Friday 26 June 2020

தமிழ்ச் சிறுகதை இன்று – 07 கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் கதைகள்


இருண்ட வானில் ஒளிரும் நட்சத்திரங்கள்
தமிழ்ச் சிறுகதை இன்று கட்டுரைத் தொடரின் ஏழாவது பகுதி இது. தூயனில் தொடங்கி சுரேஷ் பிரதீப், சித்துராஜ் பொன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, ராம் தங்கம், அனோஜன் பாலகிருஷ்ணன் ஆகியோரது சிறுகதைகளைப் பற்றி எழுதியதைத் தொடர்ந்து கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் கதைகளைக் குறித்து வெளியாகிறது இந்தப் பகுதி.
0
எழுதுவதும் வெளியிடுவதும் பதிப்பிப்பதும் இன்று மிகச் சுலபமான காரியங்கள். இணைய இதழ்களின் வழியாக உலகளாவிய வாசக கவனிப்பையும் பெற முடிகிறது. இரண்டாயிரத்தில் நாவல்கள் பெரும் வீச்சில் எழுதப்பட்டபோது சிறுகதைகளின் மீதான கவனம் சற்றே குறைந்தது. இப்போது மீண்டும் சிறுகதைகள் அதிக அளவில் எழுதப்பட்டு ஏராளமான தொகுப்புகள் வெளியாகின்றன. இணைய இதழ்களில் மூலமாக குறிப்பிட்ட இடைவெளியில் இருபதுக்கும் மேற்பட்ட கதைகளை வாசிக்க முடிகிறது. அளவுக்கு அதிகமாக அமையும்போது கவனம் சிதறுவதுதான் இதில் உள்ள எதிர்மறையான அம்சம். எல்லாவற்றையும் வாசிக்க முடியாமல் போகும். நிறைய வாசிக்கும்போது நினைவில் வைத்துக்கொள்ளவும் இயலாமலாகும். எனவே, வாசிப்பவர்களின் நினைவில் பதியும்படியான காத்திரமான படைப்பை எழுதுவதுதான் இன்றைய சவால்.
0
கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘டொரினா’ 2018ம் ஆண்டு வெளியானது. ‘நட்சத்திரவாசிகள்’ நாவல் இந்த ஆண்டு வெளிவந்திருக்கிறது.

ஒரு அறிமுக எழுத்தாளனின் முதல் தொகுப்பில் வாசிக்கக் கிடைக்கும் கதைகள் ‘டொரினா’விலும் இடம்பெற்றிருந்தன. பால்யகால நினைவுகள், பள்ளிப்பருவ நிகழ்வுகள் என வாழ்வின் உற்சாகமானத் தருணங்களை களமாகக்கொண்டிருந்தன ‘டொரினா’, ‘யயகிரணம்’ ஆகிய கதைகள்.

டொரினோ ஏற்கெனவே தமிழ்ச் சிறுகதைகளில் எழுதப்பட்ட ஒரு  கதை. முதிரா இளம்பருவத்தின்போது வயதில் மூத்த பெண்கள் தம் இயல்பின் காரணமாக நமக்குள் உருவாக்கும் சித்திரம் வசீகரமானது. ஆனால் காலச் சுழலில் கற்பனைக்கு எதிரான நிலையில் அவர்களைச் சந்திக்க நேரும்போது ஏற்படும் சமன்குலைவு விவரிக்கமுடியாதது. அத்தகைய கூரிய யதார்த்தத்தை மையமாகக் கொண்டது ‘டொரினா’. இளமைக்கேயுரிய ஆர்வமும் முனைப்பும் வசீகரமும் மிகுந்த நாட்கள் நினைவில் எழும்போதே அன்றைய மனிதர்களின் இன்றைய முரண் நிலையைக் காணநேர்கையில் ஏற்படும் சங்கடத்தைக் கடப்பது அத்தனை சுலபமல்ல.

'யயகிரகணம்' என்கிற தலைப்பில் உள்ள தனித்துவமும் கதைநெடுக அது உணர்த்தும் மன இறுக்கமும் கதையின் தனித்துவமாக அமைந்துள்ளது . ஆனால் கதையினூடே சொல்லப்பட்டுள்ள நவீன இலக்கியம் சார்ந்த பெயர்களும் சொல்லாடல்களும் கதையின் மையத்துக்கு எந்தவிதத்திலும் வலுசேர்க்கவில்லை. அவை இல்லாமலேயே இந்தக் கதையை வேறு தளத்துக்கு சுலபமாக நகர்த்தியிருக்க முடியும். 

‘வழிப்போக்கன்’, ‘விசுவாசம்’ இரு கதைகளும் ஆழ்மனத்தின் புரிந்துகொள்ள முடியாத விநோதங்களை நுட்பமாகச் சித்தரிப்பவை. ஒவ்வொருவரும் வாழ்வில் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். மனிதர்களைச் சந்திக்கவும் வாய்த்திருக்கும். இக்கதைகளை வாசிக்கும்போது நம் அனுபவத்தின் சாரமும் இணைந்துகொள்ளும் சாத்தியமிருக்கிறது. எனவே இவை வெகு இயல்பாக வாசகனுக்கு பிடித்தமான கதைகளாக அமைந்துவிடுகின்றன. ஊடகங்களும் திரைப்படங்களும் பொதுப்புத்தியில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் குறித்து ஏற்படுத்தியிருக்கும் சித்திரத்தில் உள்ள யதார்த்தமின்மையை களைவதற்கு இதுபோன்ற கதைகள் அவசியமாகின்றன.

