Sunday, 3 August 2025

அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும் - வசுதேந்த்ரா

 


ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு அதிகமும் மொழியாக்கம் செய்யப்படுவது நாவல், சிறுகதை, கவிதை ஆகிய புனைவுகள்தான். கட்டுரைகள் உள்ளிட்ட புனைவல்லாத ஆக்கங்களை மொழிபெயர்ப்பது மிக அரிதாக நிகழ்வது. அவ்வாறு அசாதாரணமாக புனைவல்லாத ஒரு நூல் மொழிபெயர்க்கப்பட்டு அது கவனிக்கப்பட்டு வரவேற்பைப் பெறுவது என்பதும் அதிசயமானதுதான். கன்னட எழுத்தாளர் வசுதேந்த்ராவின் ‘அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்’ அப்படிப்பட்ட ஒரு நூல்தான். கே. நல்லதம்பியின் மொழியாக்கத்தில் வெளிவந்த சில நாட்களிலேயே தமிழில் கவனம் பெற்றிருக்கிறது.

வாசகன் ஒரு நூலை தனக்கு நெருக்கமான ஒன்றாக உணர்ந்துவிடக் கூடுமானால், அது எழுதப்பட்டிருக்கும் மொழி என்பது தடையாகவே இருக்காது. அவன் தன் வாழ்வின் ஏதேனுமொரு சொந்த அனுபவத்தோடு பொருத்திப் பார்க்கும்படியான ஒரு அத்தியாயமோ, சம்பவமோ அந்த நூலில் இடம் பெறுமானால் அந்த நூல் அவனுக்கு நெருக்கமானதாக மாறிவிடும். பேசும் மொழி எதுவாக இருப்பினும் அனைவரிடமும் ஒரேமாதிரியான உணர்வுகளை ஏற்படுத்தும் சில பொது அம்சங்கள் உண்டு. ‘அம்மா’ எனும் உணர்வு அவற்றுள் முதன்மையானது. அம்மாவைப் பற்றி பேசும் ஒரு கவிதையோடு எந்த ஒரு வாசகனும் மிக இயல்பாக ஒன்றிப்போக முடியும். சமூகத்தின் பொதுப் புத்தியில் உருவாகியிருக்கும் ‘அம்மா’ எனும் சித்திரத்துக்கு ஆதாரமான சில குணாம்சங்கள் உண்டு. அந்த பொதுச் சித்திரத்துடன் எந்த ஒரு வாசகனும் தன்னுடைய அம்மாவைப் பொருத்திக்கொள்ள முடியும். அவ்வாறான உணர்வை ஏற்படுத்தவல்ல எந்த ஒரு ஆக்கமும் வாசக வரவேற்பைப் பெற்றுவிடும்.

வசுதேந்த்ராவின் நூல் தலைப்பே மொழிகளைக் கடந்த தன்மையை இந்த நூலுக்கு ஏற்படுத்திவிடுகிறது. தலைப்பை வாசிக்கும் எந்தவொரு வாசகனும் நூலைப் புரட்டிப் பார்க்காமல் விலகிச் செல்லமாட்டான். இவை வசுதேந்த்ராவின் வாழ்க்கை நிகழ்வுகளை சித்தரிக்கிற அனுபவக் கட்டுரைகள். அவரது வாழ்க்கைச் சரிதத்தின் ஒரு பகுதியாகவும் வாசிக்கமுடியும். கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே ஒரு சிறிய கிராமமே இந்தக் கட்டுரைகளின் நிகழ் களம். வெயில் வதைக்கும் அந்த கிராமத்தில் தன்னுடைய இளம் பருவத்தில் நடந்த சம்பவங்களை மிக எளிமையாகவும் நகைச்சுவை கலந்தும் வசுதேந்த்ரா எழுதியிருக்கிறார். அதே சமயத்தில் இதிலுள்ள சம்பவங்கள் ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை மட்டும் காட்டுவதோடு நின்றுவிடவில்லை. அந்த கிராமத்தின், அதலிருந்த மனிதர்களின், ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்வனுபவமாகவும் விரிந்திருக்கிறது. ஊரிலுள்ள ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பற்றி நன்கறிந்திருப்பர். நல்லது கெட்டதுகளில் பங்கெடுப்பார்கள். போட்டி, பொறாமை, சண்டை போன்ற சுயநலப் போக்குகளுக்கு இடம்கொடுக்கும் சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் அவற்றை விலக்கிவைத்து அனுசரித்துப்போகும் தாராளத்தன்மைக்கும் இடம் இருந்தது. இல்லாத மனிதர்களுக்கு இடுவதோடு நில்லாமல் மனிதர்களின் கைபார்த்து காத்திருக்கும் பசுமாடுகள், நாய்கள் போன்ற பிற உயிர்களின் மீதும் பரிவுகாட்டும் தன்மை இருந்தது. இந்திய கிராமங்களுக்கான ஒரு பொதுச் சித்திரத்தையும், வேறுபாடுகளைக் கடந்த ஒரு பொதுச் சமூகமாக இசைந்து வாழ்ந்த காலத்தையும் இந்த நூல் சுட்டிக் காட்டுகிறது.

