Sunday, 26 April 2026

சொல்லின் நிழலில் இளைப்பாறும் ஒரு கவி


1

மொழியின் உச்சம் கவிதை. சொற்களின் ஆகச் சிறந்த சாத்தியங்களை செறிவுடனும் சிக்கனத்துடனும் அதேசமயம் ஆழமாகவும் சோதித்துப் பார்க்கும் புனைவு வடிவம் கவிதையே. எழுதப்பட்ட சொற்களிலிருந்து நேரடியாக வெளிப்படும் கவிதையும், சொற்களின் பின்னிருந்து மறைமுகமாக வெளிப்படும் கவிதையும் ஒன்றல்ல. குறிப்பிட்ட சொற்களிலிருந்து வெளிப்படும் இவ்விரண்டு கவிதைகளையும் ஒரே வாசகன் ஒரே நேரத்தில் புரிந்துகொள்வது வெகு அபூர்வம். கவிதையின் கண்கட்டு வித்தை அது. ஒரு அர்த்தம் வெளிப்பட்டவுடனே இன்னொரு அர்த்தம் மாயமாகிவிடும். எல்லாக் கவிதைகளிலும் பொருள் தேட முடியாது. சில கவிதைகள் பொருள்படாத தன்மை கொண்டவை. சில கவிதைகள் நேரடியாக புரியாமல் அடம்பிடிக்கவும் செய்யும். ஆனால், சொற்களின் வழியாக அபாரமான அனுபவங்களை சாத்தியமாக்கும், மந்திரம்போல. சொல்லும் பொருளும் அனுபவமுமான அபூர்வக் கலவையே கவிதை.

சொல்லும் மொழியுமே கவிஞனின் கருவி. மொழியின் திட்பத்தையும் சொல்லிணைவுகளின் மூலம் உருவாக்க முடிகிற சாத்தியங்களையும் புரிந்துகொண்டு கனகச்சிதமாக அவற்றை கையாளும் அடிப்படை திறனை கவிஞர்களிடம் பொதுவாகவே எதிர்ப்பார்க்கிறோம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் நாவிலும் ஏட்டிலும் உருண்டு புரண்டு திரண்டு நிற்கும் செம்மொழிக் கிடங்கில் சேர்ந்து கிடக்கும் சொற்கள் ஒவ்வொன்றிலும் காலமும் ஞானமும் கனிந்து செறிவுற்றுள்ளன. ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் கவி மரபின் நீண்ட சங்கிலித் தொடரின் புலப்படாத கண்ணியொன்று கட்டாயம் பிணைந்திருக்கும். முன்தோன்றி மூத்த கவிகளின் எழுத்தாணியால் கீறப்பட்ட அச்சொற்களில் பல இன்று பயன்பாடற்று களஞ்சியங்களில் காத்துக்கிடக்கின்றன. பல்லாயிரம் ஆண்டு கால மூப்பையும் முதிர்ச்சியையும் கொண்ட சொற்கள் ஒவ்வொன்றும் தக்க இடத்தில் தகுதிக்கேற்ப கோர்த்தெழுதும் கவிஞனின் கைபடக் காத்திருக்கின்றன.

கவிதைகளை பொதுவாக மூன்று வகைகளில் பிரிக்கலாம். ஒரு அனுபவத்தை, உணர்வை எளிய சொற்களின் மூலம் வெளிப்படுத்தும் கவிதைகள் முதல் வகை. இரண்டாவது வகை கவிதை, அனுபவத்தையோ உணர்வையோ சற்று செறிவான, அடர்த்தியான சொற்களின் வழியாக வெளிப்படுத்துபவை. முதல்வகை கவிதையில் மொழியோ சொல்லோ மேலெழாமல் குறிப்பிட்ட அனுபவமும் உணர்வுமே முக்கியத்துவம் பெற்றிருக்கும். மாறாக, இரண்டாம் வகை கவிதையில் சொல்லப்பட்ட அனுபவத்தையும் உணர்வையும் தாண்டி மொழியின் திண்மையும் சொற்களின் அழுத்தமும் கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருக்கும். இவ்விரண்டுக்கும் அடுத்துள்ள மூன்றாம் வகை கவிதையில், மொழியும் அனுபவமும் கலந்தும் கரைந்தும் வெளிப்பட்டிருக்கும். அனுவத்திலிருந்து மொழியையும், மொழியிலிருந்து அனுபவத்தையும் பிரித்தறிய முடியாதபடி இரண்டும் ஒன்றாகியிருக்கும்.

கவிதைக்கு வரையறைகள் பல உண்டு. வசதிக்கேற்ப, இடத்துக்கேற்ப அந்த வரையறைகளை எடுத்துக் கொள்ள முடியும். ஆனால், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்தின் வரையறை முக்கியமானது. ‘ஆழ்ந்த அமைதியினின்று மேலெழும் மனஉணர்வுகளில் வேர்கொண்ட ஆற்றல்மிகு உணர்ச்சிகளின் தன்னிச்சையான மிகுவெளிப்பாடே கவிதை’ என்ற அவரது வரையறையில் உள்ள ‘தன்னிச்சையான மிகுவெளிப்பாடு’ என்பது முக்கியமானது. தன்னிச்சையான வெளிப்பாடு என்பது கவிஞனின் திட்டமிடுதலுக்கும் முன்முடிவுகளுக்கும் அப்பாற்பட்டது. குறிப்பிட்ட கணத்தில் கவிஞனின் போதத்தையும் மீறி தானாக வெளிப்படும் உணர்வுகள் அசலானவை, உண்மையானவை. அத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்தும் சொற்கள் கவிதைகளில் தனித்துத் தெரியும். அவற்றின் வழியாகவே குறிப்பிட்ட கவிதை மேலெழவும் உதவும். மேலே சொன்ன மூன்றாம் வகை கவிதைகளில் இத்தகு தன்னிச்சையான வெளிப்பாடுகள் கூடுதலாக வெளிப்பட்டிருக்கும். அனுபவம், மொழி நேர்த்தியைத் தாண்டி தன்னிச்சையான வெளிப்பாட்டின் மூலம் ஒருவகை பித்துநிலையை எட்டக்கூடிய வரிகளையும், சொற்றொடர்களையும் கொண்டிருக்கும்.

கவிதைகளைப் புரிந்துகொள்ள முயலும்போது பலசமயம் இத்தகைய மூன்றாம் நிலை பித்துநிலைக் கவிதைகள் தனித்து விலகி நிற்கும். எளிதில் வசீகரிக்காது. அனைவருக்கும் பிடித்தமானவைகளாக இருக்காது. முதல், இரண்டாம் வகைக் கவிதைகளுக்கு இத்தகைய சவால்கள் இல்லை. இதில் வாசிப்பவனின் மொழி, கவிதை அனுபவத்துக்கும் கணிசமான பங்குண்டு. மூன்றாம் நிலைக் கவிதைக்கு ஒருவகையான தயாரிப்புகள் அவசியமாகின்றன.

0



2

தமிழில் சிறுபத்திரிகைகள் கோலோச்சியிருந்த காலத்தில் கவிதை எழுதத் தொடங்கியவர் க.மோகனரங்கன். ‘வானம்பாடி’யின் கவிதைகளிலிருந்து விலகி முற்றிலும் அக வாசிப்புக்கான  இறுக்கமான கவிதைகள் எழுதப்பட்ட காலம். ‘கணையாழி’ முக்கியமான ஒரு களமாக அமைந்திருந்தது. ஏராளமான கவிதைகள் எழுதப்பட்டன. கவிஞர்கள் உருவாகினர். 1987ஆம் ஆண்டிலிருந்து கவிதைகள் எழுதத் தொடங்கிய க.மோகனரங்கனின் முதல் கவிதைத் தொகுப்பு 2000ஆம் ஆண்டில் வெளியானது. 36 கவிதைகளைக் கொண்ட அந்த சிறியத் தொகுப்பின் வழியாக அறிமுகக் கவிஞராக அறியப்பட்ட க.மோகனரங்கன், இன்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழின் தவிர்க்க முடியாத கவிஞர் என்ற உயரத்தை எட்டியிருக்கிறார்.

