Thursday, 19 February 2026

இந்திய இலக்கியம்

பொதுவாக குறிப்பிட்ட ஒரு நாட்டின் இலக்கியம் என்றால் அது அந்த நாட்டின் மொழியில் எழுதப்பட்டதாக இருக்கும்.

ரஷ்ய இலக்கியம் என்றால் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டது. ஜெர்மன் இலக்கியம் என்றால் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டது என்று புரிந்து கொள்ளலாம். ஜப்பானிய இலக்கியம் என்றால் ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டிருக்கும்.

அந்த வகையில் இந்திய இலக்கியம் என்பது எந்த மொழியில் எழுதப்பட்டிருக்கும் என்ற கேள்வி எழும். பிற நாடுகளின் இலக்கியத்தை குறிப்பிட்ட நாட்டின் குறிப்பிட்ட மொழியில் எழுதப்பட்டது என்று குறிப்பிட முடிவதுபோல, இந்திய இலக்கியம் என்றால் இந்தவொரு மொழியில் எழுதப்பட்டது என்று குறிப்பிடவோ சொல்லவோ முடியாது. காரணம் நமக்குத் தெரியும். இந்தியா ஒரு மொழியை மட்டும் கொண்ட தேசம் அல்ல. இந்தியா பலமொழிகளைக் கொண்ட ஒரு தேசம். விடுதலைக்குப் பின் மாநிலங்களைப் பிரிக்க அந்தந்த பிரதேசங்களில் அதிகமும் பேசப்பட்ட மொழியைக் கொண்டே, மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாகவே இங்கு 20க்கும் அதிகமான மொழிகள் உள்ளன. இன்னமும் இங்கு ஆட்சி மொழியாக விளங்குவது ஆங்கிலமே. இவற்றைத் தவிர வெவ்வேறு பிரதேசங்களில் பேச்சு வழக்கில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை மட்டும் 350க்கும் அதிகமாக உள்ளன. எனவே, இந்திய இலக்கியம் என்பது குறிப்பிட்ட ஒரு மொழியில் மட்டும் எழுதப்பட்ட இலக்கியம் அல்ல. இந்திய இலக்கியம் என்பது இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ள இலக்கியங்கள் அனைத்தையும் மொத்தமாகவே குறிப்பிட முடியும்.

இதுவொரு வினோதமான அம்சம்.

இந்த வினோதமான அம்சம் இரண்டு சவால்களை தருவதாக உள்ளது. முதல் சவால் இந்திய மொழிகளுக்குள் இருப்பது. இந்தியாவில் ஒரு மொழியில் எழுதப்பட்ட ஒரு படைப்பை பிற மொழிகளில் உள்ளவர்கள் நேரடியாக படிக்க முடியாது. தமிழில் எழுதப்பட்ட ஒரு கதையை, நாவலை, கவிதையை மற்ற மொழியினர் வாசித்துவிட முடியாது. அந்தக் கவிதையோ, கதையோ, நாவலோ இந்தியாவின் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அல்லது இந்தியாவின் இணைப்பு மொழிகளாகக் கருதப்படும் இந்தியிலோ ஆங்கிலத்திலோ மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவுக்குள் இந்திய மொழிகளில் எழுதப்படும் படைப்புகள் சந்திக்கக் கூடிய முக்கியமான சவால் இது. ஆங்கிலம் அல்லது இந்தியில் மொழிபெயர்க்கப்படாமல் ஒரு படைப்பு இந்தியாவின் பிற மொழி வாசகர்களை சென்றடைவது என்பது சாத்தியமேயில்லை.

இரண்டாவது, இந்தியாவுக்கு வெளியே சர்வதேச அளவில் சந்திக்கக்கூடிய சவால். யாரேனும் ஒரு அந்நிய நாட்டவர் இந்திய இலக்கியத்தை வாசிக்க வேண்டும் என்றால், நாம் பிற நாட்டு இலக்கியங்களை வாசிப்பதுபோலவே, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு நூலையே தேர்வு செய்ய முடியும். குறிப்பிட்ட ஒரு தேசத்தின் குறிப்பிட்ட ஒரு மொழியை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதுபோலத்தானே இது என்று நினைக்கலாம்.  ஜெர்மானிய மொழியில் கதே எழுதிய ஒரு நாவலை ஆங்கில மொழியாக்கத்தின் வழியாக வாசிக்கலாம். பால்ஸாக் பிரெஞ்சு மொழியில் எழுதிய ஒரு புதினத்தையும் அவ்வாறு ஆங்கிலத்தின் வழியாக நம்மால் படிக்க முடியும். அப்படித்தானே இந்திய மொழியில் எழுதப்பட்ட ஒரு படைப்பை ஆங்கிலம் வழியாக பிற தேசத்தினர் படிக்கிறார்கள் என்று யோசிக்கலாம். ஆனால், அது அத்தனை எளிய சமன்பாடல்ல. ஆங்கிலத்துக்கு ஒரு இலக்கியப் படைப்பை மொழிபெயர்ப்பது என்பது பல்வேறு அம்சங்களைப் பொறுத்தது. ஆர்வமுள்ள தகுதியான மொழிபெயர்ப்பாளரைக் கண்டடைய வேண்டும். பிறகு ஏதேனும் ஒரு பதிப்பாளர் அதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பதிப்பாளருக்கு சர்வதேச சந்தையில் செல்வாக்கு இருக்கவேண்டும். இதையெல்லாம் கடந்து ஒரு நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது என்பது பெரும் சாதனை. அவ்வாறான இடையறாத தொடர் முயற்சிக்குப் பிறகே ஒரு இந்திய மொழிப் படைப்பு ஆங்கிலம் வழியாக சர்வதேச சந்தையை எட்டிப் பார்க்க முடியும்.

0

உலக அளவில் இந்திய இலக்கியத்தின் முகமாக அறியப்பட்டவர் ரவீந்திரநாத் தாகூர். அவருடைய கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பு 1913ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றதைத் தொடர்ந்து பரவலாக அறியப்பட்டார். 1910ஆம் ஆண்டு வங்கமொழியில் பதிப்பிக்கப்பட்டபோது அது உலக அளவில் கவனம் பெறவில்லை. 1912ஆம் ஆண்டு லண்டனில் உள்ள இந்தியா சொசைட்டி ஆங்கிலத்தில் பதிப்பித்து வெளியிட்டபோதுதான் கவனம் பெற்றது.

அதன் பிறகு ஆர்.கே.நாராயணன், சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய், விக்ரம் சேத், அமிதவ் கோஷ் என்று சிலர் இந்திய எழுத்தாளர்களாக உலக அளவில் அறியப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஏன் இந்திய எழுத்தாளர்களாக கருதப்படுகிறார்கள் என்றால் இவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள், எழுதிக் கொண்டிருப்பவர்கள். Indian English Writers. இதுவொரு தனி வகைப்பாடு. ஆங்கிலம் உலக அளவில் அனைவரையும் சென்றடைவதற்கான சாத்தியம் அதிகம் என்பதால், நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அவர்களது எழுத்துகள் இந்திய இலக்கியம் என்ற அடையாளத்தை வெகு சுலபமாக அடைந்தன.

