Thursday 1 October 2020

கொங்கு மண்ணின் கதைசொல்லிகள்

( அந்திமழை மாத இதழில், செப் 2020 வெளியான கட்டுரை )

‘நீரெலாம் சேற்று நாற்றம், நிலமெலாம் கல்லும் முள்ளும், ஊரெலாம் பட்டிதொட்டி, உண்பதோ கம்மஞ்சோறு’ என்ற அடையாளங்களைக்கொண்ட ‘காருலாவும் கொங்கு நாடு’ உழைப்புக்குப் பெயர்பெற்றது. கிராமங்களையும் விவசாயத்தையும் சார்ந்திருந்த அதன் இலக்கியமும் மண்ணிலிருந்தே முளைத்தெழுந்தது. அந்த மக்களின் அன்றாடப் புழங்குமொழியிலேயே எழுதப்பட்டது.

கொங்கு நிலத்துக்கான நாட்டார் கதைப்பாடல் ‘அண்ணன்மார் கதை’. இது ‘குன்னுடையான் கதை’ என்றும் ‘பொன்னர் சங்கர்’ வரலாறு என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கதைப் பாடலைத் தொகுத்து நூலாக்கியவர் சக்திகனல்.

தீண்டாமை, கள்ளுண்ணாமை போன்ற சமூக நோக்கிலான சிறுகதைகளை எழுதிய ராஜாஜி கொங்கு மண்ணின் மூத்தப் படைப்பாளிகளில் ஒருவர். கோவையை அடுத்த கரடிவாவி கிராமத்தில் பிறந்தவரும் கோவையின் தொழில் அதிபருமான கஸ்தூரி சீனிவாசன் எழுதிய 1987ம் ஆண்டில் எழுதிய ‘புனர்ஜென்மம்’ நாவல் குறிப்பிடத்தக்க ஒன்று. ‘அன்பெனும் ஆயுதம்’ எனும் தமிழ் நாவலைத் தவிர மூன்று ஆங்கில நாவல்களையும் அவர் எழுதியுள்ளார். ‘நாகம்மாள்’ என்ற நாவலின் வழியாக கொங்கு வட்டார இலக்கியத்துக்கான தொடக்கத்தைத் தந்தவர் ஆர்.சண்முகசுந்தரம். காங்கயம் அருகிலுள்ள கீரனூரைச் சேர்ந்தவர். 1940ல் எழுதப்பட்ட அந்த நாவல் இந்திய அளவில் முதல் வட்டார வழக்கு நாவலாகவும் முதல் யதார்த்தவாத நாவலாகவும் குறிப்பிடப்படுகிறது. ‘காணாச்சுனை‘, ‘சட்டி சுட்டது’, ‘பூவும் பிஞ்சும்’ ஆகிய பிற நாவல்களும் கொங்கு விவசாய வாழ்வின் அடையாளங்களைக் கொண்டிருந்தன. ரத்னகிரி குன்றை உடைத்து கற்களாக மாற்றும் மக்களின் வாழ்வைச் சித்தரிக்கும் ‘கல்லும் மண்ணும்’ நாவலை எழுதிய க.ரத்னம் கீரணத்தத்தில் பிறந்தவர். தனிப்பட்ட ஆர்வத்தில் பலநாட்கள் தேடி நேரடியாகப் பார்த்து சேகரித்த விபரங்களைக் கொண்டு அவர் எழுதிய ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ என்ற நூல் பறவைகளைப் பற்றி தமிழில் வெளிவந்த முதல் புத்தகம். எட்கர் தர்ஸ்டன் எழுதிய ஏழு தொகுதிகளைக் கொண்ட ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ என்ற மொழிபெயர்ப்பு நூல் அவரது சாதனைகளில் ஒன்று. இரா.வடிவேலனார் எழுதிய ‘தொட்டிகட்டுவீடு’ கொங்குப் பிரதேசத்தின் பண்பாட்டுக் கூறுகளைக்கொண்டது.

இவர்களின் தொடர்ச்சியாக, கிராமிய வாழ்வில் மனித உறவுகளுக்குள் ஏற்படும் முறிவுகளை சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் ‘ஈரம் கசிந்த நிலம்’. பேரூரைச் சேர்ந்த சி.ஆர்.ரவீந்திரன் கொங்குப் பிரதேசத்தின் சிறப்பான வட்டார மொழியை இந்த நாவலில் கையாண்டிருந்தார். சூரியகாந்தனின் ‘மானாவாரி மனிதர்கள்’ நாவலும் கொங்கு வட்டாரத்தின் தனித்துவமிக்க மொழியை கவனிக்கச் செய்த ஒன்று.

