Tuesday, 29 September 2026

நாஞ்சில்நாடனுக்கு கோவை நன்னெறிக் கழகத்தின் தமிழ்நெறிச் செம்மல் விருது

 



ஓவியம் - ஜீவா


கோவை நன்னெறிக் கழகம் 27.09.2026 ஞாயிறு மாலை கோவையில் தனது 70ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. நிகழ்வில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களுக்கு தமிழ்நெறிச் செம்மல் விருதை வழங்கிச் சிறப்பித்தது. விழாவில் ஆற்றிய வாழ்த்துரையின் எழுத்து வடிவம்.

0

பல வருடங்களுக்கு முன்பு நாகர்கோயிலில் ஒரு கல்யாணப் பந்தியில் பசியுடனும் ஆசையுடனும் அமர்ந்திருக்கிறான் ஒரு சிறுவன். உணவு பரிமாறி உண்ணும் நேரத்தில் அவன் கையைப் பிடித்து எழுப்பி அங்கிருந்து வெளியேற்றப்படுகிறான்.

அதே சிறுவன், வளர்ந்து படித்து, மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெறுகிறான். கணிதத்தில் முதுகலைப் பட்டம். ஆனாலும் அந்த இளைஞனுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே, பிழைப்பு தேடி பம்பாய்க்கு ரயில் ஏறுகிறான் அந்த இளைஞன்.

ஐம்பது, அறுபது வருடத்துக்கு முன்பு நாகர்கோயிலிலிருந்து பம்பாய்க்கு ரயிலில் போனால் இரண்டு நாளாகும். நேரடி ரயில் போக்குவரத்தே கிடையாது. தொலைபேசி வசதி இல்லை. கடிதம் எழுதினால் போய் சேருமா இல்லையென்று தெரியாது. அப்பிடியே போய் சேர்ந்தாலும் பத்து நாளோ இரண்டு வாரமோ ஆகும். அவசரத்துக்கு தந்தி அடித்தால்கூட அது கிடைத்து புறப்பட்டு வருவது அவ்வளவு சுலபமில்லை. அந்த ஊரில் யாரையும் தெரியாது. மொழியும் புரியாது. கண்ளைக் கட்டிக்கொண்டு காட்டில் நிற்பதுதான் நிலைமை.  24 வயதில் பம்பாய்க்கு போய் பிரமாண்டமான அந்த வி.டி ஸ்டேசனில் இறங்கும்போது முதலில் ஒரு பயம் வரும். இந்த ஊரில் என்ன செய்யப் போகிறோம் என்கிற திகைப்பு வரும். அடுத்தது ஒருவிதமான ஆற்றாமை பொங்கும். எனக்கு மட்டும் ஏன் என்கிற கேள்வி வரும். அத்துடன் கோபமும் வரும். தகுதியில்லாதவர்களெல்லாம் ஊரில் நன்றாகத்தானே இருக்கிறார்கள், எனக்கு என்ன தகுதி இல்லை, நான் மட்டும் ஏன் இப்படி எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே வந்து நிற்கிறேன் என்று ஒரு வெறுப்பு வரும். நம்முடைய ஊர் மீது, கல்வியின் மீது, இதற்கெல்லாம் காரணமான அரசியல், அதிகாரம், சமூக அமைப்பு என்று எல்லாவற்றின் மீதும் கடுமையான கோபமும் வெறுப்பும் வரும்.

பம்பாய்க்கு போனதும் உடனடியாக வேலை கிடைக்கவில்லை. பம்பாய் கலெக்டர் அலுவலகத்தில் ஏழு ரூபாய் தினக்கூலியாக ஒருமாதம் வேலை பார்க்க நேர்ந்தது. உண்பதற்கும் தங்குவதற்கும் தற்காலிக ஏற்பாடுகள்தான்.

இதுமாதிரி ஒரு குழப்பமான சந்தர்ப்பத்தில் ஒரு மனிதன் வழிதவறிப் போவது என்பது மிகவும் இயல்பானது. அதுவும் பம்பாய் மாதிரி ஒரு ஊரில் தவறிப்போக எண்ணற்ற சுலபமான வழிகள் உண்டு.

ஆனால், ஊரையும் உறவுகளையும் மனிதர்களையும் பிரிந்து வந்த ஏக்கத்துடனும் அடுத்த வேளை பசிக்கு என்ன வழி என்கிற துக்கத்தோடும் இருட்டில் நின்று கொண்டிருந்த அந்த கொடுமையான காலத்தில் சுப்ரமணியன் என்னும் அந்த இளைஞன் வழிதவறிப் போகவில்லை. அதற்கு பதிலா ஒரு கைவிளக்கைக் கண்டடைந்தார். அந்த கைவிளக்கின் வெளிச்சம் அவரை குழப்பத்திலிருந்தும் தடுமாற்றத்தில் இருந்தும் விடுவித்தது. மனதில் தெளிவுடன் எல்லாவற்றையும் சமாளிக்கலாம் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தது. உண்மையாக நேர்மையாக உழைத்தால் ஒரு மனிதனாக  தலைநிமிர்ந்து வாழ முடியும் என்ற மன உறுதியைக் கொடுத்தது. சுப்ரமணியன் என்கிற அந்த இளைஞன் நெருக்கடியான அந்த காலகட்டத்தில் கண்டுபிடித்த அந்த கைவிளக்குதான் எழுத்து. எழுத்து என்னும் அந்த கைவிளக்குதான் வேலை தேடி பம்பாய்க்குப் போன சுப்ரமணியனை நாஞ்சில்நாடன் என்கிற நாடறிந்த எழுத்தாளராக மாற்றியது.  

எழுத்தும் இலக்கியமும் அவருடைய தனிமையைப் போக்கவும், ஊரைப் பற்றி உறவுகளைப் பற்றிய நினைவுகளை மடைமாற்றவும் அவருக்கு உதவியது. அந்த எழுத்தின் வழியாக, கதைகளின் வழியாக ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து இந்த ஊருடனும் உறவுகளுடனும் மொழியுடனும் அவரால் உரையாட முடிந்தது. பிழைப்புக்காக பம்பாயில் அலைந்துத் திரிந்தபோதும் எழுத்தின் மூலமாக நாஞ்சில்நாட்டில் அவர் வாழ்ந்துகொண்டிருந்தார்.

வேலையற்ற இளைஞனாக பம்பாய்க்கு சென்ற சுப்ரமணியன் பதினேழு வருடங்கள் கழித்து தமிழ்நாட்டுக்கு கோயமுத்தூருக்கு W H பிராடி நிறுவனத்தின் மேலாளராக வந்து சேர்ந்திருந்தால் நம்மில் பலருக்கும் அவரைத் தெரிந்திருக்காது. ஓய்வுபெற்று இதே கோவைப் புதூரில் வசித்திருந்தாலும் இங்கே அவரை அழைத்து இந்த விருதைத் தந்திருக்க மாட்டோம். பம்பாயிலிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பி வரும்போது அவர் பிராடியின் மேலாளராக மட்டுமல்லாமல், நாஞ்சில்நாடனாகவும் திரும்பி வந்தார். நூறு சிறுகதைகள், நான்கு நாவல்கள், கட்டுரைகளை எழுதிய தமிழின் முக்கியமான எழுத்தாளராகவும் திரும்பி வந்தார். அவரது எழுத்துதான் அவரது முகமாகவும் முகவரியாகவும் இருந்தது.

1975ஆம் ஆண்டு தீபம் இதழில் அவரது முதல் கதை ‘விரதம்’ வெளியானது. ஐம்பதாண்டு காலமாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். ஆறு நாவல்கள், 200க்கும் அதிகமான சிறுகதைகள், ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள், பத்துக்கும் அதிகமான கட்டுரைத் தொகுப்புகள், மூன்று கவிதைத் தொகுப்புகள் என்று தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் இடைவிடாது எழுதுகிறார். எழுதுவது என்பது சாதாரண காரியமல்ல. இதில் செலுத்தப்பட்டுள்ள உடல் உழைப்பும் மூளை உழைப்பும் களைப்பைத் தருவது. அதிலும் இவர் இன்னும் பேனாவால், கையால் எழுதுகிறார். எனக்குத் தெரிந்து இன்று கணினியை, கைப்பேசியைப் பயன்படுத்தாமல் கையால் எழுதும் ஒரே எழுத்தாளர் இவராகத்தான் இருக்கவேண்டும். தொடர்ந்து எழுதவேண்டும் என்றால் தொடர்ந்து வாசிக்கவேண்டும். எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கவேண்டும். யோசிக்கவேண்டும். ஐம்பதாண்டு கால எழுத்து என்பது ஒரு இயக்கம். ஒரு தலைமுறை என்பதே முப்பதாண்டு காலம் என்று சொல்வார்கள். இவர் ஒரு தலைமுறை தாண்டியும் உழைக்கிறார்.

எழுத்தாளனுக்கு நம் சமூகம் தரும் மரியாதையைப் பற்றி நமக்குத் தெரியும். அதையெல்லாம் உணர்ந்தும் அதைப் பற்றி பொருட்படுத்தாது ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று மனம் சலிக்காமல் பல நேரங்களில் கைக்காசு செலவு செய்து கூட்டங்களுக்கு சென்று வருகிறார்.

அவருடைய முதல் மூன்று நாவல்கள் நாஞ்சில்நாட்டு வாழ்க்கையைச் சொல்பவை. பிந்தைய மூன்று நாவல்களும் பம்பாயைக் களமாகக் கொண்டவை. இந்த நாவல்களிலிருந்து கடந்த ஐம்பதாண்டு காலத்தில் இந்திய கிராமங்களிலும் பம்பாய் போன்ற பெருநகரங்களிலும் வாழ்ந்த இளைஞர்களின் வாழ்க்கையை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

கோவைக்கு வந்து சில ஆண்டுகளுக்குப் பிறகே அவர் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதத் தொடங்கினார். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை என்ற அவரது புகழ்பெற்றக் கட்டுரை தீவிர இலக்கியம் வாசிப்பவர்களைத் தாண்டி பொது வாசகர்கள் பலருக்கும் அவரை அறிமுகப் படுத்தியது. ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’ என்பது மதுப்பழக்கம் குறித்து அவர் எழுதிய இன்னொரு முக்கியமான கட்டுரை. அவரது நாவல்களும் கதைகளும் இலக்கிய வாசகர்கள் மட்டுமே வாசிக்கக் கூடியவை. அதனுடைய எண்ணிக்கையும் எல்லையும் மிகக் சிறியது. அவர்களுக்கு மட்டும் கதைகளையும் நாவல்களையும் தொடர்ந்து எழுதுவதோடு நின்றிருந்தால் அந்த எல்லையைத் தாண்டி பலருக்கும் அவரைத் தெரிந்திருக்காது. அப்படியில்லாமல் அவர் எழுதிய கட்டுரைகள் பொது வாசகர்களை அவரை கவனிக்கச் செய்தன. முக்கியமாக, ஆனந்த விகடனில் ‘தீதும் நன்றும்’ என்ற தலைப்பிலும், குங்குமத்தில் ‘கைம்மண்ணளவு’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகள் பொது வாசகர்களிடம் அவரைக் கொண்டு சேர்த்தன. இலக்கியத்துக்கு வெளியிலும் அவரைக் கவனிக்கத் தொடங்கினார்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், மருத்துவர்கள், சினிமாக்காரர்கள் உட்பட பலதரப்பட்ட வாசகர்கள் அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கவனிக்கலானார்கள்.

ஆனந்தவிகடன், குங்குமம் போன்ற பிரபலமான வார இதழ்களில் அவர் எழுதியதுதான் இதற்குக் காரணமா? இல்லை. அந்தப் பத்திரிகைகளில் அவர் என்ன எழுதினார், எப்படி எழுதினார் என்பதுதான் முக்கியம். நமது அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் பல சம்பவங்களை கண்டும் காணாமலும் கடந்து செல்வோம்.

அன்றாட அரசியல் நிகழ்வுகள், அரசின் நடவடிக்கைகள், அதிகாரவர்க்கத்தின் நடைமுறைகள், சாதி இன மொழியின் பெயரால் நிகழும் சம்பவங்கள், பேருந்துகளில் சில்லறை பிரச்சனை, அஞ்சலகம் வங்கிகள் அரசு அலுவலகங்களில் பார்க்க முடிகிற அவலங்கள், ரேசன் கடை விவகாரங்கள், முதல் நாள் முதல் காட்சிக்காக முண்டியடிக்கும் இளைஞர்கள் என்று எத்தனையோ சம்பவங்கள்.