க.மோகனரங்கன் தொடர்ந்து அதிகமாக எழுதக்கூடியவரல்ல. கவிதைகளுக்கு இடையே போதிய இடைவெளியை பேணுபவர். கவிதையை கருக்கொண்டு உருவாக்கி பிரசவித்த களைப்பை நீக்க கூடுதலான ஓய்வை வேண்டுபவர். நிதானம் அவருடைய முக்கியமான குணாம்சம். அவரது கவிதைகளையும் அந்த குணாம்சம் கட்டுத்திட்டத்துடனும் செறிவுடனும் அமைக்க உதவுகிறது.    

இந்த நிதானத்தின் மறுபக்கத்தில், தனது கவிதைகள் முன்னமே சொல்லப்பட்ட எதுமாதிரியில்லாமல் இருக்கவேண்டும் என்ற கவனத்தையும் முந்தைய தன் கவிதைகளைப்போலவும் இல்லாமல் இருக்கவேண்டும் என்ற எச்சரிக்கையையும் தொடர்ந்து பார்க்க முடியும். தன் ஒவ்வொரு கவிதைக்கும் அவர் இவ்வாறு இட்டுக்கொள்ளும் சமரசமில்லாத விதிமுறைகளே அவரது கவிதைகளில் தனித்தன்மை மிக்க அடையாளங்களை, முத்திரைகளை உருவாக்கித் தந்திருக்கின்றன.

மொழி அவருக்கு அநாவசியமாக செலவிடக்கூடாத செல்வம். சொற்களை ஊதாரித்தனமாக வீணாக்காமல் மிகக் கவனமாக முடிந்த வரைக்கும் தேவைக்கும் சற்று குறைவானவற்றைக் கொண்டே எழுதிப் பார்க்க முனைபவர். நான்கு சொற்களுக்கு பதிலாக ஒன்றரை சொற்களை மட்டுமே பயன்படுத்த முடியுமா என்று நான்கு நாட்கள் யோசித்துக் கொண்டிருப்பவர். அதனை கவிதைகள் பலவற்றில் செய்தும் பார்த்திருக்கிறார். அதனால்தான் அவரது கவிதைகளை வாசிக்கும்போது சொற்கள் ஒவ்வொன்றும் அத்தனை வலுவுடனும் மதிப்புடனும் நினைவில் பதிகின்றன. செல்லாக் காசாக எந்தவொரு சொல்லும் பல்லிளிப்பதில்லை.   

தமிழ்க் கவிதை மரபில் ஆழமான பரிச்சயம் உண்டு. ஆழங்கால்பட வாசித்தவரல்ல என்றாலும் அதன் சாரத்தையும் ஆழத்தையும் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவர். வாசித்தவற்றை கசடற கற்று உள்ளுக்குள் தேக்கியதன் பலனை அவரது கவிதையமைப்பில், சொற்பிரயோகங்களில், இறைச்சித்தன்மையில், படிமங்களின் நேர்த்தியில் அனுபவித்தறிய முடியும்.

மொழியின் வழியாக மெல்ல மெல்ல புரியாக்கி அதனுள் அனுபவத்தை பொதிந்து திருகித் திருகி நகர்த்தி வலுவான ஒரு படிமத்தைக் கொண்டு கருப்பொருளை ஆழத்துள் ஊன்றி முடுக்கிவிடுவது அவரது பொதுவான கவிதைப் பாணி. கவிதையை கவனத்துடன் வாசித்து முடிக்கும்போது முடுக்கிய புரியின் விசை சட்டென்று விடுபட்டு கவிதையும், கருப்பொருளும் தெறித்து விரியும் அற்புதத்தைக் கொண்டிருக்காத அவரது கவிதைகள் மிகச் சிலவே. துல்லியத்துடனும் எழிலுடனும் அடுக்கப்பட்ட மகரந்த அடுக்குகளைக் கொண்ட மலர்களை ஒத்த கவிதைகளில் அவரது சொற்தேர்வுகள் வியக்கத்தக்கவை. கலைக்கப்பட்ட சதுர வில்லைகளை ஒழுங்கான வரிசையிலும் இடத்திலும் அடுக்கி முழுப் படத்தையும் உருவாக்குவதற்கு ஒப்பானது, கவிதைகளில் சொற்களை அடுக்குவது. க.மோகனரங்கனின் கவிதைகளில் அவர் அடுக்கிய சொற்களைக் கலைத்தாலோ வரிசை மாற்றினாலோ கவிதையின் அழகு குலைந்துவிடும். கலைநேர்த்தியுடன் கவிதையில் சொற்களை வார்க்கும் நுட்பம் க.மோகனரங்கனின் கவிதைகளின் தனிச் சிறப்பு.

0

3

சில முன்னோடிகளின் லேசான சாயலைக் கொண்ட, இயல்பான மொழியமைப்புடனான கவிதைகளுடன் ‘நெடுவழித் தனிமை’ 2000ஆம் ஆண்டு பிரம்மராஜனின் முன்னுரையுடன் வெளியானது.

எதிர்ப்படும்
என்னை யாரோ போல்
ஏறிடும்
உனது பார்வை வழி
நுழைகிறேன்
காலி செய்து
காலம் வெகுவான
வீடொன்றினுள்
தூசடைந்த சுவரில்
நிறம் மங்கிய கிறுக்கல்
படிக்க வொட்டாமல் தடுக்கிறது
வெள்ளெழுத்து.   ( அந்தி )


இந்தக் கவிதையை க.மோகனரங்கனின் ‘வார்ப்பு’ (template) என்று சொல்லலாம்.  இதே வார்ப்பில் அடுத்தடுத்த தொகுப்புகளில் கவிதைகள் உண்டு. அதே சமயம் பின்னாள்களில் எழுதிய கவிதைகளில் சொற்களின் முறுக்கம் இன்னும் கூடுதலாக இருந்தது.

‘பரிணாமம்’, ‘இடம் பெயர்ந்த கடல்’, ‘இடைத்தூரம்’, ‘தரிசனம்’, ‘கல் திறந்த கணம்’, ‘காகிதத்தில் கிளைத்த காடு’ போன்ற குறிப்பிடத்தக்க கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பு க.மோகனரங்கனின் வருகையை உறுதிப்படுத்தின.

ஏழு வருடங்களுக்குப் பிறகு, 2007ஆம் ஆண்டில், ‘தமிழினி’ வெளியீடாக ‘இடம் பெயர்ந்த கடல்’ வெளியானது. முதல் தொகுப்பில் இடம் பெற்றிருந்த கவிதைகளுடன் புதிய கவிதைகளையும் கொண்டிருந்த இத்தொகுப்பில் எவரது சாயல்களுமற்ற தனக்கான கவிதைப் பாணியை அடைந்திருந்தார் மோகன். செறிவும், சொற்களுக்குள் அர்த்தத்தைப் புதைக்கும் நேர்த்தியும் கூடி வரப்பெற்ற இக்கவிதைகளில் கவிதையின் கட்டமைப்புக் காரணமாக இசைநயமும் கூடுதல் சிறப்பாய் அமைந்திருந்தது. ‘செலாவணி’, ‘முன்னை இட்ட தீ’, ‘வலியறிதல்’,‘அவசர சிகிச்சைப் பிரிவு’, ‘ஹம்பி’, ‘தீராமுகம்’ உள்ளிட்ட முக்கியமான கவிதைகள் அடங்கிய இத் தொகுப்பில்

மோகனின் ஆகச் சிறந்த கவிதைகளான ‘ஐந்து நட்சத்திரங்களின் ஆகாயம்’, ‘உறங்காப் பத்து’ இரண்டும் இடம் பெற்றுள்ளன.

முந்தைய இரு தொகுப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு செறிவும் ஆழமும் கூடிய கவிதைகளுடன் 2014ஆம் ஆண்டு வெளியானது மூன்றாவது தொகுப்பு ‘மீகாமம்’. ஊடே மிக நேர்த்தியாகக் கோர்க்கப்பட்ட  செம்மையான பழந்தமிழ் வரிகள் கவிதைகளுக்கு அழகூட்டியதோடு ஆழத்தையும் நல்கின. மோகன் இப்புதிய வடிவை கண்டடைந்ததில் இரு நன்மைகள் விளைந்தன. ஒன்று, கவிதையின் ஓசை நயத்தையும் பொருள் நயத்தையும் மேம்படுத்தியது. இரண்டாவது, புதிய தலைமுறை கவிதை வாசகர்களுக்கு பழந்தமிழ் செழுமையினை நினைவூட்டியது. நவீன கவிஞன் செய்ய வேண்டிய மிக முக்கியமான பங்களிப்பை இப் பாணி சுட்டிக் காட்டியது. 