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த பாதசாரியின் ‘மீனுக்குள் கடல்’ தொகுப்பும் ‘காசி’ என்ற அவரது சிறுகதையும் தமிழ் இலக்கியச் சூழலில் புகழ்பெற்றது. ஒசூரில் பிறந்த விட்டல்ராவ் டேனிஷ்பேட்டையை களமாகக் கொண்டு எழுதிய ‘போக்கிடம்’ நாவலை எழுதினார். தவிர, ‘காலவெளி’, ‘காம்ரேடுகள்’, ‘நிலநடுக்கோடு’ ஆகியவை அவரது முக்கிய நாவல்கள்.

பெருமாள்முருகனின் ‘ஏறுவெயில்’, ‘நிழல்முற்றம்’, ‘மாதொருபாகன்’, ‘கங்கணம்’, ‘கூளமாதாரி’, ‘பூக்குழி’ என ஒவ்வொரு நாவலுமே கொங்குப் பிரதேசத்துக்கேயுரிய நிலம், மொழி, உழைக்கும் களம், பண்பாட்டுக் கூறுகள், நம்பிக்கைகள் ஆகிய அம்சங்களை மையமாகக் கொண்டிருப்பவை. ‘திருச்செங்கோடு’, ‘நீர்விளையாட்டு’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளிலுள்ள கதைகளும் நிலம் சார்ந்த வாழ்வையும் அதன் பாடுகளையும் முன்னிறுத்துபவை.

ஊரின் அமைப்பு, வீடுகளின் தோற்றம், மரங்கள், தாவரங்கள், வளர்ப்புப் பிராணிகள், நீர்நிலைகள், தட்பவெப்பம் என்று தாராபுரம் காங்கயம் பகுதிகளை ஒட்டிய துல்லியமான கிராமத்துச் சித்திரத்தை, அசலான மொழியில் உருவாக்குபவை என்.ஸ்ரீராமின் கதைகள். பூனை பிடிப்பவர்கள், கிடை போடுபவர்கள், பூசாரிகள், கோழித் திருடர்கள், தேர் செய்யும் ஆசாரிகள், கோயில் கட்டுபவர்கள், கோடாங்கிகள் என கிராமங்களில் காணக்கூடிய தனித்துவமான மனிதர்களை அடையாளம் காட்டுபவை. ‘மாடவீடுகளின் தனிமை’, ‘கெண்டைமீன் குளம்’, ‘வெளிவாங்கும் காலம்’, ‘மீதமிருக்கும் வாழ்வு’ ஆகியவை இவரது கதைத் தொகுப்புகள்.

ஆழ்மனத்தின் சிக்கலான திரிபுகளையும் அதிலிருந்து கிளைத்தெழும் வெளிப்பாடுகளையும் நிலம், மொழி, பண்பாட்டு அடையாளங்களின் பின்னணியில் துலக்கிக் காட்டுபவை சேலத்தைச் சேர்ந்த குணா கந்தசாமியின் கதைகள். ‘கற்றாழைப் பச்சை’ என்ற சிறுகதைத் தொகுப்பும் ‘உலகில் ஒருவன்’ நாவலும் இவரது பங்களிப்புகள்.

கோவையைச் சேர்ந்த கா.சு.வேலாயுதனின் ‘பொழுதுக்கால் மின்னல்’  கொங்கு கிராமத்தின் மனிதர்களிடையே நிகழும் உறவுச் சிக்கல்களை சாதியப் பின்னணியுடன் முன்னிறுத்தும் நாவல். ‘தாய் மணை’ இவரது சிறுகதைத் தொகுப்பு.

கொங்கு வட்டார மொழியின் தனித்துவமான அம்சமான பகடியை, குசும்பை தம் கதைமொழியில் நேர்த்தியாக கையாண்டவர் க.சீ.சிவகுமார். தாராபுரம் பகுதியின் விவசாய வாழ்வின் சிக்கல்களையும் வேலையற்ற இளைஞனின் அன்றாடங்களையும் செந்தமிழும் கொங்குத் தமிழும் கலந்த தனிப்பட்ட மொழியில் வசீகரமாகச் சொன்னவர். ‘கன்னிவாடி‘, ‘உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’, ‘குணச்சித்தர்கள்’ ஆகிய அவரது படைப்புகள் வாசிப்புச்சுவை கொண்டவை.

