Saturday 9 December 2017

அழுக்குசாமியின் ஓலைப்பட்டாசுகள்

அழுக்குசாமியின் ஓலைப்பட்டாசுகள்


அழுக்குசாமி வெடிமருந்து விபத்தில் குடும்பத்துடன்
இறந்துபோனதாய் செய்திக் கட்டுரை சொன்னது.
வெடிமருந்து என்றதும் அவனுக்கும் அல்கய்தாவுக்கும்
தொடர்பு உள்ளதென்று அவசரப்படவேண்டாம்.
பாவம், அவன் தயாரிக்கும் வெடிகள்
மலைக்காட்டை ஒட்டிய அந்த கிராமத்துக்கு
இரவில் வரும் மிருகங்களை அச்சுறுத்தி விரட்ட மட்டுமே.
எங்கிருந்து அவன் மருந்து வாங்குகிறான், தெரியாது.
ஆனாலும் ஓலைப்பட்டாசு வடிவத்தில்
மருந்தை வைத்து மடித்து வெடிகள் தயார் செய்வான்.
அவனது மனைவியும் மகளுமே அவனுடன்.
அவர்களின் விரல் நுனிகளிலிருந்து வெடிமருந்தின்
நிறமும், அவர்களின் வேர்வையிலிருந்து அதன் நெடியும்
எப்போதும் மங்கிப் போனதில்லை.
மலைச் சரிவையொட்டிய தோட்டங்களில்
வாழையும் தென்னையும் கரும்பும் என்று நல்ல விளைச்சல்தான்.
பாதை மாறியோ உணவு தேடியோ யானைகள் வருவதுண்டு.
புதர்களில் பதுங்கி இரவில் வெளிவரும் காட்டுப் பன்றிகளும்
எதிர்ப்படுவதும் உண்டு. தவிர கேளை ஆடுகளும்
சமயங்களில் கரடிகளும்கூட தட்டுப்படும்.
ஒன்றிரண்டு முறை புலிகள் நடமாடி ஊரை கதிகலக்கியதும் உண்டு.
தொந்தரவுகள் கூடும் காலத்தில்
அழுக்குசாமியின் வெடிகளைக் கொண்டே விலங்குகளை விரட்டுவார்கள்.
கோடை காலங்கள் வரும்போதெல்லாம்
விலங்குகளும் மலை இறங்குகின்றன.
அழுக்குசாமியின் வெடிகளும் விலை போகின்றன.
ஆனாலும் அவன் அதே குடிசை வீட்டில் அன்று போலவேதான்
இன்றும் வெடி சுற்றிக் கொண்டிருந்திருக்கிறான்.
மருந்துப் பொட்டலத்தைத் தொட்டு வெடிக்கச் செய்த நெருப்பு
எங்கிருந்து வந்ததென்று யாருக்கும் தெரியவில்லை.
குடும்பம் மொத்தத்தையும் ஒற்றைப் பொட்டலத்தில் கட்டி
எடுத்துப் போனார்கள்.
இனி ராத்திரியில் வரும் விலங்குகளை விரட்ட
எங்கிருந்து வெடி வாங்குவது என்று கிராமத்தினர் விசனப்பட்டிருக்க
அன்று முதல் அந்த மலை கிராமத்தில்
விலங்குகளின் தொல்லை இல்லவே இல்லை என்று

சென்று வந்தவர்கள் சொன்னார்கள்.

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...