Tuesday 24 April 2018

நீங்காத சாபமும் தீராத துயரமும் 0 பி.ஏ.கிருஷ்ணனின் ‘புலிநகக் கொன்றை’ 0


Image result for பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை 

ஒரு கலைப்படைப்பை அது முன்வைக்கும் தரிசனத்தைக் கொண்டே தர வரிசைப்படுத்த முடியும். குறிப்பாக நாவல் என்கிற கலை வடிவத்தைப் பொறுத்தவரை தரிசனம் என்பது அதன் முதன்மையான தவிர்க்க முடியாத அம்சமாகும். நாவலின் சுதந்திரத்தையும் பரப்பையும் உள்வாங்கி எழுதும்போது தரிசனத்திலிருந்து விலகி விடுவதும் அதே நிலையில் கூர்பெற்று முன்னகர்வதுமான சாத்தியங்கள் அதிகம். நீண்ட காலப் பரப்பில் தன்னிச்சையாகவும் விஸ்தாரமாகவும் பயணித்த நாவல்களும் அதே சமயம் வாழ்வின் ஒற்றை கணத்தையோ ஒரேயொரு நாளை மட்டுமோ எடுத்துக்கொண்டு விகாசம் பெற்ற நாவல்களும் தமிழில் உண்டு.
‘ஒரு நல்ல புத்தகம் ஒரு விபத்தைப்போல நம்மைத் தாக்குகிறது. நம்மை சூழ்ந்திருக்கும் அமைதியை அது குலைத்து நமது நிலைய உணர வைக்கிறது’ என்று காஃப்காவின் மேற்கோள் ஒன்று உண்டு.
‘புலிநகக் கொன்றை’ அப்படியொரு சமன்குலைவை வாசகனிடத்தில் ஏற்படுத்தும் குணம்கொண்டதாக உள்ளது. ‘மரணத்தின் மடியிலும் மறதியின் இருளிலும் புதைந்துபோன தமது மூதாதையரின் வாழ்வைத் தோண்டி எடுக்கிறது’ என்று பின்னட்டை வாசகம் நாவலின் ஒரு பரிமாணத்தை மட்டுமே சுட்டுகிறது. தென்கலை ஐயங்காரின் நான்கு தலைமுறை கதையையும் அக்குடும்பம் எதிர்கொள்ளும் சாபத்தையும் துயரத்தையும் விரிவாக விவரிக்கிறது நாவல். தென் தமிழ்நாட்டின் நாங்குநேரியில் வாழ்ந்த அக் குடும்பத்தின் பிரத்தியேகமான அடையாளங்களையும் சடங்குகளையும் அந்த மனிதர்களின் குணாம்சங்களையும் திருத்தமாக சொல்லும்பொழுதே அந்த காலகட்டத்தின் சமூகப் பிண்ணனியையும் தெளிவுடன் நாவல் முன்வைத்துள்ளது. ஆண்களின் பலவீனங்களையும் பொறுப்பற்ற தன்மைகளையும் அதன் காரணமாக பெண்களும் குடும்பமும் எதிர்கொள்ளும் துயரங்களையும் படிப்படியாக பின்னிச் செல்லும் நாவல் இந்தக் குடும்பத்தின் மீது கவிந்துள்ள சாபத்தின் வீரியத்தை ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆனால் வலிகொடுக்கும் தீவிரத்துடன் சித்தரிக்கிறது.
நாவலின் இந்த மேல் அடுக்கிற்கு அஸ்திவாரமாக அமைந்திருப்பது அக் காலகட்டத்தின் தமிழகத்தின் சமூகப் பிண்ணனியாகும். தமிழகத்திலிருந்த அக் கால கட்டத்தின் தொலை நோக்கற்ற அரசியல் இயக்கங்களை அது பலிகொண்ட இளைஞர்களையும் அவர்களது கனவுகளையும் பற்றிய அந்த குரூரமான சித்திரமே நாவலை வலுவுடன் தாங்கி நிற்கிறது.
சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னும் பின்னுமான காலங்களில் இந்திய அரசியல் களத்தில் இயங்கிய பல்வேறு கட்சிகளைப் பற்றி இயக்கங்களைப் பற்றி யோசிக்கும்போது ஏறக்குறைய எல்லாக் கட்சிகளுமே இயக்கங்களுமே பலவீனங்களுடனும் குழப்பங்களுடனும் சுயநலம் சார்ந்த ஆளுமை மோதல்களுடனுமே இருந்தன என்பது தெளிவாகிறது. ‘தேசிய விடுதலை’ என்கிற மைய இலக்கு இவைகளின் பலவீனங்களை பின்தள்ளிவிடுகிற வசதியை ஏற்படுத்தியிருந்தது. அதைத் தவிர்த்துவிட்டு பார்க்கும்போது அப்போதும் சரி விடுதலைக்குப் பின்னும் சரி இந்த இயக்கங்களின் போராட்டங்கள் கொள்கைகளை அனைத்துமே தேவைககள் சந்தர்ப்பங்கள் சார்ந்தவையாகவே இருந்துள்ளன. தொலைநோக்குடனும் நீண்டகாலத் தேவைகளின் அடிப்படையிலும் தமது திட்டங்களை வகுத்து தம்மை வளர்த்துக் கொண்டதாய் எந்தவொரு கட்சியோ இயக்கமோ இல்லை.
