Tuesday 31 May 2022

உளவாளி ( சிறுகதை )

 ( ஆவநாழி, ஏப்ரல்-மே 2022 மென்னிதழில் வெளியான சிறுகதை)

கணினியின் ஒளிரும் திரையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் பைரவன். விசைப்பலகையைத் தொடத் தயங்கினார். சுருட்டைப் பற்களால் கடித்தபடி புகையை உள்ளிழுத்தார். அறைக்குள் சுழன்றது காட்டமான நெடி. தீக்கங்கு சுடர்ந்தது. உள்ளுக்குள் பரபரப்பு. பயமா தயக்கமா என்னவென்று சொல்ல முடியவில்லை. புத்தக அலமாரி ஓரமாய் கால்மடக்கி உட்கார்ந்து அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது கேபோ. சிவந்த நாக்கு பளபளவென்று மின்னியது.

எப்போதுமே ஒளிரும் திரை நிலைகொண்டதும் எம்எஸ்-வோர்டை திறப்பார். சொற்களைத் தட்டச்சுச் செய்ய ஆரம்பித்துவிடுவார். எந்த யோசனையும் இருக்காது. விரல்களுக்கும் விசைகளுக்கும் நடுவே அப்படியொரு இணக்கம். சிந்தனை சொற்களாகி விரல்களின் வழியே நழுவி ஒவ்வொரு எழுத்தாகக் கோர்க்கப்பட்டு திரையில் எழுதிப் போகும் வித்தை எப்படி என்று ஒருநாளும் அவர் யோசித்ததில்லை. உண்பது உறங்குவது நடப்பது கிடப்பதுபோல அன்றாடத்தின் ஒரு பகுதி அது. கை வலிக்க வலிக்க தாள்களில் எழுதி, பிரதியெடுக்கும் சிரமத்தை தீர்க்கும் கருவியாக கணினியைப் பயன்படுத்தும்படி இத்தாலிய வாசகர் ஆலோசனை தந்தபோது சிரித்தார். ‘எனக்கு சைக்கிளே ஓட்டத் தெரியாது. கம்ப்யூட்டரா?’ ‘சைக்கிள் இல்லேன்னா நடந்து போயிக்கலாம். அது வேற. இதுல நீங்க எழுத சிரமப்படவே வேண்டாம். சுலபமா திருத்தலாம். பாதுகாப்பா சேமிச்சு வெக்கலாம்’ என்று சொன்னபோது அக்கறையின்றிதான் கேட்டுக்கொண்டார்.  அவரும் ஒரு கணினியை வீட்டுக்கு அனுப்பிவிட்டார். எதனுடன் எதைப் பொருத்தவேண்டும் என்பதுகூடத் தெரியவில்லை. அலுவலக நண்பர் சிங்காரம் வந்து எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துக் கொடுத்தார். எப்படித் தட்டச்சு செய்யவேண்டும் என்பதை அமெரிக்க நண்பரே வகுப்பெடுத்தார். முதன்முதலாக MARIA என்று எழுத்துக்களை அடித்துவிட்டு ஸ்பேஸ் பாரைத் தட்டிய நொடியில் திரையில் ‘மரியா’ என்று ஒளிர்ந்ததைக் கண்டதும் பிரமிப்பாக இருந்தது.  மெல்ல மெல்ல ஒவ்வொரு சொல்லாய் முயன்று பார்த்தார். உற்சாகமாகத்தான் இருந்தது. ஆனால் நினைத்ததை நினைத்த வேகத்தில் திரைக்குக் கொண்டு வர முடியவில்லை. ஒவ்வொரு எழுத்தாய் தேடி அடிப்பது அலுப்பைத் தந்தது. அதிலும் நெடில், மெய்யெழுத்து, சிறப்பு எழுத்து ஆகியவை சற்று சிரமம் தந்தன. இதற்கு பேசாமல் எழுதிவிடலாம் என்று தாளை எடுத்துத் தொடங்கிய நாட்களும் உண்டு. ஆனால், ஒரு சமயத்தில் எழுத்துகளைத் தேடும் சிரமம் குறைந்து, விசைப்பலகை ஓரளவு கைவசமானபோது நம்பிக்கையுடன் தொடர்ந்து மிக வேகமாக தட்டச்சு செய்யும் நிலையை எட்டியிருந்தார்.

கதைகள், கட்டுரைகள், குறிப்புகள் எதுவானாலும் தட்டச்சு செய்து கோப்பில் சேமித்துவிட்டு கையோடு வேண்டுபவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடுவதில் ஒரு சாகச உணர்வு இருந்தது. பின் அதுவே சாதாரணமாகவும் போய்விட்டது. பக்கம் பக்கமாய் எழுதிக் குவிக்கிறார். ஒரு நாளைக்கு நாற்பது, ஐம்பது பக்கங்கள் அவரது இணையத்தில் குவிகின்றன. இவை தவிர வாசகர்களின் கேள்வி பதில்கள், விமர்சனக் குறிப்புகள், பரிந்துரைகள். மூளையின் வேகத்துக்கு இப்போது விசைப்பலகை பழகிவிட்டது. முதல் சொல்லை தட்டி முடித்ததுமே எழுத்து வேகம் பிடிக்கும். காற்றைப்போல் நீரைப்போல தன் பாதையில் தானே விரையும்.

ஒவ்வொரு நாளும் கணினியின் முகத்தில் முழித்து, கட்டற்ற வேகத்தில் எழுதிய அவரேதான் இப்போது விசைப்பலகையை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். தொட்டுப் பார்க்கவே தயக்கம். பயம்.

கைவசம் கதைகள் இல்லை. தீபாவளி மலருக்கு எப்படியும் கேட்பார்கள். குறைந்தது பதினைந்து கதையையாவது தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். அவர் விரல் பழகியிருக்கும் வேகத்தில் பதினைந்து கதைகள் என்பது ஏறக்குறைய நூற்றைம்பது பக்கங்கள். ஒரே நாளில், ஐந்து மணி நேரத்தில் அடித்துத் தள்ளிவிடுவார். சமயத்தில் எழுதும் வேகத்தை நிறுத்த முடியாததுபோல கூடுதலாய் இன்னும் பத்து பக்கத்தில் இன்னொரு கதையும் சேர்ந்துவிடும்.

எழுத ஆசையிருந்தும், தேவையிருந்தும் இப்போது எழுதாமல் தயங்குகிறார். அஞ்சுகிறார். சுருட்டை புகைத்தபடி யோசிக்கிறார். கேபோ அவரது கவனத்தைத் திருப்பும்பொருட்டு செல்லமாய் உறுமிற்று. மெல்லத் திரும்பி விரல் நீட்டி எச்சரித்ததும் சுருண்டு படுத்தது.

