Saturday 24 April 2021

நிழற்காடு – விஜயராவணன்


 

சிறுகதைகளை எழுத முயலும் ஒருவர் தனது பால்யகால அனுபவங்களை எழுத முனைவதே இயல்பு. எழுதத் துவங்கும்போது எழும் பதற்றங்களையும் சந்தேகங்களையும் நம்பிக்கைக் குலைவையும் சமன்படுத்த அது உதவும். சிறார் பருவம் அவரவர்க்கான தனித்த ரகசியங்களையும் கொண்டாட்டங்களையும் பல சமயங்களில் துயரங்களையும்கூட கொண்டிருக்கும். அவ்வாறான மன உலகிலிருந்து வெளிப்படும் எழுத்தில் உணரநேர்கிற களங்கமின்மை அந்தக் கதைகளுக்கு விசேஷமான ஒளியைத் தருகிறது. வியப்பும் சாகசமும் கற்பனையுமாய் கலந்த அந்த உலகம் எளிமையானதும் அழகானதும்கூட. அந்தப் பருவத்தின் நிறங்களையும் வாசனைகளையும் துல்லியமாகவும் சீராகவும் சொல்வது எளிது.

இங்கிருந்து அடுத்த நிலைக்கு நகரும்போது குடும்பம், உறவு சார்ந்த நுட்பமான இழைகளையும் மர்மங்களையும் துலக்கிப் பார்க்க முனையலாம். எந்த அளவுக்கு எதைச் சொல்லலாம் என்ற தெளிவு கூடியிருக்கும். கணிசமான வாசிப்பும் எழுத்துப் பழக்கமும் சேருமென்றால் புனைவு சார்ந்த தெளிவையும் தேர்வையும் இந்த நிலையில் அடைந்துவிட வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே தன் முன்னால் உள்ள புனைவின் வடிவங்களையும் மொழியமைப்பையும் கடந்து புதிதாக எதையேனும் முயலவேண்டும் என்ற சாகச உணர்வு இதன் அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும். புதிய கதைப்புலத்தில் வேறு விதமான உணர்வு நிலைகளைச் சொல்ல முனையக்கூடும். இந்த முயற்சியில் நிச்சயமாக சாதிக்க முடியும் என்பது உறுதியில்லை என்றாலும் அந்த அடியை நோக்கி எட்டுவைக்கும் திறன் கைகூடியிருக்கும் என்பதுதான் இதன் அனுகூலம்.

விஜயராவணனின் ‘நிழற்காடு’ தொகுப்பிலுள்ள கதைகள், அவர் இந்த படிநிலைகளைக் கடந்து வந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்துவனவாய் உள்ளன. அதே சமயத்தில் ஒரே கதையில் இந்த மூன்று படிநிலைகளும் ஒன்று கலந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

‘மொட்டை மாடி’, ‘காகிதக் கப்பல்’, ‘அநாமதேய சயனம்’ ஆகிய மூன்றும் சிறார் பருவத்தின் அனுபவங்களைக் கொண்டவை. ‘மொட்டை மாடி’ தனக்கு சம்பந்தமில்லாத காரணங்களுக்காக தலைமுடியை இழக்கும் சிறுவனின் கதை. வேறு அடுக்குகள் எவையும் இல்லாத நேரடியான, சற்றே புகார்த்தன்மையும் நகைப்பும் கொண்டது. ‘அநாமதேய சயனம்’ தூங்கிக் கொண்டே இருக்க விரும்பும் சிறுவனில் தொடங்கி, தூக்கத்தின் மீதான அத்தகைய ஈடுபாடு அவன் வளருந்தோறும் பெருகி, கட்டாயமாக மறுக்கப்படும் நிலையில் சிதைவுறும் நிலையை எட்டுகிறது. சிறுவர் பருவத்தில் சாத்தியமாகும் எளிய விருப்பம், வாழ்வின் அடுத்தடுத்த நிலைகளில் பொறுப்புகளும் சுமைகளும் கூடுந்தோறும் அரிதான ஒன்றாக கைவிட்டுப்போகிறது. மனநிலையிலும் வாழ்நிலையிலும் உருவாகும் மாற்றத்தை ஒன்றிணைக்கும்போது இந்தக் கதை கூடுதல் ஆழத்தை அடைகிறது. ‘காகிதக் கப்பல்’ என்ற தலைப்பே அனைவரையும் சிறுவர் பருவத்துக்கு சட்டென்று இழுத்துச் சென்றுவிடுகிறது. இந்த உடனடி கவன ஈர்ப்பின் விசையில் கதைக்குள் நுழையும்போது நமக்குக் காத்திருப்பது வேறொரு உலகம். கல்கத்தாவில் சின்னஞ்சிறிய உணவகத்தில் வேலை பார்க்கும் ஒரு சிறுவனையும் அவனது கப்பல் கனவையும் அந்த உலகம் காட்டுகிறது. கப்பலைப் பார்க்கவேண்டும் என்ற அவனது கனவை துல்லியமாகச் சொல்லிச் செல்லும் அதே நேரத்தில் சிதைவுற்ற அவனது வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளையும் திறந்து காட்டுகிறது. பால்ய காலத்து காட்சிகளிலிருந்து, எளிய சந்தோஷங்களிலிருந்து நகரும் கதை அடுத்தடுத்து துயரங்களையும் சோதனைகளையும் காட்டும்போதுகூட சிறுவனின் எளிய களங்கமற்ற மனம் அவற்றின் அழுத்தத்தை ஒற்றியெடுத்து கப்பலைக் காணும் அவனது கனவை மட்டுமே துலக்கிக் காட்டும்விதமாக  சொல்லப்பட்டிருப்பதே இந்தக் கதையின் சிறப்பு.

‘சிட்டுக்குருவி’, ‘முகங்கள்’ ஆகிய இரண்டு கதைகளும் குடும்பம், உறவுகள் சார்ந்தவை. இயற்கைக்கும் பிற உயிர்களுக்கும் மனிதனுக்குமிடையேயான பிணைப்பை சொல்லத்தகுந்த கதைகள் தொடர்ந்து இருந்துகொண்டேதான் உள்ளன. எதை நாம் இழந்துகொண்டிருக்கிறோமோ அதைக் குறித்து அதிகமும் பேசத்தான் வேண்டும் என்பதுபோல இத்தகைய புனைவுகள் எழுதப்படுகின்றன. சிட்டுக்குருவியின் கூட்டுக்காகவும், குஞ்சுகளுக்காகவும் பரிதவிக்கும் அதே பெற்ற மனம்தான் ‘முகங்கள்’ கதையிலும் இழந்த மகனுக்காகத் தவித்துக் கிடக்கிறது.

சொல்முறையில் புதிதாக எதையேனும் முயலவேண்டும் என்பதன் வெளிப்பாடுகளாக அமைந்துள்ளவை ‘சவப்பெட்டி’, ‘நிழற்காடு’ ஆகிய கதைகள். ‘நிழற்காடு’ தொன்மங்கள், கிராமங்களுக்கேயுரிய நம்பிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியுடன் அசாதாரண நிகழ்வுகளைக் கொண்டுள்ளதால் ஒரு புனைகதையாக இது அனுபவமாகிறது. அதே சமயத்தில், நிகழ்கால மோதல்களை லேசான அரசியல் பார்வையுடன் சொல்ல முனைந்துள்ள ‘சவப்பெட்டி’ தன்னளவில் புனைவாக உருமாறுவதில் தடுமாற்றங்கள் உள்ளன.

இந்தத் தொகுப்பில் விஜயராவணனை தனித்துவத்துடன் அடையாளப்படுத்தும் கதைகளாக இரண்டு கதைகளைச் சொல்லலாம். ஒன்று, ‘உதைக்கப்படாத கால்பந்து’. உள்நாட்டுக் கலகமும் உத்தரவாதமற்ற அன்றாடமுமான ஒரு ஆப்பிரிக்க நாட்டில், வேலை நிமித்தமாகச் செல்லும் ஒருவனின் அனுபவம் இந்தக் கதை. அந்த நாட்டின் இளைஞர்களும் சிறுவர்களும் அதிகமும் நேசிப்பது கால்பந்து. அழுக்கான கால்பந்தோடு அன்றாடமும் சந்திக்க நேரும் சிறுவனுக்கு புதிய கால்பந்துகளை வாங்கித் தரும் கதைசொல்லி, அவன் நினைத்தாற்போல கால்பந்தாடும் சிறுவனல்ல என்பதை உணர்வதோடு கதை முடிகிறது. இந்தக் கதையிலும் அரசியல், சமகால நிகழ்வுகள், தனிமனித அவலம் என பல்வேறு இழைகளும் உள்ளடங்கியுள்ளன. ஆனால், இவற்றினூடே கால்பந்தை நேசிக்கும் சிறுவனைக் குறித்த சித்திரமும் அவனை அதிலிருந்து விலக்கும் சூழலும் தெளிவாக மேலெழுந்துள்ளன.

இரண்டாவது கதை, ‘பேசும் தேநீர் கோப்பைகள்’. ஒரு நீள்கவிதையென அழகான படிமங்களும் எளிமையான உரையாடல்களும் அமைந்த சிறுகதை. அடிக்கடி நிறம் மாறும் ஜப்பானின் பியூஜி எரிமலையை வண்ணங்கள் கொண்டு வரைய முயலும் பார்வைத் திறனிழந்த ஓவியர் ஹாருட்டோவும், அவரது தேநீர் கோப்பைகளும், விருந்தினரின் கையிலிருக்கும் பூனையுமாக அபாரமான அனுபவத்தைத் தரும் கதை. கலைஞனின் மனம் கொள்ளும் பித்து, கண்டடையும் நொடியில் அடையும் பரவசம், மேலும் மேலும் என விழையும் துடிப்பு, அனைத்துக்கும் அப்பால் கவியும் மௌனம் என கதை நெடுகிலும் அழகிய தருணங்கள். ஒரு மொழிபெயர்ப்புக்குக் கதை என யோசிக்கச் செய்யுமளவு மிகுந்த கவனத்துடனும் துல்லியத்துடனும் எழுதப்பட்டுள்ளது.

திருகலான மொழியில் சிக்கலான வாக்கிய அமைப்பைக்கொண்டுதான் புதுவகைக் கதைகளை எழுத முடியும் என்ற மனப்போக்கு தேவையற்றது என்பதை வழிமொழிகிறது விஜயராவணனின் இத் தொகுப்பு.

0

சால்ட் வெளியீடு – டிசம்பர் 2020

இசூமியின் நறுமணம் – ரா.செந்தில்குமார்


 

ஜெயமோகனின் தளத்தில் வெளியான ‘மடத்து வீடு’ சிறுகதையே ரா.செந்தில்குமாரை அறிமுகப்படுத்தியது. அந்தக் கதையில் சித்தரிக்கப்பட்டிருந்த சூழலும், மடத்து வீட்டுப் பெண்களின் குணாம்சங்களை விவரித்திருந்த விதமும், உடல் முடங்கிப் போன நிலையிலும் சுடரணையாத காமத்தின் உந்துதலை தவிர்க்க நினையாத அப்பாவின் கதாபாத்திரமும் நல்லதொரு சிறுகதையென அந்தக் கதையை நினைவில் நிற்கச் செய்திருந்தன.

சில வருடங்களுக்குப் பிறகு ‘இசூமியின் நறுமணம்’ வெளியானது. கேளிக்கையான மனநிலையில் காமத்தை ஒரு கொண்டாட்டமாய் வெளிப்படுத்தும் மிதப்பான சூழலில் நடுத்தர வயதைக் கடந்த ஒருவர் ஒரு பெண்ணிடம் உணர்ந்த வாசனையை காமத்தைத் தாண்டிய ஒரு அபாரமான அனுபவமாய் முன்வைக்கிற மிக நுட்பமான, ஆழமான சிறுகதை. பெண்களை போகத்துக்குரிய எதிர் பாலினமாக அணுகும் உயிர் இயல்பை ஒவ்வொரு ஆணும் கடந்து வர நேரிடும் தருணங்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் அது வெவ்வேறு சந்தர்ப்பங்களாய் அனுபவங்களாய் அமையும். பொதுமைப்படுத்துவது கடினம். அப்படியொரு தெளிவு மனத்தில் ஏற்படும்போது, சமயங்களில் அது தற்காலிகமானதாகக்கூட இருக்கலாம், உடலிச்சை அடங்கி தந்தைமை மேலெழுந்து பெண்கள் அனைவரையும் மகள்களாக உணரும் பார்வையைத் தரும். அதுவே இன்னும் மேலான நிலையில் பெற்றவளுக்கு நிகரானவர்களாய் அவர்களை நிறுத்திக் காட்டும். இசூமியின் நறுமணம் கதையில் கோபயாஷி சான் எட்டும் உச்சம் இத்தகையதுதான். உணர்வுநிலையில் ஏற்படும் இந்த மாற்றத்தை எழுத்தில் கொண்டுவருவது சவாலான ஒன்று. ஆனால், காமத்தின் பல்வேறு மனப்பாங்குகளை களிப்பும் கொண்டாட்டமுமான உரையாடல்களின் வழியாக நகர்த்திச் சென்று அதன் எல்லையில் கோபயாஷியின் கண்டுணர்தலாக நிறுத்த முடிந்திருக்கிறது. போனி டெயில் பரிசாரகி இந்தக் கதையின் துணை கதாபாத்திரமாக இருந்தபோதும் இப்படியொரு உச்சத்தை சாத்தியப்படுத்தும் சாட்சியாக சித்தரித்திருப்பது கதையின் அழுத்தத்தை மேலும் கூட்டுகிறது.

