Wednesday 2 August 2023

நிலத்தை எழுதும் கதைசொல்லி - என்.ஸ்ரீராம் கதைகள்





(ஏப்ரல் 2023, சென்னையில் ‘நற்றுணை’ அமைப்பு நடத்திய என்.ஸ்ரீராம் கதைகள் குறித்த கலந்துரையாடல் அமர்வில் வாசிக்கப்பட்ட தலைமையுரை)

அண்மை காலங்களில் எழுத்தாளர்களைக் கொண்டாடும் அல்லது அவர்களது எழுத்துகளைப் பற்றி பேசும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சிறிய அளவிலும் பெரிய அளவிலுமாக. இது தமிழ் இலக்கியச் சூழலில் நிகழ்ந்துள்ள முக்கியமான ஒரு மாற்றம் என்றே எண்ணுகிறேன்.

ஒரு எழுத்தாளனை இதுபோன்று ஏன் கொண்டாட வேண்டும்? அவன் எழுதிய சிறுகதைகளைப் பற்றி ஏன் பேசவேண்டும்? அப்படி என்ன அவசியம் நேர்ந்துவிட்டது?

இன்றைய சூழல்தான் அப்படியொரு அவசியத்தை உருவாக்கியிருக்கிறது.

நம் வாசிப்புப் பழக்கத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் காலகட்டம். புத்தகங்கள் வாசிக்கும் நேரத்தில் கணிசமான பகுதியை இன்று சமூக வளைதளங்கள் எடுத்துக்கொள்கின்றன.

சமூக வலைதளங்களை விட்டு விலக முடியவில்லை. கையிலேயே இருக்கும் உலகம். நொடிக்கு நொடி மாறும் அவசர உலகம். இந்த நொடியில் அனைவரையும் கவனத்தில் ஈர்த்த ஒன்று மறுநொடியில் காணாமல் போய்விடுகிறது. எவ்வளவு முக்கியமான விஷயமாக இருந்தாலும் இன்னொரு முக்கியமான விஷயம் வந்த நொடியில் எரிநட்சத்திரம்போல காணாமல் போய்விடுகிறது.

சுஜாதா குறிப்பிட்டதுபோல எல்லாமே ‘ஒரு நிமிட புகழ்’ தான்.

யோசித்துப் பாருங்கள். கடந்த ஒரு வார காலத்தில் சமூக ஊடகங்களில் எத்தனை விஷயங்கள் கடந்து போயிருக்கின்றன? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி. முதல்நாள் பற்றியெரிந்த ஒரு பிரச்சனை அன்று மாலையே காணாமல் போய் வேறான்று அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.

சமூக ஊடகங்கள் நம் முன்னால் ஏராளமானவற்றை கொட்டு வந்து கொட்டுகின்றன – செய்திகள், வம்புகள், கிசுகிசுக்கள், புறணி, தகவல்கள், ஊகங்கள் என்று எண்ணற்ற குப்பைகள். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவற்றை கடந்து செல்லவே நேரிடுகிறது.

வாசிப்புக்கே நெருக்கடி தரக்கூடிய சூழல். எதையும் ஆழமாக வாசிக்க விடாமல் ஒரு வரிச் செய்திகளாக தெரிந்துகொண்டால் போதும் எனும் மனநிலை இன்றைய தலைமுறைகளுக்கு இருக்கிறது.

என்னுடைய நெருக்கமான நண்பர்களில் பலரது வாசிப்புப் பழக்கம் பாதிக்கப்பட்டிருப்பதை நேரடியாகக் காண்கிறேன். 500 பக்க நாவலை ஒரு வாரத்துக்குள் வாசிக்கும் நண்பர்கள் இன்று இரண்டு மாத காலம் ஆகியும் படிக்காமல் வைத்திருக்கிறார்கள். பதிலாக, ‘இவ்ளோ பெரிசா எழுதினா யாரும் படிக்கமாட்டாங்க. சின்னதா 150 அல்லது 200 பக்கத்துலதான் எழுதணும்’ என்று ஆலோசனை வேறு.

சுருக்கமாக சிறியதாக பத்து வரியில எழுத வேண்டும். இதுதான் இன்றைய விதி.

தீவிர இலக்கிய வாசிப்பு என்பதே 500 பேர்களைக்கொண்ட ஒரு சிறிய வட்டம்தான். ரொம்ப காலமாக சொல்லப்படக்கூடிய ஒரு வரையறை. அந்த 500 பேர் வருவதும் போவதுமாக இருப்பார்கள். அந்த எண்ணிக்கை கூடியதுபோலவே தெரியவில்லை. பதிலுக்கு இன்று ஒரு பதிப்பு என்பது 32 பிரதிகள்தான் என்கிற தொழில்நுட்படி வசதி வேறு.

இந்த 500 பேருடைய வாசிப்புக்கான நேரத்தில் கணிசமான நேரத்தை சமூக வலைதளங்கள் எடுத்துகொள்கின்றன. மீதி நேரத்தில்தான் வாசிக்கவேண்டும். குறிப்பாக இலக்கியம் வாசிக்க வேண்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக தீவிர இலக்கியம் வாசிக்கவேண்டிய நிலை.

0

ஓரளவுக்கு இன்றைய நவீன இலக்கியச் சூழலும்கூட இப்படியொரு நெருக்கடியை நமக்குத் தருகிறது என்றே சொல்லலாம். அன்றாடம் எண்ணற்ற கதைகள் எழுதப்படுகின்றன. எண்ணற்ற கதைகள் வெளியாகின்றன. அந்தக் கதைகளைப் படியுங்கள் என்ற வேண்டுகோள்கள், அறிவிப்புகள் நமக்கு வருகின்றன. புதிய புதிய எழுத்தாளர்கள், புதிய கதைகள். பல சமயங்களில் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வதே சிரமமாக இருக்கிறது.

இன்று வெளியாகிற இணைய இதழ்களின் எண்ணிக்கையை யோசித்துப் பாருங்கள்.

சொல்வனம், தமிழினி, கனலி, வாசக சாலை, அகழ், வனம், நீலி, அரூ, ஆவநாழி என்று பெரிய வரிசை உள்ளது. இவை தவிர அச்சிதழ்கள் – காலச்சுவடு, உயிர்மை, புரவி, அந்திமழை, தீராநதி உள்ளிட்டவை.

ஐம்பது வருடங்களுக்கு மேலாக எழுதிவரும் வண்ணதாசன் (இந்த ஆண்டும் பதிமூன்று கதைகளுடன் புதுத் தொகுப்பு ‘அகிலம்’ வந்துள்ளது) நாஞ்சில்நாடன் (கணக்கே இல்லை. கட்டுரையும் கதையுமாக எழுதிக் கொண்டே இருக்கிறார்) பாவண்ணன் (சத்தமில்லாமல் கதைகளும் தொகுப்புகளும் வந்துகொண்டேதான் உள்ளது) ஆகியோரது எழுத்துகள் இந்த இதழ்களில் வருகின்றன.

ஒருசில நாட்கள் வீட்டில் அடைபட்டிருக்க வேண்டிய நிலைமை வந்தபோது பத்து வருஷத்துக்கு எழுதவேண்டிய ஒட்டுமொத்த கதைகளையும் எழுதிப் போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டார் ஜெயமோகன்.

