Friday, 5 September 2025

வாழ்வுக்கும் மரணத்துக்குமான உரையாடல் மஞ்சுநாத்தின் ‘அப்பன் திருவடி’


 

வங்க எழுத்தாளரான ராணி சந்தா, தாகூரின் மாணவி. தாகூரின் இறுதிக் காலத்தில் கடிதங்களுக்கு பதில் எழுதுவதும் கவிதைகள், கட்டுரைகளைக் கேட்டு எழுதுவதுமாய் தொண்டு செய்தவர். தாகூரின் தனிச் செயலராக இருந்த அனில் குமார் சந்தாவை காதலித்து மணந்தார். ராணி சந்தா எழுதிய புகழ் பெற்ற நூல் ‘பூர்ண கும்பம்’. பானு பந்த் என்பவரின் மொழியாக்கத்தில் தமிழில் வெளிவந்தது. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டது.

ஹரித்வாரில் நடக்கும் கும்ப மேளாவுடன் சேர்த்து இமயத்தையும் அதன் பல்வேறு இடங்களையும் பயண அனுபவத்துடன் விவரிக்கிறது இந்த நூல். இமயத்தைக் குறித்து வாசித்த முதல் நூல் இதுவாகத்தான் இருக்கவேண்டும்.

இமய மலை யாத்திரைக்குச் செல்பவர்களின் வழியாக ‘சார் தாம் யாத்ரா’, பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி என்று பெயர்களைக் கேட்டதுண்டே தவிர ஒரு முறையேனும் போய் வரவேண்டும் என்ற எண்ணம் ஏனோ வந்திருக்கவில்லை என்பதை இன்று யோசித்துப் பார்த்தால் வியப்பாகவே உள்ளது.

கேதார்நாத், கடல் மட்டத்திலிருந்து 11800 அடி உயரத்தில் பனி மூடிய சிகரங்கள் சூழ்ந்த மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள சிறிய ஊர்.  மந்தாகினி நதி ஊற்றெடுக்கும் சோராபாடீ ஏரிக்கு சற்று கீழே அமைந்திருப்பதால், பனிப்பாறை உருகும்போதும் உடையும்போதும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் எப்போதும் உண்டு. கடுமையான பனிப்பொழிவு, கனமழை, பெருவெள்ளம், நிலச்சரிவு என இயற்கை பேரிடர்கள் பலவற்றையும் வெவ்வேறு காலகட்டங்களில் சந்திக்க நேர்ந்திருக்கிறது. கேதார்நாத்தை அடைவதற்கான சாலை 16 கிலோ மீட்டர் தொலைவில் கீழே உள்ள கௌரிகுண்டம் என்ற இடத்துடன் முடிந்துவிடுகிறது. அங்கிருந்து கேதார்நாத்துக்கு செல்ல மூன்று வழிகள் உண்டு. முதலாவது, மட்டக் குதிரைகளில் ஏறிச் செல்வது. கோயில் திறக்கப்படும் ஆறு மாதங்களில் பயணிகளை ஏற்றிச் செல்வதையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட குதிரைக்காரர்கள் ஏராளம். இரண்டாவதாக, ஆட்கள் சுமந்து செல்லும்‘டோலி‘யில் கைகால்களை குறுக்கி அமர்ந்து போவது. மூன்றாவது வழி சற்று செலவு பிடித்த ஒன்று. ஹெலிகாப்டர் பயணம். மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான ஆறு மாதங்களுக்கே கோயில் திறந்திருக்கும். கடும் பனிப் பொழிவு, தாங்க முடியாத குளிர், பனியால் மூடிக் கிடக்கும் பாதைகள் போன்ற காரணங்களால் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான ஆறு மாதங்களில் கோயில் அடைக்கப்பட்டிருக்கும். கோயில் நடை சாத்தப்படும் இறுதி நாளில், பூசையை முடித்து உற்சவ மூர்த்தியை பல்லக்கில் ஏற்றி குப்தகாசிக்கு அருகில் உக்கிமத்தில் உள்ள ஓம்காரேஸ்வர் கோயிலுக்கு கொண்டு வந்து விடுவார்கள். மீண்டும் நடை திறக்கப்படும் நாளில் எடுத்துச் செல்வார்கள்.