‘ஒணத்தியாக’ கதைசொல்பவர் என்று விஜயமங்கலத்தைச் சேர்ந்த வா.மு.கோமுவைக் குறிப்பிடலாம். கொங்கு கிராமத்தின் பாலியல் மீறல் சார்ந்த சமாச்சாரங்களை, உழைக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை பிரத்யேகமான சொல்லாடல்களுடன் அங்கதம்தொனிக்கச் சொல்பவை அவரது கதைகள். ‘மங்கலத்து தேவதைகள்’, ‘எட்றா வண்டியெ‘, ‘ரெண்டாவது டேபிளுக்குக் காரப்பொரி’, ‘கூப்பிடுவது எமனாக இருக்கலாம்’ போன்ற அவரது கதைத் தலைப்புகளே கவனத்தை ஈர்ப்பவை.

மேட்டூரைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணனின் கதைகளும் கொங்கு மொழியின் நுட்பங்களுடன் எழுதப்பட்டவை. அவரது ‘மணல்வீடு’ சிற்றிதழ் வழியாக கொங்கு மண்ணின் பொம்மலாட்டம், தோல்பாவைக்கூத்து சார்ந்த எழுத்துகளை கவனப்படுத்துபவை.

உழைப்பின் மேன்மையால் வளம் பெற்றிருக்கும் கொங்கு நாட்டின் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைப்பாடுகளை நெருக்கடிகளை சுரண்டல்களை அகச் சிக்கல்களை எழுதுபவர்களாக தேவிபாரதி, கே.என்.செந்தில் இருவரையும் குறிப்பிடலாம். ‘நொய்யல்’ கிராமத்தைச் சேர்ந்த தேவிபாரதியின் ‘நிழலின் தனிமை’ அதிகாரத்தின் வலிமையையும் அதனால் பலிகொள்ளப்படும் மனிதர்களின் யதார்த்தமான எதிர்வினைகளையும் கொங்குப் பகுதியின் சிறுநகரத்தின் பின்னணியில் சொல்லும் நாவல். ‘நடராஜ் மகராஜ்’ மாறுபட்ட கதை உத்தியுடன் நிலத்தின் வரலாற்று மாந்தர்களை அடையாளப்படுத்தும் ஒன்று. அவநாசியைச் சேர்ந்த கே.என்.செந்திலின் கதைகள் மனநெருக்கடிகளை சிடுக்கான மொழியில் தீவிரத்துடன் விவாதிப்பவை. ‘இரவுக் காட்சி’, ‘அரூபநெருப்பு’ ஆகிய இரண்டு தொகுப்புகளிலுள்ள கதைகள் வாழ்வின் சவால்களுக்கு எதிராக மனிதன் கொள்ளும் மூர்க்கமான தந்திரங்களையும் அவற்றின் கசடுகளையும் உக்கிரமாகச் சொல்பவையாக உள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களின் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளை எழுதியுள்ளார் ஆதவன் தீட்சண்யா.

கொங்கு மண்டலத்தின் பொருளாதார மையங்களாக விளங்கும் கோயமுத்தூர், திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட சிற்றூர்கள், கிராமங்கள் தமக்கான அடையாளங்களை இழக்கும் துயரைச் சொல்லும் சிறுகதைகளை எழுதியிருப்பவர் இருகூரைச் சேர்ந்த இளங்சேரல். ‘என் எச் அவிநாசி திருச்சி சாலை’, ‘தம்பான் தோது’, ‘வழுவாத பள்ளயம்’ ஆகிய தொகுப்புகளையும் ‘கருடகம்பம்’ நாவலையும் எழுதியுள்ளார்.

கொங்கு நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் தர்மபுரியைச் சேர்ந்த எழில்வரதனின் கதைகளின் களமும் மொழியும் வேறுபட்டவை. எளிமையான மொழியில் சுவையான அங்கதம் மிக்க கதைகளைக் கொண்ட தொகுப்பு ‘ரதிப்பெண்கள் திரியும் அங்காடித் தெரு’. கேரள எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் பகுதியைச் சேர்ந்த ஷாராஜின் கதைகள் அங்கதத்தொனி மிக்கவை. ‘வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு’ அவரது சிறுகதைத் தொகுப்பு.