என்
பிணை மான்
இனிதுண்ண வேண்டி
நான்
கள்ளத்தில் உறிஞ்சும்
சுனைவாய்ச்சிறு நீர்
இம் முத்தம்  ( தீர்ந்த முத்தம் )

 பெய்தோய்ந்த
பெருமழையில்
பிறன்மனை
முற்றத்தில்
தேங்குகிறது
செம்புலப்
பெயல் நீர். ( திணைமயக்கம் )

 ஏழு வருடங்களுக்குப் பின் 2021ஆம் ஆண்டு வெளியான நான்காவது தொகுப்பு ‘கல்லாப் பிழை’. செறிவும் இறுக்கமும் கனமும் கூடியதாக அல்லாமல் நேரடியான, எளிமையான, நேர்த்தியான கவிதைகளைக் கொண்டிருந்த இத்தொகுப்பு காலப்போக்கில் க.மோகனரங்கன் கவிதைகள் குறித்து வந்தடைந்திருந்த புரிதலையும் தெளிவையும் புலப்படுத்தின. முந்தைய தொகுப்பின் கவிதைகளில் அதிகமும் பயின்று வந்திருந்த இறைச்சித் தன்மையின் இடத்தை இப்போது பிடித்திருந்தது தெளிவுற மொழியும் அம்சம். ‘திருவிளையாடல்’ என்ற இக்கவிதையை உதாரணமாகப் பார்க்கலாம். 

எதிர்ப்படும்
என்னை யாரோ போல்
நெஞ்சு வெடித்துச்
சாகப் போகுமுன்
அவன் கேட்டான்
‘என் தெய்வமே
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?’
காதில் விழாததுபோல
பாவனை செய்த கடவுள்
கடமையே கண்ணாக
தனது அடுத்த
அற்புதத்தை நிகழ்த்த
புதியதொரு
பூஞ்சையான இதயத்தை
தேடத் தொடங்கினார். 

‘கையிகத்தல்’, ‘திருவினையாள்’, ‘வினோத நூலகம்’, ‘தற்பிறப்பு’, ‘வென்றிலன் என்றபோதும்’ போன்ற, முந்தைய தொகுப்புகளில் இல்லாத, கதைத் தன்மை கூடிய கவிதைகளும் இடம் பெற்றிருந்தது இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பு. மோகன் தன் கவிதைகளின் போக்கை எளிமையை, சரளத்தை, புரிதலை நோக்கி மாற்றிக் கொண்டிருந்தார் என்பதற்கான அடையாளம் இது. 

ஐந்தாவது தொகுப்பான ‘நினைவாலணையும் முகம்’ 2025ஆம் ஆண்டு வெளியானது. அளவில் நீண்ட, லகுவான வரிகளைக் கொண்ட கவிதைகளில் பலவும் நினைவேக்கத்தினை பாடுபவைகளாக அமைந்திருந்தன. கவிதைகளில் இறுக்கம் வெகுவாகத் தளர்ந்து, சொல்லடுக்குகளுக்கு நடுவே இடைவெளிகளும் கூடி, உணர்வுத் தளம் மேலெழுந்து துலங்கிற்று. சற்றே எட்ட நின்று ஐயத்துடன் தயங்கிய வாசகனை அருகழைத்து வாஞ்சையுடன் தோளணைத்துக் கொண்டது. வாழ்வைக் குறித்த கவிஞனின் பார்வைகளாக, வரையறைகளாக அமைந்த கவிதைகள், கவிஞனின் அனுபவ ரேகைகளின் தடத்தை வெளிக்காட்டின.

‘வளர்ப்புப் பிராணி’, ‘தனிப்பெருங்கருணை’, ‘ஏடு தொடங்கல்’, ‘யாதனின் யாதனின் நீங்கியான்’,  ‘சக வாழ்வு’ போன்ற கவிதைகள் இத்தொகுப்பின் சிறப்பு.

எழுதத் தொடங்கி நாற்பது வருடங்கள் கழித்து, ஐந்து தனித்தனித் தொகுப்புகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு (2026) க.மோகனரங்கனின் மொத்தத் தொகுப்பு ‘சொல்லின் நிழலில்’ வெளியானது. மிகுந்த தயக்கத்துக்குப் பிறகே இவ்வாறான மொத்தத் தொகுப்புக்கு ஒப்புதல் கொடுத்தார். முன்பு வெளியான ஐந்து தொகுப்புகளில் உள்ள கவிதைகளுடன், ‘வானின் கீழ் தனியர் யாருமில்லை’ என்ற தலைப்பின் கீழ் வெளிவராத கவிதைகளும் இடம் பெற்றிருந்தன.

கவிதைகளில் கனிவு கூடியிருந்தது. அன்றாட வாழ்வு சார்ந்த எளிய உண்மைகளை வெளிப்படுத்தின. ஞானத்தை அடைய முயலும் கவிதையை, ஒரு படிக்கு கீழே பின்னுக்கிழுத்து நிறுத்தியது மொழி.  நினைவேக்கத்தின் கதியும் துக்கமும் அழுத்தம் பெற்றிருந்தன.

4

‘நெடுவழித் தனிமை’யிலிருந்து ‘வானின் கீழ் தனியர் யாருமில்லை’ வரையிலான க.மோகனரங்கனின் கவிதைகளை ஊன்றிப் பார்க்கும்போது, இளமை முதல் முதுமை வரையிலான தன் வாழ்க்கைப் பாதையில் கவிஞன் கடந்து வந்த அறிதல்கள், அறியாமைகள், பரவசங்கள், தத்தளிப்புகள், தடுமாற்றங்கள், உறவு நிலைகள், ஏமாற்றங்கள், கனிவு, கசப்பு, கருணை, தன்னிரக்கம், மனவொடுக்கம் என அனைத்தையும் நெருக்கமாக உணர முடியும். தனி மனிதனின் இருப்பினூடாக அவன் கொள்ளும் அனைத்து பாவனைகளையும் மயக்கங்களையும் விவரிக்க முனைகின்றன. அன்றாடப் புழக்கத்திலும் பழக்கத்திலும் உள்ள பொருட்களின் ( வீடு, கதவு, ஜன்னல், பொம்மைகள், புத்தகங்கள் போன்று ) வழியே வாழ்வின் அர்த்தத்தை அல்லது அபத்தத்தை உணர்த்த முனைகின்றன. பெண் மீதான ஈர்ப்பும் இச்சையும் நோக்கும் வெளிப்படுகின்றன. உறவுகளின் நிலையின்மையை, சுயநலப்போக்கை மெல்லிய கழிவிரக்கத்தோடு மொழிகின்றன. பெரும் உற்சாகத்துடன், இளமையின் துள்ளலுடன் வாழ்வை அணுகத் தொடங்கும் இக்கவிதைகள் மெல்ல மெல்ல முன்னகர்ந்து யதார்த்தத்தின் வெம்மையில் வதங்கி பின் பக்குவமடைந்து கனிந்து எல்லாவற்றையும் விலகி நின்று அணுகும் முதிர்வை வந்தடைகின்றன.

ஆனால், இன்னும் கவனமாக அணுகிப் பார்த்தால், இக்கவிதைகள் கவிஞனின் வாழ்வும் பாதையும் உலகும் மட்டுமல்ல. இக்கவிதைகளை வாசிப்போருக்கும், பொதுவாக மனிதர்கள் அனைவரின் வாழ்வுக்கும் இக்கவிதைகள் பொருந்தும். ‘எதார்த்தத்தில் ஒரு கவிதைக்குப் பல வாசகர்கள் இருக்கலாம். ஆனால், அந்தரங்கத்தில் அது ஒரேயொருவரை நோக்கி மட்டுமே எழுதப்படுகிறது. ஆனால் அதை வாசிக்கும் அனைவரையும் அந்த ஒருவராக உணரச் செய்வதில்தான் கவிதையின் மர்மம் அடங்கியிருக்கிறது எனத் தோன்றுகிறது. சொல்லப்போனால், பல சமயங்களில் எழுதுபவன் வேறு யாரிடமும் அல்ல, தனக்குத் தானேதான் பேசிக்கொள்கிறான். தற்செயலாக அதைக் கேட்க நேரிடும் ஒருவர் தனக்காகவே சொல்லப்பட்ட ஒன்றாக அச்சொற்களை உணர்கிறார்’ என்று க.மோகனரங்கன் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது ‘எழுத்தின் விளக்க முடியாத இந்த விந்தை’யைத்தான்.

