Showing posts with label தமிழ்ச் சிறுகதை - இன்று. Show all posts
Showing posts with label தமிழ்ச் சிறுகதை - இன்று. Show all posts

Wednesday, 21 January 2026

கடலோரக் கதைகள் - ரம்யா அருண்ராயனின் ‘கழிஓதம்’


கதைகளும் இலக்கியமும் திரும்பத் திரும்ப எழுதிக் காட்டுவது மனிதர்களைத்தான். ஒரு மனிதனின் வாழ்வு இன்னொரு மனிதனின் வாழ்வைப் போல் அமைந்துவிடுவதில்லை. அன்றாடத்தின் ஒவ்வொரு கணத்திலும் வாழ்க்கையின் புதிர்கள் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு சிடுக்குகளுடன் மேலும் மேலும் புரியாத ஒன்றாகவே நீண்டுகொண்டிருக்கிறது. ஏதேனும் ஒரு நுனியைக் கண்டு அதிலிருந்து மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் முயலுந்தோறும் முடிச்சுகள் இறுகுவதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

ஒரு சமூக விலங்கான மனிதன், விரும்பினாலும் இல்லாவிட்டாலும் சக மனிதனைச் சார்ந்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம். பாசம், பந்தம், நட்பு, உறவு என வெவ்வேறு பெயர்களில் அடுத்தவர்களுடன் சேர்ந்து அனுசரித்து வாழவே விதிக்கப்பட்டிருக்கிறது. அனுசரணை என்பது எந்த நோக்கில் பார்த்தாலும் சுரண்டல்தான். அன்பின் பெயராலும் அடக்குமுறையினாலும் கட்டாயத்தினாலும் செய்யப்படுபவை அனைத்துமே சுயநலத்தின் பொருட்டு நிகழும் சுரண்டல்தான். இத்தனை கனத்த, கூரான சொல்லைக் கொண்டு அழைப்பதில் எல்லோருக்கும் ஒப்புதல் இருக்காது என்பதால் கூர்மழுங்கிய வேறு பாசாங்குச் சொற்களை பயன்படுத்திக்கொள்கிறோம்.

சமூகம் அனுமதித்த சுரண்டல்களை இயல்பான நடவடிக்கைகள். சக மனிதனுடன் அன்றாடத்தை முடிந்தவரை சுமுகமாய் கழிக்க இவை அவசியம். குடும்பம், உறவுகள், நட்பு, அண்டைவீட்டார், ஊரார் என்று அனைத்துக்கும் இது பொருந்தும். அவ்வாறு அனுமதிக்கப்படாத வகையிலான செயல்பாடுகள் குற்றங்கள் என்று வகுக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றங்களும் மனிதனால் மனிதர்களின் மீது இழைக்கப்படுபவைதான். எனவே, குற்றங்களும்கூட சமூக வாழ்வின் தவிர்க்கமுடியாத பகுதிதான். அவற்றையும் சுரண்டல்கள் என்றே வகைப்படுத்தமுடியும். எல்லாக் குற்றங்களும் தண்டனைச் சட்ட வரையறைக்குள் வருவதில்லை. அதேபோல, உரிய நியாயங்களையும் எல்லா நேரங்களிலும் வழங்கவும் சட்டங்களால் முடிவதில்லை. குற்றங்கள், தண்டனைகள், நியாயங்களுக்கான சமநிலையைப் பேணுவதற்கு சட்டத்துக்கு வெளியிலான தீர்வுகளே அவசியமாகின்றன.  

ரம்யா அருண்ராயனின் கதைகள் சுரண்டல்களைப் பற்றி பேசுபவை. எனவே, இவை சுரண்டுபவர்களைப் பற்றிய, சுரண்டப்படுபவர்களைப் பற்றிய கதைகள். இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால் இந்த சுரண்டல் இழைக்கும் அல்லது குற்றத்தைப் புரியும் மனநிலையை அடிப்படையாகக் கொண்டுள்ளன இக்கதைகள்.

இந்தக் கதைகளில் கையாளப்பட்டிருக்கும் குற்றங்களும் சுரண்டல்களும் நேரடியானவை அல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே உணரக்கூடியவை. சமூகத்தின் பொது ஒழுங்குக்கு ஊறு விளைவிக்காதவை எனினும் அதன் அடிப்படையை கேள்வி கேட்பவை.     

கட்டியவளைத் தட்டிக் கொண்டு போனவனிடமிருந்து கிடாய்களை களவாடும்போது அவள் மட்டுமே அறிந்த, பிறர் எவருமறியாத ஒரு தடயத்தை விட்டுச் செல்கிறான். ஒரு குற்றத்தின் வழியாக தனக்கான நியாயத்தை உறுதிசெய்வதோடு அவளுக்குரிய தண்டனையையையும் அவனால் வழங்க முடிகிறது. ( கிடாநோட்டம் )

பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் தூய்மைப் பணியாளரால், குப்பையை கூட்டிப் பெருக்கிக் கொண்டிருக்கும் பாட்டியின் நடவடிக்கைகளை சாதாரண பெண்ணாக விலகி நின்று பார்க்க முடிவதில்லை. அவள் துப்புரவு வேலையில் ஈடுபடும்போது பிற பெண்கள் எப்படியெல்லாம் நாசுக்காக நடந்துகொள்வார்கள் என்பதை யோசித்து அவர்களைப் போலவே நடந்துகொள்ள முயல்கிறாள். ஆனால் அவளுக்கு கைவரவில்லை. வெறும் கையால் குப்பைகளை அள்ளிப் போடும் பாட்டிக்கு கையுறையை வாங்கித் தருகிறாள். பாட்டியோ ‘செல்ஃபி’ எடுத்துக் கொள் என்று படத்துக்கு போஸ் தரத் தயாராகிறார். பணிநேரத்தில் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் இன்னொரு இளம்பெண்ணின் வேலையையும் சேர்த்தே செய்துகொண்டிருக்கிறார் பாட்டி. இந்த இரு பெண்களின் மனநிலையின் பின்னணியில் உள்ள காரணிகள் எண்ணற்ற கேள்விகளை எழுப்புகின்றன. ( விடுப்பு )

