Tuesday 24 April 2018

நீங்காத சாபமும் தீராத துயரமும் 0 பி.ஏ.கிருஷ்ணனின் ‘புலிநகக் கொன்றை’ 0


Image result for பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை 

ஒரு கலைப்படைப்பை அது முன்வைக்கும் தரிசனத்தைக் கொண்டே தர வரிசைப்படுத்த முடியும். குறிப்பாக நாவல் என்கிற கலை வடிவத்தைப் பொறுத்தவரை தரிசனம் என்பது அதன் முதன்மையான தவிர்க்க முடியாத அம்சமாகும். நாவலின் சுதந்திரத்தையும் பரப்பையும் உள்வாங்கி எழுதும்போது தரிசனத்திலிருந்து விலகி விடுவதும் அதே நிலையில் கூர்பெற்று முன்னகர்வதுமான சாத்தியங்கள் அதிகம். நீண்ட காலப் பரப்பில் தன்னிச்சையாகவும் விஸ்தாரமாகவும் பயணித்த நாவல்களும் அதே சமயம் வாழ்வின் ஒற்றை கணத்தையோ ஒரேயொரு நாளை மட்டுமோ எடுத்துக்கொண்டு விகாசம் பெற்ற நாவல்களும் தமிழில் உண்டு.
‘ஒரு நல்ல புத்தகம் ஒரு விபத்தைப்போல நம்மைத் தாக்குகிறது. நம்மை சூழ்ந்திருக்கும் அமைதியை அது குலைத்து நமது நிலைய உணர வைக்கிறது’ என்று காஃப்காவின் மேற்கோள் ஒன்று உண்டு.
‘புலிநகக் கொன்றை’ அப்படியொரு சமன்குலைவை வாசகனிடத்தில் ஏற்படுத்தும் குணம்கொண்டதாக உள்ளது. ‘மரணத்தின் மடியிலும் மறதியின் இருளிலும் புதைந்துபோன தமது மூதாதையரின் வாழ்வைத் தோண்டி எடுக்கிறது’ என்று பின்னட்டை வாசகம் நாவலின் ஒரு பரிமாணத்தை மட்டுமே சுட்டுகிறது. தென்கலை ஐயங்காரின் நான்கு தலைமுறை கதையையும் அக்குடும்பம் எதிர்கொள்ளும் சாபத்தையும் துயரத்தையும் விரிவாக விவரிக்கிறது நாவல். தென் தமிழ்நாட்டின் நாங்குநேரியில் வாழ்ந்த அக் குடும்பத்தின் பிரத்தியேகமான அடையாளங்களையும் சடங்குகளையும் அந்த மனிதர்களின் குணாம்சங்களையும் திருத்தமாக சொல்லும்பொழுதே அந்த காலகட்டத்தின் சமூகப் பிண்ணனியையும் தெளிவுடன் நாவல் முன்வைத்துள்ளது. ஆண்களின் பலவீனங்களையும் பொறுப்பற்ற தன்மைகளையும் அதன் காரணமாக பெண்களும் குடும்பமும் எதிர்கொள்ளும் துயரங்களையும் படிப்படியாக பின்னிச் செல்லும் நாவல் இந்தக் குடும்பத்தின் மீது கவிந்துள்ள சாபத்தின் வீரியத்தை ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆனால் வலிகொடுக்கும் தீவிரத்துடன் சித்தரிக்கிறது.
நாவலின் இந்த மேல் அடுக்கிற்கு அஸ்திவாரமாக அமைந்திருப்பது அக் காலகட்டத்தின் தமிழகத்தின் சமூகப் பிண்ணனியாகும். தமிழகத்திலிருந்த அக் கால கட்டத்தின் தொலை நோக்கற்ற அரசியல் இயக்கங்களை அது பலிகொண்ட இளைஞர்களையும் அவர்களது கனவுகளையும் பற்றிய அந்த குரூரமான சித்திரமே நாவலை வலுவுடன் தாங்கி நிற்கிறது.
சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னும் பின்னுமான காலங்களில் இந்திய அரசியல் களத்தில் இயங்கிய பல்வேறு கட்சிகளைப் பற்றி இயக்கங்களைப் பற்றி யோசிக்கும்போது ஏறக்குறைய எல்லாக் கட்சிகளுமே இயக்கங்களுமே பலவீனங்களுடனும் குழப்பங்களுடனும் சுயநலம் சார்ந்த ஆளுமை மோதல்களுடனுமே இருந்தன என்பது தெளிவாகிறது. ‘தேசிய விடுதலை’ என்கிற மைய இலக்கு இவைகளின் பலவீனங்களை பின்தள்ளிவிடுகிற வசதியை ஏற்படுத்தியிருந்தது. அதைத் தவிர்த்துவிட்டு பார்க்கும்போது அப்போதும் சரி விடுதலைக்குப் பின்னும் சரி இந்த இயக்கங்களின் போராட்டங்கள் கொள்கைகளை அனைத்துமே தேவைககள் சந்தர்ப்பங்கள் சார்ந்தவையாகவே இருந்துள்ளன. தொலைநோக்குடனும் நீண்டகாலத் தேவைகளின் அடிப்படையிலும் தமது திட்டங்களை வகுத்து தம்மை வளர்த்துக் கொண்டதாய் எந்தவொரு கட்சியோ இயக்கமோ இல்லை.
மிதவாதம்-தீவிரவாதம் பேசிய காங்கிரஸ், தமிழகத்தின் மாற்று இயக்கங்களாக உருவெடுத்த திராவிடக் கட்சிகள், சர்வதேசிய புனரமைப்பை முன்வைத்த கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆயுதப் புரட்சியை தீர்வாக முன்வைத்த இயக்கங்கள் என்று எல்லாமே மாணவ சக்தியை இளைஞர் சக்தியை தங்களுக்கு ஆதரவாக திரட்டிக் கொள்வதில் காட்டிய ஆர்வம் எப்போதுமே சுயநலம் சார்ந்த தற்காலிகக் காரணங்களுக்காகவே அமைந்தன. அமைகின்றன. லட்சிய நோக்குடனும் கொள்கைத் தெளிவுடனும் இளைஞர்களை வழிநடத்தத் தேவையான ஆன்ம பலத்தை வளர்த்துக் கொள்ளாமல் நீர்த்துப்போன அமைப்புகளாய் பதவிக்காகவும் அதிகாரத்துக்காவும் பெரும் செல்வத்துக்காகவும் தம்மை கீழ்மைப்படுத்திக் கொண்டு சீரழிகின்றன.
இத்தகைய குழப்பமான சிந்தனை முதிர்ச்சியற்ற இயக்கங்களின் உணர்ச்சி வேகம் மிக்க காரியங்களின் அபத்தமான நம்பிக்கையுடன் ஈடுபட்டு பலியான பல்லாயிரம் இளைஞர்களின் தியாகங்கள் பொருளற்றுப் போய்விட்டன. வரலாற்றின் எல்லா காலகட்டங்களிலும் இத்தகைய பலிகள் நிகழ்ந்து கொண்டேதான் இருந்துள்ளன. ஆனால் அவற்றின் பதிவுகள் காலத்தின் காற்றோடு போய்விட்டன.
இதைத் தவிர இன்னும் பலர் தாம் நம்பிய இயக்கமோ அமைப்போ தனது நம்பிக்கைக்கு எதிரான ஒன்றாய் தனிநபர்களின் சுயநலத்துக்காக தன்னை உருமாற்றின் கொள்ளும்போது தம்மையும் அவ்வாறு சுலபமாக மாற்றிக் கொள்ள முடியாத உண்மையான அப்பாவிகள் கட்சி விசுவாசிகள் பைத்தியக்காரர்களாய் மடிந்தார்கள்.
