01
வேறொரு சனிக்கிழமை
0
சனிக்கிழமைகள் வழக்கமானவைதான்.
கொஞ்சம் படிக்கவும்
கொஞ்சம் எழுதவும்
கொஞ்சம் தூங்கவும்
கொஞ்சம் அரட்டையடிக்கவும் தோதானதுதான்.
இன்று சனிக்கிழமை.
வெகுநாள் கழித்து காலையில் உன் அழைப்பு.
நான் கவனிக்கவில்லை.
அலைபேசியை எடுத்து பார்த்தபோதுதான்
அந்த அதிவேளையை தவறவிட்டதை உணர்ந்தேன்.
அழைத்துப் பார்த்தேன்.
பதில் இல்லை.
தெரிந்ததுதான்.
இத்தனை காலமும் இப்படி எத்தனை
அழைப்புகளை
தொலைத்திருக்கிறேன்.
பேச முடியாமல்போன அந்த அழைப்பு
பேசிக் களித்து தொட்டுச் சிலிர்த்த
எத்தனையோ சனிக்கிழமைகளின்
எத்தனையோ நினைவுகளை
சொடுக்கிக் கொணர்ந்து கொட்டிவிட்டன.
அதன் பிறகு அன்றைய சனிக்கிழமை
வழக்கமானதொன்றாக இருக்கவில்லை.
0
02
காத்திருப்பு
மரங்களடர்ந்த தீவின்
மத்தியில் பெரிய மைதானம்.
உக்கிரமான மதிய வெயில்.
மரத்தடி பெஞ்சில் வெகுநேரம்
யாரையோ எதிர்பார்த்து
காத்திருந்தாள் ஒருத்தி.
யாரும் வரவில்லை இன்னும்.
நீண்ட விழுதுகள் கொண்ட ஆலமரம்
பழுப்பிலைகள் சிலவற்றை
அவள் மடியில் உதிர்த்தன.
சாலைக்கு சென்று மீண்டன அவள் கண்கள்.
பூச்சியொன்றை கொத்தி விழுங்கிய
குயில் அவளைப் பார்த்தது.
ஒருமுறை துக்கம் கசிய கூவி அழைத்தது.
அலைபேசியை தடவி நிமிர்ந்தன விரல்கள்.
கடல்மேவிய காற்று
அலைந்தெழுந்து சுழன்றடித்து
அவளைத் தழுவிக் கடந்தது.
காத்திருக்கிறாள் அவள்.
உக்கிரம் தணிந்த வெயில்
இதமான காற்று
உதிர்ந்திறங்கும் பழுப்பிலைகள்
குயிலின் துயர கீதம்
காத்திருக்கத் தேவையின்றி எழுந்து
நடந்தாள்.
0
03
சில மழைக் காட்சிகள்
01
துளியும் நனையாது
கடந்து போய்விட்டன
எத்தனையோ மழை நாட்கள்.
0
02
மின்னல் வெட்டித் துடித்து மறைந்தது
திடுக்கிட்டு விழித்தது இருட்டு
ஒளியின் ஒருகணமும்
இருட்டின் மறுகணமும்
முட்டிக் கொள்ள
விழுந்தது வானின் ஒரு துளி.
0
03
மழை ஓய்ந்த வெளிர் வானம்
தொலைவில் தலைநீட்டி
ஈரம் உலர்த்துகிறது
வெயிலின் ஓர் கற்றை
0
04
மழையும் குடையும்
தூறல்கள் விழத்தொடங்கியதும்
அண்ணாந்து வானம் பார்த்தான்
சாலையோரத்து ஓவியன்.
பீடியை வலித்தபடியே
கரித்துண்டால் கோடுகளை இழுத்தான்
தார்ச்சாலையில்.
மழை வலுத்தது.
அனைவரும் ஓடி ஒதுங்கி வேடிக்கை பார்த்தனர்.
பீடிப் புகையை ஊதியபடியே
கரித்துண்டை சுண்டி எறிந்தான்.