இளம் தலைமுறையைச் சேர்ந்த பலரது கதைகளும் இவற்றில்தான் வெளியாகின்றன. நாம் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர்களது கதைகளும் இங்குதான் வெளிவருகின்றன.

ஒவ்வொரு இதழிலும் குறைந்தபட்சம் ஐந்து கதைகள் என்று கணக்கு வைத்தாலும்கூட மாதம் ஒன்றுக்கு ஐம்பது கதைகள் வெளியாகின்ற. வருடத்துக்கு ஐநூறு கதைகள். ஒரு நாளைக்கு ஒரு கதை படித்தாலும்கூட எல்லாவற்றையும் படித்து முடிப்பது சாத்தியமில்லை.

இத்தனை கதைகளுக்கு நடுவில்தான் அபாரமான கதைகளும் எழுதப்படுகின்றன, சாதாரணக் கதைகளும் எழுதப்படுகின்றன. சாதாரணக் கதைகளைப் படித்து வெறுத்துப்போய் அதற்கடுத்து இருக்கும் நல்ல கதைகளைத் தவறவிடும் சாத்தியங்களும் உள்ளன. எண்ணற்ற எழுத்தாளர்கள், ஏராளமான உற்பத்தி – கடுமையான சூழல் இல்லையா?

சென்ற புத்தகக் கண்காட்சியின்போது எத்தனை புதிய சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகின என்று நினைவிருக்கிறதா? ஒரு பட்டியலிட்டுப் பாருங்கள். முப்பத்துக்கும் அதிகமாக இருக்கும். முதல் கேள்வி, எல்லாவற்றையும் வாங்க முடியுமா? அடுத்த கேள்வி, வாங்கினாலும் அவற்றுள் எத்தனைத் தொகுப்புகளை படித்து முடிக்க முடியும்?

இதில் ஆச்சரியமான ஒரு விஷயம், இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் சிலர் வருடத்துக்கு ஒரு தொகுப்பு வெளியிடுகிறார்கள். சுஷில்குமார் பாரதி, வைரவன் லா ரெ., கா.சிவா என்று பலரும் உற்சாகத்துடன் எழுதி வருகிறார்கள். கமலதேவி எழுத வந்து ஐந்து ஆண்டுகள்கூட ஆகவில்லை. 100க்கும் மேற்பட்ட கதைகளை எழுதிவிட்டார். ஐந்து தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இத்தனை ஊக்கத்துடன் கதைகளை எழுதவும் புத்தகங்களை வெளியிடவும் சில பதிப்பாளர்களும் காரணமாக இருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் யாவரும் கரிகாலன். இந்த எழுத்தாளர்கள் கதை எழுத ஆரம்பிக்கும்போதே அவர் தொகுப்புக்கான லே-அவுட்டை தயார் செய்துவிடுகிறார்போல. தொடர்ந்து புதிய எழுத்தாளர்களை அடையாளம் கண்டு, அவர்களது தொகுப்புகளை வெளியிடுகிறார். வாசக சாலை பதிப்பகமும் புதிய எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளை வெளியிடுகிறது.

உண்மையில் மகிழ்ச்சியான ஆரோக்கியமான விஷயம்தான். ஒரு புதிய தொகுப்பு என்பது எழுத்தாளனுக்கு சந்தோஷத்தைத் தருவது. இன்னும் எழுதுவதற்கான முனைப்பைத் தருவது.

இதுவரைக்கும் நான் சொன்னது நேரடியான தமிழ்ச் சிறுகதைகளை மட்டும்தான். மொழிபெயர்ப்புகளை கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை.

இதுவரையிலும் சொன்ன சூழல் வாசகனுக்கு மட்டுமானதில்லை. ஒரு எழுத்தாளனுக்கும்தான். சொல்லப்போனால் எழுத்தாளன் எதிர்கொள்ளும் சவால் வாசகனுக்கு நேர்வதைவிட கடினமானது.

ஏற்கெனவே சொன்ன கணக்கில் பத்து கதையாவது நம்முடைய கணக்கில், பெயரில் இருக்க வேண்டும். அப்போதுதான் நமது பெயரை நினைவில் வைத்திருப்பார்கள். தமிழினி வசந்தகுமார் சொல்லுவார் ‘சீன்’ல இருந்துட்டே இருக்கணும். இல்லேன்னா சீக்கிரமா மறந்துருவாங்க.’ இன்றைய நிலையில்  எழுத்தாளனுக்கு கடுமையான சவால்.

அவனுக்கு முன்னால் எழுத வந்த மூத்த எழுத்தாளர்களில் வண்ணதாசன், நாஞ்சில்நாடன், பாவண்ணன், கலாப்ரியா, விட்டல்ராவ் போன்று சிலர் இன்னும் தீவிரமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவனுடனே எழுத வந்த சக எழுத்தாளர்களில் பலரும் கூடவே தொகுப்புகளைத் தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார்கள். இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்களின் ஒரு பெருங்கூட்டம், படு வேகமாக மாதம் ஒரு கதை, வருடம் ஒரு தொகுப்பு என்ற கணக்கில் அசராமல் ஓடி வருகிறார்கள். ஓட முடியவில்லை, கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொள்ளலாம் என்று நிற்க முடியாது. அவ்வளவுதான். எல்லாரும் ரொம்ப தூரம் முன்னால் போயிருப்பார்கள். அதன் பிறகு அந்த மைதானத்தில் அவன் மட்டும் தனியாக ஓடிக்கொண்டிருப்பான். அதனால், நிற்காமலும் சீரான வேகத்திலும் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கவேண்டும் என்பது ரொம்ப முக்கியமானது.

ஒரு புனைகதை எழுத்தாளனாக இருப்பது அவ்வளவு சுலபமில்லை. மிகவும் கடினம். புனைகதை எழுதவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், சற்று யோசித்துப் பாத்துவிட்டு இந்த மைதானத்தில் இறங்குவது நல்லது.

ஏதாவது ஒரு இதழில் உங்களுடைய கதை வெளிவந்திருக்கும். நான்கு பேர் படித்துவிட்டு நல்லவிதமாக நாலு வார்த்தைகள் சொல்லியிருப்பார்கள். அன்று அந்த சந்தோஷத்துடனே தூங்கப் போவீர்கள். காலையில் எழுந்து பார்க்கும்போது அப்படியொரு சம்பவம் நடந்ததற்கான தடயமே இருக்காது. எல்லாருமே வேறொரு விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். ஒரு நல்ல கதையைப் பற்றி தொடர்ந்து பேசுவது என்பதெல்லாம் எழுத்தாளனே ரொம்ப மெனக்கெட்டு செய்தால் மட்டுந்தான் நடக்கும். கதையைப் பற்றி வரும் கருத்துகளை கூச்சப்படாமல் தொடர்ந்து மற்றவர்களுக்கு பகிரவேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்தவேண்டும். இல்லையென்றால் பத்தோடு பதினொன்றாக அந்தக் கதை காணாமல் போய்விடும்.

