Sunday 18 October 2020

தென்னை மரத்தில் ஏறுதல்…

 ( ‘ஆவநாழி’ அக்டோபர் 2020 மென்னிதழில் வெளியானது- ஓவியம் நண்பர் சுந்தரன்  முருகேசன், ஈரோடு)


‘அவ்வளவு முக்கியமான வேலை இல்லை’ என்ற எண்ணத்துடன் செய்யத் தொடங்கும் சில காரியங்கள் நம்மை எதிர்பாராத சில இடங்களுக்குக் கொண்டுபோய் நிறுத்திவிடக்கூடும். அந்திமழை இதழுக்காக கொங்கு புனைவெழுத்தாளர்களைக் குறித்த கட்டுரை ஒன்றை எழுதும்படி ‘அந்திமழை’ அசோகன் கேட்டுக்கொண்டதை அடுத்து பட்டியல் ஒன்றை தயாரிக்க நேர்ந்தது. யாரைச் சேர்ப்பது யாரை விடுப்பது என்று மிகக் கவனமாக கையாளவேண்டிய காரியம் இது என்பதால் நண்பர்கள் சிலரிடம் ஆலோசனைகளைப் பெற்றேன். அதுபற்றி பேசிக்கொண்டிருந்தபோது கவிஞர் சுகுமாரன் ‘புனர்ஜென்மம்’ என்ற நாவலைக் குறித்துச் சொன்னார். நாவலின் பிரதி கையில் கிடைத்தவுடன் அதில் ஒரு ஆச்சரியம். டிசம்பர் 1987ல் கோவை சமுதாயம் பிரசுராலயம் பதிப்பித்த அந்த நாவலுக்கு க.நா.சு மதிப்புரை எழுதியிருக்கிறார்.

“சற்றே கனமான விஷயம்தான் – இந்த நாவலின் விஷயம். பார்ப்பனப் பையன் முன்னோர்கள் செய்த அதிகாரபூர்வமான பாவங்களினால் அவனுடைய இன்றைய முன்னேற்றம் தடைபடுகிறது. இண்டர்மீடியட்டில் நல்ல மார்க்குகள் வாங்கித் தேறியும் மெடிக்கல் காலேஜில் இடம் கிடைக்கவில்லை – பார்ப்பனப் பையன் என்பதனால். பி.ஏ படித்துத் தேறியும் வேலை கிடைக்கவில்லை – பார்ப்பனப் பையன் என்பதனால். மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்திய முன்னோர்கள் செய்த பாவம்சுமை இந்த ஜென்மத்தில தன்னை அழுத்தி எழுந்திருக்கவிடாமல் செய்கிறது என்கிற எண்ணம் பையனை ஆட்கொள்கிறது. தான் பிராயச்சித்தம் செய்யவேண்டும், தன் முன்னோர்கள் செய்த பாவங்களுக்கு என்கிற ஒரு ஏசு-செருக்கு (Jesus complex) ஏற்படுகிறது. இதில மனோதத்துவ ரீதியில் ஒருவித தவறும் இல்லை.

பையன் பூணூலை ஒரு சடங்குடன் நதி, சூரியன் சாட்சியாக அறுத்தெறிகிறான். பூணூல் போடாத மகன் என்று தாயார் எள்ளி நகையாடுகிறாள். தகப்பனார் உணர்ச்சிவசப்படாதவர் – இதனாலெல்லாம் சமுதாயம் மாறிவிடாது என்று வாதம் செய்கிறார். அது தெரிகிறது பையனுக்கு – அதனால் அவரின் சுமை குறைகிறது.

இந்த மாதிரி நாவல்களில் ஒரு பயணம் மரபாக வருவதுதான். அதே மாதிரயே பையன் பயணத்தை மேற்கொள்கிறாள். வீட்டைவிட்டுக் கிளம்பி ஒரு கிராமத்தில் சக்கிலியனாக வேலை செய்து சக்கிலியனாகவே வாழ்ந்து சக்கிலியத் தகப்பனுக்கும் தாய்க்கும் உகந்தவனாகிறான்.

இரண்டாவது பயணமும் அவசியமாகிறது. நகரசுத்தி தோட்டியாக வாழ்ந்து தன் முன்னோர்கள் பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்வது அவன் லட்சியம். தோட்டியாகிறான். லச்சி என்கிற தோட்டிப் பெண்ணைக் காதலித்து மணந்து கொள்கிறான். அவனிடம் ஒரு ஆன்மீக – தெய்வீக சக்தி இருக்கிறது என்று முதலில் மனைவியும் பின்னர் மற்றவர்களும் கண்டுகொள்கிறார்கள்.

