Tuesday, 23 October 2018

திக்குகள் எட்டும்




கார்த்திகை பாண்டியனின் ‘எருது’ மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து)
0
பிற மொழியிலிருந்து ஒரு கவிதையையோ கதையையோ மொழிபெயர்க்கவேண்டும் என்ற எண்ணம் எப்போது எழுகிறது? குறிப்பிட்ட அந்தப் படைப்பு தமிழின் வாசிப்பு அனுபவத்துக்கு புதுமையான ஏதேனுமொரு அம்சத்தை சேர்க்கும் தன்மை கொண்டதாக அமையும்போதே அதை நம் மொழியில் மாற்றித்தர முனைகிறோம். தமிழ் வாசிப்பு உலகுக்கு புதியவொரு கதாபாத்திரத்தை, நிலவெளியை, நூதனமான கலாச்சார அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக அது அமைய வேண்டும். இல்லாதவொன்றை இங்கு தரவேண்டும் என்பதே அடிப்படை.

சிடுக்குகள் நிறைந்த, காலகாலமாய் முயன்றும் அறுதியிட்ட வகுக்க முடியாத மானுட மனத்தின் புதிர்வழியில் புதியவொரு தடத்தைப் பதிக்கும் அசலான முயற்சி வேற்றுமொழிப் படைப்பில் இருக்குமென்றால் அதைத் தமிழில் தருவது முக்கியமான பங்களிப்பே. மானுடத்தை அறிய மொழிகளைக் கடப்பது அவசியமென்றால் மொழியாக்கங்களின் வழியாக அதைச் செய்வது அவசியமே.

ஒவ்வொரு படைப்பாளியும் தனது கலாச்சாரத்துக்குள்ளிருந்து மொழி அனுமதிக்கும் எல்லைகளுக்குள்ளாகவே வெளிப்பட முடிகிறது. சில சந்தர்ப்பங்களில் அந்த வெளிப்பாடு முழுமையற்றதென உணர நேரிடும். வெளிப்படுத்த முடியாத ஏதோவொன்று புதையுண்டு கிடக்கக்கூடும். இன்னொரு மொழியின் படைப்பில் அவ்வாறான அம்சங்கள் இயல்பாகவும் உக்கிரத்துடனும் வெளிப்பட்டிருப்பதைக் காணும்போது அதை தமிழாக்கலாம் என்ற முனைப்பு எழும்.

வெளியில் என்ன நடக்கிறது என்பதை அறியாதவரை நாம் செய்யும் காரியங்களே நமக்குப் பெரிதாகத் தோன்றும். இன்னொன்றுடன் ஒப்பிடும்போதுதான் நாம் அடைந்த உயரங்கள் அல்லது நாம் அடைய வேண்டிய இலக்குகளை நம்மால் உணரமுடியும். பிறமொழிகளில் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் நமது இலக்கியத்தை மேலும் மேலும் நவீனப்படுத்துவதும் செறிவாக்குவதும் சாத்தியமற்ற ஒன்று.
0
பாரதி தொடங்கி புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன் வரையிலும் தமிழின் முன்னணிப் படைப்பாளிகள் பலரும் மொழியாக்கத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதில் ஈடுபட்டிருந்தபோதும் இதில் தனித்துத் தெரிபவர் க.நா.சு. ஐரோப்பிய இலக்கியத்தை தமிழில் தரும் அபாரமான அயராத முயற்சியில் சுயமான தன் எழுத்துக்கு முக்கியத்துவம் தரவில்லை க.நா.சு. இன்று அவரது படைப்புகளுக்காக குறிப்பிடப்படுவதைக் காட்டிலும் அவர் தந்த மொழிபெயர்ப்புகளுக்காகவே அதிகமும் நினைக்கப்படுகிறார். .நா.சு அன்றி தேவமலரையோ, மத குருவையோ, பசியையோ வாசித்திருக்க முடியாது. திருலோக சீதாராம் முயன்றிருக்காவிட்டால் ‘சித்தார்த்தனை’ படித்திருக்க வாய்ப்பில்லை. ‘போரும் அமைதியும்’, ‘அன்னா கரீனினா’ உள்ளிட்ட ரஷ்ய பேரிலக்கியங்களை டி.எஸ்.சொக்கலிங்கம், வெ.சந்தானம் ஆகியோரின் உழைப்பின்றி ரசித்திருப்பது சாத்தியமில்லை.