அவற்றைக் குறித்து நமக்கென்று கருத்து இருக்கும். ஆனால் அவற்றைப் பேச வாய்ப்பிருக்காது, சில சமயங்களில் பேச முடியாது. இப்படி நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் எண்ணங்களை, கோபங்களை, வருத்தங்களை, தரப்புகளை, விமர்சனங்களை அவர் தன் கட்டுரைகளின் வழியாக கேள்விக்கு உட்படுத்தினார். நமது மனசாட்சியை சீண்டிப் பார்த்தார். எல்லாவற்றையும் மௌனமாக வேடிக்கைப் பார்க்கும் போக்கை கேலி செய்தார். அரசியல்வாதிகளிடம் சினிமாக்காரர்களிடம் சாதி, மத அமைப்புகளிடம் சிக்கிச் சீரழியும் தமிழ்ச் சமூகத்தைக் குறித்த தன் அக்கறைகளை கிண்டலாகவும் கேலியாகவும் கூர்மையாகவும் எழுதினார். கல்வியிலும் மருத்துவத்திலும் சமூகத்தின் பிற துறைகளிலும் ஒரு எளிய மனிதன் மிகச் சாதாரணமாகச் சுரண்டப்படும் அவலங்களைத் தோலுரித்துக் காட்டினார். பல சமயங்களில் நாம் வெளிப்படையாகப் பேசத் தயங்கும் விஷயங்களை அவர் சிறிதும் தயங்காமல், அதே நேரத்தில் மிகுந்த கண்ணியத்துடன் விவாதிக்கிறார். சமகால தமிழ்ச் சமூகத்தைக் குறித்த அவரது கவலையும் அக்கறையுமே அவரை தமிழறிந்த அனைவருக்குமான எழுத்தாளராக உருமாற்றியது. இப்படி வெளிப்படையாக எழுதுவதால் பல சமயங்களில் அவர் மீது பலருக்கும் கோபமும் எரிச்சலும் வருவதுண்டு. ஆனால், அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படுவதில்லை. முகதாட்சண்யம் பார்ப்பதில்லை. எவர் தயவையும் எதிர்பார்ப்பதுமில்லை. உள்ளது உள்ளபடி எழுதுகிறார், பேசுகிறார். அப்படியில்லை என்றால் அது நாஞ்சில்நாடனின் எழுத்துமல்ல, குரலுமல்ல.  

அவரது ஆறாவது நாவல் ‘எட்டுத் திக்கும் மத யானை’ நாவல் வெளியாகி இருபத்தி ஐந்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. அதன் பிறகு நாவல் எழுதவில்லை. அவரிடம் பலமுறை இதைப் பற்றி பேசியதுண்டு. சற்றே உரிமையுடன் கடிந்ததுமுண்டு. ஆனால், அவர் எப்போதும் பதிலாகச் சொல்வது ஒன்றுதான் ‘இந்தக் காரியத்தை நான் செய்யலேண்ணா வேற யாரும் செய்ய முடியாமயே போயிரும்.’ இன்று அவர் எழுதி வெளியாகியுள்ள கட்டுரை நூல்களின் எண்ணிக்கை அவரது சிறுகதைத் தொகுதிகளின் எண்ணிக்கையைவிட அதிகம். உண்மையில், அவரது புனைவுக்கான ரசிகர்களைவிட கட்டுரைகளுக்கான ரசிகர்களின் எண்ணிக்கையே அதிகம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

 

இத்தனைக்கும் மேலாக தொடர்ந்து அவர் முக்கியமான காரியத்தை செய்துகொண்டிருக்கிறார். தமிழையே ஒழுங்காகப் படிக்கத் தெரியாத இன்றைய நம் தலைமுறை தொலைத்துக்கொண்டிருக்கும் தமிழின் மரபிலக்கிய செல்வத்தை தன் கட்டுரைகளின் வழியாக மீட்டுத் தருகிறார். அருமையான பொருள் பொதிந்த சங்க இலக்கிய பாடல்களை உதாரணம் காட்டி ஆர்வமூட்டுகிறார். அவற்றைத் தேடிப் படிக்கச் செய்கிறார். பல்கலைக்கழகங்களும், தமிழ் பேராசிரியர்களும் செய்யவேண்டிய அடிப்படையான பணி இது. நமது பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் நவீன இலக்கியத்துக்குமான முக்கியமான பாலமாக அவர் விளங்குகிறார். கம்பனையும் வள்ளுவனையும் கபிலரையும் ஔவையாரையும் சிற்றிலக்கியங்களையும் ரசனைபூர்வமாக விமர்சனபூர்வமாக எடுத்துச் சொல்லும் அவரது இந்தப் பணி பிற எல்லாவற்றையும்விட மேலானது, பாராட்டுக்குரியது. பாடுக பாட்டே, சிற்றிலக்கியங்கள், பனுவல் போற்றுதும் போன்ற அவரது நூல்களைக் குறிப்பிடலாம்.   

இன்று கம்பனை ரசனையுடனும் ஈடுபாட்டுடனும் அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல நம்மிடையே ஒருவர் இருக்கிறார் என்றால் நாஞ்சில்நாடன்தான். ‘கம்பனின் அம்பறாத் தூணி’ என்பது அவரது நூல். உண்மையில் கம்பனைப் பற்றி பேசவும் சொல்லவும் அவரிடமுள்ள ஈடுபாடும் ஆசையும் ஆற்றலும் என்றுமே தீராதவை.

கடந்த சில ஆண்டுகளாக இடையறாது அவர் மேற்கொண்டு வரும் சொல் ஆராய்ச்சி மிகப் பெரிய பணி. அந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிவரும் கட்டுரைகள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு சொல்லுக்கும் அவர் செலுத்தும் உழைப்பும் ஆர்வமும் ஆச்சரியமூட்டுபவை. பயன்பாட்டிலிருந்து மறைந்து வரும் பல சொற்களைக் குறித்த அக்கறையும் கவலையும் அனைவரும் கவனிக்கவேண்டியது. வெகு வேகமாகச் சுருங்கி வரும் தமிழ் சொற்களின் பயன்பாட்டை மிகுந்த அக்கறையுடன் சுட்டிக் காட்டுகிறார்.   

உதாரணத்துக்கு, ஒட்டகம் குறித்த அவரது ‘ஓங்கு நிலை ஒட்டகம்’ என்னும் கட்டுரையைக் குறிப்பிடலாம். ‘ஊசி காதில் ஒட்டகம் நுழையாது’ என்பது பிரபல சொற்றொடர். அதுவொரு புகழ்பெற்ற பைபிள் வாசகம். ‘ஊசிக்குள் ஒட்டகம் நுழைந்தாலும் செல்வந்தர் சொர்க்கம் புக இயலாது’. பைபிளில் சொல்லப்பட்ட Camel என்ற சொல்லை யாரோ தவறாக தமிழில் மொழிபெயர்த்ததன் விளைவே இது என்று குறிப்பிடுகிறார். அந்தச் சொல்லுக்கு இன்னொரு பொருள், தடித்த கயிறு. ஊசிக் காதில் தடித்த கயிறை நுழைக்க முடியாது என்றால் அதன் பொருளை சரியாகப் புரிந்துகொள்ளலாம்.

அதேபோல, அகநானூறில் உள்ள ஒரு பாடல். ‘குறும் பொறை உணங்கும் ததர் வெண் என்பு கடுங்கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்’ என்பது. இதற்கு உரையெழுதிய பலர், ஒட்டகம் எலும்பைத் தின்னும் இயல்புடையது என்ற பொருளிலேயே எழுதியுள்ளனர். ஒட்டகம் ஒரு சாக பட்சிணி. அது எப்படி எலும்பைத் தின்னும் என்ற கேள்வி இயல்பாகவே எழும். ஆனால், ‘என்பு’ என்ற சொல்லுக்கு எலும்பு, உடம்பு ஆகிய அர்த்தங்களைத் தாண்டி ‘ஒரு வகைப் புல்’ என்ற பொருளும் உள்ளது. எனவே, பாறையின் மேல் காய்ந்து கிடக்கும் சுள்ளி போன்ற வெள்ளிய புற்கள் ஒட்டகத்தின் பசியினைப் போக்கும்’ என்பதுதான் சரியான பொருள் என்று குறிப்பிடுகிறார். இதுபோன்று எண்ணற்ற சொற்களின் பொருளையும் பயன்பாட்டையும் சரியான சுவையான உதாரணங்களுடன் எடுத்துக் காட்டுகிறார்.


நாஞ்சில்நாடனை அறிந்தவர்களுக்குத் தெரியும் அவர் உணவுப் பிரியர் என்று. உணவுப்பிரியர் என்றால் நன்றாக சாப்பிடுபவர் என்று பொருளல்ல. உணவைப் பற்றிய தகவல்களை அதன் தளிகை முறையை அறிந்தவர், அறிந்துகொள்ளும் ஆர்வம் உடையவர் என்று பொருள். நாஞ்சில்நாடனின் கதைகளைப் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும், ‘குளித்து சாப்பிட்டுவிட்டு வந்தார்’ என்று வெறுமனே அவரால் எழுத முடியாது. ‘குளித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் சாப்பிட உட்கார்ந்தார். கொடுப்பைக் கீரை துவரன், பருப்புக் குழம்பு, எள்ளுத் துவையல், தாளிச்ச மோர், நல்ல நிமிரச் சாப்பிட்டார்’ என்று விஸ்தாரமாகத்தான் எழுத முடியும்.

உணவையும் உண்பதையும் ரசித்தும் ருசித்தும் இலக்கியமாக மாற்றியவர்களில் நாஞ்சில்நாடனுக்கு முதன்மையான இடம் உண்டு. அப்படிப்பட்டவர் உணவு குறித்து சுவையாகவும் பயனுள்ளதாகவும் எழுதிய நூல்தான் ‘நாஞ்சில் நாட்டு உணவு’. உணவிலும் உணவுப் பழக்கத்திலும் காலந்தோறும் ஏற்படும் மாற்றங்கள் நமது மரபிலும் கலாச்சாரத்திலும் எத்தகைய சரிவுகளை நிகழ்த்தியுள்ளன என்பதை கரிசனத்துடன் விவரிக்கும் இந்தப் புத்தகம் அவரது நீண்டகால உழைப்பு. இருபதாண்டுகளாக தன் பிற எழுத்துப் பணிகளுக்கு நடுவிலும் இந்த நூலுக்கான தகவல்களை தொடர்ந்து திரட்டித் தொகுத்திருக்கிறார். இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல உணவு வகைகள் இன்று இல்லை. அவற்றை சமைப்பவர்கள் கிடையாது. இதுபோன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலுமேகூட உணவு வகைகளும் அவற்றை சமைக்கும் முறைகளும் மறைந்து போயுள்ளன. அந்த வகையில் மிக முக்கியமான ஒரு நூல் இது.

எழுதுபவன் காலப்போக்கிலும் தன் எழுத்தின் தடத்திலும் அடையும் பரிணாமவளர்ச்சி மிக முக்கியமானது. ஒரு எழுத்தாளனுக்கும் ஞானிக்கும் இடையிலான பாதை அது. எழுத்தாளனாக நாஞ்சில்நாடன் தொடங்கிய தன் பயணத்தில் பல படிநிலைகளைக் கடந்து இன்றும் வேகத்துடன் ஆற்றலுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பாதையில் அவர் அடைந்திருக்கும் இடமும் இனி அவர் அடையவிருக்கும் தொலைவும் தமிழ் இலக்கியத்துக்கும் சிந்தனைக்கும் சமூகத்துக்கும் மிக முக்கியமானது.

நன்னெறிக் கழகம் இன்று அவருக்கு வழங்கியிருக்கும் இந்த விருது அவருடைய எழுத்துக்கும் ஆற்றலுக்கும் அளித்திருக்கும் உற்சாகமும் ஊக்கமும் அவர் எழுத நினைத்திருக்கும் இன்னும் பல நூல்களை எழுத உதவும்.   


கி.ரா.விருது 2026 ஏற்புரை

சக்தி மசாலா நிறுவனம், விஜயா வாசகர் வட்டம் இணைந்து வழங்கும் கி.ராஜநாராயணன் விருது 2026, கடந்த 27.09.2026 ஞாயிறு காலை 10 மணிக்கு கோவை, பீளமேடு, பூ.சா.கோ பொறியியற் கல்லூரியில் நடைபெற்ற சிறப்புமிகு விழாவில் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

விஜயா பதிப்பகத்தின் புனிதவதி சிதம்பரம் வரவேற்புரை வழங்க, சக்தி மசாலா நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் பி.சி.துரைசாமி தலைமையுரை ஆற்றினார். விருதாளர் அறிமுகவுரையை எழுத்தாளர் விக்னேஷ் ஹரிஹரனும், வாழ்த்துரைகளை டாக்டர் சாந்தி துரைசாமியும் எழுத்தாளர் சு.வேணுகோபாலும் வழங்கினார்கள். விருதை வழங்கிச் சிறப்புரையாற்றினார் மாண்பமை உச்சநீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன். 

விஜயா வேலாயுதம், திரைக்கலைஞர் சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், சுகுமாரன், க.மோகனரங்கன், நிர்மால்யா உள்ளிட்டோரும் ஏராளமான வாசகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

விழாவின் நிறைவில் எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய ஏற்புரை.

நன்றி - ஸ்ருதி இலக்கியம்

கி.ரா.விருது 2026 ஏற்புரை 

Monday, 21 September 2026

புத்தகங்களை கைவிடாதீர்

 



( 07 பிப்ரவரி 2026 அன்று தென்காசி புத்தகத் திருவிழாவில் ஆற்றிய உரை )

அனைவருக்கும் வணக்கம்.