ஆனால், அவர்கள் எழுதியதுதான் இந்திய இலக்கியமா என்று யோசித்துப் பார்த்தால் அது உண்மையில்லை என்பதை தயக்கமில்லாமல் உரக்கச் சொல்லலாம். உலக அளவில் புகழ்பெற்றுள்ள இவர்கள் எழுதியவை என்ற காரணத்தால், இவர்கள் அனைவரும் இந்திய வேர்களைக் கொண்டவர்கள் என்பதால், இந்திய இலக்கியம் என்று சொல்வதும் சுட்டப்படுவதும் சரியானதல்ல. இவர்களுடைய எழுத்துகளைவிட இந்தியாவின் பிற மொழிகளில் எழுதப்பட்டுள்ள ஆழமும் நுட்பமும் கொண்ட பல நாவல்களை உதாரணம் காட்ட முடியும். 

இண்டியன் இங்கிலிஷ் எழுத்துகள் இந்திய இலக்கியம் என்று சொல்ல முடியாது. சரி, அப்படியென்றால்  இந்திய இலக்கியம் என்றால் இந்தியில் எழுதப்பட்ட இலக்கியமா? நிச்சயமாக இல்லை. தமிழில் எழுதப்பட்டாலும் மலையாளத்தில் எழுதப்பட்டாலும் அஸ்ஸாமியில் எழுதப்பட்டாலும் வங்காள மொழியில் எழுதப்பட்டாலும் துளுவில் எழுதப்பட்டாலும் அது இந்திய இலக்கியம்தான்.

எழுத்துருவே இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டும் இருக்கும் கொங்கணி, தோடா போன்ற மொழிகளிலும் இலக்கியங்கள் எழுதப்படுகின்றன. அவையும் இந்திய இலக்கியந்தான்.

இந்திய இலக்கியம் என்பதை வரையறுக்க முடியுமா?

கடினம். அப்படி துல்லியமாக கறாராக வரையறுக்க முடியாது என்பதுதான் இதன் சிறப்பும், சவாலும். எளிமையாகச் சொல்வதென்றால் இந்திய வாழ்க்கையைச் சொல்லும் ஒன்றே இந்திய இலக்கியமாக இருக்க முடியும்.

அப்படிச் சொல்லப் போனால் அடுத்து இன்னொரு கேள்வி எழும். இந்திய வாழ்க்கை என்றால் எது? எந்த இடத்தில் இருப்பது? தமிழ்நாட்டு வாழ்க்கையா, வங்காள வாழ்க்கையா அல்லது காஷ்மீர் வாழ்க்கையா? எது இந்திய வாழ்க்கை?

இந்திய வாழ்க்கை என்பதை எப்படி வரையறுப்பது?

நமக்கு வெகுவாகப் பழகிப்போன ஒரு சொற்றொடர் உண்டு. இந்தியாவின் சிறப்புகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’. விரிந்த இந்திய நிலப்பரப்பு எல்லா வகையான பூகோள அம்சங்களையும் கொண்டிருக்கிறது. கங்கைச் சமவெளியின் வாழ்க்கையும், மேற்குக் கடற்கரையோர வாழ்க்கையும் வெவ்வேறானவை. வடகிழக்கு மலைவாழ் மக்களின் வாழ்க்கையும், தக்கணா பீடபூமியிலுள்ளவர்களின் வாழ்க்கையும் ஒன்றல்ல. காஷ்மீர் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் வேறு, கனிமவளங்கள் நிறைந்த ஜார்கண்ட், ஒடிசா போன்ற மாநிலத்தவர்களுக்கான சவால்கள் வேறு. இப்படி ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தனித்தனியான வாழ்க்கைச் சூழல். அதற்கேற்ற அவர்களுடைய பழக்க வழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் அமைகின்றன. கல்வியும் வேலைவாய்ப்பும் ஒன்றில்லை. இவர்களுக்கு அமையும் தொழில்களும் பொருளாதார வாய்ப்புகளும் வெவ்வேறானவை. எனவே, இத்தகைய தனித்தன்மைகள், ஒன்றிலிருந்து வேறுபட்ட அம்சங்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் உண்டு. அண்டைய மாநிலமாக இருந்தாலும்கூட குறிப்பிட்ட சில அம்சங்கள் வேறுபட்டிருக்கிறது.

அதே சமயத்தில் இந்த நிலங்கள் அனைத்துக்கும், மக்கள் அனைவருக்குமான சில பொதுவான அம்சங்களும் உள்ளன. பஞ்சாபிலுள்ள ஒரு விவசாயி சந்திக்கும் அதே விதமான பிரச்சனைகளையே தமிழகத்திலுள்ள ஒரு விவசாயி சந்திக்கிறான். வங்கக் கடலோர மீனவனுக்கும் அரபிக் கடலோர மீனவனுக்கும் க டல் வாழ்க்கை ஒன்றுபோலத்தான். எந்த மாநிலத்தில் எந்தச் சூழலில் இருந்தபோதும் பெண்களின் பாடுகளும் கவலைகளும் பிரச்சனைகளும் ஒரேவிதமானவைதான். அரசியல் சூழலினால், சமூக விரோத சக்திகளினால் ஏற்படும் பிரச்சனைகளும் சவால்களும் இந்தியா முழுக்க ஒரேவிதமானதாகவே உள்ளன.

எனவே, விரிந்த இந்திய நிலப்பரப்பின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பல்வேறு மனிதர்களும் மொழி, பழக்க வழக்கங்கள், கலாச்சாரக் கூறுகள் போன்ற தனி அடையாளங்களைக் கடந்து பொதுவாக சந்திக்கக் கூடிய பிரச்சனை களை, சிக்கல்களை, சவால்களை தொட்டுக் காட்டுவதாகவே இந்திய இலக்கியம் இருக்கவேண்டும் என்று உத்தேசமாகச் சொல்லலாம்.

அனைவருக்கும் பொதுவான பிரச்சனைகளை, அம்சங்களை, சவால்களைத் தொட்டுக்காட்டும்போதே ஒரு எழுத்து அந்தப் பிரதேசம் சாராத பிறருக்குமான எழுத்தாக உணரப்படுகிறது. அதேவேளையில், குறிப்பிட்ட பகுதியின் தனித்தன்மை வாய்ந்த வாழ்க்கைச் சூழலை, பண்பாட்டுக் கூறுகளை, பழக்க வழக்கங்களை தனக்குள் அந்த எழுத்துக் கொண்டிருக்கும்போது பிறருக்கு புதிய அனுபவத்தை தரக்கூடியதாக அமைகிறது.

உதாரணமாக, ‘ஆரோக்கிய நிகேதனம்’ நாவலை எடுத்துக் கொள்வோம். வங்க மொழியில் எழுதப்பட்ட அந்த நாவலை தமிழில் வாசிக்கிறோம். மரபுவழியிலான ஆயுர்வேத மருத்துவத்துக்கும் நவீன ஆங்கில மருத்துவத்துக்குமான மோதலும் அதனால் விளையும் சிக்கல்களும்தான் நாவலின் மையம். ஜீவன் மஷாயும் பிரபோத்தும் வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்தவர்கள். வெவ்வேறு நம்பிக்கைகள். இவர்கள் இருவருக்குமான மோதல் என்பது மரபுக்கும் நவீனத்துக்குமான மோதல். வளர்ச்சியின் போக்கில் எதை நாம் கைகொள்ளவேண்டும், எதை நாம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற தெளிவை இந்த மோதலின் வழியாக நம்மால் புரிந்துகொள்ள முடியும். மரபின் மேன்மைகளையும் அனுபவங்களையும் நவீன அறிதல்களுடன் நுட்பங்களுடன் இணைப்பதின் மூலமாகத்தான் ஆரோக்கியமான வளர்ச்சியை எட்ட முடியும் என்பதே இதன் மையம்.