இதையெல்லாம் யோசிக்கும்போது நாவலின் மூத்த கதாபாத்திரமான பொன்னா பாட்டியின் நினைவுகளினுடே கவியும் துயரமும் ஆற்றாமையும்தான் நமக்குள்ளும் கவிகிறது. ஒரு குடும்பத்தின் சாபமாகவும் துயரமாகவும் புலிநகக் கொள்றையில் சித்தரிக்கப்படுவது இந்த நாட்டின் மீது கவிந்துள்ள சாபமேயாகும். காலம் காலமாக பீடித்துவரும் பெருந்துயரமாகும்.
நாவலின் இந்தக் குறியீட்டுத்தன்மை மிக முக்கியமான ஒன்று.. ஆண் வாரிசுகளைத் தொடர்ந்து சிறு பிராயத்திலேயே இழந்து நிற்கிற ஐயங்கார் குடும்பத்தின் குறியீடாக சுட்டப்பட்டுள்ள புலிநகக் கொன்றையை தேசத்தின் குறியீடாக விரித்துக் கொள்ளும்போது நாவலின் உள்ளடுக்குகளை நுட்பமாக தரிசிக்க முடிகிறது.
இளைஞர்களை பலிகொண்ட இயக்கங்களின் மீதான கசப்பான விமர்சனங்களுக்கான காரணங்களை தேட வேண்டிய அவசியமில்லை. அதனதன் காரியங்களையும் காவுகளையும் அந்தந்த இயக்கங்களே தெளிவாகவும் மறதியின்மையுடனும் அறியும். என்றாலும் நாவலில் மார்க்சியம் குறித்த விமர்சனங்கள் பிற இயக்கங்களின் மீதான விமர்சனங்களைவிட கூடுதலாகவும் காட்டமானதாகவும் இருப்பதை கவனிக்க முடிகிறது. அதற்கான காரணங்களையும் நாவலிலிருந்தே அறிந்து கொள்ளவும் முடிகிறது. பிற எந்த இயக்கங்களையும்விட இளைஞர்களை பெரிதும் ஈர்த்து (“அது என்ன மாயக் கம்யூனிஸம். ஆட்களை உயிரைவிடவும் தூண்டறதுங்கறதை தெரிஞ்சுக்க ஆசை.”) பெருங்கனவுகளையும் நம்பிக்கைகளையும் உருவாக்கிய அந்த இயக்கம் தன் நடைமுறை சார்ந்த சரிவுகளின் காரணமாக, அதிலும் குறிப்பாக இந்திய அளவில் தமிழக அளவில் அந்த இயக்கம் சந்தித்த பிறழ்வுகளின் பிண்ணனியில் பார்க்கும், தன்னை நம்பி வந்த இளைஞர்களின் கனவுகளையும் வாழ்வையும் கண்ணீரையும் பொருளற்றதாக ஆக்கிவிட்டது. அதற்கான விமர்சனங்களை அந்த இயக்கம் எதிர் கொள்ள வேண்டியதுதான். (“கம்யூனிஸ்ட் மொழியே தனி மொழியா இருக்கு. மக்களோட சம்பந்தம் இல்லாம மொழி..பக் 321 ) “இன்றைக்கு ஆயிரம் வருஷங்களுக்குப் பின்னால் நாம் எல்லோரும் ஏன் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின்கூட ஏளனத்துக்கு உரியவர்களாய் தெரியலாம்” என்ற மாவோவின் கூற்று இன்று பலித்திருப்பது வரலாற்றுத் துயரம்தான்.
ராமனில் தொடங்கி நம்பி வரையிலான ஆண் கதாபாத்திரங்கள் அனைத்துமே சாபத்தின் பலிகளாகின்றனர். எப்போதும்அலைகழிப்புடன் திட சித்தமின்ற வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள திராணியற்று பின்வாங்குகிறார்கள். இவர்களுக்கு நேர்மாறாக உறுதியான மனோநிலை கொண்டவர்களாய் இருப்பது பெண் கதாபாத்திரங்கள். வாழ்வின் யதார்த்தங்களை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு மனோபலத்துடன் இருக்கிறார்கள். காமத்தை தணித்துக் கொள்வதிலும்கூட தயக்கமற்ற சுபாவம் கொண்டவர்களாய் தங்களது ஆண்களின் பலவீனங்களை பெருந்தன்மையுடன் சகித்துக் கொள்பவர்களாய் ஆண்களால் கைவிடப்பட்ட நிலையிலும் வாழ்வை வாழ்ந்தே தீர்ப்பவர்களாய் இருக்கின்றனர். ஆண்கள் இட்டு நிரப்பாத இடைவெளிகளை தங்களது ஆளுமைகளாய் பூர்த்திசெய்யும் இவர்கள் எல்லோருமே தங்கள் இருப்பு குறித்த தெளிவுட நீள் ஆயுளுடன் விளங்குகிறார்கள். கொள்கை குழப்பங்களோ ஏமாற்றங்களோ இல்லாத அவர்களின் இயல்பான மனவிரிவு ஆழமானதாயும் அரவணைப்புமிக்கதாயும் திடம் பெற்றிருக்கிறது.
“நம்ம குடும்பத்துல ஓடிப் போனவாளும் செத்துப் போனவாளும் பைத்தியம் பிடிச்சுப் போனவாளும் பொன்னாப் பாட்டி இருக்கறாங்கற தைரியத்துலதான் அப்படிப் போனாங்கன்னு நெனக்கறேன்” என்ற வரிகளின் உள்ள உண்மையின் பின்னால் அப்படிப் போய்த் தொலைந்தவர்களைவிட சாபத்தை அனுபவித்துக் கிடக்கிற துயரத்தை அளவிடும்போது “நூறு ஆண்டுகளின் தனிமை” நாவலின் உர்சுலாவின் ஆளுமையும் துயரமுமே நினைவில் எழுகிறது.
நாவலின் செறிவான கட்டமைப்பும் மொழி நேர்த்தியும் வாசகனை நாவலுக்குள் இழுத்துக்கொள்ளும் வகையில் நுட்பத்துடனும் சுவாரஸ்யத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது. முதல்நாவல் என்பதற்கான அடையாளங்கள் தவறியும்கூட பதிவாகவில்லை என்பதை நாவலின் குறிப்பிடத்தக்க அம்சம். பல சந்தர்ப்பங்களில் கைபழகிய எழுத்தின் கச்சிதத் தன்மையும் நுட்பமும் அமைந்துள்ளன. அகண்ட காலத்தையும் களத்தையும் கொண்டு எழுதும்போது நாவல் தன்போக்கில் தடம்பிடித்துப் போய்விடுவதுண்டு. அத்தகைய விலகல்களை விழிப்புடன் தவிர்த்து கடிவாளமிட்டு அனுமதிக்கிற வட்டத்துக்குள் அதற்குண்டான அளவில் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நாவலின் ஒவ்வொரு வரியும் கதைச் செறிவுடன் தங்களது இருப்பை நியாயப்படுத்தி நிற்கின்றன.
தமிழகத்தின் சமூக வரலாற்றுப் பிண்ணனியில் தொடர்ந்து அதன் இளைய சமுதாயம் திசை தவற வைக்கப்பட்டிருப்பதன் துரதிர்ஷ்டத்தை முன்வைத்துள்ள புலிநகக் கொன்றையின் ஆரவாரங்கள் ஒரு நல்ல புத்தகத்துக்கான லட்சணங்களுடன் நம்மை சூழ்ந்தே இருக்கும் என்று சொல்ல முடியும்.


