Thursday, 11 June 2020

மனைமாட்சி - சுரேன்


வெகுசனம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிற கதைக்கருக்கள். அவற்றை விரித்துக் கூறுவதற்கு வெகுசனம் அதிகம் மூளையைக் கசக்க வேண்டியிராத இலகுவான மொழிநடை. இவைதான் எம். கோபாலகிருஷ்ணனின் படைப்புலக சூட்சமம் என்று நினைக்கிறேன்.

மனைமாட்சி பெண்களின் உலகம். எத்தனைப் பெண்கள். எத்தனை மனங்கள். ஒரே மனத்தில் எவ்வளவு உன்னதம் எவ்வளவு விகாரம். தேவாம்சமும் ராட்சசமும் பொருந்திய பெண்மை. ஒவ்வொரு மனத்திலும் இவற்றின் விகிதாசாரங்கள் கூடலாம் குறையலாம். முற்றிலும் ராட்சசி முற்றிலும் தேவதை என்றொரு பெண் வகை உண்டா?

ஏதேச்சையான ஒற்றுமையா என்பது தெரியவில்லை. மூன்றாவது கதையில் வரும் கண்ணன்- கலைவாணி பகுதிகள் Manmarziyan ஐ நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. ஒருத்தனைக் காதலித்து விட்டு பெற்றொர் வற்புறுத்தலால் வேறொருவனைத் திருமணம் செய்து கொள்ளும் கலைவாணி. தெளிவில்லாத, கோழைத்தனம் நிரம்பிய காதலன். அவளது கதையை அறிந்துகொண்ட பிறகும் திறந்த மனத்துடன் நடந்துகொள்ளும் கணவன். முடிவும் கூட கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கிறது.

கோபாலகிருஷ்ணனின் கதைக் கோர்வைகளில் web serial களுக்குரிய இலக்கணமும் கட்டுக்கோப்பும் இருக்கிறது. ஒரு பகுதி முடிந்ததும் கீழே வைக்க மனமில்லாமல் தொடர்ச்சியாக அடுத்த பகுதியை வாசிக்க வைக்கும் விசை அவற்றில் இருக்கிறது. விறுவிறுப்பிற்காக மொழியையும் கதைக்கருவையும் சமரசம் செய்து கொள்வதும் இல்லை. வாழ்க்கையின் முடிச்சுகள் இருகி சிக்கிக் கொள்வதும் அவற்றை ஆண் பெண் பாத்திரங்கள் கையாளும் விதங்களும் தேர்ந்த உளவியல், தத்துவ பேராசிரியரின் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் அனுபவத்தைத் தருகின்றன.

ஒவ்வொரு புத்தகத்தையும் வாசிக்கத் துவங்கும் பொழுது அதை ஆரம்பிக்கும் தேதியை புத்தகத்தின் முன் பகுதியில் குறித்து வைப்பேன். முடியும்போதும் தேதியைக் குறிப்பேன். குறிப்பிட்ட புத்தகத்தைப் படிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளும் சிறுபிள்ளைத்தனம். வருடங்கள் கழிந்து ஏதோ ஒரு தேவைக்காக ஒரு புத்தகத்தை எடுக்க வேண்டி இருந்து, அதில் படித்த காலத்தைப் பார்க்கும் பொழுது ஒரு கிளுகிளுப்பு உருவாகும். என் வாசிப்பு வரலாற்றில் மிக வேகமாக படித்த புத்தகம் என்று மனைமாட்சியைக் கூறுவேன். இரண்டு நாட்கள் அறுநூற்றி சொச்சம் பக்கங்கள்.

முகநூல் பக்கம்  24 ஜூன் 2019

No comments:

Post a Comment

யுவன் - விஷ்ணுபுரம் விருது

  1 இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு டிசம்பர் மாதம். அலுவலகப் பயிற்சி நிமித்தமாக புனே சென்றிருந்தேன். அன்று காலை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்ற...