ஆர்.சிவகுமார் சாரை எப்போது
நான் சந்தித்தேன் என்பது என் நினைவில் இல்லை. ஆனால், இலக்கியத் தொடர்பு ஏற்பட்ட ஆரம்ப
நாட்களிலேயே நான் அறிந்த ஒரு பெயர். தர்மபுரியில் ஜெயமோகன் வீட்டுக்கு வந்திருந்த நாட்களில்
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நேரில் சந்தித்திருக்க வேண்டும்.
1999ஆம் ஆண்டு ஒரிசா
சாகித்திய அகாதமி அனைத்திந்திய கவிஞர்கள் கூடுகை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. புவனேஸ்வருக்கு
அருகில் உள்ள சிலிகா என்ற மாபெரும் ஏரிக் கரையில் நிகழ்ச்சி. இந்த நிகழ்வுக்காக தமிழகத்திலிருந்து
ரவி சுப்ரமணியன், சிபிச் செல்வன் ஆகியோருடன் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். இந்தக்
கவிதையரங்கில் வாசிப்பதற்காக கவிதைகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்க வேண்டியிருந்தது.
ஒரு கடிதத்தில் என்னுடைய தேவையைச் சொல்லி இரண்டு கவிதைகளை ஆர்.சிவகுமார் சாருக்கு மொழிபெயர்த்துத்
தரும்படி கேட்டேன். ஒரு வாரத்திலேயே கவிதைகளை மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார். ஒரு
நாள் மாலையில், சிலிகா ஏரியின் மீது மிதந்திருந்த படகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
அரங்கில், அவர் மொழிபெயர்த்த கவிதையைத்தான் வாசித்தேன். பிற மொழிகளிலிருந்து வந்திருந்த
சிலர் அந்தக் கவிதையைக் கவனித்து பாராட்டினார்கள். மொழிபெயர்த்த கவிதையின் பிரதியைக்
கேட்டு வாங்கிக்கொண்டார்கள். ‘கடைசியாய் ஒரு கைகுலுக்கல்’ என்ற கவிதை அது. ‘A
Handsake, at last’ என்பது சிவகுமார் சாரின் மொழிபெயர்ப்பு.
இந்தக் கவிதையுடன்,
‘தீராத சித்திரம்’ என்ற இன்னொரு கவிதையையும் மொழிபெயர்த்திருந்தார்.
பின்னாளில் சந்தர்ப்பவசமாக
மொழிபெயர்ப்பில் ஈடுபட நேர்ந்தபோது, சிவகுமார் சார் என்னுடைய கவிதையை மொழிபெயர்த்திருந்த
பாங்குதான் உடனடியாக நினைவுக்கு வந்தது. மொழியாக்கம் என்பது ஒரு மொழியில் இருப்பதை
இன்னொரு மொழியில் அப்படியே எழுதுவது அல்ல என்பதை சிவகுமார் சாரின் மொழியாக்கங்களின்
வழியாகவே நான் புரிந்துகொண்டேன். மொழிபெயர்ப்பு குறித்து நேரடியாக அவரிடம் உரையாடிய
சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. ஆனால், அவருடைய மொழிபெயர்ப்புகளின் மூலம் கற்றுக்கொண்டவை
ஏராளம். இதுவரை நான் மொழிபெயர்த்திருக்கும் சில நூல்களின் பின்னணியில் அவருடைய மொழியாக்கங்களிலிருந்து
நான் கற்றுக்கொண்ட பாடங்களே உள்ளன. அந்த வகையில் அவர் என் ஆசான், குரு.
1980களில் இலக்கியத்துக்கான
நோபல் பரிசு காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்க்கு வழங்கப்பட்டதை அடுத்து அவருடைய கதைகளும்
லத்தீன் அமெரிக்கக் கதைகளும் தமிழில் புழங்கலாயின. அந்த வகையில் மார்க்வெஸ்ஸின் கதையை
தமிழில் முதன்முதலாக மொழிபெயர்த்தவர் சிவகுமார். அக்டோபர் 1983 மீட்சி இதழில் ‘செவ்வாய்க்
கிழமை மதியத் தூக்கம்’ கதையை மொழிபெயர்த்திருக்கிறார். அதைத் தொடர்ந்து 1986ஆம் ஆண்டில்
‘லத்தீன் அமெரிக்கக் கதைகள்’ தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.
