Sunday 18 October 2020

தென்னை மரத்தில் ஏறுதல்…

 ( ‘ஆவநாழி’ அக்டோபர் 2020 மென்னிதழில் வெளியானது- ஓவியம் நண்பர் சுந்தரன்  முருகேசன், ஈரோடு)


‘அவ்வளவு முக்கியமான வேலை இல்லை’ என்ற எண்ணத்துடன் செய்யத் தொடங்கும் சில காரியங்கள் நம்மை எதிர்பாராத சில இடங்களுக்குக் கொண்டுபோய் நிறுத்திவிடக்கூடும். அந்திமழை இதழுக்காக கொங்கு புனைவெழுத்தாளர்களைக் குறித்த கட்டுரை ஒன்றை எழுதும்படி ‘அந்திமழை’ அசோகன் கேட்டுக்கொண்டதை அடுத்து பட்டியல் ஒன்றை தயாரிக்க நேர்ந்தது. யாரைச் சேர்ப்பது யாரை விடுப்பது என்று மிகக் கவனமாக கையாளவேண்டிய காரியம் இது என்பதால் நண்பர்கள் சிலரிடம் ஆலோசனைகளைப் பெற்றேன். அதுபற்றி பேசிக்கொண்டிருந்தபோது கவிஞர் சுகுமாரன் ‘புனர்ஜென்மம்’ என்ற நாவலைக் குறித்துச் சொன்னார். நாவலின் பிரதி கையில் கிடைத்தவுடன் அதில் ஒரு ஆச்சரியம். டிசம்பர் 1987ல் கோவை சமுதாயம் பிரசுராலயம் பதிப்பித்த அந்த நாவலுக்கு க.நா.சு மதிப்புரை எழுதியிருக்கிறார்.

“சற்றே கனமான விஷயம்தான் – இந்த நாவலின் விஷயம். பார்ப்பனப் பையன் முன்னோர்கள் செய்த அதிகாரபூர்வமான பாவங்களினால் அவனுடைய இன்றைய முன்னேற்றம் தடைபடுகிறது. இண்டர்மீடியட்டில் நல்ல மார்க்குகள் வாங்கித் தேறியும் மெடிக்கல் காலேஜில் இடம் கிடைக்கவில்லை – பார்ப்பனப் பையன் என்பதனால். பி.ஏ படித்துத் தேறியும் வேலை கிடைக்கவில்லை – பார்ப்பனப் பையன் என்பதனால். மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்திய முன்னோர்கள் செய்த பாவம்சுமை இந்த ஜென்மத்தில தன்னை அழுத்தி எழுந்திருக்கவிடாமல் செய்கிறது என்கிற எண்ணம் பையனை ஆட்கொள்கிறது. தான் பிராயச்சித்தம் செய்யவேண்டும், தன் முன்னோர்கள் செய்த பாவங்களுக்கு என்கிற ஒரு ஏசு-செருக்கு (Jesus complex) ஏற்படுகிறது. இதில மனோதத்துவ ரீதியில் ஒருவித தவறும் இல்லை.

பையன் பூணூலை ஒரு சடங்குடன் நதி, சூரியன் சாட்சியாக அறுத்தெறிகிறான். பூணூல் போடாத மகன் என்று தாயார் எள்ளி நகையாடுகிறாள். தகப்பனார் உணர்ச்சிவசப்படாதவர் – இதனாலெல்லாம் சமுதாயம் மாறிவிடாது என்று வாதம் செய்கிறார். அது தெரிகிறது பையனுக்கு – அதனால் அவரின் சுமை குறைகிறது.

இந்த மாதிரி நாவல்களில் ஒரு பயணம் மரபாக வருவதுதான். அதே மாதிரயே பையன் பயணத்தை மேற்கொள்கிறாள். வீட்டைவிட்டுக் கிளம்பி ஒரு கிராமத்தில் சக்கிலியனாக வேலை செய்து சக்கிலியனாகவே வாழ்ந்து சக்கிலியத் தகப்பனுக்கும் தாய்க்கும் உகந்தவனாகிறான்.

இரண்டாவது பயணமும் அவசியமாகிறது. நகரசுத்தி தோட்டியாக வாழ்ந்து தன் முன்னோர்கள் பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்வது அவன் லட்சியம். தோட்டியாகிறான். லச்சி என்கிற தோட்டிப் பெண்ணைக் காதலித்து மணந்து கொள்கிறான். அவனிடம் ஒரு ஆன்மீக – தெய்வீக சக்தி இருக்கிறது என்று முதலில் மனைவியும் பின்னர் மற்றவர்களும் கண்டுகொள்கிறார்கள்.

இதெல்லாம் நடக்கக்கூடிய காரியங்களா? இன்று நம் வாழ்வில் நடக்கிறதா என்று அவநம்பிக்கை ஏற்படலாம்தான். ஆனால் நடந்தால் இப்படித்தான் நடக்கும் என்று சொல்லக்கூடிய வகையில் ஆசிரியர் நாவலை அமைத்துச் சம்பவங்களையும் கதாபாத்திரங்களையும் சிருஷ்டித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

நாவல் படிப்பதற்கு சுவாரசியமாகவே இருக்கிறது. சிந்திப்பதற்கும் நிறையவே விஷயங்கள் இருக்கின்றன” என்று மதிப்புரையில் க.நா.சு குறிப்பிடுகிறார்.

‘புனர்ஜென்மம்’ நாவலை வாசித்தபோது இதன் களமும் கதையும் மிகுந்த வியப்பைத் தந்தது. ஒரு பிராமண இளைஞன் சேரியில் நகரசுத்தி செய்யும் தோட்டியாக வாழ்ந்து பிராயசித்தம் தேடுவதாக அமைந்துள்ள கதைக்களம் உள்ளபடியே அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். க.நா.சு மதிப்புரை எழுதியிருக்கும் இந்த நாவலைக் குறித்து வேறு பதிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இதன் ஆங்கில வடிவமான ‘The Light from Heaven’ 1990ல் பெங்குவின் வெளியீடாக வந்துள்ளது. கன்னடத்திலிருந்தும் மராத்தியிலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளின் வழியாக தலித்தியம் குறித்த உரையாடல்கள் தமிழில் தொடங்கிய அதே காலகட்டத்தில்தான் இந்த நாவலும் எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த நாவலைக் குறித்த எந்தச் சலனமும் தமிழ்ச் சூழலில் இல்லாமல் போனது வியப்புக்குரியதுதான்.

இதை எழுதியவர் தமிழ்ச் சூழலில் எழுத்தாளராக அறியப்படாத ஒருவர் என்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம். இப்படியொரு கதைக்களத்தைக்கொண்டு நாவலை எழுதியவர் வேறு படைப்புகளை எழுதவில்லையா என்ற கேள்வி எழுந்ததைத் தொடர்ந்து தேடியதில் இன்னும் சில ஆச்சரியங்கள் காத்திருந்தன.  

இவரது முதல் நாவல் ‘அன்பே நம் ஆயுதம்’ 1947ல் வெளிவந்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியைக் கொண்ட இந்த நாவலை கோவை கஸ்தூரி அச்சகம் வெளியிட்டுள்ளது.  

தமிழில் அவர் எழுதி பதிப்பிக்கப்படாத இன்னொரு நாவல் ‘நீலமலை வெள்ளையர்கள்’ கைப்பிரதியாகவே நின்றுவிட்டது. ஒரு எதிர்கால நாவல் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த நாவலின் காலம் கி.பி.2185. அணுயுகத்துக்குப் பின்பு உலக நாடுகள் கிழக்கு, மேற்கு என இரண்டு பகுதிகளாகப் பிரிந்துவிடுகின்றன. விஞ்ஞான அறிவைக் கொண்டு செயற்கையாக குழந்தைகள் உருவாக்கப்படுகின்றன. மொத்த அறிவையும் PUP எனப்படும் Philosophy of Universal Pragmatism என்ற தத்துவத்தில் அடக்கிவிடுகிறார்கள். கிழக்குப் பகுதியில் நீலமலையில் மட்டும் பழங்கால ஆங்கிலேயர்கள் வசிக்கும் சிறிய பகுதி உள்ளது. இவர்கள் இன்னும் பழைய முறைப்படி இயற்கை சார்ந்து வாழ்பவர்கள். இவர்களது வாழ்வைப் பற்றி ஆராய வரும் மேற்குலக பிரஜை சந்திக்க நேரும் பிரச்சினைகள்தான் இந்த நாவல். நடைமுறை சார்ந்த பல உலகளாவிய பிரச்சினைகளையும் விவாதிக்கும் இந்த நாவலின் ஆங்கில வடிவமான ‘Angrezis in Blue Mountains’ பதிப்பிக்கப்படவில்லை. 1994ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நாவல் தமிழின் முதல் அறிவியல் புனைவு நாவலாக இருக்கக்கூடும்.

‘அன்பே நம் ஆயுதம்’, ‘நீலமலையில் வெள்ளையர்கள்’, ‘புனர்ஜென்மம்’ ஆகிய மூன்று தமிழ் நாவல்களைத் தவிர ‘தேவதாசி’, ‘A Handful of Earth’ ஆகிய இரண்டு ஆங்கில நாவல்களையும் எழுதியுள்ளார். ‘புனர்ஜென்மம்’ ‘The Light from Heaven’ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. 

1976ல் சென்னை கிறித்துவ இலக்கியச் சங்கம் வெளியிட்ட ‘தேவதாசி’ நாவல் அவரது கிராமத்தில் வாழ்ந்த நாகா எனும் தேவதாசி மரபைச் சேர்ந்த பெண் ஒருத்தியின் வாழ்வை  அடிப்படையாகக் கொண்டது.

‘Remembrance of Things Lost‘ ஆங்கில நாவல் இரண்டு பாகங்களைக் கொண்டது. சிறையிலிருந்து ஒலிக்கும் ஒரு கைதியின் குரலாக எழுதப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தையும் மனோநிலையையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது இந்த நாவல் பிரசுரம் பெறவில்லை.

‘A Handful of Earth’ நாவலை சென்னை கிறித்துவ இலக்கியச் சங்கம் 1974ல் வெளியிட்டுள்ளது. சிறுமுடி என்ற கிராமத்தைக் களமாகக் கொண்டது இந்த நாவல். கிராம மக்களின் ஏழ்மை நிலையையும் சாதி சார்ந்த ஒடுக்குமுறைகளையும் பின்னணியாகக் கொண்டுள்ளது. 1973ம் ஆண்டு கிறித்துவ இலக்கியச் சங்கத்தினால் பதிப்பிக்கப்பட்ட இந்த நாவல் மத நம்பிக்கைகளையும் மரபின் வேர்களையும் கேள்விக்கு உட்படுத்துகிறது. இந்த நாவல் ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் இருபத்திமூன்று சிறுகதைகளை எழுதி அவற்றை ‘A Measure of Culture’ என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாகத் தொகுத்திருந்தபோதிலும் பதிப்பிக்கப்படவில்லை. இவற்றில் பல கதைகள் ‘தி இந்து’ உட்பட பல்வேறு இதழ்களில் பிரசுரிக்கப்பட்டன என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் பிரசுர விபரங்கள் கிடைக்கவில்லை. சில கதைகளை BBC World Service ஒலிபரப்பியுள்ளது.