வங்க மொழியில், வங்காளத்துச் சூழலில் எழுதப்பட்ட இந்த நாவலின் பேசுபொருள் அனைவருக்குமானது. இந்தியா முழுமைக்குமானது. உலகில் எந்த இடத்திலும் இது பொருந்தும். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின், குறிப்பிட்ட மொழியின் இலக்கியம் என்ற இடத்திலிருந்து அனைவருக்குமான பேசுபொருளின் காரணமாக இந்திய இலக்கியமாகவும், உலக இலக்கியமாகவும் இது விரிவடைகிறது.

இன்னொரு உதாரணமாக, கன்னடத்தில் எழுதப்பட்ட ‘காச்சர் கோச்சர்’ நாவலைக் குறிப்பிடலாம். எளிய குடும்பங்களின், எளிய மனிதர்களின் நுட்பமான வன்முறையே இதன் மையம். இது குடும்ப அமைப்புக்கான ஒரு அம்சம். உறவுகளுக்குள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருப்பது. இந்த நாவலை வாசிக்கும் எவரும் இதனுடன் ஒன்றிவிட முடியும். மொழியையும் சூழலையும் கடந்து அனைவருக்குமான ஒன்றாக மாறிவிட முடிகிறது.

ஒரு பிரதேசத்துக்குரிய அல்லது மொழிக்குரிய தனித்தன்மைகளையும், இந்திய நிலத்துக்கான பொதுவான கூறுகளையும் இணைத்து அனைவருக்குமான அனுபவமாக மாற்றும் ஒன்றையே இந்திய இலக்கியம் என்று குறிப்பிடலாம்.

0

இந்திய இலக்கியம் என்பது நீண்ட கால அளவையும், பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களையும் உள்ளிட்ட விரிவான ஒரு களம். அதை இருபது நிமிட காலத்தில் சொல்வது என்பது சாத்தியமான காரியமல்ல. ஒரு பருந்துப் பார்வையாகப் பார்த்தாலும் இந்தக் கால அளவு போதாது.

எனவே, இந்திய இலக்கியத்தின் முக்கியமான ஒரு பகுதியாக விளங்கும் இந்திய நாவல்களைக் குறித்த, ஒரு சுருக்கமான அறிமுகத்தை அளிக்க விரும்புகிறேன். 

ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகு 19ஆம் நூற்றாண்டில் அறிமுகமான இலக்கிய வடிவம் நாவல். ஆனால், அதற்கு முன்பு 9ஆம் நூற்றாண்டில் பாணபட்டரால் எழுதப்பட்ட ‘காதம்பரி’யை இந்தியாவின் முதல் நாவலாகக் கருதுபவர்களும் உண்டு.  காதம்பரி ஒரு உரைநடைக் கவிதையே, நாவல் அல்ல என்ற எதிர்க் கருத்தும் உள்ளது. இன்றும் மராத்தி, கன்னட மொழிகளில் நாவலை ‘காதம்பரி’ என்றே அழைக்கிறார்கள்.  

1605ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிய எழுத்தாளர் மிகைல் செர்வாண்டஸின் ‘டான் குயிக்ஸாட்’ உலகின் முதல் நவீன நாவல். இந்தியாவில், இந்திய மொழியில் எழுதப்பட்ட முதல் நாவலாகக் கருதப்படுவது, மராத்தி மொழியில் பாபா பதம்ஜி என்பவரால் 1857ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘யமுனா பர்யதன்’ என்கிற நாவலாகும்.

முதல் தமிழ் நாவலான, மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ இதே ஆண்டில், 1857லேயே எழுதப்பட்டது. வெளியான ஆண்டு 1879. எனவே, இந்தியாவில் இந்திய மொழியில் எழுதப்பட்ட முதல் இரண்டு நாவல்களில் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரமும் ஒன்று. இதைத் தொடர்ந்து 1893ஆம் ஆண்டில் பி.ஆர்.ராஜம் அய்யர், கமலாம்பாள் சரித்திரத்தையும் 1898ஆம் ஆண்டில் அ.மாதவையா, பத்மாவதி சரித்திரத்தையும் எழுதினார்கள்.

வங்க மொழியின் முதல் நாவலை பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதினார். ஆனால், அவர் எழுதிய முதல் நாவல் வங்க மொழியில் அல்ல, ஆங்கிலத்தில். 1864ஆம் ஆண்டு அவர் எழுதிய நாவலின் பெயர் ‘ராஜ்மோகனின் மனைவி’. இந்த இரு நாவல்களுக்குமான ஒற்றுமை, இரண்டுமே பெண்களை மையமாகக் கொண்ட நாவல்கள். இதன் பிறகு 1865ஆம் ஆண்டு பங்கிம் சந்திர சாட்டர்ஜி தனது முதல் வங்க நாவலான ‘துர்கேஷ் நந்தினி’யை எழுதினார். பங்கிம் சந்திரர் நமக்குப் பரிச்சயமான பெயர்தான். அவருடைய ‘ஆனந்தமடம்’ நாவலில் இடம் பெற்ற கவிதைதான் நமது‘வந்தே மாதரம்’. 

ஒடியா மொழியிலும் முதல் நாவல் எது என்ற குழப்பம் உண்டு. வெளியான காலத்தைப் பொறுத்த வரை ராம்சங்கர் ரே எழுதிய ‘சௌதாமணி’யே முதல் நாவலாகக் கருதப்படுகிறது. ஆனால், அது முற்றுப்பெறாத ஒன்று. எனவே, முழுமையாக எழுதி 1897ஆம் ஆண்டு வெளியான ‘சா மனா அதா குந்தா’ என்ற நாவலே முதல் நாவலாக அங்கீகரிக்கப் படுகிறது. இதன் பொருள் ஆறு ஏக்கர், மூன்றில் ஒரு பங்கு என்பதாகும். இதைப் பார்க்கும்போது பாரதியின் ஆறில் ஒரு பங்குக்கும் இதற்கும் தொடர்புள்ளதா என்ற யோசனை வருகிறது.

தெலுங்கின் முதல் நாவல் 1867இல் வெளியானது. ‘ஸ்ரீரங்கராஜ சரித்திர’ என்ற அந்த நாவலை எழுதியவர் நரஹரி கோபாலகிருஷ்ணமா செட்டி என்பவர். அவரைத் தொடர்ந்து 1878இல் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு, ‘ராஜசேகர சரித்திரமு’ என்ற நாவலை எழுதினார். இதுவே தெலுங்கு நவீன நாவலின் தொடக்கமாக முன்வைக்கப்படுகிறது.

மலையாளத்தின் முதல் நாவலாக சந்து மேனன் எழுதிய ‘இந்துலேகா’ குறிப்பிடப்படுகிறது. 1889இல் வெளியானது. ஆனால், இதற்கு முன்பே 1887இல் அப்பு நெடுங்காடி என்பவர் ‘குண்டலதா’ என்னும் நாவலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், வடிவரீதியாக இந்துலேகாவே மலையாளத்தின் முதல் நாவலாக விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது.