அப்படியொரு தயக்கமோ பயமோ தலையெடுத்து இரண்டு நாட்களாகிவிட்டன. அதற்கும் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு திங்கட்கிழமை காலை. விடியலின் வெளிச்சம் கசிந்திருந்த இருட்டுக்குள் பிரியமான கேபோவின் சங்கிலியைப் பற்றியபடி நடக்கத் தொடங்கி அம்மன் கோயில் விலக்கில் திரும்பி அன்னை வேளாங்கன்னி பள்ளிக்கூடத்தை சுற்றிக்கொண்டு வீடு திரும்பும்போது கழுத்திலும் முதுகிலும் வேர்த்து டீ சர்ட் நனைந்திருந்தது. வாசலில் கிடந்த செய்தித்தாட்களை கவ்விக்கொண்டு உள்ளே ஓடியது கேபோ. சட்டையைக் கழற்றி கொடியில் போட்டுவிட்டு துவாலையால் துடைத்தபடியே மாடிக்கு வந்தவர் மின்விசிறியை சுழலவிட்டார். கணினியை முடுக்கிவிட்டு நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடினார். யானியின் பியானோ இசை காற்றை நிறைத்தது. எழுதவேண்டியதை நடக்கும்போதே தீர்மானித்திருந்தார். அந்த முதல் சொல் ஒரு மந்திரம்போல உள்ளுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது.

வெண்திரை விரிந்ததும் வலதுமணிக்கட்டிலிருந்த செம்புக் காப்பை மேலேற்றிவிட்டு விசைப்பலகையில் கைவைத்தார். ‘கூந்தலை…’ என்ற முதற் சொல்லை அடித்தவுடனே அந்த வாக்கியம் வேகமாக ஊர்ந்தது. ‘கூந்தலை ஒதுக்கிக்கொண்டு கோலத்தின் இறுதி இழையை நழுவவிட்டவள் மேலே பார்த்தபோது மொட்டை மாடியிலிருந்து வெறித்த அவனது கண்களைக் கண்டாள்’. சற்றும் இடைவெளியின்றி அடுத்த வரித் தொடங்கிற்று. திரையிலிருந்து கண்களை விலக்கி விரல்களைப் பார்த்தார். திடுக்கிட்டார். விரல்கள் அசையவேயில்லை. சமயத்தில் ஏதேனும் ஒரு விசை மாட்டிக்கொண்டால் குறிப்பிட்ட அந்த எழுத்து அப்படி ஓடும். விசைகளைக் கூர்ந்து பார்த்தார். அப்படி எதுவும் இல்லை. ஆனால், திரையில் சொற்கள் ஒன்றை அடுத்து ஒன்று சேர்ந்து வாக்கியமாகி நகர்ந்தன. முதல் வரி முடிந்து அடுத்த வரி தொடர்ந்தது. கைகளை விசைப்பலகையிலிருந்து விலக்கினார். எழுதுவது நிற்கவில்லை.

அந்த வாக்கியம் அவர் நினைத்ததுபோலவே அப்படியே எழுதப்பட்டிருந்தது. அந்த வாக்கியம் மட்டுமல்ல, அந்தப் பத்தியில் இருந்தவை அனைத்துமே அவர் மனத்துள் எழுதிப் பார்த்தவைதான்.

தலையை உலுக்கியபடி மறுபடி திரையைப் பார்த்தார். உண்மைதானா?

நாற்காலிக்குக் கீழேயிருந்த கேபோ திரையைப் பார்த்துக் குரைத்தது.

கண்களை இமைத்தபடி மீண்டும் உற்று நோக்கியபோது கதை எழுதி முடிக்கப்பட்டிருந்தது. அவருக்கு பயம். தோற்ற மயக்கமா? காலையில் இன்னும் எதுவும் குடிக்கவில்லை. சாப்பிடவில்லை. வெறும் வயிறு. அதனால் கண்களில் இப்படியொரு மாயக்காட்சி விரிகிறதா?

யோசிக்காமல் கணினியை அப்படியே அணைத்தார். அப்படிச் செய்யக்கூடாதுதான். ஆனால் இப்போது வேறு வழியில்லை. திரை அணைந்தது.

எழுந்து ஜன்னலருகே வந்து வெளியில் பார்த்தார். வாசலில் சந்திரா பூக்காரம்மாவிடம் உரத்த குரலில் எதையோ சொல்லி சிரித்துக்கொண்டிருந்தாள். கேபோ பூக்காரம்மாவை மோப்பம் பிடித்தபடி சுற்றியது. சந்திராவிடம் இதைச் சொன்னால் முதல் காரியமாக வாசலுக்குக் கொண்டுபோய்விடுவாள். பார்க்கலாம்.

முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து அமர்ந்து சுருட்டைப் பற்ற வைத்தார். மூச்சை நிதானித்தபடி கணினியை முடுக்கினார். அடுத்தடுத்து வரிசையாய் தொடர்ந்தார். வெள்ளைத்திரையில் எதுவும் இல்லை. நிம்மதியுடன் முதல் எழுத்தைத் தொட்டவர் தலையை உலுக்கியபடி அந்த வாக்கியத்தை மாற்றுவதை யோசித்தார். ‘கூந்தலை ஒதுக்கிக்கொண்டு கோலத்தின் இறுதி இழையை நழுவவிட்டவள் மேலே பார்த்தபோது மொட்டை மாடியிலிருந்து வெறித்த அவனது கண்களைக் கண்டாள்’ என்று எழுத நினைத்திருந்தார். இப்போது அதை மாற்றிவிடலாம். ‘கோலத்தை போட்டு முடித்துவிட்டு…’ என்று எழுதலானார். ஸ்பேஸ் பாரைத் தட்டிய மறுநொடியில் தாறுமாறான வேகத்தில சொற்கள் விரைந்தன. ‘கோலத்தை போட்டு முடித்துவிட்டு நிமிர்ந்தபோது மொட்டைமாடியில் நின்றிருந்த அவனைப் பார்த்தாள்’. விரல்களை விசைப்பலகையின் மேல் சும்மா வைத்திருந்தார். ஆனால், வாக்கியங்கள் நகர்ந்தபடியே இருந்தன.

உதடுகள் உலர்ந்தன. இதயம் துடிப்பதைக் கேட்க முடிந்தது. என்னவாயிற்று? இந்த முறையும் கதை நீண்டுகொண்டே போனது. நடப்பது நடக்கட்டும் என்று கைகளைக் கட்டிக்கொண்டு நாற்காலியில் சாய்ந்து வேடிக்கை பார்த்தார்.