‘பெண் வேடமிட்ட ஆண்’ என்று தன்னை சக வகுப்புத் தோழர்கள் கிண்டலடிப்பதைக் கேட்டு வேதனைப்பட்டிருப்பவளிடம் வழக்கம்போல ஒரு கடிதத்தைக் கொடுத்து தபாலில் சேர்க்கச் சொல்கிறாள் தோழி. தனக்குப் பிடித்தவனிடம் தன் காதலைச் சொல்லும் கடிதம். எப்போதும்போல அதைப் பிரித்துப் படிக்கிறாள். உடல் வனப்பில் குறைந்த தன்னை கிண்டலடித்து நோகடிப்பதைப் பற்றி கவலைப்படாமல் தன் காதல் கடிதத்தை சேர்க்கச் சொல்லும் தோழியின் சுயநலமும் கடிதத்திலிருக்கும் சொற்களும் ஆத்திரத்தை ஏற்படுத்த, கடிதத்தைக் கிழித்து எரிக்கிறாள். இதன் விளைவாக தோழி தற்கொலை செய்துகொள்கிறாள். இந்தக் குற்றவுணர்வு அவளை வாழ்நாள் முழுக்கத் தொடர்கிறது. ( ஆறாவெயில் ) குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் இந்த இருவரின் நடவடிக்கைகளும் மிக இயல்பானவை. சாதாரணமானவையும்கூட. காதலின் பித்து தோழிக்கு நேர்ந்த அவமானத்தைப் பற்றிக் கவலைப்பட இடம் தராமல், கடிதத்தைச் சேர்க்க வேண்டும் என்பதில் மட்டுந்தான் கவனமாயிருக்கிறது. அதே நேரத்தில், உடல்வாகின் காரணத்தால் தன்னை ஒரு பெண்ணாகவே பொருட்படுத்தாத அவமானத்தைச் சந்திப்பவளுக்கு தோழியின் காதல் வெறுப்பை ஏற்படுத்துகிறது. இந்த இரண்டுமே ஒரே நேரத்தில் வெவ்வேறு பெண்களிடம் உருவாகும் இருவேறு மனநிலை. இதில் குற்றம் சொல்ல எதுவுமில்லை. ஆனால், இதனால் ஏற்படும் விளைவு ஆறாத குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது.

சக உயிர்களின் மீது பரிவுடன் இருக்கும் ஒருவனது காராம்பசுவை அடித்துக் கொல்லும் புலியை அதே பசுவின் ஊனில் விஷம் கலந்து சாகடிக்கச் செய்கிறான். காராம்பசுவின் மேலிருக்கும் பரிவும் கருணையும் புலியின் மீது ஏன் சுரக்கவில்லை? ( குருதிக்கோடு ) உயிர்களிலும் பேதம் பார்க்கும் மனித இயல்பும்கூட சுரண்டலின் அடிப்படையில் உருவானதுதான். தனக்கு பயன்தரும் ஒன்றை கருணையோடு அணுகும் மனிதன், உபயோகமில்லாது இடைஞ்சல் தருகிற இன்னொரு உயிரின் மீது அதே பரிவைக் காட்டுவதில்லை.

பெண் குரல் வாய்த்துவிட்ட இளைஞன் தன்னை பாலியல் நோக்கோடு அணுகுபவனை தாக்கி கொலைக் குற்றத்துக்கு ஆளாகி சிறை தண்டனைக்குள்ளாகிறான். தனக்கு வாய்த்திருக்கும் பெண் குரல் மேலும் அவமானங்களை சிக்கல்களை உருவாக்கும் என்றெண்ணி அப்பிராணி ஊமையாகவே நடிக்கிறான். அந்த நடிப்பு அவனுக்கு பலாபலன்களையும் தருகிறது. நன்னடத்தையின் காரணமாக தண்டனை காலத்துக்கும் முன்பாகவே விடுதலையாகிறான். கடலோரத்தில் சிறுதெய்வம் ஒன்றின் ஊர்வலத்தில் துடியேற்றும் இசைகேட்டு தன்னிலை மறந்து பெண்குரலில் ஆவேசத்துடன் கத்தியபடி ஆடுகிறான். கேட்போருக்கு இப்போது அது ‘ஆத்தாவின் குரலா’க ஒலிக்கிறது. ( அப்பிராணி ) அவனை குற்றவாளியாக்கியதும் அதே குரல்தான். இப்போது அருள்வாக்களிக்கும் ‘ஆத்தா’வாக பார்க்கச் செய்வதும் அதே குரல்தான்.

மண உறவின் சிறு இடறலும்கூட இணைகளில் யாரேனும் ஒருவர் அடுத்தவரிடத்தில் காணும் குற்றத்தின் ஊற்றைக் கொண்டிருக்கும். துச்சமான ஒன்றாக இருந்தபோதும் அந்த ஊற்றின் காரணமாக உருவாகும் இடைவெளியை ஒருபோதும் நிரப்ப முடியாது பிரிந்துவிட நேரும். ( ஆல்பம் ) ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியாத உணர்வு கணவன், மனைவி இருவருக்கும் வெவ்வேறு விதமான பாதிப்புகளை உருவாக்கும். அந்த பாதிப்பின் மூலமாக ஏற்படும் இடைவெளிகளைப் புரிந்துகொள்ள முடியாமல் போகும்போது இன்னும் சிக்கல்கள் இறுக்கமாகும். ( பின்னல் ) தனித்த இரு உயிர்கள் ஒன்றாக வாழ நேர்கையில் எத்தனை தூரம் விட்டுக்கொடுப்பதும் அனுசரிப்பதும் சாத்தியம் என்பதைப் பொறுத்தே அந்த உறவு அமைவதும் நீடிப்பதும். விட்டுக்கொடுப்பதும் அனுசரிப்பதும் சுரண்டலின் மென்மையான வழிமுறைகள்தான்.

‘செபமாலையும் குருசும் மாதிரி ஒண்ணா திரிஞ்ச பயலுக’ளில் ஒருவனை விபத்தில் பறிகொடுத்தவன் சங்கெடுக்க கடலுள் இறங்குபவனுக்கு, மந்திரவாதியைக் கொண்டு கலசத்தில் அடைத்த குற்றத்தை சரிசெய்யும் பொருட்டு அவன் ஆவியை விடுவிக்கும்போதுதான் இயல்பு நிலைக்குத் திரும்ப முடிகிறது ( நீர்க்குரல் ). இறந்தவனின் நினைவுகள் ஒருவனின் அன்றாட வாழ்க்கையைத் திசைமாற்றுகிறது என்பது அடுத்தவர் பார்வை.

உடல் இயல்பில் மாறுதலைக் கொண்ட ஆசிரியைக்கும் மன இயல்பில் வித்தியாசத்தைக் கொண்ட சிறுமிக்கும் இடையில், தேர்வுக் கூடத்தில் ஏற்படும் தற்காலிக சந்திப்பும் அதன்பொருட்டு நிகழும் உரையாடலும் இவர்களைக் குறித்த அன்றாட உலகின் பார்வைகளையும் அவற்றில் உள்ள குற்றச் சாயல்களையும் மிதமாக வெளிப்படுத்தியுள்ளன. ( இலக்கணப் பிழைகள் ). பிழைகள் அவர்களுடையதல்ல. அதற்கான தண்டணைகளை மட்டும் அனுபவிக்கிறார்கள்.


