Wednesday, 1 October 2025

கவிதையும் ஞானமும் - 3 * யானை ரயில் கடல் - ஆனந்த் குமார்

 



3

யானை ரயில் கடல்

ஆனந்த் குமார்

 0

அப்பா திடீரென

ஒரு யானை வாங்கி வந்தார்

நான் அதை

வாசலில் கட்டி வைத்தேன்

நடைக்கு அழைத்துச் சென்று

நண்பர்களிடம் காட்டினேன்

ஆனாலும் என் தீராத ஆசையால்

மீண்டும் அழுதேன்

 

அவர் ஒரு ரயிலை

கொண்டு வந்தார்

அதில் ஊரெங்கும் சுற்றினேன்

முன்னும் பின்னும் அதை செலுத்தினேன்

மீண்டும்

போதாது போதாது என

சிணுங்கத் தொடங்கவும்

 

இந்தக் கடலை எனக்குத் தந்தார்

அதன் கரைகள் எங்கும்

வீடுகள் கட்டினேன்

அலைகள் எண்ணி எண்ணித் தீர்ந்து

நான் அடம்பிடிக்கத் தொடங்குகையில்

அப்பா காணாமல் போயிருந்தார்

 

தினம் தினம் மாலை

இங்கு வருகிறேன்

அன்றைய சூரியனை

இந்தக் கடலுக்குள் இட்டு

காத்திருக்கிறேன்

இந்த உண்டியல் நிரம்பும்போது

அதைக் கொடுத்து

ஒரு யானை வாங்குவேன்.

0

ஆனந்தகுமாரின் இந்தக் கவிதை என் குழந்தைப் பருவத்தைப் பற்றி யோசிக்க வைத்தது. என்னுடைய அப்பா எனக்காக பொம்மைகள் எதுவும் வாங்கித் தந்தாரா? இத்தனை விதமான பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் சந்தைக்கு வராத காலம் என்றாலும் அவர் எனக்கென பொம்மைகள் எதுவும் வாங்கி வந்ததில்லை. கைத்தறிச் சேலைகளை வியாபாரியிடம் கொடுத்து கூலிப் பணத்தைப் பெற்றுத் திரும்பும் நாட்களின் இரவு நேரங்களில் காத்திருந்து நான் தூங்கிப் போயிருப்பேன். மறுநாள் காலையில் எழும்போது தலையணைக்கு அருகில் கோன் வடிவத்தில் க்ரீம் நிரப்பிய குழல் கேக்குடன் ஒரு பொட்டலம் இருக்கும். திருப்பூர் மேட்டுப்பாளையம் வீனஸ் பேக்கரியின் புகழ்பெற்ற கேக். சில நாட்களில் தேங்காய் பன். இதைத் தவிர விளையாட்டு பொம்மைகள் எதையும் அவர் வாங்கித் தந்ததுமில்லை. வேண்டுமென்று நான் கேட்டதுமில்லை.

இரண்டு வருடத்துக்கு ஒரு முறை பண்டரி பஜனை கோஷ்டியினர் பதினைந்து நாள், இருபது நாள் தென்னிந்திய கோயில்களுக்கு யாத்திரை செல்வது வழக்கம். பஜனை கோஷ்டியில் மிருதங்கம் வாசிப்பவர் என்பதால் அப்பாவும் அவருடன் அம்மாவும் யாத்திரைக்குச் செல்வது, பொருளாதார தடங்கல்களையும் மீறி எப்படியோ நடந்துவிடும். பஜனை கோஷ்டி ஊருக்குத் திரும்பி வரும் நாளை எல்லோருமே எதிர்பார்த்திருப்பார்கள். நானும். அப்போதுகூட பொம்மைகள் எதுவும் வாங்கி வந்தது இல்லை. அதிசயமாய் ஒரு முறை சோலாப்பூரிலிருந்து இரண்டு போர்வைகள் வாங்கி வந்தனர்.  அதேபோல மூன்றாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் பள்ளிக்கூடத்துக்கு கொண்டு போகவென ஒரு அழகிய பையை வாங்கி வந்தார். அடர் பழுப்பு வண்ணத்தில் தங்க நிற வளையங்கள் இட்ட ரெக்சின் பை அது. இரண்டு பக்கங்களிலும் கிளிப்புகளைக் கொண்டு மூடும்படியானது. பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களும் அக்கம்பக்கத்தினரும் அதிசயமாய் பார்த்து வியந்த ஒன்று. காதறுந்த மஞ்சப் பையோ காக்கிப் பையோதான் அனைவரும் கொண்டு வரும் புத்தகப் பைகளாக இருந்தபோது நவீனமான அப்படியொரு பையை அனைவரும் அப்படி வியந்து வாய் பிளந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. நான்காம் வகுப்பு வரை அந்தப் பையைத்தான் பயன்படுத்தினேன். ஆனால், ஐந்தாம் வகுப்புக்கு போன சமயத்தில் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு நானும் ஒரு காக்கிப் பையில் புத்தகங்களை எடுத்துச் சென்றேன். பொன்னிற வளையங்கள் மங்கி விளிம்பில் அட்டை தெரிய விரிசலடைந்த அந்த ரெக்சின் பை வெகுநாட்கள் வரை அட்டாரியில் கிடந்தது. அம்மா எப்போது அதைத் தூக்கி எறிந்தார் என்று நினைவில்லை.

