் ஒப்பிட்டு நின்றிருந்தார்.

அந்த நடிகை வைஜெயந்தி மாலா.

மறக்க முடியாத இன்னொரு கட்டுரை உண்டு. அந்தக் கட்டுரைக்கு அவரிட்ட பெயர் ‘பொன்னகரம்’. சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறித்து எழுதப்பட்டது அக்கட்டுரை  தமிழின் மிகச் சிறந்த கட்டுரைகளில் ஒன்று.

செறிவான கவிதையிலும் கச்சிதமான மொழியாக்கத்திலும் காணக்கூடிய அதே மொழிநுட்பத்தை அவரது கட்டுரைகளிலும் பார்க்கமுடியும். எத்தனை எத்தனை அனுபவங்கள். அவரது கட்டுரைகள் புனைகதைகளுக்கு மிக நெருக்கமானவை. பல கட்டுரைகள் புனைகதைகளைவிட அபாரமானவை. வீட்டுக்கு அருகிலுள்ள காலி மனையில் சோமன் கட்டிவைக்கும் பசுமாட்டும் அதைத் தேடி வரும் கொக்குக்கும் உள்ள நட்பைச் சொல்லும் கட்டுரை, மாதவிக்குட்டியின் சமாதியை ஒரு கபரஸ்தானில் தேடிக் கண்டடைந்த அனுபவம், ஞானபீட விருதுகளைக் குறித்த வெளிப்படையான விமர்சனம், திரைப்பட விமர்சனத் துறையில் இந்திய அளவில் கொண்டாடப்படும் மேதையான சதீஷ் பகதூர் பற்றிய கட்டுரை, மதுரை சோமு, மைக்கேல் ஜாக்சன் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள், இந்தி இசையமைப்பாளர் நௌஷத் அலி பற்றிய கட்டுரை, முன்னால் கேரள முதல்வர் ஈ.எம்.எஸ், ஓ.வி. விஜயனின் ‘கஸாக்கின் இதிகாசம்’ நாவலை மொழிபெயர்க்க எடுத்த முயற்சி,‘சில்க்’ ஸ்மிதாவைப் பற்றிய கட்டுரை எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

உண்மையில், சிறப்பான சில கட்டுரைகளை வாசித்தபோது, கவிஞர் மொழிபெயர்ப்பாளர் என்பதைவிட கட்டுரையாளர் என்பதே பொருத்தமானது என்று எண்ணியுள்ளேன். தமிழின் மிகச் சிறந்த கட்டுரை எழுத்தாளர்களின் பட்டியலில் சுகுமாரனுக்கு முதன்மையான இடம் உண்டு.

4




சுகுமாரன் எனும் புனைகதையாளர்

புனைகதைகளுக்கு நிகராகக் கட்டுரைகளை எழுதும் ஒருவர் ஏன் சிறுகதைகளையோ நாவல்களையோ எழுதவில்லை என்ற கேள்வி எப்போதும் இருந்ததுண்டு. தொடக்க காலத்தில் ‘மீட்சி’ இதழில் ஒரு சிறுகதை எழுதியுள்ளார். ‘தங்கப்பன் ஆசாரியின் கிளி’ என்பது தலைப்பு. தொடர்ந்து அவ்வப்போது சிறுகதைகள் எழுதியிருப்பினும் தொடர்ந்து அதில் கவனம் செலுத்தவில்லை. அண்மையில், ‘அகழ்’ இதழில் எழுதிய ‘உஸ்தாத்’ எனும் கதை அவரது புனைவுத் திறனுக்கு சிறந்த உதாரணம்.

2013ஆம் ஆண்டு அவருடைய முதல் நாவல் வெளியானது. ‘வெல்லிங்டன்’.

பிறந்த ஒன்பதாம் மாதம் முதல் பத்து வயதுவரையும் பிறகு கல்லூரி பருவத்திலும் வசித்திருந்த இடம் வெல்லிங்டன். அந்த பருவத்தில் அங்கு வாழ்ந்த மனிதர்கள், நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், அப்போது நடந்த சம்பவங்களின் வழியாக தன் பால்ய காலத்தை மீட்டுருவாக்கம் செய்யும் ஒரு முயற்சியே அந்த நாவல். ஒருவிதத்தில் பழம்நினைவுகளை அசைபோடுதல். எதிலும் கட்டுக்கடங்காத ஆர்வமும் துறுதுறுப்பும் துள்ளலும் நிறைந்த ஒரு சிறுவனின் உலகம். நுட்பமான உணர்வுகளை மிகத் துல்லியமாகவும் அதேசமயம் அந்தப் பருவத்துக்கேயுரிய தெளிவின்மையுடனும் சித்தரித்திருக்கும் நாவல்.

