Monday 14 March 2022

எளிமையும் ஆழமும் - கமலதேவியின் ‘கடல்’ தொகுப்புக்கான முன்னுரை



கமலதேவியின் கதைகள் காட்சிகளாக விரிபவை. காட்சிகளின் வழியாகவும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல்களின் மூலமாகவும் அவர்களுடைய வாழ்வு முழுவதையும் சொற்களாகவும் உணர்ச்சிகளாகவும் சொல்பவை. வெறும் கதை சொல்லலாக மட்டும் அவை நின்றுவிடுவதில்லை. உறவுகளுக்குள் ஏற்படும் பல்வேறு மோதல்களையும் அவற்றின் ஆழங்களையும் அபத்தங்களையும் தொட்டுக் காட்ட முயல்கின்றன. விவசாயத்தில் தொழிற்படும் மண் சார்ந்த நுட்பங்களைப் பேசுகின்றன. கிராமத்து வாழ்வில் இன்னும் எஞ்சியிருக்கும் நம்பிக்கைகளை, மதிப்பீடுகளை, விழுமியங்களை நினைவுபடுத்துகின்றன. ஒட்டுமொத்தமாக வாழ்வின் பொருள் குறித்தும் அல்லது பொருளின்மையைக் குறித்துமான பலமான கேள்விகளை எழுப்புகின்றன. எந்தவொருக் கதையையும் அவை முழுமையாக விரித்துச் சொல்வதில்லை. கதையின் மையத்தை மிகக் குறைவான சொற்களில் அவை குறிப்புணர்த்துகின்றன. சம்பவங்களை அல்லாது அவற்றுக்கு முன்னும் பின்னுமான உணர்வு நிலைகளையே முதன்மைப்படுத்துகின்றன. இதனால் கதையை வாசித்து முடித்த பின்பும் ஏதோவொன்று முழுமையடையாததுபோலொரு உணர்வை ஏற்படுத்துகின்றன. ஆனால், அந்த உணர்வுக்குப் பின்னால் அழுத்தமான சில கேள்விகளை எழுப்புவதன் வழியாக கதையைக் குறித்து மீண்டும் யோசிக்கச் செய்கின்றன. எனவே, அவை வழக்கமான கதைப்பாணியிலிருந்து மாறுபட்டு கலைத்துப் போடப்பட்ட சித்திரங்களாகவே காணக்கிடைக்கின்றன. சரியான முறையில் ஒவ்வொரு துண்டையும் சேர்க்கும்போது மட்டுமே மொத்த உருவமும் புலப்படும். 

இத்தொகுப்பிலுள்ள ‘தையல்’ என்ற கதையைக் கொண்டு மேற்சொன்ன கதையம்சங்களை சற்று விரிவாகச் சொல்லிப் பார்க்கிறேன். 

(‘தையல்’ சிறுகதைக்கான சுட்டி. நன்றி ‘சொல் வனம்’ )

https://solvanam.com/2021/11/14/%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/

தொடை வரை வெட்டுண்ட  காலுடன் குடிசையில் தனித்திருக்கும் செவந்தன்,  தவமிருந்துப் பெற்ற பெண்ணைவிட்டுப் பிரிய முடியாமல், அவளுடன் இருக்கும் செல்லம்மாள் இருவரும் ஒரு மதியப் பொழுதில் வயல்வெளியோர மரத்தடியில் சந்திக்கிறார்கள். காலையில் பொங்கி எடுத்து வந்த சோற்றையும் புளிச்ச கீரையையும் அவன் அவளுக்குத் தருகிறான். மகள் வீட்டில் சமைத்த கோழிக் கறியை அவனுக்காகக் கொண்டு வந்திருக்கிறாள் மனைவி. இதுதான் கதை நமக்குக் காட்டும் காட்சி. 

நியாயமாக செல்லம்மாள் ஊன்றுகோலுடன் சிரமப்படும் செவந்தனுடன் இருக்கவேண்டும். மகள் ராக்குவை விட்டுவிட்டு அவள் வருவதில்லை. தவமிருந்து பெற்ற மகள். தன்னைவிட வயதில் மூத்த பெரியசாமியை ராக்கு காதல் மணம் புரிந்தபோதும் அவளைவிட்டு அவன் ஓடிப்போனபோதும்கூட செல்லம்மாள் எதுவுமே கேட்பதில்லை. மகளின் சொல் பொறுக்க முடியாமல் மனம் நொந்து செவந்தன் வீட்டைவிட்டு வெளியேறும்போதும்கூட செல்லம்மாள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள். பேரப் பிள்ளைகளால் அவமானப்படுகிறாள். ஏராளமான வீட்டு வேலைகளை முகம் சுளிக்காமல் செய்கிறாள். செல்லம்மாள் ஏன் இப்படி இருக்கிறாள்? எதற்காக? என்ற கேள்விகளை கதை விவரிப்பதில்லை. 

‘பாசப் பிள்ளைய கையில வெச்சுட்டு நிக்கற பெருமா மல அடிவாரத்து பிச்சாயி’தான் குலதெய்வம் என்ற ஒற்றை வரியினுள் செல்லம்மாளின் இந்த மனப்போக்கைப் புரிந்துகொள்வதற்கான சாவி கதையினூடே ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது.  

மகள் உதாசீனப்படுத்துகிறாள், மனைவியும்  உடனிருந்து உதவுவதில்லை என்றபோதும் தனித்து வாழும் செவந்தனின் குணத்தைச் சுட்டும் விதமாக கதையின் தொடக்கத்திலேயே ‘முருங்கை’மரம் ஒரு குறிப்பாக இடம் பெற்றுள்ளது. ‘உப்புத் தண்ணி கேணியில வெட்டிப் போட்டா தண்ணியோட உப்புக் குணம் மாறிப்போகும். பஞ்சத்துக்கு ஒரு முருங்கை போதும்’ என்ற வரிகள் முருங்கையை மட்டுமல்லாது செவந்தனைக் குறித்ததும்தான். மிகச் சுலபமாக எளிய காரணங்களுக்காக உறவுகள் உடைபடக்கூடும், முருங்கையைப் போலவே. அதே சமயத்தில் அவை குறுகிய காலத்தில் சிரமமில்லாது தழைவதும் சாத்தியம்தான். அன்றாட நடப்புகளிலிருந்து விவசாயத்தின் நடைமுறைகளிலிருந்து வாழ்வைக் குறித்த பெரும் புரிதலை மிகச் சாதாரணமாக போகிற போக்கில் சொல்லும்போது கதையின் அடர்த்தி பன்மடங்கு கூடிவிடுகிறது- 

மகள் என்ன செய்தாலும் அதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் அவளை இடுப்பிலிருந்து இறக்கிவிடாமல் இறுக்கி வைத்திருக்கிற செல்லம்மாளுக்கும், ‘ஒக்காந்து தின்னு’வதாய் மகள் சொன்ன சொல்லுக்காக ரோஷம் பொறுக்காமல் வீட்டிலிருந்து வெளியேறிய செவந்தனுக்கும் இடையில் எந்த சண்டையும் இல்லை. இருவரும் பிரிந்திருப்பதற்குக் காரணம் மகள்தான். இருவரும் அவரவர் புரிதலில் உறுதியாய் நிற்கிறார்கள். ஒருவரை ஒருவர் கட்டாயப்படுத்துவதுமில்லை, அனுசரித்துப்போவதுமில்லை. இந்தப் புரிதலின் அழகுதான் இந்தக் கதைக்கு வலு சேர்த்திருக்கிறது. 

‘பாம்போட ரோஷந்தான் வெஷம் தெரியுமா?’ என்று சொல்லும் செவந்தன் அந்த விஷத்தை கழுத்தில் அணிந்திருக்கிற சிவனாக தோற்றமளிக்கும்போது, தீட்டென்று எதுவுமில்லை என்று அனைத்தையும் ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு எல்லையிலும் காவல் நின்று மழையாக எல்லா நிலத்திலும் பெய்யும் மாரியாத்தாவாக செல்லம்மாள் உருமாறுகிறாள். இருவேறு குணங்கள், இருவேறு அணுகுமுறைகள். ஆனால், இவை ஒன்றுக்கொன்று நிரப்பிக்கொள்பவை. ஒரு குணம் ஓங்கி எழும்போது மறு குணம் தாழ்ந்தும் அடுத்தது உக்கிரம் கொள்ளும்போது இன்னொன்று தணிந்தும் சமன்செய்து கொள்பவை. பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தின் இருவேறு ஆற்றல்கள். மோதியும் முயங்கியும் உயிரியக்கத்தைப் பேணும் ஆணும் பெண்ணுமான சக்திகள். இத்தனை செய்திகளையும், சிந்தனைகளையும் இந்தக் கதையின் எளிமையான எடையற்ற வார்த்தைகளை, உரையாடல்களை கவனமாகப் பின்தொடரும்போது மட்டுமே புரிந்துகொள்ள முடியும். மேலோட்டமாக கவனமில்லாமல் வாசிக்கும்போது இவை எதுவுமே புலப்படாமல் போகிற சாத்தியம் உண்டு. 

