Saturday 4 September 2021

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் - ஒரு லட்சியவாதியின் இலக்கியப் பயணம்


 


இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், காந்தியின் கொள்கைகளை அடியொட்டி தமிழில் லட்சியவாத நாவல்கள் வெளியாயின. கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி ஆகியோரது நாவல்கள் வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தன. சரத் சந்திரர், வி.எஸ்.காண்டேகர் ஆகியோரின் மொழிபெயர்ப்புகள் முக்கியத்துவம் பெற்றன. காந்தியின் கொள்கைகளும் கோட்பாடுகளும் தமிழகத்தில் ஏற்படுத்திய வலுவான தாக்கங்களைக் குறித்த வரலாற்று ஏடுகள் பல முக்கியமான ஆளுமைகளால் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அதனை முன்னிலைப்படுத்தும் லட்சியவாத நாவல்கள் வெகு சிலவே. அந்த வகையில் முக்கியமான இரு நாவல்கள் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘இருபது வருஷங்கள்’, ‘பகல் கனவு’ ஆகியன.



இருபது வருஷங்கள்

‘இருபது வருஷங்கள்’ நாவலை தமிழ்ப் புத்தகாலயம் 1965ல் வெளியிட்டுள்ளது. இதற்காக எம்.எஸ்.கல்யாணசுந்தரம் எழுதியிருக்கும் முன்னுரை (கொடைக்கானலிலிருந்து டிசம்பர் 1965ல் )முக்கியமானது.

“காதல் சிடுக்குகளும் திடுக்கிடும் சம்பவங்களும் பயங்கரத் தொங்கல்களில் முடியும் அத்தியாயங்களும் ‘மருந்துக்குக்கூட’ இல்லாத இக்கதையை வெளியிட ‘தமிழ்ப் புத்தகாலயம்’ தைரியமாய் முன் வந்ததற்கு என் நன்றி” என்றும் “நாட்டின் சுதந்திரப் போராட்டத்தையொட்டிய சில நிகழ்ச்சிகளும் தமிழ்நாட்டார் ஒருவர் ஒரு பசிபிக் சமுத்திரத் தீவில் இரண்டரை ஆண்டு வசித்துப் பெற்ற ஈடு இணையற்ற அனுபவங்களும் என் கையெழுத்துத் தாள்களிலிருந்து பாச்சை, ராமபாணம், செல் வகையறாவின் ரசனையற்ற பசியைத் தீர்த்துவிடக்கூடாது, முக்கியமாக கேசவராவின் யுத்த அனுபவங்களை ரிகார்டு ஆக வேண்டும் என்பது பதிப்பாளரின் பாராட்டத்தக்க அவா’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய விடுதலை மட்டுமல்லாது சமூக விடுதலையையும் கிராமப் பொருளாதார மேம்பாட்டையும் அடைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி காந்தி வகுத்த செயல்திட்டங்களை அவரது கட்டளைகளாக ஏற்று அவற்றை தத்தமது கிராமங்களில், ஊர்களில் நிறைவேற்றியவர்கள் பலரும் உண்டு. இதற்கென தமது நிலங்களை சொத்துக்களை தொண்டு மனப்பான்மையுடன் தானமாக வழங்கிய பெரியோர் பலர். கதராடை, அரிஜன மேம்பாடு, பெண் கல்வி, தற்சார்பு பொருளாதரம் போன்ற அடிப்படைகளுக்கான காந்தியின் செயல்திட்டங்களை உள்ளூர் எதிர்ப்புகளையும் மீறி உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுத்தினார். இதனால் சிறை செல்லவும் ஜாதிபிரஷ்டம் உள்ளிட்ட சமூக எதிர்ப்புகளையும் சந்திக்க நேர்ந்தது.

காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தனது வாழ்வை சமூகத்துக்கு அர்ப்பணிக்கும் கேசவ் ராவ் எனும் மருத்துவரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் ‘இருபது வருஷங்கள்’. பெரியகுளத்தில் சாரண இயக்கத்தில் தொடங்கி, சமூக மருத்துவமனை, தொழுநோயாளிகளுக்கான மருத்துவமனை என்று தன்னால் இயன்ற காரியங்களைச் செய்ய முடிந்தபோதும் கேசவ் ராவின் மனம் இதனால் நிறைவு கொள்வதில்லை. தேசத்தில் பெரிய அளவில் செய்யவேண்டிய பணியுடன் ஒப்பிடும்போது ஒரு சிற்றூரில் செய்யும் இந்தப் பணி மிகச் சிறியது என்ற எண்ணம் அவரை அலைகழிக்கிறது. இதனால், இரண்டாம் உலகப் போரின்போது மருத்துவர்களுக்கான அழைப்பு வரும்போது புறப்பட்டுச் செல்கிறார். பிரிட்டன் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்யும்பொருட்டு ஜப்பானுக்குச் செல்கிறார். பிரிட்டன் துருப்புகள் ஜப்பானிடம் வீழ்ந்துவிட போர்க் கைதியாகி அவர் ‘நியூ பிரிட்டன்’ தீவுக்கு எண்ணற்ற கைதிகளுடன் அனுப்பப்படுகிறார். அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத அந்தத் தீவில், தனது அனுபவத்தின் திறன்கொண்டு கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். பயிர் செய்யும் முறையை சொல்லித் தருகிறார். தென்னையின் பயன்பாடுகளை கற்பிக்கிறார். சவரம் செய்யக்கூட வழியில்லாத இடத்தில், எண்ணற்ற துன்பங்களுக்கும் நடுவே, ஒரு துறவியைப்போல நாட்களைக் கழிக்கிறார். தன்னால் இயன்ற வகையில் அங்கிருப்போருக்கு உதவுவது மட்டுமே அவரது இலக்கு. தீவின் பழங்குடிகளைச் சந்திக்கிறார். தனது கடிகாரத்தைக் கொடுத்து பதிலாக அரிசியைப் பெற்றுக்கொள்கிறார். ஆள்நடமாட்டமற்ற இடத்தில் வாழும் ஜெர்மானியனைச் சந்திக்கிறார். எல்லா இடத்திலும் அவரது தொண்டுள்ளமே அவருக்கு வழிகாட்டுகிறது, உதவுகிறது. போரில் ஜப்பான் வீழ்ந்தபின் நாடு திரும்புகிறார். குடும்பத்துடன் தன் சொந்த ஊரில் நிம்மதியான வாழ்வு. ஆனால், அவரது மனம் அதனை ஏற்கவில்லை. எல்லாவற்றிலிருந்தும் ஒரு விலக்கம். எதுவும் அவருக்கு உவப்பானதாக இல்லை. உடலும் தளர்ந்து நோய்களுக்கு இடம் தருகிறது. ஆனாலும் அவர் செய்வதற்கு ஒன்றுமில்லை. பெயர் தெரியாத ஒரு தீவில் முகமறியாத பலருக்கும் உதவியிருந்த நாட்களே அவர் நினைவில் எஞ்சி நிற்கின்றன.

தொண்டுள்ளம் கொண்ட ஒரு லட்சியவாதியின் பயணம் எங்கும் நின்றுவிடுவதில்லை, மனநிறைவு கொள்வதில்லை. ஒன்று முடிந்ததும் அடுத்த இலக்கை நோக்கிச் செல்லவே அவன் மனம் விரும்புகிறது. கேசவ் ராவின் கதாபாத்திரமும் அப்படியான தொடர் பயணத்தை உத்தேசிக்கும் ஒன்றுதான் என்பதை நாவலின் தொடக்கம் முதலே அறிந்துகொள்ள முடியும்.

நல்ல தொழில், தகுந்த வருமானம், மரியாதைக்குரிய சமூக அந்தஸ்து, மகிழ்ச்சியான குடும்பம் என்பதே லௌகீகவாதிகளின் இலக்கு. அதிகமும் புறவயமானது. இதற்கு மாறாக கொள்கைவாதிகளின் இலக்கு அகவயமானது. தமது மனத்துள் கனலும் பசியை அணைக்கவே அவர்கள் துணிவார்கள். அதில் பல இன்னல்கள் நேரலாம். குடும்பத்தையும் உற்றார் உறவுகளையும் பிரிந்து செல்ல வேண்டி வரலாம். ஆனால், பொதுநலத்துக்கான காரியங்களில் ஊன், உறக்கம், உடல் வாதைகள் மறந்து அவர்களால் நிறைவுகொள்ள முடியும்.  அதுவே, இப்பிறவியின் பலன் என்பதுபோல தங்களையும் தமது தேவைகளையும் மறந்து அதில் முழுமையாக தங்களை ஒப்புக்கொடுத்துவிடுவார்கள்.