இரண்டாவது நாவல் ‘பெருவலி’. ஒரு சரித்திர நாவல். முகலாயப் பேரரசர் ஷாஜஹானின் மகளும் ஔரங்கசீப்பின் சகோதரியுமான ஜஹனாராவை நாயகியைக் கொண்ட முக்கியமான ஒரு நாவல். அரியணை ஆசையின் பின்னிருக்கும் கொடூர முகத்தையும் பெண்களை அந்தப்புரத்துக்குள் ஒடுக்கும் நிலையையும் இதனூடாக ஜஹனாரா எப்படி தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறாள் என்பதையும் விவரிக்கும் புதினம். மும்தாஜின் பதினான்கு குழந்தைகளில் மூத்தவளான ஜஹனாரா அரசியல் மதிநுட்பமும், ஆன்மிக இலக்கியங்களில் புலமையும் மிக்கவள். கவிதை, இசை, நடனம் தெரிந்தவள். ஷாஜஹானின் தர்பாரில் அவளுக்கென தனி ஆசனம் இருந்தது. அரச குடும்பத்துப் பெண்கள் யாருக்கும் இல்லாத அளவுக்கு செல்வமும் செல்வாக்கும் இருந்தன.

சுகுமாரனின் மொழி நுட்பமும் தனித்தன்மையும் இவ்விரு நாவல்களையும் தமிழின் பிற நாவல்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகின்றன. ஒரு சரித்திர நாவலுக்கான வழக்கமான அம்சங்களைத் தவிர்த்து மன ஆழங்களை அணுகி ஆராய்ந்து செறிவாக வெளிப்படுத்துவது பெருவலியின் சிறப்பு.

நாவலாசிரியராக சுகுமாரனின் இடம் தமிழில் முக்கியமானது.

5

சுகுமாரன் எனும் பத்திரிகையாளர்

சென்னையில் தொடங்கிய ஆயத்த ஆடை நிறுவனம் சரி வராமல் ஏதேனும் பத்திரிகையில் சேரலாம் என்று தயக்கத்துடன் முயல்கிறார். குங்குமம் நிறுவனத்திலிருந்து ‘தமிழன்’ என்ற பத்திரிகை தொடங்கும் தகவல் தெரிந்து விண்ணப்பிக்கிறார். நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார். சுகுமாரனை நேர்காணல் செய்தவர் சின்னக்குத்தூசி. ஒரு கவிஞராக சுகுமாரனை ஏற்கெனவே வாசித்திருந்தவர் என்பதால் வேலை கிடைக்கிறது.

ஆனால், சில மாதங்களிலேயே ‘தமிழன்’ இதழ் நிறுத்தப்படுகிறது. எனவே, குங்குமம் வார இதழில் உதவி ஆசிரியராக இடம் பெயர நேர்கிறது.

குங்குமம் இதழில் பணியாற்றிய காலத்தில் சில மாதங்கள் அவர் பொறுப்பாசிரியராக செயல்பட வேண்டியிருந்தது. அப்போது இளையராஜாவை பேட்டி எடுக்க நினைத்தார். 1997ஆம் ஆண்டு. அவரிடம் நேரம் பெறுவதென்பதே பெரும் சவால். முட்டி மோதி சந்திப்புக்கான நேரம் கிடைத்தது. ஒரு வாரமாக சிரமப்பட்டு கேட்கவேண்டிய கேள்விகளை தயார் செய்கிறார். அவரது இசையின் எல்லா பரிணாமங்களையும் அதன் ஊற்றையும் வெளிப்படுத்தும் விதமான கேள்விகள்.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு செல்கிறார். அப்போது இளையராஜா ஒரு திரைப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பில் இருக்கிறார். இடைவேளையின்போது சந்திக்க அனுமதிக்கப்படுகிறது. தயாராக அச்சிடப்பட்ட கேள்விகளை வாங்கிப் பார்க்கிறார். ‘இத்தனை கேள்விகளா? இதுக்கெல்லாம் பதில் சொல்லணும்னா நேரம் பத்தாதே. நீங்க ஒண்ணு பண்ணுங்க. நாளைக்கு காலையில வீட்டுக்கு வந்துருங்க.’ என்று சொல்லிவிட்டு ஒலிப்பதிவுக்கு சென்றுவிடுகிறார்.

மறுநாள் காலை இளையராஜாவின் வீடு. ‘என்ன சாப்படறீங்க?’ என்று விசாரிக்கிறார். எதுவும் வேண்டாம் என்று மறுக்கிறார். பேட்டி கிடைத்தால் போதும் என்ற மனநிலை. உண்மையில் காலையில் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. இளையராஜா உற்றுப் பார்த்துவிட்டு எழுந்து உள்ளே செல்கிறார். சிறிது நேரத்துக்கு பின் திரும்பி வருகிறார். பின்னாலேயே ஒரு பணியாள் ஒரு தட்டில் பலகாரமும் பழரசத்தையும் கொண்டு வந்து வைக்கிறார். ‘சாப்புடுங்க.’ என்று சொல்லிவிட்டு மேசை மீதிருந்து கற்றைத் தாள்களை எடுத்துப்புரட்டுகிறார். சாப்பிட்டு முடித்தவுடன் தாள்களை நீட்டுகிறார் ‘இதைப் போட்டுருங்க’.

