Tuesday 31 May 2022

உலர்நதி ( சிறுகதை )

 


( புரவி - ஆண்டுவிழா சிறப்பிதழ், ஏப்ரல் 2022 ல் வெளிவந்த சிறுகதை )

ஊட்டுக்குள்ளாற பாம்பு பூந்ததுலேர்ந்தே கெட்டகாலம் ஆரம்பிச்சிருச்சு பாவம்” அருக்காணி பொடித்துணியின் நுனியில் கத்தியை வைத்து நிரடி நூலைப் பிடித்து இழுத்தாள். பின்னல் விடுபட்டு இழையிழையாய் பிரிந்தது துணி.

வெளியில் அள்ளிப்போட்டிருந்த சாக்கடையின் அருகில் கிடந்த பெருக்கானின் வயிற்றைக் கொத்திக்கொண்டிருந்த காகத்தையே வெறித்துப் பார்த்தாள் துளசி. இடதுபக்கமாய் உதட்டுக்கு மேலேயிருந்த மருவின் நுனியில் ஒற்றை நரைமயிர் அசைந்தது.

“இன்னிக்கு வெசாளக் கெழமையோட எட்டெட்டு பதினாறு நாளாயிருச்சு கணக்குக்கு. பாக்க பாக்கவே சேர்ல இருந்து அப்பிடியே சாஞ்சிருச்சு மணி. ஓடிப் போயி புடிக்கறதுக்குள்ள டம்னு தலை அம்மியில மோதிருச்சு” அருக்காணி துண்டுத் துணிகளை மூட்டையிலிருந்து அள்ளி தரையில் போட்டாள்.

வெறித்த கண்களுடன் துளசி துண்டுத் துணிகளை உதறி பிரித்துப் போட்டாள். தலையில் இறுகக் கட்டிய துணியின் பழுத்த வேப்பிலை உதிர்ந்திருந்தது. கழுத்தில் மங்கிய சிவப்பில் ஒரு மணிமாலை. களையிழந்த முகத்துக்குப் பொருந்தாமல் மூக்குத்தி மட்டும் வெயிலில் மினுமினுத்தது.

“ஆஸ்பத்திரிலேர்ந்து ரமணி போன் எதும் பண்ணுச்சா?” கண்ணாடிப் பையிலிருந்து சூடான டீயை அட்டை டம்ளரில் வார்த்து நீட்டினாள் ராணி.

குட்டியானை ஒன்று டபடபவென ஓசையெழுப்பியபடி திரும்பி நின்றது. காற்றில் அலைந்தது புழுதி. தடாலென கதவைத் திறந்து குதித்தவனின் காதில் இயர்போன்.

“சித்த மெதுவாத்தான் சாத்தேன். காது கிழியுதுடா கடங்காரா” ராணி டீயை உறிஞ்சினாள்.

“என்க்கு டீயில்லியா அக்கா?” கறையேறிய பற்களைக் காட்டிச் சிரித்தவன் மூட்டைகளின் மேல் தாவி ஏறினான்.

“நீ வருவேன்னுதான் இத்தன நேரமா வெச்சிருந்தேன். இதா இப்பத்தான் இப்பிடிக் குடிச்சிட்டேன்” அட்டை தம்ளரை கசக்கி சாக்கடைக்குள் எறிந்தாள்.

துளசியின் அருகில் வைக்கப்பட்டிருந்த டீயின் மேல் ஆடை படிந்திருந்தது. அவள் இன்னும் கவனமாய் துணிகளைப் பிரித்து போட்டுக்கொண்டிருந்தாள்.

“டீயை எடுத்துக் குடிக்கா. இப்பிடியே மனசுக்குள்ள எல்லாத்தையும் வெச்சிட்டிருந்தா எல்லாம் செரியாயிருமா” ராணி கால்களை மடக்கி அமர்ந்து துணியைப் பிரிக்கலானாள். துளசியிடமிருந்து எந்த பதிலும் இல்லை, அசைவுமில்லை.

“இந்தக்கா ஒண்ணும் பேசமாட்டாங்க. நமக்குத்தான் மனசு கேக்க மாட்டேங்குது. எப்பிடித்தான் கல்லுமாதிரி இருக்காங்களோ” முணுமுணுத்தவளைப் பார்த்து எச்சரிப்பதுபோல முறைத்தாள் அருக்காணி.

குட்டியானையிலிருந்து மூட்டைகளை இறக்கித் தூக்கி வந்தவன் ஏற்கெனவே கிடந்த மூட்டைகளின் மேலே போட்டான். ஓரத்திலிருந்த ஒன்று மெல்லச் சரிந்தது. முதுகை அண்டக்கொடுத்து அப்படியே நிறுத்தினான். மெல்லத் திரும்பி தலையால் முட்டி மேலேற்றினான்.

பெட்ரோல் வாடையுடன் புகை கிளப்பிய ஆக்டிவாவை ஓரமாக நிறுத்தி அணைத்தான் செல்வம். செல்போன் ஒலித்தது. “சாயங்காலமா வாங்கிக்கலாங்கண்ணா. ஆறுமணிக்கா குடோன் பக்கம் வாங்கண்ணா. நான் இல்லேன்னாலும் குடுத்துட்டுப் போறேண்ணா.”

குடோனுக்குள் எட்டிப் பார்த்தான். ரகரகமாய் அடுக்கிக் கிடந்தன மூட்டைகள். மூன்று பெண்கள் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தனர். ஒருத்தி அகலத் துணியை உதறி இன்னொரு பெட்டியில் போட்டாள். சிகரெட்டைப் பற்றவைத்து இழுத்தவன் துளசியின் முகத்தை உற்றுப் பார்த்தான்.

“எப்பக்கா ஆபரேசன்?”

நிமிர்ந்து பார்க்காமல் வேலையில் ஆழ்ந்திருக்க அருக்காணி சலிப்புடன் கைகளை உதறினாள் “நீ கேட்டா மட்டும் அவ சொல்லுவாளா? பெத்த புள்ள தலையில அடிபட்டு ஆசுபத்திரில பத்து நாளா கெடக்கறான். ஆபரேசன் பண்டனும்னு சொல்றாங்க. மருமவ பாவம் ஒத்த புள்ளையா அங்க கஷ்டப்பட்டுட்டு நிக்குது. ஒரு எட்டு போயி பாக்கலாம்னுகூட எண்ணமில்லை. அப்பிடி என்ன அழுத்தம் இவளுக்கு?”

“சும்மாயிருக்கா. நீ வேற” சிகரெட்டை போட்டு மிதித்தான்.

0

ஈசானிய மூலையின் கீழ் வரிசையில் கடைசியாக தட்டோட்டைப் பொறுத்தினார் சின்னசாமி ஆசாரி. ஏணி வழியே கீழே இறங்கி வீட்டின் எதிரில் நின்றார். ஓடுகள் வேய்ந்த கூரையை பொறுமையாக நோட்டமிட்டார். கூர் மழுங்கிய சிறு பென்சில் ஒன்று இடது காதில். கைகளில் ஒட்டியிருந்த மண்ணை தட்டி உதிர்த்தார். நிறைவுடன் வேலுசாமியைப் பார்த்துச் சிரித்தார். “நல்லாருக்கு ஆசாரி. அரிசி தெளிச்சிர்லாமா?”

“சுண்ணாம்பு கலக்கியாச்சா?”

“அப்பவே கலக்கியாச்சு. அரிசில கரும்புச் சக்கரைய கலக்கிரவா?” துளசி பெஞ்சின் மேலிருந்த பொட்டலத்தைப் பிரித்தாள். புதுவீடு உருப்பெற்று நிற்கும் குதூகலம் அவள் குரலில்.

“இந்த கொத்தனார் இன்னும் என்ன பண்றாரு? இன்னுமா முடியலை?” வேலுசாமி வடக்குப் பக்கமாய் நடந்தார். கிழக்கு வாசலுடன் கச்சிதமாய் அமைந்திருந்தது ஐந்து அங்கண வீடு. தென்கிழக்கு மூலையில் சமையல் அறை. அதன் பின்னால் பெரியவீடு. மீதியிருந்த நான்கு அங்கணத்தில் இரண்டு தறிகளைப் பூட்டலாம் என்று திட்டம்.

“ராஜா, அண்ணன் எங்கடா?” கீழே நின்று அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தான் சிறியவன்.

“அவன் மட்டும் மேல ஏறிட்டான். என்னைய ஏத்திவிட மாட்டேன்னுட்டாங்க” சிணுங்கியபடியே மேலே கை காட்டினான்.

வடக்கு கோம்பைச் சுவரின் முக்கோணத்தின் நடுவில் தாமரைப் பூவை அமைத்துக் கொண்டிருந்தார் கொத்தனார். சிறிய சாந்து கரண்டியால் காரையை செதுக்கி இதழ்களை ஒழுங்குபடுத்தியவரை அவசரப் படுத்தினான் மணி. அவன் கையில் சிறிய கோலிக்குண்டு. “போதும் கொத்தனாரே. நடுவுல இதை வெக்கலாம். நானே வெக்கவா?” தாமரைப் பூவின் மத்தியில் கோலிக்குண்டை வைக்கலாம் என்று சொன்ன நாள் முதல் இதற்காக காத்திருக்கிறான் மணி.

வெற்றிலையை குதப்பிக்கொண்டிருந்தவரின் தலை அசைந்தது. வேர்வை மினுக்கும் கழுத்தை நொடித்துப் பார்த்தார். தாமரை சரியாகத்தான் வந்திருந்தது. இதழ்களின் அளவை சரிபார்த்துவிட்டு விரல்களால் அளவெடுத்து பூவின் மையத்தை முடிவு செய்து புள்ளி வைத்தார். கையை அசைத்து கோலியைத் தருமாறு சைகை செய்தார். முகம் கோண கோலியை நீட்டினான் மணி. புள்ளியிட்ட இடத்தில் நிதானமாகப் பதித்தார்.

“நேரமாச்சு கொத்தனாரே. வாங்க. அரிசி தெளிக்கணும்.”

எச்சரிக்கையுடன் மணியை கீழே இறக்கிவிட்ட பின் கொத்தனாரும் குதித்தார். எச்சிலைத் துப்பிவிட்டு வாய் கொப்புளித்தவர் ஓடுகளை பார்வையிட்டார்.

“சரியாதான் இருக்கு. சுண்ணாம்பு தெளிக்கலாம்” உத்தரவு கிடைத்ததுபோல ஆசாரி கலக்கிய சுண்ணாம்பை கையில் அள்ளி ஓடுகளின்மேல் தெளித்தார். சிவப்பு ஓடுகளின் மேல் சுண்ணாம்புத் துளிகள் விழுந்ததும் ஆவி எழுந்தது. நொடியில் வெண்மை துலங்கி பளபளத்தது.

பின்பக்கமாய் சுண்ணாம்பு தெளிக்க ஆசாரி நகர்ந்ததும் துளசியைப் பார்த்தார் “அரிசி எங்கம்மா?”

கலக்கி வைத்த அரிசிக் குண்டாவை நீட்டினாள். ஊற வைத்த அரிசியில் சர்க்கரை கரைந்திருந்தது. “சௌடேஸ்வரி தாயே. குடும்பம் தழைக்கணும். கொலம் விளங்கணும் தாயே” கையால் அரிசியை அள்ளி கூரையின் மீது இறைத்தார். இதற்காகவே வேப்பமரக் கொப்பில் காத்திருந்த காக்கைகள் கரைந்தபடியே கூரையின் மேல் இறங்கின.

“கண்ணு இந்தா நீ வாங்கிக்க” ஒரு குத்து அரிசியை எடுத்து ராஜாவிடம் நீட்டினார். ஆசையுடன் வாங்கி அப்படியே வாயில் போட்டான்.

மணியின் நண்பர்கள் வரிசையில் நின்றனர். அரிசியை வாயில் போட்டு மென்றபடியே தாமரையில் பதிக்கப்பட்ட கோலியை வியந்து பார்த்தனர்.

தண்ணீர் சொம்புடன் கூரையைப் பார்த்தபடி நின்ற துளசியை ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்தார் வேலுசாமி  “கோம்ப வெச்ச அஞ்சு அங்கண வீடு வேணும்னியே. சந்தோஷமா தொளசி?”

“இன்னும் வேல முடியலேங்க. காலையில புண்ணியாசனம். மாவிலை கட்டணும். பூசைக்கு கோயில் பூசாரியை வரச் சொல்லிருக்கு. எல்லாத்தையும் எடுத்து வெக்கணும். தண்ணி பத்து கொடம் வேணும். இப்பவே இப்பிடி நின்னுட்டா முடியாது” செல்லமாய் கோபித்தபடியே உள்ளே விரைந்தாள்.

விடிகாலையில் அந்த அழுகைச் சத்தத்தைக் கேட்டு எழுந்த மணிக்கு எதுவும் புரியவில்லை. சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமென்று அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. கால்சட்டையை மேலேற்றியபடியே எழுந்து வெளியில் வந்தான். புதுவீட்டில் நாளையிலிருந்துதான் படுக்க முடியும் என்று சொன்னதால் பின்னாலிருந்த தாத்தா வீட்டில்தான் படுத்திருந்தான். அம்மாவுடம்கூட அங்கேதான் படுத்திருந்தாள், இப்போது ராஜா மட்டுந்தான் கிடக்கிறான்.

புது வீட்டுக்கு முன்னால் கூட்டம் சேர்ந்திருந்தது. மெதுவாக நடந்துவந்த அவனைப் பார்த்தவுடனே பெட்டிக்கடை சரசக்கா ஓடி வந்து தூக்கிக்கொண்டாள் “அய்யோ ராசா…”

எல்லோரும் ஏன் அழுகிறார்கள் என்று அவனுக்குத் தெரியவில்லை. சரசு அவனை உள்ளே தூக்கிக்கொண்டு போனாள். நடு வீட்டில் அப்பா படுத்திருக்கிறார். எல்லோரும் அழுகிறார்கள். அம்மா சுவரில் சாய்ந்து அவரையே வெறித்திருந்தாள்.

0

அவர்கள் மூவரும் பழைய டி.வி.எஸ் ஃபிப்டியில் வந்து இறங்கியபோது மணி வீட்டு வாசலில் தெருவே கூடியிருந்தது. அழுக்கான உருமாலை, அதேயளவு அழுக்கான சட்டையும் வேட்டியுடனும் இருந்த பெரியவரின் கையில் பூண் போட்ட ஒரு தடி. அதன் நுனி சற்றே வளைந்திருந்தது. மற்ற இருவரில் ஒருவன் அரைக்கால் சட்டையும் ரஜினி படம்போட்ட மஞ்சள் பனியனும் அணிந்திருந்தான். இன்னொருவன் பிற இருவரையும்விட வயதில் இளையவன். நீண்ட கம்பியை வைத்திருந்தான்.

“உசுரு எங்க இருக்கு?” பெரியவர் வெற்றிலையை மடித்து வாயில் அதக்கினார். நுனிவிரலிலிருந்த சுண்ணாம்பை கீழ் வரிசை முன்பற்களில் ஈசினார். செம்பட்டை முடி கழுத்தில் புரண்டது.