செவந்தனின் கால் எதனால் துண்டுபட்டது என்பதைக் குறித்து பெரிய சித்தரிப்புகள் கதையில் இல்லை. ‘பைசலை வேடிக்கைப் பார்க்க நின்றவரின் கால்களை எவன் வெட்டினான் என்றே இதுவரைத் தெரியவில்லை’ என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. அன்றாடம் சந்திக்க நேரும் அபத்தங்களில் ஒன்று ஒரு மனிதனின் எதிர்காலத்தையே நொறுக்கிச் சாய்க்கும் துயரத்தை பல சமயம் நாம் உணர்வதில்லை. உரச் சாக்குகளை வீணடிக்காமல் படுதாக்களாக மாற்றி அறுப்பு காலத்தில் பயன்படுத்தத் தெரிகிற அளவு பயன்பாட்டு மதிப்பைத் தெரிந்தவர்களுக்கு, சாதாரண உறவுச் சிக்கல்களை, சண்டைகளைப் பொருட்படுத்தாமல் விட்டுக்கொடுத்து ஒத்துப்போகத் தெரிவதில்லை. 

கிராமங்களின் உழவு சார்ந்த வழக்கங்களை கதைகளில் வெறும் தகவல்களாக அடுக்காமல் அவற்றை கதையின் செறிவான அடுக்குகளாக மாற்றும் தன்மை கமலதேவியின் கதைகள் பலவற்றிலும் பார்க்க முடியும். அறுப்பு முடிந்து சும்மா கிடக்கும் நிலத்தில் விதைகளைத் தூவி அவை முளைத்ததும் காட்டை உழும் வழக்கத்தைப் பற்றிய உரையாடல் ‘நாத்து போடற வரைக்கும் ஆடு மாடு திங்கற மிச்சம் மண்ணுக்குத்தான்’ என்று முடிகிறது. இது கதைக்குள் இடம்பெறுகிற ஒரு வரியாக மட்டும் அமையாமல் மனிதர்களைப் பற்றியும் வாழ்வின் பொருளைக் குறித்துமான ஒரு கேள்வியையும் எழுப்புகிறது. வயல்களில் உள்ள பாம்புப் புற்றுகளை தெரிந்தோ தெரியாமலோ சேதப்படுத்தவோ அல்லது அவற்றைத் தொந்தரவு செய்யவோ நேரும், அதனால் அவற்றின் கோபத்துக்கு ஆளாகலாம் என்பதற்காக சேவல் அறுத்து காவு தரும் வழக்கம் இந்தக் கதையில் சொல்லப்பட்டுள்ளது. மண்ணினி மீதும் உயிர்களின் மீதும் மனிதர்களின் கொண்டிருந்த அணுகுமுறையும் இயற்கையுடன் தன் வாழ்வையும் இணைத்துப் பார்த்த விகாசத்தையும் துலக்கிக் காட்டும்விதமாகவே அமைந்துள்ளது. 


இத்தொகுப்பிலும் இதற்கு முந்தைய மூன்றுத் தொகுப்புகளிலும் உள்ள கமலதேவியின் கதைகள், பலவும் இவ்வாறான அடர்த்தியையும் ஆழத்தையும் கொண்டிருப்பவை. உரையாடல்களால் நகர்பவை. முக்கியமல்லாததுபோலத் தோற்றம் தரும் தகவல்களினிடையே கதையின் முடிச்சை ஒளித்து வைத்துவிட்டு அவற்றை அவிழ்க்கும் யுக்தியை மனச் சலனங்கள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள், அக மோதல்களினூடே தொட்டுக் காட்டுகின்றன. நேரடியான கதைகள் போலத் தோற்றம் மட்டுமே தரும் இவற்றில் உள்ள விடுபட்ட இடங்களைப் பூர்த்தி செய்வதன் மூலமாக மட்டுமே முழுமையாக புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் கமலதேவியின் கதைகள் சவாலானவை. 

சொல் விளையாட்டு, சிக்கலான வாக்கிய அமைப்பு, காலத்தை புரட்டி முன்னும் பின்னுமாக அமைப்பது போன்ற பல்வேறு யுக்திகள் எதுவுமின்றி மிக யதார்த்தமான கிராமிய வாழ்வின் பின்னணியில் துல்லியமான உரையாடல்களைக் கொண்டே ஆழமான கேள்விகளை எழுப்புவதோடு வாசிப்பில் நிறைவையும் தரமுடியும் என்பதை கமலதேவியின் இக்கதைகள் வலுவாக உணர்த்துகின்றன.

( ‘கடல்’ சிறுகதைத் தொகுப்பு, வாசக சாலை வெளியீடு )

Sunday 13 March 2022

புதினங்கள் புதிது - தருநிழல், காயாம்பூ, கதீட்ரல், பாகன்



2021ம் ஆண்டின் இறுதியில் புதிய நாவல்கள் சில வெளியாயின. அவற்றுள் ஆர்.சிவகுமாரின் ‘தருநிழல்’, லாவண்யா சுந்தர்ராஜனின் ‘காயாம்பூ’, தூயனின் ‘கதீட்ரல்’, கிருஷ்ணமூர்த்தியின் ‘பாகன்’ ஆகிய நான்கு நாவல்களை வாசிக்க முடிந்தது.

தருநிழல், பாகன் இரண்டு நாவல்களுக்கும் சில பொதுத்தன்மைகள் இருந்தன. இரண்டுமே தந்தை-மகன் உறவை மையப்படுத்தியிருந்தவை. இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் இந்த உறவு நிலையில் எந்த வகையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை குறிப்புணர்த்தியவை. சித்தரிப்பில் புறவயமான அணுகுமுறையைக் கொண்டிருந்தவை. நேரடியான சம்பவங்களாலன்றி நினைவுகூறல் உத்தியைக் கொண்டு அமைக்கப்பட்டவை. அளவில் சிறியவை.

காயாம்பூ கூடுதல் பக்கங்களைக் கொண்டது. நேரடியான சம்பவங்களின் மூலம் நகர்வது. சிறிய அத்தியாயங்களையும் அதிகமும் உரையாடல்களையும் கொண்டது. தனிமனிதரின் மீது சமூகம் காலங்காலமாய் சுமத்தும் பழியையும், சமகால மருத்துவமும் அறிவியலும் அளிக்கும் தீர்வுகளில் உள்ள அவலத்தையும் முன்னிலைப்படுத்துகிறது.

கதைக்களம், சொல்முறை, அமைப்பு என எல்லா விதத்திலும் வேறுபட்டது கதீட்ரல். துப்பறியும் நாவலுக்கான விறுவிறுப்புடன் புனைவின் சாத்தியங்களை எட்டும் முனைப்புடன் எழுதப்பட்டது.

1



தருநிழல் - தகப்பன் மரத்துக்குக் கீழே…

‘இந்த நாவல் சிறு வயது நினைவுகளைச் சொல்வது’ என்றதுமே அது பழைய விஷயங்களைப் பேசுவது என்ற ஒரு எண்ணம் உடனடியாக நாவலின் மீது கவிந்துவிடுகிறது. இவ்வுலக வாழ்வின் பல ஆதாரமான அம்சங்கள் தொன்றுதொட்டு இருப்பவை. எனவே அவற்றை நாம் பழையன என்று ஒதுக்கிவிட முடியாது. ஒரு தந்தைக்கும் தனயனுக்குமான உறவு என்பது அவ்வாறான ஒன்று. அதுபோலவே ஒரு மனிதனுக்கும் அவனது பூர்விகத்துக்குமான தொடர்பும்.

எழுபதுகளில் தந்தைக்கும் தனயனுக்குமான உறவு என்பது விலகலுடன்கூடியது. அத்தனை நெருக்கமற்றது. மரியாதை, அச்சம், தயக்கம் என பல உணர்வுநிலைகளுடன் அமைந்தது. தேவைகளைச் சொல்லக்கூட நேரங்காலம் பார்த்து அடங்கிய குரலிலேயே சொல்லச் செய்வது. இருவருக்கும் பல நேரங்களில் பாலமாக விளங்குவது அம்மா. தந்தைகளில் பலருக்கும் மகன் எந்த வகுப்பில் படிக்கிறான் என்பதே உறுதியாகத் தெரியாது. படிக்க வைக்கவேண்டும் என்பது மட்டும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பொருளாதார சிரமங்களைக் காட்டிக்கொண்டதில்லை. பிள்ளைகளின் வாழ்க்கைத் தன்னுடையதைப் போலில்லாமல் இருக்கவேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. அப்பாவும் மகனும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளும் சந்தர்ப்பங்களே மிகக் குறைவு. இருவருக்குமிடையேயான உரையாடல்களே சொற்பம்.

