தமிழ்ச்
சிறுகதை இன்று கட்டுரைத் தொடரின் ஏழாவது பகுதி இது. தூயனில் தொடங்கி சுரேஷ் பிரதீப்,
சித்துராஜ் பொன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, ராம் தங்கம், அனோஜன் பாலகிருஷ்ணன் ஆகியோரது
சிறுகதைகளைப் பற்றி எழுதியதைத் தொடர்ந்து கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் கதைகளைக் குறித்து
வெளியாகிறது இந்தப் பகுதி.
0
எழுதுவதும்
வெளியிடுவதும் பதிப்பிப்பதும் இன்று மிகச் சுலபமான காரியங்கள். இணைய இதழ்களின் வழியாக
உலகளாவிய வாசக கவனிப்பையும் பெற முடிகிறது. இரண்டாயிரத்தில் நாவல்கள் பெரும் வீச்சில்
எழுதப்பட்டபோது சிறுகதைகளின் மீதான கவனம் சற்றே குறைந்தது. இப்போது மீண்டும் சிறுகதைகள்
அதிக அளவில் எழுதப்பட்டு ஏராளமான தொகுப்புகள் வெளியாகின்றன. இணைய இதழ்களில் மூலமாக
குறிப்பிட்ட இடைவெளியில் இருபதுக்கும் மேற்பட்ட கதைகளை வாசிக்க முடிகிறது. அளவுக்கு
அதிகமாக அமையும்போது கவனம் சிதறுவதுதான் இதில் உள்ள எதிர்மறையான அம்சம். எல்லாவற்றையும்
வாசிக்க முடியாமல் போகும். நிறைய வாசிக்கும்போது நினைவில் வைத்துக்கொள்ளவும் இயலாமலாகும்.
எனவே, வாசிப்பவர்களின் நினைவில் பதியும்படியான காத்திரமான படைப்பை எழுதுவதுதான் இன்றைய
சவால்.
0
கார்த்திக்
பாலசுப்ரமணியத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘டொரினா’ 2018ம் ஆண்டு வெளியானது. ‘நட்சத்திரவாசிகள்’
நாவல் இந்த ஆண்டு வெளிவந்திருக்கிறது.
ஒரு அறிமுக எழுத்தாளனின் முதல் தொகுப்பில்
வாசிக்கக் கிடைக்கும் கதைகள் ‘டொரினா’விலும் இடம்பெற்றிருந்தன. பால்யகால நினைவுகள்,
பள்ளிப்பருவ நிகழ்வுகள் என வாழ்வின் உற்சாகமானத் தருணங்களை களமாகக்கொண்டிருந்தன ‘டொரினா’,
‘யயகிரணம்’ ஆகிய கதைகள்.
டொரினோ ஏற்கெனவே தமிழ்ச்
சிறுகதைகளில் எழுதப்பட்ட ஒரு கதை. முதிரா
இளம்பருவத்தின்போது வயதில் மூத்த பெண்கள் தம் இயல்பின் காரணமாக நமக்குள்
உருவாக்கும் சித்திரம் வசீகரமானது. ஆனால் காலச் சுழலில் கற்பனைக்கு எதிரான நிலையில்
அவர்களைச் சந்திக்க நேரும்போது ஏற்படும் சமன்குலைவு விவரிக்கமுடியாதது. அத்தகைய
கூரிய யதார்த்தத்தை மையமாகக் கொண்டது ‘டொரினா’. இளமைக்கேயுரிய ஆர்வமும் முனைப்பும்
வசீகரமும் மிகுந்த நாட்கள் நினைவில் எழும்போதே அன்றைய மனிதர்களின் இன்றைய முரண்
நிலையைக் காணநேர்கையில் ஏற்படும் சங்கடத்தைக் கடப்பது அத்தனை சுலபமல்ல.
'யயகிரகணம்' என்கிற தலைப்பில்
உள்ள தனித்துவமும் கதைநெடுக அது உணர்த்தும் மன இறுக்கமும் கதையின் தனித்துவமாக
அமைந்துள்ளது . ஆனால் கதையினூடே
சொல்லப்பட்டுள்ள நவீன இலக்கியம் சார்ந்த பெயர்களும்
சொல்லாடல்களும் கதையின் மையத்துக்கு எந்தவிதத்திலும் வலுசேர்க்கவில்லை. அவை
இல்லாமலேயே இந்தக் கதையை வேறு தளத்துக்கு சுலபமாக நகர்த்தியிருக்க முடியும்.