அப்போதுதான் உள்ளே வந்த கேபோ திரையைக் கண்டதும் ஆவேசத்துடன் குரைத்தது. “சுப்…” விரலை நீட்டி எச்சரித்தார்.

ஏழாவது பக்கத்தில் பத்து வரிகள் எழுதப்பட்டதும் எழுதுவது நின்றது. நேரத்தைப் பார்த்தார். சரியாக பதினெட்டு நிமிடங்கள்.

முதல் வாக்கியத்திலிருந்து நிதானமாக வாசிக்கத் தொடங்கினார். ‘கோலத்தை போட்டு முடித்துவிட்டு நிமிர்ந்தபோது மொட்டைமாடியில் நின்றிருந்த அவனைப் பார்த்தாள். சட்டென்று பார்வையைத் திருப்பி மரக்கிளையை வெறித்தவனின் உதடுகளில் புன்னகை.’ வெகு சரளமாக கதை சீராக நகர்ந்தது. எந்தத் தடையும் இல்லை. குழப்பமும் இல்லை. கச்சிதமான வடிவம். சுத்தமான மொழிநடை.

வேறு யாரோ எழுதிய கதையை வாசிப்பதுபோலத்தான் அதை வாசித்தார். ஆனால், அந்தக் கதையிலிருந்த தன் முத்திரையை அவரால் துல்லியமாக அடையாளம் காணமுடிந்தது. அச்சு அசலாக அவருடைய கதையேதான். குறிப்பிட்ட புள்ளியில் வாசகனை உள்ளிழுத்து தன்போக்கில் அவனை செலுத்தி வந்து இடையில் சற்றே தடுமாறச் செய்து கடைசியில் அவன் சிறிதும் எதிர்பாராத ஒரு நாற்சந்தியில் நிறுத்திவிட்டு நகர்ந்துவிடுவதுதான் அவரது கதைப்பாணி. வாசகன் எந்தத் திக்கிலும் நடந்து தனக்கான கதையைத் தேடிச் செல்ல முடியும்.

தலைப்பு மட்டும்தான் அங்கில்லையே தவிர அவரால் எழுதப்பட்ட கதையேதான் அது. ஆனால், முதல் சொல்லைத் தவிர வேறெதையுமே அவர் எழுதவில்லை.

திரையைப் பார்க்கப் பார்க்கப் பதற்றம் நீங்கியது. ஒரேயொரு சொல் கதையாகும் மாயம் கண்ணுக்கு முன் கண்ணாமூச்சி. லேசான கிளுகிளுப்பு. யாருமறியாத ரகசியத்தை உள்ளுக்குள் பொத்திக் கொள்ளும் பரவசம். ஆனாலும் முழுக்க நம்பிக்கையில்லை. தற்செயலோ? முன்பே எழுதியதைத்தான் திரையில் பார்க்கிறோமோ? அதை உறுதிப்படுத்திக் கொள்ளும் முனைப்புடன் புதிய பக்கத்தைத் திறந்தார். கண்களை மூடி யோசித்தார். அவருடைய வழக்கமான கதாபாத்திரங்கள் லத்தீன் அமெரிக்க நாராயணனும் பைந்தமிழ் மாணிக்கமும் உலக நடப்புகளை பகடியுடன் விவாதிக்கும் ஒரு கதையை எழுத நினைத்திருந்தார்.

முதல் சொல்லின் ஆங்கில எழுத்துகள் திரையில் விழுந்தன. ‘Kakkatthil’ என்று அடித்துவிட்டு நிறுத்தினார். இப்போது ஸ்பேஸ் பாரை கட்டை விரலால் தட்டியதும் திரையில் ‘கக்கத்தில்’ என்று தமிழாகிவிடும். அதன் பிறகு ‘குடையை இடுக்கிக்கொண்டு’ என்று தொடரவேண்டும். வேண்டுமென்றே தாமதித்தார். அது நிகழுமா? என்ற சிறிய சந்தேகம். ஆனால், அது நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார். புத்தகக் கண்காட்சியையும் அரங்கெங்கும் நிகழும் புத்தக வெளியீட்டு நிகழ்வுகளையும் குறித்த தன் விமர்சனங்களை எழுத நினைத்த கதை அது.

கட்டை விரலால் தட்டியதும் திரை தமிழில் ‘கக்கத்தில்’ என்று காட்டிவிட்டு தொடர்ந்து எழுதலானது.

எழுதி முடிக்கப்பட்ட அந்தக் கதையில் அவருடைய நாராயணனும் மாணிக்கமும் வழக்கம்போல எழுத்தாளர்களை நக்கலடித்தார்கள். நாட்டு நடப்புகளை கடுமையாக விமர்சித்தார்கள். ஓயாமல் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் பெயர்களை உதிர்த்தார்கள். ஆப்பிரிக்க கவிதைகளை மேற்கோள் காட்டினார்கள். சண்டை போட்டுக்கொண்டார்கள். புத்தகக் கண்காட்சியில் நடந்தேறும் அன்றாட நிகழ்வுகளை வகைதொகையில்லாமல் விமர்சித்தார்கள். கதையின் முடிவில் எழுதி வைத்திருந்த விமர்சனக் கட்டுரையை கிழித்துப்போட்டார் மாணிக்கம். இன்னும் திருப்பிக் கொடுக்காத லித்வேனியக் கவிதைத் தொகுப்பை ஞாபகப்படுத்தி நாராயணன் ஏசியபோது வெற்றிலைக் கறை படிந்த பல்லைக் காட்டினார் ‘உங்களுக்கு மறதி ஜாஸ்தி ஆயிருச்சு. அதான் கிண்டில் எடிசன் இருக்கில்ல. அதை எதுக்கு வெட்டியா சுமக்கணும்னு எடைக்கு போட்டுட்டேன்னு சொன்னேனே.’ பதிலுக்கு நாராயணன் சொன்னதாக எழுதியிருந்ததைப் படித்ததும் சிரித்துக்கொண்டார் ‘இதை அப்பிடியே அனுப்ப முடியாது. மாத்தணும். இத்தனை கெட்டவார்த்தைக் கூடாது.’

இரண்டு கதைகளை எழுத ஒருமணி நேரம்கூட பிடிக்கவில்லை. விரல்நுனிகளை உற்றுப் பார்த்தார். விசைப்பலகையை வியப்புடன் நோக்கினார். இதுவா, அதுவா? காரணம் புரியவில்லை. காதலியின் கடைக்கண்ணில் சம்மதத்தைக் கண்டவனின் கிறுக்கு தலைக்குள் ஏறியிருந்தது. உற்சாகத்துடன் சிரித்தார். அழைப்பு மணியை அழுத்த கை நீட்டினார். இங்கே அழுத்தினால் சமையலறைக்குள் ஒலிக்கும். ஒருமுறை அழுத்தினால் ஒரு க்ரீன் டீ. இரண்டுமுறை என்றால் பசிக்கிறது, கொறிக்க எதுவும் தேவை என்று பொருள். சந்திராவை மேலே அழைக்க நான்கு முறை. இல்லை, இப்போது வேண்டாம். அவள் கடல் போன்றவள். எதையுமே தன்னிடம் வைத்துக்கொள்ள மாட்டாள்.

