Monday 11 December 2017

ஊதாநிற விரல்கள் - சிறுகதை

ஊதாநிற விரல்கள்




தாடையை லேசாக அசைத்தபோதே மண்டைக்குள் வலி தெறித்தது. காதோரத்தில் எரிச்சல் காந்தியது. அவன் ஏன் என்னை அப்படி அறைந்தான் என்று எனக்குப் புரியவில்லை. சுதாரித்து விலகுவதற்குள் கன்னத்தில் அவன் கை இறங்கிவிட்டது. அந்த நொடிக்கு முன்னால் வரை அவன் அவ்வாறு அடிப்பான் என்று நினைக்கவில்லை. ஆனால் அடித்த கணத்தில் என் உடல் மொத்தமும் கிடுகிடுத்தது. அடுத்தடுத்து இனி இப்படித்தான் நடக்கும் என்று உதறலெடுத்தது. ஒரே அறைதான். அதன்பின் அவன் அங்கே நிற்கவில்லை. உதட்டோரத்தில் ரத்தம் கொப்புளித்திருந்ததை உணர்ந்தேன். வலியுடன் எரிந்தது. நாக்கால் தொட்டபோது புளிப்புச் சுவை. கடகடவென்று கண்ணீர் உருண்டு முன்னங்கையில் சிதறியது. போலிஸ் அடி. சில மணி நேரங்களுக்கு முன்பு வரையிலும் போலிஸ் அடி வாங்கும் யோகம் எனக்கு இருக்கிறது என்று யாராவது சொன்னால் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் பயந்திருப்பேன். எனக்கெதற்கு வம்பு என்று ஒதுங்கி நகர்ந்திருப்பேன். ஆனால் இப்போது அடி விழுந்துவிட்டது. இது முதல் அடிதானா? மேலும் அடிப்பார்களா? அடிதாங்கும் உடம்பா இது? பயமாய் இருந்தது. அடிவயிற்றில் மூத்திரம் முட்டியது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தின் புதிய கட்டடத்தின் பளபளப்பான வராந்தாவில் நின்றிருந்தபோதுதான் அது நடந்தது. வடக்குப் பகுதி வீட்டுவரி ஆய்வாளருக்காக காத்திருந்தேன். மதிய உணவுக்குப் பிறகான மந்தமான பகற்பொழுது. மண்டையைப் பிளக்கும் வெயில். மின்விசிறிகள் அசுரவேகத்தில் சுற்றிக் கொண்டிருந்த அலுவலக அறையில் இன்னும் யாரும் வந்திருக்கவில்லை. என்னைப் போன்றே பலரும் வெளியே காத்திருந்தார்கள். ஆய்வாளரின் உதவியாளன் சின்னு செல்போனில் பேசியபடியே உள்ளே நுழைந்ததைப் பார்த்தேன். ஆய்வாளர் வருவாரா என அவனிடம் கேட்கலாமா என்று நினைத்த அந்த நொடியில்தான் அவசரமாய் வெளியே பாய்ந்தான். ஏற்கெனவே அறிமுகமானவன். முகத்தைப் பார்த்தால் தெரிந்துகொள்வான் என்று தயங்கியபடியே சிரித்தேன்.
என் சட்டைப் பாக்கெட்டுக்குள் பணத்தைத் திணித்துவிட்டு “இதா வந்தர்றேன்னா…” என்று கூட்டத்துக்குள் நுழைந்து மறைந்தான் சின்னு. என்ன இது என்று யோசித்தவாறே பையிலிருந்து பணத்தை எடுத்த மறுநொடியில் யாரோ ஒருவன் என் வலதுகையைப் பற்றினான். அதுவரையிலும் அவன் என் அருகில்தான் நின்றிருந்தானா? என்னால் உறுதியாய் சொல்ல முடியவில்லை. கையை அசைக்கமுடியாத முரட்டுப் பிடி. அதற்காகவே காத்திருந்தவன்போல கையில் காமிராவுடன் என் எதிரில் வந்து நின்றான் இன்னொருவன். பிளாஷ் வெளிச்சம் பளிச் பளிச்சென மின்ன புகைப்படங்கள் எடுத்தான். மந்தமாய் சோம்பிக் கிடந்த வராந்தா பரபரப்படைந்தது. மளமளவென ஆட்கள் சூழ்ந்தனர். எங்கிருந்தார்கள் இத்தனை பேர்? செல்போன்களில் படமெடுக்கும் ஆவலுடன் நெருக்கியடித்தனர். “வெலகுங்க… வெலகுங்க…” என்று கூட்டத்தை விலக்கி என்னை அறைக்குள் அழைத்துச் சென்றனர் இருவர்.
அப்போதும் என்ன நடக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. அவர்களிடம் கேட்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் என்னால் பேசமுடியவில்லை.
அறைக்குள் ஒரு ஸ்டூலின் மீது உட்காரச் செய்தார்கள். காமிராவுடன் அவன் தயாராய் நின்றான். தண்ணீர் நிறைந்த கண்ணாடி டம்ளரில் விரல்களை நனைக்கச் சொன்னபோது காரணமின்றி கண்ணீர் பெருகிற்று. விரல் பட்டதும் தண்ணீர் ஊதாநிறமானதை நான் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன். அவை என் விரல்கள்தானா? தண்ணீர் எப்படி நிறம் மாறிற்று? எதுவும் எனக்குப் புரியவில்லை. சற்று நேரமாக என்னைச் சுற்றி நடப்பவை அனைத்துமே அப்படித்தான். எல்லாமே என்னை மீறி நிகழ்ந்தன. என் உடல் நடுங்கியபடியே இருந்தது. யாரிடமாவது எதையாவது சொல்ல முற்பட்டு உதடுகள் பிதற்றின. யாரும் கண்டுகொள்ளவுமில்லை. என்னிடம் யாரும் எதுவும் கேட்கவுமில்லை.
சின்னுவைத் துரத்திக்கொண்டு ஓடியவர்கள் திரும்பி வந்தனர். வேர்வையில் நனைந்த உடையுடன் மூச்சுவாங்க ஆத்திரத்துடன் உள்ளே வந்தவன் என்னை முறைத்துப் பார்த்தான். உதட்டிலிருந்து மோசமான கெட்ட வார்த்தை எச்சிலுடன் தெறித்தது. அவனைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பளாரென்று அறைந்தான். சின்னு அவன் கையில் சிக்காத ஆத்திரம். என்னால் தலைநிமிர்த்த முடியவில்லை. அவமானம். பயம். என்னவென்று தெரியாத குழப்பம். முதுகில் கைவைத்து என்னை உசுப்பி எழச்செய்தான். மறுபடியும் அடிக்கிறானா? உடல் தன்னால் வளைந்து பதுங்கியது. நடுங்கும் கால்களுடன் அடியெடுத்து வைத்தேன். பாதங்கள் காற்றில் அலைந்து தடுமாறின. உதட்டிலும் கன்னத்திலும் பொங்கியது வலி. விண்ணென்று தலை மொத்தம் கனத்தது.
வெளியில் வந்தபோது மஞ்சள் வெயில் முகத்தில் அறைந்தது. தாகம். உதடுகள் வறண்டு தவித்தன. காரில் ஏறியதும் வலப்பக்கம் ஒருவனும் இடப்பக்கம் மற்றவனுமாய் என்னை நெருக்கி அமர்ந்தனர். என்னை அறைந்தவன் யார் என்று எனக்குத் தெரியவில்லை. தண்ணீர் கேட்கலாமா என்று முகம் பார்த்தபின் தலைகுனிந்தேன். கூடியிருந்தவர்கள் கண்கள் மொத்தமும் என்னை மொய்த்திருப்பதை உணரமுடிந்தது. எங்கே அழைத்துச் செல்கிறார்கள்? யாரிடமாவது கேட்கலாம் என்று தலைதிருப்பியபோது வாகன வரிசையில் என் வண்டியைக் கண்டேன். “வண்டி நிக்குது” என் குரல் மிக பலவீனமாய் ஒலித்தது. காதில் விழாததுபோல சாலையில் நிலைகுத்திய பார்வையுடன் இருவரும் வீற்றிருக்க நான் திரும்பிப் பார்த்தேன். கூட்டம் கலைந்து நகர்ந்தது.
கார் புஷ்பா தியேட்டரை நெருங்கியபோதுதான் என் சட்டைப் பையிலிருந்த செல்போன் ஒலித்தது. இத்தனை நேரமும் நான் ஏன் இதை கவனிக்கவில்லை? தங்கராஜை அழைத்து தகவல் சொல்லியிருக்கலாம். என்னவென்று சொல்வது? இதற்குள் வலதில் இருந்தவன் என் சட்டைப்பையிலிருந்து செல்போனை வெளியில் எடுத்துப் பார்த்தான். தங்கராஜ்தான் அழைக்கிறான். ஓட்டுனர் அருகே தோரணையாய் நறுக்கு மீசையுடன் இருந்தவர் அதிகாரியாய் இருக்கவேண்டும். “இந்தாளுதா?” என்று கேட்க வெறுமனே தலையாட்டினான். “அணைச்சு பையில போடு” என்றதும் இவன் அவசரமாய் தொலைபேசியை அணைத்து தன் பையில் போட்டான். “என் பையன்தான்… என்னன்னு கேட்டுக்கறேன்” என்று கேட்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை.
அவினாசி சாலையில் கார் விரைந்தபோது ஊரைவிட்டு வெளியே போகிறோம் என்பது உறுதியானது. அத்தனை நேரமும் பீதியில் அல்லாடிக் கிடந்த மனம் மேலும் தடதடத்தது. இவர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினர்தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் என்னை எதற்கு அழைத்துச் செல்கிறார்கள். பணத்தை என் பையில் திணித்த சின்னு ஓடிவிட்டான். அவனைத்தானே பிடிக்கவேண்டும். அதற்காகத்தானே வந்திருக்கிறார்கள். அவனை விட்டுவிட்டு என்னை ஏன் அழைத்துச் செல்கிறார்கள். எங்கே அழைத்துச் செல்கிறார்கள்? என்ன செய்வார்கள்? திரைப்படங்களில் பார்த்த விசாரணை காட்சிகள் அடுத்தடுத்து மனதில் விரிய அடிவயிறு முட்டியது. யாராவது நான் சொல்வதை காதுகொடுத்து கேட்டால் பரவாயில்லை. கூடவே நான் சொல்வதை நம்பவேண்டுமே என்ற சந்தேகமும் எழுந்தது. வேறென்ன வழி?
கண்களை மூடிக்கொண்டேன். இதுமாதிரி இக்கட்டான தருணங்களில் செந்திலாண்டவனை நினைத்து பிரார்த்திக்கவேண்டும் என்று சரோ சொல்வாளே! அப்படிச் செய்யலாமா? அவள்தான் இன்னும் நான் வீடு திரும்பவில்லை என்று கவலைப்பட்டிருப்பாள். வாசல் திண்ணையில் அமர்ந்து பாதையில் ஒரு கண்ணும் பட்டுநூலில் ஒரு கண்ணுமாய் நூல் திருத்திக் கொண்டிருப்பாள். சாயங்கால வெயில் காரின் கண்ணாடியில் சுடர்ந்து முகத்தில் படிகிறது. எத்தனை நேரம் விசாரிப்பார்கள்? விசாரணை முடிந்தபின் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்களா? இப்போது காரில் அழைத்துப் போகிறார்கள். அநேகமாய் கோயமுத்தூருக்குத்தான். திரும்ப இப்படியே அழைத்துவருவார்களா? வேண்டாம். ஆளைவிட்டால் போதும். பஸ் பிடித்து ஓடிவந்துவிடலாம். வண்டி முனிசிபல் அலுவலகத்தில் கிடக்கிறது. அதே இடத்தில் நிற்குமா? காலையில் போய் எடுத்துக் கொள்ள முடியுமா? போனில் பேச அனுமதித்தால் தங்கராஜிடம் சொல்லி எடுத்துவரச் சொல்லிவிடலாம். அப்படியே பேச அனுமதித்தாலும் இப்போது எங்கே யாருடன் இருக்கிறேன் என்று என்ன சொல்ல? எனக்கே உத்தரவாதமாய் தெரியவில்லை. கடவுளே ஏன் இன்றைக்கு இங்கே வந்து இப்படி மாட்டிக்கொண்டேன். சந்தியா வீடு கட்டத் தொடங்கிய நாளிலிருந்தே இப்படித்தான். ஏதாவது ஒரு பிரச்சினை திண்ணையில் வந்து சப்பணங்கால் கட்டி உட்கார்ந்துவிடுகிறது.