1980களில் சிறுபத்திரிக்கைகள் உரம்பெற்றபோது மொழிபெயர்ப்பிலும் புதிய தெறிப்புகள் நிகழ்ந்தன. பிரம்மராஜனின் ‘மீட்சி’யின் வழியாக உலகக் கவிதைகளும் சிறுகதைகளும் மொழிபெயர்க்கப்பட்டன. 1982ல் மார்க்வெஸ் நோபல் பரிசு பெற்றதை அடுத்து லத்தீன் அமெரிக்க இலக்கியம் தமிழுக்கு அறிமுகமானது. அதுவரையிலும் பிறமொழி நாவல்களே அதிகமும் மொழிபெயர்க்கப்பட்டிருந்த நிலை மாறி சிறுகதைகளை தமிழாக்கம் செய்யும் போக்கு முதன்மைபெற்றது. மார்க்வெஸ்ஸின் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தூக்கம் கதையை பலரும் மொழிபெயர்த்தனர். பிரம்மராஜன், ஆர்.சிவகுமார், சா.தேவதாஸ், உள்ளிட்டோர் முக்கியமான கதைகளைத் தமிழில் தந்தனர். மார்க்வெஸ்ஸின் தொகுப்பின் கதைகள் அனைத்துமே மொழிபெயர்ப்பாயின. ‘லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்’ தொகுப்பை மீட்சி வெளியிட்டது. ஆர்.சிவகுமார் தொகுத்த இந் நூலில் போர்ஹே, கிமாரஸ் ரோஸா, யுவான் ருல்போ, மரியோ பெனடடி, ஆக்டோவியா பாஸ், கார்லஸ் புயண்டஸ் உள்ளிட்டோரின் கதைகளை எதிராஜ் அகிலன், மணிக்கண்ணன், சம்யுக்தா, நாகார்ஜுனன், பிரம்மராஜன் ஆகியோர் மொழிபெயர்த்திருந்தனர். இதைத் தவிர 1994ம் ஆண்டு வர்ஷா பதிப்பகத்தினர் ‘மற்ற மரணம்’ என்ற பெயரில் லத்தீன் அமெரிக்கக் கதைகளை வெளியிட்டனர். 2006ம் ஆண்டு ராஜகோபாலின் மொழியாக்கத்தில் நிழல் பதிப்பகம் ஒரு தொகுப்பை வெளியிட்டது.போர்ஹே, இடாலோ கால்வினோ ஆகியோரின் கதைகளை பிரம்மராஜன் மொழியாக்கம் செய்து தொகுத்தளித்திருக்கிறார்.

புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன், கி..சச்சிதானந்தன், நகுலன், கோணங்கி, சாருநிவேதிதா, எம்.எஸ், .ரத்னம், அமரந்தா, விஜயகுமார், கால சுப்ரமணியன், சி.மோகன், ஜி.குப்புசாமி, எம்..சுசீலா, ராஜகோபால், செங்கதிர், .மோகனரங்கன் அரவிந்தன், அசதா என உலகக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளவர்களின் பெரும் பட்டியல் உண்டு. (இந்தக் கட்டுரையை எழுதும்போது என் நினைவில் வந்த பெயர்களை மட்டுமே இங்குக் குறிப்பிட்டுள்ளேன். இவர்களைத் தவிர இன்னும் பலர் பங்களித்திருக்கக் கூடும்.)

