Showing posts with label கவிதையும் ஞானமு. Show all posts
Showing posts with label கவிதையும் ஞானமு. Show all posts

Sunday, 4 October 2026

அம்மாவின் நீங்கா நிழல் - கவிதையும் ஞானமும் 16 - சதீஷ்குமார் சீனிவாசன்

 


போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிருச்சி. வீட்ல சின்னதா ஒரு கெட் டுகதர். நீயும் வந்தா நல்லாருக்கும். அம்மாவும் சொன்னாங்க.”

பிஷப் உபகாரசாமி பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தபோதுதான் சரவணனை முதன்முதலாகப் பார்த்தேன். எண்ணெயிட்டு படிய வாரியத் தலை. திருத்தமான உடை. பார்த்தவுடனே பேசத் தொடங்கிவிட்டோம். ஒருநாள் மதியம் எதிர்பாராமல் பள்ளியில் விடுமுறை அறிவித்தபோது சரவணன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். தென்னை மரங்கள் சூழ்ந்த காம்பவுண்டின் மேற்குக் கோடியில் திண்ணை வைத்த ஓட்டு வீடு. தெற்கில் கட்டுத்தரை. அதனையொட்டி வைக்கோல்போர். ஒடித்துப் போட்டிருந்த கிளுவைத் தழைகளை மேய்ந்திருந்தன வெள்ளாடுகள் நான்கு. மல்லிகை மொக்குகளைப் பறித்துக் கொண்டிருந்தார் சரவணனின் அம்மா “என்ன கண்ணு சீக்கரமா வந்துட்டீங்க?”

“லீவு வுட்டாங்கம்மா. நான் சொல்லுவேன்ல பாலு, இவந்தான்.”

“வாப்பா. கை காலக் கழுவிட்டு வாங்க. சோறு உங்கலாம்.”

கொள்ளுப் பருப்பும் அவரைக்காய் பொறியலும் கெட்டித் தயிருமாய் சுவையான உணவு. சுண்ணாம்புக் கரையுடன் சாணமிட்டு மெழுகிய தரையுடன் மிகச் சுத்தமான அடுப்பங்கரை. புளிபோட்டுத் தேய்த்த பளபளப்புடன் பித்தளைப் பாத்திரங்கள் மூலையில் அடுக்கியிருக்க துளியளவு எண்ணெய்ப் பிசுக்கை எங்குமே பார்க்க முடியவில்லை. வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் அம்மாவின் சுறுசுறுப்பும் சுத்தமும் நேர்த்தியும் நிறைந்திருந்தன.

அடிக்கடி வீட்டுக்குப் போகத் தொடங்கி சில மாதங்களுக்குப் பிறகே சரவணனின் அப்பாவும் அம்மாவும் பேசிக் கொள்வதேயில்லை என்பதை கவனித்தேன். பருத்தி வியாபாரியான அவர் காலையில் கடைக்குப் போனால் பின்னிரவில்தான் வீடு திரும்புவார். சரியாக எட்டு மணிக்கு அடுப்பங்கரைத் திண்ணையில் தண்ணீர் சொம்புடன் வட்டிலை வைத்துவிடுவார் அம்மா. நெற்றி நிறைய விபூதிப் பட்டையுடன் வலை பனியனும் வேட்டியுமாய் அப்பா வந்தமரும்போது சூடான தோசையை வட்டிலில் இடுவாள் அம்மா. தக்காளி சாம்பாரும் தாளிக்காத கெட்டிச் சட்னியுமாய் மூன்று தோசைகளைத் தின்றுவிட்டு எழுந்துவிடுவார். கையைக் கழுவி ஈரிழைத் துண்டில் துடைக்கும்போதே சூடான டீ தயாராக இருக்கும். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு புறப்பட்டு விடுவார். சரியாக ஒன்றரை மணிக்கு அடுக்குப் போசியில் மதிய உணவு கடைக்கு வந்துவிடும். ராத்திரி அவர் வீடு திரும்பும்போதும் காலையில் நடந்த அதே காட்சிதான். திண்ணையில் வட்டில். சூடாக தோசையோ உப்புமாவோ. சில நாள்களில் சப்பாத்தி. சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிகரெட். புகைத்துக் கொண்டிருக்கும்போதே அம்மா உள்ளறையில் படுத்துவிடுவாள். அப்பாவின் படுக்கை அதே திண்ணையில்தான். இத்தனைக்கும் நடுவில் இருவருக்கும் நடுவில் ஒரு வார்த்தைகூட இருக்காது.

அப்பாவின் உலகம் பருத்திக் கடையோடு முடிந்துவிட அம்மாவும் அடுப்பங்கரையும் வீடுமாக இருந்துவிட்டார். ஒவ்வொருவருக்கும் அடுத்தவரிடத்தில் பெறவும் தரவும் எதுவுமில்லை என்பதுபோல் இருவரும் அவரவர் எல்லைக்குள் நின்றிருந்தனர்.

திடீரென்று ஒருநாள் அகாலமாய் மறைந்தார் அப்பா. மாரடைப்பு. கனமாய் கவிந்தது பெருந்துக்கம். கண்ணீர் விடவில்லை. புலம்பி அழவுமில்லை. நிலைகுலைந்த வீட்டில் அம்மா கழுத்தில் சுற்றிய புடவைத் தலைப்புடன் உட்கார்ந்திருந்தார்.

பதினாறு கும்பிட்ட பிறகு அனைவரும் அவரவர் வேலைக்குத் திரும்பினர். சரவணன் பருத்திக் கடைக்குப் போனான். அப்பாவின் வட்டிலில் இப்போது சரவணனுக்கு அம்மா சூடான தோசையை இட்டார். மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தான் சரவணன். வேறெந்த மாற்றமும் அம்மாவிடம் இருக்கவில்லை.

முதல் வருஷாந்திரத்துக்குப் போயிருந்தபோது சரவணன் சொன்னான் “இதுவே அம்மா போயி அப்பா இருந்துருந்தா ரொம்ப சிரமப்பட்டிருப்பாரு. அம்மாகிட்ட எந்த வித்தியாசமும் தெரியலை. எதையும் வெளிய காட்டிக்கறதுமில்லை.”

எத்தனை காலம் எப்படிப்பட்ட தாம்பத்திய வாழ்க்கையில் இருந்திருந்தாலும், புரிதல் இருந்தாலும் இல்லாதுபோனாலும், முதுமையில் கணவனும் மனைவியும் உடனிருப்பது பெரும் ஆறுதல்தான். மனைவி இல்லாது போகும் உலகில் கணவன் சமாளிப்பது கடினம். கணவன் இல்லாதுபோனாலும் அன்றாடத்தைக் கடத்துவது மனைவிக்கு எளிது.

மகளோ மகனோ யார் வீடாக இருந்தாலும் அம்மாக்களால் சமாளிக்க முடியும். யாருமே இல்லாத நிலையில் கூட சமையல் வேலை செய்தோ, பண்டபாத்திரம் கழுவியோ, வீட்டு வேலை செய்தோ எவர் தயவுமின்றி தனியாகப் பொங்கிச் சாப்பிட்டு நாட்களை கடத்திவிடவும் முடியும். ஆனால், அப்பாக்களின் கதை அப்படியில்லை. எவரையேனும் சார்ந்திருக்க வேண்டிய நிலை. வேலை செய்து சம்பாதித்தாலும்கூட ஒவ்வொரு வேளையும் பொங்கித் திங்க இன்னொருவர் கையை எதிர்பார்த்திருக்கவே நேரிடுகிறது, பெரும்பாலும். கணவரில்லாத வெறுமையை மனைவியால் பேரன் பேத்திகளைக் கொண்டோ உழைப்பைக் கொண்டோ நிரப்பிக் கொள்ள முடியும். ஆனால், மனைவியில்லாத வெறுமையைத் தாங்குவதோ தாண்டுவதோ கணவனுக்கு எளிதில்லை.

வாழ்ந்தபோது மனைவிக்கு எத்தகைய இடத்தையும் மரியாதையையும் கணவன் கொடுத்திருந்தார் என்பது அவரது மனச்சான்றுக்கு உட்பட்டது. ஆனால், மனைவி இல்லாத காலத்தில் அன்றாடத்தின் ஒவ்வொரு நகர்விலும் அவரது இருப்பை கணவன் உணர்ந்தபடியேதான் இருக்க நேரும்.

பலரது வாழ்வின் தவிர்க்க முடியாத இந்த விதியை சதீஷ்குமார் சீனிவாசனின் இந்தக் கவிதை மிகச் செறிவாகவும் ஆழமாகவும் துலக்கித் தருகிறது.

அம்மா போலவே ஒரு நிழல்

வழக்கம்போல

அம்மாவும்

செத்துப் போயிருந்தாள்.

அம்மாவிடம்

எந்தக் கனவும் இல்லாதவராகத்தான்

இருந்தார் அப்பா.

வழக்கத்துக்கு மாறாக நடந்துகொள்ளும்

அப்பாவின் பின்னால்

அம்மா போலவே

ஒரு நிழல்.

 

0

இளம் கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனின் ஐந்து தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. எளிமையும் கூர்மையுமான மொழியில் ஆழங்களைத் தொட முயல்பவை இவரது கவிதைகள்.

அண்மையில் வெளியான ‘எனக்குத் தெரிந்தவரை வானில் பறவைகள் இல்லை’ தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதை இது.

2023ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

அக இருளை நீக்கும் சுடர் - கவிதையும் ஞானமும் 15 - வேணுவேட்ராயன்

 

 

சொல் வெறும் கூடு

நம் அகத்தில் நிகழும்

அதன் உயிர்த்தெழல்

சொல் ஒரு சுடர்

விரித்துக் கையேந்தி நாம் நடக்கையில்

வழிதோறும் இருள் நீக்கும்

ஒரு சிற்றகல். 

-            வேணு வேட்ராயன்


0

இந்த ஆண்டு புக் பிரம்மா 2026 இலக்கிய விழாவில், மலையாளக் கவிதை அமர்வு ஒன்றில் பி.ராமன் முக்கியமான ஒரு கருத்தைச் சொன்னார். அமர்வின் நெறியாளராக இருந்த கவிஞர் டி.பி.வினோத் ஒரு கேள்வியை எழுப்பினார் “இன்றைய சூழலில் யாருக்குக் கவிதை வேண்டும்?” இந்தக் கேள்விக்கு பி.ராமன் அளித்த பதில் இன்றைய சூழலில் மிக முக்கியமானதும் பொருத்தமானதுமாகும்.