‘I Am a Stranger Here’ என்ற கவிதைத் தொகுப்பை 1990ம் ஆண்டில் கல்கத்தாவைச் சேர்ந்த Writers Workshop வெளியிட்டுள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். 1969ம் ஆண்டு பாரதிய வித்யா பவனும் கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையும் சேர்ந்து இதனை வெளியிட்டுள்ளனர். கம்பராமாயணத்தின் சுந்தர காண்டத்தை ‘Canto Beautiful’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அதனை 1984ல் கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை பதிப்பித்துள்ளது. சிலப்பதிகாரத்தை ‘The Anklet’ என்ற பெயரில் நாடகமாக எழுதியுள்ளார். 1982ல் பம்பாய் பாரதிய வித்யா பவன் பதிப்பித்துள்ளது.

கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு என அனைத்துத் துறைகளிலும் தன் பங்களிப்பைத் தந்திருக்கும் இவர் தனது துறைசார்ந்த நூல்கள் பலவற்றையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். பலவும் பதிப்பிக்கப்படாமல் கைப்பிரதியாகவே நின்றுபோயுள்ளன.

இத்தனை நூல்களை எழுதியிருந்தும் இவற்றின் ஆசிரியரான கஸ்தூரி சீனிவாசன் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ ஒரு எழுத்தாளராக அவர் அறியப்படவில்லை என்பது விந்தைதான். காரணம் அவர் தனது தொழில்சார்ந்த பணிகளுக்கு நடுவே கிடைத்த சொற்ப நேரத்தில் மட்டுமே எழுத நேர்ந்தது. வாசிப்பும் எழுத்தும் அவருக்கு மிகப் பிடித்தமானதாக இருந்தபோதிலும் தனது தொழில் துறை சார்ந்து அவர் செய்யவேண்டிய காரியங்கள் ஏராளமாக இருந்தன. கோயமுத்தூரின் பஞ்சாலைகளின் வளர்ச்சியிக்கும் இந்திய அளவில் பஞ்சாலைத் தொழிலின் முன்னேற்றத்துக்கும் பாடுபட்டிருக்கும் முதன்மையானவர்களில் கஸ்தூரி சீனிவாசனின் பெயரும் ஒன்று. பஞ்சாலைத் தொழிலுக்கு அவரது பங்களிப்பைப் பாராட்டி 1969ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கௌரவித்தது.  தென்னிந்தியாவில் நூற்பாலைகளுக்கான ஆராய்ச்சிக் கழகத்தை (South Indian Textile Research Association – SITRA ) 1951ம் ஆண்டு கோவையில் நிறுவியது அவரது முக்கியமான சாதனை. 1974ம் ஆண்டு இந்தியாவெங்கிலும் இருந்த 103 நூற்பாலைகளை ஒன்றிணைத்து National Textile Corporation உருவாக்கியபோது அதன் தலைவராகப் பொறுப்பேற்று நஷ்டத்தில் இயங்கி வந்த ஆலைகளை மேம்படுத்தி லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றிக் காட்டினார்.

கோவையை அடுத்த கரடிவாவியில் பிறந்த கஸ்தூரி சீனிவாசன் பட்ட மேற்படிப்பை மான்செஸ்டரில் முடித்தார். இங்கிலாந்தில் தான் கற்றுணர்ந்த தொழில்நுட்பங்களையும் ஆராய்ச்சி நோக்கினையும் கோவையைச் சேர்ந்த நூற்பாலைகளும் இந்திய அளவில் இயங்கிய பல நூறு நூற்பாலைகளும் பயன்பெறும் வகையில் உபயோகித்தார். அதே நேரத்தில் அங்கு வாசிப்பிலும் எழுத்திலும் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு எழுதவும் செய்தார். சீனிவாசனின் மனைவி பார்பரா ஒரு ஓவியர். இங்கிலாந்தைச் சேர்ந்தவர். நீர்வண்ண ஓவியங்களை விரும்பி வரைபவர். அவரது தூண்டுதலின் காரணமாக அமைந்ததே ஜவுளித் துறை சார்ந்த ஒரு கண்காட்சி கூடத்தையும், ஓவியக் கூடத்தையும் நாடக அரங்கையும் ஒருங்கே கொண்ட கஸ்தூரி சீனிவாசன் கலை ஓவியக் கூடம். அவரது கனவுத் திட்டங்களில் ஒன்று. கோவை அவிநாசி சாலையில் அமைந்திருக்கும் இந்தக் கூடம் மாதந்தோறும் ஓவியக் கண்காட்சிகளையும் தொடர்ந்து ஓவியப் பட்டறைகளையும் நடத்தி வருகிறது.

தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதிய கஸ்தூரி சீனிவாசன் தனது அறக்கட்டளையில் சார்பில் தன்னுடைய அன்னை திருமதி ரங்கம்மாள் அவர்களின் பெயரில் நாவல்களுக்கான விருதொன்றையும் நிறுவினார். தமிழில் வெளியாகும் சிறந்த நாவல் ஒன்றுக்கு (இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை) அந்த விருது வழங்கப்படுகிறது.

‘Climbing the Coconut Tree’ என்பது அவரது முற்றுப்பெறாத சுயசரிதை. அந்த நூலின் தலைப்பின் பின்னால் உள்ள கதை சுவாரஸ்யமானது. கரடிவாவியில் ஐந்தாம் வகுப்பு வரையிலும் ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தொடர்ந்து படிப்பதற்காக கோவை வெரைட்டி ஹால் சாலையில் இருந்த முனிசிபல் பள்ளிக்கு வந்து சேர்கிறார். அவருடைய வகுப்பு ஆசிரியரான பத்மநாப ஐயர் வகுப்பில் ஒரு நாள் சொல்கிறார் “தென்னை மரத்தில் ஏறுபவனுக்கு எத்தனை உயரத்துக்கு நாம் உதவமுடியும்? நம்முடைய கை எட்டும் வரைக்கும்தான் நாம் தூக்கிவிடலாம். அதற்குப் பிறகு அவனேதான் முயன்று உச்சியை அடையவேண்டும்.”

‘பெட்ரண்ட் ரஸ்ஸலைப்போல, வாழ்க்கையில் எனக்குள்ள முக்கியமான ஆர்வங்கள் மூன்று. அன்புக்கான ஏக்கம், அறிவுக்காக தாகம், மானுத் துயர் மீதான வருத்தம்’ அவருடைய சுயசரிதையில் உள்ள இந்த வாக்கியமே கஸ்தூரி சீனிவாசனின் மொத்த வாழ்வையும் சுட்டுவதாக அமைந்துள்ளது.

 

0

 

 

 

தமிழ்ச் சிறுகதை – பத்தாண்டுகளில் கடந்தவையும் நிலைப்பவையும்


 ( காலச்சுவடு அக்டோபர் 2020  இதழில் வெளியானது )

நூற்றாண்டைக் கடந்துவிட்ட தமிழ்ச் சிறுகதை வெளியில் தீவிர வாசிப்புக்குப் பிறகு புதிதாக சிறுகதை எழுதவருபவர்களுக்கு சில சாதகங்கள் உள்ளன. சிறுகதையின் வடிவமும் செறிவும் ஒருமையும் குறித்த உள்ளுணர்வு இயல்பாகவே அமைந்துவிடுகின்றன. அதே நேரத்தில், எழுத உத்தேசிக்கும் கதைகளை ஏற்கெனவே முன்னோடிகளில் சிலர் எழுதி வைத்திருக்கக்கூடும். எனவே, அதே கதையை முன்பில்லாத மொழியிலும் வடிவிலும் எழுத வேண்டிய நிர்பந்தம். தமிழில் புதிதாக சிறுகதை எழுத வருபவர்கள் எதிர்கொள்ள நேரும் சவால் இது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான தமிழ்ச் சிறுகதை பல்வேறு அலைகளுக்கிடையில் தன்னை தொடர்ந்து உறுதியுடன் நிலைநிறுத்தியே வந்துள்ளது. எழுபதுகளில் புதுக் கவிதை பெரும் வீச்சில் எழுதப்பட்ட காலத்திலும் இந்த நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் நாவல்கள் எழுச்சி பெற்றபோதும்கூட சிறுகதைகள் தமக்கான கவனத்தையும் முக்கியத்துவத்தையும் இழக்கவில்லை.

இணைய தளங்களின் வருகையும் எழுதுவதற்கான தொழில்நுட்பத்தின் புதிய வரவுகளும் இளைஞர்கள் பலரையும் எழுதச் செய்த இன்றைய காலகட்டத்தில் சிறுகதையின் மீதான கவனம் தீவிரம் பெற்றுள்ளது. முந்தைய காலகட்டத்தைப்போலவே அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலும் அதிக எண்ணிக்கையில் சிறுகதைகள் வெளியாகின்றன. புதிய சிறுகதையாளர்களின் தொகுப்புகளும் உடனுக்குடன் பதிப்பிக்கப்படுகின்றன.

அச்சிதழ்களில் பக்க அளவுகளுக்கு உட்பட்டு ஒன்றிரண்டு சிறுகதைகளை மட்டுமே வெளியிட வாய்ப்பிருந்த நிலையில் இணைய இதழ்கள் அவ்வாறான வரையறைகளின்றி எண்ணிக்கையிலும் பக்க அளவிலும் அதிக கதைகளை வெளியிடும் வாய்ப்பினைக் கொண்டுள்ளன. இத்தகைய சுதந்திரத்தின் காரணமாக இணைய இதழ்கள் பலவும் ஒரே இதழில் ஐந்துக்கும் அதிகமான கதைகளை வெளியிடுகின்றன. புதிய எழுத்தாளர்கள் பலரும் எழுத பெரும் வாய்ப்பாக இது அமைந்துள்ளது. ‘சொல்வனம்’, ‘பதாகை’, ‘வாசக சாலை’, ‘கனலி’, ‘தமிழினி’, ‘ஓலைச்சுவடி’, ‘யாவரும்’ என இணைய இதழ்கள் பலவும் ஏராளமான சிறுகதைகளை வெளியிடுகின்றன.

இவ்வாறான சுதந்திரமான வரையறைகளற்ற தணிக்கைகளற்ற அணுகுமுறை என்பது ஒரு எழுத்தாளருக்கு சாதகமான அம்சங்கள் பலவற்றையும் உறுதிப்படுத்துகின்றன. எழுதியதை உடனடியாக இதழில் காணமுடிவது, சமூக வலைத்தளங்களின் வழியாக அனைவருக்கும் கொண்டுசேர்ப்பது, பக்கங்களின் அல்லது சொற்களின் எண்ணிக்கை சார்ந்த வரையறையின்மை ஆகியன அவ்வாறானவை. அதேசமயத்தில் இத்தகைய சுதந்திரமும் உடனடித் தன்மையும் பாதகமான சில விஷயங்களையும் கொண்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் இருக்கும்போது முக்கியமான சிறுகதையொன்று கவனத்துக்கு வராமல் போய்விடக்கூடும். நண்பர்களின் பரிந்துரையும் ஊடகங்களின் வழியாக அடைய நேர்கிற தேர்வும் எல்லா நேரங்களிலும் சரியாக அமைவதில்லை. அதிக எண்ணிக்கையிலான சிறுகதைகளுக்கு நடுவே ஒரு நல்ல சிறுகதை தனக்கான இடத்தையும் கவனத்தையும் பெற முடியாமல் ஆகிவிடக்கூடும்.