‘இசூமியின் நறுமணம்’ போன்றே இன்னும் சில கதைகளில் ஜப்பானின் பின்னணி ஊடுபாவாக அமைந்திருக்கிறது. மனித உறவுகளுக்கேயுரிய குணாம்சங்களான சிடுக்குகள், அக மோதல்கள், காமம், துரோகம் போன்றவை எல்லா நிலங்களுக்கும் பொதுவானவை. அவற்றுடன் அந்தந்த நிலத்தின் கலாச்சார அடையாளங்களையும் நுட்பங்களையும் சேர்க்கும்போது அந்தக் கதைகளுக்கு தனித்துவம் கூடிவிடுவதைத்தான் ‘தானிவத்தாரி’, ‘கனவுகளில் தொடர்பவள்’, ‘மயக்குறு மக்கள்’, ‘சிடியா கிராஸிங்’ ஆகிய கதைகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த அம்சத்தை துலக்கிக் காட்டவென ‘மலரினும் மெல்லிது காமம்’, ‘தானிவத்தாரி’ ஆகிய இரண்டு கதைகளைச் சொல்லலாம். ஆண் பெண் உறவில் எழும் தடுமாற்றமும் விளைவும்தான் இரண்டு கதைகளிலுமே மையம். தமிழகச் சூழலில் சொல்லப்பட்டிருக்கும் ‘மலரினும் மெல்லிது காமம்’ கதையில் ‘தெரிந்த மனிதன் என்ன தீமையை செய்துவிட முடியும்?’ என்ற வாக்கியமே ஜப்பானின் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள ‘தானிவத்தாரி’ கதையில் ‘பள்ளத்தாக்கைக் கடக்க துணைவரும் பாட’லாகச் சொல்லப்பட்டுள்ளது. சக மனிதனின் மீது இன்னொருவன் கொள்ளும் நம்பிக்கை ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் சிதறடிக்கப்படும்போதுகூட முற்றிலும் அவன் நம்பிக்கை இழந்துவிடுவதில்லை; அடுத்தவர் மீது அந்தக் கசப்பைப் பொருத்திப் பார்ப்பதுமில்லை என்பதையே இரண்டு கதைகளும் வெவ்வேறு சொற்களில் வெளிப்படுத்துகின்றன.

‘அனுபவ பாத்தியம்’ கதையில், மன்னார்குடியில் குத்தகை நிலத்தைத் திருப்பித் தர மறுப்பவர்களின் மனநிலையும் ‘நடு ஆணிகளாய் எஞ்சியவர்கள்’ கதையில் கிகுச்சி சானின் மீது குற்றம் சாட்டும் ஜீவானந்தத்தின் மனோபாவமும் அடிப்படையில் ஒன்றுதான்.

‘செர்ரி பிளாசம்’, ‘அன்பும் அறனும் உடைத்தாயின்’ இரண்டும் அபத்தமான புதிர் கணங்களில் மையம் கொண்டவை. திட்டமிடல்கள் அனைத்தையும் நொடியில் ஒன்றுமில்லாமல் செய்கிற வல்லமைகொண்ட மரணமே இரண்டிலும் கையாளப்பட்டுள்ளது. அளவுக்கதிகமான பற்றுதலும் உறவுகளும் அர்த்தமற்றவையோ என்று மனம் சோர்வுறும்போது தக்கயாமாவின் உச்சிப்பகுதியில் ஒரு பழைய மரவீட்டின் அருகில் ககி மரத்திலிருந்து கனிகளைப் பறித்துக் கொண்டிருக்கும் கிழவரையும், அவர் நிற்கிற ஏணியைப் பிடித்துக்கொண்டிருக்கிற கிழவியையும் காட்டுகிறார் செந்தில்குமார். நல்ல அனுபவத்தை தரும் சிறுகதை இதற்கு மேல் எதையும் சொல்லாது. ‘அன்பும் அறனும் உடைத்தாயின்’ கதையும் மேலதிகமாக எதையும் சொல்லவில்லை.

காஞ்சி எழுத்துகள், சகுரா மலர்கள், கிமோனா, சாமுராய்கள், சிம்பாசி ரயில் சந்திப்பு, விதவிதமான பானங்கள், உணவுகள் என ஜப்பானுக்கேயுரிய அடையாளங்கள் கதையில் தேவையான அளவுக்கு மிகப் பொருத்தமான இடங்களில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன.

உலகெங்கும் கால்கொண்டிருக்கும் இன்றைய புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலர், தம் அயல்நில வாழ்வின் அனுபவங்களை தமிழ் கதைப்புலத்துக்கு வலுசேர்க்கும் புனைவுகளாக மாற்றித் தருகிறார்கள். அந்த வரிசையில் ரா.செந்தில்குமாரின் ‘இசூமியின் நறுமணம்’ தொகுப்பை சிறிதும் தயக்கமின்றி சேர்க்கலாம்.

0

இசூமியின் நறுமணம், ரா.செந்தில்குமார்

யாவரும் பப்ளிஷர்ஸ் - ஜனவரி 2021

Tuesday 13 April 2021

கவிதையும் கவிஞனும் - ரமாகாந்த் ரத்


0

நீண்ட காலமாய் நான் கவிதை எழுதிக் கொண்டிருந்தாலும்கூட ஒரு கவிதை எப்படி எழுதப்படுகிறது என்பது பற்றி எனக்கு ஏதாவது தெரியுமா என்று சந்தேகமாகவே உள்ளது. ஒரு சில கவிஞர்களே இதை அறிவார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். அவர்களிலும் ஒரு சிலர் கவிதையில் தங்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை என்பதில் திருப்தியடைந்திருக்கிறார்கள் என்றாலும்கூட! என்னைப் பொறுத்தவரை தான் எப்போது எப்படி எழுதப்படவேண்டும் என்பதை கவிதையே தீர்மானிக்கிறது என்றே நினைக்கிறேன். கவிஞனை ஒரு கருவியாகவே அது தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. எனவே, தானே கவிதையின் ஆசிரியன் என்கிற மாயையை கவிஞன் உதறித் தள்ளவேண்டும். அவன் செய்ய வேண்டியதெல்லாம் கவிதை இவ்வுலகில் இறங்கி வரும் தருணத்தில் அதைக் கைகொள்ளத் தவறிவிடாத ஒரு ஆயத்த நிலையில் இருப்பதுதான்.

கவிஞன் கவிதையின் ஆசிரியன் இல்லை என்பதை எந்தவொரு நிலையிலும் எளிதில் நிரூபிக்கமுடியும். அவன்தான் ஆசிரியன் என்றால் அவன் விரும்பும்போதெல்லாம் அவனால் கவிதை எழுத முடியவேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. மேலும், ஒரு கவிதையை எழுதி முடித்த பின்பு அந்தக் கவிதை அவன் நினைத்ததிலிருந்து முற்றிலும் வேறானதாகவே இருக்கிறது. ஒரு கலைஞன் என்ற முறையில் அவன் ஒரு குயவனிலிருந்து அல்லது ஒரு தச்சனிலிருந்து வேறுபடுகிறான். தாங்கள் உருவாக்க நினைப்பதை செய்து முடிப்பதில் அவர்களால் எப்போதும் வெற்றி பெற முடிகிறது. தங்களது படைப்புக்கு அவர்களால் நேர்மையுடன் உரிமை கோரமுடிகிறது. ஆனால், கவிஞனின் நிலை அவ்வாறில்லை. முன்னர் அறியாத ஒரு உயிர்துடிப்பான ஒரு தருணத்தின் கருவியாக மட்டுமே அவன் இருந்திருக்கிறான்.

கவிஞன் ஒரு கவிதையைத் தனது சாதனையாக நினைத்து, குதூகலிக்க முடியாமல் போவதற்கு மேலும் ஒரு காரணம் உண்டு. ஒவ்வொரு தொழிலிலும் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகமென்றாலும் தோல்விக்கான சாத்தியங்களும் அதே அளவில் உண்டு. ஆனால், கவிதையைப் பொறுத்தவரை தோல்வி உத்தரவாதமானது. வெற்றி எப்போதாவது வெகு அபூர்வமாய் வாய்க்கலாம். உங்கள் அனுபவங்களை மிக நேர்மையாக அலசிப் பார்ப்பீர்களேயானால் நீங்கள் சொல்ல நினைத்ததில் மிக கொஞ்சமானதையே, பெரும்பாலும் உத்தேசித்த உணர்ச்சியின் சிதைந்த ஒரு பகுதியையே சொல்ல முடிந்திருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் கவிதையில் நீங்கள் விவரிக்க நினைத்த உணர்ச்சியின் பெரும்பகுதி தப்பிப் போயிருக்கும். இது எப்போதும் கவிஞனின் குற்றமாக இருக்காது. கவிஞனின் பல உணர்வு நிலைகளுக்கு மொழியினால் ஈடுகொடுக்க முடியாததால் அவற்றை விவரிக்கச் சொற்களை அவனால் கண்டுபிடிக்க முடிவதில்லை. அவன் கண்டெழுதும் சொற்கள் அவனது உணர்ச்சிகளை முழுமையாகவும் நம்பகத் தன்மையுடனும் வெளிக்கொணர முடிவதில்லை. 

மழை நாள் இரவொன்றில் ஒரு காட்டினூடே நீங்கள் பயணம் செய்வதாய் கற்பனை செய்துகொள்ளுங்கள். காட்டில் மரங்களும் மலைகளும் இருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் தகர்க்க முடியாத அடர்ந்த இருள் அவற்றைத் தழுவியுள்ளது. மழை பெய்யும் ஓசையை நீங்கள் கேட்கிறீர்கள். திசையெங்கும் காட்டின் மரங்களும் இலைகளும் மலைகளும் மண்ணும் மழையில் நனைந்துகொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். இருளும் மழையும் இரண்டறக் கலந்திருக்கின்றன. இப்போது இந்த மழை வெறும் மழையல்ல. இருள் வெறும் இருளல்ல. இவற்றோடு இணைந்து உங்களை நீங்கள் உணர்வது தவிர்க்க முடியாதது. இதை நீங்கள் முழுக்க அனுபவிக்கிறீர்கள். ஆனால் இந்த அனுபவத்தை அதன் எந்தப் பகுதியையும் இழந்துவிடாது முழுமையாக விவரிக்கிற வார்த்தைகளை உங்களால் தேர்வு செய்துவிட முடியுமா?

இவ்வாறு பல அனுபவங்கள் உள்ளன. ஒவ்வொரு விஷயத்திலும் உங்கள் அனுபவங்களுக்கான வார்த்தைகளைத் தெரிவுசெய்ய நீங்கள் தவறிவிடுகிறீர்கள். இப்படியிருக்கும்போது கவிஞனால் தான் வெற்றி அடைந்துவிட்டதாய் எப்படிக் கூறிக் கொள்ள முடியும்? அவன் எழுத நினைத்த கவிதை பெரும்பாலும் எழுதப்படாமலே நின்றுவிடுகிறது.

இது கவிஞனின் விதி. அவன் உண்மையில் கவிஞனென்றால், கர்வமற்றவன் என்றால் அவனது அனுபவம் தோல்வியான ஒன்றாகவே இருக்கும். சில காலங்களுக்குப் பிறகு ஒரு நல்ல கவிதையை எழுதமுடியும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. ஒரு அசலான கவிஞனுக்கு இந்த நம்பிக்கை வறட்சி என்பது தீர்வில்லாத முடிவற்ற ஒரு அனுபவமாகும். அவன் தொடர்ந்து கவிதைகள் எழுதுகிறானென்றால் அதற்குக் காரணம் அவன் தளராத தைரியசாலி என்பதே. ஒருபோதும் வெற்றி கிடைக்காது என்று தெளிவாகத் தெரிந்திருந்தாலும் தோல்வியைக் கண்டு துவளாதவன். இந்த தைரிய குணத்தை துணிச்சலிலிருந்தும் அகந்தையிலிருந்தும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும். துணிச்சலும் அகந்தையும்மிக்க ஒரு கவிஞன், தான் தோற்றுப் போவதை அறிவதில்லை. இதற்கு மாறாக அசலான கவிஞனே தன் தோல்வியைப் புரிந்துகொள்கிறான். இருப்பினும் கவிதையை அவனால் விட்டுவிட முடிவதில்லை. அவன் வாழ்வின் மிக முக்கியமான தவிர்க்கமுடியாத ஒன்றாகவே அது ஆகிவிடுகிறது.

கவிஞனுக்கு முன்னுள்ள வாய்ப்புகள் தெளிவானவை. தன் கவிதையின் உள்ளீடற்ற தன்மையையும் சாதாரண தன்மையையும் அறிந்துகொள்ளாது, கவிஞன் என்கிற முகமூடியயை அணிந்துகொண்டு முகமெங்கும் கர்வம் ஒளிர, பிறரிடமிருந்து தான் வித்தியாசமானவன் என்கிற மிதப்போடு தன்னைப்போல பிரபலமடையாத பிற கவிஞர்களிடமிருந்து தான் வேறுமாதிரியானவன் என்ற தலைநிமிர்வோடு உலகை வலம்வருவது ஒன்று. அல்லது நம்பிக்கை வறட்சியோடு முகம் முழுக்க கண்ணீரில் நனைந்து தொடர்ந்து கவிதை எழுதிக் கொண்டிருப்பது. அவன் தொடர்ந்து கவிதை எழுதுவது தன் அனுபவ முழுமையை விவரிக்கும் கவிதையொன்றை என்றேனும் ஒரு நாள் எழுத முடியும் என்ற நம்பிக்கையால் அல்ல! தான் பொய்யானவன் இல்லை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள வேறு வழியேதும் இல்லை என்பதனால்தான். ‘நான் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிடுவேன்’ என்று அவன் சொல்வதில் வெற்றி பெற முடியாமல் இருக்கலாம். ஆனால் அவன் நினைப்பிற்கும் அவனது கவிதைக்கும் உள்ள இடைவெளி என்பது தான் கவிஞனே என்று உறுதியாய் நினைத்துக் கொண்டிருக்கிற மகிழ்ச்சியான ஒரு கவிஞனின் கவிதைக்கும் நினைப்புக்கும் உள்ள இடைவெளி அளவுக்கு பெரிதாய் இருக்காது.