1930களில் தொடங்கும் இந்த நாவல் சுதந்திரக்குப் பிந்தைய சில வருடங்களுடன் முடிவடைகிறது. இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜப்பானிய கைதியாக தனித் தீவில் வசிக்கும் நாட்களைச் சித்தரிக்கும் பகுதியே இந்த நாவலில் முக்கியமானது. தொண்டுள்ளம் படைத்த ஒருவனின் உள்ளம் எந்தவிதமான சூழலிலும் தன்னைப் பொருத்திக்கொண்டு அடுத்தவருக்காக இயன்றதைச் செய்யவே விரும்பும் என்பதை உரக்கச் சொல்லும் பகுதி இது. ஒரு சாகச நாவலுக்கு இணையான பகுதியாகவே எம்.எஸ்.கல்யாணசுந்தரம் இதனை எழுதியிருக்கிறார்.

பகல் கனவு

இந்த நாவலை எம்.எஸ்.கல்யாணசுந்தரம் எப்போது எழுதினார் என்பது தெரியவில்லை. கைப்பிரதியாகவே நின்றுபோய்விட்ட இந்த நாவலை ‘தமிழினி’ 2001ம் ஆண்டில் முதல் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

இதன் காலகட்டம் 1920களில் தொடங்குகிறது. சுதந்திரத்துக்குப் பிந்தைய சில ஆண்டுகளுடன் முடிந்திருக்கிறது. இதுவும் ஒரு லட்சியவாத நாவல். சரியாகச் சொல்லப்போனால் ஒரு லட்சியவாதியின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல். தொண்டுள்ளம் கொண்ட ஒரு தனி மனிதன் பொதுநலத்தின் பொருட்டு தன் ஊரையும் உறவுகளையும் விடுத்து போர்முனையில் மருத்துவ சேவையில் ஈடுபடுவதைக் காட்டுவது ‘இருபது வருடங்கள்’ நாவல். இதற்கு மாறாக, தனிப்பட்ட வாழ்க்கையில் அறத்துடன்கூடிய லட்சிய நோக்கை கடைபிடித்து வாழும் ஒருவனது வாழ்வைக் காட்டுகிறது ‘பகல் கனவு’ நாவல்.

அன்றாட வாழ்வுக்கான அவசியமான தேவைகள், அவற்றை நேர்மையான வழியில் பெற்றுக்கொள்ளத் தேவையான ஊதியம், இருக்கும் இடத்தில் இருப்பதே சிறப்பு எனும் மனம், பெண் கல்வி, அவர்கள் வேலைக்குச் செல்ல ஊக்குவிப்பது என ஒரு தனி மனிதன் தன் வாழ்வில் கடைபிடிக்க சாத்தியமான கொள்கைகளையும் எந்தவிதமான புகார்களும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் அந்த வாழ்வை வாழ முடிவதையும் ‘பகல் கனவு’ என்ற பொருத்தமான தலைப்பில் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் விவரித்திருக்கிறார்.

சமூகத்தின் பார்வை, விமர்சனங்கள், குடும்பத்திலிருந்து எழுகிற தடைகள் ஆகியவற்றைக் கடந்து தன் வழியில் உறுதியுடன் நடந்து லட்சியத்தை அடைய முடியும் என்பதை நாவல் வலியுறுத்துகிறது. அடிப்படையில் இதற்கான தேவை கல்வி என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. வாழிடம் எதுவானாலும் மனிதர்களின் மீதான நம்பிக்கையும் அவர்களுடனான உறவும் மிக முக்கியமானது எனும் அடிப்படையையும் நாவல் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆக்ரா நகரின் பின்னணி இந்த நாவல் எடுத்துக்கொண்ட மையத்துக்கு வலு சேர்த்திருக்கிறது. பெண் கல்வி, அவர்கள் வேலைக்குச் செல்வதற்கான சூழல் போன்றவற்றை இந்த நாவல் மிகுந்த நம்பிக்கையுடன் உறுதியுடன் சொல்லியிருப்பது இன்று வியப்பைத் தருகிறது.

‘இருபது வருடங்கள்’ நாவலுக்கும் ‘பகல் கனவு’ நாவலுக்கும் இடையிலான முக்கியமான வித்தியாசம் ‘பகல் கனவு’ நாவலில் கொப்பளிக்கும் அங்கதம். தெளிவான சித்தரிப்பும், கச்சிதமான வாக்கிய அமைப்பும் கொண்ட நாவலினூடே பகடியும் அங்கதமும் வெகு இயல்பாக வெடிக்கின்றன. 128 பக்கங்களையேக் கொண்ட சிறிய நாவல் என்றபோதும் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் புனைவுத் திறன் துலக்கமாக அமையப் பெற்றுள்ளது. தெளிந்த நீரோடை போன்ற கதையமைப்பு. சிக்கல்களோ திருப்பங்களோ இல்லாத களம். நினைத்ததையெல்லாம் தன் விருப்பப்படி அமைத்துக் கொள்ள முடிகிற மூர்த்தியின் வெற்றிகரமான வாழ்க்கை நிகழ்வுகளை அமைதியாக விவரிக்கிறது ‘பகல் கனவு’.

ஆக்ரா தந்தி இலாக்காவில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு சென்று சேரும் மூர்த்தி தனது திறன்களைக்கொண்டு வேலைகளைத் திறம்படி செய்வதும், சக ஊழியர்களிடையே நன்மதிப்பைப் பெறுவதும், அவர்களின் நலனுக்காக படிப்பகம், சிந்தனை அரங்கம், கூட்டுறவு சங்கம் போன்ற அமைப்புகளை நிறுவுவதுமான காரியங்கள் நாவலில் இடம்பெற்றுள்ளன. 

தந்தி இலாகா அதிகாரியின் வீட்டில் உள்ள தமிழ் சமையல்காரருக்கு கவிதைப் பித்து. மூர்த்தியை சந்திக்கும்போதெல்லாம் கவிதை மழைதான். ‘மதுரைக்கு தேவி மீனாச்சி, அற்புதமானது அவள் ஆச்சி, ஆக்ராவின் சிறப்பு தாச்சி (தாஜ்மகால்), நானும் இங்கே வந்தாச்சி’ என்ற பாணியிலான அவரது கவிதைகளைக் கண்டு மூர்த்தி அஞ்சுகிறார். பின்னொரு நாள் அவரைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘அவன் உயிருடன் இருக்கிறானா? சினிமாவுக்குப் பாட்டு எழுதிக் கோடீசுவரன் ஆகிவிட்டானா? என்கிறார்.

ஊரிலிருந்து வரும் ஆச்சாரம்மிக்க மாமா தாஜ்மகாலைப் பார்த்துவிட்டு வந்ததும் ‘கல்லறைத் தீட்டு, குளிக்க வேண்டாமா?’ என்றபடி குளியலறைக்குள் புகுந்துகொள்கிறார்.

வேலையின்பொருட்டு வட இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் இடமாறுதலுக்காக தொடர்ந்து முயன்றபடியே இருப்பார்கள். ஆனால் அது அத்தனை எளிதில் கிடைத்துவிடாது. ‘மத்றாசி தட்டுகிற கதவு வடக்குப்புறம்தான் திறக்கும், தென்புறம் திறக்காது’.

இந்த நாவலின் இன்னொரு குறிப்பிடும்படியான அம்சம் உணவு, தின்பண்டங்கள் தொடர்பாக இதிலுள்ள குறிப்புகள். கைபக்குவம் மிக்க ஒரு தேர்ந்த சமையல்காரரின் ரசனை நாவலின் பல இடங்களிலும் சுவையுடன் மிளிர்கிறது.

இரண்டு நாவல்களிலுமே எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அழுத்தமாக வலியுறுத்தும் வாழ்க்கை சார்ந்த அடிப்படை அறங்கள், இன்று அவற்றுக்கு பெரிய அளவில் இடம் இல்லாமல் போயிருக்கும் நிலையிலும், மிக வலுவானவையாகயும் செறிவான பொருள் கொண்டவையாகவும் உள்ளன. ‘எளிய, பிறருக்குத் தீமையில்லாத சுகவாழ்வு, ஆரோக்கியமான திருப்தி, மன சந்துஷ்டி, சமுதாய சேவை, பரஸ்பர உதவி இவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தல்’ என்பதையே வலியுறுத்துகின்றன இந்த நாவல்கள்.