கன்னடத்தின் முத ல் நாவல், 1892ஆம் ஆண்டு வெளியானது.  லட்சும பீமா கடக்கர் எழுதிய ‘சூர்யகாந்தா’ என்பது நாவலின் பெயர். அதன் பிறகு 1899ஆம் ஆண்டு ‘இந்திரா பாய்’ என்ற நாவல் வெளியானது. இந்த நாவலை எழுதியவர் குல்வாடி வெங்கட ராவ் என்பவர்.

தென்னக மொழிகளில் நாவல்கள் பிறந்த அதே காலகட்டத்தில் இந்தியின் முதல் நாவலான ‘பரிக்ஷா குரு’வும் வெளியாகியுள்ளது. 1882ஆம் ஆண்டு வெளி வந்த இந்த நாவலின் ஆசிரியர் ஸ்ரீனிவாஸ் தாஸ். இதற்கு முன்பு 1870ஆம் ஆண்டு, கௌரிதத் எழுதிய ‘தேவராணி ஜேட்டானி கி கஹானி’ என்ற நாவலும், 1877ஆம் ஆண்டு  ஸ்ரதாராம் பிலௌரி என்பவர் எழுதிய ‘பாக்யவதி’ என்ற நாவலும் தொடக்க கால நாவல்களாகக் கருதப்படுகின்றன.

இந்த ஆரம்பகால நாவல்களைப் பார்க்கும்போது, பெரும்பாலான நாவல்கள் பெண்களின் வாழ்வை, விதவைகள் மறுமணம், கல்வி போன்றவற்றை மையமாகக் கொண்டிருந்தன என்ற ஒற்றுமையை கவனிக்க முடியும்.

இந்திய அளவில் நவீன நாவல்களின் வரிசையில் முதன்மையாக இடம்பெற்றிருக்கும் நாவல்களிலும் இந்த அம்சம் உண்டு என்பதும் முக்கியமானது. பெண்களின் பாடுகளை, துயரை, ஆளுமைகளையே நாவல்கள் முதன்மைப்படுத்தியுள்ளன.

1

எஸ்.எல்.பைரப்பா எழுதிய புகழ் பெற்ற கன்னட நாவலான ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலை எடுத்துக் கொள்ளலாம். நாவலின் மையம் கங்கம்மாவின் குடும்பம் மெல்ல மெல்ல சிதைவதுதான் என்றாலும் இதன் முதன்மை கதாபாத்திரம், நஞ்சம்மாதான். கங்கம்மாவின் மூத்த மருமகள். குடும்பத்தை எப்படியாவது அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக தொடர்ந்து முயல்பவள். கடும் உழைப்பாளி, புத்திசாலி, பொறுமையும் தியாக உணர்வும் மிக்கவள்.  அந்தக் குடும்பத்தை அழிவிலிருந்து காப்பாற்ற போராடுகிறாள். எண்ணற்ற சோதனைகளைச் சந்திக்கிறாள். ஊரையே சூறையாடும் பிளேக் நோய்க்கு தன் மகளையும், புத்திசாலி மகனையும் பறிகொடுக்க நேர்கிறது. அவளுடைய அத்தனை துன்பங்களுக்கும் விடையாக வந்து சேர்கிறது அவளது மரணம்.

இன்னொரு கோணத்தில் கங்கம்மா என்ற இயல்பான கிராமத்துப் பெண்ணின் துயரக் கதைதான் இந்த நாவல். விதவையான கங்கம்மா கிராமப் பெண்களுக்கே உரிய அறியாமையையும் மூர்க்க குணத்தையும் கொண்டவள். அவளுக்கு இரு பிள்ளைகள். சென்னிகராயன், அப்பண்ணய்யா ஆகிய இருவரும் மாறுபட்ட குணமுடையவர்கள். இருவரும் அசட்டு முரடர்கள். சென்னிகராயன் சுயநலவாதி. கோழையும்கூட. அவளுடைய குணக்கேடுகளால்தான் அந்தக் குடும்பம் தொடர்ந்து மீள முடியாத நிலைக்குச் செல்கிறது என்றாலும் தன்னுடைய பிள்ளைகளுக்காகவே அப்படி இருக்க நேர்வதையும் பார்க்க முடியும்.

இந்திய வாழ்வில் குடும்ப அமைப்பின் அச்சாணியாக விளங்குபவர்கள் பெண்கள் என்பதையே இந்த நாவல் வெகு அழுத்தமாக முன்னிறுத்தியிருப்பதைப் பார்க்கலாம். ஒரு குடும்பத்தின் ஏற்றத்துக்கும் சரி, வீழ்ச்சிக்கும் சரி பெண்களே காரணமாக நிற்கிறார்கள் என்பதை இந்த நாவல் அடிக்கோடிடுகிறது. நஞ்சம்மா என்ற எளிய கிராமத்துப் பெண்ணின் முயற்சிக்கும் தியாகத்துக்கும் எந்தப் பலனுமின்றி அந்தக் குடும்பம் அழிவதுதான் நாவலின் முடிவு. நஞ்சம்மா என்பவள் இந்திய கிராமத்தில் உள்ள எண்ணற்ற பெண்களின் முகம். அவர்களின் அடையாளம். அந்த இடத்தில் எந்தவொரு பெண்ணும் தன்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும்.

ஆரோக்கிய நிகேதனம்

இந்திய அளவில் சிறந்த நாவலெனக் கொண்டாடப்படும் வங்க நாவல் ‘ஆரோக்கிய நிகேதனம்’. தாராசங்கர் பந்தோபாத்யாய எழுதியது.

ஆயுர்வேத மருத்துவரான ஜீவன் மசாய் இதன் முதன்மை பாத்திரமாக இருந்தாலும், அவரது மனைவியான ஆதர் பௌ அவருக்கு இணையானவளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். ஜீவன் மசாய் தன் முன்னாள் காதலியைப் பழிவாங்குவதற்காகவே தன்னை அவர் மணந்திருக்கிறார், பயன்படுத்துகிறார் என்பதை நன்கறிந்த காரணத்தால் தொடர்ந்து அவரைத் துன்புறுத்தும் ஒருத்தியாகவே மாறிவிடுகிறாள். கணவனிடமிருந்து எளிய அன்பை எதிர்பார்க்கும் ஒருத்தி, அது கிடைக்காதபோது எப்படி தன்னையும் தன் குணங்களையும் மாற்றிக்கொள்ள நேர்கிறது என்பதற்கான கச்சிதமான உதாரணம் ஆதர் பௌ.

இந்தியக் குடும்பங்களில், மரபான திருமணங்களினால் இப்படிப்பட்ட நிலைக்குத் தள்ளப்படும் பெண்கள் பலரும் தம்மை ஆதர் பௌவிடம் அடையாளம் காணமுடியும்.