எழுந்து அறைக்குள் நடந்தார். மெல்ல மெல்ல அந்த மாயம் புரிந்தது. நடையில் உல்லாசம். குதூகலத்துடன் விசிலடித்தார். மந்திரவாதிபோல விலுக்கென கையை நீட்டி வாய்க்கு வந்த சொற்களை உரக்கச் சொல்லிவிட்டு திரையைப் பார்த்தார். கண்ணடித்தார்.

‘பத்து வரிக் கவிதையா? ப்பூ… இந்தா எடுத்துக்கொள் பதரே’, ‘குறுங்கதை வேண்டுமா? எத்தனை குறுக்கவேண்டும். குறள்போலவா? குறுந்தொகை போலவா? ஹா… ஹா…’, ‘ஐம்பத்திரெண்டு வாரங்களுக்கு தொடரா? பத்து அத்தியாயம் இப்பவே வேணுமா? எதுக்கு தவணை. இந்தா மொத்தத்தையும் வெச்சுக்க. காசை உடனே ஜி.பே பண்ணு. வா, வா. அடுத்தது யாரு?’, ‘நாவல் இருக்கான்னா கேட்டீங்க? உங்க மெயிலை செக் பண்ணுங்க. ஐநூறு பக்கத்துல ஒண்ணு அனுப்பிருக்கேன். கொஞ்சம் பணத்தை மட்டும் மறக்காம அக்கவுண்ட்ல போட்டுடுங்க.’

மூச்சிறைக்க கேபோ மேலே வந்ததைத் தொடர்ந்து படிகளில் கொலுசு சத்தம். ஓடிப்போய் நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார்.

“சிரிப்பும் சத்தமா இருந்துச்சே. என்னமோ வசனம் பேசறாமாதிரி? என்னாச்சு?” செய்தித்தாளை விரித்து கையில் இருந்த கீரைக்கட்டைப் போட்டுவிட்டு கால்நீட்டி உட்கார்ந்தாள். நெற்றியில் வேர்வை பூத்து மினுமினுத்தது.

“ஒண்ணுமில்லையே. டீ போடலியா?”

“பொத்தான் ஒண்ணும் அமுக்கலியே. அப்பறமென்ன டீ? நா கேட்டதுக்கு பதிலச் சொல்லுங்க.”

“இங்க ஒண்ணும் சத்தம் கேக்கலியே. பக்கத்துல டீவி சத்தமா இருக்கும்.”

“டீவில அப்பிடியெல்லாம் வசனம் வராதுங்க. என்னவோ நாவல், குறுந்தொகேன்னு கேட்டுச்சே. நீங்க பேசலியா?” சந்தேகத்துடன் அவள் முகம் பார்க்க அவர் கணிணியைக் கூர்ந்து பார்த்தார். திரையில் அந்தக் கதை அப்படியே இருந்தது. கோப்பில் சேமித்துவிட்டு புதிய பக்கத்தைத் திறந்தார். ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தார். கேபோ காலடியில் படுத்திருந்தது. கீரையை ஆய்ந்தவளின் கண்களும் திரையை ஏறிட்டிருந்தன. அவளுக்கு சின்னதாய் ஒரு வேடிக்கை காட்டலாம் என்று மனத்துள் குறும்பு கொப்புளித்தது.

“இப்ப சின்னதா ஒரு வெளையாட்டு. சரியா? ஏதாவது ஒரு வார்த்தை சொல்லு.”

கீரைத்தண்டை கிள்ளிப் போட்டுவிட்டு முறைத்தாள்.

“சும்மா சொல்லு. ஏதாவது ஒரு வார்த்தை. ஒரு வேடிக்கை காட்டறேன் பாரு.”

“எழுதறதைவிட்டுட்டு இப்ப வேடிக்கை காட்ட போறீங்களா? சத்தமும் சிரிப்பா இருந்தப்பவே நெனச்சேன். கேட்டா பசப்பறீங்க.”

“அதவிடு. நீ சொல்லு.”

“வெண்டைக்கா…” நமுட்டலாய் சிரித்தாள்.

உற்சாகத்துடன் விசைகளைத் தட்டினார். ஸ்பேஸ் பாரைத் தட்டியதுமே ஆங்கிலத்திலிருந்து எழுத்துகள் தமிழாகின. ‘வெண்டைக்காய்’. அதன் பின் ஒளிர்சுட்டி நகரவில்லை. பார்த்துக்கொண்டேயிருந்தார். வேறெதுவும் நடக்கவில்லை.

“வெண்டைக்காயை வெண்டைக்காய்னு அடிக்கறதுதான் உங்க வேடிக்கையா? என்னாச்சு உங்களுக்கு? காலையிலேருந்து ஒரு மார்க்கமாதான் இருக்கீங்க. ஃபேஸ்புக்ல யாராச்சும் போட்டு கழுவி ஊத்திருக்காங்களா?”

சுள்ளென்று எரிச்சல் வெடித்தது “வாய மூடு நீ.”

“சொன்ன மாதிரிதான். எவனோ நல்ல வெச்சு செஞ்சிருக்கான். அதனால என்ன? உங்க வாசகக் குஞ்சுக முட்டுக் குடுப்பாங்களே.”

திரையில் வெண்டைக்காயைத் தவிர எதுவுமே இல்லை. என்னானது? இத்தனை நேரம் சரியாகத்தானே இருந்தது. என்ன பிரச்சினை? விறுட்டென்று எழுந்தார். கீரையை கிள்ளிப் போட்டவளை முறைத்தபடியே ஜன்னலருகே சென்றார்.

“நீ எதுக்கு இப்ப மேல வந்தே?”

காற்று வெம்மையுடன் மோதிக் கடந்தது. மதில்சுவரின் மேல் வாலைத் தூக்கிக்கொண்டிய அணிலைப் பார்த்துக் குரைத்தது நாய்.

“தப்புதான். என்னவோ சிரிப்பும் சத்தமுமா இருக்கே, விருது ஏதாவது அறிவிச்சிருக்காங்க போலன்னு ஆசையா வந்தேன். அதெல்லாம் உங்களுக்கு யாரு தரப்போறா? நீங்களா யார் கிட்டயாச்சும் காசக் குடுத்து அறிவிக்கவெக்க வேண்டிதுதான். அதுக்கும் ஒங்களுக்கு துப்பு கெடையாது.”