‘யாருக்கு மொழி அத்தியாவசியமாகத் தேவையோ அவர்களுக்குத்தான் இன்று கவிதையும் தேவை. பார்வை இல்லாத ஒருவருக்கு தன்னை வெளிப்படுத்த மொழி தேவைப்படுகிறது. தான் நினைப்பதைச் சொல்ல, தன் எண்ணத்தைக் கூற அவன் மொழியையே நாட வேண்டிய தேவை உள்ளது. எனவே, அப்படிப்பட்ட ஒருவருக்குக் கவிதைத் தேவைப்படுகிறது. தமக்கென ஒரு மொழியே இல்லாத பழங்குடிகளுக்கும் கவிதைத் தேவைப்படுகிறது. இன்று மலையாளக் கவிதையில் இதுதான் நடக்கிறது. பார்வைத் திறனற்றவர்கள் கவிதை எழுதுகிறார்கள். பழங்குடிக் கவிதை என்பது பெருகி இன்று கேரளக் கவிதை மரபின் எல்லைகளை விரித்திருக்கிறது. யாருக்கெல்லாம் தங்களை வெளிப்படுத்த மொழி தேவைப்படுகிறதோ அவர்களுக்குத்தான் இன்று கவிதையும் தேவைப்படுகிறது. இன்றையத் தலைமுறையினரில் பலருக்கு மொழியே தேவைப்படுவதில்லை. எமோஜிக்களின் மொழியே அவர்களது தொடர்பு மொழியாக சுருங்கியுள்ளது. எனவே, அவர்களுக்கு கவிதைத் தேவைப்படுவதில்லை’ என்ற பொருளில் அவர் தன் கருத்துகளை எப்போதும்போல மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் கூறினார்.

தமிழ் மொழியின் சமகாலத் தேவை, அதில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் போன்றவற்றைக் குறித்த ஆழமான கேள்விகளை சந்திக்கும் சூழலில் இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை என்ற நிலை ஏற்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டன. எனவே, கடந்த இரண்டு தலைமுறையினர்களில் அநேகமாகப் பலருக்கு தமிழை ஒழுங்காக எழுதப் படிக்கத் தெரியாது என்பதுதான் நிலைமை. அப்படியே தமிழைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும்போது அதை ஆங்கிலத்தில் எழுதி வாசிக்கிறார்கள். இன்றைய தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் பலரது கையில் உள்ள அட்டைகளிலுள்ள வாக்கியங்கள், அறிவிப்புகள் ஆங்கிலம் வழியாகவே தமிழில் எழுதப்பட்டுள்ளன.

இன்றைய தலைமுறையினர் தமிழில் எழுதவோ வாசிக்கவோ செய்யாத சூழலில் தமிழின் தூய்மையைக் காப்போம் என்று எல்லாவற்றையும், பொருத்தத்தைப் பற்றியோ பொருளைக் குறித்தோ கவலைப்படாமல், தமிழில் மாற்றும் தூய்மையாளர்கள் ஒருபக்கமும் தமிழில் எழுதும்போது ஒற்றுப் பிழைகள் பற்றியெல்லாம் கவலையில்லை என்கிற தாராளவாதிகள் இன்னொரு பக்கமுமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

மொழி என்பது தொடர்புக்கான ஒரு ஊடகம், கருவி என்ற அடிப்படையை அறிந்திராதோர் எவருமில்லை. ஆனால், அது ஊடகம், கருவி மட்டுமல்ல. சிந்தனைக்கான அடிப்படை. நம் சிந்தனைகளை கட்டமைக்கும் மொழியே தாய்மொழி. தெளிவான சிந்தனைக்கு மொழி சார்ந்த தெளிவும் அறிவும் திறமும் அவசியம். அவ்வாறன்றி, எந்த மொழியில் நாம் சிந்திக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் தடுமாறும்போது சிந்தனையும் தடுமாறும். சிந்தனை தடுமாறும்போது வழிகள் தடுமாறும். அவ்வாறான ஒரு நிலையைத்தான் இன்று நாம் கண்ணுறுகிறோம்.

குடிமைப்பணி உள்ளிட்ட எல்லாப் போட்டித் தேர்வுகளையுமே இன்று தமிழில் எழுத முடியும் என்ற நிலையில் பள்ளிக்கூடங்களில் தமிழைத் தவிர்க்க வேண்டிய தேவை இல்லை. குறைந்தபட்சம் மேல்நிலைப் பள்ளி வரையிலுமேனும் தமிழ் மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும். தமிழகத்திலுள்ள பள்ளிகளில் தமிழ் ஒரு மொழியாக கற்பிக்கப்பட வேண்டும். இதன் வழியாகத்தான் இன்றைக்கு நிலவும் மொழி சார்ந்த பெரும் குழப்பத்திலிருந்து விடுபட முடியும். தமிழும் அல்லாமல் ஆங்கிலமும் இல்லாமல் ஊடகங்களில் புழங்கும் குறியீட்டு மொழியை நம்பியிருக்கும் தலைமுறையினரின் சிந்தனைக் குழப்பத்துக்கு ஒரே தீர்வு மொழிக் கல்வியாகவே இருக்க முடியும்.

சொல்லும் மொழியும் அகத்தில் ஒளிரும் சுடர். ‘உள்ளத்திலே ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்’ என்பது கவி வாக்கு. சொல்லிலும் மொழியிலும் தெளிவில்லையேல், ஒளி இல்லையேல் உள்ளத்தில் எஞ்சுவது இருள் மட்டுமே.

இருள் நீக்கும் மொழியும் சொல்லுமே இன்றைய தலைமுறைக்குத் தேவை. நம் அகத்தில் உயிர்த்தெழலை நிகழ்த்தும் சொல்லையும் மொழியையும் கொண்டே இருள் நீக்க இயலும்.

கவிதையும் அகத்தில் ஒளிரும் சுடர்தான். அச்சுடர் கவிதையை வாசிக்கும் ஒவ்வொருவரின் அகத்திலும் ஒவ்வொருவிதமாக இருள் துலக்கி ஒளி கூட்டும். பல சமயங்களில் கவிதைக்கும் சொல்லுக்கும் பொருள் விளங்காமல் போகலாம். ஆனால், அப்போதும்கூட அவை ஒளிரும் சுடர்கள்தான் என்பதில் எந்த மாற்றமுமில்லை. கூடவே, அச்சுடர்களின் மூலம் அக இருள் நீங்கும்போது அனைத்துக்குமே பொருள் தானாகவே விளங்குவதும் நிகழும்.   

0   

வேணு வேட்ராயன் எளிமையின் மூலம் ஆழத்தை எட்ட முனையும் கவிதைகளை எழுதுபவர். அவரது கவிதையுலகம் இறுக்கமற்றது. காட்சிகளின் வழியே கண்டடையச் செய்வது.

முதல் தொகுப்பு ‘அலகில் அலகு’ 2019ஆம் ஆண்டு வெளியானது. ‘நீர்வழிப்படூஉம் நிலா’ எனும் இரண்டாவது தொகுப்பு தன்னறம் வெளியீடாக அண்மையில் வெளிவந்துள்ளது.

2020ஆம் ஆண்டில் குமரகுருபரன் விருது வழங்கப்பட்டுள்ளது.

Wednesday, 1 April 2026

கடுந்தேனீருக்காக நடந்துபோதல் - கவிதையும் ஞானமும் 10


 

நடந்துகொண்டிருப்பது மூன்றாம் உலகப் போர்தானா என்ற விவாதங்களுக்கும் ‘எனர்ஜி லாக் டவுன்’ அறிவிக்கப்படுமோ என்ற ஊகங்களுக்கும் இன்றைக்கு தோசை கிடைக்குமா என்ற அடிப்படைக் கேள்விகளுக்கும் இடம் தந்து நீண்டுகொண்டிருக்கிறது வளைகுடா போர். எறிகணைகளும் ஏவுகணைகளும் பறக்கும் தட்டுகளும் வெடித்துச் சிதற வளைகுடா நாடுகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது. எண்ணெய் வளம், அதிகாரப் போட்டி, ஆயுத பலம் என்று இதற்கான காரணங்களை பிரித்து ஆராய முடியும். ஆனால், அடிப்படையில் இவற்றுக்கு பலியாகும், பாதிக்கப்படும் அப்பாவி பொது மக்கள், குழந்தைகள், பெண்களின் துயரங்களுக்கு யார், எது பொறுப்பேற்கும்? ஒவ்வொரு நாளும் உயிர்கள் பலியாகின்றன. எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. அடுப்பெரிக்க எரிவாயு கிடைக்குமா, வாகனங்களுக்கு எரி எண்ணெய் போதுமா, உணவகங்களில் கேட்டது கிடைக்குமா என்ற அளவில் நம் கவலை நமக்கு. வீட்டுக் கடனை அடைக்கவும் தேவைக்கு பொருள் ஈட்டவும் என திரைகடல் தாண்டி திரவியம் தேடச் சென்றோர் வீட்டில் உயிர்பிழைத்து வந்தால் போதும் என்ற பிரார்த்தனைகள்.

எல்லாவற்றுக்கும் அடிப்படையில் வேர்விட்டு ஆழமாக ஊடுருவியிருப்பது ஆதிக்க வன்முறை. ஆயுத பலத்தைக் கொண்டு அடிபணியச் செய்யும் அதிகாரத் திமிர். கச்சா எண்ணெயை சுமந்து மிதக்கும் கப்பல்கள் கடந்து செல்லும் நீரிணையை மூடிவிட்டால் உலகின் பல நாடுகளிலும் தட்டுப்பாடு தலையெடுக்கும். பதற்றம் விளையும். அடுத்து என்ன வழி என்று யோசிக்கும். உலக நாடுகளின் நலம் பேணும் அமைப்புகள் கையறு நிலையில் தலைகுனிந்திருக்க நீண்டுகொண்டிருக்கிறது போர்க் காலம்.

கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது வழக்கு. உதாரணங்களும் பல. பலிகொள்ளும் கத்தியை ஆயுதமாகக் கொண்டால் அது ரத்தம் பார்த்து ஓயாது என்பதை அறிந்துதான் அகிம்சையை கையிலெடுத்தார் காந்தி. பேசித் தீர்க்க முடியாது என்று உலகில் எந்தவொன்றும் இல்லை என்பதை பலமுறை மெய்ப்பித்துக் காட்டினார். உலக அமைதிக்கு அகிம்சையே வழி, ஆயுதங்கள் இல்லை என்று அறிவுறுத்தினார். மண்டேலா உள்ளிட்ட தலைவர்கள் பலரும் அகிம்சையை வலியுறுத்தினார்கள். ஆனால், இன்று அணு ஆயுதங்களை சக்திக்கேற்ப திரட்டி வைத்துக்கொண்டு நாடுகள் பலவும் தயார் நிலையில் இருப்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆதி மனிதன் கல்லை ஆயுதமாகக் கொண்டான். மிருகங்களிடமிருந்து பாதுகாக்கவும் வேட்டையாடிப் புசிக்கவும் அவனுக்கு அது தேவையாக இருந்தது. இரும்பைக் கண்ட பிறகு கூரிய கத்திகளும் வேல்களும் ஈட்டிகளும் உருவாயின. அனைத்துமே வேட்டைக் கருவிகள்தான். வயிற்றுப் பசிக்கான வேட்டை நாடு பிடிக்கும் அதிகார வேட்கைக்கானதாய் மாறியபோது வேட்டைக் கருவிகள் அனைத்தும் படைக் கருவிகள் ஆயின. பகுத்தறிந்து அணுவைப் பிளந்து அதை அழிக்கும் சக்தியாக்கியதன் விளைவை இன்னும் உலகம் மறந்திருக்காதுதான். ஆனாலும், கையிலெடுத்த ஆயுதத்தை கீழே போடும் துணிச்சல் இல்லை எவருக்கும். அவரவர் கை மறைவில் ஆயுதங்களைத் தாங்கி படங்களில் சிரித்துக் கொண்டே அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்கள்.  

ஒருவேளை, உலக நாடுகளில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் அணு ஆயுதங்கள் அனைத்தையும் ஆக்கத்தின் ஆற்றலாக மாற்ற முடியுமானால் எவையெல்லாம் சாத்தியம் என்பதை அறிந்தவர்கள் விஞ்ஞானிகள். ஏதேனும் ஒரு அற்புதம் நடந்து ஆயுத வியாபாரிகள் மனந்திருந்தி அமைதித் தூதுவர்களாகலாம். அதிகாரமல்ல, அன்பே நிரந்தரம் என்பதையும் உணர்ந்து திருந்தலாம். மானுடம் செழித்து இப்புவி இன்னும் காலங்கள் தாண்டி நிலைத்திருக்கலாம்.

கவிஞனும் கவிதையும் இப்படியொரு கனவைக் காண முடியும். கவிஞனின் சொல் பலிக்கும் என்பது நம்பிக்கை. அப்படியொரு நம்பிக்கையை, கனவைச் சொல்கிறது சபரிநாதனின் கவிதை.

அண்மைகாலத்தில் நமது திரை நாயகர்கள் பலரும் ‘பொருளி’ன்றி உலா வருவதில்லை. ஆயுதந்தாங்கி சமூகத்தின் அறம் பேணுகிறார்கள். எளியோரின் அவலங்களைத் துடைக்க ஆயுதங்களேந்தி அவதாரமெடுக்கிறார்கள். திரையில் காட்சியாகும் ‘பொருட்’கள் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கையில் வந்து சேர்கின்றன. மின்சார ரயில் நிலையங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் அவற்றின் கூர் திறனை சோதித்துப் பார்க்கிறார்கள். அறிவே ஆயுதம் என்பதை மறுக்க பிம்பங்கள் போதும் போலும். உயிருக்கு மதிப்பில்லாத கொடுங்காலத்தில் எந்தவொரு அற்ப காரணத்துக்காகவும் உயிரை எடுக்க தயங்குவதில்லை. திருட்டு, பிறழ் உறவுகள், சொத்துத் தகராறு, குலத் தூய்மையை பாதுகாப்பது என்று எல்லா காரணங்களுக்காகவும் உயிர்கள் பலியிடப்படுகின்றன. வன்முறையை கையிலெடுக்க சற்றும் யோசிக்காத நாட்கள் இவை. திரைப்படங்களும் சமூக ஊடகங்களும் வன்முறை வரம்பை அபாய அளவுக்கும் மேலெடுத்துச் சென்றிருக்கும் நிலையில் அவற்றின் உடனடி தாக்கங்களை அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இவற்றை முறைப்படுத்துவதற்கென்று அமைக்கப்பட்டுள்ள தணிக்கைக் குழு தன் அதிகார வரம்புகளையும் விதிமுறைகளையும் மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது.

உலகில் அநீதி தலைதூக்கும்போது தர்மத்தை நிலைநிறுத்த அவதரிப்பதாகப் படித்திருக்கிறோம். அவ்வாறான நம்பிக்கையை கவிதையும் எழுத்துமே விதைக்கின்றன. இப்போதும் அவ்வாறான ஆழமான நம்பிக்கையை கவிதையின் மூலம்தான் தரமுடியும்.

கத்திகளை பழம் வெட்ட மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒரு காலத்தில், கடுந்தேனீருக்காக மழை ஓய்ந்த மாலைப் பொழுதுகளில் நடந்து செல்லும் காவி உடுத்திய சாதுவாக வன்முறையை நிச்சயமாகப் பார்க்க முடியும்.

 

விழிப்படைந்த கத்தி

0

நாளிதழில் பொதித்து எடுத்துச் செல்லப்பட்ட கத்தி

தவறி விழுந்தபோது சுயநினைவிற்குத் திரும்பியது

இப்போது அது ஒரு பசித்த புலி, யாராலும் தொடமுடியாது.

 

இனி அதற்கு எதுவும் தேவை இல்லை.

தனக்கு வேண்டிய பழங்களை தானே நறுக்கிக் கொள்ளும்

குளிர்பருவத்தில் உறையுள் குனிந்து சென்று உறங்கும்.

 

சட்டென உற்ற விழிப்பு, திடுமென நுரைத்த கருணை,

பளிச்சிடலைக் கைவிளக்காக ஏந்தியபடி

சுற்றுச்சுவரற்ற தன் இருண்ட கிணற்றைப் பாதுகாக்க வேண்டும் ராமுழுதும்.

 

நெருப்பிலும் கல்லிலும் உரசி நலம்பேணும் அது

மழை ஓய்ந்த கருஞ்சம்பல் மாலைகளில் நடந்துசெல்லக் காணலாம்

காவி உடுத்திய சாதுவென கடுந்தேனீருக்காக.


( ஆவநாழி ஏப்ரல் 26 இதழில் வெளியானது )



இடம் பிடிக்கும் கலை - கவிதையும் ஞானமும் 9

 


0

வாய்ப்புகளும் வரிசைகளும் இருந்தால் அங்கே நிச்சயம் ‘இடம் பிடித்து வைக்கும்’ பண்பையும் தவறாமல் பார்க்க முடியும். வரிசையில் நின்றே பிழைத்துக் கிடக்க விதிக்கப்பட்டவர்களுக்கு வேறு பாடுகளும் இருக்கும் அல்லவா? எந்த நேரமும் வரிசையிலேயே நின்று கொண்டிருக்கும் ஆடம்பர வாழ்க்கை அவர்களுக்கு வாய்க்கவில்லை. எனவே, ஒவ்வொரு வரிசையிலும் தங்கள் இடத்தை உறுதிசெய்து கொள்ள இடம் பிடித்து வைக்கவேண்டும். வரிசைக்குத் தக்கவென பொருட்களும் கைவசம் இருக்கும். கோடை காலங்களில் தண்ணீருக்காக குழாயடி வரிசைக்கு கதவிலக்கம் எழுதப்பட்ட பிளாஸ்டிக் குடங்கள், ரேஷன் கடைகளில் மண்ணெண்ணை கலன்கள், பேருந்துகளிலும் ரயில்களிலும் கட்டைப் பைகள் என்று வரிசையில் இடம் பிடிப்பதற்கென தகுதிபெற்ற பொருட்கள் இன்னும் சில உண்டு.

எழுபதுகளில் டூரிங் டாக்கீஸ்களில் தரை டிக்கெட்டுகள் மணலில் உட்கார்ந்தே படம் பார்க்கவேண்டும். தாமதமாக வரும் நண்பனுக்காக தனக்கருகில் மணலைக் குவித்து வைத்து இடம் பிடித்திருப்பார்கள். தியேட்டர்களில் இருக்கை எண்ணுடன் முன்பதிவு செய்யும் வசதி வருவதற்கு முன்பு, ‘முந்திக் கொள்வருக்கே முதலிடம்’ என்பதுதான் அடிப்படை. நியூஸ் ரீல்களும் விளம்பரங்களும் முடிகிற நேரம் சரியாக வந்து சேர்பவருக்காக இருக்கையைப் பிடித்து வைத்தவர், கேட்பவர்களிடமெல்லாம் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார் ‘ஆள் வராங்க’ என்று. நவீன கைபேசி செயலிகளின் வழியாக முன்பதிவு செய்யும் இன்றைய காலத்தில் மிச்சமிருக்கும் இருக்கையைப் பார்த்து வசதியானவற்றை நாமே தேர்வு செய்துகொள்ள முடிகிறது. ஒருவகையில் இதுவும் இடம்பிடிப்பதுதான். இங்கும் முதலில் வருவோர்க்கே முன்னுரிமை.

