Tuesday 29 June 2021

அகத்தின் ஆழம் தேடி… மயிலன் ஜி சின்னப்பனின் கதைகள் - தமிழ்ச் சிறுகதை இன்று – 9

 

தமிழ்ச் சிறுகதை இன்று கட்டுரையின் ஒன்பதாவது பகுதி இது. சில மாதங்கள் இடைவெளிக்குப் பின் மீண்டும் வெளியாகிறது.

0

2019 ஜூன் மாதத்தில் ஒரு நாள் சாலை விபத்தொன்றில் சிக்கிய மோகன் சிகிச்சைக்காக கோவை கங்கா மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கியிருந்தார். அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்த இரண்டாம் நாள் படிப்பதற்கு ஏதாவது புத்தகம் வேண்டுமென கேட்டார். கூடவே, ஆனந்த விகடனில் வந்திருக்கும் கதையைப் பற்றி சிலர் முகநூலில் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்ற தகவலையும் சொன்னார்.

இரண்டொரு புத்தகங்களுடன் ஆனந்தவிகடனை வாங்கிச் சென்றேன். அதில் வெளியாகியிருந்த ‘அன்நோன்’ கதையைப் பற்றி அறிந்திருந்தவர்இந்தக் கதையை இப்போது என்னால் படிக்க முடியாது’ என்று படிக்க மறுத்துவிட்டார். அப்போதிருந்த மனநிலையில் நானும் அதை வாசிக்கவில்லை.

ஊருக்கு அவர் போன பிறகு ஒரு நாள் அந்த இதழைப் புரட்டிக்கொண்டிருந்தபோது ‘அன்நோன்’ கதை கண்ணில்பட்டது. கதையை எழுதியவரின் பெயரைப் பார்த்ததும் முன்பே வேறொரு கதையைப் படித்த நினைவு வந்தது. கஜா புயல் தஞ்சை, நாகபட்டிணம் மாவட்டத்தில் ஏற்படுத்திய சேதாரங்களின் பின்னணியைக் கொண்ட ‘இடர்’ கதையும் ஆனந்த விகடனில்தான் வெளியாகியிருந்தது.

‘அன்நோன்’ கதைக் களமும் எழுதப்பட்ட விதமும் கவனிக்கத்தக்கதாய் இருந்தது. விபத்துக்குப் பின் அடையாளம் தெரியாமல் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குக் கொண்டு வரப்படும் நோயாளிகளைக் குறித்த வெவ்வேறு பார்வைகளையும் அதிலுள்ள மனவோட்டங்களையும் நுட்பமாக சொல்லிய இந்தக் கதை மயிலன் ஜி சின்னப்பன் என்ற பெயரை நினைவில் நிறுத்தியது.

அந்த ஆண்டு உயிர்மை வெளியீடாக ‘பிரபாகரனின் போஸ்ட்மார்டம்’ நாவல் வெளியானபோது உடனடியாக வியப்பைத் தந்தது.

அவரது கதைகள் இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியானபோது வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து வெளியாகும் இணைய இதழ்கள் புதிய சிறுகதையாளர்களுக்கு சாத்தியப்படுத்தும் வீச்சு மிக முக்கியமானது. எப்படி அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது யோசிக்கவேண்டிய ஒன்று. ஆனால், மயிலன் ஜி சின்னப்பனின் கதைகள் ஒவ்வொரு மாதமும் ஏதேனுமொரு இணைய இதழில் வெளியானது. தமிழினி, கனலி, வாசகசாலை, அகழ், உயிர்மை உள்ளிட்ட எல்லா இதழ்களிலும் பங்களித்திருந்தார்.

0

மயிலனின் கதைகளில் உடனடியாக கவனத்தைக் கவர்ந்தது மருத்துவமனை சார்ந்த கதைகளை மிக சுலபமாகவும் நுட்பமான தகவல்களுடன் கச்சிதமாகவும் எழுதுவது. அவரது துறைசார்ந்த களம் என்பது சாதகமான அம்சம்தான். ஆனால், தெரிந்ததை அனைத்தையும் புனைவில் நிரப்பும் அதிகபிரசங்கித்தனத்தை அவர் சாமர்த்தியமாக தவிர்த்திருக்கிறார். அதுவே புனைவு சார்ந்த அவரது புரிதலை வெளிப்படுத்துகிறது.

மருத்துவனாக அனுதினமும் பயிலும் வாழ்க்கை எழுத்துக்கு ஒரு பிரத்யேக ஈரமளிப்பதாகவும், எழுத்தாளனாய் நோக்கும் விஷயங்கள் ஒரு மருத்துவனாய் என்னை நெறிப்படுத்துவதாகவும் முழுமையாக நம்புகிறேன்’ என்று அவர் குறிப்பிட்டபோது ஆன்டன் செகாவை நினைத்துக்கொண்டேன்.