இப்பிடி ஒரு சவால் மிகுந்த சூழ்நிலையில ஒரு எழுத்தாளனைப் பற்றியும்

அவனுடைய கதைகளைப் பற்றியும் பேசிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. திரும்பத் திரும்ப எழுத்தாளனின் பெயரை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. வாசகனுடைய நினைவிலும் இலக்கியச் சூழலின் ஞாபகத்திலும் எழுத்தாளனின் பெயரை உரக்கச் சொல்லி மறக்கவிடாமல் செய்ய வேண்டிய தேவை இன்றைக்கு உள்ளது.

0

அந்த வகையில் இன்று நாம் இந்த இரண்டு மணி நேரமும் என்.ஸ்ரீராமுடைய பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கப் போகிறோம். இப்பிடியொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ள ‘நற்றுணை’ அமைப்புக்கு நன்றி, பாராட்டுக்கள்.



0

என்.ஸ்ரீராமை ஏன் நாம் இப்போது பேசவேண்டும்? தமிழ்ச் சிறுகதையின் படிநிலையில் அவரை எங்கே வைக்கமுடியும்? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல, அவர் எழுதக்கூடிய பிரதேசம் சார்ந்த சில அடிப்படைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

என்.ஸ்ரீராம் தாராபுரத்துக்கு அருகில் உள்ள கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கொங்குப் பகுதியைச் சேர்ந்தது. தமிழக வரலாற்றில் கொங்குப் பிரதேசம் தனியாகக் குறிப்பிடப்படுவதில்லை. சேர நாட்டின் ஒரு பகுதியாகவே மிகச் சிறிய அளவில் சொல்லப்பட்டுள்ளது. பேரூர், கரூர் போன்ற சில ஊர்களைப் பற்றிய குறிப்புகளே உள்ளன. அதிகமும் வேளாண்மை சார்ந்த பெரும் நிலப்பரப்பு. சுதந்திரத்துக்கு பிறகு ஏற்பட்ட பெரும் தொழிற்வளர்ச்சியின் காரணமாக கோவை, திருப்பூர், சேலம், கரூர் போன்ற நகரங்கள் கொங்குப் பிரதேசத்துக்கான கவனத்தை ஏற்படுத்தின.

இலக்கியத்திலும் இதே நிலைதான். சங்க காலப் புலவர்களில் இருபதுக்கும் அதிகமான புலவர்கள் கொங்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. கொங்கு வேளிர் எழுதிய ‘பெருங்கதை’யும், எம்பெருமான் எழுதிய ‘தக்கை ராமாயண’மும் குறிப்பிடத்தக்க ஆக்கங்கள். நன்னூல் தந்த பவணந்தி முனிவர் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவற்றைத் தவிர அண்ணன்மார் சுவாமிகள் கதை போன்ற நாட்டார் இலக்கியங்கள் உள்ளன.

நவீன இலக்கியத்தைப் பற்றி யோசிக்கும்போது உடனடியாக நம் நினைவுக்கு வரும் பெயர் ஆர்.சண்முகசுந்தரம். அவருடைய புகழ்பெற்ற நாவல் ‘நாகம்மாள்’ இந்தியாவின் முதல் வட்டார வழக்கு நாவல் என்று க.நா.சு குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.சண்முகசுந்தரம் ‘மணிக்கொடி’யில் சிறுகதை எழுதியிருக்கிறார். ‘பாறையருகில்’ என்ற அவரது முதல் கதை மணிக்கொடியில்தான் பிரசுரமாகியிருக்கிறது. இருபதுக்கும் அதிகமான கதைகளை எழுதியுள்ளார். ‘நந்தா விளக்கு’ என்ற தொகுப்பு 1944ல் வெளியாகியுள்ளது.

ஆனால் அவருடைய சாதனை சிறுகதைகளில் இல்லை, நாவல்களில்தான். 1942இல் வெளியான ‘நாகம்மாள்’ நாவலுக்கு முன்னுரை எழுதியிருப்பவர் கு.பா.ரா. ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களில் முதன்முதலாக நாவல் எழுதியவர் ஆர்.சண்முகசுந்தரம்.  அவருக்கு நாவல் எழுதவேண்டும் என்கிற எண்ணம் எங்கிருந்து வந்திருக்கும்? அவருடைய மொழியாக்கங்கள்தான் காரணமாக இருக்கவேண்டும். வங்காளத்திலிருந்து பல நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். விபூதி பூஷன் பந்தோபாத்யாயவின் ‘பதேர் பாஞ்சாலி’யை தமிழுக்குத் தந்திருக்கிறார்.  சரத் சந்திரரின் எல்லா நாவல்களையுமே அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.  கோவையிலிருந்து ‘வசந்தம்’ என்ற பத்திரிகையை நடத்தியிருக்கிறார். அவர் 1977ஆம் ஆண்டு மறைந்திருக்கிறார். தனது கடைசி காலத்தில் அவர் எதையும் எழுதவில்லை. காலமாகி ஐம்பது வருடங்கள்தான் ஆகியுள்ளன. ஆனால், அவர் எழுதிய பல நாவல்களும், மொழிபெயர்ப்புகளும் நமக்குக் கிடைக்கவில்லை. எதையும் பத்திரப்படுத்துகிற, ஆவணப்படுத்துகிற பழக்கம் நம்மிடம் இல்லை. எனவே, மறந்துபோவதும் நமக்கு சுலபமாக உள்ளது. இன்று என்.ஸ்ரீராமைப் பற்றி பேசுவதை ஒரு சந்தர்ப்பமாக வைத்து நான் ஆர்.சண்முகசுந்தரத்தை ஞாபகப்படுத்துகிறேன்.

அவருக்குப் பிறகு கொங்குப் பிரதேசத்தின் ஒரு பெரிய இலக்கியத் திருப்பம் ‘வானம்பாடி’. 1970களில் தமிழ்க் கவிதையில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த இதழ், இயக்கம்.

அடுத்த முக்கியமாக குறிப்பிடவேண்டிய எழுத்தாளர் க.ரத்னம். 1962இல் அவருடைய ‘கல்லும் மண்ணும்’ வெளியானது. அந்த காலத்தில் நாவல்கள் இருந்த போக்குக்கு மாறாக சுருக்கமாக 120 பக்கங்களில் ஒரே ஒரு கதாபாத்திரத்தைக் கொண்டு எழுதப்பட்ட நாவல். வளர்ச்சியின் பெயரில் நிலமும் வளமும் பாழடிக்கப்படும் போக்கை, சூழல் சீர்கேட்டை முதன்முதலாக சுட்டிய புனைவு. க.ரத்னம் இன்று கோயமுத்தூரில் வசிக்கிறார். கல்லூரி பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். சிறுகதையாளர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பறவையியலாளர். அவருடைய சாதனைகள் இரண்டு.  எட்கர் தர்ஸ்டனின் ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்‘ எனும் 3500 பக்கம் கொண்ட நூலை ஏழு தொகுதிகளாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.

