Tuesday, 16 December 2025

பழனிச்சாமிகளின் கதை - சு வெங்குட்டுவனின் ‘வெறுங்கால் நடை’ சிறுகதைத் தொகுப்பு


 மணல் வீடு இதழைப் புரட்டிக் கொண்டிருந்தபோது ‘ரிஷப் பந்தின் ஆட்டம்’ என்ற கதையின் தலைப்பு உடனடியாக கவனத்தைக் கவர்ந்தது. எழுதியவரின் பெயரைப் பார்த்தேன். முன்பின் அறிமுகமில்லாத பெயர். ஆனால், ரிஷப் பந்த் எனக்குப் பிடித்த இளம் கிரிக்கெட் வீரர். எனவே அந்தக் கதையை வாசிக்கத் தொடங்கினேன். ரிஷப் பந்தின் முக்கியமான ஒரு ஆட்டத்தை, மிக முக்கியமான தருணத்தில் அவரை கைவிட்டுப் போன அதிர்ஷ்டத்தையும், சரியான ஒரு தருணத்தில் அதிர்ஷ்டத்தை கைபிடிக்க மறுத்த ஒருவனின் வாழ்வையும் இணைத்து மிகக் கச்சிதமாக எழுதப்பட்டிருந்த கதை. அந்தக் கதையின் இன்னொரு சிறப்பம்சம் கொங்கு கிராமத்தின் வாழ்வியல் கூறுகளை மிக இயல்பாகவும் நுட்பமாகவும் சொல்லியிருந்தது. குறிப்பாக திருப்பூர் எனும் பெரும் தொழில் நகரத்தை ஒட்டியும் அடுத்துமுள்ள சிற்றூர்கள், கிராமங்களில் உள்ள வாழ்வின் பல்வேறு அம்சங்கள் நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருந்தன.

கொங்கு வட்டார வாழ்வியல் என்று சொல்லும்போதே க.சீ.சிவகுமார், என்.ஸ்ரீராம் ஆகியோரின் பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வரும். காங்கயம், வெள்ளகோயில் வட்டாரத்தை தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்தியவர்கள். கொங்கு வட்டார மொழியை புனைவு இலக்கியத்துக்குள் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கச் செய்பவர்கள். சு.வெங்குட்டுவனை அவர்களது தொடர்ச்சியாக குறிப்பிட முடியும்.

மணல்வீடு வெளியிட்டுள்ள அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘வெறுங்கால் நடை’. தொகுப்பில் பதிமூன்று கதைகள் உள்ளன. இந்த பதிமூன்று கதைகளும் குறிப்பிட்ட கொங்குப் பகுதியில் தொழில்களிலும் மக்களின் வாழ்க்கைப் போக்கிலும் ஏற்பட்ட சமூக மாற்றங்களை மிகத் துல்லியமாகக் காட்டுகின்றன.

கதைக்களன் திருப்பூரையொட்டி தென்கிழக்கில் அமைந்துள்ள மேட்டாங்காட்டு பகுதிகள். மானாவாரி விவசாய நிலங்கள். அதிகமும் கிணற்றுப் பாசனத்தை நம்பியிருப்பவை. வெங்கச்சாங்கற்களும் வெள்ளை வேலா மரங்களுமாய் காய்ந்திருக்கும் பூமி. திருப்பூர் பெரும் தொழில் நகரமாக மாறுவதற்கு முந்திய காலத்தில் கிராமங்களும் அங்கிருந்த மனிதர்களும் பூமியை நம்பியிருந்தனர். வலுவான கிணற்றுப் பாசனத்தால் தென்னந்தோப்புகளும் விவசாயமும் சாத்தியமாயின. பருவமழையை நம்பியிருக்க முடியாத நிலையில் கிணறுகள் தோண்டப்படும். இருபதடி கிணற்றில் ஊறும் தண்ணீர் வெள்ளாமைக்குப் போதாதென்று கிணற்றை இன்னும் இருபதடி ஆழப்படுத்த விவசாய வங்கியில் கடன். அந்தக் கடனைத் திட்டமிட்டு அடைப்பதற்குள் ஏராளமான இடைஞ்சல்கள். எதிர்பார்த்த விலைக்கு விளைபொருளை விற்க முடியாது. ஒரு போகத்தில் அமைந்ததுபோல அடுத்தடுத்த போகத்தில் பயிர் விளையாது. கடனும் வட்டியும் பெருகியபடியே இருக்க ஆழ்குழாய் கிணறு தோண்ட அடுத்த கடன். முன்னூறு அடியில் தொடங்கி எண்ணூறு அடி வரை நிலத்தைத் துளைத்து குழாய்கள் இறங்கும். பூமியெங்கும் சாம்பல் மேடுகள் குவியும். நீர் கொடுத்த குழாய்களும் பொய்த்துப் போகும். வங்கிக் கடனை அடைக்க பொன்னும் பொருளும் போய் கடைசியில் பூமியை விற்க நேரிடும்.