கல்யாணத்துக்கு முன்பே அவளுக்கென வாங்கி வைத்த மனைதான். பொம்மநாயக்கன்பாளையத்தில் பாறைக்குழியை அடுத்து அப்போது சலீசாகக் கிடைத்ததென்று வாங்கிப்போட்டது. ஐந்தரை செண்ட் பூமி வெறும் நாற்பதாயிரம் ரூபாய்தான். இப்போது செண்ட் ஐந்து லட்சத்திற்கு கேட்கிறார்கள். வாஸ்து வந்து அமரும் நாள் பார்த்து வீடுகட்ட பாலக்கால் பிடித்தபோதே சிக்கல். மனையை அளக்கும்போதுதான் பக்கத்து மனைக்காரன் ஒன்றரை அடியை சேர்த்து வீடு கட்டியிருப்பது தெரிந்தது. தெற்கத்திக்காரன். போனவருடம்தான் நிலத்தை வாங்கி வீட்டை கட்டியிருக்கிறான். எத்தனை முறை அளந்தாலும் கிழபுறம் ஒன்றரை அடியைக் காணவில்லை. தங்கராஜை அனுப்பி காலனி வெங்கட்ராமனை அழைத்து வரச் சொன்னேன். நல்லவேளையாய் வீட்டில் இருந்தார். வெங்கட்ராமனுக்கு மனை விவகாரங்கள் அத்துபடி. வெற்றிலையை மென்றபடியே பத்திரத்தை வாங்கி நிதானமாகப் பார்த்தார். வேட்டியை மடித்துக்கொண்டு கிழமேலாய் நடந்தார். விலகி நின்று பார்த்தார். வெற்றிலை எச்சிலை துப்பிவிட்டு கிளுவை வேலியை அடுத்த வேப்பமர நிழலில் வந்தமர்ந்தார். “சப்ஜார்டா ஒண்ணரை அடி சேத்துத்தான் கட்டிருக்கான். என்ன பண்ணலாம்? வீட்டுல ஆள் இருக்கானா? பாத்திங்களா?” நான் ஏற்கனவே விசாரித்திருந்தேன். வீட்டு வாசலில் அவரது புல்லட் நின்றிருந்தது. தங்கராஜ் வீட்டுக் கதவைத் தட்டினான். கழுத்தில் புரளும் தடிமனான தங்கச் சங்கிலியுடன் வெளியில் எட்டிப் பார்த்தார். சிவந்த கண்கள். முண்டா பனியன். முடியடர்ந்த திடமேனி. அவரைக் கண்டதும் சட்டென்று எனக்குள் பயம் தொற்றியது.
வெங்கட்ராமன் அருகில் அமர்த்தி விபரங்களை சொன்னார். பொறுமையாகக் கேட்டவர் எழுந்து சென்று பத்திரத்தின் நகலை எடுத்து வந்தார். செக்கு பந்தியில் எந்தக் குழப்பமும் இல்லை. கச்சிதமான அளவுடன் கணக்காய் பொருந்திப் போனது. வீட்டை அளந்து பார்க்கலாமா என்று தயக்கத்துடன் வெங்கட்ராமன் கேட்டபோது அவர் கோபித்துக் கொள்ளவில்லை. “சந்தேகம்னு வந்துட்டா அதைச் சரி பண்ணிட்டாத்தான் ஆச்சு. என்ன இருந்தாலும் அடுத்த வீடு. ஆரம்பத்துலயே பிரச்சினைன்னா சரிப்பட்டு வராதில்ல…” என்றபோது என் பயம் தணிந்தது. ஆளைப் பார்த்து எடைபோட்டுவிட முடியாது. வீட்டை அளந்து பார்த்ததில் கிழக்குப் பக்கம் அந்த ஒன்றரை அடி இடித்தது. அடுத்த மனைக்காரன் கற்களை மாற்றிப் போட்டிருக்கிறான். ஒன்றரை அடிக்காக இனி காம்பவுண்டை நகர்த்த முடியாது என்பதால் வெங்கட்ராமன் சொன்னபடி அதற்கான தொகையை தந்துவிடுவது என்று சுமுகமாய் முடிவானது. அஸ்திவாரம் தோண்டும்போது அடுத்த பிரச்சினை. இரண்டடிக்கு மேலே எந்தப் பக்கமும் கடப்பாரை இறங்கவில்லை. எல்லாப்பக்கமும் பாறை.
தோளைத் தட்டி உலுக்குவதை உணர்ந்து கண் திறந்தேன். கோயமுத்தூருக்கு வந்ததே தெரியாமல் நான் தூங்கியிருக்கிறேன். எப்போது எப்படி கண்ணசந்தேன்? எந்த இடம் இது? மையிருட்டு. வாசல் முகப்பில் மங்கலான வெளிச்சம். மரங்கள் நிறைந்த சாலையில் நடமாட்டம் இல்லை. தொலைவில் ஆறடுக்குக் கட்டடத்தின் உச்சியில் நியான் விளக்குகள் ஒளிர்ந்தன. அலுவலகமாய் மாற்றப்பட்ட பழைய பங்களா. முன்னறையில் இருந்தவன் எழுந்து சல்யூட் வைத்தான். இடதுபக்க அறையில் இரண்டு நாற்காலிகள். நீண்ட மரபெஞ்சு. செய்தித்தாட்கள் அடுக்கிக் கிடந்தன. அடியில் படுத்திருந்த வெள்ளை நிறப் பூனை தலையுயர்த்திப் பார்த்துவிட்டு சுருண்டது.
பாத்ரூம் போணுமா?” புகைப்படம் எடுத்தவன் கேட்டான். அத்தனை நேரமும் எப்படி அந்த உணர்ச்சி மரத்துப் போயிருந்தது என்று தெரியவில்லை. அவன் பின்னால் போனேன். வீட்டைச் சுற்றிய சிறிய பாதை. அடுத்திருந்த பங்களாவிலிருந்து உரத்த குரலில் யாரோ பாடுவது போலிருந்தது. பவழமல்லியின் காட்டமான மணம். ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் கூடிய கழிவறை. குழாயில் தண்ணீர் சொட்டியது. நிற்காமல் பெருகிக் கொட்டியது மூத்திரம். அடிவயிறு காலியாகியதும் நிதானமானேன். பின்னங்கழுத்தில் வேர்வை. முகம் கழுவினால் நன்றாக இருக்கும். கைகளில் தண்ணீரைப் பிடித்து முகத்தில் அடித்துக் கழுவினேன். தீயாய் எரிந்தன உதடுகள். வீக்கத்தை உணர முடிந்தது. தண்ணீரில் கரைந்து வழிந்தது ரத்தம். மீண்டும் பயம் தொற்றிக்கொண்டது. வாயைக் கொப்புளித்துத் துப்பியபோது கதவைத் தட்டினான் அவன். முகத்தைத் துடைத்தபடியே வெளியே வந்தபோது அவன்ன முறைத்தான். பொறுமையின்றி காத்திருந்தவன் முன்னால் நடக்க அவனைத் தொடர்ந்தேன். எந்த வீட்டிலோ சமைக்கிறார்கள். மசாலின் மணம். பசித்தது. அவனிடம் கேட்கலாமா என்று எண்ணிய நொடியில் அறையில் என்னை அமர்த்திவிட்டு அகன்றான். இவர்களுக்கென்று இணக்கமற்ற முகம் எப்படி அமைகிறது?
விரல்களில் ஊதாநிறம் இன்னும் ஒட்டியிருந்தது. வெறித்துப் பார்த்தேன். இதுதான் ஆதாரம். நான் லஞ்சம் வாங்கியவன் இல்லை. கொடுத்தவன். கொடுக்க முயன்றவன். கொடுப்பதும் கொடுக்க முயல்வதும்கூட குற்றம்தானா? குற்றம் என்றால் என்ன தண்டனை? பெறுபவர் யாருமின்றி தர முயன்றதை மட்டும் குற்றமாக்கி தண்டனை தர இயலுமா? இதெல்லாம் தேவையா எனக்கு? எதற்கு அந்த நேரத்தில் அந்த இடத்தில் போய் நின்றேன். புறப்படும்போதே சரோஜா சொன்னாள் “வெயில்தாள போலாமில்லே?” அவள் பேச்சைக் கேட்டு சற்றே தாமதித்து வந்திருந்தால்கூட அங்கே நான் இருந்திருக்கமாட்டேன். இந்த காட்சிகளெல்லாம் நடந்து முடிந்திருக்கும். ஆய்வாளர் வரவில்லை என்று நானும் வீடு திரும்பியிருப்பேன். தறிக்குழியில் இறங்கி வாட்டம் போட்டிருப்பேன். நாலு முழம் நெய்திருக்க முடியும். எல்லாம் கெட்டநேரம்தான். அதுதான் என்னை அப்போது அங்கே நிற்கச் செய்திருக்கிறது. அத்தனை பேர் வராண்டாவில் காத்திருக்கும்போது சின்னு என்னுடைய பாக்கெட்டில் பணத்தை ஏன் திணிக்கவேண்டும்? அவன் என்னை தெரிந்தெடுக்கவில்லை. கெட்ட நேரம்தான் என் பாக்கெட்டில் கை நுழைத்திருக்கிறது. கெட்ட நேரம் ஊதா நிறத்தில்தான் இருக்குமோ?
யாராவது வந்து பேசினால் பரவாயில்லை. இப்படி திம்மென்று சத்தமேயில்லாத இடத்தில் தனிமையில் இருத்திவிட்டுப் போவதையே தாங்க முடியவில்லை. எதற்காக காத்திருக்கிறோம் என்பதே தெரியாமல் இப்படி சும்மா உட்கார்ந்திருப்பது பெரும் தண்டனை. உள்ளே போய் நாமே கேட்கலாமா? எதுக்கு சார் என்னை அழைச்சிட்டு வந்திருக்கீங்க? நான் என்ன தப்பு பண்ணினேன் சார்? அப்போது பதில் சொல்வார்கள்தானே? பதில் சொல்லாமல் பளாரென்று மறுபடியும் அறைந்தால் என்ன செய்வது? ஏற்கெனவே விழுந்த அடி இன்னும் வலிக்கிறது. அறை விழும் என்ற எண்ணம் வந்ததும் கால்கள் நடுங்கின. உடல் வேர்த்தது. ஆமாம். அடிப்பார்கள். எந்த நேரத்திலும் யாராவது ஒருவர் வந்து என்னை உள்ளே அழைத்துச் செல்லக்கூடும். இரண்டொரு கேள்விகளுக்குப் பிறகு நிச்சயமாய் அடி விழும். அடியைத் தாங்கும் தெம்பில்லை. லேசாக தட்டினாலே உடைந்து நொறுங்கிவிடுவேன். என்ன சொல்லி அடிப்பார்கள்? லஞ்சம் குடுக்க வந்தியா? யாருக்கு தர வந்தே? எத்தனை? இவ்வளவுதானே? இதில் என்ன பிரச்சினை? உள்ளதைச் சொல்லிவிட்டால் போதும்தானே? இதில் அடிவாங்க என்ன இருக்கிறது? அவர்கள் லஞ்சம் வாங்கும் அதிகாரியை அவனது கைத்தடி சின்னுவை கையும் களவுமாக பிடிக்க வந்தவர்கள். அவன் சிக்கவில்லை. வாசலில் நின்ற என்னிடம் பணம் இருந்தது. அதனால் என்னைப் பிடித்துவிட்டார்கள். அவர்களுக்கே தெரியும். சின்னு ஓடும்போது என் பாக்கெட்டில் பணத்தைத் திணித்துவிட்டு ஓடிவிட்டான் என்று. இதற்கு மேலும் கேட்பதற்கு எதுவுமில்லை. எனக்கு சொல்லவும் எதுவுமில்லை.
விசாரிக்க எதுவுமில்லை என்று மனம் நம்பத் தொடங்கியதும் சற்றே சமாதானமானேன். காத்திருக்கலாம். வேறு வழியில்லை. எப்படியும் இன்றைய இரவு இங்கேதான். வீட்டுக்கு ஒரு தகவல் சொல்லிவிட்டால் போதும். அவசர வேலையாக கோயமுத்தூருக்கு வந்திருக்கிறேன், காலையில் வந்துவிடுகிறேன் என்று சொல்லலாம். அப்படி என்ன அவசர வேலை என்று கேள்வி எழும். காலையில் வீட்டுக்குப் போய் நடந்ததை சொல்லிக் கொள்ளலாம். இப்போதைக்கு நான் பத்திரமாக இருக்கிறேன் என்று சொன்னால் போதும். மணி என்ன இருக்கும்? ஏழு அல்லது ஏழரை. இந்நேரம் என்னை காணவில்லை என்று தங்கராஜ் முனிசிபாலிடிக்கு போயிருப்பான். கேட்பாரற்று நிற்கும் வண்டியைப் பார்த்திருப்பான். நான் எங்கே என்று விசாரிப்பதற்கு அங்கே யார் இருப்பார்கள்? வாட்ச்மேன்தான். என்னைத்தான் அழைத்து வந்தார்கள் என்று அவனுக்குத் தெரியாது. ஆனாலும் அவன் சொல்லக்கூடும். “மத்தியானமா ஒருத்தரை அரெஸ்ட் பண்ணிட்டாங்களே. சந்தனக்கலர் சட்டைபோட்டுட்டு…” என்று உத்தேசமாய் அவன் சொன்னாலே போதும். துன்பம்தான். அந்த நேரத்தில் அந்த வாட்ச்மேன் அங்கிருந்தானா? மதியம் இருந்தவன்தான் இப்போது இரவுப்பணியிலும் தொடர்ந்திருப்பானா? அவனே இல்லையென்றாலும் இந்நேரம் அவரவர் கற்பனைக்கேற்ப ஜோடித்த கதைகள் எத்தனை பேரை சென்றடைந்திருக்கும். தங்கராஜுக்கோ சரோஜாவுக்கு இந்தக் கதைகள் எட்டாத வரையிலும் இன்றைய ராத்திரியிலாவது கொஞ்சம் தூங்குவார்கள். இல்லை, அவர்கள் இன்னதென்று தெரியாமல் தேடிக்கொண்டுதான் இருப்பார்கள். கண்மூடித் தூங்க முடியாது. இங்கேதான் இருக்கிறேன் என்று தகவல் சொல்லிவிட்டால் கொஞ்சம் நிம்மதி. வெளியில் எட்டிப் பார்த்தேன். உள்ளறையில் நடமாட்டம் இல்லை. முன்னறையில் இருந்த காவலனையும் காணவில்லை. எழுந்து வெளியே போகலாமா? யாரும் இல்லையென்றால் அப்படியே இருட்டில் ஓடித் தப்பிவிடலாமா? நிச்சயமாய் இது கோயமுத்தூர்தான். தெருவிலிருந்து வெளியே போய்விட்டால் எந்த இடம் என்று தெரிந்துவிடும். அதற்குப் பிறகு ஏதேனும் பஸ்ஸைப் பிடித்து ஓடிவிடலாம். எழுந்து நின்றபோதே உடல் நடுங்கியது. உதடுகள் வறண்டன. என்னால் முடியுமா? அப்படியெல்லாம் தப்பி ஓடுவது சாத்தியம்தானா? அவ்வளவு பாதுகாப்பில்லாமல் அலட்சியமாகவா இருப்பார்கள்? ஒருவேளை இதுவும் என்னை சிக்கவைக்கும் தந்திரம்தானா? யாருமில்லாதபோது நான் என்ன செய்கிறேன் என்று கண்காணிக்கக்கூடும். இந்த அறையின் மூலையில் கேமிரா இருக்கும். ஆமாம், கண்ணுக்குத் தென்படாமல் என்னை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கும். நல்லவேளை நான் எழுந்து செல்லவில்லை. அப்படி எதுவும் செய்திருந்தால் வாசலோடு என்னை அள்ளிக்கொண்டு வந்திருப்பார்கள். அதன் பிறகு விசாரணையே வேறுமாதிரிதான் இருக்கும். “நீதான் தப்பே பண்ணலேங்கறே… அப்பறம் எதுக்கு ஓடப் பாத்தே?”