(ரமாகாந்த் ரத், ஒரியக் கவிஞர். நவீன ஒரியக் கவிஞர்களில் முதன்மையானவர். சாகித்ய அகாதமி, சரஸ்வதி சம்மான் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர். சாகித்ய அகாதமியில் பல முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்.)

நிழலன்றி ஏதுமற்றவன்


(‘ரசனை’ ஏப்ரல் 2007 இதழில் வெளியான கட்டுரை. இந்த இதழின் முகப்பில் கிருபாவின் படம் இடம் பெற்றிருந்தது. மரபின் மைந்தன் முத்தையாவுக்கு நன்றி.)

கலைந்த தலைமுடி. முகம் மறைத்துப் படர்ந்து கிடக்கும் தாடி. கருத்த உதடுகள். எப்போதும் மேல்நோக்கிச் சஞ்சரித்திருக்கும் இடுங்கிய கண்கள். மெலிந்த உடல். பின்னிரவு வரையிலும் விழித்திருந்த களைப்பும் போதையும் கொண்ட உருவம். நெருங்கும் எவரையும் சற்றே மனம் பதறவைக்கும் பசியின் வாடை.

இந்த அடையாளங்களுடன் சென்னையில் இளைஞர்கள் பலரையும் நீங்கள் சந்தித்திருக்கலாம். அடுத்த வேளை பசிக்கு உணவுண்டா என்று தெரியாது. எத்தனை வேளை பசியை ஒத்திவைத்திருக்கிறார்கள் என்றும் கணக்கில்லை. இதோ, இவனது வாழ்க்கை இன்றோடு விடைபெற்றுவிடக்கூடும் என்றே நம்மை நினைக்க வைக்கும்படியான அவலமான நிலையில் சுற்றிக்கொண்டிருக்கும் இவர்கள் அனைவரையும் வாழ்க்கையோடு பிணைத்து வைத்திருக்கும் மிக மெல்லிய இழை சினிமாக் கனவுதான்.

திசைகள்தோறும் இரும்புக் கதவுகள் கொண்ட சினிமா எனும் கனவு மாளிகையின் எதிரே தவம் கிடக்கிறார்கள். அவமானங்களையும் வலிகளையும் பொருட்படுத்தாமல் தினம்தினம் ஆயிரம் கதவுகளை மோதிப் பார்க்கிறார்கள். வெற்றி லட்சத்தில் ஒருவனுக்கே என்ற யதார்த்தத்தை அறிந்திருந்தபோதும், அந்த ஒருவன் தானே என்ற பலத்த நம்பிக்கையுடன் ஏதோ ஒரு கிராமத்திலிருந்து வந்து காத்திருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் சினிமாவுக்கான கதைகள் சில புனையப்பட்டிருக்கும். அவற்றை வெகு ரகசியமாய் பொத்திப் பொத்தி வைத்திருப்பார்கள். மிதமிஞ்சிய போதையிலும்கூட அந்த ரகசியக் கதைகளின் முதல் எழுத்தைக்கூட உச்சரித்துவிட மாட்டார்கள். சிலமணி நேரத் தூக்கத்தின்போதும்கூட கதைகளை யாரும் களவாடிவிடக்கூடாது என்று உயிரின் ஆழத்தில் புதைத்து வைத்திருப்பார்கள். வேளாவேளைக்கு கதறியழும் பசியின் குரல் காதுகளுக்கு எட்டாதபடிக்கு இந்த ரகசியக் கதையை திரும்பத் திரும்ப மெருகேற்றி உரம்கூட்டிக் கொண்டிருப்பார்கள்.

கோடம்பாக்கமே கதியென்று கிடக்கும் இத்தகைய லட்சக்கணக்கான இளைஞர்களில் ஜெ.பிரான்சிஸ் கிருபாவும் ஒருவர்.

திருநெல்வேலி நாகர்கோயில் பாதையில் சற்றே விலகி அமைந்துள்ளது பத்தினிப்பாறை எனும் சிறு கிராமம் கிருபாவின் சொந்த ஊர். இரண்டே வகுப்பறைகள் கொண்ட கிராமத்துப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பு. பிறகு பக்கத்திலுள்ள காரங்காடு என்ற ஊரில் எட்டாம் வகுப்புவரை. குடும்பத்தின் கடைசிப் பையன் என்பதால் நன்றாகப் படிக்கவைக்க வேண்டும் என்ற ஆசை அப்பாவுக்கு. ஆனால் படிப்பைத் தொடர முடியாத குடும்பச் சூழ்நிலை.

தனது பதினான்காவது வயதில் பம்பாய்க்கு ரயிலேறுகிறார்.. பம்பாய் அவருக்கு வாழ்வின் இருண்ட தரிசனங்களை பரிசளிக்கிறது. அதற்கு உள்ளிருந்தேதான் கிருபா தன்னைக் கண்டுகொள்கிறார். இரும்புப் பட்டறைகளும் தொழிற்சாலைகளும் நிறைந்த ஒரு தொழில் வளாகத்தில் இருக்கும் டீக்கடை ஒன்றில் டீ சப்ளையராக வேலை. சம்மட்டியின் சத்தங்களும் தீப்பொறிகளும் இரும்புத் துருவின் வாடையுமாயிருந்த அந்த இடத்தில் இருந்த ஒரு லேத் பட்டறையில் டர்னர் வேலை அவருக்குப் பிடித்திருந்தது. ஆனால் சிறுவன் என்பதால் வேலைக்குச் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். பகலில் டீ சப்ளையராகவும் இரவில் லேத் டர்னரின் உதவியாளராகவும் சில மாதங்கள் கழிகின்றன. தனது பதினேழாவது வயதில் கிருபா ஒரு தேர்ந்த டர்னராகிறார். மேலும் சில ஆண்டுகள் உற்சாகமாகத்துடனும் அக்கறையுடனும் தொழில் ஈடுபட்டிருந்தார். இருபத்தி மூன்றாவது வயதில் தானே ஒரு பட்டறையைத் தொடங்கி நடத்துகிறார். ஆ, வாழ்க்கை நமக்கும் வாய்த்துவிட்டது என்று நிமிர்ந்தபோது விதி பாபர் மசூதி சம்பவத்தின் வடிவில் 1992ம் ஆண்டு எதிர்ப்பட்டது. ஒரு வருடம் தொழில் முடங்கிப்போனது. வாங்கிய கடனுக்கான வட்டி, மூடிக்கிடந்த இரும்புப் பட்டறையில் குடியேறிவிட்டது.

வாழ்க்கை கைவிட்டுவிட்டது என்றிருந்த நிலையில் கவிதை கிருபாவுக்கு அடைக்கலம் தந்தது. கொஞ்சம் படிக்கவும் எழுதவும் தொடங்கியிருந்தார். தினமணிக்கதிரின் கடைசிப் பக்கத்தில் கலாப்ரியாவின் ‘உலகெலாம் சூரியன்’ தொகுப்பைக் குறித்த ஒரு குறிப்பு. ‘ஒரு குத்து சுண்டல் கூடக் கிடைக்குமென்று தங்கையை இடுப்பில் சுமந்து போகும் அக்கா’ சிறுமியைப் பற்றிய கவிதை கிருபாவின் பார்வையையே மாற்றியது.

பம்பாய் கைவிட்ட நிலையில் 1998ம் ஆண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார். கொஞ்சம் சினிமாக் கனவும் கவிதைகளுமே அவர் கைவசம் இருந்தன. பம்பாய் நண்பர்கள் சிலரின் உதவியால் ‘காமராசர்’ படத்தில் திரைக்கதையாளராகவும் வசனகர்த்தாகவும் பணியாற்றினார்..

இந்த நாட்களில் கிருபாவின் தோற்றம் எதிர்படுவோரை சற்றே அதிரச் செய்யும்விதமாய் இருந்தது. கலைந்து, காற்றில் அலையும் நீண்ட தலைமுடி, அடர்ந்து முகம் மூடிக்கிடக்கும் தாடி, மஞ்சளோடி இடுங்கிக் கிடக்கும் கண்கள். அவர் தங்கியிருந்த தி.நகர் மேன்ஷன் அறைவாசிகள் பலருக்கு அவரது தோற்றம் முகஞ்சுளிக்க வைப்பதாய் இருந்தது. கடுமையான வகைளும் தூற்றல்களும் அவரைச் சுற்றி விழுந்தவண்ணமிருந்தன. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கிருபாவை அந்த மேன்ஷனில் கண்டுபிடிப்பது வெகு சிரமம். நான்கு அடுக்குகள்கொண்ட அந்த மேன்ஷனில் அவருக்கென்று ஒரு அறை கிடையாது. நண்பர்களின் தயவில் ஏதேனுமொரு அறை மூலையில் சுருண்டு கிடப்பார்.

அவரது சட்டைப்பையில் சுருண்டு கிடந்த கவிதைகளை நண்பர்கள் சிலர் படிக்க நேர்ந்தது. ‘கல் மத்தளம்’ என்ற கவிதை அவருக்கும் யூமா வாசுகிக்கும் இடையில் ஒரு ஆழமான உறவையும் நட்பையும் ஏற்படுத்தித் தந்தது. இருவரையும் நெருக்கமாகப் பிணைத்த இன்னொரு பொது அம்சம், பசி. பலநாள் இரவுகளில் கையிலிருக்கும் சில்லறைகளைக்கொண்டு மூன்று இட்லிகளை வாங்கி இருவரும் பகிர்ந்துண்டு பசியாறியிருக்கிறார்கள். நெடுந்தொலைவு கவிதை பேசி இரவைக் கடத்தி நடந்திருக்கிறார்கள். மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து பழவந்தாங்கலுக்கான கடைசி ரயிலில் யூமாவை ஏற்றிவிட்டு கிருபா திரும்பி நடந்து வரும்போது இருளும் நட்சத்திரங்களும் மட்டுமே அவருக்குத் துணையிருக்கும்.

கிருபா போன்ற இளைஞர்களுக்கு சென்னையில் இரவு வேளையில் உணவு கிடைக்கிறதோ இல்லையோ இரவு மதுவருந்துதல் மட்டும் எப்படியோ அமைந்துவிடுவது இன்றுவரை விளங்கிக்கொள்ள முடியாத விநோதம்.

கிருபா ஆசையாகவும் வெகு உல்லாசமாகவும் குடிப்பதுண்டு. எத்தனை குடித்தாலும் சலம்பல்கள் இருக்காது. அடுத்தவருக்கு தொந்தரவு இருக்காது. போதை அவருக்குள் இறங்குந்தோறும் அவரது இயல்பான அமைதி மேலும் துலக்கம் பெற்று பேரமைதியாகிவிடும். அண்ணாச்சி ராஜமார்த்தாண்டனைப் போல போதையின் மௌனத்தையும் அதன் அளப்பரிய அழகையும் கொண்டாடத் தெரிந்தவர் கிருபா.

ஒரு பாடலாசிரியராக அடையாளப்படுத்திககொள்ள கிருபாவும் அவரது நண்பர்கள் சிலரும் செய்த முயற்சிகள் பலனளிக்காத சூழ்நிலை. பசியும் நிராசையும் இரவில் யார் தயவிலேனும் வாய்க்கும் பெரும் போதையுமாய் கழிந்த நாட்களில் கிருபா பெரும் மனப் பதற்றத்துக்கு ஆளானார். கவிதை மனம் எந்த சந்தர்ப்பத்திலும் பின்னடைநதுவிடவிலல்லை. உடல்நிலை கெட்டுப் போயிருந்தபோது கவிதை மேலும் தீவிரம் கொண்டிருந்தது.

நண்பர் யூமா வாசுகியின் முயற்சியினால் முதல் தொகுப்பாக ‘மெர்சியாவின் காயங்கள்’ தமிழினி வெளியீடாக வெளிவந்தது. தொடர்ந்து தீவிரமாக எழுதினார். உடனடியாகவே ‘வலியோடு முறியும் மின்னல்’, ‘நிழலன்றி ஏதுமற்றவன்’ இரண்டு தொகுப்புகளும் வெளியாயின.

நவீன தமிழ்க் கவிதையின் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கவிதைப் பாணி கிருபாவை தனித்து அடையாளம் காட்டியது. அபாரமான மொழியாளுமை, தனித்துவம் மிக்கப் படிமங்கள் ஆகிய இரண்டும் அவரது கவிதையின் முத்திரைகள். கூறியது கூறலின்றி மொழியின் நுட்பமான திருகல்களின் வழியாக கற்பனையின் வெகு எல்லையில் மட்டுமே கண்டறிய முடிகிற படிமங்கள் தொடர்ந்து அவரது கவிதைகளில் ஆளுமை செலுத்துகின்றன. தமிழ்க் கவிதையை பெரிதும் ஆக்கிரமித்திருக்கும் அறிவுஜீவித்தனம் மிகுந்த, உத்திகளால் ஒளியூட்டப்பட்ட ‘மூளை’க் கவிதைப் போக்குக்கு நேர்மாறானது கிருபாவின் தன்னிச்சையான உணர்வெழுச்சிமிக்கக் கவிதைகள். அவரை நவீனக் கவிதைப் போக்குக்கு தடம் மாற்றியவை கலாப்ரியாவின் கவிதைகள். சு.வில்வரெத்தினம், தேவதேவன் ஆகியோரது கவிதைகளை அவர் விரும்பிப் படிப்பதுண்டு.

