0
‘இடபம்’ நாவலின் மூலம்
கவனம் ஈர்த்தவர் பா.கண்மணி. பங்குச் சந்தையைக் களமாகவும் அதிகமும் ஆண்கள் புழங்கும்
அந்த வசீகர உலகில் செயல்படும் பெண்ணைக் கதாநாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது என்பதால்
‘இடபம்’ புதிய முக்கியமான நாவல்களின் வரிசையில் இடம் பிடித்தது. அதுவே அவரது இந்த இரண்டாவது
நாவலின் மீது கூடுதலான எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
‘இடபம்’ நாவலைப் போலவே
‘வீனஸ்’ நாவலின் களமும் புதியது, வசீகரமானது. களம் இதுதான் என்று தெரிந்தவுடனே அதற்குள்
இருக்கும் சாத்தியங்களும் சவால்களும் நமக்குள் இன்னும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.
நவீன வாழ்வின் அடையாளங்களில்
ஒன்றாகிப் போன அம்சம் ‘ஜிம்’களும் ‘பியூட்டி பார்லர்’களும். பெருநகரங்களில் என்று மட்டுமல்லாமல்
இன்று சின்னஞ்சிறு ஊர்களிலும்கூட அழகு நிலையங்களும், உடற்பயிற்சிக் கூடங்களும் பெரும்
எண்ணிக்கையில் இடம் பிடித்துள்ளன. உடலினைப் பேணுதல் என்பதைப் பற்றிய அக்கறை அனைத்து
வயதினரிடத்தும் ‘டிரெண்டா’க உருவாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை தொடர்ந்து
உடற்பயிற்சி செய்வதும், விளையாடுவதும், ஓடுவதும் துறை சார்ந்த ஒன்றாக மட்டுமே இருந்தது.
மைதானங்களே அதற்கான முக்கியமான களமும் இடமும். உடற்பயிற்சி செய்வதற்கான கருவிகளும்,
தளவாடங்களும் மைதானத்திலேயே நிறுவப்பட்டிருந்தன. இன்று நிலைமை அவ்வாறில்லை. தெருவுக்குத்
தெரு உடற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. காலையும் மாலையும் வேர்க்க விறுவிறுக்க பயிற்சிகள்
தொடர்கின்றன.
பெண்களுக்கான அழகு நிலையங்கள்
முன்பே இருந்தன என்றாலும் அதிகமும் அவை மணப்பெண் அலங்காரம், முக அலங்காரம் போன்ற ஒருசில
அம்சங்களையே கொண்டிருந்தன. இன்று அழகு நிலையங்களின் பட்டியலில் உள்ள சேவைகளைப் படிக்கும்போது
வியப்பாக உள்ளது. உச்சி முதல் உள்ளங்கால் வரைக்குமான பராமரிப்பு சேவைகளை இந்த அழகு
நிலையங்கள் வழங்குகின்றன. தோற்றத்தைப் பேணுதலிலும் ஆகச்சிறந்த முறையில் தன்னை வெளிப்படுத்துவதிலும்
பெரும் அக்கறை காட்டப்படுகிறது. இதில் வயது வித்தியாசங்கள் கிடையாது. இன்னும் ஊன்றி
கவனித்தால் இளம் பெண்களைக் காட்டிலும் நடுத்தர வயதுப் பெண்கள் இதற்கு கூடுதல் கவனத்தையும்
முக்கியத்துவத்தையும் அளிக்கிறார்கள் என்பதை உணரலாம். மணமாகி குழந்தைகளைப் பெற்றுக்
கொண்ட பின் உடலைப் பராமரிப்பதும் கவனிப்பதும் தேவையற்றது என்ற மனப்பான்மையிலிருந்து
வெளியேறியிருப்பதையும் கவனிக்கலாம்.
இந்த விழிப்புணர்வுக்கு
என்ன காரணம்? இன்றைய உணவுப் பழக்கங்களும், அன்றாடத்தின் கால வரையறைகளுமே. நமது வழக்கமான
உணவுப் பழக்கத்துக்கு மாறாக புதிய வகை உணவுகள் இன்றைய சந்தையில் அதிக அளவில் புழங்குகின்றன.