பொன்மணல்

1934ம் ஆண்டில் ஆனந்தவிகடன் ஆறு வாழ்க்கைத் துறைகள் (விவசாயி, தொழிலாளி என்பதுபோல) சம்பந்தமாக இருபத்தைந்து ரூபாய் சிறுகதைப் போட்டியை அறிவித்தது. ஆறு கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டிக்காக எழுதப்பட்டு பரிசுபெற்ற கதைதான் புகழ்பெற்ற ‘தபால்கார அப்துல்காதர்’. எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் முதல் சிறுகதை இது. இதைத் தொடர்ந்து ஆனந்தவிகடனில் அவரது கதைகள் வெளியாகின.

‘பொன்மணல்’ அவரது சிறுகதைத் தொகுப்பு. பதினெட்டு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் முதல் பதிப்பு 1961ல் வெளிவந்திருக்கிறது. தி.ஜ.ர முன்னுரை எழுதியிருக்கிறார். இத்தொகுப்புக்கான விரிவான விமர்சனத்தை சி.சு.செல்லப்பா ஆகஸ்டு 1961 எழுத்து இதழில் ‘மனிதாபிமான படைப்பாளி’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். இதன் இரண்டாம் பதிப்பை தமிழினி 2001ல் வெளியிட்டுள்ளது. 

நாவல்களைப்போலவே தனது சிறுகதைகளிலும் வாழ்வியல் மதிப்பீடுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளார் கல்யாணசுந்தரம். அவரது கதைகளில் தீமைகளுக்கு இடமில்லை. தீய எண்ணங்களுக்கும்கூட. மனிதர்களின் மனத்துக்கண் எழும் மாசுகளுக்குக்கூட அவர் தனது புனைவுகளில் இடம் தரவில்லை. சுயநலமற்ற பொதுநலம் சார்ந்த எண்ணத்தை வலியுறத்துவதாகவே கதைகளை அமைத்திருக்கிறார். நமது கதை மரபின் தொடர்ச்சியை எடுத்துக்கொண்டு புதிய வடிவில் கதைகளைச் சொல்லியிருக்கிறார். ‘கண்ணீர் சிகிச்சை’, ‘புது ஆயுதம்’ போன்ற கதைகள் அந்த வகையில் குறிப்பிடத்தக்கவை.

‘தபால்கார அப்துல்காரர்’ கதையைக் குறித்து பலரும் எழுதியுள்ளனர். தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இன்றும் குறிப்பிடப்படுகிறது. சி.சு.செல்லப்பா ‘தமிழ் சிறுகதை பிறக்கிறது’ நூலில் ‘தனிரகம்’ என்ற தலைப்பில் இந்தக் கதையைக் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். தமிழ் இந்துவில் ‘கதாநதி’ தொடரில் பிரபஞ்சன் இந்தக் கதையைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘கரிசனமும் கடிதமும்’ என்ற தலைப்பில் பாவண்ணன் ‘திண்ணை’ மின்னிதழில் எழுதியிருக்கிறார்.

‘முங்கேர் வைரம்’, ‘மீன் சாமியார்’, ‘ரத்தினக் கம்பளமும் வைரத்தோடும்’, ஆற்றோரத்து மரம்’, ‘வெற்றியின் கிலேசம்’ ஆகிய கதைகள் காலங்கடந்தும் தனித்து நிற்கின்றன.

விரிவான வாசிப்பின் அடிப்படையில் சிறுகதைகள் குறித்து கல்யாணசுந்தரத்துக்கு தெளிவான பார்வை இருந்திருப்பதை இக்கதைகளின் வழியாக உணரமுடிகிறது. தமிழில் சிறுகதைகள் உருவெடுத்த காலகட்டத்தில் திருத்தமான வடிவத்துடனும் புதிய களங்களுடனும் தரமான கதைகளை அவரால் எழுத முடிந்திருக்கிறது. சிறுகதைகளிலும் அவர் தனது அடிப்படைக் கொள்கைகளை வலியுறுத்தியபோதும் சிறுகதையின் வடிவத்தை உணர்ந்து அதற்குத் தேவையான விதத்திலும் அளவிலும் மட்டுமே அதைக் கையாண்டிருக்கிறார். ஆண்-பெண் உறவை மையமாகக் கொண்ட கதைகளாக அமைந்துள்ள ‘குடும்ப தர்மம்’, ‘ஒட்டாத உறவு’ ஆகியவற்றில்கூட பொதுநல நோக்கின் அடிப்படையில் தமது குடும்ப நலன்களை தியாகம் செய்யும் எண்ணத்துக்கே முக்கியத்துவம் தந்திருக்கிறார்.

மறக்கப்பட்ட ஆளுமை

எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை விபரங்கள் தெளிவாகக் கிடைக்கவில்லை. 28.03.1901ல் மதுரையில் ஒரு சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்தவர். பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பட்டமும் ஹிந்தியில் பிரபாகர் பட்டமும் பெற்றார். மாண்டிஸோரி அம்மையாரிடம் கல்விப் பயிற்சிப் பெற்றிருக்கிறார். பல மொழி விற்பன்னர். தந்தி இலாகாவில் பொறியாளர் பதவியிலிருந்தபோது காந்தியின் கட்டளைப்படி வேலையைத் துறந்து சமூகத் தொண்டாற்றினார். ஹிந்தி தமிழ் அகராதிகளைத் தயாரித்திருக்கிறார். ‘தமிழினி’ வெளியிட்டுள்ள நூல்களின் பின் அட்டைகளில் இந்தத் தகவல்கள் உள்ளன. சி.சு.செல்லப்பாவின் ‘தமிழ்ச் சிறுகதைப் பிறக்கிறது’ நூலிலும், ‘பொன் மணல்’ தொகுப்புக்கான மதிப்புரையிலும் சில தகவல்கள் உள்ளன. தனது இறுதி நாட்களில் கொடைக்கானலிலும் சென்னையிலும் வாழ்ந்திருக்கிறார்.

எம்.எஸ்.கல்யாணசுந்தரத்துக்கு மொழிகளின் மீதான தீராத ஆவல் இருந்திருக்கிறது. உருது, தெலுங்கு, வங்காளி, சமஸ்கிருதம், ஜெர்மன், குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளையும் ஆசையுடன் கற்றுத் தேர்ந்திருக்கிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் கட்டுரைகள், கதைகளை எழுதியிருக்கிறார்.

கல்விமுறையைக் குறித்து தொடர்ந்து அவர் அக்கறை காட்டியிருப்பதை அவரது புனைவுகளின் வழியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. மாணவர்களின் அறிதல் திறனுக்கேற்ப பாடங்களை கற்பிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். அறிவியலிலும் கணிதத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். எளிய, விளையாட்டு முறைகளைக் கொண்டு கணிதம் கற்பிப்பதில் தேர்ந்தவர். கல்வி வேலைக்கான ஒரு வழி என்பதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தம் வாழ்வை அதற்கொப்ப வடிவமைத்துக்கொண்ட கல்யாணசுந்தரம் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்திருக்கிறார். அந்தக் காலத்தில் மிக உயரிய பதவியொன்றில் இருந்தபோதும் தனிப்பட்ட வாழ்வை மிக எளிமையான ஒன்றாகவே அமைத்துக்கொண்டிருக்கிறார். கதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று நிறைய எழுதியிருந்தபோதும் அவற்றைத் தொகுப்பதில் பெரிதும் அக்கறைக் காட்டியதாகத் தெரியவில்லை.

1965ல் வெளியான ‘இருபது வருஷங்கள்’, பிரசுரம் காணாமல் கைப்பிரதியாக இருந்த ‘பகல் கனவு’, 1961ல் வெளியான ‘பொன்மணல்’ ஆகிய மூன்று நூல்களையும் கல்யாணசுந்தரத்தின் இறுதி நாட்களில் அவரது நண்பராக இருந்த கி.ஆ.சச்சிதானந்தத்தின் முயற்சியால் 2001ல், கல்யாணசுந்தரத்தின் நூற்றாண்டு’ வெளியீடாக ‘தமிழினி’ வெளியிட்டது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மறுபிரசுரம் பொறாமல் மறக்கப்பட்டிருந்த நூல்கள் கவனம் பெற்றன.

இத்தனைக்கும் 1930களில் அவர் விகடனில் நிறைய எழுதியிருக்கிறார். எளிய முறையில் இந்திப் பாடங்களை விகடனில் கற்பித்திருக்கிறார். ஆனால், அவருடைய ஒரு புகைப்படம்கூட கிடைக்கவில்லை.