Friday 20 April 2018

கவிதையின் ஐந்து படிநிலைகள்


.
மூக்குத்தி அணிந்த பெண் நடத்துநர் - குணா கந்தசாமியின் கவிதைத் தொகுப்பை முன்வைத்து.

0
கவிதைகளின் வரவு எப்போதும் பெருகியிருக்கும் சூழலில், ஒரு நல்ல கவிதையைக் கண்டுபிடிப்பதென்பது பள்ளி மணியொலித்ததும் வாசலை நோக்கி விரையும் சீருடைக் குழந்தைகளுக்கு நடுவே நம் பிள்ளையைக் கண்டுபிடிக்கத் திணறுவது போன்றதே. ‘எங்க தேடறீங்க?’ என்று நம்மைத் தொட்டுத் திருப்பும் பிள்ளையைப் போல நல்ல கவிதையும் நம்மைத் தொட்டுத் திருப்பும்.
0
ஒரு கவிதைத் தொகுப்பை வாசிக்கும்போது அதை நான் ஐந்து படிநிலைகளில் அணுகுகிறேன். இந்த படிநிலைகளும் இதன் வரையறைகளும் எனது வசதிக்காக நானாக உருவாக்கிக் கொண்டவை. கவிதைத் தொகுப்புகளை நான் அப்படித்தான் வாசிக்கிறேன்.
0
புதிய ஒரு தொகுப்பை வாசிக்கும் தொடக்க நிலையில் அதனை நான் சற்று தள்ளியே வைத்திருப்பேன். ‘இருக்கட்டும், பார்க்கலாம்’ என்பது போன்ற ஒரு மனநிலை. தொடர்ந்து கண்ணில் படும்போதேல்லாம் அது கவனத்தைத் திருப்ப முயற்சிக்கும். எப்போதேனும் எடுத்துப் புரட்டுவேன். ஒன்றிரண்டு கவிதைகளை வாசிக்க முற்படுவேன். ஏற்கெனவே தமிழ்க் கவிதைகளில் அதிகமும் கையாளப்பட்டுள்ள விஷயங்களை பாடுபொருட்களாகக் கொண்ட கவிதைகள் கண்ணில்பட்டவுடன் சலிப்பும் எரிச்சலுமே ஏற்படும். காதலின் துயரம், மரணம், வாழ்வின் இருப்பு, துரதிர்ஷ்டங்கள் போன்ற ஒடுக்கு விழுந்த களங்கள் எல்லாத் தொகுப்புகளிலுமே தவறாமல் இடம் பெறுபவை. ஏற்கெனவே வாசித்துப் பழகிய சொற்களில் அதே தளர்வான துயரமான மனநிலையை உணரும்போது அத்தொகுப்பின் மீதான அக்கறையும் கவனமும் சிதறிவிடும்.
குணாவின் இத்தொகுப்பிலும் அவ்வாறான களங்கள் உண்டு. காதலைப் பற்றிய கவிதைகளாக சரணம், நித்ய அருகு ஆகியவையும், மரணத்தைப் பாடுபவைகளாக பூக்கும் மலரின் கணிதம், மரணத்தின் பச்சைய வாசனையும், வாழ்வின் இருப்பைப் பற்றினவையாக நனவே மீப்பெரும் கனவு, மஞ்சள் பருந்து, நிழல் உலகம் போன்றவையும் உள்ளன.
ஆனால் இவை வாசிப்பில் சலிப்பைத் தராதவை. முன்சொன்ன உணர்வு நிலையிலிருந்து வேறான ஒன்றைத் தரும் சொல்முறையைக் கொண்டிருந்தவை.
புள்ளினங்கள் அற்ற குளத்தின் கரைமரங்கள்
உதிர்க்கும் கண்ணீர்ச் சருகுகளாய்
நினைவுகள் சரசரக்கின்றன’
என்பது தருவது காதலின் துயரத்தைத்தான், ஆனால் இந்தச் சித்தரிப்பில் உருக்கொள்ளும் துயரத்தின் வீரியம் முற்றிலும் வேறானது.

