Sunday 30 August 2020

சீதனம்






 “ம்மா..”

சுவரில் சாய்ந்து கண்களை மூடி உட்கார்ந்திருந்த வேலம்மாள் குரல் கேட்டு நிமிர்ந்தாள். மருத்துவமனையின் நான்காம் தளத்தில் வடகிழக்கு மூலையிலிருந்த தீவிர சிகிச்சைப் பிரிவினையடுத்த நீண்ட கூடத்தில் அவளைப் போலவே இன்னும் பலர் காத்திருந்தனர்.

தோள்பையை தரையில் போட்டபடி அருகில் உட்கார்ந்த உமாவைக் கண்டதும் அதுவரையிலும் அடக்கி வைத்திருந்த துக்கமும் கண்ணீரும் ஒன்றையொன்று முந்திக்கொண்டு பீறிட்டன.

“கண்ணு…” அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாமல் மூச்சடைத்தது.

“என்னம்மா சொல்றாங்க. உள்ள போய் பாத்தியா?” வேலம்மாவின் நடுங்கும் கைகளை இறுகப் பற்றினாள்.

உதடுகளைப் பிதுக்கியபடி மறுபடியும் அழுதபோது உமாவும் அழத் தொடங்கினாள்.

“இங்க உக்காந்துட்டு அழக்கூடாதுன்னு எத்தனை தடவ சொல்றது. போங்க. எந்திரிச்சி கீழ போங்க.” அடர்நீல சீருடையும் தலையில் தொப்பியுமாய் கண்ணாடிக் கதவருகில் நின்றவள் கண்களை உருட்டியபடி அதட்டினாள்.

உமா சட்டென்று அடங்கி ஒதுங்கி அமர்ந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள். வேலம்மா மூக்கை உறிஞ்சியபடி நிமிர்ந்து பார்த்துவிட்ட புடவைத் தலைப்பால் முகம் துடைத்தாள்.

“என்னத்த சொல்றாங்க. ஒண்ணும் புரியல. அங்க போய் பாக்கலாம்னா உள்ள வரக்கூடாதுன்னு சொல்றாங்க. நீ போயி கேளேன்.”

உமா கழுத்திலிருந்த பணி அடையாள அட்டையை கழற்றி பையில் போட்டாள். மெல்ல எழுந்து கதவருகில் நகர்ந்தாள். சூடான தேநீர் குவளையை கையில் ஏந்தி நின்றவளின் எதிரில் நின்றாள்.

“ராமசாமி மவதானே. டாக்டருங்க உள்ள இருக்காங்க. இப்ப பாக்க முடியாது. சித்த பொறு. நானே கூப்பிடறேன்.”

“எப்பிடி இருக்காரு? அம்மா ரொம்ப பயப்படறாங்க.” தணிந்த குரலில் கேட்டபோது அழுகை முட்டியது.

“டாக்டரு இப்ப வருவாரு. அவர்கிட்ட கேளு. அங்க போய் நில்லு.” தேநீரை ஊதிக் குடித்தாள்.

மறுபடியும் வேலம்மாளிடம் வந்தமர்ந்ததும் கேட்டாள் “சித்தி இருந்தாங்கல்ல. எங்க காணோம்.”

“வந்துருவா இப்ப. வெளிய போயிருக்கா.” நீண்ட கழுத்தில் அழுக்கான கயிறு. காதில் மங்கிக் கருத்த பழந்தோடு. நரம்புகள் புடைத்த மெலிந்த கைகளில் கண்ணாடி வளையல்கள்.

“டீ குடிக்கிறியா?”

“அவ வந்துருட்டும். நீ எங்கியும் போகாத. எப்ப வேணா கூப்பிடுவாங்க” உமாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.

ஓரமாய் கிடந்த நாற்காலிகளில் காத்திருந்தவர்களை நிமிர்ந்து பார்த்தாள் உமா. பதற்றம் கூடிய களைத்த முகங்கள். நாற்காலிகளுக்குக் கீழே வெந்நீர் குடுவைகளும் தண்ணீர் புட்டிகளும் மடித்துச் சுருட்டிய போர்வைகளுமாய் பிதுங்கிய கட்டைப் பைகள்.

“இப்பத்தான் வந்தியா புள்ளே?” செருப்பைக் கழற்றி ஓரமாய் போட்டபடியே தரையில் உட்கார்ந்தாள் தேவகி சித்தி. மூச்சு வாங்கியது. நெற்றியில் வழிந்த வேர்வையைப் புறங்கையால் துடைத்தவள் புட்டியை எடுத்து தண்ணீர் குடித்தாள்.

“நாப்பதுதான் கெடச்சுதுக்கா. பாவாகிட்ட சொல்லிருக்கேன். செல்வபுரத்துல ஒருத்தரப் பாத்து ஏற்பாடு பண்றேன்னு போயிருக்குது.” கைப்பையைத் தொட்டுக் காட்டினாள்.

“உங் கழுத்துல கெடந்ததையும் சேத்து இப்ப பொராட்டியாச்சு. இதுக்கும் மேலயும் கேட்டா என்ன பண்றது?” இடதுகால் விரலில் இறுகிக் கிடந்த மெட்டியை திருகியபடியே குனிந்திருந்தாள் வேலம்மா.

“என்னவாச்சும் பண்ணலாம். நீ வெசனப்படாம இரு. உள்ள போயி பாத்தியா புள்ளே நீ?” தேவகி உமாவின் தோளைத் தொட்டாள்.

“டாக்டர் இருக்காங்களாம் சித்தி. கூப்பிடறேன்னாங்க.”

“மத்தியானம் மூணு மணி இருக்கும். அப்பதான் கூப்பிட்டாங்க புள்ளே. துடிப்பு கொறையுது. மூச்சு வுடவும் செரமமா இருக்குன்னு அதென்னவோ மிஷினு வெச்சுருக்குன்னு சொன்னாங்க. சுத்திலயும் கொழாயா இருந்துச்சு. ஒண்ணும் புரியலை. வெளியில வந்தப்ப அந்த டாக்டர் வந்து, அதான் செவப்பா ஒசரமா இருப்பாரே, மீசையில்லாம, அவருதான், செரமமாத்தான் இருக்கு. ஊசி போட்டுருக்கோம். பாக்கலாம். இன்னிக்கு ஒரு நா தாட்டிட்டார்னா அப்பறம் பயப்பட வேண்டிதில்லேன்னு சொன்னாரு. இன்னிக்கு நெறைஞ்ச அமாவாசை. அப்பா வெரதம் வுடற நாளு. அந்த சேமலையப்பன்தான் காப்பாத்தோணும்.”

தேவகி கிசுகிசுத்தபடியே சொன்னபோது கண்ணாடி கதவு திறந்தது. “ராமசாமி அட்டென்டர் வாங்க.”

மூவரும் நிமிர்ந்து முகம் வெளிறி ஒருவரையொருவர் பார்த்தனர். உமா சட்டென எழுந்தாள். “நீ வரியாம்மா?”

