Monday 12 April 2021

தமிழ் இதழியலின் சுவையான சில பக்கங்கள்

 


ஓவியம் : ஜீவா

சம்பவம் ஒன்று

கும்பகோணத்தைச் சேர்ந்த அந்த எழுத்தாளர் தன் மகளின் கல்யாணத்துக்கு பண உதவி கேட்டு பிரபல வாரப் பத்திரிகையின் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுகிறார். பாவம், கஷ்டப்படுகிற எழுத்தாளர் என்ற இரக்கம் ஏற்படுகிறது ஆசிரியருக்கு. அதனால், பத்திரிகையுடன் நெருங்கிய பழக்கமில்லாத எழுத்தாளராக இருந்தும் ஐந்நூறு ரூபாய்க்குச் செக் அனுப்பி வைத்தார்.

ஆனால், இரண்டு நாளில் செக்கைத் திருப்பி அனுப்பிவிட்டார் எழுத்தாளர்,  அது மிகக் குறைந்த தொகை என்பதால் ஏற்கமாட்டேன் என்ற குறிப்புடன். ( ஐந்நூறு ரூபாய் என்பது இந்த நாளில் சிறிய தொகையாகத் தோன்றலாம். இருபது இருப்பத்தைந்து வருடங்களுக்கு முன் அது நால்ல தொகைதான்.)

ஆசிரியருக்குக் கோபம் ஏற்படவில்லை. அனுதாபம்தான் ஏற்பட்டது. ‘என்ன இவர், சுத்த உலகம் தெரியாத மனிதராயிருக்கிறார்! கல்யாணச் செலவு மொத்தத்தையும் நான் ஏற்றுக்கொள்வேன் என்று எதிர்பார்த்தாரா என்ன?’ என்றவர், நிருபரைக் கூப்பிட்டு ‘இவர் இப்படிப் பணத்தைத் திருப்பி அனுப்பியது இவர் மனைவிக்குத் தெரிந்திருக்காது. பணத்தின் அருமை பெண்களுக்குத்தான் புரியும். நீங்கள் அந்த அம்மாவைப் பார்த்துக் கொடுத்துவிடுங்கள்’ என்று சொல்லி, ஐந்நூறு ரூபாயை மறுபடியும் ரொக்கமாகவே அனுப்பிவைத்தார். எழுத்தாளரின் மனைவியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

சம்பவம் இரண்டு

சக்தி அதிபர் கொண்டுவரும் புத்தகங்களையெல்லாம் கரைத்துக் குடிப்பார் அந்த எழுத்தாளர். சக்தி இதழில் வரவேண்டிய விஷயங்களைத் தேர்ந்தெடுத்துத் தரும் பொறுப்பில் இருந்தவர் அவர். ஒருமுறை நேரு எழுதி ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ புத்தகத்தை அலுவலகத்தில் இருக்கும்வரை படித்துக் கொண்டிருந்தார். இருட்டிவிட்டது. அது கனமான பெரிய புத்தகம்.

“வீட்டுக்கு எடுத்துப்போய்ப் படியுங்களேன்” என்றான் அவன்.

“நீங்கள் என் ரூமைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார் எழுத்தாளர்.

“இல்லை.”

“அதனால்தான் சொல்கிறீர்கள். இந்தப் புத்தகத்தை என் ரூமுக்கு எடுத்துக்கொண்டு போனால் அதை உள்ளே வைத்துவிட்டு நான் வெளியேதான் படுக்கவேண்டும்” என்று சொல்லி சிரித்தார் எழுத்தாளர். வாயின் ஓரமாக வரும் அந்த மாதிரி சிரப்பை அவன் வேறு எவரிடமும் பார்த்தது கிடையாது. குருவிக் கூடு போன்ற சிறிய அறயில் ஒண்டியிருக்கும் வாழ்க்கையிலும் ஒரு நகைச்சுவையைக் கண்ட யதார்த்தவாதி அந்த எழுத்தாளர்.

0

இந்த இரண்டு சம்பவங்களும் இடம்பெற்றிருப்பது ‘அவன்’ என்ற புத்தகத்தில். கடந்த ஞாயிறு (11.04.2021) கோவையில் நடைபெற்ற சிறுவாணி வாசகர் மையத்தின் ‘நாஞ்சில்நாடன் விருது’ வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பரிசளிக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று அது. எழுதியவர் ரா.கி.ரங்கராஜன். என்னுடைய பள்ளிக்காலத்தில் அறிமுகமான பெயர். அவருடைய சிறுகதைகளையும் நாவல்களையும் மொழியாக்கங்களையும் வெவ்வேறு பெயர்களில் எழுதிய பத்திகளையும் தொடர்ந்து படித்திருக்கிறேன்.

இந்த நூலை சுயசரிதைக் குறிப்புகள் என்று சொல்லலாம். எழுத்தாளராக வேண்டும் என்று சிறுவயதிலேயே துளிர்த்திருந்த கனவை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்ட நாட்களில் தொடங்கி, சென்னையில் பல்வேறு இடங்களில் அலைந்து வெவ்வேறு ஆளுமைகளைச் சந்தித்ததையும் வேலை பார்த்ததையும் மிகுந்த சுவாரஸ்யத்துடன் எழுதியுள்ளார் ரா.கி.ரா.