கொங்கு மாவட்டத்தின் முக்கியமான தொழில்நகரமான திருப்பூரின் வாழ்வியல் சவால்களை பண்பாட்டு மாற்றங்களை சூழலியல் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி எழுதுபவர் சுப்ரபாரதிமணியன். ‘சாயத்திரை‘, ‘மற்றும் சிலர்’, ‘பிணங்களின் முகங்கள்’ ஆகிய நாவல்களும் ‘அப்பா’, ‘ஆழம்’, ‘மாறுதடம்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன.

கொங்கு இஸ்லாமியர்களைக் குறித்த முக்கியமான படைப்புகளை எழுதியிருப்பவர் கீரனூர் ஜாகிர்ராஜா. பிற இஸ்லாமியப் படைப்புகளிலிருந்து வேறுபட்ட கதைமொழியை உடையவவை இவரது கதைகள். ‘துருக்கித் தொப்பி’, ‘கருத்த லப்பை’, ‘மீன்குகை வாசிகள்’, ‘ஜின்னாவின் டைரி’ ஆகியவை இவரது நாவல்கள்.

கோவையைச் சேர்ந்த பிர்தௌஸ் ராஜகுமாரனின் கதைகள் கோவையில் வாழும் இஸ்லாமியரின் பண்பாட்டு சமூகச் சிக்கல்களை முதன்மைப்படுத்துபவை. ‘நகரமே ஓநாய்கள் ஊளையிடும் பாலைவனம் போல’, அவருடைய சிறுகதைத் தொகுப்பு. அ.கரீமின் ‘தாளிடப்படாத கதவுகள்’ சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளும் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றன. கோவை மதக்கலவரத்தின் பின்னணியைக் கொண்டது சம்சுதீன் ஹீராவின் ‘மௌனத்தின் சாட்சியங்கள்.’

கொங்கு மண்டலத்தின் இடதுசாரி நாவல் ஆசிரியர்களில் முதன்மையானவர் நாமக்கல்லைச் சேர்ந்த கு.சின்னப்பபாரதி. ‘தாகம்’, ‘சங்கம்’, ‘சர்க்கரை’, ‘சுரங்கம்’ ஆகிய அவரது நாவல்கள் ஒவ்வொன்றும் களப்பணியாளர்களின் நேரடி அனுபவங்களின் அடிப்படையில் அமைந்தவை. அந்தியூர் வனப்பகுதியின் மலைவாழ் மக்களின் பண்பாட்டு அம்சங்களையும் அதிகாரத்தின் ஒடுக்குமுறைக்கு அவர்கள் ஆளான அவலங்களையும் ‘சோளகர் தொட்டி’ என்ற நாவலின் மூலம் வெளிப்படுத்தினார் சா.பாலமுருகன். கொங்கு மண்டலத்தின் பண்பாட்டு பின்னணியுடன் சமூக அரசியல் சார்ந்த பார்வையை முன்வைக்கும் நாவல்களை எழுதியவர் கோவையைச் சேர்ந்த இரா.முருகவேள். கண்ணகியை ‘கொங்குச் செல்வி’ என்ற அடையாளத்துடன் முன்வைத்த ‘மிளிர்கல்’, சிறுமுகையை அடுத்திருந்த விஸ்கோஸ் தொழிற்சாலையின் பின்னணியைக் கொண்ட ‘முகிலினி’, கொங்குப் பிரதேசத்தின் ஆலைகளிலும் கிராமங்களிலும் சாதியின் பெயரால் நிகழும் வன்முறைகளைக் களமாகக் கொண்ட ‘செம்புலம்’ ஆகிய மூன்று நாவல்களும் அத்தகையவை. சேலம் ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்வியல் சிக்கல்களைக் களமாகக் கொண்ட ‘தறியுடன்’ நாவலைத் தந்திருக்கும் இரா.பாரதிநாதன் ‘வந்தேறிகள்’, ‘ஆக்காட்டி’ முதலான நாவல்களையும் எழுதியுள்ளார்.