கோடுகளில் மடங்கிக் கிடந்தது குடை.
நிதானமாக கையில் எடுத்து
பொத்தானை அழுத்தி விரித்து
தலைக்கு மேல் பிடித்துக்கொண்டான்.
மழையில் நனைந்தது குடை.
0
04
பாவப்பட்ட ஒரு பிரதியும் பரிதாபத்துக்குரிய வாசகனும்
அதுவரையிலும் பார்த்திராத
அந்தப் புத்தகம்
எளிதில் என்னை ஆட்கொண்டது.
அறிந்திராத எழுத்தாளர்
அலைவரிசைக்கு ஒவ்வாத எழுத்து நடை
சற்றும் அறிமுகமற்ற கதைக்களம்
முதல் பத்து பக்கங்களுக்குள்
என்னை அனுமதிக்காத புத்தகத்தை
தொடர்ந்து படிக்காதவன் நான்
நூறு பக்கங்களைத் தாண்டியும்
விடாது கழுத்தைப் பிடித்திருந்தது.
திணறலுடன் முட்டி மோதி
ஏதேனும் ஒரு வாக்கிய இடைவெளியில்
வெளியில் தப்பிவிட முனைந்தவனை
தொட்டு நிறுத்தியது
எழுத்தின் குரல்.
எழுதியவன்தான் என்னை கைவிட்டுவிட்டான்,
நீங்களுமா?
பாவப்பட்ட அந்தக் குரலுக்கு
என்னால் பதில்சொல்ல முடியவில்லை.
இதோ, கடைசி பக்கத்தை வாசித்துக்
கொண்டிருக்கிறேன்.
0
05
வலி
சிறு காயந்தான்.
வலியுமில்லை வாதையுமில்லை.
எப்போது என்று சரியாகத் தெரியவில்லை.
எதனால் என்றும்.
நினைவில் அது நிலைக்காது
சருகெனக் கடந்து போயிற்று.
காலங்கள் புரையோடி
சீழ்வடிந்த நாளொன்றின் அந்தியில்
அது தன்னை நினைவுறுத்தியது.
சுள்ளென்று மேலெழுந்து
தசை கிழித்து தலை காட்டியது.
இப்போதும் வலியில்லை. வாதையில்லை.
ஆழத்தில் தேடி அடைந்தபோது
கணப்பொழுதின் அலட்சியத்தில்
சருமத்தின் மேலடுக்கில்
சிராய்த்து நின்ற
மூலத்தை உணர்ந்து நின்றேன்.
காயத்தினால் இல்லை வலி.
0
06
குதூகலம், கூச்சல், உல்லாசம்
குதூகலம் மேசையின் மீதிருந்து குதித்தது.
களுக்கென ஒரு சிரிப்பு.
பின் தரையில் வழுக்கியோடியது.
சரிந்து புரண்டது.
எத்தனை உற்சாகம்?
எத்தனை கொண்டாட்டம்?
பூமி சுழன்று தன் அச்சில் அடுத்த முள்ளைத் தொட்டது.
ஓவென்று பெருங்கூச்சல்.
கன்னத்தில் நீர் வழிய கதறல்.
இடதுபாதம் பற்றி அழுகை.
‘இவந்தான் தள்ளி வுட்டான்’ என்று தரையை முறைத்தது.
களிம்பைத் தடவியபோது ‘வலிக்குதே’ என அலறியது.
கணப்பொழுதின் அசைவில்
குதூகலமும் கூச்சலும் இடம் மாறி நின்றன.
அலறல் ஓய்ந்து உல்லாசம் துள்ளியது.
மேசையிலிருந்து தரையில் உருண்ட பொருட்களை வியந்தபடி
‘நானில்லே… நானில்லே’ எனச் சொல்லிச் சிரித்துத் துள்ளியோடி
எல்லையற்ற வெளியில் தடையின்றி பறந்தது.
0
No comments:
Post a Comment