நிர்மலா

இந்திய கிராமப் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கதாபாத்திரம் நாவல் பேரரசராகக் கருதப்படும் பிரேம்சந்த் உருவாக்கிய நிர்மலா. வாழ்க்கையின் அனைத்து விதமான துயரங்களையும் சுமக்கும் ஒரு பெண். வரதட்சணைக் கொடுமை, பொருந்தாத் திருமணம், முதிய கணவனின் சந்தேகம், உறவினர்களின் பழிச்சொற்கள், அவளை அடைய முனைபவர்களால் ஏற்படும் துன்பங்கள் என்று எல்லத் திசைகளிலிருந்தும் துன்பத்தையும் மனவருத்தங்களையும் மட்டுமே சந்திக்கும் அபலைச் சிறுமி.

என்னுடைய கல்லூரிப் பருவத்தில், இந்தி கற்றுக்கொண்டிருக்கும்போது இந்த நாவலை வாசித்தபோது பெரும் மன அவஸ்தை. ஒரு பெண்ணுக்கு இத்தனை துன்பங்கள் இருக்குமா? கண்ணீரே வாழ்க்கையா? ஒருநாளும் மகிழ்ச்சியோ நிம்மதியோ இருக்காதா? இதைத் தொடர்ந்து படிக்கத்தான் வேண்டுமா என்று ஒத்திப் போட்டதும் உண்டு. ஆனாலும் நிர்மலாவை வாசிக்காமல் இருக்க முடியவில்லை. கடைசியில் அவள் மரணமடைந்தபோது சற்று நிம்மதியாக இருந்தது. இனி அவளுக்குத் துன்பமில்லை என்பதுபோல.

நம்மில் பலருக்கு பிரேம்சந்த் என்றதும் ‘கோதானம்’ நாவலே நினைவுக்கு வரும். தமிழில் அதுதான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், கோதானம் தரும் கிராமத்துச் சித்திரத்தைவிடவும் வலியும் வேதனையும் துயரமும் ஒன்றுசேர்ந்த நிர்மலா மிக அபாரமான நாவல். தமிழில் இது இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது இன்னொரு புதிர்தான்.

சிவப்பு தகரக் கூரை

குடும்ப வாழ்வின் சவால்களை சந்திக்கும், பாரங்களை சுமக்கும் பெண்களின் கதைகளுக்கு எல்லா மொழிகளிலும் உதாரணங்கள் உண்டு. ஆனால், பதின் வயதின் தொடக்கத்திலுள்ள ஒரு சிறுமியின் உலகத்தைச் சொல்லும் படைப்புகள் வெகு அரிது.

அப்படிப்பட்ட அரிதான நாவல் ‘சிவப்புத் தகரக்கூரை’. நிர்மல் வர்மா எழுதிய நாவல்.

பதின்பருவத்தின் தொடக்கத்திலுள்ள ஒரு சிறுமியின் உலகம் வினோதமானது. உடலும் மனமும் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகவிருக்கும் பருவம். ஒரு சிறுமிக்கும் இளம்பெண்ணுக்குமான இடைவெளி என்பது கால அளவில் மிகச் சொற்பமானதாய் இருக்கலாம். ஆனால், மனதளவில் கடக்க வேண்டிய தொலைவு சுலபமானது இல்லை. அதுவும் தகுந்த வழிகாட்டுதலின்றி துணையினறி இருக்க நேரும் ஒரு பெண்ணுக்கு அப் பருவம் தரும் அலைக்கழிப்பும் அதிர்ச்சியும் ஆழமானவை.

அந்த மாற்றங்களையொட்டி மனதுக்குள் ஏற்படும் கேள்விகள், குழப்பங்கள், ஆர்வங்கள், அச்சங்கள் அனைத்தும் யாரிடமும் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள முடியாதவை. கூச்சமேற்படுத்துபவை. சங்கடம் தருபவை. அதே சமயம் கவர்ச்சிமிக்கவை. தனது வீட்டிலும் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களிடமிருந்தே இவற்றுக்கான விடைகளை அறிந்துகொள்ள முடியும். ஆனால், அவளால் முடிவதில்லை. கர்ப்பமாக இருக்கும் அம்மாவே அவளுக்குச் சங்கடத்தையும் புதிர்களையும் தருகிறாள். பிறப்பு, இறப்பு ஆகிய இருவேறு எல்லைகளை அவள் ஒரே சமயத்தில் சந்திக்க நேர்கிறது. அப்போது ஏற்படும் குழப்பமும் இருண்மையும் அவளை ஆழமாகப் பாதிக்கிறது. கர்ப்பிணியான அம்மா, ஆங்கிலேய மூதாட்டி, அத்தை, மருத்துவச்சி, புல்லாக்குக்காரி என்று அவள் சந்திக்கும் பெண்கள் யாரும் அவளுக்கு உதவுவதில்லை. அவளது கேள்விகளுக்கு பதில் அளிக்க யாருமில்லாத போது பனிபோர்த்திய மலை நகரத்தின் தனிமையே அவளுக்குத் துணையாக நிற்கிறது.

அவளைச் சுற்றியுள்ள ஆண்களின் உலகமும் அதேயளவு புதிர் நிறைந்ததாய் உள்ளது. தம்பி, கோடைகாலத்தில் மட்டுமே வீட்டுக்கு வரும் அப்பா, சிம்லாவில் உள்ள சித்தப்பா, புல்லாக்குக்காரியின் பையன் என்று எல்லோருமே அவளது ரெண்டுங்கெட்டான் மனநிலைக்குள் ஏராளமான மர்மங்களையே விட்டுச் செல்கிறார்கள்.

பதின்பருவப் பெண்ணின் மனக்குழப்பங் களைச் சொன்ன வகையில் இந்த நாவல் தமிழுக்கு மட்டுமல்ல, இந்திய அளவிலும் மிகவும் புதிது.

கொல்லப்படுவதில்லை

இந்தியப் பெண்களின் துயரத்தையும் வாழ்க்கைப் பாடுகளையும் எழுதும்போது அவர்களுடைய காதலைக் குறித்தும் எழுதுவது முக்கியமல்லவா. ஆனால், இந்திய மொழிகளில் அவ்வாறான காதல் கதைகள் மிகவும் குறைவே. இந்த வகையில் ‘கொல்லப்படுவதில்லை’ என்ற வங்க நாவலைக் குறிப்பிடலாம். தாகூரின் மாணவியான மைத்ரேயி தேவி வங்க மொழியில் எழுதிய நாவல் இது. முழுக்க முழுக்க இது காதல் நாவலா என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல முடியும். உண்மையில், பதின்பருவத்தில் ஈர்க்கப்பட்ட ஒரு அயல்நாட்டவனை, மணக்க முடியாது போய், பிறகு அவன் எழுதிய ஒரு நாவலுக்கு பதிலாக எழுதப்பட்டது இந்த நாவல்.