கோவையைப் பிறப்பிடமாகக் கொண்ட திலீப்குமாரின் ‘மூங்கில் குருத்து’, ஒரு குமாஸ்தாவின் கதை’ ஆகிய இரு கதைகளே கோவையைக் களமாகக் கொண்டவை. ‘கடவு’, ‘உமாவும் ரமாவும்’ என்னும் இரண்டு தொகுப்புகளிலுள்ள கதைகள் பலவும் குஜராத்திக் குடும்பங்களின் தனிப்பட்ட பண்பாட்டு அம்சங்களையும் கதைமொழியையும் கொண்டிருப்பவை. சிங்காநல்லூரில் பிறந்த வளர்ந்தவர் சுகுமாரன். உதகைக்கு அருகிலுள்ள இராணுவத்தினருக்கான குடியிருப்பு சார்ந்த சிறுவயது நினைவுகளைக் கொண்டிருக்கும் ‘வெல்லிங்டன்’ நாவலில் கோவையில் நிகழ்ந்த தனது பால்யகால காட்சிகள் சிலவற்றை சித்திரித்துள்ளார். அவருடைய கட்டுரைகள் சிலவற்றிலும் அதன் அடையாளங்கள் உண்டு. ‘மெஹருன்னிசா’ முற்றிலும் மாறுபட்ட நாவல். முகலாய வரலாற்றின் பின்னணியில் பெண்ணின் ஆளுமையை முன்வைப்பது.

‘இந்திராகாந்தியின் இரண்டாவது முகம்’ என்ற தொகுப்புக்காக நினைவுக்கூறப்படும் ரவிச்சந்திரன் (பெங்களூர்) துள்ளலான நடைக்கும் துடிப்பான கதைமொழிக்கும் உரியவர். கோவைப்புதூரைச் சேர்ந்த சுதேசமித்திரன் வசீகரமான மொழி ஆளுமை மிக்கவர். ‘கோபுரத்தாங்கிகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் ‘காக்டெய்ல்’, ‘ஆஸ்பத்திரி’ ஆகிய நாவல்களும் அங்கதமும் கூர்மையான சமூக விமர்சனங்களையும் கொண்டவை.

மரபான எழுத்து முறைக்கு மாற்றான சிந்தனையைக் கொண்ட வகையில் புதிய எழுத்து முறையில் ‘மீண்டும் ஆதியாகி’, ‘ஆதிரை’ என்ற நாவல்களை எழுதியவர் சேலத்தைச் சேர்ந்த க.வை.பழனிச்சாமி. பின் நவீனத்துவம் குறித்த உரையாடல்கள் தீவிரமடைந்திருந்த எண்பதுகளின் இறுதியில் ‘உன்னதம்’ என்ற சிற்றிதழை வெளியிட்ட கௌதம சித்தார்த்தன் புதிய மொழியில் நவீன உத்தியில் கொங்கு மண்சார்ந்த பண்பாட்டுக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு கதைகளை எழுதியுள்ளார். ‘பச்சைக்கிளிகள்’, ‘பொம்மக்கா’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் ‘வேனிற்கால வீடு, சில குறிப்புகள்’ என்ற நாவலும் வெளிவந்துள்ளன. சேலத்தை அடுத்த மல்லூரைச் சேர்ந்த குமார நந்தன் இந்த வகையில் இயல்பான சித்தரிப்பு மொழியில் விசித்திரமான கதைவெளிகளைக் காட்டுகிறார். ‘பூமியெங்கும் பூரணியின் நிழல்’, ‘நகரப்பாடகன்’ ஆகிய இரண்டு தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் முகநூல் வழியாக கவனம் ஈர்த்திருக்கும் இருவர் சரவண கார்த்திகேயன், ஷான் கருப்புசாமி. காந்தியின் பாலியல் பரிசோதனைகள் சார்ந்து எழுதப்பட்ட ‘ஆப்பிளுக்கு முன்’ என்ற நாவலும் பழங்குடிகளின் தீவில் மாட்டிக்கொள்ளும் கர்ப்பிணியின் கதையைச் சொல்லும் ‘கன்னித்தீவு’ நாவலும் வெளிவந்துள்ளன. தவிர, ‘இறுதி இரவு’, ‘மியாவ்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் உண்டு.