மிதவாதம்-தீவிரவாதம் பேசிய காங்கிரஸ், தமிழகத்தின் மாற்று இயக்கங்களாக உருவெடுத்த திராவிடக் கட்சிகள், சர்வதேசிய புனரமைப்பை முன்வைத்த கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆயுதப் புரட்சியை தீர்வாக முன்வைத்த இயக்கங்கள் என்று எல்லாமே மாணவ சக்தியை இளைஞர் சக்தியை தங்களுக்கு ஆதரவாக திரட்டிக் கொள்வதில் காட்டிய ஆர்வம் எப்போதுமே சுயநலம் சார்ந்த தற்காலிகக் காரணங்களுக்காகவே அமைந்தன. அமைகின்றன. லட்சிய நோக்குடனும் கொள்கைத் தெளிவுடனும் இளைஞர்களை வழிநடத்தத் தேவையான ஆன்ம பலத்தை வளர்த்துக் கொள்ளாமல் நீர்த்துப்போன அமைப்புகளாய் பதவிக்காகவும் அதிகாரத்துக்காவும் பெரும் செல்வத்துக்காகவும் தம்மை கீழ்மைப்படுத்திக் கொண்டு சீரழிகின்றன.
இத்தகைய குழப்பமான சிந்தனை முதிர்ச்சியற்ற இயக்கங்களின் உணர்ச்சி வேகம் மிக்க காரியங்களின் அபத்தமான நம்பிக்கையுடன் ஈடுபட்டு பலியான பல்லாயிரம் இளைஞர்களின் தியாகங்கள் பொருளற்றுப் போய்விட்டன. வரலாற்றின் எல்லா காலகட்டங்களிலும் இத்தகைய பலிகள் நிகழ்ந்து கொண்டேதான் இருந்துள்ளன. ஆனால் அவற்றின் பதிவுகள் காலத்தின் காற்றோடு போய்விட்டன.
இதைத் தவிர இன்னும் பலர் தாம் நம்பிய இயக்கமோ அமைப்போ தனது நம்பிக்கைக்கு எதிரான ஒன்றாய் தனிநபர்களின் சுயநலத்துக்காக தன்னை உருமாற்றின் கொள்ளும்போது தம்மையும் அவ்வாறு சுலபமாக மாற்றிக் கொள்ள முடியாத உண்மையான அப்பாவிகள் கட்சி விசுவாசிகள் பைத்தியக்காரர்களாய் மடிந்தார்கள்.
இதையெல்லாம் யோசிக்கும்போது நாவலின் மூத்த கதாபாத்திரமான பொன்னா பாட்டியின் நினைவுகளினுடே கவியும் துயரமும் ஆற்றாமையும்தான் நமக்குள்ளும் கவிகிறது. ஒரு குடும்பத்தின் சாபமாகவும் துயரமாகவும் புலிநகக் கொள்றையில் சித்தரிக்கப்படுவது இந்த நாட்டின் மீது கவிந்துள்ள சாபமேயாகும். காலம் காலமாக பீடித்துவரும் பெருந்துயரமாகும்.
நாவலின் இந்தக் குறியீட்டுத்தன்மை மிக முக்கியமான ஒன்று.. ஆண் வாரிசுகளைத் தொடர்ந்து சிறு பிராயத்திலேயே இழந்து நிற்கிற ஐயங்கார் குடும்பத்தின் குறியீடாக சுட்டப்பட்டுள்ள புலிநகக் கொன்றையை தேசத்தின் குறியீடாக விரித்துக் கொள்ளும்போது நாவலின் உள்ளடுக்குகளை நுட்பமாக தரிசிக்க முடிகிறது.
இளைஞர்களை பலிகொண்ட இயக்கங்களின் மீதான கசப்பான விமர்சனங்களுக்கான காரணங்களை தேட வேண்டிய அவசியமில்லை. அதனதன் காரியங்களையும் காவுகளையும் அந்தந்த இயக்கங்களே தெளிவாகவும் மறதியின்மையுடனும் அறியும். என்றாலும் நாவலில் மார்க்சியம் குறித்த விமர்சனங்கள் பிற இயக்கங்களின் மீதான விமர்சனங்களைவிட கூடுதலாகவும் காட்டமானதாகவும் இருப்பதை கவனிக்க முடிகிறது. அதற்கான காரணங்களையும் நாவலிலிருந்தே அறிந்து கொள்ளவும் முடிகிறது. பிற எந்த இயக்கங்களையும்விட இளைஞர்களை பெரிதும் ஈர்த்து (“அது என்ன மாயக் கம்யூனிஸம். ஆட்களை உயிரைவிடவும் தூண்டறதுங்கறதை தெரிஞ்சுக்க ஆசை.”) பெருங்கனவுகளையும் நம்பிக்கைகளையும் உருவாக்கிய அந்த இயக்கம் தன் நடைமுறை சார்ந்த சரிவுகளின் காரணமாக, அதிலும் குறிப்பாக இந்திய அளவில் தமிழக அளவில் அந்த இயக்கம் சந்தித்த பிறழ்வுகளின் பிண்ணனியில் பார்க்கும், தன்னை நம்பி வந்த இளைஞர்களின் கனவுகளையும் வாழ்வையும் கண்ணீரையும் பொருளற்றதாக ஆக்கிவிட்டது. அதற்கான விமர்சனங்களை அந்த இயக்கம் எதிர் கொள்ள வேண்டியதுதான். (“கம்யூனிஸ்ட் மொழியே தனி மொழியா இருக்கு. மக்களோட சம்பந்தம் இல்லாம மொழி..பக் 321 ) “இன்றைக்கு ஆயிரம் வருஷங்களுக்குப் பின்னால் நாம் எல்லோரும் ஏன் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின்கூட ஏளனத்துக்கு உரியவர்களாய் தெரியலாம்” என்ற மாவோவின் கூற்று இன்று பலித்திருப்பது வரலாற்றுத் துயரம்தான்.