எதுவுமே அவர் காதில் விழவில்லை. வெண்டைக்காய் விவகாரம்தான். ஆனால் மண்டைக்குள் குடைந்தது. எதனால்? வேறு எதுவும் சரியாக இல்லையா?

“நீ கீழே போ மொதல்ல. எனக்கு வேலையிருக்கு” சீறினார். விருட்டென நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு எரிச்சலுடன் திரையிலிருந்த சொல்லை அழித்தார். வெறுமனே விரல்களைத் தட்டினார். எழுத்துகள் தாறுமாறாக வரிசைகோர்த்து ஓடின.

“மனுஷங்கிட்ட நாலு வார்த்தை பேசலான்னு வந்தா…” கீரையை அப்படியே அள்ளி எடுத்துக்கொண்டு நகர்ந்தாள். பின்னாலேயே தாவி ஓடியது கேபோ.

கொலுசொலி தணிந்தவுடன் திரும்பிப் பார்த்தார். கீழே போய்விட்டாள். மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு கைகளை சரியாக இருத்தியபடி திரையை உற்றுப் பார்த்தார். இப்போது சரியாக வரும். வரவேண்டும். ஒரு கவிதை எழுதலாமா? ஆமாம். பத்துக் கவிதை எழுதி வைத்தால் அவசரத்துக்கு கைகொடுக்கும். எல்லோருக்கும் கதையும் நாவலும் தர முடியுமா? இப்போது வந்த இளம் கவிஞர்களெல்லாம் வேறுமாதிரி எழுதுகிறார்கள். வருஷத்துக்கு ஒரு தொகுப்பு. மொத்தமாய் ஐயாயிரம் கவிதைகளை எழுதி அசத்தவேண்டும். தலையை உலுக்கிக்கொண்டார். ஒரு வார்த்தையை யோசிப்பதற்குள் கற்பனை இப்படி தறிகெட்டோடினால் அப்பறம் எவன் மதிப்பான்?

எங்கிருந்துத் தொடங்குவது?

அதுதான் முதல் வரி. அப்படியே எழுதிவிடலாம் என்று தீர்மானித்தவர் விசைகளைத் தட்டினார் ‘எங்கிருந்துத் தொடங்குவது?’.

கவிதை வரிகள் மடிந்து மடிந்து நீண்டன. சரியாய் பதினாறாவது வரியில் ஒற்றைச் சொல்லுடன் நின்றது. படித்துப் பார்த்தார். கச்சிதமான நவீன கவிதை. ‘நீ கவிஞன்டா” தன்னையே பாராட்டிவிட்டு சுறுசுறுப்பாய் அடுத்த பக்கத்துக்குத் தாவினார். இப்போது விரல்கள் தன்னிச்சையாய் ‘அகிலமெங்கும்…’ என்று தட்டியது. ‘பைத்தியமொன்று கை நீட்டிய…’, ‘கரையில் அழிந்த…’

அடுத்தடுத்து கவிதைகள். ஒவ்வொன்றாய் நகர்ந்து கோர்த்து பதினெட்டு கவிதைகளை எழுதியிருந்தார். அத்தனையையும் ஒட்டுமொத்தமாய் படித்தார். நிறைவுடன் கோப்பில் சேமித்தார். எவனும் இனி என்னை அசைக்கமுடியாது. கவிதைகளை எழுதி கனமான தொகுப்பாக்கி போட்டு உங்கள் கால்களை உடைக்கிறேன், அப்போதாவது என்னை நீங்கள் தமிழின் தவிர்க்கமுடியாத கவிஞன் என்று ஒப்புக்கொள்வீர்கள்.

தலையை உயர்த்தி கூரையைப் பார்த்தார். ஓரத்தில் அசைந்தது ஒட்டடை. அந்த வெண்டைக்காய் ஏன் சரி வரவில்லை? சட்டென்ற தெளிந்தது. ஆமாம், அது உண்மையான புனைவெழுச்சி இல்லாமல் விளையாட எண்ணியது. அதனால்தான் அதை பொருட்படுத்தவில்லை. மடையன் நான். அதெப்படி அத்தனை விளையாட்டாக செய்ய முடியும். ஒரு படைப்புக்கு கலைஞன் தன்னை ஒப்புக் கொடுக்காமல் எழுத்து எப்படி விளங்கும்?

அந்த கணத்தில் கண்ணீர் கசிந்தது. கணினியை ஆதுரத்துடன் நோக்கினார். தழுவிக்கொள்ள முடியாத சங்கடத்துடன் தலையை மேலும் கீழுமாய் அசைத்து ஆமோதித்தார். மன்னிப்பு கோரினார்.

மணியொலித்தது. யாரோ வந்திருக்கிறார்கள். எங்கிருந்தேனும் வாசகர்கள் வந்திருப்பார்கள். ஒன்றும் செய்ய முடியாது. மென்மையாய் ஒரு முத்தத்தை தந்துவிட்டு கணினியை அணைத்தார்.

 

அன்றிரவு எட்டு மணிக்கு மீண்டும் கணினியை முடுக்கியபோது உண்மையில் பைரவனுக்கு கைகள் நடுங்கின. காலையிலிருந்த சாகச உணர்வும் போதையும் இறங்கியிருந்தன. மீண்டும் அது கைகூடுமா என்ற சந்தேகம்.

எழுத்தாளன் சாதி சங்கத்துடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது குறித்த கேள்வி ஒன்றை வாசகர் கேட்டிருந்தார். அல்லது அவர் கேட்கவிருப்பதாகவோ தயங்குவதாகவோ இவர் நம்பினார். அதற்கான பதிலை எழுதவேண்டும். என்னதான் சமூகம், மனிதர்கள் அனைவரும் சமம், சாதி என்பது ஒரு அதிகாரம் என்றெல்லாம் நாவிலிருந்து சொற்கள் உதிர்ந்தாலும் உள்ளுக்குள் ஒரு சதை ஆடத்தான் செய்தது. அது குறித்து தன் மீது அவருக்கே ஒரு விமர்சனம் உண்டு. ஏதேனுமொரு பரிந்துரை என்று வரும்போது தர்க்கம் நம்பிக்கைதரும் இளம் படைப்பாளிகளின் பட்டியலைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த துண்டுச்சதை சரியாய் ஒரு சுயசாதி எழுத்தாளனின் பெயரை ஏற்கெனவே தெரிவுசெய்திருக்கும். தன் தர்க்க ஒழுங்கை மீறி அப்படி நடப்பது குறித்து பெரும் அதிருப்தியும் உண்டு.