புதிய காட்சிகளையும் அனுபவங்களையும் இத்தொகுப்பில் காணமுடியும் என்ற நம்பிக்கையை அளிக்கும் கவிதைகளை வாசிக்கும்போது தொகுப்பின் மீதான மனவிலக்கம் மெல்ல விலகுகிறது. மேசையில் கைக்கு எட்டும் தூரத்தில் வந்து அது இடம் பிடித்துக் கொள்கிறது.
0
புதிய அத்தொகுப்பை தொடர்ந்து வாசிக்கும்போது, கவிதைக்கேயுரிய பழகிவந்த வடிவிலிருந்தும் சொற்கோவைகளிலிருந்தும் மொழியும்விதத்திலிருந்தும் வேறுபட்டுத் துலங்கும் கவிதைகள் கண்ணில்படும்போது, ‘நான் வேறுமாதிரியானவன்’ என்ற நம்பிக்கையைத் தரும். இதுவே இரண்டாவது படிநிலை.
அள்ளி அணைக்க யாரேனும்
இருக்கும் இடத்தின் பெயரெல்லாம்
வீடென்று ஆகுக.’
என் தந்தையின்
முன்னைக் காதலிகள்
உதிர்த்த முதுநரைக் கூந்தலில்
கருமை மிகுந்த காலங்களைத்
தேடிக்கொண்டு
வெண்ணிற இரவில் திரிகிறேன்.’
போன்ற வரிகள் இத் தொகுப்பை இன்னும் கவனத்துடன் வாசிக்கவேண்டும் என்ற அக்கறையை ஏற்படுத்தும்.
0
மூன்றாவதாக, இதுவரையிலும் எழுதப்படாத ஒன்றை முயற்சிப்பதும் அது கவிதையாக உருவாகி நிற்பதும் புதியத் தொகுப்பின் முன்னுள்ள பெரும் சவால்.
வரையும் காட்சிகளும் அதன் வண்ணங்களும் அவைச் சுட்டும் மனவெளிகளும் வாசகனுக்குக் காட்டும் உலகம் அவன் முன்பு அறியாத ஒன்றாக இருப்பதோடு அது வியப்பளிக்கும் ஒன்றாகவும் திரண்டிருப்பது முக்கியம்.
தொட்டாச்சிணுங்கியை அன்பு செய்தல் என்ற கவிதை அவ்வாறான ஒன்று.
தழுவும் காற்றைப் போல்
சுரக்கும்
தயைக்கு’
என்ற வரிகள் சிந்தனையைப் பிடித்து நிறுத்திவிடுகின்றன.
கதவுக்குப் பின்னால் ஒளிந்து
தயங்கிப் பார்க்கும்
கூச்சக் குழந்தையைப்போல
அடர்வரிசையில் முகங்காட்டுகிறது
மீசையின் முதல் நரை
என்ற வரிகளை வாசித்தபோது ‘அட’ என்று நிமிரச் செய்தன.
குணா கந்தசாமியின் இத்தொகுப்பில் வாசகனுக்கு புதிய காட்சிகளையும் புதிய அனுபவங்களையும் தரிசிக்கத் தரும் கவிதைகள் கணிசமாக உள்ளன.
பச்சோந்தி, கைத்துப்பாக்கி, வெள்ளிவில், ஆந்தை, வெள்ளியில் முளைத்தல், வெண்ணிற இரவில் ஆகியன அவ்வாறானவை.
இத்தகைய கவிதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு இப்போது நமது பிரியத்துக்குரிய தொகுப்பாக நெருங்கிவிடுவதே மூன்றாவது படிநிலை.
0
நான்காவது நிலையில் அத்தொகுப்பு எதிர்கொள்ளும் சோதனை இன்னும் தீவிரமானது. சிக்கலானது. கவிதைகளைத் தொடர்ந்து வாசித்திருக்கும் வாசக அனுபவத்திற்கு முன்பாக இத்தொகுப்பு தன்னை நிரூபித்துக் கொள்ளவேண்டியதாகிறது. இதுவரையிலும் அனுபவமாகாத புதிய கோணத்தையும், வாசிப்பு லகரியையும், வாய்பிளக்கச் செய்யும் வியப்பையும் தரும் கவிதைளை தொகுப்பு கொண்டிருக்கும் என்றால் இந்த நிலையை எதிர்கொள்ள முடியும்.
குட்டிப் பொன்னுலகம் கவிதையின் இறுதி வரிகள்
பிறகு நாங்கள்
ஜோடி போட்டுக்கொண்டு
அங்கிருந்து பார்க்கிறோம்
அடடே
வெளியேதான்
உலகம் எவ்வளவு சிறியது?”
அலை நரை கவிதை
குழந்தைகள்
முச்சந்தியைக் கடக்கும்போது மட்டும்
பிரபஞ்சம் தேயும் ஒலி
மெலிதாகவே கேட்கிறது.
காலமும் நாய்க்குட்டியும்
இயலாமையின் துயரக் கோபத்தில்
நான் காலத்தை ஏசுகையில்
சிரமத்தோடு தலையுயர்திப் பார்த்துவிட்டு
நாய்க்குட்டி கவிழ்ந்துகொள்கிறது
நானென்ன செய்வேனென முனகிக்கொண்டே
விரல்களில் துவங்கும் வானவில், தஸ்தாவஸ்கியின் நண்பர்கள், கூகிள் எர்த் போன்ற கவிதைகள் வியப்பையும், நல்ல கவிதைகள் மட்டுமே அளிக்கும் போதையையும் தருவதாக அமைந்துள்ளன.
0
நெடுங்காலத்தின் முன்னால் மொழியின் பல்வேறு சவால்களுக்கு நடுவிலும் தொடர்ந்து பீறிட்டு வரும் புதிய முளைகளுடன் போட்டியிட்டும் தனது இடத்தை உறுதியுடன் தக்கவைத்துக் கொள்ளும் தகுதியை உடைய கவிதைகளின் நீண்டவரிசை ஒன்று உண்டு.
தமிழின் பெரும் கவிதைப் பரப்பின் சாதனைக் கவிதைகளின் வரிசையில் இடம்பெறும் தகுதியுடைய கவிதைகளை இந்தப் புதியத் தொகுப்பு கொண்டுள்ளதா? என்பதே இறுதியான ஐந்தாவது படிநிலை
ஒட்டுமொத்தக் கவிதைத் திரட்டுக்கு இத்தொகுப்பு ஏதேனும் பங்களிப்பைச் செய்யும் தகுதியைக் கொண்டிருக்கிறதா?
குணா கந்தசாமியின் இத்தொகுப்பு 92 கவிதைகளைக் கொண்டிருக்கிறது. அவற்றில் சில கவிதைகள் பாரம்பரியம் மிக்க தமிழ்க் கவிதையின் பெருமைக்குரிய வரிசையில் சேர்க்கும் தகுதியைக் கொண்டுள்ளன என்பதே இத்தொகுப்பின் சிறப்பு.
நமது ஏக்கம்
ஒரு வாடாத
அழகிய மலராக
இருக்கிறது.
அத்தனை மனிதர்கள் சூழ்ந்திருக்க
முன்னால் நடக்கும் பெண்ணின்
இடுப்பில் தொற்றிக் கொள்கிறது.
ஏக்கத்தின் பூரண தினமொன்றில்
நாம் வசிக்கும்
ஊருக்குள் இறங்கும் பசித்த புலி
ஏக்கத்தின் பூரண மலரைக் கண்ணுற்று
திரும்பி கானகத்திற்கே
பறக்கிறது மெல்ல.
..
சட்டைப் பைக்குள் கையை விட
சிக்கும் ரூபாய் நாணயத்தைக்
குழம்பிப் பார்க்கிறது ஒரு கணம்.
பின்தலையை ஆட்டியவாறே
நாணயத்திலிருந்த
பூவைப் பறித்துக் கொண்டு
மூன்று சிங்கங்களைத்
தெருவுக்குள் விரட்டிவிட்டு
நான்காவது சிங்கத்தின் மீதேறி
ஊழின் பிள்ளை
ஜாம் ஜாமென்று போகிறது.
, மூக்குத்தி அணிந்த பெண் நடத்துநர், துயரம், ஏக்கப்புலி, பூனை மீசை நாய் வால், ஊழின் பிள்ளை, தொட்டாச்சிணுங்கி ஆகிய கவிதைகள் அடர்த்தியான சொல்முறையினாலும் புதிய அனுபவங்களைச் சாத்தியப்படுத்துவதாலும் கவிதை வாசிப்பின் மகிழ்ச்சியை பெருக்குவதாலும் அந்த மகத்தான வரிசையில் சேரும் தகுதியைப் பெறுகின்றன.
0
மூக்குத்தி அணிந்த பெண் நடத்துநர் என்ற குணா கந்தசாமியின் இத்தொகுப்பு பெருமைமிக்க ராஜமார்த்தாண்டன் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது பொருத்தமானதே.
0




Friday 6 April 2018

கடல் கிழவனுடன் ஒரு நாள்


ஹெமிங்வேயுடன் ஒரு சந்திப்பு

Related image
1934ம் ஆண்டின் இனிய இளவேனிற்காலத்தில் மின்னபோலீஸ் ட்ரிபியூன் பத்திரிகையின் இளம் நிருபர் அர்னால்ட் சாமுவேல்சன், அமெரிக்க இலக்கியப் பிதாமகர்களில் ஒருவரான எர்னஸ்ட் ஹெமிங்வேயைச் சந்திப்பதற்காக மின்னசோட்டாவிலிருந்து ஃப்ளோரிடாவுக்குச் சென்றார். ஹெமிங்வே எழுத்தைக் குறித்து சில விஷயங்களையேனும் தன்னோடு பகிந்து கொள்வார் என்று அவர் நம்பினார். ஹெமிங்வேயின் விருந்தோம்பல் அவர் எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பானதாக இருந்தது. இந்த உரையாடல் நிகழ்ந்தபோது ஹெமிங்வேயுடன் தான் கிட்டத்தட்ட ஒருவருட காலம் தங்கியிருக்கப் போகிறோம் என்பது அவருக்குத் தெரியாது. ஹெமிங்வேயின் படகான பைலரின் பாதுகாப்பாளராகப் பணியாற்றியமைக்காக நாளொன்றுக்கு ஒரு டாலர் ஊதியமாக அவருக்கு வழங்கப்பட்டது. ஃப்ளோரிடா, க்யூபா மற்றும் கல்ஃப் பகுதிகளில் அவர் மேற்கொண்ட மீன்பிடி பயணங்களில் அவருடன் செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஹெமிங்வேயுடனான தனது அனுபவங்களை சாமுவெல்கன் 300 பக்க அளவில் எழுதி வைத்திருந்ததை 1980ம் ஆண்டு அவர் மரணமடைந்த பிறகு அவரது மகள் தயேன் தார்பி கண்டெடுத்து “With Hemingway” என்ற பெயரில் பதிப்பித்தார். தார்பி ஒரு அறிமுகத்தில் இவ்வாறு கூறுகிறார். “வெறும் இருபத்திரெண்டே வயதான மேல்மத்திய கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு பண்ணை இளைஞனின் பார்வையில் ஹெமிங்வேயுடன் பழகவும் எழுதவும் மீன் பிடிக்கவும் கிடைத்த வாய்ப்புகளைப் பதிவு செய்த புத்தகம் இது.” சாமுவேல்சன் ஹெமிங்வேயை குறிப்பிட்டிருந்த நாளுக்கு ஒரு நாள் முன்பாகவே சென்று சந்தித்தார். அன்று எழுத்துக் கலைக் குறித்து அவர்களுக்கிடையில் நிகழ்ந்த முதல் உரையாடலின் தமிழ் வடிவமே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
0
ஏப்ரல் மாத இறுதியில் மித வெப்பம் கொண்ட ஒரு நாளில் அந்தச் சந்திப்பு நடந்தது. மழையிலும் வெயிலிலும் துவண்டு சாம்பல் நிறம் கொண்டிருந்த சிறிய மர வீடுகளின் வெற்றுச் சுவர்களில் வெயில் பெருகி வழிந்திருந்தது. நீக்ரோக்களின் தேவாலயத்திற்கு வெளியே தெருவில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். தெரு முனையிலிருந்த மளிகைக் கடையின் தாழ்வார நிழலில் அமர்ந்திருந்த பரதேசிகள் சிலர் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்த கியூபாவின் ரும்பா இசையைக் கேட்டபடி புகைத்துக் கொண்டிருந்தார்கள். நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவன் சைக்கிளில் என்னைக் கடந்து போனான். வாகனங்களற்ற தெரு பெருத்த அமைதியுடன் இருந்தது.