‘வழிப்போக்கன்’, ‘விசுவாசம்’ இரு
கதைகளும் ஆழ்மனத்தின் புரிந்துகொள்ள முடியாத விநோதங்களை நுட்பமாகச் சித்தரிப்பவை.
ஒவ்வொருவரும் வாழ்வில் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். மனிதர்களைச்
சந்திக்கவும் வாய்த்திருக்கும். இக்கதைகளை வாசிக்கும்போது நம் அனுபவத்தின் சாரமும்
இணைந்துகொள்ளும் சாத்தியமிருக்கிறது. எனவே இவை வெகு இயல்பாக வாசகனுக்கு பிடித்தமான
கதைகளாக அமைந்துவிடுகின்றன. ஊடகங்களும் திரைப்படங்களும்
பொதுப்புத்தியில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் குறித்து ஏற்படுத்தியிருக்கும்
சித்திரத்தில் உள்ள யதார்த்தமின்மையை களைவதற்கு இதுபோன்ற கதைகள் அவசியமாகின்றன.
ஒரு நல்ல சிறுகதைக்கான
இலக்கணங்களான தொடக்கம், நகர்வு, முடிவு ஆகிய மூன்றுமே கச்சிதாக
அமைந்திருக்கும் கதை ‘முடிச்சுகள்’. தொடர்பற்ற பல்வேறு முடிச்சுகளின் வழியாக
பயணித்து அதன் முடிவில் தன் தந்தையைக் குறித்த முழுமையான சித்திரத்தை
கண்டடையும் கதை வடிவம் மிக நேரத்தியாக எழுதப்பட்டுள்ளது. அதேசமயம், கதையின்
இறுதியில் அவன் அறிந்துகொள்ளும் தந்தை மேலும் புதிரானவராக புதிய தேடலுக்கான தேவை
கொண்டவராக அமைந்திருப்பது இந்தக் கதைக்கான இன்னொரு தொடக்கத்தை
சாத்தியப்படுத்தியுள்ளது. அறிதல்களின் முடிவில் நாம் சந்திக்க நேர்வது வேறொரு
அறியாமையே என்பதை உணர்த்துகிறது.
தந்தை மகன் உறவின் இருமை நிலையை அடிப்படையாகக்
கொண்டு எழுதிய இரண்டாவது கதை ‘புள்ளிக்கு பதிலாக வட்டங்கள்.’ கதையில் உருவாக சாத்தியமான
உணர்வெழுச்சிகளை மட்டுப்படுத்தி எளிய சித்தரிப்பாக நிறுத்தி கூடுதலாக அழுத்தத்தைச்
சேர்க்க இந்தக் கதையின் வடிவம் உதவியிருக்கிறது.
சிறுகதைகளின் மொழி, வடிவம், செய்நேர்த்தி
சார்ந்த தெளிவுகளைக் கொண்டவர் கார்த்திக் பாலசுப்ரமணியம் என்பதை அடிக்கோடிட்டு காட்டியிருக்கும்
கதை ‘இரு கோப்பைகள்’. தொகுப்பின் சிறந்த கதையும்கூட. ஆஸ்திரேலியாவில் நடப்பதாகக் காட்டப்படுகிறதென்றாலும்
இதன் உணர்வு நிலை அனைவருக்குமானது. காலதேச எல்லைகளைக் கடந்தது. மனித உறவுகள் குறுகி,
குடும்ப அமைப்பு உடைபட்டு வெவ்வேறு காரணங்களின்பொருட்டு ஒருவரைவிட்டு ஒருவர் விலகியிருக்கும்
காலத்தில் தனிமையை ஏற்றுக்கொள்ளநேரும் முதியவர்களின் இறுதிக்காலம் துயரமானது. வாழ்வில்
எஞ்சியிருக்கும் ஒவ்வொரு நாளையும் கடக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வலிமிகுந்தவை.
மூப்பையும் பிணியையும்விட அகலாது கவிந்திருக்கும் வெறுமையைச் சமாளிப்பதே அவர்களுக்கான
சவால். அந்திமக் காலத்தில் மனைவியின் உறுதுணையின்றி நிற்க நேரும் ஆண்களின் நிர்கதியற்ற
அவலநிலையை கலை அமைதியுடன் நேர்த்தியாக சித்தரிக்கிறது ‘இரு கோப்பைகள்.’
