Friday, 2 April 2021

வசீகரமான பரமபதம் :: பா.கண்மணியின் ‘இடபம்’

 


குடும்பம், உறவுகள், பணிச் சூழலில் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகள் என்ற சில தளங்களை அவரவர் அனுபவச் செறிவைக் கொண்டு எழுதுவதே இயல்பில் நடப்பது. இத்தன்மையை பெண்கள் எழுதும் நாவல்களுக்கு மட்டுமன்றி தமிழ் நாவலுக்கு மொத்தமாகவும்கூட ஓரளவு பொருத்தமுடியும்.

நாவல் குறித்த மனம் கொண்டிருக்கும் இந்த எண்ணத்தைத் தாண்டியிருப்பதே ‘இடபம்’ நாவலின் தனித்தன்மை. தமிழில் சிறுகதைகளிலோ நாவல்களிலோ இதுவரை இடம் பெற்றிராத பங்குச் சந்தையின் பின்னணியை இந்த நாவல் கொண்டுள்ளது.

பங்குச் சந்தையை பின்னணியாக அமைத்திருப்பது மட்டும் தனித்தன்மையாகி விடுமா என்ற கேள்வி உடனடியாகவே எழும்.

பெரிதும் ஆங்கிலமே புழக்கத்தில் உள்ள அந்தத் துறையைக் குறித்தும் அதிலிருக்கும் வெவ்வேறு சொல்லாடல்களையும் ஒரு நாவலின் இயல்பான போக்குக்கு இடையூறின்றி வாசகர்களுக்கும் எளிதில் புரியும் விதத்தில் அமைப்பதே சவாலான ஒன்று. பங்குச் சந்தைக் குறித்த எளிய அறிமுகமற்ற ஒரு வாசகனும்கூட இந்த நாவலை அணுகுவதில் சிரமம் இருக்கக்கூடாது என்கிற நிபந்தனையை அறிந்தே இது எழுதப்பட்டிருக்கிறது. முடிந்த வரையிலும் பங்குச் சந்தைக்குரிய சொல்லாடல்களையும் குறிப்புகளையும் வலியத் திணிக்காமல் புரிந்துகொள்ளப் போதுமான அளவில் எழுதப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையை ஒரு சாதுர்யமான சூதாட்டம் என்று மதிப்பிடுவார்கள். புள்ளி விபரங்களும் வரைபடங்களும் மட்டுமே துலக்கமாகத் தெரியும் இதன் சூத்ரதாரியும் அவன் விரல்களில் அசையும் கயிறுகளும் எவையென்று யாருமே உறுதியாகச் சொல்ல முடியாது. இதன் மாயச் சுழலில் சிக்கிக் கொண்டவர்கள்கூட இந்த விளையாட்டைப் பற்றி பெரிதாகக் குறைப்பட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் விதியையே நொந்துகொள்வார்கள். அவ்வாறான வசீகரமான பரமபதம் இந்தப் பங்குச் சந்தை.

இதில் தன் சிறிய வருமானத்தின் ஒரு பகுதியை பணயமாக வைத்து விளையாடுவது ஒரு பெண் என்பது இந்த நாவலின் இன்னொரு வியப்பு. இயல்புக்கு மாறான புதியதொரு களத்தில் ஒரு பெண் என்பது கேள்விகளை எழுப்பாமல் இருக்குமா?

அவ்வாறான கேள்விகளை எதிர்கொண்டு தாயங்களை உருட்டிக்கொண்டே இருப்பவள்தான் இந்த நாவலின் கதைசொல்லி. நாயகியும்கூட.

இடபம் என்பது ரிஷபம். காளை. பங்குச் சந்தையில் ஏற்றத்துக்கான, சீற்றத்துக்கான, பாய்ந்து மேலெழுவதற்கான குறியீடு. இந்த நாவலில் இந்தக் குறியீடு ஒரு பெண்ணின் பாய்ச்சலுக்கானதாய் மாற்றித் தரப்பட்டுள்ளது. பெண் மீது சமூகம் விதித்துள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளிலிருந்து பத்தாம்பசலித்தனங்களிலிருந்தும் வெளியேற முனையும் ஒரு பெண்ணின் கதையாக விரிகிறது.

கதைக்களமாக பெங்களூரை அமைத்திருப்பது இந்த நாவலின் நம்பகத்தன்மைக்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. பெங்களூர் போன்ற ஒரு ‘காஸ்மோ’ நகரத்தின் இன்றைய வாழ்வு இதுவரையிலான கலாச்சார அம்சங்களை வெகு எளிதாக விலக்கிவிட்டு அன்றாடத்தை ஒரு கொண்டாட்டமாக மாற்றித் தந்திருக்கிறது.

