விஜயா வேலாயுதம்
அவர்களின் நெடுநாள் கனவு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென, தமது புத்தகக் கடை வளாகத்திலேயே
ஒரு அரங்கை ஏற்பாடு செய்யவேண்டுமென்பது. அந்தக் கனவு இப்போது நிறைவேறியுள்ளது. ‘ரோஜா முத்தையா’ அரங்கம் எனப் பெயரிடப்பட்ட அந்த
அரங்கில் நூறு பேர் வரை அமரும் வசதியுள்ளது.
ஏப்ரல் முதல் தேதி,
திருலோக சீதாராம் அவர்களின் பிறந்த நாள். எனவே, நேற்று அந்த அரங்கில், ரவி சுப்பிரமணியம்
இயக்கிய ‘திருலோகம் எனும் கவி ஆளுமை’ ஆவணப்படம் திரையிடப்பட்டது.
திருலோக சீதாராம்
என்ற பெயர் எனக்கு அறிமுகமானது ஹெர்மன் ஹெஸ்ஸேயின் ‘சித்தார்த்தன்’ நாவல் வழியாகத்தான்.
பிறகு, புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு போன்ற எழுத்தாளர்களைப் பற்றிய
நினைவுக் குறிப்புகளினூடே இந்தப் பெயரைக் கவனித்திருக்கிறேன். ‘சிவாஜி’ இதழை திருச்சியிலிருந்து
நடத்தியவர் என்ற விபரம் தெரியும். இந்த அளவுக்குத்தான் அவரைப் பற்றிய சித்திரம் எனக்குள்
இருந்தது.
இந்த நிகழ்வைப்
பற்றிய செய்தி கிடைத்தவுடன், கோவை சிறுவாணி வாசக மையம் வெளியிட்டிருந்த ‘இலக்கியப்
படகு’ நூலைப் பெற்று வாசித்தேன். திருலோக சீதாராமைப் பற்றி இதுவரையிலும் தெரிந்துகொள்ளாமல்,
இந்தப் புத்தகத்தை வாசிக்காமல் இருந்தது என்னை குறுகச் செய்தது.
திருலோக சீதாராம்
பற்றி ரவி சுப்பிரமணியம் எழுதியக் கட்டுரை அவரைப் பற்றிய தெளிவான அறிமுகத்தைத் தருவது.
தமது பத்தொன்பது வயது முதல் இறுதி நாள் வரையிலும் சிறுபத்திரிகையாளராகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
தம்மை பாரதியின் சுவீகாரப் புத்திரனாக அறிவித்துக்கொண்டு ஒவ்வொரு வருடமும் பாரதிக்காக
திதிகொடுத்திருக்கிறார். செல்லம்மாள் பாரதியையும், அவரது குடும்பத்தையும் இறுதி நாட்களில்
திருச்சியில் வைத்துப் பேணியிருக்கிறார். பாரதியின் பாடல்களை மேடைகள்தோறும் உரத்த குரலில்
பாடியிருக்கிறார். பாஞ்சாலி சபதத்தை மூன்று மணி நேரம் காலசேட்பம்போல நிகழ்த்திக் காட்டுவார்.
திருலோக சீதாராம்
தமது ‘சிவாஜி’ இதழில் எழுதிய கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றிலிருந்து ஐம்பதுக்கும்
மேற்பட்ட கட்டுரைகள் ‘இலக்கியப் படகு’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு கலைஞன் பதிப்பகம்
1969ல் வெளியிட்டது. இந்தக் கட்டுரைகள் திருலோக சீதாராம் அவர்களின் சித்திரத்தை வியப்பும்
நிறைவும் தரும் வகையில் முழுமையாக்குகின்றன.
இந்த நூலில் உள்ள
கட்டுரைகளைப் படிக்கும்போது எழும் முதல் ஆச்சரியம், திருலோக சீதாராமின் மொழியாளுமை.