ஆனால், தனது இலக்கியப்
பயணத்தை 25வயதில் தொடங்கியது ஒரு சிறுகதையாளராக. 1976ஆம் ஆண்டு அஃக் இதழில் அந்தச்
சிறுகதை வெளியானது. ஆனால், ஏனோ அதை அவர் தொடரவில்லை.
உதகையில் பணியாற்றியபோது,
பிரம்மராஜனுடன் இணைந்து ‘மீட்சி’ இதழில் தொடர்ந்து பங்களித்துள்ளார். நவம்பர் 1983
இதழில் பாரிஸ் ரிவ்யூவில் வெளியான வில்லியம் ஃபாக்னரின் பேட்டியின் மொழியாக்கம் வெளியாகியுள்ளது.
அதே ஆண்டு டிசம்பர் இதழில் வண்ணதாசன் சிறுகதைகள்-ஒரு வாசக அனுபவம் என்று ஒரு கட்டுரையை
எழுதியுள்ளார். செப் 85 இதழில் ‘புதுக்கவிதையும் புதுப் பிரக்ஞையும்’ என்ற தலைப்பில்
இலக்கு நடத்திய கருத்தரங்கு குறித்த கட்டுரையை எழுதியிருக்கிறார்.
சாகித்திய அகாதமியின்
காலாண்டு இதழான இந்தியன் லிட்டரேச்சர், ஏப்ரல் 2000இல், இவரது மொழிபெயர்ப்பில் பதினேழு
சங்கக் கவிதைகள் வெளியாகியுள்ளன. நகுலனின் சில கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார்.
2008ஆம் ஆண்டில் அவர்
இன்னொரு முக்கியமான பணியையும் செய்திருக்கிறார். திராவிடப் பல்கலைக் கழகத்துக்காக சுந்தர
ராமசாமியின் ரீடர் ஒன்றைத் தொகுத்தளித்திருக்கிறார்.
அண்மையில் இவரது முதல்
நாவல் 2021ஆம் ஆண்டு, ‘தருநிழல்’ வெளியானது. 2024ஆம் ஆண்டு இரண்டாவது நாவல் ‘கற்றதினால்’
வெளிவந்துள்ளது.
முக்கியமான சில கட்டுரைகளையும்
அவ்வப்போது எழுதியிருக்கிறார். ஆவநாழி இதழில்
‘பொயட்ரி’ இதழைக் குறித்தும், ‘லிட்டில் ரிவ்யூ’ இதழைக் குறித்தும் எழுதியுள்ள கட்டுரைகள்
முக்கியமானவை. வண்ணதாசன், மௌனி, ஆ.இரா,வெங்கடாசலபதி ஆகியேரைக் குறித்தும் கட்டுரைகள்
எழுதியுள்ளார். சில முக்கியமான நேர்காணல்களையும், கட்டுரைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார்.
தமிழின் சிற்றிதழ் மரபின்
வழியாகவே தீவிர இலக்கியம் தொடர்ந்து உருவாகி வளர்ந்து வலுப்பெற்றது. தமிழ் புனைவு சார்ந்த
எழுத்து நடையை, முறையை செழுமைப்படுத்தியதை நேரடியாக உணரவும் காணவும் முடிகிறது. ‘மணிக்கொடி’
முதல் ‘காலச்சுவடு’ வரையிலான அச்சிதழ்களும், இன்றைய மின்னிதழ்களும் உருவாக்கிய தீவிர
இலக்கியத்தின் எழுத்தாளர்கள் வரிசை மிகப் பெரியதும் பெருமைப்படத்தக்கதுமாகும். தமிழின்
சிறுகதை வளத்துக்கும் கவிதைச் செறிவுக்கும் நாவல்களின் வலுவுக்கும் அடித்தளமாக அமைந்திருப்பது
சிற்றிதழ் வழியாக உருவான தீவிர இலக்கிய மரபேயாகும்.
ஆனால், அதே சமயம் அதே
சிற்றிதழ் மரபின் மற்றொரு முக்கியமான கொடை மொழிபெயர்ப்பு. புனைகதைகள், கவிதைகள் சார்ந்த
அக்கறையையும் கவனத்தையும் ஏற்படுத்திய அதே சமயத்தில் பிறமொழி இலக்கியங்களைத் தமிழில்
மொழிபெயர்ப்பதற்கான தீவிரமான ஒரு பாதையும் உருவாக்கப்பட்டது என்பதை பலசமயம் நாம் யோசிப்பதில்லை.