தாள்களைப் புரட்டிப் பார்க்கிறார் சுகுமாரன். அவரே கேட்டுக்கொண்ட கேள்விகளுக்கு அவரே எழுதிய பதில்கள்.  இவருக்கா சரியான கோபம். பத்து நாளாக தூக்கம் கேட்டு, மண்டையை உடைத்து தயாரித்த கேள்விகளை தூக்கிப் போட்டுவிட்டு இவரே கேள்வியையும் எழுதி பதிலும் எழுதுவாரென்றால் நான் எதற்காக என்ற ஆத்திரம். வாய்விட்டு எதையும் சொல்லவில்லை என்றாலும் முகமே காட்டிக்கொடுத்துவிடுகிறது.

“என்னாச்சு? இது பத்தாதா?” என்று கேட்கிறார் இளையராஜா.

இதுதான் சமயம் என்று இசையைப் பற்றியும் இளையராஜாவின் இசையைப் பற்றியும் அவரது சிறப்பம்சங்களைப் பற்றியும் சேர்த்து வைத்ததையெல்லாம் கொட்டித் தீர்க்கிறார். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார் இளையராஜா. “சபாஷ், நீங்க சாயங்காலமா ஸ்டூடியோவுக்கு வந்துருங்க. பேசிக்கலாம்” என்று சிரித்தபடி விடைகொடுக்கிறார். நிம்மதி பெருமூச்சுடன் வெளியே வந்தவர் மாலையில் ஸ்டூடியோவுக்கு போகிறார்.

மலையாளப்படமொன்றின் பின்னணி இசைப்பதிவு. விளக்குகள் அணைக்கப்பட்டு படத்தின் இறுதிக் காட்சி திரையில் ஓடுகிறது. விளக்குகள் ஒளிர்ந்ததும் இளையராஜா இசைக் குறிப்புகளை எழுதத் தொடங்குகிறார். எழுதி முடித்ததும் ‘நரசிம்மன்’ என்று குரல் கொடுத்ததும், நரசிம்மன் உள்ளே வந்து இசைக் குறிப்புகளை வாங்கிக் கொள்கிறார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொரு இசைக்கலைஞரும் அவருக்கான குறிப்புகளை வந்து வாங்கிச் செல்கிறார்கள். குறிப்புகளுக்கு ஏற்ப வாத்தியங்கள் தயாராகின்றன. இளையராஜா உத்தரவிட்டதும் இசைக்கோர்ப்பு தொடங்கியது. கருவிகள் ஒத்திசைந்து இசை எழுகிறது. ஓடும் மௌனப் படத்தில் அந்த இசை இணைகிறது. சற்று முன்பு வரை வெறும் பிம்பங்களோடு அசைந்த அந்தப் படத்தில் இப்போது உயிரோட்டம். அந்த சில மணித்துளிகளில் இளையராஜா ஏன் இந்த அளவுக்குக் கொண்டாடப்படுகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

“நம்ம வேலை முடிஞ்சிருச்சு. பேட்டியை ஆரம்பிக்கலாமா?” என்று கேட்கிறார் இளையராஜா. தயார் செய்து வைத்திருந்த எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொன்னார்.

இதுபோன்ற இன்னும் சில நேர்காணல்கள் வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. கமல்ஹாசன், எல்லிஸ் ஆர் டங்கன் ஆகியோர்களின் நேர்காணல்களும் இடம்பெற்றன. ஸ்ரீவித்யாவிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் அவரது வேண்டுகோளுக்கிணங்க பிரசுரிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களைப் பற்றி பெரிய மதிப்பு கொண்டிராத ‘சில்க்’ ஸ்மிதாவை மிகுந்த முயற்சிக்குப் பிறகு சந்தித்து உரையாடுகிறார். இரண்டொரு சந்திப்புக்குப் பிறகு சுகுமாரனிடம் கேட்கிறார் “நீங்க என்னைப் பத்தி ஒரு கவிதை எழுதுங்களேன்.”

வணிக வார இதழின் விற்பனை எண்ணிக்கையை கூட்டுவதற்கான சில உத்திகளைக் கையாண்டதுடன் தனக்கு விருப்பமான இலக்கியம் சார்ந்த சில அறிமுகங்களையும் செய்வதற்கு வாய்த்தது. சிறு பத்திரிகை உலகைச் சார்ந்தவர் என்றாலும் வணிக வார இதழையும் வெற்றிகரமாக உருவாக்க முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டினார்.

6

சுகுமாரன் எனும் தீவிர இசை ரசிகர்

சுகுமாரன் தீவிரமான இசை ரசிகர். கர்நாடக சங்கீதம், இந்திய செவ்வியல் இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை என்று எந்த பாகுபாடும் கிடையாது.