குழந்தைகளின் உலகை கவிதைக்குள் கொண்டு வருவது பெரும் சவால். எல்லோருமே பொன்னான அந்த நாட்களைக் கடந்து வந்திருப்போம் என்றாலும் கவிதையாக மாற்றுவது சாத்தியமில்லை. தூயதும் களங்கமற்றதும் இயல்பானதுமான அப்பருவத்தின் ஒவ்வொரு கணமும் விசை குறையாத ஆற்றலையும் தெவிட்டா குதூகலத்தையும் ஒருங்கே கொண்டவை. அவ்வுலகின் கணங்களை மொழியில் வடிப்பதில் சிக்கல்கள் உண்டு. குழந்தைகளின் உலகில் பயின்றுவரும் மொழிக்கு இலக்கணங்கள் இல்லை. ஒவ்வொரு குழந்தையும் தனக்கென ஒரு தனி மொழியைக் கண்டடைகிறது. தனக்கான மொழியை அது புற உலகின் மொழியிலிருந்தே உருவாக்குகிறது என்றாலும் அப்படி தனித்து உருவாக்கிய பின்பு மூலத்திலிருந்து அவற்றை முற்றிலும் விலக்கி விடுகின்றன. சிறப்பான இத்தன்மையை கண்டறிந்து கவிதைக்குள் கொண்டு வர முடிந்தால் அவன் கவிஞன்.

கேட்டதை வாங்கித் தரும் அப்பாக்களிடம் குழந்தைகள் எப்போதும் பெரிதினும் பெரிது கேட்பதே வழக்கம். ஒரு பொருள் கடை அலமாரியில் இருக்கும்போது அதன் மீதுள்ள மயக்கமும் ஆசையும் கைக்கு வந்தவுடன் காணாமல் போகும் மாயத்தை பகுத்தறிவது கடினம். கிட்டிய பொருளை கையில் இடுக்கியவுடனே அந்த மயக்கத்தையும் ஆசையையும் வேறொரு பொம்மையின் மீது மடைமாற்றுவதற்கு முன்பே கடையிலிருந்து அகலத் தெரிந்த அப்பாக்கள் இவ்வுலகில் உண்டா என்ன? 

வெளியூர் போய்விட்டு திரும்பும்போது குழந்தைகளுக்கு பொம்மை வாங்கி வரும் பழக்கத்தை யார் ஆரம்பித்து வைத்தார்கள் என்று தெரியாது. ஆனால், அந்தப் பழக்கத்தைத் தெரிந்தோ தெரியாமலோ கடைபிடிக்கத் தொடங்கிவிட்டால் பிறகு நிறுத்துவது கடினம்.

அப்பாவுக்கும் பிள்ளைக்குமான உறவை இந்த பொம்மைகள்தான் நிர்ணயிக்கின்றனவா? வாங்கி வராமல் போனால் பாசமில்லாமல் போகுமா? குழந்தைகள் நிச்சயம் அழும். அடம்பிடிக்கும். ஆனால், அதற்காக அப்பாவை வெறுத்துவிடாது. ஒருநாள், சில நிமிடங்கள் அந்த ஏமாற்றம். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு குழந்தை மறந்துவிடும். ஆனால், அப்பா அதை மறக்கமாட்டார். அடுத்த முறை இந்தத் தவறை செய்யக்கூடாது என்று முடிவெடுப்பார்.