நூல்களைப் பற்றித் தெரிந்துகொண்டு அவற்றைப் பெறுவதும் பிறகு அதை மொழிபெயர்ப்பதும் சிரமமானதாகவும் காலமெடுத்துக் கொள்வதாகவும் இருந்த சூழல் இன்றில்லை. இணையமும் தகவல்தொழில் நுட்பமும் உலகின் அனைத்து மொழி இலக்கியங்களையும் நமது கணிணிக்குள் எந்த நேரத்திலும் அணுகும்படியான வாய்ப்பைத் தந்துள்ளன. உலகின் எந்தவொரு மொழியில் எழுதப்பட்டிருக்கும் கதையையும் நம்மால் தேடிப் படித்துவிட முடியும். கார்டியன், நியூயார்க்கர், கிராந்தா போன்ற சஞ்சிகைகளின் வழியாக உலக இலக்கியத்தில் என்ன நடக்கிறது என்பதை உடனடியாகத் தெரிந்துகொள்ளவும் முடிகிறது.
0
இன்றைய உலகளாவிய தொழில்நுட்பம் மொழிபெயர்ப்பதற்கான கதைகளையும் வாய்ப்புகளையும் திறந்து வைத்திருக்கும் இச்சூழல் சாதகமான அதே அளவுக்கு பாதகமானதும்கூட. மொழிபெயர்ப்பதற்கும் உடனடி கருவிகளை தயார் நிலையில் தருகிற வசதி பல போலிகளையும் அல்லது உத்வேகமற்ற தொழில்முறை முயற்சிகளையும்கூட உருவாக்குகிறது.
இந்தச் சூழலில் மொழிபெயர்க்க வந்த கார்த்திகைப் பாண்டியன் தனக்கு முன்னாலிருந்த சவால்களை தெளிவுறத் தெரிந்திருந்தார் என்பதை அவரது எருது சிறுகதைத் தொகுப்பு உறுதிப்படுத்துகிறது. தமிழில் இதுவரைக்கும் அறிமுகமானவர்களைத் தவிர்த்து முக்கியமான பிற எழுத்தாளர்களின் கதைகளை மொழிபெயர்க்க அவர் முனைந்திருப்பது ஆரோக்கியமானது.
சித்தார்த்தன் நாவலின் வழியாக மட்டுமே தமிழில் பெயர்பெற்றிருந்த ஹெஸ்ஸேவின் ‘கவிஞன்’ என்ற முக்கியமான கதையை அவர் மொழிபெயர்த்திருக்கிறார். கலையின் மேல் பித்துகொண்டவனின் ஆன்மா லௌகீக உலகைப் பொருட்படுத்தாது விலகித் திரிவதையும், பொருள்சார் உலகில் அனைத்துமே கடந்து செல்லக்கூடியவைதான் எனும் யதார்த்தத்தையும் வெகு அழகாக முன்வைக்கிறது இக்கதை.

மோ யான் என்ற சீன எழுத்தாளர். நோபல் பரிசு பெற்றவர். அவருடைய ‘எருது’ என்ற சிறுகதை தொகுப்பின் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்திய கலாச்சாரத்துக்கும் குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கும் சீனக் கலாச்சாரத்துக்கும் இடையிலான ஒப்புமைகளை இந்தக் கதையில் அறிய நேரும்போது இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது. கதையை முன்வைக்கும் பாணியிலும் இந்தியத் தன்மை இருப்பதையும் அறிய முடிகிறது.