ஒரு சங்கீதக்காரனாக வேண்டுமென்பது அவரது இளமைக் கனவு. கல்லூரிப் பருவத்தில் கோவையிலிருந்து ஒரு பிரபலப் பாடகியிடம் இசைப் பயிற்சி தொடங்கியது. ஆரம்பப் பாடங்களை முனைப்புடன் கற்று நாட்கள் நகர்ந்தன. இசை தொடர்பான புத்தகங்களையும் தீவிரமாக வாசித்தார். ஆனால், திடீரென வகுப்பு நிறுத்தப்பட்டது. பாடகியின் கணவர் செய்த கைங்கரியம். வகுப்பு தடைப்பட்டுப்போனபோதும் கற்றுக்கொண்ட பாடங்கள் அவரது சங்கீத ரசனைக்குக் காரணமாயின.

உதாரணமாக, மேலே சொன்ன இளையராஜாவுடனான சந்திப்பைப் பற்றி எழுதும்போது ஒரு வரியை இப்படி எழுதியுள்ளார். ‘சரி, அப்ப காலையில பேசிக்குவோம். வாங்க’ என்று மிருதங்கத்தில் தீர்மானம் வைத்த சுருக்கில் சொல்லிவிட்டு ஒலிப்பதிவுக் கூடத்துக்குத் திரும்பினார்.’

எம். டி. ராமனாதன் அவருக்குப் பிடித்த பாடகர். ஒரு கவிதையை அவருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். கோவை ‘ராகசுதா’ அரங்கில் எம்.டி.ராமனாதனின் கச்சேரி. காசு கொடுத்து டிக்கெட் வாங்கினால்தான் உள்ளே செல்ல முடியும். காசில்லை. அரங்குக்கு வெளியே அங்குமிங்குமாய் உலவுகிறார். கதவு திறக்கும்போதெல்லாம் எம்.டி.ராமநாதனின் குரல் காதில் விழுகிறது. வெகுநேரமாய் அரங்குக்கு முன்னால் உலவுவதை நிர்வாகிகளில் ஒருவர் கவனிக்கிறார். அழைத்து காரணத்தைக் கேட்கிறார். ராமநாதனின்பால் உள்ள ஈடுபாட்டையும் பாட்டு கேட்கும் ஆசையையும் கையில் காசில்லாத நிலையையும் எடுத்துச் சொல்கிறார். அப்போதுதான் அந்த அதிசயம் நடக்கிறது. ஒரு ஊழியரை அழைக்கிறார். உள்ளே அழைத்துச் சென்று உட்காரவைக்கும்படி சொல்கிறார். முதல் வரிசையில் இடம் கிடைக்கிறது. ராமநாதனின் கச்சேரியை முழுமையாகக் கேட்கிறார்.

பின்னொரு நாளில் கவிஞர் ஆத்மாநாமுடன் சேர்ந்து அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்த அனுபவமும் உண்டு.

அவரது இசை ஆர்வத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ள இன்னொரு சம்பவத்தைச் சொல்லலாம்.

ஒருமுறை காசிக்குச் செல்ல வாய்க்கிறது. அங்கு அவர் பார்க்க விரும்பிய ஒரு இடம் உஸ்தாத் பிஸ்மில்லாகானின் இல்லம். இடுங்கிய சந்து ஒன்றில் இருந்த வீடு அது. அதைத் தேடி அடைந்தபோது மின்சாரம் தடைபட்டிருந்தது. மங்கிய ஒளியில் பிஸ்மில்லாகானின் படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஒரு நிமிடம் மின்சாரம் ஒளிர்கிறது. ஷெனாயுடன் பிஸ்மில்லா கான் அமர்ந்திருக்கும் பெரிய படத்தைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. கண்கள் கசிய முழந்தாளிட்டு வணங்கி எழுகிறார். அவரது பேரனையும் சந்திக்கிறார். வாரிசுகளுக்கு நடுவிலான சொத்துப் பிரச்சினையால் அந்த வீடு இடிக்கப்படும் செய்தியை அறிகிறார். துயருருகிறார். அந்தக் கட்டுரையை அவர் இப்படி முடிக்கிறார் – பிஸ்மில்லா கான் அந்த வீட்டில் வாழந்தார் என்பது உண்மை. அந்த வீட்டில் மட்டுமே அவர் வாழவில்லை என்பதும் உண்மை.