கிராமத்திலிருந்து கல்லூரிக்கு செல்ல வாய்க்கும் இளைஞர்களின் முதல் இலக்கு ஏதேனுமொரு வேலையும் மாதச் சம்பளமும்தான். இதைத் தாண்டி வேறு கனவுகள் பெரிய அளவில் இருக்காது. சரியான ஆசிரியர்களும் நண்பர்களும் வாய்க்கும் ஒரு சிலருக்கு வாசிப்பும் இலக்கியமும் அறிமுகமாகும். இன்னும் வெகு சிலருக்கு மார்க்சியம். இந்த இரண்டிலுமேகூட ஆசைப்படும் அளவுக்கு ஈடுபடமுடியாத நெருக்கடியை தரும் நடைமுறை வாழ்வு.

வேலை கிடைத்தவுடன் பெற்றவர்களுக்கு ஓய்வு தரவேண்டும், நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கம் பெரிய லட்சியமாக உருவாகி நின்றபோதும் புதிய தேவைகளும் கடமைகளும் அவ்வாறான வழிகளை மறைத்துவிடும். ஒரேயொரு வித்தியாசம், இப்போது அப்பாவுக்கு பதிலாக மகன் கடன் வாங்குகிறான். ஆயுள் முழுக்க உழைத்து மாட்டிக்கொண்ட சக்கரத்திலிருந்து அவர் வெளியே வந்துவிட அந்த இடத்தில் பிள்ளை மாட்டிக்கொள்கிறான்.

எழுபதுகளைச் சேர்ந்த பட்டதாரிகள் பலரது வாழ்வு இவ்வாறானதுதான். ‘தருநிழல்’ அப்படியொரு பட்டதாரியின் வாழ்வைச் சொல்கிறது. எழுபதுகளில் கிராமங்களிலிருந்து வெளியில் வந்த முதல் பட்டதாரிகளின் கதை இதுவே. ஊர்களும் பெயர்களும் வேறு வேறு, அதுமட்டுந்தான் வேறுபாடு.

இன்னும் ஆழமாகப் பார்த்தால் இது சந்திரனின் கதை அல்ல, ராமசாமியின் கதை. நாவல் முழுக்க ஒலிக்கும் குரல் சந்திரனுடையது என்றாலும் அதன் பின்னிருக்கும் மௌனம் ராமசாமியுடையது. பெற்று வளர்த்த பிள்ளை தன் பாரத்தைத் தாங்குவதைக் கண்டு நிம்மதிகொள்ளும் தந்தைமை, தன் இருப்பைத் தொலைத்த வெறுமையைத் தாங்க முடியாத துயரம். அவருடைய தேவை முடிந்து போவதென்பது அவரையே இல்லாமல் ஆக்குவது. அதனால்தான் பிள்ளைகள் எத்தனை வசதியாக இருந்தபோதும் பெற்றவர்கள் கிராமத்து வாழ்விலேயே எஞ்சிய காலத்தை கழிக்க விரும்புகிறார்கள். அது அவர்கள் வேர் பிடித்த பூமி. அங்குதான் வாழ்வும் தாழ்வும். வசதியான ஊரில் முகம் பார்த்து பேச முடியாத சூழல் என்பது செடியை வேருடன் பிடுங்கி வேறிடத்தில் பதியன் போடும் முயற்சிதான். பலரும் அதில் தழைப்பதில்லை, பட்டுப்போகவே செய்வார்கள்.

‘தருநிழல்’ ஒரு காலகட்டத்தின் சித்திரம். இன்று அறுபது வயதைத் தொட்டும் தாண்டியுமிருக்கும் பலரது வாழ்வையும் இது திரும்பிப் பார்க்கச் செய்கிறது. அன்று சிறுவர்களாகவும் கல்லூரி இளைஞர்களாகவும் இருந்து அவரவர் தந்தையர்களை அணுகியவர்கள் இன்று ஓய்வுபெற்று, அப்பாக்களாக, தாத்தாக்களாக தத்தமது பிள்ளைகளைப் பார்க்கிறார்கள். இன்றைய தலைமுறை அப்பாக்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு சற்று வெளிப்படையானது. பிள்ளைகளுக்கு நிறைய சுதந்திரத்தைத் தருவது. நேருக்கு நேர் நின்று தனது தரப்பைச் சொல்லும் தைரியத்தையும் கொடுத்திருப்பது. அந்தக் காலத்தின் நினைப்புடன் ‘நாங்கல்லாம் அந்தக் காலத்துல…’ என்று சொல்பவரைப் பார்த்து சிரித்து, விமர்சனம் செய்யும் உரிமை கொண்டது. எனவே, இன்றைய தலைமுறைக்கு இந்த நாவல் காட்டும் அப்பா-பிள்ளை உறவு என்பது சற்று வியப்பைத் தரக்கூடும். நம்ப முடியாததாகக்கூட இருக்கும். எனவே, இது முந்தைய தலைமுறை அப்பாக்களின் நினைவுகளை மீட்டும் நெகிழ்ச்சியான சித்திரம். இன்றைய தலைமுறை அப்பாக்களும் பிள்ளைகளும் இந்த நெகிழ்ச்சியை புரிந்துகொள்ளாமலும் போகக்கூடும். அல்லது பொருட்படுத்தாமலும். ஆனால், ஒரு தலைமுறை தன் வாழ்வில் தான் கற்ற மதிப்பீடுகளை அடுத்த தலைமுறையிடம் எந்த ஆர்ப்பாட்டமும் வலியுறுத்தலும் இல்லாமல் இயல்பாகக் கடத்தியிருக்கும் நுட்பத்தை அவர்கள் புரிந்துகொள்வதே முக்கியம்.

உலகின் மகத்தான ஆக்கங்களை திறம்படி மொழிபெயர்த்திருக்கும் சிவகுமாருக்கு தன்னுடைய நாவலை எதுமாதிரியான மொழியில், வடிவில் தரவேண்டும் என்ற தெளிவு இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அதே நேரத்தில் தன் சொந்த வாழ்வு தொடர்பான அனுபவங்களையும் நிகழ்வுகளையும் உள்ளது உள்ளபடி எழுதிவிடும் இயல்பு கொண்டவருமில்லை அவர்.

ரயில் பாதையும் வயல்வெளிகளுமான ஒரு கிராமம், எளிமையான அதன் மனிதர்கள், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவே போதாத வருமானம் கொண்ட குடும்பம், உறவுகள், திருவிழாக்கள், பள்ளிக்கூடம், சினிமா, கல்லூரிப் பருவம், விடுதி வாழ்க்கை, நண்பர்கள், வேலையில்லா நிலை, கல்யாணம், கடன், நோய்மை என எழுபதுகளின் காலகட்டத்து நாவல் ஒன்றுக்கான அனைத்து அம்சங்கள் இந்த நாவலில் உள்ளன. ஆனால், ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் அவற்றைச் சொல்லும்போது உள்ளபடியே அவற்றை வெளியில் நின்று பார்க்கும் ஒரு தன்மை வாய்த்துவிடுவதை இதன் சித்தரிப்பு முறை உறுதிப்படுத்துகிறது. தமிழ் நாவல் இலக்கியமும் கணிசமான தொலைவையும் உயரத்தையும் கடந்துவிட்ட நிலையில் அன்றைய கதையை இன்றைய வாசிப்புக்கு ஏற்றாற்போல சொல்லவேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது. 

புறவயமான சித்தரிப்பு முறையில் இந்த நாவலின் பெரும்பகுதியும் அமைந்திருப்பதை அப்படித்தான் புரிந்துகொள்ள முடிகிறது. உணர்ச்சித் ததும்பல்கள் இல்லாத நேரடியான எளிமையான வாக்கியங்களில் சம்பவங்களுக்கும் காட்சிகளுக்கும் வெளியில் நின்று அடங்கிய குரலில் நாவல் சொல்லப்படுகிறது. இலக்கியம், மார்க்ஸியம் குறித்து நண்பர்களுக்குள்ளும் ஆசிரியர்களுடனும் பேசுகிற சில பகுதிகள் மட்டுமே உரையாடல்களாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த உத்தி நாவலை ஒரு ஒலி வடிவ நாவலாக உணரச் செய்கிறது.