இரண்டு அல்லது மூன்று பக்க அளவிலான சிறிய கட்டுரைகள். லட்சியம், கடமை, வாழ்வின் சேமிப்பு
போன்று பொதுத் தலைப்புகளில் சில கட்டுரைகள். காரைச் சித்தர், நினைவாற்றல், ரயில் பிச்சை,
ஒரு கவிஞர் என்று நினைவுக் குறிப்புகள், மொழிப் புலமை, வரி வடிவம், பேச்சும் எழுத்தும்,
சின்மயாங்கிலம் போன்று மொழி சார்ந்த எண்ணங்கள், கடலும் கிழவனும், பிரம்மரிஷி ‘ஹெஸ்’,
இலக்கியச் சித்தர் என இலக்கியம் சார்ந்த பதிவுகள் என இந்தக் கட்டுரைகளின் பேசுபொருள்
பலதரப்பட்டவை. ஆனால், இக் கட்டுரைகளை எழுதியிருக்கும் விதமும் அவற்றிலுள்ள மொழிநேர்த்தியும்
வியக்கச் செய்கின்றன.
இந்தக் கட்டுரைகள்
1961 முதல் 1973 வரையிலான காலகட்டங்களில் எழுதப்பட்டவை. ஆனால், இன்றும் இவை வாசிப்புச்
சுவை குன்றாதிருக்கின்றன. மொழியில் சிறிதும் குழப்பமில்லை. செறிவும் கச்சிதமுமான வாக்கியங்களுடன்
மிகக் கச்சிதமாக எழுதப்பட்டுள்ளன.
‘சும்மா’ என்ற
தலைப்பிலுள்ள ஒரு கட்டுரையில் கோவை ஜி.டி.நாயுடுவுடனான சந்திப்பைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜி.டி.நாயுடுவின் வீட்டு வாசலில் ‘இங்கு யாருக்கும் எவ்வித உதவியோ, சிபாரிசோ, நன்கொடையோ,
ஒரு டம்ளர் தண்ணீரோ கூடக் கிடைக்காது. வீணில் காத்திருந்து நீங்கள் நேரத்தைப் பாழாக்கிக்
கொள்ளவேண்டாம்’ என்றொரு புத்திமதி விளம்பரத்தைத் தொங்கவிட்டிருந்ததைப் பற்றி எழுதியுள்ளார்.
இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு
எழுத்தாளர்களை அழைக்கும் கல்லூரிகளைப் பற்றி ‘பேச்சுக்குப் பொருள்’ என்ற கட்டுரையில்
சொல்லியுள்ளார். கலையை வெறுங்காசுக்கு விற்கக் கூடாது என்பதற்காக ஒரு நிகழ்ச்சிக்கு
ஒரு பவுன் கொடுத்தால் மட்டுமே பேசுவது என்று இவர் நிபந்தனை விதிக்கிறார். ஒரு கல்லூரித்
தலைவர் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து கேட்கிறார் ‘தங்களைப் போன்ற அறிஞர்ககள் மாணவர்
நலத்துக்கு அறிவுரை வழங்க பவுன் கேட்கலாமா? குழந்தைகளிடம் கூடவா கூலி கேட்பது?’.
‘உங்கள் கல்லூரியில்
மாணவர்களிடம் சம்பளமே வாங்குவதில்லையென்பது எனக்குத் தெரியாது. ஆசிரியர்கள் அனைவரும்
ஊதியமின்றியே மாணவர்களுக்குக் கற்பிக்கிறீர்கள் என்பதையும் அறியேன். இப்படி ஒரு தர்மக்
காலேஜ் நம் ஊரிலே நடப்பதை இதுவரை அறியாமல் இருந்துவிட்டேன். என் அறியாமையை மன்னிக்கவேண்டும்’
என்று சொன்னதும், தலைவர் டெலிபோனை கீழே வைத்துவிட்டார்.
இந்தக் கட்டுரை
எழுதப்பட்ட ஆண்டு 1961. ஆனால், இன்றும் எழுத்தாளர்களை தங்கள் கல்லூரியின் விழாக்களுக்கு
அழைக்கும் கல்லூரிகள் பலவற்றிலும் இதே நிலைதான். ‘எழுத்தாளன்தானே, வந்து நாலு வார்த்தை
பேசிவிட்டுப் போகட்டும், பாவம்’ என்ற மனப்பான்மை மாறவேயில்லை.
