Tuesday 4 August 2020

செவிச்செல்வர் - கோவை ஞானி


காட்டூர் காளீஸ்வரா நகர் வீட்டின் இரும்புக் கதவைத் திறக்கும்போதே அவருக்குத் தெரிந்துவிடுகிறது. ஓசைகளால் ஆனது அவரது உலகம். படியேறுவதையும் உற்றுக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

முதல் தளத்துக்குச் செல்லும் படிகளில் பாதி ஏறியதுமே அறையிலிருந்து குரல் கேட்கிறது ‘யாரு?’. செருப்பை ஓரமாகப் போட்டுவிட்டு திரும்பும்போது மீண்டும் கேட்கிறார் ‘யார் வந்திருக்கறது?’ சொன்னதும் ‘அடடே, இப்பத்தான் வறீங்களா? கொஞ்ச நேரம் அப்படி சேர்ல உக்காருங்க. இதை முடிச்சுட்டு வந்தர்றேன்.” ஒவ்வொரு குரலும் ஒவ்வொரு நபர். முதன்முதலாக குரலைக் கேட்கும்போதே உருவத்தை உள்ளுக்குள் வரைந்துகொள்வார்.

கிழக்குப் பார்த்த அறை. வெயில் அறைக்குள் வெளிச்சம் போட்டிருக்கிறது. பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். எதிரில் அமர்ந்திருக்கும் நண்பர் தினமணி நடுப்பக்கக் கட்டுரையை வாசிப்பதை கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். கைகளை கோர்த்திருக்க இடதுகை கட்டை விரல் மட்டும் சுழன்றபடியே இருக்கிறது. மொட்டை மாடியில் இலையுதிர்க்கும் கொய்யா மரத்தில் அணில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அறையின் இரண்டு பக்கங்களிலும் புத்தக அடுக்குகள். தரையில் அட்டைப்பெட்டிகள். படிக்க வேண்டியவை, படித்து முடித்தவை, புதிதாக வந்தவை என்று எல்லாவற்றிலும் புத்தகங்கள். இதுதவிர மேசையின் மேல் மாத சஞ்சிகைகள். செய்தித்தாட்கள். சிறிய டேப் ரிகார்டர் ஒன்று.

நண்பர் கட்டுரையைப் படித்து முடித்ததும் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தவராய் அப்படியே அமர்ந்திருக்கிறார்.. சிவந்த முகம். கைவைத்த பனியன். இடுப்பில் வேட்டி. நரையேறிய தலைமுடியை ஒதுக்குபவர்போல கையை உயர்த்துகிறார்.

“சரி. நீங்க பொறப்படுங்க. நாவல் படிக்கத்தான் இவர் வந்திருக்காரு. நீங்க நாளைக்கு வாங்க” என்று நண்பரை அனுப்பி வைக்கிறார். படிகளில் அவர் இறங்கிச் செல்லும் ஓசையை கவனித்தவர் தண்ணீரை எடுத்துப் பருகுகிறார். 

“இருக்கட்டும். நீங்க சொல்லுங்க” என்று விசாரிக்கத் தொடங்கிவிடுகிறார்.

“என்ன படிச்சீங்க?”

சொன்னதுமே வியப்புடன் கேட்கிறார் “அட அப்பிடியா. சுருக்கமா சொல்லுங்க அதப் பத்தி.”

அந்த நூலைப் படிக்காதவர்போலவே ஆவலுடன் கவனமாகக் கேட்கிறார். படித்துத் தெரிந்துகொண்டதை அறைகுறையாய் சொல்லி முடித்தவுடன் சில சந்தேகங்களை ஒவ்வொன்றாகக் கேட்கிறார். தெரிந்ததைச் சொன்னவுடன் அவருடைய அபிப்ராயங்களைச் சொல்கிறார்.

புத்தகத்தைப் பற்றிய பேச்சு முடிந்ததும்  கூறுகிறார் “ஒண்ணு பண்ணுங்க. இப்ப நீங்க சொன்னதை அப்பிடியே எழுதிக் குடுத்துருங்க.”

குமுதம் ஏர் இந்தியா போட்டிக்கு வந்த நாவல்கள் மூலையில் அடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் வரிசை எண்கள். பதினாறு நாவல்கள்.

“மேல இருக்கறதை எடுத்துப் படிங்க.”

நாவல் முன்பே உதவியாளராலோ அல்லது வேறு யாராலோ பாதியளவு படிக்கப்பட்டு அடையாளம் வைக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நாவல் படிக்கப்படுவதை மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார். நல்ல பகுதியோ அல்லது சிறப்பான வாக்கியமோ வரும்போது உற்சாகத்துடன் சொல்கிறார் “அடடே.”

அன்றைக்குப் படித்துக்கொண்டிருந்த நாவலில் ஒரு வரி ‘நாம நீச்சலை மறந்துட்டதா நெனக்கலாம். ஆனா ஒடம்புக்குள்ள இருக்கற மீனுக்கு எதுவும் மறந்துருக்காதில்ல.”