முன்னறையில் காலடியோசை கேட்டது. எட்டிப் பார்த்தேன். முன்பு இருந்தவன்தான்.
சார்…”
திரும்பிப் பார்த்தான்.
ஒரு போன் பண்ணணும்…”
யாருக்கு?”
வீட்ல சொல்லணும். அப்பிடியே அழைச்சிட்டு வந்துட்டாங்க…”
அவன் எழுந்து அருகில் வந்தான். “ஐயா இன்னம் வர்லை. அதான் வெயிட் பண்றாங்க. அவர் வந்ததுக்கப்பறந்தான் தெரியும். போனெல்லாம் பண்ண முடியாது.” இளைஞன். விறைப்பான சீருடை அவனுக்குக் கச்சிதமாகப் பொருந்தியது.
தன் இருப்பிடத்துக்குத் திரும்பியவன் தலையைத் திருப்பிக் கேட்டான் “பசிக்குதா?”
ஆமாம் என்று என் தலை அவசரமாய் அசைந்தது எனக்கே வியப்பளித்தது. எத்தனை இக்கட்டாய் இருந்தாலும் வயிறு தன் தேவையை மறப்பதில்லை.
வாட்ச்மேன் வழியாக தகவல் தெரிந்தாலும் தங்கராஜ் எங்கே என்று தேடுவான்? அங்கே போலிஸ் ஸ்டேஷனில் விசாரித்தால் சொல்வார்களாயிருக்கும். கோயமுத்தூருக்குத்தான் அழைத்துச் சென்றிருப்பார்கள் என்றாலும் இங்கே வந்து சேர முடியுமா? இந்த நேரத்தில் யாரிடம் உதவிக்குப் போவான் அவன். ராஜேந்திரன் மூலமாகத்தான் முயற்சி செய்வான். செய்திச் சேனலின் நிருபர் என்பதால் அவனுக்கு கொஞ்சம் செல்வாக்கு உண்டு. அப்படியானால் கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது. எப்படியும் என்னை இன்றிரவு அழைத்துச் சென்று விடுவார்கள். இந்நேரம் திருப்பூரிலிருந்து புறப்பட்டிருப்பார்களா? ‘அய்யா’ என்று சொன்னானே இவன். யார் அந்த அய்யா? பெரிய அதிகாரியாக இருக்கக்கூடும். அவர் வந்தபின்புதான் விசாரிப்பார்களா? அதற்குள்ளாக ராஜேந்திரன் யாரையாவது அழைத்து வந்தால் பரவாயில்லை. மேலும் அடிவாங்காமல் தப்பிக்கலாம். அப்போது அடித்ததுபோல ஆத்திரத்தில் கன்னத்தில் இரண்டு விழுந்தாலும் விழுந்ததுதானே. அதற்குப் பிறகு யார் வந்து சொல்லி என்னவாகப் போகிறது? இந்த இடம் வழக்கமான போலிஸ் ஸ்டேஷன் போல் இல்லை. வீடுமாதிரிதான். ஆனாலும் இப்படி இம்மியளவு சத்தமில்லாமல் இருப்பதே அடிவயிற்றில் பயத்தைக் கிளப்புகிறது.
மியாவ்’ சத்தத்துடன் பூனை தலை தூக்கி அறை வாசலைப் பார்த்தது. இரண்டு கண்கள் மட்டுமே உற்றுப் பார்க்கும் படத்துடனான ஆரஞ்சுநிற பனியன் அணிந்த சிறுவன் எட்டிப் பார்த்தான். ‘இவருக்கா?’ என்று கேட்டபடியே பெஞ்சின் மேல் ஒரு பொட்டலத்தை வைத்தான். குருமாவின் வாசனை பசியை கிளர்த்தியது. நம்பி இதைச் சாப்பிடலாமா? இதற்குள் எதையும் கலந்திருப்பார்களா? என்னைப் பேச வைப்பதற்காக மயக்கமருந்து எதுவும் இருக்குமா? நான்தான் பேசத் தயாராய் இருக்கிறேனே. கேட்கத்தான் யாரும் இல்லை. எதுவும் இருக்கட்டும். இனியும் பசி பொறுக்க முடியாது. வாசனை வேறு கமகமவென்று அசத்துகிறது. பொட்டலத்தை எடுக்க நினைத்த கணத்தில் முன்னறையில் இருந்தவன் “தண்ணி இங்க இருக்குது. புடிச்சிக்குங்க” என்றான். வெளியில் வந்து தம்ளரில் தண்ணீரைப் பிடித்தேன். எட்டுவைத்து நடந்ததில் சற்றே ஆசுவாசம் கொண்டேன். காவலரின் மேசையிலும் அதேபோல பொட்டலத்தைக் கண்டதும் நம்பிக்கை வந்தது.
இரண்டு புரோட்டாக்கள். பூனையின் வெறித்த கண்கள் உற்றுப் பார்த்திருக்க நான் குருமாவைப் புரட்டித் தின்றேன். வாயைத் திறக்கும்போது இடதுபக்கமாய் வலி சுண்டியது. ருசியான சைவக் குருமா. அந்த நேரத்திலும் என்னால் அதன் ருசியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. மூளையின் ஒவ்வொரு திசுவும் தினுசு தினுசாக இயங்குவதாய் சொல்வார்கள். என்னால் அப்போது கொஞ்சம் புரிந்துகொள்ள முடிந்தது. அடிவாங்குவது கிடக்கட்டும், இப்போதைக்கு நீ புரோட்டாவை குருமாவில் குழைத்துப்போடு எனக் கட்டளையிட்டது மூளை. மெல்லும்போது வலித்தது. ஆனாலும் மெதுவாகத் தின்று முடித்தேன். இலையை மடித்துப் பொட்டலத்தை குப்பைத் தொட்டியில் எறிந்த பின் தண்ணீரைக் குடித்தேன். உள்ளே வந்து நாற்காலியில் சற்றே சாய்ந்து உட்கார்ந்தேன். குருமாவின் காரம் காயத்தில் இன்னும் எரிந்தது. விட்டால் அந்த பெஞ்சில் அப்படியே சாய்ந்து கண்ணசந்திருப்பேன். அந்த அமைதி என்னைத் தூங்கவிடவில்லை. அதன் ரீங்காரம் என்னை எச்சரித்தபடியே ஒலித்தது.
வீட்டில் இருந்தாலும் வேறொன்றும் வித்தியாசமாய் நடந்திருக்காது. நரையிருட்டு விழுந்தபின் தறியில் வாட்டம் போடும் பழக்கமில்லை எனக்கு. குளித்துவிட்டு வந்ததும் பால் இல்லாத சூடான டீ. அரைக்கைச் சட்டையை உதறி அணிந்தபடி வெளியில் இறங்கும்போது வாசல் திண்ணையில் கவிழ்ந்து வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருக்கும் பேத்தி சத்தமாய் கேட்பாள் “புள்ளா கோயிலுக்கா தாத்தா?” வீட்டுப்பாடம் பாக்கியிருக்கும்போது என்னுடன் கைபிடித்து நடந்துவர அவளுக்கு அனுமதி கிடையாது. இரண்டாவது தெருவின் முனையில் வேம்பும் வாகையும் புங்கையும் பன்னீர் மரங்களும் அடர்ந்த நந்தவனத்துக்கு நடுவில் அரசமரத்தடியில் பிள்ளையார் கோயில். பறவைகள் அடையும் கிளைகளைப் பார்த்தபடி மூன்று சுற்றுகள் நடந்துவிட்டு வீடு திரும்பும்போது சரோஜா கோதுமை தோசை வார்த்திருப்பாள். தொலைக்காட்சியில் ஏதேனுமொரு காவியக்காட்சியின் கண்ணீர் பெருக்கெடுத்திருக்கும். எனக்கு அவற்றில் ஆர்வமில்லை. திண்ணையில் வந்தமர்ந்து அடுத்த நாள் நெசவுக்கான கண்டிக்கை இழைகளைச் சுற்றத் தொடங்குவேன். ஷிப்டு முடிந்து லைன் வீட்டுக்குத் திரும்பும் தேர்ப்பட்டிக்கார பொன்னான் “இன்னிக்கு பேப்பர் பாத்தீங்களா பாவா?” என்று அட்டலாங்கால் போட்டுக்கொண்டு எதிர் திண்ணையில் உட்கார்ந்து கொள்வார். மிளகுப் பாலும் மாத்திரையுமாய் சரோஜா திண்ணைக்கு வரும்போது மணி பத்தாகியிருக்கும். பொன்னான் எழுந்துபோக மாத்திரையைப் போட்டுக்கொண்டு படுத்துவிடுவேன்.
இன்றைக்கு மாத்திரை போட்டுக்கொள்ள முடியாதா? ஒருநாள் போடாவிட்டால் ஒன்றும் ஆகிவிடாதுதான். இதற்கு மேல் என்ன ஆகவேண்டும். மாத்திரைபோட்டால் மட்டும் இந்த படபடப்பும் கொதிப்பும் அடங்கிவிடுமா என்ன? மணி இன்னும் பத்து ஆகியிருக்காது. உடல் களைத்திருந்தபோதும் தூக்கம் வரவில்லை. பூனை எழுந்து வாசலுக்கு ஓடியது. சட்டென்று பரபரத்தது வளாகம். அய்யா வந்திருப்பாரோ? தொண்டை அடைத்தது. வேர்வை பெருக்கெடுத்தது. உடல் நடுங்கியது. தலை கிறுகிறுக்க கண்களைத் தேய்த்தேன். தடுமாறினேன். யாரும் சொல்லாமலே எழுந்து நின்றேன்.
என்னைய்யா நீங்க. பெருமாளைப் புடிங்கடான்னா பேனைப் புடிச்சிட்டேன்னு நிக்கறீங்க? எப்பிடி மிஸ் ஆச்சு?” அய்யாவின் குரல் அறையைக் கடந்து போனது. பிசிறற்ற கறாரான குரல். புத்தியில் தைக்கும்படியான கச்சிதம். யாரும் பதில் பேசவில்லை. என்ன வயதிருக்கும்? என்னைப் போல் ஐம்பதைக் கடந்திருப்பாரா? தோற்றத்தைக் கொண்டே போலிஸ் கண்கள் குற்றவாளியைக் கண்டுபிடித்துவிடும் என்று சொல்வார்கள். என்னைப் பார்ததால் அய்யாவின் போலிஸ் கண்கள் நான் அப்பாவி என்று தெரிந்துகொள்ளுமா?
எந்த நேரமும் என்னை அழைப்பார்கள் என எதிர்பார்த்து நின்றிருந்தேன். கால்களின் நடுக்கத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. வீங்கிய உதடுகளை தன்னிச்சையாகத் தடவி மீண்டது நாக்கு.
பூனை மறுபடியும் உள்ளே பாய்ந்து வந்தது. நிற்கும் எனைப் பார்த்து ஒருகணம் உடல் மடங்கி நிதானித்தது. மீசை மயிர்கள் சிலிர்த்து நின்றன. ‘ம்யாவ்.’ என் மீதான பார்வையை மாற்றாமலே பதுங்கி ஓரமாய் நகர்ந்து இருப்பிடத்தை அடைந்து சுருண்டது.
காரில் என் இடப்பக்கமாய் அமர்ந்திருந்தவன் எட்டிப் பார்த்தான்.
வாய்யா…”
எடையற்ற சக்கைபோல தடுமாறி நடந்தேன். உள்ளங்கை ஈரத்தை சட்டையில் துடைத்தபடி அவனைத் தொடர்ந்தேன். அடுத்தடுத்து சிறிதும் பெரிதுமான அறைகள். இருட்டும் வெளிச்சமுமான வழிகள். வெகுதூரம் நடப்பதுபோலிருந்தது.
நீளவாக்கிலான பெரிய அறைக்குள் பிரகாசமான வெளிச்சம். சிகரெட் புகை நெடியுடன் அலைந்தது. இடதுகோடியில் அகலமான மேசை. கணிணித் திரையில் காட்சிகள் அசைந்தன. கோடுபோட்ட சட்டை அணிந்தவர் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். கையில் சிகரெட் புகைந்திருந்தது. அவர்தான் அய்யாவாக இருக்கவேண்டும். நான் அறைக்குள் நுழைந்ததும் என்னைத் திரும்பிப் பார்த்தார். கொழுத்த கன்னங்களுடனான மீசையற்ற முகம். வடக்கத்தியரோ? கோடுபோட்டாற்போட்ட சிறு கண்கள் என்னைத் துளைத்தன. வணக்கம் வைக்கவேண்டுமா இல்லையா என்ற குழப்பத்துடன் நின்றேன். இவனா என்பதுபோன்ற அலட்சியத்துடன் சிகரெட்டை ஆஷ்டிரேயில் போட்டு நசுக்கினார்.