‘அன்நோன்’ கதையைப் போல மருத்துவமனை பின்னணியில் அமைந்த இன்னொரு முக்கியமான கதை ‘ஆகுதி’. இரண்டு கதைகளிலுமே மருத்துவர்களின் மனப்போக்குகளையும், நோயாளிகளையும் அவரைச் சார்ந்தவர்களையும் மருத்துவமனை ஊழியர்கள் கையாளும் விதங்களையும் வெகு துல்லியமாக தொட்டுக்காட்ட முடிந்திருந்தது. பொது மருத்துவமனை சார்ந்து ஏற்கெனவே நம்முள் இருக்கும் சித்திரத்தின் இடைவெளிகளை இக்கதைகளின் வழியாக நம்மால் இட்டு நிரப்பிக்கொள்ள முடியும். அதே நேரத்தில் அந்த சித்திரத்தில் அதீதமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள ஆதாரமற்ற பல அபத்தங்களை களையவும் வற்புறுத்துகின்றன. ‘கதைகள் அல்லது கதை’யிலும் மருத்துவமனை அனுபவங்கள் இடம்பெற்றுள்ளன.

தனது துறை சார்ந்து எழுதுவது மயிலனுக்கு மிக வசதியானது. பெரிதாக மெனக்கெட வேண்டாம். அவருக்கு இருக்கும் அனுபவங்களை வைத்து இன்னும் சில கதைகளை அவர் எழுதியிருக்க முடியும். ஆனால், மயிலன் அந்த இடத்திலிருந்து உடனடியாகவே நகர்ந்துவிட்டார்.

‘ஏவா’, ‘ஈடறவு’ இரண்டு கதைகளும் பால்ய கால அனுபவங்கள் சார்ந்து எழுதப்பட்டுள்ளன

சிறுவர் பருவத்தில் பால் சார்ந்து இயல்பாக ஏற்படும் ஈர்ப்பும் நெருக்கமும் சட்டென ஏதோ ஒரு தருணத்தில் அது அனுமதிக்கப்படாமல் விலக்கப்படும்போது ஏற்படும் மனச்சரிவும் மறக்க முடியாத வடுக்களாக தேங்கி விடுபவை. ஒவ்வொருவருக்குள்ளும் எஞ்சியிருக்கும் இந்த வடுக்களை லேசாக தொட்டுக் காட்டுவதாக எழுதப்பட்டிருக்கிறது ‘ஏவா’.  

சைக்கிள் சிறுவர்களின் பெருங்கனவு. தரையிலிருந்து அவர்களை மேலெழுப்பும் மாயம். அனைவருக்குள்ளும் அவர்களுடைய சொந்த ‘சைக்கிள்’ நிறம் மங்காமல் அதன் சின்னச் சின்ன குறைகளுடன் இன்னும் துருப்பிடிக்காமல் ஓரமாக நின்றுகொண்டுதான் இருக்கும். இதை ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இழக்க நேரிடும் துக்கம் எதைக்கொண்டும் நிவர்த்தி செய்ய முடியாதது. இப்படியொரு இழப்பை காவல்துறை எனும் அமைப்பு அணுகும் முறையையும் சிலருக்கு மட்டுமே அது அனுமதிக்கும் தீர்வையும் இந்தக் கதையில் போதனைகளின் சுமைகளின்றி சொல்ல முடிந்திருக்கிறது.

கணவன் மனைவி உறவிலுள்ள விளங்க முடியாத ஆழத்தை அல்லது அபத்தத்தை நாடகீயமான முடிவுடன் சித்தரிக்கிறது ‘ஊழ்த்துணை’.

0

உடல் மனம் இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றையொன்று சார்ந்திருப்பவை. எனவே, மனித உடல் சார்ந்த அவரது மருத்துவ அறிவின் துணைகொண்டு மனத்தை பகுத்துப் பார்க்கும் கதைகளை எழுத முனைகிறார் மயிலன்.