அடுத்தது, ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ என்னும் புத்தகம். தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் வெளியாகியுள்ளது. அவருடைய தனிப்பட்ட ஆர்வத்தில் சூலூர் குளக்கரையில் பார்த்த பறவைகளைப் பற்றிய விபரங்களைத் தொகுத்து எழுதிய புத்தகம். அழகான வண்ண ஓவியங்கள் கொண்ட பறவைகள் கையேடு. இன்று பறவை ஆர்வலர்கள் அதிகமும் புரட்டிப் பார்க்கும் ஒன்று. முதலில் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டது. இப்போது மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவற்றைத் தவிர, ஜேம்ஸ் ஜாய்ஸோட ‘டப்ளினர்’ஸை மொழிபெயர்த்திருக்கிறார். செகாவின் கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.

இப்படி ஒரு ஆளுமை நம்மிடையே இருக்கிறார் என்பதே பலருக்கும் தெரியாது. தமிழகத்தில் எத்தனையோ விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவருடைய பெயர் எங்குமே பரிசீலிக்கப்படுவதில்லை.

ஆர்.சண்முகசுந்தரம், க.ரத்னம் இவர்களுக்குப் பிறகு பெரிய இடைவெளி. கிட்டத்தட்ட 30 வருஷம் கழித்து 1980களில்தான் புதிய எழுத்தாளர்கள் இந்தப் பகுதியிலிருந்து எழுத வந்தார்கள். சி.ஆர்.ரவீந்தரன், சூரியகாந்தன், சுப்ரபாரதிமணியன், பெருமாள்முருகன், தேவிபாரதி, எம்.கோபாலகிருஷ்ணன், வா.மு.கோமு என்று சில உதாரணங்களைச் சொல்லலாம்.

இதற்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்தான் என்.ஸ்ரீராம்.

என்.ஸ்ரீராமை ஆர்.சண்முகசுந்தரத்தின் தொடர்ச்சி என்றே சொல்லலாம். முதல் காரணம் அவரும் கீரனூரைச் சேர்ந்தவர்தான். இரண்டாவது காரணம் இருவரும் எழுதிய களமும் வாழ்க்கையும்.

0

என்.ஸ்ரீராமின் கதைகளின் மூன்று அம்சங்களைக் குறிப்பிடவேண்டும்.

ஒன்று, அவருடைய கதைகள் அதிவேகமான சிதைவுகளுக்கு நடுவிலிருந்து கொங்கு வாழ்க்கையின் பண்பாட்டையும் மொழியையும் பாதுகாத்து வைத்திருக்கிறது என்பது.

ஆர்.சண்முகசுந்தரம் கண்ட கிராமங்கள் ஸ்ரீராமின் காலத்தில் இல்லை. ஸ்ரீராமின் காலத்திலிருந்த அடையாளங்கள் இன்று இல்லை. இன்று எஞ்சியிருக்கும் சில அடையாளங்களும்கூட இன்னும் சில ஆண்டுகளுக்குப் பின் இருக்க வாய்ப்பில்லை. ஸ்ரீராமின் கதைகளில் உள்ள கிராமங்களை, தெருக்களை, சந்துகளை, இட்டேரிகளை இப்போதுகூட பார்க்க வாய்ப்பில்லை. கொறங்காடுகள், கோம்பை வீடுகள், பாம்பேரிகள் என்று அவர் குறிப்பிடும் நிலங்களையும் அதன் அடையாளங்களையும் வெகுவேகமாக இழந்து வருகின்றன இன்றைய கொங்கு கிராமங்கள்.

அவருடைய கதைகளிலுள்ள பல்வேறு மனிதர்களை - பூனைபிடிப்பவர்கள், முனிவிரட்டிகள், அம்மி கொத்துபவர்கள், சாமியாடிகள், கிணறு வெட்டுபவர்கள், பேயோட்டுபவர்கள் – இன்று காண்பது அரிது. இவர்கள் அனைவருமே அந்தத் தொழிலைக் கைவிட்டுவிட்டு வேறு தொழில்களுக்கு மாறிவிட்டார்கள்.

துல்லியமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் கொங்கு கிராமத்துக்கென உள்ள பழக்கவழக்கங்களை பண்பாட்டுக்கூறுகளை இனியொரு தலைமுறை என்.ஸ்ரீராமின் கதைகளின் வழியாகத்தான் தெரிந்துகொள்ள முடியும்.

பருவகாலங்கள், பொழுதுகள், மரங்கள், பறவைகள், செடிகள் என நிலக்காட்சிகளை இக்கதைகள் மிக இயல்பாக விவரிக்கின்றன. ஒரு நிலத்தையும் அதன் உயிர்களையும் புனைவின் ஒரு பகுதியாக ஆக்குவதென்பது திட்டமிட்டோ வலுக்கட்டாயமாகவோ செய்வதல்ல. இயல்பாக நிகழவேண்டும். என்.ஸ்ரீராமின் கதைகளில் உள்ள நிலமும் தாவரங்களும் பறவைகளும் விலங்குகளும் வெறும் தகவல்களாக அமைவதில்லை. கதைமாந்தர்களின் குணாதிசயங்களுக்கும் சூழலுக்கும் பொருந்தி அமைபவை. கதை மையத்துக்கு மேலும் வலு சேர்ப்பவை.

என்.ஸ்ரீராம் தன் கதைகளில் காட்டியிருக்கும் சூழல் உலகை திரும்பவும் நம் வாழ்வில் நாம் சந்திக்கவே முடியாது. நுட்பமான தகவல்களுடன் விவரணைகளுடன் கிராமங்களை காட்டுகிறார். ஓவியங்களைப் போலவோ நிழற்படங்களைப் போலவோ அல்ல. அந்தப் படங்களுக்கு அல்லது ஓவியங்களுக்கு நிறங்கள் உண்டு, வாசனை உண்டு, சத்தங்களைக் கூட தெளிவாக கேட்க முடியும். முக்கியமாக ஸ்ரீராம் பல இடங்களில் கிராமத்துக்கான வாசனைகளைப் பற்றி எழுதியிருக்கிறார் – ‘நாணல் பூவெடுக்கும் பருவமாதலால் சுனை வாசனை கண்டிருந்தது’, ‘வெள்ளாட்டுக் கிடாவின் மொச்சை வாசனை’, ‘காற்று வைக்கோல் வாசம் படர்ந்துவீசியது’, ‘இரவில் எருக்கு மணத்துடன் காற்று வீசியது’, ‘கொறங்காட்டில் தட்டைக் கொடிப் பூக்களின் வாசனை’. இந்த மனிதர்களை, பழக்கவழக்கங்களை, வாசனைகளை இழந்த கிராமங்கள்தான்  இன்று எஞ்சியுள்ளன. ஆனால் இவற்றை என் ஸ்ரீராமின் கதைகளின் வழியாக உயிர்ப்புடன் நம்மால் அனுபவிக்க முடியும்.

அழிவுற்ற ஒரு பிரதேசத்தின் அடையாளங்களை, பழக்கவழக்கங்களை இக்கதைகள், பண்பாட்டு ஆவணங்களாக பாதுகாத்து வைத்துள்ளன.

0

இரண்டாவதாக, இன்று பெரும்பாலான கொங்கு கிராமங்களில் காணாமல்போய்விட்ட ‘கொங்கு’த் தமிழை ஸ்ரீராமின் கதைகளில் கேட்க முடிகிறது என்பது.