இதெல்லாம் நடக்கக்கூடிய காரியங்களா? இன்று நம் வாழ்வில் நடக்கிறதா என்று அவநம்பிக்கை ஏற்படலாம்தான். ஆனால் நடந்தால் இப்படித்தான் நடக்கும் என்று சொல்லக்கூடிய வகையில் ஆசிரியர் நாவலை அமைத்துச் சம்பவங்களையும் கதாபாத்திரங்களையும் சிருஷ்டித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

நாவல் படிப்பதற்கு சுவாரசியமாகவே இருக்கிறது. சிந்திப்பதற்கும் நிறையவே விஷயங்கள் இருக்கின்றன” என்று மதிப்புரையில் க.நா.சு குறிப்பிடுகிறார்.

‘புனர்ஜென்மம்’ நாவலை வாசித்தபோது இதன் களமும் கதையும் மிகுந்த வியப்பைத் தந்தது. ஒரு பிராமண இளைஞன் சேரியில் நகரசுத்தி செய்யும் தோட்டியாக வாழ்ந்து பிராயசித்தம் தேடுவதாக அமைந்துள்ள கதைக்களம் உள்ளபடியே அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். க.நா.சு மதிப்புரை எழுதியிருக்கும் இந்த நாவலைக் குறித்து வேறு பதிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இதன் ஆங்கில வடிவமான ‘The Light from Heaven’ 1990ல் பெங்குவின் வெளியீடாக வந்துள்ளது. கன்னடத்திலிருந்தும் மராத்தியிலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளின் வழியாக தலித்தியம் குறித்த உரையாடல்கள் தமிழில் தொடங்கிய அதே காலகட்டத்தில்தான் இந்த நாவலும் எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த நாவலைக் குறித்த எந்தச் சலனமும் தமிழ்ச் சூழலில் இல்லாமல் போனது வியப்புக்குரியதுதான்.

இதை எழுதியவர் தமிழ்ச் சூழலில் எழுத்தாளராக அறியப்படாத ஒருவர் என்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம். இப்படியொரு கதைக்களத்தைக்கொண்டு நாவலை எழுதியவர் வேறு படைப்புகளை எழுதவில்லையா என்ற கேள்வி எழுந்ததைத் தொடர்ந்து தேடியதில் இன்னும் சில ஆச்சரியங்கள் காத்திருந்தன.  

இவரது முதல் நாவல் ‘அன்பே நம் ஆயுதம்’ 1947ல் வெளிவந்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியைக் கொண்ட இந்த நாவலை கோவை கஸ்தூரி அச்சகம் வெளியிட்டுள்ளது.  

தமிழில் அவர் எழுதி பதிப்பிக்கப்படாத இன்னொரு நாவல் ‘நீலமலை வெள்ளையர்கள்’ கைப்பிரதியாகவே நின்றுவிட்டது. ஒரு எதிர்கால நாவல் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த நாவலின் காலம் கி.பி.2185. அணுயுகத்துக்குப் பின்பு உலக நாடுகள் கிழக்கு, மேற்கு என இரண்டு பகுதிகளாகப் பிரிந்துவிடுகின்றன. விஞ்ஞான அறிவைக் கொண்டு செயற்கையாக குழந்தைகள் உருவாக்கப்படுகின்றன. மொத்த அறிவையும் PUP எனப்படும் Philosophy of Universal Pragmatism என்ற தத்துவத்தில் அடக்கிவிடுகிறார்கள். கிழக்குப் பகுதியில் நீலமலையில் மட்டும் பழங்கால ஆங்கிலேயர்கள் வசிக்கும் சிறிய பகுதி உள்ளது. இவர்கள் இன்னும் பழைய முறைப்படி இயற்கை சார்ந்து வாழ்பவர்கள். இவர்களது வாழ்வைப் பற்றி ஆராய வரும் மேற்குலக பிரஜை சந்திக்க நேரும் பிரச்சினைகள்தான் இந்த நாவல். நடைமுறை சார்ந்த பல உலகளாவிய பிரச்சினைகளையும் விவாதிக்கும் இந்த நாவலின் ஆங்கில வடிவமான ‘Angrezis in Blue Mountains’ பதிப்பிக்கப்படவில்லை. 1994ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நாவல் தமிழின் முதல் அறிவியல் புனைவு நாவலாக இருக்கக்கூடும்.