வலது கையை உயர்த்தி இல்லையென்பதுபோல அசைத்தாள். உடல் குலுங்க தேவகியின் தோளில் சாய்ந்தாள்.

“எதுக்கு இப்ப அழுகறே? புள்ளே, நீ போய் பாத்துட்டு வா.”

துப்பட்டாவை சரிசெய்தபடி கதவருகில் சென்றாள் உமா. நடுங்கும் கையால் தள்ளினாள். உள்ளே நுழைந்ததும் குளிர்காற்று மோதியது. இன்னுமொரு கதவு. இழுத்துத் திறந்தாள். பச்சைத் திரைகள் அசையும் வெளிச்சக் கூடம். இடது பக்கம் இரண்டாவது படுக்கை. செவிலி ஒருத்தி கொக்கியில் தொங்கிக் கிடந்த புட்டியில் ஊசியை செலுத்திக் கொண்டிருந்தாள். மீசையில்லாத அந்த டாக்டர் உமாவைக் கண்டதும் நகர்ந்து அருகில் வந்தார்.

“உங்க அப்பாதானே?”

மெல்ல தலையசைத்த நொடியில் ஒருமுறை அப்பாவின் முகத்தைப் பார்த்தாள். மூக்கிலும் வாயிலும் சிறிதும் பெரிதுமாய் குழாய்கள். நரைத்த முள் தாடி. தடித்த இரைப்பைகளுடன் மூடிய கண்கள். காய்ந்த உதடுகள் வெடித்திருந்தன.

“ஸீ… ரெண்டு நாளா அவரை கொஞ்சம் ஸ்டெபிளைஸ் பண்ணலாம்னு அட்டெம்ப்ட் பண்ணிட்டு இருக்கோம். பெரிசா இம்ப்ரூவ்மெண்ட் இல்லை. இப்ப வெண்டிலேட்டர் சப்போர்ட்லதான் இருக்கார். பல்ஸ் ரொம்ப டவுன் ஆயிடுச்சு. மேட்டர் ஆப் டைம்தான். சோ…” உதடுகளை அவர் பிதுக்கியபோது உமாவின் கால்கள் நடுங்கின. அவர் சொன்னவை அனைத்தும் புரிந்ததுபோலவும் எதுவுமே புரியாதது போலவுமே நின்றாள்.

“யாராவது பாக்கணும்னு இருந்தா வந்து பாக்க சொல்லுங்க.” அவர் மறுபடியும் உள்ளே நகர்ந்து ஒளிரும் பச்சைத் திரையின் கோடுகளை உற்றுப் பார்த்தபடியே அருகிலிருந்த இன்னொரு டாக்டரிடம் பேசலானார்.

உமா மறுபடியும் அப்பாவின் முகத்தைப் பார்த்தாள். குறுக்கும் நெடுக்குமாய் தையல்களிட்ட மண்டையுடன் அவரது அடையாளமே மாறிப் போயிருந்தது. கண்திறந்து பார்த்து இன்றுடன் 72 நாட்கள் ஆகிவிட்டன.

0

புதன்கிழமை மாலை ஆறு மணிக்கு ஷிப்ட் முடிந்து மில் கேட்டிலிருந்து வண்டியை எடுத்தார் ராமசாமி. வெளிச்சம் மங்கி இருள் கவியத் தொடங்கிய பொழுது. டி.வி.எஸ்ஸின் முகப்பு விளக்கை எரியவிட்டிருந்தார். புளியமரங்கள் அடர்ந்த சாலையில் வாகனங்கள் எதுவுமில்லை. வழக்கம்போல நிதானமாகவே வந்துகொண்டிருந்தார். மரக்கடை மேட்டில் ஏறி இறங்கியதும் தாமரைக்குளத்தையொட்டி இடதுபக்கம் திரும்பும்போதுதான் அந்த லாரியை அவர் கவனித்தார். அப்போதுவரையிலும் நின்றுகொண்டிருந்த லாரி திடீரென்று பின்னோக்கி நகர்ந்தது. ராமசாமி செய்வதறியாது தடுமாறினார். பலம்கொண்ட மட்டும் ஒலியெழுப்பினார். லாரியில் இருந்தவர்கள் அவரை கவனித்தமாதிரியே தெரியவில்லை. தாழ்வான நிலப்பகுதியில் வண்டியை நிறுத்தவும் முடியவில்லை. என்ன செய்வதென்று தீர்மானிப்பதற்குள் லாரியின் இடதுபக்க சக்கரம் அவரது வண்டியில் மோதியது. வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டு ‘சத்’ என்ற சிறு சத்தத்துடன் தார்ச்சாலையில் தலை மோதியது. லாரி ஓட்டுநரும் உதவியாளரும் குதித்தோடி வந்து பார்த்தபோது சிறு கோடாக ரத்தம் பள்ளத்தை நோக்கி நெளிந்தோடியது.

0

கண்ணாடிக் கதவைத் திறக்கும்வரை திடமாக நடந்தவள் வேலம்மாவின் முகத்தைக் கண்டதும் உடைந்து அழுதாள். மண்டியிட்டு மடியில் முகம் புதைத்து அழுதவளின் முதுகில் அடித்துக்கொண்டு அழுதாள் வேலம்மாள்.

“அவ்ளோதானா? தலையில கல்லு விழுந்துருச்சா?”

எங்கோ வெறித்த பார்வையுடன் தேவகி சித்தி சுவரில் சாய்ந்தாள். கண்ணீர் உருண்டு வழிந்தது.

என்ன நடந்ததென்று கூடத்திலிருந்தவர்களுக்கு தெரிந்திருந்தது. யாரும் நெருங்கவில்லை. என்னவென்று கேட்கவில்லை. மூவரின் துக்கமும் அவர்களை உறைய வைத்திருந்தது.

வேலம்மாள் உமாவை நிமிர்த்தினாள். கண்களைத் துடைத்தபடி தலையை கோதி முடிந்தாள். “இந்தாப் பாரு புள்ளே. ஆகவேண்டித பாக்கலாம். உங்க மாமனுக்கு போனப் போட்டு வரச்சொல்லு.”

தேவகியின் தோளைத் தொட்டு உசுப்பினாள் “உங்க பாவாகிட்ட சொல்லிட்டியா?”

உமா செல்போனில் எண்களை அழுத்தி அழுதபடியே பேசினாள்.

கண்ணாடி கதவு மறுபடி திறந்தது. வெள்ளை சீருடையுடன் வெளியில் வந்தவன் கையில் ஒரு பொட்டலம். “ராமசாமி அட்டென்டர் வாங்க.”

உமா கண்களைத் துடைத்தபடி அருகில் சென்றாள். “இதெல்லாத்தையும் பார்மஸில திருப்பிக் குடுத்தர்லாம். பணம் தருவாங்க.” பெரிய காகிதப் பொட்டலமொன்றை நீட்டினான்.