பூமியை நம்பியிருந்தவன் அடுத்த வேளைப் பிழைப்புக்கு மாற்று வழியைத் தேடித்தான் ஆகவேண்டும். திருப்பூர் பனியன் தயாரிப்புக் கூடங்கள் சுற்றுவட்ட கிராமங்களிலிருந்து உழைக்கும் கரங்களை உற்சாகத்துடன் வேண்டின. நிலத்தில் உழைத்தவர்களும் விவசாயத்தை கைவிட்ட நில உடமையாளர்களும் திருப்பூரை நோக்கிச் சென்றனர். குறிப்பிட்ட வேலை நேரம், சனிக்கிழமையானால் சம்பளம், சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று அனைவருக்குமான சமாதானங்களை உறுதி செய்த தொழில். இடுப்பு வேட்டியுடன் வேர்வை சிந்தி நிலத்தில் உழைத்தவனுக்கு போட்ட உடுப்பு மடிப்பு கலையாமல் நிழலில் வேலை செய்யும் சுகமும் கிடைத்த கூலியும் பெரிய ஆசுவாசமாக அமைந்தது. சீட்டு பிடித்தார்கள், டிவிஎஸ் 50யில் சீறியபடி போனார்கள், கன்னங்கள் மினுமினுக்க சிகரெட்டும் வார இறுதியில் மதுவுமாய் வாழ்க்கையை அனுபவித்தார்கள். இன்னும் சிறிது ‘வேக்கானத்து’டன் இருந்தவர்கள் சிறிய அளவில் உபதொழில்களில் இறங்கி வளம் பெருக்கினார்கள்.

பனியன் தொழிலுக்கு மாற்றாக, உள்ளூரிலேயே பிழைப்பதற்கான வழியாக அமைந்தது பவர்லூம் கூடங்கள். யாரிடமும் கைகட்டி நிற்க வேண்டாத சொந்தத் தொழில்.  இரவும் பகலுமாய் தறியோட்டினால் சம்பாதித்து சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை. இரண்டு நாலாகி நாலு எட்டாகி கூடங்கள் பெருத்து கூலிக்கு ஆட்களை வைக்கும்போது கூலி உயர்வு, போராட்டம், கொடி பிடித்தல் என்று பிரச்சனைகளும் வரத்தானே செய்யும். காதை அடைக்கும் தறிச் சத்தத்தில் பாடுபட்டவர்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியாய் பெண்கள் அருகிருக்கும் பனியன் தொழிற்கூடங்களில் வேலை பார்ப்பது இயல்பாகவே பிடித்திருந்தது. தறிக்கூடங்களை நீங்கி பனியன் கூடங்களுக்கு தடம் மாறினார்கள்.

பனியன் கூடங்களுக்கோ தறிக் கூடங்களுக்கோ சென்று உழைக்க முடியாதவர்கள், விரும்பாதவர்கள் வேறு சில எளிய தொழில்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஜோசியம், ஜாதகம் பார்ப்பது, வாஸ்து ஆலோசனைகள், நியூமராலஜி, நேமாலஜி என்று பல தினுசுகளைக் கொண்டது அவ்வாறான ஒரு தொழில். சரிவும் தோல்வியும் வரும்போது துவண்டு போகும் மனிதர்களுக்கு யாரேனும் ஒருவர் ஆறுதல் சொல்லவும் மீட்சிக்கான பாதையைக் காட்டவும் தேவைப்படுகிறார்கள். பலிக்கிறதோ இல்லையோ அந்த நேரத்துக்கு அவ்வாறான வார்த்தைகள் தேவைப்படுகிறது. அந்தத் தெம்பில்தான் அடுத்த அடியை எடுத்து வைக்கிறார்கள்.

உழைக்கும் பூமியிலிருந்து வெளியேறும் பழனிச்சாமிகள் வெங்குட்டுவனின் கதைகளில் கட்டிங் மாஸ்டர்களாக, பேட்லாக் டெய்ல்ர்களாக, பவர்லூம் தறிக்காரர்களாக, லைனில் பணம் வசூலிக்கும் பைனான்சியர்களாக, ஜோசியர்களாக வெவ்வேறு தோற்றங்களுடன் உலவுகிறார்கள். அந்தந்த நேரத்துக்கு அமையும் வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறார்கள்.