ஒரு நல்ல சிறுகதைக்கான இலக்கணங்களான தொடக்கம், நகர்வு, முடிவு ஆகிய மூன்றுமே கச்சிதாக அமைந்திருக்கும் கதை ‘முடிச்சுகள்’. தொடர்பற்ற பல்வேறு முடிச்சுகளின் வழியாக பயணித்து அதன் முடிவில் தன் தந்தையைக் குறித்த முழுமையான சித்திரத்தை கண்டடையும் கதை வடிவம் மிக நேரத்தியாக எழுதப்பட்டுள்ளது. அதேசமயம், கதையின் இறுதியில் அவன் அறிந்துகொள்ளும் தந்தை மேலும் புதிரானவராக புதிய தேடலுக்கான தேவை கொண்டவராக அமைந்திருப்பது இந்தக் கதைக்கான இன்னொரு தொடக்கத்தை சாத்தியப்படுத்தியுள்ளது. அறிதல்களின் முடிவில் நாம் சந்திக்க நேர்வது வேறொரு அறியாமையே என்பதை உணர்த்துகிறது.

தந்தை மகன் உறவின் இருமை நிலையை அடிப்படையாகக் கொண்டு எழுதிய இரண்டாவது கதை ‘புள்ளிக்கு பதிலாக வட்டங்கள்.’ கதையில் உருவாக சாத்தியமான உணர்வெழுச்சிகளை மட்டுப்படுத்தி எளிய சித்தரிப்பாக நிறுத்தி கூடுதலாக அழுத்தத்தைச் சேர்க்க இந்தக் கதையின் வடிவம் உதவியிருக்கிறது.

சிறுகதைகளின் மொழி, வடிவம், செய்நேர்த்தி சார்ந்த தெளிவுகளைக் கொண்டவர் கார்த்திக் பாலசுப்ரமணியம் என்பதை அடிக்கோடிட்டு காட்டியிருக்கும் கதை ‘இரு கோப்பைகள்’. தொகுப்பின் சிறந்த கதையும்கூட. ஆஸ்திரேலியாவில் நடப்பதாகக் காட்டப்படுகிறதென்றாலும் இதன் உணர்வு நிலை அனைவருக்குமானது. காலதேச எல்லைகளைக் கடந்தது. மனித உறவுகள் குறுகி, குடும்ப அமைப்பு உடைபட்டு வெவ்வேறு காரணங்களின்பொருட்டு ஒருவரைவிட்டு ஒருவர் விலகியிருக்கும் காலத்தில் தனிமையை ஏற்றுக்கொள்ளநேரும் முதியவர்களின் இறுதிக்காலம் துயரமானது. வாழ்வில் எஞ்சியிருக்கும் ஒவ்வொரு நாளையும் கடக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வலிமிகுந்தவை. மூப்பையும் பிணியையும்விட அகலாது கவிந்திருக்கும் வெறுமையைச் சமாளிப்பதே அவர்களுக்கான சவால். அந்திமக் காலத்தில் மனைவியின் உறுதுணையின்றி நிற்க நேரும் ஆண்களின் நிர்கதியற்ற அவலநிலையை கலை அமைதியுடன் நேர்த்தியாக சித்தரிக்கிறது ‘இரு கோப்பைகள்.’

ஒரு சிறுகதையாளராக கார்த்திக்கின் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் கதையாக ‘இரு கோப்பைகள்’ இடம்பெற்றிருக்கும் தொகுப்பில் உள்ள ‘பார்வை’, ‘லிண்டா தாமஸ்’, ‘பொதுப்புத்தி’ ஆகிய மூன்று கதைகளும் தொகுப்புக்குப் பின் எழுதிய ‘மேய்ப்பரின் கருணை’ கதையும் அவரை சமகால சிறுகதையாளர்களின் பொதுப்போக்கிலிருந்து விலக்கி தனித்துவப்படுத்துகின்றன. இந்த நான்கு கதைகளையும் கார்த்திக் தன் பணிச்சூழலின் பின்னணியில் எழுதியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழக இளைஞர்களையும் பெற்றோர்களையும் சமூகத்தையும் கவர்ந்து இழுத்திருக்கும் இரண்டு துறைகள் கணிணி அறிவியலும் தகவல் தொழில்நுட்பமும். தமிழகத்தின் பள்ளிக் கல்வியின் திசையையே மாற்றியிருப்பவை. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பெருமளவு சம்பளத்தையும் அயல்நாட்டு வாழ்வையும் உத்தரவாதப்படுத்திய மாயக்கரங்கள் இவை. இன்றைய நிலை மிகவும் கேள்விக்குரிய ஒன்றாக இருந்தபோதிலும் அதன் மீதான கவர்ச்சி மட்டுப்படவில்லை. இளைஞர்களின் வாழ்வை புரட்டிப்போடும் கணிணி தகவல் தொழில்நுட்பத் துறைசார்ந்த வேலைகளைக் குறித்து சமூகத்தில் மொழியப்படும் வாய்வழிக் கதைகள் ஏராளம். கட்டுக்கதைகளும் சரிபாதி. இளைஞர்களிடையே இத்துறை செலுத்தியிருக்கும் ஆதிக்கமும் பாதிப்பும் அளப்பரியவை. வாழ்வின் பல்வேறு மதிப்பீடுகளை பொருளாதாரத்தின் பெயரால் இத்துறை அசைத்துப் பார்த்திருக்கிறது. ஆட்டம் காணச் செய்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு இவ்விரு துறைகளும் ஏற்படுத்தித் தந்திருக்கும் பொருளாதார சுதந்திரமும் வாய்ப்புகளும் அவர்களது சமூக நிலையிலும் இருப்பிலும் வலுவான மாற்றங்களை உருவாக்கியுள்ளன.  இந்த மாற்றங்களைக் குறித்து தனிமனித அளவிலும் மனநல நோக்கிலும் ஆராயப்படவேண்டிய அவசியமும்  ஏற்பட்டுள்ளது.

