புக் பிரம்மா இலக்கியத் திருவிழா 2025 பெங்களூரில் மூன்று நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. தென்னிந்திய மொழிகளுக்கான இலக்கியச் சங்கமமான இவ்விழாவில் இந்த ஆண்டு ஐந்தாவது மொழியாக மராத்தியும் சேர்க்கப்பட்டிருந்தது. முதலாம் ஆண்டைவிட இந்த ஆண்டு மேலும் சில கூடுதல் அம்சங்களுடன் மெருகேயிருந்தது.
எட்டு வெவ்வேறு அரங்குகளில், ஐம்பது
நிமிடங்கள் கால அளவுகொண்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்தவண்ணமே இருந்தன. சிறிதும் பிசிறில்லாத
எதிலும் எங்கும் குழப்பமில்லாத கச்சிதமான ஒருங்கிணைப்பு. தென்னக மொழியைச் சேர்ந்த எழுத்தாளர்கள்,
மொழிபெயர்ப்பாளர்கள், சினிமா இயக்குநர்கள், கலைத்துறை ஆளுமைகள், பதிப்பாளர்கள் என
400க்கும் அதிகமான உரையாளர்கள் பங்கேற்றிருந்தனர். அனைவருக்குமான தங்குமிடமும் உணவும்
நிகழ்ச்சி நடத்தப்பட்ட பெங்களூர் கோரமங்களா, புனித ஜான் மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. புத்தக வெளியீடுக்கென்று அமைக்கப்பட்டிருந்த ‘அனாவரானா’
அரங்கில் அரைமணி நேரத்துக்கொரு புத்தகம் வெளியிடப்பட்டது. மரத்தடியில் எழுத்தாளரைச்
சுற்றி அமர்ந்து உரையாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘முகாமுகம்’ அரங்கில்
அரை மணி நேரத்துக்கொரு எழுத்தாளரை வாசகர்கள் சந்திக்க முடிந்தது. விவேக் ஷான்பாக்,
ஜயந்த் காய்கினி, ரூபா பை, வோல்கா, ஜெயமோகன், அடூர் கோபாலகிருஷ்ணன், டி எம் கிருஷ்ணா,
பால் சக்காரியா, சல்மா, மிருணாளினி, இமையம், மனு பிள்ளை, பானு முஷ்தாக், என்.எஸ்.மாதவன்,
கே.ஆர்.மீரா, நேமிசந்த்ரா, பெருமாள் முருகன், வசுதேந்த்ரா என பலரையும் வாசகர்கள் சந்தித்து
உரையாடினார்கள். புத்தகங்களில் கையெழுத்துப் பெற்றனர். மனு பிள்ளையிடம் கையெழுத்து
வாங்க இளைஞர்கள் பலர் வரிசையில் நின்றிருந்தனர்.
நாவல், சிறுகதை, மொழியாக்கம், சங்க இலக்கியம்,
தமிழ் இணைய இதழ்கள், தமிழகச் சிற்பங்கள், நாட்டார் கலைகள், தமிழ்ச் சமூகவியல், திரைப்படங்கள்
என அமைந்திருந்த தமிழ் அரங்குகளில் பங்கேற்றவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட கால அளவுக்குள்
சுருக்கமாகவும் செறிவாகவும் உரையாற்றினர். அநேகமாக எல்லா அரங்குகளுமே நிறைந்திருந்தன.
சீரிய உரையாடல்களுக்கு நடுவில் சத்தமும்
மகிழ்ச்சியுமாக அமைந்திருந்தது சிறார் இலக்கியத்துக்கான ‘சின்னர லோகா’ அரங்கு. கதைகள்,
ஓவியங்கள், திரைப்படங்கள், நாடகங்கள், விளையாட்டுகள் என பல்வேறு அம்சங்களுடன் களைகட்டியிருந்தது.
இந்த விழாவின் இன்னொரு சிறப்பம்சம் புத்தகக்
காட்சி. கடந்த ஆண்டு ஆங்கிலம், கன்னடம் புத்தகங்களை மட்டுமே கொண்டிருந்த அரங்கில் இம்முறை
காலச்சுவடு, டீசி புக்ஸ், என்.பி.டி ஆகிய பதிப்பகங்களும் இடம் பெற்றிருந்தன. விழாவில்
பங்கேற்ற தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய நூல்களை வெவ்வேறு பதிப்பகங்களிலிருந்து கேட்டுப்
பெற்று அரங்கில் இடம்பெறச் செய்திருந்த ‘காலச்சுவடு’ பதிப்பகத்தின் முயற்சி குறிப்பிடத்தக்கது.
புல்லாங்குழல் கலைஞர் பண்டிட் பிரவீன் காட்கிந்தி, மேடை நாடகப் பாடல்களுக்காக இந்திய அளவில் புகழ்பெற்ற ஜெயஸ்ரீ குழுவினர், ஹிந்துஸ்தானி இசைப் பாடகர் பண்டிட் கணபதி பட் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் விழாவின் சிறப்பம்சங்களில் ஒன்று. சனிக்கிழமை மாலை, வெளியே மழை கொட்டிக் கொண்டிருக்க, இருக்கை ஏதும் மிச்சமின்றி நிறைந்திருந்த அரங்கில் டி.எம்.கிருஷ்ணா தந்த இசை அனுபவம் இந்த விழாவின் உச்சம். விழாவின் இறுதி நிகழ்ச்சியாக அமைந்திருந்தது துரியோதனவதத்தை சித்தரிக்கும் ‘கதகளி’ ஆட்டம்.