கேதார்நாத்தில் உள்ள சிவாலயம் எப்போது கட்டப்பட்டது என்பது தெரியாது. எட்டாம் நூற்றாண்டில் இது ஆதி சங்கரரால் சீரமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பல்வேறு காலகட்டங்களில் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. 600க்கும் சற்றே கூடுதலான மக்கள் தொகையைக் கொண்ட இந்த ஊருக்கு அனுமதிக்கப்படும் ஆறு மாத காலத்தில் சராசரியாக நாளொன்றுக்கு ஐயாயிரம் பேர் வரை வந்து செல்கிறார்கள். கடந்த ஆண்டு இந்த கோயிலுக்கு வந்து சென்ற பக்தர்களின் எண்ணிக்கை 16 லட்சம்.     

2013ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர்ந்து பெய்த கனமழை, கடும் பனிப்பொழிவு, கட்டுக்கு அடங்காத பெருவெள்ளம், நிலச்சரிவு ஆகிய அனைத்தும் சேர்ந்து மறக்க முடியாத பெரும் சேதாரங்களை விளைவித்தன. மந்தாகினியின் கரையில் கட்டப்பட்டிருந்த எண்ணற்ற கட்டடங்கள், வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பலத்த உயிர் சேதங்கள். அரசாங்கம் கொடுத்த எண்ணிக்கைக்கும் உண்மையில் பலியானவர்களின் எண்ணிக்கைக்கும் பாரதூரமான வித்தியாசம். இதில் குதிரைகள் உள்ளிட்ட பிற உயிர்கள் அடங்கா.

கௌரிகுண்டத்திலிருந்து கேதாருக்குச் செல்லும் 14 கிலோமீட்டர் பாதையின் மத்தியில் அமைந்திருந்தது ராம்பாரா எனும் கிராமம். மட்டக் குதிரையிலும், டோலியிலும் செல்லும் யாத்திரிகள் சிரம பரிகாரம் செய்து கொள்வதற்கான இடம். 2013ஆம் ஆண்டு திடீரென்று ஏற்பட்ட மந்தாகினியின் பெருவெள்ளம் ராம்பாரா கிராமம் மொத்தத்தையும் சுருட்டிக்கொண்டு போனது. 150க்கும் மேற்பட்ட சிறிதும் பெரிதுமான கடைகள், ஐந்து விடுதிகள், வீடுகள் என்று எதுவுமே மிஞ்சவில்லை. கிராமம் இருந்த மொத்த இடத்திலும் பத்து அடிகள் ஆழம் வரையிலான சேறும் சகதியுமே எஞ்சியிருந்தது. அந்த சமயத்தில் அங்கிருந்த உள்ளூர்வாசிகள், பயணிகளில் ஒரு சிலரைத் தவிர பிற அனைவருமே பலியாகினர், காணாமல் போயினர்.      

எண்ணற்ற உயிர்களையும் ஏராளமான உடைமைகளையும் வாழ்வாதாரத்தையும் சுருட்டிப் பறித்துப் போன இந்த பெருவெள்ளத்துக்கு அடிப்படை காரணம் மனிதனின் பேராசையே என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. அனுமதியளிக்கப்பட்ட அளவுக்கு மீறிய கட்டடங்கள், ஆக்கிரமிப்புகள், கண்டுகொள்ளாத அரசு அதிகாரம் என மனிதர்களின் சுயநலப் போக்கு மீள முடியாத பெரும் துயருக்கு காரணமாக அமைந்தது.

ஜூன் மாதம் 2013ஆம் வருடம் இந்தியாவின் வடக்கில் இமய மலையின் சரிவில் நடந்த இந்தப் பேரழிவு, தென்முனையில் வசிக்கும் நமக்கு பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது. ஒரு வாரம், பத்து நாள் வரை அந்த செய்திகளை நாம் தொடர்ந்திருந்தோம். பிறகு அதன் மீதான கவனம் விலகி வேறொன்றில் ஆழ்ந்து விட்டோம். ஆனால், இத் துயர நிகழ்வில் தங்கள் உற்றாரை, உறவினரை, நண்பர்களை பறிகொடுத்த ஒவ்வொருவரின் நெஞ்சிலும் இந்தப் பேரழிவு ஆறா வடுவாகவே எஞ்சியிருக்கும். கங்கையை தலையில் சுமக்கும் ஈசனை பனிமலைச் சிகரங்கள் சூழ்ந்த கேதாரத்தில் சென்று தரிசிக்கும் ஆசையுடன் பல காலம் திட்டமிட்டு, பொருள் சேர்த்து சென்றவர்களில் பலர் வெள்ளத்தில் பலியாயினர். இன்னும் சிலர் காணாமல் போயினர். வேறெதுவுமே செய்யமுடியாத கையறு நிலையில் தன்னுடன் வந்தவர்களில் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் அவலத்தை பலர் சந்திக்க நேர்ந்திருக்கிறது.

