Saturday, 28 February 2026

வாழ்க்கைச் சரிதங்கள் – முழுமையை நோக்கிய வெளிச்சம்



 

சுயசரிதை அல்லது தன்வரலாறு என்பது குறிப்பிட்ட மனிதரின் வாழ்க்கையை, வரலாற்றைச் சொல்வது மட்டுமன்று. குறிப்பிட்ட அந்த மனிதர் வாழ்ந்த காலகட்டத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் உள்ளடக்கியதுதான். அவருடைய வாழ்க்கையின் வழியாக அந்தக் காலத்தில் நிலவிய சமூக, அரசியல், பொருளாதார நிலைகளை, சிக்கல்களை, சவால்களை, ஏற்ற இறக்கங்களை என அனைத்தையுமே அறிந்துகொள்ள துணைசெய்யும். ஏற்கெனவே சொல்லப்பட்ட, எழுதப்பட்ட முறையான வரலாற்றின் ஊடே இத்தகைய சுயசரிதைகள் புதிய திறப்புகளையும் வெளிச்சங்களையும் பாய்ச்சும். நம் முன் வைக்கப்பட்ட வரலாற்றை இன்னொரு கோணத்திலிருந்து அணுகவும், அதிலுள்ள இடைவெளிகளை நிரப்பிக் கொள்ளவும் முடியும்.

தமிழில் எழுதப்பட்டுள்ள தன்வரலாறுகள் எண்ணிக்கையில் குறைவு. அவ்வாறு எழுதப்பட்டுள்ள தன்வரலாறுகளிலும் பெருமளவு வாசிக்கப்பட்டவை மிகவும் குறைவு. உ.வே.சா வின் ‘என் சரித்திரம்’, நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’, தி,சௌ.ராஜனின் ‘நினைவலைகள்’ ஆகிய சில நூல்களே தொடர்ந்து குறிப்பிடப்படுகின்றன. தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள், சமூக சேவகர்கள், நிர்வாகத் திறன் மிகுந்த ஆளுமைகள் ஆகியோரின் பங்களிப்பை அறிந்துகொள்ளும் வகையிலான முக்கியமான சுயசரிதைகள் அதிக அளவில் எழுதப்படவில்லை. அல்லது எழுதப்பட்ட அத்தகைய சில தன்வரலாறுகளும் போதிய கவனம் பெறவில்லை.

கோவையின் புகழ்பெற்ற அன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் தாமோதரசாமி நாயுடு மிக முக்கியமான ஒரு பிரமுகர், ஆளுமை. உணவகங்களின் சமையல்கூடங்களில் பயன்படுத்தப்படும் மாவரைக்கும் இயந்திரம் உள்ளிட்ட நவீன சமையல் சாதனங்களை வடிவமைத்தவர் என்பதால் தமிழக அளவில் உணவக உரிமையாளர்களால் பெரிதும் போற்றப்படுபவர். சில ஆண்டுகளுக்கு முன்பு மரபின் மைந்தன் முத்தையா அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதினார். நூலின் தலைப்பு ‘சுவைபட வாழ்தல்’. அதேபோல, கோவையின் புகழ்பெற்ற மருத்துவமனையான ‘கங்கா மருத்துவமனை’யின் குடும்பத்தின் வரலாற்றையும், அதன் நிறுவனர்களில் ஒருவரான டாக்டர்.கனகவல்லியின் பார்வையில், முத்தையாவே எழுதினார். பெயர் ‘ஒரு அன்னையின் கனவு’. இந்த இரண்டுமே குறிப்பிடத்தக்க வாழ்க்கை வரலாறுகள்.

அந்த வகையில், ‘முன்சுவடுகள்’ என்ற கட்டுரை நூலில் வாழ்ந்து மறைந்த ஆளுமைகளின் வாழ்க்கைக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு புனைவு நூலுக்குரிய சுவாரஸ்யத்துடன் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் ஜெயமோகன். இந்தக் கட்டுரைகள் அனைத்துமே எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறுகளை ஆதாரமாகக் கொண்டவை. தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.வி.க, பெ.தூரன், கிருஷ்ணன், டி.கே.சண்முகம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எஸ்.எஸ்.கரையாளர் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகளுடன் கேரளத்தைச் சேர்ந்த வெட்டம் மாணி, சி.வி.ராமன் பிள்ளை, வயலார் ராமவர்மா, என்.என்.பிள்ளை ஆகியோரைக் குறித்த கட்டுரைகளும் உள்ளன.