‘அன்புள்ள சந்தோஷ்’ என்று விளிச் சொற்களை எழுதிவிட்டு மூச்சை உள்ளிழுத்தார். ஏற்கெனவே மனத்துள் பதிலை இறுதிசெய்திருந்தார். ‘ஒரு படைப்பாளி என்பவன் அனைத்துக்கும் அப்பாற்பட்டவன். அவன் மனிதன் வகுத்த எல்லா எல்லைகளுக்கும் வெளியிலிருப்பவன். சாதியுடன் தன்னை அடையாளம் காணும் ஒருவன் ஒரு நல்ல வாசகனாகக்கூட இருக்க முடியாது. பிறகெப்படி எழுத்தாளனாக உருவாகமுடியும்?’ என்பதாக அவரது தொடக்கம். எண்ணியபடியே கணினியில் சொற்கள் வாக்கியங்களாகி, வாக்கியங்கள் பத்திகளாகி, பின் பக்கங்களாய் விரிந்து முடிந்திருந்தது. கண்ணை மூடி நிதானமாக சுவாசித்தார். உண்மைதான், வெறும் கற்பனையல்ல. இதோ கண்முன் சரஸ்வதி கணினி வடிவில் ஒளிர்கிறாள். கைகூப்பி வணங்கினார். நிதானமாகப் படிக்கலானார்.

படிக்கப் படிக்க பதற்றம் கூடியது. கைகள் நடுங்கின. உத்தேசித்த பதிலுக்கு மாறாக வாக்கியங்கள் பல சாதி அபிமானத்தை தூக்கிப் பிடித்தன. ‘என்னதான் மனிதன் தனித்த ஒருவன் என்றாலும் வேர் உண்டல்லவா? ஆலும் வேலும் ஒன்றாகிவிடுமா? வேம்பின் கனி கசப்புடன்தான் இருக்கும். இதை பேதம் என்றும் வர்க்கம் என்றும் ஏன் வகுக்கவேண்டும். அது அதன் இயல்பு. ஒரு எழுத்தாளனின் படைப்பில் சுயசாதி சார்ந்த சார்பென்பது இயற்கையானது. இதில் விமர்சிக்க ஒன்றும் இல்லை’ என்று தர்க்கங்கள் நீண்டன.

தான் எழுத நினைக்காத வரிகள். அப்படியே இதைப் பதிவேற்றினால் அவ்வளவுதான், வாசலில் பெரிய தட்டி வைத்துவிடுவார்கள். சாதி சங்கத்தினர் ஏற்கெனவே நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வெளியில் தலைகாட்ட முடியாது.

எழுந்து அரை டிராயரை மேலே இழுத்துவிட்டபடி வேகமாக நடந்தார். எப்படி நடந்தது? நடுக்கத்துடன் சுருட்டைப் பற்றவைத்து வேகமாய் உறிஞ்சினார். நடக்க நடக்க விளக்கொளியில் அவரது நிழல் நீண்டும் சுருங்கியும் வித்தை காட்டியது. ஒருகணம் நின்றார். அப்படியே திரும்பி கணினியைப் பார்த்தார்.

நாற்காலியில் அமர்ந்து தண்ணீரைக் குடித்தபோது தெளிந்தது போலிருந்தது. இவை என் எண்ணங்கள். உண்மையில் நான் நம்புபவை. அவைதான் இங்கே பதிலாக பதிவாகியுள்ளன.

அவசரமாய் எல்லாவற்றையும் அழித்தார். கண்களை மூடி எழுத வேண்டிய பதிலை ஒருமுறை தனக்குள் சொல்லிக்கொண்டார். புதிதாக பக்கத்தைத் திறந்து முதல் சொல்லை அடித்துவிட்டு காத்திருந்தார். மனம் மறுபடி மறுபடி எழுதவேண்டிய பதிலை மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது.

எழுதி முடிக்கப்பட்ட பதிலைப் படித்தார். வேர்த்தது. முதல்முறை எழுதிய அதே வரிகள். அதே சொற்கள். எழுத நினைத்த தர்க்கங்கள் ஒன்றுமே இடம்பெறவில்லை. திரையை உற்றுப் பார்த்தார். சதுரங்கப் பலகையின் மறுபக்கம் கண்ணுற்றுப் பார்க்கும் போட்டியாளனாய் அது வீற்றிருந்தது.

மீண்டும் அழித்தார். இந்த பதிலை இப்போது எழுதுவது ஆபத்தானது. ஒட்டுமொத்தமாய் தன்னை முடக்கிப்போடும் அபாயம். தானே உருவாக்கிய கேள்விதானே, கிடக்கட்டும்.

அந்த எண்ணம் வந்ததும் ஆசுவாசமாய் உணர்ந்தார். மூச்சு சீரடைந்தது. வேர்வை அடங்க கண்டசாலாவின் பழைய பாடலென்றை முணுமுணுத்தபடியே எழுதி முடிக்காமல் விடப்பட்ட கதைகளும் கட்டுரைகளும் அடங்கிய கோப்பைத் திறந்தார். ஊர்மிளையை மையப் பாத்திரமாக வைத்து எழுதிய நெடுங்கதை ஒன்று முடிக்கப்படாமல் கிடந்தது. பதினான்கு பக்கங்கள். நிதானமாய் வாசித்தார்.

சரியான ஒரு இடத்தில் கதை நின்றிருந்தது. லட்சுமணன் தன்னைப் பற்றி யோசிக்காமல் ராமனின் பின்னால் சென்றதைக் குறித்து புலம்புகிறாள், அழுகிறாள். அண்ணனுக்காக உடன் செல்வது கடமையென்றால் கொண்டவளின் கண்ணீருக்கு பதில் சொல்வதும் அவனது பொறுப்புதானே? இதன் பிறகு எப்படி கதையை முடிப்பது என்று தெரியாமல் அப்படியே விட்டிருந்தார். சந்திராவிடம் இதைப் பற்றி விவாதித்தது நினைவுக்கு வந்தது.

விட்ட இடத்திலிருந்து தொடர எண்ணி எழுத்துகளைத் தொட்டார். நினைத்ததுபோலவே வாக்கியங்கள் சரஞ்சரமாய் நீண்டன. பார்த்துக்கொண்டே இருந்தார். இந்த வேகத்தில் போனால் மகா காவியம் ஒன்றை எழுதிவிடலாம். இந்த உலகத்தில் பிறகெவனும் என்னை நிமிர்ந்து பார்க்கவும் யோசிக்கவேண்டும். நான் எழுதியதையெல்லாம் அடுக்கி வைக்க அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தனியாக ஒரு கட்டடமே ஒதுக்கவேண்டும்.