ரொமேனியாவைச் சேர்ந்த மிர்சா அலியதே எனும் அறிஞர் சமஸ்கிருதமும், இந்தியத் தத்துவத்தையும் கற்றுக் கொள்வற்காக 1928ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகிறார். இந்திய தத்துவவியல் அறிஞரான சுரேந்திரநாத் தாஸ் குப்தாவிடம் மாணவராகச் சேர்கிறார். தாஸ் குப்தா மாணவரான மிர்சாவை தன் வீட்டிலேயே தங்க வைத்துக்கொள்கிறார். சுரேந்திரநாத்தின் மனைவியும் அவரைத் தன் மகன் போல அன்புகாட்டுகிறார். ஆனால், மிர்சாவுக்கும் சுரேந்திரநாத்தின் மகளான மைத்ரேயி தேவிக்கும் இடையில் காதல் மலர்கிறது. சில நாட்களிலேயே இது சுரேந்திரநாத்துக்கு தெரிய வர, மிர்சாவை வீட்டிலிருந்து வெளியேற்றிவிடுகிறார். வெளியே துரத்தப்பட்ட மிர்சா காதல் வேதனையுடன் இமயமலைப் பகுதியில் சிலகாலம் சுற்றித் திரிகிறார். பிறகு ரொமேனியாவுக்குத் திரும்புகிறார். நிறைய நாவல்களை எழுதுகிறார். அவருக்கும் மைத்ரேயிக்கும் இருந்த காதலை மையமாக வைத்து ‘வங்காள இரவுகள்’ என்ற பெயரில்ஒ ரு நாவலை எழுதுகிறார். இப்படி ஒரு நாவல் வெளியானதே மைத்ரேயிக்கோ அவரது குடும்பத்துக்கோ தெரியாது.

மைத்ரேயி தேவி ரவீந்திர நாத் தாகூரின் மாணவி. கவிஞரும்கூட. மிர்சாவுடன் பழகிய நாட்களில் தன் காதலின் ஆழத்தை உணர்ந்திராத அவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு தெரிந்துகொள்கிறார். ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. திருமணம் நடக்கிறது. ஒரு மலை நகரத்தில் கணவருடன் வசதியான வாழ்க்கை. குழந்தைகள் பிறக்கின்றன. இழந்த காதலின் நினைவு அவ்வப்போது அவளுள் எழுகிறது. வாழ்க்கை உருண்டோடுகிறது.

‘வங்காள இரவுகள்’ நாவலைப் பற்றியும் அதைத் தனக்கு சமர்ப்பணம் செய்திருப்பதைப் பற்றியும் மைத்ரேயி தேவி அறிகிறாள். ஆனால், அந்த நாவலைப் பெறவோ வாசிக்கவோ இயலாது. அது ரொமானிய மொழியில் எழுதப்பட்டது. 1972இல் இந்தியாவுக்கு வந்த மிர்சாவின் நண்பர் ஒருவரின் மூலமாக நாவலைப் பற்றி மேலும் தெரிய வருகிறது. நாவலில் இருவருக்கும் இடையில் உடலுறவு நடந்ததாக எழுதியிருப்பதைத் தெரிந்து ஆத்திரம் அடைகிறாள். நடக்காத ஒன்றை எழுதி தன்னை அவமானப்படுத்திவிட்டதாக வருந்துகிறாள். நண்பர் ஒருவரின் மூலம் பிரெஞ்சு பிரதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வாசிக்கும்போது மேலும் சினம் கொள்கிறாள். இதனால் மனம் உடைகிறாள். தன்னைப் பற்றிக் கண்டுகொள்ளாமல், எழுதிய கடிதங்களுக்கு பதில் அளிக்காமல் காணாமல் போனவனைப் பற்றிய புறக் கோபத்தினூடே காலம் கடந்தோடினாலும் அவன் மீதான கால் ஆறாது பெருகுகிறது. தொடர்ந்து அவனைப் பற்றிய எண்ணங்கள், தேடல்கள். சந்தித்துப் பேசும் ஆவல் எழுகிறது. அவனை நேரில் சந்தித்து தன்னைப் பற்றி எப்படி அவ்வாறு எழுதலாம் என்று கேட்கவே நினைக்கிறாள். ஆனால், ஆழ்ந்து யோசிக்கும்போது எழுதியதில் ஏதும் தவறில்லை, காதலே முக்கியமானது என்பதை உணர்கிறாள். தன் கணவனிடம் சொல்கிறாள். அப்போது மைத்ரேயிக்கு வயது 60.

அப்போது சிகாகோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார் மிர்சா. அவரை அங்கு சந்திப்பதற்காகவே தாகூரைப் பற்றி உரையாற்றும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துகொள்கிறார் மைத்ரேயி. பல்கலைக் கழகத்தில் மிர்சாவின் அறைக்குச் செல்கிறார். முன்பே அவருடைய வருகையை அறிந்த மிர்சா தடுமாறுகிறார். தலை குனிந்தபடியே அமர்ந்திருக்கிறார். முகம் பார்க்க மறுக்கிறார். ஒருமுறை நிமிர்ந்துப் பார்க்கும்போது அந்தக் கண்களில் ஒளியே இல்லை என்பதை அறிகிறார் மைத்ரேயி. காலத்தில் மறைந்துபோன இளம் காதலின் தருணங்களை முதுமையில் போர்த்த முடியாதபோதும் மிர்சாவின் ஒளியிழந்த கண்கள் மைத்ரேயியை வெளியேறச் செய்கின்றன.

இந்தியா திரும்பிய பிறகு மைத்ரேயி 16வயதில் மிர்சாவின் மீது ஏற்பட்ட காதலில் தொடங்கி 61 வயதில் அந்தக் காதலை மீண்டும் உணர்ந்து அவரைச் சந்திக்க சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தது வரையிலும் தனது சுயசரிதையாக எழுதுகிறார். வங்க மொழியில் எழுதிய பின் அவரே அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கிறார். 1944ஆம் ஆண்டில் சிகாகோ பல்கலைக்கழகம் மிர்சா எழுதிய ‘வங்காள இரவுகள்’ நாவலையும், மைத்ரேயி தேவி எழுதிய ‘கொல்லப்படுவதில்லை’ நாவலையும் ஒரே சமயத்தில் வெளியிட்டது.

ஒரே காதல் கதையின் இரண்டு பக்கங்களாக இந்த இரண்டு நாவல்களும் அமைந்துள்ளன. மிர்சா எழுதிய நாவலுக்கு பதிலாக 41 ஆண்டுகள் கழித்து மைத்ரேயி தன் தரப்பை எழுதியது உலக இலக்கியத்தில் வியக்கத்தக்க ஒரு நிகழ்வு.

‘கொல்லப்படும் உடலில், இது கொல்லப்படுவதில்லை’ என்று ஆத்மாவைக் குறித்து பகவத் கீதையில் சொல்லப்பட்டிருப்பதையே இந்த நாவலின் தலைப்பாக வைத்திருக்கிறார் மைத்ரேயி.

உயர்ந்த காதல் அனுபவம் அழிவதுமில்லை, கொல்லப்படுவதுமில்லை என்பதே இந்த நாவலின் சாரம்.

இந்தியக் காவியங்கள்

இவ்வாறான நவீன நாவல்கள் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்டிருப்பதைப் பற்றி யோசிக்கும் அதே நேரத்தில் இன்னொரு முக்கியமான அம்சம் நினைவுக்கு வருகிறது.

நமது மாபெரும் காவியங்களான மகாபாரதமும் இராமாயணமும்கூட பெண்களை மையமாகக் கொண்ட புனைவுகள்தான்.

ஒருவகையில் நவீன இலக்கியத்துக்கான ஒரு வரைபடத்தை blue print இவ்விரு காவியங்களும் வடித்து வைத்துவிட்டனவோ என்றும் யோசிக்கலாம்.