‘சிபாரிசு’ என்று
ஒரு கட்டுரை. பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் இடம் பெறும் பொருட்டு நடக்கும் சிபாரிசுகளையும்
அதன் கேலிக்கூத்துகளையும் விவரிப்பது. ‘பள்ளிக்கூடத்தில் மாணவனுக்கு இடம் பிடிப்பதைப்போல
சாகஸமான காரியம் இந்தக் காலத்தில் வேறொன்றுமில்லை. அறிவு குறைந்தவர்களுக்கு அறிவு கற்பிக்க
வேண்டியிருக்க, அதிக மார்க் வாங்கிய பையனைத்தான் சேர்த்துக்கொள்வோம் என்று அடம் பிடிப்பவர்கள்
கல்விச் சாலை நடத்தவில்லை, கல்விக் கடை அதுவும் கள்ளச் சந்தை நடத்துகிறவர்கள் என்றுதான்
சொல்லவேண்டும்’ என்று சாடுகிறார்.
அதே கட்டுரையில்
இன்னொரு இடத்தில் ‘இந்த வருஷம் இஞ்சினியரிங் முடித்தவர்களில் பலருக்கு இன்னமும் நியமனம்
கிடைக்கவில்லை. இந்த வருஷம் சற்று தாமதித்தாவது நியமனம் கிடைக்கும். அடுத்து வருகின்ற
ஆண்டுகளில் இஞ்சினியர்களும் எஞ்சிக் கிடப்பார்கள் என்று விஷயம் தெரிந்த வட்டாரத்தில்
தகவல் கிடைக்கிறது’ என்று எழுதியுள்ளார். எழுதப்பட்ட ஆண்டு 1961.
‘இருளும் ஒளியும்’
என்ற கட்டுரை வள்ளலார் எழுதிய ‘ஷண்முகர் காலைக் கும்மி’யில் உள்ள ‘பொற்கோழி’ என்ற சொல்லிலிருந்து
தொடங்குகிறது. ‘பொழுது புலர்ந்தது, பொற்கோழி கூவிற்று…’ என்னும் வரியிலுள்ள அந்தச்
சொல்லை வியந்து அதிலிருந்து ஒளியையும் இருளையும் குறித்து தத்துவார்த்தமாகவும் கவித்துவமாகவும்
சொல்லிக் கொண்டே போகிறார் திருலோகம். அவரது மொழியாளுமைக்கும் தெளிந்த சிந்தைக்கும்
இக்கட்டுரை சிறந்த உதாரணம்.
திருலோக சீதாராம்
எட்டாம் வகுப்பு வரையில்தான் பள்ளிக் கல்வி கற்றார். ஆனால், தமிழ்ப் பாடல்களை அடிபிறழாமல்
பாடுவார். தமிழில் தெளிவாக எழுதுவார்.. இதற்குக் காரணமாக அவர் குறிப்பிடுவது, தொண்டைமான்
துறையில் வசித்த அந்தகக்கவி ராமசாமி படையாட்சியையே. அதிகாலையில் ஆற்றங்கரையில் கிழக்கு
நோக்கி அமர்ந்து அவர் பாடல்களைச் சொல்ல பதிமூன்று வயதுச் சிறுவனான சீதாராம் அவற்றைத்
திருப்பிச் சொல்லுவார். ஒரு நாளைக்குப் பத்துப் பாடல்கள். மறுநாள் அவற்றை ஒப்பிக்கவேண்டும்.