“உள்ளயே வச்சிருங்க அண்ணா. எங்க மாமா வருவாங்க…” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் சீருடையாளன் பொட்டலத்தை அவள் கையில் திணித்தான். “உள்ள எல்லாம் பேக் பண்றாங்க. இனி இதை அங்க வெச்சுக்க முடியாது. கொண்டு போயி பார்மஸில குடுத்துட்டு ரீபண்ட் வாங்கிக்கங்க.”

மருந்துகள் நிறைந்த பொட்டலத்தையும் நீண்ட பட்டியலையும் ஏந்தியபடி வந்தவள் துணிப்பை அருகில் வைத்தாள்.

மீண்டும் கதவு திறந்தது. மறுபடி அதே பணியாள். “யாராச்சும் பாக்கணும்னா சீக்கிரமா வரச் சொல்லுங்க. பேக் பண்ணிருவாங்க.”

வேலம்மாள் எழுந்தாள். மெல்ல நடந்தாள். தேவகி சித்தி சட்டென்று எழுந்து அவள் தோளைப் பற்றினாள். இருவரும் தளர்வுடன் உள்ளே நுழைந்தனர்.

0

‘‘என்னடி அப்பாவ இன்னுங் காணோம்” ‘தெய்வமகள்’ தொடரும் போட்டபோதுதான் வேலம்மாள் கேட்டாள்.

காதில் மாட்டியிருந்த இயர்போன்களை கழற்றினாள் உமா “எட்டாயிருச்சா? வந்துரும்மா.” மீண்டும் திரையில் விரலை வைத்து நகர்த்தியபோது அழைப்பொலி எழுந்தது.

“அப்பாதான்…” என்றவள் பச்சைக் குமிழை மேலிழுத்தபடி காதில் வைத்தாள்.

“சொல்லுப்பா…” என்றவளின் கண்களிலிருந்து அடுத்த சிலநொடிகளில் கண்ணீர் உருண்டது. சொற்கள் தடுமாறின. ஒற்றை வார்த்தைகளை மூச்சிழுத்தவாறே பேசினாள்.

வேலம்மா முதலில் கவனிக்கவில்லை. மூச்சிறைப்பும் குரலின் நடுக்கமும் அவளைத் திரும்பிப் பார்க்கச் செய்தன.

“யாருடி?”

இணைப்பைத் துண்டித்தவள் குமுறியழுதபடி வேலம்மாவின் மேல் சாய்ந்தாள்.

“அப்பான்னு சொன்னே. எதுக்கு இப்ப அழறே?”

எழுந்து கண்ணீரைத் துடைத்தபடியே விம்மினாள் “என்னவோ ஆக்சிடென்டுன்னு சொல்றாங்க. ஆஸ்பத்திரில… எனக்கு பயமா இருக்கும்மா.”

வேலம்மாள் ஒருகணம் நிதானித்தாள். சுவரில் சாய்ந்து கிழபுறத்திலிருந்த சாமி அலமாரியைப் பார்த்தாள். உலர்ந்த செம்பருத்தியுடன் மாசாணியம்மனின் படம்.

“யாரு பேசினா? நல்லா கேட்டியா நீ?” வேலம்மாளின் குரலில் சிறு நடுக்கம்.

“ஆஸ்பத்திரிலேர்ந்துதான். யாருன்னு தெரியல. ஆனா அப்பா பேரச் சொல்லிக் கேக்கறாங்களே… அவருக்குத்தான் என்னமோ நடந்திருச்சு.”

விசும்பலுடன் நடுங்கும் மகளை ஒருதரம் நிதானமாகப் பார்த்தாள். அவள் தலையைக் கோதியபடியே சொன்னாள் “உங்கப்பாக்கு ஒண்ணும் ஆயிருக்காது. எதுக்கு பயப்படறே? எழுந்திரு. மாமாவுக்கு போன் பண்ணு.”

“எந்த ஆசுபத்திரி?” புடவையைத் திருத்தியபடியே கேட்டபோதும் அவள் முகத்தில் சிறிதும் சலனமில்லை. தொலைக்காட்சி பெட்டியருகே வைத்திருந்த பணப்பையை எடுத்து இடுப்பில் செருகினாள்.

ஆட்டோவில் போகும்போதும் அவள் எதுவுமே பேசவில்லை. வெளிச்சமும் இருட்டுமான சாலையை வெறித்துப் பார்த்தபடியே சாய்ந்திருந்தாள்.

0

“இந்த புள்ளைக்கு ஒரு நல்லது கெட்டதைப் பாக்காம போயிட்டி அண்ணே…”

வாகனங்கள் நிறுத்தும் தரைத் தளத்தின் வடகிழக்கு மூலையில் படிகளை அடுத்த கண்ணாடித் தடுப்புக்கு பக்கத்தில் தரையில் சுருண்டு படுத்திருந்த உமா திடுக்கிட்டெழுந்தாள். கண்கள் திறக்கமுடியாமல் காந்தின.

தோளைத் தொட்டு அணைத்தபடியே பெரியம்மா புலம்பி அழுதாள் “அய்யோ. இந்தப் புள்ளைக்காகவாவது பொழச்சு கெடந்திருக்கலாமேண்ணா… சாமி… என்ன பண்ணுவே…”

கண்ணீரைத் துடைத்தபடியே உமா அத்தையின் தோளில் சாய்ந்தாள்.

“ஏன் இங்க வந்து உக்காந்துருக்கீங்க?” பெரியமாமா தோளில் கிடந்த துண்டை எடுத்து விசிறியபடியே படியில் உட்கார்ந்தார்.

சித்தப்பா குனிந்து மெதுவாகச் சொன்னார் “பாடிய மார்ச்சுவரில வெச்சிருக்காங்க. ஜிஎச்சுல போஸ்ட் மார்ட்டம் பண்ணித்தான் குடுப்பாங்களாம். இந்நேரத்துல எடுத்துட்டு போ முடியாதாம். காலையில ஸ்டேசனுக்கு போயி சொல்லி அவங்க வந்துதான் எடுத்துட்டு போனும்ங்கறாங்க. அதான் இங்க வந்துட்டோம்.”

“மனசுவிட்டு அழக்கூட முடியலேங்க…” தேவகி சித்தி முந்தானையால் முகத்தைத் துடைத்தாள்.

“அங்க உக்காந்துட்டு அழுதா எல்லார்த்துக்கும் தொந்தரவுன்னு சத்தம் போடறாங்க…”

மாமாவுக்கு வேர்த்தது. நெற்றியைத் துடைத்தார். “ஆமாம்புள்ளே. ஆசுபத்திரில நாலு சனம் இருக்காங்க இல்ல. அப்பிடித்தான் சொல்லுவாங்க.”