அவ்வாறான ஒரு கொடும் நிகழ்விலிருந்து தப்பிப் பிழைத்த ஒருவர் அதைப் பற்றி சொன்னால் மட்டுமே அந்த இரண்டு நாட்களில் கேதாரத்தில் நடந்தவற்றை நம்மால் ஓரளவு புரிந்துகொள்ள முடியும். அப்படி எதுவும் இந்தியிலோ ஆங்கிலத்திலோ வெளிவந்ததாக தெரியவில்லை. ஆவணப் படங்கள் எதுவும் வெளியாகியிருக்க வாய்ப்புண்டு.

மேகவெடிப்பாக, கனமழையாக, கடும் பனிப்பொழிவாக, பெருவெள்ளமாக உருவெடுத்து மரணம் அனைத்தையும் அழித்தொழித்த அந்த இரண்டு நாட்கள் கேதாரத்தில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த நாவல். இமயத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது என்பதோடு இவ்வாறான ஒரு இயற்கைப் பேரிடரின் நிகழ் கணங்களில் மனிதன் கொள்ளும் அச்சத்தையும் நம்பிக்கை இழப்பையும் அதே சமயத்தில் உயிர்வாழும் இச்சையுடன் தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டத்தையும் சித்தரித்துள்ளது என்ற வகையில் தமிழுக்கு இந்த நாவல் புதியதொரு களத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெரும்பகுதியும் உரையாடலாக அமைந்திருக்கும் இந்த நாவலை மூவரின் கோணங்களாகப் பகுத்துக் கொள்ள முடியும். முதலாவது கோணம் குதிரைக்காரன் மாதவ்வின் பார்வையிலிருந்து எழுவது. மரணத்தை எளிதில் ஒப்புக்கொள்ள மறுத்து இயன்ற வரை எதிர்த்துப் போராடி மீள்வது. அமர்தேவ் எனும் தனது குதிரையில் பயணிகளை ஏற்றிச் செல்வதை ஒரு வேலையாக மட்டுமல்லாமல் தனக்குக் கிடைத்த பேறாகவும் கருதும் மாதவ் தொடர்ந்து பேரிடரிலிருந்து தப்பிக்கும் முனைப்புடன் அதற்கான வழிகளை ஆராய்ந்தவண்ணம் இருக்கிறான். பாதுகாப்பாக இருக்கிறது என்பதற்காக யோகி மகராஜ் குகையிலேயே பதுங்கியிருப்பது மரணத்தை ஒப்புக்கொள்வதற்கு சமம் என்று வாதிடுகிறான். கால்வைக்கும் திசை ஒவ்வொன்றிலும் அபாயங்களன்றி தப்பும் வழிகள் சொற்பமே என்று தெரிந்தும் அவன் எண்ணத்தை மாற்றிக் கொள்வதில்லை. எந்தச் சூழலிலும் மன உறுதியை விட்டுத்தராமல் தொடர்ந்து போராட வேண்டும் என்ற துணிவே அவனைக் காப்பாற்றுகிறது. இரண்டாவது கோணம், யோகி பத்ரபாகு மகராஜ் அவர்களின் கோணம். தான் அடைக்கலமாயிருக்கும் குகைக்கு வெளியே அவ்வளவு பெரிய ஆபத்து சூழ்ந்திருக்கும்போதும், மரணம் கணந்தோறும் நெருங்குகிறது என்றபோதும் இயல்பு குலையாமல் அமைதியாக நடப்பவற்றை உற்று கவனிப்பதுடன், குகையில் தஞ்சமடைந்தவர்களை முடிந்த மட்டிலும் பாதுகாப்பாக வைக்க முயல்வதே தன் பணி என்ற நிறைவுடன் இருப்பது. யோகி