எதை மொழிபெயர்க்கவேண்டும், ஏன் மொழிபெயர்க்கவேண்டும் என்பதைப் பற்றிய தெளிவும் ஆழமான
பார்வையும் கொண்டவர்கள் அந்த ஒற்றையடிப் பாதையை உருவாக்கினார்கள். இதழ்களோ புத்தகங்களோ
கிடைக்க சிரமமான அந்தக் காலத்தில் தொடர்ந்து தேடித் தேடி தமிழுக்கு அளப்பரிய அரிய செல்வங்களைக்
கொண்டு வந்து சேர்த்தார்கள். மொழியாக்கத்துக்கான அடிப்படைகளை அவர்களே ஏற்படுத்தினார்கள்.
ஆர்.சிவகுமார் சிற்றிதழ்
மரபைச் சார்ந்தவர். அவர் மொழிபெயர்த்த சிறுகதைகளில் பெரும்பாலானவை மீட்சி, கல்குதிரை,
உன்னதம், புது எழுத்து, மந்திரச் சிமிழ், உயிர்மை, காலச்சுவடு, நீட்சி, ‘க’, தொனி உள்ளிட்ட
சிற்றிதழ்களிலேயே வெளியாயின. அவருடைய எம்.ஃபில் ஆய்வு அமெரிக்காவில் வெளியான சிறுபத்திரிகைகள்
குறித்தது. முனைவர் பட்டம் படிகள், நிறப்பிரிகை ஆகிய இதழ்களை மையமாகக் கொண்டது.
தமிழில் சிற்றிதழ்களின்
வழியாக மொழிபெயர்ப்புக்கென அத்தகைய ஒற்றையடிப் பாதையை உருவாக்கியதில் பிரம்மராஜனின்
‘மீட்சி’ இதழுக்கும் சிவகுமாருக்கும் முக்கியமான பங்கு உண்டு. சிறுகச் சிறுக கதைகளை
வாசித்துத் தேர்ந்தெடுத்து மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் துல்லியத்துடனும் மொழிபெயர்த்து
ஒரு வலுவான அடித்தளத்தை, எந்தவித சலசலப்போ அலப்பறையோ ஆரவாரமோ இல்லாமல் அவர் உருவாக்கி
எழுப்பியிருக்கிறார். அவரது முதல் மொழிபெயர்ப்புச்
சிறுகதை 1983இல் வெளிவந்த ‘செவ்வாய்க் கிழமை பிற்பகல் தூக்கம்’ என்று கணக்கில்கொண்டால்,
இப்போது 42 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 42 ஆண்டுகளில் அவர் மொழிபெயர்த்திருக்கும் கதைகளின்
எண்ணிக்கை 32. நாவல்கள் 7, இலக்கியக் கோட்பாடு, மார்க்ஸின் ஆவி என இரண்டு புனைவல்லாத
நூல்கள், மாயா ஆஞ்சலோவின் ஒரு கவிதைத் தொகுப்பு. இந்த எண்ணிக்கையைப் பார்க்கும்போதே
நமக்குப் புரியும், ஒவ்வொரு ஆக்கத்துக்கும் எத்தனை காலத்தையும் உழைப்பையும் அவர் செலுத்தியிருக்கிறார்
என்பது.
அவரது மொழியாக்கத்தில்
வந்திருக்கும் படைப்புகளில் அவர் கையாண்டிருக்கும் ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் கூரிய
கவனமும் தெரிவும் இருந்துள்ளன. குறிப்பிட்ட அந்த வாக்கியத்தில் குறிப்பிட்ட ஒரு சொல்லுக்கு
தமிழ்ச் சொல்லை இடும்போது தமிழ் சொற்களஞ்சியத்திலிருந்து ஆகப் பொருத்தமான ஒரு சொல்லையே
அவர் தேர்ந்தெடுப்பார். அதற்காக அவர் மிகவும் மெனக்கெடுவதுண்டு. எனவேதான் ஒவ்வொரு பக்கத்துக்கும்
ஒவ்வொரு வாக்கியத்துக்கும் அவ்வளவு நேரத்தை அவர் செலவிட நேர்ந்திருக்கிறது. தன் இலக்கியப்
பங்களிப்பு, எண்ணிக்கையின் அடிப்படையில் அல்லாமல், தரத்தின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படவேண்டும்
என்பதே அவரது எண்ணம். எத்தனை கதைகளை, நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறோம் என்பதைக் காட்டிலும்
எதையெல்லாம் புதிதாக தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறோம் என்பதே முக்கியம்.
