புதிய
எழுத்தாளர்கள் கதைகளை எழுதத் தொடங்கும்போது சொந்த அனுபவங்கள் அல்லது மிக நெருக்கமாக
அறிந்த சம்பவங்களைக் கொண்டு எழுதுவதுதான் இயல்பு. நன்கு அறிந்த சூழலில் தெரிந்த மனிதர்களை
எழுதுவது வசதியாக இருக்கும். பணியாற்றும் துறையையும் அதன் உள்ளடுக்குகளையும் எழுத முனைவதும்
தொடக்கத்தில் சுலபமாக அமையும். பிற எழுத்தாளர்களிடமிருந்து, கதைகளிலிருந்து வேறுபடுத்திக்
காட்டும். புதிய சிறுகதை எழுத்தாளர்கள் தயக்கமின்றி தங்களது கதைகளை இணைய இதழ்களின்
மூலமாகவோ அல்லது பிற சமூக ஊடகங்களின் வழியாகவோ வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இன்று அதிகம்.
அச்சுப் பத்திரிகையையோ அல்லது இணைய இதழ்களையோ நம்பியிருக்க வேண்டிய சூழல் இல்லை. எழுதிய
கதைகளை தொகுப்பாக வெளியிடுவதற்கான உடனடி வாய்ப்புகளும் உண்டு.
இத்தகைய
சூழலில் முதல் தொகுப்பிலேயே தன்னை ஒரு சிறுகதை எழுத்தாளராக நிறுவுவது என்பது பெரும்
சவால். சிறுகதையின் வடிவம், மொழி, சித்தரிப்பு உள்ளிட்ட புற லட்சணங்களைக் காட்டிலும்
அதன் அக அமைப்பும் நோக்குமே வலுவான நம்பிக்கையை ஏற்படுத்த உதவும். எழுதியெழுதிப் பழகி
கச்சிதமான ஒரு கதையை எழுதிவிட முடியும். ஆனால், கதையின் சாரமே அதைப் பொருட்படுத்தத்தக்க
ஒன்றாக தகுதிப்படுத்தும்.
எட்டுக்
கதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் முதல் கதை ‘ஆரம்ப கட்ட’க் கதைக்கான துலக்கமான கூறுகளைக்
கொண்டது. சொந்த அனுபவத்தை அல்லது மிக நெருக்கமாக அறிந்த சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்டது.
கட்டுப்பாடுகளும் கட்டுப்பெட்டித்தனங்களும் மிகுந்த கிராமச் சூழலிலிருந்து நகர வாழ்க்கைக்குள்
நுழையும் இளம்பெண்ணின் மனநிலையை சித்தரிக்கிறது. பதின்பருவப் பெண்களின் உளநிலையைக்
கொண்டு தமிழில் எழுதப்பட்டிருக்கும் கதைகள் மிகக் குறைவு. கிராமம், நகரம், பெருநகரங்களுக்கிடையேயான
சூழ்நிலை வேறுபாடுகளை கல்வியும் வேலை வாய்ப்பும் திறன்பேசிகளும் ஓரளவு மட்டுப்படுத்தியுள்ள
நிலையில் பெண்களின் பார்வையிலும் அணுகுமுறையிலும் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அத்தகைய மாற்றங்களையும் கணக்கிலெடுத்துக் கொண்டு எழுதவேண்டிய கதைகளுக்கான தொடக்கமாக
இந்தக் கதையைக் கொள்ளலாம்.
இந்த
ஒரு கதையைத் தவிர தொகுப்பிலுள்ள பிற ஏழு கதைகளை எழுத்தாளரின் அனுபவ வட்டத்துக்குள்
அமைந்தவை அல்ல. இவற்றுள் மூன்று கதைகள் நாடகத்தைப் பின்னணியாகக் கொண்டவை என்பது கவனிக்கத்தக்கது.