பெருந்துறையைச் சேர்ந்தவர் ஷான் கருப்புசாமி. தமிழக அரசியல் சூழலின் பின்னணியைக் கொண்ட ‘வெட்டாட்டம்’, தங்கச் சுரங்கங்களின் உலகளாவிய பின்னல்களைப் பற்றிப் பேசும் ‘பொன்னி’ ஆகிய இரண்டு நாவல்கள் வெளிவந்துள்ளன.

இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருக்கும் அதே நிலைதான் கொங்கு இலக்கியம் சார்ந்தும் அமைந்துள்ளது. தர்மபுரியைச் சேர்ந்தவர் திலகவதி. ‘கல்மரம்’, ‘கைக்குள் வானம்’ உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார். சமூக நோக்கிலான பல்வேறு மோதல்களையும் பெண்கள் சார்ந்த உளச் சிக்கல்களையும் பெரிதும் முதன்மைப்படுத்துவை இவரது எழுத்துகள். கரூர் அரவக்குறிச்சியில் பிறந்த இந்திரா (ஜோதிமணி) ‘ஒற்றை வாசனை’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் ‘சித்திரக்கூடு’ என்ற நாவலையும் எழுதியுள்ளார். கோவையைச் சேர்ந்த அகிலா தன் ‘மிளகாய் மெட்டி’ சிறுகதைத் தொகுப்பில் குடும்ப அமைப்பில் உருவாகும் உறவுச் சிக்கல்களை எளிமையான மொழியில் விவரித்துள்ளார். அனுராதாவின் சொந்த ஊர் மேட்டூர். ‘காளி’ என்ற அவரது சிறுகதை குறிப்பிடத்தக்கது. ‘மணற்பொதிகள்’, ‘காளி’ என்ற இரண்டு தொகுப்புகள் வெளியாகியுள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெண்களின் வாழ்வை மையமாகக்கொண்ட நாவலான ‘இருள் தின்னும் இரவுகள்’ நாவலை எழுதியுள்ளார் கனகதூரிகா. ‘கால்புழுதி’ அவரது இன்னொரு நாவல்.

புனைவுகள் அல்லாது தம் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளின் வழியாக முக்கியமான பங்களிப்பைத் தந்திருக்கும் கொங்குப் படைப்பாளிகள் என கோவை ஞானி, எஸ்.என்.நாகராஜன், சிற்பி, புவியரசு, இரா.குப்புசாமி, முருகுசுந்தரம், தமிழ்நாடன், பிரம்மராஜன், ஆர்.சிவகுமார், கால சுப்ரமணியன், டாக்டர் ஜீவானந்தம், பாமரன், நிர்மால்யா, வா.மணிகண்டன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

1980களில் வணிகப் பத்திரிக்கைகளில் தொடர்கதைகள், மாத நாவல்கள் என்று அனைத்திலும் தொடர்ந்து ‘க்ரைம்’ கதைகளை எழுதி பெரும் வாசக ஆதரவைப் பெற்றவர் ராஜேஷ்குமார்.

நாஞ்சில்நாடன், சு.வேணுகோபால், பா.வெங்கடேசன் ஆகியோரின் பிறப்பிடம் கொங்கு வட்டாரம் அல்லாதபோதும் அவர்கள் நீண்ட காலமாய் இந்த மண்ணில் இருந்தே எழுதுகிறார்கள், கொங்கு மண்ணுக்குப் பெருமை சேர்க்கிறார்கள்.

தொழில் வளம் மிகுந்த கொங்கு நாட்டில் புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் கொண்டாடி மகிழும் ‘விஜயா பதிப்பகம்’ வேலாயுதம் கொங்கு பிரதேசத்துக்குப் பெருமை சேர்ப்பதில் முக்கியமானவர்.

எழுத்தையும் எழுத்தாளர்களையும் கொண்டாடும் கொங்கு மண்டலத்தின் மொழியிலும் வாழ்விலும் இன்று பல்வேறு மாற்றங்கள் உருவாகிவிட்டபோதிலும் அதன் பண்பாட்டு அடையாளங்களையும் வாழ்வியல் கூறுகளையும் அந்த மண்ணிலிருந்து முளைத்திருக்கும் படைப்பாளிகள் தொடர்ந்து தம் படைப்புகளின் வழியாக நிலைநிறுத்தியிருக்கின்றனர்.


No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...