பேர் என்ன?”
என்னைத்தான் கேட்கிறார் என்பதே சிலநொடிகள் வரை உறைக்கவில்லை. தாமதமாய் “அருணாச்சலம்” என்றேன்.
என்ன பண்றீங்க?”
நெசவு. பட்டு நெசவு…” பின்னொட்டாய் ‘ங்க’ சேர்க்கவேண்டுமா என்பதும் எனக்குக் குழப்பமாக இருந்தது. இல்லை ‘சார்’ சொல்லவேண்டுமா?
என் கைவிரல்களை அவர் பார்வைத் தொடுவதை உணர்ந்தேன். ஊதாநிறத்தின் மிச்சம் இன்னும் இருக்கிறதோ? மறுபடி ஒரு சிகரெட்டை பற்றவைத்தபடி புறங்கையை அசைத்தார். மீண்டும் திரையில் ஆழ்ந்தார். அதென்ன திரையில் தெரிவது நான்தானா? ஆமாம். அறைக்குள் என்னை அழைத்துச் செல்கிறார்கள். இன்று மதியம் நடந்தது. மண்டையில் வலி தெறித்தது. எல்லாவற்றையும் படம் பிடித்திருக்கிறார்கள். அதைத்தான் இவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். நடுக்கம் வலுத்தது.
வாங்க…” என்று என்னை வெளியே அழைத்து வந்தான் அவன். அவ்வளவுதானா? விசாரணை முடிந்ததா? முன்னால் நடந்தவனிடம் கேட்கலாமா? இத்துடன் விட்டுவிடுவார்களா? இதைக் கேட்கத்தான் இத்தனை நேரமும்? அதுதான் திருப்பூரிலேயே கேட்டு எழுதிக்கொண்டார்களே?
இந்தாளை ஏன்யா அடிச்சீங்க?” அய்யாவின் குரல் காதில் விழுந்தது. அவன் பதில் சொல்லியிருக்கவேண்டும். என் காதில் விழவில்லை.
மறுபடி அறைக்குள் வந்து நாற்காலியில் உட்கார்ந்ததும் அவன் திரும்பி உள்ளே போனான்.
சார்…” என்று அவனை அழைத்தேன்.
திரும்பிப் பார்த்தான். “வீட்டுக்கு எப்ப போ…” முடிப்பதற்கு முன்பே அவன் உதடுகளின் மேல் விரலை வைத்துக் காட்டினான். “அய்யா சொல்வாரு… பேசாம உக்காரு.” விறுவிறுவென்று நடந்துபோனான்.
சோர்வுடன் உட்கார்ந்தபோது அழுகை வெடித்தது. வீங்கிய உதடுகளைப் பொத்தியபடி சத்தமில்லாமல் அழுதேன். எத்தனை வருடத்திற்குப் பிறகு இப்படி அழுகிறேன். பூனை தலை நிமிர்த்திப் பார்ப்பதை உணர்ந்தேன். ஒளிரும் அதன் கண்கள் உற்றுப் பார்த்தன. கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தபோது காலடியோசைகள் கேட்டன. வெளியே வருகிறார்களா? எழுந்து அறை வாசலில் நின்றேன். அய்யாவும் அவரைத் தொடர்ந்து பிறரும் வெளியே வந்தனர். நான் நிற்பதைக் கண்டதும் அய்யா நின்றார்.
அய்யா நான் போலாங்களா?”
தலையசைத்தபடியே நகர்ந்தார் “காலையில பாக்கலாம்…”
நான் அவசரமாய் “வீட்டுல காணோம்னு கவலப்படுவாங்க சார்…” என்று சற்று உரக்கவே சொன்னேன்.
திரும்பி அருகே வந்தவர் “இன்பார்ம் பண்ணிருவாங்க…” என்று முகத்தை உற்றுப் பார்த்தார். நான் அழுதது தெரிந்துவிட்டதா?
வாகனம் புறப்படும் ஓசை. வெளிக்கதவைத் தாளிடுகிறார்கள். அய்யா போய்விட்டார். அவ்வளவுதான். இந்த ராத்திரியில் இங்கேதான் நான். இது ஜெயிலா? கம்பிகள் இல்லாத ஜெயில். இனி என்ன செய்வது? இந்தப் பூனையும் நானும்தானா இங்கே?
கான்ஸ்டபிள் உள்ளே வந்தான். “தண்ணி வேணா அங்க இருக்கு. பாத்ரூம் போணும்னா சொல்லுங்க.”
நான் அவன் முகத்தையே பார்த்திருந்தேன். காரில் உடன்வந்தவன் பின்னால் வந்து நின்றான். “உங்க வீட்டுக்கு இப்பவே சொல்லிர்லாமா? காலையில கூப்பிட்டு சொல்லவா? யார்கிட்ட சொல்லணும்?” அவன் கண்கள் சிவந்திருந்தன. பணத்தை பாக்கெட்டிலிருந்து எடுத்த கணத்தில் என் கையைப் பற்றிய முரட்டுக்கை இவனுடையதுதான். எரிச்சலும் கோபமுமாய் தலை குனிந்தேன். யோசித்தேன். இப்போது இந்தத் தகவலைச் சொன்னால் அரண்டு போவார்கள். என்னவோ நடக்கட்டும். நிம்மதியில்லாத இந்த ராத்திரியை நான் மட்டுமே அனுபவிக்கிறேன். விடியும்வரையிலும் அவர்களாவது சற்றே கண்ணசரட்டும்.
காலையில சொல்லிக்கலாம்…”
எனக்கு யார் முகத்தையும் பார்க்க விருப்பமில்லை. இவர்களிடம் பேசுவதில் எந்த பயனும் இல்லை. அய்யா போய்விட்டார். வீடியோவையும் என்னையும் பார்த்துவிட்டு என்ன முடிவு செய்திருப்பார். இவர்கள் எல்லோருக்கும் தெரியும். நான் அங்கே தற்செயலாய் நின்றிருந்தவன் என்றும் நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தெரியும். ஆனாலும் ஏன் இப்படி என்னை உட்காரவைத்திருக்கிறார்கள்?
கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே சுவரில் சாய்ந்து தரையில் அமர்ந்தேன். இதுபோலவொன்று எனக்கு நிகழும் என்று நான் கற்பனை செய்ததுகூட கிடையாது. திருப்பூர் போலிஸ் ஸ்டேஷனையே பஸ்ஸில் போகும்போது பார்த்ததுதான். தாலுகா ஆபிஸிற்குப் பின்னால் கோர்ட்டுக்குப் போகும் வழியில் ஜெயில் இருக்கிறதென்று சொல்லிக் கேள்விப்பட்டதோடு சரி. அடுத்த ஆவணி வந்தால் ஐம்பத்தாறு முடிகிறது. இந்த வயதில் இப்படி வந்து கன்னத்தில் அறை வாங்கி இதையெல்லாம் அனுபவிக்க எழுதியிருக்கிறதா? சந்தியாவுக்குப் பிடித்திருக்கும் ஏழரைநாட்டு சனி என்னையும் சேர்த்து ஆட்டுவைக்கிறதா? வீடு கிரகபிரவேசம் முடிந்து திருஷ்டிபூசணியின் நிறம்கூட இன்னும் மங்கவில்லை. என்னை இப்படிக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. வீட்டுவரி என்ன உண்டோ போடட்டும், கட்டித் தொலைக்கலாம் என்று விட்டிருக்கலாம். ஆய்வாளரைப் போய் பார்த்தால் வரியை மூன்றில் ஒன்றாக்கித் தந்துவிடுவார் என்று எல்லோரும்தான் சொன்னார்கள். அங்கே வந்தவர்களில் பாதிப்பேர் அதுபோன்ற காரியங்களுக்காகக் காத்திருந்தவர்கள்தானே? நான்மட்டும் என்ன பாவம் செய்தேன்? பதச்சோறு நான்தானா? இதுவரையிலும் அவர்கள் என்னை கேள்விகள் கேட்டு குடையவில்லை. பயமுறுத்தவில்லை. அதன் பிறகு அடிக்கவில்லை. அவ்வளவுதான். ஆனாலும் என்னை அனுப்பாமல் ஏன் இப்படி அடைத்துவைத்திருக்கிறார்கள்? இந்த ஒரு நாளின் அவஸ்தையை இல்லாமல் செய்யமுடியுமா? தவறிழைத்தவன் நிம்மதியாய் மனைவி மக்களோடு உறங்கிக் கிடப்பான். பழிசுமப்பவன் இங்கே பரிதவிக்கிறேன்.

எழுந்திருய்யா…” என் தோளைத் தொட்டு உசுப்புதை உணர்ந்து கண்விழித்தேன். கான்ஸ்டபிள்தான். லுங்கியுடன் நின்றவனை சட்டென அடையாளம் தெரியாமல் குழம்பினேன். சுவரில் சாய்ந்து கால்களை நீட்டினேன். தலைவலி. கண்கள் காந்தின. நிறைய அழுதிருக்கிறேன். களைப்பில் அப்படியே படுத்திருக்கிறேன். இப்போது மணி என்ன? தாடையை மெல்ல அசைத்தேன். காதோரத்தில் சுண்டி இழுத்தது.
தங்கராஜ் யாரு?” அவன் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தேன்.
உன்னைத் தேடிட்டு வந்திருக்காங்க?” எழுந்தேன். தங்கராஜ் வந்திருக்கிறானா? அழுகை கொப்பளித்தது. எட்டிப் பார்த்தேன். யாரும் இல்லை. காதோரங்களில் வெம்மைகூட மார்பு படபடத்தது. கையை ஊன்றி தடுமாறி எழுந்தேன். உதட்டோரக் காயம் வலித்தது.
போயி மூஞ்சியக் கழுவிட்டு வாய்யா. உள்ளே உக்காந்திருக்காங்க.”
இந்த நிலையில் அவன் என்னைப் பார்க்கவேண்டுமா? எதற்கு இப்படி வந்து காத்திருக்கிறான்? தகவல் சொல்லவேண்டாம் என்றுதானே ராத்திரி சொன்னேன். செல்போனிலிருந்த பெயரைப் பார்த்து இவர்களே அழைத்திருப்பார்களோ? எப்போது வந்திருப்பான். அவன்மட்டும் தனியாகவா? சரோ? அய்யோ, அவள் என்னை இப்படியெல்லாம் பார்க்கவேண்டாம். தாங்கமாட்டாள். அறையை எட்டிப் பார்த்தபடியே பாத்ரூமுக்குப் போய்விட்டு வந்தபோதும் உள்ளே என்னை அனுமதிக்கவில்லை. கண்ணாடியில் வீங்கிய முகத்தைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.
டீ சாப்பிடுவியா?”
நான் எதுவும் பேசாது கண்ணீரைத் துடைத்தேன். சிறிய பிளாஸ்டிக் தம்ளரில் ஆவி பறந்தது. விருப்பமில்லை. ஆனாலும் என்னால் கைநீட்டி அதை வாங்காமல் இருக்க முடியவில்லை. தலைவலிக்கிறது. சூடாக எதையாவது குடித்துவைக்கலாம்.
தேநீரைக் குடித்தபடியே செய்தித்தாளைப் புரட்டிக்கொண்டிருந்தவன் ஒருமுறை திரும்பி என் முகத்தைப் பார்த்தான். பெஞ்சுக்கு அடியில் பூனையைக் காணவில்லை. அதுகூட அவ்வப்போது வெளியே போய்விடுகிறது. நான்தான் இங்கே அடைந்துகிடக்கிறேன். அளவுகூடுதலான சர்க்கரை. சரோஜா சர்க்கரை இல்லாமல்தான் தருவாள். தங்கராஜ் யாரையாவது அழைத்து வந்திருப்பானா? ராஜேந்திரன் மூலமாக வக்கீல்கள் யாரையும் சந்தித்திருப்பானா? இங்கே அவர்களையெல்லாம் உள்ளே விடுவார்களா என்ன?
மியாவ்…’ சத்தமிட்டபடி சடாரென மேலிருந்து தாவிக் குதித்தது பூனை. திடுக்கிட்டு பின்னகர்ந்தேன். கீழே விழவில்லை. சுதாரித்து கால்களை ஊன்றி நிமிர்ந்தேன். பரண் நிறைய காகிதக்கட்டுகள் பெட்டிகள் பிளாஸ்டிக் சாமான்கள். இத்தனை நேரம் அங்குதான் பதுங்கிக் கிடந்திருக்கிறது.
வாய்யா.”
எழுந்து உள்ளே சென்றேன். நடுக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அய்யா வந்துவிட்டாரா? அதே அறை. மேசையின் எதிரில் தங்கராஜ் எதையோ எழுதிக் கொண்டிருந்தான். அருகில் ராஜேந்திரன். இடதுபக்கமாய் அறிமுகமில்லாத இன்னொருவர். மூவரும் திரும்பி என்னைப் பார்த்தார்கள். தங்கராஜ் என் கண்களைப் பார்த்துவிட்டு சட்டெனக் குனிந்து எழுதலானான். ராஜேந்திரன் எழுந்து அருகில் வந்து கையைப் பற்றினான். என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சொல்லும்போது அழைச்சிட்டு வந்தர்ணும். வக்கீல் சொல்றாங்க, ஜட்ஜ் சொல்றாங்கன்னு அவாய்ட் பண்ணிராதீங்க. அப்பறம் விவகாரம் பெரிசாயிரும். பாத்துக்கங்க…” எஸ்ஐ கறாரான குரலில் கட்டளையிட்டார்.
