Saturday 9 December 2017

அதோ, அவர்கள் இருக்கிறார்கள்




அதோஅவர்கள் இருக்கிறார்கள்






அதோ
அவர்கள் அங்கே இருக்கிறார்கள்

முட்கம்பி வேலிகளுக்கப்பால்
அவர்கள் இருக்கிறார்கள்

அவர்கள்
அங்கே இருக்கிறார்கள்

நொறுங்கிய வானத்துக்குக் கீழே
அவர்கள் இருக்கிறார்கள்

நிலமும் கைவிட்டது
மொழியும் கைவிட்டது
இனமும் கைவிட்டது

கைவிடப்பட்டவர்களின் கூடாரங்களில்
அவர்கள் இருக்கிறார்கள்

பருக நீரில்லை
பசிக்க உணவில்லை
வலிக்கு மருந்தில்லை

இல்லைகளின் நடுவே
அவர்கள் இருக்கிறார்கள்

கண்ணி வெடிகளிலிருந்தும்
கையெறி குண்டுகளிலிருந்தும்
துவக்குத் தோட்டாக்களிலிருந்தும்

தப்பிப் பிழைத்தவர்கள்
அதோ, அங்கே இருக்கிறார்கள்

ஒவ்வொரு நாள் வாழ்வும்
ஒருவேளை மட்டும் எறியப்படும் உணவுப்பொட்டலம் போல
ஏந்திய கைகளில் வந்து விழுகிறது
அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு

பசி வந்து சாகாமல்
பிணி கொண்டுபோகாமல்
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படாமல்

தப்பிப் பிழைத்தவர்கள்
அதோ அந்த முகாம்களில் இருக்கிறார்கள்

பாவிகள் இடும் சோறென்றாலும்
பசித்துத் தொலைக்கும் வயிற்றைச் சபித்தபடி
அவர்கள் இருக்கிறார்கள்
நிராகரிக்கப்பட்ட உரிமைகளுக்கும்
நொறுக்கப்பட்ட கனவுகளுக்கும்
காலத்தின் சாட்சியாகி
அவர்கள் இருக்கிறார்கள்.

கைவிடப்பட்டவர்களின் கூடாரங்களில்
அவர்கள் இருக்கிறார்கள்
கைகளில் உயிரைப் பிடித்தபடி.


No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...