வரலாற்றினைச் சரிவரக் கற்று அறியாதவர்களாலும் அறிந்தும் கண்களை மூடிக்கொண்டு அஞ்ஞானத் தூக்கத்தில் திளைப்பவர்களாலும் வரலாறு அதன் அத்தனை கீழ்மைகளோடும் போதாமைகளோடும் குறைகளோடும் திரும்ப நிகழ்த்தப்படுகிறது. சில நேரங்களில் அதுவே திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படுகிறது. அப்படி நிகழ்த்தப்பட்ட வரலாறென்னும் இருட்குகையின் துளி இருளை நாவலாக்கி கையளித்திருக்கிறார் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.
இந்தியா முழுவதும் சாதியின் வேர்கள் ஒரே நேரத்தில் ஆழமாகவும் நுட்பமாகவும் ஊடுருவியுள்ளன. இதோ, இன்று இங்கே இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் பின்பு ஏதோ ஒரு நாளில் எங்கோ அமர்ந்து இதனை வாசிக்க வாய்க்கும் ஒருவருக்கும் என பிறப்பொக்கும் ஒவ்வொருக்கும் பொதுவாக, ஜாதியின் வேர்கள் நம் கால்களுக்கு அடியில் நேரடியாகவும் மறைமுகமாவும் பற்றிப் பரவியிருக்கின்றன.
வரலாற்றுப் பார்வையில் சாதியின் பெயரால் கட்டவிழ்க்கப்படும் அடக்குமுறையின் அளவுகளில், அவை மேற்கொள்ளப்படும் முறைமைகளில் சிறிது மாற்றமிருக்கலாம். ஆனால், சாதியத்தின் தாக்கம் அதன் வழியே சாத்தியப்படும் அதிகாரம், பணம், புகழ் என எதிலும் இன்றளவும் அத்தனை பெரிய மாற்றம் ஒன்றும் வாய்க்கவில்லை. நேற்று நடந்த ‘பொன்பரப்பி’ சம்பவம் இதற்கு மற்றுமொரு சான்று என்ற உண்மையை சற்று வெட்கத்தை விட்டு ஒப்புக் கொண்டே இந்நாவல் பற்றிய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.
நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்
பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்
என்று சிலப்பதிகாரத்திலேயே பாடப்பட்டிருக்கும் முதுபெரும் தொழிலாக நெசவுத்தொழில் இருந்த போதும் நெசவாளர்களை, அவர்களின் வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்டு தமிழில் வந்து நவீன இலக்கியங்கள் வெகு சொற்பமே. அந்த வகையில் அம்மக்களின் வாழ்வை, பசை போடுதல், பாவு பணைத்தல், தார்ச் சுற்றுதல், சீலை அறுத்தல், அடுக்கல் என்று அவர்களின் தொழில்படுமுறைகளை நுட்பமாகச் சித்தரித்து நாவல் முழுவதும் துருத்தாத வகையில் கட்டமைத்துள்ளார் எம்.கோ.
நெசவினைக் குலத்தொழிலாகவும், செளடேஸ்வரி அம்மனைக் குலதெய்வமாகவும் கொண்டவர்கள் கன்னடம் பேசும் தேவாங்கச் செட்டியார்கள் சமூகத்தினர்.