2001ல் ‘தமிழினி’ அவரது நூல்களை பதிப்பிக்கும் முயற்சியில் இருந்தபோது அவரது புகைப்படத்தைத் தேடிக்கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் கோவையில் தமிழோசை பதிப்பகம் காந்திபுரம் ராஜராஜேஸ்வரி டவரில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. எதற்கான கூட்டம் என்று நினைவில் இல்லை. ஈரோட்டிலிருந்து கூட்டத்துக்கு வந்திருந்தேன். பல்லடத்தைச் சேர்ந்த ஒரு வாசகரும் அங்கிருந்தார். தேநீர் இடைவேளையின்போது இன்னொரு நண்பரிடம் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு அவர் என்னிடம் வந்தார். பழைய ஆனந்தவிகடன் மலர் ஒன்றில் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் படம் இருப்பதாகத் தெரிவித்தார். அந்த மலரில் எழுதியுள்ள எழுத்தாளர்களுடைய படங்கள் அனைத்துமே ஒரு பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் கல்யாணசுந்தரத்தின் படம் இருப்பதாகவும் சொன்னார். அவரது தொலைபேசி எண்ணைத் தந்தார். வசந்தகுமாரிடம் தகவல் சொன்னதும் பரவசத்துடன் ‘அதைப் பிடிங்க’ என்று சொன்னார். ஆனால், அந்தக் கூட்டத்துக்குப் பிறகு பல்லடம் நண்பரை என்னால் தொடர்புகொள்ள முடியாமலே போனது.

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அவரது லட்சியவாத நாவல்களின் வழியாக, தபால்கார அப்துல்காதரின் வழியாக இன்றும் நினைக்கப்படுகிறார். இன்றைய தலைமுறையினருக்கு அவரது எழுத்தில் உள்ள லட்சியவேகமும் நோக்கும் முக்கியமானவை.

‘மறக்கப்பட்ட புன்னகை’ என்ற தலைப்பில் திண்ணை மின்னிதழில் ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரை எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் புனைவுலகைக் குறித்தும் வாழ்வைக் குறித்துமான முழுமையான ஒன்று.

கல்யாணசுந்தரம் பகல் கனவு நாவலில் வாழ்க்கையைக் குறித்த ஒரு செறிவான சுருக்கமான அழுத்தமான சித்திரத்தை விவரித்திருப்பார்.

‘வாழ்க்கை இராக்கால மோட்டார் பயணத்திற்கு ஒப்பானது. அந்தந்த நேரத்திற்கு சாலையில் ஒரு சிறு பகுதிதான் புலனாகும். நம்பிக்கையுடன் வண்டியை ஓட்ட ஓட்ட சாலை மேலும் புலனாகும் என்ற மனப்பான்மையுள்ளவனுக்கு அது போதும். ஐயையோ, முன்புறம் இருட்டு என்று பயந்து சாவானேன்? அந்நேரத்துத் தேவைக்குப் போதுமான அளவு பாதை தெளிவானால் திருப்தியடையவேண்டும். வண்டியை ஓட்டிக்கொண்டே செல்கிறான். இன்னும் ஒரு மைல் தூரத்துக்குப் பாதை தென்பட்டாலும் அவன் செய்யக்கூடியது அதுதான். ரெண்டு பர்லாங்குக்கு அப்பால் சாலை வலது புறம் திரும்புகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அதற்காக இப்பொழுதே வலது புறம் திருப்பமாட்டான். அந்த இடத்தை அடைந்தபிறகுதான் திருப்புவான்.’

அவர் தன் வாழ்க்கையையும் இராக்கால மோட்டார் பயணமாகவே அமைத்துக்கொண்டார். அந்தந்த வேளையை அதற்கான ஒழுங்குடன் அக்கறையுடன் திறம்பட கடந்து சென்றிருக்கிறார். அதனால்தான், நாளைய இலக்கிய உலகில் தன் இடத்தைப் பற்றிய கவலையின்றி எழுதுவதோடு மறந்துவிட்டிருக்கிறார். ஆனால், அந்த இராக்கால மோட்டார் பயணமும் அது தன் பாதையில் கண்ட வெளிச்சமும் இன்றும் மங்காது ஒளிர்ந்திருப்பதுதான் அந்தப் பயணத்தின் வெற்றி.

0

(ஆவநாழி, ஆகஸ்டு 2021 இதழில் வெளியான கட்டுரை)

வரலாற்றின் இடைவெளிகளை நிரப்பும் எழுத்து - விட்டல் ராவ் நாவல்கள்

 





0

தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான விட்டல் ராவ் (1942) அறுபதுகளிலிருந்து எழுதி வரும் மூத்த தலைமுறை எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என ஐம்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘போக்கிடம்’, ‘நதிமூலம்’, ‘காம்ரேடுகள்’, ‘வண்ணமுகங்கள்’, ‘காலவெளி’, ‘நிலநடுக்கோடு’ ஆகிய நாவல்கள் அவசியம் வாசிக்கவேண்டிய தமிழ் நாவல்களின் பட்டியலில் இடம்பெற வேண்டியவை.

விட்டல் ராவ் ஒசூரில் பிறந்து சேலத்தில் வளர்ந்து சென்னையில் வாழ்ந்தவர். சென்னை ஓவியக் கல்லூரியில் முறையாக ஓவியம் பயின்றவர். இவரது ஓவியங்கள் கண்காட்சிகள் பலவற்றிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சினிமாவில் ஆர்வம்கொண்டவர். 1966ல் தனது இருபத்தி மூன்றாவது வயதில் எழுதத் தொடங்கிய இவரது முதல் சிறுகதை ஆனந்தவிகடனில் வெளியானது. நூற்றுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள் நான்கு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. தமிழகத்திலுள்ள கோட்டைகளைப் பற்றிய இவரது புத்தகம் ‘தமிழகக் கோட்டைகள்’ மிக முக்கியமான ஒன்று. ‘சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும்’, ‘நவீன கன்னட சினிமா’, ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்’ என சினிமாவைக் குறித்த நூல்களையும் எழுதியிருக்கிறார். ‘ஓவியக் கலை உலகில்’, ‘தி ஜா ராவின் எழுத்தும் தேசிய உணர்வும்’,  ‘வாழ்வின் சில உன்னதங்கள்’, ‘கலை இலக்கியச் சங்கதிகள்’, ‘கூடார நாட்கள்’ ஆகியவை கட்டுரைத் தொகுப்புகள். 1993ல் கலைஞன் பதிப்பகத்துக்காக இவர் தொகுத்து வெளியிட்ட ‘இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்’ முக்கியமான ஒன்று. அவர் தேர்ந்தெடுத்த தமிழின் சிறந்த நூறு சிறுகதைகள், மூன்று தொகுதிகளாக வெளிவந்தன. பெங்களூரில் தனியாக வசிக்கும் இவர் இப்போதும் ‘பேசும் புதிய சக்தி’ உள்ளிட்ட இதழ்களிலும் சில இணைய இதழ்களிலும் கட்டுரைகள் எழுதுகிறார். சினிமாவைக் குறித்த புதிய தொடரான ‘பயாஸ்கோப்’ புக் டே எனும் இணைய இதழில் வெளியாகிறது.

விட்டல் ராவின் முதல் நாவல் ‘தாஜ்மகால்’ 1974ல் வெளியானது. பன்னிரெண்டாவது நாவலான ‘நிலநடுக்கோடு’ 2018ல் வெளிவந்தது. நீண்ட இந்த காலகட்டத்தில் அவர் எழுதிய நாவல்கள் வெவ்வேறு களங்களைச் சேர்ந்தவை. சொந்த வாழ்வின் சம்பவங்களைக் கொண்ட தன்வரலாற்றுத் தன்மைகொண்ட நாவல்களிடையே (நதிமூலம் (1983), நிலநடுக்கோடு) தமிழ் நாவல்களில் அதிகமும் பேசப்படாத களங்களையுடைய நாவல்களையும் ( காலவெளி(1988), வண்ணமுகங்கள்(1994), காம்ரேடுகள்(1999)) அவர் எழுதியிருக்கிறார். காலவோட்டத்தில் முக்கியத்துவத்தை இழக்காமல் இன்றும் சமகாலப் பொருத்தத்துடன் மேலும் அழுத்தங்களைப் பெறும் வகையில் அவரது நாவல்கள் அமைந்திருப்பது வியப்பைத் தருகிறது. ‘தூறல்’ (1980), மற்றவர்கள் (1984), தருணம் (1985), மீண்டும் அவளுக்காக (1986), மூலவரும் உற்சவரும் (2013) ஆகியன அவரது பிற நாவல்கள்.

