Wednesday, 1 April 2026

இடம் பிடிக்கும் கலை - கவிதையும் ஞானமும் 9

 


0

வாய்ப்புகளும் வரிசைகளும் இருந்தால் அங்கே நிச்சயம் ‘இடம் பிடித்து வைக்கும்’ பண்பையும் தவறாமல் பார்க்க முடியும். வரிசையில் நின்றே பிழைத்துக் கிடக்க விதிக்கப்பட்டவர்களுக்கு வேறு பாடுகளும் இருக்கும் அல்லவா? எந்த நேரமும் வரிசையிலேயே நின்று கொண்டிருக்கும் ஆடம்பர வாழ்க்கை அவர்களுக்கு வாய்க்கவில்லை. எனவே, ஒவ்வொரு வரிசையிலும் தங்கள் இடத்தை உறுதிசெய்து கொள்ள இடம் பிடித்து வைக்கவேண்டும். வரிசைக்குத் தக்கவென பொருட்களும் கைவசம் இருக்கும். கோடை காலங்களில் தண்ணீருக்காக குழாயடி வரிசைக்கு கதவிலக்கம் எழுதப்பட்ட பிளாஸ்டிக் குடங்கள், ரேஷன் கடைகளில் மண்ணெண்ணை கலன்கள், பேருந்துகளிலும் ரயில்களிலும் கட்டைப் பைகள் என்று வரிசையில் இடம் பிடிப்பதற்கென தகுதிபெற்ற பொருட்கள் இன்னும் சில உண்டு.

எழுபதுகளில் டூரிங் டாக்கீஸ்களில் தரை டிக்கெட்டுகள் மணலில் உட்கார்ந்தே படம் பார்க்கவேண்டும். தாமதமாக வரும் நண்பனுக்காக தனக்கருகில் மணலைக் குவித்து வைத்து இடம் பிடித்திருப்பார்கள். தியேட்டர்களில் இருக்கை எண்ணுடன் முன்பதிவு செய்யும் வசதி வருவதற்கு முன்பு, ‘முந்திக் கொள்வருக்கே முதலிடம்’ என்பதுதான் அடிப்படை. நியூஸ் ரீல்களும் விளம்பரங்களும் முடிகிற நேரம் சரியாக வந்து சேர்பவருக்காக இருக்கையைப் பிடித்து வைத்தவர், கேட்பவர்களிடமெல்லாம் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார் ‘ஆள் வராங்க’ என்று. நவீன கைபேசி செயலிகளின் வழியாக முன்பதிவு செய்யும் இன்றைய காலத்தில் மிச்சமிருக்கும் இருக்கையைப் பார்த்து வசதியானவற்றை நாமே தேர்வு செய்துகொள்ள முடிகிறது. ஒருவகையில் இதுவும் இடம்பிடிப்பதுதான். இங்கும் முதலில் வருவோர்க்கே முன்னுரிமை.