கணிணி தொழில் நுட்பத் துறை சார்ந்த படைப்புகள் பலவும் எழுதப்பட்டுள்ளன. இத்துறையின் அடையாளங்களாக பெருமளவில் அவை அடையாளப்படுத்துவது காமம், போதை, களியாட்டம் போன்றவைதான்.  அப்படி இல்லையா என்று கேட்டால் அப்படி மட்டுமே இல்லை என்றுதான் பதில் சொல்கிறார்கள். அவற்றுக்கு அப்பால் இத்துறை சார்ந்த சிக்கல்களையும் அரசியலையும் உத்தரவாதமின்மை உருவாக்கும் பதற்றத்தையும் வெளிப்படுத்தும் படைப்புகளின் வழியாகவே முழுமையான ஒரு புரிதலை அடையமுடியும்.

அந்த வகையில் ‘பொதுப்புத்தி’, ‘பார்வை’ ஆகிய இரண்டு கதைகள் முக்கியமானவை.

அடுத்தடுத்து ஏராளமான பொறியாளர்கள் உருவாகித் திரளும் போட்டிச் சூழலில் ஒவ்வொருவரும் தமது இடத்தைத் தக்கவைத்துக் கொள்வது பெரும் சவாலாக உள்ளது. பிற துறைகளில் அனுபவம் என்பது பெரும் அனுகூலும். ஆனால் இந்தத் துறையில் அதுவே பலவீனமாக உருமாறும் எதிர்நிலை யதார்த்தத்தை ‘மேய்ப்பரின் கருணை’ விவரிக்கிறது. வேலைத் திறன்களை அடுத்தவர்க்கு கைமாற்றுவது, தனக்கடுத்து இன்னொரு அணியை உருவாக்குவது போன்ற பொதுவான இயல்பான முன்னெடுப்பில் கற்றுக்கொள்பவனை கற்றுத்தருபவருக்கு போட்டியாளராக நிறுத்தி அவரது இடத்தை நிரப்புபவனாகவும் ஆக்கும் ‘நிர்வாக மேலாண்மை’யின் சூட்சுமத்தை அடிப்படையாகக் கொண்டது ‘லிண்டா தாமஸ்’.

பெண்கள் எதிர்கொள்ளும் துறைசார்ந்த அழுத்தங்களும் அதன்பொருட்டு ஏற்றுக்கொள்ளும் சமரசங்களும் மனச்சரிவை ஏற்படுத்துபவை. உறவுகளில் விவரிக்க முடியாத சிக்கல்களை உண்டுபண்ணுபவை. கணவன்-மனைவி என்ற உறவு நிலையைத் தாண்டி குடும்பத்தின் பொருளாதார நிலைக்காக உழைக்கும் ஆண்-பெண் என்ற நிலையில் இருவரும் தத்தமது பொறுப்புகளை சரிவர நிறைவேற்ற முடிவதில்லை. பெற்றக் குழந்தையை அருகிருந்து பார்த்துக்கொள்ள வாய்ப்பதில்லை. இதற்கு இணையாக தமிழகத்தின் ஏதோவொரு கிராமத்திலிருந்தோ சிறு நகரத்திலிருந்தோ வந்து திசை தெரியாத பெருநகரில் ‘கூகுள் மேப்’பின் உதவியோடு ‘கால்’டாக்ஸி ஓட்டுநர்களாக வாழ்வை தடுமாற்றத்துடன் நகர்த்தும் இளைஞர்களின் மனஅழுத்தங்கள் வேறுவிதமானவை. இவ்விரண்டு நபர்களும் ஒருவரையொருவர் சந்திக்க நேரும்போது இருவரின் மனஅழுத்தங்களும் மோதி தேவையற்ற விளைவுகளை உருவாக்கும் நிலையை ‘காகித முகங்கள்’ கதை விவரிக்கிறது.

துறைசார்ந்த கதைகளின் வழியாக தனது தனித்துவத்தை நிறுவும் கார்த்திக், அதை உறுதிப்படுத்துவதற்கு எடுத்து வைக்கும் அடி இன்னும் புதிதாக வலுவானதாக இருக்கவேண்டியது அவசியம். தகவல்களின் அடிப்படையிலான நவீன ஆராய்ச்சிகளும் ஆற்றல்வாய்ந்த பல்வேறு செயலிகளின் வழியாக தனிமனித வாழ்வின் அன்றாடங்களில் வெகு இயல்பாக ஊடுருவும் சாமர்த்தியத்தின் விளைவுகளையும் பற்றி கவனிக்கிறார். தனிமனித அளவில் இத்தகைய செயலிகள் கண்டடையும் தகவல்களைக்கொண்டு நிகழ்த்தும் மாயங்களை அடிப்படையாகக்கொண்டு ‘சுழல்’ என்ற கதையை எழுதியிருக்கிறார்.