ஆரம்ப காலங்களில் சிற்றிதழ்களின்
வழியாக க.நா.சு, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிரமன் போன்றோரும் பின்னர்
சிவகுமாரும் அவரது காலத்தில் பங்களிப்பாற்றிய பிரம்மராஜன், சி.மோகன், சா.தேவதாஸ், அமரந்தா,
திலகவதி, சாருநிவேதிதா, சுகுமாரன், ஜி குப்புசாமி போன்ற மொழிபெயர்ப்பாளர்களும் உருவாக்கிய
அடித்தளத்தின் மீதுதான் தமிழின் இன்றைய மொழிபெயர்ப்புத் துறை ஆற்றலுடன் செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக உலக இலக்கியங்கள், குறிப்பாக நாவல்கள் தமிழில்
பெரும் எண்ணிக்கையில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. நேரடியாக தமிழில் எழுதப்படும்
புனைவுகளுக்கு இணையான எண்ணிக்கையில் மொழிபெயர்ப்புகள் வெளியாகின்றன. கணிசமான எண்ணிக்கையில்
மொழிபெயர்ப்பாளர்களும், அதிக அளவில் பெண்களும், உருவாகியுள்ளனர். மிகவும் வரவேற்கத்தக்க
இந்தப் போக்கில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய, சற்றே கவலைப்படவேண்டிய சில புள்ளிகளும்
உள்ளன என்பதையும் குறிப்பிடவேண்டும். மொழிபெயர்ப்பிலும் அந்த நூலை வெளியிடுவதிலும்
காட்டுகிற வேகத்தை நூலின் மொழிசார்ந்த தரத்திலும் துல்லியத்திலும் காட்டினால் அது தமிழுக்கும்
மொழியாக்கத்தை ஆர்வத்துடன் வாசிக்கும் வாசகர்களுக்கும் நன்மை பயக்கும்.
முன்னோடிகளின் சாயல்
அடுத்த தலைமுறை எழுத்தாளர்களிடம் இருக்கும். புதுமைப்பித்தனின் சாயலில்லாமல் தமிழில்
எழுதும் எழுத்தாளர்களைக் காண்பது கடினம். அசோகமித்திரனும் தி.ஜானகிராமனும் சுந்தர ராமசாமியும்
ஜெயமோகனும் தமிழ் உரைநடையில் அத்தகைய செல்வாக்கை
செலுத்தியுள்ளார்கள். அதேபோல, மொழிபெயர்ப்பாளனிடமும் முன்னோடி மொழிபெயர்ப்பாளனின் சாயலும்
பாணியும் இருக்கும். அத்தகைய ஒரு வலுவான சாயலை, பாதிப்பை தமிழ் மொழிபெயர்ப்பில் ஏற்படுத்தியிருப்பவர்
சிவகுமார். தனிப்பட்ட வகையில் மட்டுமல்லாமல் பொதுவாக தமிழ் மொழிபெயர்ப்பிலும் சிவகுமாரின்
ஆழமான பாதிப்பு உண்டு. புதுமைப்பித்தனும் அசோகமித்திரனும் ஜானகிராமனும் சுராவும் தமிழ்
உரைநடையில் செலுத்தியிருக்கும் செல்வாக்குபோல இன்றைய மொழிபெயர்ப்பாளர்களிடம் சிவகுமாரின்
செல்வாக்கும் மிகவும் கணிசமானது, ஆழமானது, தவிர்க்கமுடியாதது.
உலக இலக்கியங்களை ஆங்கிலத்திலிருந்து
தமிழில் மொழிபெயர்ப்பதற்கான பாதையை உருவாக்கிக் கொடுத்தவர்களில் முக்கியமானவர் என்பதும்,
துல்லியமும் சரளமும் மிக்க தனது மொழிபெயர்ப்புகளின் வழியாக தனக்கு அடுத்த தலைமுறை மொழிபெயர்ப்பாளர்களின்
பணிகளில் ஆழமான செல்வாக்கு செலுத்தியிருப்பவர் என்பதும் சிவகுமாரின் இரு முக்கியமான,
ஆழமான பங்களிப்புகள்.