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோயமுத்தூருக்கு நிமிடத்துக்கு ஒரு பேருந்து புறப்பட்டுப் போகும். காலை ஏழரை மணியிலிருந்து எட்டே கால் மணிக்குள் புறப்பட்டுச் செல்லும் பேருந்துகளில் மூன்று தனியார் பேருந்துகள். கோவையில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லும் இளைஞர் கூட்டத்தினருக்கென எழுதி வைக்கப்பட்டவை இந்த மூன்று பேருந்துகளும். குறிப்பிட்ட நேரத்துக்கு பத்து நிமிடம் முன்பே வந்தாலும், புறப்பட்டுப் போகும் பேருந்துகளில் இவர்கள் ஏறமாட்டார்கள். வந்தவுடன் தங்களது வழக்கமான பேருந்தில் ஏறி நோட்டுப் புத்தகங்களை வரிசையாக இருக்கைகளில் போட்டுவிடுவார்கள். முதல் சில வரிசைகளில் கைகுட்டைகளும் இடம் பிடிக்கும். குறிப்பிட்ட நேரத்தில் புறப்படும்போது ஏறும் பிற பயணிகள் யாரும் காலியாக உள்ள இடத்தில் போய் உட்கார்ந்துவிட முடியாது. ஏற்கெனவே அங்கங்கே நின்று கொண்டிருக்கும் மாணவர்களில் ஒருவர் உங்களை நோக்கிச் சொல்லுவார் ‘அங்க ஆள் வருதுங்கண்ணா. நீங்க பின்னாடி போயிடுங்க.’ கடைசியில் உள்ள மூன்று அல்லது நான்கு வரிசைகளில்தான் உட்கார முடியும். சரியான நேரத்தில் வண்ணங்களும் வாசனையுமாய் வந்து சேரும் மாணவிகள், பிடித்து வைத்திருக்கும் இருக்கைகளில் உட்கார்ந்து நெற்றி வேர்வையைத் துடைத்துக் கொண்டு தலைகோதி முடித்தவுடன், இடம்பிடித்து வைத்த மாணவர்களில் யாரையேனும் பார்த்து ஒரு புன்னகையை செலவிடுவார்கள். நோட்டுப் புத்தகத்தைக் கொண்டு இடம் பிடித்து வைத்த அந்த இளைஞர்களுக்கு அந்த நாள் அக்கணம் பெரும் பேறாகி நிறையும். ஓட்டுநர் ஒலிப்பேழையிலிருந்து இனிய பாடல்களை ஒலிக்கச் செய்வார். பேருந்து இப்போது இளைஞர்களுக்கான ரதமாகியிருக்கும். பேருந்து புறப்பட்டு வெளியில் வரும்போதும் பிடித்து வைத்த இருக்கைகளில் பாதிதான் நிரம்பியிருக்கும். ஆள்தான் யாருமில்லையே என்று யாரும் காலி இருக்கைகளில் அமர்ந்துவிட முடியாது. அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஏற இருக்கும் மாணவிகளின் பட்டியலை சரிபார்த்தபடி படிகளில் ஒய்யாரமாக நின்றிருக்கும் இளைஞர்கள் உங்களை அனுமதிக்கமாட்டார்கள். பெருமாநல்லூர் சாலையில் ஊர்ந்து புஷ்பா தியேட்டர் நிறுத்தம் வரும்போது அநேகமாக இருக்கை எதுவும் மிஞ்சியிருக்காது. நிற்கவும் இடமிருக்காது. அப்போதும்கூட ஓரிரு இருக்கைகள் அடுத்தடுத்த நிறுத்தங்களில் வந்து சேரும் தேவதைகளுக்காகக் காத்திருக்கும். யாரும் உரிமையாய் கேட்டுவிட முடியாது. கல்லூரி மாணவர்கள் பலரின் கையிலிருக்கும் நோட்டுப் புத்தகங்கள் இப்படி பேருந்தில் இடம் பிடிக்க மட்டுந்தான் என்கிற ரகசியம் வெகுநாட்கள் கழித்தே தெரிய வந்தது. இப்படி இடம் பிடிக்கும் மாணவச் செல்வங்கள் கடைசி வரையில் எந்த இருக்கையிலும் அமரமாட்டார்கள். பயணம் முழுக்க நின்றகோலந்தான். இன்னும் சிலர் நண்பர்களின் மடிகளில். நடத்துனருக்கு ஓய்வுகொடுத்து தற்காலிக நடத்துனராக பொறுப்பேற்கும் நல்ல மனம் கொண்ட மாணவர்களும் உண்டு. இவை அத்தனையும் அன்றாடம் அதே பேருந்தில் பயணம் செய்யும் மாணவிகளின் மனத்தில் இடம் பிடிக்கச் செய்யும் முயற்சிகள்தான். அந்த அறுபது அல்லது எழுபது நிமிட பயணமே அன்றைய நாளை அர்த்தப்படுத்தும். கோவையை அடைந்து அந்தந்த நிறுத்தத்தில் மாணவிகள் இறங்கிப் போன பின் பேருந்து மொத்தமும் வெறிச்சோடும்.

பேருந்தில் இருவர் அமரும் இருக்கைகளில் ஒன்றில் முதலில் அமர்பவர்களில் பலரும் அடுத்த இருக்கையை எதற்கும் இருக்கட்டும் என்று பிடித்து வைத்திருப்பதுண்டு. தன்னைவிட பருமனான ஒருவரை பயண நேரம் முழுவதும் தோளில் சுமக்க முடியாது. பேருந்து புறப்பட்டவுடன், டிக்கெட்கூட வாங்காமல் கண்ணசந்து, தலைசொக்கி தோளில் சாயும் பாக்கியவான்களைத் தாலாட்டியபடி போகவும் முடியாது. இதுபோன்ற காரண காரியங்களை உத்தேசித்து, இந்த இம்சைகளைத் தர மாட்டார் என்று நம்பும் ஒருவர் உள்ளே ஏறி வரும்போது அவருக்கு அந்த இருக்கையை அனுமதிப்பார்கள். இத்தனை எச்சரிக்கையையும் மீறி எதிர்பார்த்த அசம்பாவிதங்கள் நடந்தால் வேறொன்றும் செய்ய முடியாது.

இடம் பிடிப்பதென்றாலே சண்டைகள்தானே? சண்டையில்லாமல் பிடிக்கும் இடத்தில் அத்தனை சுவாரஸ்யமும் இருக்காது. இடத்துக்கான சண்டைதான் வாழ்க்கை மொத்தமும். யாரேனும் ஒருவரின் மனத்தில், எண்ணத்தில், அபிப்ராயத்தில் ஏதேனும் ஒரு காரியத்தை உத்தேசித்து இடம் பிடிக்கும் வித்தையைத்தான் வாழ்க்கை முழுவதும் அன்றாடம் பயின்றுகொண்டிருக்கிறோம். வகுப்பறை முதல் அரசியல் வரை இடத்துக்கான போராட்டங்கள் ஓய்வதேயில்லை. மாணவனாக இருக்கும் வரையிலும் மதிப்பெண்ணில் இடம்பிடிக்க வேண்டும். இளைஞனாகிவிட்டால் விரும்பிய பெண்ணின் இதயத்தில் இடம் பிடிக்கவேண்டும். மணமான பெண்ணுக்கு கணவனின், மாமியாரின் மனதில் இடம் பிடிக்கவேண்டும். ஊழியனுக்கு அதிகாரியின் மனதிலும் அதிகாரிக்கு முதலாளியின் மனதிலும் முதலாளிக்கு ஆட்சியாளரின் மனதிலும் ஆட்சியாளர்களுக்கு மக்களின் மனதிலும் இடம்பிடிக்கும் அவசியமும் அவஸ்தைகளும்.

இடம் பிடிக்க முடியாதவர்களை சமூகமும் சக மனிதனுமே மதிப்பதில்லை. ‘இதுகூட முடியலையா?’ என்ற ஏளனத்துக்கு பல்வேறு முகங்கள், பல்வேறு குரல்கள். வாழத் தகுதியற்றவர்கள் என விலக்கி வைக்கபடுவார்கள். அடுத்தவன் இடத்தை காலிசெய்வதும் அந்த இடத்துக்கு தான் முண்டுவதுமே காரியக்காரர்களின் சாமர்த்தியம். சற்று பரந்த மனத்துடன் அடுத்தவனுக்கு பாவம் பார்ப்பவர்களுக்கு வேறொரு பெயர் உண்டு, இளிச்சவாயன்கள். காலியாக இருக்கும் அடுத்த இருக்கையில் இன்னொருவன் வந்து உட்காரும்போது கால்களை அகட்டி உடம்பை நகர்த்தி தன் இருப்பை நிறுவிக் கொள்பவனே புத்திசாலி.

இடம் கிடைக்காதவர்கள், முன்பே அடுத்தவர்களுக்காக இடம் பிடித்தவர்களைப் பார்த்து ஆத்திரத்துடன் கேட்பதுண்டு ‘யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லை. எல்லாருக்கும் அதே ஆறடி மண்ணுதான்.’ இல்லையென்றால் ‘போகும்போது யார் என்னத்த கொண்டுபோக முடியும்?’. எல்லாவற்றிலும் இடம் பிடிக்க முயல்பவர்கள், அவசரப்படுபவர்கள் இடுகாட்டிலும் சுடுகாட்டிலும் இடம்பிடிப்பதைப் பற்றி யோசிப்பதுகூட இல்லை. எண்சாண் உடம்பை நொடிப்பொழுதில் தீக்கு இரையாக்கும் இன்றைய மின் மயானங்களின் வருகைக்குப் பிறகு மேற்சொன்ன சொற்கள் அனைத்தும் பொருள் இழந்துவிட்டன. யாரும் எங்கும் எந்த இடத்தையும் பிடிக்க முடியாது. சாம்பலாகி நீரில் கரைவதும் காற்றில் காணாமல் போவதுமே நடைமுறை.

மதாரின் ‘அமர்விடம்’ கவிதையில் இடம் போடுவது அழகியலாக வெளிப்பட்டிருக்கிறது. இடம் போடும் அல்லது இடம் பிடிக்கும் போட்டிகள் மன அவஸ்தைகளை கூட்டும்போது இதுபோன்ற அழகியல் கோணங்கள் சற்றே ஆசுவாசம் அளிக்கின்றன. கத்தரிப் பூவையும் மழைத்துளியையும் காக்கை எச்சத்தையும் கடற்கரை மணல்வீட்டையும் இடம் பிடிக்கும் உத்திகளாகக் காணும் கவிஞனும் இந்தக் கவிதையும் வாசகனின் மனத்தில் இடம் பிடித்துவிடுவதில் வியப்பேதுமில்லை.

அமர்விடம்

0

நான் அமரச்சென்ற

நாற்காலியில்

ஒரு கத்தரி நிறப் பூ.

 

இந்த மண்டபத்தில்

பூ போட்டு

சீட் பிடித்தவர்

யார்?

 

நான் அமரச் சென்ற

பேருந்து இருக்கையில்

மழையின் சில துளி.

 

யாராக இருக்கும்?

நான் ஓய்வெனத்

திரும்பிய

மைதான மதிலெங்கும்

காக்கை எச்சம்.

 

ஏன் இந்த

வேண்டாத வேலை?