சுகுமாரன் தன் முதல் தொகுப்பிலேயே ‘இசை தரும் படிமங்கள்’ எனும் கவிதையை ஹரிபிரசாத் சௌரஸ்யாவுக்கும் யேசுதாஸூக்கும் ஸாப்ரிகானுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

7

சுகுமாரன் எனும் நல்ல சினிமா ரசிகர்

சூர்யா தொலைக்காட்சியின் செய்திப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் திருவனந்தபுரத்தில் வசித்தார். அவருக்கு பிடித்த நகரம். அங்கிருந்து கோவைக்கு இடம்பெயர நேர்ந்த சமயத்தில் மிகவும் தவித்துப் போயிருந்தார். திருவனந்தபுரத்தில் இருந்த காலத்தில் அநேகமாக எல்லா சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் கலந்துகொண்டுள்ளார்.

இந்த சினிமா ரசனை கோவையில் அவரது இளமைப் பருவத்திலேயே தொடங்கியது. எண்பதுகளின் தொடக்கத்தில் நண்பர்களுடன் சேர்ந்து திரைப்படச் சங்கம் ஒன்றை நிறுவினார். தர்ஷனா அதன் பெயர். அப்போதெல்லாம் இந்தியத் திரைப்படச் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர் சங்கங்களுக்கு படங்களை அனுப்புவார்கள். ரயில் நிலையத்தில் திரைப்படச் சுருள்கள் அடங்கிய அந்தத் தகரப் பெட்டியை கட்டணம் செலுத்தி எடுத்து வந்து, அதற்கான புரொஜெக்டரை வாடகைக்கு ஏற்பாடு செய்து படத்தைத் திரையிடுவார்கள். சென்னை, கோவை, திருப்பூர், உதகை, சேலம், மதுரை என முக்கியமான இடங்களில் இத்தகைய சங்கங்கள் இருந்தன.  தமிழகத்துக்கு அனுப்பப்படும் படப்பெட்டி இந்த எல்லா ஊர்களுக்கும் ஒன்றிலிருந்து ஒன்றாக பயணமாகும். அப்படித்தான் அன்றைய காலகட்டத்தின் முக்கியமான திரைப்படங்களைப் பார்க்க வாய்த்தது.

அப்படி ஒரு முறை ரேயின் ‘சாருலதா’வை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. பெட்டி ரயிலில் வந்துவிட்டது. எடுப்பதற்கு கையில் காசில்லை. கடன் சொல்ல முடியாது. பணம் கட்டினால்தான் பெட்டியை வெளியில் எடுக்க முடியும். தாமதிக்கவும் முடியாது. அடுத்த ஊரின் திட்டம் கெட்டுப்போகும். எங்கும் பணத்தைப் புரட்ட முடியாமல், திரையிடுவதற்கு முந்தைய நாள் தன் தங்கையின் கழுத்திலிருந்த சங்கிலியை அடகு வைத்து பெட்டியை எடுத்தார். படம் திரையிடப்பட்டது. படத்தின் நாயகி மாதவி முகர்ஜியில் மயங்கிப்போய் திருப்பூருக்கும் படப்பெட்டியை அவரே கொண்டுசென்று அங்கும் அந்தப் படத்தைப் பார்த்தார்.

வெகு நாட்கள் கழித்து, சென்னையில் சொந்தமாகத் தொடங்கிய ஆயத்த ஆடை நிறுவனம் நஷ்டத்தில் முடிய, நண்பரின் ஆலோசனையின்படி மொத்த கொள்முதலுக்காக கல்கத்தாவுக்கு சென்றார். வியாபாரத்துக்காக என்பதைவிட ரேயை சந்திக்க ஒரு வாய்ப்பு என்பதே பெரும் உந்துதலாக இருந்தது.

1988ஆம் ஆண்டு. கல்கத்தாவில் இருந்த தமிழ் கடை ஒன்றில் இருந்தவர் மூலமாக ரேயின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்தார். பதற்றத்துடன் எண்ணைச் சுழற்றினார். மறுமுனையில் ஒலித்த குரல், ரே உடல்நலக் குறைவால் யாரையும் சந்திப்பதில்லை என்று பதிலளிக்கிறது. பெரும் சோர்வு. கொஞ்சம் கோபம்கூட. இத்தனை தொலைவிலிருந்து வந்திருக்கும் ஒரு ரசிகனைச் சந்திக்க முடியாதா? ஆனால், சிறிது நேரத்துக்குப் பிறகு ரேயின் உண்மை நிலையை உணர்கிறார். மறுநாள் மீண்டும் அழைக்கிறார். இப்போது அதே குரல். ஆனால், ஞாயிறு மாலை நான்கு மணிக்கு சந்திக்கலாம் என்றும் பத்து நிமிடம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் சொல்கிறது. சரியாக நான்கு மணிக்கு ரேயின் முகவரியை அடைகிறார். பழைய கால வீடு. பத்திரிகைகளில் வெளிவந்த படங்களின் வழியாக அந்தப் படம் ஏற்கெனவே நன்கு அறிமுகமாயிருந்தது. ரே சாய்வுநாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மடி மீது அகலமான எழுதுபலகை. அச்சிட்டப் பக்கங்களில் பிழை திருத்துகிறார். சற்றே தள்ளி இருந்த சோபாவில் அமரச் சொல்கிறார்.