நாவலின் போக்கில் இலக்கிய சஞ்சிகைகள் குறித்தும் எழுத்தாளர்கள், இடதுசாரித் தலைவர்கள் பற்றியும் குறிப்புகள் சொல்லப்படுகின்றன. தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி போன்ற சில பெயர்களைத் தவிர பிற பெயர்கள் நேரடியாகச் சொல்லப்படவில்லை. சில இலக்கிய இதழ்களின் பெயர்களும்கூட. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்கூட அவை நம் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்ட நிலையில் அவற்றைச் சொல்லியிருந்தால் நாவலின் நம்பகத்தன்மை இன்னும் வலுப்பெற்றிருக்கும்.

நவீன நாவல்களின் வீச்சும் வகைமைகளும் வெளியாகும் ஒவ்வொரு புதிய நாவலின் மீதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. அதுவொரு சுமையும்கூட. நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும், பத்தியையும் புறவயமாக சொல்லாமல் சம்பவங்களின் வழியாக, உரையாடல்களுடன் அமைத்திருக்கும் சாத்தியம் உள்ளது. அப்படிச் செய்திருந்தால் நாவலின் அடர்த்தியும் புனைவுத் தன்மையும் கூடியிருக்கும். இந்த நாவல் இன்னும் கூடுதலான உயரத்தைத் தொட்டிருக்கும். ஆர்.சிவகுமார் ஒரு பேராசிரியராக அல்லாமல் ஒரு நாவலாசிரியராக முழுமையாக தன்னை இந்த நாவலிடம் ஒப்படைத்திருந்தால் அதன் பலன் மொத்தமும் வாசகர்களுக்கே சென்றடைந்திருக்கும்.

கதைக் களத்தையும் கதாபாத்திரங்களின் தன்மைகளையும் புறவயமாக உணர்ச்சி மோதல்களோ தழும்பல்களோயின்றி இந்த நாவல் சொல்லியிருந்தபோதும் தந்தையின் நோய்மையையும் வெறுமையையும் சித்தரிக்கும் இறுதிப் பக்கங்களை வாசிக்கும்போது மனம் கலங்கத்தான் செய்கிறது. ஆழமான உறவுகளை எப்படிச் சொன்னாலும் நமக்குள் இருக்கும் ஆதிமனம் அதைச் சுலபமாகக் கண்டுகொள்வதன் அடையாளம்தான் அது.

( தருநிழல், ஆர்.சிவகுமார் – காலச்சுவடு வெளியீடு, டிசம்பர் 2021)

2





மக்கட்பேறு - வரமும் சாபமும் : காயாம்பூ

உயிர்களின் தொடர்ச்சி சந்ததிகளால் உறுதிப்படுவது. அதற்கான வாய்ப்பை பெண்களுக்கு அளித்திருக்கிறது இயற்கை. பலருக்கும் வரமாகவும் நற்பேறாகவும் அமைந்துவிடுகிறது ‘குழந்தைப் பேறு’. ஆனால், சிலருக்கு மட்டும் அது வாய்க்காமல் போகிறது. அதுவும் இயற்கைதான் என்றாலும் அதை அப்படியே ஒப்புக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவுமான மனநிலையும் முதிர்ச்சியும் எல்லோருக்கும் அமைவதில்லை. குழந்தைப் பேறு இல்லாத பெண்களைக் குறித்த சமூகத்தின் பார்வையில் தொடக்க காலம்தொட்டு இன்று வரையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை. திருமணமாகி குழந்தை பெற்றுத் தராத ஒருத்தியை இந்தச் சமூகம் ஒரு பெண்ணாகவே, உயிராகவே மதிப்பதில்லை. அமங்கலத்தின் பிரதிநிதியாகவே அவள் கருதப்படுகிறாள். சுபநிகழ்ச்சிகளில் அவளுக்கு அனுமதியில்லை. பிறந்த குழந்தையை ஆசையுடன் தொட்டுத்தூக்க முடியாது. வளைகாப்பு, சீமந்த விழாக்களில் முன்னால் நிற்க அனுமதியில்லை. குழந்தைப் பேறுக்கான பொறுப்பு அவளுக்கு மட்டுமே என்றொரு நிலையும் இருந்தது. அதில் ஆணுக்கும் சம பங்கும் பொறுப்பும் உள்ளது என்பதை உணரவும் அதை வெளியில் சொல்லவுமே காலம் பல தேவைப்பட்டது. இன்றும்கூட குழந்தைப்பேறு தாமதமாகும்போது சோதனைக்கு முதலில் உட்படுத்தப்படுவது பெண்தான்.

மக்கட்பேறு வாய்க்காத பெண்கள் கணவனின் மறுமணத்துக்கு ஒப்புக்கொள்ளவேண்டும் என்பதில் தொடங்கி பிறந்தகத்துக்கு திருப்பி அனுப்புவது வரையிலும் பல்வேறு சமூக நிர்ப்பந்தங்களை பெண்ணின் மீது சுமத்தும் நடைமுறைகள் இன்றும் கடைபிடிக்கப்படுவதை அறிய முடிகிறது. தீர்வுகள் என்ற பெயரில் விதவிதமான மூடப்பழக்கங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து நிலவுகின்றன. கோயில்கள், பூசைகள், பரிகாரங்கள், ஜோசியம் என அனைத்துமே பெண்களின் மீது அழுத்தங்களையும் நிறுவி வியாபாரமாக மாற்றுகின்றன.

உயிர்கொல்லி நோய்கள் பலவற்றுக்கும் மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் கண்டுபிடித்திருக்கும் விஞ்ஞானமும் மருத்துவமும் இதற்கு விதிவிலக்கில்லை. ‘குழந்தைப் பேறு’ சார்ந்த சிகிச்சையிலும் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சமூகத்தின் பார்வையிலிருந்தும் விமர்சனங்களிலிருந்தும் தன்னை பாதுகாத்துக் கொள்ள முனையும் பெண்களை இலக்காகக் கொண்டுள்ளது இந்த சிகிச்சை முறை, கணிசமான அளவில் பொருட்செலவையும் எண்ணற்ற பரிசோதனைகளையும் கொண்டதும்கூட. சோதனைக் குழாய் கருத்தரிப்பு, வாடகைத் தாய், விந்து தானம் உள்ளிட்ட பல்வேறு முறைகளைக் கொண்ட இச்சிகிச்சை இன்று பெரும் வணிகமாக உருமாறியுள்ளது. ஆகவே, மறைமுகமான பல்வேறு முறைகேடுகளுக்கும் வழிவகுப்பதாக இருக்கிறது.

 

பெண்ணின் மீது கவியும் இந்தப் பெரும் சுமையைக் குறித்தும் சமூக அழுத்தம் பற்றியும் பேசும் புனைவுகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவை. ‘அவன், அவள், அது’ என்ற சிவசங்கரியின் நாவல் வாடகைத் தாய் முறையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. குழந்தைப்பேறின்மையைத் தொடர்ந்து ஒரு பெண்ணும் அவள் கணவனும் எதிர்கொள்ள நேரும் வலிகளையும் வேதனைகளையும் அவமானங்களையும் நுட்பமான சிக்கல்களையும் அகமோதல்களையும் அரசியலையும் பேசும் நாவலாக அமைந்திருக்கிறது லாவண்யா சுந்தர்ராஜனின் ‘காயாம்பூ’.

பெண்களின் சமூக இருப்பையும் அவர்களது வாழ்வின் முழுமையான பொருளையும் கேள்விக்குள்ளாக்கும் நுட்பமான அம்சத்தை மையமாகக் கொண்டு நாவலை எழுதுவது சவாலானது. அனைவரும் அறிந்த  ஒன்றுதானே, இதில் புதிதாக என்ன உள்ளது என்ற எளிமையான கேள்வியிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழ வாய்ப்புண்டு. ஆனால், உண்மையில் அனைவரும் அறிந்த ஒன்றின் அறியாத பல பக்கங்களை இந்த நாவல் பேசத் துணிந்திருக்கிறது.