 

கரையிலோ

சிறுமி

கட்டிய வீடு.

 

வெற்றுத் தரையில்

மணலைப் போட்டு

மலை.


( ஆவநாழி ஏப்ரல் 26இல் வெளியானது )

Monday, 16 February 2026

கைதவறிப்போகும் பொழுதுகள் - கவிதையும் ஞானமும் 8


சாயங்காலம்

0

சந்திரா தங்கராஜ்

0 

பால்கனியில் அமர்ந்திருக்கிறேன்

உள்ளே நுழையலாமா வேண்டாமா எனத் தயங்கியபடி

முல்லைக்கொடியின் ஓரத்தில் நிற்கிறது சாயங்காலம்

வெகு நேரமாக நின்று கொண்டே இருக்கிறது

சாயங்காலத்தின் பாஷை அறியாத நான்

அதை உள்ளே கூப்பிட வழியின்றி

வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க

சரசரவென சாயங்காலத்தை விழுங்கி

வெளியை வியாபிக்கிறது இரவு.               

0

 

வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களில் என்ன செய்வதென்று தெரியாமலே நாம் விரும்பிய, நினைத்த செயல்களை செய்ய முடியாமல் போய்விடுவதுண்டு. இந்த குறுகிய நேர தடுமாற்றத்தினால், இயலாமையினால் ஏற்பட்ட இழப்புகள் நெடுங்காலம் மனத்துள் ஆறா வடுக்களாக எஞ்சி விடுகின்றன. செய்த தவறை உணர்ந்து அதனால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க நினைத்திருப்போம். ஆனால், கணநேரத் தயக்கம் நம்மைத் தடுத்திருக்கும். அதற்குள் அந்த நபர் விலகிப் போயிருப்பார். அல்லது மறுமுறை அவரை சந்திக்கும்போது மன்னிப்புக் கேட்பதற்கான மனநிலை நம்மிடம் இல்லாமல் போயிருக்கும். மனத்துக்குப் பிடித்தப் பெண்ணிடம் நம் எண்ணத்தைச் சொல்ல குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தயாராகி, ஒத்திகை பார்த்துக் காத்திருப்போம். சந்தர்ப்பவசமாய் அந்த நேரத்தில் நம் தைரியம் நம்மை கைவிட்டிருக்கும். அல்லது நினைத்ததைப் பேசாமல் வேறு எதையாவது அபத்தமாய் உளறி அசடு வழிந்திருப்போம். சொல்லாத அந்த எண்ணம் அப்படியே புதைந்துபோகும்.

‘யோகம் ஒருமுறைதான் கதவைத் தட்டும், அதை கைகொள்ளாவிட்டால் மறுமுறை என்று ஒன்று வாய்க்காது’ என்பதை பள்ளி நாட்களிலிருந்து பலமுறை பலபேர் சொல்லிக் கேட்டிருப்போம். கதவைத் தட்டி நிற்பது யோகம்தான் என்பது தெரிந்தால் நாம் ஏன் கதவைத் திறக்காமல் நிற்கப் போகிறோம்? அது தெரியாமல் போகிறது என்பதுதானே துக்கம். யோகத்துக்கு மட்டும் அதென்ன ஒரு முறை என்று கணக்கு? இன்னொரு முறை தட்டினால் என்ன குறைந்தா போய்விடும் என்று புலம்பும்போது கேட்பதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். பிழைக்கத் தெரியாத பயல் என்று இலவச பட்டம் வேறு கிடைக்கும்.

இந்த யோகம் சாயங்கால ரூபத்தில் சந்திரா பால்கனியில் உட்கார்ந்திருக்கும்போது முல்லைக் கொடியின் ஓரத்தில் வந்து நிற்கிறது. பாவம், சந்திராவுக்கு அதன் பாஷை தெரியவில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நமக்கு எதிரில் இருப்பவர்களின் பாஷை தெரிந்தாலும், அந்த கணத்தில் சொல்ல வேண்டிய சொற்களை நம்மால் சொல்ல முடியாது போகும். அதுவும் சாயங்காலம் போன்ற மொழியைக் கடந்தவொன்றுக்கு முன்னால் நிலைமை இன்னும் சிக்கலாகும். உள்ளே வரலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில், குழப்பத்தில் நிற்க அதன் பாஷை தெரிந்த இன்னொன்று வந்து அள்ளிக் கொண்டு போய்விடும். இருள் அப்படித்தான் சாயங்காலத்தை அழைத்துக் கொண்டு போய்விடுகிறது.

சரியான சந்தர்ப்பத்தில் சரியான முடிவை சரியான விதத்தில் எடுக்கும்போதுதான் அனைத்தும் கைகூடி வருகிறது. இதில் ஏதேனுமொன்று சரியாக அமையாது போகும்போது ஒட்டுமொத்தமாய் அனைத்தும் கைவிட்டுப் போகிறது. முல்லைக் கொடியருகில் காத்து நின்ற சாயங்காலத்தை வீட்டுக்குள் வரவழைக்க முடியாமல் போய் இருட்டுக்கு அதைத் தாரை வார்க்க நேர்வதுபோல.

இப்படி எல்லா நேரங்களிலும் நடந்துவிடுவதில்லை. முடிவெடுக்க முடியாத சந்தர்ப்பங்கள் பலவகையில் உண்டு. நல்ல இரண்டு வாய்ப்புகள் நமக்கெதிரில் உள்ள போது இதுவா அதுவா என்று தெரிவு செய்ய முடியாத நிலை, அடுத்தது நமக்கு என்ன வேண்டும் என்பதே உறுதியாகத் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் நிலை, முந்தைய கசப்பான அனுபவங்களின் காரணமாக மீண்டும் ஒரு அடியைத் தாங்க முடியாதென்கிற அச்சம் மேலோங்கியிருக்கும் நிலை என்று நாம் பலவீனமாகத் தவிக்கும் கணங்கள் அவை. இவ்வாறான பலவீனங்கள் எதுவும் இல்லாமல் நாம் நம்மை மறந்து ஏதேனுமொன்றில் ஆழ்ந்து ஒன்றிப்போய், கிறங்கிப்போய் நிற்கும் சமயங்களிலும் இவ்வாறு நாம் தீர்மானிக்க முடியாமல் போவதும் நடக்கும். இந்தக் கவிதை சொல்லிக்கு அன்றைய மாலைப் பொழுதில் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது.

அந்திப் பொழுதில் பால்கனியில் அமர்ந்து வேடிக்கைப் பார்க்க வாய்ப்பதே அபூர்வம். அப்படியொரு கணத்தில் நம் எண்ணங்கள் பின்னகர்ந்து இயற்கையின் அழகில், லயத்தில் நம்மை மறந்திருப்போம். அலைகளற்ற ஆழ்கடலாய் மனம் அமைதியில் நிறைந்திருக்கும். அந்த நேரம் பார்த்து முல்லைக் கொடியோரம் தயங்கி நிற்கிறது சாயங்காலம். அப்போதைய நிலையில் அந்த நேரத்தில் இயற்கையின் ஒரு பகுதியாகவே நம்மால் அந்த சாயங்காலத்தைப் பார்க்க முடியும். உள்ளே வரத் தயங்கி அது காத்திருக்கிறது என்பதை அறியாமலே வேடிக்கை பார்த்திருப்போம். நம் சொல்லுக்காக அது காத்திருப்பதும் அதன் உத்தேசம் அறியாமல் நாமும் வேடிக்கை பார்த்திருப்பதும் வெகு நேரத்துக்குத் தாக்குப் பிடிக்காது. இருட்டுக்கு இப்படிப்பட்ட குழப்பம் எதுவுமில்லை. நொடிப்பொழுதில் அள்ளி விழுங்கி விடுகிறது.

இந்தக் கவிதையில் சித்தரிக்கப்பட்டுள்ள காட்சி மிக எளிமையானது. சாதாரணமானது. அனைவருக்கும் வாய்க்கும் ஒன்றுதான். ஆனால், எளிய சாதாரணமான காட்சி ஒரு சம்பவமாக மாறுகிறது. சாயங்காலம் ஒரு கதாபாத்திரம். கவிதை சொல்லி இன்னொரு கதாபாத்திரம். இருவருக்குள்ளும் பார்வை பரிமாற்றம் மட்டுமே. இந்த மௌன நாடகம் முடிவுறுவதற்குள் இன்னொரு கதாபாத்திரம் நொடிப்பொழுது தோன்றி மறைகிறது. சாயங்காலத்தை அள்ளிக்கொண்டு மறையும் இருட்டுதான் அந்த மூன்றாவது கதாபாத்திரம். அதன் பின் சம்பவம் முடிந்து காட்சியும் முடிவுறுகிறது. கவிதையும்.

0

( பிப்ரவரி 2026 ஆவநாழி மென்னிதழில் வெளியானது )

கல்லாவிலிருந்து எண்ணெய்ச் சட்டிக்கு - கவிதையும் ஞானமும் 7


 






சாஸ்தா பேக்கரி

முகுந்த் நாகராஜன்

0

சாஸ்தா பேக்கரி

ராதா நகர் மெயின் ரோடில் இருந்தது.

நான் சிறுவனாக இருந்தபோது

வேட்டி கட்டிக்கொண்டு

சந்தனம் இட்டுக்கொண்டு

குள்ளமாக இருப்பார் நாயர்.

‘ஹாப் பிரெட்’ வாங்கப் போனால்

‘என்னடா.. ஜுரமா?’ என்று விசாரிப்பார்

கண்ணாடி ஜாடிகளின்

குமிழ் மூடியில் சுற்றும்

குட்டி மின்விசிறியை

வேடிக்கை பார்த்தால்

பரண் மேல் இருக்கும்

பெரிய டின்களில்ள போட்டு

அடைத்துவிடுவதாக மிரட்டுவார்

கிள்ளிவிடுவார்

ஒருமுறை பன் பட்டர் ஜாம் வாங்கிவிட்டு

காசு குறைந்தபோது

‘அடுத்தவாட்டி கொடுத்துடணும்’ என்று

ஜாம் தடவிய கத்தியை எடுத்துக் காட்டினார்

அந்தக் கடை இப்போது இல்லை

பாரதிபுரத்தில் இருக்கும் டீக்கடையில்

அவரைப் பார்த்தேன் சமீபத்தில்

வெளியே நின்று வடை போட்டுக்கொண்டிருந்தார்

‘உங்க பொண்ணா?’ என்று கேட்டு

குழந்தையின் கன்னத்தைக் கிள்ளினார்.

