‘ரிஷ்யசிருங்கர்’
எனும் ஈரோடு ராஜேந்திரன் “டாக்டரைப் பாக்கலாம் வாங்க” என்று அழைத்துச் சென்றார். மாலை
ஏழு மணி. இருட்டு விழுந்திருக்க மங்கலான வெளிச்சத்துடனான பழைய கட்டடம். நலந்தா மருத்துவமனையில்
எந்த பரபரப்பும் இல்லை. டாக்டர் தீவிரமாக எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.
“அடடே, வாங்க”
என்றவரின் முகம் முழுக்க சிரிப்பு. மேசையின் மீதிருந்த தாளில் கருப்பு மசியால் அவருடைய
அழகான கையெழுத்தில் ஒரு அறிவிப்பு தயாராகிக் கொண்டிருந்தது.
“ஈரோடு வந்துட்டீங்களாமே?”
மகிழ்ச்சியுடன் விசாரித்தவர் பக்கத்தில் வைத்திருந்த அன்றைய நாளின் ஹிந்து செய்தித்தாளிலிருந்து
ஒரு படத்தை கச்சிதமாக வெட்டினார். பேசியபடியே அதன் ஓரங்களில் பசையைத் தடவி எழுதி வைத்திருந்த
தாளில் அதற்கென விடப்பட்டிருந்த இடத்தில் கவனமாக ஒட்டினார்.
மரபணு விதைகள்
குறித்த விழிப்புணர்வு வாசகங்களுடனான அந்த அறிக்கை தயாரான உற்சாகத்துடன் அதைக் குறித்து
உரையாடத் தொடங்கினார். மறுதினம் நடக்கவிருக்கும் கூட்டமொன்றில் அந்த அறிக்கையை படியெடுத்து
விநியோகிக்கவேண்டும் என்றார். கணினிகளும் கூகுள் போன்ற தேடுதல் வசதிகளுமில்லாத அந்த
நாட்களில் சம்பந்தப்பட்ட செய்திகள் அனைத்தையும் புத்தகங்களிலிருந்தும் செய்தித் தாட்களிலிருந்தும்
தேடிச் சேகரித்து அவற்றை கையால் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களாக, அறிக்கைகளாக தயாரித்து
அனைவருக்கும் கிடைக்கும்படி செய்தார்.
செய்திகளை தேடி
எழுதுவதும், பொருத்தமான படங்களை ஒட்டுவதும் அவருக்கு பிடித்தமான காரியங்கள். ஒரு பள்ளி
மாணவனின் உற்சாகத்துடன் அந்தக் காரியங்களை அவர் மேற்கொண்டார்.
டாக்டர் ஜீவாவின்
செயல்பாடுகள் பரவலானவை. எந்தவொரு குறிப்பிட்ட இயக்கத்துக்கோ அல்லது செயல்பாட்டுக்கோ
மட்டுமாக அவர் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. சுற்றுச்சூழல், நீர் மேலாண்மை,
இயற்கை பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், முதியோர் வாழ்க்கை, விவசாயம் என சமூகத்தின் வெவ்வேறு
அடிப்படைப் பிரச்சினைகள் சார்ந்த பணிகளில், அவற்றை முன்னெடுக்கும் தரப்பினரோடு தன்னையும்
இணைத்துக்கொண்டார்.
எழுத்தாளர்களும்
சூழலியல் ஆர்வலர்களும் கலந்துகொண்ட ‘சோலை சந்திப்’பை உதகையிலிருந்த சுற்றுச்சூழல் இயக்கங்களுடன்
சேர்ந்து ஒருங்கிணைத்திருந்தார். தமிழகத்தில் சுற்றுச்சூழல், சோலைக்காடுகளின் பாதுகாப்பு
சார்ந்த உரையாடலைத் தீவிரப்படுத்தியதில் அந்தச் சந்திப்புக்கு முக்கியமான இடமிருக்கிறது.
அந்த நிகழ்ச்சியின்போது
ஒரு நாள் மதிய உணவுவேளை. எல்லோரும் பாக்கு மட்டையிலிருந்த உணவை ருசி பார்த்துக்கொண்டிருந்தபோது
பெரியவர் ஒருவர் ஓரமாக தரையில் அமர்ந்து ஒரு தேங்காயை எடுத்து உடைத்தார். தண்ணீரைக்
குடித்துவிட்டு பருப்பை தோண்டியெடுத்துத் தின்றார். “ஐயா, சாப்புடலையா?” என்று அவரிடம்
விசாரித்தபோது கையிலிருந்த தேங்காய்த் துண்டுகளைக் காட்டி சிரித்தார் “இதா, சாப்பிடறனே...”.