‘பெண்ணின் பெருமை’யை எழுதிய திரு.வி.கல்யாணசுந்தரம் தன் மனைவி கமலாம்பிகையுடனான இல்லற வாழ்வைக் குறித்தும் அவரது மறைவுக்குப் பிறகு மறுமணம் செய்துகொள்ளாமல் அவரது நினைவுடனே தமிழ்த் தொண்டு புரிந்ததைக் குறித்தும் விவரிக்கிறது ‘ஓர் அமரகாதல்’. இதேபோல, ‘மார்த்தாண்ட வர்மா’, ‘தர்ம ராஜா’, ‘ராம ராஜா பகதூர்’ போன்ற நாவல்களை எழுதிய மலையாள நாவலாசிரியர் சி.வி.ராமன் பிள்ளையைக் குறித்து பி.கே.பரமேஸ்வரன் நாயர் எழுதிய நூலில் உள்ள அழகான காதல் கதையை ‘சதுரங்க ஆட்டத்தில்’ என்ற கட்டுரையில் சித்தரித்திருக்கிறார். ஜானகி என்னும் நாயர் தறவாட்டு பெண்ணின் மீது கொண்ட காதல் அவருக்குள் எரிந்துகொண்டிருந்தபோது தனது முதல் நாவலான ‘மார்த்தாண்ட வர்மா’வை எழுதிய சி.வி.ராமன் பிள்ளை, அவளை மணக்க முடியாமல் போன நிலையில் இருபதாண்டு காலம் எதையும் எழுதவே இல்லை. காலவோட்டத்தில் ஒரு நெருக்கடியான சூழலில் அவளை மீண்டும் அடைந்தபின் பெரும் ஆவேசத்துடன் எழுதத் தொடங்கி பிற நாவல்களை எழுதியிருக்கிறார்.

மலையாளக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் வயலார் ராமவர்மாயின் மனைவி பாரதி தம்புராட்டி தன் கணவரைப் பற்றி எழுதிய சிறு நூல் ‘இந்திர தனுஸின் தீர்த்து’. வாழ்நாள் முழுக்க ராமவர்மா, அம்மாவின் கட்டுப்பாட்டில் இருந்ததையும் அதன் விளைவுகளையும் இந்த நூலில் எழுதியிருக்கிறார். மனைவியுடன் பேசக்கூட அம்மாவின் அனுமதியைப் பெறும் நிலையிலிருந்த ராமவர்மா, திரையுலகில் உச்சத்தில் இருந்த காலத்தில், சென்னையில் தங்கியிருந்த ராமவர்மா கடிதங்களையும்கூட அம்மாவுக்குத் தான் எழுத முடிந்திருக்கிறது. தினமும் அம்மாவிடம் தொலைபேசியில் பேசும் அவர் ஒருமுறைகூட மனைவியிடன் பேசியதில்லை. தனிமையில் கிடந்த ராமவர்மா குடிக்கு அடிமையானார். பெண்பித்தராக அலைந்தார். மனைவி பாரதி சமையலறையிலேயே வாழ்ந்து குழந்தைகளை வளர்த்து வாழ்க்கையைக் கடத்தினார். இத்தனைக்குப் பிறகும் தன் வாழ்க்கையை நாசமாக்கிய வயலாரின் அம்மாவின் மீது அவருக்கு எந்த வெறுப்புமில்லை என்றே எழுதுகிறார். கணவரின் வாழ்வும், தனது துயர நிலையும் ‘ஈஸ்வரஹிதம்’ என்று சாதாரணமாக தாண்டிச் செல்கிறார் பாரதி.