‘அன்பே நம் ஆயுதம்’, ‘நீலமலையில் வெள்ளையர்கள்’, ‘புனர்ஜென்மம்’ ஆகிய மூன்று தமிழ் நாவல்களைத் தவிர ‘தேவதாசி’, ‘A Handful of Earth’ ஆகிய இரண்டு ஆங்கில நாவல்களையும் எழுதியுள்ளார். ‘புனர்ஜென்மம்’ ‘The Light from Heaven’ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. 

1976ல் சென்னை கிறித்துவ இலக்கியச் சங்கம் வெளியிட்ட ‘தேவதாசி’ நாவல் அவரது கிராமத்தில் வாழ்ந்த நாகா எனும் தேவதாசி மரபைச் சேர்ந்த பெண் ஒருத்தியின் வாழ்வை  அடிப்படையாகக் கொண்டது.

‘Remembrance of Things Lost‘ ஆங்கில நாவல் இரண்டு பாகங்களைக் கொண்டது. சிறையிலிருந்து ஒலிக்கும் ஒரு கைதியின் குரலாக எழுதப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தையும் மனோநிலையையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது இந்த நாவல் பிரசுரம் பெறவில்லை.

‘A Handful of Earth’ நாவலை சென்னை கிறித்துவ இலக்கியச் சங்கம் 1974ல் வெளியிட்டுள்ளது. சிறுமுடி என்ற கிராமத்தைக் களமாகக் கொண்டது இந்த நாவல். கிராம மக்களின் ஏழ்மை நிலையையும் சாதி சார்ந்த ஒடுக்குமுறைகளையும் பின்னணியாகக் கொண்டுள்ளது. 1973ம் ஆண்டு கிறித்துவ இலக்கியச் சங்கத்தினால் பதிப்பிக்கப்பட்ட இந்த நாவல் மத நம்பிக்கைகளையும் மரபின் வேர்களையும் கேள்விக்கு உட்படுத்துகிறது. இந்த நாவல் ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் இருபத்திமூன்று சிறுகதைகளை எழுதி அவற்றை ‘A Measure of Culture’ என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாகத் தொகுத்திருந்தபோதிலும் பதிப்பிக்கப்படவில்லை. இவற்றில் பல கதைகள் ‘தி இந்து’ உட்பட பல்வேறு இதழ்களில் பிரசுரிக்கப்பட்டன என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் பிரசுர விபரங்கள் கிடைக்கவில்லை. சில கதைகளை BBC World Service ஒலிபரப்பியுள்ளது.

‘I Am a Stranger Here’ என்ற கவிதைத் தொகுப்பை 1990ம் ஆண்டில் கல்கத்தாவைச் சேர்ந்த Writers Workshop வெளியிட்டுள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். 1969ம் ஆண்டு பாரதிய வித்யா பவனும் கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையும் சேர்ந்து இதனை வெளியிட்டுள்ளனர். கம்பராமாயணத்தின் சுந்தர காண்டத்தை ‘Canto Beautiful’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அதனை 1984ல் கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை பதிப்பித்துள்ளது. சிலப்பதிகாரத்தை ‘The Anklet’ என்ற பெயரில் நாடகமாக எழுதியுள்ளார். 1982ல் பம்பாய் பாரதிய வித்யா பவன் பதிப்பித்துள்ளது.

கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு என அனைத்துத் துறைகளிலும் தன் பங்களிப்பைத் தந்திருக்கும் இவர் தனது துறைசார்ந்த நூல்கள் பலவற்றையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். பலவும் பதிப்பிக்கப்படாமல் கைப்பிரதியாகவே நின்றுபோயுள்ளன.

இத்தனை நூல்களை எழுதியிருந்தும் இவற்றின் ஆசிரியரான கஸ்தூரி சீனிவாசன் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ ஒரு எழுத்தாளராக அவர் அறியப்படவில்லை என்பது விந்தைதான். காரணம் அவர் தனது தொழில்சார்ந்த பணிகளுக்கு நடுவே கிடைத்த சொற்ப நேரத்தில் மட்டுமே எழுத நேர்ந்தது. வாசிப்பும் எழுத்தும் அவருக்கு மிகப் பிடித்தமானதாக இருந்தபோதிலும் தனது தொழில் துறை சார்ந்து அவர் செய்யவேண்டிய காரியங்கள் ஏராளமாக இருந்தன. கோயமுத்தூரின் பஞ்சாலைகளின் வளர்ச்சியிக்கும் இந்திய அளவில் பஞ்சாலைத் தொழிலின் முன்னேற்றத்துக்கும் பாடுபட்டிருக்கும் முதன்மையானவர்களில் கஸ்தூரி சீனிவாசனின் பெயரும் ஒன்று. பஞ்சாலைத் தொழிலுக்கு அவரது பங்களிப்பைப் பாராட்டி 1969ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கௌரவித்தது.  தென்னிந்தியாவில் நூற்பாலைகளுக்கான ஆராய்ச்சிக் கழகத்தை (South Indian Textile Research Association – SITRA ) 1951ம் ஆண்டு கோவையில் நிறுவியது அவரது முக்கியமான சாதனை. 1974ம் ஆண்டு இந்தியாவெங்கிலும் இருந்த 103 நூற்பாலைகளை ஒன்றிணைத்து National Textile Corporation உருவாக்கியபோது அதன் தலைவராகப் பொறுப்பேற்று நஷ்டத்தில் இயங்கி வந்த ஆலைகளை மேம்படுத்தி லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றிக் காட்டினார்.