இக்கவிதைகளில் அதிகமும் வெளிப்பட்டிருப்பது அன்பின் பரிமாணங்களும் நினைவேக்கத்தின் ஏற்றத் தாழ்வுகளுமே. பருக முடியாத துயரமாக, சமாதான சகவாழ்வின் மீது பூத்திருக்கும் பூஞ்சைக் காளானாக, அறைந்து மூடப்படும் கதவிடுக்கில் அகப்பட்டு அறுந்துவிடக் கூடிய பல்லி வாலாக, அனைவரையும் சொஸ்தப்படுத்த முடியாத சின்னஞ்சிறு மருந்துக் குப்பியாக, அதற்கேயுரிய அசட்டுத்தனத்துடன் வாழ்வினூடே திகழ்ந்திருக்கிற அன்பு, கவிஞரை அதிகமும் ஆட்கொண்டு, ஆனமட்டும் அதைப் புரிந்து கொள்ள கவிதைகளை எழுதச் செய்கிறது. கடைசியில் ‘தன்னிரக்கம் மிகுந்த பொழுதொன்றில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை அறிக்கை ஒன்றின் நகல்’ என்ற நீண்ட தலைப்பைக் கொண்ட கவிதையில் அன்பின் மர்மத்தை கவிஞர் கண்டுகொள்கிறார். ‘விநோதமான இந்த வியாபாரத்தில் எத்தனை இழந்தீர்களோ அத்தனைக்கு செல்வந்தர் நீங்கள், எவ்வளவு சேமித்தீர்களோ அவ்வளவுக்கு ஏழ்மையானவர்’ என்று அன்பின் ஐந்திணையைப் புரிந்துகொள்கிறார். அன்பின் இந்தப் பாதை நமக்குப் புதியதல்ல. புத்தனும் இயேசுவும் வள்ளலாரும் வள்ளுவரும் போதித்த அந்தவொன்றையே க.மோகனரங்கனும் தனக்கேயுரிய தனி மொழியில் வலிந்துரைக்க முனைந்திருக்கிறார். சக மனிதனின் மீதான இந்த கரிசனத்தை, உயிர்களின் மீதான கருணையை ஞானியர் அல்லாது இன்னொருவர் எடுத்துச் சொல்ல இயலுமானால் அது கவிஞர்களால் மட்டுமே முடியும் என்பதையே இக்கவிதைகள் உணர்த்துகின்றன.

இக்கவிதைகளின் பாடுபொருளாக அமைந்திருக்கும் இன்னொரு அம்சம் நினைவேக்கம். உறவுகளும் பிரிவுகளுமாய் பலரையும் கடந்து வந்தபோதிலும் நெஞ்சுக்குள் கனலும் சில நினைவுகளை அணைக்கவல்ல கருவிகளை இன்னும் மனிதன் கண்டுபிடிக்கவில்லை. இருள் சூழ்ந்த கர்ப்பக்கிரகத்தின் ஒற்றைச் சுடரில் மினுங்கும் தேவியின் குறுநகைபோல அவ்வப்போது அந்த நினைவுகள் சிறுபொழுது ஆசுவாசம் தரும். மறுகணம் தாங்கவியலா வலியையும். ‘நினைவில் எரிகிற சுடருக்கு நிழல் ஏதுமில்லை. நெஞ்சிற்கு அதனால் நிம்மதியும் நேர்வதில்லை’ என்று கவிஞர் வகுக்கும் இந்த நினைவேக்கத்தின் பல்வேறு வண்ணங்களையும் வகைமைகளையும் வெவ்வேறு கவிதைகளில் உணர்த்த முனைந்திருக்கிறார். இவை அனைத்தையும் ஒரே கவிதையில் செறிவாகவும் தெளிவாகவும் வகுத்தும் காட்டியிருக்கிறார்.

நீர்த் திரையிட்ட விழிகளால்
ஏறிட்டு நோக்குந்தோறும்
பிரிவின் பொன்னுருகிப்
படர்ந்த
நினைவின் சித்திரத்தில்
நிறங்கள் மயங்கக்
கவிகிறதொரு
காவியச் சாயை. ( கண்ணோட்டம் )

 இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள ‘காவியச் சாயை’யின் காரணமாகவே இக்கவிதைகள், வெறும் பிரிவின் வாதையைச் சொல்லும் புலம்பல் கவிதைகளாக நின்றுவிடவில்லை.

5

படித்து முடித்த பின்னும் ஏதேனும் ஒரு கணத்தில், ஒரு சந்தர்ப்பத்தில் கவிதைகளின் சில வரிகள் மட்டும் நினைவில் அதிரும். மந்திரம்போல அவை மனத்துள் ஒலித்தபடியே இருக்கும். அவ்வாறான வரிகளே கவிதையின் எல்லையைத் தாண்டி செவ்வியல் தன்மையை அடையும். பெருங்கவிஞர்களின் கவிதையிலிருந்து மட்டுமே அவ்வாறான செவ்வியல் வரிகள் நினைவில் மேலெழுந்து ஆட்கொள்ளும். க.மோகனரங்கனின் பல கவிதை வரிகள் அவ்வாறான செவ்வியல் தன்மை கொண்டவை. அவற்றில் உதாரணங்களாக சில -

தோன்றி மறைகிறது ஒரு கனவு
வாழ்வென மயங்குகிறது நினைவு.
 
தக்கார்க்கு நட்ட கல்
தகவிலார்க்கோ வெட்ட வெளி
 
மடிப் பாலுக்கு
பிடிப் புல்லே அதிகம்
 
உறவில் கனிகையில்
ஒருவர் பழக வேண்டியது
பிரிவின் கலையைத்தான்.
 
வலி
அப்படியொன்றும் அதிகமுமில்லை
அப்படியொன்றும் குறைவுமில்லை
 
மலையைப் பார்த்தபடி
மடங்கிக் கிடக்கின்றன
இரண்டு நாற்காலிகள்
 
எட்ட முடியாத உயரத்திலிருக்கிறது
எனது கடவுளின் நிலம்


வரிகள் மட்டுமல்லாமல் முழுக் கவிதையுமே அவ்வாறான மந்திரத்தன்மை கொண்டவையாய் அமைந்துள்ளன.

திணைமயக்கம் 

பெய்தோய்ந்த
பெருமழையில்
பிறன்மனை
முற்றத்தில்
தேங்குகிறது
செம்புலப் பெயல் நீர்.

தேறுதல்

விட்டு
விட்டுப் பெய்யும்
மழை.
தொட்டுத்
தொட்டுத் துடைக்க
முயல்கிறது
தோற்றுத் துவண்ட
துயர முகம் ஒன்றின்
கண்ணீர் வரிகளை.
 

கொஞ்சம் போல

கூட்டிலிருந்து
விழுந்தெழுந்து
பயத்தோடு பறக்கக்
கற்றுக் கொள்ளும்
குஞ்சுப் பறவைக்காக
குனிந்து கொடுக்கிறது
வானம்.

 காலகண்டன்

 எனக்கு
நான்தான் வெல்லக்கட்டி
ஒரு கடி
கடித்துக்கொண்டு
எல்லாக் கசப்பையும்
விழுங்கிக் கொண்டிருக்கிறேன்

 இம்மை

 என்பிலதனைக் காயும்
நண்பகல் வெய்யில்
உனதன்பு.
பிறகும்
பிழைத்திருக்க வேண்டிப்
பிடி நிழல் தேடி
நெடுக அலையும்
உடலின் தவிப்பு
இவ் வாழ்வு.
 

இடைவெளி

 எவ்வளவு தூரம்
நடக்க வேண்டியிருக்கிறது
முகம் பார்க்கும் கண்ணாடி
முன் நிற்பதற்கு
இந்த நடுவயதில்
எவ்வளவு நேரம்
கடக்க வேண்டியிருக்கிறது
கண்ட காட்சி தெளிவதற்கு.
 

 திறப்பு

 மலையில் ஏறும்போது
மருளவும்
மலரில் ஊரும்போது
மயங்கவும்
தெரியாத எறும்பிற்குத்
திறந்திருக்கிறது
எல்லாத் திசைகளிலும்
பாதைகள்.
 