இந்தப் பழனிச்சாமிகள் சந்திக்க நேரும் ஆகப்பெரிய சிக்கல் உரிய நேரத்தில் வாழ்க்கைத் துணைநலம் வாய்க்காததுதான். ஏக்கரா கணக்கில் பூமி, உக்காந்து தின்னாலே ஏழு தலைமுறைக்கு தாட்டும் அளவுக்கு சொத்துபத்து, சுத்துபட்டு கிராமங்களில் செல்வாக்கு என்றெல்லாம் இருந்தும் இளைஞர்கள் மணம் முடிக்க பெண்கள் கிடைப்பதில்லை. பழனிச்சாமிகளுக்கு பெண் கிடைக்காமல் போனதற்கு காரணம், எண்பதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரையிலும் வயிற்றில் இருக்கும் சிசுக்கள் ஆணா பெண்ணா என்றறியும் ஸ்கேன் முறை புழக்கத்தில் வந்து பெண் குழந்தைகளை சிசுவிலேயே அதிக அளவில் அழித்ததுதான் என்கிறார் வெங்குட்டுவன். உரிய வயதில் பெண் கிடைக்காமல், புரோக்கர்களையும் திருமண தகவல் மையங்களையும் ஜோசியம், பரிகாரங்கள், பூசைகளையும் நம்பிக்கையுடன் அணுகி, விதவை விவாகரத்து ஆனவர் என்று யாராக இருந்தாலும் பரவாயில்லை என்று எல்லா சமரசங்களுக்கும் தயாராக, பரிதாபமான நிலையில் இருக்கும் பழனிச்சாமிகள் இரண்டாம் ஜாமத்தில் சித்தர் குகையில் பொட்டுத்துணியில்லாமல் விரதமிருக்கவும், எருமைக் கடாக்களை வளர்த்து மேய்க்கவும்கூட தயாராக இருக்கிறார்கள்.

பெண் கிடைக்காத பழனிச்சாமிகளின் கதை இப்படியிருக்க, கட்டிக்கொள்ள வாய்த்த அதிர்ஷ்டசாலி பழனிச்சாமிகளுக்கோ அதை ஆண்டு அனுபவிக்க முடியாதது அடுத்த சிக்கல். கட்டிக் கொண்டவனை நிராகரிக்க பெண்களுக்கு காரணங்கள் பல உண்டு. அவற்றில் சில விநோதமானவையும்கூட. பெரிய மச்சானைப் போல புல்லட் ஓட்டத் தெரியவில்லை என்பது ஒரு காரணம். இன்னும் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு தன்னை நிராகரிக்கிறான் என்பது இன்னொரு காரணம்.

கிட்டியவர்களும் கிட்டாதவர்களும் மனச் சரிவை நேர் செய்வதற்குத்தானே ஊரெங்கும் திறக்கப்பட்டுள்ளன டாஸ்மாக்குகள். நிலத்தை இழந்தவனும் கல்யாணம் அமையாதவனும் அமைந்து வாழ முடியாதவனும் போதையில் ஆழ்ந்து துயரை மறக்கிறார்கள் என்றால் உழைத்துக் களைத்தவனும் அன்றாடத்தின் ஒரு பகுதியாக குடித்துப் பழகியவனும்கூட அதே போதையைத்தான் கொண்டாடுகிறார்கள். டாஸ்மாக்குகள் இன்று பண்பாட்டின் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாக, அன்றாட வாழ்வின் முக்கிய காரணியாக அமைந்திருக்கும் சித்திரத்தை இக்கதைகள் நெடுக காணமுடிகிறது.   

வெங்குட்டுவன் காட்டும் கதை மாந்தர்கள் யதார்த்தமானவர்கள். பாசாங்கற்றவர்கள். அவர்களின் தோற்றத்தை அவர் பெரிதாக விவரிக்காதபோதும்கூட கதைகளில் அவர்களது நடமாட்டத்தை நம்மால் உயிர்ப்புடன் உணரமுடிகிறது. சூழலையும் சம்பவத்தையும் சொல்லும்போதே ஆரெக்ஸ் பழனிச்சாமி, மிஸ்டிக் சுப்ரமணி, ரங்கமணி, சாமிநாதன், சிந்தாமணி, முத்துக்குட்டி போன்ற கதாபாத்திரங்கள் கச்சிதமான உருவத்துடன் உடல்மொழியுடன் திரண்டு வருகின்றன.  