ரம்யா அருண் ராயனின் கதைகள் நேரடியானவை. வலிந்து எதையும் அவர் உருவாக்கத் தேவையில்லாமல் களங்களும் கதாபாத்திரங்களும் இயல்பாக பொருந்தி அமைந்துள்ளன. துலக்கமான நில அடையாளங்களின்றி எழுதியுள்ள கதைகளைக் காட்டிலும் கடலோரத்தைக் களமாகக் கொண்ட கதைகளே ( கழி ஓதம், கிடா நோட்டம், நீர்க்குரல், ஆறாவெயில், அப்பிராணி ) அவரை கவனிக்கச் செய்கின்றன. நிலமும் மொழியும் கதையில் கரைந்து உருவாகும் நம்பகத்தன்மையே அதற்கு காரணம்.

எண்ணிக்கையில் பன்னிரெண்டு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் அங்கங்கே அவருடைய சொல் நேர்த்திக்கான தடயங்களைப் பார்க்க முடிகிறது. ‘காற்று கண்ணுக்குத் தெரியாத உடுக்குகளை அடித்தடித்துக் கடலைத் துடியேற்றிக் கொண்டிருக்கும்’ ( கழி ஓதம் ), ‘ஆயிரம் கத்திகளைக் கொண்டு கடல் ஏதோ சாகச விளையாட்டை நிகழ்த்துவதுபோல் கடலில் துள்ளலும் நீச்சலுமாக முரால் மீன் கூட்டம்’ (நீர்க்குரல்), ‘பால் பொங்குவதற்குச் சற்று முன் நடுங்கிக் கொண்டிருக்கும் பாலேடு போலொரு மென்சுருக்கம் ஆரம்பித்திருக்கிறது’ ( விடுப்பு ), ‘முதல் நாலு இழுப்புக்கு உலோகத்தில் பால் விழும் ஒலியும், அடுத்த நாலு இழுப்புக்கு பால்மேல் பால் விழும் ஒலியும், மற்ற இழுப்புக்கெல்லாம் நுரைமேல் பால் விழும் ஒலியும் என இது ஒருவகை எனக்குப் பிடித்த ஜலதரங்கம்’ ( குருதிக்கோடு ).

‘கிடா நோட்டம்’, ‘நீர்க்குரல்’ போன்ற வலுவான கதைகளுக்கு நடுவே ‘ஆல்பம்’, ‘வவ்வாக்குட்டி’ போன்ற கதைகள் தொகுப்பைக் குறித்த ஒட்டுமொத்த அனுபவத்தை மட்டுப்படுத்துகின்றன. மண உறவு, குழந்தையின்மை போன்ற உளப் போக்குகளை மையப்படுத்தும் கதைகள் ( பின்னல், ஆல்பம் ) முன்பே எழுதப்பட்டிருக்கும் அதே வகைக் கதைகளிலிருந்து ஏதேனும் ஒரு அம்சத்தில் வேறுபட்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாதபோது அவை எண்ணிக்கைக்கு மட்டுமே உதவும்.

கடலோர வாழ்க்கையை வலுவாகச் சித்தரித்திருக்கும் நாவல்கள் தமிழில் உண்டு. அந்த அளவுக்கு பரதவர் வாழ்வின் ஆழ அகலங்களைக் காட்டியிருக்கும் சிறுகதைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்த முதல் தொகுப்பில் உள்ள சில கதைகள், ரம்யா அருண் ராயனால் அவ்வாறான கதைகளை எழுத முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

0

கழி ஓதம், ரம்யா அருண் ராயன், டிசம்பர் 2024 எழுத்து பிரசுரம் விலை 170

( பிப்ரவரி 2026 நீலி இதழில் வெளியானது )


  

Thursday, 12 September 2024

வேறு நிலம், வேறு முகம், ஒன்றே வலி - லதாவின் சீனலட்சுமி தொகுப்பைக் குறித்து


கோவையிலுள்ள கல்லூரி ஒன்றில் ‘சமகால பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ குறித்து உரைநிகழ்த்தும்படி கேட்டுக் கொண்டதையடுத்து ஏற்கெனவே வாசித்த சில சிறுகதைகளையும் புதிய சிறுகதைகளையும் தேடிப் படிக்க வாய்த்தது. அயலகச் சிறுகதையாளர்கள் சிலரது கதைகளையும் இணையத்தின் வழியே தேடிப் படிக்க முயன்றேன். ‘அறை’ என்ற ஒரு சிறுகதை கண்ணில்பட்டது. வீட்டில் நிகழ்ந்திருக்கும் ஒரு மரணம் அங்கே தங்கியிருக்கும் பெண்ணுக்குள் ஏற்படுத்தும் மனவோட்டங்களை மையமாகக் கொண்டது அந்தக் கதை. சாவு வீட்டின் சூழலில் அதற்கு சற்றும் தொடர்பில்லாத ஒருவர் சந்திக்க நேரும் உளச்சிக்கல்களை திருத்தமாகச் சொல்லியிருந்தது. அகவயமாகவே கதையை நகர்த்தவேண்டிய அசாதாரணமான களம் வெகு சாமர்த்தியமாக கையாளப்பட்டிருந்தது. இணைய இதழ் ஒன்றில் வெளியான லதாவின் கதை அது. அதைத் தொடர்ந்து காலச்சுவடு வெளியிட்ட ‘நான் கொலை செய்த பெண்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பைப் பெற்று படிக்க முயன்றேன். கிடைக்கவில்லை. ‘பாம்புக் காட்டில் ஒரு தாழை’ என்ற கவிதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது.

‘சீனலட்சுமி’ என்ற தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. எட்டு கதைகளைக் கொண்டது. ஒரேயொரு கதையைத் தவிர பிற கதைகள் அனைத்தும் பெண்களின் கதைகள். அம்பை, ஆர்.சூடாமணியில் தொடங்கி உமாமகேஸ்வரி, சந்திரா, ஜா.தீபா வரையிலுமான பெண் எழுத்தாளர்களின் கதைகளில் ஒரு பொதுவான புள்ளியை கண்டடைய முயல்வோமானால் ‘பெண்களுக்கான இடம்’ என்பதாகவே அது இருக்கும். வரலாற்றில், சமூகத்தில், அன்றாட வாழ்வில் பெண்களுக்கான இடம் குறித்து கேள்வி எழுப்பும், விமர்சனம் செய்யும், வலியுறுத்தும் குரல்களை அந்தக் கதைகளில் கேட்க முடியும். லதாவின் கதைகளில் ஒலிக்கும் குரலும் அவ்வாறான இடத்தைக் கேள்வி கேட்கும் ஒன்றாகவே அமைந்திருக்கிறது. காலமும் களமும் வேறு என்றாலும் எழுப்பப்படும் கேள்வியும் அதற்கான காரணங்களும் உலகளாவியதாகவே உள்ளன. பெண்கள் பொதுவாக எல்லா இடங்களிலும் எல்லா காலத்திலும் அனுபவிக்க நேர்கிற தடைகளுடன் புறக்கணிப்புகளுடன் அடக்குமுறைகளுடன் சேர்ந்து, புலம்பெயர்ந்து வாழும் பெண்கள் அந்நிய நிலம், அந்நியமான கலாச்சாரம் போன்ற சில கூடுதல் காரணிகளையும் கடந்து சமாளிக்க வேண்டியுள்ளது. 

புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் வாழத் தலைப்பட்ட பெண்களின் வாழ்வியல் நிலைகளை, அனுபவங்களை வரலாற்றினூடாக கால வரிசையில் அணுகுவதாக அமைந்துள்ளன இந்தக் கதைகள். விடுதலை பெறும் கனவுடன் 1943ல் சுபாஷ் சந்திரபோஸின் ஐ.என்.ஏயில் சேர்ந்து பணியாற்றுவதற்கு முயலும் வேணியிலிருந்து தொடங்கி (தேக்காவில் ஒரு பாலம்) குழந்தைப் பேறுக்குப் பிறகான நாட்களில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தவிக்கும் நீலமலர் (இளவெய்யில்) வரையிலுமாக இக்கதைகள் தரும் பெண்களின் வரிசையைக் கொண்ட வரைபடம் இதுவரையிலுமான மனிதகுல முன்னேற்றங்களையும் சாதனைகளையும் பெருமிதங்களையும் கசப்புடன் கேலிசெய்வதாக அமைந்திருக்கிறது. உலகியல் சார்ந்த புறவயமான பெருமளவிலான மாற்றங்களை சாத்தியப்படுத்தியிருக்கும் அத்தனை சாதனங்களும் கருவிகளும் மனிதனின், குறிப்பாக ஆணின், மன ஆழத்திலும் சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் பெண்களுக்கான இடத்தை அங்கீகரிப்பதில் அவனுக்குள்ள அக இயல்பில் சிறிய அளவிலான சலனத்தையும் ஏற்படுத்த இயலாதவையாக அமைந்திருப்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

வரலாற்றிலும் சமூகத்திலும் இயல்பாக, நியாயமாக அமைய வேண்டிய பெண்களுக்கான இடத்தை அவர்கள் அடைய முடியாமல் செய்யும் தடைகள் எவை என்ற கேள்விகளை இக்கதைகளின் வழியாக எழுப்பிக்கொள்ள முடியும். காலங்காலமாக தொடர்ந்து பெண்களுக்கென்று வகுக்கப்பட்டு வரையறைக்கப்பட்டிருக்கும் எல்லைகளை மீறும் முயற்சிகளும் போராட்டங்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன என்பதையும் இக்கதைகள் அடிக்கோடிட்டுக் காட்ட மறக்கவில்லை.

‘தேசத்தின் விடுதலை’ என்ற ஒற்றை இலக்கின் கீழ் இனம், மொழி, பால், சாதி, பொருளாதாரம், இருப்பிடம் போன்ற பிற எல்லா மனமாச்சரியங்களும் வேறுபாடுகளும் பொருளற்றுப் போகும் என்பதே நம்பிக்கை. அப்படித்தான் வரலாறு கற்பித்துள்ளது. இந்த கற்பிதத்தை உடைத்து நொறுக்கும் உண்மைகள் தொடர்ந்து வெளிப்பட்டு வந்துள்ளன. சுபாஷ் சந்திர போசுடன் ஐ.என்.ஏவில் சேர்ந்து போராடும்போது சொந்த மண்ணுக்குத் திரும்பலாம், விடுதலை பெறலாம் என்ற கனவுடன் களத்துக்கு வரும் பெண்களை, படையணியில் உள்ள சக பெண்களே புறக்கணிப்பதற்கான காரணமாக அமைந்திருந்தது சாதி என்னும் உண்மை வரலாற்றில் சொல்லப்படாத ஒன்று. சாதி வேறுபாடுகளுக்கு முன்பு தேச விடுதலை, மானுட விடுதலை போன்ற லட்சியங்கள் பொருட்டல்ல என்ற மனப்பான்மையை ‘தேக்காவில் ஒரு பாலம்’ போன்ற கதைகளிலிருந்துதான் அடையாளம் காண முடிகிறது. சாதி மனப்பான்மைக்கு ஆட்படுவதில் ஆண், பெண் பேதமில்லை என்கிற கசப்பான யதார்த்தத்தையும் கண்டுகொள்ள முடிகிறது.

‘காவடி எடுக்க உரிமையில்லை’, ‘படகிலேறி கடலில் மீன் பிடிக்கக்கூடாது’, ‘போர் முனையில் சண்டை போட அனுமதியில்லை’ போன்று வாழ்வின் எல்லா திசைகளிலும் வாய்ப்புகளிலும் தொடர்ந்து புதிது புதிதான தடைகளை விதிக்கும் ஆண்களின் ஆதிக்கப் போக்கே பெண்களின் முதன்மையான சவால்களாக அமைந்திருப்பதை எல்லாக் கதைகளும் உணர்த்துகின்றன. கடுமையான உடல் உழைப்பைத் தந்து குடும்பத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்புணர்வுடனும் இருந்தபோதிலும் ஆண்களின் அனுமதிக்காகக் காத்திருக்கும் நிலை மாறவில்லை. அம்மாவின் புற்றுநோய் சிகிச்சைக்காக உடனிருக்கும் பெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல், திருமண ஏற்பாடுகள் குறித்த நேரத்தில் நடப்பதில்லை, அழைக்கும்போது பேசுவதில்லை போன்ற காரணங்களுக்காக தொடர்பிலிருந்து விலகிச் செல்லும் மணமகனின் உளநிலையும் புறக்கணிப்பும் அந்தப் பெண்ணின் மீது அவன் செலுத்தும் உளவியல் வன்முறைதான்.

தடைகளையும் சவால்களையும் கடந்து செல்ல முனையும்போது ஏற்கவேண்டிய வலிகளையும் இக்கதைகள் உணர்த்துகின்றன. நோய்மை வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது. இரு கைகளையும் இழந்தவள் கணவனால் புறக்கணிக்கப்படுகிறாள். மகளையும் விட்டுத்தர நேர்கிறது. புற்றுநோய் வாதைகளைத் தாங்கிக் கொள்வதுடன் அன்றாடத் தேவைகளுக்குக்கூட இன்னொருவரின் உதவியை நாடவும் அதை சகித்துக்கொள்ளவும் வேண்டியுள்ளது. சருமத்தைத் துளைத்து வடுக்களை ஏற்படுத்தும் இன்சுலின் ஊசிகளைக் குத்திக் கொள்ள நேர்கிறது. இத்தகைய உடல் வலிகளுடன் புறக்கணிப்பின் அகவதையையும் சகித்துக்கொள்ள நேர்கிறது.