அதன் அடுத்த நிலையாக தகவல்களின் அடிப்படையில் உருவாக்கும் மெய்நிகர் உலகின் சாத்தியங்களைச் சொல்லும் கதையைக அமைந்திருக்கிறது ‘மெய்நிகரி.’ கைபேசியும் அதன் பல்வேறு செயலிகளும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தனியான அந்தரங்கமான உலகத்தை உருவாக்குகின்றன. அடுத்தவரிடமிருந்து அவனைத் தனிமைப்படுத்துகின்றன. எதற்காகவும் யாருக்காகவும் சார்ந்திருக்கவேண்டியதில்லை என்ற நிலையை ஏற்படுத்துகின்றன. வழிகாட்ட ‘கூகுள் மேப்’, பசிக்கு ருசியான உணவைத் தர ‘ஸ்விகி’ அல்லது ‘ஜொமாட்டோ’, பணப் பரிமாற்றத்துக்கு ‘கூகுள் பே’ அல்லது ‘பே.டி.எம்’, வாடகைப் பேரமற்ற பயணம் செய்ய ‘ஓலா’ அல்லது ‘ஊபர்’ உடனடி தகவல் பரிமாற்றத்துக்கு அல்லது உலகிற்கு கருத்து சொல்ல ‘இன்ஸ்டாகிராம்’ அல்லது ‘வாட்ஸ் அப்’ என்று எல்லாவற்றுக்குமே செயலிகள் உண்டு. இவ்வாறு தொடர்ந்து சகமனிதர்களிடமிருந்து விலகி விலகி தனிமையில் தள்ளப்படும்போது தேவைப்படும்போது தனக்கான இணையை மெய்நிகரியாக வரவழைத்துக்கொள்ளலாம் என்ற சாத்தியத்தைச் சொல்லும் இந்தக் கதை கார்த்திக்கின் புனைவுலகை ‘அறிவியல் புனைகதை’ உலகத்துக்கு நகர்த்தியுள்ளது.

கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் கதைமொழி மிகவும் எளிமையானது. இலக்கணப் பிழைகளோ சொல் மயக்கங்களோ வாக்கியக் குழப்பங்களோ இல்லாத நேரடியான சித்தரிப்பு முறையைக் கொண்டது. கதையின் தேவைக்கேற்ப வடிவங்கள் சார்ந்து சில மாற்றங்களை அனுமதிப்பது. வாசகனின் கவனத்தை திசைதிருப்பும் அநாவசியமான வித்தைகளற்றது. இதனால் கதைகளை தடையின்றி அணுகவும் வாசிக்கவும் முடிகிறது.
நுட்பமும் கச்சிதமும் கூடிய வாசிப்புத்தன்மையைக் கொண்டிருக்கும் ‘இரு கோப்பைகள்’, ‘மெய்நிகரி’, ‘புள்ளிக்கு பதிலாக வட்டங்கள்’ போன்ற கதைகளை அவரது புனைவுமொழிக்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.

கணிணி தகவல் தொழில்நுட்ப துறைச் சார்ந்தவர்களைப் பற்றிய பொதுவான மனப்பதிவை மாற்றும்வகையிலும் சமூகப் பார்வை ஒருதலைபட்சமானது என்பதை சுட்டிக்காட்டும் விதத்திலும் கார்த்திக்கின் படைப்புகள் முக்கியமானவை. கணநேரம் கண்சிமிட்டி உதிரும் எரிநட்சத்திர வாழ்வின் மன அழுத்தம், நாற்பது வயதில் ஓய்வு பெற வேண்டிய அவசரம் தருகிற பதற்றம், எந்தநேரமும் வேலை பறிபோகலாம் எனும் நிச்சயமின்மை, குழந்தைப் பேறின்மை தொடங்கி பல்வேறு உடல் உபாதைகள், ஒழுங்கற்ற இணைவாழ்வு என எல்லையற்ற குழப்பங்களும் சிக்கல்களும் கணிசமானவை. வசீகரமாக ஒளிரும் கண்ணாடி உலகத்துக்கு வெளியே உள்ளவர்கள் முழுக்க அறியாதவை. அல்லது அக்கறை கொள்ளதாவை. இத்துறையின் புழங்குமொழியையும் குறியீட்டுச் சொற்களையும் கொண்ட புதிய திணைக் கோட்பாட்டின் அடிப்படையில் கார்த்திக் உருவாக்கும் புனைவுலகம் அடர்த்தியானது. அத்துடன் ஆற்றல் மிகுந்த செயலிகள் வழியாக நிகழவுள்ள எதிர்கால சாத்தியங்களையும் உள்ளடக்கியிருப்பது அதை பொருண்மைமிக்கதாய் ஆக்குகிறது.