செங்கதிர் மொழிபெயர்த்த
எட்வர் கீரத்தின் ‘அவன் பறந்துபோய்விட்டான்’ செம்மைப்படுத்தும்பொருட்டு சிவகுமாரிடம்
உதவியும் ஆலோசனையும் கேட்டோம். எட்வர் கீரத்தின் ஆங்கில மொழியாக்கத்தையும் செங்கதிர்
மொழியாக்கம் செய்த பிரதியையும் பொறுமையாக வாசித்து, ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு தனது
ஆலோசனைகளைத் தந்தார். அவர் திருத்தி, குறிப்புகள் எழுதிய அந்தப் பிரதியை இன்னும் பத்திரமாக
வைத்திருக்கிறோம். ஒரு மொழியாக்கத்தை செம்மைப்படுத்துவதற்கான கையேடாக அதை நாம் பயன்படுத்த
முடியும். திருத்தி, குறிப்புகளை எழுதி அனுப்பிய பிறகு அதுகுறித்து தொலைபேசியில் உரையாடினோம்.
அப்போது மறுமுனையிலிருந்து ஒவ்வொரு திருத்தத்துக்கும் அவர் கொடுத்த ஆலோசனைகள் மறக்க
முடியாதவை. ஒரு சொல்லுக்கு பதிலாக இன்னொரு சொல்லை அவர் முன்மொழியும்போது அதை அப்படியே
ஏற்றுக்கொள்வோம். மறுப்பு சொல்லமாட்டோம். ஆனால், அவர் அப்படியொரு தொனியில் அதை சொல்லவில்லை.
‘இதுக்கு பதிலா இப்பிடி இந்த சொல்லைப் போட்டு பாருங்களேன்’ என்றோ, ‘அந்த எடத்துல இந்த
வார்த்தையப் போட்டா இன்னும் நெருக்கமா வரும்னு தோணுது’ என்றோ, ‘நீங்க போட்டிருக்கற
சொல் சரியாத்தான் இருக்கு. ஆனா கதையில அந்த எடத்தை இன்னும் சரியா சொல்லணும்னா இந்த
சொல்லைப் போடலாமே’ என்றோதான் மிக மென்மையாகவும் பொறுமையாகவும் குறிப்பிடுவார். அதாவது
மொழிபெயர்த்தவர் எந்த விதத்திலும் தான் தவறுசெய்துவிட்டோம் என்று மனம் வருந்தக்கூடாதே
என்ற கரிசனம் அந்தக் குரலில் தொனிக்கும். முக்கியமாக, ஆலோசனை கேட்கிறார்கள், நாம் நம்முடைய
மேதாவித்தனத்தைக் காட்டுவோம் என்று குற்றம் சுட்டும் நக்கீரத்தனம் அவரிடம் துளியும்
இருக்காது.
சில உதாரணங்களைச் சொல்லலாம்.
‘old man’ என்ற சொல்லை வழக்கமாக நாம் ‘வயதான மனிதர்’ என்று நேரடியாக மொழிபெயர்ப்போம்.
ஆனால், ஆர்.சிவகுமார் அதற்கு பதிலாக இட்டிருந்த சொல் ‘முதியவர்’. ‘difficulty’ என்று
வரும்போது நாங்கள் ‘கஷ்டம்’ என்று எழுதியிருந்ததை அவர் ‘சிரமம்’ என்று மாற்றியிருந்தார்.
ஒரு கதையின் இறுதியில் ஒரு வாக்கியம், ‘he is just a fish’ என்று இருந்தது. எங்களுடைய
மொழிபெயர்ப்பு, அது மீன் மட்டும் தான். ஆனால், ஆர்.சிவகுமார் அதை இன்னும் மேம்படுத்தி,
‘அவர் வெறும் ஒரு மீன்தான்’ என்று மாற்றியபோது, கதையில் அந்த வாக்கியம் மேலும் தெளிவடைந்திருந்தது.
அண்மையில் இப்போது இங்கே
வழங்கப்பட்டிருக்கும் இந்த சிறு வெளியீட்டை சரிபார்க்கும்பொருட்டு அவருக்கு அனுப்பிவைத்தோம்.
ஒருசில சொற்களை மாற்றும்படி அவர் கேட்டுக்கொண்டார். உதாரணத்துக்கு, ஒரு இடத்தில் ‘ஆகிய’
என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக அவர் ‘போன்ற’ என்ற சொல்லை இடும்படி
கூறினார். அந்த வாக்கியத்தை சாதாரணமாக வாசிக்கும்போது இரண்டுக்கும் பெரிய அளவில் பொருள்வேற்றுமை
இருப்பதை கவனிக்கமாட்டோம். ஆனால், நுட்பமான வேறுபாடு உண்டு.