வரலாற்றின் இடைவெளியை இட்டு நிரப்பும் தன்மை

விட்டல் ராவின் நாவல்கள் ஐந்து தலைமுறைகளுக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்தவை. நாமக்கல், சேலம் போன்ற சிறு நகரங்களிலும் அவற்றையொட்டிய கிராமங்களிலும் அறுபதுகளின் காலகட்டத்தில் நிலவிய வாழ்க்கை நிலையை விரிவாகச் சித்தரிப்பவை. அன்றைய அரசியல், சமூக, பொருளாதாரச் சூழல்களின் தாக்கம் தனி மனித வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களை முக்கியப்படுத்தியவை. எனவே, ஒருவகையில் அவரது நாவல்கள் தமிழக வரலாற்றின் மறுபக்கங்கள்தான். நாவல்களிலிருந்து கதாபாத்திரங்களை விலக்கிவிட்டு சம்பவங்களையும் சமூகத் தாக்கங்களையும் மட்டும் தனித்துப் பார்க்கும்போது அன்றைய தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் சமூக மாற்றங்களின் வரலாறாகவே இந்த நாவல்கள் அமையக்கூடும்.

அனைவரும் அறிந்த வரலாற்று நிகழ்வுகள் நாவலின் காலகட்டத்தைச் சுட்டுவதற்காக விட்டல் ராவின் நாவல்களில் குறிப்பிடப்படுகின்றன. அத்துடன் அதே காலகட்டத்தில் பொதுவெளியில் நிகழ்ந்த ஆனால் வரலாற்றில் இடம்பெறாமல் மறக்கப்பட்டுவிட்ட சம்பவங்களும், மாற்றங்களும் சொல்லப்படுகின்றன. இதன் மூலமாக வரலாற்றின் இடைவெளிகளை இட்டு நிரப்பிக்கொள்ளவும் அதனை முழுமைப்படுத்திக்கொள்ளவும் சாத்தியமாகிறது. விட்டல் ராவ் நாவல்களின் மிக முக்கியமான பொது அம்சம் என்று இத்தன்மையைச் சொல்லலாம்.

போக்கிடம்

தொழில் வளர்ச்சிக்காகவும் பொருளாதார கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஈடுகொடுத்து இருப்பிடங்களை உறுதி செய்யவும் கிராமங்களை விளை நிலங்களை அழித்து உருமாற்றுவதென்பது சமூக வரலாற்றின் தொடர் நிகழ்வுகளில் முக்கியமான ஒன்று. காட்டை அழித்து நாட்டை உருவாக்கியதே மனித நாகரிகத்தின் முக்கிய படிநிலை.

அரசு நிலங்களைக் கையகப்படுத்தும் போக்கு இன்று பெரும் விவாதங்களுக்கும் அரசியல் மோதல்களுக்கும் இலக்காகியிருக்கும் ஒன்று. இதனை மையமாகக் கொண்டதே ‘போக்கிடம்’ நாவல்.

1977 ல் எழுதப்பட்ட இந்த நாவல் இன்றும் அபாரமான பொருத்தத்துடன் அமைந்திருப்பது வியப்பைத் தருகிறது.

கிராம பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டம் சார்ந்த கையாடல்கள், ஓராசிரியர் பள்ளியின் சூழல், கிராமத்துச் சிறுவர்கள், டியூசன் மனோபாவம் என காலத்தின் அடையாளங்களை விட்டல் ராவ் இந்த நாவலிலும் மிக நேர்த்தியாக அமைத்திருக்கிறார்.

எட்டு வழிச் சாலை பற்றிய அரசியல் விவாதங்கள், போராட்டங்கள் தீவிரம் பெற்றிருக்கும் அதே சேலம் மாவட்டத்தின் பின்னணியில் இந்த நாவலும் அமைந்திருப்பது சுவாரஸ்யமானது. இந்த நாவல் கையாண்டிருக்கும் களம் இன்றைய நோக்கில் மேலும் தீவிரமானது. புனைவெழுத்தாளன் காலத்துக்கு முன்னால் ஓடக் கூடியவன், நிகழ்வுகளைக் கணிக்கக்கூடியவன் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் நாவல் என்று ‘போக்கிடம்’ நாவலைச் சுட்டலாம்.

      வண்ணமுகங்கள்

மனித வரலாற்றில் கலை, இலக்கிய வடிவங்கள் தொடர்ந்து காலத்துக்கேற்ப தம்மை மாற்றத்துக்கு உள்ளாக்கியும் புதுப்பித்துமே வந்துள்ளன. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. வளர்ந்து வரும் சூழலுக்கும் நுகர்வோர்களின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ப தம்மை புனரமைத்துக் கொள்வது தவிர்க்க முடியாதது. மரபும் பழமையும் கலை இலக்கிய வடிவங்களின் அடிப்படைகளாக அமைந்திருப்பதை ஒப்புக்கொள்ளும் அதே சமயத்தில் இன்றைய தலைமுறையினரை எட்டும்படியான வெளிப்பாட்டு வடிவங்களையும் அவை கண்டடைய வேண்டிய தேவை உள்ளது. இதனால் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது தவிர்க்க முடியாத மாற்றங்களின் விதி.

இப்படியொரு விவாதத்தை தர்க்கப்பூர்வமாக அடுக்க முடிகிற அதே தருணத்தில் நசிந்தும் அழிந்தும் காணாமல் போகிற கலை வடிவங்களைப் பற்றிய ஏக்கங்களையும் துயரங்களையும் புறக்கணித்து விட முடியாது.

கர்நாடகாவின் பாரம்பரிய நாடகக் குழு ஒன்று கால மாற்றத்துக்கு முன்னால் ஈடுகொடுக்க முடியாமல் நசிவதை விட்டல் ராவ் வண்ண முகங்கள் நாவலில் சித்தரித்துள்ளார்.

      காம்ரேடுகள்

பொதுவுடமை கட்சிகளின் நடைமுறை குளறுபடிகளையும் அபத்தங்களையும் கேள்விக்குள்ளாக்கிய முதல் நாவல் ‘காம்ரேடுகள்’. ஆனால் தமிழ்ச் சூழலில் இந்த நாவல் எத்தகைய எதிர்வினைகளை உருவாக்கின என்பது தெரியவில்லை.

பொதுவுடமை கொள்கையினால் ஈர்க்கப்பட்டு வாழ்வையே அதற்காக அர்ப்பணித்தவர்கள் தமது தனிப்பட்ட வாழ்வில் இழப்புகளையும் தோல்விகளையும் சரிவுகளையும் சந்திக்கும்போது அவர்கள் நம்பிய கொள்கைகள் சார்ந்த அடிப்படையான கேள்விகள் எழுவது தவிர்க்கமுடியாதது. அக்கேள்விகள் சித்தாந்தத்துக்கும் அதன் நடைமுறைப்படுத்தலுக்கும் நடுவே உள்ள இடைவெளிகளையும் போதாமைகளையும் உற்று நோக்கச் செய்கின்றன. சமூகத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்ற கனவுடன் நம்பிக்கையுடன் சித்தாந்தத்தைப் பற்றிக்கொள்பவர்கள் அதற்காக தம் வாழ்வையே அர்ப்பணிக்கிறார்கள். தமக்கென தனிப்பட்ட கனவுகளின்றி, குடும்பமின்றி கொள்கைகளுக்காகவே எல்லாவற்றையும் தியாகம் செய்கிறார்கள். பல்வேறு காரணங்களால் அந்தக் கனவு உடைந்து நொறுங்கும்போது தங்களது நம்பிக்கைத் தகர்க்கப்படும்போது அவர்களின் வாழ்வு சீர்குலைகிறது. அந்தத் தோல்வியை வெறுமையை எதிர்கொள்ள குடும்ப வாழ்வு, ஆன்மீகம், தற்கொலை, போதை என  வெவ்வேறு மார்க்கங்களுக்கு தள்ளப்படுகிறார்கள். இவ்வாறான சிடுக்குகள் நிறைந்த ஆழமான விமர்சனத்தை எழுப்பும்விதமாக அமைந்திருக்கிறது ‘காம்ரேடுகள்’ நாவல்.