ராமனில் தொடங்கி நம்பி வரையிலான ஆண் கதாபாத்திரங்கள் அனைத்துமே சாபத்தின் பலிகளாகின்றனர். எப்போதும்அலைகழிப்புடன் திட சித்தமின்ற வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள திராணியற்று பின்வாங்குகிறார்கள். இவர்களுக்கு நேர்மாறாக உறுதியான மனோநிலை கொண்டவர்களாய் இருப்பது பெண் கதாபாத்திரங்கள். வாழ்வின் யதார்த்தங்களை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு மனோபலத்துடன் இருக்கிறார்கள். காமத்தை தணித்துக் கொள்வதிலும்கூட தயக்கமற்ற சுபாவம் கொண்டவர்களாய் தங்களது ஆண்களின் பலவீனங்களை பெருந்தன்மையுடன் சகித்துக் கொள்பவர்களாய் ஆண்களால் கைவிடப்பட்ட நிலையிலும் வாழ்வை வாழ்ந்தே தீர்ப்பவர்களாய் இருக்கின்றனர். ஆண்கள் இட்டு நிரப்பாத இடைவெளிகளை தங்களது ஆளுமைகளாய் பூர்த்திசெய்யும் இவர்கள் எல்லோருமே தங்கள் இருப்பு குறித்த தெளிவுட நீள் ஆயுளுடன் விளங்குகிறார்கள். கொள்கை குழப்பங்களோ ஏமாற்றங்களோ இல்லாத அவர்களின் இயல்பான மனவிரிவு ஆழமானதாயும் அரவணைப்புமிக்கதாயும் திடம் பெற்றிருக்கிறது.
“நம்ம குடும்பத்துல ஓடிப் போனவாளும் செத்துப் போனவாளும் பைத்தியம் பிடிச்சுப் போனவாளும் பொன்னாப் பாட்டி இருக்கறாங்கற தைரியத்துலதான் அப்படிப் போனாங்கன்னு நெனக்கறேன்” என்ற வரிகளின் உள்ள உண்மையின் பின்னால் அப்படிப் போய்த் தொலைந்தவர்களைவிட சாபத்தை அனுபவித்துக் கிடக்கிற துயரத்தை அளவிடும்போது “நூறு ஆண்டுகளின் தனிமை” நாவலின் உர்சுலாவின் ஆளுமையும் துயரமுமே நினைவில் எழுகிறது.
நாவலின் செறிவான கட்டமைப்பும் மொழி நேர்த்தியும் வாசகனை நாவலுக்குள் இழுத்துக்கொள்ளும் வகையில் நுட்பத்துடனும் சுவாரஸ்யத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது. முதல்நாவல் என்பதற்கான அடையாளங்கள் தவறியும்கூட பதிவாகவில்லை என்பதை நாவலின் குறிப்பிடத்தக்க அம்சம். பல சந்தர்ப்பங்களில் கைபழகிய எழுத்தின் கச்சிதத் தன்மையும் நுட்பமும் அமைந்துள்ளன. அகண்ட காலத்தையும் களத்தையும் கொண்டு எழுதும்போது நாவல் தன்போக்கில் தடம்பிடித்துப் போய்விடுவதுண்டு. அத்தகைய விலகல்களை விழிப்புடன் தவிர்த்து கடிவாளமிட்டு அனுமதிக்கிற வட்டத்துக்குள் அதற்குண்டான அளவில் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நாவலின் ஒவ்வொரு வரியும் கதைச் செறிவுடன் தங்களது இருப்பை நியாயப்படுத்தி நிற்கின்றன.
தமிழகத்தின் சமூக வரலாற்றுப் பிண்ணனியில் தொடர்ந்து அதன் இளைய சமுதாயம் திசை தவற வைக்கப்பட்டிருப்பதன் துரதிர்ஷ்டத்தை முன்வைத்துள்ள புலிநகக் கொன்றையின் ஆரவாரங்கள் ஒரு நல்ல புத்தகத்துக்கான லட்சணங்களுடன் நம்மை சூழ்ந்தே இருக்கும் என்று சொல்ல முடியும்.


No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...