இவற்றிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளவும் ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் பல்வேறு நம்பிக்கைகளை பற்றிக்கொள்ள நேர்கிறது. தைப்பூச விழாவின் போது ஈடுபாட்டுடன் காவடிகளைத் தயார் செய்கிறார்கள், தேசத்துக்காக போரிட தயாராகிறார்கள், தாத்தாவிடமிருந்து மீன் பிடிக்கும் நுட்பங்களைக் கற்றுக் கொள்கிறார்கள், மீன்களைக் கொண்டு விதவிதமாக சமைத்துப் பரிமாறுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி. அலுக்காமல் வரிசைகளில் நின்று சாதிக்க எண்ணுவதும்கூட அவ்வாறான ஒரு நம்பிக்கைதான். கைபேசி விளையாட்டுகளில் மூழ்குவதும் தற்படங்களை ஏற்றி நண்பர்களின் பாராட்டுக்களைப் பெற விழைவதும்கூட தங்களது நெருக்கடியிலிருந்து விலகி சற்றே நிதானித்துக்கொள்ளும் உத்திதான். பக்தி, பாசம், சமையல், தையல்வேலை, இசை, ஒப்பனை, விளையாட்டு என்று தங்களுக்கான வழிகளில் ஒன்றில் ஈடுபடுத்திக்கொள்வதன் வழியாகத்தான் கிடைக்காத இடத்தின், அங்கீகாரத்தின் வெறுமையை நிறைவு செய்துகொள்ள முடிகிறது.

இந்தக் கதைகளின் ஊடாக சில அபாரமான நுண் உணர்வுகளை மிக நுட்பமாகக் காட்டியிருக்கிறார் லதா. ‘நிர்வாணம்’ கதையில் திரண்டு அழகுறும் அம்மா-மகள் உறவை உதாரணமாகச் சொல்லலாம். அம்மா, மகள் என்ற உறவு நிலைக்கப்பால் இருவரும் இருவேறு பெண்கள். அவரவர் அந்தரங்கங்கள் வேறு. இன்னொருவரின் உதவியுடனே தன் அன்றாடங்களைக் கழிக்க நேரும் அம்மாவின் உளநிலையைப் புரிந்துகொள்ளும்போது மகளுக்கும் அவளுக்குமான நெருக்கம் கூடுகிறது. உடல் சார்ந்த கூச்சங்கள் மறைகின்றன. சிறுமியாக இருந்த காலத்தை இருவரும் எட்டும்போது உடலின் நிர்வாணம் பொருட்டாகத் தெரிவதில்லை. உடுத்தாத உடலை ‘கோகுல் சாண்டல்’ பவுடரின் வாசனையுடன் பின்னிருந்து கட்டிக்கொள்ளும் புள்ளியைத் தொடும்போது கதை முழுமையடைகிறது. சொற்களில் எளிதில் சிக்காத இந்த உணர்வுகளை இயல்பான சித்தரிப்பின் வழியாக கச்சிதமாக திரளச் செய்யும் பெரும் சவாலை லதா மிக அபாரமாக கையாண்டிருக்கிறார்.

எழுதப்பட்டுள்ள சொற்களால் உருவாகியிருக்கும் கதையினுள் நுட்பமான உணர்வுகளைப் பொதிந்து வைத்திருக்கும் புனைவுத்திக்கு இன்னொரு உதாரணம் ‘காவடி’. கதையின் நாயகியான ஆத்தா, தாத்தாவுக்கு மூன்றாவது மனைவி. நான்கு குழந்தைகள். தாத்தாவின் சொற்ப வருமானம் போதாத நிலையில் பிள்ளைகளின் பசிபோக்க கடுமையாக உழைத்தவள். உடலெங்கும் கன்றி காய்க்கும் அளவுக்கு தாத்தாவிடம் அடி வாங்கியவள். தைப்பூசத்தின்போது அரிகண்ட காவடி எடுக்கும் தாத்தாவுக்கு உற்சாகத்துடன் உதவுபவள். காவடி ஊர்வலங்களில் சலிக்காமல் நடந்தவளுக்கு காலில் பட்ட சிறுகாயம், நீரிழவின் காரணமாக குணமாகாமல் புரையோடி தசைகளைத் தின்றுவிட்டது. சிகிச்சைக்காகக் காத்திருக்கிறாள். நினைவிழந்தும் மீண்டும் படுக்கையில் கிடப்பவளின் எண்ணம் முழுக்க காவடி எடுத்துச் செல்லும் தைப் பூச விழாவினையே சுற்றி வருகிறது. பேத்தியிடம் தொடர்ந்து காவடிக் கதைகளை சொல்வதாக அமைந்துள்ள கதையின் உள்ளே வாழ்நாள் முழுக்க உடலிலும் மனத்திலும் அலகுகளைக் குத்தி எண்ணற்ற காவடிகளை சுமந்த அவளது நெஞ்சுரத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது. ‘ஊசி குத்தி குத்தி காயந்துக் கறுத்திருந்த அவரின் இடுப்புப் பகுதி அரிகண்டம் போடுபவர்களின் இடுப்பாகி இருந்தது’ எனும் கடைசி வாக்கியம் அதுவரையிலும் சொல்லப்பட்ட தாத்தாவின் கதையை மாற்றி ஆத்தாவின் கதையாக்கி விடுகிறது.

ஒரே கதையின் இரண்டு பகுதிகள்போல் அமைந்திருக்கும் ‘அலிசா’வும் ‘வலி’யும் இரு முகங்களைக் கொண்ட ஒரே பெண்ணின் கதையைத்தான் சொல்கின்றன. சிங்கப்பூருக்கு அப்பால் உள்ள உபின் தீவில் வளரும் அலிசா மீன் பிடிக்கும் நுட்பங்களைத் தாத்தாவிடம் கற்றுக்கொள்வது கதை. இதற்குள் வெவ்வேறு தரவுகளும் உணர்வுகளும் செறிவாக அடுக்கப்பட்டுள்ளன. வாழ்வின் பல்வேறு முன்பறியாத சூழல்களுக்கும் அனுபவங்களுக்கும் அலிசா தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளும் விதமாகவே கதையின் சம்பவங்கள் அடுக்கப்பட்டுள்ளன. ‘வலி’ கதையை இதன் தொடர்ச்சியாக அணுக முடியும். விதவிதமாக மீன் சமைப்பதில் தேர்ச்சி பெற்றவள், கைகளை இழந்து தொட்டி மீன்களைக் கொண்டு தன்னை திருப்திபடுத்திக்கொள்ளும் அவலத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறாள். கைவிடப்படுவதின் துயரத்தில் அவர்கள் இருவரும் மூழ்கிவிடுவதில்லை. அலிசா துணிச்சலுடன் மீன் பிடிக்க கடலுக்கு செல்கிறாள். கைகளை இழந்தவளோ மகளின் வருகைக்காக மீன் தொட்டியுடன் தயாராகிறாள்.