அந்த வரியை வியந்து பாராட்டுகிறார். “கிராமத்து வாழ்க்கையை அப்பிடியே மண்வாசனையோட எழுதிருக்காரு. புதுசா எழுதிருக்கார். ஆனா வாழ்க்கை அச்சு அசலா இருக்கு.” வீட்டிலிருந்து தேநீர் வருகிறது. சிறிய இடைவேளை.

“இந்த நாவல் எல்லாம் என்கிட்டத்தான் வந்திருக்குன்னு தெரிஞ்சிட்டு இங்க வந்து தெனம் நச்சரிக்கறாங்க. இவங்களுக்கெல்லாம் எழுத்து எப்பிடி வரும்? கேவலமா இருக்கு” உள்ளூர் எழுத்தாளர் ஒருவரை அவருக்கேயுரிய சினத்துடன் கடிந்துகொள்கிறார். “நான் சொல்ற வரைக்கும் இந்தப் பக்கமா வரக்கூடாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன். வெளியில போயி ஞானி இப்பிடிக் கோவிச்சுட்டாருன்னு நாலு பேர்த்துகிட்ட சொல்லுவார். சொல்லட்டும்.”

மதியம் மணி ஒன்றரை. வீட்டுக்குள்ளிருந்து உணவு வேளைக்கான நினைவூட்டல். தரையிலிருந்த சொம்பிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடிக்கிறார் “கீழ எறங்கி வலதுபக்கமா மெயின் ரோடுல போயி போஸ்ட் ஆபிஸ் பக்கத்து சந்துல ஒரு மெஸ் இருக்கு. சாப்பிட்டுட்டு வந்துருங்க. வயத்துக்கு கெடுதல் பண்ணாது. சீக்கிரம் வந்துருங்க. இன்னிக்கு இதப் படிச்சு முடிச்சர்லாம்.”

அவர் எழுந்து கதவைப் பிடித்துக்கொண்டு வெளியே வருகிறார். சுவரையொட்டி அளந்து அடியெடுத்து நடக்கிறார். சிவப்பு சிமெண்டு மெழுகிய வீட்டுக்குள் மெல்லிய வெளிச்சம். வலதுபக்கமாய் திரையை விலக்கிக்கொண்டு உள்ளே செல்கிறார்.

திரும்பி வரும்போது அறைக்குள் அவர் தரையில் அமர்ந்திருக்கிறார். காக்கி நிறத் தாளை மடித்து பிளேடால் கிழித்து ‘நிகழ்’ இதழை வைத்து மடக்குகிறார். ஓரமாய் வைத்திருக்கும் பசையை எடுத்து தேவையான இடத்தில் கச்சிதமாகத் தடவி ஒட்டுகிறார்.

“வந்துட்டீங்களா? சாயங்காலம் போகும்போது இதத் தபால்ல சேத்திருங்க. ஸ்டாம்புக்கு இங்க பணம் வெச்சிருக்கேன்” அவரது இடதுபக்க புத்தகத் தட்டின் ஓரமாய் பத்து ரூபாய் தாள்.

பிரம்பு நாற்காலியில் அமர்ந்துகொண்டு கைகளைக் கோர்த்துக்கொள்கிறார் “படிங்க.”

பக்கம்பக்கமாய் நாவல் அவருக்குள் ஒலியாய் இறங்குகிறது. கவனமாய் பதித்துக்கொள்கிறார். சந்தேகம் வரும் இடங்களில் கேட்டுக்கொள்கிறார்.

மாலை ஒளி மங்கி காற்றில் வெம்மை குறைகிறது. மீண்டும் தேநீர். குடித்து முடித்ததும் கேட்கிறார் “ராத்திரி எத்தனை மணிக்குத் தூங்குவீங்க?”

“பத்தரை இல்லேன்னா பதினொன்னு.”

“எதுக்கு அவ்ளோ நேரத்துல தூங்கணும். இந்த வயசுல கண்ணு முழிச்சு படீங்க. படிக்கறதுக்கு எத்தனை விஷயம் இருக்கு. அஞ்சு மணி நேரம் தூங்கினா போதும். எத்தனையெல்லாம் எழுதி வெச்சிருக்காங்க. படிச்சுத் தீராது.” அவரது இடதுகை கட்டை விரல் சுழல்கிறது.

“சரி நீங்க பொறப்படுங்க. திருப்பூர் போகணுமில்லை. இதுல இந்த அட்ரஸை எழுதி இதை மறக்காம தபால்ல சேத்துருங்க.” அவரே கைப்பட ஒட்டிய உறைகளையும் பத்து ரூபாய் தாளையும் நீட்டுகிறார்.

கொய்யா இலைகள் காற்றில் உதிர்கின்றன. எழுந்து மீண்டும் வீட்டுக்குள் நடந்து மறைகிறார்.

0

( அந்திமழை, ஆகஸ்ட் 2020 இதழில் வெளியான நினைவுக் குறிப்பு )

 

 


No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...