ஒரு கவிஞராக அறியப்பட்டிருந்த கிருபா ‘கன்னி’ நாவலின் வழியாக ஒரு நாவலாசிரியராக உருவெடுத்திருக்கிறார். கவிதைத் தொகுப்புகள் தயாரான சந்தர்ப்பங்களில் தமிழினி வசந்தகுமாரோடு நட்பு ஏற்பட்டது. இந்த நாவலுக்கான தொடக்கமும் நிகழ்ந்தது. தொடர்ந்து எழுதப் பணித்ததன் விளைவாக ‘கன்னி’ நாவல் இரண்டாண்டு கால அளவில் உருவானது. கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த அவர் ஒரு பெரும் நாவலின் வழியாக உரைநடைக்கு வந்திருக்கிறார். இதுவரையிலுமான தமிழ் உரைநடையாளர்கள் எவரது பாதிப்பும் இல்லாத ஒரு தனித்துவமான மயக்கமூட்டும் இவரது உரைநடை ஆச்சரியமளிக்கிறது. எல்லைகளோ கட்டுப்பாடுகளோ இல்லாத கற்பனையின் தன்னிச்சையான இயக்கத்தில் உருவாகியிருக்கும் மொழியும் படிமங்களும் கொண்ட இந்த உரைநடை கன்னி நாவலின் பெரும் கவனிப்புக்கு முக்கிய காரணம்.

தமிழ் இலக்கியத்துள் இருக்கும் குழு மனப்பான்மை, இலக்கிய அரசியல், அக்கப்போர் இவற்றிலெல்லாம் கிருபாவுக்கு அக்கறை கிடையாது. வெகுஜனப் பத்திரிகையில் எழுதக்கூடாது என்ற விரதமும் கிடையாது. ஆனால், எதையும் தானாகக் கேட்டுப் பெறலாகாது என்பதில் தீர்மானமாக இருப்பவர். இன்று அவர் சினிமாவில் பாட்டெழுதிக் கொண்டிருக்கலாம். ஆனந்த விகடனில் கவிதை எழுதலாம். இவை எதுவுமே அவர் கேட்டுப் பெற்ற வாய்ப்புகள் இல்லை. சினிமா வாய்ப்புக்காக இல்லாத கதவுகளையெல்லாம் தட்டிக் கொண்டிருப்பவர்களின் மத்தியில் ‘நானாக எதையும் தேடிப் போக மாட்டேன்’ என்றிருப்பது ஆச்சரியமானதுதான். ‘தேடிப் போகத் தொடங்கினால் அலைந்தே செத்துப் போகவேண்டியதுதான்’ என்று அவர் சொல்வது யதார்த்தமானதுதான்.

அவரது அசட்டையான தோற்றம் அவரது இயல்பையும் புத்திகூர்மையையும் மறைத்துவிடக்கூடியது. அபாரமான புத்திசாலி. எந்த புத்தகத்தையும் படிக்கத் தொடங்கிய சில பக்கங்களுக்குள்ளாகவே முழுக்க அவதானித்துவிடக்கூடிய தனித்திறன் அவரிடம் உண்டு. நண்பர்களிடமும் தன் உறவினர்களிடமும் அன்பாகவும் பிரியமாகவும் இருப்பவர் கிருபா. அவரிடம் பொறாமையோ போட்டி மனப்பான்மையோ கிடையாது. இயல்பாக வெளிப்படும் பிரியமே அவரை ஆட்கொண்டிருக்கிறது.

நல்லதை நல்லதென்று மனம் திறந்து பாராட்டும் குணம் உண்டு. அவரது இயல்பின் காரணமாகவே அவருக்கு வாய்க்கும் நண்பர்கள் அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

பெற்றோர்களின் மீதும் பெரும் அன்புகொண்ட கிருபா உறவினர்களையும் குழந்தைகளையும் பார்க்கும்போது குதூகலம் அடைந்துவிடுகிகறார். ஒருமுறை தொலைபேசியில் “இப்போ என்னைச் சுத்தி இருவது மருமக்கமார் இருக்காங்க… உற்சாகமாயிருக்கு” என்று ஊரிலிருந்து சொன்னபோது அவரது குரல் தளுதளுத்தது. சென்னைத் தெருக்களில் பின்னிரவு நேரங்களில் யாரும் உடனில்லாது தனித்து நடந்திருந்த நாட்கள் அப்போது அவருக்கு நினைவில் வந்திருக்கக்கூடும்.

அவருக்கு அண்மையில் கோவையில் ‘தேவமகள்’ அறக்கட்டளை விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிக்கொண்டிருக்கும்போது “இந்தப் பணத்தை அம்மாட்ட கொண்டு கொடுக்கணும். கோயில்ல எனக்காக நேத்திக் கடன் ஒண்ணு பாக்கியிருக்குண்ணு சொன்னாங்க…” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார். ஆனந்த விகடனில் வெளியாகும் ‘மல்லிகைக் கிழமைகள்’ கவிதைகளை ஒவ்வொரு வாரமும் அவரது கிராமம் மொத்தமும் ஆவலுடன் வாங்கிப் படித்து ‘நம்ம பையன் எழுதிருக்காண்டா…’ என்று கொண்டாடுகிறது.

காயங்களோடும் வலிகளோடும் நிழலன்றி ஏதுமற்றவனாய் திசைகள்தோறும் திரிந்தபோதும் அவரைச் சுற்றி ஏராளமான அன்பும் அக்கறையும் வாய்த்தபடியேதான் உள்ளன. அவரது மனத்தில் பொங்கிப் பெருகும் அன்பின் சுனையிலிருந்தே அத்தகைய குளுமையும் வாய்த்திருக்கமுடியும். ‘மற்றவர்களுக்கு நீ எதைத் தருகிறாயோ அதையே அவர்களும் உனக்குத் தருவார்கள்’ என்றொரு வாக்கு உண்டு. வாழ்வின் பெரும்பாலான தருணங்களில் பசியோடும் மன அழுத்தத்தோடும் போராடிக் கிடந்த கிருபா பிறருக்கு எப்போதும் அன்பையும் புன்னகையையுமே தந்திருக்கிறார். அதே அன்பையும் புன்னகையையுமே அவரது நண்பர்கள் எப்போதும் அவரிடம் திருப்பித் தந்துகொண்டிருக்கின்றனர்.


Monday 12 April 2021

தமிழ் இதழியலின் சுவையான சில பக்கங்கள்

 


ஓவியம் : ஜீவா

சம்பவம் ஒன்று

கும்பகோணத்தைச் சேர்ந்த அந்த எழுத்தாளர் தன் மகளின் கல்யாணத்துக்கு பண உதவி கேட்டு பிரபல வாரப் பத்திரிகையின் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுகிறார். பாவம், கஷ்டப்படுகிற எழுத்தாளர் என்ற இரக்கம் ஏற்படுகிறது ஆசிரியருக்கு. அதனால், பத்திரிகையுடன் நெருங்கிய பழக்கமில்லாத எழுத்தாளராக இருந்தும் ஐந்நூறு ரூபாய்க்குச் செக் அனுப்பி வைத்தார்.

ஆனால், இரண்டு நாளில் செக்கைத் திருப்பி அனுப்பிவிட்டார் எழுத்தாளர்,  அது மிகக் குறைந்த தொகை என்பதால் ஏற்கமாட்டேன் என்ற குறிப்புடன். ( ஐந்நூறு ரூபாய் என்பது இந்த நாளில் சிறிய தொகையாகத் தோன்றலாம். இருபது இருப்பத்தைந்து வருடங்களுக்கு முன் அது நால்ல தொகைதான்.)

ஆசிரியருக்குக் கோபம் ஏற்படவில்லை. அனுதாபம்தான் ஏற்பட்டது. ‘என்ன இவர், சுத்த உலகம் தெரியாத மனிதராயிருக்கிறார்! கல்யாணச் செலவு மொத்தத்தையும் நான் ஏற்றுக்கொள்வேன் என்று எதிர்பார்த்தாரா என்ன?’ என்றவர், நிருபரைக் கூப்பிட்டு ‘இவர் இப்படிப் பணத்தைத் திருப்பி அனுப்பியது இவர் மனைவிக்குத் தெரிந்திருக்காது. பணத்தின் அருமை பெண்களுக்குத்தான் புரியும். நீங்கள் அந்த அம்மாவைப் பார்த்துக் கொடுத்துவிடுங்கள்’ என்று சொல்லி, ஐந்நூறு ரூபாயை மறுபடியும் ரொக்கமாகவே அனுப்பிவைத்தார். எழுத்தாளரின் மனைவியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

சம்பவம் இரண்டு

சக்தி அதிபர் கொண்டுவரும் புத்தகங்களையெல்லாம் கரைத்துக் குடிப்பார் அந்த எழுத்தாளர். சக்தி இதழில் வரவேண்டிய விஷயங்களைத் தேர்ந்தெடுத்துத் தரும் பொறுப்பில் இருந்தவர் அவர். ஒருமுறை நேரு எழுதி ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ புத்தகத்தை அலுவலகத்தில் இருக்கும்வரை படித்துக் கொண்டிருந்தார். இருட்டிவிட்டது. அது கனமான பெரிய புத்தகம்.

“வீட்டுக்கு எடுத்துப்போய்ப் படியுங்களேன்” என்றான் அவன்.

“நீங்கள் என் ரூமைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார் எழுத்தாளர்.

“இல்லை.”

“அதனால்தான் சொல்கிறீர்கள். இந்தப் புத்தகத்தை என் ரூமுக்கு எடுத்துக்கொண்டு போனால் அதை உள்ளே வைத்துவிட்டு நான் வெளியேதான் படுக்கவேண்டும்” என்று சொல்லி சிரித்தார் எழுத்தாளர். வாயின் ஓரமாக வரும் அந்த மாதிரி சிரப்பை அவன் வேறு எவரிடமும் பார்த்தது கிடையாது. குருவிக் கூடு போன்ற சிறிய அறயில் ஒண்டியிருக்கும் வாழ்க்கையிலும் ஒரு நகைச்சுவையைக் கண்ட யதார்த்தவாதி அந்த எழுத்தாளர்.

0

இந்த இரண்டு சம்பவங்களும் இடம்பெற்றிருப்பது ‘அவன்’ என்ற புத்தகத்தில். கடந்த ஞாயிறு (11.04.2021) கோவையில் நடைபெற்ற சிறுவாணி வாசகர் மையத்தின் ‘நாஞ்சில்நாடன் விருது’ வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பரிசளிக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று அது. எழுதியவர் ரா.கி.ரங்கராஜன். என்னுடைய பள்ளிக்காலத்தில் அறிமுகமான பெயர். அவருடைய சிறுகதைகளையும் நாவல்களையும் மொழியாக்கங்களையும் வெவ்வேறு பெயர்களில் எழுதிய பத்திகளையும் தொடர்ந்து படித்திருக்கிறேன்.

இந்த நூலை சுயசரிதைக் குறிப்புகள் என்று சொல்லலாம். எழுத்தாளராக வேண்டும் என்று சிறுவயதிலேயே துளிர்த்திருந்த கனவை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்ட நாட்களில் தொடங்கி, சென்னையில் பல்வேறு இடங்களில் அலைந்து வெவ்வேறு ஆளுமைகளைச் சந்தித்ததையும் வேலை பார்த்ததையும் மிகுந்த சுவாரஸ்யத்துடன் எழுதியுள்ளார் ரா.கி.ரா.

ரா.கி.ரா தனது 23வது வயதில் தொடங்கி அறுபத்தி ஐந்து வயது வரை ( 1950 முதல் 1993 வரை ) நாற்பது ஆண்டு காலம் குமுதத்தில் பணிபுரிந்தார். அதற்கு முந்தைய காலகட்டத்தின் பல சுவையான சம்பவங்களையும் குமுதத்தில் வேலைபார்த்த போது நடந்த சிலவற்றையும் சுருக்கமாகவும் திருத்தமாகவும் சொல்லியிருக்கிறார்.

மாலனின் தூண்டுதலால் எழுதப்பட்ட இது ‘குங்குமம்’ இதழில் தொடராக வெளிவந்திருக்கிறது.

இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளவை ரா.கி.ராவின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்றாலும் தமிழ் இதழியல் வரலாற்றின் ஒரு பகுதி என்று இதைச் சொல்ல முடிகிற அளவுக்கு, அந்த காலத்தில் வெளியான பத்திரிகைகள், அவற்றின் ஆசிரியர்கள், ஓவியர்கள் குறித்த பல சம்பவங்களும் சித்தரிப்புகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

‘சக்தி’ இதழில் ரா.கி.ரா பணிபுரிந்த இரண்டரை ஆண்டு காலத்தில் ‘சக்தி’ காரியாலயம் ( இப்போதுள்ள மியூசிக் அகாதமி ) வளாகத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

‘கலைமகள்’ கி.வா.ஜ, கல்கி, ‘ரசிகமணி’ டி.கே.சி, வ.ரா, சக்தி வை கோவிந்தன், கண்ணதாசன், ராஜாஜி, ஜி.டி.நாயுடு, பொள்ளாச்சி மகாலிங்கம், பெ.தூரன், அரு.ராமநாதன், பெ.நா.அப்புஸ்வாமி, எஸ்.வி.வி, பம்பாபதி, ஓவியர்கள் ரவி, தாணு, சில்பி, ‘நாடோடி’, சிதம்பர ரகுநாதன், வலம்புரி சோமநாதன், ‘சரஸ்வதி’ விஜயபாஸ்கரன், ‘வானதி’ திருநாவுக்கரசு என பலரைக் குறித்த அபூர்வமான பதிவுகளும் ‘காதல்’ (அரு.ராமநாதன்), காலச்சக்கரம் (பெ.தூரன்), ‘ஹனுமான்’ (சக்தி), ‘சமரன்’, ‘சரஸ்வதி’ (விஜயபாஸ்கரன்), ‘ஜில்ஜில்’ (வானதி நடத்திய குழந்தைகள் இதழ்), ‘ஜிங்லி’ (குமுதம் குழுமத்திலிருந்த வெளியான சிறுவர் இதழ்) என அந்தக் காலத்தில் வெளியான இதழ்களைக் குறித்த தகவல்களும் இந்த நூலின் சிறப்பு.



