Sunday 3 February 2019

தமிழ் நாவல் வரலாறு – புதிய முயற்சி




(சுப்பிரமணி இரமேஷ் எழுதிய ‘தொடக்க காலத் தமிழ் நாவல்கள்’ நூலுக்கான முன்னுரை )

இலக்கிய ஆக்கங்களுக்கு இணையாக இலக்கியத்தைப் பற்றிய விமர்சனங்களும், விவாதங்களும், ஆய்வுகளும், பட்டியலாக்கங்களும் நிகழ்வதென்பது ஒரு ஆரோக்கியமான சூழலின் அடையாளம். இலக்கியம் பின்வரும் தலைமுறைக்கு பண்பாட்டுச் சேகரமாக அமைய மூலப் படைப்புகள் முக்கியம். அதே அளவில் அவற்றின் பின்னணிகளையும் அவை வெளியான காலம், பண்பாட்டுச் சூழல், சமகால இலக்கியம் போன்றவற்றைப் பற்றியுமான தகவல்களும் இலக்கியப் படைப்பைக் குறித்த ஆய்வுக்கு இன்றியமையாதன. தமிழில் இலக்கியம் எழுதப்படும் அளவுக்கு அவை முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. தொகுக்கப்படுவதுமில்லை. நமக்கு இப்போது கிடைக்கும் முக்கியமான பல ஆய்வுகளும் தொகுப்புகளும் தனி மனித அக்கறையின் காரணமாக அமைந்தவையே.
தமிழ் சிறுகதையின் நூற்றாண்டு விழா சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டாப்பட்டது. இதுபோன்ற விழாக்கள் சம்பிரதாயமானவைதான் என்றாலும் இதுவரையிலான பாதையில் அடைந்த சாதனைகளையும் அடையத் தவறின இலக்குகளையும் குறித்த விமர்சனத்துக்கும் விவாதங்களுக்குமான சந்தர்ப்பமாய் அமைபவை அவை. சிறுகதைக்கும் முன்பே தமிழ் நாவல்களின் காலம் நூற்றாண்டுகளை கடந்துவிட்டது. அதைப் பற்றிய கவனம் நம் இலக்கியச் சூழலில் ஏன் இல்லாமல் போனது என்பதைப் பற்றி யோசிக்கவேண்டும். நாவல்களைப் பற்றிய கவனமுமே இப்படித்தான் இதுவரையிலும் இருந்துள்ளது என்பதும் உண்மையே. நாவலின் பயணம் ஏற்றமும் இறக்கமுமான ஒன்றே.

நாவல் இலக்கியத்தைப் பற்றிய குறிப்பிடத்தக்க நூல்களும் ஆய்வுகளும் வெகு சிலவே. தமிழில் நாவலைப் பற்றிய உரத்தச் சிந்தனையின் தொடக்கம் க.நா.சு. அவரது ‘முதல் ஐந்து நாவல்கள்’, ‘சிறந்த பத்து இந்திய நாவல்கள்’, ‘உலகின் சிறந்த நாவல்கள்’, ‘படித்திருக்கிறீர்களா?’, ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ ஆகிய புத்தகங்களின் வழியாக தமிழில் நாவல்களைக் குறித்த அறிமுகங்களையும் விவாதங்களையும் முன்னெடுத்தார். சிட்டி பெ கோ சுந்தர்ராஜனின் ‘தமிழ் நாவல் – நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்’, ராஜம் கிருஷ்ணனின் ‘நூறாண்டு தமிழ் நாவல் தரும் செய்தி’, ஞானியின் ‘எண்பதுகளில் தமிழ் நாவல்கள்’, ஜெயமோகனின் ‘நாவல் கலை’ என்று இன்னும் சிலவற்றைக் குறிப்பிடலாம். இவைத் தவிர இன்னும் சில தொகுப்பு நூல்களும், பட்டியல் நூல்களும் உள்ளன.

1879ல் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்ட ‘பிரதாப முதலியார் சரித்திர’த்தை முதல் நாவலாகக் கொண்டால் இந்த நூற்றுநாற்பது ஆண்டு காலத்தில் தமிழ் நாவல் சீரான வளர்ச்சியைக் கண்டுள்ளதா என்று யோசித்தால் இல்லை என்றே சொல்லவேண்டும். 1879க்கும் 1900க்கும் இடைப்பட்ட காலத்தில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனாலும் அவற்றுள் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’, பி.ஆர்.ராஜம்மய்யரின் ‘கமலாம்பாள் சரித்திரம்’, அ.மாதவையாவின் ‘பத்மாவதி சரித்திரம்’ ஆகிய மூன்று நாவல்களே தமிழ் நாவல் வரலாற்றில் முக்கியமானவையாகக் குறிப்பிடப்படுகின்றன. இதன் பிறகு 1940 வரைக்குமான காலகட்டம் ‘தமிழ் நாவல்களின் இருண்ட காலம்’ என்றே சொல்லப்படுகிறது.