இந்த இலக்கிய விழாவையொட்டி கன்னட எழுத்தாளர்களுக்காக
நடத்தப்பட்ட நாவல் போட்டியிலும் சிறுகதைப் போட்டியிலும் வெற்றிபெற்ற எழுத்தாளர்களுக்கு
விருதுகள் வழங்கப்பட்டன. 2025ஆம் ஆண்டுக்கான புக் புரம்மா இலக்கிய விருது, கே.ஆர்.மீராவுக்கு
வழங்கப்பட்டது.
‘தென்னகத்தின் ஆன்மா’ என்ற உபதலைப்பைக்
கொண்டிருக்கும் இந்த இலக்கிய விழா இந்திய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அனைவரும்
பங்கேற்க விரும்பும் ஒரு பண்பாட்டு நிகழ்வாக அமைந்துள்ளது. முறையான திட்டமிடல், கச்சிதமான
ஒருங்கிணைப்பு, நேர்த்தியான செயலாக்கம் என இந்த விழாவை மூன்று நாட்களும் வெற்றிகரமாக
நடத்திய பெருமை விழாவின் இயக்குநர் சதீஷ் சப்பரிகேவையும் அவரது குழுவினரையும் சேரும்.
தொடக்க விழா நிகழ்வில் அனைவரையும் வரவேற்று விழாவை வெற்றிகரமாக நடத்தக் கேட்டுக் கொண்டு
இரண்டே நிமிடங்கள் மட்டுமே உரையாற்றினார் சதீஷ் சப்பரிகே. விழாவின் தமிழ் ஒருங்கிணைப்பாளர்
பாவண்ணன் அழைப்பாளர்களின் வருகையை உறுதிப்படுத்துவதும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு பத்து
நிமிடங்களுக்கு முன்பு உரையாளர்கள் அரங்கில் இருக்கும்படி பார்த்துக்கொள்வதுமாக பரபரப்பாகவே
இருந்தார். கிடைக்கும் நேரத்தில் உரைகளை குறிப்பெடுத்துக் கொள்ளவும் அவர் தவறவில்லை.
கன்னட மொழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான
அனைத்தையும் உலகளாவிய ஒரே மின்தளத்தில் ஒருங்கிணைக்கும் புக் பிரம்மா அமைப்பின் நிறுவன
இயக்குநர் சதீஷ் சப்பரிகே. கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட
நூல்களை எழுதியிருக்கும் இவரது ‘விர்ஜின் மொஜிட்டோ’ என்ற சிறுகதைத் தொகுப்பும் ‘கன்த்ருக்’
எனும் நாவலும் வெளியாகியுள்ளன. திறன்வாய்ந்த ஊடகவியலாளரான இவருக்கு அச்சிதழ், தொலைக்காட்சி
என பல்வேறு ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலான அனுபவம் உண்டு.
புக் பிரம்மா இலக்கிய விழாவின் மூன்று
நாள் நிகழ்ச்சிகளும் https://bookbrahmalitfest.com/
என்ற தளத்தில் காணொளிகளாக பதிவேற்றப்பட்டுள்ளன.
இதமான குளிரும் அவ்வப்போது மழையும் ஈரமுமான
மரங்கள் அடர்ந்த வளாகம். நினைத்த நேரத்தில் தேநீர் பருகலாம். கடைகளுக்கு நடுவே இடப்பட்ட
மர பெஞ்சுகளில் அமர்ந்து அரட்டையடிக்கலாம். சூடாக விவாதிக்கலாம். நண்பர்களுடன் காலாற
நடந்து இலக்கியம் பேசலாம். இசையையும் நாடகத்தையும் ரசிக்கலாம். புத்தகங்களைப் புரட்டிப்
பார்க்கலாம். புகைப்படம் எடுக்கலாம். பிறமொழி அரங்குகளில் நுழைந்து அவர்களது உலகில்
நடப்பவற்றைத் தெரிந்து கொள்ளலாம். வாசித்து வியந்த எழுத்தாளர்களிடம் உரையாடலாம், கேள்வி
கேட்கலாம். நெடுநாள்களுக்குப் பிறகு சந்திக்க வாய்த்த நண்பர்கள், எழுத்தாளர்களுடன்
அறையில் அமர்ந்து நள்ளிரவு வரை பேசலாம். உற்சாகமும்
களிப்புமான மூன்று நாள்கள் முடிந்து ஊருக்குப் புறப்படும்போது தெலுங்கும் மலையாளமும்
கன்னடமும் தமிழும் ஆங்கிலமுமாய் கலந்தொலித்த அந்த வளாகம் மழை ஈரத்துடன் அமைதியில் உறைந்திருந்தது.
No comments:
Post a Comment