மணியின் பார்வையில் அவ்வளவாய் நம்பிக்கையில்லை “கோம்பை ஓட்டுக்குக் கீழே இருக்கு.”

டயராலான கனத்த செருப்பை வாசலில் உதறிவிட்டு உள்ளே நுழைந்தான். தறிக்கு முன்னால் மடுப்பு நீண்டு கிடந்தது. இன்னொரு தறியில் அச்சுப் புனைக்க ஆரம்பித்திருந்தனர்.

காலைப் பொழுதின் வெளிச்சம் கூடத்தில் விழுந்திருந்தது. மணி டார்ச்சை ஒளிரச் செய்து கூரையை நோக்கி பாய்ச்சினான். ஐந்து அங்கண வீடு. இரண்டாம் அங்கணத்துக்கும் மூன்றாம் அங்கணத்துக்கும் இடையில் நின்ற தாங்குமரத்தின் உச்சியில் வெளிச்சம் நின்றது. ஒன்றும் தெரியவில்லை. கொஞ்சம் விலகி நின்று கூர்ந்து பார்த்தான். இதற்குள் ரஜினி பனியன் போட்ட இளைஞன் உள்ளே வந்திருந்தான்.

“வால் தெரியுது பாரு பெருசு” என்றவன் டார்ச்சை வாங்கி ஒளியை சற்றே விலக்கிக் காட்டினான்.

“ஆமாம்பா. பெரிய ஜீவன்தான். எப்பிடிப்பா?”

கூரையை நோட்டமிட்டு நின்ற இளைஞனையே உற்றுப் பார்த்தான் மணி.

“ஓட்டைப் பிரிச்சாதான் முடியும்” குரலில் எந்த தயக்கமும் இல்லை. மிகச் சரியாகக் கணித்தவன்போல உறுதியாகச் சொன்னான்.

பெரியவர் மணியைப் பார்த்தார்.

மூவரும் வெளியில் வந்ததும் கூட்டம் ஆவலுடன் நெருங்கியது. பாத்திரக்கடை வெள்ளியங்கிரிதான் போன்போட்டு மூவரையும் வரவழைத்திருந்தார்.

“அய்யா மேலதான் படுத்திருக்கு. கொஞ்சம் பெருசு போலத் தெரியுது. ஓட்டைப் பிரிச்சுதான் புடிக்கணும்.” சற்று தள்ளிச் சென்று கிளுவை வேலியின் மேல் எச்சிலைத் துப்பினான். மூன்றாமவன் தலையைச் சொறிந்தபடியே அருகில் வந்தான்.

“மணி, என்னப்பா செய்யறது?” காதுமடல்களின் மேலிருந்த முடியை நீவினார் வெள்ளிங்கிரி.

“வேற வழியில்ல மாமா. ஆனா ஓட்டைப் பிரிச்சு அடுக்கறதுன்னா பெரிய வேலையாச்சே.”

வேப்ப மரத்தடியிலிருந்து அவர்கள் பேசுவதை கவனித்துக்கொண்டிருந்த துளசி ஒருகணம் திரும்பிப் பார்த்தாள். அருகில் நின்றிருந்த பேத்தி கௌசியை காணவில்லை. அவசரமாக சுற்றுமுற்றும் பார்த்தாள்.

“அம்மா, பிரிச்சு பாக்கச் சொல்லிறலாமா?” மணி அருகில் வந்து கேட்டதும் தலையாட்டினாள். ஆனால் அவளது பார்வை கௌசியையே தேடிக்கொண்டிருந்தது.

“என்னத்தே பாக்கறீங்க?” ரமணி மெதுவாகக் கேட்டாள். அவளுக்கும் யாரைத் தேடுகிறாள் என்று தெரியும்.

“எங்க போனா?”

“அங்க பாருங்க. மாமா வீட்டுல புறாக்கூண்டு பக்கத்துல நிக்கறா. சுகுணா கூப்பிட்டுச்சுன்ன போயிருக்கா. நீங்க எதுக்கு இப்பிடி பயப்படறீங்க?” ரமணி இன்னும் தணிவான குரலில் சொன்னாள்.

புறாக் கூண்டின் அருகில் நின்றவளைப் பார்த்ததும் பெருமூச்செறிந்த துளசி வேப்ப மரத்தடியில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

மூன்றாமவன் ஏணியில் விறுவிறுவென ஏறிச் செல்ல பின்னாலேயே ரஜினி இளைஞனும் தாவி ஏறினான். பெரியவர் எச்சிலை துப்பிவிட்டு வேட்டியை தளர்த்தி கோவணம்போல இறுக்கிக் கட்டியபின் வடக்குப் பக்கத்திலிருந்து நிதானமாக ஏறினார்.

“ராத்திரி லைட்டெல்லாம் ஆப் பண்ணிட்டு படுத்து கண்ணை மூடித் தூங்கும்போது ஸ்ஸ்ன்னு சத்தம் கேக்கும். அப்பறம் ஒண்ணும் தெரியாது. சித்த நேரத்துல மறுக்கா அதே மாதிரி சத்தம். ஸ்.. ஸ்..ன்னு. செரி நமக்குத்தான் வயசாயிருச்சு. தூக்கம் வர்லைன்னு சும்மா இருந்துட்டேன். ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல. இப்ப பதினைஞ்சு நாளாச்சு. ரெண்டு நாள் முன்னாடிதான் அத்தையும் சத்தம் கேக்குதுன்னு சொல்றா. கௌசியும் அவங்கப்பாகிட்ட சொல்லிட்டு இருந்தா. அவதான் ஓட்டு மேல இருந்து சத்தம் வருதுன்னு சந்தேகமா சொன்னா. ராத்திரி லைட் அடிச்சு பாத்தா ஒண்ணும் தெரியலை. நேத்திக்கு சாயங்காலம். லைட் போட்டு அஞ்சு நிமிஷங்கூட ஆகலை. மேல இருந்து சொத்துன்னு எலி ஒண்ணு விழுந்துச்சு. கரெக்டா நூல் ராட்டை பக்கத்துல. கௌசி அலறி அடிச்சுட்டு வெளியே ஓடுனா. அப்பத்தான் மூஞ்சி கழுவிட்டு வந்தவளை கட்டிப் புடிச்சுட்டா. அப்பறமா பாவாவைக் கூப்பிட்டு பாத்தா எலி செத்து போயிருந்துச்சு. மேல அந்த சத்தம். மாமாவும் சின்னானும் வந்து லைட் அடிச்சு பாத்தா வால் தொங்கறது தெரிஞ்சுது. ஒரே பயமா போச்சு. இத்தனை நாளும் தலைக்கு மேல அது படுத்துட்டு எலியைப் புடிச்சுட்டிருந்துருக்கு. எங்க இருந்து வந்து சேந்துச்சோ, தெரியலை. இத்தனைக்கும் நாங் கோயலுக்கு போனா புத்துக்கு பால் ஊத்தாம வந்ததில்லை. என்ன கெட்ட நேரமோ இப்பிடியெல்லாம் நடக்குது” ரமணி சேலைத் தலைப்பால் நெற்றியைத் துடைத்துக்கொண்டாள்.

பிரித்த ஓடுகளை வாங்கி கீழே அடுக்கினார்கள். மூன்றாமவன்தான் எச்சரிக்கையுடன் ஒவ்வொரு ஓடாக விலக்கி நீக்கினான். பெரியவர் எதிர்பக்கமாய் கம்பியுடன் மடங்கி அமர்ந்திருந்தார். பொழுது ஓடிக்கொண்டிருந்தது. வெயிலில் நிற்க முடியாமல் மர நிழல்களில் ஒதுங்கியிருந்தனர்.

சுகுணா வீட்டைத் திரும்பிப் பார்த்தபோது புறாக்கூண்டின் அருகில் இருக்கவில்லை கௌசி. பதற்றத்துடன் எழுந்த துளசி வேடிக்கை பார்த்து நின்ற கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியில் போனாள்.

“புடிச்சுட்டான்போல” யாரோ சத்தமாய் சொன்னதும் கூட்டம் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு எட்டிப் பார்த்தது.

பெரியவர் கம்பியை நீட்டியபடி நின்றார். இரண்டாமவன் கையிலிருந்த கம்பியால் அழுத்திப் பிடித்திருந்தான்.

“எல்லாரும் கொஞ்சம் வெலகி நில்லுங்க. பெரிய உசுரு. இங்கிருந்து புடிச்சு தூக்கிட்டு வர்றது செரமம். கீழ போடவேண்டி இருக்கும்” பெரியவர் எச்சரித்ததும் கூட்டம் பதறி விலகியது.

ஒன்றிரண்டு ஓடுகள் நொறுங்கி வீட்டுக்குள் விழுந்ததை கவலையுடன் பார்த்தாள் ரமணி. நல்லவேளையாய் மடுப்பில் எதுவும் விழவில்லை.

சரிந்தாற்போல கால்களை நகர்த்தி சற்றே கீழே வந்த இரண்டாமவன் அழுத்திப் பிடித்திருந்த கையை விலக்காமல் கனத்த சாக்குப் பையை விரித்தான். பெரியவர் கால்களை அகட்டி உறுதியாக படுத்திருந்தார். மூவரும் ஒருவரையொருவர் ஒருகணம் பார்த்து தலையசைத்தனர். அடுத்த நொடியில் பெரியவர் வாலைப் பிடித்து இழுக்க காற்றில் துள்ளி நெளிந்த பாம்பை கையில் பற்றி சாக்குப்பைக்குள் போட்டான் இரண்டாமவன். மூன்றாவன் சாக்குப் பையின் வாயை சுருட்டி இறுக்கினான். நொடிப்பொழுதும் தாமதிக்காமல் ஓட்டின் மேலிருந்து அப்படியே சரிந்து கீழே குதித்தனர் இருவரும். வண்டியின் மீது வைத்திருந்த இன்னொரு கனத்த பையில் சாக்குப் பையை அப்படியே சுருட்டித் திணித்தான். கயிறைச் சுற்றி இறுக்கினான்.

பெரியவர் கம்பியைப் பொறுக்கி எடுத்து வந்தார். வேட்டி மடியிலிருந்து வெற்றிலையை எடுத்துத் தடவினார் “எவ்ளோ பெருசு பாத்தீங்களா? சுலவத்துல புடிக்க முடியாது. ராத்திரி எரை எடுத்துருக்கும்போல. அதான் அப்பிடியே கெடந்துருக்கு.”

துளசி திரும்பி வந்தபோது கூட்டம் கலைந்திருந்தது. பெரியவர் சாக்குப்பையைப் பிடித்தபடி பின்னால் உட்கார்ந்திருக்க, புகை கக்கியவாறு வண்டி புறப்பட்டுப் போனது.

“சார பாம்புன்னு சொன்னாங்க. நீ அதப் பாக்கலியாம்மா?” மணி துளசியின் முகத்தை ஏறிட்டான்.

“நாலஞ்சு ஓடுக ஒடஞ்சிருச்சு பாவா. இப்பவே வேற ஓடு போட்டுட்டா தேவலை” ரமணி அப்படியே நின்றாள்.

“என்னம்மா ஒண்ணுமே பேச மாட்டேங்கறே?”

வீட்டுக்குள் நுழைந்தவள் சுவரில் சரிந்து உட்கார்ந்து கூரையைப் பார்த்தாள். உடைந்த ஓடுகளின் வழியே வெளிச்சம் பீறிட்டது.

“கௌசி எங்க?” சொம்பிலிருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு கேட்டான் மணி.

“காலையில வருவான்னு நெனக்கறேன், கழுத்துல தாலியோட” துளசியின் கரகரப்பான குரல் நடுங்கியது.

ஓட்டுத் துண்டுகளைப் பொறுக்கக் குனிந்த மணியும் ரமணியும் ஒருகணம் திரும்பிப் பார்த்தார்கள்.

“அவன் வந்திருந்தானா இங்க?” ஆத்திரத்துடன் எழுந்து வெளியில் ஓடினான்.

0

கோதுமையில் கிடந்த பொடிக் கற்களை பொறுக்கி எறிந்தாள் துளசி. முகம் இறுகியிருந்தது. துவைக்கிற கல்லின் மேல் தத்தி நின்றது சிட்டுக்குருவி. நாற்காலியில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தான் மணி. இடதுகை அவன் மடியில் கிடக்க தலை ஒருபக்கமாய் சரிந்திருந்தது. வாயைத் துடைத்துவிட்டு கைகளைக் கழுவிய ரமணி நரை துளிர்த்த தலைமயிரை அள்ளி முடிந்துகொண்டாள்.

 “மக போன கையோடவே எல்லாம் போயிருச்சு தொளசி. பாவம், வெசனத்துலயே மணிக்கு கைகால் வெளாங்கத போயிருச்சு. வருஷம் நாலாச்சு. எத்தனை ஆசுபத்திரிக்குத்தான் போயிருப்பீங்க. சும்மா சொல்லக்கூடாது. மருமவளும் தெகிரியம் விடாம அலையறா. வேலைக்கு போறாளாட்டமா இருக்கு” அருக்காணி கோதுமையைப் புடைக்க பொன்னிற தூசிகள் காற்றில் பறந்தன.

துளசி எப்போதும்போல பதில் சொல்லவில்லை.

“வெள்ளிங்கிரியே வீட்டை வாங்கிருச்சுபோல. சொன்னாங்க. ஆனாலும் இத்தனை சலீசா நீங்க குடுத்துருக்கப்படாது. சொந்தம்னாலும் காசுன்னு வந்துட்டா எல்லாருமே வேத்து ஆளாயிர்றாங்க.”

பூரணி டீ தம்ளரை வைத்துவிட்டு கொடியில் கிடந்த துணிகளை மடித்தாள்.

“இப்ப எதுக்கும்மா அதைப் பத்தியெல்லாம் பேசறீங்க?”

“இல்ல தாயீ. இந்த ஒத்த டாப்பு லைன் வீட்ல உக்காந்துட்டு செரமப்படறீங்களே, மனசு கேக்கலை. எங்கியோ கேரளாவுல எண்ணெய் வைத்தியம் செய்யறாங்களாம். அழைச்சிட்டு போலாமில்ல?”

மணியின் வாயில் வழிந்த எச்சிலைத் துடைத்தவள் அலட்சியத்துடன் நடந்தாள் “போலாந்தான். காசுக்கு எங்க போறது? இப்பவே கால் வயித்துக் கஞ்சிக்கு வழியக் காணம். ஒருத்தி பாடுபட்டா முடியுமா?”

துளசியின் கண்கள் மேலுயர்ந்து நொடியில் தாழ்ந்தன. அருக்காணி புடவையை உதறினாள் “அவ வந்து எட்டிகூட பாக்கலையா?”

“வந்தாளே. சம்பாதிச்சு சேத்து வெச்சதெல்லாம் கேட்டு வாங்கிட்டு போனாளே. இவங்களும் எல்லாத்தையும் தூக்கிக் குடுத்துட்டாங்க. மவராசியா இருக்கட்டும்.”