கிராமங்கள், சிறு நகரங்கள், பெருநகரங்கள் என்று சூழலும் வாய்ப்புகளும் மாறுபட்டபோதும்கூட மக்கட்பேறு சார்ந்த சமூகத்தின் பார்வையில் எந்த மாறுதலும் இல்லை என்பதை சொல்லும்விதத்தில் சண்டிகர், மகேந்திரபுரம் என்ற இருவேறு களங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைப் பேறு வாய்க்காத தம்பதியின் இந்த கையறு நிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் மருத்துவமனைகளில் நிலவுகிற சிறிதும் கண்ணியமற்ற, இரக்கமற்ற பல்வேறு அம்சங்களை நாவல் விவரிக்கிறது. ஏற்கெனவே கடுமையான தொந்தரவுக்கு உள்ளாக்கும் மனவலியுடன் உடலை நோகடிக்கும் பல்வேறு பரிசோதனை முறைகள், அவற்றை கையாளும் மருத்துவர்கள், செவிலிகளின் இயந்திரத்தனமான அணுகுமுறை, ஒவ்வொரு முறையும் பதற்றத்துடன் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் பரிதாபமான நிலை என சிகிச்சைக்குள்ளாகும் சிக்கல்களை துயருடன் வெளிப்படுத்தியுள்ளது. பொருட்செலவு மிக்கதாகவும் வேதனையைத் தந்து மன அமைதியைக் குலைப்பதாக இருந்தபோதும் ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று அடுத்தடுத்து வெவ்வேறு சிகிச்சைகளுக்கும் பரிசோதனைகளுக்கும் தயாராகும் அளவுக்கு சமூகத்தின் புற அழுத்தம் மேலும் கடுமையாக, வலி தருவதாக இருக்கும் யதார்த்தத்தையும் விமர்சிக்கிறது.

இத்துடன் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் நடைமுறையிலிருக்கும் பக்தி, ஜோதிடம், பரிகாரங்கள் போன்ற நம்பிக்கைகளையும் அதைப் பயன்படுத்திச் சுரண்டும் போலித்தனங்களையும் நாவல் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்தச் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் தம்பதியின் எதிர்பார்ப்புகள், ஆசைகள், ஏமாற்றங்கள், அவமானங்கள், ஆற்றாமை, சினம், சீற்றம், சலிப்பு, சோதனைகள், மோதல்கள், ஆறுதல்கள் என அலைபாயும் மனம் அமைதிகொள்வதேயில்லை. ஊரையும் உறவுகளையும் எதிர்கொள்ள நேர்கிற சந்தர்ப்பங்கள், திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகள் போன்றவற்றில் இயல்பான உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்ள முடியாத நெருக்கடி. யாரைப் பார்த்தாலும் எதைப் பற்றி பேசினாலும் இறுதியில் அது வந்து நிற்பது ‘அப்பறம், விசேஷம் ஒண்ணும் இல்லையா?’ ஆண்களைக் காட்டிலும் இப்படியான கேள்விகளை பெண்களே அதிகமும் எதிர்கொள்ள நேரிடுகிறது. பெண்ணின் கல்வி, வேலை என தகுதிகள் பல இருந்தபோதும் அவற்றையெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கும் வலிமை வாய்ந்தது ‘எத்தனை குழந்தைகள்?’ என்ற ஒரு கேள்வி. இந்த நாவலின் நாயகி நந்தினி துணிச்சலானவள். எதற்கும் சோர்ந்துபோகாதவள். வலியையும் வேதனைகளையும் கடந்து ஒவ்வொரு முறையும் நம்பிக்கையுடன் அடுத்த சோதனைக்கு முன்வருபவள். ஒரு சோதனை எலியைப்போல ஆக்கப்பட்டிருக்கும் நிலையை எண்ணி மனம் கசந்தபோதும் ஏதேனுமொரு வழியில் இது கைகூடாதா என்ற ஏக்கமும் தொடர்கிறது. இதுவே அவளது கதாபாத்திரத்தின் இயல்பையும் பெண்களின் பொதுவான அகஉலகையும் உறுதிப்படுத்துவதாக அமைகிறது.

நாவலின் இந்த மைய இழைக்கு இணையாக அமைந்திருக்கும் இன்னொரு சரடு, வாரிசுகளின் நல்வாழ்வின் பொருட்டு மாறும் பெண்களின் இயல்புகளை சுட்டிக்காட்டுகிறது. இந்தச் சரட்டின் முக்கிய கதாபாத்திரங்களான தேன்மொழி, அலமேலு இரண்டுமே, எண்ணற்ற புதிர்வழிகளுடனும் கணக்குகளுடனும் உயிர்ப்புடன் அமைந்துள்ளன.

அறியாப் பருவத்திலிருக்கும் பெண்களை பாலியல் சீண்டல்களுக்கு ஆண்கள் ஆட்படுத்தும் நிகழ்வுகள் நமக்குப் புதிதல்ல. மாறாக, முதிர்ச்சி பெறாத ஒரு சிறுவனை முறைகேடாக ஒரு பெண் பயன்படுத்துவதும் அதைத் தொடர்ந்து அவனது இறப்பும் பெண்கள்-குழந்தைகள் சார்ந்த பொதுப் புத்தியினைக் கேள்விக்கு உட்படுத்துவதாக நாவலின் ஒரு பகுதி அமைந்துள்ளது. கதையின் மைய இழையை மேலும் நுட்பமாக அணுகுவதற்கு இந்தக் கிளைக்கதை உதவி புரிகிறது.

குடும்ப உறவுகளுக்குள் நிலவும் போட்டிகள், பொறாமைகள், சந்தர்ப்பவாதம், சுயநலம், அக்கறை, கரிசனம், ஆற்றாமை எல்லாவற்றையுமே உள்ளடக்கிய இயல்பான நிகழ்வுகள் அமைந்துள்ளன என்றாலும் நாவலின் அத்தியாயங்கள் சிறியவை. அதிகபட்சம் நான்கு பக்கங்களே. 381 பக்கங்கள் கொண்ட நாவலில் 120 அத்தியாயங்கள். சில அத்தியாயங்கள் ஒரே பக்கத்தில் ஒருசில வரிகளில் அமைக்கப்பட்டுள்ளன. உரையாடல்களும் புறக்காட்சிகளுமாய் அமைந்திருக்கும் இந்த அத்தியாயங்களில் அகம் சார்ந்த விசாரணைகளும் கொந்தளிப்புகளும் அழுத்தமாய் சொல்லப்பட்டிருந்தால் நாவலின் மையத்துக்கு வலுசேர்ப்பதாய் அமைந்திருக்கும்.

நாவலின் செறிவை பலவீனப்படுத்துவதாய் அமைந்துள்ள எண்ணற்ற கதாபாத்திரங்களையும், எளிதில் பகுத்துப் புரிந்துகொள்ள முடியாத உறவு முறைகளையும் கணக்கிலெடுத்துக்கொண்டு குறைத்து எளிமைப்படுத்தியிருக்கலாம். இறுதி அத்தியாயங்கள் படுவேகமாய் நகர்ந்து மறைகின்றன. புதிய கதாபாத்திரங்கள் பெயரளவில் வந்து போகின்றன. இத்தனை அழுத்தமான ஒரு நாவலின் இறுதிப் பகுதி வலுவாகவும் நினைவில் அழுந்தி நிற்பதாகவும் அமைந்திருப்பின் சிறப்பாக இருந்திருக்கும்.

ஒவ்வொரு மனிதனும் இந்த மண்ணில் தன் தொடர்ச்சியை விட்டுப்போகவே விழைகிறான். சந்ததிகளின் நினைவில் உள்ள வரை எவர் வாழ்வும் முடிந்துபோவதில்லை. ஆல்போல் கிளைவிரித்து வேர்பிடித்து தழைக்கும் வம்ச விருட்சத்தின் வேராக இருக்கவே ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசை, அவா. உயிர்வாழ்வின் இந்த அடிப்படையின் தொடர்ச்சியாய் குழந்தைப்பேறு தொடர்பாக சமூகத்தில் நிலவும் புராதனமான நம்பிக்கைகள், மூடத்தனங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது ‘காயாம்பூ’. இதனுடன் நவீன மருத்துவம் இந்த வாய்ப்பை வணிகமயமாக்கும் அவலத்தையும் சோதனை எலிகளாய் நடத்தப்படும் பெண்களின் உடல், மன வலிகளையும் நுட்பமாக, அழுத்தமாக விவரித்திருக்கிறது. அந்த விதத்தில் ‘காயாம்பூ’ முக்கியமான ஒரு நாவல்.

கல்வியும் வேலை வாய்ப்பும் பெண்களுக்குரிய இடத்தை உறுதிப்படுத்தியிருக்கும் இன்றைய சூழலிலும் பல பெண்களின் மீது ஒரு குறையாகவும் குற்றமாகவும் சுட்டப்படுவது குழந்தைப்பேறின்மை. வெளியில் உரத்துப் பேச முடியாத அளவுக்கு அகச்சிக்கல்களைக் கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினையை மையப்படுத்திய விதத்திலும் அதன் பல்வேறு சரடுகளை ஒன்றிணைந்து வலுவான குரலை ஒலித்திருக்கும் வகையிலும் ‘காயாம்பூ’ தன் முக்கியத்துவத்தை அடைந்துள்ளது.  

