ஒரு எழுத்தாளன் தன் மொழிக்குச் செய்யவேண்டிய மூன்று காரியங்களை கச்சிதமாக நிறைவேற்றி வருபவர் பாவண்ணன். முதலாவது காரியம் சிறுகதை, நாவல்கள், கவிதைகள் என்று தொடர்ந்து பங்களிப்புகளைச் செய்திருப்பது. 35 ஆண்டு காலத்தில் அவர் எழுதாத நாளே இல்லை என்று சொல்லலாம். இதுவரையிலும் 20 சிறுகதைத் தொகுதிகள், ‘வாழ்க்கை ஒரு விசாரணை‘, ‘சிதறல்கள்’, ‘பாய்மரக் கப்பல்’ என மூன்று நாவல்கள், இரண்டு குறுநாவல்கள், 18 கட்டுரைத் தொகுப்புகள் என 50க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகி உள்ளன.
எழுத்தாளன்
செய்யவேண்டிய இரண்டாவது காரியம் தான் அறிந்த, வாசித்த பிற மொழி இலக்கியங்களை
மொழிபெயர்ப்பின் வழியாக தமிழுக்குத் தருவது. பணியின்பொருட்டு கர்நாடகத்தில் வசிக்கத்
தொடங்கிய நாளிலேயே கன்னடத்தைக் கற்றுக் கொண்ட பாவண்ணன், கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்த
எழுத்துக்கள் 19 நூல்களாக வெளியாகியுள்ளன.
மூன்றாவதாக
எழுத்தாளன் ஒரு வாசகனாக தான் ரசித்தவற்றை தன் வாசகர்களுக்கு அடையாளம் காட்டுவது
முக்கியமான பணியாகும்.
தமிழில் எழுதும்
புதிய கவிஞர்களின் கவிதைகளை முன்வைத்து அவர் எழுதிய ‘மனம் வரைந்த ஓவியங்கள்’ எனும்
புத்தகமும், சிறுகதையாளர்களை
அறிமுகப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்ட ‘எனக்குப் பிடித்த கதைகள்’ தொகுப்பும் புதிய
வாசகர்களுக்கு முக்கியமானவை ஆகும். அவரது
கட்டுரைத் தொகுப்புகள் பலவும் வாழ்வின் பல்வேறு தருணங்களின் நாம் உணர நேரும்
அபூர்வ கணங்களைச் சுட்டி நிற்பவை.
ஒரு
எழுத்தாளனாக தான் செய்யவேண்டிய காரியங்களை ஓசையில்லாமல், தற்பெருமை இல்லாமல், அடக்கமாக, புன்னகையுடன் செய்திருப்பது என்பதே
அபூர்வமான ஒன்றுதான்.
பாவண்ணன்
அத்தகையதொரு சாதனையாளர்.
தமிழுக்கும்
அவருக்குமான உணர்வுப்பூர்வமான உறவைப் போலவே அவருக்கும் அவரது வாசகர்களுக்குமான
உறவு மிகவும் நெகிழ்ச்சியானது,
சொற்களுக்கு
அப்பாற்பட்டது.
சில
மாதங்களுக்கு முன்பு நவீன கன்னட எழுத்துக்களைப் பற்றி உரையாற்றுவதற்காக பாவண்ணன்
கோவை வந்திருந்தார்.
நிகழ்ச்சி
முடிவுறும் தறுவாயில் உரிமை முழக்கங்களுடன் அரங்கிற்கு வந்த அரசியல் குழுவினர்
கூட்டத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல் துறையினர் நிகழ்ச்சி
அமைப்பாளர்களைக் கண்டித்ததுடன் உடனடியாக அரங்கிலிருந்து வெளியேறுமாறு
அறிவுறுத்தினர். இது ஒரு இலக்கிய நிகழ்ச்சி
என்று சொன்ன விளக்கம் யார் காதிலும் விழவில்லை. நிகழ்ச்சி உடனடியாக முடிக்கப்பட்டது.
கர்நாடக
மாநிலத்துக்கும் நமக்குமான அரசியல் உறவு சீர்கெட்டுக் கிடக்கும் இந்தச் சூழலில்
இரண்டு மாநிலங்களுக்கும் இடையேயான இலக்கிய உறவுக்கான முக்கியமான தவிர்க்கமுடியாத
பாலமாக விளங்குகிறார் பாவண்ணன்.
சொல்லப்போனால்
பிறப்பால் புதுச்சேரிக்கும்,
மொழியால்
தமிழகத்துக்கும்,
இருப்பால்
கர்நாடகத்தும் என பாவண்ணன் மூன்று மாநிலங்களுக்குச் சொந்தக்காரர். மொழிபெயர்ப்பின் வழியாக கன்னட இலக்கியத்தை
தமிழுக்குக் கொண்டுவந்தவர்களில் முதன்மையானவர். இலக்கியவாதி ஒருவர் தனது சொந்த
படைப்பிலக்கியத்துக்கு தரும் அதேயளவு முக்கியத்துவத்தை மொழிபெயர்ப்புக்கும்
அளிப்பதென்பது எளிய காரியமன்று.
ஆனால் பாவண்ணன்
தனது 35 ஆண்டுகால இலக்கிய வாழ்வில்
தனது சொந்தப் படைப்புகளுக்கு இணையாக 20 மொழிபெயர்ப்பு
நூல்களையும் எழுதியிருக்கிறார் என்பது அபூர்வமான ஒன்று.