திரௌபதியின் துயரமும் சாபமும்தான் மகாபாரதம். ஒரு பெண்ணுக்கு இழைக்கும் அநீதியின் காரணமாகத்தான் பாரதப் போரே மூள்கிறது. திரௌபதியின் கதையாக மட்டுமல்லாமல், குந்தியின் கதையாகவும், காந்தாரியின் கதையாகவும் வாசிக்க முடியும்.

இராமாயணத்தின் ஆதாரமான முடிச்சுகளின் காரணகர்த்தாக்கள் பெண்கள். கூனியின் சபதம், கைகேயியின் வரம், சீதையின் மனவுறுதி என்ற கோணத்தில் இராமாயணம் கொள்ளும் ஆழங்கள் வியப்பானவை. இலக்குவனின் மனைவி ஊர்மிளையின் கோணத்தில் மொத்தக் கதையையும் அணுகும்போது எழுகிற கேள்விகள் இன்னும் வலுவானவை.

இவ்விரு காப்பியங்களும் பெண் கதாபாத்திரங்களின் வழியாக உருவாக்கி வைத்திருக்கும் ஆதாரமான கேள்விகளையே இன்றைய நவீன நாவல்களும் கதைகளும் இன்னும் புதிய வீச்சுடன் எழுப்புகின்றன. அதற்கான தீர்வுகளை அணுகுகின்றன. 

காலங்கள் கடந்தும் அன்றாட வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்வாக்கு செலுத்தும் இந்தக் காவியங்களை உள்ளவாறே ஏற்றுக்கொள்வதும் அவற்றை வழிபாட்டுக்குரியதாகவும் மதிக்கும் மக்கள் கூட்டத்துக்கு நடுவே, இந்த இரு காவியங்களையும் புனைவாக மட்டுமே அணுகி அவற்றை மறுபரிசீலனைக்கு உள்ளாக்கும் புனைவாசிரியர்கள் இந்தியாவில் பல மொழிகளிலும் இருந்து வருகிறார்கள். காவிய நாயகர்களை கேள்வி கேட்கிறார்கள். அவை உருவாக்கித் தந்திருக்கும் மதிப்பீடுகளை விழுமியங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறார்கள். மரபான காவியங்களோடு சேர்த்து இத்தகைய மறு ஆக்கங்களையும் அணுகும்போது வேறு பரிணாமங்கள் சாத்தியமாகின்றன.

இந்த வகையில் உடனடி உதாரணமாகச் சொல்லத் தோன்றுவது சுப்ரமணிய பாரதியார் எழுதியுள்ள ‘பாஞ்சாலி சபதம்’. குறிப்பிட்ட ஒரு நிகழ்வை மட்டுமே எடுத்துக் கொண்டு தனக்கேயுரிய கூரிய அணுகுமுறையோடும் கவிதை வீச்சுடனும் அமைந்துள்ள இந்தப் பகுதி மகாபாரத பாத்திரங்கள் அனைவரையுமே கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

மலையாளத்தில் இரண்டு நாவல்களைக் குறிப்பிடலாம். பி.கெ.பாலகிருஷ்ணன் எழுதி, ஆ.மாதவன் தமிழில் மொழிபெயர்த்த ‘இனி நான் உறங்கட்டும்’ என்பது ஒன்று. சுருங்கச் சொன்னால் இது கர்ணனின் கதை. அவனது பிறப்பு முதல் இறப்பு வரையிலான முக்கியமான தருணங்களைக் கொண்டது. திரௌபதிக்கும் அவனுக்கும் இடையிலான உறவைப் பற்றியும் இந்த நாவல் சுட்டிக் காட்டுகிறது. அந்த வகையில் திரௌபதியின் கதாபாத்திரத்தையும் வேறு கோணத்தில் நமக்குக் காட்டுகிறது இந்த நாவல்.

இரண்டாவது நாவல் எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘இரண்டாம் இடம்’. குறிஞ்சிவேலனின் மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது. மகாபாரதத்தை பீமனின் கோணத்தில் சித்தரிக்கிறது இந்த நாவல். மகாபாரத கதாபாத்திரங்களை எளிய, சாதாரண மனிதர்களாக்கி அவர்களின் அகவுலகை நெருக்கமாக அணுகியிருக்கும் வகையில் இந்த நாவல் மிக முக்கியமானது. பாண்டவர்களில் பலசாலியாக இருந்தபோதும் ஏன் தனக்கு எப்போதும் இரண்டாம் இடமே கிடைத்தது என்று பீமன் யோசிப்பதுதான் நாவலின் மையம்.

மகாபாரத மறுஉருவாக்கத்தில் இன்னொரு முக்கியமான நாவல் கன்னடத்தில் எஸ்.எல்.பைரப்பா எழுதி, தமிழில் பாவண்ணன் மொழிபெயர்த்த ‘பருவம்’ நாவல். மகாபாரதக் கதை மொத்தத்தையும் அன்றாட மனிதர்களின் வாழ்வாகச் சித்தரித்திருக்கிறது. பாண்டவர்களும் கௌரவர்களும் மண்ணில் நடக்கிறார்கள். எளிய மனிதர்களாக, அவர்களுக்கேயுரிய பலவீனங்களுடன் நம்முன் உலவுகிறார்கள். மாயத் தருணங்களோ சித்து விளையாட்டுக்களோ இல்லாமல் எல்லா நிகழ்வுகளும் எளிய மனிதர்களின் அன்றாட சம்பவங்களாகவே காட்டப்படுகின்றன.

ஜெயமோகனின் பெருநாவலான ‘வெண்முரசு’ மகாபாரதத்தை விரிவான கோணத்தில் அணுகும் ஒன்று. இவற்றைத் தவிர காண்டேகரின்  யயாதி, இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா, பூமணியின் ‘கொம்மை’, தேவகாந்தனின் ‘கதாகாலம்’ ஆகிய சில நாவல்களையும் இந்த வகையில் குறிப்பிடலாம்.

குஜராத், ராஜஸ்தான் பகுதிளில் வாழ்ந்த பீலர் எனும் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கிய வடிவமாக ‘பீலர்களின் பாரதம்’ உள்ளது. பகவான்தாஸ் படேல் தொகுத்தளித்த இந்த நூலை தமிழில் சரஸ்வதி மொழிபெயர்த்திருக்கிறார்.

மகாபாரதம் அளவுக்கே இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட புனைகதைகள் எழுதப்பட்டுள்ளன.

புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற ‘அகலிகை’, ‘சாபவிமோசனம்’ கதைகளை நாம் அறிவோம். இலக்குவனின் மனைவி ஊர்மிளையை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு ‘சாகேத்’ என்ற காவியத்தை மைதிலி சரண் குப்தா எழுதியிருக்கிறார். தெலுங்கில் மொல்ல இராமாயணம் மிகப் பிரபலமானது. ஆத்துக்குரி மொல்லா என்ற 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண் கவிஞர் எழுதிய இந்த இராமாயணம் பல வகைகளில் மூல ராமகதையிலிருந்து வேறுபட்ட ஒன்று. அதேபோல, வங்க மொழியின் முதல் பெண் கவிஞராகக் கருதப்படும் சந்திரபதியும் இராமாயணத்தைத் தன்னுடைய கோணத்தில் காவியமாக இயற்றியுள்ளார்.