புத்தகக் கண்காட்சி மேடையில் வந்து நின்று ‘புத்தகங்களைக் கைவிடாதீர்’ என்று பேசுவதே நகைமுரண்தான்.

இது எல்லாவற்றையும் கைவிடும் காலம், மரங்கள் இலைகளை உதிர்ப்பதுபோல இன்றைய நவீன வாழ்வு எல்லாவற்றையும் உதிர்த்துக் கொண்டிருக்கிறது. சில விஷயங்களை நாம் நமக்குத் தெரிந்தே கைவிடுகிறோம். சில விஷயங்களை நமக்குத் தெரியாமலே கைவிடுகிறோம்.

நாம் எதையெல்லாம் கைவிடுகிறோம்? ஒரு விஷயம் நமக்குத் தேவையில்லை என்றால் அதை நாம் கைவிட்டுவிடுவோம். அதனால் நமக்கு பயனேதுமில்லை என்றால் அதை நாம் வைத்துக் கொள்வதில்லை. உதாரணத்துக்கு, பழைய சைக்கிள் ஒன்று பயன்படுத்தப்படாமலே வீட்டு வாசலில் நிற்கிறது. அது பயன்பாட்டிலேயே இல்லை. என்ன செய்வோம்? தூக்கிப் போட்டுவிடுவோம். பழைய மாடல் செல்போன் நம்மிடம் இருந்தால் அதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அதனால் எந்தப் பயனுமில்லை என்றால் அதை தூக்கிப் போட்டுவிடுவோம். பொருட்களை மட்டுமல்ல, சில சமயம் மனிதர்களையும்தான். நம்முடைய உறவுகள், நட்புகளிலும் இது நடக்கும். அவர்களால் நமக்கு எந்த பயனும் இல்லை என்ற நிலையில் அவர்களை நாம் பொருட்படுத்தமாட்டோம். கண்டுகொள்ள மாட்டோம்.

நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்கும் மன ஆரோக்கியத்துக்கும் ஒவ்வாத காரியங்களை கைவிடுவது நல்லதுதான். ஆனால், அவை இரண்டுக்கும் உதவுகிற சில முக்கியமான காரியங்களை கைவிடுவது நல்லதல்ல. சிந்திக்கத் தெரிந்த யாரும் அப்படியொரு முட்டாள்தனத்தை செய்யமாட்டார்கள். ஆனால், பல சமயங்களில் அவ்வாறான முட்டாள்தனங்களை நாம் செய்துகொண்டிருக்கிறோம்.

திருப்பூரிலிருந்து கோபிசெட்டிப்பாளையத்துக்கு 45 கிலோ மீட்டர் தொலைவு. பேருந்தில் சென்றால் ஒரு மணி நேரம் பிடிக்கும். சில வருடங்கள் பணி நிமித்தமாக திருப்பூரிலிருந்து கோபிக்கு சென்று வர நேர்ந்தது. கோபிச்செட்டிபாளையத்துக்கு சில கிலோ மீட்டர்களுக்கு முன்பு, பவானிசாகர் அணையிலிருந்து கிளைபிரிந்து வரும் காலிங்கராயன் கால்வாயைக் கடந்து செல்ல நேரும். அணை திறக்கப்பட்டு கால்வாயில் நீர் நிறைந்து செல்லும் காட்சி மிக அழகானது. அதன் இருமருங்கும் வயல்களும் தோப்புகளுமாய் பசுமை நிறைந்து கொஞ்சும். நீர்வரத்து இல்லாத நாட்களில் கால்வாய் வறண்டு கிடக்கும். அதுவரை கண்ணில்படாமல் கால்வாயில் கிடந்தவற்றையெல்லாம் பார்க்க முடியும். குறுகிய பாலத்தைக் கடக்கும்போது பேருந்தின் வேகம் குறைந்தபோதுதான் கவனித்தேன், கால்வாய்க்குள் நான்கைந்து ஆட்டாங்கல்கள் கிடந்தன. நமது வீட்டில் மாவாட்ட பயன்படுத்தப்பட்ட ஆட்டுரல்களைவிட அளவில் சற்று பெரியவை. கிராமங்களில் அப்படிப்பட்ட அளவில் பெரிய ஆட்டுரல்களைப் பார்த்திருக்கிறேன். இப்போது பயன்பாட்டில் இல்லாத அவற்றை என்ன செய்வது என்று தெரியாமல் கால்வாய்க்குள் கொண்டு வந்து போடப்பட்டிருந்தன. வீட்டுக்கு வீடு மாவரைக்கும் இயந்திரங்கள் விதவிதமாய் இருக்கும்போது ஆட்டுரல்களுக்கு என்ன வேலை?

கைவிடப்பட்டு கால்வாயில் போடப்பட்டிருந்த ஆட்டுரல்கள் எண்ணற்ற கேள்விகளை எழுப்பின. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் பாலத்தைக் கடக்கும்போது அவற்றை தவறாமல் பார்த்தபடியே சென்றேன். கைவிடப்பட்ட இந்த ஆட்டுரல்களைக் கண்டபோது நாம் எதையெல்லாம் கைவிட்டிருக்கிறோம் என்ற எண்ணம் எழுந்தது.

பள்ளிக்கூடத்திலிருந்து தொடங்கலாம். இன்று பள்ளிக்கூடப் பிள்ளைகள் சிலேட்டுகளை பயன்படுத்துகிறார்களா தெரியவில்லை. எழுதி எழுதி அழித்து அழித்து எழுத்து சரியாக வரும் வரை சிலேட்டுகளே நமக்கு எழுதிப் பழகும் குட்டிக் கரும்பலகையாக இருந்தன. அதன் பிறகுதான் குறிப்பேடுகளில் எழுதலானோம். இப்போது பேனாவைப் பிடித்து எழுதும் பழக்கமே அருகிவிட்டது. நேரடியாக ஆட்காட்டி விரல், கட்டை விரல்கொண்டு திறன்பேசியில் எழுத்துக்களைக் கொத்தி எழுதுகிறோம். இளம் எழுத்தாளர்கள் பலர் பெரிய நாவல்களைக்கூட இன்று திறன்பேசியில்தான் எழுதுகிறார்கள். ஆக, சிலேட்டுகளை நாம் கைவிட்டுவிட்டோம்.

எனக்குத் தெரிந்து இன்று யாரும் வாய்பாடுகளை மனப்பாடம் செய்வதில்லை. மனப்பாடம் செய்யச் சொல்லி பள்ளிகளில் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாகவும் தெரியவில்லை. ஒருகாலத்தில் பதினாறாம் வாய்பாடு வரை தலைகீழாகத் தெரியாவிட்டால் அவனுக்கு கணக்கு வராது என்றே முடிவுகட்டி விடுவார்கள். வாய் பாடுகள் இன்று அச்சில் இல்லை என்று நினைக்கிறேன். வாய்பாடுகள் இல்லாதபோது மனக் கணக்கிடும் திறனைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது. வாய்பாடுகளும் கைவிடப்பட்டுவிட்டன.

கைவிடப்பட்டவற்றில் முக்கியமான அடுத்த விஷயம் அகராதிகள். லிப்கோ அகராதியைப் பயன்படுத்திய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பலரும் அதன் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். இன்று அதற்கான அவசியமே இல்லை என்பதுபோன்ற மனநிலை உருவாகிவிட்டது. பதினொன்றாம் வகுப்பில் எனக்கு  ஆங்கிலம் கற்பித்தவர் பாதர் பங்குராசு. அவருடைய வீட்டுப் பாடமே தினமும் அகராதியைப் பார்த்து ஐந்து வார்த்தைகளுக்கு பொருளையும், அச் சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களையும் எழுதிக் கொண்டு வருவதுதான். சொற்கிடங்கு இன்று மிகச் சொற்பமாகச் சுருங்கிக் கிடக்கக் காரணம் நாம் அகராதிகளைக் கைவிட்டதுதான். இதற்கேற்ப இன்றைய திறன்பேசி செயல்கள் நாம் வார்த்தையைத் தட்டச்சு செய்வதற்கு முன்பே அந்த சொல்லை முன்னுணர்த்தி கொடுத்துவிடுகிறது. சில சமயங்களில் தவறான சொல்லையும். அதையும்கூட நாம் கவனிப்பதில்லை. அகராதிகளும் கைவிடப்பட்டவற்றின் பட்டியலில் சேர்ந்துவிட்டது.

வரலாறு, பூகோளப் பாடங்களின் ஒரு பகுதியாக வரைபடங்கள் இருந்தன. நாடுகள், கண்டங்கள், மாநிலங்கள், தலைநகரங்கள், முக்கியமான நகரங்கள், ஆறுகள், மலைகள், சமவெளிகள், பெருங்கடல்கள் போன்றவற்றை வெற்று வரைபடங்களில் குறிப்பது வினாத்தாளின் ஒரு பகுதி. அட்லஸ் எனப்படும் வரைபடப் புத்தகங்களை பெரும்பாலோர் வைத்திருந்தனர். அதிலுள்ள நகரங்கள், ஆறுகள், மலைகள், கடல்களைக் கண்டுபிடிக்கும் விளையாட்டுகளும் உண்டு. நாடுகளின் பெயர்களைச் சொன்னால் தலைநகரங்களின் பெயர்கள், அவற்றின் கொடிகள், பணத்தின் பெயர் போன்றவற்றை சொல்லும் போட்டி விளையாட்டும் உண்டு. பள்ளிகளில் தலைமை ஆசிரியரின் மேசையில் பூமிப் பந்து சுழன்றபடி இருக்கும். வசதியான மாணவர்களில் சிலரது வீட்டிலும் அதுபோன்ற பூமிப் பந்துகள் உண்டு. இன்று அந்த வரைபடங்களும் பூமிப்பந்துகளும் தேவையில்லாமல் போயின. தேவையில்லாமல் போயின என்பதன் பொருள் எல்லோரும் பூமிப் பரப்பை அட்ச ரேகை, தீர்க்க ரேகை அளவுடன் துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறோம் என்பதா? இல்லை, எதையும் எந்த நேரத்திலும் இணையத்தில் தேடிக் கொள்ளலாம் என்ற வசதிதான். தொலைவில் உள்ள தேசத்தின் தட்பவெப்ப நிலை என்ன, ஈரப்பதம் என்ன என்றுகூட நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ளமுடியும். தகவல்கள் எதையும் விரல் நுனியில் வைத்திருக்கும் காலம் போய் உள்ளங்கையில் ஒரு சொடுக்கில் அறிந்துகொள்ளும் வாய்ப்பு இன்றுள்ளது. இந்த வாய்ப்பின் காரணமாக நாம் வரைபடங்களையும் பூமிப் பந்துகளையும் கைவிட்டுவிட்டோம்.

இதன் அடுத்த கட்டம்தான் வழிகாட்டிகள். நம்மில் பல பேருக்கு நினைவிருக்கும். புதியவர்கள் யாராவது நம் வீட்டுக்கு வருவதென்றால் அடையாளம் சொல்வோம். ‘மூணாவது தெருவுல திரும்புனதுமே தண்ணித் தொட்டி நிக்கும். அதுக்கு எதுத்தாப்பல வர்ற சந்துல வந்தீங்கன்னா ஒருத்தர் துணி தேச்சுட்டு இருப்பார். அங்கேர்ந்து மூணாவது வீடு கெழக்குப்பாத்த மாதிரி. வீட்டு வாசல்ல செம்பருத்திச் செடி நிக்கும்’. இப்படிப்பட்ட அடையாளங்களை, ‘லேண்ட்மார்க்’களை வைத்து அந்த இடத்தை, முகவரியை, வீட்டை நாம் நினைவில் வைத்துக்கொள்வதுண்டு. புதிய ஊருக்குள் முதல்முறையாகப் போகும்போது இப்படிப்பட்ட லேண்ட்மார்க் களை நினைவில் வைத்துக் கொண்டால் மறுமுறை போகும்போது எளிதாக இருக்கும் என்பது ஊர்ச்சுற்றிகளுக்கான பாலபாடம். ஆனால், இன்று இதுபோன்ற ஆற்றல்களுக்கு, திறன்களுக்கான தேவை கிடையாது. எந்தவொரு இடத்துக்குப் போவது என்றாலும் இன்று கைபேசியிலுள்ள வழிகாட்டிச் செயலியில் போக வேண்டிய இடத்தைச் சொன்னால், குறைந்த நேரத்தில் சென்று சேரக் கூடிய பாதையைக் காட்டிவிடுகிறது. அது காட்டுகிற பாதையைத் தொடர்ந்து போனால் அடைய வேண்டிய இடத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடும். எனவே, பாதையை நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றலையும் கைவிட்டுவிட்டோம்.