கோவையை அடுத்த கரடிவாவியில் பிறந்த கஸ்தூரி சீனிவாசன் பட்ட மேற்படிப்பை மான்செஸ்டரில் முடித்தார். இங்கிலாந்தில் தான் கற்றுணர்ந்த தொழில்நுட்பங்களையும் ஆராய்ச்சி நோக்கினையும் கோவையைச் சேர்ந்த நூற்பாலைகளும் இந்திய அளவில் இயங்கிய பல நூறு நூற்பாலைகளும் பயன்பெறும் வகையில் உபயோகித்தார். அதே நேரத்தில் அங்கு வாசிப்பிலும் எழுத்திலும் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு எழுதவும் செய்தார். சீனிவாசனின் மனைவி பார்பரா ஒரு ஓவியர். இங்கிலாந்தைச் சேர்ந்தவர். நீர்வண்ண ஓவியங்களை விரும்பி வரைபவர். அவரது தூண்டுதலின் காரணமாக அமைந்ததே ஜவுளித் துறை சார்ந்த ஒரு கண்காட்சி கூடத்தையும், ஓவியக் கூடத்தையும் நாடக அரங்கையும் ஒருங்கே கொண்ட கஸ்தூரி சீனிவாசன் கலை ஓவியக் கூடம். அவரது கனவுத் திட்டங்களில் ஒன்று. கோவை அவிநாசி சாலையில் அமைந்திருக்கும் இந்தக் கூடம் மாதந்தோறும் ஓவியக் கண்காட்சிகளையும் தொடர்ந்து ஓவியப் பட்டறைகளையும் நடத்தி வருகிறது.

தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதிய கஸ்தூரி சீனிவாசன் தனது அறக்கட்டளையில் சார்பில் தன்னுடைய அன்னை திருமதி ரங்கம்மாள் அவர்களின் பெயரில் நாவல்களுக்கான விருதொன்றையும் நிறுவினார். தமிழில் வெளியாகும் சிறந்த நாவல் ஒன்றுக்கு (இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை) அந்த விருது வழங்கப்படுகிறது.

‘Climbing the Coconut Tree’ என்பது அவரது முற்றுப்பெறாத சுயசரிதை. அந்த நூலின் தலைப்பின் பின்னால் உள்ள கதை சுவாரஸ்யமானது. கரடிவாவியில் ஐந்தாம் வகுப்பு வரையிலும் ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தொடர்ந்து படிப்பதற்காக கோவை வெரைட்டி ஹால் சாலையில் இருந்த முனிசிபல் பள்ளிக்கு வந்து சேர்கிறார். அவருடைய வகுப்பு ஆசிரியரான பத்மநாப ஐயர் வகுப்பில் ஒரு நாள் சொல்கிறார் “தென்னை மரத்தில் ஏறுபவனுக்கு எத்தனை உயரத்துக்கு நாம் உதவமுடியும்? நம்முடைய கை எட்டும் வரைக்கும்தான் நாம் தூக்கிவிடலாம். அதற்குப் பிறகு அவனேதான் முயன்று உச்சியை அடையவேண்டும்.”

‘பெட்ரண்ட் ரஸ்ஸலைப்போல, வாழ்க்கையில் எனக்குள்ள முக்கியமான ஆர்வங்கள் மூன்று. அன்புக்கான ஏக்கம், அறிவுக்காக தாகம், மானுத் துயர் மீதான வருத்தம்’ அவருடைய சுயசரிதையில் உள்ள இந்த வாக்கியமே கஸ்தூரி சீனிவாசனின் மொத்த வாழ்வையும் சுட்டுவதாக அமைந்துள்ளது.

 

0

 

 

 

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...