மொழிபெயர்க்கும்போது
சலிப்பில்லாமல் சோம்பல்படாமல் அகராதிகளை பயன்படுத்த வலியுறுத்துவார். குறிப்பிட்ட ஒரு
அகராதி என்று இல்லாமல், சிறந்த அகராதிகளை அருகில் வைத்துக் கொள்ளவேண்டும் என்பார்.
‘கேம்ப்ரிட்ஜ்’ அகராதி சிறப்பானது என்பது அவருடைய அனுபவம்.
எந்தவொரு கதையை அல்லது
நாவலை மொழிபெயர்ப்பதற்கு முன்பு அந்தக் கதாசிரியர், அவருடைய கதைகளின் ஒட்டுமொத்த பின்னணி,
கதைமொழி, எழுதப்பட்டிருக்கும் சூழல் போன்றவற்றை வாசித்துத் தெரிந்துகொள்வது முக்கியம்
என்பதை அவர் தொடர்ந்து கூறியுள்ளார். அதன் வழியாகத்தான் கதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும்
idioms & phrases களை சரியாகப் புரிந்துகொள்ள முடியும். மொழிபெயர்ப்பாளர்களின்
மிகப் பெரும் சவால் கதைகளில் உள்ள இத்தகைய மரபுத்தொடர்களை சரியாகப் புரிந்துகொண்டு
அவற்றை தமிழில் பொருத்தமாக இடுவதுதான்.
2002ஆம் ஆண்டு ‘பிறமொழிக்
கதைகள்’ வெளியானது. அதன் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘மீட்சி புக்ஸின்
வெளியீடாக 1986ல் வெளியான ‘லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்’ தொகுப்பின் முன்னுரையில்
‘நம் காதலியை மூன்றாவது ஆள் மூலம் காதலிப்பது எப்படிப்பட்ட இழப்போ அப்படிப்பட்டதுதான்
இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்ப்புகள் மூலம் படிப்பதும்’ என்று தாகூர் சொல்லியிருக்கிறார்
என்று குறிப்பிட்டிருந்தேன். நினைவிலிருந்து மேற்கோள் காட்டியதால் ஒரு வார்த்தையைத்
தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன். அதாவது, ‘மூன்றாவது ஆள் மூலம்’ என்பதற்குப் பதிலாக
‘வக்கீல் வைத்து’ என்று இருந்திருக்கவேண்டும். தாகூரின் வார்த்தை attorney. இழப்பை
எவ்வளவு சரியாகச் சொல்லியிருக்கிறார், பாருங்கள்’.
16 ஆண்டுகளுக்கு முன்பு
வெளியான ஒரு நூலின் முன்னுரையில் தான் தவறாகக் குறிப்பிட்ட ஒன்றை நினைவில் வைத்து இப்போது
எழுதுகிறார். யார் இதைக் கவனிக்கப் போகிறார்கள் என்று யோசிக்காமல், தவறாகக் குறிப்பிட்ட
ஒன்றை எத்தனை வருடம் ஆனாலும் சரிசெய்யவேண்டும் என்ற தன்னுணர்வும் பொறுப்பும்தான் அவரை
இப்போது இதைத் திருத்தச் செய்திருக்கிறது. அதுதான் சிவகுமாரின் குணம், தன்மை, மேன்மை.
இந்த தனித்தன்மைமிக்க குணந்தான் அவரை ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்களில் தலையாய
ஒருவராக நம்மைக் கொண்டாடச் செய்கிறது. இந்த தன்னுணர்வை, பொறுப்பை அவரது மொழிபெயர்ப்புகள்
எல்லாவற்றிலும் பார்க்க முடியும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு
கவிஞர் ஆனந்தகுமார் கவிதைக்கென ஒரு அச்சிதழைத் தொடங்கவிருப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிவிப்பைக் கண்டதும், சில வருடங்களுக்கு முன்பு ஆவநாழி மென்னிதழில் சிவகுமார்
எழுதியிருந்த கட்டுரையொன்று நினைவுக்கு வந்தது. 1912ஆம் ஆண்டு சிகாகோவில் ஹேரியட் மன்றோ
என்னும் கவிஞரால் தொடங்கப்பட்ட இந்த கவிதை இதழ் இன்றுவரை வெளிவந்துகொண்டிருக்கிறது.