சிலேட்டுகள், வாய்பாடுகள், வரைபடங்கள், பூமிப்பந்துகள், அகராதிகள் என்று நான் சொன்னவை எதுவுமே இன்று தேவையில்லை. ஆப்புகள் என்று சொல்லப்படும் செயலிகளின் வழியாக திறன்பேசிகளின் வாயிலாக இவற்றைத் தெரிந்து கொள்ள முடியும். வேகமாகவும் மிகத் துல்லியமாகவும்.  இது நல்லதுதானே. இதில் என்ன குறை கண்டு பிடிக்க முடியும். அதிவேகமாக இவை நமக்குத் தேவையானவற்றைத் தரும்போதே இதில் பிரச்சனை என்ன இருக்கிறது? இவற்றை கைவிட்டுவிட்டதால் என்ன குறைந்து போயிற்று? என்று இன்றைய தலைமுறை மட்டுமில்லை, நமக்கு நாமேகூட இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்ள முடியும்.

இந்தச் செயலிகள், திறன் பேசியின் சில வசதிகள் என்ன செய்கின்றன என்று யோசித்துப் பார்க்கலாம். நமக்கு அவசியமான இந்தத் தகவல்களை உடனடியாகவும் நமக்குத் தேவையானபோதும் தருவதன் காரணமாக எதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் போகிறது. நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியதில்லை என்றால் நினைவில் எதையும் நாம் சேர்த்து வைத்துக் கொள்வதில்லை. ஞாபகத்திறன் என்பது மூளையின் முக்கியமான பகுதி. முன்பே சொன்னதுபோல பெயர்களை, பொருட்களை, இடங்களை, பாடங்களை, சமன்பாடுகளை, கணக்கு பார்முலாக்களை ஞாபகத்தில் எப்போதும் வைத்திருக்கும் திறனை நாம் மெல்ல மெல்ல சமரசம் செய்து கொள்கிறோம். இதன் காரணமாக நம்முடைய மூளையின் குறிப்பிட்ட திறன் நரம்புகள் வேலையில்லாமல் சோம்பேறித்தனமாக தூங்கிவிடுகின்றன. மழுங்கிவிடுகின்றன. செயலிகள், திறன்பேசிகளின் இணையத் தேடு பொறிகள் நமது ஞாபகப் பெட்டகத்தை கைவிடச் செய்கின்றன. ஞாபகத் திறனை கைவிட்டுவிட்டு நாம் தகவல் பொறிகளையே கையில் வைத்திருக்கிறோம். அதன் பலனாக நமது சொந்த வீட்டுக்கே நாம் வழிகாட்டிச் செயலியின் உதவியுடன்தான் வந்து சேர முடிகிறது.   

இப்படி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக கைவிட்டுவிடும் வாய்ப்பை, வசதியை இன்றைய நவீன செயலிகளும் திறன்பேசிகளும் நமக்கு அளிக்கின்றன. இவற்றையெல்லாம் நாம் கைவிடுகிறோம் என்ற   உணர்வே இல்லாமல் அவற்றை செய்யுமளவுக்கு இவை நம்மை ஆக்கிரமித்திருக்கின்றன. இன்றைய நிலையில் நம்மில் எவருமே கைபேசியில்லாமல், திறன்பேசியில்லாமல் ஒரு நாள்கூட இருக்க முடியாது என்பதுதான் உண்மையிலும் உண்மை. சிறிது நேரம் நம்முடைய அலைபேசி நம் கையில் இல்லாமல் போனால் நமக்குள் ஏற்படும் பதற்றத்தையும், உண்டாகும் நிம்மதியின்மையையும் அனைவரும் அனுபவித்திருப்போம்.

நினைவாற்றல், சிந்தனை, பகுத்தறியும் ஆற்றல், புலன் கூர்மை, சொற்கிடங்கை வளப்படுத்துதல் என்று நாம் திறன்பேசிகளின், செயலிகளின் பெயரில் சமரசம் செய்துகொள்ளும், கைவிட்டிருக்கும் அனைத்தையும் தரக்கூடிய ஒன்றை, ஒரு அபூர்வத்தை, அதிசயத்தை மெல்ல மெல்ல ஒதுக்கத் தொடங்கியிருக்கிறோம் என்பது இந்த காலகட்டத்தின் மாபெரும் துயரம். இன்னும் பெரிய துக்கம் என்னவென்றால் அவ்வாறு ஒன்றை ஒதுக்குகிறோம் என்பதே நம் சுரணைக்கு எட்டவில்லை என்பது.

நான் எதைச் சொல்கிறேன் என்பது இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

ஆமாம், இந்த எல்லா திறன்களையும் ஒன்றாக தரும் அந்த அதிசயம் புத்தகம்தான்.

வாசிப்புப் பழக்கம் மூளையின் பல ஆற்றல்களை, திறன்களை ஒருங்கிணைத்துத் தரும் அபாரமான ஒரு பழக்கம். ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது புலன்கள் அனைத்தும் கூர்மை பெறுகின்றன. கண்கள் புத்தகத்திலுள்ள எழுத்துகளை காண்கின்றன. மூளை நரம்புகள் கண்களிலிருந்து வரும் சமிக்ஞைகளை வாங்கி எழுத்துகளை ஒன்று சேர்த்து சொல்லாக மாற்றித் தருகின்றன. பிறகு அந்தச் சொல்லுக்கான பொருளை நம்முடைய சொற்கிடங்கிலிருந்து எடுத்துத் தருகின்றன. சொற்களும் வாக்கியங்களும் அவற்றுக்கான பொருளும் சேர்ந்து நமக்குள் ஒரு அனுபவத்தைத் திரட்டித் தருகின்றன. வாசிக்கும்போது கண்களும் மூளையும் மட்டும் வேலை செய்வதில்லை. காதுகளில் ஒலியும் ஓசையும் விழுகிறபோதும் அவை நமது கவனத்தைத் திசைதிருப்புவதில்லை. உடல் வாசிப்பதற்கான சரியான கோணத்தில் வசத்தில் தன்னை இருத்திக் கொள்கிறது. எனவே வாசிப்பு என்பது மூளைக்கான பயிற்சி மட்டுமல்ல,  நம் உடலுக்கான பயிற்சியும்கூட.

உடலை உறுதியுடன் வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டும். மூளையை உறுதியுடன் வைத்துக் கொள்வதற்கான பயிற்சிதான் வாசிப்புப் பழக்கம்.  

 இன்று தெருவெங்கும் ‘ஜிம்’கள் – உடற்பயிற்சி கூடங்கள் முளைத்திருக்கின்றன. எல்லோருக்கும் உடலின் மீதான அக்கறை பெருகியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயந்தான். இன்றைய நமது உணவுப் பழக்கங்களால், உடல் உழைப்பு குறைந்துவிட்டதால் இப்படி கட்டாயமாக உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் வந்துவிட்டது. இன்னும் சில காலத்துக்குப் பிறகு மூளைப் பயிற்சிக்கான ஜிம்கள் இதுபோல முளைக்குமோ என்ற சந்தேகம் வருகிறது.

 ஆனால், யோசித்துப் பார்த்தால் மூளைப் பயிற்சிக்கான அத்தகைய ஜிம்கள் இப்போதே ஒவ்வொரு ஊரிலும் உள்ளன என்பது புரியும். மூளைப் பயிற்சிக்கான அந்த ஜிம்களுக்கு நீங்கள் மாதந்தோறும் செலுத்த வேண்டிய கட்டணம் மிகவும் குறைவு. அங்குள்ள மூளைக்கான உடற்பயிற்சி கருவிகளை விரும்பினால் நீங்கள் வீட்டுக்கே எடுத்துக் கொண்டு போக முடியும். குறிப்பிட்ட தவணைக்குப் பின் திருப்பிக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அவ்வளவுதான்.

மூளைப் பயிற்சிக்கூடங்களுக்கு, ஜிம்களுக்கு இன்னொரு எளிமையான பெயர் உள்ளது. நூலகங்கள் என்று சொல்வோம்.

சரிதானே. மூளைக்கு தேவையான பயிற்சியை புத்தகங்களைக் கொண்டு செய்ய முடியும். எல்லோரும் சொந்தமாக புத்தகங்களை வாங்கிப் படிப்பது சாத்தியமில்லை என்பதற்காகத்தான் அரசாங்கம் எல்லா ஊர்களிலும் நூலகங்களை திறந்து வைத்துள்ளது. ஆண்டுதோறும் புதிய புத்தகங்களை வாங்கித் தருகிறது. நீங்கள் அங்கிருந்தே வாசிக்க விரும்பினால் அதற்கான சூழலை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. வீட்டுக்கு எடுத்து வந்து வாசிக்கும் வாய்ப்பையும் கொடுக்கிறது. நாம் செய்யவேண்டியதெல்லாம் குறிப்பிட்ட இடைவெளியில் நூலகத்துக்குப் போய் அங்குள்ள ஏதேனுமொரு நூலை வாசிக்க முயல்வதுதான்.

இங்கிருக்கும் நாம் நம்முடைய ஊரில் உள்ள நூலகத்துக்கு கடைசியாக எப்போது சென்றோம் என்று யோசித்துப் பார்க்கலாம். 

ஒவ்வொரு ஊரிலும் கிளை நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர, மாவட்டந்தோறும் மைய நூலகங்கள் உள்ளன. சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தைப் போல மாவட்ட தலைநகரங்களில் இப்போது பெரிய அளவில் நூலகங்கள் கட்டப்படுகின்றன. மதுரையில் ஏற்கெனவே திறக்கப்பட்டுவிட்டது. கோவையில் திறக்கப்படவுள்ளது.

மக்கள் நூலகங்களைப் பயன்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கம் இவ்வளவு முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறது. மாவட்டந்தோறும் இதுபோன்ற புத்தகக் காட்சிகளை ஏற்பாடு செய்து மக்களுக்கு புத்தகங்களை வாங்க ஊக்குவிக்கிறது.

ஒருவேளை, இனி வரும் காலத்தில் புத்தகங்களை வாங்கவும்கூட ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு இத்தனை ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வரும் தேர்தலின்போது ஏதேனும் ஒரு கட்சி அறிவித்தால் வியப்பதற்கில்லை.

ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, மண்ணெண்ணை போன்ற அத்தியாவசியப் பொருட்களோடு மாதம் ஒரு புத்தகம் வழங்கப்படுவதும்கூட சாத்தியம்தான்.

பொங்கல் பரிசுப் பொதியில் வெல்லம், கரும்பு, வேட்டி, சேலையுடன் ஒன்றிரண்டு புத்தகங்களையும் சேர்த்து வழங்கலாம்.

 

புத்தகத்துக்கும் வாசிப்புக்கும் ஏன் இத்தனை முக்கியத்துவம் தரவேண்டும் என்று கேட்பீர்கள்.

ஒரு புத்தகம் என்பது வெறும் அச்சிட்ட எழுத்துகளைக் கொண்டதல்ல. அதுவொரு அனுபவம். அதை எழுதிய எழுத்தாளனுக்குள் உள்ள அனுபவத்தையும் எண்ணங்களையும் சொற்களின் வழியாக நமக்குத் தருகிறார்.

விதிக்கப்பட்டுள்ள இந்த வாழ்நாளில் எத்தனை பேரை நாம் சந்தித்துப் பேசிவிட முடியும்? எத்தனை இடத்துக்கு பயணம் சென்று அங்குள்ள அதிசயங்களைப் பார்த்துவிடமுடியும்?

புத்தகங்கள் நம்மை பலரிடம் பேசச் செய்கின்றன. வித்தியாசமான பல மனிதர்களின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றன. உலகின் மூலைகளிலுள்ள பல இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. அங்குள்ள அதிசங்களை நமக்கு நெருக்கமாகக் காட்டுகின்றன.

நம் எல்லோருக்கும் மகாத்மா காந்தியைப் பற்றித் தெரியும். நம் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார் என்பதைத் தாண்டி மகாத்மா காந்தி நமக்கு எத்தனை முக்கியமானவர் என்பது எல்லோருக்குமே தெரியும். விடுதலைப் போராட்டத்தைத் தாண்டி இந்தியர்களின் வாழ்வில் அவர் இன்னும் எத்தனை ஆழமான செல்வாக்கு செலுத்துகிறார் என்பதையும் அறிவோம். இது எப்படி சாத்தியம்? அவரை நேரில் பார்த்தவர்கள், பழகியவர்கள் இன்று பெரும்பாலும் உயிருடன் இருக்கமாட்டார்கள்? அப்படியென்றால் இன்னும் அவரால் எப்படி இத்தனை பெரிய செல்வாக்கை செலுத்த முடிகிறது?

 அவர் எழுதி வைத்திருக்கும் ஒரு புத்தகம்தான் இன்னும் தொடர்ந்து தலைமுறைகளுக்கு அவரை எடுத்துச் சொன்னபடி உள்ளது. ‘என் வாழ்க்கையே நான் சொல்லும் செய்தி’ என்பதுதான் அவரது போதனை.  ‘சத்திய சோதனை’ என்கிற அந்த புத்தகத்தை முழுக்க வாசிக்காவிட்டாலும் அதைப் பற்றி கேள்வியாவது பட்டிருப்போம். அவருடைய வாழ்வின் சில பகுதிகளையேனும் தெரிந்து வைத்திருப்போம். படித்தவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம்.