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோயமுத்தூருக்கு நிமிடத்துக்கு ஒரு பேருந்து புறப்பட்டுப் போகும். காலை ஏழரை மணியிலிருந்து எட்டே கால் மணிக்குள் புறப்பட்டுச் செல்லும் பேருந்துகளில் மூன்று தனியார் பேருந்துகள். கோவையில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லும் இளைஞர் கூட்டத்தினருக்கென எழுதி வைக்கப்பட்டவை இந்த மூன்று பேருந்துகளும். குறிப்பிட்ட நேரத்துக்கு பத்து நிமிடம் முன்பே வந்தாலும், புறப்பட்டுப் போகும் பேருந்துகளில் இவர்கள் ஏறமாட்டார்கள். வந்தவுடன் தங்களது வழக்கமான பேருந்தில் ஏறி நோட்டுப் புத்தகங்களை வரிசையாக இருக்கைகளில் போட்டுவிடுவார்கள். முதல் சில வரிசைகளில் கைகுட்டைகளும் இடம் பிடிக்கும். குறிப்பிட்ட நேரத்தில் புறப்படும்போது ஏறும் பிற பயணிகள் யாரும் காலியாக உள்ள இடத்தில் போய் உட்கார்ந்துவிட முடியாது. ஏற்கெனவே அங்கங்கே நின்று கொண்டிருக்கும் மாணவர்களில் ஒருவர் உங்களை நோக்கிச் சொல்லுவார் ‘அங்க ஆள் வருதுங்கண்ணா. நீங்க பின்னாடி போயிடுங்க.’ கடைசியில் உள்ள மூன்று அல்லது நான்கு வரிசைகளில்தான் உட்கார முடியும். சரியான நேரத்தில் வண்ணங்களும் வாசனையுமாய் வந்து சேரும் மாணவிகள், பிடித்து வைத்திருக்கும் இருக்கைகளில் உட்கார்ந்து நெற்றி வேர்வையைத் துடைத்துக் கொண்டு தலைகோதி முடித்தவுடன், இடம்பிடித்து வைத்த மாணவர்களில் யாரையேனும் பார்த்து ஒரு புன்னகையை செலவிடுவார்கள். நோட்டுப் புத்தகத்தைக் கொண்டு இடம் பிடித்து வைத்த அந்த இளைஞர்களுக்கு அந்த நாள் அக்கணம் பெரும் பேறாகி நிறையும். ஓட்டுநர் ஒலிப்பேழையிலிருந்து இனிய பாடல்களை ஒலிக்கச் செய்வார். பேருந்து இப்போது இளைஞர்களுக்கான ரதமாகியிருக்கும். பேருந்து புறப்பட்டு வெளியில் வரும்போதும் பிடித்து வைத்த இருக்கைகளில் பாதிதான் நிரம்பியிருக்கும். ஆள்தான் யாருமில்லையே என்று யாரும் காலி இருக்கைகளில் அமர்ந்துவிட முடியாது. அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஏற இருக்கும் மாணவிகளின் பட்டியலை சரிபார்த்தபடி படிகளில் ஒய்யாரமாக நின்றிருக்கும் இளைஞர்கள் உங்களை அனுமதிக்கமாட்டார்கள். பெருமாநல்லூர் சாலையில் ஊர்ந்து புஷ்பா தியேட்டர் நிறுத்தம் வரும்போது அநேகமாக இருக்கை எதுவும் மிஞ்சியிருக்காது. நிற்கவும் இடமிருக்காது. அப்போதும்கூட ஓரிரு இருக்கைகள் அடுத்தடுத்த நிறுத்தங்களில் வந்து சேரும் தேவதைகளுக்காகக் காத்திருக்கும். யாரும் உரிமையாய் கேட்டுவிட முடியாது. கல்லூரி மாணவர்கள் பலரின் கையிலிருக்கும் நோட்டுப் புத்தகங்கள் இப்படி பேருந்தில் இடம் பிடிக்க மட்டுந்தான் என்கிற ரகசியம் வெகுநாட்கள் கழித்தே தெரிய வந்தது. இப்படி இடம் பிடிக்கும் மாணவச் செல்வங்கள் கடைசி வரையில் எந்த இருக்கையிலும் அமரமாட்டார்கள். பயணம் முழுக்க நின்றகோலந்தான். இன்னும் சிலர் நண்பர்களின் மடிகளில். நடத்துனருக்கு ஓய்வுகொடுத்து தற்காலிக நடத்துனராக பொறுப்பேற்கும் நல்ல மனம் கொண்ட மாணவர்களும் உண்டு. இவை அத்தனையும் அன்றாடம் அதே பேருந்தில் பயணம் செய்யும் மாணவிகளின் மனத்தில் இடம் பிடிக்கச் செய்யும் முயற்சிகள்தான். அந்த அறுபது அல்லது எழுபது நிமிட பயணமே அன்றைய நாளை அர்த்தப்படுத்தும். கோவையை அடைந்து அந்தந்த நிறுத்தத்தில் மாணவிகள் இறங்கிப் போன பின் பேருந்து மொத்தமும் வெறிச்சோடும்.

பேருந்தில் இருவர் அமரும் இருக்கைகளில் ஒன்றில் முதலில் அமர்பவர்களில் பலரும் அடுத்த இருக்கையை எதற்கும் இருக்கட்டும் என்று பிடித்து வைத்திருப்பதுண்டு. தன்னைவிட பருமனான ஒருவரை பயண நேரம் முழுவதும் தோளில் சுமக்க முடியாது. பேருந்து புறப்பட்டவுடன், டிக்கெட்கூட வாங்காமல் கண்ணசந்து, தலைசொக்கி தோளில் சாயும் பாக்கியவான்களைத் தாலாட்டியபடி போகவும் முடியாது. இதுபோன்ற காரண காரியங்களை உத்தேசித்து, இந்த இம்சைகளைத் தர மாட்டார் என்று நம்பும் ஒருவர் உள்ளே ஏறி வரும்போது அவருக்கு அந்த இருக்கையை அனுமதிப்பார்கள். இத்தனை எச்சரிக்கையையும் மீறி எதிர்பார்த்த அசம்பாவிதங்கள் நடந்தால் வேறொன்றும் செய்ய முடியாது.

இடம் பிடிப்பதென்றாலே சண்டைகள்தானே? சண்டையில்லாமல் பிடிக்கும் இடத்தில் அத்தனை சுவாரஸ்யமும் இருக்காது. இடத்துக்கான சண்டைதான் வாழ்க்கை மொத்தமும். யாரேனும் ஒருவரின் மனத்தில், எண்ணத்தில், அபிப்ராயத்தில் ஏதேனும் ஒரு காரியத்தை உத்தேசித்து இடம் பிடிக்கும் வித்தையைத்தான் வாழ்க்கை முழுவதும் அன்றாடம் பயின்றுகொண்டிருக்கிறோம். வகுப்பறை முதல் அரசியல் வரை இடத்துக்கான போராட்டங்கள் ஓய்வதேயில்லை. மாணவனாக இருக்கும் வரையிலும் மதிப்பெண்ணில் இடம்பிடிக்க வேண்டும். இளைஞனாகிவிட்டால் விரும்பிய பெண்ணின் இதயத்தில் இடம் பிடிக்கவேண்டும். மணமான பெண்ணுக்கு கணவனின், மாமியாரின் மனதில் இடம் பிடிக்கவேண்டும். ஊழியனுக்கு அதிகாரியின் மனதிலும் அதிகாரிக்கு முதலாளியின் மனதிலும் முதலாளிக்கு ஆட்சியாளரின் மனதிலும் ஆட்சியாளர்களுக்கு மக்களின் மனதிலும் இடம்பிடிக்கும் அவசியமும் அவஸ்தைகளும்.