தமிழக அரசியல் வரலாற்றின் ஆதி ஊற்றாக விளங்கிய நாடகத்தில் பங்காற்றியவர்கள் பற்றிய
வரலாறுகள், சம்பவங்கள், குறிப்புகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளன. ராஜபார்ட்,
ஸ்தீரிபார்ட் போன்ற முதன்மை வேடங்களில் கோலோச்சிய கலைஞர்கள், தகுதியும் திறனும் வாய்ந்த
வசனகர்த்தாக்கள், செல்வாக்குமிக்க இயக்குநர்கள், பிரமாண்டமான அரங்க அமைப்பாளர்கள் என
பலரையும் பற்றிய வாய்வழித் தகவல்கள், சம்பவங்கள், சுவையான கதைகள் தொடர்ந்து சொல்லப்பட்டுள்ளன.
ஆனால், அவற்றை அடிப்படையாகக் கொண்ட குறிப்பிடும்படியான புனைவுகள் தமிழில் மிகச் சொற்பம்.
புகழ்பெற்ற நாடகப் பிரதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனவா என்பது தெரியவில்லை.
வரலாற்றின்
மீதான நமது அலட்சியம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. வரலாறு தொடர்பான எதையும் பாதுகாப்பதும்
இல்லை, ஆவணப்படுத்துவது இல்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளில் வாழ்ந்த முக்கியமான ஆளுமைகளைப்
பற்றிய குறிப்புகள் கூட நம்மிடம் கிடையாது. உடனடியாக நினைவுக்கு வருபவர் சரஸ்வதி ராம்நாத்.
மொழிபெயர்ப்பில் அவரது பங்கு மிக முக்கியமானது. ஆனால், இன்று அவரைக் குறித்துத் தேடினால்,
பாவண்ணன் எழுதிய இரண்டு கட்டுரைகளும், ‘சுபமங்களா’ இதழில் இடம் பெற்றுள்ள நேர்காணலுமே
நமக்குக் கிடைக்கின்றன. அவர் மொழியாக்கம் செய்த புத்தகங்களின் முழுமையான பட்டியல்கூட
நம்மிடம் இல்லை. அவ்வாறு ஆவணப்படுத்தப்படும், தொகுக்கப்படும் பிரதிகளைக் கூட சரியான
முறையில் பாதுகாக்கப்படுவதில்லை. காரணம், அரசுப் பணிகளுக்கேயுரிய அலட்சியமும் மெத்தனமும்.
தாம் எங்கே, என்ன செய்கிறோம் என்பதைக் குறித்த சிறிதளவு ஆர்வமும் அக்கறையும் இல்லாத
பணியாளர்களுக்கு அதுவொரு பணியிடம் மட்டுமே. எனவே, பிரதிகள் காணாமல் போவதும் சேதமடைவதும்
பணியின் ஒரு பகுதியாகவே அணுகப்படும். இத்தனை சிக்கல்களுக்கு நடுவில்தான் சில பொக்கிஷங்களைத்
தேடிக் கண்டுபிடிக்க முடியும். அப்படிக் காணாமல் போனாலும்கூட மன உறுதியும் ஆர்வமும்
உள்ளவர்கள் சோர்ந்து போகாமல் அவற்றை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். இந்த இரண்டு எதிரெதிர்
நிலைகளை உணர்த்துகிறது ‘தூசி’.
கர்நாடகாவில்
புகழ்பெற்ற குப்பி வீரண்ணாவின் நாடகக் குழுவை மையமாக வைத்து விட்டல்ராவ் எழுதிய ‘வண்ணமுகங்கள்’
போன்ற ஒரு நாவல் தமிழில் எழுதப்படவில்லை. அக்கால நாடகச் சூழலை வைத்து ஒருசில திரைப்படங்கள்
வெளியாகியுள்ளன. பம்மல் சம்பந்த முதலியாரின் ‘நாடக மேடை நினைவுகள்’ இந்த வகையில் ஒரு
முக்கியமான நூல். இராசேந்திர சோழனின் ‘அரங்க ஆட்டம்’ இன்னொரு குறிப்பிடத்தக்க புத்தகம்.