எல்லாம் நான் பாத்துக்கறேன் சார். அப்பிடியெல்லாம் செய்வமா?” மூன்றாம் நபர் பணிவுடன் சொல்லியபடியே எழுந்தார்.

அந்த கட்டடத்திலிருந்து வெளியே வரும்போது கண்களை மூடிக்கொண்டேன். பார்க்கவிடாமல் கூசியது பகல் வெளிச்சம். சுட்டெரிக்கும் வெயில். தலை நிமிர்த்தவே பயம். ‘மியாவ்’. காம்பவுண்ட் சுவரின் மீதிருந்து குதித்தது அந்தப் பூனை. முதுகை வளைத்து நின்று முகம் சுளித்தது. ஒருகணம்தான். சரேலென தாவி கதவைத் தாண்டி ஓடிவிட்டது. கார் புறப்பட்டவுடன் சற்றே நடுக்கம் தணிந்தது. பின் இருக்கையில் நான் மட்டும். தங்கராஜ் மிகுந்த பதட்டத்திலிருந்தான். கிழிந்த உதடுகளை அவன் பார்த்திருப்பானா? என்னவோ கேட்க நினைக்கிறான். தயங்குகிறான். பாலம் கட்டும் வேலையினால் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசலைப் பற்றி பொதுவாகப் பேசியபடியே ராஜேந்திரன் காரை ஓட்டினான். இருவரும் என்ன நடந்தது என்று கேட்கவில்லை. இப்போது தொந்தரவு செய்யவேண்டாம் என்று எண்ணியிருப்பார்கள். அவர்கள் கேட்டாலும் என்னால் சொல்ல முடியாது.
கார் தெருமுனையில் திரும்பியதுமே தெரிந்துவிட்டது. தெருவே பரபரத்தது. வாசலில் துட்டிவீடுபோல் கூட்டம். காரிலிருந்து இறங்க நினைக்கிறேன். கால்கள் நகர மறுத்தன. முடியவில்லை. சரோஜா கையைப் பற்றி இறக்கினாள். தலைகுனிந்து தரையை வெறித்தபடியே நடக்கிறேன். யார் யாரோ நெருங்கி வருகிறார்கள். கையைப் பிடித்து தோளைத் தட்டி ஆறுதல் சொல்கிறார்கள். எதுவும் காதில் விழவில்லை. கண்ணில் நீர் கட்டுகிறது. “அவரைத் தொந்தரவு பண்ணாதீங்க… ரெஸ்ட் எடுக்கட்டும்.” ராஜேந்திரனின் அதட்டலான குரல். ‘பாவம் கண்ணு. நீ ஒரு வெள்ளச்சோளம். உனக்கு இப்பிடி ஆயிருக்கவேணாம்’ யாரது? சுந்தரி பெரியம்மாவின் குரலா? ‘தசாபுத்தி கெட்டு கெடக்குது. பரிகாரம் பண்ணினாத்தான் கெரகம் தொலையும்.’ செகடந்தாளி மாமாவின் குரல் புகையிலை வாசனையுடன் காதில் விழுகிறது. சொந்தபந்தங்கள் அனைத்தும் குழுமி நிற்கின்றன. எப்படித் தெரிந்தது? காணவில்லை என்று விசாரிக்கப்போய் விவகாரமாகிவிட்டதா? என்ன நினைத்திருப்பார்கள்? எப்படி சமாளிக்கப்போகிறேன்? “பேப்பர்காரனுக்கு நல்லவன் கெட்டவன்னு தெரியுமா? போலிஸ்கேசு. சொன்னதைப் போட்டுருக்கான்.” என்ன சொல்கிறார்கள்? பேப்பரில் போட்டிருக்கிறார்களா? எந்தப் பேப்பர்? என்ன செய்தி? “ஒன் திருவாயைக் மூடிட்டு சித்த அக்கட்டால போ நீ…” சொன்னவரை விரட்டுகிறாள் மண்ணரைக்காரி.
படுக்கை அறைக்குள் நுழைந்ததும் சரோஜா ஜன்னல் திரையை இழுத்து மூடினாள். என் முகத்தைப் பார்க்க முயன்று முடியாமல் அழுதாள். சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு தரையில் படுத்தேன். உடலெங்கும் வலி. உயிரை அழுத்தும் சங்கடம். என்ன நடக்கிறது? எது என்னை நேற்றிரவு அங்கே அடைத்து வைத்திருந்தது? சிறைதானா? ஏன் அழுகிறாள் இவள்? அந்த அருணாச்சலம் நேற்றுடன் செத்துப்போனானா? இது வெறும் உடல்தானா? எதுவும் பிடிக்கவில்லை. முறைத்தேன். அவள் கண்ணீரைத் துடைத்தபடி வெளியே போனாள். எனக்கு யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை. கூடத்திலிருந்த எல்லோரையும் வாசலுக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். கூடிப் பேசும் குரல்கள் மூடியக் கதவைத் தாண்டி கேட்டன. வெளியே தலைகாட்டவே கூடாது. அப்படி இருக்க முடியுமா? எத்தனை நாள் உள்ளேயே அடைந்துகிடக்க முடியும். யாரையும் பார்க்காமல் யாரோடும் பேசாமல் முகம் திருப்பியிருப்பது முடியாது. பேசினால்தான் துக்கம் கரையும். இறுக்கம் குறையும். ஆனாலும் இப்போது என்னால் இயலாது. யோசனைகளற்று சவம்போலத் தூங்கவேண்டும். அந்தப் பேப்பரைப் பார்க்கவேண்டும். என்னவென்று எழுதியிருக்கிறான்? ‘லஞ்சம் தரமுயன்றவர் கைது.’ எத்தனை லட்சம் பிரதிகள். எல்லாவற்றிலும் நான் செய்தியாகிவிட்டேன். முடிந்தது கதை. எத்தனை நாள் நானே படித்திருக்கிறேன். ‘லஞ்சம் வாங்கிய உதவி அலுவலர் கைது’ என்று தலைப்புடன் கைக்குட்டையால் முகத்தை மறைக்க முயலும் நபருடனான படம். நேற்று என்னைப் புகைப்படம் எடுத்தபோது நான் முகத்தை மறைக்கவில்லை. எதற்காக அவன் படமெடுக்கிறான் என்றே எனக்குத் தெரியாது. காரில் ஏறும்போது யாரும் படமெடுத்தார்களா? எந்தப் படமானால் என்ன? செய்தியாகிவிட்டேன். திருப்பூர், மங்கலம் நகர் நான்காம் வீதியைச் சேர்ந்த அருணாச்சலம், வயது 54, நேற்று லஞ்சம் கொடுக்க முயன்றபோது பிடிபட்டார். இத்தனை வருட வாழ்க்கையில் இப்படி ஒரு சாதனை? பேரெடுப்பதென்பது இப்படித்தானா? செய்தித்தாள் என் கண்ணில்படாதபடி சரோஜா பார்த்துக்கொள்வாள். நான் பார்க்கவிட்டால் என்ன? இன்றைய தேதியில் அதுவொரு சம்பவம். நாளைய சரித்திரத்தில் நானும் இடம்பெற்றிருக்கிறேன். லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலில் என் பெயரும் பொறிக்கப்பட்டுவிட்டது. கடவுளே, இதற்குத்தானா இந்தப் பிறவி?
நெஞ்சடைத்தது. எழுந்து உட்கார்ந்தேன். கண்ணீர் பெருகி வழிந்தது. அந்த ஒரு நொடிப்பொழுது மொத்த வாழ்வையும் இப்படி புரட்டிப்போட்டுவிட்டதே? இதிலிருந்து இனி மீளவே முடியாதா? இனிமேல் இந்த சம்பவம்தான் என் அடையாளமாய் நிற்கும். கறையாக எஞ்சும். இதோ இந்த நொடியில் என் வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கிறேன். வெளியில் தலைகாட்ட முடியாது ஒளிந்துகொண்டிருக்கிறேன். தேவையா இது? இப்படியொரு பிழைப்பு இனியும் வேண்டுமா? உயரே சுற்றும் மின்விசிறியை வெறித்தேன். ஒரு முழக்கயிற்றில் அனைத்தையும் இல்லாமல் செய்துவிடலாம். அவமானம் இல்லை. அவஸ்தை இல்லை. சரோஜாதான் அழுவாள். அவளும் எத்தனை நாளைக்கு? எல்லாம் கரைந்துபோகும். பீரோவுக்குப் பின்னால் மணிக்கயிறு கிடக்கிறது. கஞ்சிபோட்டு முறுக்கித் திரித்த கயிறு. குனிந்து உள்ளே கையை நீட்டினேன். கயிறை வெளியே இழுத்தேன். தடித்தக் கயிறு. நீளமாகத்தான் இருக்கிறது. கழுத்தளவுக்கு சுருக்கை முடிக்கவேண்டும். கைகள் ஏனோ நடுங்கின.
கதவைத் தட்டும் சத்தம். அவசரமாய் கயிற்றை பீரோவுக்கு அடியில் எறிந்துவிட்டு நகர்ந்து கட்டிலில் அமர்ந்து கண்களைத் துடைத்தேன். சரோஜாதான். அவளால் பேசமுடியவில்லை. முகம் பார்த்தால் அழுதுவிடுவாள்.
இட்லி சூடா தரட்டுமா?”
வெறுமனே தலையாட்டினேன். காலையிலிருந்து எதுவும் இல்லை. வழியில் நிறுத்தி டீ சாப்பிட்டபோதும்கூட நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். பசித்தது.
தட்டில் சூடான மூன்று இட்லிகள். தூசி அப்பிய கைகளை குண்டாவில் கழுவினேன். தக்காளி சாம்பாரின் ருசி உள்ளே இறங்கியது. நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். என்னையே உற்றுப் பார்த்திருந்தாள். ஒருநொடிப்பொழுது தாமதித்து கண்ணீர் அவள் கன்னத்தில் உருண்டது.
ஒண்ணுல்லம்மா. அதான் வந்துட்டேன்ல.”
எதுவும் பேசாது சாம்பாரை வார்த்தாள். சற்று முன் மணிக்கயிற்றில் முடிச்சிட எண்ணிய நான் ஐந்தாவது இட்லியைக் கேட்டு வாங்கினேன்.

பத்தாவது நாள் மீண்டும் கோவைக்கு அழைக்கப்பட்டேன். தங்கராஜும் ராஜேந்திரனும் அழைத்துச் சென்றனர். வழக்கறிஞர் இருகூர் ரமேஷ் எங்களுக்காகக் காத்திருந்தார். நடந்த விபரங்களை ஏற்கெனவே அறிந்திருந்தார். நான் சொல்லவேண்டிய பதில்களை விபரங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லித் தந்தார்.
ஒவ்வொரு கேள்விக்கும் சொல்லவேண்டிய பதில்களை தெளிவாகப் பாடமெடுத்தார்.
உங்களை சாட்சியாத்தான் சேத்துருக்காங்க. அவங்களுக்கு வேண்டிய ஆள் நீங்க இல்லை. அதனால பயப்படாதீங்க. இதுமாதிரிதான் கேப்பாங்க. மாத்தி மாத்திக் கேப்பாங்க. பயப்படாதீங்க. இதுக்கும் மேல வேற ஏதாவது கேள்வி கேட்டா தைரியமா எனக்குத் தெரியாதுன்னு சொல்லுங்க. நான் பாத்துக்கறேன்.” தெளிச்சையான முகம். படபடக்கும் கண்கள். ரமேஷுடன் பேசும்போது தெம்பாக உணர்ந்தேன்.
பகலில் அந்த கட்டடத்தைப் பார்த்தபோது மங்கிய மஞ்சள் பூச்சுடன் வெகு சாதாரணமாய் தென்பட்டது. ஜன்னலுக்கு மேலே இளம்பச்சை இலைகளுடன் அடர்ந்து தொங்கிய கொடிகளில் மஞ்சள் பூக்கள். காரிலிருந்து இறங்கி நடந்து உள்ளே கால்வைத்தபோது மீண்டும் படபடப்பு தொற்றிக்கொண்டது. தடுமாறினேன். பொலிவிழந்த பச்சை நாணல் தடுக்குக்குப் பின்னால் அமர்ந்திருந்தவனைக் கண்டதும் நின்றேன். அந்த இரவில் இருந்தவனேதான். புன்னகைக்க வேண்டுமா? தெரிந்ததாய் காட்டிக்கொள்வது சரியா? தெரியவில்லை. அவன் முகத்தில் எதுவும் அசையவில்லை. முன்னறையில் நுழைந்ததும் இடதுபக்க அறையை அனிச்சையாக எட்டிப் பார்த்தேன். அதே மரபெஞ்சு. வேட்டி கட்டிய இருவர் சட்டென்று எழுந்து பின் ஆசுவாசத்துடன் அமர்ந்தனர். என் கண்கள் பூனையைத் தேடின?
என்னை மட்டும் உள்ளே அனுமதித்தனர். கூடுதல் வெளிச்சத்துடனிருந்த அந்த அறை இப்போது மேலும் அச்சம் தந்தது. இறுகிய முகத்துடன் பொறுமையற்றவராய் அலைந்த இன்ஸ்பெக்டர் நிதானமிழந்திருப்பதை உணர்ந்தேன்.
அந்த நேரத்துல அங்க எதுக்குப் போனீங்க?”
வீட்டுவரி கட்டறதைப் பத்தி விசாரிக்கறதுக்காக”
யாரைப் பாக்கறதுக்காக போனீங்க?”
எங்க ஏரியா இன்ஸ்பெக்டரை”
அவர் பேர் என்ன?”