 க.மோகனரங்கனின் கவிதைச் சிறப்பையும், தமிழ் மரபில் அவர் கொண்டுள்ள தீவிர ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அறிய எளியதோர் வழியுண்டு. கவிதைகளை அவர் இட்டிருக்கும் தலைப்புகளை சற்று கவனித்தாலே போதும். எந்தவொரு கவிதைக்கும் அவர் எளிய, சாதாரண தலைப்பை ஒப்புக் கொள்வதில்லை என்பதையும் அறியலாம். கவிதையை எழுதி முடிக்க எடுத்துக் கொள்ளும் அதே நேரத்தையும் நிதானத்தையும் அவர் தலைப்பை தெரிவு செய்வதிலும் செலவிட்டிருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ளலாம். கல் திறந்த கணம், வானப் பிரஸ்தம், காகிதத்தில் கிளைத்த காடு, இடைத்தூரம், நெடுவழிப் பயணம், பெருந்திணை, எதிரேடகம், அறிதுயில் காமம்,ஏமப் புணை, முன்னை இட்ட தீ, பதங்கமாதல், அருநிழல், உயிர் ஈரும் வாள், யவனராணி, திணைமயக்கம், மீகாமம், காலகண்டன், திருவினையாள், வாயிற்காப்பு என்று உதாரணங்கள் பல.

 0       

கட்டுரை எழுதுவோர்க்கும், விமர்சகர்களுக்கும் பயன்தரும் வகையில் தன் கவிதையுலகை ஒற்றைக் கவிதையில் சுருக்கமாக, எளிமையாக ஒரு கவிதையின் வழியே தந்திருக்கிறார் க.மோகனரங்கன்.

 எழுத்தறிவித்தல்

 முன் நடந்தவர்கள்
பதித்த தடத்தில்
எவரெவரோ
ஏற்றிவைத்த விளக்குகளின்
வெளிச்சத்திலதான்
இவ்வளவு தூரம்வந்திருக்கிறேன்
இருப்பினும் இதுகாறுமெனக்கு
வழியிடையில் காலையிடரும்
கல்லையெடுத்து தூரப்போடத்
தோன்றியதில்லை.
அணையவிருக்குமொரு திரிக்கு
துளியெண்ணைவிட
எண்ணம் எழுந்ததில்லை
பிறகென் எழுத்துகளில்
எந்த ஒளி வந்தமரும்?
என் விழைவெல்லாம்
வேறெதுவுமிலை
எள்முனையளவும் பிழையின்றி
இழைத்திழைத்து
இச்சொற்களைப் பளிங்காக்கி
பார்வைக்கு வைத்திடல் வேண்டும்
முனைவோர் தம் முகம் பலிக்க.

இதைவிட ஒரு கவிஞன் தன் கவிதையுலகை எப்படித் தெளிவாக மொழிந்திட முனையும்?

0

க.மோகனரங்கனின் இதுவரையிலான ஆகச் சிறந்த கவிதைகளில் இரு கவிதைகள் தமிழில் இதுவரை எழுதப்பட்டுள்ள சிறந்த கவிதைகளின் வரிசையில் இடம் பெறத் தக்கவை. இரண்டும் சற்றே நீண்ட கவிதைகள். பெருந்தொகுப்பின் 72ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள ‘ஐந்து நட்சத்திரங்களின் ஆகாயம்’, தந்தையும் மகனுமாய் தாயும் மகளுமாய் தன்னையுணர்ந்து உறவின் இயல்பையும் திரிபையும் கூரிய சொற்களால் கிழித்து அப்பட்டமாய் வெளிப்படுத்தும் இக்கவிதை ஆழமான வலியையும் நிறைவற்ற சிந்தனையையும் விதைப்பது. மரபுத் தொடர்களின் கண்ணிகளுடன் இறுக்கமான மொழியினூடாக எழுதப்பட்ட இக்கவிதை மோகனின் கவிதை அம்சங்கள் அனைத்தையும் கொண்ட முத்திரைக் கவிதை.

பெருந்தொகுப்பின்  96ஆம் பக்கத்தில் உள்ள ‘உறங்காப் பத்து’ இன்னொரு முத்திரைக் கவிதை. பெண்ணை ரசித்து, விதந்தோதி, அஞ்சி, அடங்கி, உச்சிமுகர்ந்து, சீராட்டி, மடியேந்தும் ஒரு கவிஞனின் பித்து மனநிலையின் பத்து கண்ணிகளைக் கொண்ட இக்கவிதை, தமிழ்க் கவிதைகளின் உச்ச சாதனைகளில் ஒன்று. இதில் பயின்றுவரும் மரபுத் தொடர்களும், பழந்தமிழ் வரிகளும் கவிதையின் இசை, தாளத்துக்கும் பொருளின் ஆழத்துக்கும் பொருந்தி அமைந்து, திரும்பத் திரும்ப வாசிக்குந்தோறும் மெருகேறி கனம் கூடும் அழகு இக்கவிதையின் தனிச்சிறப்பு.

இன்னும் பல கவிதைகளை எழுதியுள்ளார் என்றாலும், இனியும் எழுதுவார் என்றபோதும், க.மோகனரங்கனை தமிழ் நவீனக் கவிஞர்களின் முதன்மை வரிசையில் இருத்த இவ்விரு கவிதைகள் மட்டுமே போதுமானவை.

 0

6

க.மோகனரங்கன் – உரைநடை ஆக்கங்கள்

டிசம்பர் 2006ஆம் ஆண்டில் வெளியான ‘அன்பின் ஐந்திணை’ நூல் 13 ஆக்கங்களைக் கொண்டது. கண்டு கேட்ட கதைகள் இவை. தன்மை ஒருமையில் எழுதப்பட்டவை என்பதால் இவற்றை உண்மை நிகழ்வுகளை அடிப்படைகளாகக் கொண்டு புனையப்பட்ட கதைகள் என்று சொல்ல முடியும். இவை அனைத்துமே உறவுத் திரிபுகளைப் பேசுபவை. பொருந்தாக் காமம், வரைமீறிய உறவு என்று பொதுவில் சுட்டப்படும் இந்த வகை ஆண் பெண் உறவுகளில் வெளியில் இருந்து எவரும் தீர்ப்பு சொல்வது அபத்தம். அந்த உறவு குறிப்பிட்ட இருவருக்கானது. அதன் எல்லைக்குள் அவர்கள் மட்டுமே. ஆனால், அவ்வகை உறவின் பின்னணியில் உள்ள உளத்தடுமாற்றங்களை, நிலையின்மையை, நல்லதும் அல்லதுமான விளைவுகளை சொல்லுகிறது இந்தக் கட்டுரைகள் அல்லது கதைகள். இதன் மூலமாக குறிப்பிட்ட நபர்களைப் புரிந்து கொள்ளவும் அதன் மூலம் இவ்வகையான உறவுநிலைகளைப் பற்றிய மனப்பாங்கை சீர்தூக்கிப் பார்க்கவுமான வாய்ப்பை தருகின்றன.

 க.மோகனரங்கனால் புனைகதைகளை எழுத முடியும் என்பதற்கான வலுவான சான்றுகளாக அமைந்துள்ளன இவை. துல்லியமும் நேர்த்தியும் கூடிய கதைமொழி, சீரான தொடக்கமும் முடிவும், முடியுமிடத்தில் போடப்படும் நுட்பமான முடிச்சு என புனைகதைகளுக்கான அம்சங்கள் அனைத்தையுமே இவற்றில் காணமுடியும். எதைச் சொல்லவேண்டும், எவ்வளவு சொல்லவேண்டும் என்கிற தெளிவும் உண்டு. அவரது கவிதைகளின் சிறப்பம்சங்களான இறைச்சித்தன்மை, நுட்பமான சொல்லிணைவுகள் ஆகியனவும் இவற்றில் உண்டு.

 இத்தொகுப்பு வெளியானபோது, க.மோகனரங்கன் புனைகதையாளராக பரிணாமம் கொள்வார் என்ற வலுவான நம்பிக்கை பிறந்தது. ஆனால், மோகன் அதை எப்போதும்போல புன்சிரிப்புடன் கடந்துபோய்விட்டார். அதன் பிறகு அவ்வாறான முயற்சிகளை அவர் மேற்கொள்ளவில்லை. அவரது இயல்புக்கும் நிதானத்துக்கும் சரியாக வரும் காரியங்களை மட்டுமே சிரமேற்கொண்டு சிறப்பாக செய்து வருகிறார்.