சித்தப்பா மீண்டும் கிசுகிசுத்தார் “ஸ்டேசனுக்குப் போயி சொல்லி ஏற்பாடு பண்ணியாச்சு. காலையில எட்டு மணிக்கெல்லாம் வரச் சொல்லிட்டாரு ஏட்டு. வண்டிய எடுத்துட்டுப் போனா கூட்டிட்டு வந்தர்லாம். ஜிஎச்லயும் நம்ம கவுன்சிலர் சொல்லிட்டாரு. காலையில மொதா வேலையா முடிச்சுத் தந்துருவாங்களாம். எல்லாம் பேசியாச்சு.”

சின்னமாமா தயங்கியபடியே அருகில் வந்தார். பெரியமாமாவுடன் பேச்சு வார்த்தை கிடையாது. சித்தப்பாவிடம் சொல்வதுபோல பொதுவாகச் சொன்னார் “ஆஸ்பத்திரில இத்தன நாள் கெடந்த ஒடம்பு. சடங்கு சாங்கியம்னு பெரிசா பண்ண முடியாது. வாசல்லயே வெச்சு மஞ்ச தண்ணிய தெளிச்சு எடுத்தர வேண்டிதுதான்.”

பெரியமாமா காதில் வாங்காதவர்போல சித்தப்பாவிடம் கேட்டார் “மின்மயானத்துல நேரம் குறிச்சிருக்கா?”

“மத்தியானம் ரெண்டு மணிக்குன்னு சொல்லியிருக்கு. இங்க போலிஸ் வந்து ஜிஎச்சுக்கு போயி எல்லாம் முடிக்கறதுக்கு பன்னெண்டு மணியாச்சும் ஆகும். அப்பறமா ஊருக்குப் போறதுக்கு ஒருமணி நேரம் ஆகும்னு ஒரு கணக்குல சொல்லிருக்கு. செந்திலோட பிரண்டுக ரெண்டுபேர், இவரோட வேல பாத்தவங்கதான், எல்லா ஏற்பாட்டையும் பாத்துக்கறாங்க. ஒண்ணும் பிரச்சினை இருக்காது.”

வேலம்மாள் தலையைக் குனிந்து கண்ணீரைத் துடைத்தபடியே கேட்டுக்கொண்டிருந்தாள். அக்காவின் மடியில் கிடந்த உமாவை மட்டும் அவ்வப்போது தலை தூக்கிப் பார்த்தாள்.

ஆவிபறக்கும் தேநீர் நிரம்பிய காகித தம்ளர்களுடன் பெரிய தட்டொன்றை ஏந்தி வந்தான் செந்தில். அப்பாவுடன் மில்லில் வேலை பார்ப்பவன். பெரியம்மா ஒரு தம்ளரை எடுத்து வேலம்மாளிடம் நீட்டினாள். அவள் தலையாட்டி மறுத்தாள்.

“சூடா ரெண்டு வாய் குடிச்சுரு அக்கா. அழுகறதுக்காவுது தெம்பு வேணுமில்லை.”

வேலம்மாள் இன்னும் பலமாக தலையாட்டினாள்.

“என்னமோ சாமி. செந்திலு. ஒத்தாசைக்கு நீ இருக்கங்காட்டியும் பரவால்லே. ஓடியாடி எல்லாத்தையும் பாத்துக்கிட்டே.”

சின்னமாமா தம்ளரை எடுத்துக்கொண்டு செந்திலுடன் நகர்ந்தார். கீழ் தளத்துக்கு கார்கள் உள்ளே வரும் சரிவுபாதையில் நடந்தார். லேசான மழையில் நனைந்திருந்தது தரை. காற்றில் வேப்பம்பூவின் வாசம்.

“ரெண்டு நாளைக்கு முன்னாடி அக்காகிட்ட பேசினப்போ இன்னொரு ஆபரேசன் பண்ணினா போதும்னு சொன்னாங்கன்னு சொல்லிச்சே. திடீர்னு என்ன?”

“அப்பிடித்தான் சொன்னாங்க. ஆனா முந்தா நாள் காலையிலயே இந்த ஐ சி யூவுக்கு கொண்டு வந்தாங்க. ஸ்பெஷல் வார்டு. திடீர்னு இதயத்துடிப்பு கொறஞ்சிருக்கு. மூச்சு விடறதுக்கு சிரமப்படறாருன்னு சொன்னாங்க. நேத்திக்கு காலையில டாக்டர் சொன்னப்பவே நம்பிக்கையில்லை. வென்டிலேட்டர்லதான் உசுரு ஒட்டிருந்துச்சு.”

செந்தில் செல்போனை எடுத்து ஒருமுறை பார்த்தான். வாட்ஸ் அப்பில் வந்திருந்த செய்தியைப் படித்துவிட்டு தலையாட்டியபடியே சொன்னான் “காலையில சீக்கிரமாவே முடிச்சுக்கலாம். போலீஸ் ஸ்டேசன்ல சொல்லியாச்சு.”

மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே அடர்ந்த புங்க மரத்துக்குக் கீழே நீலப் படுதாவுடன் இருந்த பெட்டிக் கடையை அடைந்ததும் சின்ன மாமா சிகரெட் பற்ற வைத்தார்.

“இதுவரைக்கும் எவ்ளோ செலவாயிருக்கும்?” அக்கறையில்லாத தொனியில் அவர் கேட்டதும் செந்தில் உற்றுப் பார்த்தான்.

“அன்னிக்கே சொன்னாங்க ஏழு லட்சத்துக்கும் மேலேன்னு. உங்க மில்லுல எதாச்சும் குடுப்பாங்களா?”

தலையில் விழுந்த புங்கம் பூக்களை தட்டிவிட்டான் “ஒரு லட்சத்துக்கு இன்சூரன்ஸ் இருக்கு. அது அப்பவே முடிஞ்சிருச்சு.”

“இனியும் பணம் கட்டணுமா?”

“ஒண்ணே கால் லட்சம் பாக்கி இருந்துச்சு. கட்டியாச்சு. இல்லேன்னா காலையில பாடிய தரமாட்டாங்கல்ல.”

அந்த பதில் அவருக்கு நிறைவைத் தந்திருக்க வேண்டும். புகையை ஆழ உள்ளிழுத்தார். தீக்கங்குடன் சுடர்ந்த சிகரெட்டை தரையில் சுண்டினார். செருப்பைக் கொண்டு மண்ணில் மிதித்தவர் காறித் துப்பினார். “அதுக்கும் மேல போலிஸ் போக்குவரத்துன்னு இன்னும் செலவு கெடக்கில்ல.”

வளாகத்துக்குள் அடியெடுத்து வைத்த நொடியில் செந்தில் மெல்லச் சொன்னான் “இத்தன பேரு இருக்கீங்க. பாத்துக்க மாட்டீங்களா?”

சின்னமாமா மையமாகத் தலையாட்டினார். செந்திலின் அலைபேசி ஒலித்தது.