வெவ்வேறு தேசங்களைச் சார்ந்த இரு மருத்துவர்களின் அக மோதலை சதுரங்க விளையாட்டு போல சித்தரித்துக் காட்டுகிறது ‘ஒரு அயல் சமரங்கம்’. எல்லோரிடமுமே ஏதோவொரு விதத்தில் அவர்களைக் காட்டிலும் நம்மை மேம்பட்டவனாகக் காட்டிக்கொள்ளவே விழைகிறோம். அவர்கள் கை ஓங்கும்போது விலக நினைக்கிறோம். எரிச்சல் அடைகிறோம். ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் சறுக்கும்போது நிம்மதி கொள்கிறோம். ஒரு கணம் விலகி நின்று இதையெல்லாம் யோசிக்கும்போது அனைத்துமே பொருளற்று உதிர்வதை உணர்கிறோம். மனம் சட்டென விகாசம் கொள்கிறது. ஆனால், அந்த விகாசம் தற்காலிகமானது. மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இன்னொருவனை சந்திக்கும்போது விகாசமற்ற அகமே முந்திக்கொண்டு நிற்கிறது.

அகம் தன்னிச்சையாக உருமாறும் வெவ்வேறு தோற்றங்களையும் அவற்றின் பாவனைகளையும் களமாகக் கொண்டிருக்கும் இன்னொரு கதை ‘ஏதேன் காட்டில் துர்கந்தம்’. மதுபான விடுதியில் சந்திக்க நேரும் ஆணும் பெண்ணுக்குமான சாதாரண உரையாடல் திசை திரும்பி தீவிரமடைந்து விசித்திரமான எல்லையை சென்றடைகிறது. குறிப்பிட்ட தருணம் தரும் சின்னஞ்சிறு ஆசுவாசத்தில் தன்னை வெளிப்படுத்தும் அவளது அகத்தை அறுவை சிகிச்சை நிபுணன்போல சொற்களைக் கொண்டு உடைத்தெறிகிறான். சமகாலத்தின் மேம்போக்கான உள்ளீடற்ற உறவுகளின் போலித்தனங்களையும் அதன் எல்லையில் வெளிப்படும் சிறுமைத்தனத்தையும் போதைமிக்க சூழலில் தீர்க்கமாக விவாதிப்பது சுவாரஸ்மானதுதான்.  

சொந்த வாழ்வின் கசப்புகளை தன்னைவிட எளியவன் மீது கசப்பாக மாற்றி வதைக்கும் மனநிலையின் விளைவுகளே ‘ஊடுவெளி’ கதையின் மையம். மனைவியை இன்னொருவனிடம் இழந்தவனின் தோல்வி தரும் வலியை தன்னைக் கண்டு அஞ்சும் எளியவனை நுட்பமாக வதைப்பதன் வழியாக பழிதீர்க்க முனைபவனின் எல்லையற்ற தடுமாற்றங்களை, கோழைத்தனங்களை தீர்க்கமாக வரையறுக்கிறது இந்தக் கதை. வெறிகொண்டு இலக்கின்றி கொந்தளிக்கும் உணர்வுகளின் உச்சமும் வீழ்ச்சியும் ஆபாசமானவை. தோற்றுத் தோற்று அனைத்தையும் வென்றெடுக்கவேண்டும் எனும் தினவு. உடைத்து நொறுக்கி எதுவுமில்லாமல் செய்யவேண்டுமென்ற ஆத்திரம் என எல்லா அலைவுகளையும் உள்ளடக்கியுள்ளது ‘ஊடுவெளி’.

பெண்களின் உளவியலை இன்னும் ஆழமாக பகுத்துச் சொல்வதாக அமைந்திருப்பது ‘நியமம்’. எல்லாவற்றையுமே தம் தீர்மானத்துக்குள் பிடிவாதமாக வரையறுக்கும் தன்மைகொண்டவர்களால் எதன்மீதும் நம்பிக்கை வைக்க முடிவதில்லை. பாசம் குடும்பம் உறவு காதல் கண்ணீர் என அனைத்தையும் பாசாங்குகளாகவே அணுகுகிறார்கள். இந்த கசப்பை அனைத்திலும் வெளிப்படுத்துகிறார்கள். எல்லோருமே வேண்டும் என்றும் அதே நேரத்தில் அனைவருமே சுயநலமென்றும் தடுமாறுகிறார்கள். குடும்ப அமைப்பை பகுத்துப் பார்க்கும்போது அதில் காணநேரும் பல யதார்த்தங்கள் முகத்தில் அறைபவை. ஆணும் பெண்ணும் இயன்ற வரை அடுத்தவரின் மீதான தத்தமது புகார்களை உள்ளடக்கி அனுசரித்து விட்டுக்கொடுத்து அன்றாடங்களின் சமூக ஒழுங்கின் நிர்ப்பந்தங்களை கடக்கிறார்கள். எல்லாம் முடிந்து இருவர் மட்டுமே எஞ்சும்போது சில ஆசுவாசங்கள் வாய்க்குமெனில் அதில் முழுமையாக தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். இந்த இடத்திலும் ஆண்களுக்கு வாய்க்கும் சுதந்திரம் பெண்களுக்கு அத்தனை எளிதில் வாய்ப்பதோ அல்லது அதை மேலெடுத்துச் செல்வதோ சாத்தியமில்லை. இவ்வாறு பல்வேறு உள அடுக்குகளுக்குள் இந்தக் கதை வெகு யதார்த்தமாகவும் இயல்பாகவும் பயணிக்கிறது. புற விவரிப்பின் ஊடாக கதாபாத்திரங்களின் மன ஆழங்களை கோடிட்டுக் காட்டி மேலும் மேலும் அது குறித்த தேடல்களையும் சாத்தியங்களையும் கொண்ட ஒரு அதி நுட்பமான கதை.