அறிமுகப்படுத்திக்கொள்கிறார். அவரது படங்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கியதும் நிமிர்ந்து முகத்தைப் பார்க்கிறார். சொல்வது நின்றுபோகிறது. பேச நினைத்த எதுவும் நினைவுக்கு வர மறுக்கிறது. வாயடைத்து அமர்ந்திருக்கிறார்.

தோள்பையில் இருந்த மீட்சி இதழை எடுக்கிறார். அரவிந்தனின் ‘சிதம்பரம்’ படத்துக்கு எழுதிய விமர்சனம் அதில் உள்ளது. ரேயின் மேற்கோள் ஒன்றை அதில் பயன்படுத்தியுள்ளார். அந்தக் கட்டுரையைக் காட்டி தோராயமாக மொழிபெயர்த்துச் சொன்னதும் ரேயின் முகத்தில் இணக்கம். அந்த ஆமோதிப்பைப் பற்றிக்கொண்டு சொல்ல நினைத்தவற்றை கடகடவென சொல்லி முடிக்கிறார். ரேயின் படங்களைப் பற்றி, அவரது மேதமையைப் பற்றி என எல்லாவற்றையும் சொல்கிறார். ‘சாருலதா’வுக்காக தங்கையின் நகையை அடகுவைத்த கதையையும் சொல்கிறார்.

கதையைக் கேட்டுப் புன்னகை செய்கிறார். சந்திப்பு அத்துடன் முடிந்தது.

அதே பயணத்தின்போது மாதவி முகர்ஜியின் வீட்டைத் தேடி தெற்கு கல்கத்தாவிலும் அலைந்திருக்கிறார். கண்டுபிடிக்க முடியவில்லை.

உலக சினிமா, உள்ளூர் சினிமா என தான் பார்த்து ரசித்த படங்களைப் பற்றி நிறைய கட்டுரைகளை எழுதியுள்ளார். அவை வெறும் கதை சொல்லும் கட்டுரைகள் அல்ல. சினிமா எனும் கலை எவ்வாறு அந்தப் படங்களில் வெளிப்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாகச் சொல்லும் ஆக்கங்கள்.

8

சுகுமாரன் எனும் சமரசமற்ற கலைஞன்

சுகுமாரனின் வாழ்வை அவரது எழுத்துகளின் வழியாகத் திரும்பிப் பார்க்கும்போது, அவர் விரும்பித் தேர்ந்துகொண்ட வாழ்வுதான் இது என்று தோன்றுகிறது. தான் நம்பியவற்றின் மீது அசைக்கமுடியாத பற்றுடன் எந்த சமரசத்துக்கும் ஆட்படாமல் தனக்கு உகந்ததை மட்டுமே அவர் செய்திருக்கிறார். புத்தகங்கள், கவிதை, இலக்கியம், இசை, சினிமா என்று தனக்கு விரும்பியவற்றில் நேரம் செலவு செய்வதற்கு தகுந்த வகையில் தனது வாழ்வை அமைத்துக்கொண்டார். பொருளாதார சிரமங்கள் அன்றாட வாழ்வை இறுக்கிப் பிடித்தபோதும் பெரிதாக அதை பொருட்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

இத்தனைக்கும் அவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. சிறுவனாக உறவினர் வீட்டில் வெல்லிங்டனில் கழிக்க நேர்ந்திருக்கிறது. பின் கோவையில். படித்து முடித்து வேலையின்றி அலைந்து நண்பர்களுடனான ஒரு கூட்டு தொழிற்முயற்சியும் தோல்வியுற்று கடனுடன் சென்னைக்கு இடம்பெயர நேர்கிறது. ஆயத்த ஆடைத் தொழில், விற்பனை பிரதிநிதி, பத்திரிகை பணி என்று தொடர்ந்து நிரந்தரமற்ற வருமானத்துடனே வாழ நேர்ந்தது. ஆனாலும் அதிலிருந்து விலகிச் செல்லவோ விட்டுவிடவோ இல்லை. ஒரு கவிஞனாகவும் இலக்கியவாதியாகவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதில் கவனமாக இருந்தார்.   