கணினித் தொலைத் தொடர்புத் துறையில் அந்நிய நாடுகளின் வேலை நேரங்களுக்கு ஏற்ப இங்கே
கண்விழித்து பணியாற்ற வேண்டிய சூழல். பள்ளிக் காலங்கள் முதலே தூக்கச் சுழற்சியில் மாற்றங்கள்.
சரியான, ஆழ்ந்த தூக்கம் என்பதற்கான வரையறையும் மாறிவிட்டது. உணவும், தூக்கமும் தரும்
இயல்பான ஆரோக்கியம் இன்றைய சூழலில் தவிர்க்கப்படுகிறது, மறுக்கப்படுகிறது. எனவே, இழக்க
நேரும் ஆரோக்கியத்தை மீட்க வழியாகவே உடற்பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ளன.
நடுத்தர வயதுப் பெண்களின்
மனநிலையிலும் தம் உடலைப் பேண வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இன்றைய சமூகச் சூழலில்
இதுவொரு பெரும் மாற்றம். உடல் பராமரிப்புக்கு நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யத்
தயங்குவதில்லை. தன்னைச் சுற்றிலும் உள்ள அண்டை வீட்டுப் பெண்கள், உடன் பணியாற்றும்
பெண்கள், உறவினர்கள் என்று பிற பெண்களுக்கு நடுவில் தன்னையும் ஆரோக்கியமாக, அழகாக வெளிப்படுத்திக்
கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
இத்தகைய விழிப்புணர்வும்
மனநிலை மாற்றமும் தொழில் முதலீடாக மாறி அழகு, ஆரோக்கியம், உடல் பராமரிப்பு ஆகியவை பெரும்
சந்தையாக உருவாகியிருப்பதைத்தான் இன்று பார்க்கிறோம். உடற்பயிற்சி கூடங்களும், அழகு
நிலையங்களும் அமைக்கப்பட்டிருக்கும் சூழலையும் அங்குள்ள எண்ணற்ற கருவிகளையும் தளவாடங்களையும்
அவற்றுள் பயன்படுத்தப்படும் அழகு சாதனங்களையும் நுட்பமாக கவனித்தால் இவற்றின் சந்தை
மதிப்பை கணக்கிட முடியும். பயிற்சிக்கு தகுந்த உடைகள், காலணிகள், பருகும் பானங்கள்,
பரிந்துரைக்கும் உணவு வகைகள் என்று அனைத்துமே வியாபாரத்தின் கண்ணிகள்தான். நகம், புருவம்,
கேசம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பராமரிப்பு முறைகள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான
சாதனங்கள், பூச்சுகள். உடலை இளைக்கச் செய்யலாம், எடை கூட்டவும் முடியும்.
இந்தச் சந்தை வேலை வாய்ப்புகளை
ஏற்படுத்துகிறது. அழகுக் கலை என்பது இன்று ஒரு தகுதி, படிப்பு. தகுந்த உணவு முறையைப்
பரிந்துரைக்கவென நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். உடற் பயிற்சியை சொல்லித் தரவும், முறைப்படுத்தவுமான
பயிற்சியாளர்களும் உள்ளனர். உடற்பயிற்சிக் கூடங்களை, அழகு நிலையங்களை அமைக்க வங்கிகள்
கடன் தருகின்றன. கருவிகளும் சாதனங்களும் அழகூட்டும் பொருட்களும் தவணை முறை கடனுக்கு
வழங்கப்படுகின்றன.