0

மயானத்திலிருந்து திரும்பியவர்கள் பந்தற்காலுக்கு அருகில் பிளாஸ்டிக் வாளியில் வைத்திருந்த நீரை அள்ளி காலைக் கழுவினர். கூடத்தின் மத்தியில் அலமாரிக்கு கீழே ஒளிவீசி நின்றது தீபம். வாசலில் நின்று எட்டிப் பார்த்து கும்பிட்டுவிட்டு நகர்ந்தனர்.

மதியவேளையில் அமரர் ஊர்தி வந்துநின்றபோது ஓங்கி ஒலித்த அழுகையின் மிச்சம் எதுவுமில்லை. ஆட்டாங்கல் அருகே கிடந்த அட்டைப்பெட்டியிலும் அதன் அருகிலுமாக சிதறிக் கிடந்த காகிதக் கோப்பைகளில் ஈக்கள் மொய்த்திருந்தன.

கழுத்தில் சீலையைச் சுற்றிக்கொண்டு காலை மடக்கி அமர்ந்திருந்தாள் வேலம்மாள். பெரிதாக சடங்குகளைச் செய்யவில்லை என்றாலும் பூச் சூடி வளையல்களை நொறுக்கி சரட்டை அறுத்தபோதும் எதையுமே கவனிக்காதவள் போல வெற்றுப் பார்வையுடன் அமர்ந்திருந்தாள். பிணத்தை வண்டியில் ஏற்றியபோது கூடியிருந்தவர்கள் மாரிலடித்து ஓலமிட்டபோதும் வெறுமை துலங்கிய கண்களுடன் பார்த்திருந்தாள். இப்போதும் அதே பார்வையுடன்தான் உட்கார்ந்திருக்கிறாள்.

ஈரத் தலையில் கோடாலி முடிச்சிட்டபடி அருகில் அமர்ந்தாள் உமா. “என்னம்மா இப்பிடியே உக்காந்திருக்கே. உள்ளுக்குள்ளேயே போட்டு அமுக்காதே. அழுதுரும்மா.”

உடைந்த வளையல் மணிக்கட்டில் குத்திய காயத்தில் உறைந்திருந்த ரத்தத் துளியைத் தடவியவள் நிமிர்ந்தாள். உற்றுப் பார்த்தாள். மீண்டும் தலைகவிழ்ந்து மெட்டிகளில்லாத விரல்களைத் தடவத் தொடங்கினாள்.

“உன்னைப் பாத்தா பயமா இருக்கும்மா. ப்ளீஸ் அம்மா. இப்பிடி இருக்காதே.” உமா கேவி அழுதாள்.

கழுவிய பாத்திரங்களை ஏந்தியபடி வந்தாள் தேவகி சித்தி. “நீ எதுக்கு இப்ப அவகிட்ட போயி அழுதிட்டிருக்கே. ஒரு சொட்டு கண்ணீர் சிந்தக்கூடாதுன்னு வைராக்கியமா இருக்காளாட்ட இருக்கு.”

உமா கண்ணீரைத் துடைத்தபடியே எழுந்தாள். தேவகி சித்தியின் அருகில் வந்தாள். “எல்லாரும் என்னமோ மாதிரி பேசறாங்க சித்தி.” மறுபடியும் அவளுக்கு அழுகை முட்டியது.

புடவையை இடுப்பில் செருகியபடியே நிலைப்படி அருகே குனிந்து உள்ளே வந்த பெரிய அத்தையைக் கண்டதும் சித்தி உள்ளே நகர்ந்தாள். “எதுக்கு இப்பிடி மனச கல்லாக்கிட்டு உக்காந்திருக்கான்னு தெரியல கண்ணு. நீ வெசனப்படாத. போ. தலைய நல்லா தொவட்டிக்க. சளி புடிச்சிக்க போவுது.”

விரல்களை தடவிக்கொண்டிருந்த வேலம்மா தலையை நிமிர்த்தி சுவரில் சாய்ந்தாள்.

0

கட்டிலின் மேல் கிடந்த துணிகளை மடித்து எடுத்துக்கொண்டு அறைக்குள் உள்ளே சென்ற உமா அழுதபடியே வெளியே ஓடி வந்து வேலம்மாவின் மடியில் விழுந்தாள்.

தொலைக்காட்சி மேசைக்கு சற்று தள்ளி உள்ளறைக்கு செல்லும் வாசலுக்கு மேலே மாட்டியிருந்த ராமசாமியின் படத்தில் பூமாலை இன்னும் வாடியிருக்கவில்லை.

“என்னாச்சுடி?” உமாவின் தலையை நகர்த்தி நிமிர்த்தினாள் வேலம்மா.

“பீரோவுல அப்பாவோட சட்டை…” திணறியவாறே கண்களைத் துடைத்தாள்.

“வேட்டி சட்டையெல்லாம் பாத்தியா?”

தலையசைத்தவளை உற்றுப் பார்த்தவளின் உதடுகள் நடுங்கின. ஆத்திரத்துடன் உமாவை தள்ளினாள். அவள் தோளில் ஆத்திரத்துடன் அறைந்தாள். குமுறல் வெடித்தது. அவளது கண்களின் ஆவேசத்தைக் கண்டதும் உமா ஒடுங்கி பின்னகர்ந்தாள்.

“இந்த சண்டாளன் இப்பிடி சீரழிய வெச்சுட்டானே. அடிபட்ட எடத்துலயே போயிருந்தா அத்தோட போயிருக்கும். அன்னிக்கே ஒரே முட்டா அழுது முடிச்சிருப்பேன். இப்பிடி ஆறு மாசமா ஆசுபத்திரில கெடந்து தெனந் தெனம் சாவடிச்சதோட இப்பிடி கடனையும் தலையில கட்டிட்டுப் போயிட்டானே. பாவி மனுஷன்.”

குரல் உடைந்து அழுகையில் கரைய பித்துப் பிடித்தவள்போல தரையில் உருண்டவளை பயந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் உமா.

0

(கதைசொல்லி ஜுலை 2020 இதழில் வெளியானது.)

Tuesday 4 August 2020

செவிச்செல்வர் - கோவை ஞானி


காட்டூர் காளீஸ்வரா நகர் வீட்டின் இரும்புக் கதவைத் திறக்கும்போதே அவருக்குத் தெரிந்துவிடுகிறது. ஓசைகளால் ஆனது அவரது உலகம். படியேறுவதையும் உற்றுக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

முதல் தளத்துக்குச் செல்லும் படிகளில் பாதி ஏறியதுமே அறையிலிருந்து குரல் கேட்கிறது ‘யாரு?’. செருப்பை ஓரமாகப் போட்டுவிட்டு திரும்பும்போது மீண்டும் கேட்கிறார் ‘யார் வந்திருக்கறது?’ சொன்னதும் ‘அடடே, இப்பத்தான் வறீங்களா? கொஞ்ச நேரம் அப்படி சேர்ல உக்காருங்க. இதை முடிச்சுட்டு வந்தர்றேன்.” ஒவ்வொரு குரலும் ஒவ்வொரு நபர். முதன்முதலாக குரலைக் கேட்கும்போதே உருவத்தை உள்ளுக்குள் வரைந்துகொள்வார்.

