Thursday, 11 June 2020

மாயப் புன்னகை குறித்து ப.தெய்வீகன்


மந்தகாசமான புன்னகை வழியும் உலகப்புகழ்பெற்ற மோனலிஸா ஓவியம் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பிரான்ஸின் லூவர் காட்சியகத்தில் அந்த ஓவியத்திற்கு மாத்திரம் செய்துகொள்ளப்பட்டுள்ள காப்புறுதியின் பெறுமதி 65 கோடி அமெரிக்க டொலர்கள்.

லூவர் காட்சியகத்திற்கு இன்றுகூட அந்த ஓவியத்தை பார்ப்பதற்கு போகின்றவர்கள் அந்த ஓவியத்துக்கு முன்பாக நின்று அதனை ரசிப்பதற்கு 30 செக்கன்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மோனலிஸா ஓவியத்தை சிருஷ்டித்த லியனாடோ டா வின்ஸி சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக வைத்து வைத்து கீறி, முழுமைப்படுத்திய ஓவியம் இது என்கிறது வரலாறு. இத்தாலிய ஓவியரான லியனாடோ டா வின்ஸி பிரஞ்சு மன்னரின் அழைப்புக்கிணங்க பிரான்ஸிற்கு வந்தபோது, கொண்டு வந்த தனது முடிவுறாத ஓவியத்தை, பின்னர் வரைந்து முடித்தபோது அதுவே தற்போதைய மோனலிஸா ஓவியமானது என்கிறார்கள் வரலாற்றாளர்கள்.

ஆனால், எந்தகலைப்படைப்பிலும் வேண்டுமென்றே ஒரு பூர்த்தியாகாத விடயத்தை விட்டுவைப்பது அந்தப்படைப்பை உருவாக்குபவனின் வழக்கம். அதன் ஊடாக அந்தப்படைப்புக்கு ஒரு தொடர்ச்சியை ஏற்படுத்துவது அதன் நோக்கம் என்பது வரலாற்று ரீதியாக பேணப்படுகின்ற ஐதீகம். அந்தவகையில், மோனலிஸா ஓவியத்திலும் மோனலிஸாவின் வலக்கையானது முழுமையாக பூர்த்திசெய்யப்படாததுபோன்ற - குறையுள்ளதாக - காணப்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த ஓவியம் உலத்தின் பேரதிசயங்களில் ஒன்றாக பலராலும் வியந்து பார்க்கப்பட்டாலும் இந்த ஓவியத்திற்கு அப்பால், மோனலிஸா மீது காதல் கொண்டவர்களது கதைகளும் அந்தக்கூர்மையான புன்னகையினால் தம்மைத்தொலைத்தவர்களின் கதைகளும் சுவாரஷ்யமானவை. பிரஞ்சுப்பெரும்போருக்கு பின்னர், தனது படுக்கையறையில் இந்த ஓவியத்தைக்கொண்டுபோய் வைத்துக்கொண்ட பேரரசன் நெப்போலியன், நான்கு வருடங்களாக மோனலிஸாவின் முகத்தில் விழித்தெழுந்துகொள்வதை வழக்கமாக கொண்டிருந்தான்.

ஆழ்மனதில் உறைந்திருக்கும் காதலை எப்போதும் உருகவைத்துக்கொண்டிருக்கும் புன்னகைக்கு சொந்தமான மோனலிஸாவை அடையமுடியவில்லையே என்று லூவர் காட்சியகத்துக்கு வந்த ஒருவன் அந்த ஓவியத்தையே பார்த்துக்கொண்டு தனது நெற்றியில் துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை செய்திருக்கிறான்.

இப்படி எத்தனையோ சம்பவங்கள்

கலைக்கும் அப்பால் காதலின் மேன்மையை அந்த ஓவியத்துக்குள் லியனாடோ ஒளித்துவைத்திருப்பதாக பல்லாயிரக்கணக்கானவர்கள் இவ்வாறு மயங்கிக்கிடக்க -

பிரஞ்சு தேசத்தின் மீது காழ்ப்பை உமிழ்பவர்களும், அந்த நாட்டின் மீது தமது எதிர்ப்பை பதிவுசெய்துகொள்ள விரும்புகிறவர்களும்கூட, மோனலிஸாவைத்தான் தங்களது இலக்காக தெரிவுசெய்திருக்கிறார்கள். அவளின் மீது பொருட்களை விட்டெறிந்திருக்கிறார்கள். மோனலிஸா மீது சிறுகறையையாவது ஏற்படுத்துவதன் மூலம் பிரஞ்சு தேசத்தின் முகத்தில் கரிபூசலாம் என்பது ஒரு நோக்கமாக பலருக்கு இருந்திருக்கிறது. அது உண்மையும்தான். இந்த ஓவியம் பிரான்ஸின் உயிர்கலங்களில் ஒன்று எனலாம். இருநூறு வருடங்களுக்கும் மேல் பாதுகாத்து வைத்திருக்கும் பொக்கிஷம்.

இப்படிப்பட்ட ஓவியம் 1911 ஆம் ஆண்டு இத்தாலிய கவிஞன் ஒருவனால் பிரான்ஸில் வைத்து திருடப்பட்டு இத்தாலிக்கு கொண்டுசெல்லப்படுகிறது. தனது நாட்டு ஓவியனால் வரையப்பட்ட உலகப்புகழ்பெற்ற ஓவியம் தனது நாட்டிலிருப்பதுதான் சரி என்பது அவனது வாதம். லூவர் காட்சியகத்தினுள் பணியாளர் வேடமிட்டு நுழைந்து அவன் மோனலிஸா ஓவியத்தை திருடிய சம்பவத்தையும் அதன் பிறகு இடம்பெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியாக அந்த ஓவியம் மீண்டும் எவ்வாறு லூவர் காட்சியகத்துக்கு வந்து சேர்கிறது என்பது பற்றியும் எம். கோபாலகிருஷ்ணன் எழுதியுள்ள அசாத்தியமான குறுநாவல் "மாயப்புன்னகை"

"தமிழினி" வெளியீடாக இந்த வருடம் வெளியாகியுள்ள இந்த குறுநாவல், சிறியதொரு வரலாற்று சம்பவத்தை வைத்து புனையப்பட்டுள்ள செறிவான பிரதி. இதனை வெறுமனே வரலாற்றின் துண்டுக்கதையொன்றின் மீதான மீள்வாசிப்புப்போல சுருக்கிவிடாமல், இதற்கும் இதுபோன்ற சம்பவங்களுக்கும் இலக்கியப்பெறுமதியை கொடுத்திருக்கிறார் கோபாலகிருஷ்ணன்.

வசீகரம் மிக்க அந்த ஓவியத்தைப்போல அந்த ஓவியம் காணமல்போனதுமுதல் அது மீளக்கிடைக்கப்பெற்றதுவரையான காலக்கொந்தளிப்புக்களையும் நாவலுக்குள் உலவும் பாத்திரங்களின் உணர்ச்சிப்போராட்டங்களையும் கலை அமைதியோடு கோர்த்திருக்கிறார் கோபாலகிருஷ்ணன்.

ஒரு செய்தியை இலக்கியமாக்குதல் என்ற அப்பியாசத்துக்கு உதாரணமான மிகச்சிறந்த குறுநாவல் "மாயப்புன்னகை"

10 மார்ச் 2020

No comments:

Post a Comment

யுவன் - விஷ்ணுபுரம் விருது

  1 இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு டிசம்பர் மாதம். அலுவலகப் பயிற்சி நிமித்தமாக புனே சென்றிருந்தேன். அன்று காலை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்ற...