ஒருநாள் அவ்வாறு ஒப்பிக்கமுடியாமல் திணறியபோது, அந்தகக்கவி பிரம்மராக்ஷஸிடம் சிக்கிக்கொண்ட
அவ்வையாரைப் பற்றியக் கதையைச் சொல்லியிருக்கிறார். அஷ்டாவதானம் வீராச்சாமி செட்டியார்
எழுதிய ‘விநோதரஸமஞ்சரி’யில் உள்ள கதை அது. வெண்பாவை இரண்டு தடவை படித்ததும் மனனமாகிவிடவேண்டும்,
இல்லையேல் பேய் வந்து பிடித்துக்கொள்ளும் என்ற அச்சம். அந்த அச்சமே ஆர்வமாகவும் முயற்சியாகவும்
திரண்டு சீதாராமின் இயல்பாக மாறிப்போயின.
திருலோக சீதாராம்
கவிதைகள் எழுதியுள்ளார்.. அவைத் தொகுப்பாகவும் வெளியாகியுள்ளன. ஆனால், அவற்றை ஒருபோதும்
அவர் முன்னிறுத்தியதில்லை. சக எழுத்தாளர்களுக்கும் இளம் படைப்பாளிகளுக்குமே ‘சிவாஜி’
இதழில் முக்கியத்துவம் தந்தார். 1935ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘சிவாஜி’ இதழ் 1973ம் ஆண்டு,
அவர் இறக்கும் வரையிலும், தொடர்ந்து வெளிவந்தது. பத்திரிகை நடத்துவதைத் தவிர வேறெந்த
தொழிலிலும் அவர் மனம் குவியவில்லை.
‘நமது அறிவுக்குத்
தெரிகின்ற ஒன்று நம்முடைய வாழ்வு. கட்டுக்கும் இது அடங்கும் என்று கண்டுபிடித்த காரணத்தினால்தான்
நாகரிகம் என்பது உருவாகியிருக்கிறது. வாழ்வைக் கட்டுக்கடக்குகின்ற பெருமுயற்சிதான்
மனித வரலாறு. அந்த முயற்சியின் தோல்விகளே அரசியல். அந்த முயற்சியின் நம்பிக்கையே ஆன்மீகம்’
(தேடும் பொருள்) என்ற தெளிவு அவருக்கிருந்தது.
ஹெமிங்கேயின் மறைவை
ஒட்டி எழுதப்பட்ட கட்டுரையில், ‘கடலும் கிழவனும்’ நாவலுக்காக ஹெமிங்கேவுக்கு நோபல்
பரிசு வழங்கப்பட்டதைப் பற்றி ‘இலக்கியக் கொள்கைகளையும் விமர்சகர்களின் கழுகுப் பார்வைகளையும்
தப்பி ஒரு உன்னதமான நூல் உருவாக முடியும். அதை உணரக்கூடியவர்களும் உலகத்தில் இருக்கிறார்கள்
என்ற நன்னம்பிக்கையை நமக்குத் தருகிறது ஹெமிங்வேயின் சாதனை’ என்று சொல்லிவிட்டு, ‘நம்முடைய நாட்டில் சாகித்ய அகாடமிகளைப் பார்த்து
அவநம்பிக்கையும் சோர்வும் கொண்டுள்ள நமது எழுத்தாளர்களுக்கு ஹெமிங்வேயின் வெற்றி ஒரு
நம்பிக்கை முனை’ என்றும் அழுத்தமாகச் சொல்லுகிறார்.
இதுபோன்ற இலக்கிய
அரசியல், மொழி அரசியல் மட்டுமன்றி பொது அரசியல் குறித்துமான பல பத்திகள் இத்தொகுப்பில்
உள்ளன.
இத்துடன் ‘ககன
குளிகை’, ‘கலெக்டர் தாத்தா’, ‘கைத்தடி’ போன்ற சில கட்டுரைகள் நல்ல சிறுகதைக்கான உள்ளடக்கத்துடனும்
சித்தரிப்புடனும் அமைந்துள்ளன.
‘வாழ்வின் சேமிப்பு’
என்ற கட்டுரை இந்த வாழ்வின் பொருள் பற்றிய சிந்தனைகளைப் பேசுகிறது. ‘ஒரு நாளும் திரும்பி
வராத தொலைதேசம் செல்லும் நாய் வழியிடையில் தான் கௌவி வந்த எலும்பை, சுவடறியாத பாலை
மணல்வெளியில் புதைத்து வைத்துவிட்டுப்போவது வியப்பாக இல்லையா என்கிறார் கலீல் கிப்ரான்.