ஒடிசலான
தேகமும் தாடியுடன்கூடிய முகமுமாய் அப்போது அறிமுகமானவர்தான் நம்மாழ்வார்.
டாக்டர்
ஜீவா பின்னாட்களில் நம்மாழ்வருடன் இணைந்து இயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான
முயற்சிகளை ஈரோட்டில் மேற்கொண்டார்..
நர்மதா அணைக்கெதிரான
போராட்டத்தின் மூலமாகவும் சுற்றுச்சூழல் சார்ந்த தனது அக்கறையினாலும் நாடெங்கும் புதிய
கவனத்தை ஈர்த்த மேதா பட்கர், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதற்காக
இந்தியாவெங்கும் சுற்றுப்பயணம் செய்தார். 1997 பிப்ரவரி மாதத்தில் ஈரோட்டிலும் கோவையிலும்
அவருடனான உரையாடல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார் டாக்டர் ஜீவா.
ஈரோட்டில் தங்கியிருந்த
மேதா பட்கரை அன்று மாலையில் நண்பர்களுடன் சந்திக்க வாய்த்தது. தோட்டத்துக்கு நடுவிலிருந்த
வண்டித் தடத்தில் உலவியபடியே சுற்றுச்சூழல், நீராதாரங்களின் பாதுகாப்பு என பல்வேறு
சமூகத் தொண்டிலும் இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொள்ளவேண்டும் என்று நிதானமாகவும் உறுதிபடவும்
சொல்லிக் கொண்டிருந்தார்.
பாரதி ‘மனிதனுக்கு
மரணம் இல்லை’ என்ற தலைப்பில் உரையாற்றியது ஈரோடு கருங்கல்பாளையத்தில். அதுவே அவரது
கடைசி பிரசங்கம். பாரதியை தன் ஞான குருவாக மதிக்கும் டாக்டர் ஜீவாவுக்கு கருங்கல்பாளையத்தின்
மீது பெரும் ஈடுபாடு. பாரதியார் பிரசங்கம் செய்த அதே நூலகத்தில் கூட்டங்களை ஏற்பாடு
செய்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பாரதி விழாக்களை ஒருங்கிணைத்திருக்கிறார்.
“இந்த கெழவனைப்
பாருங்க, அன்னிக்கு சொன்னது இன்னிக்கும் பொருந்துது. என்னய்யா மனுஷன்?” என்று டாக்டர்
ஜீவா எப்போதும் உரிமையுடனும் வியப்புடனும் பார்ப்பது காந்தியை. இந்தியாவின் சமூக வாழ்வை
காந்தியை விடுத்துவிட்ட பார்ப்பது சாத்தியமில்லை என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்.
சமூகம், சூழல், வேளாண்மை என பல்வேறு பிரச்சினைகளையும் அணுக காந்தியம் அவருக்கு பெரும்
பலமாக கைகொடுத்தது. ஜே சி குமரப்பாவின் மேல் பெரும் மதிப்பிருந்தது. அவரது நூல்களைக்
குறித்து வியப்புடன் குறிப்பிடுவார். சில பகுதிகளை மொழிபெயர்த்திருக்கிறார்.
புதிய அலை சினிமாவின்
மேலும் விருப்பம் கொண்டிருந்தார் டாக்டர் ஜீவா. அவரது நலந்தா மருத்துவமனையிலும் சித்தார்த்தா
பள்ளியிலும் சினிமாக்கள் திரையிடப்பட்டுள்ளன. பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளும் இவ்விடங்களில்
நடைபெற்றன. இந்தியாவின் விடுதலைப் பொன்விழாவின்போது திப்புசுல்தானை சிறப்பிக்கும் வகையில்
கருத்தரங்கை ஒருங்கிணைத்து நூல் ஒன்றையும் வெளியிட்டார். காலிங்கராயன் கால்வாயை சீரமைக்கும்பொருட்டு
இயக்கத்தை நிறுவி வழிநடத்தினார்.
ஈரோட்டில் தினமணி
நிருபராக இருந்த பாண்டியராஜன், அரச்சலூர் செல்வம், ராஜேந்திரன் என அவரது நண்பர்களில்
பலரும் அவரைவிட வயதில் இளையவர்கள். சமூக இயக்கம் சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும்
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆர்வமுள்ள இளைஞர்களை அதில் பங்கேற்கச் செய்தார். அவரைச்
சுற்றி இளைஞர்களின் கூட்டம் இருந்ததே அவருடைய மாறா இளமைக்கும் சுறுசுறுப்புக்கும் காரணம்
என்று புன்னகையுடன் சொல்வதுண்டு.