எழுத்தாளர்களிடமிருந்து பெறும் கதையை இணைய இதழ்களில் பெரும்பாலானவை அப்படியே பதிவேற்றும் நடைமுறையே உள்ளது. எழுத்தாளன் எழுதியபடியே எழுத்து, வாக்கிய, இலக்கணப் பிழைகளுடன் கதைகள் வெளியாகின்றன. புதிய எழுத்தாளர்களின் தொகுப்புகள் வரும்போதும் இதே நிலைதான். இவ்வாறான நடைமுறை சார்ந்த சிக்கல்கள் ஒரு எழுத்தாளனின் கதைகளுக்கும் தொகுப்புக்கும் கொண்டுசேர்க்கும் பேறுகள் மெச்சும்படியானவையாய் இருப்பதில்லை.

இந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளில் ( 2010 முதல் 2020 வரை ) வெளியான புதியவர்களின் சிறுகதைத் தொகுப்புகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு இந்த காலகட்டத்தின் சிறுகதைகளைக் குறித்த ஒரு பார்வையை முன்வைக்கும் நோக்குடனே எழுதப்பட்டுள்ளது இந்தக் கட்டுரை.  ஏற்கெனவே சொன்னதுபோல இந்த பத்தாண்டுகளில் வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்புகளின் எண்ணிக்கை நிறைய. காலக்கெடுவின்றி ஆய்வு நோக்கில் கட்டுரை எழுத நேரும்போது விடுபடுதல்களின்றி ஒரு முழுமையான பார்வையைத் தருவது சாத்தியம். அவ்வாறன்றி குறைந்த காலக்கெடுவில் கட்டுரையாக எழுத நேரும்போது, ஏற்கெனவே வாசித்திருந்த, கவனத்துக்கு வந்த சில தொகுப்புகளையும், சில கதைகளையும் மட்டுமே கணக்கிலெடுப்பது சாத்தியம். எனவே, விடுபடுதல்கள் தவிர்க்க முடியாதவை. இதில் சொல்லப்பட்டுள்ள சிறுகதையாசிரியர்களைத் தவிர, தொகுப்புகளைத் தவிர வேறு எழுத்தாளர்களும் தொகுப்புகளும் கதைகளும் நிச்சயம் இருக்கக் கூடும்.

புதிய ஒரு சிறுகதையை வாசிக்கும்போது ஏற்கெனவே உள்ள சிறுகதைகளுடன் ஒப்பிடுவதென்பது இயல்பான ஒன்று. உருவம், உள்ளடக்கம், மொழிநடை என ஒவ்வொன்றுக்கும் நிறுவப்பட்ட முன்மாதிரிகள் இருக்கும் நிலையில் ஒப்பீட்டளவில் புதிய கதைகள் எந்த நிலையில் அனுபவமாகின்றன என்பதே அந்தக் கதைகளுக்கான சோதனை எனலாம். இன்று எழுதப்படும் எந்தவொரு கதைக்கும் நம் மரபிலிருந்து ஒரு கதையை உதாரணமாகக் காட்ட முடியும். இன்று எழுதப்படும் சிறுகதையின் சவாலே அது தன் முன்னிருக்கும் சாதனைக் கதைகளின் முன்னால் தனக்கான இடத்தை எப்படி நிறுவ முனைகிறது என்பதுதான். முன்னோடிகளின் சாதனையைக் கடக்கவேண்டும் அல்லது தொடவேண்டும் என்பதே எழுத முனையும் எழுத்தாளனின் உள்ளார்ந்த விருப்பமாக இருக்கும். அவ்வாறான ஒரு சீரிய முயற்சியில் அவன் வெற்றிபெற முடியாமலும் போகலாம். அது பொருட்டில்லை. ஆனால் அந்த முயற்சியின் வழியாக எத்தகைய உயரத்தை அக் கதை எட்டியுள்ளது என்பதுதான் முக்கியம்.

இந்த பத்தாண்டு காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ள கதைகள் ஏற்கெனவே நம் முன் உள்ள தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியத்துக்கு சேர்த்திருக்கும் புதிய பரிமாணங்களையும், உத்தி உருவம் உள்ளடக்கம் சார்ந்து கொண்டுசேர்த்துள்ள புதுமைகளையும் அறியும் முனைப்புடன் இக்கதைகள் அணுகப்பட்டுள்ளன.

01

நூற்றாண்டைக் கடந்திருக்கும் சிறுகதைகள் பொதுவாக அந்தந்த காலகட்டத்தின் வாழ்க்கையை மனிதர்களின் போக்கை முன்வைப்பவையாகவே அமைந்துள்ளன. சமூகத்துக்கும் தனிமனிதனுக்குமான உறவு, மனிதனுக்கும் மனிதனுக்குமான உறவு என்ற இருவேறு நிலைகளிலுள்ள முரண்களையும் முயக்கங்களையும் தொட்டுக் காட்டியுள்ளன. மனத்தின் தீராத மர்மங்களைத் துலக்கிக் காட்ட முனைந்துள்ளன. விரிவான நோக்கில் அணுகும்போது இக் கதைகள் நிலம் சார்ந்த எல்லைகளுக்குள் நின்றே பேசுகின்றன என்பதை உணரலாம். (எப்போதும்போல புதுமைப்பித்தனும் மௌனியும் இதில் விதிவிலக்கு.) ஒவ்வொரு எழுத்தாளருக்குமென குறிப்பிட்ட களத்தையும் அதைச் சார்ந்த மனிதர்களையும் அடையாளப்படுத்த முடியும்.

தமிழ்க் கதைகளின் நிலம் சார்ந்த எல்லைகளை இன்றைய கதைகள் உலகளாவிய அளவில் விரிவடையச் செய்துள்ளன. இந்த எல்லைகள் வெறும் பிரதேசம் கடந்த ஒன்றாக மட்டுமல்லாது மதிப்பீடுகளிலும் அணுகுமுறையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களாகவும் அமைந்துள்ளன. உலகெங்கிலும் மனித வாழ்வுக்கென பொதுவான அம்சங்கள் சில உண்டு. அவையல்லாமல் நிலம், மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கம் போன்ற எல்லைகளுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளும் பொருட்டு உருவாகும் தனித்துவமான சில அம்சங்களே அயல்நில வாழ்வை உற்று நோக்கச் செய்கின்றன. தமிழ் சிறுகதைகளில் எளிதில் காணமுடியாத சில காட்சிகளை அவை நமக்குக் காட்டுகின்றன. அயலகத் தமிழ் என்பது ஈழத் தமிழர்களால் எழுதப்படுபவை என்ற நிலை மாறி மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளிலிருந்து எழுதுவதையும் உள்ளடக்கியது என்ற நிலையை இன்றைய கணினி உலகம் நமக்கு சாத்தியமாக்கியுள்ளது. தமிழகத்திலிருந்து பணியின் பொருட்டு உலக நாடுகளெங்கும் பயணம் செய்யும், வசிக்கும் இளைஞர்கள் புனைவுலகுக்கு வந்ததன் பலனாக நிகழ்ந்தது இது. இக் கதைகள் தமிழ் புனைவுலகுக்கு புதியதொரு பரிணாமத்தைச் சேர்த்துள்ளன.

உலகளாவிய மானுட வாழ்வின் பல்வேறு விநோதங்களையும் வியக்கத்தக்க அம்சங்களையும் அ.முத்துலிங்கத்தின் கதைகள் நிறையவே அறிமுகப்படுத்தியுள்ளன. இன்றைய உலகில் நவீனமடைந்திருக்கும் பார்வைகளின் விளைவாக ஏற்பட்டுள்ள சாதகமும் பாதகமுமான பல்வேறு கூறுகளையும் இன்றைய தலைமுறையினரின் கதைகள் மையப்படுத்துகின்றன.

இவ்வகையில் குறிப்பிடத்தக்க சிறுகதையாசிரியர் சித்துராஜ் பொன்ராஜ். அதிகமும் சிங்கப்பூரைக் களமாகக் கொண்டிருப்பவை அவரது கதைகள்.

தமிழில் அவ்வளவாக பேசாப்பொருளாக உள்ள தன்பாலின உறவு சார்ந்த கதை(கடல், சிரித்த முகமாய் சிங்கம், இருட்டு மனிதர்கள்)களைக் குறிப்பிடவேண்டும். ‘பசித்த மானிடம்’ நாவலில் கரிச்சான்குஞ்சு வெகுகாலத்துக்கு முன்பே கையாண்டிருந்தபோதும் சிறுகதைகளில் அவை சொல்லும்படியாக வெளிப்படவில்லை.

இன்னொருவர் ரா.கிரிதரன். அவரது சில கதைகள் தமிழில் பேசப்படாத கதைக்களங்களைக் கொண்டவை. மேற்கத்திய இசை சார்ந்த பின்னணியைக் கொண்டவை ‘காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை’, ‘இருள் முனகும் பாதை’ ஆகிய இரு கதைகள். மலையேற்ற அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட ‘நந்தா தேவி’யும் ‘பல்கலணும் யாம் அணியோம்’ என்ற அறிவியல் புனைகதையும் புதிய வாசிப்பு அனுபவத்தைத் தருபவை.

ஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ தொகுப்பிலுள்ள கதைகளும் ஜேஸ்டன்வில் என்ற புனைவு நகரில் நிகழும் அயல் அனுபவங்களாகவே அமைந்துள்ளன.

02

தகவல் தொழில்நுட்பத் துறையும் கணிணியும் இன்றைய சமூக வாழ்வின் பல்வேறு திசைமாற்றங்களை நிர்ணயிப்பதில் தவிர்க்கமுடியாத பங்களிப்பைத் தருபவை. ஏராளமான சம்பளம், வசீகரமான வேலைச்சூழல், வெளிநாட்டு வாய்ப்பு என இளைஞர்களின் மனத்தைக் கவர்ந்த இத்துறைகள் பொதுச் சமூகத்திலும் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தின. குறிப்பாக பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தையும் அதன் வழியாக அவர்களது தனித்தன்மைகளையும் உறுதிப்படுத்தின. கடந்த சில ஆண்டுகளில் சரிவைச் சந்தித்திருந்தபோதும் இதன் மீதான ஈர்ப்பு மட்டுப்படவில்லை. இத் துறை சார்ந்தோர் எழுதியுள்ள சிறுகதைகள் அகச்சிக்கல்களை அலசுகின்றன. திடீரென எதிர்கொள்ளும் பொருளாதாரச் சரிவுகளை நேர்ப்படுத்த முடியாமையின் அவலத்தைச் சுட்டுகின்றன. ஆண்பெண் உறவுகளில் நிகழும் அபத்தங்களையும் உடைவுகளையும் வெளிச்சப்படுத்துகின்றன. மாறும் மதிப்பீடுகளுக்கும் மரபின் சுமைகளுக்கும் இடைப்பட்ட வெளியில் தடுமாறுகிற நிலையைச் சித்தரிக்கின்றன.