காந்தியை மையமாக கொண்ட திரைப்படங்கள் நிறைய இருந்தாலும் எத்தனை பேர் அவற்றைப் பார்த்திருக்கிறார்கள் என்பது கேள்விதான்.

சத்திய சோதனை என்கிற அந்தப் புத்தகமும், பள்ளிக்கூட பாடங்களில் அவரைப் பற்றிய செய்திகளும்தான் நம் நினைவில் காந்தயை ஆழமாகவும் காலங்கடந்தும் பதித்து வைத்திருக்கின்றன. அவரைப் பற்றி சில செய்திகளையாவது நினைவில் வைக்க உதவியுள்ளன.

 

மனித மூளையின் ஆற்றல்களில் முக்கியமானவை கற்பனையும் சிந்தனையும். கற்பனை, சிந்தனை இவற்றின் வழியாகத்தான் எல்லா அறிவுத்துறைகளுமே தோன்றி வளர்ந்துள்ளன. மனித நாகரிகமும் அறிவியலும் கலையும் இத்தனை உயரங்களை இன்று அடைந்துள்ளன. கற்பனையின், சிந்தனையின் பலன்களாகவே இன்றைய நவீன வாழ்க்கை அமைந்திருக்கிறது. இந்த ஆற்றல்களை – கற்பனையையும் சிந்தனையையும் வற்றாமல் ஊற்றெடுக்கச் செய்வது வாசிப்புப் பழக்கமே. நம் மூளையின் ஆற்றலை, கற்பனைத் திறனை, சிந்தனை வளத்தை புத்தக வாசிப்பு சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறது.

பெரும் சாதனையாளர்கள் – விஞ்ஞானிகள், கலைஞர்கள் – தீவிரமான வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள்.

நாம் வாசிக்கும் ஒரு சொல், வாக்கியம் நமக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிது. அந்த சொல் மேலும் பல புதிய திறப்புகளை ஏற்படுத்துகிறது. அதுவே எழுதவும் கலைகளை உருவாக்கவும்  கண்டுபிடிப்புகளைத் தரவும் உதவுகிறது.

எனவே, கற்பனைத் திறனை மேம்படுத்தவும் சிந்தனை வளத்தை கூராக்கவும் சிறு பருவத்திலிருந்தே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது முக்கியமாகும். பள்ளிப் புத்தகங்களைப் படிப்பது வேறு. புத்தக வாசிப்பு என்பது வேறு என்பதை நம் குழந்தைகளுக்கும், முக்கியமாக பெற்றோர்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.

வாசிப்பின் வழியாக வே நம் மொழியை நாம் வளப்படுத்திக்கொள்ள முடியும். அந்த மொழியின் வழியாகவே சிந்தனை என்பது உருவாகும், பலம் பெறும்.

இன்று நம் குழந்தைகளின் சிந்தனை மொழி எது என்று ஒருமுறை நிதானமாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் குழந்தையிடம் நேரடியான ஒரு தமிழ்ச் சொல்லை சொல்லிப் பாருங்கள். உடனடியாக அச் சொல்லை அது புரிந்து கொள்ளாது. அந்த சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்லை நீங்கள் சொன்னவுடன் கண்மலர தலையாட்டிப் புரிந்து கொள்ளும். உதாரணமாக, ‘மயில்’ என்று சொன்னால் அது முழித்துக்கொண்டு பார்க்கும். அதுவே ‘பீகாக்’ என்று சொன்னவுடன் புரிந்துகொண்டு தலையாட்டும்.

என்றால் இப்போது அந்தக் குழந்தையின் சிந்தனை மொழி எது? தமிழா, ஆங்கிலமா?

இங்கே நாம் மொழியைப் பற்றி பேசவில்லை. தமிழோ ஆங்கிலமோ இந்தியோ கன்னடமோ எது வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் ஏதேனும் ஒரு மொழியை, குறிப்பாக தாய்மொழியை, திருத்தமாக பேசவும் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். அந்த மொழியின் வழியாகவே அதன் சிந்தனை மொழியும் உருவாகும். மொழியில் தெளிவில்லாதபோது, குழப்பம் இருக்கும்போது சிந்தனையிலும் தெளிவிருக்காது. எனவேதான, குழந்தைகளின் சிந்தனை மொழியை சரியாக உருவாக்க அவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது மிக முக்கியம், கட்டாயம்.  

இந்தப் பழக்கத்தை குழந்தைகளிடம் உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் பள்ளிக்கூடங்களிடமும் அரசாங்கத்திடமும் உள்ளது.

‘தினம் ஒரு புத்தகம்’ என்ற திட்டத்தை பள்ளிக்கூடங்களில் அறிமுகப்படுத்தலாம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலைக் கண்ணில் காட்டலாம். அந்த நாள் முழுக்க அந்தப் புத்தகம் அந்தக் குழந்தையுடனே இருக்கட்டும். அந்த எழுத்தாளனின் படத்தை பார்க்கட்டும். சற்று பெரிய குழந்தைகளை, நூலகத்துக்காக ஒரு குறிப்பிட்ட காலவேளையை ஒதுக்கி அங்கே நேரம் செலவிடச் செய்யலாம். இதனால் நூல்களை, எழுத்தாளர்களை, வாசிப்பைக் குறித்த ஆர்வத்தை அவர்களிடையே ஏற்படுத்த முடியும்.

கர்நாடகாவில் ஹம்பி என்ற தொன்மையான நகரம் உள்ளது. விஜயநகரப் பேரரசின் கனவுத் தலைநகரம். துங்கபத்திரை நதிக் கரையில உள்ளது. அடிக்கடி அங்கே செல்வதுண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குள் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடம் இருந்தது. நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு மிக அருகில் இருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சுவர் முழுக்க உருவப் படங்கள் வரையப்பட்டிருந்தன. அதிலிருந்த எல்லா முகங்களுமே ஏற்கெனவே எங்களுக்கு அறிமுகமானவை. வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அங்கிருந்த உருவங்கள் அனைத்துமே கன்னட மொழியின் புகழ் பெற்ற எழுத்தாளர்கள். சிவராம் கரந்த், யு ஆர் அனந்தமூர்த்தி, மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், கிரிஷ் கர்நாட், எஸ் எல் பைரப்பா உள்ளிட்ட எழுத்தாளர்களின் படங்களே வரையப்பட்டிருந்தன.

ஆரம்பப் பள்ளி மாணவர்கள் தினமும் எழுத்தாளர்களின் முகங்களைப் பார்க்கிறார்கள். சிறு வயதிலேயே எழுத்தாளர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். இதன் மூலமாக அவர்கள் எழுதியவற்றை மாணவர்கள் தேடிப் போகும் வாய்ப்பை ஏற்படுத்துகிறார்கள். இதுதான் பள்ளிக்கூடங்களும் அரசாங்கமும் செய்ய வேண்டியது. இப்படித்தான் ஒரு சமூகத்தின் சிந்தனையை, வேர்களை நம்மால் பலப்படுத்த முடியும்.

ஆரோக்கியமான ஒரு பள்ளிக்கூடத்தில் இரண்டு இடங்கள் வெறிச்சோடி இருக்கக் கூடாது. ஒன்று, மைதானம்.

பள்ளி மைதானத்தில் கூச்சலிட்டபடி மகிழ்ச்சியுடன் மாணவர்கள் பெருமளவில் விளையாடுகிறார்கள் என்றால் அந்தப் பள்ளியில் ஆரோக்கியமான ஒரு தலைமுறை உருவாகிறது என்று பொருள்.

வெறிச்சோடிக் கிடக்கக் கூடாத இன்னொரு இடம் ‘நூலகம்’.

எந்தவொரு பள்ளிக்கூடம், தம் மாணவர்களுக்கு நூலகத்தைத் திறந்து வைத்து அங்கே புத்தகங்களை எடுக்கவும் வாசிக்கவும் நேரம் செலவிடவும் அனுமதிக்கிறதோ அந்தப் பள்ளி சிந்தனைத் திறம்கொண்ட கற்பனை வளம்கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்குகிறது என்று பொருள்.

எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் நல்ல நூலகமும் நூலகத்தின் ஆற்றலைப் புரிந்துகொண்ட நூலகரும் மிக முக்கியமான அம்சங்கள்.

வாசிப்புப் பழக்கம் இல்லாதபோது குறையும்போது நாம் முதலில் இழப்பது நம்முடைய மொழியை. மொழியை இழக்கும்போது நாம் சிந்தனையை இழப்போம். சிந்தனை இழப்பு என்பது பண்பாட்டை இழக்கச் செய்யும். பிறகு நம்மையே நாம் இழந்துவிடுவோம்.

மொழியைப் பாதுகாக்க, சிந்தனையைப் பாதுகாக்க, பண்பாட்டைப் பாதுகாக்க, நமது உடல், மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வாசிப்பது அவசியம்.  

புத்தகங்கள்தான் நம்முடைய வாழ்க்கைக்கான அடிப்படை மதிப்பீடுகளை, அறங்களை, விழுமியங்களை நமக்குள் விதைக்கின்றன.

திருக்குறளும் ராமாயணமும் மகாபாரதமும் சிலப்பதிகாரமும் சொல்லிக் கொடுத்துள்ள அற மதிப்பீடுகளைத்தான் இன்றும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். விவாதிக்கிறோம். அந்த அற மதிப்பீடுகளை எத்தனை தூரம் நாம் கடைபிடிக்கிறோம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அவற்றிலிருந்து விலகிப் போகவோ அவற்றை மறுக்கவோ இன்னும் இந்த சமூகத்தில் தயக்கம் இருக்கவே செய்கிறது.

புத்தகம் வாசிக்கக் கூடியவரென்றாலும்கூட அவரால் உலகின் எந்த மூலையில் எழுதப்பட்டிருக்கும் ஒரு படைப்பையும் படித்துவிட முடியும். அந்தக் கலாச்சாரத்தின் கூறுகளை அறிந்து கொள்ள முடியும். ஒரு இனக்குழுவின் வாழ்க்கைப் பழக்கங்கங்களை, முறையைத் தெரிந்து கொள்ள முடியும்.

நம் கையில் அலைபேசியை வைத்திருப்பதுபோல ஒரு புத்தகத்தையும் வைத்திருக்க வேண்டும். பயணத்தின்போது, வெளியில் செல்லும்போது விருப்பமான ஏதேனுமொரு புத்தகம் கையில் இருக்க வேண்டும். எங்கேனும் காத்திருக்கும்போது ஒன்றிரண்டு பக்கங்களை படிக்கலாம். வீட்டில்கூட புத்தகங்கள் எல்லா இடங்களிலும் இருக்கவேண்டும். உணவு மேசையில் ஒன்று, கூடத்தின் வரவேற்பு மேசையில் சில புத்தகங்கள், அலமாரியில் புத்தகங்கள் என்று எல்லா இடத்திலும் ஏதேனும் ஒரு புத்தகம் கண்ணில்படும்படி இருக்க வேண்டும். நம்முடைய திறன்பேசிகளுக்கு அவ்வப்போது மின்னாற்றலை ஏற்றுவதுபோல, புத்தகங்களின் சில வரிகளை, பக்கங்களை வாசித்து நமக்கு வாய்த்துள்ள திறன்களை அவ்வப்போது வீரியம் குறையாமல் பாதுகாத்துக் கொள்வது முக்கியம்.

ஒவ்வொரு புத்தகமும் ஒரு சார்ஜர்போல. சார்ஜர் இல்லாமல் திறன்பேசி வேலை செய்யாது என்ற பதற்றம் இருக்குமில்லையா? புத்தகத்தை வாசிக்காமல் போனால் நம்முடைய மூளைத் திறன்களும் மழுங்கிவிடும் என்ற உணர்வும் எச்சரிக்கையும் இருப்பது முக்கியம்.

புத்தகங்கள் என்றால் பாடப் புத்தகங்கள் மட்டுந்தான் என்ற எண்ணத்தை தயவுசெய்து பிள்ளைகளை நம்ப வைத்துவிடாதீர்கள். ஒரு தலைமுறைக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய துரோகம் அது.

நம் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை நல்ல எதிர்காலத்தை உறுதிசெய்யவே அனைவரும்  ஆசைப்படுகிறோம்.உழைக்கிறோம். நம் சக்திக்கு மீறி செலவு செய்கிறோம். அதை உறுதிப்படுத்துவது நம் கடமை. அதேயளவுக்கு முக்கியமான இன்னொரு தவிர்க்க முடியாத கடமை, அவர்களை பள்ளிப் பாடங்களுக்கு வெளியே, பாடப் புத்தகங்களுக்கே வெளியே உள்ள புத்தகங்களை அறிமுகம் செய்வதும், வாசிப்பை ஒரு பழக்கமாக அவர்களிடத்தே வளர்த்தெடுப்பதும் உங்களது முக்கியமான கடமைகளில் ஒன்று.

புத்தகங்களுக்கு வீட்டில் இடம் வேண்டும். அவை மிக அத்தியாவசியமானவை என்ற நம்பிக்கை வேண்டும். அடுத்தடுத்த தலைமுறைகளிடம் புத்தகங்களும் வாசிப்புப் பழக்கமும் நாம் யோசிக்கவே முடியாத பெரும் மாற்றத்தை நிச்சயமாக ஏற்படுத்தும்.