உளவியல் ஆழங்களை துலக்கிக் காட்டும்போது சொல்லப்பட்டிருப்பதைவிட சொல்லாமல் விடப்பட்டிருப்பவையே முக்கியமானவை. சவாலானவை. அந்த உச்சத்தை எட்டியிருக்கும் கதை ‘சாந்தாரம்’.

தஞ்சை கோயிலின் சுற்றுச்சுவருக்குள் மீதி கரணங்கள் செதுக்கப்படாமல் விடப்பட்டது ஏன்? என்ற கேள்விக்கு சாத்தியமான பல்வேறு பதில்களினூடாக பேராசிரியரின் மனைவியைக் குறித்த விதவிதமான ஊகங்களை வாசகனால் யோசிக்கமுடியும். கரணங்கள் பூர்த்தி பெறாமைக்கும் பேராசிரியரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குமான இணைப்பை இந்தக் கதையின் முடிவு சாத்தியப்படுத்தியுள்ளது. கூடவே வரும் அவருடைய மகளின் இருப்பு அந்த மர்மத்தை மேலும் கூட்டுவதாகவும் அது என்ன என்று அறிந்துகொள்ளும் முனைப்பை கூராக்குவதாகவும் அமைந்துள்ளது.

ஓராயிரம் கால்கொண்டு நூறாயிரம் திசையில் தறிகெட்டு ஓடுவது அகம்.  கால்தடங்களைத் தொடர்ந்து அது சென்றடைந்த இடத்தை கண்டடையவே கலைகளும் நவீன அறிவியலும் தத்துவங்களும் தொடர்ந்து முயல்கின்றன. உளம் கொள்ளும் திரிபுகளையும் பாவனைகளையும் பகுத்துணர முயலும் மயிலனின் இக்கதைகளும் அந்த பெருமுயற்சியின் பகுதியாகவே அமைகின்றன.

0

மயிலனின் கதைகளில் குறிப்பிடத்தக்க அம்சம் கதைக் களத்துக்கேற்ப அவர் தேர்ந்துகொள்ளும் மொழி. ‘வீச்சம்’, ‘இடர்’ போன்ற கிராமப் பின்னணி கொண்ட கதைகளில் குறிப்பிட்ட வட்டாரத்தின் பேச்சு மொழியை கச்சிதமாகப் பயன்படுத்து முடிந்திருக்கிறது. ‘ஒரு அயல் சமரங்கம்’, ‘ஏதேன் காட்டின் துர்கந்தம்’ போன்ற கதைகளை சரளமான மேல்தட்டுத்தனத்துடன் போலி பாவனைகளுடன் எழுதியுள்ளார். உளவியல் கதைகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு தன்மையைக் கொண்டுள்ளன. ‘ஊடுவெளி’யின் துண்டுத் துண்டான சித்திரங்கள் கதைசொல்லியின் மனச் சிதறல்களையும் கசப்பையும் வெளிப்படுத்தும்போது ‘நியமம்’ கதையில் அவை ஊசலாட்டங்களாக புறச் சித்தரிப்புடன் மட்டுமே அமைகின்றன. இதற்கெல்லாம் உச்சமாக ‘சாந்தாரம்’ கதை மிக எளிமையான கதையமைப்புக்குக் கீழே அழுத்தமான நிழலென உள்ளடுக்குகளை புதைத்துக் காட்டியுள்ளார்.

மயிலன் நிறைய எழுதுகிறார். தொடர்ந்து எழுதுகிறார். வெவ்வேறு தளங்களில் பல்வேறு முனைகளைத் தொட முனைகிறார். தல்ஸ்தோயின் ‘புத்துயிர்ப்பு’ நாவலின் அடிப்படையில் எழுதியுள்ள ‘நூறு ரூபிள்கள்’ கதை அத்தகைய அவரது முயற்சிக்கு வலுவான சான்று. அவருக்கு அமைந்துள்ள கதைமொழியும் அதன் வீச்சும் வாசகனை உள்ளிழுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. புனைவின் சாத்தியங்களை கண்டறிய முற்படும் அவரது துடிப்பும் வேகமும் ஆச்சரியம் தரும் மேலும் நல்ல கதைகளை எழுதச் செய்யும். சமகால சிறுகதையாளர்களில் நிச்சயம் தொடர்ந்து வாசிக்கப்படவேண்டியவர் மயிலன் ஜி சின்னப்பன். 