இடம் பிடிக்க முடியாதவர்களை சமூகமும் சக மனிதனுமே மதிப்பதில்லை. ‘இதுகூட முடியலையா?’ என்ற ஏளனத்துக்கு பல்வேறு முகங்கள், பல்வேறு குரல்கள். வாழத் தகுதியற்றவர்கள் என விலக்கி வைக்கபடுவார்கள். அடுத்தவன் இடத்தை காலிசெய்வதும் அந்த இடத்துக்கு தான் முண்டுவதுமே காரியக்காரர்களின் சாமர்த்தியம். சற்று பரந்த மனத்துடன் அடுத்தவனுக்கு பாவம் பார்ப்பவர்களுக்கு வேறொரு பெயர் உண்டு, இளிச்சவாயன்கள். காலியாக இருக்கும் அடுத்த இருக்கையில் இன்னொருவன் வந்து உட்காரும்போது கால்களை அகட்டி உடம்பை நகர்த்தி தன் இருப்பை நிறுவிக் கொள்பவனே புத்திசாலி.

இடம் கிடைக்காதவர்கள், முன்பே அடுத்தவர்களுக்காக இடம் பிடித்தவர்களைப் பார்த்து ஆத்திரத்துடன் கேட்பதுண்டு ‘யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லை. எல்லாருக்கும் அதே ஆறடி மண்ணுதான்.’ இல்லையென்றால் ‘போகும்போது யார் என்னத்த கொண்டுபோக முடியும்?’. எல்லாவற்றிலும் இடம் பிடிக்க முயல்பவர்கள், அவசரப்படுபவர்கள் இடுகாட்டிலும் சுடுகாட்டிலும் இடம்பிடிப்பதைப் பற்றி யோசிப்பதுகூட இல்லை. எண்சாண் உடம்பை நொடிப்பொழுதில் தீக்கு இரையாக்கும் இன்றைய மின் மயானங்களின் வருகைக்குப் பிறகு மேற்சொன்ன சொற்கள் அனைத்தும் பொருள் இழந்துவிட்டன. யாரும் எங்கும் எந்த இடத்தையும் பிடிக்க முடியாது. சாம்பலாகி நீரில் கரைவதும் காற்றில் காணாமல் போவதுமே நடைமுறை.

மதாரின் ‘அமர்விடம்’ கவிதையில் இடம் போடுவது அழகியலாக வெளிப்பட்டிருக்கிறது. இடம் போடும் அல்லது இடம் பிடிக்கும் போட்டிகள் மன அவஸ்தைகளை கூட்டும்போது இதுபோன்ற அழகியல் கோணங்கள் சற்றே ஆசுவாசம் அளிக்கின்றன. கத்தரிப் பூவையும் மழைத்துளியையும் காக்கை எச்சத்தையும் கடற்கரை மணல்வீட்டையும் இடம் பிடிக்கும் உத்திகளாகக் காணும் கவிஞனும் இந்தக் கவிதையும் வாசகனின் மனத்தில் இடம் பிடித்துவிடுவதில் வியப்பேதுமில்லை.

அமர்விடம்

0

நான் அமரச்சென்ற

நாற்காலியில்

ஒரு கத்தரி நிறப் பூ.

 

இந்த மண்டபத்தில்

பூ போட்டு

சீட் பிடித்தவர்

யார்?

 

நான் அமரச் சென்ற

பேருந்து இருக்கையில்

மழையின் சில துளி.

 

யாராக இருக்கும்?

நான் ஓய்வெனத்

திரும்பிய

மைதான மதிலெங்கும்

காக்கை எச்சம்.

 

ஏன் இந்த

வேண்டாத வேலை?

 

கரையிலோ

சிறுமி

கட்டிய வீடு.

 

வெற்றுத் தரையில்

மணலைப் போட்டு

மலை.


( ஆவநாழி ஏப்ரல் 26இல் வெளியானது )

No comments:

Post a Comment

கடுந்தேனீருக்காக நடந்துபோதல் - கவிதையும் ஞானமும் 10

  நடந்துகொண்டிருப்பது மூன்றாம் உலகப் போர்தானா என்ற விவாதங்களுக்கும் ‘எனர்ஜி லாக் டவுன்’ அறிவிக்கப்படுமோ என்ற ஊகங்களுக்கும் இன்றைக்கு தோசை கி...