1962ம் ஆண்டு இந்திய சீன எல்லைப் போரைத் தொடர்ந்து இந்தியப் பொதுவுடமைக் கட்சி இரண்டாக பிளக்கிறது. இதன் தாக்கங்கள் இந்தியாவில் பல்வேறு தொழிற்சங்கங்களிலும் எதிரொலிக்கின்றன. சென்னை தொலைப் பேசித் துறை ஊழியர் சங்கத்தில் ஏற்படும் மாற்றங்களை முதன்மைப்படுத்தும் இந்த நாவல் அதன் பின்னணியில் அரசியல், சமூக வாழ்வு குறித்த அடிப்படையான சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

      நதிமூலம்

‘தொப்பி’ கிருஷ்ணாராவின் வாழ்க்கைச் சித்திரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதும் இந்த நாவல் இந்திய விடுதலைப் போராட்டம், காந்தியக் கொள்கைகளின் தாக்கம், மதிப்பீடுகளின் சரிவுகள், நாடகங்கள் நலிந்து சினிமா கோலோச்சுதல், சினிமாவில் தலைகாட்டுவதில் உள்ள மோகம், ஹைதராபாத் நிஜாமின் வீழ்ச்சி, ஊழல்களின் தலையெடுப்பு என்று சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தின் எல்லா முக்கிய நிகழ்வுகளையும் தாக்கங்களையும் வலுவாகச் சித்தரித்துள்ளது.

சமூகப் பொருளாதார அரசியல் மாற்றங்கள் தனி மனித வாழ்வில் மறைமுகமாக செலுத்தும் ஆதிக்கங்களையும் பாதிப்புகளையும் கிருஷ்ணராவின் வாழ்க்கைப் பாதையில் உணரமுடியும்.

காலவெளி

நவீன ஓவிய உலகைக் குறித்து தமிழில் வெளியான முதல் நாவல் ‘காலவெளி’. பொதுவெளியில் நவீன ஓவிய உலகம் குறித்த அறிமுகம் சிறிதளவு கூட இல்லாத ஒரு காலத்தில் இப்படியொரு நாவலை எழுத முனைந்ததே சவாலான ஒன்று.

ஓவியக் கண்காட்சிகள், வியாபாரம், கலைக்கும் பணத்துக்குமான சமநிலை, அன்றாடம், யதார்த்தம், சமரசம் என்று பல்வேறு அம்சங்களையும் நாவல் பின்னிக் காட்டுகிறது. ஓவியங்களின் வகைகள், பொது மக்களின் பார்வை, உயர்தட்டு ரசிகர்களின் மனோபாவம், விமர்சகர்களும் பத்திரிக்கைகளும் ஓவியங்களை அணுகும் மனோநிலை போன்றவற்றைவும் நுட்பமாக பேசுகிறது நாவல். ஓவியர்களுக்கு இடையிலுள்ள உறவு, பொறாமை, சுயநலம் போன்ற மனித அகத்தின் பல்வேறு நிழல்களையும் தொட முனைந்துள்ளது.

நாவலின் இன்னொரு முக்கிய இழையாக அமைந்திருப்பது ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்க்கை முறை.

சென்னைப் போன்ற பெருநகரங்களுக்கு மட்டுமே அறிமுகமான ஓவிய உலகை பல்வேறு கோணங்களில் இந்நாவல் அணுகியுள்ளது.

நிலநடுக்கோடு

ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த சென்னையைக் களமாகக் கொண்டது இந்த நாவல். பெருநகரமாக வளர்ந்தோங்கி நிற்கும் இன்றைய சென்னையின் ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய பல்வேறு நில அடையாளங்களை, பண்பாட்டு அம்சங்களை இந்த நாவல் மீட்டுத் தந்திருக்கிறது. குறிப்பாக அன்றைய மதராஸில் வசித்த ஆங்கிலோ இந்தியர்களின் இறுதிக் காலத்தைக் குறித்த சித்திரம் மிக முக்கியமானது. மூன்றாம் வகுப்புகளைக் கொண்ட பாஸஞ்சர் டிரெய்ன்கள், கரி எஞ்சின்கள், கை ரிக்ஷாக்கள், எடுப்பு கக்கூஸ்கள், கஞ்சி தொட்டி ஆஸ்பத்திரி, மூர் மார்க்கெட், பர்ஸ்ட் லைன் பீச், நி எல்பின்ஸ்டன் தியேட்டர் என அக்காலத்திய அம்சங்களை நினைவுபடுத்துகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த மெஸ்கள், ஜாபர்ஸ் ஐஸ்க்ரீம் கடை, கனி அண்ட் சன்ஸ் கடிகாரக் கடை, பேவர் லூபா கடிகாரங்கள், சையத் பாக்கர் தையல் கடை, ஷார்க் ஸ்கின் பாண்ட், ராபின் மோசஸ் காலணியகம் போன்ற தனிப்பட்ட ரசனைகளுடன் தொடர்புடைய அம்சங்கள் அக் காலகட்டத்தின் உணவு உடை சார்ந்த கூறுகளை நினைவுபடுத்துகின்றன.

தொலைபேசித் துறையை மையமாகக்கொண்டு பொதுத்துறை அரசு நிறுவனங்களிலும், ஊழியர்களிடையேயும் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களையும் நாவல் முதன்மைப்படுத்தியுள்ளது. கட்டாய இந்திக் கல்வி, அரிசித் தட்டுப்பாட்டின்போது ஊழியர்களுக்கு மலிவு விலை அரிசி, குடும்பக் கட்டுப்பாட்டின் பொருட்டு இலவசக் கருத்தடை சாதனம், பொருட்களை வாங்குவதற்கான தவணை முறை ஏற்பாடு, கூட்டுறவு கடன் சொசைட்டியின் மீளாச் சுழல் போன்றவை இன்று வியப்பை ஏற்படுத்தும் தகவல்கள்.

பயிற்சியின் பொருட்டு சென்னைக்கு வந்து சேரும் ஒரு கதாபாத்திரத்தின் வழியாக சென்னையின் அடையாளங்களை, பண்பாட்டு அம்சங்களை சுட்டிக்காட்டியிருக்கும் அதே நேரத்தில் அது சார்ந்திருக்கும் தொலைபேசித் துறையின் மூலம் பொதுத் துறை அரசு ஊழியர்களுக்கான வாய்ப்புகளையும் முன்னுரிமைகளையும் கவனப்படுத்தியுள்ளது.

இப்படியொரு தனிநபரின் வாழ்க்கைக்குப் பின்னணியாக நேருவின் மரணம், எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்படுவது, திமுகவின் வெற்றி, அண்ணாவின் மரணம், கோவாவை இந்திய அரசு கைப்பற்றுவது, இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரிசிப் பஞ்சம், தமிழகத்திலும் கர்நாடகத்திலும் தலைதூக்கும் காவிரிப் பிரச்சினை ஆகிய பொதுவான வரலாற்று நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.

தேவு என்கிற தனி நபர் வாழ்க்கை, அவன் சார்ந்திருக்கும் அரசுப் பொதுத்துறை ஊழியர்களின் பொதுவான வாழ்க்கை, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், சமூக வாழ்க்கை ஆகிய மூன்று தளங்களையும் விட்டல் ராவ் இணைத்துக் காட்டும்போது இம்மூன்று தளங்களும் ஒன்றுக்கொன்று பொருந்தி அடர்த்தியும் முழுமையும் கொண்ட ஒரு சித்திரத்தை உருவாக்கித் தருகிறது.

செறிவும் சுருக்கமுமான கட்டமைப்பு

விரிவான அளவில் விவாதிக்கப்படக்கூடிய, விமர்சிக்கக்கூடிய கதைக் கரு என்றாலும் கதைப்போக்கில் உரையாடல்களின் வழியாக, மனப்போக்குகளின் மூலமாக தேவையான அளவில் மட்டுமே அவற்றை பயன்படுத்தியிருப்பது விட்டல் ராவ் நாவல்களின் சிறப்பாகும். குறிப்பாக, ‘காம்ரேடுகள்’, ‘போக்கிடம்’, ‘நிலநடுக்கோடு’ ஆகிய நாவல்களைச் சொல்லலாம்.

சுயநலத்தை ஆதார விசையாகக் கொண்டு இயங்கும் தனிமனிதர்களைக் கொண்ட ஒரு சமூகத்தில் அனைவருக்கும் நன்மை பயக்கும் பொதுவான ஒரு சித்தாந்தத்தைக் கண்டடைவதும் அதை நடைமுறைப்படுத்துவதில் எழும் சிக்கல்களையும் அபத்தங்களையும் போதாமைகளையும் கடந்து வருவதுமான கரடுமுரடான வரலாற்றுப் பாதையை சித்தரிக்கிறது ‘காம்ரேடுகள்’.