லதாவின் இக்கதைகள் வலுவான புதிய பெண் கதாபாத்திரங்களை தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. எல்லா பெண்களுக்குமான வலியையும் தடைகளையும் சந்திப்பவர்கள்தான் என்றாலும் அவற்றை கடந்துசெல்லும் விதங்களே அவர்களைத் தனித்துவப்படுத்துகின்றன. இவர்களது உலகில் ஆண்கள் முக்கியமற்றவர்கள் என்றாலும் இவர்களுக்கான இடத்தையும் உரிமைகளையும் தீர்மானிப்பவர்கள் அவர்கள்தான் என்பதையும் கவனிக்க முடிகிறது. கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அடையாளம் சொல்லும் அளவுக்கு கனபரிமாணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

லதாவின் கதைமொழி எளிமையானது. சிடுக்குகள் இல்லாதது. தனித்துவமானது. இயல்பாக உரையாடுவதுபோல கதைத் தொடங்குகிறது. தெளிவுடன் நகர்கிறது. சொல்ல வேண்டியவற்றை மட்டும் சிக்கனமாகச் சொல்கிறது. கதையின் உள்ளடுக்குகளைப் குறித்த சுட்டிகளை மட்டும் அங்கங்கே மிகக் குறைந்த சொற்களில் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறது. பெரும்பாலான கதைகள் உரையாடல்களால் அமைந்தவையே. அகமோதல்களையும் உணர்வுகளின் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளையும் அடங்கிய தொனியில் அழுத்தமாகக் காட்டிவிடுகின்றன.

சம்பவங்களையும் திருப்பங்களையும் கொண்டு கதை சொல்லும் உத்திக்கு மாறாக மன உணர்வுகளைத் தொட்டுக் காட்டுவதன் மூலமாக மட்டுமே முழுமையான அனுபவ உலகத்தை உருவாக்க முனைந்திருக்கும் விதத்தில் தனித்துவம் பெறுகின்றன லதாவின் கதைகள். உரையாடல்களின் வழியாக சிக்கனமான சொற்களின் மூலமாக ஆங்காங்கே கசியும் வெளிச்சத்தைக் கொண்டு கண்ணுக்குத் தெரியாத பகுதியை அனுமானிக்கவேண்டிய சவால்களைக் கொண்டிருக்கின்றன. பெண்களுக்கான இடம் மறுக்கப்படுவதை கேள்விக்குள்ளாக்கும் கதைகள் என்றபோதும் எந்த இடத்திலும் அரசியல் குரல் வலுத்தோ ஓங்கியோ ஒலிக்கவில்லை என்பதும் இந்தக் கதைகளுக்கான இயல்புகளில் ஒன்று.

அயல்நிலத்துக்கான துலக்கமான அடையாளங்களுடன், தனித்துவமிக்க குணாம்சங்கள் கொண்ட கதாபாத்திரங்களின் வழியாக உலகளாவிய அளவில் தொடர்ந்து விவாதிக்கப்படும் பிரச்சினை குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன என்கிற வகையில் இவை அடர்த்தியானவை, அழுத்தமானவை. 

Sunday, 2 January 2022

துலா முள்ளின் அசைவுகள் – திருச்செந்தாழையின் கதைகள்

 


ஒழுங்கான கோடுகள் கொண்ட ஒரு பக்கத்தில் சற்றே கோணலாக வளைந்திருக்கும் கோடு உடனடியாக எல்லோரது கவனத்தையும் கவரும். ஒருவழிப்பாதையில் எதிரில் வரும் ஒழுங்கு மீறிய வாகனம் அனைவரையும் பதற்றத்துக்கு உள்ளாக்கும். மீறல்கள் உருவாக்குகிற சமன்குலைவை முதன்மைப்படுத்தும் கதைகளுக்கென்று இலக்கியத்தில் தனித்த செல்வாக்கு எப்போதுமே உண்டு. ஒருவகையில் இலக்கியத்தின் பணி அத்தகைய மீறல்களையும் அதற்கான காரணங்களையும் அவற்றின் விளைவுகளையும்  யோசிக்கச் செய்வதுதான்.

‘உலகமே ஒரு நாடக மேடை’ என்ற சொற்றொடருக்கு நிகரான செல்வாக்குக் கொண்ட இன்னொரு கூற்று ‘எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு’ என்பது. திருச்செந்தாழையின் கதைகள் துலக்கிக் காட்ட முயல்வது வாழ்வின் உள்ளும் புறமுமாய் பின்னிக் கிடக்கும் கொடுக்கல் வாங்கல்களைத்தான். வணிக உலகின் ஒவ்வொரு அங்குலத்திலும் படிந்திருக்கும் தந்திரங்களின் நெடியை, ஈவிரக்கமற்ற அதன் உக்கிரத்தை, கால்களுக்கு அடியில் மிதிபடும் எவற்றையும் பொருட்படுத்தாது தன் இலக்கை நோக்கி மட்டுமே விரையும் வேகத்தை முதன்மைப்படுத்துபவை அவரது கதைகள்.

வியாபாரம் ஒரு சூது. தரவுகள், உலக நடப்புகள், உற்பத்திக்கும் தேவைக்குமான சமன்பாடு என அனைத்தையும் துல்லியமாக கணக்கிடும் மதி நுட்பம், ஆண்டாண்டுகளாக பொட்டுப்பொட்டாய் சேர்த்த அனுபவம், காரணகாரியங்களுக்கு அப்பால் இதுதானென்று துலாமுள் போல துடித்து நிற்கும் உள்ளுணர்வு ஆகிய மூன்று படைக்கலன்களையும் கொண்டே இதில் இறங்கமுடியும். இத்தனை இருந்தபோதும் வெற்றியோ அல்லது குறைந்தபட்சம் இழப்பின்மையோ உறுதியில்லை என்பதுதான் இது கற்றுத்தரும் பாடம்.

இவ்வாறான வெளிப்படையான கணக்கு வழக்குகளுக்கு பின்னால் உள்ள சிக்கலான மனக்கணக்குகள் இன்னும் வலிமையானவை. அத்தகைய கணக்குகளையும் அவற்றின் ஆழத்திலுள்ள காரணங்களையும் இலக்காகக் கொண்டிருப்பவை திருச்செந்தாழையின் கதைகள்.

வணிகத்தையும் அதன் சூட்சுமங்களையும் கற்றுக்கொள்வது குருகுலபாடம் போன்றுதான். அல்லும் பகலுமாய் குருவின் காலடியில் கிடந்து அவரது ஒவ்வொரு அசைவையும் தவறவிடாது கவனித்து ஏவல்களை நிறைவேற்றி வசவுகளை தாங்கி அவமானங்களை விழுங்கி மிகப் பொறுமையாய் தனக்கான காலம் கனியும் வரை காத்திருந்து கற்றுக்கொள்ளும் பெரும் கல்வி. பிரிந்து தனியாகச் செல்லும் மாணவன் ஒவ்வொருவனும் ஆசிரியரின் போட்டியாளன்தான். ‘நீங்கள் இட்ட பிச்சைதான்’ என்று அவன் பணிந்து வணங்கும்போதே அவனது கணக்குகள் என்ன என்பதை அறிந்தவர் ஆசிரியர். ராம பவனத்தின் வீழ்ச்சியையும் அங்கிருந்து உருவாகி வளர்ந்து நிற்கும் தன்ராஜின் வெற்றியையும் விவரிக்கும் ‘விலாஸம்’ கதை இந்த ஆசிரிய மாணவ உறவின் உள்மடிப்புகளைத் துல்லியமாக கணித்திருக்கிறது.