பாலசுப்ரமணியம் பொன்ராஜின் ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’த் தொகுப்பில் உள்ள ‘உடைந்துபோன ஒரு பூர்ஷ்வா கனவு’, ‘உடற்பயிற்சி நிலையத்துக்குச் செல்பவர்கள்’, ‘ஜங்க்’ ஆகிய கதைகளில் இன்றைய தலைமுறையின் மனச் சுமைகளை உணரமுடிகிறது.

வெளியிலிருந்து பார்க்கும் பளபளப்பான உலகத்துக்குள் உள்ளே இருக்கும் யதார்த்தத்தையும் அரசியல் காய் நகர்த்தல்களையும் சுயநலபோக்கையும் நேர்த்தியாக முன்வைக்கும் கதைகளை எழுதியுள்ளார் கார்த்திக் பாலசுப்ரமணியன். அவரது ‘டொரினா’ தொகுப்பில் உள்ள ‘லிண்டா தாமஸ்’, ‘மேய்ப்பனின் கருணை’, ‘பார்வை’, ‘பொதுப்புத்தி’ ஆகிய நான்கு கதைகளும் துறைசார்ந்த உள் அடுக்குகளை மையமாகக் கொண்டவை, இத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் உளவியல் அழுத்தத்தைச் சுட்டும் கதை ‘காகித முகங்கள்’. லாவண்யா சுந்தர்ராஜன், அரிசங்கர் ஆகியோரின் கதைகள் சிலவும் பணிச்சுமையால் ஏற்படும் மனஅழுத்தங்களை, சோர்வை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

03

ஈழப்போரின் முடிவுக்குப் பிறகான ஈழ எழுத்துக்கள் புதிய பரிணாமங்களை அடைந்துள்ளன. போர்க் காலச் சூழல் குறித்த முக்கியமான நாவல்கள் வெளியாகியுள்ள அதே நேரத்தில் போருக்குப் பின் அடையாளங்களை இழந்து உலகெங்கும் அகதிகளாக வாழ்ந்திருக்கும் இன்றைய தலைமுறை எதிர்கொள்ளும் இருத்தலியல் நெருக்கடிகளை சித்தரிக்கும் சிறுகதைகள் பலராலும் எழுதப்பட்டுள்ளன. பிறந்த மண்ணின் வாழ்ந்த நினைவுகளை சுமந்தலையும் துயரையும் அந்நிய நிலத்தில் கால்கொள்ளமுடியாத இயலாமையையும் வெளிப்படுத்துகின்றன. உரிமையை இழந்த அதே மண்ணில் சமரசங்களுடன் வாழ நேரும் அவலத்தையும் முன்வைக்கின்றன.

அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பேரீச்சை’, ‘கதிர்ச்சிதைவு’ ப.தெய்வீகனின் ‘அவனை எனக்குத் தெரியாது’, ‘புலரியில் மறைந்த மஞ்சள் கடல்’ அகரமுதல்வனின் ‘உலகின் மிக நீண்ட கழிப்பறை’, ‘நெடுநிலத்துள்’, உமையாழின் ‘கிருமி’, ‘மேய்ப்பர்’, தமிழ்நதியின் ‘அப்பாவின் புகைப்படம்’, ‘காத்திருப்பு’, ‘மாயக்குதிரை’, யதார்த்தன் ‘குசலாம்பாள் எனும் செயின்பிளாக்’,  தீபச்செல்வனின் ‘ஆமிக்காரி’, ‘காவலன்’, சயந்தனின் சந்திரா இரவீந்திரனின் சில கதைகள் ஆகியவை ஈழப்போரின்போதும் அதற்குப் பின்னுமான மனநிலைகளை சிக்கல்களை தடுமாற்றங்களை வெவ்வேறு கால, இடப் பின்னணிகளுடன் விவரிக்கின்றன.

04

ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள சமகால வாழ்வில் ஒவ்வொரு தனி மனிதனுமே கண்ணுக்குத் தெரியாத வலைப்பின்னலில் செயலிகளால் இயக்கப்படுகிறான். அவனது அந்தரங்கம் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஒரு சமூகப் பிராணியாக இருந்த மனிதனை தனித் தனியான உயிரிகளாக முடக்கியிருக்கும் சமூக வலைதளங்களும் கைப்பேசியில் இயங்கும் செயலிகளும் உளவியல் தளத்தில் ஏற்படுத்தியிருக்கும் அழுத்தங்களும் நெருக்கடிகளும் அச்சத்தை ஏற்படுத்துபவை. தகவல்களின் அடிப்படையில் உங்களை மனநிழலெனத் தொடரும் தொழில்நுட்பத்தின் ஆற்றல் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. குடும்பம், சமூகம் எனும் கூட்டமைப்பின் பொருண்மையை கேள்விக்குள்ளாக்கும் இன்றைய சூழலின் நெருக்கடிகளை மையப்படுத்தும் கதைகள் முக்கியமானவை.

கைபேசியில் பொழுதுபோக்குக்கென உள்ள விளையாட்டுகள் தனிமனித அளவில் செலுத்தும் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்ட, சுனில் கிருஷ்ணனின் ‘பேசும் பூனை’, ‘திமிங்கிலம்’ ஆகிய இரு கதைகளும் முக்கியமானவை. இதே மையத்தை இன்னும் எளிமையான தளத்தில் அணுகிய விதத்தில் அவரது ‘பொன்முகத்தைப் பார்ப்பதற்கும்’ கதையும் குறிப்பிடத்தக்கது.

பாலியல் இச்சைகளையும் அவற்றின் பல்வேறு பரிணாமங்களையும் வசீகரமாக காட்சிப்படுத்தி ஈர்க்கும் வலைதளங்கள் அந்தரங்கமாக ஏற்படுத்தும் தடுமாற்றங்களை கதைகளாக்க முனைகிறார் ரமேஷ் ரக்ஷன். அவரது ‘பெர்பியூம்’ தொகுப்பிலுள்ள சில கதைகள் அவ்வாறான மனநிலையை வெளிப்படுத்துபவை.

தனிமனிதர்கள் தற்செயலாக வெளிப்படுத்தும் தகவல்களின் அடிப்படையில் அவர்களது விருப்பங்களை அறிந்து பொருட்களை சந்தைப்படுத்த முனையும் இன்றைய வியாபார தொழில்நுட்பம் சார்ந்த வலைப்பின்னலின் உச்சபட்ச சாதுர்யத்தைப் பற்றிய சிறுகதை கார்த்திக் பாலசுப்ரமணியனின் ‘சுழல்’. இதன் அடுத்த கட்டமாக ஒருவனின் விருப்பத்துக்கேற்ற பெண்ணுடனான சந்திப்பை நிகழ்த்தும் சாத்தியத்தைச் சொல்கிறது ‘மெய்நிகரி’.

05

சாதியத்தின் சமூக அவலங்களை நெருக்கடிகளைப் பற்றிய கதைகள் தமிழ்ச் சூழலில் புதிதில்லை. மாறிவரும் சமூக, பொருளாதார நிலைகளுக்கேற்ப சாதியத்தின் முகங்களும் புதிய பரிமாணங்களை ஏற்கின்றன. அவற்றின் தாக்கங்கள் இன்னும் நுட்பமடைந்துள்ளன. சமூகத்திலிருந்து களையப்பட முடியாமல் இன்னும் வன்மம் கொண்டிருக்கும் சாதியக் கொடுமைகளைச் சுட்டுவதோடு நின்றுவிடாமல் சாதியிலிருந்து வெளியேற உதவும் வழிமுறைகளாக முன்வைக்கப்படும் கல்வி, பொருளாதாரம், நகர வாழ்வு உள்ளிட்ட பல்வேறு உத்திகளுக்குப் பின்னும் அதிலிருந்து வெளியேற முடியாமல் திகைத்து நிற்கும் இன்றைய இளைஞர்களின் தத்தளிப்புகளை கோபங்களை ஆற்றாமைகளை நுட்பமான கேள்விகளை இன்றைய கதைகள் பேசுகின்றன.

உறவுகளிலிருந்தும் கிராமத்திலிருந்தும் முக்கியமாக சாதியிலிருந்தும் விலகியிருக்க முடிகிறத என்றாலும் அந்த ஆசுவாசம் நிறைவைத் தரவில்லை. சாதியிலிருந்து விடுதலை என்பது போதாமைகளுடன் இருப்பதைக் குறித்த சோர்வும் கோபமும் ஆற்றாமையும் வெவ்வேறு விதத்தில் வெளிப்படுகின்றன.

சாதியத்தின் இரண்டு எதிரெதிர் எல்லைகளையும் தொட்டிருக்கும் சுரேஷ் பிரதீப்பின் ‘வரையறுத்தல்’ ஒரு முக்கியமான கதை. சாதிய ஒடுக்குமுறையை உக்கிரமாகச் சொல்லும் பின்கதையுடன் இன்றைய கல்வியும் பிற கருவிகளும் அவ்வகையான ஒடுக்குமுறைக்கு எதிரான குரலை ஒலிக்கச் செய்வதில் உள்ள நடைமுறை முரண்களையும் அதே அழுத்தத்துடன் சொல்லியுள்ளது. சாதி சார்ந்த அரசு நடைமுறைகளையும் சாதிய விடுதலையின் நடைமுறைப் படுத்தலில் உள்ள போதாமைகளையும் பேசுகிற ‘எஞ்சும் சொற்கள்’ சிறுகதையும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.

அடையாளங்களால் ஒடுக்கப்பட்ட வாழ்விலிருந்து கல்வியின் வழியாகவும் பொருளாதாரத்தின் மூலமாகவும் மீள முயலும் இளைஞர்களின் இருதலைக்கொள்ளி மனநிலையை தூயனின் ‘இருமுனை’ தொகுப்பிலுள்ள சில கதைகள் உணர்த்துகின்றன. தனி அடையாளங்கள் அழிக்கப்பட்ட நவீனமயமான இன்றைய வாழ்நிலையிலும் பிறப்பின் சுமை என்பது மீண்டும் மீண்டும் வெவ்வேறு உருவங்களில் முளைத்தெழுந்து நினைவுபடுத்தியபடியே உள்ளது. அவ்வாறான துயரம் அனைத்திலிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொள்ளும் மனநிலைக்கு தள்ளிவிடும். இத்தகைய அவலத்தில் சிக்கிக்கொள்ளும் ஒருவனது தடுமாற்றங்களை ‘தலைப்பிரட்டைகள்’ கதை நுட்பமாக விவரிக்கிறது.

குட்டிரேவதியின் ‘நிறைய அறைகள் உள்ள வீடு’ தொகுப்பிலுள்ள ‘காது’ சிறுகதை அத்தகைய மனநிலையை அடிப்படையாகக் கொண்டது.

06

கதைகளின் வடிவிலும் கதைமொழியிலும் நவீன உத்திகளை கையாளும் போக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்திருப்பது. மரபான அணுகுமுறைக்கு மாற்றான வகையில் எழுதிப் பார்க்கும் முயற்சிகள் இன்றைய காலகட்டத்திலும் கவனம் பெற்றுள்ளன. யதார்த்தவாத எழுத்து முறை சரியாக பொருந்திவராத நிலையில் புதியதொரு பாணியை கைகொள்ள வேண்டிய அவசியம் நேர்கிறது. ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ள வடிவங்களையும் உத்திகளையும் மீறி புதிய கதைமொழியை கண்டடைய முனையும் எவரும் புனைவு சார்ந்த சவால்களை எதிர்கொள்ளவே நேரும்.