( தமிழினி மின்னிதழ் - ஜூன் 2021 )

 

 

 

 

Thursday 3 June 2021

‘பஞ்சவடி’யின் நிழலில்




தென்காசியில் நடக்கவிருக்கும் டி.கே.சி விழாவிற்கு போகிறோம் என்று மரபின் மைந்தன் முத்தையாவும் ரவீந்திரனும் சொல்லியிருந்தாலும் குற்றாலத்தில் நான்கு நாட்கள் நண்பர்களோடு அளவளாவியிருக்கும் சந்தர்ப்பத்தை முன்னிட்டே அந்தப் பயணத்தைத் தொடங்கியிருந்தோம். டி.கே.சி குறித்து ஆங்காங்கே படித்ததைத் தவிர எனக்கு அவரைப் பற்றி வேறெந்த சித்திரமும் இருந்திருக்கவில்லை. மழையின் ஈரமும் பசுமையும் நிறைந்திருந்த பொள்ளாச்சியைத் தாண்டியதும் ‘ல.ச.வின் பேச்சைக் கேட்கலாம்’ என்று ரவீந்திரன் குறுந்தகடொன்றை இசைக்கச் செய்தார். மூப்பும் கரகரப்புமான ஒரு குரல். முதுமைக்கேயுரிய கனிவுடனும் கண்டிப்புடனும் மனத்தை ஈர்த்தது. குறவஞ்சியிலிருந்து ஒரு பாடல், ஒரு திருக்குறள், அதைத் தொடர்ந்து ஒரு சங்கப் பாடல் என்று ஒவ்வொன்றையும் தெளிவாக பதம் பிரித்து பொருள் சொல்லி ‘எப்படி சொல்றார் பாத்தேளா!’ என்று தமிழை அவர் வியந்த விதம் ரசனை மிகுந்தது. அத்துடன் டி.கே.சியுடனான தனது அனுபவங்களையும் துல்லியமான விவரணைகளுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். நரைத்த மீசையும் கனிந்த புன்னகையுமாய் ஒரு வரைபடமாய் மட்டுமிருந்த டி.கே.சியின் முகம் ல.ச வின் நினைவலைகளைக் கேட்ட பிறகு துலக்கம் பெற்றிருந்தது.

பலத்த மழை பெய்துகொண்டிருந்த ராஜபாளையத்தை நெருங்கும்போதே தென்காசியிலிருந்து அழைப்பு. அன்றிரவு உணவு அவர்கள் வீட்டில்தான் என்று உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள் டி.கே.சி குடும்பத்தினர்.

‘பஞ்சவடி’ – தென்காசியிலிருக்கும் டி.கே.சியின் இல்லம். பழமையின் அடையாளங்களை இன்னும் இழந்திராத அந்த வீட்டின் முன்னறையில் டி.கே.சியின் படத்துடன் கல்கி, ராஜாஜி ஆகியோரது படங்களும் கம்பீரமாக வீற்றிருந்தன.

டி.கே.சியின் பேரர்களான தீப.நடராஜனும் குத்தாலிங்கமும் தாத்தாவைப் பற்றிய நினைவுகளை இன்றும் பசுமையாகத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் அவர்கள் தங்களது பேத்திகள் வரையிலும் டி.கே.சி எனும் பெருந்தகையின் ஆளுமையை நிறுவியிருக்கிற அருங்காரியத்தையும் செய்திருக்கிறார்கள்.

டி.கே.சியின் எள்ளுப் பேத்திகள் வரைக்குமான தலைமுறைகள் அனைவருமே தங்களது தாத்தாவைக் குறித்த பெருமிதத்துடன் அவர் உருவாக்கித் தந்த நற்பண்புகளையும் குணாம்சங்களையும் பேணி நிற்கும் கௌரவத்துடன் இருப்பதை பார்க்கும்போது ரசிகமணி அவர்களை நேரில் பார்த்திராத ஒவ்வொருவரும் அவரது இருப்பை அந்த வீட்டிலேயே உணர்ந்திட முடிகிறது.