ரா.கி.ரா தனது 23வது வயதில் தொடங்கி அறுபத்தி ஐந்து வயது வரை ( 1950 முதல் 1993 வரை ) நாற்பது ஆண்டு காலம் குமுதத்தில் பணிபுரிந்தார். அதற்கு முந்தைய காலகட்டத்தின் பல சுவையான சம்பவங்களையும் குமுதத்தில் வேலைபார்த்த போது நடந்த சிலவற்றையும் சுருக்கமாகவும் திருத்தமாகவும் சொல்லியிருக்கிறார்.

மாலனின் தூண்டுதலால் எழுதப்பட்ட இது ‘குங்குமம்’ இதழில் தொடராக வெளிவந்திருக்கிறது.

இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளவை ரா.கி.ராவின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்றாலும் தமிழ் இதழியல் வரலாற்றின் ஒரு பகுதி என்று இதைச் சொல்ல முடிகிற அளவுக்கு, அந்த காலத்தில் வெளியான பத்திரிகைகள், அவற்றின் ஆசிரியர்கள், ஓவியர்கள் குறித்த பல சம்பவங்களும் சித்தரிப்புகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

‘சக்தி’ இதழில் ரா.கி.ரா பணிபுரிந்த இரண்டரை ஆண்டு காலத்தில் ‘சக்தி’ காரியாலயம் ( இப்போதுள்ள மியூசிக் அகாதமி ) வளாகத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

‘கலைமகள்’ கி.வா.ஜ, கல்கி, ‘ரசிகமணி’ டி.கே.சி, வ.ரா, சக்தி வை கோவிந்தன், கண்ணதாசன், ராஜாஜி, ஜி.டி.நாயுடு, பொள்ளாச்சி மகாலிங்கம், பெ.தூரன், அரு.ராமநாதன், பெ.நா.அப்புஸ்வாமி, எஸ்.வி.வி, பம்பாபதி, ஓவியர்கள் ரவி, தாணு, சில்பி, ‘நாடோடி’, சிதம்பர ரகுநாதன், வலம்புரி சோமநாதன், ‘சரஸ்வதி’ விஜயபாஸ்கரன், ‘வானதி’ திருநாவுக்கரசு என பலரைக் குறித்த அபூர்வமான பதிவுகளும் ‘காதல்’ (அரு.ராமநாதன்), காலச்சக்கரம் (பெ.தூரன்), ‘ஹனுமான்’ (சக்தி), ‘சமரன்’, ‘சரஸ்வதி’ (விஜயபாஸ்கரன்), ‘ஜில்ஜில்’ (வானதி நடத்திய குழந்தைகள் இதழ்), ‘ஜிங்லி’ (குமுதம் குழுமத்திலிருந்த வெளியான சிறுவர் இதழ்) என அந்தக் காலத்தில் வெளியான இதழ்களைக் குறித்த தகவல்களும் இந்த நூலின் சிறப்பு.



தமிழில் பொது வாசகர்களை உருவாக்கியதில் ‘கல்கி’, ‘குமுதம்’, ‘விகடன்’ போன்ற வார இதழ்களின் பங்கு முக்கியமானது. ஒவ்வொரு இதழும் தனக்கான வாசகர்களை உருவாக்கி வளர்த்தது. அதே சமயத்தில் ஒன்றையொன்று இட்டுநிரப்புபவையாகவும் விளங்கின. இந்த நூலின் வழியாக அந்த இதழ்களைக் குறித்து இப்போது யோசிக்கும்போது அவ்வாறான இதழ்கள் இன்று இல்லாமல்போனது எத்தனை பெரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது என்பதை உணரமுடிகிறது. வெகுஜன ரசனைக்கான இதழ்களாகவே அவை இருந்தன இன்று அவற்றைக் குறித்து விமர்சிக்கலாம். ஆனால், எளிய ஒரு வாசகன் அவ்வாறான இடத்திலிருந்துதான் படிக்கத் தொடங்குகிறான். புத்தகங்களின் உலகத்துக்குள் நுழைகிறான்.

கடந்து ஐம்பது ஆண்டுகளில் வெளியான பல்வேறு வார, மாத இதழ்களைக் குறித்த ஆய்வும் அவை தமிழ் வாசக ரசனையில் ஏற்படுத்திய மாற்றங்களைக் குறித்துமான சீரிய பதிவுகள் தமிழில் வெளிவரவேண்டியதின் அவசியத்தை ரா.கி.ரா வின் இந்த நூல் உணர்த்துகிறது.

0

முதல் சம்பவத்தில் மகளின் கல்யாணத்துக்கு உதவி கேட்ட எழுத்தாளர், கரிச்சான் குஞ்சு. பத்திரிகை ஆசிரியர் ‘குமுதம்’ எஸ்.ஏ.பி.

இரண்டாவது சம்பவத்தில் சொல்லப்பட்டிருக்கும் எழுத்தாளர் கு.அழகிரிசாமி.

0

 

1 comment:

  1. சிறப்பு. இன்றைய தலைமுறை வாசகனிடம் கடத்தப்பட வேண்டிய தகவல்.

    ReplyDelete

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...