அந்த வகையில் மரபான கதைச் சொல்லல் முறையிலிருந்து வேறுபட்ட உத்திகளைக் கையாளும் முனைப்புடன் எழுதுபவர்கள் என கிருஷ்ணமூர்த்தி, சுனில் கிருஷ்ணன், ஜீவ கரிகாலன் ஆகியோரைக் குறிப்பிடலாம். கிருஷ்ணமூர்த்தியின் ‘காணாமல் போனவர்கள் பற்றிய குறிப்புகள்’ தொகுப்பிலுள்ள கதைகள் பலவும் சொல்முறையிலும் வடிவிலும் புதிய சாத்தியங்களைக் கொண்டுள்ளன. சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’யில் உள்ள சில கதைகளில் மாறுபட்ட சொல்முறையைக் கையாண்டுள்ளார். ஜீவ கரிகாலனின் ‘கண்ணம்மா’, ‘டிரங்குப் பெட்டிக் கதைகள்’ ஆகிய தொகுப்புகளில் உள்ள பல கதைகளில் வழக்கமான கதைசொல்லல் முறையை மீறும் போக்கைக் காணமுடிகிறது. மேலைய கதை வடிவங்களை தமிழில் எழுதிப் பார்க்கும் கார்த்திகைப் பாண்டியனின் ‘மரநிறப் பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பில் உள்ள கதைகள் பலவும் மாறுபட்ட வடிவங்களில் எழுதப்பட்டவை.

07

தமிழ் புனைகதைகள் சிரிக்க மறுப்பவைஎன்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. அந்த அபவாதத்தைப் போக்க முயற்சிக்கும் கதைகளை எழுதியுள்ளார் சாம்ராஜ். ‘பட்டாளத்து வீடு’, ‘ஜார்ஜ் ஒழிகஆகிய தொகுப்புகளிலுள்ள சில கதைகள் அத்தகையவை. குறிப்பாக இடதுசாரித் தோழர்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் அபத்தங்களை மையப்படுத்தி எழுதிய கதைகள் அவ்வகையில் முக்கியமாவை. அன்றாடங்களின் உரையாடல்களாகவும் கதைசொல்லல்களாகவும் அமைந்திருக்கும் பிரபு தர்மராஜின் கதைகள் பாலியல் மீறல்களையும் இச்சைகளையும் அங்கதம் கொப்புளிக்கும் மென்மையான குரலில் சொல்கின்றன. சமகாலப் புனைவின் பல்வேறு தேற்றங்களை கிண்டலடித்தபடி வாசகன், எழுத்தாளன் இருவரையும் கதைக்குள் இருத்தி நகைக்கும் கதைகள் காலத்துகளினுடையவை. ‘ ஸ்காண்டல் இன் போஹீமியாவை நுவாராக பிரதியெடுத்தல்’, ‘சாத்தியமற்ற குற்றம்’, ‘அந்தி கிறிஸ்துவின் வருகை’, ‘முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்’ என அவரது கதைகள் பலவும் வாசிப்புச் சுவை கொண்டவை. பழுவேட்டரையரையும் கிடாரம்கொண்டானையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு சுனில் கிருஷ்ணன் எழுதியிருக்கும் ‘கொஞ்சம் சிறுசா’, ‘அந்த ஒன்பது பேர்’, ‘பெரும் படம் காணல்’ உள்ளிட்ட கதைகள் சமகால இலக்கிய அரசியலையும் எழுத்தாளனின் நிலையையும் பகடி செய்துள்ளன.

08

மொழியிலும் வடிவத்திலும் மரபின் தொடர்ச்சியாகவே பெண் எழுத்தாளர்கள் பலரின் கதைகளும் அமைந்துள்ளன. சிலர் இன்றையச் சூழலின் புதிய கதைக்களங்களை எழுதியுள்ளனர்.

மத்தியதரக் குடும்பங்களின் எளிய அன்றாடங்களின் நடைமுறை சிக்கல்களும் தடுமாற்றங்களும் அதனூடான அகமோதல்களுமே கலைச்செல்வியின் சிறுகதைக் களங்கள். புதிய களங்களை எழுதிப் பார்க்கும் முனைப்பை வெளிப்படுத்தும் கதைகள் அவரது ‘சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது’ தொகுப்பில் உண்டு.

மரபான குடும்ப வாழ்வின் எல்லைகளும் அவை ஏற்படுத்தும் நிர்பந்தங்களையும் குறித்த பெண்களின் தனித்துவமான பார்வையை வெளிப்படுத்தும் கதைகளை அ.வெண்ணிலா தந்திருக்கிறார். குடும்பம் மற்றும் புறச் சூழலில் பெண்கள் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறார்கள், உடல்மொழி, சிரிப்பு, பேச்சு என்று அவர்களுக்கான வெளி எவ்வாறு சுருக்கப்படுகிறது என்பதில் அவரது கதைகள் கவனம் குவிகின்றன.

லாவண்யா சுந்தரராஜனின் கதைகள். இதுவரையிலும் சொல்லப்பட்ட பெண்களின் இருப்பை இன்றைய நகரமயமும் தொழில்நுட்பமும் பொருளாதார சுதந்திரமும் வடிவமைத்துள்ள நவீன வாழ்வு மாற்றி அமைத்துள்ளதா என்ற வலுவான கேள்வியை நுட்பமாக எழுப்புபவை. குழந்தைப் பேறும் உறவுகளுக்கிடையிலான ஓயாத அகச் சிக்கல்களையும் மையமாகக் கொண்டிருந்தாலும் இவை இன்றில் கால்கொண்டிருப்பவை என்பதால் மேலும் பொருட்செறிவு மிக்கவையாக அமைந்துள்ளன.

கிராமங்களில் இன்னமும் மேல் அழுத்தமாகக் கவிந்திருக்கும் சமூகம், குடும்பம் போன்ற அமைப்புகள் சார்ந்த அழுத்தங்களைக் குறித்த பெண்களின் மௌனங்களை அடங்கிய குரலில் சொல்லும் கமலதேவியின் கதைகளின் வடிவம் நுட்பமானது. முழுமையான கதையாக எதையும் சொல்லாமல் அதிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட துண்டுகளாகவே ‘சக்யை’, ‘குருதியுறவு’ ஆகிய தொகுப்புகளிலுள்ள அவரது கதைகள் அமைந்துள்ளன.

பெண்களைப் பற்றிய ஆண்கள் கொண்டுள்ள பொதுவான தட்டையான சித்திரத்தை கலைத்துப் போடுபவை, கேள்வி கேட்பவை குட்டி ரேவதியின் கதைகள். பெண்களின் அக உலகம் சார்ந்த வெளிப்படையான உரையாடல்களையும் நுட்பமாக பேசியிருக்கும் கதைகள் ‘நிறைய அறைகள் உள்ள வீடு’, ‘குரல்கள்’ ஆகிய தொகுப்புகளில் உண்டு.

உடல்சார்ந்த விடுதலையை இச்சைகளின் களிப்பையும் போதையையும் முன்வைக்கும் கட்டற்ற எழுத்து லைலா எக்ஸ்-ன் சிறுகதைகள்.

ஒன்றிலிருந்து முற்றாக வேறுபட்ட வெவ்வேறு கதைக் களங்களைக் கொண்டவை ஜா.தீபாவின் கதைகள். ‘நீலம் பூக்கும் திருமடம்’ தொகுப்பிலுள்ள ‘குருபீடம்’ குறிப்பிடத்தக்க சிறுகதை.

நவீன வாழ்வின் தேவைகளுக்கேற்ப விவசாயத்தையும் மதிப்பீடுகளையும் இழந்த நாஞ்சில் நாட்டின் வாழ்வியல் துயரங்களை வட்டார மொழியில் சொல்பவை மலர்வதியின் சிறுகதைகள். ‘கருப்பட்டி’ அவரது சிறுகதைத் தொகுப்பு.

அனுசரணையும் சமரசமும் பூசல்களுமாய் விளங்கும் கூட்டுக் குடும்பத்தின் எளிய தருணங்களைக் காட்டும் ‘ஒரு மழை நாள்’, ‘லீலாவதியின் தத்துவங்கள்’ போன்ற கதைகளை எழுதியிருக்கும் சுசித்ராவின் ‘ஒளி’ குறிப்பிடத்தக்க சிறுகதை. அறிவியல் புனைகதைளும் எழுதியுள்ளார்.

09

உழைக்கும் சிறுவர்களைக் குறித்து தமிழில் முன்னோடிகளால் எழுதப்பட்ட கதைகளின் வரிசையில் இன்றைய சிறுவர்களின் துயரமான வாழ்நிலையை காட்டும் கதைகளை எழுதியுள்ளனர் ராம்தங்கம், நாகபிரகாஷ் ஆகிய இருவரும்.

ராம் தங்கத்தின் ‘திருக்கார்த்தியல்’ தொகுப்பில் உள்ள ‘டாக்டர் அக்கா’, ‘உடற்றும் பசி’ உள்ளிட்ட பல கதைகளும், நாகபிரகாஷ் எழுதிய ‘எரி’ தொகுப்பில் உள்ள ‘கூப்பன்’, ‘சகடம்’ ஆகிய கதைகளும் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவை.

10

அறிவியல் புனைவுகள் எழுதும் முனைப்பை அநேகமாய் இன்றைய தலைமுறை சிறுகதையாளர்கள் பலரிடமும், புதியவர்களிடமும் காணமுடிகிறது. அறிவியல் புனைகதைகளுக்கான மின்னிதழான ‘அரூ’ தொடர்ந்து அத்தகையக் கதைகளை வெளியிடுகிறது. ‘சொல்வனம்’ அறிவியல் புனைகதைகளுக்காக சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. அவ்வகைக் கதைகளைப் பற்றிய விவாதங்கள் அவற்றின் சாத்தியங்களைக் குறித்த விரிவான புரிதல்களுக்கு வழிவகை செய்கின்றன.

ரா.கிரிதரன், சுசித்ரா, சுனில் கிருஷ்ணன் போன்று ஒருசிலரைத் தவிர இவ்வகைக் கதைகளை எழுத முனைபவர்கள் பலரும் சிறுகதை எழுத்துக்குப் புதியவர்கள் என்பது வியப்பைத் தரும் ஒன்று.

0

மனித உறவுகள், காமம், அக நெருக்கடிகள், துயரின் பல்வேறு நிறங்கள், துலக்கமான தனித்துவங்களைக் கொண்ட கோட்டுச் சித்திரங்கள் என முன்னோடிகளின் தேர்ந்த கைகள் எழுதிக்காட்டியவற்றை தமக்கான கதைமொழியில் சொல்ல விழையும் சிறுகதையாளர்கள் பலரும் இந்த பத்தாண்டுகளில் உண்டு.

காமமும் இச்சையும் குற்றங்களின் மீதான ஈர்ப்பும் இட்டுச்செல்லும் சுழல் வழியின் திருப்பங்களில் கால்கொண்டிருப்பவை போகன் சங்கரின் கதைகள் சொல்முறையில் திருத்தமானவை. கண்முன்னால் மலர்ந்து மறையும் மத்தாப்புத் தருணங்களின் ஜாலங்களையும் வசீகரத்தையும் கொண்டவை. ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’, ‘திகிரி’, ‘போகப் புத்தகம்’ ஆகியவை இவரது தொகுப்புகள்.