துளசி முறத்தில் கோதுமையை அள்ளி நிதானமாய் புடைக்கலானாள்.

“இவ ஒருத்தி. இப்பிடியே மனசுக்குள்ள போட்டு அடச்சு வெச்சிட்டு என்ன பண்ட போறாளோ?”

சிட்டுக் குருவிகள் இப்போது அருகில் வந்து தத்தின. சிதறிக் கிடந்த தானிய மணிகளைக் கொத்தித் தின்றன. துளசி ஒரு பிடி கோதுமையை இறைத்தாள்.

“பனியன் குடோனுக்கு வேலைக்கு வரேன்னு சொன்னியே தொளசி. காலையில எட்டு மணிக்கு ரெடியா இரு. போலாம்” மூட்டையை இடுப்பில் இடுக்கிக்கொண்டு அருக்காணி தெருவில் இறங்கினாள்.

‘வீரவாண்டிலேர்ந்து கழுத்து நெறைய நகையோடவும் கையில வளையலோடவும் புதுப் பொண்ணா வந்து இதே தெருவுல மஞ்ச நீராடினது இன்னும் கண்ணுல நிக்குது. ஆண்டவென யாரைத்தான் சோதிக்காம விட்டான்’ வாய்க்குள்ளேயே முணுமுணுத்தவள் திரும்பிப் பார்த்தாள். துளசி அதே இடத்தில்தான் உட்கார்ந்திருந்தாள்.  

0

தெருமுனை கம்பத்திலிருந்து மங்கலான வெளிச்சம். இருட்டில் ஆட்களோடு சேர்ந்து உட்கார்ந்திருந்தாள் துளசி. தொலைவில் ஒலிப்பெருக்கிச் சத்தம்.

“உங்கள் பொன்னான வாக்குகளை…”

அருக்காணி செய்தித்தாளில் பொதிந்திருந்த பப்ஸை நீட்டினாள் “இதச் சாப்புடு. வேப்பாளர் ஓட்டுக் கேக்கறதுக்கு வந்துட்டு போனதுக்கு அப்பறந்தான் புரோட்டா பொட்டலாம் தருவாங்க. காசும்.”

துளசி வாங்கிக்கொண்டாள். பசி. நாலுமணிக்கு குடித்த டீ எப்போதோ காணாமல் போயிருந்தது. கௌசிக்கு காளான் பப்ஸ் என்றால் பிடிக்கும். பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தாள். வெங்காய பப்ஸ்தான்.

“இதோ இன்னும் சற்று நேரத்தில்… உங்கள் வேட்பாளர்… உங்கள் ஆதரவு பெற்ற அன்புக்குரிய வேட்பாளர்… நமது தொகுதியின் வெற்றி வேட்பாளர்… வந்துகொண்டிருக்கிறார்” மின்னொளியுடன் வாகனம் மெதுவாக நாற்சந்தியைக் கடந்து திரும்பியது.

“ஆறு மணிக்கே வர்றதுன்னு சொன்னாங்கன்னு ராத்திரி ஷிப்ட் வேண்டாம்னு சொல்லிட்டு இங்க வந்தா இப்பிடி காக்க வெக்கறானுங்க” பக்கத்து பாய் குடோனில் துணி பொறுக்கும் அம்சா அங்கலாய்த்தாள்.

“சொன்ன நேரத்துக்கு வந்துருவாங்களா? நீ நேத்திக்கு தாமர கட்சி ஊர்வலத்துக்கு போனியே அம்சா? எவ்ளோ குடுத்தாங்க?”

“என்னத்த குடுக்கறாங்க. அதே முந்நூறு ரூவாதேன். புரோட்டாவுக்கும் வெறும் சால்னாதான். போன வாரம் எல கட்சில பிரியாணி பொட்டலம். கெரகத்த அன்னிக்கு பாத்து எனக்கு போவ முடியாத போச்சு.”

“உங்கள் சின்னம்… வெற்றிச் சின்னம். இதோ வந்து கொண்டிருக்கிறார். உங்களைச் சந்திக்க வெற்றி வேட்பாளர் வந்துகொண்டிருக்கிறார்” இன்னொரு வாகனம் இன்னும் உரத்தொலிக்கும் குரலுடன் விரைந்து மறைந்தது.

பொட்டலத்தைக் கசக்கி எறிந்தாள் துளசி. காதோரம் ரீங்கரித்த கொசுக்களை விரட்டினாள். பாதங்களைச் சொறிந்தாள். புடவையை இழுத்து கால்களை மூடினாள்.

சிவப்பு விளக்கு ஒளிர அவசர ஓசையெழுப்பியபடி ஆம்புலன்ஸ் தெருவில் திரும்பியது. கூட்டம் விலகி வழிவிட்டது. சாலையின் முனைக்கு நகர்ந்து கிழக்கு நோக்கித் திரும்பியதை துளசி உற்றுப் பார்த்தாள்.

“நாளைக்கு ஞாயித்துக் கெழமைதானே தொளசி. ஆசுத்திரிக்கு போயி ஒரு எட்டு பாத்துட்டு வரலாமா?” அருக்காணி புறங்கையிலிருந்த கொசுவை அடித்தாள்.

ஒலிபெருக்கி சத்தம் வலுத்தது. “இதோ வந்துவிட்டார், உங்கள் வேட்பாளர்…” வரிசையாய் வாகனங்கள் அணிவகுத்தன. நாற்சந்தி முழுக்க ஒளி வெள்ளம். அனைவரும் சூழ்ந்து நின்றனர். கூப்பிய கரங்களுடன் வேட்பாளர் சிரித்துக்கொண்டு நின்றார். யாரோ ஒருவர் ரோஜா மாலையை அணிவித்தவுடன் கரவொலி எழுந்தது. மஞ்சள் சேலை கட்டிய பெண்கள் நால்வர் ஆரத்தி எடுக்க தட்டில் தாள்கள் விழுந்தன. கையிலிருந்த கொடிகளை அசைத்தபடி நின்றது காத்திருந்த கூட்டம். அவ்வப்போது கை தட்டினார்கள்.

வாகனங்கள் விலகிப் போய் ஓசைகள் அடங்கியிருந்தன. மீண்டும் இருள் சூழ்ந்திருக்க துளசி ஓரமாய் நின்றிருந்தாள். அருக்காணி கையிலிருந்த ரூபாய் நோட்டுகளை எண்ணித் தந்தாள். துளசி உள்ளங்கையில் சுருட்டிக்கொண்டாள்.

முனியப்பன் கோயில் விலக்கில் திரும்பியபோது மூச்சு வாங்க நின்றாள் அருக்காணி “எதுக்கு இப்பிடி ஓடறே. பசிக்குதுன்னா அங்கயே திங்க வேண்டிதுதானே. வீட்டுக்கு எடுத்துட்டு போறேன்னுட்டு இப்ப இப்பிடி இழுத்துட்டு வர்றே. உன்னோட ஒரே ரோதனையாப் போச்சு… இத்தனை செலவு பண்டறாங்க. இன்னொரு நூறு ரூவா குடுக்கறதுக்கு மனசு வரெ மாட்டேங்குது.”

நடை வேகத்தை சற்றும் தளர்த்தாமல் விறுவிறுவென தெருவில் நுழைந்தவள் மறுகணம் அப்படியே நின்றாள். அழுகைச் சத்தம் காதில் விழுந்தது. குடியிருக்கும் லைன் வீட்டு வாசலில் வெளிச்சம். ஆட்கள் கூடியிருந்தைப் பார்க்க முடிந்தது.

அருக்காணி தோளைப் பிடித்துக்கொள்ள துளசி தளர்ந்து நடந்தாள். கையிலிருந்த பொட்டலம் மண்ணில் விழுந்து தெறித்தது. “தெகிரியமா வா. ஒண்ணில்ல தொளசி” அருக்காணி வாய் குளறினாள்.

துளசியைப் பார்த்ததும் அழுகை வலுத்தது. விலகி வழிவிட்டனர்.

வெள்ளைத் துணி சுற்றிய ஒரு பொட்டலமாய் வாசலில் கிடத்தப்பட்டிருந்தான் மணி. மாரில் அடித்துக்கொண்டு அழுத ரமணி நிமிர்ந்து துளசியைப் பார்த்தாள். குமுறல் வெடிக்க கால்களை கட்டிக்கொண்டாள். அவள் தலையைத் தொட்டு நிமிர்த்தினாள். படியருகே தளர்ந்து உட்கார்ந்தாள். அப்போதுதான் முதன்முதலாக பார்ப்பதுபோல அவன் முகத்தை வெறித்துப் பார்த்தாள்.

“இப்பவாச்சும் அழுது தொலையேண்டி. கல்லு மாதிரி எல்லாத்தையும் இப்பிடி வெறிச்சு வெறிச்சுப் பாத்துட்டிருந்து என்னத்த சாதிக்க போறே? இனியும் யார் சாவணும் உனக்கு?” அருக்காணி அவள் முதுகில் மொத்தினாள்.

மடியில் புரண்டு அழும் ரமணியின் முதுகில் கை வைத்தபடி வறண்ட கண்களால் வெறித்திருந்தாள் துளசி.

0

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உளவாளி ( சிறுகதை )

 ( ஆவநாழி, ஏப்ரல்-மே 2022 மென்னிதழில் வெளியான சிறுகதை)

கணினியின் ஒளிரும் திரையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் பைரவன். விசைப்பலகையைத் தொடத் தயங்கினார். சுருட்டைப் பற்களால் கடித்தபடி புகையை உள்ளிழுத்தார். அறைக்குள் சுழன்றது காட்டமான நெடி. தீக்கங்கு சுடர்ந்தது. உள்ளுக்குள் பரபரப்பு. பயமா தயக்கமா என்னவென்று சொல்ல முடியவில்லை. புத்தக அலமாரி ஓரமாய் கால்மடக்கி உட்கார்ந்து அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது கேபோ. சிவந்த நாக்கு பளபளவென்று மின்னியது.

எப்போதுமே ஒளிரும் திரை நிலைகொண்டதும் எம்எஸ்-வோர்டை திறப்பார். சொற்களைத் தட்டச்சுச் செய்ய ஆரம்பித்துவிடுவார். எந்த யோசனையும் இருக்காது. விரல்களுக்கும் விசைகளுக்கும் நடுவே அப்படியொரு இணக்கம். சிந்தனை சொற்களாகி விரல்களின் வழியே நழுவி ஒவ்வொரு எழுத்தாகக் கோர்க்கப்பட்டு திரையில் எழுதிப் போகும் வித்தை எப்படி என்று ஒருநாளும் அவர் யோசித்ததில்லை. உண்பது உறங்குவது நடப்பது கிடப்பதுபோல அன்றாடத்தின் ஒரு பகுதி அது. கை வலிக்க வலிக்க தாள்களில் எழுதி, பிரதியெடுக்கும் சிரமத்தை தீர்க்கும் கருவியாக கணினியைப் பயன்படுத்தும்படி இத்தாலிய வாசகர் ஆலோசனை தந்தபோது சிரித்தார். ‘எனக்கு சைக்கிளே ஓட்டத் தெரியாது. கம்ப்யூட்டரா?’ ‘சைக்கிள் இல்லேன்னா நடந்து போயிக்கலாம். அது வேற. இதுல நீங்க எழுத சிரமப்படவே வேண்டாம். சுலபமா திருத்தலாம். பாதுகாப்பா சேமிச்சு வெக்கலாம்’ என்று சொன்னபோது அக்கறையின்றிதான் கேட்டுக்கொண்டார்.  அவரும் ஒரு கணினியை வீட்டுக்கு அனுப்பிவிட்டார். எதனுடன் எதைப் பொருத்தவேண்டும் என்பதுகூடத் தெரியவில்லை. அலுவலக நண்பர் சிங்காரம் வந்து எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துக் கொடுத்தார். எப்படித் தட்டச்சு செய்யவேண்டும் என்பதை அமெரிக்க நண்பரே வகுப்பெடுத்தார். முதன்முதலாக MARIA என்று எழுத்துக்களை அடித்துவிட்டு ஸ்பேஸ் பாரைத் தட்டிய நொடியில் திரையில் ‘மரியா’ என்று ஒளிர்ந்ததைக் கண்டதும் பிரமிப்பாக இருந்தது.  மெல்ல மெல்ல ஒவ்வொரு சொல்லாய் முயன்று பார்த்தார். உற்சாகமாகத்தான் இருந்தது. ஆனால் நினைத்ததை நினைத்த வேகத்தில் திரைக்குக் கொண்டு வர முடியவில்லை. ஒவ்வொரு எழுத்தாய் தேடி அடிப்பது அலுப்பைத் தந்தது. அதிலும் நெடில், மெய்யெழுத்து, சிறப்பு எழுத்து ஆகியவை சற்று சிரமம் தந்தன. இதற்கு பேசாமல் எழுதிவிடலாம் என்று தாளை எடுத்துத் தொடங்கிய நாட்களும் உண்டு. ஆனால், ஒரு சமயத்தில் எழுத்துகளைத் தேடும் சிரமம் குறைந்து, விசைப்பலகை ஓரளவு கைவசமானபோது நம்பிக்கையுடன் தொடர்ந்து மிக வேகமாக தட்டச்சு செய்யும் நிலையை எட்டியிருந்தார்.

கதைகள், கட்டுரைகள், குறிப்புகள் எதுவானாலும் தட்டச்சு செய்து கோப்பில் சேமித்துவிட்டு கையோடு வேண்டுபவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடுவதில் ஒரு சாகச உணர்வு இருந்தது. பின் அதுவே சாதாரணமாகவும் போய்விட்டது. பக்கம் பக்கமாய் எழுதிக் குவிக்கிறார். ஒரு நாளைக்கு நாற்பது, ஐம்பது பக்கங்கள் அவரது இணையத்தில் குவிகின்றன. இவை தவிர வாசகர்களின் கேள்வி பதில்கள், விமர்சனக் குறிப்புகள், பரிந்துரைகள். மூளையின் வேகத்துக்கு இப்போது விசைப்பலகை பழகிவிட்டது. முதல் சொல்லை தட்டி முடித்ததுமே எழுத்து வேகம் பிடிக்கும். காற்றைப்போல் நீரைப்போல தன் பாதையில் தானே விரையும்.

ஒவ்வொரு நாளும் கணினியின் முகத்தில் முழித்து, கட்டற்ற வேகத்தில் எழுதிய அவரேதான் இப்போது விசைப்பலகையை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். தொட்டுப் பார்க்கவே தயக்கம். பயம்.

கைவசம் கதைகள் இல்லை. தீபாவளி மலருக்கு எப்படியும் கேட்பார்கள். குறைந்தது பதினைந்து கதையையாவது தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். அவர் விரல் பழகியிருக்கும் வேகத்தில் பதினைந்து கதைகள் என்பது ஏறக்குறைய நூற்றைம்பது பக்கங்கள். ஒரே நாளில், ஐந்து மணி நேரத்தில் அடித்துத் தள்ளிவிடுவார். சமயத்தில் எழுதும் வேகத்தை நிறுத்த முடியாததுபோல கூடுதலாய் இன்னும் பத்து பக்கத்தில் இன்னொரு கதையும் சேர்ந்துவிடும்.