 இன்னொரு முக்கியமான புத்தகம் 2005ஆம் ஆண்டில் வெளியான ‘சொல் பொருள் மௌனம்’. இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த விமர்சன நூலின் முதல் பகுதியில் நாவல்கள், சிறுகதைகளைக் குறித்த கட்டுரைகள் இடம் பெற்றன. ஜெயமோகனின் ‘இலக்கிய முன்னோடிகள்’, ‘விஷ்ணுபுரம்’, ‘பின்தொடரும் நிழலின் குரல்’, ‘கூந்தல்’, அ.முத்துலிங்கம், எம்.எஸ்.கல்யாணசுந்தரம், சி.சு.செல்லப்பா, கோபி கிருஷ்ணன், கி.அ.சச்சிதானந்தம், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் ஆகியோரின் கதைகள், சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், ஜோ டீ குரூஸ், செந்தூரம் ஜெகதீஷ், ராஜ் கௌதமன், எம்.ஜி.சுரேஷ், பெருமாள் முருகன், யூமா வாசுகி ஆகியோரின் நாவல்கள், பாவண்ணனின் இரு மொழிபெயர்ப்பு சுயசரிதைகள் ஆகியவற்றைப் பற்றிய க.மோகனரங்கனின் பார்வையை வெளிப்படுத்தின.

 இரண்டாம் பகுதி கவிதைகளைக் குறித்த கட்டுரைகளைக் கொண்டிருந்தது. தமிழ்க் கவிதையின் சிந்தனைப் போக்குகள், கவிதைகளின் புரியாத் தன்மை, வசனமும் கவிதையும், கவிஞனின் பாலியல் அடையாளங்கள் போன்ற கட்டுரைகளில் கவிதைகளைக் குறித்த பொதுவான அம்சங்களைப் பற்றி எழுதியிருந்தார் மோகன். பிரமிள், நகுலன், தேவதேவன், தேவதச்சன், ராஜ சுந்தர்ராஜன், ஆர்.கே, பிரம்மராஜன், யூமா வாசுகி, பாலை நிலவன், திருமாவளவன், ஆத்மாநாம், ஸ்ரீநேசன் ஆகியோரின் கவிதைகளைக் குறித்தும் கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன.

 இன்று இந்த நூலில் மோகன் எழுதியிருக்கும் கட்டுரைகளை மீளப் பார்க்கும்போது, 21ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் இலக்கியம் குறித்த சுருக்கமான பார்வையை இவற்றிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிகிறது. அந்தக் காலகட்டத்தில் வெளியான நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள், கவிதையில் நடந்த உரையாடல்கள் ஆகியவற்றைப் பற்றிய தெளிவான சித்திரத்தை இவை அளித்துள்ளன.

 ‘மோகனரங்கனது கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எங்கே கண்டாலும் படித்துவிடுவேன். தாண்டிச் செல்வதில்லை. காரணம், அதன் நம்பகத்தன்மை. மனச்சாய்வற்ற நேர்மையும் எழுத்தில் நிதானமும் சொற்களில் தேர்ச்சியும் உண்டு. தன்னைப் பற்றிய மிகை மதிப்பீடுகளோ சுயலாபம் கருதி எழுத்தைப் பயன்படுத்தும் கணக்குவழக்குகளோ அதில் கிடையாது. அகந்தையை கட்டிப் போட்டு வைக்கும் அறிவும் உண்டு. மோகனரங்கன் தமிழின் முக்கியமான விமர்சகர் என்பேன்’ என்று கவிஞர் பாதசாரி குறிப்பிட்டிருப்பது பொருத்தமானது.

 இக்கட்டுரைகளை விமர்சனம் என்று சொல்வதைவிட மதிப்புரைகள் என்றே குறிப்பிடலாம். ஏனெனில் இவை குறிப்பிட்ட நூலின் சிறப்பம்சங்களை மட்டுமே எடுத்துச் சொல்லியுள்ளன. அவற்றில் உள்ள போதாமைகளைக் குறித்து எதுவும் பேசுவதில்லை. உள்ளபடியே இது மோகனரங்கனின் இயல்பு. அந்த இயல்பின்படியே கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் சுட்டப்பட்டுள்ள புள்ளிகளும், கருத்துகளும் முக்கியமானவை. ஒரு எழுத்தாளரை, நாவலை, சிறுகதையை, கவிதையை அறிந்துகொள்ள உதவும் சுட்டிகளாக அவை அமைந்துள்ளன.

 ‘மை பொதி விளக்கு’ அவரது மூன்றாவது உரைநடை நூல். அதிகமும் கவிதைகளை, கவிஞர்களை, கவிதைத் தொகுப்புகளக் குறித்த கட்டுரைகளைக் கொண்ட இத்தொகுப்பு 2012இல் வெளியானது. வெவ்வேறு கவிஞர்களின் கவிதைகளைக் குறித்து விவாதிப்பதன் மூலமாக கவிதையைக் குறித்த ஒரு உரையாடலை இக்கட்டுரைகள் சாத்தியப்படுத்தியுள்ளன. கவிதையின் மர்மத்தைப் புரிந்துகொள்ள தொடர்ந்து அதைப் பற்றிய உரையாடல்கள் அவசியம் என்பதை இவை வலியுறுத்துகின்றன. பிரான்சிஸ் கிருபா, மனுஷ்யபுத்திரன், சுந்தர ராமசாமி, ஆனந்த், இளங்கோ கிருஷ்ணன், தேவதேவன், சி.மணி ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டவை. தொகுப்பாக அவற்றைப் படிக்கும்போது தமிழ்க் கவிதையின் பல்வேறு போக்குகளைக் குறித்தும் கவிஞர்களின் பங்களிப்புகளைப் பற்றியும் புரிந்துகொள்ள உதவுகின்றன. உதாரணங்களாக, சில பத்திகளைச் சுட்டலாம்.

 முந்தைய கட்டுரைத் தொகுப்பில் உள்ளதைப் போலவே, இத்தொகுப்பிலும் புனைகதைகள் குறித்த கட்டுரைகள் சிலவும் இடம்பெற்றுள்ளன.

 இத்தொகுப்பின் முக்கியமான கட்டுரைகளாக அமைந்திருப்பவை, ‘எது கவிதை’, ‘புதுக்கவிதை – பண்பும் பயனும்’, ‘கவிதையும் கவிதை இயலும்’ ஆகிய முதல் மூன்று கட்டுரைகளே. இவை கவிதையைக் குறித்த ஐயங்களை தெளிவாக்கிக் கொள்ளும் முனைப்புடன் மிக எளிமையாக எழுதப்பட்டுள்ளன.

 ‘எந்த வரிகளின் முன் இதயத்தையும் மூளையையும் ஒருசேர நீ இழக்கவும் பெறவும் செய்கிறாயோ அதுவே உனக்கான கவிதை’,

 ‘நம்மில் பலரும் ஒரு கவிதையை வாசித்து உணர்ந்து கொள்வது என்பதை அக்கவிதையின் திரண்ட கருத்தை தேடிக் காண்பது என்பதாகவே பழக்கப்பட்டுள்ளோம். இது மிகவும் கெடுதலான பழக்கமாகும். இது ஒரு கனியின் சாறு, சதைப்பகுதியையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு அதன் கொட்டையை மாத்திரம் இறுகப்பற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும். இப்பழக்கம் ஒரு கவிதை நல்கும் அதன் அசலான அனுபவத்தை நாம் உய்த்துணரவியலாது தடுத்துவிடுகிறது. கவிதை கூறும் கருத்து என்று உண்மையில் எதுவுமில்லை. அப்படியே அது ஏதேனும் ஒரு கருத்தை முன்வைத்தாலும் கவிதைக்கப்பால் அதற்கு முக்கியத்துவம் எதுவும் கிடையாது. ஏனெனில் கவிதை என்பது பேரளவு நமது உணர்வு நிலையோடு சம்பந்தப்பட்டது. எனவே அது இதயத்தால் வாசிக்கப்படவேண்டிய ஒன்றே தவிர மூளையின் தர்க்கத்தால் அல்ல.’