வடையை வாங்கிகொண்டு

காசை நீட்டியபோது

‘அங்க கொடுங்க..’ என்று

கல்லாவைக் காட்டினார்.

 

0

குழந்தைகளின், சிறுவர் சிறுமிகளின் உலகத்தை கவிதைக்குள் கொண்டு வருவது அத்தனை எளிதான காரியமல்ல. செறிவான கவிதை மொழிக்கு மாறானது குழந்தைகளின் எளிய உலகம். உண்மையில் அது மொழியற்றது, பாசாங்கற்றது. எந்த மொழிக்கும் அப்பாற்பட்டது. சிரமமான இந்த காரியத்தை, அது அத்தனையொன்றும் கஷ்டமில்லை என்பதுபோல வெகு இயல்பாக, நேர்த்தியாக கவிதைக்குள் கொண்டு வந்து காட்டுபவை முகுந்த நாகராஜனின் கவிதைகள்.

அடர்த்தியும் அழுத்தமும் கனமுமான கவிதை வடிவத்துக்குள் குழந்தைகளை இயல்பு மாறாமல் குதூகலத்துடனும் விளையாட்டுத்தனத்துடனும் காணமுடிவது எத்தனை பெரிய ஆசுவாசம்! அதிகமும் வாசிக்கப்பட்ட, பகிரப்பட்ட அவரது ‘குழந்தைகளின் ஜன்னல்கள்’ கவிதை இது.

இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் ஸீட்

உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா

வீடு இங்கேதான் இருக்கிறதாம்…

இதெல்லாம் ஒரு காரணமா?

 

‘சாஸ்தா பேக்கரி’ என்கிற இந்தக் கவிதை வாசிக்கும் எல்லோரையும் அவரவர் இளமைக் காலத்துக்கும், அவரவர் ருசித்த பேக்கரிகளுக்கும் இட்டுச் செல்லும். 

திருப்பூரின் புகழ் பெற்ற ‘வீனஸ்’ பேக்கரியைக் குறித்தும் அங்கு கிடைக்கும் தேங்காய் பன்னைக் குறித்தும் முன்பே என் புனைவுகளில் எழுதியிருக்கிறேன். இப்போது இதை எழுதும்போதுகூட பெருமாநல்லூர் சாலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்த அந்தக் கடையும், வெள்ளை முழுக்கைச் சட்டையை முழங்கைவரை மடித்தபடி பொட்டலம் கட்டித் தரும் அந்த மலையாளத்துக்கார ஓனரும், வாசலில் வாலை ஆட்டியபடி நிற்கும் கொழுத்த நாயையும் நினைவில் காண முடிகிறது.

பேக்கரிக்கும் மலையாளக் கரைக்கும் அப்படியென்ன பந்தம் என்று தெரியவில்லை. அக்காலத்திய திருப்பூரின் பிரபல பேக்கரிகளான ‘வீனஸ்’, ‘நீலகிரி’ பேக்கரிகளின் உரிமையாளர்கள் மலையாளிகளே. ‘வீனஸ்’ பேக்கரி வெகு காலத்துக்கு முன்பே இல்லாமல் போனது. தேங்காய் பன்னுக்கு பிரபலமான ‘நீலகிரி’ பேக்கரி புஷ்பா தியேட்டர் முனையில் அவிநாசி சாலையில் இன்றும் இருக்கிறது. அங்கு கிடைக்கும் தேங்காய் பன்னுக்கு இணையான ஒன்றை வேறெங்கும் நான் ருசித்ததில்லை. அந்தக் கடையின் முதலாளி மகன் ஆனந்த் பள்ளி இறுதி ஆண்டுகளில் என் வகுப்புத் தோழன். பன்னிரெண்டாம் வகுப்பின் இறுதி நாட்களில் வகுப்பளவில் ஏற்பாடு செய்யப்படும் விருந்தின்போது நீலகிரி பேக்கரியின் தேங்காய் பன்னும் உருளைக்கிழங்கு சிப்சும் வழங்கப்பட்டன. எப்போதும் ஷாம்பு போட்டு குளித்த தலைமயிர் நெற்றியில் புரள அடங்கிய குரலில் பேசும் ஆனந்த் இப்போது என்ன செய்கிறான் என்று தெரியவில்லை. 

குமரன் சாலையில் பூ மார்க்கெட்டும் பெருமாள் கோயிலும் சந்திக்கும் முனையில் இருந்த பேக்கரியின் வாரிசான வினோத் பன்னிரெண்டு டி யில் படித்தான். பள்ளியின் துணை முதல்வரும், பொருளாதார வகுப்பெடுக்கும் பீட்டர் சார் அவனை விளிப்பது இப்போது காதில் ஒலிக்கிறது ‘ஏம்பா, ரொட்டிக்கட வினோத்து, இங்க வா.’ அந்த ரொட்டிக்கடையும் இன்னும் அதே இடத்தில் உள்ளது. வினோத் என்ன செய்கிறான் என்பது தெரியவில்லை. பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு தொடர்பு விட்டுப்போயிற்று. 

திருப்பூரின் தொழில் வளம் பெருகியபோது அத்துடன் இணைந்து பேக்கரிகளின் எண்ணிக்கையும் பெருகின. இரவும் பகலுமாய் உழைக்கும் தொழிலாளிகளின் தேநீர் தேவையை தீர்த்து வைத்ததுடன் தொடர்ந்து உழைத்த கைகளுக்கு ஓய்வையும் ஆசுவாசத்தையும் அளித்தன அவை. ஒவ்வொரு பகுதியிலும் விடிய விடிய பாய்லரில் நீரும், பாத்திரத்திலும் பாலும் காய்ந்துகொண்டிருந்த பேக்கரிகள் உண்டு. பிற பேக்கரிகளிலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்ட புதுவிதமான தின்பண்டங்களையும் ருசிகளையும் அறிமுகப்படுத்தும் காரியங்கள் மேற்கொள்ளப்பட்டன. தேநீரில் அரைத் தேக்கரண்டி ‘பூஸ்ட்’ தூளைத் தூவி சுவை சேர்த்து அனைவரையும் வியக்கச் செய்தது லட்சுமி நகர் அருகே இருந்த மல்லிகா பேக்கரி. நகர மண்டபத்துக்கு எதிரில் நஞ்சப்பா பள்ளிக்கு போகும் சாலையில் கீழ்த்தளத்தில் இருந்த சுரேஷ் பேக்கரியில் பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு, அப்பள பஜ்ஜிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 

எல்லா ஊர்களிலும் சாலைகளிலும் காண முடிந்த ‘முனியாண்டி விலாஸ்’கள் திடீரென்று காணாமல் போனது போலவே பாரம்பரியமான இத்தகைய ‘ரொட்டி’க்கடைகள் காணாமல் போய் அவற்றினிடத்தில் ‘ஐயங்கார் பேக்கரி’களும் ‘ஐஸ்வர்யா’பேக்கரிகளும் எழுந்தன. ஒரேபோல தோற்றத்துடன், மேசை நாற்காலிகளுடன், முகப்பு அலங்காரத்துடன் அமைந்திருந்தன அந்த பேக்கரிகள். உழைக்கவும் தொழில் செய்யும் ஆர்வம் உள்ளவர்கள் இடத்தை மட்டும் கண்டுபிடித்து தெரிவு செய்தால், கடைக்குத் தேவையான பிற அனைத்தையும் ‘பைனான்ஸ்’ முறையில் முதலீடு செய்து தரும் உத்திகள் பெருகின. இதற்கு ஈடாக தினம் ஒரு தொகையை முதலீடு செய்பவருக்குச் செலுத்தவேண்டும். கடையைத் திறந்தாலும் திறக்காவிட்டாலும், வியாபாரம் நடந்தாலும் நடக்காது போனாலும் தினசரி தொகையைச் செலுத்தியாக வேண்டும். தொகையை செலுத்த முடியாதபோது கடை கைமாறிவிடும்.     

பேக்கரிகள் நடத்துவதில் பெரும் சவால் சரியான டீ மாஸ்டரையும் சரக்கு மாஸ்டரையும் கண்டுபிடிப்பது. அப்படிக் கண்டுபிடித்த மாஸ்டர்களை எப்பாடுபட்டாவது தக்கவைத்துக் கொள்வது. ருசியான தேநீரை சரியான சூட்டில் தரும் டீ மாஸ்டர்களை தேநீர் ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அதேபோல எண்ணெய்ச் சட்டியின் முன்னால் நின்று சிரித்துப் பேசியபடியே போண்டா, பஜ்ஜிகளை பதமாய் சுட்டெடுத்துப் போடும் சரக்கு மாஸ்டர்களும் வியாபாரத்துக்கு முக்கியம். இந்த இருவரையும் பக்குவமாக கையாளவேண்டும். அவர்கள் போக்குக்கு அனுசரித்துப் போக வேண்டும். கேட்கும்போது கேள்வி எதுவும் எழுப்பாமல் ‘அட்வான்ஸ்’ தரவேண்டும். சம்பளத்தைக் கூட்டித் தரவேண்டும். லீவு கேட்டால் முகம் சுளிக்கக்கூடாது. இவற்றையெல்லாம் மீறி, எந்த நேரத்தில் இவர்கள் இருவருக்குமோ அல்லது யாரேனும் ஒருவருக்கோ, ‘தான் இல்லாவிட்டால் இந்தக் கடை இல்லை’ என்ற எண்ணம் தலைதூக்குகிறதோ, அத்துடன் முடிந்தது சோலி.  

பேக்கரி முதலாளிகள் எல்லா நேரத்திலும் கல்லாப்பெட்டியில் உட்கார்ந்து காசை எண்ணிக்கொண்டிருக்க முடியாது. ‘மாஸ்டர்’கள் இல்லாத சமயங்களில் டீ போடவும் போண்டா பஜ்ஜிகளை சுடவும் தெரிந்திருக்க வேண்டும். ‘அரைச் சக்கர’, ‘வித்வுட்டு’, ‘கண்ணாடி கிளாஸ்’, ‘அட்டை தம்ளர்’, ‘ப்ளாக்’, ‘பால் டீ’ என்று விதவிதமான தேவைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும். கடையை முடிந்த வரை சுத்தமாக பராமரிப்பதும் சுறுசுறுப்புக்கு குறையாமலும் வைத்திருப்பது அவசியம். இதெல்லாவற்றையும்விட குறைந்தபட்சம் தினசரி வசூல் தொகையளவுக்கேனும் வியாபாரம் நடப்பதை உறுதிப்படுத்தினால்தான் தலை தப்பும். 