தெரியாது.”
இதுக்கு முன்னாடி பாத்திருக்கீங்களா?”
பாத்துருக்கேன்.”
எங்க? எப்ப?”
வீடு கட்டும்போது ஒருதடவை வந்து பாத்தார்.”
என்ன சொன்னார்?”
வரி கட்டணும்னு சொன்னார்.”
வேற என்ன சொன்னார்?”
வேற எதுவும் சொல்லலை.”
சின்னசாமியைத் தெரியுமா?”
தெரியாது.”
அவர் அங்க வேலை செய்யறார்னாவது தெரியுமா?”
தெரியாது.”
அப்பறம் ஏன் உங்க பையில பணத்தை வெச்சுட்டு ஓடுனார்?”
எனக்குத் தெரியாது.”
உங்ககிட்ட எத்தனை பணம் கேட்டாங்க?”
எதுவும் கேக்கலை.”
ரமேஷ் சொன்னதுபோலத்தான் நடந்தது. ஒவ்வொரு கேள்விக்கும் நான் ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னேன். திரும்பத் திரும்பக் கேட்டபோதும் நான் பதிலை மாற்றவில்லை. பலவற்றுக்கு தெரியாது என்றே சொன்னேன். இன்ஸ்பெக்டர் கடுப்பாகிவிட்டது தெரிந்தது. “நல்லா டிரெய்ன் பண்ணிட்டாங்க. இருக்கட்டும். எங்கயாச்சும் சிக்காமயா போயிரும்” என்று அவர் முனகியது எனக்குக் கேட்டது. எழுதிக் கையெழுத்திடச் சொன்னார்கள். கை நடுக்கத்தை என்னால் மறைக்க முடியவில்லை.
நிமிர்ந்து முகம் பார்த்தேன். உற்றுப் பார்த்தபடியே தலையாட்டினார். வணக்கம் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். அவரது பார்வை என்னைத் தொடர்வதை உணர்ந்தேன். குறுக்கே தாவி ஓடிய பூனை நின்று திரும்பிப் பார்த்தது. ம்யாவ். அதன் குரலைக் கேட்டதும் முதுகில் வேர்த்தது.

ரமேஷின் அலுவலகத்தில் எங்களுக்காகக் காத்திருந்த வருவாய் ஆய்வாளரைக் கண்டதும் திகைத்தேன். இவன் எதற்கு இங்கே வந்திருக்கிறான்? இன்னும் ஒரு வலை இங்கே காத்திருக்கிறதா? ராஜேந்திரன் என்னவோ சொல்கிறான். என் காதில் விழவில்லை. ஆய்வாளரையே வெறித்தபடி வாசலில் நின்றேன்.
நெற்றியில் பளிச்சிடும் சந்தனப்பொட்டு. மடிப்பு கலையாத பூப்போட்ட வெள்ளைச் சட்டை. எந்த நொடியிலும் புன்னகை களையாத முகம். பார்க்க பார்க்க ஆத்திரம் கொப்பளித்தது. நிதானமிழந்தேன். தங்கராஜின் மேல் என் கோபத்தைக் காட்டினேன். “மொத்தமா என்னை உள்ள அனுப்பறதுன்னு முடிவு பண்ணிட்டயேடா?” திகைத்து நின்ற அவனை முறைத்துவிட்டு நடந்தேன். வேறென்ன செய்யமுடியும்? விடுவிடுவென வெளியே வந்தேன். ராஜேந்திரன் கையைப் பற்றினான். “அவசரப்படாதீங்கண்ணா. இருங்க, நான் சொல்றேன்.”
தூங்குமூஞ்சி மரத்து நிழலடியில் கிடந்த டீக்கடை பெஞ்சில் அமர்ந்தேன். எண்ணெய் மினுக்கத்துடனான வாழைக்காய் பஜ்ஜிகள் கண்ணாடிப் பெட்டிக்குள் பளபளத்தன. மரத்தூணைச் சுற்றிக் கட்டியிருந்த தாம்புக் கயிற்றின் நுனியில் தீக்கங்கு சுடர்ந்திருந்தது. என்னருகே வந்தமர்ந்த ராஜேந்திரனை கேள்வியுடன் பார்த்தான். “டீ சாப்பிடறீங்களா?” என் பதிலை எதிர்பார்க்காமல் “ரெண்டு வித் அவுட்டுண்ணா” என்றான்.
ராம பக்தன் நானே, அந்த ராம பக்தன் நானே.
ஸீதை அனுக்கன் நானே, அந்த ஸீதை அனுக்கன் நானே”
கரகரப்பான குரல் கவனத்தைத் திருப்பியது. அனுமான் வேஷத்துடன் ஆடியபடியே வந்தான் அவன். குள்ளமான உருவம். வெளிறிய குரங்கு உடுப்பு. வளைந்து நின்ற வால். ஏந்தியிருந்த தட்டில் பத்து ரூபாய் தாள்கள் படபடத்தன. டீக்கடையைக் கண்டதும் அனுமன் நின்றான். முகத்தை மூடியிருந்த கவசத்தைக் கழற்றியபடியே சிரித்தான். வேர்வையில் நனைந்திருந்த முகத்தைத் துடைத்தவன் “ரெண்டு பஜ்ஜி எடுத்துக்கறேன்” என்று கண்ணாடிப் பெட்டியிலிருந்து பஜ்ஜிகளை எடுத்தான். அனுமாரின் கவசமுகம் அடுத்திருக்க பெஞ்சில் உட்கார்ந்தவன் கத்தரிக்கப்பட்ட செய்தித்தாளில் பஜ்ஜிகளை அமுக்கிவிட்டு கடித்தான்.
ரமேஷின் அலுவலக வாசலைப் பார்த்தேன். தங்கராஜ் அங்கேயே நின்றிருந்தான். அவன் முகம் கடுத்திருந்தது.
அவன் சொல்லித்தான் எல்லாத்தையும் செய்யறீங்களா ராஜேந்திரன்?” கேட்கும்போதே அழுகை மூண்டது.
தப்பா நெனக்கறீங்கண்ணா. அவர் நமக்கு உதவி பண்ணத்தான் வந்துருக்கார். எல்லாத்தையும் அவர் பாத்துப்பார். நான் பேசிட்டேன். நீங்க ஆத்திரப்படாதீங்கண்ணா.”
எனக்கு நம்பிக்கையில்லை. எல்லாரும் ஏமாற்றுகிறார்கள்.
ரமேஷுக்கும் அவருக்கும் சம்பந்தமேயில்லை. அவரா விசாரிச்சுட்டுதான் வந்திருக்கார். நான் பேசிட்டேன். உங்களுக்கு இப்பிடி ஆயிடுச்சேன்னு ரொம்ப வருத்தப்படறார்.” ராஜேந்திரன் சொல்வதை என்னால் காதுகொடுத்து கேட்க முடியவில்லை.
எல்லாம் நாடகம். உங்களுக்கு புரியல. அவனைப்போய் எப்பிடி நம்பறீங்க” ஆத்திரத்துடன் முணுமுணுத்தேன்.
உங்களுக்கு எப்பிடித் தெரியும் நாடகம்னு?” ராஜேந்திரனின் குரல் கடுத்திருந்தது. நிமிர்ந்து அவனைப் பார்த்தேன். அதட்டுகிறானா?
அப்பிடி நாங்க விட்டுருவோமா. உங்க கோபம் புரியுது. அதுக்காக எதையுமே விசாரிக்காம முடிவு பண்ணக்கூடாது. வாங்க. உள்ள போலாம்.” என் கையைப் பற்றி எழுப்பினான். எனக்கு சமாதானம் இல்லை. தங்கராஜ் அருகில் வந்து நிற்பதைக் கண்டதும் எழுந்தேன்.
ஊருக்குப் போலாம்டா. நீங்க வர்றதுக்கு லேட்டாகும்னா நான் பஸ்ல போயிக்கறேன்” என்றபடி இடுப்பு வேட்டியை உதறிக் கட்டினேன்.
அனுமார் முகத்தை மறுபடியும் மாட்டிக்கொண்டவன் உற்சாகத்துடன் பாடத் தொடங்கினான்.
ராம பக்தன் நானே, அந்த ராம பக்தன் நானே.”

மூன்றாவது தடவை கோவைக்கு போய்வந்த மறுநாள் காலையில் இருண்ட அறைக்குள் கண்மூடிக் கிடந்தபோதுதான் சரோ கேட்டாள்.
இப்பிடியே இருட்டுல மொடங்கிக் கெடந்தா எல்லாம் செரியாப் போகுமா?”
என்ன பதில் சொல்வது என்று யோசித்தபடியே எழுந்து அமர்ந்தேன். என்னால் தறியில் இறங்கி வாட்டம் போடமுடியவில்லை. எத்தனை நாள்தான் இப்படியே ஒடுங்கிக் கிடப்பது என்று தறியில் இறங்கியது பெரும்வினையாய் போனது. அன்று விடிகாலையில் முகம் கழுவி விபூதி இட்டு தெம்புடன்தான் தறிக்குப் போனேன். ஆனால் தறிக்குழிக்குள் இறங்கிய கணத்தில் அந்த நாள் எனக்குள் இறங்கிவிட்டது. ஒவ்வொரு காட்சியும் மனதில் துல்லியமாய் விரிந்து ஆட்கொண்டுவிட அப்படியே உட்கார்ந்திருந்தேன். சரோ கொண்டுவந்த சூடான டீயை குடித்ததும் தெம்புடன் மீண்டேன். தலையை உலுக்கியபடி கால்கள் புணியை மிதிக்க நாடாவை சொடுக்கவேண்டிய இடதுகை தாமதித்தது. அப்போது சொடுக்கியிருக்கக் கூடாது என்று பதறி நிறுத்துவதற்குள் கூரிய முனைகொண்ட நாடா விருக்கென தாவி இழைகளை வெட்டிக்கொண்டு பாய்ந்தது. தறிமேடையின் ஓரத்தில் வைத்திருந்த போவிணிகளை மோதி சத்தத்துடன் தெறித்தது நாடா. அவ்வளவுதான். எழுந்து அறைக்குள் ஓடி கதவைச் சாத்திக் கொண்டேன். அதன் பிறகு தறிப்பக்கமே தலைகாட்டவில்லை.
ஆனது ஆச்சு. அதையே நெனச்சுட்டு எங்கயும் போகாம எதுவும் பண்ணாம இப்பிடியே சீக்காளிமாதிரி படுத்தே கெடந்தா என்ன அர்த்தம்?”
நாளாவட்டத்தில் சரோவுமே பொறுமை இழந்திருந்தாள். தங்கராஜும் அவளும் அப்படி இப்படி பேசுவது காதில விழத்தான் செய்கிறது.
இருக்கறது இன்னோம் ஒண்ணரை சீலைதான். அதையாச்சும் அறுத்துப் போட்டுட்டா அப்பறம் எப்பிடியோ போட்டும்னு விட்றலாம். இல்ல முடியாதுன்னா சொல்லுங்க நானாச்சும் நெய்யறேன்…”
சரோவுக்கு தறிவேலைகள் அனைத்தும் அத்துப்படி. நிதானமாக நெய்தாலும்கூட மூன்றாவது நாளில் சீலையை நெய்து முடித்து அறுத்துவிடுவாள். சுத்தநெசவுக்காரி. அவள் சொன்னது நியாயம்தான். ஆனால் என்னால் எப்படி அப்படிச் சொல்லமுடியும்.
வீட்ல இருக்கறது உங்களுக்கு எடஞ்சலா இருக்குதா?. ஒரேயடியா உள்ளே போயிருங்கறீங்க…” என்ன சொல்கிறேன் என்று உறுதியாய் தெரியாமல் முணகினேன்.
நொடியில் குமுறினாள். என்ன சொல்லிவிட்டேன்? பேசினாலும் சரி பேசாதபோதும்கூட சரி இப்படித்தான் எல்லாமே அழுகையிலும் சண்டையிலும் வந்து முடிகிறது.
ஆமாமா. நீங்க எப்ப உள்ளே போவீங்கன்னுதான் இங்க நாங்க பாத்துட்டிருக்கோம்.”
என் பிடிவாதம் இன்னும் கூர் பெற்றது. “வெளியவே வராம இருந்திருந்தாகூட பரவால்லே…” என்றேன்.
கண்களைத் துடைத்தபடி நிமிர்ந்தாள் அவள். “சொல்றது சரியாத்தானே இருக்கு. ஒருநாள் உள்ள போயிட்டு வந்தா உத்தமனுக்கும் புத்தி கெட்டுரும்னு.”
சினம் மூழ எழுந்தேன். அவள் அருகில் நின்று முறைத்தேன். வெளியில் சொல்லக் கேட்கும் என் அடையாளத்தை இவளே உறுதிப்படுத்துகிறாள். அவள் அப்படி எதுவும் சொல்லவேண்டும் என்றே நான் எதிர்பார்த்திருந்தேன். பளாரென்று அறைந்தேன். கன்னத்தின் ஈரத்தை விரல்களில் உணர்ந்த நொடியில் அவள் வெளியில் ஓடினாள். கால்கள் நடுங்க அப்படியே நின்றேன். அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. உள்ளங்கையில் எரிச்சல். அவள் கன்னத்திலும் இப்படித்தான் எரியுமா? அப்படியே விட்டத்தைப் பார்த்தபடி படுத்தேன். கண்கள் பொங்கின. விசும்பலை அடக்க முடியாது புரண்டேன். தொடர்ந்து என்னை நான் இழந்தபடியே இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கோவை சென்று வரும்போதெல்லாம் என் பிடிவாதம் வலுக்கிறது. மூர்க்கம் தளைக்கிறது. தொட்டதற்கும் சீறுகிறேன். அர்த்தமின்றி கத்துகிறேன். எங்கே போய் முடியும் இது? யாரிடமும் பேசமுடியாமல் வெளியில் தலைகாட்ட இயலாமல் இப்படியே முடங்கிக் கிடக்கிறேன்.