மகராஜ் இமயத்தின் பனிச்சுவர்களை, அவற்றின் பின் உறைந்துள்ள ஏரிகளை, உயரச் சிகரங்களை, அபாயகரமான சரிவுகளை என அனைத்தையும் தன் கால்களால் அளந்தவர். இந்தப் பேரிடரின் பலம் என்ன, அது என்னவெல்லாம் செய்யக்கூடும் என்பதைக் கணித்திருப்பவர். கேதாரத்தின் கற்றளி மட்டுமே பாதுகாப்பானது, வேறு முயற்சிகள் மரணத்தை மடியிலேந்துவதற்கு ஒப்பானது என்பது அவர் எண்ணம். வாழ்வுக்கும் மரணத்துக்குமான இடைவெளியை, வித்தியாசத்தை அறிந்தவர் என்பதால் தற்கணத்தை மட்டுமே பொருட்படுத்துகிறார். ஒவ்வொரு கணமும் குழந்தை சாதாரியின் உடல்நிலையிலேயே கவனத்தில் கொண்டிருக்கிறார். குகையில் தன்னுடன் இருப்பவர்களை முடிந்த மட்டும் பராமரிக்கிறார்.  அனைத்தும் மனிதனின் சுயநலம் விளைவித்திருப்பது, அதன் பலன்களை அனுபவிக்காமல் தப்ப முடியாது என்ற எண்ணம் கொண்ட அவருக்கு குகையிலோ வெளியிலோ எங்கிருந்தாலும் மரணம் ஒன்றுதான். மூன்றாவது கோணம், இராணுவ அதிகாரி சுருளிச்சாமியின் பார்வை. இந்த பேரிடரில் கடமையின் பொருட்டு அதிகாரியைக் காப்பாற்றப் போனதால் தன் மனைவியை மகளை இழந்தவர். கடைசி வரையிலும் தன் மனைவிக்கும் குழந்தைக்கும் என்ன ஆனது என்பதைத் தெரிந்து கொள்ளும்பொருட்டு ஆத்திரத்தையும் வெறுப்பையும் மீறி மாதவ்விடம் அவர் காட்டும் பொறுமை இராணுவ அதிகாரியின் இன்னொரு பக்கத்தை வெளிப்படுத்துகிறது. விடுப்பில் ஒரு சாதாரண பயணியாக, குடும்பத்துடன் கேதார்நாத்தை தரிசிக்க வந்தவர் சந்திக்க நேர்ந்த இழப்பும் அதன் காரண காரியங்களும் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. பேரிடரில் உயிரிழந்த எண்ணற்ற பயணிகளின் நிலையும் அதுவே. ஆறுமாத காலத்தில் எத்தனையோ லட்சம் பேர் வந்துபோகும் நிலையில் குறிப்பிட்ட அந்த இரண்டு நாளில் ஏன் அப்படியொரு விபத்து நடக்கவேண்டும், ஏன் அத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்? அந்த நாட்களையும், குறிப்பிட்ட அந்த உயிர்களையும் தேர்வு செய்தது யார் அல்லது எது? எதுவுமே நடக்காதது போல மறு ஆண்டே மீண்டும் தொடங்கிய யாத்திரையில் மீண்டும் பக்தர்கள் வந்து போகிறார்கள். குதிரைகள் ஆட்களை ஏற்றிச் செல்கின்றன. டோலிகளில் சுமந்து செல்கிறார்கள். கடைகளும் விடுதிகளும் உணவகங்களும் முளைக்கின்றன. பனி மூடிய சிகரங்களுடன் இமயம் கம்பீரமாய் காட்சி தருகிறது. மந்தாகினி தாவிப் புரண்டோடுகிறது. மாதவ் தன் அமர்தேவை தேடிக்கொண்டே இருப்பதுபோல சுருளிச்சாமியும் மகள் சாதாரியைத் தேடியபடியே அலைந்து கொண்டிருக்கிறார்.