இவன் ‘ஒந்தி’ வழிவிட்டான், வயல் வழி ’மூயவே’ இல்லை, தொறப்புக்குச்சி, ‘பாப்புராணி’ கிணற்று மேட்டில் ஓடியது, ‘மளார்’னு வேலையைப் பாரு, ‘ஓரியாட்மா’ இருக்கு போன்ற கொங்கு பிரயோகங்கள் சுவையானவை. சில வருடங்களுக்கு முன்பு வரையிலும்கூட திருமணங்களில்,கோயில் விசேஷங்களில் வயதில் மூத்தவர்களின் உரையாடல்களில் வெகு இயல்பாக  இடம்பெற்ற இந்தப் பேச்சுத் தமிழ் இப்போது அருகி வருகிறது. இன்றைய தலைமுறையினர் இந்த வழக்கை அதிகமும் பயன்படுத்துவதில்லை. ஒரு பண்பாட்டின் முக்கிய அடையாளமான இந்த உரையாடல் மொழி ஸ்ரீராமின் கதைகளின் முத்திரை அம்சமாக அமைந்திருக்கிறது.

0

மூன்றாவதாக, கொங்கு பிரதேசத்தின் விவசாய வாழ்வின் சவால்களை இக்கதைகள் விரிவாகப் பேசியுள்ளன.

அமராவதி – மழைக் காலத்தில் மட்டுமே நீரோடும். சண்முக நதியில நான் தண்ணீரைப் பார்த்தது இல்லை. வேறு நீர் ஆதாரங்கள் இல்லாத சூழல். வானம் பார்த்த பூமி. கிணற்றுப் பாசனத்தை நம்பியிருக்கவேண்டிய நிலை. நிலத்தடி நீர் கீழே போகப் போக ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்ட வேண்டிய கட்டாயம். அதிலும் தோல்வி. அதனால் ஏற்படும் கடன். மாடு கன்றுகளை விற்று சமாளிக்க வேண்டிய அவலம். இதனால் நிறைவேறாது போகும் திருமணங்கள். அறுபடும் உறவுகள். தற்கொலைகள் என்று அழிந்து வரும் விவசாயத்தையும் விளைநிலங்கள் விரைவாக மனைகளாகும் அவலத்தையும் இக்கதைகள் சுட்டி நிற்கின்றன.

0

என்.ஸ்ரீராமின் தனிச் சிறப்பு என்று எதைச் சொல்ல முடியும்?

ஏற்கெனவே சொன்னதுபோல அவர் ஒரு ‘கதைசொல்லி’. கதை சொல்வது என்பது நமது மரபான வடிவம். தொன்றுதொட்டு வருகிற ஒன்று. அவரால் தொடர்ந்து கதைகளைச் சொல்லிக்கொண்டே இருக்க முடிகிறது. மிகுந்த விவரணைகளுடன் கேட்பதற்கு சலிப்பேற்படாதவண்ணம் சுவையாகச் சொல்கிறார். ஒரு கிராமத்து நிகழ்வை நம் கண் முன்னே அதன் எல்லா நுட்பங்களுடனும் நிகழ்த்திக் காட்டுகிறார்.

எந்தக் கதையிலும் அவர் சூழலைச் சொல்லாமல் விடுவதில்லை. அந்த சமயத்தில் பொழுது எப்படியிருந்தது, காற்று எப்படி வீசியது, வானத்தில் முகில்கள் எப்படியிருந்தன, எந்த மரத்தில் எந்தப் பறவை எது மாதிரி ஓசை எழுப்பியது, செடிகளும் பூக்களும் உயிர்களும் எப்படியிருந்தன என்று எதையுமே விடாமல் சொல்லிவிட்டுத்தான் அவர் கதைக்கு வருவார்.  ‘இயற்கையை சொல்லாது வாழ்வும் இல்லை எழுத்தும் இல்லை’ என்பதே நம் சங்க இலக்கிய மரபு. என்.ஸ்ரீராம் அந்த மரபில் வந்தவர். இயற்கையைக் குறித்த அக்கறையும் கவனமும் நம் அன்றாட வாழ்விலிருந்து மிக வேகமாகக் குறைந்து வருகிறது. ஆனால், இலக்கியத்தில் அது நடக்கலாகாது. எழுத்திலிருந்து இலக்கியத்திலிருந்து சூழலையும் இயற்கையையும் விலக்கும்போது அது பண்பாட்டிலிருந்தும் அழிக்கப்படுகிறது என்றே பொருள். நகரெங்கும் குளங்களை குப்பைகளை இட்டு நிரப்பிக் காணாமல் செய்வதுபோல ஒட்டுமொத்தச் சூழலும் அழிக்கப்படுகிறது. ஒரு சமூகத்துக்கும் பண்பாட்டுக்கும் எழுத்தும் இலக்கியமும் செய்யும் மிகப் பெரிய துரோகம் அது.

டி.என்.ஏ பெருமாள் என்றொரு கானுயிர் புகைப்பட கலைஞர். கருப்பு வெள்ளைப் புகைப்படத்தின் மேதை. மேதைகளையும் மேதமைகளையும் புறந்தள்ளிவிட்டு மலினங்களை கொண்டாடும் நம்மில் பலருக்கும் அவரது மகிமை தெரியாதது ஒன்றும் அதிசயமில்லை. கானுயிர் புகைப்படக் கலையைப் பற்றிய அவரது கோட்பாடுகளில் ஒன்று, ஒரு கானுயிருக்கான உருவாக்கும்போயேது மூன்றில் ஒரு பகுதியேனும் அதன் சூழலைக் கொண்டிருக்கவேண்டும் என்பது.  வாழ்நிலையின் பின்னணியில்லாது எடுக்கப்படும் படங்கள் பொருளற்றவை.  பின்னணி முழுக்க மழுங்கடிக்கப்பட்டு உருவம் மட்டுமே துலங்கி நிற்கும் படங்கள் வழியாக சொல்வதற்கு எதுவுமில்லை.

 

இலக்கியமும் அப்படித்தான். கதை நிகழும் கதைமாந்தர்கள் உலவும் சூழலைச் சொல்லாமல் எழுதுவது என்பது உயிரற்ற நிறமற்ற சித்திரங்களை உருவாக்குவதுதான்.

 

இந்தச் சூழல் சித்தரிப்பு என்பது தனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிக் காட்டுவதாக எந்தக் கதையிலும் அமைந்ததில்லை. சூழலின் அனைத்து அம்சங்களுமே குறிப்பிட்ட அந்தக் கதையின் கதாபாத்திரத்தின் மன நிலையை, குறிப்பிட்ட கதை முடிச்சின் அழுத்தத்தைப் பிரதிபலிப்பதாகவே அமைந்திருக்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று.

இப்படியொரு மரபான கதை சொல்லி எழுதுகிற கதை இன்றைய நவீன உரைநடைக்கு, புனைகதைக்கு பொருந்தி வருமா என்ற சந்தேகமும் கேள்வியும் எழும். என்.ஸ்ரீராமின் கதைகள் பலவற்றில் நவீன புனைகதைக்கான வடிவ நேர்த்தி அமைந்திருக்காது. கச்சிதக் குறைவுகள் உண்டு. திருத்தமான சொல் முறை, நறுக்கான உரையாடல்கள் இடம் பெற்றிருக்காது.  இந்த வகையான இலக்கணங்களுக்கு ஸ்ரீராம் தன் கதைகளில் பெரிதாக மெனக்கெடுவதில்லை. ஏனெனில் அதற்கான தேவைகள் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.