வியாபாரம் செழிப்பதோ அழிவதோ வெற்றியும் தோல்வியும் அல்ல. அது வரவு செலவு கணக்கு, அவ்வளவுதான். ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான போட்டியாளரை உள்ளுக்குள் நிறுத்தியே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். யாரை வீழ்த்தவேண்டும் யாரை மிஞ்ச வேண்டும் என்ற தெள்ளத் தெளிவான கணக்கு உண்டு. எது இலக்கு என்பதை அவரைத் தவிர வேறு யாரும் அறிந்துவிட முடியாது. போட்டியாளருக்குத் தெரியும், தானே அந்த இலக்கு என்பதையும். சமயங்களில் அவரை வெற்றியின் நிறைவையோ சாகச உணர்வையோ தரக்கூடாது என்பதற்காக ‘விலாஸம்’ கதையின் தன்ராஜைப் போல விட்டுக்கொடுத்துவிடுவதும் உண்டு.

ஒவ்வொரு வியாபார சாம்ராஜ்யத்துக்குப் பின்னும் பழைய வெற்றிகரமான தொழிலாளி ஒருவரின் உழைப்பும் அனுபவமும் உண்டு. அவரது கணிப்புகள் தவறுவது அரிது. அவர்களில் ஒருசிலரே முதலாளியாக முடிகிறது. அவ்வாறு அவர்கள் ஆக முடியாதபடியான சூட்சுமங்களை தங்கள் கைக்குள்ளேயே முதலாளிகள் இருத்திக் கொள்கிறார்கள். முதலாளிக்காக வியாபார கணக்குகளை துல்லியமாகக் கணிக்கமுடிகிற ‘துலாத்தான்’ அய்யாவுவால் தன் மகளின் வாழ்க்கைக் கணக்குகளை எதுவும் செய்ய முடியவதில்லை.

 

வியாபாரம் போலவே தந்திரங்களையும் கணக்குகளையும் அடிப்படையாகக் கொண்டவை மனித உறவுகள். மனித உறவுகளின் பல்வேறு திரிபுகளையும் வியாபாரத்தின் தந்திர நுட்பங்களையும் இணைத்து கதைகளாக்கும்போது அவை அடையும் கூடுதல் பரிமாணங்களின் அழகை உறுதிப்படுத்துகின்றன திருச்செந்தாழையின் கதைகள்.

மனிதர்களின் சுயநலமும் வியாபாரிகளின் லாபநோக்கும் ஒரே கணக்குதான். நஷ்டமடையும்போது அவனை கைதூக்கி காப்பாற்றுபவர்களைவிட அந்த நிலையைப் பயன்படுத்தி அவர்களிடமிருந்து எதையேனும் கைபற்ற முடியும் சுரண்ட முடியும் என்று திட்டமிடும் மனமே ‘த்வந்தம்’ கதையில் செயல்படுகிறது. ரத்த உறவாக இருந்தாலும்கூட சுயநலமே வாழ்வின் ஒவ்வொரு நகர்வையும் தீர்மானிக்கிறது எனும் யதார்த்தத்தை திரவியம், மரியம் கதாபாத்திரங்களின் வழியாகச் சொல்லும் ‘ஆபரணம்’ கதையிலேயே அவர்களின் போக்குக்கு நேர் எதிரான குணாம்சங்களைக் கொண்ட திலகரையும் சித்திரையையும் கொண்டு துலாக்கோலை சமன்செய்திருக்கிறார் திருச்செந்தாழை. பொருட்செல்வத்தை இலக்காகக் கொண்ட மரியத்தையும் மக்கட்செல்வமே மகிழ்ச்சி தருவது என்பதை இயல்பாக உணர்ந்த சித்திரையையும் ஒரு சமன்பாட்டில் இருத்துகிறது இந்தக் கதை. தந்திரங்களைக் கொண்டு திலகரைத் தோற்கடிப்பதன் வழியாக உயர்ந்திருத்த திரவியத்தின் தட்டு இறுதியில் தாழ்ந்து போவது அந்த சமன்பாட்டை உறுதிசெய்கிறது. ஆனால், கதையின் எந்த இடத்திலும் இந்த துலாக்கால் விளையாட்டிலிருந்து விலகி நிற்கிறார்கள் சித்திரையும் திலகரும்.

நுட்பமான தகவல்களுடன் கச்சிதமான விவரணைகளுடன் கூடிய கதைமொழி கனிந்து திருச்செந்தாழையின் கதைகளுக்கு தனித்த அடையாளத்தைத் தருகின்றன. சம்பவங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் அந்த நேரத்தில் கதையின் உணர்வுதளத்துக்கும் பொருத்தமான உவமைகள் மிக இயல்பாக அமைந்துள்ளன. ‘தங்கத்திற்கேயுரிய சுறுசுறுவென நாசியைத் தீண்டுகிற மின்மணத்தோடு பாலின் வெம்மையான கவுச்சி வாசனையும் சேர்ந்தெழுந்தது’, ‘அவள் தனது ஒவ்வொரு நகையாகக் கழற்றிக் கொடுத்துவிட்டு பொட்டுத் தங்கம் இல்லாத, கலங்கலான நீர் நிரம்பிய கண்ணாடிப் பாத்திரத்தைப் போல தூணில் சாய்ந்துவிட்டாள்’ (ஆபரணம்) போன்ற வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் உவமைகள் வலிந்து தம்மைக் காட்டிக்கொள்வதில்லை. ஆனால் அவை தம் வலுவான இருப்பை உணர்த்திவிடுகின்றன. ‘குத்தவைத்திருந்த காலருகே மக்காச்சோளத்திலிருந்து உரித்து எறியப்பட்ட காய்ந்த சோகை தலைவிரி கோலம்கொண்ட பெண்ணின் முகச்சாயலோடு உருண்டு வந்தது’ (துலாத்தான்) என்பது வெறும் சித்தரிப்பாக நின்றுவிடாமல் கதையின் குறிப்பிட்ட தருணத்தில் அய்யாவு கதாபாத்திரத்தின் உளப்போக்கைக் காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.

 

கதையின் போக்குக்கும் வார்ப்புக்கும் பொருத்தமாக, இயல்பாக சூழலை சித்தரிப்பு என்பது கதையின் வாசிப்புத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கியமான காரணி. ‘பாதி அணைத்து வைத்திருந்த சுருட்டை மீண்டும் உதட்டில் கவ்வக் கொடுத்தபடி தீக்குச்சியைக் கிழித்தார் அய்யாவு. மொரமொரப்பான தாடியின் வெண்ரோமங்களுக்கிடையே பொன் வெளிச்சம் பூத்து வந்தது. குச்சியை அணைத்து வீசிவிட்டு கண்மாய்ச் சரிவின் இருளுக்குள் பார்வையை விட்டார். நீர் நிறைந்து கிடக்கும் வாகைக்குளம் கண்மாயின் மீது நிலவு வெளிச்சம் துணியைப் போல மிதந்துகொண்டிருந்தது’ (துலாத்தான்) என்று தொடங்கும்போதே கதை திருத்தமாக உருவாகிவிடுகிறது.