இப்போதைக்கு நமக்கு தமிழும் கவிதையும் ரசனையும் ரசிகர்களும் என்ற வட்டத்துக்கு வெளியேயுள்ள
உலகத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஒவ்வொரு கணமும் இனிமை.
ஒவ்வொரு மாற்றமும் விளையாட்டு. எதிலும் சிக்கி உழலாத மனம். வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது.
இது போதும். வாழ்வின் சேமிப்பும் அதன் பயனும் வாழ்வுதான்’ என்று அந்தக் கட்டுரை முடிகிறது.
நஷ்டமா?
புதிதாகத் தொழில் செய்வோம்
சாவா?
நாம் செய்வதற்கொன்றுமில்லை
வெற்றியா?
அது ஒன்றும் பெரிதில்லை
நோவா?
மருந்துண்போம்
காட்சியா?
கண்டுகளிப்போம்
சங்கீதமா?
கேட்டு மகிழ்வோம்
என்பதுதான் திருலோக
சீதாராமின் கவலையற்ற துணிச்சல் குணம்.
‘இலக்கியப் படகு’
என்ற இந்த நூல் திருலோக சீதாராமின் பன்முகத் தன்மையை மிகத் துலக்கமாக நமக்குக் காட்டும்
ஒன்று. இதன் மூன்றாவது பதிப்பை கோவை, சிறுவாணி வாசக மையம் வெளியிட்டுள்ளது.
இதை வாசித்த கையோடு,
‘திருலோகம் எனும் கவி ஆளுமை’ ஆவணப்படத்தைப் பார்க்க நேர்ந்தபோது, வியப்பளிக்கும் ஓர்
மனிதரை முழுமையாக அறிந்துகொண்ட நிறைவு ஏற்பட்டது.
இந்த உணர்வுக்கு
வலுசேர்க்கும் வகையிலான இன்னொரு செய்தியைக் குறிப்பிடவேண்டும். திருலோக சீதாராமின்
மேல் மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர் ஜெயகாந்தன். அவரது இறுதிகாலத்தில், சென்னையில்
தங்க நேர்ந்தபோது இரண்டு நாட்கள் அவருக்கு காரோட்டியாக இருந்திருக்கிறார் ஜெயகாந்தன்.
1973ம் ஆண்டு தமது
ஐம்பத்தி ஆறாவது வயதில் திருலோக சீதாராம் மறைந்தார். அப்போது ஜெயகாந்தன் ‘திருலோக சீதாராம்
என்பவர் சதா இங்கே திர்ந்துகொண்டிருக்கும் சித்த புருஷர்களில் ஒருவர். அவர் நமக்குத்
தோற்றம் காட்டியதும் நம்மிடம் துலங்கியதும் ஒரு அருள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதேபோல, திருலோக
சீதாராமை தமது ஆசிரியராக வரித்துக்கொண்ட இன்னொருவர் டி.என்.இராமசந்திரன். ஆவணப்படம்
முழுக்க அவருடனான பல நெகிழ்வான தருணங்களை அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
‘அவர் ஒவ்வொரு
மாதமும் கணக்குப் பார்க்கும் வழக்கம்கொண்டவர். தன் வாழ்வில் ஒருநாளும் அதைத் தவறவிட்டதில்லை.
அவர் மரணமடைந்த நாள் 1973ம் ஆண்டு ஆகஸ்ட், 23. அன்று மாலையிலும் கணக்குப் பார்த்த அவர்,
கடைசியாக ‘கணக்குத் தீர்ந்தது’ என்று எழுதி வைத்திருந்தார்’ என்று கண்ணீர் மல்க குறிப்பிட்டது
மறக்க முடியாத காட்சி.
‘வாழ்வின் சேமிப்பும்
அதன் பயனும் வாழ்வுதான்’ எனும் அவரது வாக்கு மீண்டும் மீண்டும் உள்ளுக்குள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.
No comments:
Post a Comment