தமிழில் பொது வாசகர்களை உருவாக்கியதில் ‘கல்கி’, ‘குமுதம்’, ‘விகடன்’ போன்ற வார இதழ்களின் பங்கு முக்கியமானது. ஒவ்வொரு இதழும் தனக்கான வாசகர்களை உருவாக்கி வளர்த்தது. அதே சமயத்தில் ஒன்றையொன்று இட்டுநிரப்புபவையாகவும் விளங்கின. இந்த நூலின் வழியாக அந்த இதழ்களைக் குறித்து இப்போது யோசிக்கும்போது அவ்வாறான இதழ்கள் இன்று இல்லாமல்போனது எத்தனை பெரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது என்பதை உணரமுடிகிறது. வெகுஜன ரசனைக்கான இதழ்களாகவே அவை இருந்தன இன்று அவற்றைக் குறித்து விமர்சிக்கலாம். ஆனால், எளிய ஒரு வாசகன் அவ்வாறான இடத்திலிருந்துதான் படிக்கத் தொடங்குகிறான். புத்தகங்களின் உலகத்துக்குள் நுழைகிறான்.

கடந்து ஐம்பது ஆண்டுகளில் வெளியான பல்வேறு வார, மாத இதழ்களைக் குறித்த ஆய்வும் அவை தமிழ் வாசக ரசனையில் ஏற்படுத்திய மாற்றங்களைக் குறித்துமான சீரிய பதிவுகள் தமிழில் வெளிவரவேண்டியதின் அவசியத்தை ரா.கி.ரா வின் இந்த நூல் உணர்த்துகிறது.

0

முதல் சம்பவத்தில் மகளின் கல்யாணத்துக்கு உதவி கேட்ட எழுத்தாளர், கரிச்சான் குஞ்சு. பத்திரிகை ஆசிரியர் ‘குமுதம்’ எஸ்.ஏ.பி.

இரண்டாவது சம்பவத்தில் சொல்லப்பட்டிருக்கும் எழுத்தாளர் கு.அழகிரிசாமி.

0

 

Friday 2 April 2021

டாக்டர் ஜீவா – சில நினைவுகள்

 


 

‘ரிஷ்யசிருங்கர்’ எனும் ஈரோடு ராஜேந்திரன் “டாக்டரைப் பாக்கலாம் வாங்க” என்று அழைத்துச் சென்றார். மாலை ஏழு மணி. இருட்டு விழுந்திருக்க மங்கலான வெளிச்சத்துடனான பழைய கட்டடம். நலந்தா மருத்துவமனையில் எந்த பரபரப்பும் இல்லை. டாக்டர் தீவிரமாக எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.

“அடடே, வாங்க” என்றவரின் முகம் முழுக்க சிரிப்பு. மேசையின் மீதிருந்த தாளில் கருப்பு மசியால் அவருடைய அழகான கையெழுத்தில் ஒரு அறிவிப்பு தயாராகிக் கொண்டிருந்தது.

“ஈரோடு வந்துட்டீங்களாமே?” மகிழ்ச்சியுடன் விசாரித்தவர் பக்கத்தில் வைத்திருந்த அன்றைய நாளின் ஹிந்து செய்தித்தாளிலிருந்து ஒரு படத்தை கச்சிதமாக வெட்டினார். பேசியபடியே அதன் ஓரங்களில் பசையைத் தடவி எழுதி வைத்திருந்த தாளில் அதற்கென விடப்பட்டிருந்த இடத்தில் கவனமாக ஒட்டினார்.

மரபணு விதைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்களுடனான அந்த அறிக்கை தயாரான உற்சாகத்துடன் அதைக் குறித்து உரையாடத் தொடங்கினார். மறுதினம் நடக்கவிருக்கும் கூட்டமொன்றில் அந்த அறிக்கையை படியெடுத்து விநியோகிக்கவேண்டும் என்றார். கணினிகளும் கூகுள் போன்ற தேடுதல் வசதிகளுமில்லாத அந்த நாட்களில் சம்பந்தப்பட்ட செய்திகள் அனைத்தையும் புத்தகங்களிலிருந்தும் செய்தித் தாட்களிலிருந்தும் தேடிச் சேகரித்து அவற்றை கையால் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களாக, அறிக்கைகளாக தயாரித்து அனைவருக்கும் கிடைக்கும்படி செய்தார்.

செய்திகளை தேடி எழுதுவதும், பொருத்தமான படங்களை ஒட்டுவதும் அவருக்கு பிடித்தமான காரியங்கள். ஒரு பள்ளி மாணவனின் உற்சாகத்துடன் அந்தக் காரியங்களை அவர் மேற்கொண்டார்.

டாக்டர் ஜீவாவின் செயல்பாடுகள் பரவலானவை. எந்தவொரு குறிப்பிட்ட இயக்கத்துக்கோ அல்லது செயல்பாட்டுக்கோ மட்டுமாக அவர் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. சுற்றுச்சூழல், நீர் மேலாண்மை, இயற்கை பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், முதியோர் வாழ்க்கை, விவசாயம் என சமூகத்தின் வெவ்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் சார்ந்த பணிகளில், அவற்றை முன்னெடுக்கும் தரப்பினரோடு தன்னையும் இணைத்துக்கொண்டார்.

எழுத்தாளர்களும் சூழலியல் ஆர்வலர்களும் கலந்துகொண்ட ‘சோலை சந்திப்’பை உதகையிலிருந்த சுற்றுச்சூழல் இயக்கங்களுடன் சேர்ந்து ஒருங்கிணைத்திருந்தார். தமிழகத்தில் சுற்றுச்சூழல், சோலைக்காடுகளின் பாதுகாப்பு சார்ந்த உரையாடலைத் தீவிரப்படுத்தியதில் அந்தச் சந்திப்புக்கு முக்கியமான இடமிருக்கிறது.  

அந்த நிகழ்ச்சியின்போது ஒரு நாள் மதிய உணவுவேளை. எல்லோரும் பாக்கு மட்டையிலிருந்த உணவை ருசி பார்த்துக்கொண்டிருந்தபோது பெரியவர் ஒருவர் ஓரமாக தரையில் அமர்ந்து ஒரு தேங்காயை எடுத்து உடைத்தார். தண்ணீரைக் குடித்துவிட்டு பருப்பை தோண்டியெடுத்துத் தின்றார். “ஐயா, சாப்புடலையா?” என்று அவரிடம் விசாரித்தபோது கையிலிருந்த தேங்காய்த் துண்டுகளைக் காட்டி சிரித்தார் “இதா, சாப்பிடறனே...”.

ஒடிசலான தேகமும் தாடியுடன்கூடிய முகமுமாய் அப்போது அறிமுகமானவர்தான் நம்மாழ்வார்.

டாக்டர் ஜீவா பின்னாட்களில் நம்மாழ்வருடன் இணைந்து இயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான முயற்சிகளை ஈரோட்டில் மேற்கொண்டார்..

நர்மதா அணைக்கெதிரான போராட்டத்தின் மூலமாகவும் சுற்றுச்சூழல் சார்ந்த தனது அக்கறையினாலும் நாடெங்கும் புதிய கவனத்தை ஈர்த்த மேதா பட்கர், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதற்காக இந்தியாவெங்கும் சுற்றுப்பயணம் செய்தார். 1997 பிப்ரவரி மாதத்தில் ஈரோட்டிலும் கோவையிலும் அவருடனான உரையாடல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார் டாக்டர் ஜீவா.

ஈரோட்டில் தங்கியிருந்த மேதா பட்கரை அன்று மாலையில் நண்பர்களுடன் சந்திக்க வாய்த்தது. தோட்டத்துக்கு நடுவிலிருந்த வண்டித் தடத்தில் உலவியபடியே சுற்றுச்சூழல், நீராதாரங்களின் பாதுகாப்பு என பல்வேறு சமூகத் தொண்டிலும் இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொள்ளவேண்டும் என்று நிதானமாகவும் உறுதிபடவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

பாரதி ‘மனிதனுக்கு மரணம் இல்லை’ என்ற தலைப்பில் உரையாற்றியது ஈரோடு கருங்கல்பாளையத்தில். அதுவே அவரது கடைசி பிரசங்கம். பாரதியை தன் ஞான குருவாக மதிக்கும் டாக்டர் ஜீவாவுக்கு கருங்கல்பாளையத்தின் மீது பெரும் ஈடுபாடு. பாரதியார் பிரசங்கம் செய்த அதே நூலகத்தில் கூட்டங்களை ஏற்பாடு செய்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பாரதி விழாக்களை ஒருங்கிணைத்திருக்கிறார்.

“இந்த கெழவனைப் பாருங்க, அன்னிக்கு சொன்னது இன்னிக்கும் பொருந்துது. என்னய்யா மனுஷன்?” என்று டாக்டர் ஜீவா எப்போதும் உரிமையுடனும் வியப்புடனும் பார்ப்பது காந்தியை. இந்தியாவின் சமூக வாழ்வை காந்தியை விடுத்துவிட்ட பார்ப்பது சாத்தியமில்லை என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். சமூகம், சூழல், வேளாண்மை என பல்வேறு பிரச்சினைகளையும் அணுக காந்தியம் அவருக்கு பெரும் பலமாக கைகொடுத்தது. ஜே சி குமரப்பாவின் மேல் பெரும் மதிப்பிருந்தது. அவரது நூல்களைக் குறித்து வியப்புடன் குறிப்பிடுவார். சில பகுதிகளை மொழிபெயர்த்திருக்கிறார்.

புதிய அலை சினிமாவின் மேலும் விருப்பம் கொண்டிருந்தார் டாக்டர் ஜீவா. அவரது நலந்தா மருத்துவமனையிலும் சித்தார்த்தா பள்ளியிலும் சினிமாக்கள் திரையிடப்பட்டுள்ளன. பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளும் இவ்விடங்களில் நடைபெற்றன. இந்தியாவின் விடுதலைப் பொன்விழாவின்போது திப்புசுல்தானை சிறப்பிக்கும் வகையில் கருத்தரங்கை ஒருங்கிணைத்து நூல் ஒன்றையும் வெளியிட்டார். காலிங்கராயன் கால்வாயை சீரமைக்கும்பொருட்டு இயக்கத்தை நிறுவி வழிநடத்தினார்.

ஈரோட்டில் தினமணி நிருபராக இருந்த பாண்டியராஜன், அரச்சலூர் செல்வம், ராஜேந்திரன் என அவரது நண்பர்களில் பலரும் அவரைவிட வயதில் இளையவர்கள். சமூக இயக்கம் சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆர்வமுள்ள இளைஞர்களை அதில் பங்கேற்கச் செய்தார். அவரைச் சுற்றி இளைஞர்களின் கூட்டம் இருந்ததே அவருடைய மாறா இளமைக்கும் சுறுசுறுப்புக்கும் காரணம் என்று புன்னகையுடன் சொல்வதுண்டு.

சுற்றுச்சூழல் சார்ந்த உரையாடல்களும் கரிசனமும் இன்று வலுத்திருக்கிறது. அனைவருக்குமே அதைச் சார்ந்த குறைந்தபட்ச புரிதல் உள்ளது. புவி வெப்பமயமாதல், காடுகளின் அழிவு, நீர் ஆதாரங்கள் மாசுபடுதலும் அழிதலும், பவானி நதி மீட்பு, மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு, பழங்குடி மக்கள் நலவாழ்வு என்று பல்வேறு சூழலியல் பிரச்சினைகள் குறித்து பலரும் இன்று உரத்த குரலில் முழங்குவதையும் முன்னெடுப்பதையும் பார்க்கிறோம். ஆனால், இந்த சொல்லாடல்கள் புழக்கத்துக்கு வருவதற்கு முன்பே டாக்டர் இதற்கான ஆரம்ப வேலைகளைத் தொடங்கியிருந்தார். பூவுலகின் நண்பர்கள், கோவை ஓசை அமைப்பு, உதகை பசுமை இயக்கம் என பல்வேறு சுற்றுச்சூழல் இயக்கங்களுடன் சேர்ந்து பணிகளை மேற்கொண்டார்.

டாக்டர் ஜீவாவின் சமூக அக்கறையும் மானுட மேன்மைக்கான சிந்தனையும் அவருடைய தந்தை எஸ்.பி.வெங்கடாச்சலத்திடமிருந்து உருவானது. விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற அவர் இடதுசாரி சிந்தனையாளர். ஜீவா, பாலதண்டாயுதம் போன்ற தலைவர்கள் வீட்டில் தங்கியிருந்த சூழலும் அங்கு மேற்கொள்ளப்பட்ட விவாதங்களும் உரையாடல்களும் டாக்டர் ஜீவாவின் சிந்தனைகளை இயல்பாகவே வடிவமைத்துள்ளன.

மார்க்ஸியமோ காந்தியமோ எந்தவொரு தத்துவமானாலும் அது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடையதாக அவர்களது துயரை நீக்குவதற்கான வழிவகைகளை முன்வைப்பதாக நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்ததின் விளைவுகள்தான் அவர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள். தெளிவான அந்தப் பாதை அனைவரும் தம்மை இணைத்துக்கொள்ளக்கூடிய எளிமையானதாகவும் இருக்கவேண்டும் என்றும் எண்ணினார்.

தமது கொள்கைகளுக்கு முரணான அல்லது தரப்பை விமர்சிக்கக்கூடியவர்களை அவர் எதிரிகளாகப் பார்க்கவில்லை. தமது முயற்சிகளுக்குத் தேவையான ஒரு பங்களிப்பைச் செய்யக்கூடும் என்கிற நிலையில் அவர்களை அதில் இணைத்துக்கொள்ளவே விரும்பினார். அவர்களுடைய முரண்களையோ எதிர்மறைகளையோ கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் அவர்களின் வழியாக சாத்தியமாகும் பங்களிப்புகளே முக்கியம் என்பதில் தெளிவாக இருந்தார்.