சீரான வாட்டச் சத்தம் கேட்கிறது. சுத்தநெசவுக்காரன்தான் இத்தனை லயத்துடன் வாட்டம் போட முடியும். மனம் குவிந்து நெய்யும்போது என்னுடைய வாட்டச் சத்தமும் இப்படித்தான் இருக்கும். இத்தனை வேகம் இருக்காது. நிதானமும் துல்லியமுமான வாட்டம் அது. சட்டென்று சத்தம் நின்றது. யாரோ என் கையை இறுகப் பிடிக்கிறார்கள். மணிக்கட்டருகே வலிக்கிறது. சத்தமில்லாமல் தறி இயங்கியபடியே இருக்க கழுத்தில் மணிக்கயிறு விழுகிறது. தறிமேடையில் கிடக்கும் சட்டையின் பையிலிருந்து தாள்கள் பறக்கின்றன. ஓடியோடி பொறுக்கும் இறுகிய முகங்கள் என்னையே முறைக்கின்றன. பவழமல்லியின் வாசனையுடன் தண்ணீர் சொட்டி வழிகிறது. உத்தரத்திலிருந்து தாவிய பூனையின் வாயிலும் ரூபாய் நோட்டு. நாக்கை நீட்டியபடி ம்யாவ் என்று சத்தமிடும்போதுதான் பார்த்தேன். அதன் ஊதாநிற நாக்கு என் உதட்டுக் காயத்தை நக்கிக் கொடுக்கிறது. குருமாவின் காரம். சூட்டில் வதங்கிய வாழை இலையைச் சுருட்டும்போது உற்றுப் பார்க்கிறேன். கசங்கியதாளில் என் படம். தலையைக் குனிந்தபடி அவன் பின்னால் நடக்கிறேன். நான்தானா? சரியாகத் தெரியவில்லை என்றாலும் அது நான்தான் என்று சின்னு கத்துகிறான். கருப்புத் துணி முகத்தை மூட தடாலென்று சத்தம். தொண்டையில் இறுக்கும் கயிற்றைப் பற்றியபடி கதறுகிறேன். நானில்லை நானில்லை. பளாரென்று கன்னத்தில் விழுகிறது. இருட்டு. ரீங்காரம் மட்டும் ஒலிக்கும் கும்மிருட்டு. தடதடவென்று தண்ணீர் கொட்டும் சத்தம். கால்களில் ஈரம் பரவி மேலேறுகிறது. கழுத்துக் கயிற்றைப் பற்றியபடி மேலேறுகிறேன். தண்ணீர் அதே வேகத்துடன் உயர்கிறது. வளைந்து செல்லும் பாதையில் நெளிந்து துரத்தும் தண்ணீரிலிருந்து தப்பிக்கவேண்டி ஓடுகிறேன். யாரோ கழுத்துக் கயிற்றை சுண்டுகிறார்கள். தடுமாறி விழுந்த கணத்தில் மேலே பார்க்கிறேன். பூப்போட்ட வெள்ளைச் சட்டையுடன் ஆய்வாளர் சிரிக்கிறான். ஊதாநிற வெள்ளம் என்னைப் புரட்டித் தள்ளியது.
கட்டிலில் இருந்து புரண்டு விழுந்தேன். திடுக்கிட்டு கண் விழித்தபோது கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள் பேத்தி.
தாத்தா.” பேத்தியின் மழலைக் குரல் உசுப்பியது.
எழுந்து முகம் துடைத்தேன். அவளைக்கூட நான் அருகில் வர அனுமதிப்பதில்லை.
தாத்தா. விழுந்துட்டீங்களா?”
இல்லையென்று தலையசைத்தவன் அவளைத் தூக்கி மடியில் இருத்தினேன்.
உங்களுக்கு ஒடம்பு செரியில்லையா?”
அவள் காதோர முடியை இழுத்துச் செருகியபடியே ஆமாம் என தலையாட்டினேன்.
ஊசி போட்டிங்களா?”
ம்…”
வலிச்சிதா?”
ம்…”
இப்ப செரியாயிடுச்சா?”
ம்…” என் குரல் நடுங்குவதை உணர்ந்தேன். எந்த நொடியிலும் கண்ணீர் வழியக்கூடும்.
அப்டின்னா புள்ளாகோயல் போலாமா?”
தரையில் அவளை இறக்கிவிட்டு எழுந்தேன். அண்ணாந்தேன். மூக்கை உறிஞ்சியபடியே வேட்டியை உதறிக் கட்டினேன். அவளுடன் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று எத்தனை நாளாயிற்று? ஜன்னல் மேடையில் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்தேன். இடுங்கின கண்கள். கறுத்த முகம். வெள்ளை முடிகள் அடர்ந்த தாடி. என்னையே எனக்குத் தெரியவில்லை. தலையைக் கோதினேன். சிரிக்க மறந்த முகக்தில் உறைந்திருந்த இறுக்கத்தைத் தொலைக்கவேண்டும் முதலில். உதடுகளை ஈரப்படுத்தியபடி புன்னகைக்க முயன்றேன். உதடுகள் நெளிந்தன. சிரிப்பு வரவில்லை. கண்கள் ஒத்துழைக்காது முறைத்தன.
அழுமூஞ்சித் தாத்தா. போ. நீ வராட்டி நா போறேன்.” பேத்தி முகத்தைச் சுழித்துவிட்டு தாவி ஓடினாள். மறுபடியும் கண்ணாடியைப் பார்த்தேன். ஆமாம், அழுமூஞ்சிதான்.
தறியின் வாட்டத் சத்தம் கேட்டது. வெளியே வந்தேன். என்னைக் கண்டதும் சரோ தறியை நிறுத்தினாள். எதுவுமே சொல்லாமல் உற்றுப் பார்த்தேன். எத்தனை நாட்களாயிற்று இந்தச் சத்தம் கேட்டு. என்னால் தறியில் இறங்குவதைப் பற்றி யோசிக்கவே முடியவில்லை. மனம் குவியாது வாட்டம் போடமுடியாது. அந்த நாளுக்குப் பிறகு என்னால் தறியின் அருகில் செல்லவே முடியாமல் போனது. இன்னும் ஒன்றரை புடவைதான் பாக்கி. நெய்யாமல் அப்படியே போட்டுவைக்கவும் முடியாது. இழைகள் அறுந்து தொய்ந்து வீணாகும். எதுவும் சொல்லாது நின்றதும் அவள் வாட்டமிடத் தொடங்கினாள். அவசரமில்லாமல் நிதானமாக நெய்வதுதான் எனக்குப் பழக்கம். சரோ என்னைவிட மெதுவாய் நெய்கிறாள்.
அந்தாளு வந்துட்டுப் போனானா?” மெதுவாகக் கேட்டேன்.
வாட்டத்தை நிறுத்தியவள் “யாரு?” என்றாள். அவளே ஊகித்துக்கொண்டதுபோல தலையாட்டிவிட்டு தறியிலிருந்து வெளியில் வந்தாள்.
இப்போதெல்லாம் கோயமுத்தூருக்கு போவதற்கு ஒருநாள் முன்பு ஆய்வாளரின் உதவியாள் ஒருவன் வந்து போகிறான். தங்கராஜ் எத்தனை முறை அவனிடம் சொல்லியும் கேட்பதில்லை. வெறுமனே வந்து “எதுன்னாலும் அய்யா சொல்லச் சொன்னாரு” என்று பணிவுகாட்டி போகிறான். ராஜேந்திரனும் சொல்லிப் பார்த்தான். இதனால் எதுவும் பாதகம் வந்து சேருமோ என்று அவனுக்கு பயமிருந்தது. ஆனாலும் அவனது வருகை நிற்கவில்லை. அவன் முகத்தை நான் நேரடியாகப் பார்க்கவில்லை. பார்க்க விருப்பமில்லை. அவனது புதுவகை புல்லட் வாகனம் கிளம்பிப் போகும்போது ஜன்னல் வழியாகப் பார்ப்பேன். வெள்ளைச் சட்டையும் நீல ஜீன்சுமாக காற்றில் பறக்கும் தலைமுடியுடன் உற்சாகமான இளைஞன். எதற்கான இந்த ஆய்வாளன் இத்தனை பாடுபடுகிறான்? விசாரணையின்போது அவனை மாட்டிவிடக்கூடும் என்று அஞ்சுகிறானா? சமயங்களில் நினைப்பதுண்டு. ஆமாம், இவனுக்குப் பணம் தரவே நான் வந்தேன் என்று சொன்னால் என்னவாகும்? இவனையும் ஒருநாள் உள்ளே இருக்க வைத்து பிறகு விசாரணை என்று இப்படி மாதாமாதம் இழுத்தடிப்பார்கள்தானே. இவனது படமும் செய்தித்தாளில் வெளியாகுமல்லவா?
இவனை மாட்டிவிட்டால் இந்த கேஸ் இன்னும் சிக்கலாகத்தான் போகும். விசாரணை இன்னும் நீண்டு காலம் காணும். இருட்டில் அடைந்து கிடந்தே மொத்தமாய் சுருண்டு விட்டேன். இன்னும் எத்தனை காலம் இப்படியே தள்ளமுடியும்?
இவனை மிரட்டி காசு பார்க்கலாம். கேட்டால் தந்துவிடுவான். இவன் சம்பாதித்ததையா எடுத்துத் தரப் போகிறான். ஊரானிடம் அடித்து வாங்கிய காசு. அள்ளிவிடுகிறான். எனக்குத் தரப்போவதை என்போன்ற இன்னொருவனிடம் வாங்கப் போகிறான். வேண்டாம் அந்த பாவம். ஏற்கெனவே செய்த பாவத்துக்குத்தான் இப்படி அனுபவிக்கிறேன். இனியும் பாவ மூட்டையை சேர்க்கவேண்டுமா? மறுபடி அவன் வந்தால் நானே நேரடியாகப் பேசிவிட வேண்டும்.

எட்டாம் மாதத்தின் கடைசியில் விசாரணை முடிந்து பதினெட்டாம் தேதி தீர்ப்பு. செவ்வாய் கிழமைகளில் துர்க்கைக்கு விளக்குபோடும் சரோ அன்று அதிகாலையிலேயே கோயிலுக்குப் போய்விட்டாள். ராஜேந்திரன் உற்சாகத்துடன் இருந்தபோதும் தங்கராஜின் முகத்தில் இருந்த இறுக்கத்தை நான் கவனித்திருந்தேன். தீர்ப்பு எப்படியுமாகலாம். இந்த வீட்டுக்கு நான் திரும்ப வராமலும் போகக்கூடும். நான் வெகுநாள் யோசித்ததுதான். நேற்றிரவும் நான் தூங்கவில்லை. நடந்தவற்றை மனம் திரும்பத் திரும்ப அசைபோட்டபடியே அலைந்தது. ஊதாநிற விரல்கள் என்னை இறுகப் பற்றியிருந்தன. சின்னுவை மட்டுமே கைது செய்ய முடிந்திருந்தது. ஆய்வாளரை சிக்கவைக்க முடியவில்லை. அது எனக்கு சாதகமானதுதான் என்றார் ரமேஷ். அதுவே எனக்கு எதிரானதாகவும் திரும்பக்கூடும் என்றெண்ணியபடியே சொன்னேன் “சின்னுவின் கையால என் பாக்கெட்ல பணத்தைப் போட்ட என்னுடைய தலவிதி ஜட்ஜோட பேனாவுல எறங்காம இருந்தா சரிதான்.”
நீதிமன்ற வளாகத்தில் முகூர்த்த நாளைப்போல நெரிசல். கண்கூசச் செய்யும் வெள்ளைச் சட்டைகள் அலைந்திருந்தன. புளியமரத்தடி நிழலில் ஓரமாய் நின்றிருந்தேன். யோசனைகள் உறைந்து வெறிச்சோடிக் கிடந்தது மனம். கருப்புக் கோட்டுடன் வியர்வையைத் துடைத்தபடி அருகில் வந்த ரமேஷ் “இன்னிக்கோட தும்பம் முடிஞ்சிது பாத்துக்கங்க” என்றான். வெறுமனே பார்த்தேன் நான்.
உங்களைப் பாத்துப் பேசணும்னு சார் சொல்றார்…” என்று தயங்கினான்.
எதுவும் சொல்லாது தலை உயர்த்திப் பார்த்தேன். அவசரமாய் ராஜேந்திரன் அருகில் வந்தான்.
அப்பறம் பேசிக்கலாம் ரமேஷ்.” இருவரும் விலகி நகர்ந்தனர். வருவாய் ஆய்வாளர் இங்கேதான் இருக்கிறான். என்னை கவனிக்கிறான். எனக்குத் தெரிகிறது. இதோ, இந்த நொடியில் நான் தீர்மானித்தாலும் அவனை என்னால் மாட்ட வைக்க முடியும். அந்த பயம் அவரை விரட்டிக்கொண்டுதான் இருக்கும். அதற்காகத்தான் ரமேஷ் தூது வருகிறான். அப்படிச் சொன்னால் என்னாகும்?