டீத் தூளும் பாலும் பேக்கரி ஐட்டங்களும் மாதக் கடனுக்குக் கிடைக்கும் என்றாலும் அதுவும் தீர்க்கவேண்டிய கடன்தான். இதுபோக கடைக்கான வாடகை, ஊழியர்களுக்கான சம்பளம், எரிபொருள் உள்ளிட்ட மாதாந்திர செலவுகளையும் சமாளிக்கவேண்டும். இவற்றையெல்லாம் சமாளித்துக் கொடுத்த பிறகுதான் தனக்கான சம்பளத்தைக் கணக்கிலெடுக்க முடியும். இத்தனைக்கும் பிறகுதான் இலாபம் என்பதைத் தேடவேண்டும். 

தெருவுக்கு பத்து பேக்கரிகள் முளைத்திருக்கும் இடத்தில் ஆரம்ப ஜோரில் களைகட்டும் கடைகள் ஒருசில மாதங்களிலேயே காத்தாடும்போது கல்லாப்பெட்டியில் காசு எண்ணும் முதலாளியின் கதி என்னவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். 

அப்படி காசு எண்ணிக்கொண்டிருந்த முதலாளிதான் வேறொரு இடத்தில் எண்ணெய்ச் சட்டியின் முன்னால் நின்று பஜ்ஜி சுட்டுக் கொண்டிருப்பார். வெதுவெதுப்பான சுடுநீரில் தம்ளர்களை அலசி வரிசையில் அடுக்கி டீ போட்டு நிறைப்பார். கிரகநிலை படுமோசமாக இருந்தால் மேசைகளிலிருந்து எச்சில் தம்ளர்களைப் பொறுக்கிப் போட்டு கழுவிக் கொண்டிருப்பார். 

அவ்வாறு வேறு பேக்கரிகளில் வேலை செய்துகொண்டிருக்கும் பழைய ‘முதலாளி’கள், நம்மைக் காண நேரும்போது பல சமயங்களில் கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிடுவார்கள். அடையாளம் தெரிந்து முகம் பார்த்துப் பேச முனைந்தாலும் ஆர்வம் காட்டாமல் தலையைக் குனிந்தபடி தவிர்ப்பார்கள். அதுபோன்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் நாம் செய்ய வேண்டிய சிறிய உதவி அவர்களது தவிர்ப்பை, தவிப்பைப் புரிந்துகொண்டு தொந்தரவு செய்யாமல் விடுவதுதான். 

நல்லவேளையாக முகுந்த் நாகராஜன் சந்திக்கும் ‘பழைய’ முதலாளி, குழந்தைகளிடம் பிரியத்தைக் காட்டிய முந்தைய காலத்தைப் போலவே, வடை சுட்டுக் கொண்டிருக்கும் வறிய நிலையில் இன்றும் குழந்தைகளிடம் மாறாத அன்பைக் காட்டுபவராக இருக்கிறார். வியாபார நசிவு அவரை வெறுமனே இடம் மாறி நிற்கத்தான் செய்திருக்கிறது. உள்ளுக்குள் அவர் அப்படியேதான் இருக்கிறார். இது அவரது பேரதிர்ஷடம். 

இத்தகைய சரிவுக்குப் பிறகு இவர்களைப் போன்ற ‘பழைய’ முதலாளிகள், எல்லா நேரங்களிலும் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளிவிட்டு ‘அங்க குடுங்க’ என்று கல்லாப்பெட்டியை கைகாட்ட மாட்டார்கள்.

( பிப்ரவரி 2026 ஆவநாழி மென்னிதழில் வெளியானது )

Monday, 1 December 2025

கவிதையும் ஞானமும் 6 - தனிமையின் அர்த்தம்



 



0

திக்கற்றோர்க்கு

----------------------

யாராவது யாருடனாவது

இருக்கத்தான் வேண்டும்

அப்படித்தான்

எலும்பில் எழுதப்பட்டிருக்கிறது

 

அவன் இவளோடும்

அவள் இவனோடும்

அவன் இவனோடும்

அவள் இவளோடும்

அவர்கள் இவர்களோடும்

அவர்கள் அவர்களோடும்

 

தோள் தேடுவதும்

மடி சாய்வதும்

உயிரின் அனிச்சை

ஆகவே

தழுவலின் நகக்கீறல் சகித்து

யாராவது யாரோடாவது

இருக்கத்தான் வேண்டும்

 

பூமியில் ஒருவரது பாத்தியதை

அழிக்கமுடியாதது

என்றாலும் நேர்கிறது

யாரோ ஒருவர்க்கு

யாருமே இல்லாமல் போய்விடுவதும்

 

நாம்

தனிமை பழகத்தான் வேண்டும்

கைவிடப்பட்ட

காட்டுக்கோவிலில்

வீற்றிருக்கும்

சிறுதெய்வத்தைப் போல

0

குணா கந்தசாமியின் இந்தக் கவிதை உமா மகேஸ்வரியின் நாவல் தலைப்பை நினைவுபடுத்துகிறது ‘யாரும் யாருடனும் இல்லை’. உண்மையில் யாரும் யாருடனும் இல்லைதான். ஆதியிலும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும். ஆதாமும் ஏவாளும் ஒருவரையொருவர் காணும்வரையிலும் தனித்தனியாகத்தான் இருந்திருப்பார்கள். பின் ஆதியிச்சையின் விளைவாக உயிர்கள் பெருகி ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் நிலை உண்டாகியிருக்கும். உயிர்காத்தல், உணவு, உறைவிடம், உடைமை காத்தல் என்று சுயநலம் சார்ந்த தேவைகளுக்காய் உருவான இந்த ஏற்பாடு குடும்பம், குழு, கூட்டம் என அமைப்புகள் உருவாக வழிவகுத்தது.

மற்றபடி விதிவிலக்கின்றி அனைவரும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அனுபவிக்க வேண்டிய ஒன்று தனிமை. அனுபவிப்பது என்றாலே சுகம், துக்கம், வாதை, வலி, இம்சை என்று எல்லாமும் இருக்கும். தனிமையை கொண்டாடுவோரும் உண்டு. தாளமுடியாதது என்று அஞ்சுவோரும் உண்டு.

தனிமையை மிக எளிமையாக புரிந்துகொண்டிருக்கிறோம். யாரும் இல்லாமல் தனியாக இருப்பதுதான் தனிமை. மனிதர்கள் யாரும் உடனில்லாமல் இருந்துவிட்டால் தனிமை வாய்த்துவிடுமா?

என்றால், தனித்திருக்கும்போது தனிமையில் இருக்கிறோமா என்ற கேள்வி எழும். பயணம் செய்யும் அதே பெட்டியில் அடுத்தடுத்த இருக்கையில் முன்பின் தெரியாதவர்கள் பலரும் இருக்கும்போதும் நாம் தனியாகத்தானே இருக்கிறோம். அதை தனிமை என்று வகைப்படுத்த முடியுமா? தனித்திருப்பது வேறு, தனிமை வேறு. 

‘இளையராஜாவின் இசையும் சுவையான காபியும் என் தனிமையை அழகு செய்கின்றன’ என்று எழுதுவதைப் படித்திருக்கிறோம் அல்லவா?

தனிமை எத்தகையது? ஓசையற்றதா, நிறமற்றதா, ஒளியற்றதா, எதற்கும் வசப்படாததா, வரையறைகளற்றதா? ஒலியையும் ஒளியையும் நிறத்தையும் மணத்தையும் நீக்கிவிட்ட வெளிதான் தனிமையா? நீரும் நிலமும் காற்றும் நெருப்பும் கலந்து ஒன்றாகிப்போன அந்தரவெளியா அது?

தனிமையை, தூய தனிமையை நேரடியாக சமாளிப்பதும் அனுபவிப்பதும் அத்தனை எளிதல்ல. பொதுவாக தனிமையில் இசை கேட்க விரும்புவார்கள். வாசிக்க முனைவார்கள். எழுதவும் சிந்திக்கவும் தனிமை தேவை.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடும்பத்துடன் சுற்றுலா செல்வதுண்டு. நாங்கள் அண்ணன் தம்பிகள் நால்வர், நால்வரின் மனைவியர், பிள்ளைகள் எண்மர் என்று பதினாறு பேர். கூடவே உறவினர்கள், குடும்ப நண்பர்களில் எவரேனும் சிலர் சேர்ந்து கொள்வார்கள். ஒருமுறை அவ்வாறான ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டபோது ‘மனைமாட்சி’ நாவலின் இறுதிக்கட்ட வேலையில் இருந்தேன். வேலையை ஒத்திப்போட முடியாத நெருக்கடி. எனவே, போகவேண்டாம் என்று தீர்மானித்தேன். மனைவியும் பிள்ளைகளும் புறப்பட்டுப் போனார்கள். திரும்பி வர நான்கு நாட்களாகும். அவர்கள் ஊருக்குப் போயிருக்கும் நேரத்தில் தொந்தரவு இருக்காது, நாவல் வேலைகளை முடித்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், வீட்டில் தனியாக இருந்த அந்த நாட்களில் எழுத மனம் குவியவேயில்லை. அந்த நேரங்களில் என்னைப் பெரிதும் தொந்தரவு செய்தது வீட்டின் ஓசையின்மை. குடும்பத்தினர் வீட்டுக்குள் நடமாடும் ஓசையும் சேர்ந்ததுதான் வீடு. சமையலறையில் பாத்திரங்களின் ஓசை, மிக்ஸி அரைக்கும் சத்தம், குழந்தைகளின் சிரிப்பு, சண்டை, சிணுங்கல் எதுவுமில்லாமல் வீடு வெறும் கட்டடமாக மாறிப் போகிறது. அந்த சத்தமின்மை பெரும் தொந்தரவாயிற்று. கவனத்துடன் வேலையில் ஈடுபட இயலவில்லை. வீட்டின் சத்தங்களின் நடுவே உள்ள ‘தனிமை’யே எனக்கு உகந்தது என்று அறிந்துகொண்டேன்.      