சுற்றுச்சூழல்
சார்ந்த உரையாடல்களும் கரிசனமும் இன்று வலுத்திருக்கிறது. அனைவருக்குமே அதைச் சார்ந்த
குறைந்தபட்ச புரிதல் உள்ளது. புவி வெப்பமயமாதல், காடுகளின் அழிவு, நீர் ஆதாரங்கள் மாசுபடுதலும்
அழிதலும், பவானி நதி மீட்பு, மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு, பழங்குடி மக்கள்
நலவாழ்வு என்று பல்வேறு சூழலியல் பிரச்சினைகள் குறித்து பலரும் இன்று உரத்த குரலில்
முழங்குவதையும் முன்னெடுப்பதையும் பார்க்கிறோம். ஆனால், இந்த சொல்லாடல்கள் புழக்கத்துக்கு
வருவதற்கு முன்பே டாக்டர் இதற்கான ஆரம்ப வேலைகளைத் தொடங்கியிருந்தார். பூவுலகின் நண்பர்கள்,
கோவை ஓசை அமைப்பு, உதகை பசுமை இயக்கம் என பல்வேறு சுற்றுச்சூழல் இயக்கங்களுடன் சேர்ந்து
பணிகளை மேற்கொண்டார்.
டாக்டர் ஜீவாவின்
சமூக அக்கறையும் மானுட மேன்மைக்கான சிந்தனையும் அவருடைய தந்தை எஸ்.பி.வெங்கடாச்சலத்திடமிருந்து
உருவானது. விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற அவர் இடதுசாரி சிந்தனையாளர். ஜீவா,
பாலதண்டாயுதம் போன்ற தலைவர்கள் வீட்டில் தங்கியிருந்த சூழலும் அங்கு மேற்கொள்ளப்பட்ட
விவாதங்களும் உரையாடல்களும் டாக்டர் ஜீவாவின் சிந்தனைகளை இயல்பாகவே வடிவமைத்துள்ளன.
மார்க்ஸியமோ காந்தியமோ
எந்தவொரு தத்துவமானாலும் அது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடையதாக அவர்களது
துயரை நீக்குவதற்கான வழிவகைகளை முன்வைப்பதாக நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும்
என்பதில் அவர் தெளிவாக இருந்ததின் விளைவுகள்தான் அவர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள்.
தெளிவான அந்தப் பாதை அனைவரும் தம்மை இணைத்துக்கொள்ளக்கூடிய எளிமையானதாகவும் இருக்கவேண்டும்
என்றும் எண்ணினார்.
தமது கொள்கைகளுக்கு
முரணான அல்லது தரப்பை விமர்சிக்கக்கூடியவர்களை அவர் எதிரிகளாகப் பார்க்கவில்லை. தமது
முயற்சிகளுக்குத் தேவையான ஒரு பங்களிப்பைச் செய்யக்கூடும் என்கிற நிலையில் அவர்களை
அதில் இணைத்துக்கொள்ளவே விரும்பினார். அவர்களுடைய முரண்களையோ எதிர்மறைகளையோ கணக்கிலெடுத்துக்
கொள்ளாமல் அவர்களின் வழியாக சாத்தியமாகும் பங்களிப்புகளே முக்கியம் என்பதில் தெளிவாக
இருந்தார்.
டாக்டர் ஜீவா தேர்ந்த
ஒரு வாசகர். தொடர்ந்து படிக்கக் கூடியவர். செறிவான மொழியறிவும் எழுத்து நடையும் கொண்டவர்.
அவருடைய மொழிபெயர்ப்புகள் மிக எளிமையான நடையும் வாக்கிய மேன்மையும் கொண்டவை. தனக்குப்
பிடித்தமான நூல்களை அவர் தொடர்ந்து மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடைய
தேர்வுகள் ஒருதுறை சார்ந்தவையாக இருந்ததில்லை. கவிதைகள், நாவல்கள், மருத்துவம் குறித்த
நூல்கள், சமூகம் என பல்வேறு வகையிலான, தனக்குப் பிடித்த நூல்களை மிகுந்த ஈடுபாட்டுடன்
மொழிபெயர்த்தார். ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் மொழிபெயர்ப்பில் ஈடுபடும் டாக்டர்
ஜீவா நூல்களை எழுதும் வேகம் வியப்பான ஒன்று.