எழுத ஆசையிருந்தும், தேவையிருந்தும் இப்போது எழுதாமல் தயங்குகிறார். அஞ்சுகிறார். சுருட்டை புகைத்தபடி யோசிக்கிறார். கேபோ அவரது கவனத்தைத் திருப்பும்பொருட்டு செல்லமாய் உறுமிற்று. மெல்லத் திரும்பி விரல் நீட்டி எச்சரித்ததும் சுருண்டு படுத்தது.

அப்படியொரு தயக்கமோ பயமோ தலையெடுத்து இரண்டு நாட்களாகிவிட்டன. அதற்கும் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு திங்கட்கிழமை காலை. விடியலின் வெளிச்சம் கசிந்திருந்த இருட்டுக்குள் பிரியமான கேபோவின் சங்கிலியைப் பற்றியபடி நடக்கத் தொடங்கி அம்மன் கோயில் விலக்கில் திரும்பி அன்னை வேளாங்கன்னி பள்ளிக்கூடத்தை சுற்றிக்கொண்டு வீடு திரும்பும்போது கழுத்திலும் முதுகிலும் வேர்த்து டீ சர்ட் நனைந்திருந்தது. வாசலில் கிடந்த செய்தித்தாட்களை கவ்விக்கொண்டு உள்ளே ஓடியது கேபோ. சட்டையைக் கழற்றி கொடியில் போட்டுவிட்டு துவாலையால் துடைத்தபடியே மாடிக்கு வந்தவர் மின்விசிறியை சுழலவிட்டார். கணினியை முடுக்கிவிட்டு நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடினார். யானியின் பியானோ இசை காற்றை நிறைத்தது. எழுதவேண்டியதை நடக்கும்போதே தீர்மானித்திருந்தார். அந்த முதல் சொல் ஒரு மந்திரம்போல உள்ளுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது.

வெண்திரை விரிந்ததும் வலதுமணிக்கட்டிலிருந்த செம்புக் காப்பை மேலேற்றிவிட்டு விசைப்பலகையில் கைவைத்தார். ‘கூந்தலை…’ என்ற முதற் சொல்லை அடித்தவுடனே அந்த வாக்கியம் வேகமாக ஊர்ந்தது. ‘கூந்தலை ஒதுக்கிக்கொண்டு கோலத்தின் இறுதி இழையை நழுவவிட்டவள் மேலே பார்த்தபோது மொட்டை மாடியிலிருந்து வெறித்த அவனது கண்களைக் கண்டாள்’. சற்றும் இடைவெளியின்றி அடுத்த வரித் தொடங்கிற்று. திரையிலிருந்து கண்களை விலக்கி விரல்களைப் பார்த்தார். திடுக்கிட்டார். விரல்கள் அசையவேயில்லை. சமயத்தில் ஏதேனும் ஒரு விசை மாட்டிக்கொண்டால் குறிப்பிட்ட அந்த எழுத்து அப்படி ஓடும். விசைகளைக் கூர்ந்து பார்த்தார். அப்படி எதுவும் இல்லை. ஆனால், திரையில் சொற்கள் ஒன்றை அடுத்து ஒன்று சேர்ந்து வாக்கியமாகி நகர்ந்தன. முதல் வரி முடிந்து அடுத்த வரி தொடர்ந்தது. கைகளை விசைப்பலகையிலிருந்து விலக்கினார். எழுதுவது நிற்கவில்லை.

அந்த வாக்கியம் அவர் நினைத்ததுபோலவே அப்படியே எழுதப்பட்டிருந்தது. அந்த வாக்கியம் மட்டுமல்ல, அந்தப் பத்தியில் இருந்தவை அனைத்துமே அவர் மனத்துள் எழுதிப் பார்த்தவைதான்.

தலையை உலுக்கியபடி மறுபடி திரையைப் பார்த்தார். உண்மைதானா?

நாற்காலிக்குக் கீழேயிருந்த கேபோ திரையைப் பார்த்துக் குரைத்தது.

கண்களை இமைத்தபடி மீண்டும் உற்று நோக்கியபோது கதை எழுதி முடிக்கப்பட்டிருந்தது. அவருக்கு பயம். தோற்ற மயக்கமா? காலையில் இன்னும் எதுவும் குடிக்கவில்லை. சாப்பிடவில்லை. வெறும் வயிறு. அதனால் கண்களில் இப்படியொரு மாயக்காட்சி விரிகிறதா?

யோசிக்காமல் கணினியை அப்படியே அணைத்தார். அப்படிச் செய்யக்கூடாதுதான். ஆனால் இப்போது வேறு வழியில்லை. திரை அணைந்தது.

எழுந்து ஜன்னலருகே வந்து வெளியில் பார்த்தார். வாசலில் சந்திரா பூக்காரம்மாவிடம் உரத்த குரலில் எதையோ சொல்லி சிரித்துக்கொண்டிருந்தாள். கேபோ பூக்காரம்மாவை மோப்பம் பிடித்தபடி சுற்றியது. சந்திராவிடம் இதைச் சொன்னால் முதல் காரியமாக வாசலுக்குக் கொண்டுபோய்விடுவாள். பார்க்கலாம்.

முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து அமர்ந்து சுருட்டைப் பற்ற வைத்தார். மூச்சை நிதானித்தபடி கணினியை முடுக்கினார். அடுத்தடுத்து வரிசையாய் தொடர்ந்தார். வெள்ளைத்திரையில் எதுவும் இல்லை. நிம்மதியுடன் முதல் எழுத்தைத் தொட்டவர் தலையை உலுக்கியபடி அந்த வாக்கியத்தை மாற்றுவதை யோசித்தார். ‘கூந்தலை ஒதுக்கிக்கொண்டு கோலத்தின் இறுதி இழையை நழுவவிட்டவள் மேலே பார்த்தபோது மொட்டை மாடியிலிருந்து வெறித்த அவனது கண்களைக் கண்டாள்’ என்று எழுத நினைத்திருந்தார். இப்போது அதை மாற்றிவிடலாம். ‘கோலத்தை போட்டு முடித்துவிட்டு…’ என்று எழுதலானார். ஸ்பேஸ் பாரைத் தட்டிய மறுநொடியில் தாறுமாறான வேகத்தில சொற்கள் விரைந்தன. ‘கோலத்தை போட்டு முடித்துவிட்டு நிமிர்ந்தபோது மொட்டைமாடியில் நின்றிருந்த அவனைப் பார்த்தாள்’. விரல்களை விசைப்பலகையின் மேல் சும்மா வைத்திருந்தார். ஆனால், வாக்கியங்கள் நகர்ந்தபடியே இருந்தன.

உதடுகள் உலர்ந்தன. இதயம் துடிப்பதைக் கேட்க முடிந்தது. என்னவாயிற்று? இந்த முறையும் கதை நீண்டுகொண்டே போனது. நடப்பது நடக்கட்டும் என்று கைகளைக் கட்டிக்கொண்டு நாற்காலியில் சாய்ந்து வேடிக்கை பார்த்தார்.

அப்போதுதான் உள்ளே வந்த கேபோ திரையைக் கண்டதும் ஆவேசத்துடன் குரைத்தது. “சுப்…” விரலை நீட்டி எச்சரித்தார்.

ஏழாவது பக்கத்தில் பத்து வரிகள் எழுதப்பட்டதும் எழுதுவது நின்றது. நேரத்தைப் பார்த்தார். சரியாக பதினெட்டு நிமிடங்கள்.

முதல் வாக்கியத்திலிருந்து நிதானமாக வாசிக்கத் தொடங்கினார். ‘கோலத்தை போட்டு முடித்துவிட்டு நிமிர்ந்தபோது மொட்டைமாடியில் நின்றிருந்த அவனைப் பார்த்தாள். சட்டென்று பார்வையைத் திருப்பி மரக்கிளையை வெறித்தவனின் உதடுகளில் புன்னகை.’ வெகு சரளமாக கதை சீராக நகர்ந்தது. எந்தத் தடையும் இல்லை. குழப்பமும் இல்லை. கச்சிதமான வடிவம். சுத்தமான மொழிநடை.

வேறு யாரோ எழுதிய கதையை வாசிப்பதுபோலத்தான் அதை வாசித்தார். ஆனால், அந்தக் கதையிலிருந்த தன் முத்திரையை அவரால் துல்லியமாக அடையாளம் காணமுடிந்தது. அச்சு அசலாக அவருடைய கதையேதான். குறிப்பிட்ட புள்ளியில் வாசகனை உள்ளிழுத்து தன்போக்கில் அவனை செலுத்தி வந்து இடையில் சற்றே தடுமாறச் செய்து கடைசியில் அவன் சிறிதும் எதிர்பாராத ஒரு நாற்சந்தியில் நிறுத்திவிட்டு நகர்ந்துவிடுவதுதான் அவரது கதைப்பாணி. வாசகன் எந்தத் திக்கிலும் நடந்து தனக்கான கதையைத் தேடிச் செல்ல முடியும்.

தலைப்பு மட்டும்தான் அங்கில்லையே தவிர அவரால் எழுதப்பட்ட கதையேதான் அது. ஆனால், முதல் சொல்லைத் தவிர வேறெதையுமே அவர் எழுதவில்லை.

திரையைப் பார்க்கப் பார்க்கப் பதற்றம் நீங்கியது. ஒரேயொரு சொல் கதையாகும் மாயம் கண்ணுக்கு முன் கண்ணாமூச்சி. லேசான கிளுகிளுப்பு. யாருமறியாத ரகசியத்தை உள்ளுக்குள் பொத்திக் கொள்ளும் பரவசம். ஆனாலும் முழுக்க நம்பிக்கையில்லை. தற்செயலோ? முன்பே எழுதியதைத்தான் திரையில் பார்க்கிறோமோ? அதை உறுதிப்படுத்திக் கொள்ளும் முனைப்புடன் புதிய பக்கத்தைத் திறந்தார். கண்களை மூடி யோசித்தார். அவருடைய வழக்கமான கதாபாத்திரங்கள் லத்தீன் அமெரிக்க நாராயணனும் பைந்தமிழ் மாணிக்கமும் உலக நடப்புகளை பகடியுடன் விவாதிக்கும் ஒரு கதையை எழுத நினைத்திருந்தார்.

முதல் சொல்லின் ஆங்கில எழுத்துகள் திரையில் விழுந்தன. ‘Kakkatthil’ என்று அடித்துவிட்டு நிறுத்தினார். இப்போது ஸ்பேஸ் பாரை கட்டை விரலால் தட்டியதும் திரையில் ‘கக்கத்தில்’ என்று தமிழாகிவிடும். அதன் பிறகு ‘குடையை இடுக்கிக்கொண்டு’ என்று தொடரவேண்டும். வேண்டுமென்றே தாமதித்தார். அது நிகழுமா? என்ற சிறிய சந்தேகம். ஆனால், அது நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார். புத்தகக் கண்காட்சியையும் அரங்கெங்கும் நிகழும் புத்தக வெளியீட்டு நிகழ்வுகளையும் குறித்த தன் விமர்சனங்களை எழுத நினைத்த கதை அது.

கட்டை விரலால் தட்டியதும் திரை தமிழில் ‘கக்கத்தில்’ என்று காட்டிவிட்டு தொடர்ந்து எழுதலானது.

எழுதி முடிக்கப்பட்ட அந்தக் கதையில் அவருடைய நாராயணனும் மாணிக்கமும் வழக்கம்போல எழுத்தாளர்களை நக்கலடித்தார்கள். நாட்டு நடப்புகளை கடுமையாக விமர்சித்தார்கள். ஓயாமல் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் பெயர்களை உதிர்த்தார்கள். ஆப்பிரிக்க கவிதைகளை மேற்கோள் காட்டினார்கள். சண்டை போட்டுக்கொண்டார்கள். புத்தகக் கண்காட்சியில் நடந்தேறும் அன்றாட நிகழ்வுகளை வகைதொகையில்லாமல் விமர்சித்தார்கள். கதையின் முடிவில் எழுதி வைத்திருந்த விமர்சனக் கட்டுரையை கிழித்துப்போட்டார் மாணிக்கம். இன்னும் திருப்பிக் கொடுக்காத லித்வேனியக் கவிதைத் தொகுப்பை ஞாபகப்படுத்தி நாராயணன் ஏசியபோது வெற்றிலைக் கறை படிந்த பல்லைக் காட்டினார் ‘உங்களுக்கு மறதி ஜாஸ்தி ஆயிருச்சு. அதான் கிண்டில் எடிசன் இருக்கில்ல. அதை எதுக்கு வெட்டியா சுமக்கணும்னு எடைக்கு போட்டுட்டேன்னு சொன்னேனே.’ பதிலுக்கு நாராயணன் சொன்னதாக எழுதியிருந்ததைப் படித்ததும் சிரித்துக்கொண்டார் ‘இதை அப்பிடியே அனுப்ப முடியாது. மாத்தணும். இத்தனை கெட்டவார்த்தைக் கூடாது.’

இரண்டு கதைகளை எழுத ஒருமணி நேரம்கூட பிடிக்கவில்லை. விரல்நுனிகளை உற்றுப் பார்த்தார். விசைப்பலகையை வியப்புடன் நோக்கினார். இதுவா, அதுவா? காரணம் புரியவில்லை. காதலியின் கடைக்கண்ணில் சம்மதத்தைக் கண்டவனின் கிறுக்கு தலைக்குள் ஏறியிருந்தது. உற்சாகத்துடன் சிரித்தார். அழைப்பு மணியை அழுத்த கை நீட்டினார். இங்கே அழுத்தினால் சமையலறைக்குள் ஒலிக்கும். ஒருமுறை அழுத்தினால் ஒரு க்ரீன் டீ. இரண்டுமுறை என்றால் பசிக்கிறது, கொறிக்க எதுவும் தேவை என்று பொருள். சந்திராவை மேலே அழைக்க நான்கு முறை. இல்லை, இப்போது வேண்டாம். அவள் கடல் போன்றவள். எதையுமே தன்னிடம் வைத்துக்கொள்ள மாட்டாள்.

எழுந்து அறைக்குள் நடந்தார். மெல்ல மெல்ல அந்த மாயம் புரிந்தது. நடையில் உல்லாசம். குதூகலத்துடன் விசிலடித்தார். மந்திரவாதிபோல விலுக்கென கையை நீட்டி வாய்க்கு வந்த சொற்களை உரக்கச் சொல்லிவிட்டு திரையைப் பார்த்தார். கண்ணடித்தார்.