டாக்டர் ஜீவா தேர்ந்த ஒரு வாசகர். தொடர்ந்து படிக்கக் கூடியவர். செறிவான மொழியறிவும் எழுத்து நடையும் கொண்டவர். அவருடைய மொழிபெயர்ப்புகள் மிக எளிமையான நடையும் வாக்கிய மேன்மையும் கொண்டவை. தனக்குப் பிடித்தமான நூல்களை அவர் தொடர்ந்து மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடைய தேர்வுகள் ஒருதுறை சார்ந்தவையாக இருந்ததில்லை. கவிதைகள், நாவல்கள், மருத்துவம் குறித்த நூல்கள், சமூகம் என பல்வேறு வகையிலான, தனக்குப் பிடித்த நூல்களை மிகுந்த ஈடுபாட்டுடன் மொழிபெயர்த்தார். ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் மொழிபெயர்ப்பில் ஈடுபடும் டாக்டர் ஜீவா நூல்களை எழுதும் வேகம் வியப்பான ஒன்று.

டாக்டர் ஹெக்டேவின் நூலின் மொழிபெயர்ப்பான ‘மருத்துவத்துக்கு மருத்துவம்’ தமிழில் மிகவும் பேசப்பட்ட ஒன்று. மருத்துவம் பற்றிய மாற்றுப் பார்வையை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகிப்பது. அதேபோல, ஜூனியர் விகடனில் அவர் எழுதிய தொடர் ‘மருத்துவம் நலமா?’ வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று. ‘தற்சார்பு இந்தியா ஜேசி குமரப்பாவின் பாதை’, ‘எருமைகளின் தேசியம்’ காஞ்சனா இளையாவின் நூல், கன்பூசியஸ், வெற்றி பெற காந்திய வழி - ஆலன் ஆக்ஸன்ராட், தாமஸ் பெய்னின் பொது அறிவு, பேர்ல் பக்கின் ‘தாய் மண்’ நாவல் ஆகிய நூல்கள் முக்கியமானவை.

ஒரு நவீன மருத்துவர் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணமாக இருந்தவர் ஜீவா. ஒரு நோயாளியை தனது பயிற்சிக்கான வெறும் உடலாக, சம்பாதிப்பதற்கான வாய்ப்பாக அணுகாமல் வாதையை அனுபவிக்கும் உயிராக, மனிதனாகக் காணும் அடிப்படையை, அவனது நோய்மையைத் தீர்ப்பதே தனது தலையாயக் கடமை எனும் அறத்தை ஜீவா தனது வாழ்வின் வழியாக போதித்திருக்கிறார்.

நாளின் ஒவ்வொரு நொடியிலும் கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்புடன் ஓடிக்கொண்டேயிருக்கும் இன்றைய நவீன மருத்துவர்கள் ஜீவாவின் வாழ்வை யோசித்துப் பார்க்கவேண்டும். மருத்துவர்களுக்கு நேரங்காலம் கிடையாது என்று சொல்லியது மனிதகுலத்துக்கு அவர்க்ள் சேவையாற்றவேண்டும் என்ற நோக்கில். பணம் சம்பாதிக்கும் நோக்கில் அல்ல. கோடிக்கணக்கில் வங்கிக் கடன் வாங்கி நவீன உபகரணங்களைக் கொண்டு பரிசோதனைகள் என்ற பெயரில் நோய்கொண்டு வருபவனை ஒரு வாய்ப்பாகக் கருதும் பல மருத்துவர்களுக்கு குடும்பம் பற்றிய எண்ணம் இல்லை, உறவுகளைத் தெரியாது, உண்பதும் உறங்குவதும்கூட மருத்துவமனையில்தான் என்பதுபோன்று ஒரு வாழ்வு. இதற்கு அப்பால் அவர்களுக்கு சமூகம் சார்ந்த பார்வையும் சூழல் சார்ந்த அக்கறையும் இருக்கவேண்டும் எனும் விரிந்த மனப்பான்மையை ஜீவாவின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்வது அவசியம்.

நல் அரசு என்பதன் அடிப்படை குறைந்தபட்சம் அது தன் குடிகளுக்கு தரமான சமத்துவமான கல்வியையும் சகலருக்குமான சரியான மருத்துவத்தையும் உறுதிப்படுத்துவதாகும். இந்த இரண்டுமே பெரும் வியாபாரமாகிவிட்ட சூழலில் அவற்றின் தரமும், அடிப்படையில் அந்தத் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு இருக்கத் தேவையான அற மனப்பான்மையும் இல்லாமல் போவதில் வியப்பொன்றுமில்லை. ஒரு அரசு தன் கடமைகளிலிருந்து வழுவும்போது மக்களுக்குத் தேவையானவற்றை முடிந்தவரையிலும் செய்து தரவும், அரசுக்கு அதன் கடமைகளை நினைவுறுத்தவுமென ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில தனிமனிதர்கள் தொண்டாற்றுகிறார்கள். டாக்டர் ஜீவா அப்படியொரு மனிதர். எளியவர்களுக்கான தரமான மருத்துவம் என்ற அடிப்படையில் ஒத்த மனம்கொண்ட மருத்துவர்களுடன் இணைந்து ‘கூட்டுறவு மருத்துவமனை’ எனும் முயற்சியை ஈரோட்டில் தொடங்கினார். நோயாளிகளிடமிருந்து குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே பெறப்படும். தேவையான பரிசோதனைகள் மட்டுமே நியாயமான கட்டணத்தில் செய்யப்படும் என்ற அடிப்படையில் செயலாற்றும் பொது மருத்துவமனையைத் தொடர்ந்து புற்றுநோய்க்கான மருத்துவமனை ஒன்றையும் ஏற்படுத்தினார். ஈரோட்டில் தொடங்கிய இந்த முயற்சி இன்று தஞ்சை புதுச்சேரி உள்ளிட்ட ஏழு இடங்களில் வெற்றிகரமாக மருத்துவமனைகளை உருவாக்கியிருக்கிறது. ஜீவா தனது இறுதி நாட்களில் இதற்காகவே பல ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். மேலும், வைவிடப்பட்ட புற்றுநோய் நோயாளிகளைப் பராமரிப்பதற்கென்று பாலியேட்டிவ் கேர் மருத்துவமனையையும் ஏற்படுத்தினார். இந்த மருத்துவமனை முற்றிலும் இலவசமானது. அதேபோல, நியாயமான கட்டணத்தில் உடல் பரிசோதனைகள் செய்துகொள்ளும் வகையில் ‘ஸ்கேன்’ சென்டரையும், ரத்தச் சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) மையத்தையும் ஏற்படுத்தினார்.

ஆரம்ப காலத்திலிருந்து குடி நோயாளிகளுக்கான சிகிச்சையைத் தந்திருந்த அவரது சிகிச்சையில் நலம்பெற்றவர்கள் பலர். அவர்களில் சில எழுத்தாளர்களும் கவிஞர்களும் உண்டு.

எப்போது சந்திக்க நேர்ந்தாலும் அவரிடம் அடுத்து செய்ய வேண்டியவை என்று செயல் திட்டங்களின் பட்டியல் ஒன்று இருக்கும். இரண்டு முறை இதயக் கோளாறு ஏற்பட்டிருந்த நிலையிலும் தனது பயணத்தை அவர் நிறுத்தவுமில்லை, ஒத்திப் போடவுமில்லை. வாழ்வின் எஞ்சிய நாளில் முடிந்த வரையிலும் செய்துவிட வேண்டும் என்ற அவசரம் அவரிடம் இருந்தது. கடைசியில், பாண்டிசேரிக்கு சென்றிருந்தபோதுதான் உடல் நலிவுற்றது.

ஹோசி மின் கவிதைகள், ஒரு நாவல் என இரண்டு நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு தயாராக உள்ளன என்று உற்சாகத்துடன் தெரிவித்திருந்தார். அவரது மேசையில் இன்னும் சில கைப்பிரதிகள் இருக்கக்கூடும்.

அதுபோலவே, இன்னும் சில மருத்துவமனைகளையும் நலவாழ்வு இல்லங்களைத் தொடங்குவது குறித்து திட்டங்கள் இருந்திருக்கும். ஆனால், தன் வாழ்நாளில் தான் நினைத்தவற்றுள் சிலவற்றையேனும் அவர் சாதித்துக் காட்டிவிட்டார். தனக்குப் பின்னும் அத்தகைய பணிகள் தொடரவேண்டும் என்ற எண்ணத்துடன் ஒத்த கருத்துள்ள நண்பர்களிடம் அந்தப் பணிகளை விட்டுச் சென்றிருக்கிறார்.

“நான் இறந்துவிட்டால் எனது உடலை கழுகுகளுக்கு இரையாக்கிவிடுங்கள்” என்று தொலைபேசியில் தெரிவித்ததாக அவர் மறைந்தபோது முகநூலில் ஒரு நண்பர் எழுதியிருந்தார்.

‘வேறொருவர் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்காதே, அதை உன்னிடமிருந்தே தொடங்கு’ என்ற காந்தியின் வாக்கு டாக்டர் ஜீவாவின் வாழ்வாகவும் அமைந்திருந்ததில் வியப்பேதுமில்லை.

(தமிழினி மார்ச் 2021ல் வெளியான கட்டுரை)

 

வசீகரமான பரமபதம் :: பா.கண்மணியின் ‘இடபம்’

 


குடும்பம், உறவுகள், பணிச் சூழலில் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகள் என்ற சில தளங்களை அவரவர் அனுபவச் செறிவைக் கொண்டு எழுதுவதே இயல்பில் நடப்பது. இத்தன்மையை பெண்கள் எழுதும் நாவல்களுக்கு மட்டுமன்றி தமிழ் நாவலுக்கு மொத்தமாகவும்கூட ஓரளவு பொருத்தமுடியும்.

நாவல் குறித்த மனம் கொண்டிருக்கும் இந்த எண்ணத்தைத் தாண்டியிருப்பதே ‘இடபம்’ நாவலின் தனித்தன்மை. தமிழில் சிறுகதைகளிலோ நாவல்களிலோ இதுவரை இடம் பெற்றிராத பங்குச் சந்தையின் பின்னணியை இந்த நாவல் கொண்டுள்ளது.

பங்குச் சந்தையை பின்னணியாக அமைத்திருப்பது மட்டும் தனித்தன்மையாகி விடுமா என்ற கேள்வி உடனடியாகவே எழும்.

பெரிதும் ஆங்கிலமே புழக்கத்தில் உள்ள அந்தத் துறையைக் குறித்தும் அதிலிருக்கும் வெவ்வேறு சொல்லாடல்களையும் ஒரு நாவலின் இயல்பான போக்குக்கு இடையூறின்றி வாசகர்களுக்கும் எளிதில் புரியும் விதத்தில் அமைப்பதே சவாலான ஒன்று. பங்குச் சந்தைக் குறித்த எளிய அறிமுகமற்ற ஒரு வாசகனும்கூட இந்த நாவலை அணுகுவதில் சிரமம் இருக்கக்கூடாது என்கிற நிபந்தனையை அறிந்தே இது எழுதப்பட்டிருக்கிறது. முடிந்த வரையிலும் பங்குச் சந்தைக்குரிய சொல்லாடல்களையும் குறிப்புகளையும் வலியத் திணிக்காமல் புரிந்துகொள்ளப் போதுமான அளவில் எழுதப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையை ஒரு சாதுர்யமான சூதாட்டம் என்று மதிப்பிடுவார்கள். புள்ளி விபரங்களும் வரைபடங்களும் மட்டுமே துலக்கமாகத் தெரியும் இதன் சூத்ரதாரியும் அவன் விரல்களில் அசையும் கயிறுகளும் எவையென்று யாருமே உறுதியாகச் சொல்ல முடியாது. இதன் மாயச் சுழலில் சிக்கிக் கொண்டவர்கள்கூட இந்த விளையாட்டைப் பற்றி பெரிதாகக் குறைப்பட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் விதியையே நொந்துகொள்வார்கள். அவ்வாறான வசீகரமான பரமபதம் இந்தப் பங்குச் சந்தை.

இதில் தன் சிறிய வருமானத்தின் ஒரு பகுதியை பணயமாக வைத்து விளையாடுவது ஒரு பெண் என்பது இந்த நாவலின் இன்னொரு வியப்பு. இயல்புக்கு மாறான புதியதொரு களத்தில் ஒரு பெண் என்பது கேள்விகளை எழுப்பாமல் இருக்குமா?

அவ்வாறான கேள்விகளை எதிர்கொண்டு தாயங்களை உருட்டிக்கொண்டே இருப்பவள்தான் இந்த நாவலின் கதைசொல்லி. நாயகியும்கூட.

இடபம் என்பது ரிஷபம். காளை. பங்குச் சந்தையில் ஏற்றத்துக்கான, சீற்றத்துக்கான, பாய்ந்து மேலெழுவதற்கான குறியீடு. இந்த நாவலில் இந்தக் குறியீடு ஒரு பெண்ணின் பாய்ச்சலுக்கானதாய் மாற்றித் தரப்பட்டுள்ளது. பெண் மீது சமூகம் விதித்துள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளிலிருந்து பத்தாம்பசலித்தனங்களிலிருந்தும் வெளியேற முனையும் ஒரு பெண்ணின் கதையாக விரிகிறது.

கதைக்களமாக பெங்களூரை அமைத்திருப்பது இந்த நாவலின் நம்பகத்தன்மைக்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. பெங்களூர் போன்ற ஒரு ‘காஸ்மோ’ நகரத்தின் இன்றைய வாழ்வு இதுவரையிலான கலாச்சார அம்சங்களை வெகு எளிதாக விலக்கிவிட்டு அன்றாடத்தை ஒரு கொண்டாட்டமாக மாற்றித் தந்திருக்கிறது.