கிழக்குப் பார்த்த அறை. வெயில் அறைக்குள் வெளிச்சம் போட்டிருக்கிறது. பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். எதிரில் அமர்ந்திருக்கும் நண்பர் தினமணி நடுப்பக்கக் கட்டுரையை வாசிப்பதை கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். கைகளை கோர்த்திருக்க இடதுகை கட்டை விரல் மட்டும் சுழன்றபடியே இருக்கிறது. மொட்டை மாடியில் இலையுதிர்க்கும் கொய்யா மரத்தில் அணில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அறையின் இரண்டு பக்கங்களிலும் புத்தக அடுக்குகள். தரையில் அட்டைப்பெட்டிகள். படிக்க வேண்டியவை, படித்து முடித்தவை, புதிதாக வந்தவை என்று எல்லாவற்றிலும் புத்தகங்கள். இதுதவிர மேசையின் மேல் மாத சஞ்சிகைகள். செய்தித்தாட்கள். சிறிய டேப் ரிகார்டர் ஒன்று.

நண்பர் கட்டுரையைப் படித்து முடித்ததும் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தவராய் அப்படியே அமர்ந்திருக்கிறார்.. சிவந்த முகம். கைவைத்த பனியன். இடுப்பில் வேட்டி. நரையேறிய தலைமுடியை ஒதுக்குபவர்போல கையை உயர்த்துகிறார்.

“சரி. நீங்க பொறப்படுங்க. நாவல் படிக்கத்தான் இவர் வந்திருக்காரு. நீங்க நாளைக்கு வாங்க” என்று நண்பரை அனுப்பி வைக்கிறார். படிகளில் அவர் இறங்கிச் செல்லும் ஓசையை கவனித்தவர் தண்ணீரை எடுத்துப் பருகுகிறார். 

“இருக்கட்டும். நீங்க சொல்லுங்க” என்று விசாரிக்கத் தொடங்கிவிடுகிறார்.

“என்ன படிச்சீங்க?”

சொன்னதுமே வியப்புடன் கேட்கிறார் “அட அப்பிடியா. சுருக்கமா சொல்லுங்க அதப் பத்தி.”

அந்த நூலைப் படிக்காதவர்போலவே ஆவலுடன் கவனமாகக் கேட்கிறார். படித்துத் தெரிந்துகொண்டதை அறைகுறையாய் சொல்லி முடித்தவுடன் சில சந்தேகங்களை ஒவ்வொன்றாகக் கேட்கிறார். தெரிந்ததைச் சொன்னவுடன் அவருடைய அபிப்ராயங்களைச் சொல்கிறார்.

புத்தகத்தைப் பற்றிய பேச்சு முடிந்ததும்  கூறுகிறார் “ஒண்ணு பண்ணுங்க. இப்ப நீங்க சொன்னதை அப்பிடியே எழுதிக் குடுத்துருங்க.”

குமுதம் ஏர் இந்தியா போட்டிக்கு வந்த நாவல்கள் மூலையில் அடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் வரிசை எண்கள். பதினாறு நாவல்கள்.

“மேல இருக்கறதை எடுத்துப் படிங்க.”

நாவல் முன்பே உதவியாளராலோ அல்லது வேறு யாராலோ பாதியளவு படிக்கப்பட்டு அடையாளம் வைக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நாவல் படிக்கப்படுவதை மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார். நல்ல பகுதியோ அல்லது சிறப்பான வாக்கியமோ வரும்போது உற்சாகத்துடன் சொல்கிறார் “அடடே.”

அன்றைக்குப் படித்துக்கொண்டிருந்த நாவலில் ஒரு வரி ‘நாம நீச்சலை மறந்துட்டதா நெனக்கலாம். ஆனா ஒடம்புக்குள்ள இருக்கற மீனுக்கு எதுவும் மறந்துருக்காதில்ல.”

அந்த வரியை வியந்து பாராட்டுகிறார். “கிராமத்து வாழ்க்கையை அப்பிடியே மண்வாசனையோட எழுதிருக்காரு. புதுசா எழுதிருக்கார். ஆனா வாழ்க்கை அச்சு அசலா இருக்கு.” வீட்டிலிருந்து தேநீர் வருகிறது. சிறிய இடைவேளை.

“இந்த நாவல் எல்லாம் என்கிட்டத்தான் வந்திருக்குன்னு தெரிஞ்சிட்டு இங்க வந்து தெனம் நச்சரிக்கறாங்க. இவங்களுக்கெல்லாம் எழுத்து எப்பிடி வரும்? கேவலமா இருக்கு” உள்ளூர் எழுத்தாளர் ஒருவரை அவருக்கேயுரிய சினத்துடன் கடிந்துகொள்கிறார். “நான் சொல்ற வரைக்கும் இந்தப் பக்கமா வரக்கூடாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன். வெளியில போயி ஞானி இப்பிடிக் கோவிச்சுட்டாருன்னு நாலு பேர்த்துகிட்ட சொல்லுவார். சொல்லட்டும்.”

மதியம் மணி ஒன்றரை. வீட்டுக்குள்ளிருந்து உணவு வேளைக்கான நினைவூட்டல். தரையிலிருந்த சொம்பிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடிக்கிறார் “கீழ எறங்கி வலதுபக்கமா மெயின் ரோடுல போயி போஸ்ட் ஆபிஸ் பக்கத்து சந்துல ஒரு மெஸ் இருக்கு. சாப்பிட்டுட்டு வந்துருங்க. வயத்துக்கு கெடுதல் பண்ணாது. சீக்கிரம் வந்துருங்க. இன்னிக்கு இதப் படிச்சு முடிச்சர்லாம்.”

அவர் எழுந்து கதவைப் பிடித்துக்கொண்டு வெளியே வருகிறார். சுவரையொட்டி அளந்து அடியெடுத்து நடக்கிறார். சிவப்பு சிமெண்டு மெழுகிய வீட்டுக்குள் மெல்லிய வெளிச்சம். வலதுபக்கமாய் திரையை விலக்கிக்கொண்டு உள்ளே செல்கிறார்.

திரும்பி வரும்போது அறைக்குள் அவர் தரையில் அமர்ந்திருக்கிறார். காக்கி நிறத் தாளை மடித்து பிளேடால் கிழித்து ‘நிகழ்’ இதழை வைத்து மடக்குகிறார். ஓரமாய் வைத்திருக்கும் பசையை எடுத்து தேவையான இடத்தில் கச்சிதமாகத் தடவி ஒட்டுகிறார்.

“வந்துட்டீங்களா? சாயங்காலம் போகும்போது இதத் தபால்ல சேத்திருங்க. ஸ்டாம்புக்கு இங்க பணம் வெச்சிருக்கேன்” அவரது இடதுபக்க புத்தகத் தட்டின் ஓரமாய் பத்து ரூபாய் தாள்.