தத்துவம், நடைமுறை, தியாகம், கட்டுப்பாடு, கருத்து மோதல்கள் என்று பல்வேறு கோணங்களில் விரிவான அளவில் விவாதிப்பதற்கான இடம் இருந்தும் இந்த நாவல் மிகக் குறைவான பக்கங்களிலேயே எழுதப்பட்டிருக்கிறது. தேவையான இடங்களில் தத்துவ விவாதங்களும் அரசியல் விமர்சனங்களும் நுட்பமான அளவில் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

சுற்றுச்சூழல் சார்ந்த புரிதல்கள் இல்லாத காலகட்டத்தில் எழுதப்பட்டதென்றாலும் ‘போக்கிடம்’ நாவலில் கிராமங்கள் நசிவதையும் அவற்றைச் சார்ந்திருக்கும் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் கட்டாயமான மாற்றங்களையும் குறித்து விவாதிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

‘நிலநடுக்கோடு’ நாவலில் நுட்பமாக எழுப்பப்பட்டிருக்கும் ஒரு மனிதனின் நில, மொழி அடையாளம் சார்ந்த கேள்விகள் இன்று மிக வலுவானவை. தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்திருந்தபோதும், தமிழ் அல்லாத வேறொரு மொழியை வீட்டில் பேசுகிற ஒவ்வொருவரும் பள்ளிக்கூடத்திலிருந்து தம் அடையாளம் சார்ந்த கேள்விகளை எதிர்கொள்ள நேர்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு இடத்திலும் இத்தகையக் கேள்விகள் வெவ்வேறு குரல்களில் எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கும். பொதுவான ஒரு அரசியல் பிரச்சினை எழும்போது இத்தகையவர்களே உடனடியாக இலக்காவார்கள்.

ஒட்டியும் வெட்டியும் எழ சாத்தியமான கருத்து மோதல்களை வாசகர்களின் ஊகத்துக்கு விட்டுவிடுவதால் நாவல் வாசிப்புக்கான திறப்புகள் எல்லையற்று விரிந்துள்ளன. ஒருவகையில் அரசியல் நடுநிலையுடன் அணுகியிருப்பதாகவும் அல்லது நிகழ்வுகளை மட்டுமே சொல்வேன், முடிவுகளை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஒதுங்கிவிடுவதாகவும் இதைப் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறான விலகல் நாவலின் புரிதலுக்கும் வெவ்வேறு கோணங்களுக்கும் சாத்தியங்களை ஏற்படுத்துகிறது.

ஆழமான மனித உறவின் பின்னல்கள்

களங்கள் எதுவானாலும் மனித உறவுகள் சார்ந்த நுட்பமான இழைகளைக் கொண்டு மேலும் ஆழம் கூட்டும் தன்மை விட்டல் ராவ் நாவல்களின் இன்னொரு சிறப்பாகும்.

‘போக்கிடம்’ நாவலில் இந்த இழையின் மையமாக அமைந்திருப்பவள் பேச்சி. மாரிமுத்துக் கவுண்டர், ஆசிரியர் சுகவனம், சுரங்க வேலைத் தொடங்கிய பிறகு மம்முது பாய் என அவளது தேர்வுகள் திசைமாறுகின்றன. கட்டுப்பாடுள்ள கிராமமாக இருக்கும்போது மாரிமுத்துக் கவுண்டருடனான உறவு அவளுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது. அதே சமயத்தில் அவளது வாலிபத் தேவைக்கு சுகவனத்தைத் தேர்கிறாள். கிராமம் உருக்குலைந்து அங்கிருக்க முடியாது என்கிற நிலையில் பொருளாதாரம், எதிர்காலம் ஆகியவற்றை கணக்கில்கொண்டு அவள் மம்மது பாயை அடைகிறாள். ஒழுக்க மதிப்பீடுகள், சமூக நோக்கு ஆகியவற்றுக்கு மேலாக அந்தந்த சூழலில் அவளது பாதுகாப்பு கருதியே இத்தேர்வு அமைகிறது. நிலவுடமைக்கும் பெண்ணுடமைக்குமான நுட்பமான ஒற்றுமையை நாவலின் இந்த இழை மிகக் கச்சிதமாக சுட்டிக் காட்டுகிறது.

‘காம்ரேடுகள்’ நாவலின் அழுத்தமான கதாபாத்திரமாக அமைந்திருக்கும் அலமேலுவும் தனது கனவுகளுக்கும் திட்டங்களுக்குமேற்பவே இணைகளைத் தெரிவு செய்கிறாள். அப்பர் சாமியிடம் கொண்ட காதலைத் துறக்க அவள் யோசிப்பதேயில்லை. அவனது ஆதர்சமான சத்திய நாராயணனை மணக்கிறாள். ஆனால், அங்கும் அவள் நிலைகொள்வதில்லை. மகனுடன் பெங்களூர் சென்று இறுதியில் விலைமகளாகிறாள். நிறைவும் திருப்தியும் கொள்ளாமல் தன் கனவின் எல்லைகளை விரித்துக்கொண்டே செல்லும் பெண்ணின் சிக்கலான மனம் விளைவுகளையும் சமூக விமர்சனங்களைக் குறித்தும் கவலைப்படுவதில்லை எனும் யதார்த்தத்தின் பிரதிநிதியாக விளங்குகிறாள் அலமேலு.

உறவுகளின் வலுவான பின்னலால் அமைந்தது ‘நிலநடுக்கோடு’. அம்மா, தங்கை இருவருடனும் விலகலுடனே இருக்கும் தேவிற்கு சென்னையில் ஆங்கிலோ இந்தியக் குடும்பம், நண்பர்கள், சக ஊழியர்கள், காதல் என வலுவான உறவுகள் அமைகின்றன. அவனது வளர்ச்சியின் படிநிலையிலும் அவர்களே கைகொடுக்கின்றனர். அதிலும் ஹெல்ட் எனும் ஆங்கில இந்தியக் குடும்பம் வியப்பைத் தரும் ஒன்று. திருமதி ஹெய்ட், பாவ்லின், சிந்தியா, சலோமி, மர்லின் என ஒவ்வொருவருமே மனித உறவு குறித்த உள்ளார்ந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமான அமைந்திருக்கிறது.

      தனிநபர் வாழ்வும் சமகால சரித்திரமும்

குறிப்பிட்ட களம், கதாபாத்திரங்கள், சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்டபோதும் அவைகளின் பின்னணியில் நாவல் நிகழும் காலத்தையும் வரலாற்றையும் பிணைக்கும் உத்தியை விட்டல் ராவ் சிறப்பாக கையாண்டிருக்கிறார். போக்கிடம் நாவலின் களம் டேனிஷ்பேட்டை என்ற கிராமமாக அமைந்தபோதும், தொழில் வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகள், வாழ்வின் அடுத்த கட்டம் குறித்த எளிய மக்களின் கனவுகள், கல்வி குறித்த மனோபாவம் என அந்தக் காலகட்டத்தின் பொதுப் புத்தியும் அவற்றை உறுதிப்படுத்தும் உண்மை சம்பவங்களும் திறம்பட ஒன்றிணைக்கப்பட்டுள்ளன். இதே உத்தி ‘நதிமூலம்’ நாவலில் இன்னும் விரிவான அளவில் கையாளப்பட்டுள்ளது. மாத்வ பிராமணர்களின் சடங்குகள், சம்பிரதாயங்களை விரிவாக சித்தரிக்கப்பட்டிருக்கும் அதேயளவு பொருளாதாரச் சூழலின் காரணமாக அதை கைவிடும் அவலமும் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘வண்ணமுகங்கள்’ நாவலில் காலமாற்றத்துக்கேற்ப நாடகக் கலை தன்னை புதுப்பித்துக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் அதற்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் நசிவதையும் விட்டல் ராவ் ஆழமாக அணுகியுள்ளார். ‘நிலநடுக்கோடு’ இந்த உத்தியை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தி எழுதப்பட்ட நாவல். அறுபதுகளின் சென்னை வாழ்வை தேவுவின் கதாபாத்திரத்துடன் இணைத்துச் சொல்லும் இந்த நாவல் அந்தக் காலகட்டத்தின் சென்னையின் அடையாளங்களைக் குறித்த முக்கியமான ஆவணம்.

உயிர்ப்புமிக்க கதாபாத்திரங்கள்

மிகச் சுலபமாக கதாபாத்திரங்களை உருவாக்கிக் காட்டுவதில் விட்டல் ராவ் தேர்ந்தவர். முறையாகக் கற்று தேர்ச்சி பெற்ற ஓவியர் என்பதால் கோடுகளால் சித்திரம் எழுதுவதுபோல சிற்சில சொற்களைக்கொண்டே கதாபாத்திரங்களை கண்முன்னால் நிறுத்திவிடுகிறார். குறிப்பாக, ஆங்கிலோ இந்தியப் பெண்களைக் குறித்த அவரது சித்திரங்களும், அன்றைய சென்னையின் அடையாளங்களும் தனித்துவம் மிக்கவை.