நாவலின் கதைசொல்லிக்கு, நாயகிக்கு பெயர் இல்லை. தமிழ்ப் பெண். எளிமையான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்பாவின் அளவான வருமானத்துக்கு ஏற்றவாறு வீடு, உணவு, உடை, கல்வி என அனைத்திலும் சமரசம் செய்துகொண்ட உறுப்பினர்கள். இவ்வாறான குடும்பத்தின் எளிமையான எதிர்பார்ப்புகளில் அடைபட்டு தன் பெற்றோரைப்போல அதே சமரச வாழ்வில் அடைபட்டுவிடக்கூடாது என்று தளைகளிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு சுதந்திரமாய் இருக்க விழைகிற நாயகி. ‘இது என் வாழ்க்கை, இதை எனக்கு விருப்பப்பட்ட முறையில்தான் வாழ்வேன்’ என்று பிடிவாதத்துடன் தனித்திருப்பவளின் கதை இந்த நாவல்.

பங்குச் சந்தையில் வியாபாரம், அன்றாடமும் சிறிய லாபம் அல்லது பெரிய நஷ்டம், ஏற்ற இறக்கங்களினால் தடுமாற்றம், சந்தையின் பிடி கிடைக்காமல் ஏமாற்றம், மன அழுத்தம், அதைச் சமாளிக்க புகை, போதை, காமம் என்று தன்னிச்சையான வாழ்வு.

மொத்த வாழ்வையும் ஒருவனிடமே ஒப்படைப்பது சாத்தியமில்லை என்பதைத் தீர்மானமாக நம்பும் அவள் திருமண பந்தத்தையும் அதன் சிக்கல்களையும் உதாசீனப்படுத்துவது இயல்புதான். ‘உடலின் தேவைக்கு அப்போதைக்கு ஒரு ஆண் உடனிருந்தால் போதும்’ என்ற தெளிவுடன் அந்த நேரத்தில் வாய்ப்பவனை மட்டும் தேடிக்கொள்பவள். அவள் யாரையும் அளவுக்கு மீறி நேசிப்பதுமில்லை, நம்புவதுமில்லை. அதேபோல வேறு யாரும் தன்மீது அளவுகடந்த நேசத்தைக் கொள்ளவோ நம்பிக்கை வைக்கவோ இடம் தருவதுமில்லை. பரமபதத்தின் பாம்பும் ஏணியையும்போலவே அவள் நட்பையும் உறவுகளையும்கூட அணுகுகிறாள்.

நடையுடை பாவனைகள், உணவுப்பழக்கம், விரும்பும் உல்லாச விருந்துகள், கட்டற்ற மனோபாவம், பணம் தேடும் வேட்கை என்று அவளது புற அடையாளங்கள் அனைத்துமே இந்தக் கதாபாத்திரத்துக்கு ஒட்டி வந்திருக்கும் அதே நேரத்தில் அவளது அகமும் விருப்பங்களும் பெண்களுக்கேயுரிய சில அழகியல்களோடும் ஈரத்துடனும் அமைந்திருப்பது தற்செயலானதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது. விதவிதமான மலர்களிலும் அவற்றின் நிறங்களிலும் மணங்களிலும் மனம் ஒன்றுகிறாள். உதிரும் இலைகளை ஆசையோடு பார்க்கிறாள். தரையில் நகரும் சருகைக்கூட கண்ணிமைக்காமல் கவனிக்கிறாள். குப்பையில் விழுந்து கிடக்கும் பறவையின் கூட்டை பத்திரப்படுத்துகிறாள். மழையின் ஈரத்தில் இரவு வானத்தில் ஆசுவாசம் கொள்கிறாள். வழக்கமான பெண்களுக்கல்லாத அவளது புற வாழ்க்கைக்கு மாறான அகம் இயல்பாக அமைந்திருப்பது அந்த கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மைக்கு மெருகேற்றுகிறது. ஆண்களிலும்கூட அவளை மென்மையாகக் கையாளும் வலுவான ஒருவனையே பிடித்திருக்கிறது.

சரி, விட்டு விடுதலையாதல் என்பது புகையும் போதையும் காமமுமாக வாழ்வைக் கழிப்பதுதானா? கட்டுப்பாடுகளிலிருந்து உடைத்துக்கொண்டு தன்னிச்சையாக இருப்பதுதானா? என்ற கேள்விகள் எழுவது இயல்புதான். விடுதலை என்பதை முதலில் பொருளாதாரம் சார்ந்த ஒன்றாக இந்த நாவல் அணுகுகிறது. பணம் எதையும் சாத்தியப்படுத்தும், பணத்தின்பொருட்டுதான் உலகின் பிற அனைத்தும் என்பதை உறுதியாக நம்புகிறாள் அவள். இந்த வாழ்வில் வெற்றி என்பது பணம்தான். பணத்தை தேடிக்கொள்ள முடியுமானால் அதை இந்த சமூகமும் உறவுகளும் அனுமதிக்கும். அனுசரித்துக் கொள்ளும். அதற்காக எல்லாவற்றையும் சமரசம் செய்துகொள்ளும் என்ற யதார்த்தத்தை முகத்தில் அறைந்தாற்போல சொல்கிறது நாவல். பங்குச் சந்தையில் வீழ்ச்சிகளை இயல்பாகவும் தங்களது போதாமைகளாகவும் சுலபமாக சிறிய மனச்சோர்வுடன் எடுத்துக்கொள்பவர்கள் சிறிய அளவு லாபத்தில்கூட அகமகிழ்கிறார்கள். அதுவே இந்த சமூக வாழ்வுக்கும் பொருந்தும் என்பதுதான் அவளது எண்ணம்.

பணம் ஈட்டுவது, அனுபவிப்பது என வாழ்வை அதன் போக்கில் அணுகுவது நாயகியின் இயல்பெனினும் அந்தந்த சந்தர்ப்பங்களில் இணைகளைத் தீர்மானிப்பது குறித்த முடிவுகளில் போதிய அளவு நம்பகத்தன்மை இல்லை. நண்பர்கள் தன்னை அவர்களது விருப்பப்படி உபயோகப்படுத்திக்கொள்வதை அனுமதிக்காதவள், முன்பின் அறிமுகமற்ற ஒருவனை ஒரு காஃபி ஷாப்பில் பார்த்தவுடனே அவன்மேல் ஈர்ப்பு கொள்கிறாள் என்பதும் முரண்தான்.

போக்குவரத்து நெரிசலால், அளவுகூடியுள்ள வெயிலால், மாசடைந்த சூழலால் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பெங்களூர் நகரத்தில் இன்னும் மிஞ்சியிருக்கும் மலர்களையும் அவற்றின் வாசகனைகளையும் இந்த நாவல் வெகு ரசனையுடன் சித்தரித்திருக்கிறது. இவ்வாறான அன்றாட சிக்கல்களையும் நெருக்கடிகளையும் பொருட்படுத்தாத சொகுசு வாழ்வின் ஆடம்பரங்களை ரசிக்கவும் தன்னையும் அதிலொருத்தியாக்கிக் கொள்ள விழையும் நாயகியின் மனம் வானத்திலேயே கவனமாயிருப்பதில் வியப்பேதுமில்லை.

நாவலின் மையக் கதாபாத்திரம் தளைகளை உடைத்து மேலெழும் இடபமாக அமைந்திருக்க, அதற்கு மாறாக ஆண் கதாபாத்திரங்கள் அனைத்துமே வாழ்வின் யதார்த்தமான இழுப்புக்குள் தம்மை ஒப்புக்கொடுப்பவர்களாகவே அமைந்துள்ளனர். குடும்பம், பொருளாதாரம் என்ற அடிப்படை தேவைகளுக்கும் வாழ்வின் அடுத்த நகர்வுக்கு ஒத்துவரும் முடிவுகளை நோக்கியே அவர்கள் ஒதுங்குகிறார்கள்.

‘இடபம்’ நாவலின் ஆசிரியரான பா.கண்மணி சில கதைகளையும் ஒரு குறுநாவலையும் எழுதியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், முதல் நாவலுக்கான குழப்பங்களோ தடுமாற்றங்களோ இல்லாமல் இயல்பான சித்தரிப்பும் எளிய நேர்த்தியான கதை சொல்லலுமாய் நாவல் மிகுந்த வாசிப்புத் தன்மையுடன் அமைந்துள்ளது.

சவாலான புதிய களத்தில் இயல்புக்கு மாறான கதாபாத்திரத்தை மையமாகக்கொண்டு நுகர்வுக் கலாச்சாரத்தில் திளைக்கும் இன்றைய பெருநகர வாழ்வை அதன் பல்வேறு நிறங்களோடும் நிழல்களோடும் நேர்த்தியாகச் சித்தரித்துள்ள வகையில் ‘இடபம்’ நாவல் ஒரு முக்கியமான வரவு.

Thursday 1 April 2021

திருலோக சீதாராம் – இலக்கியப் படகு

 




விஜயா வேலாயுதம் அவர்களின் நெடுநாள் கனவு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென, தமது புத்தகக் கடை வளாகத்திலேயே ஒரு அரங்கை ஏற்பாடு செய்யவேண்டுமென்பது. அந்தக் கனவு இப்போது நிறைவேறியுள்ளது.  ‘ரோஜா முத்தையா’ அரங்கம் எனப் பெயரிடப்பட்ட அந்த அரங்கில் நூறு பேர் வரை அமரும் வசதியுள்ளது.

ஏப்ரல் முதல் தேதி, திருலோக சீதாராம் அவர்களின் பிறந்த நாள். எனவே, நேற்று அந்த அரங்கில், ரவி சுப்பிரமணியம் இயக்கிய ‘திருலோகம் எனும் கவி ஆளுமை’ ஆவணப்படம் திரையிடப்பட்டது.

திருலோக சீதாராம் என்ற பெயர் எனக்கு அறிமுகமானது ஹெர்மன் ஹெஸ்ஸேயின் ‘சித்தார்த்தன்’ நாவல் வழியாகத்தான். பிறகு, புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு போன்ற எழுத்தாளர்களைப் பற்றிய நினைவுக் குறிப்புகளினூடே இந்தப் பெயரைக் கவனித்திருக்கிறேன். ‘சிவாஜி’ இதழை திருச்சியிலிருந்து நடத்தியவர் என்ற விபரம் தெரியும். இந்த அளவுக்குத்தான் அவரைப் பற்றிய சித்திரம் எனக்குள் இருந்தது.

இந்த நிகழ்வைப் பற்றிய செய்தி கிடைத்தவுடன், கோவை சிறுவாணி வாசக மையம் வெளியிட்டிருந்த ‘இலக்கியப் படகு’ நூலைப் பெற்று வாசித்தேன். திருலோக சீதாராமைப் பற்றி இதுவரையிலும் தெரிந்துகொள்ளாமல், இந்தப் புத்தகத்தை வாசிக்காமல் இருந்தது என்னை குறுகச் செய்தது.

திருலோக சீதாராம் பற்றி ரவி சுப்பிரமணியம் எழுதியக் கட்டுரை அவரைப் பற்றிய தெளிவான அறிமுகத்தைத் தருவது. தமது பத்தொன்பது வயது முதல் இறுதி நாள் வரையிலும் சிறுபத்திரிகையாளராகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார். தம்மை பாரதியின் சுவீகாரப் புத்திரனாக அறிவித்துக்கொண்டு ஒவ்வொரு வருடமும் பாரதிக்காக திதிகொடுத்திருக்கிறார். செல்லம்மாள் பாரதியையும், அவரது குடும்பத்தையும் இறுதி நாட்களில் திருச்சியில் வைத்துப் பேணியிருக்கிறார். பாரதியின் பாடல்களை மேடைகள்தோறும் உரத்த குரலில் பாடியிருக்கிறார். பாஞ்சாலி சபதத்தை மூன்று மணி நேரம் காலசேட்பம்போல நிகழ்த்திக் காட்டுவார்.

திருலோக சீதாராம் தமது ‘சிவாஜி’ இதழில் எழுதிய கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் ‘இலக்கியப் படகு’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு கலைஞன் பதிப்பகம் 1969ல் வெளியிட்டது. இந்தக் கட்டுரைகள் திருலோக சீதாராம் அவர்களின் சித்திரத்தை வியப்பும் நிறைவும் தரும் வகையில் முழுமையாக்குகின்றன.

இந்த நூலில் உள்ள கட்டுரைகளைப் படிக்கும்போது எழும் முதல் ஆச்சரியம், திருலோக சீதாராமின் மொழியாளுமை. இரண்டு அல்லது மூன்று பக்க அளவிலான சிறிய கட்டுரைகள். லட்சியம், கடமை, வாழ்வின் சேமிப்பு போன்று பொதுத் தலைப்புகளில் சில கட்டுரைகள். காரைச் சித்தர், நினைவாற்றல், ரயில் பிச்சை, ஒரு கவிஞர் என்று நினைவுக் குறிப்புகள், மொழிப் புலமை, வரி வடிவம், பேச்சும் எழுத்தும், சின்மயாங்கிலம் போன்று மொழி சார்ந்த எண்ணங்கள், கடலும் கிழவனும், பிரம்மரிஷி ‘ஹெஸ்’, இலக்கியச் சித்தர் என இலக்கியம் சார்ந்த பதிவுகள் என இந்தக் கட்டுரைகளின் பேசுபொருள் பலதரப்பட்டவை. ஆனால், இக் கட்டுரைகளை எழுதியிருக்கும் விதமும் அவற்றிலுள்ள மொழிநேர்த்தியும் வியக்கச் செய்கின்றன.

இந்தக் கட்டுரைகள் 1961 முதல் 1973 வரையிலான காலகட்டங்களில் எழுதப்பட்டவை. ஆனால், இன்றும் இவை வாசிப்புச் சுவை குன்றாதிருக்கின்றன. மொழியில் சிறிதும் குழப்பமில்லை. செறிவும் கச்சிதமுமான வாக்கியங்களுடன் மிகக் கச்சிதமாக எழுதப்பட்டுள்ளன.