ரைஸ் ஹ்யூக்ஸ் பல்வேறு விதங்களில் கதைசொல்ல முயல்பவர். நேரடியான சித்தரிப்பு முறைக்கு மாறாக பரீட்சார்த்தமான வேறுபட்ட உத்திகளைக் கொண்டு நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதுபவர். இத்தொகுப்பிலுள்ள அவரது ‘கல்லறை சாட்சியம்’ என்ற கதை மாயமும் யதார்த்தமும் தேவதைக் கதைகளுக்கான செவ்வியல் தன்மையும்மிக்க கதை. சின்னஞ்சிறிய இக்கதை அமைப்பிலும் சொல்முறையிலும் குழந்தைகள் கதை போன்றிருப்பினும் வாசிப்பிலும் அதன் பின்பும் இது ஏற்படுத்தும் உணர்வுகள் அலாதியானவை.
கிரகாம் கிரீன் நமக்கு அறிமுகமான பெயர் என்றபோதும் அவரது கதைகள் தமிழில் அறியப்படாதவை. ‘நீலப்படம்’ என்ற கதை ஆண் பெண் உறவில் உள்ள புதிர்வழியைத் தொட முயலும் ஒன்று. அதேபோல அமெரிக்க நாவலாசிரியையான டோனி மாரிசன் நமக்குப் புதியவரல்ல. பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ள அவரது ஒரே சிறுகதை 1983ல் வெளியானது. ‘வசன கவிதை’ என்ற இக்கதை இருவேறு இனங்களைச் சேர்ந்த தோழிகளின் வாழ்வைப் பேசுகிறது.

லத்தீன் அமெரிக்காவின் முந்தைய தலைமுறையின் மாய யதார்த்தவாதத்தை தொழில்நுட்ப நோக்கில் நவீன யதார்த்தவாதமாக திசைமாற்றியவர்களில் ஒருவர் எட்மண்டோ பாஸ் சோல்டன். பொலிவியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர். சமகால உலகின் நிறவெறியின் பேரிலான அபத்தமான வன்முறையை களமாகக் கொண்டது ‘வால்வோ’ என்ற அவரது சிறுகதை.
எகிப்திய எழுத்தாளர் யூசுப் இதிரிஸ் ஒரு நாடக ஆசிரியரும்கூட. தன் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு படைப்புகளைத் தரும் அவரது ‘சதையாலான வீடு’ சிறுகதை பார்வையற்றவனுக்கும் விதவைத் தாயுடன் வசிக்கும் மூன்று பெண்களுக்குமான உறவினை அடிப்படையாகக் கொண்டது. சித்தரித்திருக்கும் விதம் இக்கதைக்கு வலு சேர்க்காதபோதும் கதைக்கருவின் உக்கிரத்தால் இக்கதை தன்னை நிறுவிக் கொண்டிருக்கிறது.

அம்புரோஸ் பியர்ஸின் ‘சட்டமிடப்பட்ட சாளரம்’ வாய்மொழிக் கதையின் தன்மையைக் கொண்டது. 1891ல் எழுதப்பட்டது இக்கதை இன்றும் தன் வாசிப்புத் தன்மையை தக்கவைத்திருப்பதே இதன் சிறப்பு.

பத்துக் கதைகளைக் கொண்ட இத் தொகுப்பில் நமக்கு முன்பே அறிமுகமான ஹெஸ்ஸே, டோனி மாரிசன், மோ யான் ஆகியோரைத் தவிர கார்த்திகை பாண்டியன் மொழியாக்கம் செய்திருக்கும் பாஸ் சோல்டன், யூசப் இதிரிஸ், ரைஸ் ஹ்யூக்ஸ் ஆகியோர் தமிழுக்கு புதியவர்கள். புதிய திசையிலிருந்தும் புதிய மொழியிலிருந்தும் கதைகளைத் தமிழுக்குத் தரும் கார்த்திகை பாண்டியனின் முயற்சியும் ஆர்வமுமே அவரை பிற மொழிபெயர்ப்பாளர்களிலிருந்து தனித்துவப்படுத்துகின்றன.

பரீட்சார்த்தமான எழுத்து முறை என்பது தொடர்ந்து தமிழில் முன் வைக்கப்படும் ஒன்று. மாய யதார்த்தம் என்ற போக்கு லத்தீன் அமெரிக்கக் கதைகளிலிருந்து தொற்றிக்கொண்டது. மொழியில் விளையாட்டு, புதுமையான சித்தரிப்பு முறை என்று புதிய உத்திகள் பல போர்ஹேவிடமிருந்து இங்கு முன்வைக்கப்பட்டது. ஆயினும் அவை அனைத்தும் புதுமையான சொல்முறை என்ற அளவிலேயே முக்கியத்துவம் பெற்றன. தமிழின் பொதுத் தன்மையில் கூறுமுறையில் கணிசமான மாற்றங்களை இவை ஏற்படுத்தவில்லை. அது இயல்பே. இத்தொகுப்பிலும் அவ்வாறான கதைகள் சில உள்ளன. கார்த்திகை பாண்டியனுக்கு அவ்வாறான சொல்முறையில் ஆர்வம் இருப்பதை அவரது புனைகதைகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