தமிழ் புனைவுலகத்துக்கு புதிய கதைக்களங்களை அறிமுகப்படுத்திய ‘இரு கோப்பைகள்’, ‘மெய்நிகரி’, ‘சுழல்’ போன்ற கதைகளும் கணிணி தகவல் தொழில்நுட்ப உலகைச் சார்ந்த அரசியலையும் அதன் உள்ளடுக்குகளையும் திருத்தமாகச் சொல்லும் ‘நட்சத்திரவாசிகள்’ நாவலும் பல்வேறு புனைவுகள் சார்ந்து தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகளும், ‘ரட்சகன்’, ‘ஜன்னல்’ போன்ற குறுங்கதைகளும் நவீன தமிழ் புனைவுலகில் கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
0


சில கவிதைகள்



01
வேறொரு சனிக்கிழமை
0
சனிக்கிழமைகள் வழக்கமானவைதான்.
கொஞ்சம் படிக்கவும்
கொஞ்சம் எழுதவும்
கொஞ்சம் தூங்கவும்
கொஞ்சம் அரட்டையடிக்கவும் தோதானதுதான்.

இன்று சனிக்கிழமை.
வெகுநாள் கழித்து காலையில் உன் அழைப்பு.
நான் கவனிக்கவில்லை.
அலைபேசியை எடுத்து பார்த்தபோதுதான்
அந்த அதிவேளையை தவறவிட்டதை உணர்ந்தேன்.
அழைத்துப் பார்த்தேன்.
பதில் இல்லை.
தெரிந்ததுதான்.
இத்தனை காலமும் இப்படி எத்தனை அழைப்புகளை
தொலைத்திருக்கிறேன்.

பேச முடியாமல்போன அந்த அழைப்பு
பேசிக் களித்து தொட்டுச் சிலிர்த்த
எத்தனையோ சனிக்கிழமைகளின்
எத்தனையோ நினைவுகளை
சொடுக்கிக் கொணர்ந்து கொட்டிவிட்டன.

அதன் பிறகு அன்றைய சனிக்கிழமை
வழக்கமானதொன்றாக இருக்கவில்லை.
0
02
காத்திருப்பு

மரங்களடர்ந்த தீவின்
மத்தியில் பெரிய மைதானம்.
உக்கிரமான மதிய வெயில்.
மரத்தடி பெஞ்சில் வெகுநேரம்
யாரையோ எதிர்பார்த்து
காத்திருந்தாள் ஒருத்தி.

யாரும் வரவில்லை இன்னும்.

நீண்ட விழுதுகள் கொண்ட ஆலமரம்
பழுப்பிலைகள் சிலவற்றை
அவள் மடியில் உதிர்த்தன.

சாலைக்கு சென்று மீண்டன அவள் கண்கள்.

பூச்சியொன்றை கொத்தி விழுங்கிய
குயில் அவளைப் பார்த்தது.
ஒருமுறை துக்கம் கசிய கூவி அழைத்தது.

அலைபேசியை தடவி நிமிர்ந்தன விரல்கள்.

கடல்மேவிய காற்று
அலைந்தெழுந்து சுழன்றடித்து
அவளைத் தழுவிக் கடந்தது.

காத்திருக்கிறாள் அவள்.

உக்கிரம் தணிந்த வெயில்
இதமான காற்று
உதிர்ந்திறங்கும் பழுப்பிலைகள்
குயிலின் துயர கீதம்

காத்திருக்கத் தேவையின்றி எழுந்து நடந்தாள்.
0
03
சில மழைக் காட்சிகள்
01
துளியும் நனையாது
கடந்து போய்விட்டன
எத்தனையோ மழை நாட்கள்.
0
02

மின்னல் வெட்டித் துடித்து மறைந்தது
திடுக்கிட்டு விழித்தது இருட்டு
ஒளியின் ஒருகணமும்
இருட்டின் மறுகணமும்
முட்டிக் கொள்ள
விழுந்தது வானின் ஒரு துளி.
0
03

மழை ஓய்ந்த வெளிர் வானம்
தொலைவில் தலைநீட்டி
ஈரம் உலர்த்துகிறது
வெயிலின் ஓர் கற்றை
0
04
மழையும் குடையும்

தூறல்கள் விழத்தொடங்கியதும்
அண்ணாந்து வானம் பார்த்தான்
சாலையோரத்து ஓவியன்.
பீடியை வலித்தபடியே
கரித்துண்டால் கோடுகளை இழுத்தான்
தார்ச்சாலையில்.
மழை வலுத்தது.
அனைவரும் ஓடி ஒதுங்கி வேடிக்கை பார்த்தனர்.
பீடிப் புகையை ஊதியபடியே
கரித்துண்டை சுண்டி எறிந்தான்.
கோடுகளில் மடங்கிக் கிடந்தது குடை.
நிதானமாக கையில் எடுத்து
பொத்தானை அழுத்தி விரித்து
தலைக்கு மேல் பிடித்துக்கொண்டான்.
மழையில் நனைந்தது குடை.
0
04
பாவப்பட்ட ஒரு பிரதியும் பரிதாபத்துக்குரிய வாசகனும்

அதுவரையிலும் பார்த்திராத
அந்தப் புத்தகம்
எளிதில் என்னை ஆட்கொண்டது.

அறிந்திராத எழுத்தாளர்
அலைவரிசைக்கு ஒவ்வாத எழுத்து நடை
சற்றும் அறிமுகமற்ற கதைக்களம்

முதல் பத்து பக்கங்களுக்குள்
என்னை அனுமதிக்காத புத்தகத்தை
தொடர்ந்து படிக்காதவன் நான்
நூறு பக்கங்களைத் தாண்டியும்
விடாது கழுத்தைப் பிடித்திருந்தது.