‘பலிபீடம்’, ‘நாகமண்டலம்’ போன்ற கிரீஷ் கர்நாட்டின்
நவீன நாடகங்களையும்,
லங்கேஷ், வைதேகி, விவேக் ஷன்பாக் போன்றவர்களின்
சிறுகதைகளையும், பைரப்பாவின் ‘பருவம்’, ‘வினைவிதைத்தவன் வினை அறுப்பான்’, தேவனூரு மகாதேவாவின் ‘பசித்தவர்கள்’, … ‘ஓம் நமோ’, ராகவேந்திர பாட்டீலின் ’தேர்’ உள்ளிட்ட
நாவல்களையும் அக்கமாதேவி,
பசவண்ணர் என
கன்னடத்தின் ஆதி கவிகள் தொடங்கி இன்றைய நவீன கவிஞர்கள் வரையிலும் தமிழில்
வாசிக்கும் வாய்ப்பு நமக்கு பாவண்ணனின் மொழியாக்கத்தின் வாயிலாகவே சாத்தியமானது.
கன்னடத்தின்
முன்னணி எழுத்தாளரான கிரீஷ் கர்நாட் தனது நாடகங்களை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி
கோரும்போது, பாவண்ணன் மொழிபெயர்ப்பதாய்
இருந்தால் மட்டுமே அனுமதி தரமுடியும் என்று நிபந்தனை விதிக்குமளவுக்கு அவரது
மொழிபெயர்ப்பின் மேல் பெரும் மரியாதை வைத்திருக்கிறார்.
தமிழில்
தலித் எழுத்துக்களுக்கான தொடக்கத்தை ஏற்படுத்தியவை பாவண்ணனின் மொழிபெயர்ப்புகளே. 1996ம் ஆண்டு வெளியான ‘புதைந்த
காற்று’ என்கிற தலித் எழுத்துக்களின் தொகை நூலும், சித்தலிங்கய்யாவின் ‘ஊரும் சேரியும்’
என்கிற தலித் தன்வரலாறும் 1998ல் வெளியான அரவிந்த்
மாளகத்தியின் ‘கவர்மென்ட் பிராமணன்’ எனும் தன்வரலாற்று நூலும் தமிழ் இலக்கிய
உலகில் பெரும் அதிர்வுகளையும் பாதிப்புகளையும் உருவாக்கின. இந்த நூல்களின் வருகைக்குப் பின்பே
தமிழில் தலித் இலக்கியம் பற்றிய உரையாடல்கள் தொடங்கின.
எல்லா
எழுத்தாளர்களையும்போலவே பாவண்ணனும் கவிதையிலிருந்தே தன் எழுத்து வாழ்க்கையைத்
தொடங்கினார். தமிழ் மரபிலக்கியத்தில் பெரும்
ஈடுபாடு கொண்டிருந்த அவர் கபிலர் தொடங்கி ஆவுடையக்காள் உள்ளிட்ட பல கவிஞர்களைக்
குறித்தும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அதேபோல
கன்னடத்தின் முக்கியமான பக்தி கவிஞரான அக்கமாதேவியின் கவிதைகளை தமிழின் ஆண்டாள்
பாசுரங்களோடு ஒப்பிட்டு எழுதிய ‘பாட்டும் பரவசமும்’ என்கிற கட்டுரை மிக முக்கியமான
ஒன்றாகும். பிற இலக்கிய வகைமைகளைப் போலவே கவிதைகளையும் அவர் தொடர்ந்து
எழுதுகிறார். இதுவரையிலும் மூன்று கவிதைத்
தொகுப்புகள் வெளி வந்துள்ளன.
குழந்தைகளுக்கான
பாடல்களை எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டவர் பாவண்ணன். வியப்பும் உற்சாகமும் கும்மாளமும் மிக்க
குழந்தைகளின் உலகைச் சுற்றி அவர் எழுதிய பாடல்கள் மூன்று தொகுதிகளாய்
வெளியாகியுள்ளன.
‘பருவம்’ நாவலுக்காக சாகித்திய
அகாதமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, ‘பயணம்’ சிறுகதைக்காக கதா விருது உள்ளிட்ட
பல விருதுகளும் பாவண்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாவண்ணன்
அளவுக்கு ஓயாமல் தொடர்ந்து எழுதும் எழுத்தாளர்கள் வெகு சிலரே. தமிழுடனும் வாசகர்களுடனுமான அவரது
செயல்பாடுகளும் உரையாடல்களும் உள்ளபடியே அவருக்கு மேலும் கவனத்தையும்
அங்கீகாரத்தையும் தந்திருக்கவேண்டும். தன்னை
முன்னிறுத்திக் கொள்ளாத தன்மையும், ‘எனக்குப்
பிடித்திருக்கிறது.
எனவே
எழுதுகிறேன்’ என்ற தெளிவும்,
எழுத்தைக் கொண்டு
பயனடைய நினைக்காத மனமுமே பாவண்ணனின் தனி அடையாளங்கள். குழுச் செயல்பாடுகளுக்கும் இலக்கிய
அரசியல் விளையாட்டுகளுக்கும் பேர்போன தமிழ்ச் சூழலில் பாவண்ணனின் அசலான
பங்களிப்புகளுக்கு உரிய மதிப்பில்லாமல் போவதில் வியப்பொன்றுமில்லை.
0
( விளக்கு விருது அளிக்கப்பட்டதையொட்டி தமிழ் இந்து நாளிதழில் வெளியான கட்டுரை )

No comments:
Post a Comment