முப்பத்தி ஐந்து பக்கங்கள் நீண்டு நெடுங்கதை முடிந்தது. நிதானமாக தண்ணீரை பருகியபடியே படிக்கலானார். குறிப்பிட்ட ஒரு வரியைப் படித்ததும் புரையேறியது. இருமினார். கண்ணில் நீர் கோர்த்தது. தலையைத் தட்டினார். மூச்சை சீராக்கியபடி வாயைத் துடைத்தார். மறுபடியும் அந்த வரியைப் படித்தார்.

‘அண்ணம்மேல் பாசம் என்பதெல்லாம் ஒரு காரணம் மட்டுமே. சீதையின்மேல் ஒரு ஆசை அவனுக்கு. அதனால்தான் அவள் பின்னால் நடந்தான். எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் யாருக்கும் வெளியில் உரக்கச் சொல்ல அச்சம். அவ்வளவுதான்.’

இதைப் பற்றி விவாதிக்கும்போது சந்திராவிடம் சொன்னதல்லவா இது? இதை இப்படியேவா எழுத முடியும்? வரப்பை உடைத்துக்கொண்டு திசைமாறி பாய்கிறதே தண்ணீர். முதலுக்கே மோசம். அதன் பிறகு வந்த வரிகள் இதைவிட ஆபாசமான வாதங்களுடன் தொடர்ந்ததைக் கண்டதும் தலைசுற்றியது. ஐயோ, அத்தனையும் சந்திராவிடம் சொன்னவைதான்.

ஒருவேளை சந்திராவுக்கும் இந்த கணினிக்கும் ஏதும் ஒப்பந்தம் உள்ளதா? சொன்னதையெல்லாம் இதனிடம் அவள் ஒப்பிக்கிறாளா? செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எப்படியிருந்தாலும் ஒருவகையில் சக்களத்திதானே!

எழுதிய பக்கங்களை அழித்துவிட்டு கணினியை அச்சத்துடன் அணைத்தார். விசைப்பலகையை எச்சரிக்கையுடன் விலக்கி வைத்தார். மனத்துள் குழப்பம். இவன் நல்லவனா, கெட்டவனா? எதுவானாலும் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்ற தீர்மானத்துடன் படிகளில் இறங்கினார்.

 

மறுநாள் இன்னும் பயங்கரமாய் அமைந்தது. மறுநாள் மட்டுமல்ல, அதைத் தொடர்ந்த நாட்கள் எல்லாமே அதிபயங்கரம். அவர் எழுத நினைத்த வரிகளை விடுத்துவிட்டு அதற்கு நேர் எதிரான வாக்கியங்களை எழுதிக் காட்டின. எல்லாமே விவகாரமான வரிகள். அச்சில் வந்தால் அத்தோடு அவரது இலக்கிய பீடம் சரிந்துவிடும்.

விறுவிறுவென ஏரி கரைக்கு வந்தார். கேபோ உற்சாகத்துடன் கரையோரத்தை மோப்பம் பிடித்து நகர்ந்தது. தொலைவில் அசைந்தன மீன்பிடி படகுகள். தூண்டிலைப் பிடித்தபடி கரையில் அமர்ந்திருந்தவன் தலையில் வட்டத் தொப்பி. புஜத்தில் டிராகன்போன்ற உருவம் வெயிலில் மின்னியது. நீரின் சலனத்தையும் சிற்றலைகள் வெயிலின் ஒளியைக் கலைத்தபடி நகர்வதையும் இலக்கற்றுப் பார்த்தபடி நின்றார் பைரவ். அவரது மனம் எதிலும் ஒன்றவில்லை. எப்படி இது நடக்கிறது? நான் உத்தேசிக்காததை எப்படி இது தடம் பிடிக்கிறது?எழுதிக் காட்டும் வரிகள் அவருக்கு புதிதல்ல. அடிக்கடி நண்பர்களிடமும் சந்திராயிடமும் விவாதிப்பதுதான். அவரது தரப்பும்கூட. ஆனால் அது அவருக்கானது. பொதுவானதல்ல. அந்தத் தெளிவுடன்தான் எப்போதும் எழுதுவார். ஒருபோதும் இரண்டையும் குழப்பிக்கொள்ளமாட்டார். ஆனால், கணினி அவரது ஆழ்மனத்தை மட்டுமே அடியொற்றி எழுதுகிறது.

கதையானாலும் கவிதையானாலும் கட்டுரையானாலும் அவர் நினைத்ததுபோல அல்லாமல் முழு முற்றாக வேறொன்றாகவே திரண்டது. அவருக்கானது அல்ல. அவருடைய எழுத்தும் கிடையாது. ஒருபோதும் அவற்றை அப்படியே வெளியில் தர முடியாது. உள்ளுக்குள் ஊறிக்கிடக்கும் கயமைகளை அவை மேலிழுத்து வருபவை. கட்டுப்பெட்டித்தனங்களை சுட்டிக் காட்டுபவை. ஒரு எழுத்தாளனுக்கேயுரிய போலித்தனங்களை தோலுரித்துக் காட்டுபவை.

இரண்டு நாட்களாய் கூகிளில் நிறைய தேடிப் படித்திருந்தார். கம்ப்யூட்டர் ஸயன்டிஸ்டான மைத்துனி மணிமேகலையிடமும் தகவல்களை கேட்டு அறிந்திருந்தார். “என்ன பைரவ், ஸைஃபி எதும் எழுதப் போறீங்களா?” என்று கேட்டபோது அவளது உதட்டோரத்தில் துளிர்த்த சிரிப்புக்கு என்ன பொருள் என்று புரியவில்லை. மைண்ட் மேப்பிங், ஏஐ என்று நிறைய தொழில்நுட்ப வியப்புகள். ஒரு மனிதனின் இச்சைகளை அறிந்து அதற்கேற்ப அவன் பயன்படுத்தும் செல்பேசியிலும் கணினியிலும் வலைவீசும் சூட்சுமம். விரும்பும் குணங்களும் தோற்றமும் கொண்ட ஒரு பெண்ணையே சந்திப்பதும்கூட சாத்தியம்தான். எனவே, என் கணினி என் மூளையைப் படித்துவிடுகிறது. மனத்தை அறிந்துவிடுகிறது. அதை மட்டுமே எழுதிக் காட்டுகிறது என்று முடிவுக்கு வந்திருந்தார். இருட்டியதும் மேய்ச்சல் மாடுகள் வீடு திரும்பிவிடும்போது, தொலைதூரத்தில் விட்டுவந்தாலும் பூனை அதே வீட்டுக்கு வந்துசேர்வதும் இயற்கை என்றால் என் எண்ணங்களுடன் இத்தனை நாள் பழகியிருக்கும் இந்த கணினியும் தானாக எழுதுவதும் சாத்தியந்தான் என்று நம்பத் தொடங்கியிருந்தார்.