  

0

இந்தியாவின் பல்வேறு மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்கள், அனைத்து மொழிகளுக்கும் சென்றடைய வேண்டும், மொழிகளுக்கிடையேயான பரிமாற்றம் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இரண்டு அரசு அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. சாகித்திய அகாதமி, தேசியப் புத்தகக் கழகம்.

சாகித்திய அகாதமி 1954ஆம் தோற்றுவிக்கப்பட்டது. India’s National Akademy of Letters என்று, இந்தியாவின் முதன்மை இலக்கிய நிறுவனம், சொல்லப்படும் இதன் நோக்கம், 24 இந்திய மொழிகளின் இலக்கியத்தை விருதுகள், நூல் பதிப்பு, கண்காட்சிகள், பயிற்சி அரங்குகள், நல்கைகள் போன்ற செயல்பாடுகளின் மூலம் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் ஆகும். 

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மொழியிலும் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த நூல்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சாகித்திய அகாதமி விருது, பாஷா சம்மான் விருது, மொழிபெயர்ப்பு விருது, பாலசாகித்திய புரஷ்கார், யுவ புரஷ்கார் என ஐந்து விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதன் பதிப்புப் பிரிவின் மூலம் ஒவ்வொரு மொழியிலும் நூல்கள் தொடர்ந்து பதிப்பிக்கப்படுகின்றன. மொழிபெயர்க்கப்படுகின்றன. இந்திய இலக்கியத்துக்காக பாடுபட்ட ஆளுமைகளைக் குறித்த ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் எண்ணற்ற நூல்களைப் பதிப்பித்துள்ளது. ‘இந்தியன் லிட்டரேச்சர்’ என்ற ஆங்கில காலாண்டிதழ் வெளிவருகிறது.

தேசிய புத்தகக் கழகம், National Book Trust, 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய அரசின், மனித வளத் துறையின் உயர் கல்விப் பிரிவின் ஒரு பகுதியாக இது செயல்படுகிறது. 55க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் புத்தகங்களை இது பதிப்பிக்கிறது. இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் தரமான இலக்கிய ஆக்கங்களைப் பதிப்பித்து, குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வதே இதன் நோக்கம்.

சரஸ்வதி ராம்நாத் மொழிபெயர்த்த ‘தர்பாரி ராகம்’ புத்தகம் தேவைப்பட்டதால், தேசியப் புத்தகக் கழகத்தின் இணையதளத்தில் தேடியபோது, தமிழ் புத்தகப் பட்டியல் கிடைத்தது. 2025ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பட்டியல். மிகுந்த வியப்புக்குரிய தகவல், தர்பாரி ராகம் நாவலின் விலை ரூ.28 மட்டுமே. அதுபோல, பட்டியலில் புகழ்பெற்ற ‘சிக்கவீர ராஜேந்திரன்’ நாவல் இடம் பெற்றுள்ளது. ஆனால், விசாரித்தபோது அது இருப்பில் இல்லை என்று சொன்னார்கள். வெகு காலமாக பதிப்பில் இல்லாமல் இருந்த குடும்பம் சிதைகிறது நாவல் 2024ஆம் ஆண்டு மீண்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய நூல் வரிசை என்ற அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நூல்கள் மிகவும் முக்கியமானவை. சில புத்தகங்கள் மட்டுமே கிடைக்கின்றன. மற்றவை இருப்பில் இல்லை. ஆனாலும் இந்தப் பட்டியலின் மூலம் இந்த 60 ஆண்டுகளில் தமிழில் நமக்குக் கிடைத்த பிற மொழி இலக்கிய நூல்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

சாகித்திய அகாதமியிலும் சரி, தேசிய புத்தகக் கழகத்திலும் சரி, பல நூல்கள் மறு பதிப்பில் இல்லை. பதிப்பில் வந்திருப்பவை பலவும் சகாய விலையில் கழிவில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

கொள்கை அளவில் இந்த இரண்டு அமைப்புகளும் இந்திய இலக்கியத்துக்கு மிக முக்கியமானவை. இவற்றின் வழியாகவே மொழிகளுக்கு இடையிலான ஆரோக்கியமான பரிமாற்றங்களை செய்ய முடியும். ஆனால், இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் பிற அரசுத் துறைகளைப் போலவே அமைந்திருப்பதன் காரணத்தால் எதிர்பார்க்கும் அளவுக்கு இவற்றின் செயல்பாடுகள் நிறைவுதருபயையாக இல்லை. இங்கு பணியமர்த்தப்படுபவர்கள் இந்த அமைப்பின் ஊழியர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள். இவர்களுக்கும் இவற்றின் நோக்கங்களுக்கும் தொடர்பும் பிணைப்பும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஈடுபாடும் அக்கறையும் கோரும் அமைப்புகள் இவை. ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை என்பதை வெகு துலக்கமாக அனைவரும் பார்க்க முடியும். அவ்வாறன்றி, அமைப்புகளின் நோக்கத்தை நிறைவேற்றும் ஆர்வத்துடனும் அக்கறையுடனுமான நிர்வாகத் துறையை உருவாக்க முடியும்போது இந்திய இலக்கியம் இன்னும் செழுமையடைவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே, இந்த இரு அமைப்புகளையும் உடனடியாக மறுசீரமைப்பது மிகவும் முக்கியமானது.

0

அரசு சார்ந்த இந்த அமைப்புகளைத் தாண்டி தனிப்பட்ட சில முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழிலிருந்து கன்னடத்துக்கும், கன்னடத்திலிருந்து தமிழுக்குமாக நல்ல நூல்களை கே.நல்லதம்பி போன்றவர்கள் தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறார்கள். அதேபோல, தெலுங்கில் ஜில்லேலா பாலாஜி, அக்கினேனி பாஸ்கர் போன்றவர்கள் செயல்படுகிறார்கள். நல்ல ஆங்கில மொழியாக்கங்கள் வெளிவருகின்றன. கல்யாணராமன், பிரியவம்தா, கலைவாணி, சுசித்ரா போன்றவர்களை குறிப்பிடலாம். பெருமாள் முருகனின் படைப்புகள் இந்திய, உலக மொழிகளில் இன்று கிடைக்கின்றன. இதன் காரணமாக உலகின் புகழ்பெற்ற இலக்கிய விருதுகளின் பட்டியல்களில் இந்திய நாவலாசிரியர்களின் பெயர்கள் இடம் பெறத் தொடங்கியுள்ளன. தொடர்ச்சியான, தீவிரமான இத்தகைய செயல்பாடுகளின் வழியாக இந்தியாவின் பல்வேறு மொழிகளில் எழுதப்படும், குறிப்பாக தமிழ் இலக்கிய ஆக்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டு சர்வதேச அளவில் ‘இந்திய இலக்கிய’மாக அடையாளம் காணப்படும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது.

0  

( நெல்லை பொருநை புத்தகத் திருவிழா 2026. 14.02.2026  உரையின் எழுத்து வடிவம் ) 

No comments:

Post a Comment

இந்திய இலக்கியம்

பொதுவாக குறிப்பிட்ட ஒரு நாட்டின் இலக்கியம் என்றால் அது அந்த நாட்டின் மொழியில் எழுதப்பட்டதாக இருக்கும். ரஷ்ய இலக்கியம் என்றால் ரஷ்ய மொழியில...