எனவே, புத்தகங்களை கைவிடாதீர்கள்.

புத்தகங்கள் என்றால் காகிதங்களில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. காலந்தோறும் புத்தக வடிவிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆதி காலத்தில் பனையோலைகளில் எழுதப்பட்டன. பின்பு அவை துணியில் எழுதப்பட்டன. காகிதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் மைதொட்டு எழுதும் பழக்கம் வந்தது. அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நூல்கள் அச்சிடப்பட்டன.

இன்று புத்தகங்களும் மின் வடிவத்தில் கிடைக்கின்றன. கிண்டில் சாதனங்களின் மூலம் எண்ணற்ற நூல்களை சேமித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு கிண்டிலும் ஒரு சிறிய நூலகம் என்றே சொல் முடியும். விருப்பத்துக்கேற்ப படிக்கலாம். பல வசதிகளையும் அது நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. அது மின் புத்தகம். எனவே, இன்றைய தலைமுறையினர் புத்தகங்களைத் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியமில்லை. சிறிய ஒரு கையடக்கக் கருவியின் வழியாக புத்தகம் வாசிக்கும் அனுபவத்தைப் பெற முடியும்.    

எனவே, புத்தகங்கள் என்றால் அச்சுப் புத்தகங்கள் மட்டுமல்ல. மின் புத்தகங்களுந்தான். புத்தகத்தை எதில் படித்தாலும் சரி. படிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

இந்த நேரத்தில் நமது முப்பாட்டன் உ வே சாமிநாதய்யரை நினைத்துப் பார்ப்போம். ஊர் ஊராக அலைந்து தேடி தமிழின் பழஞ்செல்வங்களைத் திரட்டுவதே அவரது வாழ்க்கையாக அமைந்தது. எங்கெங்கோ கேட்பாரற்று பரணிலும் அடைபட்ட அறைகளில் துணி மூட்டைகளிலும் பாழடைந்த பழம்பெட்டிகளிலும் கேட்பாரற்று கிடந்த ஓலைச் சுவடிகளையும் அந்த மனிதர் சேகரித்துத் தொகுத்திராவிட்டால் பழந்தமிழ் இலக்கியங்களை நாம் அறிந்திருக்க முடியாது. அந்த மகத்தான மனிதரை இன்று நாம் பெருநன்றியுடன் நினைத்துக் கொள்ளவேண்டும்.

தமிழில் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்து, தரங்கம்பாடியில் அச்சுக்கூடத்தை நிறுவி தமிழின் முதல் அச்சு நூலைப் பதிப்பித்த சீகன் பால்கு ஐயரை நாம் நன்றியுடன் நினைத்துக் கொள்வோம்.

நூலகத் தந்தை என்று அறியப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதனை நினைத்துப் பார்க்கலாம். இன்று நம் நூலகங்களில் உள்ள நூல் தொகுப்பு முறையை உருவாக்கியவர். அவர் நமக்களித்த கொடையைத்தான் இன்று நாம் அனுபவதித்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் நன்றியுடன் நினைத்துப் பார்க்கவேண்டிய இன்னொரு முக்கியமான ஆளுமை சக்தி வை கோவிந்தன். பதிப்புலகின் தந்தை என்று அறியப்படுபவர். தமிழில் நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் காரியத்தைத் துணிந்து மேற்கொண்டவர். தரமான புத்தகங்களை அச்சிட்டு நியாயமான விலையில் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யவேண்டும் என்ற கனவுடன் பதிப்புத் தொழிலைத் தொடங்கியவர். 

இவர்கள் அனைவரும் சேர்ந்து நமக்கு அளித்துள்ள அரும்பொருள் புத்தகங்கள். இன்று நம் கையில் வைத்திருக்கிற, கண்ணில் பார்க்கிற ஒவ்வொரு புத்தகத்துக்குப் பின்னாலும் இவர்களது உழைப்பின் சாரம் உறைந்துள்ளது என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தாத உறுப்புகள் மெல்ல மனித உடலின் பரிணாமத்திலிருந்து நீங்கிவிடும் என்பதை அறிவோம். ஆதியில் வாலுடன் இருந்த மனிதன் பரிணாம வளர்ச்சியில், அதன் பயன்பாடின்மையின் காரணமாக, உடலிலிருந்து நீங்கிவிட்டதாகப் படித்திருப்போம்.

புத்தகங்களையும் நூலகங்களையும் பயன்படுத்தாது போனால், அவற்றை நாம் கைவிட்டுவிட்டால் நாம் இழக்கப்போவது நமது மூளையின் ஆற்றல்களை, திறன்களை. பயன்படுத்தப்படாத அந்த பகுதிகள் மெல்ல மெல்ல நீங்கும் அபாயம் உள்ளது.

புத்தகங்களை கைவிடுதல் என்பது நம் சிந்தனையை கைவிடுவது. நம் நினைவாற்றலை கைவிடுவது. நம் தலைமுறையை கைவிடுவது.

எனவே, புத்தகங்களைக் கைவிடாதீர்கள்.

 

 

Thursday, 17 September 2026

காலம் செதுக்கிய பெயர் - க.ரத்னம்

 



அகவையும் அனுபவமும் கனிந்த அறிஞர், பேராசிரியர், முனைவர்.க.ரத்னம் அவர்களுக்கு 2026ஆம் ஆண்டு கோயமுத்தூர் புத்தகத் திருவிழாவில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. அவருக்கு வயது 94. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலத்தில் தமிழகத்தில், மக்கள் வாழ்வில், அரசியலில், இலக்கியத்தில், கல்விப் புலத்தில் நடந்த மாற்றங்களுக்கான நேரடி சாட்சி.

க.ரத்னம் கோவையில் கீரணத்தம் கிராமத்தில் பிறந்தவர். அந்த கிராமத்துக்கு அருகில் ஒன்று குன்று உண்டு. இரத்தினகிரி என்ற அந்த குன்றுதான் இவருக்கு ரத்னம் என்று பெயரிடக் காரணமானது. புகழ்பெற்ற ‘கல்லும் மண்ணும்’ நாவல் இந்தக் குன்றின் பின்னணியில்தான் எழுதப்பட்டது.

கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அதிக நாட்கள் அவர் கிராமத்திலோ வீட்டிலோ வசிக்கவில்லை. எட்டாம் வகுப்பு படிக்கும்போதே வீட்டை விட்டு வெளியே தங்கிப் படிக்க வேண்டிய சூழ்நிலை. படித்து பட்டம் பெற்று பணியிலிருந்த காலங்களிலும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வேலை பார்த்திருக்கிறார். சிறுவனாக இருந்தபோதிலிருந்தே வாழ்க்கை இழுத்துச் செல்லும் வழியில் சென்றிருக்கிறார். இடம் கிடைத்த பள்ளியிலும் கல்லூரியிலுமாக கிடைத்த பட்டப் பிரிவிலேயே சேர்ந்து படித்திருக்கிறார். இதுதான் வேண்டும் என்று திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை.

அவருடைய தந்தை அவரை ஒரு பொறியாளராக்கவே விரும்பினார். தந்தையார் ஒரு ஆசிரியர். ஐந்தாம் வகுப்பு வரைப் படித்து ஆசிரியப் பயிற்சி பெற்று பணியிலிருந்தவர். ஆனால், அவர் விவசாயத்தை கவனிக்கவில்லை என்பதற்காக அப்பச்சி அவருடைய சான்றிதழைக் கிழித்துப் போட்டு ஏர்பிடிக்க வைத்தார். அந்த கோபத்தினாலோ என்னவோ தன் மகனை அவர் படிக்கவைக்க வேண்டுமென முடிவெடுத்தார். ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும் என்பதில் குறிப்பாக இருந்தார்.

ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆரம்பக் கல்வியை குரும்பப்பாளையத்திலும்,.  ஆறு முதல் எட்டு வரை இடிகரை நடுநிலைப் பள்ளியிலும் ஒன்பது முதல் பனினொன்று வரை கோவை மைக்கேல்ஸ் பள்ளியிலும் படித்து முடித்தார். கோவை அரசு கலைக் கல்லூரியில் இன்டர்மீடியட். இலக்கணம் வரலாறு உள்ளிட்ட நான்காவது பிரிவில் படித்தார்.  

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ ஹானர்ஸை முடித்த கையோடு சில மாதங்களிலேயே 1955ஆம் ஆண்டு கோவை அரசு கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியில் அமர்ந்தார். அதன் பிறகு இராமநாதபுரம், கும்பகோணம், முசிறி, தஞ்சாவூர் உள்ளிட்ட கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிந்து 1999ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். 



கும்பகோணத்தில் வசித்த காலம், அவரது வாழ்வில் பல முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்திய காலம். அப்போதுதான் கதைகளை எழுதத் தொடங்குகிறார். பத்திரிகைகளுக்கு அனுப்புகிறார். 1961 ஆம் ஆண்டு ‘தாத்தா எங்கே போகிறார்’ என்ற முதல் கதை ஆனந்தவிகடனில் வெளியாகிறது. தொடர்ந்து கதைகள் தீபம், குமுதம், குங்குமம், அமுதசுரபி போன்ற இதழ்களில் வெளியாகின்றன.

1962ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் தமிழ்ப் புத்தாண்டு மலரில் முத்திரை கதையாக ‘விளையாட்டு மைதானம்’ வெளிவருகிறது.  விகடனில் ஜெயகாந்தனின் கதைகள் முத்திரைக் கதைகளாக வெளிவந்த காலம் அது.

தொடர்ந்து கதைகள் வெளியாகும்போது அதைத் தொகுப்பாக்கிப் பார்க்கலாம் என்று ஆசை வருவது இயல்புதான். சென்னையில் முல்லை முத்தையாவின் தமிழகம் பதிப்பகம், பதிப்புத் தொகையாக ரூ.500ஐ பெற்றுக்கொண்டு அவரது முதல் வசன கவிதைத் தொகுப்பு ‘பேதை நெஞ்சம்’ வெளியிட்டது.  ஆனந்தவிகடனில் வெளியான 80 உருவகக் கதைகளைக் கொண்ட 80 பக்க நூலினையும் முல்லை முத்தையாவே வெளியிட்டார்.

‘நினைவின் நிழல்’ என்ற கடித வடிவிலான நாவலையும் பிறகு ‘கல்லும் மண்ணும்’ நாவலையும் வள்ளுவர் பண்ணை பதிப்பகம் வெளியிட்டது. நூல் வெளியீடு தொடர்பாக வள்ளுவர் பண்ணை பழனியப்பன் அவர்களை அணுகியபோதுதான் அய்யாவின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பம் ஏற்படுகிறது. இவர் கொடுத்த சிறுகதைத் தொகுப்பை வெளியிடுவதற்கு பதிப்பாளர் பழனியப்பன் ஒரு நிபந்தனை விதிக்கிறார். தன் அலமாரியிலிருந்து ஒரு நூலை எடுத்துத் தருகிறார். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் அது. புலவர் கோவிந்தன் மொழிபெயர்த்தது. இந்த நூலை வெளியிட்டதில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துடன் ஒரு சின்ன பிரச்சனை. முதல் இரண்டு அத்தியாயங்கள் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்காக முன்பே மொழிபெயர்த்து தரப்பட்டுள்ளது. அதை அப்படியே இந்த நூலில் பயன்படுத்தியிருப்பதுதான் விவகாரம். எனவே இதற்கு தீர்வாக முதல் இரண்டு அத்தியாங்களை வேறொருவரைக் கொண்டு புதிதாக மொழிபெயர்த்து சேர்க்கவேண்டும். ‘இந்த இரண்டு அத்தியாயங்களை நீங்கள் மொழிபெயர்த்துக் கொடுங்கள். உங்கள் சிறுகதைத் தொகுப்பை நான் வெளியிடுகிறேன்’ என்கிறார் பழனியப்பன். வேறு வழியில்லாமல் ரத்னம் அய்யா ஒப்புக்கொள்கிறார்.

ஒரு எழுத்தாளனை மொழிபெயர்ப்பாளனாக மாற்றியது விதி.

ஒப்புக்கொண்டபடி, 12 கதைகளைக் கொண்ட தொகுப்பை ‘நினைவுப் புற்று’ என்ற பெயரில் வள்ளுவர் பண்ணை வெளியிட்டது. அதற்கு நூலக ஆணையும் கிடைக்கிறது. இந்த வகையில் பதிப்பாளர் அய்யாவுக்கு தரவேண்டிய தொகை ரூ.2400. ஆனால், பதிப்பாளர் புதிதாக வீடு கட்டி பண கஷ்டத்தில் இருந்தபடியால் அந்தக் காசை கொடுக்கவில்லை. புத்தக வெளியீட்டில் மறுபடியும் நஷ்டம்.

ஆனால், விதி வேறொரு திட்டத்தை வைத்திருந்தது.