பிரம்பு நாற்காலியில் அமர்ந்துகொண்டு கைகளைக் கோர்த்துக்கொள்கிறார் “படிங்க.”

பக்கம்பக்கமாய் நாவல் அவருக்குள் ஒலியாய் இறங்குகிறது. கவனமாய் பதித்துக்கொள்கிறார். சந்தேகம் வரும் இடங்களில் கேட்டுக்கொள்கிறார்.

மாலை ஒளி மங்கி காற்றில் வெம்மை குறைகிறது. மீண்டும் தேநீர். குடித்து முடித்ததும் கேட்கிறார் “ராத்திரி எத்தனை மணிக்குத் தூங்குவீங்க?”

“பத்தரை இல்லேன்னா பதினொன்னு.”

“எதுக்கு அவ்ளோ நேரத்துல தூங்கணும். இந்த வயசுல கண்ணு முழிச்சு படீங்க. படிக்கறதுக்கு எத்தனை விஷயம் இருக்கு. அஞ்சு மணி நேரம் தூங்கினா போதும். எத்தனையெல்லாம் எழுதி வெச்சிருக்காங்க. படிச்சுத் தீராது.” அவரது இடதுகை கட்டை விரல் சுழல்கிறது.

“சரி நீங்க பொறப்படுங்க. திருப்பூர் போகணுமில்லை. இதுல இந்த அட்ரஸை எழுதி இதை மறக்காம தபால்ல சேத்துருங்க.” அவரே கைப்பட ஒட்டிய உறைகளையும் பத்து ரூபாய் தாளையும் நீட்டுகிறார்.

கொய்யா இலைகள் காற்றில் உதிர்கின்றன. எழுந்து மீண்டும் வீட்டுக்குள் நடந்து மறைகிறார்.

0

( அந்திமழை, ஆகஸ்ட் 2020 இதழில் வெளியான நினைவுக் குறிப்பு )

 

 


எம்.கோபாலகிருஷ்ணனின் அம்மன் நெசவு-இராயகிரி சங்கர்

நன்றி - இராயகிரி சங்கர்

சென்றவாரம் முழுக்க எம்.கோபாலகிருஷ்ணனின் படைப்புகளோடு பொழுதுகள் போயிற்று. மனைமாட்சியும், மணல் கடிகையும் ஏற்கனவே படித்திருந்தேன். இரண்டும் முக்கியமான நாவல்கள் என்பது மீண்டும் உறுதியாயிற்று. அம்மன் நெசவுதான் நீண்டநெடுங்காலமாக வாசிக்க முடியாமல் தள்ளிப்போய்க்கொண்டு இருந்தது. முதல் நாவலாக இருந்தாலும் மணல்கடிகை தந்த விரிந்த வாழ்க்கை சித்திரங்களை அம்மன் நெசவின் 192 பக்கங்கள் தருமா என்ற ஒரு தயக்கம். முக்கியமாக நாவலின் இரண்டாவது அத்தியாயத்தில் நிகழும் அமானுஸ்யம் சட்டென்று இராமநாராயணின் பக்திப்படங்களைப் பார்க்கும் ஒவ்வாமையை அளித்துவிட்ட காரணமாக இருக்கலாம். அதனால்தானோ என்னவோ அந்நாவலை அதற்குமேல் வாசிக்கத் தோன்றாமல் வைத்திருந்துவிட்டேன்.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இடிகை இலக்கிய வெளி சார்பாக சூம் காணொளிக்காட்சி உதவியுடன் தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவரின் படைப்புகள் குறித்து நண்பர்களுக்குள் வாசிப்பனுபவங்களை பகிர்ந்துகொண்டு வருகிறோம். சென்ற ஞாயிறு எம்.கோ.வை தேர்வு செய்திருந்தோம். அதற்கு முந்திய முறை சு.வேணுகோபாலின் படைப்புக்கள் குறித்து பேசியிருந்தோம். அதனால் எப்படியும் அம்மன் நெசவினை வாசித்தே ஆகவேண்டும் என்று உறுதி செய்துகொண்டேன். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் முதல் முயற்சியின் போது வாசிக்க ஆரம்பித்து கருப்பு நாய்க்குப் பயந்து உள்ளே நுழையாமல் திரும்பிய அனுபவம் உண்டு.

எம்.கோ.வின் மூன்று நாவல்களில் மணல் கடிகையே மிகச்சிறப்பானது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அம்மன்நெசவு வாசித்தபின்னர் அந்த எண்ணம் மாறிவிட்டது. அவரின் நாவல்களில் முதன்மையானதாக அம்மன்நெசவு நாவலையே சொல்ல விரும்புகிறேன். என்னைக் கவர்ந்ததன் காரணங்களாக சிலவற்றைக் கருதுகிறேன்.

ஒன்று விரிந்த வரலாற்றின் ஊற்றுமுகத்தில் இருந்து நாவல் ஆரம்பித்த விதம். இந்திய வரலாற்றில் பெரும்பாலான இனக்குழுக்களுக்கு இருக்கச் சாத்தியமான பெரும் புலம்பெயர்வின் துன்பியல் நினைவுகளை இந்நாவல் கொண்டிருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் சாபக்கேடாக பெரும்பஞ்சங்கள் உண்டாக்கப்பட்டதைப்போன்று, இஸ்லாமிய படையெடுப்பின் தீச்செயல்களாக படைநடத்தி கோவில்களை கொள்ளையிட்டதும், கலைப்பொக்கிசங்களை அழித்து தீயிட்டு எரித்ததும் இன்று வரை மீட்டெடுக்க முடியாத பெரும் இழப்பாக இருக்கிறது. ஓராயிரம் நிகழ்வுகள் இந்நோக்கில் நம்மண்ணில் எழுதப்படாமலே இருக்கின்றன.

அவ்விதம் வந்து ஒதுங்கிய செட்டியார் இனக்குழுவின் ஒரு காலகட்டத்தின் வளர்சிதை மாற்றந்தான் அம்மன் நெசவு. தொண்ணுாறுகளுக்கு முன்னர் இந்தியக் கிராமங்களின் அன்றாட இயல்புகளால் ஆனது இதன் கதையுலகம். இரண்டு பிற்பட்ட சாதியினருக்குள் ஒன்று நிலவுடைமைச் சாதியாக இருந்த ஒரே காரணந்தான் அது ஆண்ட சாதிக்குரிய மூர்க்கத்தோடு நடந்துகொண்டிருக்கிறது. நிலவுடைமைச் சாதியான கவுண்டர் சாதி செட்டியார் சாதியை எவ்வாறு ஒடுக்கியது என்பது இந்நாவலில் வலுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நமக்கு சாதிய வல்லாதிக்கம் என்றதும் பட்டியலின சாதியைத்தான் எதிரீடாக கருதத் தோன்றும்.. பட்டியலின மக்களுக்கு என்னென்னெ செய்தார்களோ அதே அளவிலான கேடுகளை, தீங்குகளை செட்டியார் இனமக்களுக்கும் அவர்கள் செய்திருக்கிறார்கள். ஒரு பிற்படுத்தப்பட்ட சாதி மற்றொரு பிற்படுத்தப்பட்ட சாதியை ஒடுக்கிய துன்பியல் நிகழ்வுகள் இந்நாவலை முக்கியமான ஒன்றாக மாற்றுகிறது. வேட்டுவக் கவுண்டர்களை வெள்ளாளக் கவுண்டர்கள் எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதில் கூட இந்த ஒப்பீட்டை நாம் செய்து பார்க்கலாம்.