நாவலின் கதைசொல்லிக்கு, நாயகிக்கு பெயர் இல்லை. தமிழ்ப் பெண். எளிமையான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்பாவின் அளவான வருமானத்துக்கு ஏற்றவாறு வீடு, உணவு, உடை, கல்வி என அனைத்திலும் சமரசம் செய்துகொண்ட உறுப்பினர்கள். இவ்வாறான குடும்பத்தின் எளிமையான எதிர்பார்ப்புகளில் அடைபட்டு தன் பெற்றோரைப்போல அதே சமரச வாழ்வில் அடைபட்டுவிடக்கூடாது என்று தளைகளிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு சுதந்திரமாய் இருக்க விழைகிற நாயகி. ‘இது என் வாழ்க்கை, இதை எனக்கு விருப்பப்பட்ட முறையில்தான் வாழ்வேன்’ என்று பிடிவாதத்துடன் தனித்திருப்பவளின் கதை இந்த நாவல்.

பங்குச் சந்தையில் வியாபாரம், அன்றாடமும் சிறிய லாபம் அல்லது பெரிய நஷ்டம், ஏற்ற இறக்கங்களினால் தடுமாற்றம், சந்தையின் பிடி கிடைக்காமல் ஏமாற்றம், மன அழுத்தம், அதைச் சமாளிக்க புகை, போதை, காமம் என்று தன்னிச்சையான வாழ்வு.

மொத்த வாழ்வையும் ஒருவனிடமே ஒப்படைப்பது சாத்தியமில்லை என்பதைத் தீர்மானமாக நம்பும் அவள் திருமண பந்தத்தையும் அதன் சிக்கல்களையும் உதாசீனப்படுத்துவது இயல்புதான். ‘உடலின் தேவைக்கு அப்போதைக்கு ஒரு ஆண் உடனிருந்தால் போதும்’ என்ற தெளிவுடன் அந்த நேரத்தில் வாய்ப்பவனை மட்டும் தேடிக்கொள்பவள். அவள் யாரையும் அளவுக்கு மீறி நேசிப்பதுமில்லை, நம்புவதுமில்லை. அதேபோல வேறு யாரும் தன்மீது அளவுகடந்த நேசத்தைக் கொள்ளவோ நம்பிக்கை வைக்கவோ இடம் தருவதுமில்லை. பரமபதத்தின் பாம்பும் ஏணியையும்போலவே அவள் நட்பையும் உறவுகளையும்கூட அணுகுகிறாள்.

நடையுடை பாவனைகள், உணவுப்பழக்கம், விரும்பும் உல்லாச விருந்துகள், கட்டற்ற மனோபாவம், பணம் தேடும் வேட்கை என்று அவளது புற அடையாளங்கள் அனைத்துமே இந்தக் கதாபாத்திரத்துக்கு ஒட்டி வந்திருக்கும் அதே நேரத்தில் அவளது அகமும் விருப்பங்களும் பெண்களுக்கேயுரிய சில அழகியல்களோடும் ஈரத்துடனும் அமைந்திருப்பது தற்செயலானதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது. விதவிதமான மலர்களிலும் அவற்றின் நிறங்களிலும் மணங்களிலும் மனம் ஒன்றுகிறாள். உதிரும் இலைகளை ஆசையோடு பார்க்கிறாள். தரையில் நகரும் சருகைக்கூட கண்ணிமைக்காமல் கவனிக்கிறாள். குப்பையில் விழுந்து கிடக்கும் பறவையின் கூட்டை பத்திரப்படுத்துகிறாள். மழையின் ஈரத்தில் இரவு வானத்தில் ஆசுவாசம் கொள்கிறாள். வழக்கமான பெண்களுக்கல்லாத அவளது புற வாழ்க்கைக்கு மாறான அகம் இயல்பாக அமைந்திருப்பது அந்த கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மைக்கு மெருகேற்றுகிறது. ஆண்களிலும்கூட அவளை மென்மையாகக் கையாளும் வலுவான ஒருவனையே பிடித்திருக்கிறது.