வள்ளுவர் பண்ணை பழனியப்பன் தனது புதிய வீட்டு கிரகபிரவேசத்துக்கு அழைப்பு விடுக்கிறார். பணத்தை அவர் கொடுக்கவில்லை என்பதை பொருட்டாக எண்ணாமல் விழாவுக்கு சென்னை செல்கிறார் ரத்னம் அய்யா. விழா முடிந்தவுடன் சென்னை மாநிலக் கல்லூரி விலங்கியல் துறையில் பணியாற்றும் நண்பர் சேதுவைக் காணச் செல்கிறார். கல்லூரிக்கு சென்ற நேரம் நண்பருக்கு பாடவேளை என்பதால் நூலகத்தில் காத்திருக்கும்படி சொல்கிறார். அலமாரியிலிருந்து நூல்களைப் பார்க்கத் தொடங்குகிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு ஒரு புத்தகம் அவரது கவனத்தைக் கவர்கிறது. எடுத்துப் பார்க்கிறார். ஆர்வத்துடன் படிக்கத் தொடங்குகிறார். நண்பர் சேது வகுப்பு முடிந்து வந்தவுடன் அவருடன் பேசிக் கொண்டிருந்தவர் விடைபெற்றுச் செல்லும்போது அந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்று படித்துவிட்டு திருப்பித் தருவதாகச் சொல்கிறார். நண்பரும் சம்மதிக்கிறார். புத்தகத்துடன் விடுதி அறைக்குத் திரும்பியவர், இரவு பகலாக அந்த நூலைப் படித்து முடிக்கிறார்.

அந்தப் புத்தகம் பர்டன் ரோஜர் என்கிற அமெரிக்க அறிஞர் எழுதிய ‘ஹவ் டு வாட்ச் பேர்ட்ஸ்’. பறவை பார்ப்பவர்களுக்கான நூல். அய்யாவை பறவைகளின் உலகத்துக்கு உடனடியாக இழுத்துச் செல்கிறது அந்தப் புத்தகம். பறவை பார்ப்பவர்களுக்கு இரண்டு முக்கியமான விஷயங்களை அந்த நூல் பரிந்துரைக்கிறது. முதலாவது, ஒரு பைனாகுலர் வேண்டும். இரண்டாவது, பறவைகள் கையேடு. அன்று மதியமே பிராட்வேக்கு சென்று காமிராக்கள், பைனாகுலர்கள் விற்கும் கடையில் ஒரு பழைய பைனாகுலரை 120 ரூபாய் விலைக்கு வாங்குகிறார். குதிரைப் பந்தயத்துக்காக பயன்படுத்தப்பட்ட பைனாகுலர். அங்கிருந்து மவுண்ட் ரோடில் ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடை. பறவைகள் கையேடுகளைத் தேடுகிறார். சாலிம் அலியின் ‘Handbook of Indian Birds’ என்ற நூலைப் பார்க்கிறார். உடனே வாங்கிக் கொள்கிறார். மாலையில் நண்பர் சேதுவைச் சந்தித்து இரவல் வாங்கிய புத்தகத்தை ஒப்படைக்கிறார். பைனாகுலரையும் சாலிம் அலியின் புதிய புத்தகத்தையும் பார்த்த நண்பர் சேது வியந்துபோய் சொல்கிறார் ‘ஒரே நாளில் இப்படி பைத்தியமாகிறவர்களை நான் பார்த்ததில்லை.’

கும்பகோணத்துக்கு திரும்பியவரிடம் பைனாகுலர் இருப்பதைக் கண்ட மனைவி கேட்கிறார் ‘ரேசுக்கு போனீங்களா?’. அந்தக் காலத்தில் குதிரைப் பந்தயத்துக்குப் போகிறவர்கள்தான் பைனாகுலர் வைத்திருப்பார்கள். ‘பறவைகள் பார்க்கப் போகிறேன். அதற்காக வாங்கியிருக்கிறேன்’ என்று சொன்னவரை வியப்புடன் பார்த்துவிட்டு ‘மனுசனுக்குக் கிறுக்குப் புடிச்சிருச்சு’ என்று முணுமுணுக்கிறார்.

நண்பர் சேது சொன்ன பைத்தியக்காரத்தனமும், மனைவி குறிப்பிட்ட கிறுக்குத்தனமும் சேர்ந்துதான் தமிழகத்துக்கு அரிய ஒரு பறவையியல் நூலைத் தந்திருக்கிறது.

மறுநாள் விடிகாலையிலேயே கீழ் அணைக்கரைச் சாலையில் பைனாகுலருடன் பறவைப் பார்த்தலைத் தொடங்கினார். முதல் நாளிலேயே மஞ்சள் சிட்டு, கொண்டைக் குருவி என புதிய இரண்டு பறவைகளைப் பார்க்கிறார். கல்லூரிக்கு சென்று ஒரு குறிப்பேட்டில் தேதியிட்டு தான் கண்ட பறவைகளைப் பற்றி குறிப்புகளை எழுதி வைத்தார். பறவை பார்ப்பவர்கள் அனைவரிடமும் அப்படியொரு பட்டியல் இருக்கும். அதற்கு ‘வாழ்நாள் பட்டியல்’ Life List என்று பெயர். அந்தப் பழக்கத்தைத் தொடர்ந்து பேணி வந்தார். கும்பகோணம், கொள்ளிடம், அணைக்கரை ஆகிய இடங்களிலும் ராமேஸ்வரம், சேதுக்கரை, தேவிப்பட்டணம் ஆகிய கடற்கரைகள், ராமநாதபுரத்தைச் சுற்றியிருந்த கண்மாய்கள், காஞ்சிரங்குளம் என்று பல்வேறு பகுதிகளில் சுற்றிப் பார்த்து தொடர்ந்து பறவைகளைப் பற்றிய குறிப்புகளை சேகரித்தார்.

இதன் பிறகு 1970களில் இராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரியில் பணியிலிருந்தபோது தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. தமிழ் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் படங்களுடன்கூடிய பறவைகள் கையேடு ஒன்றை எழுதித் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அந்த காரியத்தை ஒப்புக்கொண்டு பதில் அனுப்பிய கையோடு மதுரைக்குச் சென்றார். பழைய கேமரா ஒன்றை மூவாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார். ஒரு தோளில் பைனாகுலரும் இன்னொரு தோளில் கேமராவுமாய் இரண்டு வருடங்கள் அலைந்தார். எடுத்த படங்களை அச்சிட்டுப் பார்த்தபோது அவருக்கு ஒன்று புரிந்தது, பைனாகுலர், கேமரா இரண்டையும் வைத்துக்கொண்டு பறவைகளைப் பார்ப்பதால் எதுவும் உருப்படியாக நடக்காது என்பது. எனவே, காமிராவை வாங்கிய அதே மூவாயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 450 பறவைகளைப் பற்றிய கட்டுரைகளை படங்களோடு அனுப்பி வைத்தார். ‘தென்னிந்தியப் பறவைகள்’ என்ற பெயரில் 500 பக்க நூலை 1973ஆம் ஆண்டு தமிழ்நாடு பாட நூல் கழகம் வெளியிட்டது. பறவையியலில், பறவைகள் பார்ப்போர்களுக்கென தமிழில் வெளியான முதல் நூல் இதுதான். அப்படியொரு நூல் அதுவரை தமிழில் எழுதப்படவில்லை. அதுவரையிலும் தமிழகத்தில் உள்ள பறவைகளைப் பற்றி இரண்டே புத்தகங்கள்தான், அதுவும் ஆங்கிலத்தில் வெளிவந்திருந்தன. 


 

பல ஆண்டுகளுக்குப் பிறகு கோவை திருச்சி சாலையில் உள்ள ஆரிய வைத்திய சாலையில் சிகிச்சைக்காக வந்திருந்த மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் மெய்யப்பன் அவர்களை சந்திக்கிறார் ரத்னம் அய்யா. ‘இப்போது அச்சில் இல்லாத உங்களுடைய பறவைகள் நூலை வண்ணப் படங்களுடன் பதிப்பிக்க விரும்புகிறேன்’ என்று சொல்கிறார். நல்லவொரு ஓவியரைக் கொண்டு பறவைகளின் படங்களை வரைந்து, வண்ணத்தில், உயர்தர தாளில் அச்சிடலாம் என்று யோசனை சொல்கிறார். உடனடியா சரவணகுமார் என்ற ஓவியரை அணுகி படம் வரைய ஏற்பாடு செய்கிறார். இதற்காக பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை முன்பணமாக அளிக்கிறார் மெய்யப்பன்.

330 பறவைகளின் படங்கள் விபரங்களுடன் கெட்டி அட்டையுடன் அச்சிடப்பட்டது. ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ என்ற பெயரில் வெளியான அந்த நூலுக்கு தியோடர் பாஸ்கரன் முன்னுரை வழங்கியிருந்தார். இதன் முதல் பதிப்பு 2002ஆம் ஆண்டு வெளியானது.

பறவை ஆர்வலர்கள், பறவைகளை எளிதில் அடையாளம் கண்டுகொண்டு கொள்ள உதவும் வகையில் அவற்றின் வடிவம், வண்ணம், வாழுமிடம், குரல், உணவு ஆகிய அனைத்து விபரங்களையும் பறவையியல் அறிவியலின் நெறியை ஒட்டி விவரிக்கப்பட்டுள்ளன. இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பும் உண்டு.

‘ஒரு புத்தகம் வாழ்க்கையையே மாற்றும்’ என்று சொல்வார்கள். க.ரத்னம் அவர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை அது உண்மைதான். பர்டன் ரோஜரின் பறவை பார்த்தல் பற்றிய புத்தகம் அவருடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அதன் பலனாக தமிழில் அருமையான ஒரு பறவையியல் நூல் கிடைத்தது. இப்போதும் இந்த விலைமதிப்பில்லாத நூல் மணிவாசகர் பதிப்பகத்தில் கிடைக்கிறது. உங்கள் எல்லோரின் வீட்டில் இருக்க வேண்டிய முக்கியமான புத்தகம் இது.

 

வள்ளுவர் பண்ணைக்காக கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலின் முதல் இரண்டு அத்தியாயங்களை மொழிபெயர்க்க நேர்ந்ததே அவரை மொழிபெயர்ப்பை நோக்கித் திருப்பியது என்று சொன்னேன். ஆனால், தமிழ் இலக்கிய, மானுடவியல் வரலாற்றில் க.ரத்னம் அவர்களுக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்திருக்கும் இன்னொரு முக்கியமான நூல் உண்டு. அந்த நூலை அவர் மொழிபெயர்க்க காரணமாக அமைந்ததும் தற்செயலானதுதான். க.ரத்னம் அவர்களின் வார்த்தையில் சொல்லப்போனால் விபத்துதான்.

1981ஆம் ஆண்டு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. ஆய்வாளர்களுக்கு நல்கை தரப்படுவதை அறிந்து தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்வதாக தனது திட்டத்தை சமர்ப்பித்தார். ஆனால், அது ஏற்கப்படவில்லை. காரணத்தை அறியும்பொருட்டு துணைவேந்தர் வ.அய்.சுப்ரமணியத்தை சந்திக்கிறார். தனது விண்ணப்பத்தைப் பற்றி கேட்டவுடன், துணைவேந்தர் ‘அந்த ஆய்வை பிறகு பார்த்துக் கொள்ளலாம். இன்னொரு முக்கியமான காரியம் உள்ளது. நீங்கள் எட்கர் தர்ஸ்டனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்று கேட்கிறார். அவரைப் பற்றியும் அவருடைய முக்கியமான நூலைப் பற்றியும் தெரியும் என்றவுடன், அவர் எழுதிய ஏழு தொகுதிகளையும் தமிழில் மொழிபெயர்க்கவேண்டும், உடனே வேலையைத் தொடங்குங்கள் என்கிறார் துணைவேந்தர். நூலகத்திலிருந்து முதல் தொகுதியை எடுத்து இருபது பக்கங்களை மொழிபெயர்த்துக் கொடுங்கள் என்றும் சொல்கிறார். உடனடியாக வேலையைத் தொடங்குகிறார் ரத்னம் அய்யா. இருபது பக்கங்களை மொழிபெயர்த்துக் கொடுத்தவுடன் அதைப் படித்துப் பார்த்து திருப்தியடைந்த துணைவேந்தர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மொழிபெயர்த்தவற்றை எடுத்துக் கொண்டு வந்து சந்தியுங்கள் என்கிறார். ‘பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறிவிட்டதே’ என்று எண்ணியவாறே வீட்டுக்கு வந்தவர் மற்ற காரியங்கள் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு மொழிபெயர்ப்பில் ஆழ்ந்து விடுகிறார்.