114 ஆண்டுகளாக ஒரு கவிதை இதழ் வெளிவந்துகொண்டிருப்பது பெரும் நம்பிக்கையை அளிக்கிறது
இல்லையா? சிவகுமாரின் அந்தக் கட்டுரை, பொயட்ரி இதழைக் குறித்த விரிவான அறிமுகத்தை அளிக்கும்
ஒன்று. தமிழில் வெளியான முக்கியமான நல்ல கட்டுரைகளில் ஒன்று.
அடுத்த இதழில், ‘லிட்டில்
ரெவ்யூ’ எனும் அமெரிக்க சிற்றிதழைப் பற்றிய கட்டுரை ஒன்றையும் எழுதியுள்ளார். ஜேம்ஸ்
ஜாய்ஸின் ‘யுலிஸஸ்’ நாவல் இந்த இதழில் தொடராக வெளியானதும், சர்ச்சைக்குரியதாக மாறி
தடைசெய்யப்பட்டதையும் குறித்து கட்டுரை விவரிக்கிறது. அந்தக் கட்டுரைக்கு நடுவே சில
வரிகளை சிவகுமார் எழுதியுள்ளார்.
‘உலகத்துக்கே பண்பாடு
போதித்தவன் தமிழன் என்று வெற்றுப் பீற்றலுக்கு நம்மிடம் குறைவில்லை. நவீனத் தமிழ்ச்
சிறுகதையின் பிதாமகனான புதுமைப்பித்தனின் பெயரை திருநெல்வேலியின் ஒரு சிறு தெருவுக்குச்
சூட்டிவிட்டு அல்வா சாப்பிட்டு நம்மில் சிலர் மகிழ்ந்தோம். பலகோடித் தமிழர்களுக்கு
அவர் யாரென்றே தெரியாது. ஆனால், ‘தமிள் வால்க’ என்று விதைப் பைகள் மேலேறி சிக்கிக்
கொள்ளும் அளவுக்குக் கத்துவோம். ஓர் எழுத்தாளரை, ஒரு நாவலை அவர் புழங்கிய மொழிக்கூட்டம்
எப்படிக் கொண்டாடுகிறது என்பதை அறிந்துகொண்டு உணர்ச்சி இருந்தால் நாணுவோம்.’
இந்த வரிகளைப் படித்தபோது
சிவகுமாருக்கு தமிழ் மொழி மீதும் இலக்கியத்தின் மீதும் எழுத்தின் மீதுமுள்ள பற்றும்
அக்கறையும், அவற்றின் மீது தொடர்ந்து காட்டப்படும் உதாசீனத்தின் காரணமாக எழும் அறச்
சீற்றமும் அவரின் மீதிருக்கும் மதிப்பையும் மரியாதையையும் இன்னும் பல படிகள் மேலே உயர்த்துகின்றன.
ஓரிரு வருடங்களுக்கு
முன்பு, சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைப் பற்றி வாசிக்க நேர்ந்தது. அவர் லண்டனில்
உள்ள Fulham கால்பந்தாட்டக் கழகத்தின் தீவிர
ரசிகர். அந்தக் கழகம் சார்ந்த எல்லா விஷயங்களையும் உற்று கவனிப்பவர். அவர்கள் விளையாடும்
போட்டிகள், அதன் வீரர்கள், அணியின் மேலாளர், உடற்பயிற்சியாளர், அவர்கள் அணியும் உடை,
களத்தில் மேற்கொள்ளும் உத்திகள், போட்டிகளில் செய்யும் நுட்பமான தவறுகள் என்று அத்தனை
நுட்பங்களையும் அலசி ஆராய்ந்து அந்த அணிக்கான வலைதளத்தில் அவ்வப்போது தன் கருத்துகளை
எழுதுவது அவரது வழக்கம். தொடர்ந்து எழுதி வரும் இவரது குறிப்புகளை கால்பந்தாட்டக் கழகத்தின்
ஊடகப் பிரிவு கவனித்து வந்திருக்கிறது. தங்களது கால்பந்தாட்டக் கழகத்தின் மீது இத்தனை
தீவிர அபிமானம் வைத்திருக்கும் இளைஞரை, ரசிகரை கௌரவிக்க முடிவு செய்தது. இளைஞருக்கு
ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. தங்களது அணியின் பயிற்சிகளையும், ஒரு போட்டியையும்
காண்பதற்கான வாய்ப்பை அந்த இளைஞருக்கு வழங்குவதாகத் தெரிவித்திருந்தது. போக்குவரத்து,
தங்குமிடம் உட்பட அனைத்து செலவுகளையும் அந்தக் கழகமே ஏற்றுக்கொள்ளும். Fully sponsored trip. இதில் இன்னொரு கூடுதல் மகிழ்ச்சி.