‘வெளியே நாங்கள் வந்திருந்த செர்ரி நிறத்துக் காரை டிரைவர் மேலும் மேலும் பழமாக மாற்றிவிடுபவனைப் போலத் துடைத்து மெருகேற்றிக்கொண்டிருந்தான். அருகிலேயே அந்த வீட்டுக்காரர்கள் உபயோகப்படுத்துகிற பிஸ்தா நிற பியட் கார் மெழுகு பொம்மையைப் போல் நின்றிருக்க, அதன் வயசாளியான டிரைவர் அருகேயிருந்த பூந்தொட்டியின் விளிம்பில் சாய்ந்து நின்று பீடி புகைத்தவாறே எங்களது காரையும் டிரைவரையும் பார்த்தபடியிருந்தான்’ விலாஸம் கதைக்கு அழுத்தம் தரும் வகையில் கதையின் ஆரம்பத்திலேயே அமைந்துள்ளன இந்த வரிகள்.

 

சொற்களின் வழியாக கதை மாந்தர்களின் தோற்றத்தை உருவாக்கிக் காட்டுவதைக் காட்டிலும் அவர்களது குணவிசேஷங்களை வெளிப்படுத்தவே அதிகமும் முனைகின்றன திருச்செந்தாழையின் கதைகள். கதாபாத்திரங்கள் கோட்டுச் சித்திரங்களாக அல்லாமல் கண்முன் உயிரூட்டத்துடன் உலவும் மனிதர்களாவதன் நுட்பம் அதுவே.

‘காய்ப்புப் பிடிக்காத கையும் புளிக்கறை படியாத நகங்களுமாக கல்லாவில் அமர்ந்து பணம் எண்ணிச் சிரிக்க வைப்பது அண்ணன் தம்பி வியாபாரத்தில் ஒரு நீண்ட நாளுக்கான சூதுகளில் ஒன்று’ (ஆபரணம்) என்ற ஒற்றை வரி அண்ணன் தம்பி இருவரின் குணாம்சங்களையும் தீர்க்கமாக வகுத்துவிடுகிறது.

‘வியக்க ஒன்று கிடைத்தவுடன் எல்லாத் துயரங்களையும் மூட்டையாகக் கட்டி கண்காணாமல் எறிந்துவிட்டு அந்தப் புதிய வியப்பின் முன் குத்துக்காலிட்டு அமர்ந்துவிடுவாள்.’ ‘துலாத்தான்’ கதையின் பரமுவின் வெகுளித்தனத்தை இதைவிட நேர்த்தியாக சொல்ல முடியாது.

‘அப்பாவால் இன்னமும் மொடமொடப்பான ஒரு வெள்ளை நிறச் சட்டைக்குள் முழுமையாகத் தன்னை நுழைத்துக் கொள்ளமுடியாமல் திணறச் செய்கின்ற சிரிப்பு’ என ‘விலாஸம்’ கதையின் அப்பாவும், ‘தவறான காலத்தில் தவறான விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்ட நவதானிய மூடைகள் தகப்பனைச் சூழ்ந்திருக்கும் மக்குப் பிள்ளைகளைப் போல பம்மிக் கிடக்க அதன் நடுவே அபத்தமான புன்னகையோடு நின்றிருந்தான்என தீபனும், ‘கல்லாப் பெட்டியின் இரும்பு கைப்பிடியைப் பிடித்தபடி கேட்கின்ற லீலாவின் கண்களுக்குள் இந்தப் பேச்சின் போதையை விரும்புகிற கிறக்கம் தெரியும். பராமரிமிப்பிலில்லாத தெய்வமொன்று புதிய குருதி வாசனையை நுகர்ந்தபடி கண்களில் ஒளிபடர ஒரு எட்டு முன்னால் எடுத்து வைத்து வருகின்ற கிறக்கம்என்று ‘த்வந்தம்’ கதையின் லீலாவும் உணர்ச்சிப் பரிமாணங்களுடன் உருவாகி நிற்கிறார்கள்.

திருச்செந்தாழையின் கதையுலகை மேலும் நம்பகத்தன்மைக் கொண்டவையாக ஆக்குபவை வியாபார உலகில் புழங்கும் சொற்களுடன் அமைந்த உரையாடல்கள். லாபத்துல நட்டம் விழும். அப்படி நட்டம் விழும்ங்கறது இந்த சம்சாரிகளுக்கும் தெரியும். தெரிஞ்சேதான் இந்த நட்டத்தை சுமக்கறோம்ங்கறத அவங்களுக்கு உப்பு ஒறப்பா புரிய வைக்கணும். ஏன்னா நாகலாபுரத்துலருந்து விளாத்திகுளம் வரைக்கும் அடுத்தடுத்து வரப்போற மல்லிக்கும் வத்தலுக்கும் இப்ப இவங்ககிட்ட நம்மபேர்ல உண்டாக்குற கரிசனந்தான் தூண்டில் புழு. ஒருவகையில இது நட்டம் கூட கிடையாது. அந்த கரிசனத்துக்கான முதலீடு.” (த்வந்தம்)

வியாபார களத்தையும் மனிதர்களின் அகத்தையும் இணைத்து அ.மாதவன் உருவாக்கிய ‘சாலைத் தெரு’வுக்கு இணையானது திருச்செந்தாழை உருவாக்கும் ‘மண்டி’ உலகம். சின்னச் சின்ன தகவல்கள், செறிவாக உருவாக்கும் கதாபாத்திரங்கள், வாசனையும் வண்ணமுமான சூழல் என திருச்செந்தாழை உருவாக்கும் வணிக உலகம் தமிழ்ச் சிறுகதைக்கு புதியதொரு களத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கூடவே, அதனுடன் இணைந்த மனிதர்களின் அக அசைவுகளையும் முன்னுதாரணமற்ற புதிய மொழியில் அது கூர்மையுடன் எழுதிக் காட்டுவதால் கூடுதலான கவனத்தையும் வீச்சையும் பெறுகிறது.

0

 (தமிழினி - டிசம்பர் 2021 இதழில் வெளியானது )

காலம் செதுக்கிய பெயர் - க.ரத்னம்

  அகவையும் அனுபவமும் கனிந்த அறிஞர், பேராசிரியர், முனைவர்.க.ரத்னம் அவர்களுக்கு 2026ஆம் ஆண்டு கோயமுத்தூர் புத்தகத் திருவிழாவில் ‘வாழ்நாள் சா...