எட்கர் தர்ஸ்டன் ஆங்கிலேய அதிகாரி. 1885 முதல் 1908 வரை மெட்ராஸ் கவர்மென்ட் மியூசியத்தின் பொறுப்பாளராக இருந்தவர். அப்போதிருந்த ஆங்கில அரசு அனைத்து மாகாணங்களும் தங்களது மாகாணத்தில் இனவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆணையிடுகிறது. இதற்கான பொறுப்பு அதிகாரியாக தர்ஸ்டன் நியமிக்கப்படுகிறார். இதற்காக அவர் தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொள்கிறார். பலரோடு கடிதங்கள் எழுதி தனது ஐயங்களைத் தீர்த்துக்கொள்கிறார். வழக்காறுகள், நாட்டார் கதைகள், புராண இதிகாசங்கள், பண்டைய இலக்கியங்கள், கல்வெட்டுகள், பட்டயங்கள், அரசு ஆவணங்கள், மக்கள் கணக்கெடுப்பு அறிக்கைகள், பயணக் குறிப்புகள், நாளேடுகள் ஆகிய அனைத்திலிருந்தும் இனவியல் மற்றும் சாதிகள் தொடர்பான தகவல்களைத் திரட்டித் தொகுக்கிறார்.

இன இயல் ஆய்வாளர்களால் பெரிதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மத்திய இந்தியாவைச் சேர்ந்த கோண்ட் பழங்குடிகள் தொடங்கி, தென் தமிழகத்தைச் சேர்ந்த கோட்டை வேளாளர் வரையிலான 2000க்கும் மேற்பட்ட பழங்குடியினரையும் சாதியினரையும் பற்றிய விபரங்கள், 2000க்கும் அதிகமான பக்கங்களுடன் ‘Castes and Tribes of South India’ என்ற பெயரில் ஏழு தொகுதிகளாக தொகுக்கப்பட்டு 1909ஆம் ஆண்டு வெளியாயின.

இந்த ஏழு தொகுதிகளின் சில பகுதிகளை மட்டும் சுருக்கித் தமிழில் வெளியிட்டுள்ளார் ந.சி.கந்தையாபிள்ளை. ஆங்கிலேய அதிகாரி 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நூலை இப்போது தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் என்ன?

பழங்குடிகள், மலைவாழ் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்தன. நடைமுறைப்படுத்தின. அவ்வாறான பணிகளுக்கு குறிப்பிட்ட மக்களைக் குறித்த முழு விபரங்களையும் வரலாற்றியல் சமூகவியல் இனவியல் நோக்கில் அறிந்துகொள்வது முக்கியம் என்பதைக் கருத்தில்கொண்டே உதகமண்டலத்தில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சார்பில் மலையின மக்கள் ஆய்வு மையத்தை துணைவேந்தர் தொடங்கிவைத்தார். அதன் ஒரு பகுதியாகவே இந்த மொழியாக்கப் பணியும் அமைந்திருந்தது.

துணைவேந்தர் சொன்னபடி சுறுசுறுப்பாக முழுமூச்சுடன் மொழியாக்க வேலையில் ஈடுபடுகிறார்.

முதல் மூன்று தொகுதிகள் அச்சாகின்றன. துணைவேந்தரின் ஆறு ஆண்டு கால பதவிக்காலம் முடிந்து ஓய்வுபெறுகிறார். நான்காவது தொகுதி அச்சில் இருக்க, ஐந்து ஆறாவது தொகுதிகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். ஏழு இன்னும் பாக்கியுள்ளது. இந்த நிலையில் புதிய துணைவேந்தர் பொறுப்பேற்கிறார். அவரிடம் சென்று அச்சான தொகுதிகளைத் தந்து விபரங்களைத் தெரிவிக்கிறார். அவர் பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை.

முதல் மூன்று தொகுதிகள் 1986, 1987ஆம் ஆண்டுகளில் வெளியாயின. நான்காம் தொகுதி வெளியானது 1993ஆம் ஆண்டு. அதாவது ஆறு ஆண்டுகள் கழித்து. அத்துடன் சரி. மீதியிருந்த மூன்று தொகுதிகளையும் மொழிபெயர்த்துக் கொடுத்திருந்தும் அதை வெளியிடுவதில் அக்கறை காட்டப்படவில்லை. இதற்கிடையில் 1999ஆம் ஆண்டு அய்யா பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

புதிய துணைவேந்தராக சுந்தரமூர்த்தி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, இந்த நூலின் முக்கியத்துவத்தையும் ரத்னம் அவர்கள் மொழிபெயர்ப்புக்கு செலுத்திய உழைப்பையும் உணர்ந்து 2003ஆம் ஆண்டு ஐந்து, ஆறாம் தொகுதிகளை வெளியிட ஏற்பாடு செய்தார். கடைசி ஏழாவது தொகுதி சி.சுப்ரமணியம் துணைவேந்தராக இருந்தபோது 2005ஆம் ஆண்டு வெளிவந்தது.

ஒரு மனிதர் 5 ஆண்டுகாலம் உழைத்து 4000க்கும் அதிகமான பக்கங்களை மொழிபெயர்த்துக் கொடுத்த நூல்களை அச்சில் முழுமையாகக் காண 18 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. பல ஆண்டுகள் மறுபதிப்பு காணாமலிருந்த இந்த நூல் தொகுதிகள் இப்போது கிடைக்கின்றனவா என்று உறுதியாகத் தெரியவில்லை.

ஏழு தொகுதிகளையும் மொழிபெயர்த்து முடித்த பிறகு, ஒப்பந்தப்படி தனக்கான ஊதியத்தை வழங்கக் கோரி விண்ணப்பிக்கிறார் அய்யா. ஆங்கிலச் சொல் ஒன்றுக்கு பத்து பைசா என்பதுதான் ஊதியம். அதன்படி, அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் ரூ.21000. இதில் காகிதம், மை, தட்டச்சுக் கூலி ஆகியவற்றைக் கழித்துவிட்டுப் பார்த்தால், ஐந்தாண்டு உழைப்புக்கு அவருக்குக் கிடைத்த கூலி, வயலில் களை பிடுங்கும் தொழிலாளியின் ஒரு நாள் கூலியை விடக் குறைவு என்று குறிப்பிடுகிறார்.

ஆனால், தான் ஒப்புக்கொண்ட காரியத்தை பொறுப்புடன் நிறைவேற்றிக் கொடுத்த மனநிறைவு அவருக்கு உண்டு. அதிகாரிகள் அவரை அலட்சியப்படுத்தினாலும் அவர் தன் காரியத்தில் பின்வாங்கவில்லை. அச்சாவதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து தன்னுடைய காரியத்தை மேற்கொண்டு மொழிபெயர்த்து முடித்து ஒப்படைத்துவிட்டார். அந்தப் பொறுப்பும் அவரது உழைப்பும்தான் தமிழில் மானுடவியலுக்கு அபாரமான ஒரு நூல் தொகுதியை சாத்தியப்படுத்தியுள்ளன. க.ரத்னம் அவர்களின் சாதனை நூலாக இன்றும் அது கொண்டாடப்படுகிறது. இனி வரும் ஆண்டுகளிலும் கொண்டாடப்படும்.

முழுமையான இலக்கியவாதியாக நிறைய கதைகளை எழுதவேண்டும் என்று நினைத்தார். ஆனால், மொழியாக்கப் பணி அவரது பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொண்டது என்கிற வருத்தம் அவருக்கு உண்டு. ஆனால், ‘தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்’ என்ற இந்த பெருநூல் தொகுதி அவருடைய சாதனைகளில் தலையாயது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

இதுமட்டுமல்லாமல் எண்பது வயதுக்குப் பிறகு உலக இலக்கிய மேதைகளின் ஆக்கங்களையும் மொழிபெயர்த்திருக்கிறார். சிறுகதை மேதை என்று கொண்டாடப்படும் ஆன்டன் செகாவின் சிறுகதைகளை மொழிபெயர்த்து ‘மனபிராந்தி’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. உலக இலக்கியத்தில் பெரிதும் மதிக்கப்படும் ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘டப்ளின் நகரத்தார்’ என்ற தொகுப்பு மிகவும் சிக்கலானது. வரலாற்று பெருமை மிக்கது. அந்த சிறுகதைத் தொகுப்பையும் மொழிபெயர்த்திருக்கிறார்.


அவரிடம் உள்ள புத்தக சேகரிப்பு இன்னொரு கிடைத்தற்கரிய புதையல். கும்பகோணத்தில் வசித்த காலத்திலிருந்தே அரிய பழைய பதிப்புகளைத் தேடிச் சேகரிக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. 1940இல் வெளியான புதுமைப்பித்தன் கதைகள் முதல் பதிப்பு அவரிடம் உள்ளது. அதிலிருந்த அகல்யை கதை அவரை பெரிதும் ஈர்த்தது. அகல்யையை வைத்து அதுவரையில் எழுதப்பட்டவற்றைத் தேடித் தொகுத்தார். காவியத்தில், மேடையில், கதையில், கவிதையில் என்று பிரித்து விமர்சன நோக்கில் அவற்றின் நிறைகுறைகளைக் கட்டுரையாக்கினார். ‘இவர்கள் பார்வையில் அகலிகை’ என்ற தலைப்பில் புத்தகமானது. 1998. வால்மீகி, வியாசர், கம்பன், கு.பா.ரா, ஏ.ஆர்.ராஜகோபால், மாடர்ன் தியேட்டர்ஸ் குழு, வ.ரா, பிரபஞ்சன், துவிஜேந்திரலால் ராய், புதுமைப்பித்தன், எம்.வி.வெங்கட்ராம், சிட்டி, டி.கே.சீனிவாசன், ச.து.சு.யோகியார், ந.பிச்சமூர்த்தி, ஞானி, சிற்பி, மஹாகவி, வாலி, தாகூர், முருகுசுந்தரம் ஆகியோரது படைப்புகள் அதில் உள்ளன.

சிறுகதை முன்னோடிகள் – புகழ்பெற்றிராத தொடர்ந்து கதைகள் எழுதாத ஆனால் சில நல்ல கதைகள் எழுதியவர்களின் தேர்ந்தெடுத்த கதைகளைக் கொண்டது. நாரண துரைக்கண்ணன், சங்கர ராம், கி.சந்திரசேகரன், புரசு பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் கதைகள் இடம்பெற்றுள்ளன. இயக்குநர் நீலகண்டன் 1949இல் ‘இசைவாணி’ என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

புதுமைப்பித்தன் மீது மிகப் பெரும் ஈடுபாடு கொண்டவர். அவரது பழைய பதிப்புகளை சேகரித்து வைத்துள்ளார். ‘ஸ்டாலினுக்கும் தெரியும்’ என்ற தலைப்பிலான கட்டுரை நூலை 1991இல் பதிப்பித்திருக்கிறார்.

அவர் எழுதியுள்ள நூல்களின் பட்டியலிலிருந்து 1961ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான 65 ஆண்டு காலத்தில் இலக்கியத்தின் அனைத்து வகைமைகளிலும் நூல்களை எழுதி வெளியிட்டிருப்பதைப் பார்க்க முடியும். சிறுகதை, நாவல், கவிதை, மொழியாக்கம், விமர்சனம், கட்டுரை என்று எல்லா வகையான நூல்களையும் எழுதியிருக்கிறார். இந்த வயதிலும் அவர் எழுதுகிறார், மொழிபெயர்க்கிறார். ரஷ்ய இலக்கியத்தின் மாமேதை தஸ்தாவெஸ்கியின் The Possessed என்ற 500க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். அவரிடம் பேசும்போது தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி உற்சாகத்துடன் கூறுவதைக் கேட்க முடியும்.

ஒரு மனிதன் வாழ்நாளில் செய்த சில காரியங்களின் வழியாகவே மதிக்கப்படுகிறான், நினைக்கப்படுகிறான். அந்த வாழ்க்கையும் பொருள்மிக்கதாகிறது. அந்த வகையில் க.ரத்னம் அவர்கள் 65 ஆண்டு காலம் தமிழ் மொழிக்கும் புனைவுக்கும் மொழியாக்கத்துக்கும் மானுடவியலுக்கும் பறவையியலுக்கும் தன்னுடைய எழுத்தின் மூலமாக அளித்திருக்கும் பங்களிப்பு என்பது அளப்பரியது. போற்றத்தக்கது. மதிக்கத்தக்கது. தன் பங்களிப்புகளின் வழியாக தமிழ் இலக்கியத்திலும், வரலாற்றிலும் தன்னுடைய பெயரை அவர் காலத்துக்கும் நிலைத்திருக்குமாறு செதுக்கி வைத்துவிட்டார். இன்று அவருக்கு இங்கு வழங்கப்பட்டிருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது என்பது மிகப் பொருத்தமானது, பெருமைமிக்கது. இதன் மூலம் இதுவரை அவரைப் பற்றி அறியாதவர்களும், இன்றைய தலைமுறையும் அவரையும் அவரது சாதனைகளையும் தெரிந்துகொள்வார்கள் என்றால் அதுவே இன்னும் மிகப் பெரிய விருதாக அமையும்.  

(கோவை கொடீசியா புத்தகத் திருவிழா 2026 இல், க.ரத்னம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் ஆற்றிய உரை )

 

 

 

 

 

                                                                    

 

 

நாஞ்சில்நாடனுக்கு கோவை நன்னெறிக் கழகத்தின் தமிழ்நெறிச் செம்மல் விருது

  ஓவியம் - ஜீவா கோவை நன்னெறிக் கழகம் 27.09.2026 ஞாயிறு மாலை கோவையில் தனது 70ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. நிகழ்வில் எழுத்தாளர் நாஞ்...