அவர் உபயோகித்த நூதனமாக புத்தக அலமாரிகள், புத்தகங்கள், அவரது குறிப்பேடுகள், அவர் கையாண்ட அகராதிகள், கலைக் களஞ்சியங்கள், நாட்குறிப்புகள் என ஒவ்வொன்றுமே அவர் வாழ்ந்த காலத்தையும் தமிழுக்கும் தமிழிசைக்கும் அவர் செய்த பெருமைமிகு காரியங்களையும் நினைவுபடுத்தி நிற்கின்றன. ‘ரசனைக்கென்று ஒரு பிறவி’ என்பதை நிரூபிக்கும் விதத்தில் அவை ஒவ்வொன்றுமே புதுமையுடனும் கலை நயத்துடனும் இருந்தன.

சட்டைப்பைக்குள் வைத்துக்கொள்வதற்கேற்ற அளவிலான குறிப்பேடுகளை அவரே தயாரித்திருக்கிறார். இரண்டு பக்கங்களிலிருந்தும் அந்தக் குறிப்பேட்டை அவர் உபயோகித்திருக்கிறார். ஒரு பக்க அட்டையில் சிறிய ஒரு சிவலிங்க முத்திரை. மறு பக்கத்தின் அட்டையில் சங்கு முத்திரை. அவரே வரைந்த முத்திரைகள். சிவலிங்கம் இருந்த பக்கத்திலிருந்து குறிப்பேட்டைப் பிரித்தால் சைவ இலக்கியம் சார்ந்த படைப்புகளை, குறிப்புகளை எழுதியிருக்கிறார். சங்கு முத்திரை உள்ள பக்கத்திலிருந்து பிரித்துப் பார்த்தால் வைணவ இலக்கியம் சார்ந்த பாடல்களையும், குறிப்புகளையும் எழுதியிருக்கிறார். இதுபோல அவரது தனிப்பட்ட ரசனை சார்ந்த அடையாளங்களை அவர் பயன்படுத்திய எல்லாப் பொருட்களிலுமே காண முடிந்தது.

கட்டுரையையோ உரையையோ எழுதும்போது முழுத்தாளையும் அப்படியே பயன்படுத்தாமல் அதை சரிபாதியாகக் கிழித்து புத்தகம் போலாக்கி எழுதுவதையே வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். ஒவ்வொரு உரையின் முகப்பிலும் அது எங்கே, எந்த விழாவுக்காக எழுதப்பட்டது, யார் தலைமை வகித்தார்கள் என்ற விபரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழ் இலக்கியத்தில் அவரது ஆர்வம் அனைவரும் அறிந்தது ஒன்றுதான். ஆனால் அவரது புத்தக அலமாரியை அதிகமும் ஆக்கிரமித்திருப்பவை ஆங்கில செவ்விலக்கியங்களே. படித்தப் புத்தகங்களின் கடைசிப் பக்கங்களில் அந்த நூலைப் பற்றிய தனது கருத்துகளை சுருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார். நாட்குறிப்புகள் எவையும் விரிவாக எழுதப்பட்டிருக்கவில்லை. பெரும்பாலும் ஒற்றை வரிகளாய் குறிப்புகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. பாரதிதாசன் விழா நிதிக்காக அண்ணாவிடம் காசோலை தந்ததைப் பற்றிய ஒரு குறிப்பைப் பார்க்கமுடிந்தது. அவரது அலமாரியில் பார்த்த இன்னொரு புத்தகம் ஹிட்லரின் ‘மெய்ன் காம்ப்’பின் தமிழ் மொழியாக்கம். 1928ம் ஆண்டு சுப்பிரமணியம் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டடு கோலாலம்பூரில் பதிப்பிக்கப்பட்டது.

ஆங்கிலக் கல்வி முறையை கடுமையாக விமர்சித்த டி.கே.சி தமது பேரன்களை பள்ளிக்கே அனுப்பாமல் வீட்டிலேயே அடிப்படைப் பாடங்களை கற்றுத்தர ஏற்பாடு செய்திருக்கிறார். இன்று அவரது வீட்டில் அவரது புத்தக அலமாரிக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும் கணிணியின் வரவை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார் என்ற கேள்வி எழுந்தது.

டி.கே.சியின் சமையல் ரசனையை காலங்கள் கடந்தும் அவரது குடும்பத்தினர் இன்றும் உற்சாகமாக செயல்படுத்தியிருப்பதை அன்றைய இரவு விருந்தின்போது ருசிக்க முடிந்தது.