‘நதிமூலம்’ நாவலில் எண்ணற்ற கதாபாத்திரங்கள் என்றாலும் ‘தொப்பி’ கிருஷ்ணராவ்தான் முதன்மையாக அமைந்திருக்கிறது. பசிக்கு உணவிட முடியாத வறுமை, குடும்பத்தைக் காப்பாற்றவென ஏராளமான கடன் என்பது போன்ற சிக்கலான சூழ்நிலைகளில்கூட அவரால் தன் நாவைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. சிறிது பணம் கிடைத்தாலும்கூட, முக்கியமான தேவைகள் பல இருந்தபோதும், அவரது கால்கள் நேராக ஹோட்டலை நோக்கித்தான் திரும்புகின்றன. ஒரு ரவாதோசைக்குப் பிறகுதான் மற்றதெல்லாம். சாகும் தறுவாயிலும்கூட அவர் தன் மகனிடம் கெஞ்சுவது ஒரு தோசைக்காகத்தான். நீர்க் கடனுக்காக பக்கத்து வீட்டில் கடனாக ஒரு சொம்பு தண்ணீரை வாங்க வேண்டிய நிலையில்தான் அவர் செத்துப்போகிறார்.

‘தொப்பி’ கிருஷ்ணராவின் இன்னொரு வார்ப்புதான் ‘நிலநடுக்கோடு’ நாவலின் நாயகன் தேவு. அவனைச் சுற்றியுள்ள மனிதர்கள் அனைவரையுமே தன் சுயநலத்துக்காக வேண்டியே பயன்படுத்தியவன் என்ற குணாம்சம் அவன் மீது கவிவது வினோதம்தான். இந்த நாவலில் அமைந்துள்ள ஆங்கிலோ இந்தியப் பெண்கள், விட்டல் ராவின் எழுத்தில் வெளிப்பட்டிருக்கும் அபாரமான கதாபாத்திரங்களாகும்.

‘போக்கிடம்’, ‘வண்ணமுகங்கள்’, ‘காம்ரேடுகள்’ ஆகிய மூன்று நாவல்களும் பக்க அளவில் சிறியவை. எண்ணற்ற அழுத்தமான கதாபாத்திரங்களைக் கொண்டிருப்பவை. ஆனால், ஒவ்வொரு கதாபாத்திரத்தையுமே நினைவில் நிறுத்தும்படியான தனித்துவங்களுடன் விட்டல் ராவால் அவற்றைச் சித்தரிக்க முடிந்திருக்கிறது.

அறுபது ஆண்டுகளுக்கும் முன்பு சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ்ந்திருந்தவர்களின் வாழ்க்கை முறையை ஆவணப்படுத்தியதில் விட்டல் ராவுக்கு முக்கிய பங்குண்டு. அவரது நாவல்களிலும் சிறுகதைகளிலும் காண முடிகிற ஆங்கிலோ இந்திய வாழ்க்கை, முக்கியமாக பெண்களைக் குறித்த சித்தரிப்பு விட்டல் ராவின் தனித்தன்மை, சிறப்பு என்று தயங்காமல் குறிப்பிட முடியும்.

மாறி வரும் அரசியல், சமூகச் சூழலில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளும் பொருட்டு ஆங்கிலோ இந்தியப் பெண்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும் அவற்றில் அடைய நேரும் தற்காலிகமான வெற்றிகள், தோல்விகள், ஏமாற்றங்கள், தொடரும் முயற்சிகள் என்று நிலையற்ற வாழ்வின் எல்லா இழைகளையும் விட்டல் ராவ் மிக வலுவாகவும் விபரங்களுடனும் சித்தரித்துள்ளார். அவரது நாவல்களின் ஒரு கண்ணியாகவே ஆங்கிலோ இந்தியப் பெண்களின் வாழ்க்கை அமைந்திருக்கிறது.

செறிவான அமைப்பு

நதிமூலம், நிலநடுக்கோடு ஆகிய இரு நாவல்களும் அளவில் சற்று பெரியவை. கூடுதலான பக்கங்களைக் கொண்டவை. போக்கிடம், காலவெளி, காம்ரேடுகள், வண்ணமுகங்கள் ஆகிய நாவல்கள் கச்சிதமான கட்டமைப்பு கொண்டவை. சுருக்கமான அத்தியாயங்கள், எளிமையான சித்தரிப்பு, இயல்பான மொழி, சரளமான உரையாடல்கள் ஆகியவற்றுடன் வாசிப்புத்தன்மை மிகுந்தவை விட்டல் ராவின் நாவல்கள்.

உணர்ச்சிகளின் கொந்தளிப்பான மனோநிலையை, அதன் தாக்கங்களை விலகி நின்று அணுகும் தன்மை விட்டல் ராவின் எல்லா நாவல்களிலும் உண்டு. மனஅசைவுகளை மிக விரிவாகவும் ஆழமாகவும் விவரிப்பதற்கு பதிலாக ஓரிரு வரிகளில் சற்றே விலகலுடன் சுட்டிக் காட்டும் உத்தியைக் கொண்டது.

கதாபாத்திரங்கள், கொள்கைகள், தத்துவங்கள், அரசியல் நிலைப்பாடுகள் என்று எதன் மேலும் தீவிரமான பக்கசாய்வுகொண்ட தீர்ப்புகளை எழுதாமல் சூழல், களம், சந்தர்ப்பம் ஆகியவற்றுக்கேற்ப கதாபாத்திரங்கள் ஏற்கும் நிலையை விலகி நின்று சித்தரிக்கிறார். நாவல் அனுமதிக்கும் சுதந்திரத்தை தன்வசப்படுத்திக் கொள்ளாமல் அவ்விடத்தில் வாசகர்களுக்கு இடம் தந்து நகர்ந்துவிடுகிறார்.

0

உணர்ச்சிக் கொந்தளிப்பற்ற, எளிய உரையாடல்களைக் கொண்ட, யதார்த்தமான படைப்புகளைத் தந்திருக்கும் விட்டல் ராவ் உரையாடுவதில் மிகுந்த சுவாரஸ்யம் மிக்கவர். சற்று கரகரப்புமிக்க கனத்த குரலில் மிகுந்த உற்சாகத்துடன் உரையாடக்கூடிய ஆளுமை. அவ்வாறான உரையாடலின்போது அவரிடமிருந்து வெளிப்படும் தகவல்கள் பல இலக்கியம், சினிமா, ஓவியம், பத்திரிக்கை ஆகியவற்றின் வரலாற்று நோக்கில் முக்கியமானவை.

இலக்கியத்தில் தொடர்ந்து தன் பங்களிப்புகளைத் தந்துகொண்டிருக்கும் விட்டல்ராவ் தன் வாழ்நாளில் இதுவரையிலும் பெற்றிருக்கும் விருது ‘இலக்கியச் சிந்தனை’ மட்டுமே. தமிழ் இலக்கியத்துக்கான அவரது பன்முகப் பங்களிப்புக்கான உரிய அங்கீகாரம் அவருக்கு வழங்கப்படவில்லை. தமிழ்ச் சூழலில் இதுவொன்றும் புதிதல்ல என்பதால் அவருக்கு அதைப் பற்றிய பெரிய புகார்கள் எதுவும் இல்லை.

‘போக்கிடம்’, ‘நதிமூலம்’, ‘காம்ரேடுகள்’ போன்ற அவரது நாவல்களும், ‘தமிழகக் கோட்டைகள்’, ‘வாழ்வில் சில உன்னதங்கள்’ ஆகிய நூல்களும், ‘நவீன கன்னட சினிமா’ உள்ளிட்ட திரைக்கலை பற்றிய புத்தகங்களும் விட்டல் ராவின் பங்களிப்புக்கான மறைக்க முடியாத சான்றுகளாக என்றும் நிலைத்திருக்கும். எங்கேனும் ஒரு வாசகன் இவற்றுள் ஏதேனும் ஒரு நூலைத் தேடி வாசிப்பதே எதையும் எதிர்பார்க்காத தொடர்ச்சியான அவரது பணிக்கான அசலான அங்கீகாரமாகும்.

0

 ( பேசும் புதிய சக்தி, ஆகஸ்டு 2021 இதழில் வெளியான கட்டுரை )

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...