டாக்டர் ஹெக்டேவின்
நூலின் மொழிபெயர்ப்பான ‘மருத்துவத்துக்கு மருத்துவம்’ தமிழில் மிகவும் பேசப்பட்ட ஒன்று.
மருத்துவம் பற்றிய மாற்றுப் பார்வையை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகிப்பது. அதேபோல,
ஜூனியர் விகடனில் அவர் எழுதிய தொடர் ‘மருத்துவம் நலமா?’ வாசகர்களிடையே பெரும் வரவேற்பை
பெற்ற ஒன்று. ‘தற்சார்பு இந்தியா ஜேசி குமரப்பாவின் பாதை’, ‘எருமைகளின் தேசியம்’ காஞ்சனா
இளையாவின் நூல், கன்பூசியஸ், வெற்றி பெற காந்திய வழி - ஆலன் ஆக்ஸன்ராட், தாமஸ் பெய்னின்
பொது அறிவு, பேர்ல் பக்கின் ‘தாய் மண்’ நாவல் ஆகிய நூல்கள் முக்கியமானவை.
ஒரு நவீன மருத்துவர்
எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணமாக இருந்தவர் ஜீவா. ஒரு நோயாளியை தனது
பயிற்சிக்கான வெறும் உடலாக, சம்பாதிப்பதற்கான வாய்ப்பாக அணுகாமல் வாதையை அனுபவிக்கும்
உயிராக, மனிதனாகக் காணும் அடிப்படையை, அவனது நோய்மையைத் தீர்ப்பதே தனது தலையாயக் கடமை
எனும் அறத்தை ஜீவா தனது வாழ்வின் வழியாக போதித்திருக்கிறார்.
நாளின் ஒவ்வொரு
நொடியிலும் கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்புடன் ஓடிக்கொண்டேயிருக்கும் இன்றைய நவீன மருத்துவர்கள்
ஜீவாவின் வாழ்வை யோசித்துப் பார்க்கவேண்டும். மருத்துவர்களுக்கு நேரங்காலம் கிடையாது
என்று சொல்லியது மனிதகுலத்துக்கு அவர்க்ள் சேவையாற்றவேண்டும் என்ற நோக்கில். பணம் சம்பாதிக்கும்
நோக்கில் அல்ல. கோடிக்கணக்கில் வங்கிக் கடன் வாங்கி நவீன உபகரணங்களைக் கொண்டு பரிசோதனைகள்
என்ற பெயரில் நோய்கொண்டு வருபவனை ஒரு வாய்ப்பாகக் கருதும் பல மருத்துவர்களுக்கு குடும்பம்
பற்றிய எண்ணம் இல்லை, உறவுகளைத் தெரியாது, உண்பதும் உறங்குவதும்கூட மருத்துவமனையில்தான்
என்பதுபோன்று ஒரு வாழ்வு. இதற்கு அப்பால் அவர்களுக்கு சமூகம் சார்ந்த பார்வையும் சூழல்
சார்ந்த அக்கறையும் இருக்கவேண்டும் எனும் விரிந்த மனப்பான்மையை ஜீவாவின் வாழ்விலிருந்து
கற்றுக்கொள்வது அவசியம்.
நல் அரசு என்பதன்
அடிப்படை குறைந்தபட்சம் அது தன் குடிகளுக்கு தரமான சமத்துவமான கல்வியையும் சகலருக்குமான
சரியான மருத்துவத்தையும் உறுதிப்படுத்துவதாகும். இந்த இரண்டுமே பெரும் வியாபாரமாகிவிட்ட
சூழலில் அவற்றின் தரமும், அடிப்படையில் அந்தத் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு இருக்கத்
தேவையான அற மனப்பான்மையும் இல்லாமல் போவதில் வியப்பொன்றுமில்லை. ஒரு அரசு தன் கடமைகளிலிருந்து
வழுவும்போது மக்களுக்குத் தேவையானவற்றை முடிந்தவரையிலும் செய்து தரவும், அரசுக்கு அதன்
கடமைகளை நினைவுறுத்தவுமென ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில தனிமனிதர்கள் தொண்டாற்றுகிறார்கள்.
டாக்டர் ஜீவா அப்படியொரு மனிதர். எளியவர்களுக்கான தரமான மருத்துவம் என்ற அடிப்படையில்
ஒத்த மனம்கொண்ட மருத்துவர்களுடன் இணைந்து ‘கூட்டுறவு மருத்துவமனை’ எனும் முயற்சியை
ஈரோட்டில் தொடங்கினார். நோயாளிகளிடமிருந்து குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே பெறப்படும்.
தேவையான பரிசோதனைகள் மட்டுமே நியாயமான கட்டணத்தில் செய்யப்படும் என்ற அடிப்படையில்
செயலாற்றும் பொது மருத்துவமனையைத் தொடர்ந்து புற்றுநோய்க்கான மருத்துவமனை ஒன்றையும்
ஏற்படுத்தினார். ஈரோட்டில் தொடங்கிய இந்த முயற்சி இன்று தஞ்சை புதுச்சேரி உள்ளிட்ட
ஏழு இடங்களில் வெற்றிகரமாக மருத்துவமனைகளை உருவாக்கியிருக்கிறது. ஜீவா தனது இறுதி நாட்களில்
இதற்காகவே பல ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். மேலும், வைவிடப்பட்ட புற்றுநோய்
நோயாளிகளைப் பராமரிப்பதற்கென்று பாலியேட்டிவ் கேர் மருத்துவமனையையும் ஏற்படுத்தினார்.
இந்த மருத்துவமனை முற்றிலும் இலவசமானது. அதேபோல, நியாயமான கட்டணத்தில் உடல் பரிசோதனைகள்
செய்துகொள்ளும் வகையில் ‘ஸ்கேன்’ சென்டரையும், ரத்தச் சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) மையத்தையும்
ஏற்படுத்தினார்.
ஆரம்ப காலத்திலிருந்து
குடி நோயாளிகளுக்கான சிகிச்சையைத் தந்திருந்த அவரது சிகிச்சையில் நலம்பெற்றவர்கள் பலர்.
அவர்களில் சில எழுத்தாளர்களும் கவிஞர்களும் உண்டு.
எப்போது சந்திக்க
நேர்ந்தாலும் அவரிடம் அடுத்து செய்ய வேண்டியவை என்று செயல் திட்டங்களின் பட்டியல் ஒன்று
இருக்கும். இரண்டு முறை இதயக் கோளாறு ஏற்பட்டிருந்த நிலையிலும் தனது பயணத்தை அவர் நிறுத்தவுமில்லை,
ஒத்திப் போடவுமில்லை. வாழ்வின் எஞ்சிய நாளில் முடிந்த வரையிலும் செய்துவிட வேண்டும்
என்ற அவசரம் அவரிடம் இருந்தது. கடைசியில், பாண்டிசேரிக்கு சென்றிருந்தபோதுதான் உடல்
நலிவுற்றது.
ஹோசி மின் கவிதைகள்,
ஒரு நாவல் என இரண்டு நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு தயாராக உள்ளன என்று உற்சாகத்துடன்
தெரிவித்திருந்தார். அவரது மேசையில் இன்னும் சில கைப்பிரதிகள் இருக்கக்கூடும்.
அதுபோலவே, இன்னும்
சில மருத்துவமனைகளையும் நலவாழ்வு இல்லங்களைத் தொடங்குவது குறித்து திட்டங்கள் இருந்திருக்கும்.
ஆனால், தன் வாழ்நாளில் தான் நினைத்தவற்றுள் சிலவற்றையேனும் அவர் சாதித்துக் காட்டிவிட்டார்.
தனக்குப் பின்னும் அத்தகைய பணிகள் தொடரவேண்டும் என்ற எண்ணத்துடன் ஒத்த கருத்துள்ள நண்பர்களிடம்
அந்தப் பணிகளை விட்டுச் சென்றிருக்கிறார்.
“நான் இறந்துவிட்டால்
எனது உடலை கழுகுகளுக்கு இரையாக்கிவிடுங்கள்” என்று தொலைபேசியில் தெரிவித்ததாக அவர்
மறைந்தபோது முகநூலில் ஒரு நண்பர் எழுதியிருந்தார்.
‘வேறொருவர் செய்யவேண்டும்
என்று எதிர்பார்க்காதே, அதை உன்னிடமிருந்தே தொடங்கு’ என்ற காந்தியின் வாக்கு டாக்டர்
ஜீவாவின் வாழ்வாகவும் அமைந்திருந்ததில் வியப்பேதுமில்லை.
(தமிழினி மார்ச் 2021ல் வெளியான கட்டுரை)
No comments:
Post a Comment