திணறலுடன் முட்டி மோதி
ஏதேனும் ஒரு வாக்கிய இடைவெளியில்
வெளியில் தப்பிவிட முனைந்தவனை
தொட்டு நிறுத்தியது
எழுத்தின் குரல்.
எழுதியவன்தான் என்னை கைவிட்டுவிட்டான்,
நீங்களுமா?
பாவப்பட்ட அந்தக் குரலுக்கு
என்னால் பதில்சொல்ல முடியவில்லை.
இதோ, கடைசி பக்கத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
0
05
வலி

சிறு காயந்தான்.
வலியுமில்லை வாதையுமில்லை.
எப்போது என்று சரியாகத் தெரியவில்லை.
எதனால் என்றும்.
நினைவில் அது நிலைக்காது
சருகெனக் கடந்து போயிற்று.
காலங்கள் புரையோடி
சீழ்வடிந்த நாளொன்றின் அந்தியில்
அது தன்னை நினைவுறுத்தியது.
சுள்ளென்று மேலெழுந்து
தசை கிழித்து தலை காட்டியது.
இப்போதும் வலியில்லை. வாதையில்லை.
ஆழத்தில் தேடி அடைந்தபோது
கணப்பொழுதின் அலட்சியத்தில்
சருமத்தின் மேலடுக்கில்
சிராய்த்து நின்ற
மூலத்தை உணர்ந்து நின்றேன்.
காயத்தினால் இல்லை வலி.
0
06
குதூகலம், கூச்சல், உல்லாசம்

குதூகலம் மேசையின் மீதிருந்து குதித்தது.
களுக்கென ஒரு சிரிப்பு.
பின் தரையில் வழுக்கியோடியது.
சரிந்து புரண்டது.
எத்தனை உற்சாகம்?
எத்தனை கொண்டாட்டம்?

பூமி சுழன்று தன் அச்சில் அடுத்த முள்ளைத் தொட்டது.

ஓவென்று பெருங்கூச்சல்.
கன்னத்தில் நீர் வழிய கதறல்.
இடதுபாதம் பற்றி அழுகை.
‘இவந்தான் தள்ளி வுட்டான்’ என்று தரையை முறைத்தது.
களிம்பைத் தடவியபோது ‘வலிக்குதே’ என அலறியது.

கணப்பொழுதின் அசைவில்
குதூகலமும் கூச்சலும் இடம் மாறி நின்றன.

அலறல் ஓய்ந்து உல்லாசம் துள்ளியது.
மேசையிலிருந்து தரையில் உருண்ட பொருட்களை வியந்தபடி
‘நானில்லே… நானில்லே’ எனச் சொல்லிச் சிரித்துத் துள்ளியோடி
எல்லையற்ற வெளியில் தடையின்றி பறந்தது.
0



Sunday 14 June 2020

திரும்ப நிகழ்த்தப்பட்ட வரலாற்றில் கையளியக்கப்பட்ட துளி இருள்: எம். கோபாலகிருஷ்ணனின் ‘அம்மன் நெசவு’ – கார்த்திக் பாலசுப்ரமணியன்


வரலாற்றினைச் சரிவரக் கற்று அறியாதவர்களாலும் அறிந்தும் கண்களை மூடிக்கொண்டு அஞ்ஞானத் தூக்கத்தில் திளைப்பவர்களாலும் வரலாறு அதன் அத்தனை கீழ்மைகளோடும் போதாமைகளோடும் குறைகளோடும் திரும்ப நிகழ்த்தப்படுகிறது. சில நேரங்களில் அதுவே திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படுகிறது. அப்படி நிகழ்த்தப்பட்ட வரலாறென்னும் இருட்குகையின் துளி இருளை நாவலாக்கி கையளித்திருக்கிறார் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.