இதிலுள்ள எல்லாக் கட்டுரைகளிலும் ‘அம்மா’ இடம் பெற்றிருக்கிறார். அவரது குணாம்சங்கள், விருப்பங்கள், நம்பிக்கைகள், பிடிவாதங்கள் ஆகிய அனைத்துமே வெவ்வேறு சந்தர்ப்பங்களில், சம்பவங்களில் வெளிப்பட்டு அவரைப் பற்றிய முழுமையான ஒரு சித்திரத்தை அளிக்கின்றன. பொருளாதார நெருக்கடிகளை சமாளித்து, உறவினர்கள் அண்டை அயலாருடனான உறவுகளைப் பராமரித்து, இல்லாதவர்களின் தேவைகளை அறிந்து இயன்றவரை உதவி, கட்டுக்கோப்பான வாழ்வை மேற்கொண்ட அவரது சாமர்த்தியமும் தனது நடத்தையின் மூலம் ஆதாரமான சில மதிப்பீடுகளை பிள்ளைகளுக்கு இயல்பாக கற்றுக்கொடுத்த நேர்த்தியும் அவரை பெரும் ஆகிருதியாக நிறுத்துகின்றன. ஆனால், அதே நேரத்தில் அவளும் ஒரு மனுஷிதான். அவளும் தவறிழைப்பாள். ஆத்திரப்படுவாள். கோபமும் வரும். அத்தகைய அவளது இயல்பான உணர்வுகளுக்கு இடம்கொடுப்பதன் மூலமாகவே அவளை சக மனுஷியாக, நமக்குள் ஒருவராக இருத்த முடியும். அவ்வாறில்லாமல், அவளை தியாகத்தின் உருவமாக, இயல்பான உணர்வுகளை வெளிக்காட்டாத பண்பின் சிகரமாக தள்ளி நிறுத்துவது என்பது அவளுக்கான இடத்தை மறுப்பதாகும். இதை அடிக்கோடிட்டு காட்டியிருக்கும் ‘தாய் என்பவள் தெய்வமல்ல’ என்ற கட்டுரை தொகுப்பிலுள்ள முக்கியமான ஒன்று.

அம்மா அப்பாவின், குடும்பத்தின், கிராமத்தின் நினைவுகளாக சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரைகளிள் அடியோட்டத்தில் முக்கியமான ஒரு செய்தியும் வெளிப்பட்டிருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்புகளின் வழியாக வெகுவேகமான முன்னேற்றங்களை அடைந்திருக்கும் நாம் நமது கிராமங்களிலிருந்து அவை கற்றுக்கொடுத்த மாண்புகளிலிருந்து எத்தனை தூரம் விலகி வந்திருக்கிறோம் என்பதே அந்த செய்தி. இந்த விலகல் என்பது தவிர்க்க முடியாதது. ஒருவகையில் இயல்பானதும்கூட. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அடிப்படை வசதிகள்கூட இல்லாத கிராமத்தில் வாழ்வது என்பது சாத்தியமாக இருந்தது. ஆனால், இன்று அப்படியொரு சூழலை எண்ணிப் பார்க்கவும் முடியாது. தேவையும் இல்லை. இன்று உலகமே ஒரு பெரும் கிராமம். மனிதர்கள் ஒரே இடத்தில், ஒரே அடுக்ககத்தில், அக்கம்பக்கத்தில் வசித்தாலும் அவர்கள் ஒரு சமூகமாக வாழவில்லை. தனி மனிதர்களாகவே வாழ்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், குடும்ப அமைப்பு என்பது இருந்தபோதும்கூட, அதன்பெயரிலான பிணைப்பு என்பது மிக மேலோட்டமானதாகவே அமைந்திருக்கிறது. வளர்ச்சியின் போக்கில் வந்து சேர்ந்திருக்கும் இந்த இடத்தைக் குறித்து இப்படியான முந்தைய அனுபவங்களின் நினைவுகளைக்கொண்டு எடைபோடும்போது ஒரு தெளிவின்மையை, குழப்பத்தையே அடைய நேர்கிறது. ‘கடந்துபோன வாழ்வுக்கான ஏக்கம்’ (nostaligia) என்பது மனிதனுக்குள் ஏற்படுத்தும் குழப்பங்களே அவை. பொதுவான ஒரு தீர்வு இருக்க முடியாது என்றாலும் இவ்வாறான ஏக்கங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சியலைகள் என்பவை பலருக்கும் பொதுவானதாக இருக்க முடியும். அம்மாவை எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும் என்பதுபோல.

கன்னடத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடத்துக்கும் தொடர்ந்து பல நூல்களை மொழிபெயர்த்து வரும் கே.நல்லதம்பியின் நல்ல மொழியாக்கங்களில் ஒன்று இந்த நூல்.        

 ( ‘அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்’, வசுதேந்த்ரா

தமிழில் - கே.நல்லதம்பி - Two shores Press )

No comments:

Post a Comment

புக் பிரம்மா இலக்கியத் திருவிழா 2025

  புக் பிரம்மா இலக்கியத் திருவிழா 2025 பெங்களூரில் மூன்று நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. தென்னிந்திய மொழிகளுக்கான இலக்கியச் சங்கமமான இவ்வ...