உடல் பராமரிப்பு, ஆரோக்கியம்
சார்ந்த இந்தப் பெரும் சந்தையே ‘வீனஸ்’ நாவலின் களம். இந்தச் சந்தையின் பல்வேறு கண்ணிகளே
இதன் கதாபாத்திரங்கள். இவர்களின் பார்வையில் இந்தச் சந்தையின் அடிப்படை உளவியலை, அதன்
நுட்பங்களை அலசிப் பார்க்கிறது ‘வீனஸ்’. வியாபாரமும் சந்தையும் தரும் மன அழுத்தங்களையும்
சவால்களை சமாளித்து அழகு நிலையத்தை வெற்றிகரமாக நடத்தும் ரஞ்சனிக்கு தன் மகள் தன்னிடமிருந்து
விலகி நிற்பதை ஒரு தாயாக எப்படி கையாள்வது என்பது தீராத புதிராக, விடையற்ற பெரும் கேள்வியாக
நிற்கிறது. ‘மாடல்’ அழகியாக உலகை வெல்ல வேண்டும் என்ற பேரவாவுடன் தன் எல்லா இச்சைகளையும்
கட்டுப்படுத்தி உடலைப் பேணும் நிஷாவுக்கு தன் வனப்பில் மயங்கியுள்ள தன் பணக்கார காதலனையும்
அவன் கட்டுப்பாடுகளையும் சமாளிப்பது பெரும் சவாலாக உருவெடுக்கிறது. செல்வந்தரான கணவரின்
வியாபாரத் தந்திரங்களுக்கு மட்டும் அழகை வெளிப்படுத்த அனுமதிக்கப்படும் சந்தியாவின்
உளவியல் மோதல்கள் வேறு வகையானவை. அவளது திறன்களோ சாமர்த்தியங்களோ கணவனுக்கு சிறிதும்
பொருட்படுத்தத் தக்கவை அல்ல. உடல் இச்சையைத் தீர்க்கும் ஒரு கருவி என்பதைத் தவிர வேறு
மதிப்பில்லை. உடலைப் பரிசோதனைக் கூடமாக்கி ரசாயங்களைக் கொட்டிப் பாழாக்கும் வணிக வலைகளிலிருந்து
காப்பாற்றும் பெரும் பொறுப்பை ஏற்கும் திலோத்தமாவின் நோக்கங்கள் வேறு. பாதையும் வேறு.
உடற்பயிற்சி நிலையத்தில் தன் உடல் உறுதியால், பராமரிப்பால் பெண்களின் கவனத்தைக் கவரும்
அவ்வளவாக படிப்பறிவற்ற, ஆங்கிலம் பேச வராத பிருத்வி வந்ததை வரவில் வைப்பவன். உள்ளமட்டும்
உடலைப் பேணி அதன் மூலம் வருவதைக் கொண்டு எதிர்காலத்தை அமைக்கத் திட்டமிடுபவன். ‘வீனஸ்’
முதலாளி ரஞ்சனியின் மீது ஆசை கொண்டிருக்கும் உளவியல் மருத்துவர் இன்னொரு கதாபாத்திரம்.
தன் பொருளாதாரத் தேவைக்கு தன்னை அவள் பயன்படுத்துகிறாள் என்று தெரிந்தும், தன் ஆசைக்கு
அவள் இணங்குவாளா என்று நப்பாசையுடன் காத்திருக்கும் அவரை வெகு இயல்பாகவும் நுட்பமாகவும்
கையாள்கிறாள் ரஞ்சனி.
யோசித்துப் பார்க்கும்போது
இந்தக் களமும் இதன் சாத்தியங்களும் உருவாக்கும் உலகம் மிகப் பெரியது, ஆழமானது, நுட்பமானது.
இக் கதாபாத்திரங்களின் உளவியல் மோதல்களும் தடுமாற்றங்களும் சரிவுகளும் இணைந்தும் விலகியும்
சிதறியும் ஏற்படுத்தும் தாக்கங்கள் மிக வலுவானவை. ஆனால், இத்தகைய ஒரு செறிவான களத்தில்
இந்த நாவல் சென்றிருக்க வேண்டிய ஆழத்தையும் தொலைவையும் எட்டாமல் நின்றிருப்பது சோர்வைத்
தருகிறது. சவாலான களம், வலுவான கதாபாத்திரங்கள் அமைந்திருந்தும் அவற்றின் முழு வீச்சையும்
எட்டிப் பிடிக்க முயலாமல் போனது துரதிர்ஷ்டமே. தமிழ் இலக்கியத்தில் விவாதிக்கப்படாத,
சமகாலத்தில் இன்றைய சமூகம் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றை எடுத்துக்கொண்ட
வகையில் இந்த நாவல் மிக முக்கியமானது.
( ‘வீனஸ்’, பா.கண்மணி,
எதிர் வெளியீடு, டிசம்பர் 2025 )

No comments:
Post a Comment