குற்றால அருவியில் பெருகி வழியும் வெள்ளத்தைப் பார்க்க முடியாதது ஏமாற்றமாகவே இருந்தது. ஐந்தருவியில் பெண்களுக்கு மூன்று, ஆண்களுக்கு இரண்டு என்று சொத்து பிரித்து எழுதி நடுவே தகரத் தடுப்பு போட்டு நிறுத்திவிட்டதில் ஐந்தருவியின் அழகு குலைந்து போயிருப்பதை யாரிடம் போய் சொல்ல? கோயில் வாசல்களை கடைகள் அடைத்துக்கொண்டிருக்கும் வணிகக் கலாச்சாரத்துக்கு குற்றாலநாதரின் கோயிலும் தப்பிவிடவில்லை. கோயிலின் அக விஸ்தீரணங்களை அமுக்கிப்போட்டிருக்கும் கடைகளில் ஜாதிக்காய் ஊறுகாய்களும் மலைப்பழங்களும் மசாலா வஸ்துக்களும் குவிந்து கிடக்கின்றன. சூரிய சந்திர எஃப்.எம் ரேடியோக்கள் கொஞ்சிக் கொஞ்சித் தமிழ் வளர்க்கின்றன. ‘மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சி‘ய குற்றாலத்தில் மனிதர் சிந்தும் கனிகளுக்காய் மந்தியினங்கள் காணுமிடங்களிலெல்லாம் தாவித் திரிந்தபடி அலைகின்றன.

இந்த நவீன குற்றாலத்தில் ஐந்தருவி செல்லும் சாலையில்தான் டி.கே.சி வாழ்ந்த வீடும் அவரது நினைவாய் அமைந்துள்ள நூலகமும் உள்ளது என்கிற விஷயமே அங்கிருக்கும் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. தன் உற்ற நண்பர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்த சமயத்தில்கூட தனக்கென எதையும் பெற்றுக்கொள்ள முனையாது குற்றால முனிவராகவே வாழ்ந்த டி.கே.சி தனது இறுதிகாலத்தில் வசித்த இரண்டு வீடுகளும் இன்று சுற்றுலாப் பயணிகள் வாடகைக்குத் தங்கும் விடுதிகளாக இருப்பதைப் பார்க்க சங்கடமாயிருந்தது. அவரது நினைவாக உள்ள நூலகத்தின் ‘பெயர் பலகை’கூட நிறம் மங்கி நிற்பது டி.கே.சிக்கு பெருமை தருவதாயில்லை.

இதற்கு மாறாக பழைய குற்றாலத்துக்கு செல்லும் பாதையில் அமைந்திருக்கும் அவரது நினைவிடம் நம் மனச்சோர்வை அமைதிப்படுத்துவதாய் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் திரிகூட மலையின் நீலச் சிகரங்களின் நிழலில் பசுமை கொஞ்சும் வயல்வெளிகளின் புறத்தில் எளிமையாக அமைந்துள்ளது அவரது சமாதி. மூங்கில் தட்டிகளாலும் கீற்றுக் கூரையினாலும் அமைக்கப்பட்ட அந்த நினைவிடத்தில் கவிமணியின் பாடல் பொறிக்கப்பட்டுள்ளது. பிறந்த நாளன்று அவருக்கு அஞ்சலி செலுத்தச் சென்றிருந்த வேளையில் குற்றாலத்தின் குளிர்காற்றும் இளவெயிலும் குலாவிக் கொண்டிருந்தன.

வந்தவர்கள் அனைவரும் மாலை சூட்டி மலரஞ்சலி செலுத்தினார்கள். டி.கே.சியின் மாணவர் தீட்சிதர் என்பார் பாமாலை சூட்டி நெகிழச் செய்தர். அங்கிருந்த வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளின் கழுத்து மணியோசை அந்த மலைச்சாரலின் அமைதியினூடே டி.கே.சியின் நினைவுகளைப் போற்றி நின்ற ஆத்மார்த்தமான உள்ளங்களின் நல்லஞ்சலிகளை ஏற்றுக்கொண்ட ரசிகமணியின் புன்னகையாகவே ஒலித்துக்கொண்டிருந்தது.

திரிகூட மலையின் நீலச் சிகரங்களும் பசுமைகொஞ்சும் வயல்வெளிகளும் கொலுசொலியுடன் வீடெங்கும் ஓடித் திரியும் சுட்டிப்பெண்போல அவ்வப்போது கடந்து போகும் சாரல் மழையும் ஒன்றுகூடி ஆசிர்வதித்திருக்கும் அமைதியான இடத்தில் கம்பீரமான எளிமையுடன் அமைந்துள்ளது டி.கே.சியின் நினைவிடம்.