0

காயம்பூ – நாவல், லாவண்யா சுந்தரராஜன், காலச்சுவடு, நவம்பர் 2021

3




கதீட்ரல் –

 

‘இருமுனை’, ‘டார்வினின் வால்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளின் வழியாக கவனம் பெற்றிருப்பவர் தூயன்.

தூயன் சொல்லும் கதைகள் புதியன அல்ல. ஏற்கெனவே இங்குள்ள கதைகளைத்தான் அவர் சொல்ல முனைகிறார். ஆனால், அதை சொல்ல அவர் தேர்ந்தெடுக்கும் வடிவமும் மொழியும் வேறு. பழகிப்போன கதை வடிவங்களையும் சித்தரிப்பு மொழியையும் விடுத்து புதிய வடிவில் புதிய மொழியில் சொல்கிறார். அதுவே அவரது எழுத்தைக் கவனிக்கச் செய்கிறது.

தமிழ் நாவல் பழகியுள்ள தடத்திலிருந்து விலகி புதிய வழியிலும் வகையிலும் புனைவைத் தரவேண்டும் என்ற முனைப்புடன்  எழுதப்பட்ட நாவல் கதீட்ரல். நாவலின் தலைப்பு, உப தலைப்பு, அட்டை அமைப்பு, நாவலின் அத்தியாயங்கள், துணை தலைப்புகள் என ஒவ்வொரு அம்சமுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. தமிழில் இதுபோன்ற முயற்சிகள் புதிதல்ல என்றாலும் அவை தொடர்ச்சியின்றி நின்றுபோயின. இப்போது இந்த நாவல் மீண்டும் அத்தகைய முயற்சிகளைத் தொடரச் செய்வதற்கான உத்வேகத்தைத் தரக்கூடும்.

புதுமையைச் சார்ந்த இந்த முனைப்பு நாவலை அணுகுவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அதை மேலும் வலுப்படுத்தும் விதமாக நாவலின் கதை ஒரு துப்பறியும் கதைக்கேயுரிய விறுவிறுப்புடனும் வேகத்துடனும் விரிகிறது. மலை உச்சியில் வனத்தின் நடுவே எளிதில் யாரும் அடையமுடியாத இடத்தில் புதிரான அமைப்பையும் வழிகளையும் கொண்டிருக்கும் மிஷன் கட்டடமும் அதில் நீட்ஷன் பாதிரியார் மேற்கொள்ளும் ரகசியமான பரிசோதனையும் என புதினம் அடுத்தடுத்து மர்மங்களைக் கூட்டுகிறது. நாவலின் பிரதான கதாபாத்திரங்கள் நான்குதான். ஆனால், அவை ஒவ்வொன்றுக்குமான பூர்வகதைகள் புராணிகத் தன்மையுடன் அமைந்துள்ளன. இந்த நான்கு கதாபாத்திரங்களுக்கும் இடையிலான கதைப்பிணைப்பே வெவ்வேறு கண்ணிகளாக தொடர்ச்சியாகவும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாததாகவும் பின்னியுள்ளது. கதைக்குள்ளாகவே விரியும் கதைகளும் கதாபாத்திரங்களே கதைக்கு வெளியிலும் உள்ளேயும் மாறி மாறித் திரிவதுமான புனைவு உத்தி இந்தக் கதைக்கு மேலும் மர்மம் கூட்டுகிறது. இருநூறு பக்கங்களுக்கும் குறைவான நாவலை தொடர்ந்து படிக்கச் செய்கிறது.

துப்பறியும் கதைக்கான விறுவிறுப்புடன் சொல்லப்படும் இந்தக் கதை பழங்குடிகள், இயற்கைச் சீற்றம், அறிவுத் திருட்டு, ரகசிய உளவியல் ஆராய்ச்சி, சமஸ்தானங்கள், ஆங்கிலேய ஆட்சி, குரலற்ற இந்திய வேலையாட்கள், புதிரான கட்டட நுட்பம், கட்டி முடிக்கப்படாத தேவாலயத்துக்குள் கூலிகளை எரியூட்டுதல் என பல்வேறு திரிகளை தனித்தனியாகவும் ஒன்றுடன் ஒன்று பிணைத்தும் கொண்டுள்ளது. பல முனைகள் எந்தவிதமான முடிச்சுகளுமின்றி, முடிவுகளுமின்றி அப்படியே விடப்பட்டுள்ளன. இவை அனைத்துமே ஒரு கதை மையத்தை நோக்கி ஒரே திசையில் குவிந்து ஒட்டுமொத்த ஒரு உடலாக, நாவலாக அமைந்துவிடுகின்றன.

கொடைக்கானல், பிரிட்டிஷ் ஆட்சி காலகட்டம் என புனைவை இந்த நிலத்துடன் காலத்துடன் பிணைத்துக்காட்டுவதற்கு முயன்றபோதும் பல சமயங்களில் அந்த எல்லைகளை மீறி வேறொரு காலத்தில் வேறொரு புலத்தில் மாயத்தன்மையுடன் நிகழ்வதாகவே உணர முடிகிறது.

மலையுச்சியில் அமைந்த மிஷன் கட்டடம், அதன் புதிர் வழிகள், எப்போதும் இறுகியிருக்கும் இருள், உருகும் மெழுகின் மஞ்சள் வெளிச்சம், கண்ணாடிக்குள் பிம்பங்களின் சந்திப்பு, சைகை மொழி, மரப் பலகைகளில் ஒலிக்கும் காலடி ஓசைகள், பூனையின் நடமாட்டம், யாளியின் உருவில் பிரமாண்டமாய் அலையும் ஊழி என மர்மமான உலகின் பல்வேறு அம்சங்களையும் தனித்துவமான சொற்களைக் கொண்டு சித்தரித்திருக்கும் விசேஷமான புனைவு மொழியைக் கொண்டிருக்கிறது இந்த நாவல்.

கிறித்துவ தேவாலயத்தின் பின்னணி, புதிரான தோற்றமும் வழிகளும் கொண்ட கட்டடம், மேல் தளத்தில் உள்ள நூலகம், அதற்கான விசேஷமான திறவுகோல் என நாவலின் பல அம்சங்களும் ‘டாவின்சி கோட்’, ‘இன் தி நேம் ஆஃப் த ரோஸ்’ ஆகிய இரண்டு நாவல்களையும் நினைவுபடுத்துகின்றன. இந்த இரண்டு நாவல்களும் தரும் பரவசத்தையும் விறுவிறுப்பையும் ‘கதீட்ர’லும் தருகிறது. சொல்முறை, காட்சிகள், அமைப்பு என நாவல் கட்டமைப்பின் பல நுட்பங்களிலும் புதியவற்றை முயலும் முனைப்பைப் பார்க்கமுடிகிறது.

இந்த நாவலை மேலும் வலுவூட்டக்கூடிய பல சாத்தியங்கள் இருந்தபோதும் அவை அப்படியே விடப்பட்டுள்ளன.

ஒரு சில குழப்பங்களும்கூட நாவலின் போக்கில் எழுகின்றன. போட் மெயிலில் அவந்திகை திரும்பி வருவதாக உள்ளது (பக்கம் 48 ). போட் மெயில் தமிழகத்தில் தொடங்கப்பட்டது 1914ல். புயல் அடிக்கும் வருடமோ 1891. அதுபோலவே, அப்ரஹாம் புயலுக்கு முதல் நாள் இரவு எமிலியிடம் மிஷன் கட்டடம் குறித்துச் சொல்ல அவள் அதை கேட்கவில்லை என்று முதல் அத்தியாயத்திலேயே சொல்லப்படுகிறது. ஆனால் அப்படியொரு நிகழ்வு நாவலில் எங்கும் இல்லை? புயலுக்கு முந்தைய இரவில் எமிலியும் அவனும் சந்திப்பதேயில்லை.

டாவின்சி கோட் ஆங்கில நாவல் வெளியாகி உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றபோது, தமிழ் இந்து செய்தித்தாளில் ஜெயமோகன் எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு ‘நமக்குத் தேவை டான் பிரௌன்கள்’. வாசிப்பை நோக்கி இளைஞர்களை ஈர்க்கச் செய்யும் எழுத்து வகைகளும் எழுத்தாளர்களும் வரவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது அக் கட்டுரை.

தூயனின் ‘கதீட்ரல்’ நாவல் அவ்வாறான  ஒன்றே.

0

கதீட்ரல், தூயன், காலச்சுவடு, டிசம்பர் 2021

4




தந்தையும் மகனும்.

‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’, ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்றெல்லாம் உறவு நிலைகளை வரையறுக்கும் மூதுரைகள் நம்முன் உண்டு. இவற்றுள் ‘அன்னை’ என்பது இன்று உறவு நிலை மட்டுமல்ல. பல்வேறு ஆழமான அர்த்தங்களையும் உள்ளடுக்குகளையும் தாங்கி நிற்கிறது அச்சொல். ‘அன்னை’ என்பது தொல்படிமங்களில் ஒன்று.

ஆனால், அன்னைக்கு இணையான உறவாக இருந்தபோதும் ‘தந்தை’ எனும் உறவு நிலை அப்படியொரு பரிமாணத்தை எட்டவில்லை. இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்னும்கூட அதன் அர்த்தகணம் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு செறிவடையவில்லை. தாய்க்கும் மகனுக்குமான பந்தம் செவ்வியல்தன்மையை இயல்பாகவே அடைந்திருக்கும்போது தந்தைக்கும் மகனுக்குமான உறவு நிலை எதிரும் புதிருமாக, சீரற்றதாக, முரண்பாடுகள் கொண்டதாகவே அமைந்திருப்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

தந்தைக்கும் மகனுக்குமான உறவு காலந்தோறும் துலக்கமான பல மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. கல்வியும் வேலைவாய்ப்பும் அதிவேகமாக மாறியுள்ள வாழ்க்கைச் சூழலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. 

எழுபதுகளில் தந்தைக்கும் தனயனுக்குமான உறவு என்பது விலகலுடன்கூடியது. அத்தனை நெருக்கமற்றது. மரியாதை, அச்சம், தயக்கம் என பல உணர்வுநிலைகளுடன் அமைந்தது. தேவைகளைச் சொல்லக்கூட நேரங்காலம் பார்த்து அடங்கிய குரலிலேயே சொல்லச் செய்வது. இருவருக்கும் பல நேரங்களில் பாலமாக விளங்குவது அம்மா. தந்தைகளில் பலருக்கும் மகன் எந்த வகுப்பில் படிக்கிறான் என்பதே உறுதியாகத் தெரியாது. படிக்க வைக்கவேண்டும் என்பது மட்டும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பொருளாதார சிரமங்களைக் காட்டிக்கொண்டதில்லை. பிள்ளைகளின் வாழ்க்கைத் தன்னுடையதைப் போலில்லாமல் இருக்கவேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. அப்பாவும் மகனும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளும் சந்தர்ப்பங்களே மிகக் குறைவு. இருவருக்குமிடையேயான உரையாடல்களே சொற்பம்.

தந்தைக்கும் மகன்களுக்குமான உறவின் பல்வேறு உளநிலைகளை, சிக்கல்களை, அழுத்தங்களை, முரண்களை விரிவாகச் விவாதித்திருந்தது ‘கரம்சோவ் சகோதரர்கள்’. 

தமிழ்ப் புனைவுலகில் தந்தைக்கும் மகனுக்குமான உறவு குறித்து எழுதப்பட்டுள்ள படைப்புகள் உண்டு. சுந்தர ராமசாமியின் ‘பக்கத்தில் வந்த அப்பா’, ஜெயமோகனின் ‘அப்பாவும் மகனும்’, சுப்ரபாரதிமணியனின் ‘அப்பா’, லாவண்யா சுந்தர்ராஜனின் ‘அப்பா’, எம்.கோபாலகிருஷ்ணனின் ‘பிற்பகல் விளையும்’, நாகபிரகாஷின் ‘சகடம்’ என்று சில கதைகள் உடனடியாக நினைவுக்கு வந்தன. அத்துடன் ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’நாவலும் நினைவுக்கு வந்தது.

தந்தைமையையும் அதிலிருந்து குடும்ப அமைப்பையும் புரிந்துகொள்ளும் முனைப்புடன் அமைந்துள்ளது கிருஷ்ணமூர்த்தியின் மூன்றாவது நாவலான ‘பாகன்’.

ஆண், பெண் எனும் தனி நபர்களை குடும்பமாக இணைக்கும் கண்ணி எது? தனிப்பட்ட ஆளுமைகள்மிக்க, குணாதிசயங்கள் கொண்ட நபர்களின் கருத்து வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் தாண்டி அவர்கள் அனைவரையும் ஒரு கூரையின் கீழ் நிறுத்தும் காரணிகள் எவை?

முதலாவது முக்கிய காரணம் பொருளாதாரம். அடுத்தது சமூகம். இவற்றையடுத்து சொல்லப்படும் அன்பு, பாசம், காதல் போன்ற உணர்ச்சிகள் சார்ந்த காரணங்கள் மிகவும் பலவீனமானவையே.

இவை எல்லாவற்றைக் காட்டிலும் அல்லது இவை அனைத்தையுமே தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டது சுயநலம். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தத்தம் சுயநலத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் சமரசங்களே அனுசரணைகளாய் மாறி குடும்ப அமைப்பை ஒன்றிணைக்கின்றன. ஒருவர் மற்றவர்களின் போதாமைகளைப் புரிந்துகொண்டு, அவற்றை அனுமதிப்பது முக்கியமானது.

அளவில் சிறிய நாவல் என்றபோதும் குடும்ப அமைப்பை ஒன்றிணைத்துப் பிணைத்திருக்கும் நுட்பமான இந்தக் காரணிகளை வலுவாக உணர்த்தியிருக்கிறது. பொருளாதார, சமூகக் காரணிகளின்பொருட்டு தனிநபர்களுக்கு இடையிலான அகமோதல்களைப் பெரிதுபடுத்தாமல் அனுசரித்திருப்பது குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டது. சமையல்காரரின் மனைவி என்ற சுட்டுதலை பொருளாதார, சமூகக் காரணங்களுக்காக பிரேமலதாவால் பொறுத்துக்கொள்ள முடியாத போது ‘குடும்ப’த்தை விட்டு வெளியேறத் துணிகிறார். கணவனும் பிள்ளையும் அப்போது அவருக்கு முக்கியமில்லை. குடும்பமும் உறவுகளும் வீடும் தரும் நிறைவை விட சுயமரியாதையே முக்கியம் என்று தீர்மானிக்கிறார். அப்படி வெளியேறும் மனைவியை சமாதானப்படுத்தி அவரது விருப்பப்படி இருக்கும் மனநிலையைக் கடந்தவராய் அமைதிகொள்கிறார் செல்வம்.

குடும்ப அமைப்பின் இன்னொரு முக்கிய அங்கம் வீடு. சுவர்களும் ஜன்னல்களுமாய் அமைந்த வீடே குடும்பத்தையும் அதன் உறுப்பினர்களையும் ஒப்புக்கொண்ட சில கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்துகிறது. அவரவர்க்கான சுதந்திரத்தையும் எல்லோருக்குமான பொதுவான சுதந்திரத்தையும் அளிக்க வல்லதாய் அமையும் அதுவே பல நேரங்களில் தேவையற்ற கட்டுப்பாடுகளைக் கொண்டதாகவும் அடிமைப்படுத்துவதாகவும் விமர்சிக்கப்படுகிறது. எனவேதான் வீட்டை விட்டுப் போவது என்பது அத்துமீறலாகக் கருதப்படுகிறது.

குடும்பமும் வீடும் வெவ்வேறானதல்ல. ஒன்றுதான். வீடு என்பது குடும்பத்தின் ஸ்தூல வடிவமே.

அப்பாவுக்கும் மகனுக்குமான உறவு, கணவனுக்கும் மனைவிக்குமான உறவு, இவர்களுக்கும் சமூகத்தில் பிறருக்குமான உறவு என்ற கண்ணிகளில் உள்ள சிடுக்குகளைப் புரிந்துகொள்ள முயலும் நாவலாகவும் இது அமைந்திருக்கிறது. உறவுகளின் பொருட்டு ஒவ்வொருவரின் மீதும் விழும் அடையாளத்தைக் கடந்து அவரவர்க்கு விருப்பமான இன்னொரு அடையாளத்தையும் எதிர்பார்க்கின்றனர். கணவன் என்ற அடையாளத்தைத் தாண்டி அவரது தொழில் அல்லது வேலை இன்னொரு சமூக அடையாளமாகிறது. அவற்றையும் சமூக அங்கீகாரம், கௌரவம் போன்ற அம்சங்கள் தீர்மானிக்கின்றன. இந்த அடையாளச் சிக்கல் குடும்பத்தின் சிதைவுக்குக் காரணமாகிறது. ‘ஆசிரியர்’ என்ற அடையாளத்தைவிட ‘சமையல்காரர்’ என்ற அடையாளத்தை விரும்பி ஏற்கிறார் கணவர். ஆனால், அதுவே பிரச்சினையாக நிற்கிறது மனைவிக்கு. ‘சமையல்காரரின் மனைவி’ என்பதைக் காட்டிலும் ‘ஆசிரியரின் மனைவி‘ என்பதே அவரது விருப்பம். கணவன் மனைவி உறவுக்கு நடுவிலுள்ள இந்த இடைவெளி குடும்பத்தை உடைக்கிறது. மகனை வீட்டை விட்டு ஓடச் செய்கிறது.