‘பத்து வரிக் கவிதையா? ப்பூ… இந்தா எடுத்துக்கொள் பதரே’, ‘குறுங்கதை வேண்டுமா? எத்தனை குறுக்கவேண்டும். குறள்போலவா? குறுந்தொகை போலவா? ஹா… ஹா…’, ‘ஐம்பத்திரெண்டு வாரங்களுக்கு தொடரா? பத்து அத்தியாயம் இப்பவே வேணுமா? எதுக்கு தவணை. இந்தா மொத்தத்தையும் வெச்சுக்க. காசை உடனே ஜி.பே பண்ணு. வா, வா. அடுத்தது யாரு?’, ‘நாவல் இருக்கான்னா கேட்டீங்க? உங்க மெயிலை செக் பண்ணுங்க. ஐநூறு பக்கத்துல ஒண்ணு அனுப்பிருக்கேன். கொஞ்சம் பணத்தை மட்டும் மறக்காம அக்கவுண்ட்ல போட்டுடுங்க.’

மூச்சிறைக்க கேபோ மேலே வந்ததைத் தொடர்ந்து படிகளில் கொலுசு சத்தம். ஓடிப்போய் நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார்.

“சிரிப்பும் சத்தமா இருந்துச்சே. என்னமோ வசனம் பேசறாமாதிரி? என்னாச்சு?” செய்தித்தாளை விரித்து கையில் இருந்த கீரைக்கட்டைப் போட்டுவிட்டு கால்நீட்டி உட்கார்ந்தாள். நெற்றியில் வேர்வை பூத்து மினுமினுத்தது.

“ஒண்ணுமில்லையே. டீ போடலியா?”

“பொத்தான் ஒண்ணும் அமுக்கலியே. அப்பறமென்ன டீ? நா கேட்டதுக்கு பதிலச் சொல்லுங்க.”

“இங்க ஒண்ணும் சத்தம் கேக்கலியே. பக்கத்துல டீவி சத்தமா இருக்கும்.”

“டீவில அப்பிடியெல்லாம் வசனம் வராதுங்க. என்னவோ நாவல், குறுந்தொகேன்னு கேட்டுச்சே. நீங்க பேசலியா?” சந்தேகத்துடன் அவள் முகம் பார்க்க அவர் கணிணியைக் கூர்ந்து பார்த்தார். திரையில் அந்தக் கதை அப்படியே இருந்தது. கோப்பில் சேமித்துவிட்டு புதிய பக்கத்தைத் திறந்தார். ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தார். கேபோ காலடியில் படுத்திருந்தது. கீரையை ஆய்ந்தவளின் கண்களும் திரையை ஏறிட்டிருந்தன. அவளுக்கு சின்னதாய் ஒரு வேடிக்கை காட்டலாம் என்று மனத்துள் குறும்பு கொப்புளித்தது.

“இப்ப சின்னதா ஒரு வெளையாட்டு. சரியா? ஏதாவது ஒரு வார்த்தை சொல்லு.”

கீரைத்தண்டை கிள்ளிப் போட்டுவிட்டு முறைத்தாள்.

“சும்மா சொல்லு. ஏதாவது ஒரு வார்த்தை. ஒரு வேடிக்கை காட்டறேன் பாரு.”

“எழுதறதைவிட்டுட்டு இப்ப வேடிக்கை காட்ட போறீங்களா? சத்தமும் சிரிப்பா இருந்தப்பவே நெனச்சேன். கேட்டா பசப்பறீங்க.”

“அதவிடு. நீ சொல்லு.”

“வெண்டைக்கா…” நமுட்டலாய் சிரித்தாள்.

உற்சாகத்துடன் விசைகளைத் தட்டினார். ஸ்பேஸ் பாரைத் தட்டியதுமே ஆங்கிலத்திலிருந்து எழுத்துகள் தமிழாகின. ‘வெண்டைக்காய்’. அதன் பின் ஒளிர்சுட்டி நகரவில்லை. பார்த்துக்கொண்டேயிருந்தார். வேறெதுவும் நடக்கவில்லை.

“வெண்டைக்காயை வெண்டைக்காய்னு அடிக்கறதுதான் உங்க வேடிக்கையா? என்னாச்சு உங்களுக்கு? காலையிலேருந்து ஒரு மார்க்கமாதான் இருக்கீங்க. ஃபேஸ்புக்ல யாராச்சும் போட்டு கழுவி ஊத்திருக்காங்களா?”

சுள்ளென்று எரிச்சல் வெடித்தது “வாய மூடு நீ.”

“சொன்ன மாதிரிதான். எவனோ நல்ல வெச்சு செஞ்சிருக்கான். அதனால என்ன? உங்க வாசகக் குஞ்சுக முட்டுக் குடுப்பாங்களே.”

திரையில் வெண்டைக்காயைத் தவிர எதுவுமே இல்லை. என்னானது? இத்தனை நேரம் சரியாகத்தானே இருந்தது. என்ன பிரச்சினை? விறுட்டென்று எழுந்தார். கீரையை கிள்ளிப் போட்டவளை முறைத்தபடியே ஜன்னலருகே சென்றார்.

“நீ எதுக்கு இப்ப மேல வந்தே?”

காற்று வெம்மையுடன் மோதிக் கடந்தது. மதில்சுவரின் மேல் வாலைத் தூக்கிக்கொண்டிய அணிலைப் பார்த்துக் குரைத்தது நாய்.

“தப்புதான். என்னவோ சிரிப்பும் சத்தமுமா இருக்கே, விருது ஏதாவது அறிவிச்சிருக்காங்க போலன்னு ஆசையா வந்தேன். அதெல்லாம் உங்களுக்கு யாரு தரப்போறா? நீங்களா யார் கிட்டயாச்சும் காசக் குடுத்து அறிவிக்கவெக்க வேண்டிதுதான். அதுக்கும் ஒங்களுக்கு துப்பு கெடையாது.”

எதுவுமே அவர் காதில் விழவில்லை. வெண்டைக்காய் விவகாரம்தான். ஆனால் மண்டைக்குள் குடைந்தது. எதனால்? வேறு எதுவும் சரியாக இல்லையா?

“நீ கீழே போ மொதல்ல. எனக்கு வேலையிருக்கு” சீறினார். விருட்டென நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு எரிச்சலுடன் திரையிலிருந்த சொல்லை அழித்தார். வெறுமனே விரல்களைத் தட்டினார். எழுத்துகள் தாறுமாறாக வரிசைகோர்த்து ஓடின.

“மனுஷங்கிட்ட நாலு வார்த்தை பேசலான்னு வந்தா…” கீரையை அப்படியே அள்ளி எடுத்துக்கொண்டு நகர்ந்தாள். பின்னாலேயே தாவி ஓடியது கேபோ.

கொலுசொலி தணிந்தவுடன் திரும்பிப் பார்த்தார். கீழே போய்விட்டாள். மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு கைகளை சரியாக இருத்தியபடி திரையை உற்றுப் பார்த்தார். இப்போது சரியாக வரும். வரவேண்டும். ஒரு கவிதை எழுதலாமா? ஆமாம். பத்துக் கவிதை எழுதி வைத்தால் அவசரத்துக்கு கைகொடுக்கும். எல்லோருக்கும் கதையும் நாவலும் தர முடியுமா? இப்போது வந்த இளம் கவிஞர்களெல்லாம் வேறுமாதிரி எழுதுகிறார்கள். வருஷத்துக்கு ஒரு தொகுப்பு. மொத்தமாய் ஐயாயிரம் கவிதைகளை எழுதி அசத்தவேண்டும். தலையை உலுக்கிக்கொண்டார். ஒரு வார்த்தையை யோசிப்பதற்குள் கற்பனை இப்படி தறிகெட்டோடினால் அப்பறம் எவன் மதிப்பான்?

எங்கிருந்துத் தொடங்குவது?

அதுதான் முதல் வரி. அப்படியே எழுதிவிடலாம் என்று தீர்மானித்தவர் விசைகளைத் தட்டினார் ‘எங்கிருந்துத் தொடங்குவது?’.

கவிதை வரிகள் மடிந்து மடிந்து நீண்டன. சரியாய் பதினாறாவது வரியில் ஒற்றைச் சொல்லுடன் நின்றது. படித்துப் பார்த்தார். கச்சிதமான நவீன கவிதை. ‘நீ கவிஞன்டா” தன்னையே பாராட்டிவிட்டு சுறுசுறுப்பாய் அடுத்த பக்கத்துக்குத் தாவினார். இப்போது விரல்கள் தன்னிச்சையாய் ‘அகிலமெங்கும்…’ என்று தட்டியது. ‘பைத்தியமொன்று கை நீட்டிய…’, ‘கரையில் அழிந்த…’

அடுத்தடுத்து கவிதைகள். ஒவ்வொன்றாய் நகர்ந்து கோர்த்து பதினெட்டு கவிதைகளை எழுதியிருந்தார். அத்தனையையும் ஒட்டுமொத்தமாய் படித்தார். நிறைவுடன் கோப்பில் சேமித்தார். எவனும் இனி என்னை அசைக்கமுடியாது. கவிதைகளை எழுதி கனமான தொகுப்பாக்கி போட்டு உங்கள் கால்களை உடைக்கிறேன், அப்போதாவது என்னை நீங்கள் தமிழின் தவிர்க்கமுடியாத கவிஞன் என்று ஒப்புக்கொள்வீர்கள்.

தலையை உயர்த்தி கூரையைப் பார்த்தார். ஓரத்தில் அசைந்தது ஒட்டடை. அந்த வெண்டைக்காய் ஏன் சரி வரவில்லை? சட்டென்ற தெளிந்தது. ஆமாம், அது உண்மையான புனைவெழுச்சி இல்லாமல் விளையாட எண்ணியது. அதனால்தான் அதை பொருட்படுத்தவில்லை. மடையன் நான். அதெப்படி அத்தனை விளையாட்டாக செய்ய முடியும். ஒரு படைப்புக்கு கலைஞன் தன்னை ஒப்புக் கொடுக்காமல் எழுத்து எப்படி விளங்கும்?

அந்த கணத்தில் கண்ணீர் கசிந்தது. கணினியை ஆதுரத்துடன் நோக்கினார். தழுவிக்கொள்ள முடியாத சங்கடத்துடன் தலையை மேலும் கீழுமாய் அசைத்து ஆமோதித்தார். மன்னிப்பு கோரினார்.

மணியொலித்தது. யாரோ வந்திருக்கிறார்கள். எங்கிருந்தேனும் வாசகர்கள் வந்திருப்பார்கள். ஒன்றும் செய்ய முடியாது. மென்மையாய் ஒரு முத்தத்தை தந்துவிட்டு கணினியை அணைத்தார்.

 

அன்றிரவு எட்டு மணிக்கு மீண்டும் கணினியை முடுக்கியபோது உண்மையில் பைரவனுக்கு கைகள் நடுங்கின. காலையிலிருந்த சாகச உணர்வும் போதையும் இறங்கியிருந்தன. மீண்டும் அது கைகூடுமா என்ற சந்தேகம்.

எழுத்தாளன் சாதி சங்கத்துடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது குறித்த கேள்வி ஒன்றை வாசகர் கேட்டிருந்தார். அல்லது அவர் கேட்கவிருப்பதாகவோ தயங்குவதாகவோ இவர் நம்பினார். அதற்கான பதிலை எழுதவேண்டும். என்னதான் சமூகம், மனிதர்கள் அனைவரும் சமம், சாதி என்பது ஒரு அதிகாரம் என்றெல்லாம் நாவிலிருந்து சொற்கள் உதிர்ந்தாலும் உள்ளுக்குள் ஒரு சதை ஆடத்தான் செய்தது. அது குறித்து தன் மீது அவருக்கே ஒரு விமர்சனம் உண்டு. ஏதேனுமொரு பரிந்துரை என்று வரும்போது தர்க்கம் நம்பிக்கைதரும் இளம் படைப்பாளிகளின் பட்டியலைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த துண்டுச்சதை சரியாய் ஒரு சுயசாதி எழுத்தாளனின் பெயரை ஏற்கெனவே தெரிவுசெய்திருக்கும். தன் தர்க்க ஒழுங்கை மீறி அப்படி நடப்பது குறித்து பெரும் அதிருப்தியும் உண்டு.

‘அன்புள்ள சந்தோஷ்’ என்று விளிச் சொற்களை எழுதிவிட்டு மூச்சை உள்ளிழுத்தார். ஏற்கெனவே மனத்துள் பதிலை இறுதிசெய்திருந்தார். ‘ஒரு படைப்பாளி என்பவன் அனைத்துக்கும் அப்பாற்பட்டவன். அவன் மனிதன் வகுத்த எல்லா எல்லைகளுக்கும் வெளியிலிருப்பவன். சாதியுடன் தன்னை அடையாளம் காணும் ஒருவன் ஒரு நல்ல வாசகனாகக்கூட இருக்க முடியாது. பிறகெப்படி எழுத்தாளனாக உருவாகமுடியும்?’ என்பதாக அவரது தொடக்கம். எண்ணியபடியே கணினியில் சொற்கள் வாக்கியங்களாகி, வாக்கியங்கள் பத்திகளாகி, பின் பக்கங்களாய் விரிந்து முடிந்திருந்தது. கண்ணை மூடி நிதானமாக சுவாசித்தார். உண்மைதான், வெறும் கற்பனையல்ல. இதோ கண்முன் சரஸ்வதி கணினி வடிவில் ஒளிர்கிறாள். கைகூப்பி வணங்கினார். நிதானமாகப் படிக்கலானார்.

படிக்கப் படிக்க பதற்றம் கூடியது. கைகள் நடுங்கின. உத்தேசித்த பதிலுக்கு மாறாக வாக்கியங்கள் பல சாதி அபிமானத்தை தூக்கிப் பிடித்தன. ‘என்னதான் மனிதன் தனித்த ஒருவன் என்றாலும் வேர் உண்டல்லவா? ஆலும் வேலும் ஒன்றாகிவிடுமா? வேம்பின் கனி கசப்புடன்தான் இருக்கும். இதை பேதம் என்றும் வர்க்கம் என்றும் ஏன் வகுக்கவேண்டும். அது அதன் இயல்பு. ஒரு எழுத்தாளனின் படைப்பில் சுயசாதி சார்ந்த சார்பென்பது இயற்கையானது. இதில் விமர்சிக்க ஒன்றும் இல்லை’ என்று தர்க்கங்கள் நீண்டன.

தான் எழுத நினைக்காத வரிகள். அப்படியே இதைப் பதிவேற்றினால் அவ்வளவுதான், வாசலில் பெரிய தட்டி வைத்துவிடுவார்கள். சாதி சங்கத்தினர் ஏற்கெனவே நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வெளியில் தலைகாட்ட முடியாது.

எழுந்து அரை டிராயரை மேலே இழுத்துவிட்டபடி வேகமாக நடந்தார். எப்படி நடந்தது? நடுக்கத்துடன் சுருட்டைப் பற்றவைத்து வேகமாய் உறிஞ்சினார். நடக்க நடக்க விளக்கொளியில் அவரது நிழல் நீண்டும் சுருங்கியும் வித்தை காட்டியது. ஒருகணம் நின்றார். அப்படியே திரும்பி கணினியைப் பார்த்தார்.

நாற்காலியில் அமர்ந்து தண்ணீரைக் குடித்தபோது தெளிந்தது போலிருந்தது. இவை என் எண்ணங்கள். உண்மையில் நான் நம்புபவை. அவைதான் இங்கே பதிலாக பதிவாகியுள்ளன.