கொங்கு பிரதேசத்தின் நிலவளத்தையும் சூழலையும் வெகுசில சொற்களில் உருவாக்கிக் காட்டும் லாவகத்தையும் இக் கதைகளில் காணமுடிகிறது. ‘இப்போது வெயில் கொஞ்சம் இளகியிருந்தது. செம்மறிகள் மரத்தடிவிட்டு விலகி மேயத் துவங்கியிருந்தன. கரிக்குருவியொன்று பெட்டையாட்டின் மூத்திர வாடையைக் காற்றுவெளியில் மோப்பம்பிடித்து நின்றுகொண்டிருந்த செம்மறிக்கிடாயின் பிடரி மேலமரந்து அதன் காது உண்ணியைக் கொத்த முயற்சித்துக் கொண்டிருந்தது. மாடுகளின் காலடிகளில் இப்போது கொக்குகள் தென்பட்டன.’ ‘துத்திச் செடிகளின் மஞ்சள் பூக்கள் கருப்பணசாமி சிலைக்கு வைத்திருக்கும் சந்தனப் பொட்டுகளை நினைவூட்டின.’, ‘தென்புறம் கிழமேலாக நீண்டு கிடந்த கிளுவை வேலிக்கு அப்பாலிருந்த கொறங்காட்டு மரங்களுக்குள்ளிருந்து செம்போத்துகளும் கொன்னவாய்க் குருவிகளும் உற்சாகக் குரலெழுப்பியபடியிருந்தன. காரைப் புதர்களடர்ந்த பள்ளத்துக்குள்ளிருந்து மயில்கள் அகவுவதும் கேட்டது. வேலி வேப்பனிலிருந்து இறங்கிய அணிற்பிள்ளை சட்டெனத் திரும்பி வாய்க்காலுக்குள் இறங்கி ஏறி மறுபுறமிருந்த கிளுவை வேலிக்குள் புகுந்து மறைந்தது.’

இக்கதைகளை மேலும் நெருக்கமாக உணர்த்தும் கொங்கு பிரதேச மொழி வெங்குட்டுவனின் இன்னொரு சிறப்பு. உரையாடல்களிலும் சித்தரிப்பிலும் வெகு இயல்பாக பொருந்தி கதைகளுக்கு சுவையையும் அழுத்தத்தையும் சேர்க்கின்றன. முக்கியமாக சித்தரிப்பின் வழியாக அல்லாமல் உரையாடல் வழியாக கதைகளை நகர்த்தும்போது இவ்வகையான மொழித்திறன் பலமாக கைகொடுக்கிறது.

தொகுப்பிலுள்ள இன்னொரு கவனிக்கத்தக்க அம்சம் கதைகளுக்கு வெங்குட்டுவன் இட்டிருக்கும் தலைப்புகள். ‘கடன் மீண்டார் நெஞ்சம்’, ‘ஈஷோபதேசம்’, ‘ஆரெக்ஸ்’, ‘சிறு கையளாவிய வாழ்வு’, ‘எருமை நாயகம்’, ‘ஆபரேசன் சிந்தாமணி’ என சூட்டப்பட்டிருக்கும் தலைப்புகளில் உணரமுடிகிற மெல்லிய நகையுணர்வை சித்தரிப்புகளிலும் உரையாடல்களிலும்கூட காணமுடிகிறது.  இழப்புகளைத் தொடர்ந்து துயரங்களைச் சுமந்து அன்றாடங்களைக் கடத்தும் எளியோர்களின் கதைகள் என்றாலும் துக்கத்தின் பாரத்தை உணராமல் புன்னகைத்தபடியே வாசித்துக் கடக்கச் செய்யும்படி இந்த நகையுணர்வை கையாண்டிருப்பதில் வெங்குட்டுவனின் புனைவுத் திறன் மேலோங்கியுள்ளது.

0

வெறுங்கால் நடை – மணல்வீடு வெளியீடு – பிப்ரவரி 2022

 

 

   

No comments:

Post a Comment

மொழிபெயர்ப்புக் கலையும் ஆர்.சிவகுமார் எனும் கலைஞரும்

  ஆர்.சிவகுமார் சாரை எப்போது நான் சந்தித்தேன் என்பது என் நினைவில் இல்லை. ஆனால், இலக்கியத் தொடர்பு ஏற்பட்ட ஆரம்ப நாட்களிலேயே நான் அறிந்த ஒர...