நெருக்கமாகக் கட்டப்பட்ட சின்னஞ்சிறு பழைய வீடுகள் பலவற்றைத் தாண்டி நடந்த பின்பு உயரமான இரும்பு வேலிகளும் ஈச்ச மரங்களும் சூழ்ந்த பெரும் புல்வெளியுடன் கூடிய அந்த இடத்தை அடைந்தேன். பழைய நீதிமன்றக் கட்டடத்தை நினைவுறுத்துவது போன்றிருந்தது அந்த வீடு. அந்த இரண்டடுக்குக் கட்டடம் அமெரிக்க சிவில் யுத்த காலகட்டத்தைச் சேர்ந்தது.

முன்வாசல் நிழலில் காக்கிநிற கால் சட்டையும் ஒரு சாதாரண செருப்பையும் அணிந்துகொண்டு ஹெமிங்வே அமர்ந்திருந்தார். கையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையுடன் விஸ்கி ததும்பும் கோப்பையும் இருந்தது. வாசலில் நின்ற என்னைப் பார்த்ததும் எழுந்து வந்து வரவேற்றார்.

வீட்டின் வடக்குப் பக்கமாய் விரிந்திருந்த நிழலில் இருவரும் உட்கார்ந்தோம். அந்த இடம் ஒரு படுக்கை அறையைப் போலத் தனிமைகொண்டிருந்தது. அவரது வீட்டுக்குள் இருப்பது போலவும் அதே சமயம் இல்லாதது போலவும் இருந்தது. கிட்டத்தட்ட தெருவில் நிற்கும் ஒரு மனிதனிடம் வீட்டுக்குள்ளிருந்து பேசுவது போலிருந்தது.
இந்த இடம் மிகவும் நன்றாக இருக்கிறது” என்றபடி ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தேன். வேலியின் இரும்புப் பட்டைகளினூடடாக கழுத்தை நுழைத்து வெளியேறும் வழி தேடி மெதுவாக நடந்துகொண்டிருந்த மயில்களை அங்கிருந்து பார்க்க முடிந்தது.
மோசமில்லை” என்றபடி ஹெமிங்வே எதிரில் உட்கார்ந்தார்.
காஸ்மோபாலிடனில் வெளியான One trip across பிரமாதமான கதை”
ஆமாம். அது ஒரு நல்ல கதைதான்.”

நான் படித்ததிலேயே மிகச் சிறந்த கதை அதுதான்” சொல்லி முடித்த பிறகு நான் சொன்னதன் அபத்தம் எனக்கு உறைத்தது.
அது கடினமான ஒன்றுதான். சைனாமேனின் பற்கள் பட்டு விஷம் ஏறிவிட்டதோ என அஞ்சி ஒரு நாளைக்கு மூன்று முறை பல் தேய்க்கத் தீர்மானிக்கும் இடம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தக் கதையை எழுதுவதற்கு முன்பு நான் 90 நாட்கள் கடலில் இருந்தேன். எழுதி முடிக்க ஆறு வாரங்கள் பிடித்தன. நீங்கள் எப்போதாவது கதை எழுதிப் பார்த்திருக்கிறீர்களா?”

சென்ற ஆண்டு குளிர்காலத்தின்போது ஒரு நாளைக்கு 16 மணியிலிருந்து 18 மணிவரையிலும் எழுதித் தீர்த்து என் மண்டையில் இருப்பதையெல்லாம் கொட்டி முடித்துவிட்டு படுக்கையில் விழுந்துவிட்டேன். மிகவும் கஷ்டப்பட்டு எழுதினேன். இரண்டு நாவல்களையும் இருபது சிறுகதைகளையும் எழுத முடிந்தது. ஆனால் ஒன்றும் உருப்படியாக அமையவில்லை. காஸ்மோபாலிடனில் உங்கள் கதையை வாசிக்க நேர்ந்தது. படித்ததும் உங்களைப் பார்த்தாக வேண்டுமென்று தீர்மானித்து புறப்பட்டு வந்துவிட்டேன்.”
எழுதுவதைப் பற்றி நான் முக்கியமாய் தெரிந்து கொண்டது ஒரே நேரத்தில் நிறைய எழுதக்கூடாது என்பதுதான்.” ஹெமிங்வே என் தோளில் தட்டியபடி சொன்னார்.

உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடக்கூடாது. எப்போதும் மறுநாளைக்குக் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்கவேண்டும். எழுத்தை எப்போது நிறுத்துவது என்பதைத் தெரிந்து வைத்திருப்பது முக்கியமானது. இருப்பதெல்லாம் எழுதித் தீரட்டும் என்று காலியாகும் வரைக் காத்திருக்கக்கூடாது. சுவாரய்மாய் எழுதிக் கொண்டேயிருக்கும்போது சரியான ஒரு இடத்தைத் தொட்டவுடன் இதற்கடுத்து என்ன வரப்போகிறது என்று தெரியும்பட்சத்தில் எழுதுவதை நிறுத்திவிட்வேண்டும். எழுதுவதை நிறுத்திய பின்பு அதைப் பற்றி யோசிக்கவே கூடாது. நமது ஆழ்மனம் தேவையான வேலைகளைச் செய்துகொள்ளும். மறுநாள் காலையில் நல்ல தூக்கத்திற்குப் பின்பு புத்துணர்வுடன் இருக்கிறபோது முதல் நாள் எழுதியதை மீண்டும் எழுதவேண்டும். முதல் நாள் நிறுத்திய இடத்திற்கு வந்து அதன் பிறகு தொடரவேண்டும். மீண்டுமொரு உச்சத்தைத் தொட்டவுடன் நிறுத்திவிட வேண்டும். இவ்வாறு எழுதுபோது நீ எழுதுவது சுவாரஸ்யமிக்கதாய் இருக்கும். ஒரு நாவலை இவ்வாறு எழுதிக் கொண்டேபோகும்போது நாவலின் ஓட்டம் தடைபடாது வாசிப்பு சுவாரஸ்யம் கொண்டதாக அமைந்துவிடும். ஒவ்வொரு நாளும் நாவலின் முதல் வரியிலிருந்ததுதான் எழுதித் தொடரவேண்டும். சற்றே நீளமாகிவிட்டதென்றால் இரண்டு அல்லது மூன்று அத்தியாயங்களுக்கு முன்னாலிருந்து திரும்ப எழுதவேண்டும். ஆனாலும் வாரத்தில் ஒரு முறையாவது தொடக்கத்திலிருந்து எழுதிவிட வேண்டும். இவ்வாறு எழுதுவதன் வழியாக அதை ஒரே படைப்பாக உருவாகக்க முடியும். எழுதி முடித்ததும் அதிலிருந்து எதையெல்லாம் வெளியே எடுக்க முடியுமோ எல்லாவற்றையும் நீக்கிவிடவேண்டும். எதை வெளியே எடுப்பது என்று தீர்மானிப்பதும் முக்கியமான விஷயம். நீங்கள் சரியாகத்தான் எழுதுகிறீர்களா என்பதை நீங்கள் வெட்டி எறிபவற்றைக் கொண்டு தீர்மானித்துவிட முடியும். நீங்கள் எழுதியதை இன்னொருவர் மேலும் சுவையுடன் எழுதிவிட முடியும் என்று நீங்கள் நினைக்கிறவற்றை தயக்கமின்றி உங்களால் வெட்டியெறிய முடியுமென்றால் நீங்கள் தகுதியுடன்தான் எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.”
என்னுடைய எழுத்தில் ஆர்வம்கொண்டவராகவும் எனக்கு உதவ வேண்டும் என்ற அக்கறையுடனும் ஹெமிங்வே ஆர்வத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்.

எழுத்து நிறைய இயந்திரத்தனமான வேலைகளை உள்ளடக்கியது என்பதால் சோர்வடைந்துவிடக்கூடாது. அந்த வேலைகளைச் செய்துதான் ஆகவேண்டு. சமாளிக்க முடியும். 'A farewell to Arms' ன் முதல் பகுதியை நான் குறைந்தபட்சம் ஐம்பது முறையேனும் திருப்பி எழுதியிருப்பேன். திரும்பத் திரும்ப எழுதி சரி செய்யவேண்டும். முதல் தடவை எழுதுவது எல்லாமே வெறும் குப்பையாகத்தான் இருக்கும். எழுத ஆரம்பிக்கிற காலத்தில் எழுதுவது அனைத்து மஹாவாக்கியங்களாகத்தான் இருக்கும். ஆனால் வாசகனுக்கு அவை எதுவுமே ஒரு பொருட்டாக இருக்காது. தான் வாசித்துக் கொண்டிருப்பது வெறும் படைப்பல்ல – தன் வாழ்வின் ஒரு பகுதியென்று வாசகன் உணர்கிறமாதிரி எழுதுவதுதான் லட்சியம் என்பதை மனதில்கொண்டு மறுபடி மறுபடி எழுதி சரி செய்யவேண்டும். எழுத்தின் அசலான வலிமையே அதுதான். நீ அதை சாதிக்க முடியுமென்றால் வாசகன் உனது படைப்பின் அனைத்து அனுபவங்களையும் பெற்றுவிட முடியும். உனக்கு அதில் எதுவுமே அனுபவமாகாமல்கூட போய்விடலாம். கடினமாக உழைக்க முடியுமென்றால் இன்னும் சிறப்பாக எழுத முடியும். சிறப்பாக எழுதும்போது உங்கள் எழுத்து மேலும் கூரடைந்துவிடும். உங்கள் ஒவ்வொரு படைப்பும் முந்தைய ஒன்றிலிருந்து மேம்பட்டிருப்பது அவசியம். எழுதுவதைவிடவும் வேறெதாவது காரியங்கள் செய்யவே எனக்கு விருப்பம். என்னால் அவ்வாறு செய்யவும் முடியும். ஆனாலும் எழுதாமல் இருப்பது எனக்கு பெரும் அசௌகர்யத்தைத் தருகிறது. எனக்குள்ளிருக்கும் திறமையை வீணடிப்பதுபோல் உணர்கிறேன்.”
ஹெமிங்வே சொல்வது அனைத்தையும் நினைவில் கொள்ளவேண்டிய அக்கறையுடன் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். இதன் பிறகு அவரை எப்போதும் சந்திக்கப் போவதில்லை என்கிற உணர்வு எனக்குள் தீவிரப்பட்டிருந்தது.
Image result for ernest hemingway

இன்னொரு முக்கியமான விஷயம் உங்களுக்குத் தெரியாததைப் பற்றி எழுதக்கூடாது. முழுதும் கற்பனையான எதுவுமே கவிதைதான். நீங்கள் எழுதக்கூடிய ஊரைப் பற்றியும் மனதிர்களைப் பற்றியும் முழுமையாக நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அவ்வாறு இல்லையெனில் உங்களுடைய கதை வெற்றுவெளியில் நடப்பது போலாகிவிடும். எழுத எழுத புதிய புதிய விஷயங்களை தானே கண்டுணர்ந்து கொள்வீர்கள். ஒரு நாளைக்கான எழுத்தை நீங்க நிறுத்தும்போது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் அதன் பின்பு என்ன நடக்கும் என்பது குறித்து தெரியாமலிருக்கும். எழுதி முடிக்கிறவரை அதன் முடிவு இன்னதுதான் என்றும் உங்களால் சொல்ல முடியாது.”

எழுதத் துவங்கும்போது எந்த முன்திட்டங்களும் இல்லாமல் எழுதுவதாகச் சொல்கிறீர்களா?”

மேலான படைப்புகள் அவ்வாறு எழுதப்பட்டவைகளே. ஒரு நல்ல கதை உங்களுக்குத் தெரியுமென்றால் அதை எழுதிவிடுங்கள். அவ்வாறான கதைகளை ஒரே மூச்சில் எழுதிவிடமுடியும். ஆனால் ஒவ்வொரு நாளும் கதைப்போக்கில் நகர்ந்தபடியே இருக்கும்போதுதான் மேலான படைப்புகள் உருவாகும். எழுத்து மிகக் கடினமான வேலைதான். னால் உற்சாகமானது. வாசகனுக்கு மேலும் உற்சாகம் தரக்கூடியது. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய இன்னொன்று. எப்போதும் வாழும் எழுத்தாளர்களுடன் போட்டியிடக்கூடாது என்பது. அவர்கள் சிறந்த எழுத்தாளர்களா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது. இதனால் மறைந்த எழுத்தாளர்களோடுதான் போட்டியிட வேண்டும். அவர்களது சிறப்பான படைப்புகளை நீங்கள் கடந்து செல்லும்போதுதான் நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொல்ல முடியும். இதுவரையிலும் எழுதப்பட்ட எல்லா சிறந்த படைப்புகளையும் ஒரு மறையாவது வாசித்துவிட வேண்டும். என்னவெல்லாம் எழுதப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்துகொள்வதும் முக்கியம். ஏற்கெனவோ எழுதப்பட்ட ஒன்றுபோல் உங்களிடமும் ஒரு கதை உள்ளதென்றால் முன்னதைவிட சிறப்பாக உங்களால் எழுத முடியாதபட்சத்தில் அதை விட்டுவிட வேண்டும். கலையில் திருட்டு என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்ற. ஆனால திருடப்படுவதை நீங்கள் சிறப்பாக செய்ய முடிகிறபோதுதான் அந்த அனுமதி செல்லுபடியாகும். ஏற்கெனவே உள்ளதைக் கீழ்மைப்படுத்துவதாக அது அமைந்துவிடக்கூடாது. எவருடைய பாணியையும் பின்பற்றி எஎழுதுவது கூடாது. ஒரு விஷயத்தை ஒரு எழுத்தாளன் முன்வைக்கும் அபத்தமே அவனது பாணியாக அமைந்துவிடுகிறறது. உங்களுக்கென்று ஒரு பாணி அமைந்துவிடுமென்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். அப்படியில்லாமல் இன்னொருவரைப்போல நீங்கள் எழுத முயற்சிக்கிறீர்கள் என்றால் அவருடைய அபத்தத்துடன் உங்களுடையதும் சேர்ந்துகொள்ளும். இருக்கட்டும். உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லுங்கள்.”