இந்தியா முழுவதும் சாதியின் வேர்கள் ஒரே நேரத்தில் ஆழமாகவும் நுட்பமாகவும் ஊடுருவியுள்ளன. இதோ, இன்று இங்கே இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் பின்பு ஏதோ ஒரு நாளில் எங்கோ அமர்ந்து இதனை வாசிக்க வாய்க்கும் ஒருவருக்கும் என பிறப்பொக்கும் ஒவ்வொருக்கும் பொதுவாக, ஜாதியின் வேர்கள் நம் கால்களுக்கு அடியில் நேரடியாகவும் மறைமுகமாவும் பற்றிப் பரவியிருக்கின்றன.
வரலாற்றுப் பார்வையில் சாதியின் பெயரால் கட்டவிழ்க்கப்படும் அடக்குமுறையின் அளவுகளில், அவை மேற்கொள்ளப்படும் முறைமைகளில் சிறிது மாற்றமிருக்கலாம். ஆனால், சாதியத்தின் தாக்கம் அதன் வழியே சாத்தியப்படும் அதிகாரம், பணம், புகழ் என எதிலும் இன்றளவும் அத்தனை பெரிய மாற்றம் ஒன்றும் வாய்க்கவில்லை. நேற்று நடந்தபொன்பரப்பிசம்பவம் இதற்கு மற்றுமொரு சான்று என்ற உண்மையை சற்று வெட்கத்தை விட்டு ஒப்புக் கொண்டே இந்நாவல் பற்றிய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.
நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்
என்று சிலப்பதிகாரத்திலேயே பாடப்பட்டிருக்கும் முதுபெரும் தொழிலாக நெசவுத்தொழில் இருந்த போதும் நெசவாளர்களை, அவர்களின் வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்டு தமிழில் வந்து நவீன இலக்கியங்கள் வெகு சொற்பமே. அந்த வகையில் அம்மக்களின் வாழ்வை, பசை போடுதல், பாவு பணைத்தல், தார்ச் சுற்றுதல், சீலை அறுத்தல், அடுக்கல் என்று அவர்களின் தொழில்படுமுறைகளை நுட்பமாகச் சித்தரித்து நாவல் முழுவதும் துருத்தாத வகையில் கட்டமைத்துள்ளார் எம்.கோ.
நெசவினைக் குலத்தொழிலாகவும், செளடேஸ்வரி அம்மனைக் குலதெய்வமாகவும் கொண்டவர்கள் கன்னடம் பேசும் தேவாங்கச் செட்டியார்கள் சமூகத்தினர்.
தற்போதைய மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் உஜ்ஜயினி அவர்களின் பூர்வீகமாகக் கருதப்படுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற முகலாய மன்னர்களின் படையெடுப்பின் காரணமாக அங்கிருந்து தப்பி, ஹம்பியைத் தலைநகராகக் கொண்ட விஜயநகரப் பேரரசை வந்தடைகிறார்கள். அதன் பின்னர் நடைபெற்ற பாமினி சுல்தான்களின் படையெடுப்பால் அங்கிருந்தும்  விரட்டியடிக்கப்பட்டு தமிழகப் பகுதிக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்படி வந்த அவர்கள், இன்றைய கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக குடியேறியுள்ளனர். (பதினைந்தாம் நூற்றாண்டில் திருப்பூர் உள்ளிட கொங்கு மண்டலமும் விஜய நகரப் பேரரசின் ஓர் அங்கமாகவே இருந்துள்ளது)
அவ்வாறாக அவிநாசி அருகேயுள்ள உமயஞ்செட்டிப்பாளையத்தில் குடியேறிய 64 குடும்பங்களைப் பற்றிய கதையே இந்நாவல். அண்ணாத்துரையின் மேடைப் பேச்சு, திராவிட முன்னேற்ற கழகம் பங்கேற்கும் தேர்தல், திருப்பூரில் துளிர்விடும் மில்கள் என்று நாவலில் ஆங்காங்கே காணப்படும் சில நுட்பமான தகவல்களின் வழியே நாவல் நடைபெறும் காலம் என்று இந்திய விடுதலைக்குப் பின்னான ஐம்பதுகளையும், அறுபதுகளையும் குறிப்பிடலாம். இப்படியாக, ஆயிரத்து ஐந்நூற்று ஐம்பதுகளில் அவர்கள் புலம்பெயர்ந்து வந்த வரலாற்றைக் கொண்டு கணக்கிட்டால் இம்மக்கள் இங்கே புலம்பெயர்ந்து கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகள் ஆகின்றன. இருந்தும் கூட, கதை நடைபெறும் காலம் வரை இம்மண்ணின் மீது எந்தவொரு உரிமையும் இல்லாதவர்களாகவே அவர்கள் இருந்து வந்திருக்கின்றனர். அதாவது, குடிநீருக்குக் கூட இங்கே பிரதானமாக இருக்கும் ஆதிக்கச் சாதியினரான கவுண்டர்களின் தயவை எதிர்பார்த்தே இருக்கின்றனர். இதுவே நாவலின் களம்.
தான் விரும்பும் வீட்டின் தறியில் அவர்கள் வணங்கும் செளடேஸ்வரி அம்மனே வந்து நெய்வதாகவும், அப்படிஅம்மன் நெசவுநடைபெறும் வீட்டில் அம்மனைக் குடியேற்ற வேண்டும் என்பது அம்மக்களின் ஐதிகமாகவும் இருக்கிறது. இதைப்போன்று அம்மன் நெசவு நடைபெறும் வீட்டிலிருந்து நாவல் தொடங்குகிறது.
இதற்கிடையில், அப்பகுதியில் ஆள், பணம், பலம், பொருள், அதிகாரம் என அனைத்திலும் பெரும்பான்மையாக இருக்கும் கவுண்டர்களுடன் இவர்களுக்குச் சிறு சலசலப்பு வந்து மூள்கிறது.
இளவட்டங்களின் வம்புச் சண்டை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரு கட்டத்தில் இரு சமூகத்தினருக்குமிடையேயான பெரும் பகையாக உருவெடுத்து நிற்கிறது. எல்லாவகையிலும் அண்டிப் பிழைக்க நேரிட்ட ஒரு வர்க்கம், ஆண்டே பழக்கப்பட்ட மற்றொரு வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் போது அரசும் அதிகாரமும்உடையவர்களின்பக்கம் நிற்கிறது. கடைசியில், வேறு வழியின்றி அங்கிருந்தும் வெளியேறிப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