ஒரு சந்தர்ப்பத்தில் கோவையில் வசித்திருந்த ஆர்.சண்முகசுந்தரம் அவர்களை சந்திக்கும் முனைப்புடன் அவருடைய வீட்டைத் தேடிச் செல்கிறார். தன்னுடைய வீட்டுக்கு மிக அருகிலுள்ள பகுதிதான் என்றாலும் தேடிக் கண்டுபிடிக்க சிரமப்படுகிறார். ஒருவழியாக வீட்டைக் கண்டுபிடித்து கதவைத் தட்டுகிறார். மெதுவாக நடந்து வந்து கதவைத் திறக்கிறார் ஆர்.சண்முகசுந்தரம். ஒரு கல்லூரி மாணவன் தன்னைத் தேடி வந்திருப்பதை வியப்புடன் கண்டு உள்ளே அழைத்துச் செல்கிறார். விசாரிக்கிறார். இரும்புக் கட்டிலில் அமர்ந்தபடி சொல்வதை கேட்டுக் கொள்கிறார். அவருக்கு பிடிக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு வாங்கி வந்த வெற்றிலையைத் தருகிறார். ஒரு வெற்றிலையை எடுத்து மெல்ல வருடி நரம்பைக் கிள்ளுகிறார் “ஒரு காலத்துல போட்டது. இப்ப போடறதில்லை.” அங்கிருந்த சிறிது நேரத்தில் அவர் இலக்கியத்தைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. “ஏதோ எழுதப் படிக்கத் தெரிஞ்சுது. படிச்சோம். எழுதினோம். அது இலக்கியமா இல்லையான்னு தெரியாது. காசு வந்துச்சு. ஆனா காசுக்காக எழுதல” என்று பட்டுக்கொள்ளாமல் பேசுகிறார். “பாடம் படிக்கறதை விட்றாதே. எழுத்தாளனாப் பிழைப்பது யோசிக்க சொகமா இருக்கும். ஆனால் அது மாய மானைத் தொரத்தற மாதிரி.”

ஆர். சண்முகசுந்தரம் அன்று அக்கறையுடன் சொன்னதைக் குறித்து சுகுமாரன் நிச்சயமாய் யோசித்திருப்பார். ஆனால், அந்த மாயத்தாகத்தை அவர் விடவில்லை. தனது முடிவில் தடுமாற்றமில்லாமல் இருந்ததின் விளைவுதான் இன்று ஒரு கவிஞனாக, புனைகதையாளராக, கட்டுரையாளராக தனித்தன்மையுடன் விளங்குகிறார்.

9



தி.ஜாவும் மார்க்கெஸ்ஸூம்

சுகுமாரனுக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர்கள் இருவர். அவரது ஆதர்சம். ஒருவர் தி.ஜானகிராமன்.

‘எழுத்தெண்ணிப் படிப்பது’ என்று சொல்வார்கள் அல்லவா, அப்படி தி.ஜானகிராமனின் எல்லா எழுத்துகளையும் நுணுகிப் படித்தவர் சுகுமாரன். அவரது நாவல்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் மறுபதிப்பாகக் கொண்டு வந்தபோது அவைகளுக்காக எழுதப்பட்ட முன்னுரைகள் மிக கனமானவை. அவற்றின் வழியாக தமிழின் ஒரு மாபெரும் புனைவெழுத்தாளனுக்குத் தரப்பட்டிருக்கும் கௌரவம் மிக முக்கியமானது. அந்த முன்னுரைகளை கட்டுரைகளைத் தொகுத்து ‘ஜானகிராமம்’ என்று வெளியிட்டுள்ளார்.

பணி ஓய்வுக்குப் பின் தில்லியிலிருந்து சென்னைக்குத் திரும்பி வசித்த காலத்தில் ஓரிரு முறை அவரைச் சந்தித்திருக்கிறார். அசோகமித்திரனின் ஆசிரியப் பொறுப்பில் கணையாழி வெளிவந்த காலம். அலுவலகத்தில் தி.ஜானகிராமனை சந்திக்க வாய்த்திருக்கிறது. அதேபோல, தாம்பரத்தில் நடந்த ஒரு கூட்டத்தின்போது அவரது கையைப் பற்றிக் கொள்ளவும் சந்தர்ப்பம் கிட்டியிருக்கிறது. இசையைக் குறித்து சில சொற்களையும் பேசியிருக்கிறார்.   

அவருக்கு பிடித்த இன்னொரு எழுத்தாளர் கார்சியா காப்ரியல் மார்க்வெஸ்

தி.ஜாவை எந்த அளவுக்கு நுணுகி வாசித்து ரசித்திருக்கிறாரோ அதேயளவுக்கு ‘காபா’வின் மீதும் அவருக்கு பித்து உண்டு. தமிழில் வெகு காலமாகப் பேசப்பட்டு வந்தது மார்க்வெஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல். ஆனால், அது தமிழில் மொழிபெயர்க்கப்படவே இல்லை. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கழித்து, சுகுமாரனின் வழியாக அது நடக்கவேண்டும் என்பதுதான் காலத்தின் விருப்பம் போலும், காபாவின் விருப்பமுமாக இருக்கலாம். அவரைப் பற்றிய கட்டுரைகளை காலச்சுவடு இதழில் தொடர்ந்து எழுதியிருக்கிறார்.

தி.ஜாவையும் மார்க்வெஸ்ஸையும் விருப்பத்துக்குரிய இரண்டு எழுத்தாளர்களாகக் கொண்டிருப்பது என்பதே ஒரு சிறப்பான அம்சம். சற்று விநோதமான அம்சமும்கூட. அதுதான் சுகுமாரனின் தனித்தன்மைகூட.