ஸ்டீவன்சனின் kidnapped எனக்குப் பிடித்த ஒன்ற. தோரேவின் wolden pond ம் பிடிக்கும். உடனடியாக வேறு எந்தப் பெயரையும் சொல்ல முடியவில்லை.”

“War and peace படித்ததில்லையா?”
இல்லை.”

அது மிகச் சிறந்த புத்தகம். கட்டாயம் நீங்கள் படிக்கவேண்டும். சரி என்னுடைய அறைக்குச் செல்வோம். நீங்கள் படிக்கவேண்டிய புத்தகங்களின் பட்டியல் ஒன்றையும் நான் தருகிறேன்.”
வீட்டின் பின்பக்கத்தில் கார் நிறுத்தத்தின் மேல்தளத்தில் அவரது அறை இருந்தது. தரை முழுக்க தரையோடுகள் பதிக்கப்பட்டிருந்தன. மூன்று பக்க ஜன்னல்களுக்குக் கீழே தரை வரையிலான அலமாரிகளில் புத்தகங்கள் நிறைந்திருந்தன. அறையின் மூலையில் இருந்த பழமையான மேசைக்கு எதிரிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து ஹெமிங்வே எழுத ஆரம்பித்தார். எதிர்ப்புறமாய் உட்கார்ந்துகொண்ட எனக்கு அவருடைய நேரத்தை வீணடிக்கிறோம் என்று ஒரு குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. என்னுடைய அனுபவங்களைச் சொல்லி அவரை குதூகலப்படுத்தலாம் என்று நினைத்தாலும் அவை அவ்வளவு சுவாரஸ்யமிக்கதாய் இருக்காது என்று பேசாமல் இருந்துவிட்டேன். அவர் தரும் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வதற்குத் தயாராயிருந்த என்னிடம் பதிலுக்குத் தர ஒன்றுமில்லாதிருந்தது.

இப்போது என்னால் சரியாக சொல்ல முடியவில்லை. நீங்கள் இந்த விஷயத்தில் தீவிரம் கொண்டவராகத்தான் தெரிகிறீர்கள். தீவிரம் மிக முக்கியம். நிறைய எழுதவேண்டுமென்றால் தீவிரம் வேண்டும். கலையின் உச்சம் புனைவில்தான் உள்ளது. திறமை என்ழுது தேவையானதுதான். ஆனால் அது மட்டுமே போதாது. என்ன திறமை இருந்தாலும் ஒரு சிலரால் கதை எழுதவே முடியாது. உங்களால் கதை எழுத முடியாது என்பதை உணரத் தெரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?”

“தெரியவில்லை. ஓருவன் தனது திறமையைக் குறித்து எப்படி அறிந்து கொள்வது?”

“அது உங்களால் முடியாது. சில சமயங்களில் திறமை வெளிப்படுகிறவரை எழுதிக்கொண்டே இருக்கவேண்டி வரும். உள்ளபடியே திறமை உள்ளதென்றால் எப்படியும் அது தானாகவே வெளிப்பட்டுவிடும். எப்படியானாலும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என் யோசனை. தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பது மிகக் கடினமான வேலைதான். என்னால் எழுதி சம்பாதிக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் நான் ஒரு வகையான திருடன் எப்தால்தான். இலக்கியமே எனது ஆயுதம். பத்து கதை எழுத நேர்ந்தால் அதில் ஒரேயொரு கதையை மட்டுமே வைத்துக்கொண்டு பாக்கி ஒன்பது கதைகளையும் கிழித்தெறிந்துவிடுவேன். பதிப்பாளர்களுக்கு என்னிடமிருந்து சிறப்பான ஒரு படைப்பு வேண்டும். அதற்காக எத்தனை பணம் வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஒருவகையில் அவர்களுக்குள்ளாக ஒருவித போட்டியை உருவாக்குவதன் மூலம் பத்துக் கதைகளுக்கான விலையை அந்த ஒரேயொரு கதையின் வழியாகக் கறந்து விடுகிறேன். நான் இப்படிச் செய்வது ஒருவிதத்தில் அவர்களை எரிச்சல் கொள்ளச் செய்கிறது. இப்போது அவர்கள் விரும்புவதெல்லாம் என்னுடைய சரிவையே. எப்போதும் நீங்கள் எழுதத் தொடங்கும்போது சுற்றியிருக்கும் அனைவரும் உங்களுக்கு நல்ல எதிர்காலம் வாய்க்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள். ஆனால் நீங்கள் தொடர்ந்து நன்றாக எழுதிவிட்டால் உங்களைத் தொலைத்துக்கட்டவே விரும்புவார்கள். ஆனால் நீங்கள் தொடர்ந்து நன்றாக எழுதிவிட்டால் உங்களைத் தொலைத்துக்கட்டவே விரும்புவார்கள். எல்லோரையும் கடந்து எல்லோருக்கும் மேலாக இருப்பதற்கு ஒரேயொரு வழிதான் உள்ளது. அது தொடர்ந்து சிறப்பாக எழுதிக் கொண்டேயிருப்பதுதான்.”

“கற்பனை குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று நான் கேட்டேன். “புதிய விஷயங்களைக் கண்டடைய முடியாதபோது ஒருவன் என்ன செய்வது?”

“தொடர்ந்து எழுதுவதன் வழியாகத்தான் கண்டடையக் கற்றுக் கொள்ளவும் முடியும்.”

“எழுதத் தொடங்கும்போதே குழப்பமடைய நேர்ந்தால் கூடவா?”

“சில சமயங்களில்.”

“இன்னொரு விஷயத்தையும் நான் கேட்கவேண்டும் என்று நினைத்தேன். பெரும்பாலும் தனிமையில் இருக்கவே நான் விரும்புகிறேன். எல்லா நேரங்களிலும் மற்றவர்கள் என்னைச் சூழ்ந்திருப்பதை நான் விரும்பவில்லை. அப்படியான ஒரு சூழல் ஒரு படைப்பாளிக்கு பாதகமானதென்று நினைக்கிறீர்களா?”