தற்போதைய மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் உஜ்ஜயினி அவர்களின் பூர்வீகமாகக் கருதப்படுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற முகலாய மன்னர்களின் படையெடுப்பின் காரணமாக அங்கிருந்து தப்பி, ஹம்பியைத் தலைநகராகக் கொண்ட விஜயநகரப் பேரரசை வந்தடைகிறார்கள். அதன் பின்னர் நடைபெற்ற பாமினி சுல்தான்களின் படையெடுப்பால் அங்கிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு தமிழகப் பகுதிக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்படி வந்த அவர்கள், இன்றைய கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக குடியேறியுள்ளனர். (பதினைந்தாம் நூற்றாண்டில் திருப்பூர் உள்ளிட கொங்கு மண்டலமும் விஜய நகரப் பேரரசின் ஓர் அங்கமாகவே இருந்துள்ளது)
அவ்வாறாக அவிநாசி அருகேயுள்ள உமயஞ்செட்டிப்பாளையத்தில் குடியேறிய 64 குடும்பங்களைப் பற்றிய கதையே இந்நாவல். அண்ணாத்துரையின் மேடைப் பேச்சு, திராவிட முன்னேற்ற கழகம் பங்கேற்கும் தேர்தல், திருப்பூரில் துளிர்விடும் மில்கள் என்று நாவலில் ஆங்காங்கே காணப்படும் சில நுட்பமான தகவல்களின் வழியே நாவல் நடைபெறும் காலம் என்று இந்திய விடுதலைக்குப் பின்னான ஐம்பதுகளையும், அறுபதுகளையும் குறிப்பிடலாம். இப்படியாக, ஆயிரத்து ஐந்நூற்று ஐம்பதுகளில் அவர்கள் புலம்பெயர்ந்து வந்த வரலாற்றைக் கொண்டு கணக்கிட்டால் இம்மக்கள் இங்கே புலம்பெயர்ந்து கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகள் ஆகின்றன. இருந்தும் கூட, கதை நடைபெறும் காலம் வரை இம்மண்ணின் மீது எந்தவொரு உரிமையும் இல்லாதவர்களாகவே அவர்கள் இருந்து வந்திருக்கின்றனர். அதாவது, குடிநீருக்குக் கூட இங்கே பிரதானமாக இருக்கும் ஆதிக்கச் சாதியினரான கவுண்டர்களின் தயவை எதிர்பார்த்தே இருக்கின்றனர். இதுவே நாவலின் களம்.
தான் விரும்பும் வீட்டின் தறியில் அவர்கள் வணங்கும் செளடேஸ்வரி அம்மனே வந்து நெய்வதாகவும், அப்படி ‘அம்மன் நெசவு’ நடைபெறும் வீட்டில் அம்மனைக் குடியேற்ற வேண்டும் என்பது அம்மக்களின் ஐதிகமாகவும் இருக்கிறது. இதைப்போன்று அம்மன் நெசவு நடைபெறும் வீட்டிலிருந்து நாவல் தொடங்குகிறது.
இதற்கிடையில், அப்பகுதியில் ஆள், பணம், பலம், பொருள், அதிகாரம் என அனைத்திலும் பெரும்பான்மையாக இருக்கும் கவுண்டர்களுடன் இவர்களுக்குச் சிறு சலசலப்பு வந்து மூள்கிறது.
இளவட்டங்களின் வம்புச் சண்டை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரு கட்டத்தில் இரு சமூகத்தினருக்குமிடையேயான பெரும் பகையாக உருவெடுத்து நிற்கிறது. எல்லாவகையிலும் அண்டிப் பிழைக்க நேரிட்ட ஒரு வர்க்கம், ஆண்டே பழக்கப்பட்ட மற்றொரு வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் போது அரசும் அதிகாரமும் ‘உடையவர்களின்’ பக்கம் நிற்கிறது. கடைசியில், வேறு வழியின்றி அங்கிருந்தும் வெளியேறிப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
அன்று சுல்தான்கள். இன்று ஆதிக்கச் சாதியினர். அவ்வளவு தான் வித்தியாசம்.
இதுபோன்ற சிக்கலான களமொன்றை தன் முதல் நாவலாக எழுதப் பெருந்துணிவு வேண்டும். அப்படி எழுதும் போது, ஒரு பக்கச் சார்பெடுத்து எழுந்து வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பினும் அத்தகைய இடங்களை பெரும்பாலும் சமநிலை தவறாமல் எழுத்தில் கொண்டு வந்துவிட்டிருக்கிறார். அதுவே, முதல் நாவலில் அவர் அடைந்திருக்கும் வெற்றி எனலாம்.
திடீரென்று நிகழ்ந்த அம்மன் நெசவு என்னும் அற்புதத்தை, கிடைத்தற்கரிய பெரும் பேறை கிடைக்கப் பெற்ற நஞ்சப்பன் அதைத் துஞ்சப் பயந்து, ஒன்றுவதற்கு அஞ்சி, ஒட்டுதலின்றி மருகும் இடங்கள் அத்தனையும் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. மறுபுறம், அதே நிகழ்வின் பொருட்டு தீராத வஞ்சம் கொண்டு அலையும் வெள்ளியங்கிரியையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இருநூறு பக்க நாவல் என்ற போதும் சிறிதும் பெரியதும் என பத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு கதாப்பாத்திரங்கள் வருகிறார்கள். அத்தனை பேரும் அவரவர்களுக்குண்டான தனித்தன்மையுடன் உலவுகிறார்கள். பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் போதே அவர்களைப் பற்றிய துலக்கமான சித்திரத்தை தெளிவாக வடிவமைத்து விடுகிறார். எம்.கோ-வின் நுட்பமான அவதானிப்பும் அதை கலையாக மாற்றவல்ல அவரின் சரளமான மொழியாளுமையும் இதை மிக எளிதாக அவருக்குச் சாத்தியப்படுத்தியிருக்கின்றன.