எள்ளு பேத்திகள் ஸ்ருதியும் சௌம்யாவும் பாடல் ஒன்றை தங்களது அன்புக்குரிய டி.கே.சி தாத்தாவுக்காக பாடிக்கொண்டிருக்க இன்னொரு எள்ளு பேத்தி திவ்யா தன் வயதுக்கேயுரிய துள்ளல்களுடன் தீப.நடராஜனின் கைகளைப் பிடித்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். துருதுருப்பான அவளது கண்கள் வயல்வெளி மாடுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன. கண்களை திறந்தும் மூடியும் கூப்பிய கைகளுடன் பேத்திகள் பாடி முடித்தனர். நிறைவானதொரு அமைதி. மௌனம். திவ்யாவுக்கும் தன் பங்குக்கு டி.கே.சி தாத்தாவை மகிழ்விக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசையிருந்திருக்கும். யாரும் எதிர்பார்க்காத அந்த நேரத்தில் சட்டென்று ஆர்வம் துள்ளும் குரலில் உற்சாகமாகக் கூச்சலிட்டாள் “மாடு ஒண்ணுக்குப் போகுதே!”

அவள் சொன்னதைக் கேட்டு டி.கே.சியும்கூட நரை மீசை நெளிய நகைத்து ரசித்திருப்பார் என்பது உறுதி.

மாலையில் நடந்த விழாவில் டி.கே.சியின் நினைவுகளை போற்றிய பெருந்தகைகளுக்கு நடுவில் ல.ச அவர்கள் தமிழக அரசின் லச்சிணையாக ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரத்தை டி.கே.சி முன்மொழிந்ததையும், இட்லிக்கு தொட்டுக்கொள்ள டி.கே.சி பரிந்துரைத்த பீர்க்கங்காய் அரைத்துவிட்ட சாம்பார் தயாரிக்கும் பக்குவத்தையும் சுவைபடச் சொன்னார். டி.கே.சியின் இன்னொரு எள்ளுப்பேத்தியான ஸ்ருதியின் மேடைப்பேச்சு தொடரும் அவரது பாராம்பரியத்தை உறுதிப்படுத்தியது. அதே மேடையில் ‘ரசனை’ மாத இதழ் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாஞ்சில்நாடன், ஜெயமோகன், சௌந்தர், கலாப்ரியா, சுதேசமித்திரன், தஞ்சை செழியன் என்று இலக்கிய முகங்கள் பலவும் ரசிகமணியின் விழாவில் கலந்துகொண்டிருந்தது அவரது குடும்பத்தினருக்கும் அறக்கட்டளையினருக்கும் நிறைவளித்தது.

குற்றாலம் என்றதும் கொட்டும் அருவிகளும் குரங்குகளும் பார்டர் கடை புரோட்டாவும் மசாஜ் இசக்கியும் மட்டுமே நினைவுக்கு வரும் இன்றைய தலைமுறையினரின் நினைவில் டி..கே.சியை முதன்மைப்படுத்த முடியுமானால் அவரது ரசனையையும் எளிமையையும் நமது அவசத வாழ்விலும்கூட நடைமுறைப்படுத்தமுடியும் என்றே சொல்லலாம்.

டி.கே.சியின் மீது பெருமதிப்புகொண்ட பாலகிருஷ்ணராஜா அவர்களின் விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த நாட்களில் பல்வேறு விஷயங்களைத் தொட்டு உரையாடல்கள் நீண்டன. புனை கதையல்லாத விஷயங்களிலும் ஒரு எழுத்தாளன் கவனம் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவ்வாறான வாசிப்பு எழுத்தில் கொண்டு சேர்க்கும் பரிணாமங்களையும் இந்த உரையாடல்கள் உறுதிப்படுத்தின.

அடர்ந்த நிழல்சோலைகளுக்கு நடுவில் இருந்த இலஞ்சி குமரன் கோயிலின் ஆளரவமற்ற பிரகாரத்திலும் செண்பகாதேவி அருவிக்குப்போகும் மலைப்பாறையில் இருந்த செங்குத்துப் பாறையொன்றின் முகப்பிலிருந்து தரிசனமாகும் காட்டின் ஆழத்திலும் தென்காசிக் கோயிலின் கோபுர வாசலில் நிற்கும்போது நம்மை மோதியணைக்கும் காற்றின் மூர்க்கத்திலும் மனம் அடைந்த பரவசத்தின் ஒவ்வொரு திவலையுமே இன்னும் ஈரம் உலராமல் மின்னி ஒளிர்வதுபோல் வரைபடமாய் மட்டுமிருந்த டி.கே.சியின் உருவம் கம்பீரமாய் மனத்தில் உருக்கொண்டுவிட்ட நிறைவை இந்தப் பயணம் சாத்தியமாக்கியுள்ளது-

(ரசனை, அக்டோபர் 2004 இதழில் வெளியான கட்டுரை.)

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...