“அப்படியில்லை. அதுமாதிரியான சந்தர்ப்பங்களைத் தொடர்ந்து மனிதர்களை சந்திக்கும்போது அவர்களை மேலும் நுட்பமாக அணுக முடியும். சென்ற முறை ஆப்பிரிக்காவுக்குச் சென்றபோது மனிதர்கள் யாருக்கும் முகம் காட்டக்கூடாது என்கிற அளவுக்கு மனம் சோர்ந்திருந்தேன். நீங்கள் யார் என்பதைவிட என்ன செய்கிறீர்கள் என்பதே முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் இருந்தாலும் சரி மறைந்தாலும் சரி பெற்ற தாயைத் தவிர மற்றவர்கள் யாரும் கவலைப்படமாட்டார்கள். தனியொரு ஆளாக நீங்கள் ஒன்றுமே கிடையாது. உங்களுக்கு எது நேர்ந்தாலும் யாரும் கவலைப்பட மாட்டார்கள். மற்றவர்கள் உங்களை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும்படியாக நீங்கள்தான் செயல்படவேண்டும்.”
சென்ற வருடன் மேற்குப் பகுதியில் சரக்குக் கப்பல்களில் சில மாதங்கள் பயணித்தேன். அதுபோன்ற பயணங்கள் ஒரு படைப்பாளிக்கு உதவக்கூடுமா?”

“நிச்சயமாக. எனக்கும்கூட ஆசைதான். ஆனால் மனைவி குடும்பம் என்று நான் கட்டுண்டிருக்கிறேன். உங்களையும் நீங்கள் அறிந்துகொள்வது அவசியமென்பதால் எப்போதும் ஊர் சுற்றிக்கொண்டே இருக்கலாகாது. ஒரு இடத்தைக் குறித்து உருப்படியாய் தெரிந்து கொள்ளுமளவு அங்கு தங்கியிருக்க வேண்டும். தற்காலிகமாய் தங்க நேர்கிற மோசமான முகாம்களிலிருந்தும்கூட ஏதேனுமொரு நல்ல விஷயத்தைக் கிரகித்துக் கொள்வது அவசியம். Huckleberry finn வாசித்ததுண்டா?”

“வெகுநாட்களுக்கு முன்பு.”

“மறுபடியும் ஒருமுறை கட்டாயம் நீங்கள் வாசிக்கவேண்டும். அமெரிக்கரால் எழுதப்பட்ட மிகச் சிறந்த புத்தகம் அது. காணாமல்போன நீக்ரோவை ஹக் சந்திக்கிற இடம் வரையிலும் அது நன்றாகவே இருக்கும். அமெரிக்க இலக்கியத்தி துவக்கப்புள்ளி அதுதான். Stephen Crane ன் The Blue Hotel எப்போதாவது படித்ததுண்டா?”

“இல்லை.”

இதற்குள் அவர் பட்டியலை தயார் செய்திருந்தார்.”

“இந்தப் பட்டியலைப் பாருங்கள். ஒவ்வொரு எழுத்தாளனும் தனது கல்வி அறிவின் ஒரு பகுதியாக இவற்றை வாசித்திருப்பது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.” என்று என்னிடம் அந்தப் பட்டியலைக் கொடுத்தார்.

Stephen Crane –      The Blue Hotel and The Open Boat
Gustave Flaubert – Madame Bovary
James Joyce –          Dubliners
Stendhal –               The Red and the Black
Somerset Maugham – Of human bondage
Tolstoy –                Anna Karenina, War and Peace
Thomas Mann –   Buddenbrooks
George Morre –    Hail and Farewell
Doestoevsky –     Brothers Karamazoff, Oxford book of English Verse
E E Cummings – The Enormous Room
Emile Bronte –    Wuthering Heights
W H Hudson –    Far Away and Long Ago
Henry James – The Americans

இவற்றைப் படித்திருக்கவில்லை என்றால் நீங்கள் போதிய அளவு கற்றுக் கொள்ளவில்லை என்றே பொருள். இவை வெவ்வேறு வகையான எழுத்துக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. சில புத்தகங்கள் உங்களை அலுப்பூட்டலாம். சில ஆதர்சம் தரலாம். மீதியுள்ள புத்தகங்கள் நிச்சயம் உங்களுக்குப் பிடித்தமானவையாக இருக்கும். இதுபோல எழுத முயற்சிப்பதே பயனற்றது என்று மனம் தளரவைக்கும் அளவு சிறப்பாக எழுதப்பட்டவை அவை. The Blue Hotel என்னிடம் உள்ளது என்று நினைக்கிறேன். A Farewell to Arms படித்திருக்கிறீர்களா?”

“இல்லை.”

“நான் அதை எழுதி முடித்தபோது மிகச் சிறப்பாக உணர்ந்தேன். இன்னும்கூட அதில் எழுதியிருக்கவேண்டிய விஷயங்கள் உள்ளன என்பதையும் நான் உணரவே செய்கிறேன்.” என்று சொல்லியபடியே ஹெமிங்வே தன் புத்தக அலமாரியை நோக்கி நடந்தார். இரண்டு புத்தகங்களை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார். ஒன்று ஸ்டீபன் கிரேனின் சிறுகதைத் தொகுப்பு. மற்றது A Farwell to Arms. அவர் தொடர்ந்து சொன்னார் “படித்து முடித்தவுடன் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். என்னிடம் வேறு பிரதி இல்லை.”

“நாளைக்கேக் கொடுத்துவிடுகிறேன்.”

“இனி என்ன செய்வதாய் உத்தேசம்?”

“ஒரு படகைப் பிடித்து க்யூபாவுக்குப் போகவே விரும்புகிறேன். ஆனால் அது சாத்தியமில்லை என்பதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் நான் வடக்கு நோக்கித்தான் போயாக வேண்டும்.”

“உங்களுக்கு ஸ்பானிஷ் பேசத் தெரியுமா?”

“இல்லை.”

“அப்படியானால் க்யூபாவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதும் சாத்தியமில்லை. இதற்கு முன்னால் கடல் பயணம் போனதுண்டா?”

“இல்லை.”

“கஷ்டந்தான். ஏற்கெனவே அனுபவம் உள்ளவர்கள் மாத்திரமே அவர்களுக்குத் தேவை. வரும் கோடையில் நான் க்யூபாவுக்குப் போகிறேன். ஆனால் அந்தச் சிறிய படகில் போதுமான டம் இல்லாததால் பயணிகள் அனைவரும் அவரவர்களுக்கான வேலையைச் செய்தே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களில் யாரேனும் ஒருவர் சிறு தவறிழைத்துவிட்டாலும்கூட அதனால் படகே மூழ்கிவிடும் அபாயம் உள்ளது. எனவே என்னால் அனுபவம் இல்லாத ஒருவரை உடன் அழைத்துச் செல்வது சாத்தியமில்லை.”

நான் தலையசைத்தேன்.

“உங்களுக்குக் கடல் அனுபவம் இருந்திருந்தால் விஷயமே வேறு.”
“எல்லோரும் அதைத்தான் சொல்கிறார்கள். மேற்குக் கரையில் எல்லா துறைமுகங்களிலும் இதைதான் பிரச்சினை. எனக்கு அனுபவம் வேண்டும்தான். ஆனால் புதியவன் ஒருவன் அதை எப்படி அடைவது என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.”

“சிரமந்தான்.”

ஹெமிங்வே எழுந்து நிற்கவே அவர் என்னை புறப்படச் சொல்கிறார் என்பதாக நான் உணர்ந்தேன்.

“நல்லது. எழுதுவதைப் பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் எனக்கு உபயோகமாயிருக்கும். நாளைக்கே இந்தப் புத்தகங்களைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். என்னோடு பேசிக் கொண்டிருந்தது உங்களுக்கு அலுப்பூட்டவே செய்திருக்கும். இப்போது நான் புறப்படுவதுதான் நல்லது.”
“அப்படியொன்றும் இல்லை. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. எழுத்து விஷயமாக உங்களுக்கு ஏதேனும் கேட்க இருந்தால் நாளை மாலையில் வரலாம். உங்கள் எழுத்துக்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.”

“நன்றி.”





‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...