ஒரு சிறுகதையாளராக கார்த்திக்கின் மீது பெரும்
நம்பிக்கையை ஏற்படுத்தும் கதையாக ‘இரு கோப்பைகள்’ இடம்பெற்றிருக்கும் தொகுப்பில் உள்ள
‘பார்வை’, ‘லிண்டா தாமஸ்’, ‘பொதுப்புத்தி’ ஆகிய மூன்று கதைகளும் தொகுப்புக்குப் பின்
எழுதிய ‘மேய்ப்பரின் கருணை’ கதையும் அவரை சமகால சிறுகதையாளர்களின் பொதுப்போக்கிலிருந்து
விலக்கி தனித்துவப்படுத்துகின்றன. இந்த நான்கு கதைகளையும் கார்த்திக் தன் பணிச்சூழலின்
பின்னணியில் எழுதியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழக
இளைஞர்களையும் பெற்றோர்களையும் சமூகத்தையும் கவர்ந்து இழுத்திருக்கும் இரண்டு
துறைகள் கணிணி அறிவியலும் தகவல் தொழில்நுட்பமும். தமிழகத்தின் பள்ளிக் கல்வியின்
திசையையே மாற்றியிருப்பவை. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பெருமளவு சம்பளத்தையும்
அயல்நாட்டு வாழ்வையும் உத்தரவாதப்படுத்திய மாயக்கரங்கள் இவை. இன்றைய நிலை மிகவும்
கேள்விக்குரிய ஒன்றாக இருந்தபோதிலும் அதன் மீதான கவர்ச்சி மட்டுப்படவில்லை.
இளைஞர்களின் வாழ்வை புரட்டிப்போடும் கணிணி தகவல் தொழில்நுட்பத் துறைசார்ந்த
வேலைகளைக் குறித்து சமூகத்தில் மொழியப்படும் வாய்வழிக் கதைகள் ஏராளம். கட்டுக்கதைகளும்
சரிபாதி. இளைஞர்களிடையே இத்துறை செலுத்தியிருக்கும்
ஆதிக்கமும் பாதிப்பும் அளப்பரியவை. வாழ்வின் பல்வேறு
மதிப்பீடுகளை பொருளாதாரத்தின் பெயரால் இத்துறை அசைத்துப் பார்த்திருக்கிறது.
ஆட்டம் காணச் செய்துள்ளது. குறிப்பாக
பெண்களுக்கு இவ்விரு துறைகளும் ஏற்படுத்தித் தந்திருக்கும் பொருளாதார சுதந்திரமும்
வாய்ப்புகளும் அவர்களது சமூக நிலையிலும் இருப்பிலும் வலுவான மாற்றங்களை
உருவாக்கியுள்ளன. இந்த மாற்றங்களைக்
குறித்து தனிமனித அளவிலும் மனநல நோக்கிலும் ஆராயப்படவேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
கணிணி தொழில் நுட்பத் துறை
சார்ந்த படைப்புகள் பலவும் எழுதப்பட்டுள்ளன. இத்துறையின் அடையாளங்களாக பெருமளவில்
அவை அடையாளப்படுத்துவது காமம், போதை, களியாட்டம் போன்றவைதான்.
அப்படி இல்லையா என்று கேட்டால் அப்படி மட்டுமே இல்லை
என்றுதான் பதில் சொல்கிறார்கள். அவற்றுக்கு அப்பால்
இத்துறை சார்ந்த சிக்கல்களையும் அரசியலையும் உத்தரவாதமின்மை உருவாக்கும்
பதற்றத்தையும் வெளிப்படுத்தும் படைப்புகளின் வழியாகவே முழுமையான ஒரு புரிதலை
அடையமுடியும்.
அந்த வகையில்
‘பொதுப்புத்தி’, ‘பார்வை’ ஆகிய இரண்டு கதைகள் முக்கியமானவை.
அடுத்தடுத்து ஏராளமான
பொறியாளர்கள் உருவாகித் திரளும் போட்டிச் சூழலில் ஒவ்வொருவரும் தமது இடத்தைத்
தக்கவைத்துக் கொள்வது பெரும் சவாலாக உள்ளது. பிற துறைகளில் அனுபவம் என்பது பெரும்
அனுகூலும். ஆனால் இந்தத் துறையில் அதுவே பலவீனமாக உருமாறும் எதிர்நிலை
யதார்த்தத்தை ‘மேய்ப்பரின் கருணை’ விவரிக்கிறது. வேலைத் திறன்களை அடுத்தவர்க்கு
கைமாற்றுவது, தனக்கடுத்து இன்னொரு அணியை உருவாக்குவது போன்ற பொதுவான இயல்பான
முன்னெடுப்பில் கற்றுக்கொள்பவனை கற்றுத்தருபவருக்கு போட்டியாளராக நிறுத்தி அவரது
இடத்தை நிரப்புபவனாகவும் ஆக்கும் ‘நிர்வாக
மேலாண்மை’யின் சூட்சுமத்தை அடிப்படையாகக் கொண்டது ‘லிண்டா தாமஸ்’.