நீதிபதியின் முன்னால் நான் எதுவும் பேசவில்லை. ஏற்கெனவே கேட்ட கேள்விகள்தான். நான் சொன்ன பதில்கள்தான். புதிதாக எதுவுமில்லை. விசாரணைக் கூண்டுக்கு வெளியே வந்ததும் தடித்த புத்தகத்தில் வழக்கம்போல கையெழுத்திட்டேன். என் பாக்கெட்டில் வைத்த பணத்துக்கும் எனக்கும் எந்தவிதமாக சம்பந்தமும் இல்லை என்று சின்னு தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டான். போலிஸ்காரர்களுடன் சின்னு தலைகுனிந்து நடந்தபோது ஓரமாக நின்று பார்த்தேன். சிரித்த முகத்துடன் ராஜேந்திரன் வந்து கைகொடுத்தான். ரமேஷ் உற்சாகம் பொங்க தோளில் தட்டினான். தலைகுனிந்தபடியே வெளியே வந்தேன். யாரையும் எதிர்பார்க்காமல் நடந்தேன். தங்கராஜ் என்னை அழைப்பது கேட்டது. நிற்கவில்லை நான்.
நீதிமன்ற வளாகத்திலிருந்து நெடுக நடந்தபடியே இருந்தேன். தலையில் அனல்கொட்டும் வெயில். கழுத்து வேர்வையைத் துடைத்தபடி திரும்பியபோது அந்த நிறுத்தத்தில் பஸ் நின்றிருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். ‘மருதமலை.’ அந்த நொடியில்தான் நான் முடிவு செய்தேன். புறப்பட்டு நகர்ந்த பஸ்ஸில் ஓடி ஏறினேன்.

மொட்டைத் தலையுடன் வாசலில் நின்ற என்னைக் கண்டதும் சரோ கதறி அழுதாள். உள்ளே ஓடினாள். அவளுக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும் நான் இப்படிச் செய்வேன் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அந்த நொடி வரையிலும் நானேகூட அதைத் தீர்மானித்திருக்கவில்லை.
குளிக்கும்போதே பசித்தது. ஈரம் சொட்ட அப்படியே உட்கார்ந்தேன். சரோவுக்கு அழுகை இன்னும் அடங்கவில்லை. உதடுகள் துடிக்க பிரார்த்தித்தபடியே என் முகத்தை வெறித்திருந்தாள். சூடான அரிசிம்பருப்பு சாதம். சந்தியா நெய்யை வார்த்தபோது அதன் மணம் பசியை மேலும் கிளர்த்தியது. அப்பளத்தைப் பொடித்துப் போட்டு உருண்டை பிடித்தேன். பேத்தி ஆவலுடன் அருகில் வந்தாள். முதல் கவளத்தை அவளது சின்னக் கையில் வைத்தேன்.
ஸ்… சுடுது தாத்தா.” சிணுங்கியபடியே கவளத்தைக் கடித்தாள்.
அவளும் நானுமாய் சாப்பிட்டு முடித்தபோதுதான் ராஜேந்திரனும் தங்கராஜும் உள்ளே வந்தார்கள். என் தலை அவர்களைத் திடுக்கிடச் செய்தது. ஒருகணம் தயங்கினார்கள்.
சொல்லிருந்தா நாங்களே அழைச்சிட்டு போயிருப்பமே?” ராஜேந்திரன் கேட்டான். ஈரக்கையை துடைத்தபடியே சோபாவில் அமர்ந்து ரிமோட்டை எடுத்து அழுத்தினேன். செய்தி அறிக்கையை மௌனமாக வேடிக்கை பார்த்தேன்.
பஞ்சாமிர்தம் வாங்கிட்டு வந்திருக்காரா உங்க தாத்தா?” என்றபடியே பேத்தியை மடியில் எடுத்து வைத்த தங்கராஜ் என் மொட்டைத் தலையையே வெறித்திருப்பதை உணர்ந்தேன்.

வெளிச்சம் உறுத்திட கண்களைத் திறந்தேன். விடிந்து வெகு நேரமாகிவிட்டதா? ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். பளிச்சென்ற வெயில். பிள்ளையார் கோயிலில் இருந்து பாட்டுச் சத்தம் கேட்டது. “சூப்பு. சூப்பேய்…” ஆட்டுக்கால் சூப் அடுப்பை சுமந்தபடி கூவிப் போனான் அவன். இத்தனை நேரமா தூங்கியிருக்கிறேன்? கண்ணாடியில் முகம் பார்த்தேன். ஒருகணம் திடுக்கிட்டேன். முடியில்லாத தலை என் அடையாளத்தை மாற்றியிருந்தது. நான்தானா? சட்டென்று அந்தக் கேள்வி முளைத்தது. இன்றைக்கு அவன் வருவானா? ஆமாம். அவன் வருவான். நிச்சயமாக வருவான். என்னிடம் பேச இனி என்ன இருக்கிறது? இருந்தாலும் அவன் வருவான் என்று மனம் உறுதி சொன்னது.
அவனை இத்தனை நாள் சந்திக்கவில்லை. இன்றைக்கும் அவனை நான் சந்திக்கக்கூடாது. அவனிடமிருந்து அந்த பயம் விலகிவிடக்கூடாது. அவனை நான் பார்த்துவிட்டால், அவனிடம் பேசிவிட்டால் அந்த பயம் விட்டுப்போகும். இத்தனை நாள் அனுபவித்த தவிப்பை அவனும் இன்னும் சிறிது நாள் அனுபவிக்கவேண்டும். அத்தனை சுலபமாய் அவன் நிம்மதி அடைந்துவிடலாகாது.
பரபரவென்று குளித்துத் தயாரானேன். உடனே புறப்பட்டுப் போய்விட வேண்டும். அவன் வரும்போது நான் இங்கே இருக்கக்கூடாது. ஒவ்வொரு நாளும் அவன் எனக்காக அதே பயத்துடன் காத்திருக்கத்தான் வேண்டும்.
எங்க பொறப்படறீங்க?’’ சரோவின் குரல் சமையலறையிலிருந்து கேட்டது.
புள்ளா கோயலுக்கு.”
அவள் சமாதானம் அடைந்திருப்பாள். இத்தனை நாளும் நான் இதுபோல ஆகவேண்டும் என்றுதானே எதிர்பார்த்திருந்தாள்.
இருங்க. காபி போட்டுத் தர்றேன்.”
இல்லை. என்னால் காத்திருக்க முடியாது. “வந்து குடிச்சிக்கறேன்.”
செருப்பைப் போட்டுக்கொண்டு தெருவில் இறங்கிய அதே நொடியில் அந்த கார் வந்து நின்றது. எனக்குத் தெரிந்த கார்தான். அடிக்கடி நான் பார்த்த அதே வாகனம்தான். சட்டென்று திரும்பி உள்ளே சென்றேன். ராஜேந்திரனின் குரல் என்னை நிறுத்தியது.
நல்லா தூங்கினீங்களாண்ணா?” என்னால் அவனைப் புறக்கணித்து உள்ளே செல்ல முடியவில்லை.
திரும்பி நின்று சிரித்தேன். அதே சமயத்தில் காரில் இருந்து இறங்கும் அவனைப் பார்த்தேன். அன்றொரு நாள் ரமேஷின் அலுவலகத்தில் பார்த்த அதே உருவம். இல்லை. என்னவோ மாற்றம் இருக்கிறது. அவனை உற்றுப் பார்த்த அதே கணத்தில் அவன் சிரித்தபடியே கைகூப்பினான்.
வாங்க…” அனிச்சையாக சொல்லிவிட்டு மீண்டும் அவனை உற்றுப் பார்த்தேன். திடுக்கிட்டேன். அவனும் மொட்டை போட்டிருந்தான்.
முகத்தைத் துடைத்தபடி எட்டிப் பார்த்த தங்கராஜும் ஆய்வாளரைப் பார்த்து “உள்ள வாங்கண்ணா…” என்று நாற்காலியைக் காட்டினான்.
எம்பிராய்டரி போட்ட வெள்ளைச் சட்டை. சன்னக் கண்ணாடிக்குள் சிரிக்கும் கண்கள். கூடத்திலிருந்த படங்களை கவனமாகப் பார்த்திருந்தவன் “பேத்திங்களா?” என்று கேட்டான்.
ஆமாங்கண்ணா. தங்கராஜ் பொண்ணுதான்.” ராஜேந்திரன் உற்சாகத்துடன் பதில் சொன்னபோது ஆய்வாளர் என் முகத்தையே பார்த்தான்.
சரோஜா சொம்பில் தண்ணீர் எடுத்து வந்தாள்.
தண்ணீரை ஆவலுடன் பருகியவன் அவள் முகத்தைப் பார்த்தபடியே சொன்னான் “உங்களுக்கெல்லாம் கஷ்டத்தை குடுத்துட்டேன். மனசுல வெச்சுக்காதீங்க.”
கண்ணீரைத் துடைத்தபடியே அவள் சொன்னாள். “எல்லாம் கெட்ட நேரந்தான். நீங்க என்ன பண்ணுவீங்க பாவம்.”
ஆய்வாளர் மீண்டும் என்னையே உற்றுப் பார்த்தான். “என்மேல ரொம்ப கோவமா இருக்கீங்க. நியாயந்தான். உங்களப் பாத்துப் பேசினா பரவால்லேன்னு தோணிச்சி.”
ராஜேந்திரன் சமாதானமாய் சொன்னான். “அவர் அப்பிடித்தான். ரொம்ப பேசவும் தெரியாது. எதையும் மனசுல வெச்சுக்கவும் தெரியாது. நீங்க அதப் பத்தியெல்லாம் கவலப்படாதீங்க. டீ சாப்டலாமா?”
உள்ளே நகர்ந்த சரோ “சக்கரை போடலாமா?” என்றாள்.
ஆய்வாளர் தலையாட்டியபடியே “பரவால்லே. சர்க்கரை போட்டே குடுங்க” என்று சிரித்தான்.
இன்னும் நான் பேசாமல் இருப்பது எனக்கே என்னவோ போலிருந்தது. நான் சொல்லும் ஒரு வார்த்தைக்காக அவன் தவித்துக் காத்திருக்கிறான். இத்தனை நாளாக என்னைப் போலவே அவனும் எதிர்பார்த்திருக்கிறான்.
அன்னிக்கு என்னவோ கெட்டநேரம். அதுமாதிரி நடந்திருச்சி. வேணும்னு எதுவும் நடக்கலை. சந்தர்ப்பம் அப்பிடி அமஞ்சிருச்சி. அந்த சின்னு பய ஓடிப்போற அவசரத்துல உங்களை மாட்டி விட்டுட்டான்.” கண்ணாடியைக் கழற்றித் துடைத்தவன் தொடர்ந்தான் “கேஸ் கொஞ்சம் இழுத்துருச்சு. சீக்கிரமா முடிக்கணும்னுதான் பாத்தேன். நடக்கலை.” எதையோ யோசிப்பவன்போல் தலைகுனிந்தான். சிலநொடிகளுக்குப் பிறகு நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தான். “இனி அதப்பத்தி பேசவேண்டாம். நான் என்ன பண்ணாலும் அதை சரி பண்ண முடியாது. மனசுல வெச்சுக்காதீங்க.” எழுந்து என் கையைப் பற்றினான். ஒருகணம் திடுக்கிட்டேன். கைகள் நடுங்கின. கன்னத்தில் விழுந்த அறையின் மின்னல் தலைக்குள் வெட்டியது.
பரவால்லே. நீங்க உக்காருங்க.” சொற்கள் தடுமாற அவன் தோளைத் தொட்டு அமர்த்தினேன்.
எங்களுக்கெல்லாம் இது பழக்கமாயிருச்சி. அடிக்கடி நடக்கறதுதான். மனசுல எதுவுமே தங்காது. அடுத்த வேலையை பாத்துட்டு போயிட்டே இருப்போம். உங்களுக்கு அப்பிடி இல்லை. உங்களையெல்லாம் அதுமாதிரி எடங்களுக்கு வரவெச்சதே பெரிய தப்பு” என்றவன் கைப்பையை எடுத்தான். “இது என்னோட திருப்திக்கு. தயவு செஞ்சி வாங்கிக்கணும்.” என்றபடியே வெள்ளை உறையொன்றை என் கையில் வைத்தான்.
கைகளை சட்டென பின்னுக்கிழுத்தேன். சட்டைப்பையை உடனடியாகப் பொத்தினேன். உறை நழுவி உள்ளிருந்து ரூபாய் தாள்கள் சரிந்தன. எழுந்து விலகினேன். கால்கள் நகர ம(றுத்து நடுங்கின. விரல்களை அனிச்சையாகப் பார்த்தேன். ஊதாநிறம் ஒட்டிக்கொண்டது போலிருந்தது. வெறித்து பார்த்தவாறே சட்டையில் துடைத்தேன். ராஜேந்திரன் தோளைத் தொட்டுச் சொன்னான் “ஒண்ணில்லண்ணா. உக்காருங்க.”
ஆவி பறக்கும் தேநீருடன் வந்த சரோவின் முகத்தில் கடுகடுப்பு. எதுவும் சொல்லாமல் வெறுமனே தட்டை நீட்டினாள்.
ஒருகணம் நிதானித்தேன். கைகளை மறுபடியும் துடைத்துவிட்டு தேநீர் கோப்பையை எடுத்து அவரிடம் நீட்டினேன் “குடிங்க சார்.”
ராஜேந்திரன் ரூபாய் தாள்களை உறையில் போட்டு அவன் பையில் வைத்தான். கண்ணாடியைக் கழற்றியவன் ஆவி பறக்கும் தேநீரை உறிஞ்சினான். இரண்டு மடக்கு குடித்தவுடன் நான் மெல்லச் சொன்னேன் “தப்பு உங்களுது மட்டுமில்ல சார். நீங்க பொறப்படுங்க.”
கைகூப்பியபடியே எழுந்தவன் விடைபெற்று வெளியேறினான். நான் எழுந்து தறியை நோக்கி நடந்தேன்.

(காலச்சுவடு . நவம்பர் 2016 )




No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...