ஓய்வுபெற்ற நாளன்று அப்பா வீட்டுக்குக் கொண்டு வரும் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறும் மகனின் முதல் அடையாளமாக அமைவது ‘திருடன்’. கிடைக்கும் வேலையில் சேர்ந்து உழைத்து ‘சேல்ஸ் மேன்’ ஆக உயர்ந்தபோதும் பழைய ‘டெலிவரி பாய்’ அடையாளத்தை அவனால் தொலைக்க முடிவதில்லை.

அம்மாவின் அத்துமீறல்களை அனுமதித்து, அமைதியாகச் செல்லும் அப்பாவை மகனுக்குப் பிடிக்கவில்லை. அம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அப்பா தனக்கு மகிழ்ச்சி தரும் சமையலை செய்வதில்லை என்பதை அவரது பலவீனமாக, கோழைத்தனமாக உணர்கிறான். அவரது அமைதி வீட்டை சிதைக்கிறது. தாலியைக் கழற்றி எறிந்துவிட்டு வெளியேறும் அம்மா உறவுகளின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கிறார்.

மனைவி வீட்டைவிட்டுப் போகிறாள். மகனும் பணத்தைத் திருடிக்கொண்டு போய்விடுகிறான். உறவுகள் கைவிடுகின்றன. யாருமற்றபோதும் தன் விருப்பத்துக்கு தனியாக வாழ்ந்து செத்துப்போகிறார் செல்வம். தகவல் அறிந்து வருகிறான் மகன் கஜேந்திரம். அவரது முகமோ குரலோ அவனுக்கு நினைவுக்கு வருவதேயில்லை. சவப்பெட்டியில் கிடப்பவரிடம் மனத்தாங்கல்களைக் கொட்டித் தீர்க்கிறான்.  அதே  ஊரில் இருந்தும் கணவனின் இறுதிச் சடங்குக்கு வர முடியாத மனச் சங்கடத்துடன் அவரது மனைவி.  ஒரு குடும்பமாக, ஒரே வீட்டில் இவர்கள் மூவரையும் வாழவிடாமல் செய்தது எது? சிறிய சமரசம், கொஞ்சம் அனுசரணை, விட்டுக்கொடுத்தல் என்று உடைபடாமல் உறவைப் பிணைத்துவைத்திருக்கத் தவறியது யார்? எது அவர்களைப் பிரித்தது? எது அவர்களை சேரவிடாமல் தடுத்தது? அப்பாவை இழந்த நிலையில் அம்மாவையேனும் தேடிப் போகலாம் என்ற எண்ணம் ஏன் அவனுக்கு வரவில்லை? வந்திருக்கும் மகனைச் சென்று சந்திக்கலாம் என்ற எண்ணம் அம்மாவுக்கும் வராமல் போனது ஏன்? இப்படியான எண்ணங்களைத் தடுக்குமளவுக்கு அவரவர் சுயம் அத்தனைப் பெரியதா?

நாவல் முடியும்போது பொருளற்று முடிந்துபோன இந்த வாழ்வைக் குறித்து இப்படி எண்ணற்ற கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளன.

0

நாவலுக்கு முன்னுரை அவசியமா? நாவலை திறந்த மனத்துடன் அணுகுவதற்கு அதுவொருத் தடையாக அமைந்துவிடாதா? புனைவின்  புதிர்வழிகளுக்குள் நுழைந்து கண்டடைவதில் உள்ள சாகச உணர்வை அது மட்டுப்படுத்துகிறது என்பதே என் எண்ணம்.  ‘தந்தைமை அநித்யப் புதிர். இப்புதினம் அதன் ஒரு துளி’ – பாகன் நாவலின் முன்னுரையில் இடம் பெற்றுள்ளது இந்தக் கடைசி வரி. இந்த முன்னுரையைப்  படித்துவிட்டுஉண்மையில் நாவலை வாசிக்கும்போது இந்த வரி தொடர்ந்து சில எண்ணங்களை, சுட்டுதல்களைத் தருவதைத் தவிர்க்க முடிவதில்லை. இந்த வரியை வாசிக்காமல் நாவலுக்குள் நுழையும் வாசகனுக்கு வேறு சில வழிகளும் வாய்ப்புகளும் உறுதியாக உள்ளன. அந்த வாசகரது அனுபவம் இந்த வரிக்கு அப்பால் மேலும் வலுவானதாக அமையும். தந்தைமையை மட்டும் பேசுவதல்ல இந்த நாவல். குடும்பம், உறவுகள், வாழ்வின் பொருள் சார்ந்த கேள்விகள் என எண்ணற்ற பல கிளை வழிகள் ஒன்றைத் தொட்டு அடுத்தது என பிரிந்தபடியே இருக்கின்றன. 

0

உறவுகளுக்கு இடையிலான பலமான அகமோதல்களையும் உணர்ச்சிப்பெருக்குகளையும் கொண்டுள்ள இந்த நாவலுக்கு புறவயமான வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. சம்பவங்கள் நேரடியானவையாக அமைந்திருந்தபோதும் அவற்றை வெளியில் நின்று சித்தரிக்கும் தன்மையைக் கொண்ட வடிவம். இன்றைய நடப்புகளைச் சொல்லும்போதே கடந்த காலச் சம்பவங்களையும் நினைவுகளாக அடுக்கிக் காட்டுகிறது. துக்கத்தையும் அதிர்ச்சியையும் தரக்கூடிய மரணம் வெறும் தகவலாக நின்றுபோகும் அவலத்தைக் காட்ட பொருத்தமான வடிவமாக அமைந்திருக்கிறது. இதற்கேற்ப எதையுமே மிகைப்படுத்தாத, அடங்கிய மொழிபயன்படுத்தப்பட்டுள்ளது.

கிளைவிரித்துப் படர்ந்து விரியும் ‘குடும்பம்’ எனும் அமைப்பு மெல்ல மெல்ல சிதைந்து ஒற்றைப்படையாகக் குறுகிச் சிறுக்கும் நடைமுறையையும், நெருங்கிய உறவுகளுக்குள்ளும்கூட சந்தர்ப்பம், பொருளாதாரம், சுயநலம் உள்ளிட்ட தேவைகள் கருதியே நெருக்கமோ விலகலோ உருவாவதையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்க முடியும். பெருகி வரும் ‘ஓல்ட் ஏஜ் ஹோம்’களின் எண்ணிக்கையையும் அவற்றை இன்றைய இயல்பு என்று ஒப்புக்கொண்டு தங்களை அதில் பொருத்திக்கொள்ளும் மூத்த தலைமுறைகளையும் கடந்து செல்கிறோம். வாழ்வின் இன்றைய அனுபவங்கள் அவற்றை இரக்கமில்லாமல் உணர்த்துகின்றன. இவ்வாறான நெருக்கடிகளை இந்த நாவல் யோசிக்கச் செய்கிறது.

‘மௌனித்துக் கிடந்ததை’,‘உறக்கத்தை களவாடியிருந்தது’, ‘தங்களை சுத்தமாக்கிக்கொண்டு’ போன்ற சொற்றொடர்கள் இதுபோன்ற நாவலுக்கு அவசியமா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மொழியின் திருகல்களை ஒரு கருவியாகவோ அல்லது புனைவு உத்தியாகவோ  பயன்படுத்தவேண்டிய தேவையைப் புரிந்துகொள்வது முக்கியம்.

0

யானைக்கும் பாகனுக்குமான உறவு என்ற நமக்கு மிகவும் பழகிப்போன, பல்வேறு அர்த்த அடுக்குகளைக் கொண்ட ஒரு படிமத்தையே தலைப்பாகக் கொண்டுள்ளது இந்த நாவல் வாசித்து முடித்த பின்பும் பல்வேறு கேள்விகளையும் யோசனைகளையும் எழுப்புகிறது. ஒரு இலக்கியப் படைப்பின் அடிப்படையான குணாம்சம் அதுவே.

0

பாகன், கிருஷ்ணமூர்த்தி – யாவரும் அக்டோபர் 2021

00

 (தமிழினி மார்ச் 2022 இதழில் வெளியான கட்டுரை )

 

 

 

 

 

 

 

 

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...