அவசரமாய் எல்லாவற்றையும் அழித்தார். கண்களை மூடி எழுத வேண்டிய பதிலை ஒருமுறை தனக்குள் சொல்லிக்கொண்டார். புதிதாக பக்கத்தைத் திறந்து முதல் சொல்லை அடித்துவிட்டு காத்திருந்தார். மனம் மறுபடி மறுபடி எழுதவேண்டிய பதிலை மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது.

எழுதி முடிக்கப்பட்ட பதிலைப் படித்தார். வேர்த்தது. முதல்முறை எழுதிய அதே வரிகள். அதே சொற்கள். எழுத நினைத்த தர்க்கங்கள் ஒன்றுமே இடம்பெறவில்லை. திரையை உற்றுப் பார்த்தார். சதுரங்கப் பலகையின் மறுபக்கம் கண்ணுற்றுப் பார்க்கும் போட்டியாளனாய் அது வீற்றிருந்தது.

மீண்டும் அழித்தார். இந்த பதிலை இப்போது எழுதுவது ஆபத்தானது. ஒட்டுமொத்தமாய் தன்னை முடக்கிப்போடும் அபாயம். தானே உருவாக்கிய கேள்விதானே, கிடக்கட்டும்.

அந்த எண்ணம் வந்ததும் ஆசுவாசமாய் உணர்ந்தார். மூச்சு சீரடைந்தது. வேர்வை அடங்க கண்டசாலாவின் பழைய பாடலென்றை முணுமுணுத்தபடியே எழுதி முடிக்காமல் விடப்பட்ட கதைகளும் கட்டுரைகளும் அடங்கிய கோப்பைத் திறந்தார். ஊர்மிளையை மையப் பாத்திரமாக வைத்து எழுதிய நெடுங்கதை ஒன்று முடிக்கப்படாமல் கிடந்தது. பதினான்கு பக்கங்கள். நிதானமாய் வாசித்தார்.

சரியான ஒரு இடத்தில் கதை நின்றிருந்தது. லட்சுமணன் தன்னைப் பற்றி யோசிக்காமல் ராமனின் பின்னால் சென்றதைக் குறித்து புலம்புகிறாள், அழுகிறாள். அண்ணனுக்காக உடன் செல்வது கடமையென்றால் கொண்டவளின் கண்ணீருக்கு பதில் சொல்வதும் அவனது பொறுப்புதானே? இதன் பிறகு எப்படி கதையை முடிப்பது என்று தெரியாமல் அப்படியே விட்டிருந்தார். சந்திராவிடம் இதைப் பற்றி விவாதித்தது நினைவுக்கு வந்தது.

விட்ட இடத்திலிருந்து தொடர எண்ணி எழுத்துகளைத் தொட்டார். நினைத்ததுபோலவே வாக்கியங்கள் சரஞ்சரமாய் நீண்டன. பார்த்துக்கொண்டே இருந்தார். இந்த வேகத்தில் போனால் மகா காவியம் ஒன்றை எழுதிவிடலாம். இந்த உலகத்தில் பிறகெவனும் என்னை நிமிர்ந்து பார்க்கவும் யோசிக்கவேண்டும். நான் எழுதியதையெல்லாம் அடுக்கி வைக்க அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தனியாக ஒரு கட்டடமே ஒதுக்கவேண்டும்.

முப்பத்தி ஐந்து பக்கங்கள் நீண்டு நெடுங்கதை முடிந்தது. நிதானமாக தண்ணீரை பருகியபடியே படிக்கலானார். குறிப்பிட்ட ஒரு வரியைப் படித்ததும் புரையேறியது. இருமினார். கண்ணில் நீர் கோர்த்தது. தலையைத் தட்டினார். மூச்சை சீராக்கியபடி வாயைத் துடைத்தார். மறுபடியும் அந்த வரியைப் படித்தார்.

‘அண்ணம்மேல் பாசம் என்பதெல்லாம் ஒரு காரணம் மட்டுமே. சீதையின்மேல் ஒரு ஆசை அவனுக்கு. அதனால்தான் அவள் பின்னால் நடந்தான். எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் யாருக்கும் வெளியில் உரக்கச் சொல்ல அச்சம். அவ்வளவுதான்.’

இதைப் பற்றி விவாதிக்கும்போது சந்திராவிடம் சொன்னதல்லவா இது? இதை இப்படியேவா எழுத முடியும்? வரப்பை உடைத்துக்கொண்டு திசைமாறி பாய்கிறதே தண்ணீர். முதலுக்கே மோசம். அதன் பிறகு வந்த வரிகள் இதைவிட ஆபாசமான வாதங்களுடன் தொடர்ந்ததைக் கண்டதும் தலைசுற்றியது. ஐயோ, அத்தனையும் சந்திராவிடம் சொன்னவைதான்.

ஒருவேளை சந்திராவுக்கும் இந்த கணினிக்கும் ஏதும் ஒப்பந்தம் உள்ளதா? சொன்னதையெல்லாம் இதனிடம் அவள் ஒப்பிக்கிறாளா? செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எப்படியிருந்தாலும் ஒருவகையில் சக்களத்திதானே!

எழுதிய பக்கங்களை அழித்துவிட்டு கணினியை அச்சத்துடன் அணைத்தார். விசைப்பலகையை எச்சரிக்கையுடன் விலக்கி வைத்தார். மனத்துள் குழப்பம். இவன் நல்லவனா, கெட்டவனா? எதுவானாலும் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்ற தீர்மானத்துடன் படிகளில் இறங்கினார்.

 

மறுநாள் இன்னும் பயங்கரமாய் அமைந்தது. மறுநாள் மட்டுமல்ல, அதைத் தொடர்ந்த நாட்கள் எல்லாமே அதிபயங்கரம். அவர் எழுத நினைத்த வரிகளை விடுத்துவிட்டு அதற்கு நேர் எதிரான வாக்கியங்களை எழுதிக் காட்டின. எல்லாமே விவகாரமான வரிகள். அச்சில் வந்தால் அத்தோடு அவரது இலக்கிய பீடம் சரிந்துவிடும்.

விறுவிறுவென ஏரி கரைக்கு வந்தார். கேபோ உற்சாகத்துடன் கரையோரத்தை மோப்பம் பிடித்து நகர்ந்தது. தொலைவில் அசைந்தன மீன்பிடி படகுகள். தூண்டிலைப் பிடித்தபடி கரையில் அமர்ந்திருந்தவன் தலையில் வட்டத் தொப்பி. புஜத்தில் டிராகன்போன்ற உருவம் வெயிலில் மின்னியது. நீரின் சலனத்தையும் சிற்றலைகள் வெயிலின் ஒளியைக் கலைத்தபடி நகர்வதையும் இலக்கற்றுப் பார்த்தபடி நின்றார் பைரவ். அவரது மனம் எதிலும் ஒன்றவில்லை. எப்படி இது நடக்கிறது? நான் உத்தேசிக்காததை எப்படி இது தடம் பிடிக்கிறது?எழுதிக் காட்டும் வரிகள் அவருக்கு புதிதல்ல. அடிக்கடி நண்பர்களிடமும் சந்திராயிடமும் விவாதிப்பதுதான். அவரது தரப்பும்கூட. ஆனால் அது அவருக்கானது. பொதுவானதல்ல. அந்தத் தெளிவுடன்தான் எப்போதும் எழுதுவார். ஒருபோதும் இரண்டையும் குழப்பிக்கொள்ளமாட்டார். ஆனால், கணினி அவரது ஆழ்மனத்தை மட்டுமே அடியொற்றி எழுதுகிறது.

கதையானாலும் கவிதையானாலும் கட்டுரையானாலும் அவர் நினைத்ததுபோல அல்லாமல் முழு முற்றாக வேறொன்றாகவே திரண்டது. அவருக்கானது அல்ல. அவருடைய எழுத்தும் கிடையாது. ஒருபோதும் அவற்றை அப்படியே வெளியில் தர முடியாது. உள்ளுக்குள் ஊறிக்கிடக்கும் கயமைகளை அவை மேலிழுத்து வருபவை. கட்டுப்பெட்டித்தனங்களை சுட்டிக் காட்டுபவை. ஒரு எழுத்தாளனுக்கேயுரிய போலித்தனங்களை தோலுரித்துக் காட்டுபவை.

இரண்டு நாட்களாய் கூகிளில் நிறைய தேடிப் படித்திருந்தார். கம்ப்யூட்டர் ஸயன்டிஸ்டான மைத்துனி மணிமேகலையிடமும் தகவல்களை கேட்டு அறிந்திருந்தார். “என்ன பைரவ், ஸைஃபி எதும் எழுதப் போறீங்களா?” என்று கேட்டபோது அவளது உதட்டோரத்தில் துளிர்த்த சிரிப்புக்கு என்ன பொருள் என்று புரியவில்லை. மைண்ட் மேப்பிங், ஏஐ என்று நிறைய தொழில்நுட்ப வியப்புகள். ஒரு மனிதனின் இச்சைகளை அறிந்து அதற்கேற்ப அவன் பயன்படுத்தும் செல்பேசியிலும் கணினியிலும் வலைவீசும் சூட்சுமம். விரும்பும் குணங்களும் தோற்றமும் கொண்ட ஒரு பெண்ணையே சந்திப்பதும்கூட சாத்தியம்தான். எனவே, என் கணினி என் மூளையைப் படித்துவிடுகிறது. மனத்தை அறிந்துவிடுகிறது. அதை மட்டுமே எழுதிக் காட்டுகிறது என்று முடிவுக்கு வந்திருந்தார். இருட்டியதும் மேய்ச்சல் மாடுகள் வீடு திரும்பிவிடும்போது, தொலைதூரத்தில் விட்டுவந்தாலும் பூனை அதே வீட்டுக்கு வந்துசேர்வதும் இயற்கை என்றால் என் எண்ணங்களுடன் இத்தனை நாள் பழகியிருக்கும் இந்த கணினியும் தானாக எழுதுவதும் சாத்தியந்தான் என்று நம்பத் தொடங்கியிருந்தார்.

‘என்னுடைய மூளையை, அகத்தை என் கணினி ஒற்றறிகிறது. ஆழ்மனத்தைப் படித்து அதைத்தான் எழுத்தாக வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு சொல்லும் அப்படித்தான் அமைகிறது. முடுக்கப்பட்டவுடனே கணினி என் அகத்துடன் இணைந்துவிடுகிறது. அதன்பின் என்னை அது தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்கிறது’ சொற்கள் உதடுகளில் தெறிக்க ஒரு கல்லையெடுத்து ஆவேசத்துடன் நீருள் எறிந்தார். கேபோ சீற்றத்துடன் குரைத்தது.

தூண்டிலிட்டு காத்திருந்தவன் திடுக்கிட்டான். தன்னிச்சையாய் உரக்கப் பேசும் அவரைத் திரும்பிப் பார்த்தான். எதையும் கவனிக்காமல் கேபோவை இழுத்துக்கொண்டு நடந்தார் பைரவ்.

கொடியில் துணிகளை உலர்த்திக்கொண்டிருந்தாள் சந்திரா “ரொம்ப நேரமாயிடுச்சு. ரெண்டு கால் வந்துச்சு. டீ போடவா?”

பதிலேதும் சொல்லாமல் மேலே ஏறினார். கேபோ படியருகே சுருண்டு படுத்தது. நாற்காலியில் கால்களை மடித்து அமர்ந்தவர் நகங்களைக் கடித்தபடியே யோசிக்கலானார். மறுபடி செல்போன் ஒலித்தது.

‘இப்படியே இதை எழுதவிட்டால் இதுவரை என் படைப்புகளின் வழியாக நான் கட்டியெழுப்பியிருக்கும் பிம்பத்தை நொறுக்கிவிடும். என்னை சாதியத்துக்கு ஆதரவானவனாய், பெண்ணியத்துக்கும் சமூக நீதிக்கும் மானுட விடுதலைக்கும் எதிரானவனாய் நிறுத்திவிடும். புதிய தலைமுறை எழுத்தாளர்களைப் பற்றிய என் ஆழ்மன எண்ணங்களை விமர்சனங்களை பொறாமைகளை அப்படியே வெளிக்காட்டிவிடும். குறிப்பாக பெண் எழுத்தாளர்களைக் குறித்து நான் கொண்டிருக்கும் மட்டமான கருத்துகளை அம்பலப்படுத்திவிடும். எனக்குள் பதுங்கியிருக்கும் அபாயகரமான சங்கியின் முகத்தை தோலுரித்துக் காட்டிவிடும். அவ்வளவுதான். பக்கம்பக்கமாக எழுதி நிறுவியிருக்கும் என் ஆளுமை சுக்குநூறாகிவிடும். பாடுபட்டு சலிக்காமல் நாவல்களையும் கட்டுரைகளையும் எழுதி காவடி எடுத்து ஒரு சாகித்ய விருது வாங்கியாகிவிட்டது. தமிழக அரசு விருதும் பபாசி விருதும் வாங்கியாகிவிட்டது. கொடீசியா விருதும் இலக்கியத் தோட்டம் விருதும்கூட. இந்த ஆண்டு நிச்சயமாய் விளக்கு விருது வந்துவிடுமென்று குருடிமலை ஜோசியர் சொல்லியிருக்கிறார். மசாலாக்காரர்களின் விருதுத் தொகை வேறு ஒவ்வொரு ஆண்டும் லட்சங்களில் கூடுகிறது. எப்படியாவது அதை கைப்பற்றவேண்டும். ஞானபீடத்துக்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனாலும் வாய்ப்புகள் எதையும் கெடுத்துக்கொள்ளக்கூடாது. எழுத்தாளர்களுக்கு இல்லம் தருவதாய் ஒரு திட்டம் வேறு இருக்கிறது. புறாக் கூண்டானாலும் அதற்கும் விலை இருக்கிறதே’. நிலைகொள்ளாமல் கழுத்தில் புரண்ட நீண்ட தலைமுடியை கோதினார்.

‘என்ன கெட்டுப்போகிறது. தாளில் எழுதினால் வேண்டாமென்றா சொல்கிறார்கள். கருவியை நம்பினால் கைலாசம்தான். இனி இந்தக் கணினியை நான் ஒருபோதும் பயன்படுத்தப் போவதில்லை’ உரக்கச் சொன்னபோது அவரையும் அறியாமல் உதட்டோரத்தில் எள்ளலுடன் புன்னகை விரிந்தது.

சுமக்க முடியாமல் அட்டைப் பெட்டியை எடுத்துக்கொண்டு மாடிப்படிகளில் கீழே இறங்கியவரை கேள்வியுடன் பார்த்தாள் சந்திரா.

‘ஒனக்கு கம்ப்யூட்டர் கத்துக்கணும்னு சொன்னியல்ல. நீயே வெச்சுக்க’ கூடத்தின் ஓரத்தில் பெட்டியை வைத்தார்.

‘நீங்க எதுல எழுதுவீகளாம்?’

பெருமையுடன் வலதுகையை உயர்த்தினார் “கடவுள் தந்த கை இருக்க கணினி எதற்கடி குதம்பாய்?”