சுயநலத்தின் அலகுடன் அமையும் மனித உறவுகளையும் வாழ்வின் வெவ்வேறு தருணங்களையும் நேரடியாகவும் (அபரஞ்சி, பஸ்ஸ்டாண்ட்) புதிர்வடிவாகவும் (வாசலில் நின்ற உருவம், புலி) கொண்ட கதைகளைக் கொண்ட ‘சாமத்தில் முனகும் கதவு’ தொகுப்பை எழுதியிருப்பவர் கே.ஜே.அசோக்குமார்.

தகுதிவாய்ந்த ஒருவனுக்காக தன் ஓவியத்தைப் பாதுகாத்திருக்கும் பெண்ஓவியர், கதை கேட்கும் செவிகள், சர்க்கஸ்காரர்கள், ஆராய்ச்சிக்காக குதிரையைத் தேடுவது என்று வெவ்வேறு கதைக்களங்களை கையாளும் நரனின் (‘கேசம்’, ‘சரீரம்’) கதைகள் மொழியிலும் வடிவிலும் சிடுக்குகள் கொண்டவை.

விஞ்ஞானத்தின் அளப்பரிய கண்டுபிடிப்புகள் இன்றைய மருத்துவத்தில் அற்புதங்கள் நிகழ்த்தயுள்ள நிலையில் நோய்ப்பட்டவனின் வாதையுடன் அவனைச் சார்ந்தவர்கள் அனுபவிக்க நேரும் நெருக்கடிகள் துயரங்கள் மேலும் வலுவடைந்தே வரும் முரணை நுட்பமாகவும் நேர்த்தியாகவும் சொல்கின்றன மயிலன் ஜி சின்னப்பனின் கதைகள். 

கதைகளைத் தொடர்ந்து எழுதி, தொகுப்புகளை வெளியிடுவதன் வழியாக ஆத்மார்த்தி, கார்த்திக் புகழேந்தி, கவிதைக்காரன் இளங்கோ, லக்ஷ்மி சிவகுமார், ஜி கார்ல் மார்க்ஸ், உதயஷங்கர் உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்புகளை தருகின்றனர்.

லோகேஷ் ரகுராம், செந்தில் ஜெகநாதன், எம்.கே.எம்.மணி முதலானவர்கள் இணைய இதழ்களில் ஊக்கத்துடன் செயல்படுகிறார்கள்.

0

பத்துக்கும் மேற்பட்ட இணைய இதழ்கள், சில அச்சிதழ்கள், அவரவரது வலைதளங்கள் என சிறுகதைகளுக்கான வெளிப்பாட்டுத் தளங்கள் எண்ணற்றவை. யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்கத் தேவையில்லாத நிலை. எழுதப்பட்டு முடித்த கையோடு அதை இணைய இதழிலோ அல்லது வலைதளத்திலோ பதிப்பிக்க முடிகிற வேகம். இவ்வாறான காரணங்களினால் எண்ணிக்கையில் அதிகமான கதைகள் படிக்கக் கிடைக்கின்றன. எட்டு அல்லது பத்து கதைகள் சேர்ந்தவுடனே தொகுப்பாகப் பார்க்கும் சாத்தியங்களும் கூடுதலாகவே உள்ளன. முன்பே குறிப்பிட்டதுபோல புதிய எழுத்தாளர்களுக்கு இந்த வாய்ப்புகள் பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கக்கூடியன.

‘யாவரும்’, ‘வாசக சாலை’, ‘பதாகை’ பதிப்பகங்கள் புதிய எழுத்தாளர்கள் பலரது தொகுப்புகளை ஆர்வத்துடன் வெளியிட்டு வருகின்றன.

முன்னர் ஒரு ஆண்டு முழுக்க எழுதப்படக் கூடிய கதைகள் இப்போது ஒரே மாதத்தில் எழுதப்படுகின்றன. கவிஞர்களின் எண்ணிக்கையும் வெளியாகும் கவிதைத் தொகுப்புகளின் எண்ணிக்கைகளையும் குறித்து சொல்லப்பட்ட அதே விமர்சனங்கள் இன்று சிறுகதைகளைக் குறித்தும் வெளிப்படுகின்றன.

பொருத்தமற்ற இடங்களில் பொருந்தாத சொற்கள், அயலக மேதைகளின் மேற்கோள்கள், ஏராளமான எழுத்துப் பிழைகள், கவனிக்கப்படாத வாக்கியப் பிழைகள், மாறுபட்ட சொல்முறை என்பதை நிறுவும்பொருட்டு உடைக்கப்படும் இலக்கணங்கள், திருகலான மொழிநடை என சுட்டக் கூடிய எல்லா போதாமைகளுமே அடிப்படையில் வாசிப்புச் சுவையைக் குலைக்கின்றன என்பது உணர்த்தப்படுவதில்லை. வாசிப்பு தருகிற புரிதல்களும் வாழ்வின் வெவ்வேறு தரப்புகளை உற்று கவனிக்கும் பார்வையும் கதை தன்னளவில் உருத்திரண்டு வெளிப்படுகிற தருணம் வரைக்குமான காலத்தை அனுமதிக்கும் பொறுமையும் ஒன்றுசேர்ந்து எழுத்தில் உருவாக்கும் அடர்த்தியையும் முழுமையையும் பலரும் தவறவிடுகிறார்கள் என்பதை கவனிக்க முடிகிறது.

வாசிப்புப் பின்னணிகொண்டவர்களின் கதைகள் பல ஆழங்களைத் தொட முயன்று முடியாமல் நின்றிருக்கின்றன. ஆனால், அவற்றின் வடிவமோ மொழியோ வாசிக்கும்போது எந்தவிதமான நெருக்கடிகளையும் ஏற்படுத்துவதில்லை. கலைத்துப் போடுவதற்கு முன்பு முழுமை எது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதே முக்கியம்.

‘தக்கன தப்பும்’ என்ற இயற்கையின் விதியே இங்கும் செல்லுபடியாகும் என்பதுதான் யதார்த்தம்.

தொலைதூரத்துக்கு நீளும் தொடரோட்டத்தின் ஆரம்பத்தில் உற்சாகத்துடன் வேகமாக ஓடுவதில் தவறில்லை. ஆனால், எல்லையைக் குறித்த கவனமும் ஆற்றலைத் தக்கவைத்துக்கொள்ளும் பயிற்சியுமே தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்க உதவும். இப்போது பார்க்கும்போது துடிப்பான ஆற்றல்மிக்க நிறைய கால்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் பாய்ச்சலும் ஆற்றலும் உற்சாகத்தைத் தருகின்றன.

இளைஞர்கள் பலர் தொடர்ந்து சிறுகதைகளில் ஆற்றலுடனும் தீவிரத்துடனும் பங்களிப்பதன் வழியாக இதுவரையிலும் தமிழ்ச் சிறுகதைகள் தொட்டிருக்காத புதிய நிலவெளிகளும் புனைவுத் தருணங்களும் நமக்கு அறிமுகமாயுள்ளன. வடிவிலும் மொழியிலுமான பரிசோதனைகளில் ஆரோக்கியமான சில ஆச்சரியங்களைத் தந்திருக்கின்றன. அறிவியல் புனைவுகள், குறுங்கதைகள் போன்ற வகைகளை எழுதுவதிலும் அணுகுவதிலும் தீவிரம் மிகுந்துள்ளது. ஏராளமான புதிய பெயர்களையும் புதிய கதைகளையும் கடந்து வர நேர்கிறது. நினைவில் நிற்கும்படியாக எழுதுவதன் வழியாக அவற்றில் ஒரு சில கதைகளும் பெயர்களும் மட்டுமே எஞ்சி நிற்கும்.

காலம் தாட்சண்யமின்றி உதிர்க்கும் பெயர்களுக்கு நடுவில், இந்தப் பத்தாண்டுகளின் முடிவில், தமிழ்ச் சிறுகதையாளர்களின் வரிசையில் தம் பெயர்களை உறுதிப்படுத்தும் சிறுகதையாசிரியர்கள் சிலரேனும் இடம்பிடித்து, எழுதி பல காலத்துக்குப் பின்னும் புனைவின் வசீகரத்தையும் நேர்த்தியையும் சிறிதும் இழக்காத செவ்வியல் கதைகளின் வரிசையில் சில கதைகளேனும் இடம்பெறுமானால் அதுவே இந்தப் பத்தாண்டுகால சிறுகதைப் பயணத்தை அர்த்தப்படுத்துவதாக அமையும்.

0

Thursday 1 October 2020

கொங்கு மண்ணின் கதைசொல்லிகள்

( அந்திமழை மாத இதழில், செப் 2020 வெளியான கட்டுரை )

‘நீரெலாம் சேற்று நாற்றம், நிலமெலாம் கல்லும் முள்ளும், ஊரெலாம் பட்டிதொட்டி, உண்பதோ கம்மஞ்சோறு’ என்ற அடையாளங்களைக்கொண்ட ‘காருலாவும் கொங்கு நாடு’ உழைப்புக்குப் பெயர்பெற்றது. கிராமங்களையும் விவசாயத்தையும் சார்ந்திருந்த அதன் இலக்கியமும் மண்ணிலிருந்தே முளைத்தெழுந்தது. அந்த மக்களின் அன்றாடப் புழங்குமொழியிலேயே எழுதப்பட்டது.

கொங்கு நிலத்துக்கான நாட்டார் கதைப்பாடல் ‘அண்ணன்மார் கதை’. இது ‘குன்னுடையான் கதை’ என்றும் ‘பொன்னர் சங்கர்’ வரலாறு என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கதைப் பாடலைத் தொகுத்து நூலாக்கியவர் சக்திகனல்.

தீண்டாமை, கள்ளுண்ணாமை போன்ற சமூக நோக்கிலான சிறுகதைகளை எழுதிய ராஜாஜி கொங்கு மண்ணின் மூத்தப் படைப்பாளிகளில் ஒருவர். கோவையை அடுத்த கரடிவாவி கிராமத்தில் பிறந்தவரும் கோவையின் தொழில் அதிபருமான கஸ்தூரி சீனிவாசன் எழுதிய 1987ம் ஆண்டில் எழுதிய ‘புனர்ஜென்மம்’ நாவல் குறிப்பிடத்தக்க ஒன்று. ‘அன்பெனும் ஆயுதம்’ எனும் தமிழ் நாவலைத் தவிர மூன்று ஆங்கில நாவல்களையும் அவர் எழுதியுள்ளார். ‘நாகம்மாள்’ என்ற நாவலின் வழியாக கொங்கு வட்டார இலக்கியத்துக்கான தொடக்கத்தைத் தந்தவர் ஆர்.சண்முகசுந்தரம். காங்கயம் அருகிலுள்ள கீரனூரைச் சேர்ந்தவர். 1940ல் எழுதப்பட்ட அந்த நாவல் இந்திய அளவில் முதல் வட்டார வழக்கு நாவலாகவும் முதல் யதார்த்தவாத நாவலாகவும் குறிப்பிடப்படுகிறது. ‘காணாச்சுனை‘, ‘சட்டி சுட்டது’, ‘பூவும் பிஞ்சும்’ ஆகிய பிற நாவல்களும் கொங்கு விவசாய வாழ்வின் அடையாளங்களைக் கொண்டிருந்தன. ரத்னகிரி குன்றை உடைத்து கற்களாக மாற்றும் மக்களின் வாழ்வைச் சித்தரிக்கும் ‘கல்லும் மண்ணும்’ நாவலை எழுதிய க.ரத்னம் கீரணத்தத்தில் பிறந்தவர். தனிப்பட்ட ஆர்வத்தில் பலநாட்கள் தேடி நேரடியாகப் பார்த்து சேகரித்த விபரங்களைக் கொண்டு அவர் எழுதிய ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ என்ற நூல் பறவைகளைப் பற்றி தமிழில் வெளிவந்த முதல் புத்தகம். எட்கர் தர்ஸ்டன் எழுதிய ஏழு தொகுதிகளைக் கொண்ட ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ என்ற மொழிபெயர்ப்பு நூல் அவரது சாதனைகளில் ஒன்று. இரா.வடிவேலனார் எழுதிய ‘தொட்டிகட்டுவீடு’ கொங்குப் பிரதேசத்தின் பண்பாட்டுக் கூறுகளைக்கொண்டது.