இத்தகையப் பின்னணியில், தமிழகத்தில் நாடகங்கள் எழுச்சியுடன் திகழ்ந்த காலத்தில் ஆதிக்கம்
செலுத்திய நடிகையை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் ‘டிராமாகுயின்’
முக்கியமான ஒரு குறிப்பிடத்தக்க நகர்வாக அமைந்துள்ளது. அதிலும் ஒரு பெண் கதாபாத்திரத்தின்
ஆளுமையை ஆணின் பார்வையில் எழுதியிருப்பது இந்தக் கதையை இன்னும் ஒரு படி மேலே உயர்த்துகிறது.
நாடகத்தைக்
களமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இன்னொரு கதை ‘வஞ்சி’. காதல், துரோகம் என்ற வழக்கமான
களம் என்றாலும் ராமன், லட்சுமணன், சூர்ப்பனகை ஆகிய கதாபாத்திரங்களைக் கொண்டு அந்தக்
களத்தைக் கையாண்டிருப்பதுதான் இந்தக் கதையின் சிறப்பு. ராமன், சூர்ப்பனகை கதாபாத்திரங்களுக்குரிய
நாடக குணாம்சங்களையும் பாத்திரங்களை ஏற்கும் மனிதர்களின் இயல்புகளையும் எதிரெதிராக
நிறுத்தும்போதே புனைவு தன்னியல்பில் உத்தேசித்த இலக்கை எட்டிவிடுகிறது.
வரலாற்று
சம்பவங்களை ஊடறுத்து அதில் புதிய ஒரு கோணத்தை உருவாக்குவது புனைவில் ஒரு உத்தி. எல்லா
கதையாசிரியர்களுமே இதை செய்துள்ளனர். பைபிள் சம்பவங்கள், கதாபாத்திரங்களைக் கொண்டு
இத்தகைய புனைவுகள் உருவாகியுள்ளன. அந்த வரிசையில் ‘மெக்தலீன்’ சேர்ந்துள்ளது.
அறிவியல்
புனைவு என்றாலே அது கோட்பாடுகளையும் எதிர்கால சாத்தியங்களையும் அறிவியலுக்கேயுரிய மொழியுடன்
எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற பொதுக் கண்ணோட்டத்தை மாற்றி எளிய, சின்னஞ்சிறு கற்பனைகளை
மட்டுமே கொண்டு உயிரின் அடிப்படை நோக்கை விவாதிக்கும் வகையில் அறிவியல் கதையை எழுதலாம்
என்பதற்கான உதாரணம் ‘கர்ப்பக்கிரகம்’. தொன்மத்தையும் அறிவியலையும் கச்சிதமாக இணைத்து
எழுதப்பட்டுள்ளது. காலங்களின் இருவேறு எல்லைகளை இணைத்து அவற்றினூடாக மனித இனம் மேற்கொண்ட
பயணத்தையும் அவ்விரண்டுக்கும் அறாது நீளும் தொடர்பையும் ஒரே புள்ளியில் இணைக்கிறது.
பாவம்
எது என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்பும் கதை ‘அழைப்பு’. நிராகரிப்பு என்பது காதலில்
மட்டும் வலி தரக்கூடியதோ பாவமாகக் கருதப்படுவதோ கிடையாது. பசியுடன் கையேந்தி நிற்பவனை
கண்டுகொள்ளாமல் கதவை சாத்தும்போது ஒரு சிறுவனின் கண்களில் எழும் திகைப்பும் கூட நிராகரிப்பின்
வாதையை வலியையே தரும். காலத்துக்கும் சுமக்க முடியாத சிலுவையாக நெஞ்சில் தங்கிவிடும்.
கதைக்குத் தேவையான அழுத்தமான இறுக்கமான மொழியும் அடக்கமான சித்தரிப்பும் வாய்த்திருக்கிறது.
எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின்
‘மீன் சாமியார்’, அசோகமித்திரனின் ‘விமோசனம்’ ஆகிய கதைகளைப் போன்ற பாணியில் எழுதப்பட்ட
கதை ‘ராஜமுனி’. அன்றாட வாழ்வின் நெருக்கடிகளுக்கும் அழுத்தங்களுக்கும் மாற்றாக அதிலிருந்து
விடுபட்டுச் செல்லும் மனநிலை அனைவருக்கும் ஏதோ ஒரு கணத்தில் வாய்ப்பது. ஆனால் அப்படி
விடுபட்டுச் செல்வதென்பது சுலபமானதோ நடைமுறையில் சாத்தியமானதோ இல்லை. ஒருவகையில் வாழ்க்கையின்
போக்கில் இலக்கை அடைய முடியாத சோர்வில் வெளியேறுபவர்கள் வேறொரு வகையில் தங்களை நிறுவிக்கொள்ள
வாய்ப்புள்ள பாதை இது.
கட்டுரைகளிலிருந்து
புனைகதைக்கு நகரும்போது உள்ள பெரும் சவால் கட்டுரைக்கான பொது மொழியிலிருந்து புனைவுக்கான
தனிமொழியைக் கண்டடைவதுதான். கதைக் களத்துக்கேற்ற மொழி அமைந்திருக்கும்போதுதான் வாசிப்பு
அமைதியை எட்ட முடியும். களத்துக்கு அந்நியமான சொற்கள் உள்ளே வரும்போது பொருள் சார்ந்த
பிழைகள் இல்லாதபோதும் கதையின் மொழியில் சிறு தடங்கல் ஏற்படும். முக்கியமாக தர்க்கம்
சார்ந்த சொற்களை கதையில் இடும்போது களத்துக்கு அவற்றின் பொருத்தம் குறித்த கவனம் மிகவும்
முக்கியம். ‘நீலத்தாவணி’ கதையில் இடம்பெற்றுள்ள ‘பொருட்கள்’ சார்ந்த சில வரிகளும்,
‘கையறுநிலை’ என்ற சொல்லையும் உதாரணமாகச் சுட்டலாம்.
வலுவான
ஒரு கதையின் போக்கில் அதற்கென ஒரு சித்தரிப்பு சட்டகம் உருவாகும். மொழியும் வடிவும்
அதற்கேற்ப பொருந்தி அமையும். அங்குமிங்கும் அலைபாயாது சீரான அலைவரிசையில் நகரும். உரையாடல்களும்
கூடுதல் குறைவின்றி கச்சிதம் கொள்ளும். ‘அழைப்பு’, ‘வஞ்சி’ இரண்டு கதைகளையும் இந்த
வகையில் குறிப்பிடலாம். ஒன்று, வெகு நேர்த்தியான, அழுத்தமான சூழலில் வெளிப்படையாக அல்லாமல்
சுட்டிக் காட்டுவதாக அமைந்தது. மற்றது, நாடகத்துக்கேயுரிய வசனங்களைப் பயன்படுத்தி ஒலியும்
ஓசைகளுமான பின்னணியில் மையத்தை நோக்கி கச்சிதமாய் நகர்கிறது.
புனைகதைகளை
எழுதவேண்டும் என்ற ஆர்வத்துடன் இதுவரையிலும் சொல்லப்படாத களங்களில் கவனம் செலுத்தும்
முனைப்பும் ரம்யாவிடம் இருப்பது ஆரோக்கியமானது. அந்த ஆர்வத்தையும் முனைப்பையும் உறுதிப்படுவதாக
அமைந்துள்ள ‘நீலத்தாவணி’யின் மூலம் ரம்யா தனக்கேயான ஒரு உயரத்தை எட்டியிருக்கிறார்.
அவர் எட்டியிருக்கும் இந்த உயரமே அவரது சாதனை, சவாலும்கூட.
0
நீலத்தாவணி
– சிறுகதைத் தொகுப்பு – யாவரும் பதிப்பகம்
டிசம்பர்
2023

This comment has been removed by the author.
ReplyDeleteThank u sir. Will take it forward 🙏
ReplyDelete