பெண்கள் எதிர்கொள்ளும் துறைசார்ந்த
அழுத்தங்களும் அதன்பொருட்டு ஏற்றுக்கொள்ளும் சமரசங்களும் மனச்சரிவை ஏற்படுத்துபவை.
உறவுகளில் விவரிக்க முடியாத சிக்கல்களை உண்டுபண்ணுபவை. கணவன்-மனைவி என்ற உறவு
நிலையைத் தாண்டி குடும்பத்தின் பொருளாதார நிலைக்காக உழைக்கும் ஆண்-பெண் என்ற
நிலையில் இருவரும் தத்தமது பொறுப்புகளை சரிவர நிறைவேற்ற முடிவதில்லை. பெற்றக்
குழந்தையை அருகிருந்து பார்த்துக்கொள்ள வாய்ப்பதில்லை. இதற்கு இணையாக தமிழகத்தின்
ஏதோவொரு கிராமத்திலிருந்தோ சிறு நகரத்திலிருந்தோ வந்து திசை தெரியாத பெருநகரில்
‘கூகுள் மேப்’பின் உதவியோடு ‘கால்’டாக்ஸி ஓட்டுநர்களாக வாழ்வை தடுமாற்றத்துடன்
நகர்த்தும் இளைஞர்களின் மனஅழுத்தங்கள் வேறுவிதமானவை. இவ்விரண்டு நபர்களும்
ஒருவரையொருவர் சந்திக்க நேரும்போது இருவரின் மனஅழுத்தங்களும் மோதி தேவையற்ற
விளைவுகளை உருவாக்கும் நிலையை ‘காகித முகங்கள்’ கதை விவரிக்கிறது.
துறைசார்ந்த கதைகளின் வழியாக தனது தனித்துவத்தை
நிறுவும் கார்த்திக், அதை உறுதிப்படுத்துவதற்கு எடுத்து வைக்கும் அடி இன்னும் புதிதாக
வலுவானதாக இருக்கவேண்டியது அவசியம். தகவல்களின் அடிப்படையிலான நவீன ஆராய்ச்சிகளும்
ஆற்றல்வாய்ந்த பல்வேறு செயலிகளின் வழியாக தனிமனித வாழ்வின் அன்றாடங்களில் வெகு இயல்பாக
ஊடுருவும் சாமர்த்தியத்தின் விளைவுகளையும் பற்றி கவனிக்கிறார். தனிமனித அளவில் இத்தகைய
செயலிகள் கண்டடையும் தகவல்களைக்கொண்டு நிகழ்த்தும் மாயங்களை அடிப்படையாகக்கொண்டு ‘சுழல்’
என்ற கதையை எழுதியிருக்கிறார்.
அதன் அடுத்த நிலையாக தகவல்களின் அடிப்படையில்
உருவாக்கும் மெய்நிகர் உலகின் சாத்தியங்களைச் சொல்லும் கதையைக அமைந்திருக்கிறது ‘மெய்நிகரி.’
கைபேசியும் அதன் பல்வேறு செயலிகளும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தனியான அந்தரங்கமான உலகத்தை
உருவாக்குகின்றன. அடுத்தவரிடமிருந்து அவனைத் தனிமைப்படுத்துகின்றன. எதற்காகவும் யாருக்காகவும்
சார்ந்திருக்கவேண்டியதில்லை என்ற நிலையை ஏற்படுத்துகின்றன. வழிகாட்ட ‘கூகுள் மேப்’,
பசிக்கு ருசியான உணவைத் தர ‘ஸ்விகி’ அல்லது ‘ஜொமாட்டோ’, பணப் பரிமாற்றத்துக்கு ‘கூகுள்
பே’ அல்லது ‘பே.டி.எம்’, வாடகைப் பேரமற்ற பயணம் செய்ய ‘ஓலா’ அல்லது ‘ஊபர்’ உடனடி தகவல்
பரிமாற்றத்துக்கு அல்லது உலகிற்கு கருத்து சொல்ல ‘இன்ஸ்டாகிராம்’ அல்லது ‘வாட்ஸ் அப்’
என்று எல்லாவற்றுக்குமே செயலிகள் உண்டு. இவ்வாறு தொடர்ந்து சகமனிதர்களிடமிருந்து விலகி
விலகி தனிமையில் தள்ளப்படும்போது தேவைப்படும்போது தனக்கான இணையை மெய்நிகரியாக வரவழைத்துக்கொள்ளலாம்
என்ற சாத்தியத்தைச் சொல்லும் இந்தக் கதை கார்த்திக்கின் புனைவுலகை ‘அறிவியல் புனைகதை’
உலகத்துக்கு நகர்த்தியுள்ளது.
கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் கதைமொழி மிகவும்
எளிமையானது. இலக்கணப் பிழைகளோ சொல் மயக்கங்களோ வாக்கியக் குழப்பங்களோ இல்லாத நேரடியான
சித்தரிப்பு முறையைக் கொண்டது. கதையின் தேவைக்கேற்ப வடிவங்கள் சார்ந்து சில மாற்றங்களை
அனுமதிப்பது. வாசகனின் கவனத்தை திசைதிருப்பும் அநாவசியமான வித்தைகளற்றது. இதனால் கதைகளை
தடையின்றி அணுகவும் வாசிக்கவும் முடிகிறது.
நுட்பமும் கச்சிதமும் கூடிய வாசிப்புத்தன்மையைக்
கொண்டிருக்கும் ‘இரு கோப்பைகள்’, ‘மெய்நிகரி’, ‘புள்ளிக்கு பதிலாக வட்டங்கள்’ போன்ற
கதைகளை அவரது புனைவுமொழிக்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.
கணிணி தகவல் தொழில்நுட்ப
துறைச் சார்ந்தவர்களைப் பற்றிய பொதுவான மனப்பதிவை மாற்றும்வகையிலும் சமூகப் பார்வை
ஒருதலைபட்சமானது என்பதை சுட்டிக்காட்டும் விதத்திலும் கார்த்திக்கின் படைப்புகள்
முக்கியமானவை. கணநேரம் கண்சிமிட்டி உதிரும் எரிநட்சத்திர வாழ்வின் மன அழுத்தம், நாற்பது வயதில்
ஓய்வு பெற வேண்டிய அவசரம் தருகிற பதற்றம், எந்தநேரமும் வேலை பறிபோகலாம் எனும்
நிச்சயமின்மை, குழந்தைப் பேறின்மை தொடங்கி பல்வேறு உடல் உபாதைகள்,
ஒழுங்கற்ற இணைவாழ்வு என எல்லையற்ற குழப்பங்களும் சிக்கல்களும்
கணிசமானவை. வசீகரமாக ஒளிரும் கண்ணாடி உலகத்துக்கு வெளியே
உள்ளவர்கள் முழுக்க அறியாதவை. அல்லது அக்கறை கொள்ளதாவை.
இத்துறையின் புழங்குமொழியையும் குறியீட்டுச் சொற்களையும் கொண்ட
புதிய திணைக் கோட்பாட்டின் அடிப்படையில் கார்த்திக் உருவாக்கும் புனைவுலகம்
அடர்த்தியானது. அத்துடன் ஆற்றல் மிகுந்த செயலிகள் வழியாக நிகழவுள்ள எதிர்கால
சாத்தியங்களையும் உள்ளடக்கியிருப்பது அதை பொருண்மைமிக்கதாய் ஆக்குகிறது.
தமிழ் புனைவுலகத்துக்கு புதிய கதைக்களங்களை
அறிமுகப்படுத்திய ‘இரு கோப்பைகள்’, ‘மெய்நிகரி’, ‘சுழல்’ போன்ற கதைகளும் கணிணி தகவல்
தொழில்நுட்ப உலகைச் சார்ந்த அரசியலையும் அதன் உள்ளடுக்குகளையும் திருத்தமாகச் சொல்லும்
‘நட்சத்திரவாசிகள்’ நாவலும் பல்வேறு புனைவுகள் சார்ந்து தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகளும்,
‘ரட்சகன்’, ‘ஜன்னல்’ போன்ற குறுங்கதைகளும் நவீன தமிழ் புனைவுலகில் கார்த்திக் பாலசுப்ரமணியத்தின்
மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
0
No comments:
Post a Comment