தமிழ் நாவல்களின் முதல் ஐம்பதாண்டுகளில் வெளியான நாவல்களைக் குறித்து ‘மேன்மை’ இதழில் எழுதப்பட்ட கட்டுரைகளே இத்தொகுப்பில் உள்ளன. வரலாற்றுப் பின்னணியிலும் இலக்கிய ஆய்வு நோக்கிலும் முக்கியமானவை இக்கட்டுரைகள். நாவல் என்ற இலக்கிய வடிவம் காலப்போக்கில் அடைந்த வளர்ச்சியையும் அதன் வளத்தையும் மதிப்பிட இவ்வகையான கட்டுரைகள் அவசியம். 1879ல் வெளியான ‘பிரதாப முதலியார் சரித்திர’த்தில் தொடங்கி 1952ல் வெளிவந்த ந.சிதம்பர சுப்ரமணியத்தின் ‘இதய நாதம்’ வரைக்குமான 25 நாவல்களைப் பற்றிய செய்திகளையும், நாவலாசிரியர்களைக் குறித்தும், நாவலின் முக்கியத்துவங்களைப் பற்றியும் என விரிந்துள்ளன இக்கட்டுரைகள்.

இந்தக் கட்டுரைகளின் வழியாக ரமேஷ் அறியத்தருகிற சில தகவல்களும் பின்னணிகளும் கவனிக்கத்தக்கவை.

சுப்ரமணிய பாரதி ஒரு நாவலாசிரியர் என்பது பலருக்கும் ஆச்சரியமளிக்கக் கூடியதாக இருக்கும். 1920ல் வெளியான ‘சந்திரிகையின் கதை’ என்ற முற்றுப்பெறாத அந்த நாவலைக் குறித்த கட்டுரையில் பல சுவாரஸ்யமான விஷயங்களை குறிப்பிடுகிறார். அவற்றுள் ஒன்று, வாழும் ஆளுமைகள் (ஜீ.சுப்ரமணிய ஐயர், வீரேசலிங்கம் பந்துலு) இருவரை நாவலின் கதாபாத்திரங்களாக அமைக்கும் உத்தியை பாரதி இந்த நாவலில் தமிழில் முதன்முறையாகக் கையாண்டிருக்கிறார்.  நவீன நாவல்களின் அடையாளங்கள் சிலவற்றைக் கொண்டுள்ள இந்த நாவல் பத்து அத்தியாயங்களோடு குறைபட்டு நின்றுபோனது.

‘தமிழ் சினிமாவின் ராணி’யாக விளங்கிய டி.பி.ராஜலட்சுமி 1931ல் ‘கமலவல்லி’ என்ற நாவலை எழுதி வெளியிட்டுள்ளார். அந்த நாவலை விடவும் ராஜலட்சுமியைப் பற்றிய தகவல்கள் பலவும் ‘நடிகையர் திலக’த்தை நினைவுபடுத்துகின்றன.

தமிழ் நாவல்கள் வரலாற்றில் பி.ஆர்.ராஜம்மய்யரின் ‘கமலாம்பாள் சரித்திர’த்துக்கு முன்பாக, இரண்டாம் இடத்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய நாவல் என்று சு.வை.குருசாமி சர்மாவின் ‘பிரேமகலாவத்யம்’ என்ற நாவலைப் பற்றிச் சொல்லும் கட்டுரை ஆய்வுநோக்கில் முக்கியமானது.

சிறுகதையாசிரியராக மட்டுமே அறியப்படும் கு.பா.ராஜகோபாலனின் ‘வேரோட்டம்’ நாவல் 1944ல் வெளியாகியுள்ளது. இன்று பெரிதும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும் ‘திருமணமின்றி சேர்ந்திருத்தல்’ என்ற கதைக்கருவை கு.பா.ரா இந்த நாவலில் கையாண்டிருக்கிறார் என்பதை நாவலைக் குறித்த கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த இருபத்தி ஐந்து நாவல்களில் மூன்று நாவல்கள் பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்டுள்ளவை. திராவிட அரசியல் வரலாற்றில் அறியப்படும் மூவலூர் இராமாமிர்தம் 1936ல் எழுதியுள்ள நாவலின் பெயர் ‘தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’. இரண்டாமவர் சினிமா நடிகையான டி.பி.ராஜலட்சுமி. மூன்றாமவர் வை.மு.கோதைநாயகி அம்மாள்.