இவர்களின் தொடர்ச்சியாக, கிராமிய வாழ்வில் மனித உறவுகளுக்குள் ஏற்படும் முறிவுகளை சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் ‘ஈரம் கசிந்த நிலம்’. பேரூரைச் சேர்ந்த சி.ஆர்.ரவீந்திரன் கொங்குப் பிரதேசத்தின் சிறப்பான வட்டார மொழியை இந்த நாவலில் கையாண்டிருந்தார். சூரியகாந்தனின் ‘மானாவாரி மனிதர்கள்’ நாவலும் கொங்கு வட்டாரத்தின் தனித்துவமிக்க மொழியை கவனிக்கச் செய்த ஒன்று.

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த பாதசாரியின் ‘மீனுக்குள் கடல்’ தொகுப்பும் ‘காசி’ என்ற அவரது சிறுகதையும் தமிழ் இலக்கியச் சூழலில் புகழ்பெற்றது. ஒசூரில் பிறந்த விட்டல்ராவ் டேனிஷ்பேட்டையை களமாகக் கொண்டு எழுதிய ‘போக்கிடம்’ நாவலை எழுதினார். தவிர, ‘காலவெளி’, ‘காம்ரேடுகள்’, ‘நிலநடுக்கோடு’ ஆகியவை அவரது முக்கிய நாவல்கள்.

பெருமாள்முருகனின் ‘ஏறுவெயில்’, ‘நிழல்முற்றம்’, ‘மாதொருபாகன்’, ‘கங்கணம்’, ‘கூளமாதாரி’, ‘பூக்குழி’ என ஒவ்வொரு நாவலுமே கொங்குப் பிரதேசத்துக்கேயுரிய நிலம், மொழி, உழைக்கும் களம், பண்பாட்டுக் கூறுகள், நம்பிக்கைகள் ஆகிய அம்சங்களை மையமாகக் கொண்டிருப்பவை. ‘திருச்செங்கோடு’, ‘நீர்விளையாட்டு’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளிலுள்ள கதைகளும் நிலம் சார்ந்த வாழ்வையும் அதன் பாடுகளையும் முன்னிறுத்துபவை.

ஊரின் அமைப்பு, வீடுகளின் தோற்றம், மரங்கள், தாவரங்கள், வளர்ப்புப் பிராணிகள், நீர்நிலைகள், தட்பவெப்பம் என்று தாராபுரம் காங்கயம் பகுதிகளை ஒட்டிய துல்லியமான கிராமத்துச் சித்திரத்தை, அசலான மொழியில் உருவாக்குபவை என்.ஸ்ரீராமின் கதைகள். பூனை பிடிப்பவர்கள், கிடை போடுபவர்கள், பூசாரிகள், கோழித் திருடர்கள், தேர் செய்யும் ஆசாரிகள், கோயில் கட்டுபவர்கள், கோடாங்கிகள் என கிராமங்களில் காணக்கூடிய தனித்துவமான மனிதர்களை அடையாளம் காட்டுபவை. ‘மாடவீடுகளின் தனிமை’, ‘கெண்டைமீன் குளம்’, ‘வெளிவாங்கும் காலம்’, ‘மீதமிருக்கும் வாழ்வு’ ஆகியவை இவரது கதைத் தொகுப்புகள்.

ஆழ்மனத்தின் சிக்கலான திரிபுகளையும் அதிலிருந்து கிளைத்தெழும் வெளிப்பாடுகளையும் நிலம், மொழி, பண்பாட்டு அடையாளங்களின் பின்னணியில் துலக்கிக் காட்டுபவை சேலத்தைச் சேர்ந்த குணா கந்தசாமியின் கதைகள். ‘கற்றாழைப் பச்சை’ என்ற சிறுகதைத் தொகுப்பும் ‘உலகில் ஒருவன்’ நாவலும் இவரது பங்களிப்புகள்.

கோவையைச் சேர்ந்த கா.சு.வேலாயுதனின் ‘பொழுதுக்கால் மின்னல்’  கொங்கு கிராமத்தின் மனிதர்களிடையே நிகழும் உறவுச் சிக்கல்களை சாதியப் பின்னணியுடன் முன்னிறுத்தும் நாவல். ‘தாய் மணை’ இவரது சிறுகதைத் தொகுப்பு.

கொங்கு வட்டார மொழியின் தனித்துவமான அம்சமான பகடியை, குசும்பை தம் கதைமொழியில் நேர்த்தியாக கையாண்டவர் க.சீ.சிவகுமார். தாராபுரம் பகுதியின் விவசாய வாழ்வின் சிக்கல்களையும் வேலையற்ற இளைஞனின் அன்றாடங்களையும் செந்தமிழும் கொங்குத் தமிழும் கலந்த தனிப்பட்ட மொழியில் வசீகரமாகச் சொன்னவர். ‘கன்னிவாடி‘, ‘உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’, ‘குணச்சித்தர்கள்’ ஆகிய அவரது படைப்புகள் வாசிப்புச்சுவை கொண்டவை.

‘ஒணத்தியாக’ கதைசொல்பவர் என்று விஜயமங்கலத்தைச் சேர்ந்த வா.மு.கோமுவைக் குறிப்பிடலாம். கொங்கு கிராமத்தின் பாலியல் மீறல் சார்ந்த சமாச்சாரங்களை, உழைக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை பிரத்யேகமான சொல்லாடல்களுடன் அங்கதம்தொனிக்கச் சொல்பவை அவரது கதைகள். ‘மங்கலத்து தேவதைகள்’, ‘எட்றா வண்டியெ‘, ‘ரெண்டாவது டேபிளுக்குக் காரப்பொரி’, ‘கூப்பிடுவது எமனாக இருக்கலாம்’ போன்ற அவரது கதைத் தலைப்புகளே கவனத்தை ஈர்ப்பவை.

மேட்டூரைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணனின் கதைகளும் கொங்கு மொழியின் நுட்பங்களுடன் எழுதப்பட்டவை. அவரது ‘மணல்வீடு’ சிற்றிதழ் வழியாக கொங்கு மண்ணின் பொம்மலாட்டம், தோல்பாவைக்கூத்து சார்ந்த எழுத்துகளை கவனப்படுத்துபவை.

உழைப்பின் மேன்மையால் வளம் பெற்றிருக்கும் கொங்கு நாட்டின் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைப்பாடுகளை நெருக்கடிகளை சுரண்டல்களை அகச் சிக்கல்களை எழுதுபவர்களாக தேவிபாரதி, கே.என்.செந்தில் இருவரையும் குறிப்பிடலாம். ‘நொய்யல்’ கிராமத்தைச் சேர்ந்த தேவிபாரதியின் ‘நிழலின் தனிமை’ அதிகாரத்தின் வலிமையையும் அதனால் பலிகொள்ளப்படும் மனிதர்களின் யதார்த்தமான எதிர்வினைகளையும் கொங்குப் பகுதியின் சிறுநகரத்தின் பின்னணியில் சொல்லும் நாவல். ‘நடராஜ் மகராஜ்’ மாறுபட்ட கதை உத்தியுடன் நிலத்தின் வரலாற்று மாந்தர்களை அடையாளப்படுத்தும் ஒன்று. அவநாசியைச் சேர்ந்த கே.என்.செந்திலின் கதைகள் மனநெருக்கடிகளை சிடுக்கான மொழியில் தீவிரத்துடன் விவாதிப்பவை. ‘இரவுக் காட்சி’, ‘அரூபநெருப்பு’ ஆகிய இரண்டு தொகுப்புகளிலுள்ள கதைகள் வாழ்வின் சவால்களுக்கு எதிராக மனிதன் கொள்ளும் மூர்க்கமான தந்திரங்களையும் அவற்றின் கசடுகளையும் உக்கிரமாகச் சொல்பவையாக உள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களின் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளை எழுதியுள்ளார் ஆதவன் தீட்சண்யா.

கொங்கு மண்டலத்தின் பொருளாதார மையங்களாக விளங்கும் கோயமுத்தூர், திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட சிற்றூர்கள், கிராமங்கள் தமக்கான அடையாளங்களை இழக்கும் துயரைச் சொல்லும் சிறுகதைகளை எழுதியிருப்பவர் இருகூரைச் சேர்ந்த இளங்சேரல். ‘என் எச் அவிநாசி திருச்சி சாலை’, ‘தம்பான் தோது’, ‘வழுவாத பள்ளயம்’ ஆகிய தொகுப்புகளையும் ‘கருடகம்பம்’ நாவலையும் எழுதியுள்ளார்.

கொங்கு நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் தர்மபுரியைச் சேர்ந்த எழில்வரதனின் கதைகளின் களமும் மொழியும் வேறுபட்டவை. எளிமையான மொழியில் சுவையான அங்கதம் மிக்க கதைகளைக் கொண்ட தொகுப்பு ‘ரதிப்பெண்கள் திரியும் அங்காடித் தெரு’. கேரள எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் பகுதியைச் சேர்ந்த ஷாராஜின் கதைகள் அங்கதத்தொனி மிக்கவை. ‘வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு’ அவரது சிறுகதைத் தொகுப்பு.

கொங்கு மாவட்டத்தின் முக்கியமான தொழில்நகரமான திருப்பூரின் வாழ்வியல் சவால்களை பண்பாட்டு மாற்றங்களை சூழலியல் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி எழுதுபவர் சுப்ரபாரதிமணியன். ‘சாயத்திரை‘, ‘மற்றும் சிலர்’, ‘பிணங்களின் முகங்கள்’ ஆகிய நாவல்களும் ‘அப்பா’, ‘ஆழம்’, ‘மாறுதடம்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன.

கொங்கு இஸ்லாமியர்களைக் குறித்த முக்கியமான படைப்புகளை எழுதியிருப்பவர் கீரனூர் ஜாகிர்ராஜா. பிற இஸ்லாமியப் படைப்புகளிலிருந்து வேறுபட்ட கதைமொழியை உடையவவை இவரது கதைகள். ‘துருக்கித் தொப்பி’, ‘கருத்த லப்பை’, ‘மீன்குகை வாசிகள்’, ‘ஜின்னாவின் டைரி’ ஆகியவை இவரது நாவல்கள்.

