நாம் முற்றும் அறிந்துணர்ந்த வாழ்வின் அறியாத தருணத்தினை புனைவின் வழியாக எடுத்துக்காட்டக்கூடிய கலைத்தன்மையை தமதாற்றலாக கொண்டவர்களில் முக்கியமானவர் எம்.கோபாலகிருஷ்ணன். அவரது சிறுகதைகளைவிட நாவலில் இந்த நுட்பத்தை அதிகம் காணலாம். மணல்கடிகையும் மனமாட்சியும் இந்தப்பேருண்மையை பெருஞ்சாட்சியாக கொண்டவை.
அண்மைக்காலமாக அவரது குறுநாவல்களை அடுத்தடுத்து படிக்கும் வாய்ப்புக்கிடைத்தது. இந்த ஆண்டு தமிழினியில் வெளியான "மாயப்புன்னகை" தொடர்பாக ஏற்கனவே இங்கு பதிவுசெய்திருந்தேன். அவரது முன்னைய குறுநாவல் தொகுப்பான "வால்வெள்ளி" அண்மையில்தான் படிக்கக்கிடைத்தது.
வாழ்க்கையின் ஏதோவொரு புள்ளியில் இயல்பாக குவியப்படுகின்ற எழுத்தாளனின் பார்வை, கலையை நோக்கி ஒரு தொடர்கோட்டினை வரைகின்றபோது அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இந்தக்கோட்டின் இயல்பான அழகும் செறிவும் அந்த எழுத்தாளனின் புனைவொழுக்கத்தை அந்தப்பிரதியெங்கும் பிரகடனப்படுத்திவிடுகிறது. கோபாலகிருஷ்ணனின் குறுநாவல்களிலும் தவறாமல் இந்த நேர்த்தி இடம்பெறுகிறது. புனைவின் அத்தனை அழகுணர்ச்சிகளையும் சரளமாக கையாளுகிறார். தன்னை அறியாமலேயே எழுத்துக்குள் படிமங்களை அழைத்துவருவதுபோன்ற உணர்வுகளை அசாத்தியாமக செய்கிறார். இந்தக்குறுநாவலில் வருகின்ற "வால்வெள்ளி" மற்றும் "ஊதாநிற விரல்கள்" ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை.
படிக்கவும் பரிந்துரைக்கவும் தகுதியான பிரதி "வால்வெள்ளி"
10.06.2020 முகநூல் பதிவு - ப. தெய்வீகன்
No comments:
Post a Comment