கையிலிருந்த விளக்குமாறை உள்ளங்கையில் தட்டினாள் சந்திரா “அது செரி. ரெண்டு நாளா போக்கு சரியில்லை. மந்திரிச்சாதான் கொஞ்சம் சரி வரும்.”

“போடீ…” உற்சாகத்துடன் பாரம் குறைந்தவராய் மேலே விரைந்தார்.

கத்தைத் தாள்களை எடுத்து மேசையில் வைத்து பேனாவைத் திறந்தார். புதிய வேகத்துடன் உச்சியில் பிள்ளையார் சுழியை இட்டார். தலையை உயர்த்தி கூரையில் அசைந்த ஒட்டடையைப் பார்த்து யோசித்தார்.

‘வலது கால் கட்டை விரலருகே பனித்துளி போல் மினுங்கிய கொப்புளத்தை லேசாகத் தொட்டார். வலித்தது’ எழுதியதும் பேனாவை விலக்கிவிட்டு ஒருமுறை கையெழுத்தை சரிபார்த்தார். மோசமில்லை.

அடுத்த சொல்லை எழுதுவதற்காக தாளில் வைத்தவுடனே பேனா அதுவாகவே எழுதத் தொடங்கிற்று.

0

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

305ம் எண் வீட்டில் ஒரு கிழவர் - சிறுகதை


(அந்திமழை, ஏப்ரல் 2022 ல் வெளியான சிறுகதை )

கதவைத் திறந்ததும் மூக்கைப் பொத்திக்கொண்டாள் சரசு. சகிக்கமுடியாத பீடியின் நெடி. மெல்ல எட்டிப் பார்த்தாள். நீண்ட கூடத்தில் யாருமில்லை. 305 எதிர் வீடு என்றாலும் வாசலுக்கு நேர் எதிரில் கிடையாது. மெல்ல வலதுபக்கம் எட்டு வைத்து கொலுசொலி எழாமல் நடந்தாள். 305ம் எண் வாசல் கதவருகே அவர் சுவரைப் பிடித்தபடி குனிந்து நின்றிருந்தார். எதையோ தேடுவது போலிருந்தது. அந்த வீட்டின் கதவு திறந்திருக்கும்போதுதான் கூடத்தை புகைநெடி நிறைக்கும். கிழவர் நிமிர்ந்து பார்ப்பதற்குள் விலகி விடும் எண்ணத்தில் சரசு விறுவிறுவென நடந்து மின்தூக்கியின் பொத்தானை அழுத்திவிட்டு மெல்ல எட்டிப் பார்த்தாள். கிழவர் அவள் வந்ததைக் கண்டுகொள்ளாததுபோல சிறிதும் அசையாமல் நின்றிருந்தார்.  

மின்தூக்கிக்குள் நுழைந்து, கதவு சாத்திக்கொண்டதும் ஆழமாய் மூச்செறிந்தாள். இரண்டாம் தளத்தில் நின்று கதவு திறந்தது. மல்லிகை மணக்க பூரணி உள்ளே வந்தாள். உடனடியாக முகம் சுளிக்க சரசுவை உற்றுப் பார்த்தாள்.

“அய்யோ அக்கா. நானில்லை. அந்தக் கெழவன்தான் கதவைத் தெறந்து வெச்சிருக்கான். அதான் இப்பிடி நாறுது. நல்லவேளை மல்லியப்பூ வாசத்தோடு வந்தீங்க. இல்லேன்னா அவ்ளோதான்” சரசு பூரணியின் கைவளையலைப் பார்த்தாள். தடிமனான வளையல் சதைப்பற்று மிகுந்த அவள் கையில் பொருத்தமாக படிந்திருந்தது.

“இந்நேரத்துல அந்தாளு வெளிய வரமாட்டானே. இருட்டு உழுந்ததுக்கு அப்பறமாதானே வருவான்” கண்ணாடியைப் பார்த்து சேலைத் தலைப்பை சரிசெய்து முடிக்க மின்தூக்கி கீழ்தளத்தை எட்டியிருந்தது.

“இல்லக்கா. செவுத்தப் புடிச்சுட்டு எதையோ தேடறாப்பல நிக்கறான். தண்ணி கிண்ணி போட்டுருக்கானா தெரியலை. தலை தொங்கிக் கெடந்துச்சு. எங்களுக்குன்னு எதிர்வீடு வாச்சிருக்கு பாருக்கா.”

பூரணி பதிலேதும் சொல்லாமல் கார் நிறுத்தத்தை நோக்கி நடந்தாள்.

கழுத்தை நொடித்தபடியே சரசு அடுக்ககத்தின் வாசலில் நின்ற காய்கறி வண்டியை நெருங்கினாள்.

0

மேலே வந்த மின்தூக்கியின் கதவு திறந்ததும் மீண்டும் முகத்தில் அறைந்தது புகைநெடி. வெளியே வந்து தயக்கத்துடன் எட்டிப் பார்த்தாள் சரசு. கிழவர் தரையில் கிடந்தார். ஒருகணம் திடுக்கிட்டு நின்றாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். எப்போதும்போல எல்லா வீட்டுக் கதவுகளும் மூடிக் கிடந்தன. ஆளரவமே இல்லை. குப்பைகளைக் கூட்டிப் பெருக்கும் பாப்பாத்தியக்கா இன்னும் வரவில்லைபோல. தலையைக் குனிந்தபடி வேகமாக அந்த இடத்தைக் கடந்தாள். இதயம் படபடத்தது. அவரசமாக கதவைத் திறந்துகொண்டு உள்ளே போய் வேகமாய் சாத்தினாள். மூச்சிறைத்தது. முகத்தைத் துடைத்தபடியே மின்விசிறியின் வேகத்தைக் கூட்டினாள். இண்டர்காமில் கந்தசாமியை அழைத்தாள். அடுக்ககத்தின் மேலாளர். மாதாந்திர பராமரிப்புக் கட்டணத்தை வசூலிப்பதிலிருந்து வேளாவேளைக்கு நீரேற்றுவது, தபால்களை வாங்கி வினியோகிப்பது, அவசரத்துக்கு ஆட்டோ வரவழைப்பது என்று எல்லாவற்றுக்கும் கந்தசாமிதான்.

“சொல்லுங்கக்கா…”

“கந்தசாமி, அந்த கெழம் வாசல்ல விழுந்து கெடக்குது.”

“யாருக்கா?”

“அதான் எங்க எதுத்த வீடு. 305.”

“விழுந்து கெடக்கறாரா?”

“ஆமா கந்தசாமி. நீங்க கொஞ்சம் மேல வந்து பாருங்களேன். எனக்கு பயமாருக்கு. எதுக்கும் கிருஷ்ணனையும் அழைச்சுட்டு வாங்க.”

“செரிக்கா. நீங்க பதட்டப் படாதீங்க. வரேன்.”

கதவருகே சென்று உற்றுக் கேட்டாள். சத்தம் எதுவுமில்லை. திறந்து பார்க்கலாம் என்று எண்ணியவள் அந்த நினைப்பை உதறிவிட்டு மீண்டும் இண்டர்காமை எடுத்தாள். முதல் தளத்திலிருக்கும் சுகுணாவை அழைத்தாள். மணி அடித்துக் கொண்டேயிருந்தது. எடுக்கவில்லை. மறுபடியும் முயன்றாள். ‘என்னடி பண்ணிட்டிருக்கே?’ எரிச்சல் மேலோங்கிய கணத்தில் மறுபக்கம் ஒலிவாங்கியை எடுக்கும் ஓசை.

“அலோ…”

“சுகுணா. பிஸியா இருக்கியா?”

“நீங்களாக்கா. துணி காயப் போடலாம்னு மேல போனேன். வந்து எடுக்கறதுக்குள்ள கட் ஆயிருச்சு.”

“இங்க அந்த கெழம் கீழ விழுந்து கெடக்குது. வாசல்ல.”

“உங்க வீட்டு வாசல்லயா?”

“இல்லடி. அதோட வீட்டு வாசல்லதான். கந்தசாமிய வந்து பாக்க சொல்லிருக்கேன். எதுக்கும் நீ இங்க வாயேன். பயமா இருக்கு.”

“நீங்க உள்ளாறதானே இருக்கீங்க. ஒலை கொதிக்குது. அரிசியப் போட்டுட்டு வந்தர்றேன். ரெண்டே நிமிசம்.”

வேர்வையைத் துடைத்துக்கொண்டு வேறு யாரையாவது அழைக்கலாமா என்று யோசித்தபோது வெளியே அரவம் கேட்டது.

கதவருகே நின்று கேட்டாள்.

“அய்யா…” கந்தசாமியின் குரல்தான்.

கதவைத் திறந்தாள். பீடிப்புகையின் நெடி. சுவரோரமாக மெல்ல நகர்ந்து எட்டிப் பார்த்தாள்.

கந்தசாமி குனிந்து கிழவரின் தோளைத் தொட்டு உலுக்கினார் “அய்யா…”

இதற்குள் நீலச் சீருடையில் கிருஷ்ணன் மேலே வந்தார்.

தலையை சற்றே நிமிர்த்தினாற்போல கிடந்தார் கிழவர். அடர்ந்த நரைதாடி. வழுக்கைத் தலையின் ஓரங்களிலும் நரைமுடி. அழுக்கான காவி வேட்டி முழங்காலுக்கு மேலாக சுருண்டிருக்க கணுக்காலில் ஆழமான ஒரு வெட்டுத் தழும்பு. வலதுகை உடலுக்கு அடியில் மடங்கிக் கிடந்தது. இடதுகையை மேலே உயர்த்தியிருந்தார். அசப்பில் ஒருக்களித்து படுத்திருப்பதுபோலவே இருந்தது.

“எழுந்திருக்க மாட்டேங்கறாரே…” கந்தசாமி மண்டியிட்டு தலையை திருப்பினார்.

“மப்பா இருக்குமா?” கிருஷ்ணனும் அருகில் குனிந்தார்.

துப்பாட்டாவை நைட்டியின் மேலே போர்த்திக்கொண்டு படியிறங்கிய சுகுணா ஆட்களை கண்டதும் நடைதளர்த்தினாள். சரசுவின் அருகில் வந்து தோளைத் தொட்டாள். இருவரும் சற்றே பின்னகர்ந்ததும் சரசு கிசுகிசுத்தாள் “ஒண்ணுமே இல்ல. எனக்கு பயமாருக்கு சுகு.”

உடலைப் புரட்டியதும் தலை ஒருமுறை அசைந்து மறுகணம் ஒருபக்கமாய் சாய்ந்தது. கண்கள் மேலேறியிருக்க வாயோரத்தில் எச்சில் வழிந்திருந்தது.

“மணி சார் வீட்ல இருக்காறா பாருங்க கிருஷ்ணா. உடனே வரச் சொல்லுங்க” கந்தசாமி கிழவரின் கையைப் பற்றினார். வெதுவெதுப்பு அவருக்கு நம்பிக்கை கொடுத்தது.

“போயிருச்சாப்பா?” கிருஷ்ணன் கிழவரின் முகத்தையே உற்றுப் பார்த்தார்.

“அட நீயொண்ணு. போய் மணி சாரை வரச் சொல்லுன்னா…” கந்தசாமி அதட்டினார்.

சரசுவின் நடுங்கும் கைகளை சுகுணா இறுகப் பற்றினாள்.

0

மணியும் கந்தசாமியும் கிழவரின் தோள்களைப் பற்றி தூக்கினர். கால்கள் துவள கனத்த உடல் தரையில் இழுபட்டது. கிருஷ்ணன் வீட்டுக் கதவை விரியத் திறந்து பிடித்துக் கொண்டதும் கிழவரை உள்ளே இழுத்தனர். பீடியின் கடுமையான நெடி. பழைய சோபா ஒன்று ஓரமாய் கிடந்தது.

கிருஷ்ணன் ஸ்விட்சைத் தட்டியதும் விளக்கெரிந்தது.

கிழவரைத் தூக்கி சோபாவில் படுக்கவைத்தனர். தலை இன்னும் தொங்கியே இருந்தது. கை கால்களை நேராக்கி வைத்துவிட்டு மணி மார்பில் காதை வைத்துக் கேட்டார்.

“112ல நம்ம ஆனந்த் டாக்டர் இருக்காரா? கேட்டீங்களா கிருஷ்ணன்” மணி கிழவரின் கன்னத்தை தட்டினார்.

“சொல்லிட்டங்க சார். வரேன்னாரு” கிருஷ்ணன் டீ பாயின் மீதிருந்த புட்டியை எடுத்து தண்ணீரை கையில் வார்த்து கிழவரின் முகத்தில் இறைத்தார்.

நம்பிக்கை இழந்தவராய் கந்தசாமி விலகி நின்று வேர்வையைத் துடைத்துக்கொண்டார். கூடத்தின் தரை முழுக்க அழுக்கு அப்பியிருந்தது. வழக்கமாக கிழவர் புழங்கும் இடங்களைக் காட்டுவதுபோல சமையல் அறைக்கும் படுக்கை அறைக்குமாய் இரண்டு கிளை பாதைகள். சிகரெட் பெட்டிகள், கிழித்துப் போடப்பட்ட மசாலா பாக்கின் உறைகள், காய்ந்த வெற்றிலைகள், மாத்திரை அட்டைகள், சாக்லெட் காகிதங்கள் என குப்பைகள் காற்றில் அலைந்தன. சோபாவிற்கு அடியில் பழைய செய்தித்தாள் கட்டுகள். கிழிந்த பத்து ரூபாய் தாள் ஒன்று. தூசியடர்ந்த மேசையின் மேல் தொலைக்காட்சி பெட்டி. அதன் மேலே சிரிக்கும் புத்தர். அருகே சிறு ஆமை. எளிதில் நீங்காத மக்கிய வாடை வீட்டை நிறைத்திருந்தது.

தண்ணீர் கழுத்தில் இறங்கி வழிந்தது. கிழவர் அசையவில்லை.

“செருப்பு போட்டுட்டே வாங்க டாக்டர்” கந்தசாமி சொன்னதைக் கேட்காமல் ஆனந்த் செருப்பை உதறிவிட்டு உள்ளே வந்தார். கையில் ஸ்டெதஸ்கோப். அறையின் அழுக்கு வாடையை விரட்டுவதுபோல ஒருகணம் அவரிடமிருந்து நறுமணம்.

கிழவரின் கண்களை விலக்கிப் பார்த்தார். காதில் ஸ்டெதஸ்கோப்பை பொருத்திக்கொண்டு நாடியை பரிசோதித்தார். சுத்தமாக மழிக்கப்பட்ட முகத்தில் எந்த சலனமும் இல்லை. மார்பின் மேல் கையை அழுத்திப் பார்த்தார். கிழவரின் உடல் தொய்ந்து அசைந்தது.

“ஆஸ்பிட்டல் எடுத்துட்டு போலாமா ஆனந்த்?” மணியின் குரலில் தயக்கம்.