ஆனால், நவீன புனைகதைகளுக்கான அகநுட்பங்களை என்.ஸ்ரீராம் தன் கதைகளில் தவறவிடுவதில்லை என்பதுதான் முக்கியமானது. மரபான விதத்தில் சொல்லப்பட்ட கதையாக இருந்தபோதிலும் அக்கதைகளில் அவர் நவீன சிறுகதைக்கான உட்கூறுகளை மிகக் கச்சிதமாக கையாண்டிருக்கிறார். அவருடைய பல கதைகளும் அந்தக் கதைகளின் முடிவிலிருந்து புதிதாக ஒரு கதையை யோசிக்கச் செய்கின்றவை. உதாரணமாக, ‘சிதைகோழி’, ‘பெயரைத் தொலைத்தவன்’.

அவர் கதைகளில் எல்லாவற்றையும் சொல்லிவிடுவதுபோலத்தான் தெரிகிறது. பல கதைகளில் அவர் சொல்லாமல் விடும் இடங்கள் அந்தக் கதைகளை வேறு கோணத்தில் யோசிக்கச் செய்கின்றன. நவீன புனைகதைக்கான முக்கியமான கூறு இது. உதாரணம் ‘மீட்பு’.

இந்த மரபான கதைசொல்லல் முறையைக் கொண்டே அவர் எல்லா வகைமைகளையும் முயன்று பார்த்திருக்கிறார். யார் எந்த விமர்சனக் கண்ணாடியை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு அவரது கதைகளை ஆராயலாம். பேய்க் கதை, முற்போக்குக் கதை, அரசியல் கதை, பெண்ணியக் கதை, சூழல் விழிப்புணர்வுக் கதை இதுபோல இன்னும் என்னவெல்லாம் கண்ணாடிகள் இருக்கிறதோ அவற்றையெல்லாம் கையில் எடுத்துக்கொண்டு இவருடைய கதைகளை சோதித்துப் பார்க்கலாம். ஒவ்வொரு கண்ணாடிக்கும் பொருந்துவதுபோல அவர் ஒரு கதையையாவது எழுதி வைத்திருக்கிறார்.  

பேய்க் கதை வேண்டும் என்றால், நிறைய கதைகளை எழுதியிருக்கிறார். சாதிய ஒடுக்குமுறையை விமர்சிக்கும் முற்போக்குக் கதைகளையும் எழுதியுள்ளார். பெண்ணிய கதைகளைத் தேடினால் அந்த வகைமைக்குள் அடங்கும் கதைகளும் உண்டு. சூழல் விழிப்புணர்வு சார்ந்த கதைகள் என்று கேட்டால் அவருடைய எல்லாக் கதைகளுமே சூழல் விழிப்புணர்வு கதைகள்தான். அரசியல் கதைகள் எழுதியிருக்கிறாரா என்ற சந்தேகம் எழலாம். முக்கியமான கதைகளை எழுதியிருக்கிறார்.

ஆனால், இந்தக் கதைகள் எவையுமே அந்தந்த கொள்கைகள் சார்ந்து அல்லது வகைமை சார்ந்த வெளிப்படையான உரத்த குரல் இன்றியேதான் எழுதப்பட்டிருக்கும். இதுமாதிரியான கண்ணாடிகளுக்குப் பொருந்திப்போகும் அதே சமயத்தில் அவை அனைத்துமே என்.ஸ்ரீராமின் கதைகளாக மட்டுமே தனித்து நிற்கும். அதுவே அவற்றின் சிறப்பு.

இறுதியாக, என்.ஸ்ரீராம் இத்தனை காலமும் எழுதி அடைந்த ஒரு இடத்தை குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். அதுவே ஒரு எழுத்தாளன் அடையக்கூடிய இலக்காக இருக்கும். இன்றைக்கு ஏதாவது ஒரு இதழில் ஸ்ரீராமோட கதையை அவருடைய பெயர் இல்லாமல் வெளியிட்டால்கூட படிக்கிறவர்களுக்கு அது அவர் எழுதியதுதான் என்று கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்காது. ஓரிரண்டு வரிகளில், பத்திகளிலேயே கண்டுபிடித்துவிடமுடியும். அந்தக் கதையில் அவ்வளவு அழுத்தமாக அவருடைய ‘கையெழுத்தை’ முத்திரையை பார்த்துவிட முடியும். அப்பிடியொரு இடத்துக்கு அவர் வந்து சேர்ந்திருக்கிறார். அவரை கொண்டாடுவதில் எல்லா நியாயங்களும் உள்ளது. அதனால்தான் இங்கு நாம் அவரைப் பற்றியும் அவருடைய கதைகளைப் பற்றியும் பேசுகிறோம்.

இதுமாதிரி பேசுவதின் வழியாக என்.ஸ்ரீராம் என்கிற பெயரை நாஙட தமிழ்ச் சூழலுக்கும் இன்றைய வாசகர்களுக்கும் ஞாபகப்படுத்துகிறோம், முக்கியத்துவப்படுத்துகிறோம் என்பது அவசியமானது, பெருமைக்குரியதும்கூட.

Tuesday 1 August 2023

‘வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’ அமலன் ஸ்டான்லி

 


பேரியற்கையின் முன் மனிதனும் ஓர் உயிர். பிரபஞ்சத்தின் எண்ணற்ற சிறிதும் பெரிதுமான உயிர்களுக்கு நடுவே அவனும் ஓர் உயிர்தான். என்றாலும் ஆற்றல் மிகுந்தவன். பகுத்தறிவுமிக்கவன். எனவே, பிற உயிர்களைக் காட்டிலும் மேன்மையுடனும் கூடுதல் மகிழ்ச்சியுடன் நிறைவுடன் வாழும் வாய்ப்பைப் பெற்றவன். ஆனால், உண்மையில் பிற அனைத்து உயிர்களைக் காட்டிலும் அதிகமும் துன்புறுவதும் அலைக்கழிந்து அல்லலுறுவதும் அவனன்றி வேறு எதுவுமில்லை. அறிவின் துணைகொண்டு நோய்களுக்கான காரணிகளைக் கண்டறிந்து நீளாயுளுடன் வாழ்வதை சாத்தியமாக்கியிருக்கிறான். அண்டமளக்கிறான். அணுவைத் துளைக்கிறான். காலம் இடம் சார்ந்திருக்கும் எல்லா எல்லைகளையும் கடந்து சாதனைகளைப் புரியத் தொடர்ந்து முயல்கிறான். இயற்கையை மீற எத்தனிக்கும்போது அதனை சிதைக்கவும் சீரழிக்கவும் தயங்குவதில்லை. இயற்கை முன்னிறுத்தும் எல்லைகளை அவன் தகர்த்தபடியே முன்னகர்கிறான். ஒன்றை அடைந்தவுடன் அதை அனுபவிக்க எண்ணாமல் அடுத்த இன்னொரு படிக்கு முயல்வதே அவனுடைய இயல்பாகிறது. இத்தனையும் எதன் பொருட்டு? எது அவனைத் தொடர்ந்து மேலும் மேலும் என இயக்குகிறது? ஏன் எதிலும் அவன் நிறைவுறுவதில்லை?