.
தமிழில் பெரும் நாவலாக விரிந்து எழுந்து வரச்சாத்தியமுள்ள கதையுலகத்தை கொண்ட சிறு நாவல்கள் சில உண்டு. செந்துாரம் ஜெகதீசின் கிடங்குத் தெரு, கீரனுார் ஜாகீர்ராஜாவின் வடக்கேமுறி அலிமா சட்டென்று நினைவில் நிற்பவை. அதே போன்று பெரும் நாவல்களுக்கு உரிய அத்தனை ஆழமும் நுண்காட்சிகளும் கொண்டு 192 பக்கங்களுக்குள் அடங்கிப்போகும் சிறிய நாவலாக அம்மன் நெசவு எழுதப்பட்டுள்ளது என்பதே இதன் போதாமை. சாரு எக்ஸைல் நாவலை விரித்து தலையணை அளவில் திருத்தி எழுதியதைப்போல எம்.கோ.வும் அம்மன் நெசவினை மீள்உருவாக்கம் செய்யலாம். தமிழின் மகத்தான நாவல்களில் ஒன்றாகும் தகுதி அதற்கு இருக்கும்.

அறுபதுகள் எழுபதுகளில் இருந்திருக்கச் சாத்தியமுள்ள தமிழகக் கிராமம் ஒன்றின் யதார்த்தம் செறிவாகச் சொல்லப்பட்டுள்ளது. பல சித்தரிப்புகள் அன்றெல்லாம் மிகச்சாதாரணமாக நடந்திருக்கக்கூடியவை. இன்றிலிருந்து காணும்போது நம்ப முடியாத அதிசயங்களாக, அபத்த ஆச்சரியங்களாக தோன்றுகின்றன. அரிசிச்சோறு ஆக்குவது குறித்த பதிவுதான் இந்நாவலில் என்னைப் பெரிதும் கவர்ந்த ஒரு அத்தியாயம்.

நாவலின் 36 ஆவது அத்தியாயம் அது. இந்நாவலின் அத்தனை அத்தியாயங்களும் சொல்லி வைத்ததைப்போல ஒன்றரைப் பக்கத்தில் முடிந்து விடுகின்றது. ஆனால் பெரும்பாலும் அவை சொல்ல வேண்டிய உணர்வோட்டத்தை மிகக்குறைந்த சொற்களில் அடர்த்தியாக சொல்லி விடுகின்றன. பிள்ளையற்ற ராசாமணியின் வீட்டில் அடுப்பில் அரிசிச்சோறு வேகும்போதே அம்சாவின் வீட்டிற்கு தெரிந்துவிடுகிறது. பக்கத்துத் தெருவாக இருந்தாலும் அரிசிச்சோறு வேகும் மணம் எத்தனை வலுவானதாக இருந்திருக்கிறது. அந்த வாசனையே அவளின் பசியைக் கிளர்த்தி விடுகிறது. துாளியில் பசியால் அழுதுகொண்டிருக்கும் பாப்பாவைத் துாக்கி, இல்லாத பாலிற்காக முலையூட்டுகிறாள். அரிசிச்சோற்றின் வாசனை அவளைக் கிளர்ச்சியடையச் செய்கிறது. யார் வீட்டில் இன்று அரிசிச்சோறு ஆக்கி இருக்கக்கூடும் என்ற யோசனையோடு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு பாப்பாவைத் தோளில் கிடத்தியபடி கிளம்பிச் செல்கிறாள். பிள்ளைகளின் தொட்டிலின் கீழே இரும்புத்துண்டும் குண்டுக்கல்லும் கிடக்கின்ற நுண்தகவல் கதைச்சித்தரிப்பின் ஊடாக கடந்து செல்கிறது. பால் இல்லாத நிலையில் பசிக்கும் குழந்தைக்கு கேப்பைக் கூழைத்தான் புகட்டவேண்டிய நிலைமை. இரண்டுவாய் அரிசிச்சோறு கிடைக்குமா பார்ப்போம் என்று ஆற்றாமையோடுதான் அவள் கிளம்பிச் செல்கிறாள். இதுதான் பசுமைப்புரட்சிக்கு முந்திய இந்தியக் கிராமங்களின் யதார்த்தம். அன்று அரிசிச்சோறு அபூர்வம்.
.
அம்சா ராசாமணி வீட்டிற்கு போகும் வழியிலேயே ஏற்கனவே சோறு வாங்கி வந்துகொண்டிருக்கும் முத்தக்காவைப் பார்க்கிறாள். அவளைக்கண்டு கேட்கும் அம்சாவின் கண்கள் ஏக்கத்தோடு முத்தக்கா கொண்டுசெல்லும் கிண்ணத்தை உற்றுநோக்குகின்றன. சோறு வாங்கிய உடனே அதன் வாசனையில் அம்சாவின் பசியும் விழித்து அழத்தொடங்குகிறது. சோறு நிறைந்த குண்டாவைச் சேலைத் தலைப்பில் மறைத்தபடி திரும்பியவளுக்குப் பசிக்கத் தொடங்கியிருந்தது என்ற சித்தரிப்பு ஒருகணம் என்னை உறைய வைத்துவிட்டது.

இரண்டாவதாக கைத்தறிகளின் உலகம் மெல்ல மெல்ல அழிந்துவரும் சித்திரம். விவசாயத்திற்கு அடுத்து மிகப்பெரிய மக்கள் தொகையினர் ஈடுபட்ட தொழில் நெசவாக இருந்திருக்கலாம். பவர் லுாம் என்னும் அரக்கனின் வருகைக்கு முன்னர் வரை நெசவு என்பது குடிசைத் தொழில்தான். வீடுதோறும் பால்மாடு இருந்ததைப் போல. தறிகளும் ராட்டுகளும் இருந்தன. இன்று முற்றாக அழித்து ஒழிக்கப்பட்ட ஒரு குடிசைத் தொழில் கைத்தறி. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் போன்றவற்றின் அமுத ஊற்றே கைத்தறியும் பருத்தி நுாலும்தான்.

நிதானமாக மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும். அத்தனை கதாப்பாத்திரங்கள் வந்து போகிறார்கள். அத்தனை நுட்பங்களை கோரும் சம்பவங்கள் நிகழ்ந்துவிடுகின்றன.


(முகநூலில் இராயகிரி சங்கர்...)

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...