10

சுகுமாரன் எனும் அபூர்வம்

சுகுமாரனிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசும்போது சொன்னேன். உங்கள் கைகள் அதிர்ஷ்டம் வாய்ந்தவை. எத்தனை மேதைகளின் கைகளைப் பற்றிக் குலுக்கும் வாய்ப்பைக் கொண்டிருந்தன என்றேன்.

ரே, ஜானகிராமன், எம்.டி.இராமநாதன். இளையராஜா, அசோக் வாஜ்பாயி, மதுரை சோமு என்று அதுவொரு பெரிய பட்டியல்.

அதேபோல தமிழில் சிறு பத்திரிகைகளின் வழியாக தீவிர இலக்கியம் செழிப்படையத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை அதன் எல்லா படிநிலைகளையும் நேரில் கண்ட மனிதர் சுகுமாரன். நவீன இலக்கியத்தின் முக்கியமான ஆளுமைகள் எல்லோரையுமே நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றவர். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், விமர்சனம் என எல்லாவற்றின் கால மாற்றங்களையும் கவனித்திருக்கிறார். இந்த காலகட்டங்களைப் பற்றியும் இலக்கியவாதிகள் பற்றியும் அவர் எழுதியுள்ள கட்டுரைகளைத் தொகுத்தாலே நவீன தமிழ் இலக்கியத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பார்க்க முடியும்.

அந்த வகையில் சுகுமாரன் தமிழ் நவீன இலக்கியத்தின் நேரடி சாட்சி.

 

11

சுகுமாரன் எனும் ஆசிரியர்

வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்மை வழிநடத்தும் ஆசிரியர்களை சந்திக்க நேர்கிறது. சிலர் நேரடியாக நமக்குக் கற்றுத் தருகிறார்கள். இன்னும் சிலர் தங்களது நடவடிக்கைகளின், பழக்க வழக்கங்களின் வழியாக நமக்குக் கற்றுத்தருகிறார்கள்.

அவ்வாறு விலகி நின்றும் பிறகு நெருங்கி அறிந்தும் கற்றுக் கொண்ட ஆசிரியர் சுகுமாரன். இலக்கியம் பற்றி மட்டுமல்லாது ஒரு மனிதனாக இருக்கவும் அவரிடமிருந்து கற்றுகொள்ள நிறைய உண்டு. நாம் நம்பும் ஒரு விஷயத்துக்காக எதன்பொருட்டும் சமரசம் கொள்ளாத உறுதி, சிறிய கூட்டமோ பெரிய கூட்டமோ முறையான தயாரிப்புடன் குறிப்புகளுடன் பேசுவது, முகதாட்சண்யத்துக்காக தகுதிக் குறைவான ஒன்றை பாராட்டாமல் அதன் குறைகளை சுட்டிக் காட்டும் கறார் தன்மை, எழுத்திலும் பேச்சிலும் சொற்களை அனாவசியமாக செலவு செய்யாத தன்மை, தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமை – எழுத்து பேசட்டும், எழுத்தாளன் பேசவேண்டாம் என்று அவர் கற்றுக் கொடுத்தவை மிக முக்கியமானவை.

எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற நண்பர்கள் பலருக்கும் அவர் ஆசிரியரே.

இலக்கியத்தின் அனைத்து இயல்களிலும் அவரது பங்களிப்பு மிகப் பெரியது. இன்னொருவர் கற்பனைகூட செய்துபார்க்க முடியாது. இதற்கான உரிய விருதுகளோ பரிசுகளோ அவருக்கு வந்து சேரவில்லை. அதைப் பற்றி பொருட்படுத்துபவரல்ல. தன் பணிகளில் சற்றும் தளராத கவனத்துடனும் அக்கறையுடனும் தொடர்ந்திருப்பவர்.

எனவே, கொடீசியா அமைப்பின் இந்த விருது அவருக்குக் கொடுத்திருக்கும் மகிழ்ச்சியைக் காட்டிலும் அவரது மாணவர்களாகிய எங்களுக்கு பெரும் நிறைவைத் தந்திருக்கிறது.

ஆசிரியர் சுகுமாரன் அவர்களுக்கும் கொடீசியா அமைப்பினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

0

(கோவை கொடீசியா அமைப்பின் 2023ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது 22 ஜுலை 2023 கொடீசியா புத்தகக் கண்காட்சி அரங்கில் சுகுமாரனுக்கு வழங்கப்பட்டபோது ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் )

 

 

No comments:

Post a Comment

புக் பிரம்மா இலக்கியத் திருவிழா 2025

  புக் பிரம்மா இலக்கியத் திருவிழா 2025 பெங்களூரில் மூன்று நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. தென்னிந்திய மொழிகளுக்கான இலக்கியச் சங்கமமான இவ்வ...