‘என்னுடைய மூளையை, அகத்தை என் கணினி ஒற்றறிகிறது. ஆழ்மனத்தைப் படித்து அதைத்தான் எழுத்தாக வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு சொல்லும் அப்படித்தான் அமைகிறது. முடுக்கப்பட்டவுடனே கணினி என் அகத்துடன் இணைந்துவிடுகிறது. அதன்பின் என்னை அது தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்கிறது’ சொற்கள் உதடுகளில் தெறிக்க ஒரு கல்லையெடுத்து ஆவேசத்துடன் நீருள் எறிந்தார். கேபோ சீற்றத்துடன் குரைத்தது.

தூண்டிலிட்டு காத்திருந்தவன் திடுக்கிட்டான். தன்னிச்சையாய் உரக்கப் பேசும் அவரைத் திரும்பிப் பார்த்தான். எதையும் கவனிக்காமல் கேபோவை இழுத்துக்கொண்டு நடந்தார் பைரவ்.

கொடியில் துணிகளை உலர்த்திக்கொண்டிருந்தாள் சந்திரா “ரொம்ப நேரமாயிடுச்சு. ரெண்டு கால் வந்துச்சு. டீ போடவா?”

பதிலேதும் சொல்லாமல் மேலே ஏறினார். கேபோ படியருகே சுருண்டு படுத்தது. நாற்காலியில் கால்களை மடித்து அமர்ந்தவர் நகங்களைக் கடித்தபடியே யோசிக்கலானார். மறுபடி செல்போன் ஒலித்தது.

‘இப்படியே இதை எழுதவிட்டால் இதுவரை என் படைப்புகளின் வழியாக நான் கட்டியெழுப்பியிருக்கும் பிம்பத்தை நொறுக்கிவிடும். என்னை சாதியத்துக்கு ஆதரவானவனாய், பெண்ணியத்துக்கும் சமூக நீதிக்கும் மானுட விடுதலைக்கும் எதிரானவனாய் நிறுத்திவிடும். புதிய தலைமுறை எழுத்தாளர்களைப் பற்றிய என் ஆழ்மன எண்ணங்களை விமர்சனங்களை பொறாமைகளை அப்படியே வெளிக்காட்டிவிடும். குறிப்பாக பெண் எழுத்தாளர்களைக் குறித்து நான் கொண்டிருக்கும் மட்டமான கருத்துகளை அம்பலப்படுத்திவிடும். எனக்குள் பதுங்கியிருக்கும் அபாயகரமான சங்கியின் முகத்தை தோலுரித்துக் காட்டிவிடும். அவ்வளவுதான். பக்கம்பக்கமாக எழுதி நிறுவியிருக்கும் என் ஆளுமை சுக்குநூறாகிவிடும். பாடுபட்டு சலிக்காமல் நாவல்களையும் கட்டுரைகளையும் எழுதி காவடி எடுத்து ஒரு சாகித்ய விருது வாங்கியாகிவிட்டது. தமிழக அரசு விருதும் பபாசி விருதும் வாங்கியாகிவிட்டது. கொடீசியா விருதும் இலக்கியத் தோட்டம் விருதும்கூட. இந்த ஆண்டு நிச்சயமாய் விளக்கு விருது வந்துவிடுமென்று குருடிமலை ஜோசியர் சொல்லியிருக்கிறார். மசாலாக்காரர்களின் விருதுத் தொகை வேறு ஒவ்வொரு ஆண்டும் லட்சங்களில் கூடுகிறது. எப்படியாவது அதை கைப்பற்றவேண்டும். ஞானபீடத்துக்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனாலும் வாய்ப்புகள் எதையும் கெடுத்துக்கொள்ளக்கூடாது. எழுத்தாளர்களுக்கு இல்லம் தருவதாய் ஒரு திட்டம் வேறு இருக்கிறது. புறாக் கூண்டானாலும் அதற்கும் விலை இருக்கிறதே’. நிலைகொள்ளாமல் கழுத்தில் புரண்ட நீண்ட தலைமுடியை கோதினார்.

‘என்ன கெட்டுப்போகிறது. தாளில் எழுதினால் வேண்டாமென்றா சொல்கிறார்கள். கருவியை நம்பினால் கைலாசம்தான். இனி இந்தக் கணினியை நான் ஒருபோதும் பயன்படுத்தப் போவதில்லை’ உரக்கச் சொன்னபோது அவரையும் அறியாமல் உதட்டோரத்தில் எள்ளலுடன் புன்னகை விரிந்தது.

சுமக்க முடியாமல் அட்டைப் பெட்டியை எடுத்துக்கொண்டு மாடிப்படிகளில் கீழே இறங்கியவரை கேள்வியுடன் பார்த்தாள் சந்திரா.

‘ஒனக்கு கம்ப்யூட்டர் கத்துக்கணும்னு சொன்னியல்ல. நீயே வெச்சுக்க’ கூடத்தின் ஓரத்தில் பெட்டியை வைத்தார்.

‘நீங்க எதுல எழுதுவீகளாம்?’

பெருமையுடன் வலதுகையை உயர்த்தினார் “கடவுள் தந்த கை இருக்க கணினி எதற்கடி குதம்பாய்?”

கையிலிருந்த விளக்குமாறை உள்ளங்கையில் தட்டினாள் சந்திரா “அது செரி. ரெண்டு நாளா போக்கு சரியில்லை. மந்திரிச்சாதான் கொஞ்சம் சரி வரும்.”

“போடீ…” உற்சாகத்துடன் பாரம் குறைந்தவராய் மேலே விரைந்தார்.

கத்தைத் தாள்களை எடுத்து மேசையில் வைத்து பேனாவைத் திறந்தார். புதிய வேகத்துடன் உச்சியில் பிள்ளையார் சுழியை இட்டார். தலையை உயர்த்தி கூரையில் அசைந்த ஒட்டடையைப் பார்த்து யோசித்தார்.

‘வலது கால் கட்டை விரலருகே பனித்துளி போல் மினுங்கிய கொப்புளத்தை லேசாகத் தொட்டார். வலித்தது’ எழுதியதும் பேனாவை விலக்கிவிட்டு ஒருமுறை கையெழுத்தை சரிபார்த்தார். மோசமில்லை.

அடுத்த சொல்லை எழுதுவதற்காக தாளில் வைத்தவுடனே பேனா அதுவாகவே எழுதத் தொடங்கிற்று.

0

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...