‘சும்மா’ என்ற தலைப்பிலுள்ள ஒரு கட்டுரையில் கோவை ஜி.டி.நாயுடுவுடனான சந்திப்பைக் குறிப்பிட்டுள்ளார். ஜி.டி.நாயுடுவின் வீட்டு வாசலில் ‘இங்கு யாருக்கும் எவ்வித உதவியோ, சிபாரிசோ, நன்கொடையோ, ஒரு டம்ளர் தண்ணீரோ கூடக் கிடைக்காது. வீணில் காத்திருந்து நீங்கள் நேரத்தைப் பாழாக்கிக் கொள்ளவேண்டாம்’ என்றொரு புத்திமதி விளம்பரத்தைத் தொங்கவிட்டிருந்ததைப் பற்றி எழுதியுள்ளார்.

இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு எழுத்தாளர்களை அழைக்கும் கல்லூரிகளைப் பற்றி ‘பேச்சுக்குப் பொருள்’ என்ற கட்டுரையில் சொல்லியுள்ளார். கலையை வெறுங்காசுக்கு விற்கக் கூடாது என்பதற்காக ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு பவுன் கொடுத்தால் மட்டுமே பேசுவது என்று இவர் நிபந்தனை விதிக்கிறார். ஒரு கல்லூரித் தலைவர் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து கேட்கிறார் ‘தங்களைப் போன்ற அறிஞர்ககள் மாணவர் நலத்துக்கு அறிவுரை வழங்க பவுன் கேட்கலாமா? குழந்தைகளிடம் கூடவா கூலி கேட்பது?’.

‘உங்கள் கல்லூரியில் மாணவர்களிடம் சம்பளமே வாங்குவதில்லையென்பது எனக்குத் தெரியாது. ஆசிரியர்கள் அனைவரும் ஊதியமின்றியே மாணவர்களுக்குக் கற்பிக்கிறீர்கள் என்பதையும் அறியேன். இப்படி ஒரு தர்மக் காலேஜ் நம் ஊரிலே நடப்பதை இதுவரை அறியாமல் இருந்துவிட்டேன். என் அறியாமையை மன்னிக்கவேண்டும்’ என்று சொன்னதும், தலைவர் டெலிபோனை கீழே வைத்துவிட்டார்.

இந்தக் கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு 1961. ஆனால், இன்றும் எழுத்தாளர்களை தங்கள் கல்லூரியின் விழாக்களுக்கு அழைக்கும் கல்லூரிகள் பலவற்றிலும் இதே நிலைதான். ‘எழுத்தாளன்தானே, வந்து நாலு வார்த்தை பேசிவிட்டுப் போகட்டும், பாவம்’ என்ற மனப்பான்மை மாறவேயில்லை.

‘சிபாரிசு’ என்று ஒரு கட்டுரை. பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் இடம் பெறும் பொருட்டு நடக்கும் சிபாரிசுகளையும் அதன் கேலிக்கூத்துகளையும் விவரிப்பது. ‘பள்ளிக்கூடத்தில் மாணவனுக்கு இடம் பிடிப்பதைப்போல சாகஸமான காரியம் இந்தக் காலத்தில் வேறொன்றுமில்லை. அறிவு குறைந்தவர்களுக்கு அறிவு கற்பிக்க வேண்டியிருக்க, அதிக மார்க் வாங்கிய பையனைத்தான் சேர்த்துக்கொள்வோம் என்று அடம் பிடிப்பவர்கள் கல்விச் சாலை நடத்தவில்லை, கல்விக் கடை அதுவும் கள்ளச் சந்தை நடத்துகிறவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்’ என்று சாடுகிறார்.

அதே கட்டுரையில் இன்னொரு இடத்தில் ‘இந்த வருஷம் இஞ்சினியரிங் முடித்தவர்களில் பலருக்கு இன்னமும் நியமனம் கிடைக்கவில்லை. இந்த வருஷம் சற்று தாமதித்தாவது நியமனம் கிடைக்கும். அடுத்து வருகின்ற ஆண்டுகளில் இஞ்சினியர்களும் எஞ்சிக் கிடப்பார்கள் என்று விஷயம் தெரிந்த வட்டாரத்தில் தகவல் கிடைக்கிறது’ என்று எழுதியுள்ளார். எழுதப்பட்ட ஆண்டு 1961.

‘இருளும் ஒளியும்’ என்ற கட்டுரை வள்ளலார் எழுதிய ‘ஷண்முகர் காலைக் கும்மி’யில் உள்ள ‘பொற்கோழி’ என்ற சொல்லிலிருந்து தொடங்குகிறது. ‘பொழுது புலர்ந்தது, பொற்கோழி கூவிற்று…’ என்னும் வரியிலுள்ள அந்தச் சொல்லை வியந்து அதிலிருந்து ஒளியையும் இருளையும் குறித்து தத்துவார்த்தமாகவும் கவித்துவமாகவும் சொல்லிக் கொண்டே போகிறார் திருலோகம். அவரது மொழியாளுமைக்கும் தெளிந்த சிந்தைக்கும் இக்கட்டுரை சிறந்த உதாரணம்.

திருலோக சீதாராம் எட்டாம் வகுப்பு வரையில்தான் பள்ளிக் கல்வி கற்றார். ஆனால், தமிழ்ப் பாடல்களை அடிபிறழாமல் பாடுவார். தமிழில் தெளிவாக எழுதுவார்.. இதற்குக் காரணமாக அவர் குறிப்பிடுவது, தொண்டைமான் துறையில் வசித்த அந்தகக்கவி ராமசாமி படையாட்சியையே. அதிகாலையில் ஆற்றங்கரையில் கிழக்கு நோக்கி அமர்ந்து அவர் பாடல்களைச் சொல்ல பதிமூன்று வயதுச் சிறுவனான சீதாராம் அவற்றைத் திருப்பிச் சொல்லுவார். ஒரு நாளைக்குப் பத்துப் பாடல்கள். மறுநாள் அவற்றை ஒப்பிக்கவேண்டும். ஒருநாள் அவ்வாறு ஒப்பிக்கமுடியாமல் திணறியபோது, அந்தகக்கவி பிரம்மராக்ஷஸிடம் சிக்கிக்கொண்ட அவ்வையாரைப் பற்றியக் கதையைச் சொல்லியிருக்கிறார். அஷ்டாவதானம் வீராச்சாமி செட்டியார் எழுதிய ‘விநோதரஸமஞ்சரி’யில் உள்ள கதை அது. வெண்பாவை இரண்டு தடவை படித்ததும் மனனமாகிவிடவேண்டும், இல்லையேல் பேய் வந்து பிடித்துக்கொள்ளும் என்ற அச்சம். அந்த அச்சமே ஆர்வமாகவும் முயற்சியாகவும் திரண்டு சீதாராமின் இயல்பாக மாறிப்போயின.

திருலோக சீதாராம் கவிதைகள் எழுதியுள்ளார்.. அவைத் தொகுப்பாகவும் வெளியாகியுள்ளன. ஆனால், அவற்றை ஒருபோதும் அவர் முன்னிறுத்தியதில்லை. சக எழுத்தாளர்களுக்கும் இளம் படைப்பாளிகளுக்குமே ‘சிவாஜி’ இதழில் முக்கியத்துவம் தந்தார். 1935ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘சிவாஜி’ இதழ் 1973ம் ஆண்டு, அவர் இறக்கும் வரையிலும், தொடர்ந்து வெளிவந்தது. பத்திரிகை நடத்துவதைத் தவிர வேறெந்த தொழிலிலும் அவர் மனம் குவியவில்லை.

‘நமது அறிவுக்குத் தெரிகின்ற ஒன்று நம்முடைய வாழ்வு. கட்டுக்கும் இது அடங்கும் என்று கண்டுபிடித்த காரணத்தினால்தான் நாகரிகம் என்பது உருவாகியிருக்கிறது. வாழ்வைக் கட்டுக்கடக்குகின்ற பெருமுயற்சிதான் மனித வரலாறு. அந்த முயற்சியின் தோல்விகளே அரசியல். அந்த முயற்சியின் நம்பிக்கையே ஆன்மீகம்’ (தேடும் பொருள்) என்ற தெளிவு அவருக்கிருந்தது.

ஹெமிங்கேயின் மறைவை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரையில், ‘கடலும் கிழவனும்’ நாவலுக்காக ஹெமிங்கேவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதைப் பற்றி ‘இலக்கியக் கொள்கைகளையும் விமர்சகர்களின் கழுகுப் பார்வைகளையும் தப்பி ஒரு உன்னதமான நூல் உருவாக முடியும். அதை உணரக்கூடியவர்களும் உலகத்தில் இருக்கிறார்கள் என்ற நன்னம்பிக்கையை நமக்குத் தருகிறது ஹெமிங்வேயின் சாதனை’ என்று சொல்லிவிட்டு,  ‘நம்முடைய நாட்டில் சாகித்ய அகாடமிகளைப் பார்த்து அவநம்பிக்கையும் சோர்வும் கொண்டுள்ள நமது எழுத்தாளர்களுக்கு ஹெமிங்வேயின் வெற்றி ஒரு நம்பிக்கை முனை’ என்றும் அழுத்தமாகச் சொல்லுகிறார்.

இதுபோன்ற இலக்கிய அரசியல், மொழி அரசியல் மட்டுமன்றி பொது அரசியல் குறித்துமான பல பத்திகள் இத்தொகுப்பில் உள்ளன.

இத்துடன் ‘ககன குளிகை’, ‘கலெக்டர் தாத்தா’, ‘கைத்தடி’ போன்ற சில கட்டுரைகள் நல்ல சிறுகதைக்கான உள்ளடக்கத்துடனும் சித்தரிப்புடனும் அமைந்துள்ளன.

‘வாழ்வின் சேமிப்பு’ என்ற கட்டுரை இந்த வாழ்வின் பொருள் பற்றிய சிந்தனைகளைப் பேசுகிறது. ‘ஒரு நாளும் திரும்பி வராத தொலைதேசம் செல்லும் நாய் வழியிடையில் தான் கௌவி வந்த எலும்பை, சுவடறியாத பாலை மணல்வெளியில் புதைத்து வைத்துவிட்டுப்போவது வியப்பாக இல்லையா என்கிறார் கலீல் கிப்ரான். இப்போதைக்கு நமக்கு தமிழும் கவிதையும் ரசனையும் ரசிகர்களும் என்ற வட்டத்துக்கு வெளியேயுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஒவ்வொரு கணமும் இனிமை. ஒவ்வொரு மாற்றமும் விளையாட்டு. எதிலும் சிக்கி உழலாத மனம். வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது. இது போதும். வாழ்வின் சேமிப்பும் அதன் பயனும் வாழ்வுதான்’ என்று அந்தக் கட்டுரை முடிகிறது.

நஷ்டமா? புதிதாகத் தொழில் செய்வோம்

சாவா? நாம் செய்வதற்கொன்றுமில்லை

வெற்றியா? அது ஒன்றும் பெரிதில்லை

நோவா? மருந்துண்போம்

காட்சியா? கண்டுகளிப்போம்

சங்கீதமா? கேட்டு மகிழ்வோம்

 

என்பதுதான் திருலோக சீதாராமின் கவலையற்ற துணிச்சல் குணம்.

‘இலக்கியப் படகு’ என்ற இந்த நூல் திருலோக சீதாராமின் பன்முகத் தன்மையை மிகத் துலக்கமாக நமக்குக் காட்டும் ஒன்று. இதன் மூன்றாவது பதிப்பை கோவை, சிறுவாணி வாசக மையம் வெளியிட்டுள்ளது.

இதை வாசித்த கையோடு, ‘திருலோகம் எனும் கவி ஆளுமை’ ஆவணப்படத்தைப் பார்க்க நேர்ந்தபோது, வியப்பளிக்கும் ஓர் மனிதரை முழுமையாக அறிந்துகொண்ட நிறைவு ஏற்பட்டது.

இந்த உணர்வுக்கு வலுசேர்க்கும் வகையிலான இன்னொரு செய்தியைக் குறிப்பிடவேண்டும். திருலோக சீதாராமின் மேல் மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர் ஜெயகாந்தன். அவரது இறுதிகாலத்தில், சென்னையில் தங்க நேர்ந்தபோது இரண்டு நாட்கள் அவருக்கு காரோட்டியாக இருந்திருக்கிறார் ஜெயகாந்தன்.

1973ம் ஆண்டு தமது ஐம்பத்தி ஆறாவது வயதில் திருலோக சீதாராம் மறைந்தார். அப்போது ஜெயகாந்தன் ‘திருலோக சீதாராம் என்பவர் சதா இங்கே திர்ந்துகொண்டிருக்கும் சித்த புருஷர்களில் ஒருவர். அவர் நமக்குத் தோற்றம் காட்டியதும் நம்மிடம் துலங்கியதும் ஒரு அருள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல, திருலோக சீதாராமை தமது ஆசிரியராக வரித்துக்கொண்ட இன்னொருவர் டி.என்.இராமசந்திரன். ஆவணப்படம் முழுக்க அவருடனான பல நெகிழ்வான தருணங்களை அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

‘அவர் ஒவ்வொரு மாதமும் கணக்குப் பார்க்கும் வழக்கம்கொண்டவர். தன் வாழ்வில் ஒருநாளும் அதைத் தவறவிட்டதில்லை. அவர் மரணமடைந்த நாள் 1973ம் ஆண்டு ஆகஸ்ட், 23. அன்று மாலையிலும் கணக்குப் பார்த்த அவர், கடைசியாக ‘கணக்குத் தீர்ந்தது’ என்று எழுதி வைத்திருந்தார்’ என்று கண்ணீர் மல்க குறிப்பிட்டது மறக்க முடியாத காட்சி.

‘வாழ்வின் சேமிப்பும் அதன் பயனும் வாழ்வுதான்’ எனும் அவரது வாக்கு மீண்டும் மீண்டும் உள்ளுக்குள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

 

 

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...