அன்று சுல்தான்கள். இன்று ஆதிக்கச் சாதியினர். அவ்வளவு தான் வித்தியாசம்.
இதுபோன்ற சிக்கலான களமொன்றை தன் முதல் நாவலாக எழுதப் பெருந்துணிவு வேண்டும். அப்படி எழுதும் போது, ஒரு பக்கச் சார்பெடுத்து எழுந்து வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பினும் அத்தகைய இடங்களை பெரும்பாலும் சமநிலை தவறாமல் எழுத்தில் கொண்டு வந்துவிட்டிருக்கிறார். அதுவே, முதல் நாவலில் அவர் அடைந்திருக்கும் வெற்றி எனலாம்.
திடீரென்று நிகழ்ந்த அம்மன் நெசவு என்னும் அற்புதத்தை, கிடைத்தற்கரிய பெரும் பேறை கிடைக்கப் பெற்ற நஞ்சப்பன் அதைத் துஞ்சப் பயந்து, ஒன்றுவதற்கு அஞ்சி, ஒட்டுதலின்றி மருகும் இடங்கள் அத்தனையும் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. மறுபுறம், அதே நிகழ்வின் பொருட்டு தீராத வஞ்சம் கொண்டு அலையும் வெள்ளியங்கிரியையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இருநூறு பக்க நாவல் என்ற போதும் சிறிதும் பெரியதும் என பத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு கதாப்பாத்திரங்கள் வருகிறார்கள். அத்தனை பேரும் அவரவர்களுக்குண்டான தனித்தன்மையுடன் உலவுகிறார்கள். பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் போதே அவர்களைப் பற்றிய துலக்கமான சித்திரத்தை தெளிவாக வடிவமைத்து விடுகிறார். எம்.கோ-வின் நுட்பமான அவதானிப்பும் அதை கலையாக மாற்றவல்ல அவரின் சரளமான மொழியாளுமையும் இதை மிக எளிதாக அவருக்குச் சாத்தியப்படுத்தியிருக்கின்றன.
பெண்களின் உளப்போக்கினை கதைப்படுத்துவது அவருக்கு அத்தனை இயல்பாக வாய்த்திருக்கிறது. அம்மன் வீடு வந்து சேர்ந்தது குறித்து, ஒரு பக்கம் பரிதவிப்பையும் மறுபக்கம் பெருமிதத்தையும் காட்டி அலையும் உண்ணாம்பாள், அம்மன் நீங்கி களையிழந்த வீட்டில் கதறி அழும் மீனாட்சி, ஒரு கை சாணிக்கு மிதப்பு காட்டும் பூவாத்தா, கறவை மாட்டின் மடி தொட்டதற்காக குழவிக் கல்லால் அடிக்கப்பட்டு கை நசுங்கிக் கிடக்கும் ஆராயி, மேலும் இராசாமணி, தேவகி, சுந்தரி என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்ப்பு.
இருநூறு பக்க நாவலில் மொத்தம் 75 அத்தியாயங்கள் உள்ளன. மிகச் சில அத்தியாயங்களைத் தவிர பெரும்பான்மையானவை மெதுவாகத் தொடங்கி ஒரு பெரும் நிகழ்விற்கான அத்தனை சாத்தியங்களையும் கட்டமைத்துவிட்டு கடைசியில் அப்படி ஒன்றை நிகழ்த்தாமலே சட்டென்று முடிந்து விடுகின்றன. இதை முதல் நாவலுக்குரிய போதாமை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொள்வதற்கான அத்தனை நியாயங்களையும் அவரின்மணல் கடிகைபூர்த்தி செய்து விடுகிறது.
சோமனூர் கவுண்டர், பண்ணாடிக் கவுண்டர் இருக்கும் ஊரில் ஒரு வெளாந்தோட்டக் கவுண்டரும் உண்டென்றாலும், தி.ஜா-வின் பாயசம் கதையில் வரும் சாமநாதுவின் மகளைப் போன்ற கண்ணில் முள் மண்டும் பெண்ணொருத்தி அந்தப் பக்கம் இல்லாதது என்னளவில் ஒரு குறையே.
சமீபத்தில் கவிஞர் பெருந்தேவி இட்ட அவரின்  ஃபேஸ்புக் நிலைத்தகவல்,
நல்ல இலக்கியத்தின் ஒரு லட்சணம் வாசகரின் சுய அடையாளத்தை அக்கணமே கலைத்து விடுவது. அவர் செய்த / செய்யாத தவறுக்கெல்லாம் அக்கணத்தில் சந்திக்கும் யாரிடமும் எதனிடமும் ஆத்மார்த்தமாக மன்னிப்பைக் கோர வைப்பது. சரணடைய வைப்பது. அப்படியே அவரைக் கரைத்துவிடுவது. அதன் இன்னொரு லட்சணம் வாழ்க்கை குறித்த மனத்தொந்தரவுக்கு ஆளாக்குவது. நம் கற்பிதங்களை அடித்து உடைப்பது.”
மேற்சொன்ன இரண்டு லட்சணங்களையும் இந்நாவல் சந்தேகமின்றி பூர்த்தி செய்கிறது.
மனிதன் லட்சம் ஆண்டுகளாக குழுக் குழுவாகவே வாழ்ந்து பழக்கப்பட்டவன். அவன் குழுவைச் சாராத யாரொருவனும் அவனுக்கு அன்னியனே. அவனை உலகப் பொது மனிதனாக அனைத்து வேற்றுமைகளையும் களைந்து சக மனிதனை அன்பும், கனிவும், கருணையும் பெருக நேசிக்கப் பழக்குவது அத்தனை எளிதான காரியமில்லை. ஆனாலும் அதை நோக்கிய பயணத்தின் ஒரு சிறு நகர்வையே காலம் காலமாக இலக்கியம் செய்து வருகிறது. அந்த நகர்வினை நோக்கிய திசையில், அம்மன் நெசவும் தன்னை இணைத்துக் கொள்கிறது.
தமிழினி மின்னிதழ் ஜூலை 2019


‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...