மலையாள வணிக நாடக மேடையின் பிதாமகர்களில் ஒருவரான என்.என்.பிள்ளை, ‘நாடக தர்ப்பணம்’ என்கிற முக்கியமான பல நூல்களின் ஆசிரியரும்கூட. அவரது சுயசரிதை ‘ஞான்’ (நான்) மிக முக்கியமான வாழ்க்கை வரலாறாகக் கருதப்படுகிறது. சிறுவயதிலேயே மலேயாவுக்கு செல்ல நேரும் என்.என்.பிள்ளை தோட்டங்களில் வேலை பார்த்திருக்கிறார். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் இராணுவத்தின் இணைந்தது, சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்துடன் பணியாற்றியது, சயான் மரண ரயில் பாதையில் பலரும் மரணமடைந்தது, சுபாஷ் சந்திர போஸின் ஆளுமை குறித்த சித்திரம், ஜப்பானின் போர் தந்திரங்கள் என்று பல நுட்பமான தகவல்களை தன் சுயசரிதையில் விவரித்திருக்கிறார். இந்திய தேசிய இராணுவம் கலைக்கப்பட்ட பிறகு கையில் ஒரு பைசாகூட இல்லாமல் இந்தியாவுக்குத் திரும்புகிறார். மலேயாவில் இந்திய தேசிய இராணுவத்துக்காக நாடகங்களை நடத்திய அனுபவத்தைக்கொண்டு ‘விஸ்வ கேரள காலசமிதி’ நாடக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தலானார். சில காலத்திலேயே கேரளத்தின் முதன்மை நாடக ஆசிரியராக புகழடைந்தார். ‘சுயசரிதைகளை உண்மையாகவே எழுதினால், அந்த நூலைத் தொட்டால் நம் கை சுடும் என்பார்கள். அப்படிப்பட்ட நூல்களில் ஒன்று இது’ என்று ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறார்.

என்.கே.கிருஷ்ணனின் ‘நம்பிக்கை ஒளி – ஒரு கம்யூனிஸ்டின் வாழ்க்கை வரலாற்று நினைவுகள்’ என்ற நூல் கிருஷ்ணனைப் பற்றி மட்டுமல்லாது, அவரது மனைவி பார்வதி கிருஷ்ணன், டாக்டர் சுப்பராயன் ஆகியோரைப் பற்றியும் அழுத்தமான சித்திரங்களைத் தருகிறது. ( சென்ற சில மாதங்களாக, பார்வதி கிருஷ்ணன் குறித்து நூல் எதுவும் எழுதப்பட்டிருக்கிறதா என்று நண்பர்களை விசாரித்துக் கொண்டிருந்த நிலையில், இந்தக் கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. )  

டி.ஜே.எஸ்.ஜார்ஜ் எழுதிய எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்த கட்டுரை ‘ஓர் அக்கினிப் பிரவேசம்’. பிறப்பு அவர் மீது ஒட்டவைத்த இழிவை இசையைக் கொண்டு எம்.எஸ்.சுப்புலட்சுமி அழித்து விடுதலை அடைந்ததை இக் கட்டுரை விவரிக்கிறது. எம்.எஸ்ஸின் வாழ்க்கையை இந்த நூல் மூன்று தளங்களில் அணுகியுள்ளது. அவரது இளமைக்காலம் ஒன்று. அடுத்தது திரைப்படம், மேடைப்பாடல்களின் மூலம் புகழ்பெற்று குடும்ப வாழ்க்கையில் அமைந்தது. மூன்றாவது, கணவர் சதாசிவம் அவரை ஒரு கலாச்சாரச் சின்னமாக மாற்றிய காலகட்டம். இந்த நூலின் பின்னிணைப்பாக தரப்பட்டிருக்கும், ஜி.என்.பிக்கு எம்.எஸ் எழுதிய கடிதங்கள், அவரது கலையுள்ளத்தின் உணர்ச்சிகரத்தை நெருங்கி அறிய உதவுவதாக ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

எம்.ஓ.மத்தாய் நேருவைப் பற்றிய பிரபலமான நூலான ‘நேரு யுக நினைவுகள்’ பற்றிய கட்டுரை மிக விரிவானது. நேருவின் ஆளுமையை எல்லாக் கோணங்களிலிருந்து அணுகிய இந்த நூல், தேசிய தலைவர் என்கிற ஆளுமையின் இன்னொரு முகத்தைக் காட்டுகிறது. இந்த நூலில் பெண்களுடனான நேருவின் உறவைக் குறித்தும் எழுதியிருக்கிறார். அந்தப் பெண்களில் ஒருவரான சிரத்தா மாதாவைக் குறித்து ஒரு அத்தியாயத்தை மத்தாய் எழுதியுள்ளார். ‘அவள்’ என்ற பெயரில் உள்ள அந்த அத்தியாயம் இந்தியப் பதிப்புகளில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை என்று ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு என் புத்தக அலமாரியை ஒழுங்குபடுத்தும்போது, இனிமேல் வாசிக்கத் தேவையில்லை என்று நினைக்கும் புத்தகங்கள் சிலவற்றை தேவையான நண்பர்களுக்குக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் தனியாக எடுத்து வைத்தேன். அவற்றில் ஒன்று மத்தாயின் இந்த புத்தகமும். இந்தக் கட்டுரையை வாசித்தவுடனே பெட்டியிலிருந்து அந்த நூலை அவசரமாக எடுத்துப் புரட்டினேன். 1979ஆம் ஆண்டு ‘பெல்’ புக்ஸ் வெளியிட்டிருந்த இந்த புத்தகத்தின் விலை ஒன்பது ரூபாய் ஐம்பது பைசா. நூலின் உள்ளடக்கப் பக்கத்தில், அத்தியாயம் 29 ‘அவள்’ என்று குறிப்பிடப்பட்டு, பக்கம் எண் 153 என்றிருந்தவுடன் ஆவலுடன் பக்கங்களைப் புரட்டினேன். 152ஆம் பக்கத்துக்குப் பிறகு 157ஆம் பக்கம்தான் இருந்தது. கட்டுரையிருந்த பக்கங்கள் மொத்தமும் வெட்டி நீக்கப்பட்டிருந்தன.