 ‘கவிதை சொற்களால் எழுதப்படும்போது அது சுட்ட முயலும் பொருண்மை என்பது எப்போதும் அச்சொற்களுக்கு அப்பால் எட்டவே நிற்பதாகும்.’

 இந்த மூன்று உரைநடை நூல்களையும் இன்று பார்க்கும்போது, மோகனரங்கன் இந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்திருக்க வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது. கடந்த 40 ஆண்டுகால தமிழ்க் கவிதையின் போக்குகளையும் ஏற்ற இறக்கங்களையும் கண்டுணர்ந்த அவர் அவ்வப்போது வெளியான சிறந்த தொகுப்புகளை அடையாளம் காட்டியிருக்க முடியும். புதிய கவிஞர்களில் நம்பிக்கையளிப்பவர்களைப் பற்றி எழுதியிருக்க முடியும். அதற்கான அனுபவமும் தகுதியும் மனச்சாய்வற்ற பார்வையும் அவரிடம் உண்டு. அத்துடன், தமிழ் நவீனக் கவிதையின் வரலாறு, ராஜ மார்த்தாண்டனுக்குப் பிறகு எழுதப்படாமல் உள்ளது. அந்தக் காரியத்தை செய்வதற்கான தகுதிமிக்க நபர் மோகனரங்கன் என்பதில் ஐயமேதுமில்லை.

 0

7

க.மோகனரங்கன் – மொழியாக்கக் கவிதைகள்

மோகனரங்கன் எழுதிய கவிதைகளைக் காட்டிலும் எண்ணிக்கையில் அதிகமானவை அவர் மொழிபெயர்த்த பிறமொழிக் கவிதைகள். சொந்தமான கவிதைகளை எழுதுவதற்கு அவர் நேரம் எடுத்துக் கொள்பவர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் ஒரு கவிதையையேனும் மொழிபெயர்க்காத நாள்கள் இல்லை என்றே சொல்ல முடியும். கவிதையை மொழிபெயர்ப்பதை அன்றாடச் செயல்பாடாகக் கொண்டுள்ளார். அதன் விளைவுதான் ஐந்து தொகுப்புகளாக அவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள் வெளியாகியுள்ளன.

 கச்சிதமான சொல்லைக் கண்டறிந்து பொருத்தமாக இடுதலும், மூலக் கவிதையின் தன்மையை முடிந்தளவு பேணும் வகையிலான வடிவத்தில் கவிதையை வடிப்பதும் அவரது மொழியாக்கக் கவிதைகளின் சிறப்புகள். உலகின் ஏதோவொரு மூலையில் எழுதப்பட்ட ஒரு கவிதையை ஆங்கிலம் வழியாக வாசித்து தமிழில் அது சொல்லப்படவேண்டும் என்று தீர்மானிப்பதற்கு பொறுமையும் தமிழ்க் நவீன கவிதையில் ஆழமான புரிதலும் வேண்டும். அவை இரண்டும் மோகனரங்கனிடம் தேவைக்கு அதிகமாகவே உண்டு என்பதால் இந்தக் காரியத்தை அவரால் செவ்வனே மேற்கொள்ள முடிகிறது.

 கவிதையை வாசித்துப் புரிந்துகொள்வது சவாலான காரியம். அதிலும் ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை எனும்போது அதில் வேறு சில சிக்கல்களும் சேர்ந்துகொள்ள வாய்ப்புண்டு. குறிப்பிட்ட மொழி புழங்கும் தேசத்தின் பின்னணி, தட்பவெப்பம், வரலாறு ஆகியவற்றோடு அம்மக்களின் பண்பாட்டுக் கூறுகள், பழக்கவழக்கங்கள், உடை உணவுப் பழக்கங்கள் ஆகிய பிற அம்சங்களை கவனத்தில் கொள்ளவேண்டிய பொறுப்பும் உண்டு. இந்த அம்சங்களில் எவையேனும் கவிதையில் இடம்பெறும்போது அவற்றை தமிழுக்குத் தகுந்தபடி மொழிமாற்றவேண்டும். அதேசமயம் மூலக் கவிதையில் அவை பயன்படுத்தப்பட்ட அதே பொருளுடன் இங்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சில சிறப்புப் பெயர்களை, பெயர்ச் சொற்களை உள்ளது உள்ளபடியே பிரயோகிக்கவும் தேவையுள்ளது. இதுபோன்ற முக்கியமான சிக்கல்களைப் புரிந்துகொண்டு அதே நேரத்தில் மொழிபெயர்க்கப்படும் வருமொழியில் அதன் வாசிப்பு அமைதி குலைந்துவிடாமல் தந்திருப்பதுதான் மோகனரங்கனின் சாதனை. அவர் மொழியாக்கம் செய்திருக்கும் கவிதைகள் சரியான அர்த்தத்தோடு மட்டுமல்லாமல் முடிந்தமட்டும் நியாயமான ஓசைநயத்துடனும் கட்டமைப்புடனும் அமைந்திருக்கும்.

 இணையத்தில் அங்கங்கே வாசிக்கும் கவிதைகளில் தனக்குப் பிடித்தவற்றை, மொழிபெயர்க்க ஏதுவானவற்றையே தேர்ந்தெடுக்கிறார். அவ்வப்போது மொழிபெயர்க்கிறார். புகழ்ப் பெற்ற உலகக் கவிஞர்களின் கவிதைகளுக்கிடையே இதுவரை பெயர் தெரியாத கவிஞர்கள் பலரின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. ஆனி செக்ஸ்டன், ரேமண்ட் கார்வர், நிஸார் கப்பானி, லோர்கா, டெட் ஹூசர், ராபர்டோ பொலானோ, ரில்கே, மிர்சா காலிப், சார்லஸ் புகோவ்ஸ்கி, லாங்க்ஸ்டன் ஹ்யூஸ், விஸ்ல்வா ஸிம்போர்கா, மார்கரெட் அட்வுட், இ இ கம்மிங்க்ஸ், அமீர் குஸ்ரூ, தாகூர், எமிலி டிக்கன்ஸன், பாப்லோ நெரூதா, அக்டோவியா பாஸ், அன்னா அக்மதோவா, டி.பி.ராஜீவன், தாமஸ் டிரான்ஸ்தோமர், குந்தர் கிராஸ், யெஹூதா அமிக்காய், அம்ருதா ப்ரீதம் என்று நீளும் கவிஞர்களின் பட்டியலிலிருந்து உலகின் முக்கியமான பிற மொழிக் கவிஞர்களின் கவிதைகளை தமிழுக்குக் கொண்டு வந்திருக்கும் முக்கியத்துவம் புரியும். உலகக் கவிதைகளைக் குறித்த அறிமுகம் மட்டுமல்லாது பிற மொழிகளில் அவை சென்று தொட்டிருக்கும் பல்வேறு சாத்தியங்களைப் பற்றியும் யோசிக்க வாய்ப்பளிக்கின்றன இக்கவிதைகள். ரூமியின் கவிதைகள் ‘இதயங்களின் உதவியாளர்’ என்ற தலைப்பிலும், அப்பாஸ் கிரயாஸ்தாமியின் கவிதைகள் ‘பாயக் காத்திருக்கும் ஓநாய்’ என்ற தலைப்பிலும் தனித் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ‘நீலமணிக் கிண்ண நீரில் தோன்றும் நிலா’ என்ற பெயரில் பிஹாரி சத்சயியின் கவிதைகள் வெளிவந்துள்ளன. இவற்றைத் தவிர வெளிவந்துள்ள ‘நீரின் திறவுகோல்’, ‘அங்கே சொற்களுக்கு அவசியமில்லை’, ‘உன் யாதுமாகிய நான்’, ‘உன்னைக் கவிதையாக மாற்றுபவன்’ ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புகளும் உண்டு.