மொழியாக்கம் குறித்து இரு தரப்புகள் எப்போதும் உண்டு. மூல மொழிக்கு முற்றிலும் உண்மையாக நின்று சொற்களையும் வாக்கியத்தையும் உள்ளபடியே மொழிபெயர்ப்பது என்பது ஒன்று. அவ்வாறன்றி தமிழுக்கு ஏற்றவகையில் வாக்கியங்களை மாற்றியோ அல்லது உடைத்தோ மொழிபெயர்க்கலாம் என்பது மற்றது. கார்த்திகை பாண்டியன் மூலத்தை ஒட்டி அப்படியே மொழிபெயர்க்கும் முதல் தரப்பைச் சார்ந்தவர். தமிழில் அவ்வாறான வாக்கிய அமைப்புகளோ இலக்கணங்களோ இல்லாதபோதும் பிறமொழியின் அமைப்புடனும் இலக்கணத்துடனும் தமிழில் எழுதுவதைப் பற்றிய கேள்விகள் எப்போதும் உண்டு. உதாரணத்துக்கு ‘கொனியா, மொரிசியோ மற்றும் நான், பூங்காவின் மேசையின் மீதமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த மூன்று பெண்களை அணுகினோம்’ ( வால்வோ – பக்கம் 113 ) என்ற வாக்கியத்தைச் சொல்லலாம். அதேபோல, பக்கம் 135 ல் எருது கதையில் உள்ள வாக்கியமும் அவ்வாறான கேள்வியை எழுப்புகிறது ‘அவர்களின் தலைக்குள் இந்த உலகின் என்னதான் நடக்கிறது?”
கல்குதிரை’, ‘வலசை’ உள்ளிட்ட இதழ்களில அவ்வப்போது வெளியான கதைகளின் தொகுப்பு என்பதால் கார்த்திகை பாண்டியனின் கதைத் தேர்வு முறை குறித்து எதையும் அனுமானிக்க முடியவில்லை. ஆயினும் பத்து கதைகளையும் கவனிக்கும்போது ஒவ்வொன்றும் அதனதன் அளவில் தனித்துவமிக்கதாகவும் தமிழ் வாசகர்களுக்கு புதிய வாசிப்பு அனுபவத்தைத் தரக்கூடியதாகவும் அமைந்துள்ளன.

மொழியும் இலக்கியமும் தம்மைப் புதுப்பித்துக்கொள்ள பிறமொழி ஆக்கங்களை அனுமதிப்பதும் அவற்றிலிருந்து ஆக்கப்பூர்வமானவற்றை ஏற்றுக்கொள்வதும் அவசியம். மாறிவரும் உலகின் வேகமான மாற்றங்களை இன்னும் வேகமாக உள்வாங்கிக் கொள்வதின் வழியாகத்தான் தொடர்ந்து இலக்கியத்தையும் எழுத்தையும் புதுப்பித்து முன்னகர முடியும். அறியப்படாத மொழியிலிருந்து புதிய எழுத்துக்களை தரமுயலும் கார்த்திகை பாண்டியன் போன்றோர்களின் முன்னெடுப்பு இந்த வகையில் முக்கியமானதும் தவிர்க்க முடியாததும் ஆகும்.


No comments:

Post a Comment

யுவன் - விஷ்ணுபுரம் விருது

  1 இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு டிசம்பர் மாதம். அலுவலகப் பயிற்சி நிமித்தமாக புனே சென்றிருந்தேன். அன்று காலை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்ற...