கோவையைச் சேர்ந்த பிர்தௌஸ் ராஜகுமாரனின் கதைகள் கோவையில் வாழும் இஸ்லாமியரின் பண்பாட்டு சமூகச் சிக்கல்களை முதன்மைப்படுத்துபவை. ‘நகரமே ஓநாய்கள் ஊளையிடும் பாலைவனம் போல’, அவருடைய சிறுகதைத் தொகுப்பு. அ.கரீமின் ‘தாளிடப்படாத கதவுகள்’ சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளும் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றன. கோவை மதக்கலவரத்தின் பின்னணியைக் கொண்டது சம்சுதீன் ஹீராவின் ‘மௌனத்தின் சாட்சியங்கள்.’

கொங்கு மண்டலத்தின் இடதுசாரி நாவல் ஆசிரியர்களில் முதன்மையானவர் நாமக்கல்லைச் சேர்ந்த கு.சின்னப்பபாரதி. ‘தாகம்’, ‘சங்கம்’, ‘சர்க்கரை’, ‘சுரங்கம்’ ஆகிய அவரது நாவல்கள் ஒவ்வொன்றும் களப்பணியாளர்களின் நேரடி அனுபவங்களின் அடிப்படையில் அமைந்தவை. அந்தியூர் வனப்பகுதியின் மலைவாழ் மக்களின் பண்பாட்டு அம்சங்களையும் அதிகாரத்தின் ஒடுக்குமுறைக்கு அவர்கள் ஆளான அவலங்களையும் ‘சோளகர் தொட்டி’ என்ற நாவலின் மூலம் வெளிப்படுத்தினார் சா.பாலமுருகன். கொங்கு மண்டலத்தின் பண்பாட்டு பின்னணியுடன் சமூக அரசியல் சார்ந்த பார்வையை முன்வைக்கும் நாவல்களை எழுதியவர் கோவையைச் சேர்ந்த இரா.முருகவேள். கண்ணகியை ‘கொங்குச் செல்வி’ என்ற அடையாளத்துடன் முன்வைத்த ‘மிளிர்கல்’, சிறுமுகையை அடுத்திருந்த விஸ்கோஸ் தொழிற்சாலையின் பின்னணியைக் கொண்ட ‘முகிலினி’, கொங்குப் பிரதேசத்தின் ஆலைகளிலும் கிராமங்களிலும் சாதியின் பெயரால் நிகழும் வன்முறைகளைக் களமாகக் கொண்ட ‘செம்புலம்’ ஆகிய மூன்று நாவல்களும் அத்தகையவை. சேலம் ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்வியல் சிக்கல்களைக் களமாகக் கொண்ட ‘தறியுடன்’ நாவலைத் தந்திருக்கும் இரா.பாரதிநாதன் ‘வந்தேறிகள்’, ‘ஆக்காட்டி’ முதலான நாவல்களையும் எழுதியுள்ளார்.

கோவையைப் பிறப்பிடமாகக் கொண்ட திலீப்குமாரின் ‘மூங்கில் குருத்து’, ஒரு குமாஸ்தாவின் கதை’ ஆகிய இரு கதைகளே கோவையைக் களமாகக் கொண்டவை. ‘கடவு’, ‘உமாவும் ரமாவும்’ என்னும் இரண்டு தொகுப்புகளிலுள்ள கதைகள் பலவும் குஜராத்திக் குடும்பங்களின் தனிப்பட்ட பண்பாட்டு அம்சங்களையும் கதைமொழியையும் கொண்டிருப்பவை. சிங்காநல்லூரில் பிறந்த வளர்ந்தவர் சுகுமாரன். உதகைக்கு அருகிலுள்ள இராணுவத்தினருக்கான குடியிருப்பு சார்ந்த சிறுவயது நினைவுகளைக் கொண்டிருக்கும் ‘வெல்லிங்டன்’ நாவலில் கோவையில் நிகழ்ந்த தனது பால்யகால காட்சிகள் சிலவற்றை சித்திரித்துள்ளார். அவருடைய கட்டுரைகள் சிலவற்றிலும் அதன் அடையாளங்கள் உண்டு. ‘மெஹருன்னிசா’ முற்றிலும் மாறுபட்ட நாவல். முகலாய வரலாற்றின் பின்னணியில் பெண்ணின் ஆளுமையை முன்வைப்பது.

‘இந்திராகாந்தியின் இரண்டாவது முகம்’ என்ற தொகுப்புக்காக நினைவுக்கூறப்படும் ரவிச்சந்திரன் (பெங்களூர்) துள்ளலான நடைக்கும் துடிப்பான கதைமொழிக்கும் உரியவர். கோவைப்புதூரைச் சேர்ந்த சுதேசமித்திரன் வசீகரமான மொழி ஆளுமை மிக்கவர். ‘கோபுரத்தாங்கிகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் ‘காக்டெய்ல்’, ‘ஆஸ்பத்திரி’ ஆகிய நாவல்களும் அங்கதமும் கூர்மையான சமூக விமர்சனங்களையும் கொண்டவை.

மரபான எழுத்து முறைக்கு மாற்றான சிந்தனையைக் கொண்ட வகையில் புதிய எழுத்து முறையில் ‘மீண்டும் ஆதியாகி’, ‘ஆதிரை’ என்ற நாவல்களை எழுதியவர் சேலத்தைச் சேர்ந்த க.வை.பழனிச்சாமி. பின் நவீனத்துவம் குறித்த உரையாடல்கள் தீவிரமடைந்திருந்த எண்பதுகளின் இறுதியில் ‘உன்னதம்’ என்ற சிற்றிதழை வெளியிட்ட கௌதம சித்தார்த்தன் புதிய மொழியில் நவீன உத்தியில் கொங்கு மண்சார்ந்த பண்பாட்டுக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு கதைகளை எழுதியுள்ளார். ‘பச்சைக்கிளிகள்’, ‘பொம்மக்கா’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் ‘வேனிற்கால வீடு, சில குறிப்புகள்’ என்ற நாவலும் வெளிவந்துள்ளன. சேலத்தை அடுத்த மல்லூரைச் சேர்ந்த குமார நந்தன் இந்த வகையில் இயல்பான சித்தரிப்பு மொழியில் விசித்திரமான கதைவெளிகளைக் காட்டுகிறார். ‘பூமியெங்கும் பூரணியின் நிழல்’, ‘நகரப்பாடகன்’ ஆகிய இரண்டு தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் முகநூல் வழியாக கவனம் ஈர்த்திருக்கும் இருவர் சரவண கார்த்திகேயன், ஷான் கருப்புசாமி. காந்தியின் பாலியல் பரிசோதனைகள் சார்ந்து எழுதப்பட்ட ‘ஆப்பிளுக்கு முன்’ என்ற நாவலும் பழங்குடிகளின் தீவில் மாட்டிக்கொள்ளும் கர்ப்பிணியின் கதையைச் சொல்லும் ‘கன்னித்தீவு’ நாவலும் வெளிவந்துள்ளன. தவிர, ‘இறுதி இரவு’, ‘மியாவ்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் உண்டு.

பெருந்துறையைச் சேர்ந்தவர் ஷான் கருப்புசாமி. தமிழக அரசியல் சூழலின் பின்னணியைக் கொண்ட ‘வெட்டாட்டம்’, தங்கச் சுரங்கங்களின் உலகளாவிய பின்னல்களைப் பற்றிப் பேசும் ‘பொன்னி’ ஆகிய இரண்டு நாவல்கள் வெளிவந்துள்ளன.

இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருக்கும் அதே நிலைதான் கொங்கு இலக்கியம் சார்ந்தும் அமைந்துள்ளது. தர்மபுரியைச் சேர்ந்தவர் திலகவதி. ‘கல்மரம்’, ‘கைக்குள் வானம்’ உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார். சமூக நோக்கிலான பல்வேறு மோதல்களையும் பெண்கள் சார்ந்த உளச் சிக்கல்களையும் பெரிதும் முதன்மைப்படுத்துவை இவரது எழுத்துகள். கரூர் அரவக்குறிச்சியில் பிறந்த இந்திரா (ஜோதிமணி) ‘ஒற்றை வாசனை’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் ‘சித்திரக்கூடு’ என்ற நாவலையும் எழுதியுள்ளார். கோவையைச் சேர்ந்த அகிலா தன் ‘மிளகாய் மெட்டி’ சிறுகதைத் தொகுப்பில் குடும்ப அமைப்பில் உருவாகும் உறவுச் சிக்கல்களை எளிமையான மொழியில் விவரித்துள்ளார். அனுராதாவின் சொந்த ஊர் மேட்டூர். ‘காளி’ என்ற அவரது சிறுகதை குறிப்பிடத்தக்கது. ‘மணற்பொதிகள்’, ‘காளி’ என்ற இரண்டு தொகுப்புகள் வெளியாகியுள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெண்களின் வாழ்வை மையமாகக்கொண்ட நாவலான ‘இருள் தின்னும் இரவுகள்’ நாவலை எழுதியுள்ளார் கனகதூரிகா. ‘கால்புழுதி’ அவரது இன்னொரு நாவல்.

புனைவுகள் அல்லாது தம் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளின் வழியாக முக்கியமான பங்களிப்பைத் தந்திருக்கும் கொங்குப் படைப்பாளிகள் என கோவை ஞானி, எஸ்.என்.நாகராஜன், சிற்பி, புவியரசு, இரா.குப்புசாமி, முருகுசுந்தரம், தமிழ்நாடன், பிரம்மராஜன், ஆர்.சிவகுமார், கால சுப்ரமணியன், டாக்டர் ஜீவானந்தம், பாமரன், நிர்மால்யா, வா.மணிகண்டன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

1980களில் வணிகப் பத்திரிக்கைகளில் தொடர்கதைகள், மாத நாவல்கள் என்று அனைத்திலும் தொடர்ந்து ‘க்ரைம்’ கதைகளை எழுதி பெரும் வாசக ஆதரவைப் பெற்றவர் ராஜேஷ்குமார்.

நாஞ்சில்நாடன், சு.வேணுகோபால், பா.வெங்கடேசன் ஆகியோரின் பிறப்பிடம் கொங்கு வட்டாரம் அல்லாதபோதும் அவர்கள் நீண்ட காலமாய் இந்த மண்ணில் இருந்தே எழுதுகிறார்கள், கொங்கு மண்ணுக்குப் பெருமை சேர்க்கிறார்கள்.

தொழில் வளம் மிகுந்த கொங்கு நாட்டில் புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் கொண்டாடி மகிழும் ‘விஜயா பதிப்பகம்’ வேலாயுதம் கொங்கு பிரதேசத்துக்குப் பெருமை சேர்ப்பதில் முக்கியமானவர்.

எழுத்தையும் எழுத்தாளர்களையும் கொண்டாடும் கொங்கு மண்டலத்தின் மொழியிலும் வாழ்விலும் இன்று பல்வேறு மாற்றங்கள் உருவாகிவிட்டபோதிலும் அதன் பண்பாட்டு அடையாளங்களையும் வாழ்வியல் கூறுகளையும் அந்த மண்ணிலிருந்து முளைத்திருக்கும் படைப்பாளிகள் தொடர்ந்து தம் படைப்புகளின் வழியாக நிலைநிறுத்தியிருக்கின்றனர்.


‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...