எல்லா உயிர்களுக்குள்ளும் அடிப்படையாக அமைந்திருக்கும் ‘உயிரிச்சை‘யே அவனையும் இயக்குகிறது. ஆனால், அது மனிதனுக்குள் ஒரு அணையா நெருப்பாக உக்கிரமாக எரிந்துகொண்டே உள்ளது. அந்த நெருப்பைக் கட்டுப்படுத்தும் பொருட்டே நாகரிகத்தின் வளர்ச்சிப்போக்கில் பல்வேறு விதிகளும் அமைப்புகளும் மனிதனால் உருவாக்கப்பட்டன. ஆனால், சுயநலத்தின்பொருட்டு அவனே அந்த நெறிகளையும் அறங்களையும் சமூக விதிகளையும் மீறிச் செல்வதற்கு யோசிப்பதேயில்லை.. உலகின் எல்லா தீமைகளுக்கும் காரணமாக அதுவே அமைகிறது.

இதை அப்படியே கண்மூடித்தனமாக மேற்கொள்கிறானா என்றால் அப்படியுமில்லை. உலகீய விழைவுகளுக்கான அடிப்படை எது? அதிலிருந்து எங்ஙனம் விடுபடுவது என்பதைப் பற்றிய தொடர்ச்சியான சிந்தனையின் பலனாகவே பல்வேறு யோக நெறிகளும் தியான முறைகளும் கண்டறியப்பட்டன. இச்சைகளால் அலைகழிக்கப்படும் மனத்தையும் உடலையும் கட்டுக்குள் கொண்டுவர இந்நெறிகள் பயன்படுகின்றன.

எளிய வாழ்க்கைப் பின்னணியைக்கொண்ட ஒரு சாதாரண சிறுவன், வாழ்வின் எல்லா நடப்பியல் அனுபவங்களையும், சிறிதும் பெரிதுமான கசப்பும் களிப்புமான அன்றாடங்களையும் கடந்து கல்வியின் வழியாகவும் தொடர்ச்சியான தேடலின் வழியாகவும் எதிலும் நிறைவுகொள்ளாத மனித மனத்தை உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பகுத்தறிய முயலும் பயணத்தைச் சொல்வதே இந்த நாவல்.

1970களில் தொடங்கும் இந்நாவல் வடசென்னையை பின்புலமாகக்கொண்டுள்ளது. கீழ் மத்தியதர மக்களுடைய வாழ்வின் பல்வேறு அம்சங்களை, அடையாளங்களை, தனிக்கூறுகளை அடுக்கிக் காட்டியபடியே விரிகிறது. தொகுப்பு வீடுகளிலும், தெருவிலும், பக்கத்து வீடுகளிலும் அன்றாடம் காணும் வாழ்க்கைச் சித்திரங்கள். பள்ளிகள், ஆசிரியர்கள், விளையாட்டுத் தோழர்கள், விந்தையான மனிதர்கள், வேடிக்கையான கதைகள். நோய்மை, மரணம், வரை மீறும் ஆண் பெண் உறவுகள், அவற்றின் விளைவுகள், துயரம், கண்ணீர் என எல்லாவற்றையும் காட்டுகிறது. வாலிபப் பருவத்தின் காதல் கனவுகள், சாகசங்கள், மனக்கோலங்கள், அபத்தங்களையும் விவரிக்கிறது. உயிரூட்டமிக்க கதாபாத்திரங்களைக் கொண்டு மனித உறவுகளின் தீர்க்கவியலா ஆழங்களைத் தொட்டுச் செல்கிறது.

ஒரு தனி மனிதனின் ஐம்பதாண்டு கால வாழ்வைச் சொல்வதன் ஊடாக இந்த நாவல் சென்னையின் புறச் சூழலிலும் சமூக அமைப்பிலும் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகளை, மாற்றங்களை, சிதைவுகளையும் நுட்பமாகவும் விரிவாகவும் சித்தரித்திருக்கிறது. எளிமையான ஒரு நகரம் பெருநகரமாகும்போது எவையெல்லாம் இல்லாமல் போயிருக்கின்றன என்பதையும் உணர்த்தியுள்ளது. கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், வேலை வாய்ப்புகள், பொருளாதாரம் ஆகியவற்றின் வழியாக நகரம் வளர்ந்து நவீனமயமாகும்போது அங்கு வாழும் மக்களின் வாழ்வும் அன்றாடங்களும் அந்த மாற்றங்களுக்கு கஏற்ப உருமாறுவதையும் நுட்பமாக புலப்படுத்துகிறது.

பெரும் தொழிற்சாலைகள் உருவாகி வளர்ந்து மண் வளத்தையும் சுகாதாரத்தையும் மாசுபடுத்தும் ஆலைக் கழிவுகள் அசுரவேகத்தில் குவிவதும், அதற்கு எதிர்நிலையில் சூழல் காப்பு குறித்த விழிப்புணர்வைத் தர முனையும் தன்னார்வக் குழுக்கள் தொடங்கப்பட்டு தொண்டாற்றுவதும் இணைச் சரடுகளாக நாவலில் அமைந்துள்ளன. அதேபோல, இன்னொரு சரடாக அமைந்திருப்பது  நோய்களின் மூலத்தை கண்டறியும் நோக்குடன் ஆரம்பிக்கப்படும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் பிரமாண்டமாக வளர்ந்து வியாபாரநோக்கை எட்டுவதும் அதன் எதிர்நிலையில் மனிதனின் உள்மன அறிதலைத் தரும் நோக்குடன் வெவ்வேறு தியான, யோக மார்க்கங்கள் பரவலாக உருவாவதும் அமைந்துள்ளது. இவ்வுலகின் ஆற்றல்கள் அனைத்தையும் சமநிலையுடன் பேணும் இயற்கையின் நடவடிக்கைகளோ இவை என யோசிக்க முடிகிறது. 


எண்ணற்ற கதாபாத்திரங்கள், ஏராளமான சம்பவங்கள் நாவலில் இடம்பெற்றிருந்தபோதும் வாழ்வின் திரண்ட சாரத்திலிருந்து அவை எழுதப் பட்டிருப்பதால் உயிரூட்டத்துடன் அமைந்துள்ளன.  ‘இந்த வாழ்வின் பொருள் என்ன?’ என்ற நாவலின் மைய கேள்விக்கு இத்தனை கதாபாத்திரங்களும் சம்பவங்களும் வெவ்வேறு கோணங்களில் அடிப்படைகளில் வலுசேர்க்கின்றன.

நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் மரணம் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது. மூப்படைந்தோரின் மரணங்கள், விபத்தினால் ஏற்படும் அகால மரணங்கள், நோயுற்ற மரணங்கள், எதிர்பாரா மரணங்கள் என்று எண்ணற்ற சாவுகள். வாழ்வின் அபத்தத்தை, நிலையாமையை, மெய்நிலையை உணர்த்தவே முனைகிறது மரணம். ஆனால், மனிதன் அதைக் கடந்து மேற்செல்லவே முயல்கிறான். அறிவைக்கொண்டு அதன் எல்லைகளை மீறவே விழைகிறான். உடலை இல்லாமல் ஆக்கும் மரணத்தை இயல்பாக அணுகும் முதிர்ச்சியை அடையவே மனத்தை அவன் பழக்க முற்படுகிறான். மரணத்தை மீறுவதன் வழியாக வாழ்வின் இருப்பை பொருள்கொண்டதாக மாற்ற ஆசைப்படுகிறான். இந்த மோதல் நாவலின் இன்னொரு வலுவான சரடாக அமைந்திருக்கிறது.    

கல்வியின் வழியாக ஒருவன் அடைய முடிகிற வாழ்வு. அதன் போதாமை. எதிலும் நிறைவு கொள்ளாமல் நீளும் ஆழ்மனத் தேடல். முறியும் உறவுகள். மனிதர்களின் மீது நீங்காத நம்பிக்கை, பிற உயிர்களின் மீது உள்ளார்ந்து ஏற்படும் பரிவும் கருணையும் என பல்வேறு ஆழங்களைக் கொண்டிருக்கும் இந்த நாவல் இயல்பான, சரளமான வாசிப்புத் தன்மையை எங்குமே தவறவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்வின் விசாரங்கள், யோக தியான அனுபவங்கள், சூழல் சீர்கேடு உள்ளிட்ட பொதுப் பிரச்சினைகள் போன்றவற்றை எழுதும்போது பொதுவாக  அமையநேரும் செய்தி எழுத்துத் தன்மை எங்குமே இடம்பெறவில்லை என்பது முக்கியமானது. கடந்த நாற்பதாண்டுகாலமாக இலக்கிய ஆக்கங்களின் மொழியிலும் நடையிலும் சிறுபத்திரிகைகள் வலுவான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறான தன்மையிலிருந்து விலகி நிற்பதே இந்த நாவலின் சிறப்பு. நாவலின் மொழியும் நடையும் மரபான தமிழில் அமைந்தவை. அதேசமயத்தில் நெருக்கமான வாசிப்பு அனுபவத்தைத் தருபவை. நாவலின் பிற்பகுதியில் எழுதப்பட்டுள்ள அத்தியாயங்களில் இவ்வாறான மொழியின் உச்சங்களை அனுபவிக்க முடியும்.

திருப்பதி குடைத் திருவிழா, ஆங்கிலோ இந்திய வாழ்க்கை, எதிர்பாராது அமைந்த மாட்டு வண்டி பயணம், பெருமழையின்போதான அபாயகரமான பேருந்து பயணம், பத்துநாள் மௌனம் அனுசரிக்கும் விபாஸனா தியானப் பயிற்சி, சிறுவர்களுடனான ஆனைமலைப் பயணம், ஜே கேயின் வசந்த விஹாரின் சூழல், கொடைக்கானல் அஞ்சுவீடுக் காட்டுப் பகுதியில் நேரும் அனுபவங்கள், காகங்களையும் மீன்களையும் உற்று நோக்குகையில் அடைய நேர்கிற மன எழுச்சிகள் போன்ற அபாரமான தருணங்கள் நாவலுக்கு செறிவூட்டியுள்ளன. பாடம் சொல்லித்தரும் தேவி அக்காவின் மீதான முதல் காதல், ஆராய்ச்சி மையத்தில் புவனாவுடனான காதலும் திருமணமும் பிறகு முறிவும், ஷெரீனுடனான அடுத்த காதலும் திருமணமும் என்று ஜெர்ரியின் வாழ்வினூடாக பெண் உறவுகள் நிலையின்மையுடன் இருந்தபோதும், எதிர்பாரா மரணங்களையும் ஏமாற்றங்களையும் சரிவுகளையும் சந்திக்க நேர்ந்தபோதும் அவன் சமநிலை குலைவதில்லை. தன்னியல்பில் அவன் பிறருக்கு உதவும் குணம்கொண்டவனாக, இசை, எழுத்து என கலைகளின் மீது ஆர்வம்மிக்கவனாக, உயிர்களின் மீது பரிவுள்ளவனாக, இயற்கையை அதன் விந்தைகளை ரசிப்பவனாக இருக்கும் தன்மையினால் இவ்வாறான அனுபவங்கள் அவனை நிதானப்படுத்துகின்றன. மேலும் பக்குவப்படுத்துகின்றன. வாழ்வை அதன் போக்கில் ஏற்றுக்கொண்டு அகம் சார்ந்த அறிதலும் உயிர்களின் மீதான பரிவுமே முக்கியம் என்ற நிலையை எட்டச் செய்கின்றன.

தொடக்கத்திலிருந்து சொல்லப்பட்ட எண்ணற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கை, அதன் சிக்கல்கள், துன்பங்கள், துரோகங்கள், தீர்வு காணமுடியாத புதிர்களைக் கொண்ட ஆண் பெண் உறவுகள், சரிவுகள், ஏமாற்றங்கள், சூழல் சீர்கேடு, நோய்மை, மரணங்கள் ஆகியவற்றிலிருந்து எழும் சிறிதும் பெரிதுமான பல்வேறு கேள்விகளுக்கும் விசாரணைகளுக்கும், தீர்வுகாண முயலும் ஒற்றைக் கதாபாத்திரமாக ஜெர்ரி திரண்டு நிற்பதை உணரும்போது நாவல் ஆழ்ந்த அமைதியுடன் நிறைவடைகிறது.

மனத்தை அறியவும் அதனைக் கட்டுப்படுத்தவுமான பல்வேறு யோக, தியான மார்க்கங்கள் நாவலில் சொல்லப்பட்டுள்ளன. முக்கியமாக பௌத்த தியான முறை, அதன் பயிற்சிகளைக் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், தமிழ் மெய்யியல் இவ்வகையான அனைத்து தேடல்களுக்கான சூத்திரங்களையும் உள்ளடக்கியது என்பதைத் தொடர்ந்து உதாரணங்களின் வழியாக சுட்டிக் காட்டுகிறது.

இந்த மனித வாழ்வை புரிந்துகொள்வதும், பிற அனைத்து உயிர்களையும் பெருங்கருணையுடன் அணுகுவதுமான மேலான நிலையை அடைவதே மானுட இருப்பின் பொருளாக இருக்க முடியும் என்பதை ஒரு உயிரியலாளனாகவும் ஆழ்மன தியானத்தில் உறைபவனாகவும் விலகி நின்று கண்டடைவதே இந்த நாவலின் சிறப்பு. செறிவான, மரபான தமிழ் நடையும் மொழியும் இந் நோக்கத்திற்கு வலுசேர்த்துள்ளன. அகத்தையும் புறத்தையும் நுட்பமாக அணுகி ஆராய்ந்து ஒன்றின் மீது மற்றது செலுத்தும் தாக்கங்களையும் உற்றறிந்து உயிரின் சாரத்தை வரையறுக்க முயலும் முதன்மையான தன்வரலாற்று நூல் இதுவேயாகும்.

( தமிழினி, ஜுலை 2023 )

 

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...