தமிழ் நாவல்களின் தொடக்க கால வரலாற்றில், இலக்கிய தர வரிசைகளில் அவை இடம்பெறாவிட்டாலும்கூட, துப்பறியும் நாவல்களுக்கு முக்கியமான இடமுண்டு. டி.எஸ்.டி.சாமி, ஜே.ஆர்.ரங்கராஜூ, ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் கே.துரைசாமி ஆகியோரின் நாவல்களைப் பற்றிய கட்டுரைகளும் உள்ளன.  துப்பறியும் நாவல்களை எழுதிய இவர்களது வாழ்க்கையைப் பற்றிய தகவல்கள் ஆச்சரியமளிக்கின்றன. ஜே.ஆர்.ரங்கராஜுவின் முதல் நாவலான ‘ராஜாம்பாள்’ 26 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இக்கதையை அடிப்படையாகக் கொண்டு மூன்று திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. எழுதிப் பிழைக்க முடியுமா என்ற கேள்வியே அபத்தம் என்று சொல்லுமளவுக்கு செல்வந்தராக வாழ்ந்திருக்கிறார். அண்ணா பொறியியல் கல்லூரிக்கு அருகில் ‘ஜகநாத்பாக்’ என்ற மாளிகையும் பெரிய தோட்டமும் இருந்துள்ளன. கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி இவருடைய பெயரில்தான் ‘ரங்கராஜபுரம்’ என்று அழைக்கப்படுகிறது. கூடவே, ‘வரதராஜன்’ என்ற நாவலின் சில பகுதிகள் ‘இலக்கியத் திருட்டு’ என்று வழக்குத் தொடுக்கப்பட்டு சிறை தண்டனையும் அனுபவிக்கும் சரிவையும் சந்தித்திருக்கிறார்.

இந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட நாவல்களில் பலவும் திரைப்படங்களாக்கப் பட்டுள்ளன. ‘தியாக பூமி’, ‘கள்வனின் காதலி’ ஆகிய இரண்டு நாவல்களையும் கல்கி திரைப்படங்களுக்காகவே எழுதியுள்ளார்.

ஆர்.சண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’, தி.ஜானகிராமனின் ‘அமிர்தம்’, அகிலனின் ‘பெண்’, க.நா.சுவின் ‘ஒரு நாள்’ ஆகிய நாவல்களைப் பற்றியும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

முதல் ஐம்பது ஆண்டுகளில் வெளியான நாவல்களைக் குறித்து இன்று வாசிக்கும்போது அவற்றில் பல விமர்சனங்கள் எழக்கூடும். சமகால நோக்கில் இந்த நாவல்களின் பொருட்படுத்தத்தக்க அம்சங்களையும் கூடவே அவற்றின் பலவீனங்களையும் கட்டுரைகளில் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய தமிழ் நாவல் எட்டியுள்ள உயரங்களுக்குப் பின்னால் உள்ள நெடுங்கால உழைப்பையும் பங்களிப்புகளையும் உணரும் விதத்தில் இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. நாவல்கள் குறித்த ஒட்டுமொத்தமான இவ்வாறான ஆய்வுகளும் விவாதங்களுமே அந்த இலக்கிய வடிவத்தைப் பற்றிய மேலதிகமான புரிதலுக்கு வழிவகுக்கும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பல நாவல்கள் இன்று பதிப்பில் இல்லை. ஆனாலும் பெருமுயற்சியுடன் அவற்றை நூலகங்களில் தேடிப் படித்து கட்டுரைகளை எழுதியுள்ளார் ரமேஷ். அத்துடன் நாவல்கள் குறித்து இதுவரையிலும் வெளியான பல நூல்களையும் தேடிப் படித்து தன் கட்டுரைகளுக்கு தரவுகளை சேகரித்துள்ளார். இவ்வாறான முயற்சியின் வழியாகவே நாவல் இலக்கியம் குறித்த முழுமையான வரலாற்றை உருவாக்க முடியும். அந்த முயற்சியின் முதற்படியாக இந்நூலை நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

இந்த நூலை வெளியிடும்போது குறிப்பிட்ட நாவலின் முகப்புப் படத்தையும் நாவலாசிரியர்களின் படத்தையும் சேர்க்க முடிந்தால் இன்னும் சிறப்பாக அமையும். ( நூல் அவ்வாறே வெளியாகியுள்ளது ).

ஐம்பது ஆண்டுகள் அளவில் வெளியான நாவல்களைப் பற்றிய இந்த நூலைத் தொடர்ந்து அடுத்த காலகட்டத்துக்கான நாவல்களைக் குறித்தும் கட்டுரைகளைத் தொடரவேண்டும். மூன்று ஐம்பது ஆண்டுகளை உள்ளடக்கிய ஒரு பெருந்தொகுப்பு தமிழ் நாவல் வரலாற்றை அறிந்துகொள்வதில் முழுமையான தொகுதியாக அமையும். ரமேஷ் தன் பணியை சிரத்தையுடன் மேற்கொள்வார் என்றால் அவ்வாறான ஒரு தொகுதி வெளியாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.


No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...