பிள்ளைகளுக்கு அப்பாக்கள் வாங்கி வரும் பொம்மைகள் ஒவ்வொன்றாய் சேர்ந்தபடியே உள்ளன. சிறிதும் பெரிதுமாய் வெவ்வேறு வண்ணங்களில் அவை குவிந்தவண்ணமே உள்ளன.  குழந்தைகள் பிறந்த நாள் முதல் அவை வீட்டுக்குள் இடம் பிடிக்கின்றன. வளருந்தோறும் குழந்தைகளின் விருப்பத்துக்கேற்ப பொம்மைகள் மாறுகின்றன. சிலருக்கு விதவிதமான கலர்கலரான கார்களின் மீது பிரியம். இன்னும் சில குழந்தைகளுக்கு சூப்பர் மேனும் ஸ்பைடர் மேனும். வேறு சிலருக்கு அழகாக உடுத்திய பார்பி பொம்மைகள். புல்டோசரையும் டிராக்டர்களையும் கேட்டு வாங்கும் குழந்தைகளும் உண்டு. பொம்மைகள் இல்லாத வீடுகளை எங்கேனும் உள்ளனவா? வாய்ப்பில்லை.

ஆனந்தகுமாரின் இந்தக் கவிதையைப் படித்தபோது ஒரு கேள்வி முளைத்தது. குழந்தைகள் வளர்ந்த பிறகு இந்த பொம்மைகள் என்னவாகின்றன? வளர்ந்த பிறகு குழந்தைகள் பொம்மைகளை பொருட்படுத்துவதில்லை. பரணில், அட்டைப் பெட்டிகளில், பால்கனி மூலைகளில் அவை கைவிடப்பட்டவைகளாய் கிடக்கின்றன. பொம்மைகளோடு சேர்ந்து காணாமல் போவது குழந்தைப் பருவமும்தான். அவர்கள் இப்போது குழந்தைகள் இல்லை. வளர்ந்தவர்கள். அப்பாக்களிடமிருந்து பொம்மைகளை அவர்கள் எதிர்ப்பார்ப்பதில்லை. எது வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். அவர்களே தேடிப் பார்த்து வாங்கிக் கொள்கிறார்கள். இனி பொம்மைகள் அவர்களுக்குத் தேவையில்லை.

பொம்மைகள் தேவைப்படாதபோது, அவற்றை வாங்கி வரவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு காணாமல் போகும்போது, குழந்தைகள் பெரியவர்களாகி நிற்கும்போது அப்பாக்களுக்கும் குழதைகளுக்குமான உறவு நிறைகிறது. அந்த நிறைவில் ஒரு விலகலும் உண்டு. மிகவும் சிக்கலான காலகட்டம். இந்த இடைவெளியை விலகலை சரியாகப் புரிந்துகொள்ளும்போது அப்பாவுக்கும் பிள்ளைக்குமான உறவில் நெருக்கம் அமைகிறதோ இல்லையோ பிரிவு ஏற்படாது.

பிள்ளைகள் வளர்ந்து அப்பாக்கள் ஆவார்கள். ஒருநாள் அவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கான பொம்மைகளை ஆசையுடன் வாங்கியபடி வீடு திரும்புவார்கள். 

செல்லம் கூடிப்போகும்போது யானையும் ரயிலும் கடலும்கூட பொம்மைகளாக்கித்தான் போகும். அவற்றை வாங்கித் தர அப்பாக்களும் இருப்பார்கள். அப்பா வாங்கி வந்த யானையை ரயிலை கடலை வைத்து விளையாடும் பிள்ளைகளும் இருப்பார்கள். ஆனந்தைப் போன்ற கவிஞர்கள் அன்றாடச் சூரியனை கடலில் சேமித்து அந்தச் சேமிப்பைக் கொண்டு ஒரு நாள் யானையையும் வாங்குவார்கள்.

அப்பாக்களும் பிள்ளைகளும் பொம்மைகளுமான உலகில் இதுவொரு தீராத விளையாட்டு.

0

அக்டோபர் 2025 ஆவநாழி 32ஆம் இதழில் வெளியானது.

No comments:

Post a Comment

கவிதையும் ஞானமும் - 4 • எடிசன் புன்னகைக்கிறார்

  அற்புத விளக்கு பெரு விஷ்ணுகுமார் 0 நள்ளென் யாமத்தில் உறக்கம்கலைந்து தட்டுத்தடுமாறி சுவரில் கைவைத்துத் தடவியபடி அறையின் விளக்கை எரியவைக...