மரணத்தைக் கண்டு அஞ்சுவோர் அநேகம். அதைப் பொருட்படுத்தாது வரும்போது வரட்டும் என்று மதிக்காதோர் சிலர். மரணத்துடன் போராடி அதை ஒத்திப்போடும் துணிவுடையோர் இன்னும் சிலர். இவர்களில் யாரையும் விட்டுவைப்பதில்லை மரணம். ஒருவித சமன்பாட்டை உணர்த்தும்பொருட்டு அனைவரையுமே ஒரே நேரத்தில் அள்ளிக்கொண்டு போகிறது. இயற்கையை தான் வென்றுவிட்டதாக மனிதன் எண்ணுந்தோறும் இல்லை என்று அவனுக்கு உணர்த்த ஏதேனும் ஒரு பேரிடரில் தன் ஆற்றலை வெளிப்படுத்திவிட்டு மீண்டும் சாந்தமாகிவிடுகிறது இயற்கை. இந்த இரண்டுவித ஆட்டங்களையும் நாவலில் காணமுடிகிறது.   

சுருளிச்சாமிக்கும் மாதவ்வுக்குமான உரையாடலாகத் தொடங்கி, அதனுள்ளேயே யோகி பத்ரபாகு மகராஜ்க்கும் மாதவ்வுக்குமான உரையாடலாகவும் நீண்டு உருமாறுகிறது. பிறகு, நாவலின் போக்கில் வாழ்வுக்கும் மரணத்துக்குமான உரையாடலாகவும் விவாதமாகவும் மாறிவிடுவதை உணரலாம்.      

மஞ்சுநாத் இமயமலையில் தொடர்ந்து பயணம் செய்பவர். அதன் ஆழ அகலங்களை நன்கறிந்தவர். சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள் அல்லாத பல பிரதேசங்களில் தனியாக பயணம் செய்த அனுபவம் உண்டு. அங்குள்ள சாதுக்கள், குதிரைக்காரர்கள், பாண்டாக்கள், கடைக்காரர்கள், சிறு வியாபாரிகள் என்று பலதரப்பட்ட மக்களுடன் பழகியவர். கங்கையும், மந்தாகினியும், அல்காநந்தாவும் எந்தெந்த பருவத்தில் எப்படி உருமாறுவர் என்ற சூட்சுமங்கள் அறிந்தவர். இமயச் சிகரங்களில் குளிரிலும் மழையிலும் பனியிலும் அலைந்திருப்பவர். நாவலுக்காக இத்தகைய ஒரு களத்தை எடுத்துக்கொண்டிருப்பதில் வியப்பேதுமில்லை. ஆனால், அந்த இரண்டு நாட்களில் நடந்தவற்றை சித்தரிப்பதோடு மட்டுமல்லாமல் இவ்வாறான ஒரு அடிப்படை விவாதமாகவும் அமைத்திருக்கிறார். இமயத்தின் அழகை வர்ணிக்கும் அதே நேரத்தில் அதன் அபாயத் தோற்றங்களையும் காட்டியிருக்கிறார். பல இடங்களில் பயன்படுத்தியிருக்கும் உவமைகள் குதிரைகளோடும், மந்தாகினியோடும் தொடர்புடையனவாகவே அமைந்துள்ளன.

கேதார்நாத்தில் நடந்த பேரிடரைப் பற்றிய நாவல் என்று எளிமையாகச் சொன்னால் இது வாசிக்க பரபரப்பான நாவலாக இருக்கும் என்ற எண்ணம் உடனடியாக எழும். உண்மைதான். ஆனால், அத்தகைய பரபரப்புத்தன்மையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் வாழ்வுக்கும் மரணத்துக்குமான உரையாடலாக்கி ஆழம் சேர்த்திருக்கிறார். அதுவே இந்த நாவலுக்கு கூடுதலான பரிமாணத்தையும் சாத்தியப்படுத்தியுள்ளது.

( ‘அப்பன் திருவடி’ நாவலுக்கான முன்னுரை. எதிர் வெளியீடு. ) 


 

No comments:

Post a Comment

வாழ்வுக்கும் மரணத்துக்குமான உரையாடல் மஞ்சுநாத்தின் ‘அப்பன் திருவடி’

  வங்க எழுத்தாளரான ராணி சந்தா, தாகூரின் மாணவி. தாகூரின் இறுதிக் காலத்தில் கடிதங்களுக்கு பதில் எழுதுவதும் கவிதைகள், கட்டுரைகளைக் கேட்டு எழுது...