பெண்களின் உளப்போக்கினை கதைப்படுத்துவது அவருக்கு அத்தனை இயல்பாக வாய்த்திருக்கிறது. அம்மன் வீடு வந்து சேர்ந்தது குறித்து, ஒரு பக்கம் பரிதவிப்பையும் மறுபக்கம் பெருமிதத்தையும் காட்டி அலையும் உண்ணாம்பாள், அம்மன் நீங்கி களையிழந்த வீட்டில் கதறி அழும் மீனாட்சி, ஒரு கை சாணிக்கு மிதப்பு காட்டும் பூவாத்தா, கறவை மாட்டின் மடி தொட்டதற்காக குழவிக் கல்லால் அடிக்கப்பட்டு கை நசுங்கிக் கிடக்கும் ஆராயி, மேலும் இராசாமணி, தேவகி, சுந்தரி என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்ப்பு.
இருநூறு பக்க நாவலில் மொத்தம் 75 அத்தியாயங்கள் உள்ளன. மிகச் சில அத்தியாயங்களைத் தவிர பெரும்பான்மையானவை மெதுவாகத் தொடங்கி ஒரு பெரும் நிகழ்விற்கான அத்தனை சாத்தியங்களையும் கட்டமைத்துவிட்டு கடைசியில் அப்படி ஒன்றை நிகழ்த்தாமலே சட்டென்று முடிந்து விடுகின்றன. இதை முதல் நாவலுக்குரிய போதாமை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொள்வதற்கான அத்தனை நியாயங்களையும் அவரின் ‘மணல் கடிகை’ பூர்த்தி செய்து விடுகிறது.
சோமனூர் கவுண்டர், பண்ணாடிக் கவுண்டர் இருக்கும் ஊரில் ஒரு வெளாந்தோட்டக் கவுண்டரும் உண்டென்றாலும், தி.ஜா-வின் பாயசம் கதையில் வரும் சாமநாதுவின் மகளைப் போன்ற கண்ணில் முள் மண்டும் பெண்ணொருத்தி அந்தப் பக்கம் இல்லாதது என்னளவில் ஒரு குறையே.
சமீபத்தில் கவிஞர் பெருந்தேவி இட்ட அவரின் ஃபேஸ்புக் நிலைத்தகவல்,
“நல்ல இலக்கியத்தின் ஒரு லட்சணம் வாசகரின் சுய அடையாளத்தை அக்கணமே கலைத்து விடுவது. அவர் செய்த / செய்யாத தவறுக்கெல்லாம் அக்கணத்தில் சந்திக்கும் யாரிடமும் எதனிடமும் ஆத்மார்த்தமாக மன்னிப்பைக் கோர வைப்பது. சரணடைய வைப்பது. அப்படியே அவரைக் கரைத்துவிடுவது. அதன் இன்னொரு லட்சணம் வாழ்க்கை குறித்த மனத்தொந்தரவுக்கு ஆளாக்குவது. நம் கற்பிதங்களை அடித்து உடைப்பது.”
மேற்சொன்ன இரண்டு லட்சணங்களையும் இந்நாவல் சந்தேகமின்றி பூர்த்தி செய்கிறது.
மனிதன் லட்சம் ஆண்டுகளாக குழுக் குழுவாகவே வாழ்ந்து பழக்கப்பட்டவன். அவன் குழுவைச் சாராத யாரொருவனும் அவனுக்கு அன்னியனே. அவனை உலகப் பொது மனிதனாக அனைத்து வேற்றுமைகளையும் களைந்து சக மனிதனை அன்பும், கனிவும், கருணையும் பெருக நேசிக்கப் பழக்குவது அத்தனை எளிதான காரியமில்லை. ஆனாலும் அதை நோக்கிய பயணத்தின் ஒரு சிறு நகர்வையே காலம் காலமாக இலக்கியம் செய்து வருகிறது. அந்த நகர்வினை நோக்கிய திசையில், அம்மன் நெசவும் தன்னை இணைத்துக் கொள்கிறது.
தமிழினி மின்னிதழ் ஜூலை 2019
No comments:
Post a Comment