குணா கந்தசாமி இந்தக் கவிதையில் தனிமையை வேறொன்றாக வரையறுக்கிறார். உறவுகளற்றுப் போகும் நிலையை அவர் தனிமை என்கிறார். அவை உவப்பான உறவுகளாய் இல்லாமல் இருக்கலாம். கூடிக் களித்து மகிழ்ந்திருந்தபோதும் சில வேளைகளில் போட்டியோ பொறாமையோ சிறு சண்டையோ வாக்குவாதமோ ஏற்பட்டிருக்கலாம். கணவன் மனைவி, நட்பும் சுற்றமும், அண்டை அயலார் என எல்லா உறவிலும் இணக்கமும் பிணக்கும் இருக்கத்தான் செய்யும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ஒட்டி உறவாடிய ஒன்று இல்லாதபோது வாய்த்துவிடுவது தனிமை என்கிறார். அவ்வாறான ஓர் தனிமை தவிர்க்க முடியாதது. என்றேனும் ஓர் நாள் எல்லோரும் சந்திக்கத்தான் வேண்டும். அதைப் பழகத்தான் வேண்டும்.

இப்படி ஓர் வரையறைக்குப் பிறகு ஒரு வரியை எழுதி முடிக்கிறார் குணா கந்தசாமி.

தனிமை பழகத்தான் வேண்டும்

கைவிடப்பட்ட

காட்டுக்கோவிலில்

வீற்றிருக்கும்

சிறுதெய்வத்தைப் போல

 

இந்த இறுதி வரியின் ஒவ்வொரு சொல்லும் தனிமையின் வீரியத்தை தீவிரத்தை சுட்டுகின்றன. கைவிடப்பட்ட ஒரு கோவில் என்று நில்லாமல் ‘காட்டுக் கோவில்’ என்று துல்லியப்படுத்தும்போது அழுத்தம் கூடுகிறது. அங்கிருப்பது ஒரு தெய்வம் என்று நிறுத்தவில்லை. அதுவொரு ‘சிறுதெய்வம்’ என்று உருப்பெருக்கியால் இன்னும் நெருக்கமாகக் காட்டுகிறார். கைவிடப்பட்ட காட்டுக்கோவிலில் வழிபாடும் இல்லை, ‘வீற்றிருக்கு’ம் சிறுதெய்வத்துக்கு படையலும் இல்லை. கோவிலும் சிறுதெய்வமும் தனிமை பழகிக் காத்திருக்கத்தான் வேண்டும்.

எனக்கென்னவோ தனிமை காற்சங்கிலியிட்டு கற்தூணில் கட்டப்பட்ட களிறென்றே எண்ணத் தோன்றுகிறது.

அவரவர் தனிமைக்கு ஆயிரம் அர்த்தங்கள்.

0

நன்றி - குணா கந்தசாமி

கவிதையும் ஞானமும் 5 - வழிப்பறிச் சம்பவம்



 




உண்பதும் உடுப்பதும் துயில்வதும் எழுவதுமான அன்றாடத்தின் சலிப்புகளுக்கு நடுவே சில விசயங்கள் மட்டும் அலுப்பூட்டாதவை. கவிதைகளிலும் ஒருசில பாடுபொருட்கள் மட்டும் ஒவ்வொரு கவிதையிலும் மெருகிழக்காமல் புதிய அனுபவங்களைத் தர வல்லவை. சூரியோதயத்தைக் குறித்து ஓரிரு வரிகளேனும் எழுதாத கவிஞர்களே இல்லை.  ‘நகர்ந்தோடியிருந்தது ஆட்டுக்குட்டி, சூரியனைக் காணோம்’ என்று பசுவய்யாவும், ‘மலை விளிம்பில் சூரியனுக்குப் புராதன மனிதனின் புன்னகை’ என்று சுகுமாரனும், ‘பூமித் தோலில் அழகுத் தேமல்’ என்று பிரமிளும் உதயத்தைக் கண்டிருக்கிறார்கள்.

வெகு நீளமான கிழக்கு கடற்கரையின் வெவ்வேறு கரைகளில் ஒவ்வொரு நாளும் உதயசூரியனைக் காணவேண்டி எண்ணற்றோர் காத்திருக்கின்றனர். வானும் வெளியும் நீரும் ஒன்றுகலந்த கருநீல எல்லையை கிழித்து சாம்பல் வெளிச்சம் கசிவதில் தொடங்குகிறது அந்நாளின் அபூர்வத் தருணம். அடிவானம் முழுதும் மஞ்சள் பூசும். கொஞ்சம் குங்குமச் சிவப்பும் கூடும். மேகத் திட்டுக்களில் தீப்பிடிக்கும். பொன்மகுடத்தின் உச்சி ஒளிர எழுகதிர் தலைகாட்டும். செக்கச் சிவந்ததொரு ஒளிப்புள்ளி காணுந்தோறும் வளர்ந்து வட்டத்தட்டின் விளிம்பாக திரண்டெழும். கடலும் வானும் பித்துற்று பரவச நிறங்களை இறைக்கும். சுடரும் வளைகோடு இருபுறமும் இறங்கிச் சேர்ந்திடும். செவ்வட்டம் முழுமையுற்று சுழலும். ஏந்திய கடலின் கையிலிருந்து வானின் விரிகரங்களுக்கு தாவிய நொடியில் அந்தக் காட்சி முடிவுறும். சூரியோதயம் பார்த்தாயிற்று. உலகு மொத்தமும் அன்றாடத்துக்குத் திரும்பும். மீண்டும் மறுநாள் அதே கரைகளில் வேறு பலரும் அதே காட்சியைக் காணக் காத்திருப்பார்கள்.

காலைப் பொழுதின் அழகையும் மனத்துக்கு தரும் நிறைவையும் வாய்க்காதபோது அது ஏற்படுத்தும் ஏமாற்றத்தையும் கவிதையில் எழுதுவது வழக்கமானதுதான். நம்பிக்கை, மீட்சி, ஏமாற்றம் என்று பல்வேறு உணர்வுகளையும் சுட்டும் படிமமாக அமைந்துவிடுகிறது. ஆனால் அதுவே கண்ணையும் மனத்தையும் கொள்ளைகொள்ளும் இக்காட்சியை ஒரு வழிப்பறிச் சம்பவமாக எழுதிக் காட்டும்போது கவிதையின் சாத்தியங்களைக் குறித்த ‘அட!’ என்ற வியப்பு கூடிவிடுகிறது. 

வழிபறிக்கு வந்தவனின் முகம் தெரியாதபடி இருட்டாக இருக்கும். அல்லது முகத்தை மூடியிருப்பான். அவன் கையிலிருக்கும் அந்தக் கத்திக்கு அத்தனை வலிமை. உயிர்ப் பயம். ஒரு சிறு கீறலும் எட்டிப் பார்க்கும் துளி ரத்தமும் போதும் நம் ஆயுளுக்கும் நடுக்கம் கொடுக்க. அது நடந்துவிடுமோ என்ற பயத்தில் இருப்பவற்றை நடுங்கியபடியே எடுத்துக் கொடுத்துவிடுமோம். ‘காசு போச்சுன்னா பரவால்ல, சம்பாதிச்சுக்கலாம். உசிரு போனா வருமா?’ என்ற எளிய சமாதானமே வழிப்பறிக்காரர்களின் தேவ வாக்கு. 

வழிப்பறியின்போது அந்த நேரத்தில் நம்மிடம் உள்ள அனைத்தையும் இழக்க நேரும். பையிலிருக்கும் பணம், சங்கிலி, மோதிரம், வளையல், தோடு, கடிகாரம் என்று எதையும் விட்டு வைக்கமாட்டார்கள். அந்த இழப்பை அத்தனை சீக்கிரம் நம்மால் மறந்துவிட முடியாது. 

ஆனால், இந்தக் கவிதையில் ஜெ.ரோஸலின் சித்தரிப்பது போன்ற ஒரு வழிப்பறி நிகழுமானால் நாம் எல்லோருமே நம்மிடம் உள்ளதனைத்தையும் சிறிதும் பயமின்றி மிகுந்த மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொடுத்துவிடுவோம். கேள்விப்படுவோர் அனைவரும் தமக்கும் இவ்வாறு நடக்கவேண்டும் என்று விரும்புவார்கள். விரைவில் அது கைகூடவேண்டும் என்று இஷ்டதெய்வங்களை வேண்டுவார்கள். அன்றாடம் அப்படியொரு வழிப்பறி நிகழவேண்டும் என கடற்கரையெங்கும் அதிகாலையில் ஆட்கூட்டம் கூடிவிடும்.

கவிஞர் ஜெ.ரோஸலின் முகநூலில் கவிதைகளை எழுதுபவர். இது அவருடைய உண்மையான பெயரா, கற்பனையா என்பது தெரியாது. ஆனால், தொடர்ந்து அருமையான கவிதைகளை எழுதி வருகிறார். பெயரோ முகமோ தெரியாமலிருப்பதால் நல்ல கவிதைகளை ரசிக்காமல் இருக்க முடியாதல்லவா?

 

ஜெ.ரோஸலின், தான் வழிப்பறிக்கு ஆளான அந்தப் பாதையை நம் எல்லோருக்கும் காட்டட்டும். அந்த வழிப்பறிக்காரன் கேட்பது போல அனைத்தையும் வெளியே எடுத்துக் கொடுத்துவிடுவோம். அப்படியொரு அற்புதத்தை சாத்தியப்படுத்தியதற்காக அனைவரும் அவருக்கு காலத்துக்கும் நன்றியுடையவராக இருப்போம்.

ஆனால், பாவம் அந்த வழிப்பறிக்காரன். அத்தனை வருத்தங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வான் அவன்?

0

ஒரு வழிப்பறி சம்பவம்

 

தூரத்து மலையும் பக்கத்திலிருந்த வயல்வெளியும்

என் இரு கரங்களையும் மடக்கிப்பிடித்துக்கொண்டன.

பின்னர் ஒரு தங்கக் கத்தி வந்தது.

கைப்பிடிக்கு அந்தப்பக்கம் யாருமில்லை

ஆனால் நீலம்.

"உன் வருத்தத்தையெல்லாம் வெளியே எடு.

என்ன பார்க்கிறாய்

சீக்கிரம்..."

0

நன்றி - ஜெ.ரோஸலின்

அம்மாவின் நீங்கா நிழல் - கவிதையும் ஞானமும் 16 - சதீஷ்குமார் சீனிவாசன்

  போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிரு...