Saturday 9 December 2017

உப்புமூட்டை கடவுள்

உப்புமூட்டை கடவுள்




என் தவங்களை தின்று வாழும்
இஷ்ட தெய்வமே.

என்னை யுன் செல்லப் பரியாக்கி
கடிதேகும் நீ
என்னையும் கடந்து பறக்கிறாய்.

பேருண்மையின் புழுதியை
இஷ்டம்போல் பூசிக்கொள்ளும்
உன் முன்னால்
வெளிறும் ஒப்பனைகளுடன்
சிரிக்கிறேன் நான்.

ஆகச் சிறந்ததென் உடுப்புகளென
கண்ணாடி எதிர் நிற்கும் என்னை
கெக்கலித்து விரட்டுகிறது
பேதங்களற்ற உன் நிர்வாணம்.

மொழிகளின் வதைபாட்டை
வழிபட்டு திரியும் பித்தன் நான்.
உன் மழலைகொண்டு
நிவர்த்திக்கிறாய் எனை.
உன் மௌனம்
எனக்கு மகாயுத்தம்.
உன் இன்னகை
என் காலகண்டம்.
உதடு பிதுக்கி நீ யழுவதே
என் ஆயுள் நடுக்கம்.

இன்னும் துயிலெழாது
விரல் சப்பியுறங்கும்
உப்புமூட்டைக் கடவுளே….

உன்
பகா மனமாளும்
அலகிலா உலகில்
ஒரு கணம்
நான் நீயாகித் திரியும் வரம் வேண்டிக் கிடக்கிறேன்.

காலம்
இதோ இன்னும்
கரைந்து பறக்கிறது.


No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...