“சான்ஸ் இல்ல மணி சார். உயிர் பிரிஞ்சு கொஞ்ச நேரமாயிருச்சு” ஆனந்த் பெருமூச்சுடன் விலகி நின்றார்.

0

நீண்ட வராந்தாவில் ஆட்களின் சலசலப்பு. சரசு தான் கண்ட காட்சியை திரும்பத் திரும்ப ஓயாமல் விவரித்தாள்.

“கீழ போம்போது நின்னுட்டுதான் இருந்தாரு. தலையை குனிஞ்சுட்டு செவுத்தப் புடிச்சு எதையோ தேடறாமாதிரி. பீடி நாத்தம் பொறுக்க முடியலை. காயெல்லாம் வாங்கிட்டு திரும்ப வந்தா கீழ கெடக்கறாரு. ஒடனே கந்தசாமியக் கூப்பிட்டேன். ஆனா அப்பவே தலை தொங்கிருச்சு. பாவம், எதுத்து வீடுன்னுதான் பேரு. ஒரு வார்த்தை இதுவரைக்கும் பேசினதில்லை. மூஞ்சிய கண்ணெடுத்துப் பாத்ததில்லை.”

“நல்ல தெகிரியந்தான் இந்தாக்காவுக்கு. நானெல்லாம் ஓடிருவேன். இவங்க பாருங்க. தண்ணியெல்லாம் எடுத்து மூஞ்சில அடிச்சு, கந்தசாமிய வரச்சொல்லி, டாக்டரையும் வரச்சொல்லி… பயப்படாம இருந்திருக்காங்க” பாப்பாத்தி இன்னொரு பக்கமாய் சக வேலைக்காரம்மாவிடம் கிசுகிசுத்தாள்.

கந்தசாமி விறுவிறுவென மேலே வந்தார் “ஒரு போன் நம்பர்தான் இருக்கு. ரொம்ப நேரமா எடுக்கலை. இவரோட அக்கா மகனாம். கணபதில இருக்கார்னு நெனக்கறேன். எப்பவாவது வருவாரு. ஒண்ணு ரெண்டு தடவை போன்ல கூப்பிட்டு கேட்டிருக்காரு.”

“வீட்டுக்கு மெயின்டனன்ஸ் யார் கட்டறா?” அடுக்ககத்தின் குடியிருப்போர் சங்கத்தின் துணைத் தலைவர் வழுக்கைத் தலையில் வேர்வையைத் துடைத்தார்.

“மாசா மாசம் ஒண்ணாந்தேதி அக்கவுண்டுக்கு டான்னு வந்துரும். இவரோட தம்பி மவ. கன்யான்னு. துபாய்ல இருக்கு. ஒரு தடவை இங்க வந்துருக்கு” மணி தன்னுடைய அலைபேசியை எடுத்தார்.

“வீடு யார் பேர்ல இருக்கு?”

“இவரோட பேர்லதான்னு நெனக்கறேன்.”

“இல்ல சார். இவங்க சம்சாரத்தோட பேர்லதான். நம்மகிட்ட ஓனர்ஸ் ரெஜிஸ்டர் இருக்கில்ல. நான் பாத்திருக்கேன். அவங்க பேருகூட மாலதியோ என்னவோ. இருங்க, எடுத்துட்டு வரேன்” கந்தசாமி படிகளில் விரைந்தார்.

“இதுக்குத்தான் நான் சொல்றது. ஒவ்வொரு வீட்லயும் யாரு இருக்காங்க, அவசரத்துக்கு யாரைக் கூப்பிடணும், சொந்தக் காரங்க யாருன்னு எல்லாம் ஒரு டேடாபேஸ் இருக்கணும்னு. இப்ப பாருங்க. இந்த மனுசன் செத்துக் கெடக்கறாரு. யாருக்கு சொல்லணும்னே நமக்குத் தெரியலை. வெரி பேட்” கண்ணாடியைத் துடைத்துக்கொண்டு உதட்டைப் பிதுக்கினார் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான சுந்தரம்.

“இருக்கற எண்பது வீட்டுக்கும் அதுக்கான ஃபார்ம் அனுப்பிச்சிருக்கோம். பதினெட்டு பேர்தான் அப்டேட் பண்ணிருக்காங்க. மத்தவங்கெல்லாம் ரெஸ்பாண்டே பண்ணலை. நாம என்ன பண்ண முடியும்?” மணி சற்றே குரலுயர்த்தினார்.

ஆட்சேபிப்பதுபோல சுந்தரம் தலையாட்டினார் “நாமதான் சார் பண்ணணும். இப்ப போலிஸ் கேஸ் ஆச்சுன்னா யாரு பதில் சொல்றது? அசோசியேசன்தானே பொறுப்பெடுக்கணும்.”

“எடுக்கும் சார். அதானே பண்ணிட்டிருக்கோம். அப்பிடியே விட்டுட்டு போயிர்லயே.”

கந்தசாமி டைரியுடன் ஓடி வந்தார் “நான் சொன்னதுதான் சார். மாலதிங்கற பேர்லதான் வீடு. இவங்க சம்சாரம்தான்.”

“நம்பர் எதும் இல்லயா?”

“இங்கயும் அந்த ஒரு நம்பர்தான் எழுதிருக்கு.”

வீட்டுக்குள்ளிருந்து கிருஷ்ணன் வெளியே வந்தார். கையில் ஒரு தோள் பை. மணியிடம் நீட்டினார் “இவரு இந்த பையை தோள்ல மாட்டிட்டுதான் எப்பவும் வெளியில போவாரு. இதுல எதாச்சும் இருக்கா பாருங்க.”

0

“ஏய் அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்லை. ஹார்ட் அட்டாக்தான். வராந்தாவில கெடந்திருக்கார். யாரோ பாத்துட்டு தூக்கிட்டு வந்து படுக்க வெச்சிருக்கா. இங்கயே ஒரு டோக்டர். அவர் வந்து பாத்தப்பவே பிராணன் போயிடுத்தாம். என்னோட நம்பர்தானே இங்க இருக்கு. இவா பாவம் நாலஞ்சு தடவை கூப்பிட்டுருக்கா. போன்ல சார்ஜ் இல்லை. கால் வந்ததும் தெரியலை. இப்ப செத்த முன்னாடிதான் பாத்தேன். பெறப்பட்டு வந்துட்டேன். அவனும் கூடதான் இருக்கான். நீங்க லேட் பண்ணாம கௌம்பறதுக்கு வழிய பாருங்கோ. சீக்கிரமா வரணும். அதான். இப்பவே நேரமாயிட்டிருக்கு. அபார்ட்மெண்ட் இல்லியோ” காதையொட்டி அலைபேசியை வைத்தபடி மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தவருக்கு இன்னும் பதற்றம் தணிந்திருக்கவில்லை.

அவருடன் வந்த இளைஞன் அடிக்கடி தாடியை நீவியபடியே இல்லாத திசையில் எதையோ தேடுவதுபோலவே நின்றான். தொளதொளப்பான அரைக்கால் சட்டை. நிறம் மங்கிய பனியன். மார்பில் என்னவென்று புரியாத ஒரு படம்.

போனை அணைத்துவிட்டு மணியின் அருகில் வந்தார் “கன்யாகிட்ட சொல்லியாச்சு. உடனே பொறப்பட சொல்லிருக்கேன். என்ன ஏற்பாடுன்னு முடிவானதும் கூப்புடுவாங்க.”

“இங்க வேற யாரும் இல்லியா?”

“சித்தி பொண்ணு ஒருத்தி திருவனந்தரத்துல இருந்தா. இப்பதான் ரெண்டு மாசம் முன்னாடி ஆஸ்திரேலியா போயிட்டா. பாலக்காடு பக்கத்துல இருந்த மாமா ஒருத்தர் போன மாசம் தவறிட்டார். மத்தவங்க யாரும் இங்க இல்லை. ஆமதாபாத்துல அத்தையோட சித்தப்பா வழியில ஒருத்தர் உண்டு. ஆனா யாருக்குமே இவரோட காண்டாக்ட் இல்லை.”

மணி அலுப்பைக் காட்டிக்கொள்ளவில்லை “இருக்கட்டும். துபாய்ல இருந்து வரதுன்னா நாளைக்குத்தானே முடியும். அது வரைக்கும் என்ன செய்யறது?”

இளைஞன் நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்களில் கலக்கம்.

“இல்ல சார். கன்யா உடனே ஏற்பாடு பண்றேன்னு சொல்லிருக்கா. அத்தையை அழைச்சிட்டு வந்துடுவா. நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க.”

“இப்ப நாங்கதானே கவலப்பட வேண்டி இருக்கு. மனுஷன் செத்துப்போய் நாலு மணி நேரமாயிடுச்சு. இருட்டிடும். ஒரு பார்மாலிட்டியும் பண்ணாம அப்பிடியே போட்டுல்ல வெச்சிருக்கு. ஏதாச்சும் ஒரு முடிவைச் சொல்லுங்க. நீங்கதான இங்க இருக்கீங்க.” சுந்தரம் கண்ணாடியைக் கழற்றித் துடைத்தார்.

இளைஞன் முகத்தைத் துடைத்தபடியே முன்னால் வந்தான் “இல்ல அங்கிள். ஐஸ் பாக்ஸ் இப்ப வந்துரும். பார்மாலிட்டி என்னன்னு நீங்க கேட்டு பண்ணிடுங்கோ. மத்தபடி கிரிமேஷன் நாளைக்குத்தானே பண்ண முடியும்.” சொல்லி முடிப்பதற்குள் அவன் முகம் சிவந்திருந்தது.

இதைக் கேட்டவுடனே உடைந்து அழுதார் “மனுஷனுக்கு இப்பிடியா சாவு வரணும். யாருமில்லாம அனாதையாட்டமா? அப்பிடியென்ன வைராக்கியம். ரெண்டு பேரும் மொகம் பாத்து வருஷம் பத்து பதினாலு வருஷமாயிடுச்சு. அவளாவது அனுசரிச்சு போயிருக்கலாம். ரெண்டு பேருக்கும் அப்டியொரு ரோஷம். கண்றாவி.”

0

படிகளின் வழியே ஐஸ் பெட்டியை மேலே கொண்டு வர முடிந்தது. ஆனால், வீட்டுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. வாசலிலிருந்து கூடத்துக்கு உள்ளே திருப்பும்போது சுவரில் இடித்தது.

“ஒண்ணும் பண்ண முடியாது. இங்க இப்பிடியே வராந்தாவுலதான் வெக்கணும்” கந்தசாமி தயக்கத்துடன் சொன்னதும் ஆட்சேபணை குரல்கள் எழுந்தன.

“அதெப்பிடி. நாலுபேர் நடமாடற எடத்துல பொணத்தைப் போட்டு வெக்க முடியுமா?”

“கொழந்தைகெல்லாம்  இருக்காங்க. பயந்துறாதா?”

“ராத்திரியெல்லாம் யாரும் வெளியில வர முடியாது. போ முடியாது. அதெல்லாம் முடியாது.”

“விடிஞ்சும் விடியாம பொணத்து மூஞ்சில முழிக்க முடியாது.”

தர்மசங்கடத்துடன் இளைஞன் நகத்தைக் கடித்தபடி நிற்க மணி கையமர்த்தினார் “நம்ம வீட்ல ஒண்ணுன்னா இப்பிடியா பேசிட்டிருப்போம். சம்பந்தப்பட்டவங்களும் இங்க இல்ல. பாவம், இவங்கதான் இப்போதைக்கு இருக்காங்க. இப்பிடி வெளியில வெச்சிருவோம். ஒரு ராத்திரிதான். கொஞ்சம் சப்போர்ட் பண்லாமே.”

“ஆமா உங்க வீட்டு வாசல்ல வெக்கலான்னா ஒத்துக்குவீங்களா?”

“எனக்கொண்ணும் பிரச்சினையில்லை. அங்கதான் வெக்கலாம்னா தூக்கிட்டு போலாம்.”

“அதெல்லாம் வேணாங்க. பாவம், யாருமில்லாம தனியா போன உசுரு. இனியும் அதை அலைக்கழிக்க வேணாம். இங்கயே வெச்சிக்கலாம்” சரசு கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

0

303ம் எண் வீட்டிலிருந்து மணி இரண்டு நாற்காலிகளை வாங்கி வந்தார் “ரெண்டு பேரும் எத்தனை நேரம் நிப்பீங்க? உக்காருங்க.”

சுவரில் சாய்ந்து நின்ற அவர்கள் இருவரும் மறுத்தனர் “பரவால்லேங்க. வேணாம். இப்பிடியே உக்காந்துக்கறோம்.” தரையில் அமர்ந்தனர்.

லேசான உறுமல் சத்தத்துடன் ஐஸ் பெட்டி இயங்கிக்கொண்டிருக்க உள்ளே வைக்கப்பட்டிருந்தது கிழவரின் உடல்.

“எத்தனை மணிக்கு வந்து சேருவாங்க?”

“நாளைக்கு மத்தியானம் கொச்சின் வந்து சேருவாங்களாம். அங்க இருந்து அப்பறம் நாலு மணி நேரம். இருட்டறதுக்குள்ள வரணும்னு கேட்டிருக்கேன். வந்துருவாங்க.”

“எத்தனை பேர்?”

“அத்தையும், கன்யாவுந்தான். இவரோட தம்பி மக. இவர் மேல பாசம் காட்டறது அவ ஒருத்திதான். எங்க யாருக்கும் இவரோட ஒத்து வராது. அங்க வந்து இருந்துருன்னு பல நாள் சொல்லிருக்கா. இவர்தான் புடிவாதமா இங்கயே இருந்துட்டார்.”

“சார், இவர் பேர் என்ன? டாக்டர் சர்டிபிகேட் வேணும்னு சொன்னீங்கல்ல.”

மணியின் முகத்தை ஏறிட்டார். யோசனையில் நெற்றி சுருங்கிற்று “பேரு… என்னவோ சொல்லுவாங்களே.”

இளைஞன் பையிலிருந்து அலைபேசியை எடுத்தான். விரல்கள் தாடியில் அலைந்தன.

“ஞாபகத்துக்கு வர்ல. கன்யாகிட்ட கேட்டு சொல்றேன் சார்” தலையைக் குனிந்துகொண்டார்.

“பரவால்லே. காலையிலதான் டாக்டர்கிட்ட சொல்லணும். அப்பறமா யோசிச்சு சொல்லுங்க.”

பையிலிருந்த அலைபேசி ஒலிக்க எடுத்து பேசினார் மணி.

“உங்க ரெண்டு பேருக்கும் டிபன் வாங்கிட்டு வரச் சொன்னேன். நீங்க கீழே போய் சாப்பிட்டு வாங்க.”

“அய்யோ அதெல்லாம் ஒண்ணும் வேணாம். பாத்துக்கலாம்.”

இளைஞன் எழுந்தான். கைகளை நீட்டி மடக்கியபடி செருப்பை போட்டுக்கொண்டான். அவரும் எழுந்துகொண்டார்.

ஒருமுறை சவப்பெட்டியை வெறித்துப் பார்த்துவிட்டு இருவரும் படிகளில் இறங்கி நடந்தனர்.

0

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...