‘விலக்கப்பட்டவர்கள்’ என்ற கடைசி கட்டுரை, ‘தாத்ரிக் குட்டியின் ஸ்மார்த்த விசாரணை’யைக் குறித்த ஒன்று. கேரளத்தில் நம்பூதிரிகளிடையே நிலவிய ஒரு சாதிச் சடங்கு எவ்வாறு உருவானது, அதன் பின்னணி என்ன, சுசீந்திரம் கோயிலில் நடந்த‘கைமுக்கு’ உள்ளிட்டவற்றை விரிவாக அலசுகிறது. தாத்ரிக்குட்டியின் கதையைக் கொண்டு வெளியான திரைப்படங்களைக் குறித்தும் கூறுகிறது. இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதி மிக முக்கியமானது. இவ்வாறான ஒரு ஸ்மார்த்த விசாரணையில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு சாதிபிரஷ்டம் செய்யப்பட்டு நாடுகடத்தப்படுகிறார் மேலங்கத்து கோபால மேனன். இலங்கைக்குச் சென்ற அவர் தோட்டத் தொழிலாளியாக காலத்தைக் கடத்தினார். சத்யவதி என்ற பெண்ணை மணந்தார். அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். நோயுற்று கோபால மேனன் இறந்த பிறகு அவருடைய மனைவி இரண்டு குழந்தைகளுடன் இந்தியாவுக்குத் திரும்பி வந்தாள். பிள்ளைகளை நாடகக் கம்பெனியில் சேர்த்தாள். இருவரும் நாடக நடிகர்களாகவும் பிறகு திரைப்பட நடிகர்களாகவும் வளர்ந்தனர். பிறகு நடந்த அனைத்தையும் நாடறியும், நாமறிவோம். தாத்திரிக்குட்டியின் வாரிசுகளில் ஒருவரான ஒரு பெண்ணும் திரை நட்சத்திரமாக மிளர்ந்தார் என்றும், அது யார் என்றும் கட்டுரை உறுதிப்படுத்தப்படாத தகவலாகக் குறிப்பிடுகிறது.

வாழ்க்கை சரிதங்களின் வழியாக பொதுவெளியில் அறிந்த வாழ்வின் உள்ளடுக்குகளில் உள்ள பிற அம்சங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது. அவ்வாறான அறிதல் வரலாற்றில் ஏற்கெனவே கட்டப்பட்ட பிம்பங்களின் மீது புதிய வெளிச்சங்களைப் பாய்ச்ச உதவுகிறது. ரகசியங்கள் இல்லாத மனிதன் எவருமில்லை. ஆனால், அந்த ரகசியங்களே அந்த மனிதனின் பிம்பத்தை முழுமையுறச் செய்கின்றன. வாழ்க்கைச் சரிதங்கள் முழுமையாக அல்லாவிடினும், வெளிப்படுத்தப்படாத அத்தகைய ரகசியங்களைத் ஓரளவேனும் தொட்டுக் காட்டும்போது அவை சில தெளிவுகளை உடைய உதவுகின்றன.

0

முன்சுவடுகள் – ஜெயமோகன்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

நவம்பர் 2023 விலை ரூ.240./

  

No comments:

Post a Comment

வாழ்க்கைச் சரிதங்கள் – முழுமையை நோக்கிய வெளிச்சம்

  சுயசரிதை அல்லது தன்வரலாறு என்பது குறிப்பிட்ட மனிதரின் வாழ்க்கையை, வரலாற்றைச் சொல்வது மட்டுமன்று. குறிப்பிட்ட அந்த மனிதர் வாழ்ந்த காலகட...