 கவிதையின் கருவியான மொழி கூர் மழுங்காதிருப்பது மிக முக்கியமானது. கவிஞன் தன் கவிமொழியை எப்போதும் தீட்டியபடியே இருப்பது அதைவிட முக்கியமானது. தனக்குள் உத்தேசமாக கட்டமைக்கும் கவிதையின் இடைவெளிகளுக்கு, வெற்றிடங்களுக்கு ஆகப் பொருத்தமான சொற்களைக் கண்டடைந்து நிரப்புவதுதான் கவிஞனின் காரியம். மொழியை கூர்தீட்டிக் கொள்ளும் கல்லே, மொழியாக்கம். மோகனரங்கனின் தன் கவிதை மொழியை கூராகவும் சீராகவும் வைத்துக்கொள்ள மொழியாக்கத்தை ஒரு பயிற்சியாக, வழிமுறையாகப் பயன்படுத்துகிறார். அதன் விளைவாக தமிழுக்கு விளையும் நன்மை நமக்கு வந்து சேரும் பிறமொழிக் கவிதைகள்.

0

க.மோகனரங்கன் கவிதைகளை மட்டுமல்லாது, அயலகக் கதைகள் சிலவற்றையும் மொழிபெயர்த்துள்ளார். ‘குரங்கு வளர்க்கும் பெண்’ என்ற தலைப்பில் வெளியான இத்தொகுப்பில் ஏழு கதைகள் உள்ளன. யாசுனேரி கவபட்டாவின் ‘வெட்டுக்கிளியும் சில்வண்டும்’, ரேமண்ட் கார்வரின் ‘அற்ப விஷயங்கள்’, ‘காட்டுக் கோழி’, ‘அவர்களில் யாரும் உன் கணவன் இல்லை’, மார்க்வெஸின் ‘கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை’, யுவான் சுய்ங்கின் ‘காதலனின் காது’, லியானார்டோ மைக்கேல்ஸின் ‘குரங்கு வளர்க்கும் பெண்’ ஆகியன. ரேமண்ட் கார்வரின் கதைகளை நண்பர் செங்கதிர் மொழிபெயர்க்க முனைந்தபோது, மோகனும் நானும் சில கதைகளை மொழிபெயர்த்தோம். எந்தெந்த கதைகளை யார் மொழிபெயர்ப்பது என்று முடிவு செய்தபோது, அளவில் சிறிய சில கதைகளை மோகன் எடுத்துக் கொண்டார். மார்க்வெஸின் ‘கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை’ மட்டும் சற்றே நீண்ட கதை. சிறிய இத்தொகுப்பிலும் மோகனரங்கனின் மொழி நுட்பத்தையும், சீரான வாக்கிய அமைப்பையும் காண முடியும்.

0

8

1987இல் கணையாழியில் கவிதைகள் எழுதத் தொடங்கி இன்று கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்று க.மோகனரங்கன் தமிழ் இலக்கியச் சூழலில் நன்கறியப்பட்ட பெயர். அவரது பெயரைக் குறிப்பிடாதபோதும் அவர் எழுதிய கவிதைகளை அடையாளம் கண்டுவிட முடியுமளவுக்கு தனக்கான தனித்த கவிமொழியையும், கவிதைக் கட்டமைப்பையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். எண்ணிக்கையில் அத்தனை குறைவோ, அத்தனை மிகுதியோ அல்லாதுபோயினும் எழுதித் தந்திருக்கும் கவிதைகளின் கனமும் ஆழமும் நவீனக் கவிதை வரிசையில் அவரைத் தவிர்க்க முடியாத ஒரு கவிஞராக நிலைநிறுத்தியுள்ளது.

ஐம்பதாண்டு கால நவீன தமிழ்க் கவிதை குறித்த தெளிவான பார்வையும் மனச்சாய்வற்ற விமர்சனத்தையும் கொண்டிருக்கும் மோகனரங்கனின் மதிப்புரைக்கும் விமர்சனத்துக்கும் இன்றைய தமிழ்ச் சூழலில் முக்கியமான இடம் உண்டு. ‘மோகனரங்கன் சொன்னால் சரியாக இருக்கும்’ என்று முன்னோடிகளிலிருந்து இன்றைய இளம்கவிஞர்கள் வரையிலும் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு அவரது மதிப்பீடுகளுக்கு தனிமரியாதை உண்டு. இத்தனை கால கடுமையான உழைப்பால், நேர்மையான நிதானமான அணுகுமுறையால் அவர் ஈட்டியிருக்கும் பெருமதி அது.

இணைய பக்கங்களைச் சொடுக்கினால் எண்ணற்ற உலகக் கவிதைகளை வாசிக்க முடியும். ஆனால், ஆங்கிலத்தில் வாசிக்க முடியாதோர்க்கு மொழியாக்கங்களே உதவும். கவிதைகளை சரியான நேர்த்தியான மொழியாக்கங்களின் வழியாக அன்றி வாசித்து அனுபவிப்பது இயலாத ஒன்று. அந்த வகையில் மோகனரங்கனின் கவிதை மொழியாக்கம் என்பது அரும்பணி. தன்னியல்பில் அவர் தன் மன நிறைவுக்காக மேற்கொள்ளத் தொடங்கிய இப் பணி இன்று தமிழ்க் கவிதையுலகுக்கு அளப்பரிய செல்வங்களைக் கொண்டு சேர்த்திருக்கிறது. அவர் எழுதிய நேரடியான கவிதைகளுக்கு தரப்படும் மதிப்புக்கும் வரவேற்புக்கும் இணையாக அவர் மொழிபெயர்த்த கவிதைகளுக்கும் மதிப்பும் வரவேற்பும் உள்ளன. சமயத்தில் இவ்விரண்டுக்கும் வேறுபாடுகளைக் காணமுடியாத வண்ணம் நேரடிக் கவிதையும் மொழியாக்கமும் ஒன்றோடொன்று கலந்து மயக்கத்தையும் தருவதுண்டு.

ஐம்பதாண்டு இலக்கிய அனுபவத்தில், அவரது தமிழ்க் கவிதை சார்ந்த புலமைக்கும் அதில் அவர் கொண்டிருக்கும் ஆழமான புரிதலுக்கும் அவர் செய்திருக்க வேண்டிய காரியங்கள் இன்னும் உண்டு. ஆனால், தன்னியல்பில் அவருக்குள்ள நிதானமும், செறிவையும் செம்மையையும் நோக்கிய அவரது அணுகுமுறையும் அவ்வாறான காரியங்களை நோக்கி அவரை உந்தவில்லை. அவரது பணிச்சுமையும் அதற்காக அன்றாடம் மேற்கொள்ள நேரும் பயணங்களும் கூட அப்படிப்பட்ட வாய்ப்புகளை அளிக்கவில்லை. என்றாலும், ராஜமார்த்தாண்டன் எழுதியதைத் தொடர்ந்து தமிழ் நவீனக் கவிதை வரலாற்றை பூர்த்தி செய்யும் தகுதியும் அனுபவமும் உள்ளவர் என்பதால் அந்தக் காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்ற விருப்பம் அவரை அறிந்தவர்களுக்கு உண்டு.

ஒரு கவிஞராக, கவிதை சார்ந்து உரையாடுபவராக, விமர்சகராக, மொழிபெயர்ப்பாளராக இன்று அவர் தொட்டிருக்கும் உயரங்களிலிருந்தே அவரது சாதனைகளையும் பங்களிப்புகளையும் புரிந்துகொள்ள முடியும். அவர் ஈட்டியிருக்கும் சாதனைகளையும் உயரங்களையும், வரும் நாட்களில் அவரே தன் செயல்பாடுகளின் மூலம் மேலுயர்த்தவேண்டும். அதற்கான தகுதியும் தரமும் அவரிடம் உண்டு.

0

( 26.04.2026 ஜோலார்பேட்டையில் நடைபெற்ற விழாவில், பி.ச.குப்புசாமி இலக்கிய விருது 2026 க.மோகனரங்கனுக்கு வழங்கப்பட்டது. ‘வார்த்தை’ பி.கே.சிவகுமார் தொகுத்த, க.மோகனரங்கனின் எழுத்துலகைக் குறித்த தொகை நூல் ‘சொல்ல வந்ததற்கும் சொல்லில் வந்தததற்கும் நடுவே’ வெளியிடப்பட்டது. தொகை நூலில் இடம் பெற்றது இக் கட்டுரை )

  

           

No comments:

Post a Comment

சொல்லின் நிழலில் இளைப்பாறும் ஒரு கவி

1 மொழியின் உச்சம் கவிதை. சொற்களின் ஆகச் சிறந்த சாத்தியங்களை செறிவுடனும் சிக்கனத்துடனும் அதேசமயம் ஆழமாகவும் சோதித்துப் பார்க்கும் புனைவு வட...