சரி, விட்டு விடுதலையாதல் என்பது புகையும் போதையும் காமமுமாக வாழ்வைக் கழிப்பதுதானா? கட்டுப்பாடுகளிலிருந்து உடைத்துக்கொண்டு தன்னிச்சையாக இருப்பதுதானா? என்ற கேள்விகள் எழுவது இயல்புதான். விடுதலை என்பதை முதலில் பொருளாதாரம் சார்ந்த ஒன்றாக இந்த நாவல் அணுகுகிறது. பணம் எதையும் சாத்தியப்படுத்தும், பணத்தின்பொருட்டுதான் உலகின் பிற அனைத்தும் என்பதை உறுதியாக நம்புகிறாள் அவள். இந்த வாழ்வில் வெற்றி என்பது பணம்தான். பணத்தை தேடிக்கொள்ள முடியுமானால் அதை இந்த சமூகமும் உறவுகளும் அனுமதிக்கும். அனுசரித்துக் கொள்ளும். அதற்காக எல்லாவற்றையும் சமரசம் செய்துகொள்ளும் என்ற யதார்த்தத்தை முகத்தில் அறைந்தாற்போல சொல்கிறது நாவல். பங்குச் சந்தையில் வீழ்ச்சிகளை இயல்பாகவும் தங்களது போதாமைகளாகவும் சுலபமாக சிறிய மனச்சோர்வுடன் எடுத்துக்கொள்பவர்கள் சிறிய அளவு லாபத்தில்கூட அகமகிழ்கிறார்கள். அதுவே இந்த சமூக வாழ்வுக்கும் பொருந்தும் என்பதுதான் அவளது எண்ணம்.

பணம் ஈட்டுவது, அனுபவிப்பது என வாழ்வை அதன் போக்கில் அணுகுவது நாயகியின் இயல்பெனினும் அந்தந்த சந்தர்ப்பங்களில் இணைகளைத் தீர்மானிப்பது குறித்த முடிவுகளில் போதிய அளவு நம்பகத்தன்மை இல்லை. நண்பர்கள் தன்னை அவர்களது விருப்பப்படி உபயோகப்படுத்திக்கொள்வதை அனுமதிக்காதவள், முன்பின் அறிமுகமற்ற ஒருவனை ஒரு காஃபி ஷாப்பில் பார்த்தவுடனே அவன்மேல் ஈர்ப்பு கொள்கிறாள் என்பதும் முரண்தான்.

போக்குவரத்து நெரிசலால், அளவுகூடியுள்ள வெயிலால், மாசடைந்த சூழலால் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பெங்களூர் நகரத்தில் இன்னும் மிஞ்சியிருக்கும் மலர்களையும் அவற்றின் வாசகனைகளையும் இந்த நாவல் வெகு ரசனையுடன் சித்தரித்திருக்கிறது. இவ்வாறான அன்றாட சிக்கல்களையும் நெருக்கடிகளையும் பொருட்படுத்தாத சொகுசு வாழ்வின் ஆடம்பரங்களை ரசிக்கவும் தன்னையும் அதிலொருத்தியாக்கிக் கொள்ள விழையும் நாயகியின் மனம் வானத்திலேயே கவனமாயிருப்பதில் வியப்பேதுமில்லை.

நாவலின் மையக் கதாபாத்திரம் தளைகளை உடைத்து மேலெழும் இடபமாக அமைந்திருக்க, அதற்கு மாறாக ஆண் கதாபாத்திரங்கள் அனைத்துமே வாழ்வின் யதார்த்தமான இழுப்புக்குள் தம்மை ஒப்புக்கொடுப்பவர்களாகவே அமைந்துள்ளனர். குடும்பம், பொருளாதாரம் என்ற அடிப்படை தேவைகளுக்கும் வாழ்வின் அடுத்த நகர்வுக்கு ஒத்துவரும் முடிவுகளை நோக்கியே அவர்கள் ஒதுங்குகிறார்கள்.

‘இடபம்’ நாவலின் ஆசிரியரான பா.கண்மணி சில கதைகளையும் ஒரு குறுநாவலையும் எழுதியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், முதல் நாவலுக்கான குழப்பங்களோ தடுமாற்றங்களோ இல்லாமல் இயல்பான சித்தரிப்பும் எளிய நேர்த்தியான கதை சொல்லலுமாய் நாவல் மிகுந்த வாசிப்புத் தன்மையுடன் அமைந்துள்ளது.

சவாலான புதிய களத்தில் இயல்புக்கு மாறான கதாபாத்திரத்தை மையமாகக்கொண்டு நுகர்வுக் கலாச்சாரத்தில் திளைக்கும் இன்றைய பெருநகர வாழ்வை அதன் பல்வேறு நிறங்களோடும் நிழல்களோடும் நேர்த்தியாகச் சித்தரித்துள்ள வகையில் ‘இடபம்’ நாவல் ஒரு முக்கியமான வரவு.

2 comments:

  1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சார்....

    ReplyDelete

யுவன் - விஷ்ணுபுரம் விருது

  1 இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு டிசம்பர் மாதம். அலுவலகப் பயிற்சி நிமித்தமாக புனே சென்றிருந்தேன். அன்று காலை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்ற...