இளைஞர் தன்னுடன் தான் விரும்பும் இன்னொருவரையும் அழைத்துவரலாம் என்பது.
இளைஞன் தன்னுடன் அழைத்துச்
செல்ல முடிவெடுத்தான், தன் தந்தையை.
இருவரும் லண்டன் சென்றனர்.
தன் விருப்பத்துக்குரிய கழகத்தின் போட்டிகளை, பயிற்சியை நேரில் கண்டுகளித்தான் இளைஞன்.
அதன் பிறகு விம்பிள்டன் மைதானம், லார்ட்ஸ் மைதானம், லண்டன் அருங்காட்சியகம் என்று எல்லா
இடங்களையும் சுற்றிப் பார்த்தனர். மார்க்ஸின் கல்லறைக்கும் அப்பாவை அழைத்துச் சென்றார்.
லண்டன் புல்காம் கால்பந்தாட்டக்
கழகத்தால் கௌரவிக்கப்பட்ட அந்த இளைஞனின் பெயர் சித்தரஞ்சன். அவருடைய அப்பாவின் பெயர்
ஆர்.சிவகுமார்.
ஆர்.சிவகுமார் நேர்காணல்களில்
தன் தந்தையைக் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். அவர்தான் தன் ஆதர்சம் என்று
குறிப்பிட்டிருக்கிறார். ‘தருநிழல்’ எனும் அவரது முதல் நாவலின் கதை நாயகனே அவருடைய
தந்தையார்தான். தன் தந்தைக்கு எப்படி ஒரு நல்ல மகனாக இருக்க அவர் விரும்பினாரோ அதுபோலவே
தனது பிள்ளைக்கும் ஒரு நல்ல தந்தையாக அவர் இருந்திருக்கிறார் என்பதற்கான தெளிவான சாட்சியம்தான்
மேலே குறிப்பிட்டிருக்கும் சம்பவம்.
ஆர்.சிவகுமார் என்னும்
ஆசிரியரை நாம் அறிவோம். அவரது நாவலின் மூலமாக அவரது தந்தையை அறிந்தோம். அவரது மகனின்
இந்தச் செயல் வழியாக ஆர்.சிவகுமாரும் போற்றுதலுக்குரிய ஒரு தந்தையாகவே இருக்கிறார்
என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆர்.சிவகுமார் ஒரு மொழிபெயர்ப்பாளர்
மட்டுமல்ல. அவர் தன் மொழிபெயர்ப்புச் செயல்பாடுகளின் வழியாக வலுவான அடிப்படைகளை உருவாக்கித்
தந்திருக்கிறார். இன்றைய மொழிபெயர்ப்பாளர்களின் மீது ஆழமான செல்வாக்கைச் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தமிழ் மொழிபெயர்ப்பு இயலின் முதன்மை கலைஞர்களில் ஆர்.சிவகுமாரும் ஒருவர்.
தமிழில் மொழிபெயர்ப்புகள்
பெருமளவில் வெளியாகும் இச்சூழல், ஆர்.சிவகுமார் போன்ற மொழிபெயர்ப்புக் கலைஞர்களின்
நீண்ட கால, கடும் உழைப்பின் பலனால் விளைந்தது. இந்தியாவின் பிற மொழிகளிலிருந்தும்,
உலக மொழிகளிலிருந்தும் படைப்புகளை தமிழில் தருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வரும்
சமயத்தில், ஆர்.சிவகுமார் போன்ற முன்னோடிகள் உருவாக்கித் தந்திருக்கும் அடிப்படைகளை
மனத்தில் கொள்வதும், ஆங்கிலத்தில் வாசிக்க முடியாத வாசகனுக்காகவே மொழிபெயர்க்கிறோம்
என்பதை கவனத்தில் வைத்து, சரியான நேர்த்தியான மொழிபெயர்ப்பை தர முயல்வதுமே அத்தகைய
முதன்மை மொழிபெயர்ப்புக் கலைஞர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.
0



